Tuesday, August 28, 2018

திமுக தலைவர், பொருளாளர் ஆகியோருக்கு பெரியார் திடலில் வரவேற்பு

 

சென்னை, ஆக.28 இன்று (28.8.2018) பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தாய்க் கழகத்தின் சார்பில் வரவேற்று சிறப்பு செய்தார். திமுக தலைவராகப் பொறுப்பேற்றதை யடுத்து, பெரியார் திடலுக்கு வருகைபுரிந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து,  பாராட்டி இயக்க வெளியீடுகளை வழங்கி, பயனாடை அணிவித்து சிறப்பு செய் தார். திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு  பயனாடை அணிவித்தும், இயக்க வெளியீடு களை வழங்கியும் சிறப்பு செய்தார்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடங்களில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். தந்தை பெரியார் அருங்காட்சியகத்துக்கு வருகைதந்த திமுக தலைவர், பொருளாளர் ஆகியோரை  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வரவேற்று உபசரித்தார். சிறிது நேரம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் அளவளாவினர்.

மேனாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு,  ஆ.இராசா,  மேனாள் அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பி னர்கள் பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி, எழும்பூர் கே.ஆர்.இரவிச்சந்திரன், புரசை ரங்கநாதன், டி.ஆர்.பி. ராஜா, மகேஷ் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின், எழும்பூர் ஏகப்பன், திமுக பேச்சாளர் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்கள் ஏராளமான வர்கள் வருகை தந்தனர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன்,  கழக சட்ட துறைத் தலைவர் த. வீரசேகரன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தார்கள்.

திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களே, வெற்றிப் பயணம் தொடர்க - தாய்க் கழகத்தின் துணையுண்டு - வாழ்த்துகள்!

உச்சிமோந்து வாழ்த்துகிறார் தமிழர் தலைவர்



திமுக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி.

1944 ஆகஸ்டு 27ஆம் தேதி சேலம் மாநகரில் திராவிடர் கழகம் பிறந்தது. கிட்டதட்ட அதே கால கட்ட நாளில் திமுகவின் தலைவராக பாசமிகு சகோதரர் தளபதி மானமிகு மு.க ஸ்டாலின்  அவர்கள் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டது - எத்தகைய வரலாற்றுப் பொருத்தம்!

'மானமிகு சுயமரியாதைக்காரன்' என்பதையே தனது பெருமித அடையாளமாகக் காட்டிக் கொண்ட, நமது இனமானத் தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரை தமது வாழ்நாள்  வழிகாட்டிகளாகவும், லட்சிய கலங்கரை விளக்கங்களாகவும் கொண்டு இறுதி மூச்சடங்கும் வரை 94 ஆண்டுகள் வாழ்ந்து "வரலாறாகி" விட்டார்!

மறைந்தார் என்பதைவிட நம் நெஞ்சங்களில் நிறைந்தார்; அவரது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளின் உணர்வில் கலந்து, ரத்த நாளங்களில் உறைந்தார் என்பது வரலாறு.

அறிஞர் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்து தலைமை தாங்கி நடத்திய நிலையில், அவரது மறைவு மிகப் பெரிய சோகத்தை 1969இல் ஏற்படுத்தியது; 'இனி என்னவாகுமோ' என்ற அச்சத்தை திராவிடர் இயக்கத்தின் எதிர்காலம் குறித்து உருவாக்கியது.

சோதனைகளை வென்று சாதனைகளாக்கும், ஆற்றல், பொறுப்பேற்று நடத்தும் அளப்பரிய தகுதி மானமிகு கலைஞருக்கே உண்டு என்று தொலைநோக்கோடு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்  கணித்து 'கட்டளை' இட்டு, அவரை முதல் அமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தார்! அந்தக் கணிப்பு சரியானது என்பதை வரலாற்றில் வைர வரிகளாக எழுதினார் மானமிகு கலைஞர். அண்ணா வழியில் அயராது உழைத்தார்; அய்யாவின் வழிகாட்டுதலை ஏற்றார்; உழைப்பின் உருவமானார்; அரை நூற்றாண்டில்  தமிழ்நாட்டையே 'புதிய தமிழ்' நாடாக்கி, வரலாறு படைத்த பின்பே வரலாறானார்; இன்று  அவர் திராவிடர் இயக்க லட்சிய பாடமானார் -  வெற்று இடமில்லை இங்கு! கற்றுப் பயன் பெறுவோர் ஏராளம்!

களத்தில் 14 வயது முதலே இளைஞர் அணியிலிருந்து, செதுக்கப்பட்டவரும், சிறை வாழ்க்கை, தியாகத் தழும்புகளோடு, பல பதவிகளையும் பொறுப்புகளாகப் பார்த்து, 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று வாழ்ந்து காட்டி வருபவருமான எம் அரும் சகோதரர் மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் கலைஞர் வகித்த பொறுப்புக்கு ஒரு மனதாக தி.மு.கழகத்தின் தலைவராக அடலேறுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதும், அதுபோலவே அவர் வகித்த பொருளாளர் பதவிக்கு அக்கட்சியில் 40 ஆண்டுகளாக கலைஞரின் நிழல் போல திகழ்ந்த அவரது அரசியல் மாணவர் அருமைச் சகோதரர் மானமிகு துரைமுருகன் அவர்களும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது! அவர்களுக்குப் பெருங் குடையாக மூத்த நம் இனமானப் பேராசிரியர் (க. அன்பழகன்) அவர்களின் ஆசியோடு பொறுப்பேற்றுள்ள திராவிடர் இயக்கத்தின் 4ஆவது தலைமுறை நாயகர் தளபதி, நான்காம் அத்தியாயத்தைத் துவக்குகிறார்!

கோபாலபுரம் மாணவர் கழகப் பொறுப்பாளராக, திமுகவின் இளைஞரணி மாநில செயலாளராக, மாநிலப் பொருளாளராக, செயல் தலைவராக ஒளி வீசி, இன்று திமுகவின் தலைவராக  கட்சி நீரோட்டத்திலும், சென்னை மாநகர வணக்கத்துக்குரிய மேயராக, சட்டப் பேரவை உறுப்பினராக, அமைச்சராக, துணை முதல் அமைச்சராக, ஆற்றல்மிகு எதிர்க்கட்சித் தலைவராக இயற்கையில் நிகழும் முறையான பரிணாம வளர்ச்சி பெற்றவர் அருமைச் சகோதரர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆவார்!

கட்சியைக் கட்டமைப்பது, ஆட்சி நிருவாகத்தை ஆற்றுலுடன் நிர்வகிப்பது என்பதெல்லாம் அவருக்குக் கைவந்த கலையாக இருப்பதைக் கடந்த காலத்தில் நாடே பார்த்து வியந்திருக்கிறது.

அவரின் அடுத்தகட்ட நகர்வினை நாடே ஆர்வமுடனும், நம்பிக்கையுடனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அவர் மிகுந்த தன்னடக்கமும், தளரா உழைப்பும், உடன் பிறப்புகளின் உணர்வுகளை உணர்ந்து அரவணைத்துச் செயல்படும் பண்பாட்டையும் பெற்றுள்ளவர்!

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் திராவிடர்  இயக்க சித்தாந்தம் - பகுத்தறிவு சுயமரியாதைக் கொள்கைகளை கட்டிக் காப்பேன் என்று உறுதி கூறியிருப்பதன் மூலம் - திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்க  முழுத் தகுதி உடையவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

திமுகவின் சொத்துக்கள் பற்றி சில ஏடுகள் கணக்கெடுக்கின்றன. உண்மையில் திராவிடர் இயக்கங்களைப் பொறுத்தவரையில், ஏராளமான அசையாச் சொத்துகளும் அசையும் சொத்துகளும்  உண்டு என்பது நமக்கு என்றும் பெருமையானது!

ஆம்! ஏராளமான அசையா சொத்துகள்;

அசையும் சொத்துக்கள் உண்டு, உண்டு!


எவராலும் அழிக்க முடியாத "ஆயிரங்காலத்துப் பயிரான" அந்த திராவிடத்து அசையா சொத்துகள் - கொள்கைகள்! லட்சியங்கள்! சித்தாந்தங்கள்!

அசையும் சொத்துகள் இலட்சோபலட்சம் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளான கடமை வீரர்களும், காணக் கிடைக்காத கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவருமே!

இந்த 'சொத்துகள்' பறிபோகாமல் பாதுகாக்கும் காவலராக, லட்சியப் பணியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து, பதவிகளால் அளக்கப்படுவதைவிட, பணிகளின் சிறப்பால் தூய தொண்டறத்தால் மதிக்கப்படும் தலைமைக்கு இவரன்றோ எடுத்துக்காட்டு என்று, தமது தந்தை - தலைவரை மிஞ்சும் சாதனை வீரராகத் திகழ்ந்து சரித்திரமான 4ஆம் அத்தியாயம் எனும் புதிய பொன்னேட்டை இணைத்திடும் இனமானம் காக்கும் இணையற்ற வீரராக என்றும் திகழ்ந்து, ஆட்சி என்பது காட்சிக்காக அல்ல. இன மீட்சிக்காக என்பதை அகிலத்திற்கு உணர்த்திடும் அரும்பெரும் வீரராக உயர்வார் எனத் தாய் கழகம், உச்சி மோந்து வாழ்த்துகிறது! தாய்க் கழகத்தின் துணையும், அரவணைப்பும் உண்டு - புது வரலாறு படைத்திடுக!



கி.வீரமணி,

திராவிடர் கழகம் தலைவர்

சென்னை

28.8.2018

Thursday, August 23, 2018

ஆளுநர்களை ஆள்பவர்கள் யார்? (2)


* அணுசிறீ

20.8.2018 அன்றைய தொடர்ச்சி....

ஆளுநர்களின் தவறான செயல்பாடுகளுக்கு நீதிமன்றக் கண்டனங்கள்


கூட்டாட்சிக் கட்டமைப்பு பாதுகாக்கப்படுவதை பல நேரங்களில் நீதிமன்ற குறுக்கீடுகள் உறுதிப்படுத்தி யுள்ளன. தங்களது அரசமைப்பு சட்டப்படியான கடமை களை நிறைவேற்றத் தவறியதற்காக ஆளுநர்களை  பல நேரங்களில் நீதிபதிகள் கண்டித்துள்ளனர். பூட்டாசிங்கின் செயலை தீய நோக்கம் கொண்டது என்று கண்டித்த உச்ச நீதிமன்றம், அருணாச்சலப் பிரதேச ஆளுநரின் செயல் அரசமைப்பு சட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு சவுக்கடி என்றும் அரசாட்சியின் மீதான ஒரு பேரிடி என்று கண்டித்துள்ளது. எஸ்.ஆர்.பொம்மை மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிகுந்தது.

மாநில அரசுகளை கலைக்கச் செய்யும் மத்திய அரசின் அரசமைப்பு சட்ட  அதிகாரத்தை அந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்தி இருந்தது. மாநில அரசின் பலத்தை மதிப்பிடுவதற்கான ஒரே வழி, சட்டப் பேரவை உறுப் பினர்களிடையே, சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடத்துவதுதான் என்றும், ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ தங்களது தனிப்பட்ட கருத்தின் அடிப் படையில் முடிவு செய்யப்பட இயன்ற விவகாரம் அல்ல என்றும்  ஒன்பது நீதிபதிகள் கொண்ட  அரசமைப்பு  சட்ட அமர்வு உறுதிபடத் தீர்ப்பளித்துள்ளது. 

மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின்படி நெருக்கடி நிலை அறிவிக்கப்படுவது,  மாநிலத்தில் அரசமைப்புச் சட்ட இயந்திரம் (நிர்வாக இயந்திரம்அல்ல) செயல்பட இயலாத நிலையில் மட்டுமே நியாயப்படுத் தப்பட இயலும் என்றும், அத்தகைய அறிவிப்பு நீதிமன்ற பரிசீலனைக்கு அப்பாற்பட்டது அல்ல என்றும் அந்த அமர்வு அறிவித்துள்ளது.

மத்திய மாநில உறவுகள், அதிகாரங்கள் பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஆணையங்கள்

மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும், செல்வாக்கு மிகுந்த மாநிலத் தலைவர்கள் உருவானதும், மாநில அரசுகளின் தேவைகளை உணர இயன்ற ஒரு கூட்டாட்சித் தத்துவத்தின் தேவையைத் தூண்டியுள்ளன. அதனை ஒட்டி,  மத்திய-மாநில அரசுகளின் உறவுகளை இணக்கமாக்கு வதற்குத் தேவையான செயல்பாடுகளை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்கு 1966 இல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், 1969 இல் ராஜமன்னார் கமிட்டி, 1983இல்  சர்க்காரியா ஆணையம், 2000 இல் அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையம், 2007 இல் பூஞ்சி ஆணையம் என்று பல குழுக்களும், ஆணையங்களும் நியமிக்கப் பட்டன.

ஆளுநர் அலுவலகம் பற்றி நிர்வாக சீர்திருத்த ஆணையம் கூறியதாவது: சாமானியமான நடுத்தரப் பிரிவினருக்கு, போதிய வேலை வாய்ப்பு இல்லாத நிலையிலும் அதிக சம்பளம் அளிப்பது அல்லது சில நேரங்களில் செயல்பாடற்ற காலாவதியான அரசியல்வாதிகளுக்கு ஓர் ஆறுதல் பரிசு வழங்குவதாகக் கருதப்படுவதாக ஆகிவிட்டது ஆளுநரின் பதவி. அதற்கு மாறாக, இந்திய நிர்வாகம் என்னும் கூட்டாட்சி கட்டமைப்பின் மிக முக்கியமான அலுவலகங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண் டும்.

