Showing posts with label திராவிடர் கழகம். Show all posts
Showing posts with label திராவிடர் கழகம். Show all posts

Saturday, June 27, 2015

தந்தை பெரியாருக்குப் பிறகு - அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும்:

தந்தை பெரியாருக்குப் பிறகு - அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் பாதுகாக்கப்பட்ட  அன்னை மணியம்மையாரின் கடிதம் உறுதி செய்தது வரலாற்றை சுட்டிக்காட்டி அய்.ஓ.பி. முன்னாள் இயக்குநர் நமச்சிவாயம் பெருமிதம்
சென்னை, ஜூன் 27_ தந்தை பெரியாருக்குப் பிறகு, அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும் என்று அன்னை மணியம்மையார் அவர்கள் கடிதம் எழுதி, அப்பொழுதைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் நமச்சிவாயம் அவர்களிடம் வழங்கி, பாதுகாக்க சொல்லியதைப்பற்றி சுட்டிக் காட்டினார் நமச்சிவாயம் அவர்கள்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளரும், வங்கி அதிகாரிகள் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளருமான வீ.குமரேசன் அவர்களின் வங்கிப் பணி நிறைவு, நன்றி செலுத்தும் விழா 25.6.2015 அன்று மாலை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேனாள் செயல் இயக்குநர் நமச்சிவாயம் பேசும்போது குறிப்பிட்ட தாவது:
தந்தை பெரியாருக்கும், எங்களுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அது நிறைய பேருக்குத் தெரியாது; தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய வங்கியிலே கதீட்ரல் கிளையில் ஓர் உறுப்பினராக இருந்தவர்கள். தந்தை பெரியார் விடுதலை பத்திரிகை பெரிய பத்திரிகை ஆவதற்காக வேண்டிய மெஷினை நாம் தான் இறக்குமதி செய்து கொடுத்தோம். அதுமட்டு மல்ல. மணியம்மையார் அம்மாவின் பெரிய நம்பிக்கைக்கு நாம் பாத்திரமானோம். மணியம்மையார் அம்மாவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தார்கள்.
தந்தை பெரியாருக்கு அப்புறம் யார் என்று சின்ன சந்தேகம் வந்தது. யாரை நிய மிப்பது என்று மணியம்மையார் அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் ஒரு சீட்டில் எழுதி கவரில் போட்டு எனக்கு பின்னால் இவர்கள் என்று சொல்லி வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாம்.
என்னிடம் கொடுத்து நம்முடைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பெட்டகத்தில் (சேஃப்டி பாக்சில்) வைத்திருக்குமாறு சொன்னார்கள். அதில் யார் பெயர் இருந்தது என்று எனக்கும் தெரியாது. பெட்டகத்தில் வைத்திருங்கள். நான் போனபிறகு அதைத் திறந்து பாருங்கள் என்று கூறிவிட்டார். ஆகவே, அதை நம்முடைய வங்கியிலே சேஃப்டி பாக்சில் பத்திரமாக வைத்துவிட்டோம். அவர்கள் இறந்தபிறகு அதை எடுத்து ஒரு நாலைந்து பேருக்கு முன்னால் பிரித்துப் பார்த்ததால், வீரமணி அவர்களுடைய பெயர் இருந்தது. அவருக்கு அப்பொழுதே தெரியும், இவ் வளவு பெரிய டிரஸ்டை காப்பாற்ற வேண்டுமானால், தந்தை பெரியாருக்குப் பிறகு வீரமணி அவர்களால் தான் முடியும்  வேறு யாராலும் முடியாது என்று.
ஆகவே, தந்தை பெரியாருக்கும் வங்கிக்கும் பெரிய தொடர்பு இருந்தது. அதிலே முழுமையாகச் சொல் வதானால், பெரியார், பெரியாருடன் வாழ்ந்துள் ளோம்.
ஆனால், இங்கே நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது, யாராவது பணி ஓய்வு பெற்றால் வழியனுப்புகின்ற விழாவாகத்தான் செய்வார்கள். எனக்கும்கூட இதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலு வலர்கள் சங்கம் எல்லாம் சேர்ந்து பெரிய அளவில் செய்தார்கள். ஆனால், தனக்கு உதவியவர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்வது என்பது இதுவரைக்கும், நான் கேள்விப்படாதது. குமரேசன் அவர் சார்ந்த இயக்கத்தை மறக்காமல் ஆசிரியர் அவர்களை அழைத்துள்ளார். அதுமட்டு மன்றி இந்த விழாவை பெரியார் திடலில் நடத்து கிறார். மிகப்பெரிய தன்னம்பிக்கை உள்ளவர்கள், ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள் என்பதை இதி லிருந்து பார்த்துவிடலாம். எனக்கும், குமரேசன் அவர்களுக்கும் வங்கி வழியாகத்தான் தெரியும். இருந்தாலும் என்னை இந்த விழாவுக்கு வரவேண்டும், உங்களை, நான் போற்ற வேண்டும் என்று சொன் னவுடனே அதிர்ச்சி அடைந்தேன். நான் ஆடிப் போய்விட்டேன் முதலில்.  நம்மை எதற்காக கூப்பிடு கிறார்கள் என்று முதலில் தெரியவில்லை.
நான் முதல் சம்பளம் வாங்கியபோது என்னுடைய பள்ளிக்கூடத்து ஆசிரியரிடம்தான் கொடுத்தேன். பேராசிரியர் அன்பழகன்கூட ஒரு முறை ஆசிரியர்கள் ஸ்டிரைக் நடந்துகொண்டிருந்தபோது சொன்னார். கூட்டத்தில் சொன்னாராம். நீங்கள் எல்லாம் படிக் கும்போதே பிள்ளைகளுக்குச்  சொல்லிக் கொடுத் திருந்தீர்கள் என்றால் நமச்சிவாயம்போல் முதல் சம்பளத்தை உங்களுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒவ் வொரு ஆசிரியரும் பெரிய பணக்காரர் ஆகியிருக்க லாம் என்று சொன்னார். அதுமாதிரி  பெரிய மரியாதைக்கு உரியவர் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள்.
தந்தை பெரியாருக்கும், நம்முடைய வங்கிக்கும் இருக்கின்ற ஒரு பெரிய தொடர்பு அதிகமாக இருந்த காரணத்தால், குமரேசன் இந்த இடத்தைத் தேர்ந் தெடுத்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகவே, குமரேசனை நாம் பாராட்டியாக வேண்டும். ஆனால், நம்மையெல்லாம் அழைத்து பாராட்டி இருக்கிறார்.
பாராட்டுதலுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். நான் வேறு எந்த விதத்திலும் அவருக்குக் கடமைப்பட்டவன் அல்லன். ஆனால், அவர் வங்கியிலிருந்து ஓய்வு பெற்று, இந்த கழகப் பணிகளையும், மற்றும் ஏனையத் தொண்டுகளையும் செய்து, சிறப்பான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். _ இவ்வாறு நமச்சிவாயம் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, February 13, 2015

காதலர் தினத்தை ஆதரிப்போம்- திராவிடர் கழக மாணவரணி அழைப்பு

காதலர் தினத்தை ஆதரிப்போம்!
 
பாசிஸ்டுகளின் எதிர்ப்பை முறியடிப்போம்!
 
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் திராவிடர் கழக மாணவரணி அழைப்பு



மனித இனத்தின் இயற்கை உணர்வான காதல் என்பது, இரு தனி மனிதர்களுக்கிடையிலான அன்புப் பரிமாற்றமாக மட்டுமில்லாமல், இந்தியாவைப் பொறுத்தளவில் ஜாதி, மதம் போன்ற அடிப்படைவாதத்தைத் தகர்க்கும் மனித நேயக் கருவியாகத் திகழ்கிறது. 

இதனாலேயே ஜாதி-மதங்களைக் காப்பாற்ற நினைக்கும் ஜாதீயவாதிகளும் மதவாதிகளும், பாசிஸ்டுகளும் மதத்தின் பெயராலும் கலாச்சாரத்தின் பெயராலும் காதலர் தினத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு ஆங்காங்கே வன்முறையிலும், அருவருக்கத்தக்க செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோம் என்று வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் அளவுக்கு அறிவிப்பு விடுக்கும் அசட்டுத் துணிவை இன்றைய சூழ்நிலை அவர்களுக்குத் தந்திருக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தான போக்காகும். மனிதநேயத்தில் அக்கறை கொண்டோரும், சமூக நல்லிணக்கத்திலும், சமூக அமைதியிலும் பற்றுக் கொண்டோரும் இந்தப் போக்கைக் கண்டிக்க முன்வரவேண்டும்.

