Thursday, August 23, 2018

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

* சட்டம், நீதிமன்றத் தீர்ப்புகள் தடையாக இல்லை

* அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைவரையும் கோவிலில் நியமிக்கவேண்டும்

* உயிரிழந்த பயிற்சி பெற்றவர்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்யவேண்டும்

* அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும்- பெண்களும் அர்ச்சகராக வேண்டும்

சென்னை, ஆக. 22-  சட்டமும், நீதிமன்ற தீர்ப்புகளும் ஆதரவாக இருக்கும் நிலையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைவருக்கும் அர்ச்சகர் பணி அளிக்கப்படவேண்டும்; அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் தொடர்ந்து நடத்தவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.  பெண்களுக்கும் அர்ச்சகர் உரிமை 

21.8.2018 அன்று சென்னை பெரியார் திடலில்,  ‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை  முதல் கட்ட வெற்றி - அடுத்த நிலை என்ன?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்:

அவரது உரை வருமாறு:

‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை முதல் கட்ட வெற்றி - அடுத்த நிலை என்ன?’’

எழுச்சியோடு நடைபெறக்கூடிய ‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை முதல் கட்ட வெற்றி - அடுத்த நிலை என்ன?’’ என்ற தலைப்பில் நடைபெறக்கூடிய கருத்தரங்கம் போன்ற ஒரு சிறப்புக் கூட்ட நிகழ்ச்சிக்கு நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, இங்கே வந்து அருமையான கருத்துகளை எடுத்து வைத்து, தொடக்கத்தில் இருந்து இந்தப் பிரச்சினை - இந்தப் போராட்டத்தில் நம்மோடு துணை நின்ற போராளியாக இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய அய்யா தோழர் இரா.முத்தரசன் அவர்களே,

இந்தப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தனியாக வாதாடி, வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்து, இன்றைக்கும் அடுத்த நிலைக்கு என்ன செய்யவேண்டும் என்ற நிலையில், இந்தப் போராட்டத்தினுடைய அடுத்த கட்டத்திற்கு நம்மோடு துணை நிற்கின்ற பொறியாளர் சைவத்திரு மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்களே,

இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையாற்றியுள்ள கழக துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

எதிரே அமர்ந்திருக்கக்கூடிய தோழர் குமரிஅனந்தன் உள்பட சான்றோர்களே, இயக்கக் குடும்பத்தவர்களே, பக்தர்களாக இங்கே வந்திருக்கக்கூடிய அருமைப் பெரி யோர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொல்லவேண்டிய மிக முக்கியமான கருத்துகள், வரலாறுகள் இவைகளையெல்லாம் இந்த இருபெரும் அறிஞர்கள், கொள்கையாளர்கள் சிறப்பாக இந்த அரங்கத்தில் நமக்கெல்லாம் விளங்கும்படியாக அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

இரண்டு, மூன்று செய்திகளை வேகமாகவும், சுருக்கமாகவும் உங்களிடம் எடுத்து வைக்க விரும்புகிறேன்.

1969 ஆம் ஆண்டில் தீர்மானம்!

உங்களுக்கெல்லாம் தெளிவாகத் தெரியும் - இந்தப் பிரச்சினையை அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக சொன்னார்கள் அல்லவா - மன்னார்குடியில் உள்ள இராஜகோபால சாமி கோவில் கருவறை நுழைவுப் போராட்டத்தினை - கர்ப்ப கிரக நுழைவுப் போராட்டத்தைத் தொடங்கவேண்டும் என்று 1969 ஆம் ஆண்டில் தீர்மானத்தைப் போட்டார்கள்.

ஏறத்தாழ 50 ஆண்டுகால போராட்டம் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்பது மிக முக்கியமானது. நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அதிலொன்றும் சந்தேக மேயில்லை.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரமணா - ரஞ்சன் கோகாய்

16.12.2015 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா என்பவரும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய்  ஆகிய இரண்டு மூத்த நீதிபதிகளும் சிறப்பான வகையில் தீர்ப்பை சொன்னார்கள்.

அந்தத் தீர்ப்பைப்பற்றிகூட எவ்வளவு குழப்ப முடியுமோ, அவ்வளவு குழப்பத்தை பத்திரிகையாளர்கள் ஒரு பக்கம் - பார்ப்பனர்கள் ஒரு பக்கம் திட்டமிட்டு செய் தார்கள்.

ஏன்? நீதிபதிகளாக இருந்தவர்களேகூட சிலர் அவர்களுக்குத் துணை நின்றார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இதே இடத்தில்தான், நாங்கள் தெளிவாக, வெற்றி எங்களுக்கு என்பது உறுதியாகும் என்பதை எடுத்துச் சொன்னோம்.