முந்தைய மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களைப் பதவி நீக்கம் செய்வது என்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, தவறாக நடந்து கொண்டார் என்று மெய்ப்பிக்கப்பட்ட போதும்,  உச்சநீதிமன்ற விசாரணை ஒன்றில் ஆற்றல் அற்றவர் என்று கருதப் பட்டாலன்றி ஆளுநர்கள் பதவியில் இருந்து நீக்கப் படக்கூடாது என்று ராஜமன்னார் கமிட்டி ஆலோசனை கூறியிருந்தது. அரசமைப்புச் சட்டத்தின் 263ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள மத்திய, மாநில அரசுகளின் கூட்டமைப்பு ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்று அது ஆலோசனை தெரிவித்தது.

என்றாலும், இத்தகைய அனைத்து ஆணையங் களிலும், மத்திய-மாநில அரசுகளின் உறவு பற்றி சர்க்காரியா ஆணையம் மிக விரிவான 21 அத்தியாயங்கள் கொண்ட  பரிந்துரைகளை அளித்திருந்தது. நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் அரசமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவு மிகமிக அரிதாகவும், மிகமிக இன்றியமையாத வழக்குகளிலும், இருக்கக் கூடிய மற்ற அனைத்து மாற்று வழிகளும் பயனளிக்காமல் போன பிறகு இறுதி  நடவடிக்கையாக  மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று சர்க்காரியா ஆணையம் எச்சரித் திருந்தது. மேலும்,  அரசமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவின்படி நெருக்கடி நிலை அறிமுகப்படுத்தப்பட்ட அறிவிப்பு நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைக்கப் படுவதற்கு முன்பாக, சட்டப் பேரவை கலைக்கப் படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மாநில அரசுகளை  தேவையற்ற ஒரு தலை சார்பான செயல் பாடுகளிலிருந்து தவிர்ப்பதற்காக மாநிலத்திற்கு நியமிக்கப்படும் ஆளுநர்  வெளி மாநிலத்தைச் சேர்ந்த உயர்பண்பு கொண்டவராக இருப்பதுடன், தீவிர அரசியல் தொடர்புகளற்று தனித்து நிற்பவராகவும்,  அண்மைக் காலத்தில் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளாதவராகவும் இருக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

பொருளாதாரக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பொறுத்த வரையில், கார்ப்பரேட் வரிகளை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும்,  வரி விதிப்பதற்காக உள்ள வாய்ப்புகளைப் பற்றி மறு ஆய்வு செய்வதற்காக அரசமைப்புச் சட்ட 269 ஆவது பிரிவின்படி ஒரு வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது. சட்டப் பேரவையில் எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாமல் போகும் நேரங்களில்,  முதலமைச்சர்களை எவ்வாறு நியமிப்பது என்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளையும் தயாரித்தளித்தது,  தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கப்படாதபோது,  தனிப்பெரும் கட்சியின் தலைவரை அரசு அமைக்க அழைக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்தது. இந்த பரிந் துரைகள் எல்லாம் பல நேரங்களில் காற்றில் பறக்க விடப்பட்டன. இதற்கு அண்மைக் கால எடுத்துக் காட்டுகளாக கர்நாடக, கோவா, உத்தரகண்ட் மாநி லங்களில் ஆளுநர்கள் தங்களது சுயேச்சையான அதிகாரத்தைப் பயன்படுத்தி, யதேச்சதிகாரமாக அரசு அமைக்க பா.ஜ. கட்சியை அழைத்த நிகழ்வுகளைக் காட்டலாம். அத்தகைய யதேச்சதிகாரம், 1952 இல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்க சட்டப் பேரவை, சட்ட மேலவை இரண்டிலும் உறுப்பினர் அல்லாத ராஜகோபாலாச்சாரியை ஆளுநர் பிரகாசா அழைத்ததை நினைவுபடுத்துகிறது. மேலும், சர்க்காரியா ஆணையத் திற்குப் பிறகு, ஆளுநர்கள் எல்லாம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி அரசியலில் தீவிரமாக ஈடுபடும் அரசியல் விசுவாசிகளாகவே இருந்து வருகின்றனர்.

கூட்டாட்சிக் கட்டமைப்பு உருவாக்கம்

ஏழாவது அட்டவணைபடி  மத்திய, மாநில அரசுகளி டையேயான அதிகாரப் பங்கீடு,  நிதி ஆணையம்,  உள்ளாட்சி அமைப்புகள்,  அனைத்திந்திய பணிய மைப்பின் கட்டமைப்பு நிர்வாகம், நதிநீர்த் தீர்ப்பாயங்கள், திட்டக் குழுக்கள்,  நிதி ஆயோக், சுமுகமான மத்திய மாநில உறவுகளுக்குத் தடையாக இருக்கும் ஆளுநர்கள் உள்ளிட்ட  பல அரசமைப்புச் சட்ட விதிகளைச் சுற்றி  கூட்டாட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் நிலையற்ற தன்மை,  உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள், பிரிவினை வாதப் போக்குகள்,  பொருளா தாரப் போட்டி மற்றும் இவற்றைப் போன்றவை நிலவும் இன்றைய  அரசியல் காட்சியில், ஆரோக்கியமான கூட்டாட்சி நடைமுறை தவிர்க்க இயலாத ஒன்றாகவே அமைந்துள்ளது.

உலகமயமாக்கப்பட்ட இந்த காலகட்டத்தில், தங்கள் அரசுக்கு வருவாயை உருவாக்குவதற்காக, தொழில், வணிகக் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி முதலீடு களைக் கவருவதில் மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், கட்சி நடைமுறை அனைத்து மாநிலங்களிலும் பரவலாக்கப்பட்டதும், கூட்டணி அரசியல் உருவானதும், ஒன்றிணைந்து செயல்படும் கூட்டாட்சி நடைமுறையை ஓர் அரசியல் தேவையாகவே ஆக்கிவிட்டன.  தேர் தல்கள் தெளிவான தீர்ப்பினை அளிக்காத நிலையில், பலகட்சி ஜனநாயக நடைமுறையிலான இந்தக் காலகட்டத்தில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் எந்த ஒரு கட்சியும், தேர்தல் களத்தில் காணாமல் போவதற்கு விரும்பாது என்பதால்,  மாநிலங்களில் உள்ள எதிர் கட்சிகளுக்கு வருத்தம் உண்டாக்குவதற்கு முன்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசிய மானது.

எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு களின் செல்வாக்கைக் குறைப்பதற்காக, ஆளுநர் அலுவலகத்தை எந்த வழியிலாவது தவறாகப் பயன் படுத்துவது, கூட்டாட்சி ஜனநாயக அரசியல் நடைமுறை சுமுகமாக செயல்படுவதற்கு கேடு செய்வதாகவே அமையும். தேசிய ஒற்றுமையையும், அரசியல் நிலைத் தன்மையையும் பேணுவதற்கான அரசமைப்புச் சட்டப் படியான அதிகாரமும்,  கடமையும்  மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.  மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையை சமரசம் செய்து கொள்வதன் மூலம் மத்திய அரசு அதனைச் செய்யக்கூடாது. அதிகப்படியான அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப் படுவது மத்திய அரசும், மாநில அரசுகளும் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானதாகும். சர்க் காரியா ஆணையம் எச்சரித்தபடி, அவ்வாறான அதிகாரக் குவிப்பு மத்திய அரசை, ரத்த அழுத்தம் கொண்ட தாகவும், அதனைச் சுற்றியுள்ள மாநில அரசுகளை ரத்தசோகை கொண்டவை களாகவும் ஆக்கி,  அழிவை விளை வித்துவிடும்.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக் கிடையேயான பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு மாநில அரசு களுடன் இணைந்து மத்திய  அரசு, அரசமைப்பு சட்டத்தில் நிர்ணயிக்கப் பட்டுள்ள கூட்டாட்சித் தத்துவ உணர் வுக்கு உண்மையாக  செயலாற்ற வேண்டும்; மாநில ஆளுநர்களும் நல்லிணக்கத்துடன் மாநில அரசு களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆளுநர் பதவியை அரசியல் சாராத பதவியாக மாற்ற வேண்டியதன் அவசர, அவசியத் தேவை, ரோமன்  விமர்சகர் ஜூவினலின்  புகழ் பெற்ற ஒரு பழமொழியை எனக்கு நினைவு படுத்துகிறது. "பாதுகாக்கும் பணியை செய்யும் பாது காவலர்களை யார் பாதுகாப்பார்கள்?" சுயேச்சையான அதிகாரம் யதேச்சதிகாரமாக மாறும்போது, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் போகும் நிலையில், மக்களின் விருப்பம் என்பது காலடியில் போட்டு மிதிக்கப்படுவதுடன்,  நாகரிக சமூகத்தினர் ஜூவினலின் மேற்குறிப்பிடப்பட்ட கேள்வியை மாற்றி "ஆளுநர்களை ஆளுபவர்கள் யார்?" என்று கேட்கத்தான் தோன்றும்.

 
 (நிறைவு)

நன்றி: 'ஃப்ரண்ட் லைன்' 03-08-2018

தமிழில் : த.க. பாலகிருட்டிணன்

இந்தியாவிலேயே மிகச்சிறந்த தனியார் பல்கலைக்கழகம் விருது

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

* சட்டம், நீதிமன்றத் தீர்ப்புகள் தடையாக இல்லை

* அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைவரையும் கோவிலில் நியமிக்கவேண்டும்

* உயிரிழந்த பயிற்சி பெற்றவர்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்யவேண்டும்

* அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும்- பெண்களும் அர்ச்சகராக வேண்டும்

சென்னை, ஆக. 22-  சட்டமும், நீதிமன்ற தீர்ப்புகளும் ஆதரவாக இருக்கும் நிலையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைவருக்கும் அர்ச்சகர் பணி அளிக்கப்படவேண்டும்; அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் தொடர்ந்து நடத்தவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.  பெண்களுக்கும் அர்ச்சகர் உரிமை 

21.8.2018 அன்று சென்னை பெரியார் திடலில்,  ‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை  முதல் கட்ட வெற்றி - அடுத்த நிலை என்ன?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்:

அவரது உரை வருமாறு:

‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை முதல் கட்ட வெற்றி - அடுத்த நிலை என்ன?’’

எழுச்சியோடு நடைபெறக்கூடிய ‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை முதல் கட்ட வெற்றி - அடுத்த நிலை என்ன?’’ என்ற தலைப்பில் நடைபெறக்கூடிய கருத்தரங்கம் போன்ற ஒரு சிறப்புக் கூட்ட நிகழ்ச்சிக்கு நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, இங்கே வந்து அருமையான கருத்துகளை எடுத்து வைத்து, தொடக்கத்தில் இருந்து இந்தப் பிரச்சினை - இந்தப் போராட்டத்தில் நம்மோடு துணை நின்ற போராளியாக இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய அய்யா தோழர் இரா.முத்தரசன் அவர்களே,

இந்தப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தனியாக வாதாடி, வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்து, இன்றைக்கும் அடுத்த நிலைக்கு என்ன செய்யவேண்டும் என்ற நிலையில், இந்தப் போராட்டத்தினுடைய அடுத்த கட்டத்திற்கு நம்மோடு துணை நிற்கின்ற பொறியாளர் சைவத்திரு மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களே,

இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்றியுள்ள கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

எதிரே அமர்ந்திருக்கக்கூடிய தோழர் குமரிஅனந்தன் உள்பட சான்றோர்களே, இயக்கக் குடும்பத்தவர்களே, பக்தர்களாக இங்கே வந்திருக்கக்கூடிய அருமைப் பெரி யோர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொல்லவேண்டிய மிக முக்கியமான கருத்துகள், வரலாறுகள் இவைகளையெல்லாம் இந்த இருபெரும் அறிஞர்கள், கொள்கையாளர்கள் சிறப்பாக இந்த அரங்கத்தில் நமக்கெல்லாம் விளங்கும்படியாக அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

இரண்டு, மூன்று செய்திகளை வேகமாகவும், சுருக்கமாகவும் உங்களிடம் எடுத்து வைக்க விரும்புகிறேன்.

1969 ஆம் ஆண்டில் தீர்மானம்!

உங்களுக்கெல்லாம் தெளிவாகத் தெரியும் - இந்தப் பிரச்சினையை அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக சொன்னார்கள் அல்லவா - மன்னார்குடியில் உள்ள இராஜகோபால சாமி கோவில் கருவறை நுழைவுப் போராட்டத்தினை - கர்ப்ப கிரக நுழைவுப் போராட்டத்தைத் தொடங்கவேண்டும் என்று 1969 ஆம் ஆண்டில் தீர்மானத்தைப் போட்டார்கள்.

ஏறத்தாழ 50 ஆண்டுகால போராட்டம் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்பது மிக முக்கியமானது. நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அதிலொன்றும் சந்தேக மேயில்லை.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரமணா - ரஞ்சன் கோகாய்

16.12.2015 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா என்பவரும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய்  ஆகிய இரண்டு மூத்த நீதிபதிகளும் சிறப்பான வகையில் தீர்ப்பை சொன்னார்கள்.

அந்தத் தீர்ப்பைப்பற்றிகூட எவ்வளவு குழப்ப முடியுமோ, அவ்வளவு குழப்பத்தை பத்திரிகையாளர்கள் ஒரு பக்கம் - பார்ப்பனர்கள் ஒரு பக்கம் திட்டமிட்டு செய் தார்கள்.

ஏன்? நீதிபதிகளாக இருந்தவர்களேகூட சிலர் அவர்களுக்குத் துணை நின்றார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இதே இடத்தில்தான், நாங்கள் தெளிவாக, வெற்றி எங்களுக்கு என்பது உறுதியாகும் என்பதை எடுத்துச் சொன்னோம்.