காதலர் தினத்தை எதிர்ப்பதாகக் கூறி நடக்கும் இத்தகைய பாசிச வன்முறைப் போக்குக்கு, முற்போக்கு இயக்கங்களும், கல்லூரி மாணவர் அமைப்புகளும், அமைப்புகளைச் சாராத பல்வேறு கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும்.

 காதலர்கள் மீதான வன்முறைகளிலிருந்து அவர்களைக்  காப்பதற்கான முயற்சிகளிலும், அத்தகைய வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்டோர்,  மாணவர்கள், இளைஞர்கள்  ஒன்றிணைந்து ஈடுபடவேண்டும் என்று திராவிடர் கழக மாணவரணி அழைப்பு விடுக்கிறது.

இந்த உணர்வோடு தங்களைப் பதிவு செய்துகொள்ளவிரும்புவோர் 9176757084, 8807541920  என்ற எண்களில், அல்லது savelove.tn@gmail.com    என்ற மின்னஞ்சலில் தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
மாநில செயலாளர்
9444210999
த.சீ.இளந்திரையன்
மாநில இணைச் செயலாளர்
9750134599

த.அஜிதன்
மாநில துணைச் செயலாளர்
9789775497



Tuesday, January 27, 2015

ஆபத்தை உணர்த்தி எச்சரிப்பதே எங்களது பணி

ஆபத்தை உணர்த்தி எச்சரிப்பதே எங்களது பணி
காஞ்சிபுரம் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் சிறப்புரை 


காஞ்சிபுரம்,ஜன.26- காஞ்சிபுரம் வட்டார திராவிடர் எழுச்சி மாநாட்டில் (24.1.2015) அன்று பங்கேற்க வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சிறீபெரும்புதூரில் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினர், பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாகத் திரண்டு பயனாடைகளை அணிவித்து வரவேற்றனர்.

காஞ்சிபுரம் நகர எல்லையில் மாவட்டத் தலைவர் டிஏஜி அசோகன் தலைமையில் கழகத் தோழர்களும், திமுக மாவட்டச் செயலாளர் சுந்தர் தலைமையில் திமுக வினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் பெருந்திரளாக தமிழர் தலைவர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிடர் விழிப் புணர்வு மாநாடு நடத்தப்படுவதன் அவசியம்குறித்தும், செய்தியாளர்கள் தொடுத்த வினாக்களுக்கும் விடையளித்தார்.

(காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வட்டார மாநாட்டில் திராவிடர் கழக கொடியை பெரியார் பெருந்தொண்டர் டி.ஏ.ரத்தினம் அவர்கள் ஏற்றி வைத்தார்.)

காஞ்சிபுரம் வணிகர் வீதியில் (மண்டித்தெரு) சுயமரி யாதைச் சுடரொளிகள் மு.ஏழுமலை, இராவணன், வெள்ளி எழிலன்நினைவரங்கில் திராவிடர் விழிப்புணர்வு மாநாடு  காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் டி.ஏ.ஜி. அசோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இரா.சக்திவேல் வரவேற்றார். கழகப் பேச்சாளர் காஞ்சி பா.கதிரவன் இணைப்புரை  வழங்கினார்.

காஞ்சிபுரம் நகரத் தலைவர் கி.இளையவேள், வாலாஜாபாத் ஒன்றிய அமைப்பாளர் ஆ.மோகன், சுங்குவார் சத்திரம் கோ.நடராஜ், உத்திரமேரூர் ஒன்றிய அமைப்பாளர் எ.பிரகாஷ், காஞ்சி மாவட்ட இளை ஞரணித் தலைவர் மு.அருண்குமார், காஞ்சி மண்டல மாண வரணிச் செயலாளர் டி.ஏ.ஜி.அர்ஜுன், காஞ்சி ஒன்றிய அமைப் பாளர் த.சத்தியா, மாவட்ட மாணவரணித் தலைவர் அ.அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டையொட்டி பெரியார் பெருந்தொண்டர் டி.ஏ.ரத்தினம் கழகக்கொடியை ஏற்றிவைத்தார். ஈட்டி கணேசன் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு செயல்விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். கழகப் பேச்சாளர் யாழ்திலீபன் மாநாட்டின் தொடக்கத்தில் உரையாற்றினார்.

(கம்பராசபுரம் இராசகோபால் தந்தை பெரியாருடன் எடுத்துக் கொண்ட நிழற்படத்தினை தி.மு.க. தோழர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.)

மாநாட்டைத் திறந்து வைத்து காஞ்சிபுரம் (தெற்கு) மாவட்ட திமுக செயலாளர் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் பேசும்போது, தந்தை பெரியார் கொள்கைகளை அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் திமுக ஆட்சியின்போது நிறைவேற்றினார்கள். மத்திய, மாநில அரசுகள் செய்துவரும் அனைத்துத் திட்டங்களும் தந்தை பெரியார் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளவை என்பது குறித்து  எடுத்துரைத்தார்.

மக்கள் மன்றம் வழக்குரைஞர் மேகலா, மனிதநேய மக்கள் கட்சி சனாவுல்லா, இந்திய யூனியன் முசுலீம்லீக் உஸ்மான் செரீப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாசறை செல்வராஜ், இந்திய பொதுவுடைமைக்கட்சி நாரா யணசாமி, வைணவ சமயத்தவரான மாதவ இராமானுஜ தாஸ், மார்க்சிய பொதுவுடைமைக்கட்சி முத்துக்குமார், திராவிடர் கழக வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் ஆகியோர் மதசார்பின் மைக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும், சிறுபான்மையருக் கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும், தந்தைபெரியார் மண்ணில் அதற்கு இடம் கிடையாது என்பதையும் ஆணித்தரமாக ஒருமித்த குரலில் ஒலித்தார்கள்.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
மாநாட்டில் காஞ்சிபுரம் மாவட்ட (தெற்கு) திமுக அவைத்தலைவர் சி.வி.எம்.அ.பொன்மொழி, காஞ்சிபுரம் நகரதிமுக செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகரன், காஞ்சி திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் க.செல்வம்,

(சிறீபெரும்புதூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு, திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் விமல்ராஜ் தலைமையில், கழகத் தோழர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களும் வரவேற்றனர்.)

வழக்குரைஞர் சி.வி.எம்.ஏ.பி.எழிலரசன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாதாசன், சிபிஎம் கே.நேரு, சிபிஅய் எஸ்.எம்.ஏழுமலை, பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தென்னரசு, திராவிடர்கழக மண்டலத் தலைவர் பு.எல்லப்பன், செங்கை மாவட்டத் தலைவர் அ.கோ.கோபால்சாமி, அரக்கோணம் மாவட்டத்தலைவர் ச.லோகநாதன், வேலூர் மாவட்டத் தலைவர் சடகோபன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், மாநில இளை ஞரணித் துணைச் செயலாளர் சிவக்குமார், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் விமல்ராஜ், தென்சென்னை சா.தாமோதரன், வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், முனைவர் மு.தமிழ்மொழி உள்பட ஏராளமானவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் நகரச் செயலாளர் ச.வேலாயுதம் நன்றி கூறினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து ஏராளமானவர்கள் கீதைகுறித்த நூல்களின் தொகுப்பைப் பெற்றனர்.

மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

மொழிப் போர் தியாகிகளை நினைவுப்படுத்தும் வகையில் மாநாட்டில் பங்கேற்ற  பொதுமக்களும், பல்வேறு கட்சிகளைத் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களும், தமிழர் தலைவரும்  எழுந்து நின்று மொழிப்போர்த் தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்ந்து சில மணித்துளிகள் அமைதி காத்தனர்.