அது உறுதியாகி இருக்கிறது என்பதற்கு, மதுரையில் இப்பொழுது நியமிக்கப்பட்டு இருக்கிற - பயிற்சி பெற்ற 206 பேரில் ஒருவராக இருக்கக்கூடிய ஒருவர்தான் இந்த வெற்றிக் கனியினுடைய முதல் வரியைத் தொடங்கியிருக்கிறார்.

கலைஞர் அவர்களுக்கு வீர வணக்கம்!

இது ஒரு தொடர் தடை ஓட்டம் போன்றது.  கலைஞர், அவர் இன்றைக்கு உருவமாக இல்லை; உணர்வாக நம்மோடு கலந்திருக்கிறார். அவருக்கு நம் வீர வணக் கத்தினை செலுத்தி, நமது வெற்றி விழாவினைக் கொண் டாட நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

இந்த இடத்திற்கு எத்தனையோ வரலாற்றுப் பெருமைகள் உண்டு. இந்த அவையில்தான், நான் கோவில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தவிருக்கிறேன், நீங்கள் கைது செய்யுங்கள் என்று முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் சொன்னார்.

முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களோ, உங்களை கைது செய்துவிட்டு நாங்கள் எப்படி அய்யா ஆட்சியில் இருப்போம்? என்று சொல்லிவிட்டு, அதற்காக நாங்கள் சட்டம் கொண்டு வருகிறோம் என்று சொன்னார்.

அந்த சட்டத்தினை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உயர்நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை. ஏனென்றால், இங்கே உள்ள உயர்நீதிமன்றத்தின்மீது பார்ப்பனர்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கே நேரே சென்றார்கள். இதற்கு என்ன பொருள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

ஆகவே, உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற அவர்கள், மூக்கறுபட்ட முத்திராதிகளாக வந்தார்கள்.

முதல் வழக்கு சேஷம்மாள் வழக்கு

முதல் வழக்கு சேஷம்மாள் வழக்கு. 1972 ஆம் ஆண்டிலே தீர்ப்பு. திருப்பெரும்புதூர் ஜீயர், சங்கராச் சாரியார், இராஜகோபாலாச்சாரியார், இவருடைய பரிந்துரை கடிதத்தை ஏற்று, பல்கிவாலா என்ற வழக்குரைஞர் வாதாடினார்.

அதேநேரத்தில், தமிழக அரசின் சார்பாக, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நம்முடைய நீதிபதி மோகன் அவர்கள், அன்றைக்கு அரசு தலைமை வழக்குரைஞராக இருந்தபோது அந்த வழக்கில் வாதாடினார்.

சட்டம் செல்லாது என்று தீர்ப்பளிக்கக் கோரி பார்ப் பனர்கள் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் வாதாடினார்.

முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது.

இரண்டு காரணங்களை சொன்னார்கள் பார்ப்பனர்கள், கிறித்துவர்களையும், முசுலிம்களையும், நாத்திகர்களையும் அர்ச்சர்களாக நியமிப்பார்கள் என்றனர். நாத்திகம் - ஆத்திகம் என்கிற பிரச்சினையே கிடையாது.

உண்மையான கம்யூனிசமே கடவுள் மறுப்பில்தான் தொடங்குகிறது

அய்யா சத்தியவேல் முருகனார் போன்றவர்கள் கடவுள் நம்பிக்கையாளர், இந்தக் கூட்டத்திற்கு வந்திருப்பவர்களிலும் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருப்பார்கள், தோழர் முத்தரசன் அவர்கள், உண்மையான கம்யூனிஸ்ட் என்பதினால், கடவுள் மறுப்பாளர் என்பதைத் தெளிவாக இங்கே சொன்னார்.

கம்யூனிஸ்டு என்றாலே கடவுள் மறுப்பாளர் - கடவுள் மறுப்பாளர் என்றாலே அவர்கள் அத்துணைப் பேரும் கம்யூனிஸ்டுகளாக இல்லாதவர்கள்கூட பகுத் தறிவாளர்களாக இருப்பார்கள். ஆனால், உண்மையான கம்யூனிசமே கடவுள் மறுப்பில்தான் தொடங்குகிறது. ஆகவே, அதனை தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.

ஆத்திகம் - நாத்திகம் என்ற பிரச்சினைக்கு இங்கே இடம் கிடையாது.

இங்கே அனைவரும் ஒன்றாக சேர்ந்துவிட்டார்களே என்று நினைக்கலாம்.

தவத்திரு அடிகளார் அவர்கள், 1971 ஆம் ஆண்டு மிக அழகாக சொன்னார்,

‘‘இன்றைய ஆஸ்திகம் என்பது உயர்ஜாதியினருடைய நலன். இன்றைய நாஸ்திகம் என்பது ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெரும்பான்மையினருடைய நலன். இதில் எது வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யவேண்டும்’’ என்றார்.

தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்றது
அன்றைக்கு நடைபெற்ற தேர்தலில் தெளிவான தீர்ப்பைக் கொடுத்தார்கள் தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ராமன் பட்டபாடு சொல்ல முடியாத பாடு - அது உங்களுக்குத் தெரியும்.

ஆகவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழங்கியது.

‘‘ஆபரேசன் வெற்றி - நோயாளி செத்தார்’’ என்று ‘விடுதலை’யில் தலையங்கமாக வெளிவந்தது.

கிறித்துவர்களையும், முசுலிம்களையும், நாத்திகர் களையும் அர்ச்சர்களாக நியமிப்பார்கள் என்று பார்ப் பனர்கள் உச்சநீதிமன்றத்தில் சொன்னார்கள்.

இதற்குத் தீர்ப்பு எழுதிய நீதிபதி பாலேகர் என்பவர் மராத்திய பார்ப்பனர் - அவருடைய தந்தையார் அர்ச்சகர்.

அந்தத் தீர்ப்பில் மிகத் தெளிவாகச் சொன்னார்,

பாரம்பரிய அர்ச்சகர் முறையை ஒழித்தாகிவிட்டது. இவர்கள் அர்ச்சனை முறைகளை மாற்றினால், நீங்கள் நீதிமன்றத்தில் முறையிடலாம். ஆனால், ஆகமங்களை அவர்கள் படித்திருக்கவேண்டும் என்று தீர்ப்பில் சொன்னார்.

மீண்டும் கலைஞர் ஆட்சி!

அதில்தான் நாம் பாதி வெற்றியைப் பெற்று, மீதி வெற்றியைப் பெற முடியாத அளவிற்கு இருந்த நிலையில், அந்த மீதி வெற்றியையும் பெறக்கூடிய வாய்ப்பு -  2006 ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு  வந்தார்.

அவர் என்ன சொன்னார் என்றால், ‘‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நான் அகற்றாமல், அரசு மரியாதை கொடுத்தேன். அந்த நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றவேண்டும்’’ என்று சொன்னார்.

எடுத்த கொள்கையில், என்றைக்கும் பெரியாரும் சரி, பெரியாருடைய சீடரும் சரி, ஈரோட்டுக் குருகுலமும் சரி, குருகுலத்து மாணவரும் சரி தோற்றதில்லை என்பதற்கு அடையாளம், அவர் வாழ்ந்த பொழுதே, வெற்றி கிடைத்துவிட்டது.

கலைஞர் அவர்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப் பட்டது. முழு வெற்றி கிடைத்தது.

திராவிடர் கழகம்தான் இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தது -

ஆகமப் பயிற்சி பெற்றவர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன்,

நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் குழு!

நீதிபதி ஏ.கே.இராஜன் அவர்களுடைய தலைமையில் பல முக்கியஸ்தர்கள் உறுப்பினர்களாக (7 பேர்) உள்ள குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அறிக்கை அளித்தது.

அதற்குமுன் அரசு ஆணை மூலம் அர்ச்சகரை நியமனம் செய்தார்கள். சட்டமே கிடையாது அங்கு. அந்த வழக்கு ஆதித்தன் வழக்கு என்று 2002 ஆம் ஆண்டில் கேரளாவில்.

அதற்கடுத்தபடியாக, உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வந்து தெளிவாயிற்று.

இப்பொழுது சட்டத்தில் எங்கேயும் தடையும் கிடையாது. இரண்டே பேர் - பல்கிவாலாவைவிடப் பெரிய ஆள் கிடையாது. 90 வயது நிறைந்த தனிப்பட்ட முறையில் மிகவும் பண்புள்ள, மிகவும் சட்ட ஞானம் உள்ளவர், பெரிய வழக்குரைஞராகிய பராசரன் அவர்களைக் கொண்டு வந்தார்கள்.

நம்முடைய கொள்கையைப் போன்று, அவருக்கு அவருடைய கொள்கை - அவர் மிகவும் லாவகமாக பேசுவார் நீதிபதிகளிடம். சட்டத்தை எடுத்துச் சொல் வதைவிட, லாவகமாக எடுத்துச் சொல்லக்கூடிய முறையை அவர் தெரிந்தவர். இவை அத்தனையும் எடுபடவில்லை.

இவ்வளவு பெரிய வழக்குரைஞர்களை வைத்து வாதாடினார்கள்; ஆனால், பெரியார் வென்றார்; கலைஞர் வென்றார்; இந்தத் தீர்ப்பில் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது.

முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா கொடுத்த உறுதி!