அது உறுதியாகி இருக்கிறது என்பதற்கு, மதுரையில் இப்பொழுது நியமிக்கப்பட்டு இருக்கிற - பயிற்சி பெற்ற 206 பேரில் ஒருவராக இருக்கக்கூடிய ஒருவர்தான் இந்த வெற்றிக் கனியினுடைய முதல் வரியைத் தொடங்கியிருக்கிறார்.

கலைஞர் அவர்களுக்கு வீர வணக்கம்!

இது ஒரு தொடர் தடை ஓட்டம் போன்றது.  கலைஞர், அவர் இன்றைக்கு உருவமாக இல்லை; உணர்வாக நம்மோடு கலந்திருக்கிறார். அவருக்கு நம் வீர வணக் கத்தினை செலுத்தி, நமது வெற்றி விழாவினைக் கொண் டாட நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

இந்த இடத்திற்கு எத்தனையோ வரலாற்றுப் பெருமைகள் உண்டு. இந்த அவையில்தான், நான் கோவில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தவிருக்கிறேன், நீங்கள் கைது செய்யுங்கள் என்று முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் சொன்னார்.

முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களோ, உங்களை கைது செய்துவிட்டு நாங்கள் எப்படி அய்யா ஆட்சியில் இருப்போம்? என்று சொல்லிவிட்டு, அதற்காக நாங்கள் சட்டம் கொண்டு வருகிறோம் என்று சொன்னார்.

அந்த சட்டத்தினை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உயர்நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை. ஏனென்றால், இங்கே உள்ள உயர்நீதிமன்றத்தின்மீது பார்ப்பனர்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கே நேரே சென்றார்கள். இதற்கு என்ன பொருள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

ஆகவே, உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற அவர்கள், மூக்கறுபட்ட முத்திராதிகளாக வந்தார்கள்.

முதல் வழக்கு சேஷம்மாள் வழக்கு

முதல் வழக்கு சேஷம்மாள் வழக்கு. 1972 ஆம் ஆண்டிலே தீர்ப்பு. திருப்பெரும்புதூர் ஜீயர், சங்கராச் சாரியார், இராஜகோபாலாச்சாரியார், இவருடைய பரிந்துரை கடிதத்தை ஏற்று, பல்கிவாலா என்ற வழக்குரைஞர் வாதாடினார்.

அதேநேரத்தில், தமிழக அரசின் சார்பாக, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நம்முடைய நீதிபதி மோகன் அவர்கள், அன்றைக்கு அரசு தலைமை வழக்குரைஞராக இருந்தபோது அந்த வழக்கில் வாதாடினார்.

சட்டம் செல்லாது என்று தீர்ப்பளிக்கக் கோரி பார்ப் பனர்கள் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் வாதாடினார்.

முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது.

இரண்டு காரணங்களை சொன்னார்கள் பார்ப்பனர்கள், கிறித்துவர்களையும், முசுலிம்களையும், நாத்திகர்களையும் அர்ச்சர்களாக நியமிப்பார்கள் என்றனர். நாத்திகம் - ஆத்திகம் என்கிற பிரச்சினையே கிடையாது.

உண்மையான கம்யூனிசமே கடவுள் மறுப்பில்தான் தொடங்குகிறது

அய்யா சத்தியவேல் முருகனார் போன்றவர்கள் கடவுள் நம்பிக்கையாளர், இந்தக் கூட்டத்திற்கு வந்திருப்பவர்களிலும் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருப்பார்கள், தோழர் முத்தரசன் அவர்கள், உண்மையான கம்யூனிஸ்ட் என்பதினால், கடவுள் மறுப்பாளர் என்பதைத் தெளிவாக இங்கே சொன்னார்.

கம்யூனிஸ்டு என்றாலே கடவுள் மறுப்பாளர் - கடவுள் மறுப்பாளர் என்றாலே அவர்கள் அத்துணைப் பேரும் கம்யூனிஸ்டுகளாக இல்லாதவர்கள்கூட பகுத் தறிவாளர்களாக இருப்பார்கள். ஆனால், உண்மையான கம்யூனிசமே கடவுள் மறுப்பில்தான் தொடங்குகிறது. ஆகவே, அதனை தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.

ஆத்திகம் - நாத்திகம் என்ற பிரச்சினைக்கு இங்கே இடம் கிடையாது.

இங்கே அனைவரும் ஒன்றாக சேர்ந்துவிட்டார்களே என்று நினைக்கலாம்.

தவத்திரு அடிகளார் அவர்கள், 1971 ஆம் ஆண்டு மிக அழகாக சொன்னார்,

‘‘இன்றைய ஆஸ்திகம் என்பது உயர்ஜாதியினருடைய நலன். இன்றைய நாஸ்திகம் என்பது ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெரும்பான்மையினருடைய நலன். இதில் எது வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யவேண்டும்’’ என்றார்.

தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்றது
அன்றைக்கு நடைபெற்ற தேர்தலில் தெளிவான தீர்ப்பைக் கொடுத்தார்கள் தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ராமன் பட்டபாடு சொல்ல முடியாத பாடு - அது உங்களுக்குத் தெரியும்.

ஆகவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழங்கியது.

‘‘ஆபரேசன் வெற்றி - நோயாளி செத்தார்’’ என்று ‘விடுதலை’யில் தலையங்கமாக வெளிவந்தது.

கிறித்துவர்களையும், முசுலிம்களையும், நாத்திகர் களையும் அர்ச்சர்களாக நியமிப்பார்கள் என்று பார்ப் பனர்கள் உச்சநீதிமன்றத்தில் சொன்னார்கள்.

இதற்குத் தீர்ப்பு எழுதிய நீதிபதி பாலேகர் என்பவர் மராத்திய பார்ப்பனர் - அவருடைய தந்தையார் அர்ச்சகர்.

அந்தத் தீர்ப்பில் மிகத் தெளிவாகச் சொன்னார்,

பாரம்பரிய அர்ச்சகர் முறையை ஒழித்தாகிவிட்டது. இவர்கள் அர்ச்சனை முறைகளை மாற்றினால், நீங்கள் நீதிமன்றத்தில் முறையிடலாம். ஆனால், ஆகமங்களை அவர்கள் படித்திருக்கவேண்டும் என்று தீர்ப்பில் சொன்னார்.

மீண்டும் கலைஞர் ஆட்சி!

அதில்தான் நாம் பாதி வெற்றியைப் பெற்று, மீதி வெற்றியைப் பெற முடியாத அளவிற்கு இருந்த நிலையில், அந்த மீதி வெற்றியையும் பெறக்கூடிய வாய்ப்பு -  2006 ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு  வந்தார்.

அவர் என்ன சொன்னார் என்றால், ‘‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நான் அகற்றாமல், அரசு மரியாதை கொடுத்தேன். அந்த நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றவேண்டும்’’ என்று சொன்னார்.

எடுத்த கொள்கையில், என்றைக்கும் பெரியாரும் சரி, பெரியாருடைய சீடரும் சரி, ஈரோட்டுக் குருகுலமும் சரி, குருகுலத்து மாணவரும் சரி தோற்றதில்லை என்பதற்கு அடையாளம், அவர் வாழ்ந்த பொழுதே, வெற்றி கிடைத்துவிட்டது.

கலைஞர் அவர்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப் பட்டது. முழு வெற்றி கிடைத்தது.

திராவிடர் கழகம்தான் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தது -

ஆகமப் பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன்,

நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் குழு!

நீதிபதி ஏ.கே.இராஜன் அவர்களுடைய தலைமையில் பல முக்கியஸ்தர்கள் உறுப்பினர்களாக (7 பேர்) உள்ள குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அறிக்கை அளித்தது.

அதற்குமுன் அரசு ஆணை மூலம் அர்ச்சகரை நியமனம் செய்தார்கள். சட்டமே கிடையாது அங்கு. அந்த வழக்கு ஆதித்தன் வழக்கு என்று 2002 ஆம் ஆண்டில் கேரளாவில்.

அதற்கடுத்தபடியாக, உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வந்து தெளிவாயிற்று.

இப்பொழுது சட்டத்தில் எங்கேயும் தடையும் கிடையாது. இரண்டே பேர் - பல்கிவாலாவைவிடப் பெரிய ஆள் கிடையாது. 90 வயது நிறைந்த தனிப்பட்ட முறையில் மிகவும் பண்புள்ள, மிகவும் சட்ட ஞானம் உள்ளவர், பெரிய வழக்குரைஞராகிய பராசரன் அவர்களைக் கொண்டு வந்தார்கள்.

நம்முடைய கொள்கையைப் போன்று, அவருக்கு அவருடைய கொள்கை - அவர் மிகவும் லாவகமாக பேசுவார் நீதிபதிகளிடம். சட்டத்தை எடுத்துச் சொல் வதைவிட, லாவகமாக எடுத்துச் சொல்லக்கூடிய முறையை அவர் தெரிந்தவர். இவை அத்தனையும் எடுபடவில்லை.

இவ்வளவு பெரிய வழக்குரைஞர்களை வைத்து வாதாடினார்கள்; ஆனால், பெரியார் வென்றார்; கலைஞர் வென்றார்; இந்தத் தீர்ப்பில் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது.

முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா கொடுத்த உறுதி!

இன்றைக்கு இருக்கிற அ.தி.மு.க. ஆட்சியினருக்குத் தெளிவாக தெரியவேண்டும். எதற்கெடுத்தாலும் ‘‘அம்மா, அம்மா’’ என்று சொல்கிறவர்கள், உள்ளபடியே அம்மா ஆட்சி என்று, அம்மாவிற்கு மரியாதை கொடுத்திருந்தால், இதை செயல்படுத்தியிருக்கவேண்டாமா? முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சட்டமன்றத்தில் உறுதி கொடுத்திருந்தார். இதை செயல்படுத்துவோம் என்றார். மற்ற பிரச்சினைகளில் எதிர்ப்புகள் இருந்தாலும், இந்தப் பிரச்சினையில் எதிர்ப்பு இல்லை.

அதேபோன்று ஜெயலலிதா அவர்கள், 69 சதவிகித இட ஒதுக்கீடுபடி, ஆகமப் பள்ளிகளில்கூட நியமனம் செய்வோம் என்று செய்தார்கள்.

ஆகவே, அதை செய்யுங்கள் என்று கேட்கிறோம். செய்யவேண்டும்; செய்யத் தவறக்கூடாது நீங்கள்.

தமிழக அமைச்சரின் உத்தரவாதம்!

எத்தனையோ விஷயங்களில் அவர்கள் கோட்டை விடுகிறார்கள்; இந்த ஒரு விஷயத்தைப்பற்றி எழுதியவுடன், இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய சேவூர் இராமச்சந்திரன் அவர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார். நியமனங்களை நாங்கள் தொடருவோம் என்று. இது அமைச்சருடைய உத்தரவாதம். ஆக, இந்தப் பிரச்சினையில் நீதிமன்றத் தடை இல்லை. அரசாங்கங்களுடைய முடிவுகள் தடையில்லை. தி.மு.க. - அ.தி.மு.க. என்ற அரசியல் தடை இல்லை. கடவுள் நம்பிக்கையாளர் - கடவுள் நம்பிக்கை இல்லாதவர் - ஆஸ்திகம் - நாஸ்திகம் தடையில்லை. அது மனித உரிமை - மிகத் தெளிவாக எத்தனையோ கூட்டங்களில் சொல்லியாயிற்று.

கடவுள் இல்லை என்பது எங்களுக்குக் கொள்கை - அது தனிப்பட்ட முறையில். நான் வீட்டுச் சாப்பாடு சாப்பிடுபவன்தான். தவிர்க்க முடியாத நேரத்தில், எப்பொழுதாவது ஓட்டலில் சாப்பிடலாம். தனிப்பட்ட முறையில் எல்லோரும் அவரவர் வீட்டில்தானே சாப்பிடுகிறோம். ஆனால், ஓட்டலில் ஜாதி வித்தியாசம் காட்டினால்!

ஒரு மனிதனுக்கு இருக்கிற உரிமை!

பெரியார் ஏன் போராடினார்? உடனே அவரைப் பார்த்து, நீங்கள்தான் இங்கே வந்து மாதக் கணக்கில் சாப்பிடுவது கிடையாதே, பிறகு ஏன் இங்கு வந்து போராடுகிறீர்கள் என்று யாராவது கேட்க முடியுமா? அது மனித உரிமை! ஒரு மனிதனுக்கு இருக்கிற உரிமை!

இது சூத்திராள் சாப்பிடுகிற இடம் - இது பிராமணாள் சாப்பிடுகிற இடம் என்று இருந்ததை எதிர்த்து நாங்கள் ஏன் போராடினோம்?

கேரளாவில் வைக்கத்தில் தெருவில் நடப்பதற்கான உரிமை கோரி தந்தை பெரியார் போராடினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகிய நீங்களா இந்தத் தெருவில் நடக்கப் போகிறீர்கள்; உங்களுக்கு என்ன? நீங்கள் என்ன ஈழவரா? இதற்காக நீங்கள் ஏன் போராடுகிறீர்கள் என்று கேட்க முடியுமா?

மனிதன், மனித உரிமை என்றால், உலகத்தின் எந்தக் கோடியில் இருந்தாலும், மனிதர்களாக இருக்கிறவர்கள், மனிதத்தை மதிக்கிறவர்கள் அதனைச் செய்வார்கள் என்று சொன்னவுடன், அந்த வாதம் அடிப்பட்டுப் போயிற்று.

இப்பொழுது எந்த வாதமும் கிடையாது - பிடிவாதத்தைத் தவிர!
சட்ட ரீதியாக நமக்கு உள்ள உரிமை இது. இதில் ஒன்றும் சலுகை காட்டவேண்டிய அவசியமில்லை யாரும்!