தமிழர் தலைவர் தமது சிறப்புரையில் குறிப் பிட்டதாவது:

கழகத்தின்சார்பில் சேலத்திலே எடுத்த முடிவுக்கு ஏற்ப திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகள்  மாநிலம் தழுவிய அளவிலே ஒவ்வொரு வட்டாரத்திலும் அடுத்த 6 மாதம் அல்லது ஓராண்டுக்குள்ளாக 2000 பிரச்சார நிகழ்ச்சிகளை, மாநாடுகளை நடத்த வேண்டும் என்ற அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்தக்கூடிய வகையிலே கடந்த 24ஆம் தேதி  அறிவாசான் தந்தை பெரியார் நினைவு நாளில் (24.12.2014) தொடங்கி பல்வேறு பகுதிகளிலே மாநாடுகள் நடைபெறுகின்றன.

நம்முடைய கருத்தைப் பரப்புங்கள்

எப்போதும் கட்டுப்பாட்டை மதிக்கும் இயக்கம் நம்முடைய இயக்கம். அறிவு ஆசான் தந்தைபெரியார் காலத்திலிருந்தே நாங்கள் கொள்கை விளக்கங்களை சிறுசிறு புத்தகங்களாக இங்கே கொண்டுவந்திருக் கின்றோம்.லாபத்தைக்கருதியோ, வியாபார நோக்கத் தோடோ அல்ல.

மாறாக உண்மைகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். மக்களுக்கு உண்மைகள் போய்ச் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் மக்களிடம் தெளிவும், விழிப்பும் உண்டாகும் என்பதற்காகத்தான் இந்தப் புத்தகங்களை நாங்கள் அச்சிட்டு கொண்டு வந்திருக்கிறோம். இவைகளை நீங்கள் வாங்க வேண்டும்.

படிக்கவேண்டும். கருத்துகளை ஏற்கவேண்டும் என்று கூட நாங்கள் சொல்லமாட்டோம். நீங்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகள். இதைப்படித்தாலே, இந்த மருந்து வேலைசெய்யும். அதிலே ஒன்றும் சந்தேகமே இல்லை. இந்த புத்தகங்களை வாங்குங்கள், படியுங்கள், பிறருக்கும் கொடுங்கள். இந்தக் கருத்தைப்பரப்புங்கள். ஏனென்றால், இந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் என்பவை பெரும்பாலும் உண்மைகளைப் பரப்புவதில்லை.

நீங்கள் நன்றாக சிந்தித்துப்பார்த்தால் இன்றைய சூழ்நிலை எப்படி இருக்கிறது? இந்த மாநாட்டுக்கு என்ன தலைப்பு? நம்முடைய மார்க்சிஸ்ட் நண்பர்களும், இடதுசாரி தோழர்களும், விடுதலைசிறுத்தைகளும், ஏனைய தோழர் களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அவர்களும் சமுதாயத்திலே இன்றைய சூழ் நிலை எப்படி இருக்கிறது? என்று எடுத்துச் சொன் னார்கள். அதைத்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

உடற்கொடை

நம்முடைய தோழர்கள் எல்லாம், அசோகன் மற்றவர்கள் எல்லாம் பெரியார் உடற்கொடைக் கழகம் சார்பிலே இவர்கள் தங்களுடைய உடலை மருத்துவ மனைக்கு மறைந்தபிற்பாடு கொடுக்கப்போகிறோம் என்று எழுதியே கொடுத்திருக்கிறார்கள். காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு உடற்கொடை அளித்து எழுதி, பதிவு செய்திருக்கிறார்கள். இது ஒரு எடுத்துக்காட்டான செய்தி.

மதத்தினுடைய அடிவேரிலேயே வெந்நீர் ஊற்றுகின்ற சங்கதி இருக்கிறதென்றால் அது இதுதான். இது வெறும்கொடையைப்பொருத்தது மட்டுமல்ல. அதைவிட மதத்தினுடைய ஆணிவேர் வெட்டப்படுகிறது. எங்க ளுடைய தோழர்களுக்கு வாழ்நாள்முழுவதும் நாங்கள் பயனுள்ள வாழ்க்கையை வாழவேண்டும், இறந்த பிற் பாடும்கூட எங்களுடைய உடல் பயன்படவேண்டும் என்ப தற்கு  பகுத்தறிவாளர்கள் எவ்வளவு மனிதநேயத் தோடு இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மதவெறியை மாய்ப்போம் மனித நேயத்தை காப்போம்

இந்த நகரத்தைப் பொருத்தவரையிலே இது புதிதல்ல. சீரிய பகுத்தறிவாளராக இருந்தவர், அன்றைக்கு நகர் மன்றத் தலைவராக இருந்த கே.டி.எஸ்.மணி நம்முடைய சகோதரர்ஆவார். அவருடைய உடல் மருத்துவமனைக்கு  தரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்சிலிருந்துதான் அவர் திராவிட இயக்கத்துக்கு வந்தவர். வியப்பாக இருக்கும். ஏனென்றால் அவர் சிந்தித்தார்.

சிந்தித்தபிறகு நம்முடைய இனத்துக்கு, சமுதாயத்துக்கு துரோகம் செய்கிறோமே என்று நினைத்தார்கள். தீவிர பகுத்தறிவாளராக அவர் இருந்தார். அவர் ஏற்படுத்திய சரித்திரம்  அவரோடு முடிந்து விடவில்லை. அது இன்னமும் தொடர்கிறது.

இளைய தலைமுறைகூட அந்த முடிவிலே இருக்கிறார்கள் என்று சொன்னால், இதுவே மதவெறி மாய்ப்போம், மனித நேயத்தைக் காப்போம் என்று சொல்வதற்கு அற்புதமான நடைமுறை எடுத்துக்காட்டாகும். நாங்கள் பேசிவிட்டு போகக்கூடியவர்கள் அல்ல. எதைப்பேசுகிறோமோ? அதைச் செய்யக்கூடியவர்கள்.

எதைச் செய்கிறோமோ அதைமட்டும்தான் பேசக்கூடியவர்கள். அவர்களுக்குப் பெயர்தான் பெரியார் தொண்டர்கள், சுயமரியாதைக் காரர்கள் என்று அதற்குப் பொருள். அந்த அளவிலே தான் திராவிடர்களுக்கு விழிப்புணர்வு தேவை.

வீட்டுக்காரர்கள் நன்றாக குறட்டைவிட்டுத் தூங்கி னால்கூட, காவலாளி தூங்கமுடியுமா? கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.ஆக, எங்களுடைய வேலை பதவிக்குப் போவதில்லை. பெருமைகளைத் தேடுவது அல்ல. நீங்கள் இன்றைக்குப் பாராட்டுகிறீர்கள்.

இந்த பாராட்டைப்போலவே நீங்கள் கல்லை எடுத்து போட்டாலும் இந்தக் கருத்தைச் சொல்லிக்கொண்டுதான் இருப்போம். எங்களுடைய உயிருக்கு ஆபத்து என்று மற்றவர்கள் மிரட்டினாலும் கூட, அதைப்பற்றி கவலைப்படாமல் இந்தக் கொள்கையைச் சொல்லிக்கொண்டிருப்பதில்தான் எங்களுடைய வாழ்வு முடியவேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் நாங்கள்.

நம்நாட்டில் சட்டம் ஒழுங்கு!

அப்படிப்பட்ட விழிப்புணர்வு நமக்கு இன்றைக்கு ஏன் தேவை? விழிப்புணர்வு எப்போது தேவை? தூங்கு பவர்களுக்கு ஆபத்து வந்தால் அந்த நேரத்தில் தூங்கக் கூடாது, விழிப்பாக இருக்க வேண்டும். வீட்டில் தீப் பிடித்துக் கொண்டு எரியும்போது தூங்கிக்கொண்டிருக்க முடியுமா?

நம் நாட்டிலேதான் சட்டம் ஒழுங்கு பிரமாதமாக இருக்கிறது என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே, அண்மையிலேகூட கிருஷ்ணகிரியிலே ஒன்றும் அதிகமில்லை, 10கோடி அளவில் வங்கியிலேயே உள்ளதையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டான். இப்போது சைரன் வைத்திருக்கிறார்கள். கைவைத்தாலே சத்தம் வரும்.

சிலபேர் வீட்டுக்குள் காலை வைத்தாலே சத்தம் வரும். அந்த சைரனுக்கு என்ன வேலை என்றால், அய்யா!  ஆபத்து, எழுந்திருங்கள், விழிப்பாக இருங்கள் என்று சொல்வதுதான் அதனுடைய வேலை.