இன்றைக்கு இருக்கிற அ.தி.மு.க. ஆட்சியினருக்குத் தெளிவாக தெரியவேண்டும். எதற்கெடுத்தாலும் ‘‘அம்மா, அம்மா’’ என்று சொல்கிறவர்கள், உள்ளபடியே அம்மா ஆட்சி என்று, அம்மாவிற்கு மரியாதை கொடுத்திருந்தால், இதை செயல்படுத்தியிருக்கவேண்டாமா? முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சட்டமன்றத்தில் உறுதி கொடுத்திருந்தார். இதை செயல்படுத்துவோம் என்றார். மற்ற பிரச்சினைகளில் எதிர்ப்புகள் இருந்தாலும், இந்தப் பிரச்சினையில் எதிர்ப்பு இல்லை.

அதேபோன்று ஜெயலலிதா அவர்கள், 69 சதவிகித இட ஒதுக்கீடுபடி, ஆகமப் பள்ளிகளில்கூட நியமனம் செய்வோம் என்று செய்தார்கள்.

ஆகவே, அதை செய்யுங்கள் என்று கேட்கிறோம். செய்யவேண்டும்; செய்யத் தவறக்கூடாது நீங்கள்.

தமிழக அமைச்சரின் உத்தரவாதம்!

எத்தனையோ விஷயங்களில் அவர்கள் கோட்டை விடுகிறார்கள்; இந்த ஒரு விஷயத்தைப்பற்றி எழுதியவுடன், இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய சேவூர் இராமச்சந்திரன் அவர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார். நியமனங்களை நாங்கள் தொடருவோம் என்று. இது அமைச்சருடைய உத்தரவாதம். ஆக, இந்தப் பிரச்சினையில் நீதிமன்றத் தடை இல்லை. அரசாங்கங்களுடைய முடிவுகள் தடையில்லை. தி.மு.க. - அ.தி.மு.க. என்ற அரசியல் தடை இல்லை. கடவுள் நம்பிக்கையாளர் - கடவுள் நம்பிக்கை இல்லாதவர் - ஆஸ்திகம் - நாஸ்திகம் தடையில்லை. அது மனித உரிமை - மிகத் தெளிவாக எத்தனையோ கூட்டங்களில் சொல்லியாயிற்று.

கடவுள் இல்லை என்பது எங்களுக்குக் கொள்கை - அது தனிப்பட்ட முறையில். நான் வீட்டுச் சாப்பாடு சாப்பிடுபவன்தான். தவிர்க்க முடியாத நேரத்தில், எப்பொழுதாவது ஓட்டலில் சாப்பிடலாம். தனிப்பட்ட முறையில் எல்லோரும் அவரவர் வீட்டில்தானே சாப்பிடுகிறோம். ஆனால், ஓட்டலில் ஜாதி வித்தியாசம் காட்டினால்!

ஒரு மனிதனுக்கு இருக்கிற உரிமை!

பெரியார் ஏன் போராடினார்? உடனே அவரைப் பார்த்து, நீங்கள்தான் இங்கே வந்து மாதக் கணக்கில் சாப்பிடுவது கிடையாதே, பிறகு ஏன் இங்கு வந்து போராடுகிறீர்கள் என்று யாராவது கேட்க முடியுமா? அது மனித உரிமை! ஒரு மனிதனுக்கு இருக்கிற உரிமை!

இது சூத்திராள் சாப்பிடுகிற இடம் - இது பிராமணாள் சாப்பிடுகிற இடம் என்று இருந்ததை எதிர்த்து நாங்கள் ஏன் போராடினோம்?

கேரளாவில் வைக்கத்தில் தெருவில் நடப்பதற்கான உரிமை கோரி தந்தை பெரியார் போராடினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகிய நீங்களா இந்தத் தெருவில் நடக்கப் போகிறீர்கள்; உங்களுக்கு என்ன? நீங்கள் என்ன ஈழவரா? இதற்காக நீங்கள் ஏன் போராடுகிறீர்கள் என்று கேட்க முடியுமா?

மனிதன், மனித உரிமை என்றால், உலகத்தின் எந்தக் கோடியில் இருந்தாலும், மனிதர்களாக இருக்கிறவர்கள், மனிதத்தை மதிக்கிறவர்கள் அதனைச் செய்வார்கள் என்று சொன்னவுடன், அந்த வாதம் அடிப்பட்டுப் போயிற்று.

இப்பொழுது எந்த வாதமும் கிடையாது - பிடிவாதத்தைத் தவிர!
சட்ட ரீதியாக நமக்கு உள்ள உரிமை இது. இதில் ஒன்றும் சலுகை காட்டவேண்டிய அவசியமில்லை யாரும்!

என்ன உரிமை என்றால், இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின்கீழ்தான் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பாரம்பரிய அர்ச்சகர் முறை கிடையாது. அர்ச்சகர் பள்ளிகளைத் தொடங்கி, வைணவ ஆகமம் வைணவக் கோவில்களுக்கு. சிவ ஆகமம் சிவன் கோவில்களுக்கு என்று தெளிவாகி விட்டது.

யார் யார், எதில் எதில் பயிற்சி பெற்றார்களோ அந்த அந்தக் கோவில்களில் பணியாற்றலாம், ஆகம விதிப்படி.