என்ன உரிமை என்றால், இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின்கீழ்தான் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பாரம்பரிய அர்ச்சகர் முறை கிடையாது. அர்ச்சகர் பள்ளிகளைத் தொடங்கி, வைணவ ஆகமம் வைணவக் கோவில்களுக்கு. சிவ ஆகமம் சிவன் கோவில்களுக்கு என்று தெளிவாகி விட்டது.

யார் யார், எதில் எதில் பயிற்சி பெற்றார்களோ அந்த அந்தக் கோவில்களில் பணியாற்றலாம், ஆகம விதிப்படி.

சர்.சி.பி.இராமசாமி அய்யர் - மகராஜன்!

அய்யா சத்தியவேல் முருகனார் இங்கே சொன்னதை விட, இரண்டு பேர் இன்னும் அதிகமாக சொல்லி யிருக்கிறார்கள்.

ஒருவர் சர்.சி.பி.இராமசாமி அய்யர். நேரு காலத்தில் ஆல் இண்டியா கமிஷன் கொண்டுவரப்பட்டது.

அதற்கடுத்து மகராஜன் குழு அறிக்கை.

அந்த அறிக்கையில், முதலில் அர்ச்சகர்களாக இருக்கின்றவர்களின் தகுதிகளை வரிசைப்படுத்தினால், இப்பொழுது இருக்கின்ற அர்ச்சகர்கள், அர்ச்சகர்களாக நீடிக்க முடியாது. நேரத்தைக் கருதி, இதற்குள் நான் செல்லவில்லை.

சட்டப்பூர்வமாக நமக்கு இருக்கிற உரிமை என்னவென்றால்,

அர்ச்சகர் என்பவர் ஒரு அரசாங்க ஊழியர். அரசாங்க ஊழியர்களுக்கு ஓய்வு வயது உண்டு. ஓய்வூதியம் வேண்டும் என்று கேட்கிறார்கள் அவர்கள். அப்படி என்றால், ஓய்வு வயது என்ற ஒன்று உண்டு. ஆகவே, காலம் உள்ளவரை நாங்களே இருப்போம் என்று சொல்ல முடியாது. 58 வயது ஆகிவிட்டதா, ஓய்வு கொடுக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் அரசாங்க உத்தியோகத்திற்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப்படி உள்ள உரிமை - எல்லா இடங்களிலும் உள்ள உரிமை - அர்ச்சகர் உள்பட.

சட்டத்தை செயல்படுத்துங்கள் என்று கேட்பதுதான் நம்முடைய வேலை

ஆகவேதான், சட்டத்தை அமல்படுத்துங்கள்; அரசாங்க ஆணைகளை அமல்படுத்துங்கள்; அரசாங்க சட்டத்தை செயல்படுத்துங்கள் என்று கேட்பதுதான் நம்முடைய வேலை. செயல்படுத்தமாட்டோம் என்று சொன்னால், அது அரசாங்கமாக இருக்க முடியுமா?

ஆகவே, நம்முடைய கோரிக்கை என்பது இருக்கிறதே நண்பர்களே மிகவும் தெளிவானது.

ஆடிட்டர் ஒருவரைப்பற்றி சொன்னார்கள் - கோயங்கா வீட்டு கணக்குப்பிள்ளையைப்பற்றி -

பி.ஜே.பி.க்காக ஏதோ வேலை செய்கிறார்கள் என்பதற்காக அவரைப் பாராட்டவேண்டும் என்று சொல்லி, ரிசர்வ் வங்கியில், ஒரு இயக்குநராக - சம்பளம் பெறாத - அதிகம் உரிமையில்லாத - ஓட்டுப் போட முடியாத ஒரு இயக்குநர் என்று இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்பு நியமனம் செய்தார்கள்.

‘‘எகனாமிக் டைம்ஸ்’’ நாளிதழில் வெளிவந்த செய்தி!

இன்றைக்கு வெளிவந்த ‘‘எகனாமிக் டைம்ஸ்’’ பத்திரிகையில் அவருடைய படத்தைப் போட்டு ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பத்திரிகை திராவிடர் கழகம் நடத்துவதோ, வீரமணிக்கு வேண்டிய பத்திரிகையோ அல்ல.

அந்தச் செய்தி என்னவென்றால்,

இவர் அந்தப் பதவிக்கு கொஞ்சம்கூட லாயக்கில்லாத ஆள். ஆடிட்டுக்கும் இவருக்கும் சம்பந்தமேயில்லை என்று.

ஆனால், எந்த நேரமும், பெரியாரையும், நம்மையும் அவர் நினைக்கிறார் என்றால், அதற்கு என்ன காரணம்? என்பதை தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

அவர் கொஞ்சம் நடுவில் புகுந்து, அறநிலையப் பாது காப்புத் துறையை ஒழிக்கவேண்டும் என்கிறார்.

இப்பொழுது நாம் இந்தப் பிரச்சினையில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

சிலை திருட்டு வழக்கில் சி.பி.அய். விசாரணையை வரவேற்றோம்!

சிலை திருட்டு, கடவுளைக் காப்பாற்றுகிறோம், கோவிலைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்வது இருக்கிறதே, அது மேலெழுந்தவாரியானது. நம் தோழர்களுக்கேகூட சொல்லிக் கொள்கிறேன்.

நான் மட்டும் சி.பி.அய். விசாரணையை வரவேற்கிறேன் என்று அறிக்கை கொடுத்தேன். எல்லாருடைய கருத்துக்கும் மாறான கருத்து அது. நிறைய பேருக்கு அதிர்ச்சி.

தயானந்த சரசுவதி என்பவர் முதலில் வழக்குப் போட்டார். தயானந்த சரசுவதி என்றால், இமயமலையில் இருந்து வந்தவர் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். திருவாரூர்க்குப் பக்கத்தில் மஞ்சக்குடியில் நடராஜ அய்யர்தான் தயானந்த சரசுவதி ஆனார்.

அறநிலையப் பாதுகாப்புத் துறையை ஒழிக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நிலை.

வடமாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடம்தான் கோவில்கள் இருக்கின்றன. அதன்மூலம் அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் சிலைகள் நீண்ட நாள்களாகக் கொள்ளை யடிக்கப்பட்டு வருகின்றது. கடவுளுக்கு இல்லாத கவலை காவல்துறையினருக்கு இருக்கிறது. அதற்கு ஒரு தனி துறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

‘அவாள்’களின் வேண்டுகோள்!


ஆனால், அதைக் காரணமாகக் காட்டி, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கைப்பாவையாக இங்கே பயன்படுத்திக் கொண்டு, நல்ல அதிகாரிகளைக்கூட சிறையில் தள்ளக்கூடிய அளவிற்கு செயல்படுகிறார்கள். அறநிலையப் பாதுகாப்புத் துறையே இருக்கக்கூடாது என்பதுதான் இராமகோபாலனுடைய வேண்டுகோள், சுப்பிரமணியசாமியினுடைய வேண்டுகோள், எச்.இராஜா வினுடைய வேண்டுகோளாகும்.

இதை மேலெழுந்தவாரியாகப் பார்த்தீர்களேயானால், இது தெரியாது; பெரியார் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான், அது தெளிவாகத் தெரியும்.

ஆக, அந்தத் துறையையே ஒழித்துவிட்டால், அர்ச்சகர் பிரச்சினை வராது; இந்த சட்டம் எல்லாம் ஒழிந்துவிடும். நாம் யாரை வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமித்துக் கொள்ளலாம். ஏனென்றால், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கிடையாது.

என்னென்ன ஆபத்து இருக்கிறது என்பதுதான் அடுத்த கட்ட நிலை. ஆகவே, நம்முடைய போராட்டம் என்பது ஒரு நீண்ட காலப் போராட்டமாக இருக்கவேண்டும். அதற்கு நாம் என்றைக்கும் ஆயத்தமாக இருக்கவேண்டும். தொலைநோக்குப் பார்வையோடு பார்க்கவேண்டிய கட்டம்.

ஆகமப் பயிற்சி பெற்றவர்களுக்கு

வேலை கொடுக்கவேண்டும்!


அடுத்தது உடனடியாக நாம் செய்யவேண்டிய வேலை - ஆகமப் பயிற்சி பெற்ற அனைவருக்கும் உடனடியாக வேலை கொடுக்கவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும். அதை சட்ட பூர்வமாக அவர்கள் சரியாக செய்கிறார்களா, இல்லையா என்று பார்க்கவேண்டும். அப்படி இல்லை என்றால், நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டும். ஏனென்றால், நமக்கு நம்பிக்கையே இப்பொழுது நீதிமன்றம்தான். நீதிமன்றங்கள் சில நேரங்களில் சில விதமாக இருக்கும்; அங்கே ரஞ்சன் கோகாய் போன்றவர்களும் இருக்கிறார்கள்.

நீதிமன்றம் செய்த செயல் எவ்வளவு பெரிய சரியான செயல் என்றால், எவ்வளவு பெரிய ரகளை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கும். அதை சரியான முறையில் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்ததினால், அமைதியாக, ஒழுங்காக செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

அது ஏதோ கலைஞருக்காக, வழக்குப் போட்டவருக்காக என்று யாரும் நினைக்கவேண்டாம். தமிழ்நாட்டினுடைய அமைதி, சட்டம், ஒழுங்கு முறைகள் - இதுக்கே ஒரு பெரிய பாதுகாப்பு - அதன்மூலம் நியாயம் வழங்கியதோடு, நீதி வழங்கிய தோடு வந்தது.

ஆக, ஆகமப் பயிற்சி பெற்றவர்களை உடனடியாக அர்ச்சகர்களாக நியமனம் செய்யவேண்டும்.

10 ஆண்டுகள் பயிற்சி பெற்று காத்திருக்கிறார்கள்

ஆகமம் தெரியாதவர்கள் நிறைய பேர் அர்ச்சர்களாக இருக்கிறார்கள். அவர்களை வெளியில் அனுப்பாமல், ஆகமப் பயிற்சி பெற்றவர்களை உள்ளே விடவேண்டும். ஏற்கெனவே அவர்கள் 10 ஆண்டுகள் பயிற்சி பெற்று காத்திருக்கிறார்கள்.

ஆகமப் பயிற்சி பெற்றவர்களில் பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் அர்ச்சகர் பதவி கொடுக்கவேண்டும் என்றுதான் சொல்கிறோம்.

ஆகவே, உடனடியாக நம்முடைய கோரிக்கை, இந்தக் கூட்டத்தின் சார்பாக வேண்டுகோள் என்னவென்றால்,

ஒன்று, ஆகமப் பயிற்சி பெற்றவர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை கொடுக்கவேண்டும்.

இரண்டாவது, பயிற்சி பெற்ற சிலர் இறந்துவிட்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் பணம் கொடுக்கவேண்டும்.

சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி - குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி கொடுக்கிறார்கள். அது மனிதநேயம்தான். அந்த உணர்வு இந்தப் பிரச்சினையிலும் வரவேண்டும்.

மீண்டும் ஆகமப் பயிற்சிப்

பள்ளிகளை தொடங்குக!


மூன்றாவதாக, அர்ச்சகர் பயிற்சி பள்ளி செல்லும் என்று தீர்ப்பு வந்துவிட்டதோ, அது மீண்டும் அது தொடங்கப்பட்டு, அய்யா சத்தியவேல் முருகனார் அவர்களின் வழிகாட்டுதலோடு அது தொடரவேண்டும். அதில் யார் துணைவேந்தராக இருக்கக்கூடிய தகுதி படைத்தவர்களோ  - அய்யா போன்று இருப்பவர்கள்தான் மிக முக்கியமானவர். ஆகவே, அரசாங்கம் அதனைத் தொடரப்படவேண்டும். வழக்குக்காக அந்த ஆகமப் பயிற்சிப் பள்ளிகளை நிறுத்தி வைத்திருந்தார்கள்; தீர்ப்பு வந்துவிட்டது, மீண்டும் அந்த ஆகமப் பயிற்சிப் பள்ளிகளை தொடங்கவேண்டும். 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி ஆகமப் பயிற்சிகளை அளிக்கவேண்டும்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து வருஷா வருஷம் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள், அதற்கும் உச்சநீதிமன்றத்தில் முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. இனிமேல் இந்த வழக்கை எடுத்துக்கொண்டு வராதீர்கள்; 69 சதவிகிதம் 9 ஆவது அட்டவணை பாதுகாப்புடன் இருக்கிறது என்று சொன்னார்கள். 69 சதவிகிதமும் வெற்றியாகிவிட்டது - அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

69 சதவிகித இட ஒதுக்கீடுபடி, பயிற்சி - வேலைவாய்ப்பு இரண்டும் வரவேண்டும்.

அம்மா என்று கூப்பிட்டால், ஒரு ஆண் வேட்டிக்கட்டிக் கொண்டு வருகிறார்

அதற்கு அடுத்த கட்டம், ஆண் - பெண் என்கிற பேதம் இருக்கக்கூடாது. இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், மேல்மருவத்தூர் கோவிலுக்குச் சென்று பாருங்கள். அங்கே இருக்கிற கடவுள் வெளியில் போய்விடவில்லை - ஆணே அம்மா என்று இருக்கிறார். அம்மா என்று கூப்பிட்டால், ஒரு ஆண் வேட்டிக்கட்டிக் கொண்டு வருகிறார்.

செவ்வாடை அணிந்து பெண்கள் செல்கிறார்கள். எந்தக் கடவுள் கோபித்துக் கொண்டு போய்விட்டார்கள்?

குருமூர்த்தி எவ்வளவு பெரிய மேதை என்பதற்கு உதாரணம்,

கேரளாவில், மழை வெள்ளத்தால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வீடிழந்து, பொருளிழந்து இருக்கிறார்கள்.

பார்ப்பானுக்கு மனிதநேயம் கிடையாது என்பதற்கு,

‘‘காகத்தையும் படைத்து,

கல்மனப் பார்ப்பானையும்

ஏன் படைத்தாய்’’ என்கிற ஒரு பாடல் உண்டு.