இப்போது எழுப்புவதற்கு தனியே கடிகாரம் தேவையில்லை.இப்போது எல்லோர் கையிலும் கைத்தொலைபேசி (செல்போன்) இருக்கிறது. இதனால் பல பொருட்களை தேவை இல்லை என்று ஆக்கி விட்டார்கள். செல்போன் கேமரா, ஒலிஅமைப்பு, கடிகாரம், காலண்டர் என அனைத்தையும் அதிலேயே அடக்கி உள்ளார்கள்.

தந்தை பெரியார் இனி வரும் உலகம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 10 காசுக்கு விற்ற புத்தகம். அதில், ஒவ்வொ ருவர் கையிலும், சட்டைப்பையிலும் வானொலியும், தொலைபேசியும் இருக்கும். ஒருவருக் கொருவர் ஆள்காட்டி, உருவம் காட்டிப் பேசிக்கொண்டு இருப்பார்கள் என்று தந்தைபெரியார் எழுதினார்.

சங்கராச்சாரியார் கண்டுபிடித்த விஷயமா? அவருக்கும் சேர்த்து மற்றவன்தான் கண்டுபிடித்திருக் கிறான். சத்ய சாய்பாபா கையைத் தூக்கிய உடனே பொத்தென்று விழுந்த விஷயமா? முப்பத்துமுக்கோடி தேவர்கள், நாற்பத்தைந்தாயிரம் ரிஷிகள், கிண்ணரர், கிம்புருடர், அஷ்டதிக்கு பாலகர்களில் ஒரு பயலுக்காவது செல்போன் என்றால் என்ன என்று தெரியுமா?

இவ்வளவும் அறிவு, சிந்தனை, வளர்ச்சி. ஏன்? எப்படி? என்று கேள்வி கேட்டு கேட்டு அறிவியல் வளர்ந்த துடைய விளைவாகஇவ்வளவு வளர்ந்திருக்கிறது.

-இவ்வாறு தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தம்பேச்சில் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Friday, January 23, 2015

அரசின் கொள்கையை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்த்து பேசுகிறார்கள்

திராவிடர் விழிப்புணர்ச்சி 13ஆம் வட்டார மாநாடு:
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்த்து பேசுகிறார்கள்



நன்னிலம், ஜன.22- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை எதிர்த்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பேசுகிறார்கள் - இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்! என தமிழர் தலைவர் கருத்துரையாற்றினார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நேற்று (21.1.2015 மாலை நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு 13ஆம் வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய கருத்துரை வருமாறு: வளர்ச்சி வளர்ச்சி என்று போட்ட சத்தத்தில், மயக்க பிஸ்கட்டில் ஏமாந்து இன்றைக்கு எட்டு மாதங்களுக்கு முன் ஓர் ஆட்சியை மத்தியில் உட்கார வைத்தார்கள் மக்கள் ஏமாந்தார்கள். ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன வளர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தினார்கள்!?

மதவாதத்தைக் கிளப்பி வருகிறார்கள். யானைக்கு மதம் பிடித்தாலே ஆபத்து! மனிதனுக்கு மதம் பிடித்தால் என்னவாகும்? ஒரு கட்சிக்கோ, ஆட்சிக்கோ மதம் பிடித்தால் என்ன ஆகும்? அதுதான் இப்பொழுது நடக்கிறது.

காந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள், இப்பொழுது கோட்சேவுக்குச் சிலை வைப்போம் என்கிறார்கள். ஒரு நாடு எப்பொழுது வளர்ச்சி அடையும்? அந்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இணக்கமாக கைகோர்த்து வாழ்ந்தால் தான் அந்நாடு வளர்ச்சி அடையும்.

ஆட்சியிலே உள்ளவர்களே சிறுபான்மை, பெரும் பான்மை பேசி மக்களை ஒருவரோடு ஒருவர் மோத விட்டால் அந்த நாடு வளர்ச்சி அடையுமா?

குஜராத்தில் என்ன நடந்தது? அது நாடு முழுவதும் நடைபெற வேண்டுமா? நாம் அதைஅனுமதிக்கலாமா? ஏற்கத்தான் முடியுமா?

120 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கிக் கொண்டு தவிக்கிறது. எதை எதையெல்லாம் விற்கலாம் என்று திட்டம் போடுகிறார்கள் மத்தியில் உள்ள ஆட்சியாளர்.

இந்த லட்சணத்தில் ஒவ்வொரு வரும் நான்கு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒருவர் கூறுகிறார் - இன்னொரு சங்கராசசாரியாரோ - ஒவ்வொரு வரும் பத்துப் பிள்ளைகளைப் பெற்று  தள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள் - மத்தியில் ஆள்பவர்கள். இவற்றை யெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. மக்கள் தொகை யைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை எதிர்த்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பேசுகிறார்கள் - இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்!

ஒரு பெண் எத்தனை குழந்தையைப் பெற்றுக் கொள் வது என்பதை ஆண்கள் முடிவு செய்யலாமா?

கருவைப் பத்து மாதம் சுமந்து பிரசவிக்கும் பெண்ணுக்கல்லவா அதன் வலியும் சுமையும் தெரியும்.

கேட்டால் கடவுள் கொடுக்கிறான் என்று சமாதானம் சொல்கிறார்கள். அந்தக் கடவுளிடமே சொல்லுங்கள். அவர்தான் சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே! பெண்களின் கருப்பையை ஆண்களுக்கு மாற்றி வைக்கச் சொல்லுங்கள். பத்து மாதம் ஆண்கள் கருவைச் சுமந்து பிரசவிக்கட்டுமே! ஏற்றுக் கொள்வார்களா? (பலத்த சிரிப்பு - கை தட்டு!)

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சியில் ஒரு பக்கம் பார்ப்பனர் ஆதிக்கம்; இன்னொரு பக்கத்தில் கார்ப்பரேட்டு நிறுவனங்கள் இரண்டும் நாட்டைச் சூறையாடுகின்றன.

அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நிற்பதாக சத்தியம் செய்து கொடுத்துப் பதவி ஏற்கிறார்கள். அந்த அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார் பின்மைக்கு விரோதமாகப் பேசுகிறார்கள் - நடந்து கொள்கிறார்கள்.

இத்தகையவர்களை அடையாளம் காணுங்கள் என்று எச்சரிக்கவே திராவிடர் கழகம் நடத்தும் திராவிடர் விழிப்புணர்ச்சி மாநாடுகள்!

வீட்டுக்காரன் தூங்கலாம்; குறட்டை விட்டுக் கூடத் தூங்கலாம்; ஆனால், காவல்காரன் தூங்கலாமா? தூங்கத்தான் முடியுமா?

அந்தக் காவல்காரனாக இருந்துதான் திராவிடர் கழகம் எச்சரித்துக் கொண்டு இருக்கிறது. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் என்ற பழமொழிதான் உங்களுக்குத் தெரியுமே! என்றார்.

தொடர்புடைய செய்திகள்:

Friday, December 19, 2014

இளந்தளிர்களே உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்

132 பள்ளி மாணவர்களைக் கொன்ற தலிபான்களின் பயங்கரவாத செயல்!

இளந்தளிர்களே உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்;

எங்களின் அன்புக் கண்ணீர் காணிக்கை!


பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளின் அடாத செயல் காரணமாக உலகின் கறை படிந்த மதக் கொடுமைகளின் பட்டியலில் மதவெறி மற்றொரு மனிதநேயமற்ற, பச்சாதாபம் பார்க்காது, 132 பள்ளிக் குழந்தைகளைக் கொன்றுள்ளது; பலரை உயிருக்கு மன்றாடச் செய்துள்ளது.

இந்தச் செயல்களின் அடிப்படைக் காரணம் மதவெறி! மதவெறி!! மதவெறி!!!

கடவுள் கருணையே வடிவானவர்; அங்கு இங்கு எனாது எல்லா இடங்களிலும் பரவியுள்ளவர்; அவர் இல்லாத இடமே இல்லை என்று கதையளக்கும் கடவுள், மத நம்பிக்கைவாதிகளே, அப்படி ஒரு சர்வசக்தி உடைய ஆண்டவனோ, கடவுளோ இருந்தால், இந்தப் பச்சிளம் தளிர்களின் உயிர்களைக் கொன்றிட உடன்பட்டு வேடிக்கைப் பார்த்திருப்பானா?