சர்.சி.பி.இராமசாமி அய்யர் - மகராஜன்!

அய்யா சத்தியவேல் முருகனார் இங்கே சொன்னதை விட, இரண்டு பேர் இன்னும் அதிகமாக சொல்லி யிருக்கிறார்கள்.

ஒருவர் சர்.சி.பி.இராமசாமி அய்யர். நேரு காலத்தில் ஆல் இண்டியா கமிஷன் கொண்டுவரப்பட்டது.

அதற்கடுத்து மகராஜன் குழு அறிக்கை.

அந்த அறிக்கையில், முதலில் அர்ச்சகர்களாக இருக்கின்றவர்களின் தகுதிகளை வரிசைப்படுத்தினால், இப்பொழுது இருக்கின்ற அர்ச்சகர்கள், அர்ச்சகர்களாக நீடிக்க முடியாது. நேரத்தைக் கருதி, இதற்குள் நான் செல்லவில்லை.

சட்டப்பூர்வமாக நமக்கு இருக்கிற உரிமை என்னவென்றால்,

அர்ச்சகர் என்பவர் ஒரு அரசாங்க ஊழியர். அரசாங்க ஊழியர்களுக்கு ஓய்வு வயது உண்டு. ஓய்வூதியம் வேண்டும் என்று கேட்கிறார்கள் அவர்கள். அப்படி என்றால், ஓய்வு வயது என்ற ஒன்று உண்டு. ஆகவே, காலம் உள்ளவரை நாங்களே இருப்போம் என்று சொல்ல முடியாது. 58 வயது ஆகிவிட்டதா, ஓய்வு கொடுக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் அரசாங்க உத்தியோகத்திற்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப்படி உள்ள உரிமை - எல்லா இடங்களிலும் உள்ள உரிமை - அர்ச்சகர் உள்பட.

சட்டத்தை செயல்படுத்துங்கள் என்று கேட்பதுதான் நம்முடைய வேலை

ஆகவேதான், சட்டத்தை அமல்படுத்துங்கள்; அரசாங்க ஆணைகளை அமல்படுத்துங்கள்; அரசாங்க சட்டத்தை செயல்படுத்துங்கள் என்று கேட்பதுதான் நம்முடைய வேலை. செயல்படுத்தமாட்டோம் என்று சொன்னால், அது அரசாங்கமாக இருக்க முடியுமா?

ஆகவே, நம்முடைய கோரிக்கை என்பது இருக்கிறதே நண்பர்களே மிகவும் தெளிவானது.

ஆடிட்டர் ஒருவரைப்பற்றி சொன்னார்கள் - கோயங்கா வீட்டு கணக்குப்பிள்ளையைப்பற்றி -

பி.ஜே.பி.க்காக ஏதோ வேலை செய்கிறார்கள் என்பதற்காக அவரைப் பாராட்டவேண்டும் என்று சொல்லி, ரிசர்வ் வங்கியில், ஒரு இயக்குநராக - சம்பளம் பெறாத - அதிகம் உரிமையில்லாத - ஓட்டுப் போட முடியாத ஒரு இயக்குநர் என்று இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்பு நியமனம் செய்தார்கள்.

‘‘எகனாமிக் டைம்ஸ்’’ நாளிதழில் வெளிவந்த செய்தி!

இன்றைக்கு வெளிவந்த ‘‘எகனாமிக் டைம்ஸ்’’ பத்திரிகையில் அவருடைய படத்தைப் போட்டு ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பத்திரிகை திராவிடர் கழகம் நடத்துவதோ, வீரமணிக்கு வேண்டிய பத்திரிகையோ அல்ல.

அந்தச் செய்தி என்னவென்றால்,

இவர் அந்தப் பதவிக்கு கொஞ்சம்கூட லாயக்கில்லாத ஆள். ஆடிட்டுக்கும் இவருக்கும் சம்பந்தமேயில்லை என்று.

ஆனால், எந்த நேரமும், பெரியாரையும், நம்மையும் அவர் நினைக்கிறார் என்றால், அதற்கு என்ன காரணம்? என்பதை தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

அவர் கொஞ்சம் நடுவில் புகுந்து, அறநிலையப் பாது காப்புத் துறையை ஒழிக்கவேண்டும் என்கிறார்.

இப்பொழுது நாம் இந்தப் பிரச்சினையில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

சிலை திருட்டு வழக்கில் சி.பி.அய். விசாரணையை வரவேற்றோம்!

சிலை திருட்டு, கடவுளைக் காப்பாற்றுகிறோம், கோவிலைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்வது இருக்கிறதே, அது மேலெழுந்தவாரியானது. நம் தோழர்களுக்கேகூட சொல்லிக் கொள்கிறேன்.