மனிதநேயத்தோடு உதவிகளைச் செய்து வருகிறார்கள்!

மழை, வெள்ளத்தால் உயிரிழந்து, பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அமீரகத்திலிருந்து 700 கோடி ரூபாய் நிதி உதவி செய்கிறார்கள். இதில் மதம் இல்லை, ஜாதி இல்லை, கட்சி இல்லை என்று எந்தவித வேறுபாடும் இல்லாமல் மனிதநேயத்தோடு உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

ஆனால், யாருக்கும் தெரியாத ஒன்றை கண்டுபிடித்து குருமூர்த்தி அய்யர் டுவிட்டரில் எழுதுகிறார்,

அது என்னவென்றால்,

அய்யப்பன் கோவிலுக்கு 50 வயதிற்கும் கீழ் உள்ள பெண்களும் வரலாம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது அல்லவா! அதனால்தான், அய்யப்பன் கோபப்பட்டு மழையாய் பொழிகிறது, வெள்ளமாகப் போகிறது என்று பதிவிடுகிறார்.

காட்டுமிராண்டிக் காலத்தில் வாழ்வதாக நினைப்போ? என்று நான் கேட்கவில்லை, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர்  இந்திரா ஜெய்சிங் கேட்டிருக்கிறார். இந்த ஆளை 51-ஏ பிரிவின்படி கைது செய்யவேண்டும் என்று. விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதம் என்று.

அய்யப்பனுக்குக் கோபம் வந்தால்,

எங்கே மழை பெய்திருக்கவேண்டும்?


அவர் சொல்கின்ற வாதப்படியே வைத்துக்கொண்டாலும், அந்த வழக்கிற்காக அய்யப்பனுக்குக் கோபம் வந்தால், எங்கே மழை பெய்திருக்கவேண்டும்? உச்சநீதிமன்றம் இருக்கின்ற டில்லியில் அல்லவா பெய்திருக்கவேண்டும்; பூகம்பம் அங்கே அல்லவா ஏற்பட்டு அதிர்ந்திருக்கவேண்டும்.

பெரியார் சொன்ன உதாரணம்!

ஒரு கதை சொல்வார் பெரியார்,


வேட்டுவக் கவுண்டனுக்கும், வேளாளக் கவுண்டனுக்கும் சண்டை. வேட்டுவக் கவுண்டன் காலை நீட்டிக் கொண்டிருக்கிறான், சாமிக்கு எதிரே - என்னை அவமானப்படுத்துவதற்காக - அவன் காலை மடக்கச் சொல்கிறாயா, உன் கண்ணைக் குத்தட்டுமா? என்று வேளாளக் கவுண்டனைப் பார்த்து சாமி கேட்டதாம்.

இவனுக்குத் தைரியம் இருந்தால், காலை நீட்டிக் கொண்டிருந்தவனிடம் நேரே சென்றிருக்கவேண்டாமா? என்று உதாரணம் சொல்வார் தந்தை பெரியார்.

அவ்வளவு புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு சொல்கிறாயே, அந்த அய்யப்பன் கோவிலே மிதக்கிறதே, இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?

யாரும் சபரிமலைக்கு வராதீர்கள் என்று சொல்கிறார்கள்.

அய்யப்பனுக்கு சக்தி இருந்தால்..

அய்யப்பனுக்கு சக்தி இருந்தால், அவர் டக்கென்று கையைத் தூக்கினால், உடனே மழை நின்றுவிடுமே! மீட்புப் பணிக்கு ஹெலிகாப்டரோ, மீட்புப் படையினரோ வரவேண்டிய அவசியம் கிடையாதே!

இந்த இடத்தில்தான், அய்யா சத்தியவேல் முருகனார் அவர்களுக்கும், நமக்கும் மாறுபாடு.

(இந்த இடத்தில் சத்தியவேல் முருகனார் அவர்கள் நம் கருத்தை ஒப்புக்கொள்கிறேன் என்று சொன்னார்)

கடவுள் கருணையே வடிவானவன் என்றால், இவ்வளவு பெரிய கொடுமைகளை செய்வானா?

ஆகவே, தோழர்களே! கேரள மாநில மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவிக்கின்ற நேரத்தில், கடவுள் தண்டனை கொடுத்தார் என்று சொன்னால், தண்டனை கொடுப்பவன் கருணையே வடிவான கடவுளாக இருக்க முடியுமா? அப்படிப்பட்ட கடவுள் தேவையா? என்று கேள்வி கேட்கமாட்டார்களா?

ஆகவேதான், இவர்கள் கடவுளையும் காப்பாற்றவில்லை - தன்னையும் காப்பாற்றவில்லை - மற்றவர்களையும் காப்பாற்றவில்லை.

நீதிமன்றப் போராட்டம் தேவை!

வீதிமன்றப் போராட்டம் இப்பொழுது தேவையில்லை - நீதிமன்றப் போராட்டம் சட்டப்படிதான்.

இனிமேல் நாம் அதனை செய்ய அரசாங்கத்தை வற்புறுத்தவேண்டும்; செய்யாதவர்கள் என்றால், செய்பவர்களைக் கொண்டு வரவேண்டும்; செய்ய மறுக்கிறவர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும்; செய்ய விரும்புவர்களை அடையாளம் கண்டு கொண்டு வரவேண்டும் ஆட்சிக்கு! அதுதான் மிகவும் முக்கியம்.

இதுதான் அடுத்த கட்டம் - அதை நாம் செய்வோம்!

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Wednesday, August 22, 2018

3,4 மணி நேரம் தொடர்ந்து அமர்ந்து பணியாற்றுவோர் கவனத்துக்கு

Print


 
நீண்ட நேரம்  - 3 மணி, 4 மணி, (2 மணி நேரத்திற்கு மேல்) இருக்கையில் அமர்ந்தே பணிபுரிவோர் - அது எத்தகைய பணியாக இருந்தாலும், கணினியின் முன் அமர்ந்து வேலை செய்தல் மற்றும் எழுத்தர் பணிகள் அல்லது அமர்ந்து தொலைக்காட்சி என்ற தொல்லைக் காட்சிகளை பார்த்து, ஒரு 'சீரியலை' அடுத்து அடுத்த சீரியல் அல்லது பார்த்துப் புளித்துப் போன பழைய திரைப்படங்களானாலும் 3 மணி நேரம் எழுந்திருக் காமலேயே  லயித்து விடுவது ஆகிய இத்தருணங் களில் நமது மூளைக்குச் செல்லுகின்ற இரத்த ஓட்டம் என்பது மிகவும் மெதுவாகச் சென்று, ரத்த ஓட்டம் அதற்கு குறையும் - நிலையும், வாய்ப்பும் ஏற்படுகிறது.

இதன் விளைவு மூளையின் பலமும் நலமும் நீண்ட கால கண்ணோட்டத்தில் பாதிக்கப்படக் கூடிய வாய்ப் புகள் மிகவும் அதிகமாகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நமது மூளை என்பதுதான் நமது உடல் இயக்கத்தின் 'கட்டுப்பாட்டு அறை' அலுவலகமாகும். அதன் ஆணைப்படி தான் உடலின் அத்தனை உறுப்புகளும் இயங்குகின்றன என்பது  அனைவரும் அறிந்த ஒன்று.

அந்த மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம், தங்கு தடையின்றிச் சென்று, எவ்வித நிறுத்தமும் இல்லாமல் அது நடந்தால்தான் நமது உடல் நலம் சீராக இருக்கும்; பக்கவாதம், இதயத் தாக்குதல் (Heart Attack) போன்றவைகள் ஏற்படாது இருக்கும். ரத்த ஓட்டம் என்பது எப்போதும் சதா ஓடிக் கொண்டேயிருக்கும் (Shuttling)  போது, நமது நினைவாற்றல், மூளையில் நிகழ்வுகள் பதிவுகள் போன்றவைகளை உடலின் பல வகையான அறிகுறிகள், ஆணைகள், செயலாக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

அறிவியல் வளராத காலத்தில் மனிதர்கள் மற்றும் அய்ந்தறிவு பிராணிகளுக்கும்கூட இப்படி மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்றம், இறக்கம் (Fluctuations)   ஏற்படுவதால் பல மாற்றங்களும் உடல் உறுப்பு சீற்றங் களும் கூட ஏற்பட்டு வந்தன.

மனிதர்களுக்கு இது நீண்ட காலம் (இந்த இரத்த ஓட்டக் குறைவு) தொடர்ந்தால், அது மூளை நரம்பு சம்பந்தப்பட்ட குறைபாட்டு நோய்களுக்கு (Nero degenertive diseases) துவக்க மறதி நோயான (Dementia) வரை கொண்டு போய் விட்டுவதில் முடியக் கூடும்.

தொடர்ந்து பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்வதன் மூலம், மூளைக்கு மட்டுமல்ல, நமது உடலின் பல உறுப்புக்களுக்கும் போய்ச் சேர வேண்டிய இரத்த ஓட்டக் குறைவு வேறு பல தொந்தரவுகளை உருவாக்கி பல நோய்களுக்கு காரணமாக அமையவிடக் கூடும். கடந்த ஜூன் மாதம் (2018) வெளிவந்த (Journal of Applied Physiology) என்ற ஆய்வு ஏட்டில்  லிவர்பூலில் (இங்கிலாந்து) உள்ள ஜான்மூர்ஸ் பல்கலைக் கழகத்தில் ஓர் ஆய்வு நடைபெற்றது.

நல்ல உடல் நலத்துடன் உள்ள 18 வயதுக்கு மேற் பட்ட ஆண்கள் - பெண்கள் ஆகிய அலுவலகப் பணியாளர்கள் 15 பேரை வைத்து ஆராய்ச்சி செய்து அறிக்கை தயாரித்தனர்.

இவர்களை பல்கலைக்  கழகத்தின் பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்று, தலையில் இதற்கென உள்ள கருவிகளைப் பொருத்தி - ரத்த ஓட்டம் எப்படி உள்ளது - ரத்தக் குழாய்கள் எப்படி வேலை செய்கின்றன என்று ஆராய்ந்துள்ளனர்!

முகமூடிகளை அணிவித்து, மூச்சு விடுவதில்  வெளியாகும் கரியமில வாயு (Carbon Dioxide) அளவு எவ்வளவு, இந்த வாயுக்கள் எப்படி உடலினை மாற்று கின்றன? என்றெல்லாம் கண்டறிந்தனர்.

மூச்சுவிடும் முறைகள் மூலம் இந்த கரியமில வாயுவையும் தக்க முறையில் மாற்றி ஒழுங்குபடுத்தலாம் என்கிற விவரத்தை கண்டறிந்தனர்!

அவர்களது மேஜைகளுக்கு அருகே உள்ள (Treadmill) களில் 30 நிமிடம் அவர்களை ஓட விட்டு (ஒரு மணிக்கு 2 மைல் வேகத்தில் ஓட விட்டு)  ஏற்படும் மாறுதல்களைக் கண்டு ஒருங்கிணைத்து  முடிவுகளை அறிவித்தனர்.

ஒரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாகவே, இருக்கையிலிருந்து எழுந்து, தண்ணீர் குடித்தல் (நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுவோர்) கழிப்பறைக்குச் சென்று திரும்புதல், கூடங்களிலேயே சற்று கால் ஆற நடந்து திரும்புதல் போன்றவற்றை செய்தால் அது நல வாழ்வுக்கு ; மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி நம் வாழ்வு நல்வாழ்வாக வாழ்ந்திட உதவி செய்யும்.

நமது அலுவலகங்களில் இடையில் எழுந்து சென்று மீண்டும் இருக்கையில் அமர்ந்து பணி செய்ய அனுமதி அளிப்பது நல்லது!

3, 4 மணி நேரம் தொடர்ந்து படித்தல், எழுதுதல் பணி செய்யும்போது நான் எழுந்து கழிப்பறை அல்லது வீட்டு முற்றத்தில் சிறு நடை நடந்து மீண்டும் அமர்ந்து பணி தொடருவது உண்டு - இது தெரியாமலேயே -

இதை எளிதில் எல்லோரும் செய்யாமல் - ஒரே இடத்தில்  அமரும் போது ரத்தம் ஓட்டம் குறைந்து மரத்துப் போவது நமக்கேகூட பல நேரங்களில் ஏற்பட்ட துண்டே - இல்லையா? எனவே, இதைக் கடைப் பிடியுங்கள்.

கடவுள் சக்தி இவ்வளவுதான்!

கோவில் தீ மிதி விழாவின்போது அக்கினி குண்டத்தில் தவறி விழுந்து இரண்டு பக்தர்கள் படுகாயம்

அம்பத்தூர், ஆக.21 சென்னை வில்லிவாக் கம் பேருந்து நிலையம் அருகே உள்ளது பாலி அம்மன் கோவில். இந்து அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிமாத திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி நேற்று தீ மிதி விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு திரண்டனர். பின்பு பக்தர்கள் 15 பேர் கொண்ட குழுவாக அக்கினி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத் தினார்கள்.

அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த கதிர்வேல் (வயது 33) மற்றும் வில்லிவாக்கம் யுனைடெட் காலனி அன்னை தெரசா தெருவை சேர்ந்த மனோகரன் (52) ஆகியோர் 15க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் சேர்ந்து அக்கினி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்.

அப்போது திடீரென நெரிசல் ஏற் பட்டதால் மனோகரனும், கதிர்வேலும் எதிர்பாராதவிதமாக அக்கினி குண்டத்தில் தவறி விழுந்தனர். அங்கு திரண்டு நின்று கொண்டிருந்த பக்தர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு ஏற்கெனவே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு நெருப்பு கனலில் சிக்கிய இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அக்கினியின் பிடியில் சிக்கியதால் கதிர்வேலும், மனோகரனும் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக தீயணைப்பு துறையினர் 2 பேரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பக்தர்கள் இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வில்லிவாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலில் 2 பேர் கொலை;

3 பேர் நாக்குகள் துண்டிப்பு

சண்டிகர், ஆக.21 அரியானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் மாங்கலார் என்ற கிராமம் உள்ளது. இங்கு புகழ் பெற்ற கோவில் ஒன்று அமைந்துள்ளது.