நாட்டில் கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இரத்த ஆறு ஓடுவது சகித்துக் கொள்ளக் கூடியதா?

உலகம் - மதவெறி காரணமாக - மீண்டும் காட்டுமிராண்டி யுகத்திற்கே திரும்பிச் செல்லுகிறதா? மகாவெட்கக்கேடு இது!

இதை ஒரு வன்முறைச் செயலாக மட்டும் பார்க்காமல், இதன்மூலம் - ஆணிவேர் - மதத் தீவிரவாதம் - அடிப்படை வாதம் என்ற தலிபான்கள் என்றால், அவர்களை உருவாக்கி மனிதாபிமானம் அறியாத வெறித்தனத்தை அவர்களுள் விதைத்தது எது?

கடவுளும், மதமும்தானே! அவைகளை ஏற்றுக்கொண்டே, மறுபுறம் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்று உபதேசம் செய்வது அர்த்தமுள்ளதா? முரண்பாடு அல்லவா?

பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும், மனிதநேயம் உள்ளவர்கள்; ஆனால், மதவெறியர்களோ சரித்திரத்தின் அந்நாள் தொட்டு, இந்நாள் வரை - அசல் காட்டுமிராண்டிகளாய், சகிப்புத்தன்மை அறியாததாக மிருக உணர்ச்சியின் பிண்டங்களாகத் தானே வாழ்ந்து வருகின்றனர்! இதனை மறுக்க முடியுமா?

இலங்கையில் புத்தம் என்ற மனித நேயத்தையே ரத்தத் தடாகத்தில் தள்ளி குளிக்க வைத்து மகிழும் குள்ளநரிக் கூட்டத்தின் யதேச்சாதிகார அரசு பயங்கரவாதம் - அரசே - செஞ்சோலை என்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் குண்டுவீசி கொன்று அழித்து, மகிழவில்லையா?

அந்த ரத்தக் கறையாளன், சட்ட புத்தகத்தையே திருத்தி, தானே மீண்டும் நாட்டை ஆளத் திட்டமிடுவதற்கு, அந்தச் சம்பவம் போன்றவற்றை - பயங்கரவாதத்தை நான் துடைத்து எறிந்துவிட்டேன் என்று கொக்கரிக்கிறாரே!
இது பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டின் பிரச்சினையாக மட்டும் உலகம் பார்க்காது; பார்க்கக்கூடாது;

மனிதநேயத்திற்கு மதவெறி விடுத்த சவால் என்று எடுத்துக் கொண்டு, அனைவரும் அந்த மதவெறிக்குச் சமாதி கட்ட முனைப்போடு, நாடு, இனம், மதம் என்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி உலகம் ஒரு குலம்; மானிடப் பரப்பு பரந்து விரிந்தது என்ற அணுகுமுறையில் இதற்கு முடிவு கட்டி, நாகரிகத்தை நிலைநாட்டிட முன்வரவேண்டும்!

இளந்தளிர்களே, மொட்டுகளே, உங்கள் ரத்தமாவது இந்த மதவெறிக் கறையைத் துடைக்கட்டும்! எங்களின் அன்புக் கண்ணீர்க் காணிக்கை!

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
18.12.2014

Wednesday, July 9, 2014

திராவிடர் கழகம் கட்சியல்ல- இயக்கம்!

பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, இந்த மயிலாப்பூர் திராவிட இளைஞர் கழகத்தின் சார்பாக பேசும்படி எனக்கு வாய்ப்பு அளித்த செயலாளர்களுக்கு எனது நன்றி. வரவேற்றுப் பத்திரம் வாசித்தளித்து புகழ்மாலை கூறியதற்காகவும் எனது நன்றி. அதிலே கூறியிருக்கிற புகழுக்குத் தகுதியற்றவன் ஆனாலும் உங்களுடைய அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடக்க முயற்சிக்கிறேன்.

 இவ்வளவு ஆடம்பரமாக பணம் செலவு செய்து பூமாலைகள் போடுவதைவிட கருப்புத் துணியாவது போடலாம். முதன் முதலிலே இந்த இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். இளைஞர்களாகிய நீங்கள் கட்டுப்பாடாக இருந்து ஒழுங்காய், மற்றவர்கள் நம்மைப் பார்த்து மதிக்கும்படி நடந்து கொள்ளுங்கள். 

வெற்றி ஒலி முழங்குகிற காலங்களிலும், கழகக் கொள்கை ஒலி முழங்குகிற காலங்களிலும், கேட்கிறவர்கள் இதற்கு வசப்படும்படியாக இணங்கும்படியாக இருக்க வேண்டும் மற்றவர்கள் மன வருத்தம் அடையும்படியாகவோ வெறுப்பு அடையும் படியாகவோ ஆத்திரப்படக் கூடியதாகவோ இருக்கக் கூடாது. வேண்டுமானால் அறியாமை ஒழிய வேண்டும், மூட நம்பிக்கை ஒழியவேண்டும் என்பது போன்ற சொல்லைச் சொல்லுங்கள். எப்பொழுதும் 'வாழ்க' என்றே முழக்கம் செய்யுங்கள்.

ஏன்? இப்பொழுது நாம் நல்ல வெற்றியடைந்து வருகிறோம். யாரையும் நாம் வைது வெற்றியடைய வேண்டியதில்லை. நம்முடைய குறைபாடுகளைச் சொல்வதன் மூலமே, நம்மை நொந்து கொள்வதன் மூலமே இனி நாம் வெற்றியடையப் போகிறோம். சிறிது காலமாக நம் மக்களுக்குச் சிறிதாவது மான உணர்ச்சி உண்டாகும்படி செய்து வந்திருக்கிறோம். இது வளர்ச்சியடைய வேண்டும். எதிரிகளும் திருந்தும்படிச் செய்ய வேண்டும்.

உங்களுக்குக் கட்டுப்பாடு அவசியம் வேண்டும். இதில் நம்பிக்கை வைத்து ஒழுங்காய் நடக்க வேண்டும். நமது கழகக் கொள்கையைப் பற்றிய போராட்டம் நமக்குள்ளேயே நடக்கக்கூடாது. இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு எப்பொழுது
கழகத்தில் சேர்ந்து விட்டோமோ அதற்குமேல் அந்தக் கொள்கையைப் பற்றிச் சந்தேகப்படக் கூடாது. தலைவர்களை உண்மையாய் பின்பற்ற வேண்டும். சுயநலத்துக்காக வஞ்சகக் கருத்தோடு கட்சிப் போர்வையில் இருக்கக் கூடாது. தலைவரைக் குறைகூறிக் கொண்டு வைது கொண்டு கட்சிக்குள்ளேயே கலகம் செய்யக்கூடாது. இது எல்லாக் கட்சிக்கும் உள்ள பொதுவான விதி.

தோழர்களே சிந்தித்துப் பாருங்கள். கட்சிக்குள்ளேயே கலக உணர்ச்சியும் கட்டுப்பாடற்ற தன்மையும் ஏற்பட்டால், கட்சி கலகலத்து விடாதா? தோழர்களே! நம்முடைய நிலைமை இன்றைய தினம் மிக மிக பரிதாபகரமான தன்மையிலேயே இருக்கிறது. நாம் ஆதரவற்ற நிலையிலேயே இருக்கிறோம். நமக்கு ஏற்படும் தொல்லைகள் ஏராளம். நமது கட்டுப்பாட்டைத் தடுக்கும் சூழ்ச்சிகள் ஏராளம் நம்முடைய திட்ட நடப்பைத் தடுக்கும் காரியங்கள் ஏராளமாய் நடைபெறுகின்றன. வெள்ளையாகப் பேசுகின்றேன். நமக்கு யாருடைய ஆதரவு இருக்கிறது? ஒரு சர்.ராமசாமி முதலியார், சர். அண்ணாமலைச் செட்டியார், சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் போன்ற அறிவாளிகளுடைய செல்வான்களுடைய ஆதரவு உண்டா? எந்தப் பிரபுக்கள் மிராசுதார்கள் நம்மை ஆதரிக்கிறார்கள்? எந்தப் பத்திரிகை நம்மை ஆதரிக்கிறது? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். யாரையும் குறை சொல்வதற்காகச் சொல்லவில்லை.