நான் மட்டும் சி.பி.அய். விசாரணையை வரவேற்கிறேன் என்று அறிக்கை கொடுத்தேன். எல்லாருடைய கருத்துக்கும் மாறான கருத்து அது. நிறைய பேருக்கு அதிர்ச்சி.

தயானந்த சரசுவதி என்பவர் முதலில் வழக்குப் போட்டார். தயானந்த சரசுவதி என்றால், இமயமலையில் இருந்து வந்தவர் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். திருவாரூர்க்குப் பக்கத்தில் மஞ்சக்குடியில் நடராஜ அய்யர்தான் தயானந்த சரசுவதி ஆனார்.

அறநிலையப் பாதுகாப்புத் துறையை ஒழிக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய நிலை.

வடமாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடம்தான் கோவில்கள் இருக்கின்றன. அதன்மூலம் அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் சிலைகள் நீண்ட நாள்களாகக் கொள்ளை யடிக்கப்பட்டு வருகின்றது. கடவுளுக்கு இல்லாத கவலை காவல்துறையினருக்கு இருக்கிறது. அதற்கு ஒரு தனி துறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

‘அவாள்’களின் வேண்டுகோள்!


ஆனால், அதைக் காரணமாகக் காட்டி, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கைப்பாவையாக இங்கே பயன்படுத்திக் கொண்டு, நல்ல அதிகாரிகளைக்கூட சிறையில் தள்ளக்கூடிய அளவிற்கு செயல்படுகிறார்கள். அறநிலையப் பாதுகாப்புத் துறையே இருக்கக்கூடாது என்பதுதான் இராமகோபாலனுடைய வேண்டுகோள், சுப்பிரமணியசாமியினுடைய வேண்டுகோள், எச்.இராஜா வினுடைய வேண்டுகோளாகும்.

இதை மேலெழுந்தவாரியாகப் பார்த்தீர்களேயானால், இது தெரியாது; பெரியார் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான், அது தெளிவாகத் தெரியும்.

ஆக, அந்தத் துறையையே ஒழித்துவிட்டால், அர்ச்சகர் பிரச்சினை வராது; இந்த சட்டம் எல்லாம் ஒழிந்துவிடும். நாம் யாரை வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமித்துக் கொள்ளலாம். ஏனென்றால், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கிடையாது.

என்னென்ன ஆபத்து இருக்கிறது என்பதுதான் அடுத்த கட்ட நிலை. ஆகவே, நம்முடைய போராட்டம் என்பது ஒரு நீண்ட காலப் போராட்டமாக இருக்கவேண்டும். அதற்கு நாம் என்றைக்கும் ஆயத்தமாக இருக்கவேண்டும். தொலைநோக்குப் பார்வையோடு பார்க்கவேண்டிய கட்டம்.

ஆகமப் பயிற்சி பெற்றவர்களுக்கு

வேலை கொடுக்கவேண்டும்!


அடுத்தது உடனடியாக நாம் செய்யவேண்டிய வேலை - ஆகமப் பயிற்சி பெற்ற அனைவருக்கும் உடனடியாக வேலை கொடுக்கவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும். அதை சட்ட பூர்வமாக அவர்கள் சரியாக செய்கிறார்களா, இல்லையா என்று பார்க்கவேண்டும். அப்படி இல்லை என்றால், நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டும். ஏனென்றால், நமக்கு நம்பிக்கையே இப்பொழுது நீதிமன்றம்தான். நீதிமன்றங்கள் சில நேரங்களில் சில விதமாக இருக்கும்; அங்கே ரஞ்சன் கோகாய் போன்றவர்களும் இருக்கிறார்கள்.

நீதிமன்றம் செய்த செயல் எவ்வளவு பெரிய சரியான செயல் என்றால், எவ்வளவு பெரிய ரகளை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கும். அதை சரியான முறையில் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்ததினால், அமைதியாக, ஒழுங்காக செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

அது ஏதோ கலைஞருக்காக, வழக்குப் போட்டவருக்காக என்று யாரும் நினைக்கவேண்டாம். தமிழ்நாட்டினுடைய அமைதி, சட்டம், ஒழுங்கு முறைகள் - இதுக்கே ஒரு பெரிய பாதுகாப்பு - அதன்மூலம் நியாயம் வழங்கியதோடு, நீதி வழங்கிய தோடு வந்தது.

ஆக, ஆகமப் பயிற்சி பெற்றவர்களை உடனடியாக அர்ச்சகர்களாக நியமனம் செய்யவேண்டும்.

10 ஆண்டுகள் பயிற்சி பெற்று காத்திருக்கிறார்கள்

ஆகமம் தெரியாதவர்கள் நிறைய பேர் அர்ச்சர்களாக இருக்கிறார்கள். அவர்களை வெளியில் அனுப்பாமல், ஆகமப் பயிற்சி பெற்றவர்களை உள்ளே விடவேண்டும். ஏற்கெனவே அவர்கள் 10 ஆண்டுகள் பயிற்சி பெற்று காத்திருக்கிறார்கள்.