இந்த கோவிலில் பூசாரியாக வினோத் என்பவரும், அவருக்கு உதவியாக சுல்தான் என்பவரும் பணியாற்றி வந்தனர். மேலும், கர்ஜிந்தர், ரவீந்தர்சர்மா, அஜய்சர்மா ஆகி யோர் ஊழியர்களாக இருந்தனர்.

அவர்கள் இரவில் கோவிலிலேயே தங்கிக் கொள்வது வழக்கம்.

சம்பவத்தன்று இரவு அடையாளம் தெரியாதவர்கள்கோவிலுக்குள்நுழைந் தனர். அவர்கள் கோவிலில் இருந்த 5 பேரையும் கத்தி, அரிவாள் போன்ற ஆயு தங்களால் தாக்கினார்கள். இதில் வினோத், சுல்தான் ஆகியோர் இறந்துவிட்டனர்.

மற்ற 3 பேருடைய நாக்குகளையும் துண்டித்தனர். பின்னர் கோவில் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

மறுநாள் காலை குழந்தைகளும், ஒரு குடும்பத்தினரும் கோவிலுக்கு சென்றார்கள். அப்போது கோவில் வெளிப்பக்கமாக பூட்டி இருந்தது. உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டது.

இதுபற்றி ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே 2 பேர் இறந்து கிடப்பதும், 3 பேர் நாக்கு அறுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. 3 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

கோவிலிலிருந்த உண்டியல் உடைக் கப்பட்டுஇருந்தது.எனவேகொள்ளை யர்கள் பணத்தை திருடிவிட்டு அவர் களையும் தாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

நாக்கு துண்டிக்கப்பட்டதால் மூன்று பேராலும் பேச முடியவில்லை. மேலும் அவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறி இருப்பதால் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் குணமானதற்கு பிறகு தான் நடந்த சம்பவம் என்ன என்பது பற்றிய முழு விவரமும் தெரியவரும்.

 

பதவி விலகுவாரா உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத்?

உ.பி. முதல்வர்மீது இரு மதவெறி கலவரத் தூண்டுதல் வழக்குப் பதிவு

முதல்வர்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
 
லக்னோ, ஆக. 21 உ.பி. முதல்வர் மக்களவை உறுப்பின ராக இருந்தபோது பேசிய வன்முறைப் பேச்சால் கொலைகளும், சூறையாடல்களும் நடந்தன. அவர்மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவரே முதலமைச்சராக ஆன நிலையில், அந்த வழக்குகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டன.

அதன் மீதான மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம், ஆதித்யநாத் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த எதிர்பாரா திருப்பத்தில் கடைசியாக முதல மைச்சர் ஆதித்யநாத் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் 2007- ஆம் ஆண்டில் தற்போதைய உ.பி. முதல்வர் சாமியார் ஆதித்யநாத் மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசி இருதரப்பினருக்கிடையே மோதலை ஊக்குவித்தார். இதனால் கோரக்பூரில் கலவரம் வெடித்தது. இந்த வழக்கை விசாரித்துவரும் உச்சநீதிமன்றம் சாமியார் முதல்வர் ஆதித்யநாத்மீது கலவர வழக்குத் தொடுப்பது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

ஆதித்யநாத்தின் கொலை வெறிப் பேச்சு!

உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் இரண்டு பேருக்கு மிடையே ஆன தகராறு காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரணை செய்த காவல்துறையினர் இது தொடர்பாக குற்றவாளியைக் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவித்து, குற்றவாளியின்மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டது. கொலையானவர் அப்பகுதியில் உள்ள ஒரு இந்துத்துவ அமைப்பின் பிரமுகர் ஆவார், அவர் மீது ஏற்கெனவே ஆட்கடத்தல் உட்பட பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் 2007-ஆம் ஆண்டு  ஜனவரி 27-ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், அப்போதைய கோரக்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாமியார் ஆதித்யநாத் இந்து இளைஞர் கொலை தொடர்பாக இசுலாமியர் விரோத கருத்துகளைக் கூறினார், மேலும் இந்துக்கள் இருக்கும் நாட்டில் இசுலாமியர்கள் இருக்கக்கூடாது. ஒவ்வொரு இந்து வுக்கும் இசுலாமியர்களை விரட்டும் கடமை உண்டு. அதை இன்றே செய்யுங்கள், இல்லையென்றால் நாளை இங்கே இந்துக்கள் யாரும் இருக்கமாட்டார்கள்'' என்று சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்தார்.

அவர் பேசிய அன்று இரவே கோரக்பூர், அக்பர்பூர், பஸ்தி போன்ற பகுதிகளில் கலவரம் வெடித்தது. இக் கலவரத்தில் இசுலாமிய இளைஞர் கொல்லப்பட்டார். இசுலாமியர்களின் வசிப்பிடங்கள், வணிகத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டன. இசுலாமியர்களின் கோதுமை, கரும்பு, பருத்தி விளைவிக்கப்பட்டிருந்த வயல்களுக்கும் தீவைக்கப்பட்டது. பெரும் பொருட்சேதம் அடைவதற் குக் காரணமான இந்தக் கலவரம் தொடர்பாக கோரக்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கலவரத்தைத் தூண்டியதாக சாமியார் ஆதித்தியநாத்மீது வழக்குத் தொடர்ந்தனர். கோரக்பூர் காவல்துறையினர் அவரைக் கைது செய்து 15 நாள் காவலில்  வைத்தனர். அவர் மீது கொலை செய்யத் தூண்டுதல், சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் பேசுதல் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பார்ப்பனப் பாதுகாப்பு வளையம்

பஞ்சாப் நேஷனல் வங்கி - மும்பைக் கிளையில் நீரவ் மோடி மற்றும் அவரின் உறவினர் மொஹில் சோக்சி ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்றனராம். அந்தத் தருணத்தில் அந்த வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் உஷா அனந்த சுப்பிரமணியன் என்பவர். பிறகு அலகாபாத் வங்கிக்கு இடமாற்றம் செய்யப் பட்டார்.

நீரவ் மோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்திட அந்த உஷா அனந்த சுப்பிரமணியனுக்கு சி.பி.அய். சம்மன்' அனுப் பியது. பணி ஓய்வன்று அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையில் சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம்முன் தோன்றிப் பிணை மனு தாக்கல் செய்தார். என்ன ஆச்சரியம், உடனே அதற்கு ஜாமீனும் கிடைத்துவிட்டது.

இதுபோன்ற பாதுகாப்புகள் நம்மவாளுக்குக் கிடைக்குமா?

வழக்குகளை விலக்கிக் கொண்ட உ.பி. பி.ஜே.பி. அரசு

இந்த நிலையில் கடந்த ஆண்டு சாமியார் தலைமை யிலான அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. அதில் ஆளும் ஆட்சியாளர்கள்மீது உள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டும் என்று கூறப்பட்டது. இதனை அடுத்து சாமியார் ஆதித்யநாத் மீது கொலை, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுதல், ஆட்கடத்தல், உள்ளிட்ட 13 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இந்த வழக்குகள் திரும்பப் பெற்றது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரணை செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம் சாமியார் ஆதித்யநாத் மீதான வழக்கை ரத்து செய்த அரசின் நடவடிக்கையில் தலையிடமுடியாது என்று கூறிவிட்டது. இதனை அடுத்து மனுதாரரால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் கோரக்பூர் தொடர்பான வழக்கை சிபிசிஅய்டி விசாரணை செய்துவருகிறது. சிபிசிஅய்டி மாநில அரசின் கீழ் வருவதால் இந்த வழக்கை சரிவர நடத்தவில்லை. மேலும் மாநில அரசு ரத்துசெய்த வழக்குகளின் கீழ் கோரக்பூர் கலவரவழக்கு வராது. எனவே கோரக்பூர் கலவர வழக்கில் சாமியார் முதல்வர் ஆதித்யநாத்தைக் கைதுசெய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அந்த வழக் கில் கூறியிருந்தனர்.

உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகள்

இந்த வழக்கில் கோரக்பூரைச் சேர்ந்த ஊடகவியலாளர் பர்வேஷ் பெர்வாஸ் என்பவரும் இதே ஒரு வழக்கை தொடுத்திருந்தார். இந்த இரண்டு வழக்குகளையும் சேர்த்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணை செய்தது. அதில் அவர்கள் கோரக்பூர் கலவரம் தொடர் பான வழக்கில் உத்தரப்பிரதேச அரசுக்குப் பல கேள்வி களை முன்வைத்துள்ளனர். கோரக்பூர் கலவரம் தொடர் பாக மாநில அரசு நடத்திய விசாரணையின் முடிவுகள் என்ன ஆயிற்று? எனவும், கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கேட்டுள்ளனர்.

மேலும் சாமியார் முதல்வர் ஆதித்யநாத் இதில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கலவரம் தொடர்பான வழக்குகளைக் கைவிட்டது தொடர்பாகவும் மாநில அரசு விரிவாக விளக்கம் அளிக்கவேண்டும் என்றும்,

மேலும் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் ஆதித்யநாத்மீது ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது? என்றும் கேள்வி கேட்டுள்ளனர். மேலும் மாநில அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

பதவி விலகுவாரா சாமியார்?

கலவர வழக்கில் முதன்மை குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டு ஏற்கெனவே 15 நாள் சிறையில் இருந்துள்ள ஆதித்யநாத் மாநில முதல்வராக இருப்பதால், அவர் மீதான வழக்குகளை மாநில அரசு விலக்கிக் கொண்டது. இந்த நிலையில் கோரக்பூர் கலவர வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றமே ஆதித்யநாத்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதால், சாமியார் முதல்வர் பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என்று மனுதாரர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.

Tuesday, August 21, 2018

கடலில் வீணாய்க் கலக்கும் காவிரி நீர்: நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

Print

சென்னை, ஆக.20 காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (19.8.2018) வெளியிட்ட அறிக்கை வருமாறு:

கர்நாடகத்தில் கனமழை பெய்வதால் கிடைக்கும் பயனை வேளாண்மைப் பணிகளுக்குப் பயன்படுத்தி முறையாக அனுபவிக்க முடியாத நிலையில் தமிழக விவசாயிகள் தவித்து வருகின்றனர். இரு முறை மேட்டூர் அணை, முழுக் கொள்ள ளவை எட்டிய போதும், அங்கிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண் மைக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் பயன்படாமல் நேராகக் கடலில் கலப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

காவிரி டெல்டா பகுதியில் 2500-க்கும் மேற்பட்ட ஏரிகளும், குளங்களும் முறை யாக உரிய காலத்தில் தூர்வாரப்படாததே இதற்குக் காரணம். குறிப்பாக, திருவாரூ ரில் உள்ள அய்நூற்று பிள்ளையார் கோவில் குளம் தண்ணீரே இல்லாமல் இன்றும் வறண்டு காட்சியளிக்கின்றன.

நீர் மேலாண்மைக்காக ரூ. 4,735 கோடி செலவிட்டுள்ளதாக அ.தி.மு.க அரசு அறி வித்தும், இன்றைக்கு நூற்றுக்கணக்கான டி.எம்.சி காவிரி உபரி நீர் வங்கக் கடலில் கலக்கிறது. அப்படியெனில் ரூ. 5 ஆயிரம் கோடி அரசு பணம் எங்கே போனது? என்ற கேள்வி எழுகிறது.

மழைக் காலங்களில் காவிரியில் உபரி யாக வரும் நீரை தேக்கி வைக்க திமுக ஆட்சியில் நதி நீர் இணைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. காவிரியாற் றினை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, கோட்டைக்கரையாறு, வைகை மற்றும் குண்டாறுடன் இணைக்கும் இந்தத் திட்டம் ரூ.189 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டு, 2009 பிப்ரவரி 9 ஆம் தேதியன்று பணிகளும் தொடங்கப்பட்டன. சுமார் ரூ. 54.26 கோடி அளவிலான பணிகள் நிறைவடைந்த நிலையில், 2011 இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, அத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டது. இதனால், காவிர் நீர் தொடர்ந்து கடலில் கலக்கும் நிலை உருவாகியிருக் கிறது.

எனவே, உபரி நீர் எல்லாம் கடலில் கலப்பதற்கு, அதிமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். இனியாவது தொலைநோக்கு "நீர் மேலாண்மை" திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நதி நீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றியும் கடலில் கலக்கும் காவிரி நீரைத் தடுத்து வேளாண் மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் தமிழக அரசு திருப்பி விடவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்


சென்னை, ஆக.20 உயர்நீதிமன்றங்களில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீட்டை அமுல் படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி 16.8.2018 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

அதன் விவரம் வருமாறு: கோவை

உயர்நீதிமன்றங்களில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி 16.8.2018 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திராவிடர் கழக மாநிலத் தலைமை கேட்டுக் கொண்டது.     அதன் அடிப்படியில், கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த திராவிடர் கழகத்தினர் அனுமதிகோரி இருந்தனர். அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.      காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ள நிலையில் திராவிடர் கழகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப் பாட்டம் செய்ததால் காவல்துறையினர் அவர்கள் அனை வரையும் கைது செய்தனர். இதில் 23 பேர்கள்  கைது செய்யப்பட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ச.சிற் றரசு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சு.வேலு சாமி, மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், இ.கண் ணன், மாவட்ட இளைஞரணித் தலைவர் திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு, மு.தமிழ்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

நீதித்துறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததைக் கண்டித்தும் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டுக்கு  சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில், மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங் களின் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிர்புறம் 16.8.2018 அன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இராஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட அமைப்பாளர் வீ.சிவசாமி, திருப்பூர் மாநகரத் தலைவர் இல.பாலகிருஷ்ணன், செயலாளர் பா.மா.கரு ணாகரன், கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கு.திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றிய திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோபி வெ.குமாரராஜா அவர்கள் குறிப்பிட்டதாவது;

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று நீதித் துறையாகும்.அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளும் சரியாக இயங்கவேண்டுமெனில் நீதித்துறை எவ்வித ஆதிக்கமும், பாரபட்சமுமின்றி இயங்கவேண்டும். பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ்மக்கள், சிறு பான்மையர்கள் மற்றும் நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கின்ற பெண்கள் ஆகியோருக்கு நீதித் துறையில் உரிய பிரதிநித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளதா? என்றால் இல்லை!