கார்ப்பரேஷனில் உள்ள ஒரு பார்ப்பனன் ஆயிர ரூபாயைத் திருடிவிட்டால், திருவாங்கூரிலுள்ள திவான் கவர்னருக்குச் சிபாரிசு செய்ய வருகிறார், நமக்கு என்ன ஆபத்து வந்தாலும் கேட்க நாதியில்லை. நமது கொட்டகையைக் கொளுத்தினார்கள். நம் தோழர்களை அடித்தார்கள். கண்களைக் குத்தினார்கள். சட்ட சபையிலே இதைப்பற்றி யாராவது கேட்டார்களா? சட்ட சபையிலே காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்சிகள் இல்லையா? யாராவது ஒரு வார்த்தை கேட்டார்களா? நமது நிலைமை அவ்வளவு நாதியற்றதாக, கதியற்றதாக இருக்கிறது.

 பத்திரிகை வசதி யாராவது உண்டா? நமது செய்தியை ஒரு பத்திரிகைக் கூட போடுவதில்லை. இல்லை பத்திரிகை ரிப்போர்ட்டர்களாவது நம்மைப் பற்றிச் சரியாக எழுதுகிறார்களா? அவர்கள் இங்கே எதற்காக வருகிறார்கள் என்றால், நமது கூட்டத்தில் கல், செருப்பு விழுந்ததா? கலகம் நடந்ததா என்பவைகளைக் காணவும், எழுதவும் தான் வருகிறார்கள். 

இந்த ஊரில் எப்படி இருந்தாலும் வெளியூர்களிலேயுள்ள ரிப்போர்ட்டர்கள் அப்படித்தான், நம் இயக்கப் பத்திரிகைகள் என்பவைகளால் நமக்குத் தொல்லை தான் அதிகம். எனவே நமக்கு நாதியுண்டா? நமக்குள்ள குறைபாடுகள் அவ்வளவு இருக்கின்றன. இவைகளுக்கிடையே தான் நாம் வளரவேண்டியிருக்கிறது. இந்த நிலையில் தான் இயக்கத்தில் தொண்டாற்றி வருகிறோம். இயக்கமும் வளர்ந்து வருகிறது.

தோழர்களே, நமது திராவிட கழகம் என்பது கட்சியல்ல. காங்கிரசைப் போல் நமது கழகம் கட்சியல்ல; இயக்கமாகும். கட்சி என்பது தோல்விக்கும், வெற்றிக்கும் கட்டுப்பட்டது. இயக்கம் என்பது இவைகளுக்கெல்லாம் கட்டுப் பட்டதேயல்ல. ஒரு தனி மனிதனுடைய உள்ளத்தில் உணர்ச்சி யிருக்கும் வரையில் அது இருந்துதான் தீரும்.

ஜஸ்டிஸ் கட்சி ஒரு கட்சியாயிருந்தால் தோல்வி நிலைக்கு வந்தது. அதேபோல காங்கிரஸ் இப்போது வெற்றியடைந்து பதவியேற்கும் நிலைமைக்கு வந்துங்கூட அது சாகவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. வெற்றி பெற்றே சாகவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. வைசியராய், முதன் மந்திரி, கவர்னர் போன்ற பதவிகளும் பட்டங்களும் காங்கிரஸ்காரர்கள் காலடியிலே வந்து விழுகின்றன என்றாலும் அவர்கள் தலைவர்களே சொல்கிறார்கள் "இனி காங்கிரஸ் இருக்க வேண்டியதில்லை. கலைத்துவிடலாம்" என்று, அந்த நிலைக்கு வந்துவிட்டது. வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் கட்சி என்பது அழியவேண்டியது தான். ஆனால் நாம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இயக்கம் ஒழிய வேண்டியதில்லை. ஒரு மனித சமுதாயம் உள்ள வரையில் அது பணியாற்றியே தீரும்.

நமது இயக்க வேலைகளை, நாம் மந்திரிப் பதவியடைவதன் மூலமே அடையமுடியும் என்று கருதுவதும் பிசகு. ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தோல்வியடைந்த பிறகு நெல்லிக்காய் மூட்டைகளானார்கள். அதுபோல காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வெற்றியடைந்த பிறகு நெல்லிக்காய் மூட்டைகளாகி வருகிறார்கள். இப்பொழுது பார்க்கிறோமே தினம் தினம் வேடிக்கையை, ஹோம் ரூல் கட்சி என்ன ஆனது? ஆங்காங்கே கிளை ஸ்தாபனங்களை ஏற்படுத்தி நல்ல அமைப்பு அமைந்ததிலே அன்னிபெசன்ட் அம்மையார் பேர் எடுத்தார்கள். ஸ்தாபன ரீதியாக வேலை செய்தார்கள். சி.பி. ராமசாமி அய்யர் போன்ற பார்ப்பனர் எல்லாம் பெரும் பெரும் பதவிகளை அடைந்தார்கள். இப்பொழுது அந்தக் கட்சி எங்கே இருக்கிறது? அழிந்துவிட வில்லையா? ஆனால், இயக்கம் அப்படியல்ல. அது தன்னுடைய காரியத்தை பதவியின் மூலம் தான் செய்ய முடியும் என்பதில்லை. மக்களுடைய உள்ளத்தில் கருத்துக்களைப் புகுத்தி வைப்பதன் மூலம் தான் அது வெற்றி அடைவது.

மற்றும் எதைச் சொன்னால் மக்கள் நம்மை ஆதரிப்பார்கள், எதைச் சொன்னால் மக்களுடைய ஆதரவு கிடைக்கும். எதைச் சொன்னால், மக்களுடைய ஆதரவு கிடைக்காது என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து கட்சி என்பது பணியாற்றும். ஆனால், நாம் இயக்கத்தவர்களாகிய நம் மக்களைத் திருத்த வேண்டும். அவர்களுடைய மனதை மாற்ற வேண்டும். அவர்களுக்கு விளக்கிக் கூறவேண்டும். அவர்களுடைய புத்தி திருந்த வேண்டும். அவர்கள் உள்ளத்தில் மாறுதல் அடைய வேண்டும் என்று வேலை செய்பவர்கள் அப்பொழுதுதான் நமது லட்சியம் வெற்றி அடையும்.

மக்களுடைய ஆதரவுக்காக நாம் கவலைப்பட மாட்டோம். மக்கள் ஏற்றாலும் வைதாலும் கவலைப்படாமல் இருப்போம். நம்மைப் பொறுத்தவரையில் நம் பின்னாலே மக்கள் வரவேண்டுமே தவிர, பாமர மக்கள் பின்னாலே ஓடுவது இல்லை. கல்லடி பட்டாலும் சரி, வெற்றியடைந்தாலும் சரி, நமக்குப் பட்டதைச் சொல்லியே தீருவோம். அப்படி நாங்கள் எங்களுடைய பின்னாலேயே மக்கள் பின் தொடரவேண்டும் என்று வேலை செய்தனாலேயே தான், இப்பொழுது எங்களுக்கு ஓரளவு வெற்றி கிடைத்து வருகிறது.

எங்களைக் கல்லால் அடித்தவர்கள் எல்லாம், "அப்போது உங்கள் மீது கல் போட்டது ஒரு கை; இப்போது உங்களைக் கூப்பிடுவது இரு கையால்", என்று கூப்பிட்டு அழைக்கிறார்கள். ஓடி ஓடிக் காங்கிரஸ்காரர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் எல்லாம் அவர்களை ஓட ஓட விரட்டி அடிக்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு ஆதரவு வளர்ந்து கொண்டே இருக்கிறது. மக்கள் உள்ளத்தில் உள்ள பல தவறுதல்களை, மக்களுடைய மனதில் படிந்துள்ள மாசுகளை, மக்களுடைய அறியாமையைத் திருத்தி அவர்களுடைய உள்ளத்தையே திருப்பும் புரட்சிகரமான வேலையையே நாம் லட்சியமாகக் கொண்டிருக்கிறோம். நாம் திராவிடர்கள் என்பதையும், நமக்கு இருந்ததை நம் எதிரிகள் மறைத்து விட்டதை ஞாபகப்படுத்தி நாம் யாவரும் திராவிடர் உணர்த்துவதும் நமது திராவிடர் கழக வேலை திராவிடர்கள் என்றால், சில உரிமைகளுக்குத் தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள். இழிவுகளைத் தாங்குபவர்கள் என்பது கூடவே ஞாபகத்துக்கு வருகிறது. திராவிடர்கள் என்றால், திராவிடர்கள் எப்படி இருந்தார்கள்? திராவிடனுடைய உரிமை என்ன? திராவிடனுடைய தனிப் பண்புகள் என்ன? திராவிடனுடைய நாகரிகம் எப்படி இருந்தது? என்பவைகளையும் உணரும் தன்மை கூடவே வருகிறது.