ஆகமப் பயிற்சி பெற்றவர்களில் பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் அர்ச்சகர் பதவி கொடுக்கவேண்டும் என்றுதான் சொல்கிறோம்.

ஆகவே, உடனடியாக நம்முடைய கோரிக்கை, இந்தக் கூட்டத்தின் சார்பாக வேண்டுகோள் என்னவென்றால்,

ஒன்று, ஆகமப் பயிற்சி பெற்றவர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை கொடுக்கவேண்டும்.

இரண்டாவது, பயிற்சி பெற்ற சிலர் இறந்துவிட்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் பணம் கொடுக்கவேண்டும்.

சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி - குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி கொடுக்கிறார்கள். அது மனிதநேயம்தான். அந்த உணர்வு இந்தப் பிரச்சினையிலும் வரவேண்டும்.

மீண்டும் ஆகமப் பயிற்சிப்

பள்ளிகளை தொடங்குக!


மூன்றாவதாக, அர்ச்சகர் பயிற்சி பள்ளி செல்லும் என்று தீர்ப்பு வந்துவிட்டதோ, அது மீண்டும் அது தொடங்கப்பட்டு, அய்யா சத்தியவேல் முருகனார் அவர்களின் வழிகாட்டுதலோடு அது தொடரவேண்டும். அதில் யார் துணைவேந்தராக இருக்கக்கூடிய தகுதி படைத்தவர்களோ  - அய்யா போன்று இருப்பவர்கள்தான் மிக முக்கியமானவர். ஆகவே, அரசாங்கம் அதனைத் தொடரப்படவேண்டும். வழக்குக்காக அந்த ஆகமப் பயிற்சிப் பள்ளிகளை நிறுத்தி வைத்திருந்தார்கள்; தீர்ப்பு வந்துவிட்டது, மீண்டும் அந்த ஆகமப் பயிற்சிப் பள்ளிகளை தொடங்கவேண்டும். 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி ஆகமப் பயிற்சிகளை அளிக்கவேண்டும்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து வருஷா வருஷம் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள், அதற்கும் உச்சநீதிமன்றத்தில் முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. இனிமேல் இந்த வழக்கை எடுத்துக்கொண்டு வராதீர்கள்; 69 சதவிகிதம் 9 ஆவது அட்டவணை பாதுகாப்புடன் இருக்கிறது என்று சொன்னார்கள். 69 சதவிகிதமும் வெற்றியாகிவிட்டது - அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

69 சதவிகித இட ஒதுக்கீடுபடி, பயிற்சி - வேலைவாய்ப்பு இரண்டும் வரவேண்டும்.

அம்மா என்று கூப்பிட்டால், ஒரு ஆண் வேட்டிக்கட்டிக் கொண்டு வருகிறார்

அதற்கு அடுத்த கட்டம், ஆண் - பெண் என்கிற பேதம் இருக்கக்கூடாது. இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், மேல்மருவத்தூர் கோவிலுக்குச் சென்று பாருங்கள். அங்கே இருக்கிற கடவுள் வெளியில் போய்விடவில்லை - ஆணே அம்மா என்று இருக்கிறார். அம்மா என்று கூப்பிட்டால், ஒரு ஆண் வேட்டிக்கட்டிக் கொண்டு வருகிறார்.

செவ்வாடை அணிந்து பெண்கள் செல்கிறார்கள். எந்தக் கடவுள் கோபித்துக் கொண்டு போய்விட்டார்கள்?

குருமூர்த்தி எவ்வளவு பெரிய மேதை என்பதற்கு உதாரணம்,

கேரளாவில், மழை வெள்ளத்தால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வீடிழந்து, பொருளிழந்து இருக்கிறார்கள்.

பார்ப்பானுக்கு மனிதநேயம் கிடையாது என்பதற்கு,

‘‘காகத்தையும் படைத்து,

கல்மனப் பார்ப்பானையும்

ஏன் படைத்தாய்’’ என்கிற ஒரு பாடல் உண்டு.

மனிதநேயத்தோடு உதவிகளைச் செய்து வருகிறார்கள்!

மழை, வெள்ளத்தால் உயிரிழந்து, பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அமீரகத்திலிருந்து 700 கோடி ரூபாய் நிதி உதவி செய்கிறார்கள். இதில் மதம் இல்லை, ஜாதி இல்லை, கட்சி இல்லை என்று எந்தவித வேறுபாடும் இல்லாமல் மனிதநேயத்தோடு உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

ஆனால், யாருக்கும் தெரியாத ஒன்றை கண்டுபிடித்து குருமூர்த்தி அய்யர் டுவிட்டரில் எழுதுகிறார்,

அது என்னவென்றால்,

அய்யப்பன் கோவிலுக்கு 50 வயதிற்கும் கீழ் உள்ள பெண்களும் வரலாம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது அல்லவா! அதனால்தான், அய்யப்பன் கோபப்பட்டு மழையாய் பொழிகிறது, வெள்ளமாகப் போகிறது என்று பதிவிடுகிறார்.