நாட்டில் உச்சபட்ச அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் ஆகியவற்றில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவதில் இட ஒதுக்கீட்டு முறை அறவே பின்பற்றப்படுவது கிடை யாது! பெண்கள் மீதான வன்கொடுமைகளை அறிந்து, புரிந்து தீர்ப்பு வழங்கும் இடமான நீதிமன்றங்களில் பெண்களுக்கான பிரதிநித்துவம் பறைசாற்றப்படாமல் இருப்பது நியாயமா? தமிழ்நாட்டில் கல்வி,வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப் பட்டுள்ள அளவிற்கு நீதித் துறையில் அமல்படுத்தப்பட வில்லை! பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பிரிவினர் மற்றும் சிறுபான்மையர் ஆகியோரின் திறமை, அறிவு, புத்திசாலித்தனம் ஆகியவற்றை வெளிப்படுத்த அரசுகள் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும்! நாட்டு மக்கள் தொகையில் 8 சதவிகிதம் கூட இல்லாத உயர்ஜாதி  நீதிபதிகள் 92 சதவிகித மக்களுக்கு நீதி வழங்குவது எவ்வாறு சமூகநீதியாகும்? ஆகவே நீதித்துறையில்  இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும், தமிழ்நாடு அரசு நீதித்துறை அல்லாத மற்ற துறைகளில் இட ஒதுக்கீட்டை அமல் படுத்தியிருப்பது போல் நீதித்துறையிலும் இட ஒதுக் கீட்டை அமல்படுத்தவேண்டும்! நீதிமன்றங்கள் ஒரு குறிப்பட்ட வகுப்பாரின் ஆதிக்கபுரிகளாக இல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளையும் உள்ளடக் கியதாக இருக்கவேண்டும்! அப்போதுதான் நாடு அமைதி யான பாதையில் செல்லமுடியும் என்று உரையாற்றினார்.

திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் "நளினம்" நாகராஜ், திருப்பூர் மாநகர துணைத் தலைவர் "ஆட்டோ" தங்கவேல்,துணைச் செயலாளர் "தென்னூர்" முத்து,  தாராபுரம் கழக மாவட்ட துணைத் தலைவர் முத்து.முருகேசன், திருப்பூர் மாவட்ட இளை ஞரணிச் செயலாளர் "வானவில்" ச.துரைமுருகன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் சேகாம்பாளையம் ரங்கசாமி,பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த அவினாசி பொன்னுசாமி, வீரப்பன், திருமுருகன்பூண்டி "ஓவியர்' மணி,பாண்டியன் நகர் முருகேஷ், அருள்புரம் குணசேகர், நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு அனைவருக்கும் தேவை! நீதித்துறையில் இட ஒதுக் கீட்டுக்கு மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவரவேண் டும் உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்ட முடிவில் திருப்பூர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ.குருவிஜயகாந்த் நன்றி கூறினார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், விருது நகர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலை முன்பு, நீதித் துறையில் சமூகநீதி கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன் தலைமையில், மாவட்ட ப.க. புரவலர் ந.ஆனந்தம் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் தொடக்க நிகழ்வாக திமுக தலைவர் கலைஞர் அவர்களது படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ஆர்ப்பாட்ட முழக்கங்களுக்குப்பின், மாவட்ட துணைச் செயலாளர் சு.சண்முகசுந்தரம், துணைத் தலைவர் அ.தங்கசாமி, மாவட்ட ப.க. அமைப்பாளரும் தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பாசறை அமைப்பாளருமான பா.அசோக், பொதுக்குழு உறுப்பினர் வானவில் வ.மணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி உரையாற்றினர். பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், மாவட்ட இளை ஞரணிச் செயலாளர் ந.ஆசைத்தம்பி, அருப்புக்கோட்டை நகர செயலாளர் பா.இராசேந்திரன், ஒன்றிய கழக அமைப்பாளர் இரா.முத்தையா, இளைஞரணி தலைவர் க.திருவள்ளுவர், சிவகாசி ஒன்றிய அமைப்பாளர் கா.காளி ராசன், திருத்தங்கல் நகர அமைப்பாளர் மா.நல்லவன், கவிஞர் நா.மா.முத்து, உ.அமரன், நா.அறிவழகன், புதூர் வெ.பாலமுருகன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ச.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி அடிப்படையில் நிதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா திருவள்ளுவர் சிலை அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் மண்டல அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வெ.ஆசைத்தம்பி அனைவரையும் வரவேற்றார். மண்டலச் செயலாளர சு.தேன்மொழி, அறந் தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலும் மாவட்டத் துணைத் தலவைர்கள் புதுக்கோட்டை செ.இராசேந்திரன், அறந் தாங்கி முத்து மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா, நகரத் தலைவர் சு.கண்ணன், நகரச் செயலாளர்கள் புதுக் கோட்டை ரெ.மு.தருமராசு, அறந்தாங்கி செ.சுப்பிரமணியன், திருச்சி சட்டக்கல்லூரி வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் சங்கவி தர்மா, அறந்தாங்கி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இரா.யோகராசு, திருமயம் ஒன்றியச் செயலாளர் ஆறு.முருகையா, மகளிரணி அமைப்பாளர் வீர.வசந்தா, புதுக்கோட்டை ஒன்றியத் தலைவர் சாமி.இளங்கோ முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தி.இராசமாணிக்கம் கொத்தமங்கலம் இராமையன் மகளிரணி த.நாத்திகா, மாணவரணி சி.கனிமொழி, சி.எழிலரசன் நகர இளை ஞரணி அமைப்பாளர் சி.சரத்குமார், மாவட்ட மாண வரணித் தலைவர் பெ.அன்பரசன், பிச்சத்தான்பட்டி கிளைத் தலைவர் அ.பத்மநாபன், புதுக்கோட்டை விடுதி கிளைச்செயலாளர் வீ.தங்கவேல், இராங்கியம் கிளைத் தலைவர இராம.கைலாசம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி சிறப்புரையாற்றினார். கழக வழிகாட்டுதலின்படி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மண்டல மாணவர் கழக செயலாளர் இரா.குமார் நன்றி கூறினார்.

கிருட்டினகிரி

கிருட்டினகிரியில் நீதித்துறையில் சமூக நீதியை வலியுறுத்தி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூக நீதியை வலியுறுத்தி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மற்றும் பெண்களுக்கும் உரிய இட ஒதுக் கீட்டு வழங்கக்கோரி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பின் படி கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா. சிலை எதிரில் 16.8.2018 அன்று காலை 11 மணியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்டச் செயலாளர் கோ.திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார்.  மாவட்டத் தலைவர் மு.துக்காராம், பொதுக்குழு உறுப்பினர் தா.சுப் பிரமணியம், தருமபுரி மண்டல இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம். மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன் தொடக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா. சரவணன், தலைமை கழகச் சொற்பொழிவாளர் மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் சி.சீனிவாசன், மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன், கிருட்டினகிரி ஒன்றிய த.மாது, கிருட்டினகிரி நகர செயலாளர் கா.மாணிக்கம், நகர அமைப்பாளர் கோ.தங்கராசன், ஒன்றிய செயலாளர்கள் மத்தூர் வி.திருமாறன், ஊற்றங்கரை செ.சிவராஜ், காவேரிப்பட்டணம் சிவ. மனோகர், ஒன்றிய துணைச் செயலாளர் சி.இராசா, ஒன்றிய அமைப்பாளர் பெ.செல்வம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அ.கோ.இராசா, மத்தூர் நகரச் செயலாளர் சி.வெங்கடாசலம், மகளிரணி பொறுப்பாளர்கள் வெ.அழகுமணி, மு.இந்திராகாந்தி, கோ.சுமதி, பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர் க.வெங்கடேசன், மத்தூர் பொ.நாகராசன், இரா.சிங்காராம், அ.கருணாகரன், செ.தனஞ்செயன், கிருட்டினகிரி சி.வடிவேல், ஊற்றங்கரை கு.பரந் தாமன், அரசம்பட்டி  சக்திவேல் உள்பட கழகத் தோழர்கள் பெரும் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தலைமை கழகம் வெளியிடப்பட்ட முழக்கங்களை தொடக்கத்திலும், முடிவிலும் முழங்கினர். இறுதியாக மாவட்ட இளைஞரணி தலைவர் இல.ஆறுமுகம் நன்றி கூறினார்.

திருவண்ணாமலை

16.8.2018 அன்று காலை 11 மணிக்கு, திருவண்ணாமலை நகரம், அண்ணாசிலை அருகில் மாவட்ட தலைவர் மு.காமராஜ் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ப.அண்ணாதாசன் வரவேற்புரை ஆற்றினார். வேலூர் மண்டல கழகச் செயலாளர் மு.பஞ்சாட்சரம் பெரியாரின் சமூகநீதி போராட்டத்தினை விளக்கி உரையாற்றினார். போளூர் ஒன்றிய தலைவர் மருத்துவர் எம்.எஸ்.பலராமன், போளூர் ஒன்றிய செயலாளர் த.சுந்தர மூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினர். தோழர்களின் ஆர்ப்பாட்ட முழுக்கங்களுக்குப் பிறகு கண்டன உரை தொடர்ந்தது.

வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன் ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில்:& இந்தியா முழுவதும் 3 சதவீதமே உள்ள பார்ப்பனர்கள் உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி நீதிபதிகள் 92 சதவீத மக்களுக்கு இறுதித் தீர்ப்பு வழங்கும் கொடுமைகளை விளக்கினார், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் சட்டம், நீட் தேர்வு போன்ற பல்வேறு தீர்ப்புகளில் பார்ப் பனர்களின் வஞ்சகத் தீர்ப்புகளில் பெரும்பான்மை மக் களுக்கு சட்டப்படி நீதி வழங்காமல் புறக்கணிக்கும் போக்கை பார்ப்பனர்கள் கடைப்பிடிப்பதை சுட்டிக்காட்டி னார். ஆதலால் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீடு தேவை என்பத னையும், நீதித்துறையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும், பெண்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதனை தமிழர் தலைவரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விளக்கங்களை நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் பட்டியல், உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் பட்டியல், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி பறிக்கப்படும் கொடுமையினை சுட்டிக்காட்டி கண்டன விளக்க உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தண்டராம்பட்டு வெங்கட்ராமன், கீழ்க்கச்சிரா பட்டு ஜி.தேவராஜ், பெரியார் பெருந்தொண்டர் எடப் பாளையம் செ.குப்புசாமி, திருமதி குப்புசாமி, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் பீம்ராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நீதித்துறை விளக்கங் களையும், தோழர்களின் ஆர்ப்பாட்ட முழக்கங்களைக் கேட்டு பொது மக்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இறுதியாக போளூர் ஒன்றிய செயலாளர் த.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார். மாவட்ட தலைவர் மு.காமராஜ் கழகத் தோழர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கிச் சிறப்பித்தார்.

நாகர்கோயில்

உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோரை நீதிபதியாக்கக் கோரி குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 16.8.2018 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்ட தலைவர் மா.மணி தலைமைதாங்கினார். மாவட்ட செயலாளர் சி.கிருஷ்ணேசுவரி, ப.க. மாவட்ட தலைவர் உ.சிவதாணு, நகர அமைப்பாளர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளை ஞரணி தலைவர் மகேஷ் வரவேற்றார்.

திருநெல்வேலி மண்டல செயலாளர் கோ.வெற்றி வேந்தன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட குழு உறுப்பினர் சுபாஷ், அகில இந்திய முற்போக்கு பேரவை மாநில துணைத் தலைவர் சி.சுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி முத்து, வி.சி.க. மாவட்ட துணைச் செயலாளர் தொல்காப் பியன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னு ராசன், தொழிலாளரணி செயலாளர் ச.ச.கருணாநிதி, வி.சி.க. கன்னியாகுமரி தொகுதி செயலாளர் சு.சிந்ததாஸ், வி.சி.க.தோவாளை ஒன்றிய செயலாளர் பா.ஜான் அசூன், நகர கழகத் துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க்முகமது, நகர இளைஞரணி செயலாளர் இராஜேஷ், மகளிர் பாசறை செயலாளர் அன்பரசி, கழக தோழர்கள் ஜோஸ், அண்ணா கல்லூரி திராவிடர் மாணவர் கழக தலைவர் த.பிரதீஷ் ராஜா, செயலாளர் ஊ.அருண்சதீஸ், அமைப்பாளர் ஆனந்த பவான், சிவசூர்யா, சுபாஷ் கண்ணன், த.இராமன், வி.சி.க.தோழர்கள் அஷ்வின், முகேஷ், பரத், விக்னேஷ், மகேஷ், விஷ்ணு, சுடலை, இராம சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கழக தோழர்கள் முழங்கிய ஆர்ப்பாட்ட முழக்கங்கள் வானைப் பிளந்தன.