திராவிடன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட்டால், வேறு மாறு பெயர் சூத்திரன் என்று கூறிக் கொள்ளத்தான் வேண்டும். சூத்திரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுவதாலேயே திராவிடன் என்று கூறிக்கொள்கிறோம். திராவிடர் கழகம் என்றால் இன்று சூத்திரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் கழகம் என்றுதான் அர்த்தம். ஏன் சூத்திரர்களுக்கும் கழகம் என்று கேட்டால், அந்த இழிவு நீங்குவதற்காகக் கழகம் வைத்துக் கொண்டிருக்கிறோம். சூத்திரர்கள் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறோம். அதனால் ஏற்படும் இழிவை ஒழிக்க விரும்புகிறோம் என்பதற்காகவே திராவிடர் கழகம் இருக்கிறது.

பிராமணர்கள் என்று கூறிக் கொள்ள பிராமணர்கள் பெருமைப்படுகிறார்கள். ஆகையால், அவர்கள் பிராமணர்கள் சங்கம் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆகவே, இந்தக் குறைபாடுகள் ஒழியவேண்டும். சூத்திரன், பஞ்சமன், பார்ப்பனன் என்ற தன்மைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

நமது முன்னேற்றத்துக்கு இருந்து வருகிற தடைகள் எல்லாம் நீங்க நமக்கு மனிதத் தன்மை ஏற்பட வேண்டும். நமது அறியாமை ஒழிய வேண்டும்; இதற்குப் பாடுபடவே நாம் இருக்கிறோம். நம்மைத் தவிர வேறு யாரும் இன்று இவ்வேலையை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் சூத்திரராய் இருப்பதற்குக் காரணம் ஹிந்து மதம். ஆகையால் அது ஒழிய வேண்டும் என்கிறோம். வேறு மார்க்கம் இருந்தால் சொல்லுங்கள். நம்மைச் சூத்திரனாக்கியது இந்த இந்து மதமும், இந்து மதக் கடவுள்களுமாதலின் அவை ஒழிய வேண்டும் என்கிறோம். இதில் என்ன பிசகு. சூத்திரர்கள் இருப்பதற்கு இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்து குழவிக் கற்கள் சாமிகள் தான் காரணம். இவைகளை ஒழிக்காமல் இருப்பது மானமுள்ள ஒருவன் செயலாகுமா? எண்ணிப் பாருங்கள். இவை ஒழிந்து ஒழுக்கமுள்ள கடவுள், எல்லோரையும் ஒன்றாகவே பாவிக்கும் கடவுள் இருக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.

வேறு யார் இவைகளையெல்லாம் சொன்னார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், விவேகானந்தர்கள், மகாத்மாக்கள் என்பவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு வார்த்தை இந்தப் பேதங்கள் எல்லாம் ஒழியவேண்டும், என்று சொன்னார்களா? இவைகளைச் சொல்லாததற்காக இவர்கள் எல்லாம் "சாமிகள்" ஆனார்கள்; இவைகளைச் சொன்னதற்காக நாங்கள் "பாவிகள்" ஆனோம். வணக்கமாய் தெரிவித்துக் கொள்கிறேன் தோழர்களே, எல்லாருடைய இழிவைப் போக்கத்தான் நாங்கள் போராடுகிறோம்.

(தந்தை பெரியார் - "குடிஅரசு" 30.05.1947)

Wednesday, February 12, 2014

கிரிக்கெட் சூதாட்டம்: அய்.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்க!

தமிழர் தலைவர் அறிக்கை


ஊழல், லஞ்சம் என்பது பற்றி மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு பிரச்சினை இருந்து வருகிறது. ஊழல், லஞ்சம், பேரம், சூதாட்டம் எங்கு நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது தான் - சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வும் வேண்டியது தான்.

ஆனால் நம்நாட்டு ஊடகங்கள் அரசியலில் நடை பெறும் ஊழல்களைப் பற்றித்தான் ஓங்காரக் கூச்சல் போடுகின்றன.

திறமையைப் பயன்படுத்தித் தீரவேண்டிய விளையாட் டில் கூட சூதாட்டம் நடைபெறுகிறதே!. விளையாட்டுகளில் கிரிக்கெட் சூதாட்டம் (மேட்ச் பிக்ஸிங்) தான் பிரதான மானது.

மற்ற விளையாட்டுகளில் சூதாடுவது கொஞ்சம் கடினம்! கிரிக்கெட்டில் அதற்கு தாராளமான அளவு இடம் உண்டு. மேலும் பணம் காய்ச்சித் தொங்கும் மரமாக -  சந்தையாக அது ஆகிவிட்டதால் சூதாட்டம் பெரிய அளவிற்கு சூடு பிடிக்கிறது. எத்தனையாவது ஓவரில் எந்த பந்தை எப்படி வீச வேண்டும்? எப்படி அவுட்டாக வேண்டும்? என்பது வரை முன்னதாகவே முடிவு செய்யப்படுகிறது. இதற்கு உடன் படும் விளையாட்டுக்காரர்களை வெட்கம் கெட்டவர்கள் என்றுதான் கூறிட வேண்டும்.

பார்ப்பனர் - பணக்காரர் - பனியாக்களின் முக்கூட்டு ஒப்பந்தம் - இதில் புகுந்து விளையாடுவதால் கமுக்கமாக அமுக்கி விடுகிறார்கள்.

சூதாட்டம்

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கக் கூடிய சீனிவாசன் அவர்களின் மருமகன் குருநாத் மெய்யப் பன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பொறுப் பாளர் ஆவார். அதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்தரா உள்ளிட்டோர் அய்பிஎல் அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டுள் ளனர் என்பது நீதிபதி முகுல்முத்கல் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குருநாத் மெய்யப்பரின் மாமனார் - இப்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என்பதையும் தாண்டி, அகில உலக அமைப்பின் தலைவராகவும் பெரிய பதவிக்குச் சென்றுள்ளார். கிரிக்கெட்டை பொறுத்தவரை உயர்ஜாதிப் பார்ப்பனர் களின் தனி உடைமையாகவே பெருமளவுக்கு ஆகிவிட் டது. இல்லாவிட்டால் இந்திய மண்ணுக்குரிய ஹாக்கிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், அந்நிய நாட்டு விளை யாட்டான கிரிக்கெட்டை முதன்மைப் படுத்துவார்களா?  இங்கு மட்டும் சுதேசியம் காணாமல் போய்விடும்.

டெண்டுல்கர் என்ற பார்ப்பனரைத் தேர்ந்தெடுத்து மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்ததோடு பாரத ரத்னா பட்டமும் வழங்குகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?

கிரிக்கெட்டில் கூட உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தவர்கள் கபில்தேவும், தோனியும் அணித்தலைவராக இருந்தபோதுதானே!

இவர்கள் இருவரும் பார்ப்பனர் அல்லாதார் என்பதால் பாரத ரத்னா மட்டும் டெண்டுல்கருக்கு.

எல்லாம் வருண பேதம் தான்!

பண மழை கொட்டுகிறது

இந்தக் கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள்.

ஏ பிரிவுக்காரர்களுக்கு (7 பேர்) ஓர் ஆண்டு சம்பளம் ரூ.50 லட்சம். பி - பிரிவிலும் ஏழு பேர்; அவர்களுக்கு ஆண்டுச் சம்பளம் ரூ.35 லட்சம். சி - பிரிவினர் மூவருக்கு ஆண்டுச் சம்பளம் ரூ.20 லட்சம்.