காட்டுமிராண்டிக் காலத்தில் வாழ்வதாக நினைப்போ? என்று நான் கேட்கவில்லை, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர்  இந்திரா ஜெய்சிங் கேட்டிருக்கிறார். இந்த ஆளை 51-ஏ பிரிவின்படி கைது செய்யவேண்டும் என்று. விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதம் என்று.

அய்யப்பனுக்குக் கோபம் வந்தால்,

எங்கே மழை பெய்திருக்கவேண்டும்?


அவர் சொல்கின்ற வாதப்படியே வைத்துக்கொண்டாலும், அந்த வழக்கிற்காக அய்யப்பனுக்குக் கோபம் வந்தால், எங்கே மழை பெய்திருக்கவேண்டும்? உச்சநீதிமன்றம் இருக்கின்ற டில்லியில் அல்லவா பெய்திருக்கவேண்டும்; பூகம்பம் அங்கே அல்லவா ஏற்பட்டு அதிர்ந்திருக்கவேண்டும்.

பெரியார் சொன்ன உதாரணம்!

ஒரு கதை சொல்வார் பெரியார்,


வேட்டுவக் கவுண்டனுக்கும், வேளாளக் கவுண்டனுக்கும் சண்டை. வேட்டுவக் கவுண்டன் காலை நீட்டிக் கொண்டிருக்கிறான், சாமிக்கு எதிரே - என்னை அவமானப்படுத்துவதற்காக - அவன் காலை மடக்கச் சொல்கிறாயா, உன் கண்ணைக் குத்தட்டுமா? என்று வேளாளக் கவுண்டனைப் பார்த்து சாமி கேட்டதாம்.

இவனுக்குத் தைரியம் இருந்தால், காலை நீட்டிக் கொண்டிருந்தவனிடம் நேரே சென்றிருக்கவேண்டாமா? என்று உதாரணம் சொல்வார் தந்தை பெரியார்.

அவ்வளவு புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு சொல்கிறாயே, அந்த அய்யப்பன் கோவிலே மிதக்கிறதே, இதற்கு என்ன பதில் சொல்கிறாய்?

யாரும் சபரிமலைக்கு வராதீர்கள் என்று சொல்கிறார்கள்.

அய்யப்பனுக்கு சக்தி இருந்தால்..

அய்யப்பனுக்கு சக்தி இருந்தால், அவர் டக்கென்று கையைத் தூக்கினால், உடனே மழை நின்றுவிடுமே! மீட்புப் பணிக்கு ஹெலிகாப்டரோ, மீட்புப் படையினரோ வரவேண்டிய அவசியம் கிடையாதே!

இந்த இடத்தில்தான், அய்யா சத்தியவேல் முருகனார் அவர்களுக்கும், நமக்கும் மாறுபாடு.

(இந்த இடத்தில் சத்தியவேல் முருகனார் அவர்கள் நம் கருத்தை ஒப்புக்கொள்கிறேன் என்று சொன்னார்)

கடவுள் கருணையே வடிவானவன் என்றால், இவ்வளவு பெரிய கொடுமைகளை செய்வானா?

ஆகவே, தோழர்களே! கேரள மாநில மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவிக்கின்ற நேரத்தில், கடவுள் தண்டனை கொடுத்தார் என்று சொன்னால், தண்டனை கொடுப்பவன் கருணையே வடிவான கடவுளாக இருக்க முடியுமா? அப்படிப்பட்ட கடவுள் தேவையா? என்று கேள்வி கேட்கமாட்டார்களா?

ஆகவேதான், இவர்கள் கடவுளையும் காப்பாற்றவில்லை - தன்னையும் காப்பாற்றவில்லை - மற்றவர்களையும் காப்பாற்றவில்லை.

நீதிமன்றப் போராட்டம் தேவை!

வீதிமன்றப் போராட்டம் இப்பொழுது தேவையில்லை - நீதிமன்றப் போராட்டம் சட்டப்படிதான்.

இனிமேல் நாம் அதனை செய்ய அரசாங்கத்தை வற்புறுத்தவேண்டும்; செய்யாதவர்கள் என்றால், செய்பவர்களைக் கொண்டு வரவேண்டும்; செய்ய மறுக்கிறவர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும்; செய்ய விரும்புவர்களை அடையாளம் கண்டு கொண்டு வரவேண்டும் ஆட்சிக்கு! அதுதான் மிகவும் முக்கியம்.

இதுதான் அடுத்த கட்டம் - அதை நாம் செய்வோம்!

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...