வேலூர்

நீதித்துறையிலும் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி வேலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சத்துவாச்சாரியில் 16.8.2018 அன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட கழக செயலாளர் கு.இளங்கோவன், திருப்பத்தூர் கழக மாவட்ட தலைவர் அகிலா எழிலரசன், திருப்பத்தூர் கழக மாவட்ட துணைத் தலைவர் எம்.கே.எஸ்.இளங்கோவன், அரக்கோணம் மாவட்ட தலைவர் சு.லோகநாதன், அரக்கோணம் மாவட்ட செயலாளர் செ.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமையேற்று உயர், உச்சநீதிமன்றங்களில் உயர் ஜாதி ஆதிக்க நீதிபதிகளே 92% உள்ளனர் என்ற புள்ளி விவரத் துடன் கூறி உரையாற்றினார்.

மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி, மாவட்ட ப.க. தலைவர் இர.அன்பரசன், ப.க. தோழர் தி.க. சின்னதுரை, அரக்கோணம் மாவட்ட தலைவர் சு.லோகநாதன், மேனாள் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சி.எழிலசரன், வேலூர் மாநகர ப.க.தலைவர் மு.சுகுமார் ஆகியோர் உரையாற்றினார்கள்.

தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியாரின் முயற்சியால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நீதியரசர் வரதராசன் நியமிக்கப்பட்டு பின்னர் அவரே முதல் நீதிபதியாக உச்சநீதிமன்றத்திலும் நியமிக்கப்பட்ட வரலாற் றினை குறிப்பிட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் உயர் உச்சநீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.

இதற்கான முதல் முயற்சியாக தமிழர் தலைவர் ஈடு பட்டுள்ளது பற்றியும் விரிவாக உரையாற்றிய அனைவரும் விளக்கி கூறினார்கள். நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு மருந்துவ இடம் கிடைக்காதது பற்றியும் கூறினர்.

பங்கேற்றோர்

மாவட்ட அமைப்பாளர் ச.கி.செல்வநாதன், பொதுக் குழு உறுப்பினர் இரா.கணேசன், ஆற்காடு ஒன்றிய தலைவர் கோ.விநாயகம், திருப்பத்தூர் மாவட்ட இளை ஞரணி தலைவர் சி.எ.சிற்றரசு, வேலூர் மாவட்ட இளை ஞரணி தலைவர் ந.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் க.சிகாமணி, வேலூர் மாநகர ப.க.செயலாளர் அ.மொ.வீரமணி, வேலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் இரவி.கமலேஷ்குமார், சத்துவாச்சாரி நகர தலவர் ச.கி.தாண்டவமூர்த்தி, இளைஞரணி வீ.பெரியார்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சொ.ஜீவன்தாஸ், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ.இரவிக்குமார், திமிரி ஜெ.பெருமாள், சாந்தகுமார், ஆர்.இராமன், வி.பி.உலகநாதன், ஜி.பிரபாகரன், சரவணன், போளூர் பன்னீர்செல்வம், மாவட்ட மகளிரணி செயலாளர் ச.கலைமணி, மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி, மகளிர் பாசறை நகர தலைவர் சி.லதா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ச.கலைவாணி, திருப்பத்தூர் மகளிரணி இ.வென்ணிலா, இளைஞரணி து.ஈஸ்வரி, ஜெ.சுமதி, கா.கவின், மாநகர கழக அமைப்பாளர் ந.சந்திரசேகர், ஆர்ப்பாட்ட முழக்க மிட்டு நன்றி கூறினார்.

தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாளை வீடுதோறும் - வீதிதோறும் திராவிட இனத்தின் தனிப்பெரும் விழாவாகக் கொண்டாடுவோம்!

*மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்களின் அளப்பரிய தொண்டுக்கு இரங்கல் - வீர வணக்கம்!

* செப்.23 முதல் தமிழர் தலைவர் பங்கேற்கும் தமிழகம் தழுவிய விழிப்புணர்வுப் பயணம்

திராவிடர் கழக தலைமை செயற்குழுவின் தீர்மானங்கள்


மானமிகு கலைஞர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வீரவணக்கம் செலுத்தினர் (சென்னை, 20.8.2018)

சென்னை, ஆக.20 மறைந்த மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவினை வீடுதோறும், வீதிதோறும் திராவிட இனத்தின் தனிப்பெரும் விழாவாகக் கொண்டாடுவது என்று திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

20.8.2018 திங்கள் காலை 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டம், திராவிடர் கழகத் தலைவர்  மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1

மானமிகு கலைஞர் அவர்களின்

மறைவிற்கு இரங்கல்


13 வயதில் மாணவர் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, தந்தை பெரியார் கொள்கையை மாணவர் பருவத்திலேயே பரப்புவதற்குக் கையெழுத்து ஏடு நடத்தி, பிரச்சார நாடகம் எழுதி நடித்து, ஈரோடு குடிஅரசு' அலுவலகத்தில் புடம் போடப்பட்டு, திரை உலகில் புகுந்து தனி எழுத்தாற்றலைப் பதித்து, திராவிடர் கழகத்தின் எழுத்தாளராக, பேச்சாளராக சுடர்விட்டு, அறிஞர் அண்ணா தலைமையில் திமுகவில் இணைந்து தனது கடும் உழைப்பால், ஆற்றலால் மேலும் மேலும் உயர்ந்து, தேர்தலில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமின்றி 13 முறை சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அய்ந்து முறை முதல் அமைச்சராக  ஒளி வீசி, ஆட்சியை சமுதாயக் கொள்கைகளுக்குச் சட்ட வடிவம் கொடுக்கும் கருவியாகப் பயன்படுத்தி, பெண்கள் மறுமலர்ச்சிக்கான எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வளர்ச்சிக்கு அரும் பெரும் திட்டங்களைச் செயல்படுத்தி, சமூகநீதி காத்து, மதச்சார்பின்மை கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அரை நூற்றாண்டுக் காலம் திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்று, நெருக்கடி காலத்தை எதிர்த்து எதிர் நீச்சல் போட்டு ஏற்றம் - தாழ்வு என்ற இருநிலைகளிலும் சீராகவே நிமிர்ந்து நின்று, கட்சியைக் கட்டிக் காத்து பல்திறன் கொள்கலனாக விளங்கியவர் மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் என்பதை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு பெருமிதத்துடன் போற்றுகிறது. அத்தகு பெருமகனாராகிய மானமிகு கலைஞர் அவர்களின் மறைவு (7.8.2018) என்பது திமுகவுக்கு மட்டுமல்ல; திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல; தமிழ்நாடு மக்களுக்கு மட்டுமல்ல; உலக முழுவதும் உள்ள தமிழின மக்களுக்கே ஈடு சொல்ல முடியாத பேரிழப்பாகும். எளிதில் மறக்க முடியாத - ஈடு செய்ய இயலாத இந்தப் பேரிழப்பால் ஆறாத் துயரத்தில் மூழ்கி இருக்கும் கலைஞர்தம் குடும்பத்தினருக்கும், திமுகவுக்கும்,  கலைஞரைத் தன் உயிரினும் மேலாக நேசிக்கும் திமுக தோழர்களுக்கும், குறிப்பாக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன், செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், கவிஞர் கனிமொழி எம்.பி., உள்ளிட்ட அனைவருக்கும் கலைஞர் மறைவால் பெரும் துயரத்தாக்குதலுக்கு ஆளாகியுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திராவிடர் கழகம் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து மானமிகு சுயமரியாதைக்காரரின் அளப்பரிய பெருந்தொண்டுக்கு  திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

செப்.17-க்குள் 5,000 விடுதலை' சந்தாக்கள்!

தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் செப்டம்பர் 17 ஆம் தேதிக்குள் 5,000 விடுதலை' சந்தாக்களை கழகத் தலைவரிடம் அளிப்பது என்றும்,  கழகத் தலைவர் சுற்றுப்பயணத்தின்போது, 5,000 விடுதலை' சந்தாக்களை அளிப்பது என்றும் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை' சந்தா சேர்க்கை

குழு அமைப்பு


கீழ்க்கண்ட கழகப் பொறுப்பாளர்கள் விடுதலை' சந்தா சேர்க்கைப் பணியில் ஈடுபடுவார்கள்.

தஞ்சை இரா.ஜெயக்குமார்

உரத்தநாடு இரா.குணசேகரன்

தருமபுரி ஊமை.ஜெயராமன்

மதுரை வெ.செல்வம்

பொன்னேரி பன்னீர்செல்வம்

சென்னை இன்பக்கனி

திருவாரூர் செந்தமிழ்ச்செல்வி

நாகர்கோவில் வெற்றிவேந்தன்

தீர்மானம் எண்: 2

மேனாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி அவர்களின் மறைவிற்கு இரங்கல்

இந்தியாவின் மேனாள் பிரதமரும், கொள்கைக்கு மாறுபட்டவர்களிடத்திலும் பண்பு மாறா அன்பும், அரவணைப்பும் கொண்டவருமான இந்தியாவின் மூத்த அரசியல்வாதி அடல் பிகாரி வாஜ்பேயி அவர்களின் மறைவிற்கு வருந்துவதுடன், இக்கூட்டம் அவர்தம் குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 3
மனிதநேயம் என்பது ஜாதி, மதம், மாநிலம், நாடு எல்லாவற்றையும் கடந்தது!

வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு, லேசாக மீண்டு வரும் கேரள மக்களுக்கு திராவிடர் கழகம் துணிவும், கடும் உழைப்பும் கொண்ட மக்களாகிய நீங்கள் அனைவரும் இந்தத் தேசிய பேரிடர் துன்பத்திலிருந்தும், துயரத்திலிருந்தும் மீளவேண்டும்; மறுவாழ்வுக்கான பணிகள் முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ள கேரள அரசையும், முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களையும் பாராட் டுவதுடன், கேரள மாநிலத்திற்கு உதவிடும் அத்துணை அரசுகள், அமைப்புகள், தனிப்பட்டவர்கள் அனைவருக்கும் நமது நன்றியைத் தெரிவித்து, மனிதநேயம் என்பது ஜாதி, மதம், மாநிலம், நாடு எல்லாவற்றையும் கடந்தது என்பதைக் காட்டி வருவது வெளிப்படையாகத் தெரிகிறது என்பது வரவேற்கத்தக்கது!

தீர்மானம் எண்: 3 (அ)

கேரள மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்பினை தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும்!

மத்திய அரசு இதை தேசியப் பேரிடராக'' அறிவித்துப் போதிய நிதி உதவிகளை தாராளமாக மேலும் வழங்க வேண்டும் என்று இக்கமிட்டி வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண்: 3 (ஆ)

பெரியார் அறக்கட்டளை - நிறுவனங்கள் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி!
நமது அறக்கட்டளைகள், நிறுவனங்கள் சார்பாக 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதோடு, நமது பெரியார் - மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகம் மற்றும் கல்வி நிறுவன மாணவர்கள், மருந்துகள் முதல் பலவற்றை மக்களிடையே திரட்டி மனிதநேயப் பணிகளைத் தொடரவேண்டுமெனவும் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது. நமது மாணவர்கள், ஆசிரியர்களின் தொண்டறம் இதில் தொய்வின்றித் தொடரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

தீர்மானம் எண்: 4

விழிப்புணர்வுப் பிரச்சாரத் திட்டம்

வரும் ஆகஸ்டு 22 முதல் கழகத் தலைவர் தலைமையில் மேற்கொள்ளப்படவிருந்த நான்கு கட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தவிர்க்க முடியாத காரணத்தால் செப்டம்பர் 23 முதல் தொடங்கி சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 5

திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் மிகவும் இன்றியமையாதன!

கும்பகோணத்திலும், தொடர்ந்து பொன்னேரி, பட்டுக்கோட்டை, மத்தூர், கணியூர் போன்ற இடங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாநாடுகளில் இருபால் இளைஞர்கள், மாணவர்கள் காட்டிய எழுச்சி  - இந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் மிகவும் இன்றியமையாதன என்ற உணர்வின் வெளிப்பாடு என்பதை அறிய முடிகிறது.

கழக மாணவர் அணி, இளைஞரணி, மகளிரணி அமைப்புகளை விரிவுபடுத்தி, இயக்கத்தின் பாதையில் புதிய  மைல்கல் என்று சொல்லும் அளவிற்கு இயக்கச் செயல்பாடுகளையும், கட்டமைப்புகளையும் வேகப் படுத்துவதில் அதிக ஊக்கமும் வேகமும் காட்டுமாறு அனைத்துக் கழகப் பொறுப்பாளர்களையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மண்டல, மாவட்ட, திராவிடர் கழகத் தலைவர், செயலாளர்கள், நகர ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் இவற்றின் ஒருங்கிணைப்பு (Net Work) விஞ்ஞான முறையில் கட்டமைக்க எல்லா வகையான செயல்பாடுகளையும், முடுக்கி விடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 6


வீடெங்கும் - வீதியெங்கும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடுவோம்!

தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழாவை நகரம் முதல் கிராமம் வரை கொள்கைப் பிரச்சார பெரு வெள்ளமாக எடுத்துச் செல்லுவது என்றும் தந்தை பெரியார் பிறந்த நாள் திராவிட இனத்தின் தனிப் பெரும் திருநாளாக மகிழ்ச்சியுடன், குதூகலத்துடன் வீடுதோறும், வீதி தோறும் கொண்டாடப்பட வேண்டும் என்றும் உற்றார், உறவினர்,  நண்பர்கள் சந்திப்பு - பரிசுகள் அளிப்பு, குழந்தைகளுக்குப் புத்தாடை, இனிப்புகள், பல்வேறு போட்டிகள் என்று இன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்று நாடே சிலிர்த்து மகிழும் அளவுக்கு ஏற்பாடுகளை கழகத் தோழர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...