இதோடு முடியவில்லை. உள்நாட்டில் விளையாடினால் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம்; வெளிநாட்டில் விளையாடினால் நாள் ஒன்றுக்கு ரூ.2.40 லட்சம்.
அணியில் இடம் பிடித்தால் போதும், விளையாடாமல் இருந்தாலும் அந்தத் தொகை கிடைத்துவிடும். இது அல்லாமல் விளம்பரம்மூலம் கிடைப்பதோ கோடிக்கோடி ரூபாய்கள். ஆண்டு ஒன்றுக்கு மொத்த குத்தகை.

அய்.பி.எல். கிரிக்கெட்டை விடக் கேவலமானது ஒன்று கிடையாது; விளையாட்டுக்காரர்களை (விளையாட்டு வீரர்கள் என்று கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நாம் கூறுவது கிடையாது!) ஏலம் எடுக்கிறார்கள் என்பதைவிட, இவர்கள் ஏலம் போகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  இது எத்தகைய கேவலம்! முதலில் அய்.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்யவேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பு

பார்ப்பனர்கள் கையில் ஊடகங்கள் இருப்பதால், காற்றடித்துப் பறக்க விடுகிறார்கள். அதன் தீய விளைவு நம் ஊரில் வயல்வெளிகளில்கூட நம் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டனர். நம் மண்ணுக்குரிய சடுகுடு காணாமல் போய்விட்டதே!

நம் இளைஞர்களைப் பீடித்த நோயாகவே கிரிக்கெட் ஆகிவிட்டது. இதுவும் ஒருவகையான கலாச்சாரச் சீரழிவு தான். செண்டை மேளம் என்று கேரளாவிலிருந்து இப் பொழுது இறக்குமதி ஆகிவிடவில்லையா? எளிதில் அயல் கலாச்சாரத்திற்கு விலை போவதில் தமிழர்களை அடித்துக் கொள்ள உலகில் வேறு யாரும் கிடையாதோ - வெட்கக் கேடு, நம் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை இதிலும் ஏற்படுத்தவேண்டும்.

கி.வீரமணி
தலைவர் , திராவிடர் கழகம்

சென்னை
12.2.2014 

Thursday, December 19, 2013

பற்றி எரியும் ஈழமும் திராவிடர் கழகத்தின் பணிகளும்

 
 
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 76-ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவாக, ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக அவர்தம் தலைமையில் திராவிடர் கழகம் ஆற்றிய அருந்தொண்டுகள் செயல்பாடுகள் குறித்து விளக்கும் கட்டுரை இது.

ஈழத் தமிழர்கள் நெடுங்காலமாக சிங்கள வெறியர்களின் குரூரத் தாக்குதல்களுக்கு ஆளாகி வந்துள்ளார்கள் என்றாலும் 1983-ல் புதிய சக்தியுடன் அந்தத் தாக்குதல்கள் தீவிரமாகத் தொடங்கின. சிங்கள வெறியர்கள் மட்டுமல்ல - அரசு பயங்கரவாதமும் சேர்ந்து தமிழின மக்கள்மீது கொடிய தாக்குதல் போர் தொடங்கியது.

அந்தக் கால கட்டத்தில் திராவிடர் கழகம் இப்பிரச்சினையின்மீது கண்களை வைத்து தொடர்ந்து விடாமுயற்சியுடன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதனுடைய ஒரு தொகுப்பை இங்குக் காணலாம்.

1. 18.6.1983 சனி மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி தமிழின மக்களின் உணர்வை வெளிப்படுத்தியது. 2.7.1983 அன்று சென்னை அண்ணா நகரில் புல்லா ரெட்டி அவின்யுவில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட பிரமாண்ட எழுச்சிப் பொதுக் கூட்டத்தை நடத்தியது. அநேகமாக அக்கால கட்டத்தில் இப்பிரச்சினைக்காகத் துவக்கப்பட்ட ஒரு முக்கிய நிகழ்ச்சி இது என்றே குறிப்பிட வேண்டும்.

2. 23.7.83 அன்று பிரதமர் இந்திரா காந்திக்கு மடல் எழுதப்பட்டது. தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமரைச் சந்தித்து ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண வற்புறுத்துமாறு கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி கடிதம் எழுதினார்.

3. 1983 ஆகஸ்டு 15-ஆம் நாளைத் துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் அன்று கறுப்புச் சின்னம் அணிந்தும் வீடுகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிட்டும், பொது இடங்களில் கறுப்புக் கொடி ஏற்றியும் நமது துக்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றும் 8.8.1983-இல் சென்னையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு கூட்டம் முடிவு செய்தது.

தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்டு 15-இல் நடைபெறும் விழாக்களில் பங்கு கொள்ள வேண்டாம் என்று அவர்களுக்குத் தனித்தனியே கழகத்தின் சார்பில் மடல் எழுதப்பட்டது. முதலமைச்சருக்கும் அன்று கோட்டையில் கொடி ஏற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

4. 16.8.1983 அன்று ஈழ அகதிகளாகத் தமிழகம் வந்து சேரும் குழந்தைகளுக்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் கல்வி உதவிகள் வழங்கப்படும் என்று பொதுச் செயலாளர் அறிவித்தார்.
5. இலங்கைத் தமிழர்க்காகத் துப்பாக்கி ஏந்துவோம் என்று சொன்ன இனமான மதுரை ஆதீன கர்த்தர்மீது தமிழக அரசு ஏவிய வழக்கைக் கழகம் சந்தித்தது.

6. தமிழன் இறைச்சிக் கடைகளைத் திறந்திருக்கும் ஜெயவர்த்தனே டில்லிவந்த பொழுது, எதிர்த்துக் கறுப்புக் கொடி! கழகப் பொதுச் செயலாளரும், கழகத் தோழர்களும் பங்கு கொண்டு கைது செய்யப்பட்டனர் (23.11.1983).

7. ஈழத் தமிழர் பிரச்சினையில்  உலகத் தமிழர்கள் உணர்ச்சி எரிமலையாக விண்ணில் ஒரு காலும் - மண்ணில் ஒரு காலும் வைத்து கிளர்ந்து நிற்கின்றனர். என்பதை உலகுக்குக் காட்டும் மாநாடுகள் மதுரை மாநகரில் (17,18-12-1983) நடத்தப்பட்டன.

ஈழ விடுதலை மாநாடு என்றே நடத்தப்பட்டது. எழுச்சி மிக்க பேரணி - மதுரை வரலாற்றில் நெருப்புக் கொப்பளமாக வெடித்தது. ஈழ விடுதலைக் கொடியை தோழர் குமரிநாடன் ஏற்றினார்.

ஈழத் தமிழினத் தலைவர்களும், தமிழ்நாட்டுத் தலைவர்களும் பங்கேற்றனர்.

உலகத் தமிழர்கள் மத்தியில் என் இளவல் வீரமணி உயர்ந்து நிற்கிறார் என்பது அறிந்து பெருமிதபடுவதாக அம்மாநாட்டில் கலைஞர் அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த அளவு எழுச்சி மிக்க மக்கள் கடல் திரண்ட மாபெரும் இன எழுச்சி மாநாடு அது.

8. அமெரிக்காவில் நியூயார்க்கில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் பொதுச் செயலாளர் கி. வீரமணி கலந்துகொண்டார்.

(ஜூன் 3 முதல் ஜூலை 2 வரை) லண்டனில் நடைபெற்ற ஈழப் போராளிகள் வீர வணக்க நாளிலும் பங்கேற்றார் (24.7.1984).

9. இங்கிலாந்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினையில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, அவர்கள் கையொப்பமிட்டு கூட்டு அறிக்கை வெளியிடச் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் கி. வீரமணி, ப. நெடுமாறன், எல். கணேசன் எம்.பி., ஆகியோர் இப்பணியில் முன் நின்றனர் (29.7.84).

10. ஈழத் தமிழர் பிரச்சினை-யில் இந்திய நடுவணரசு காட்டி வரும் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து ஆகஸ்டு 15 சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்து நாடெங்கும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. திருச்சியில் பொதுச் செயலாளர் அதற்காகக் கைது செய்யப்பட்டார். நாடெங்கும் அய்யாயிரம் தோழர்கள் கைதாயினர்.

11. இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பச் சொல்வது முட்டாள்தனம் என்று சொல்லி தமிழினத்  தலைவர்களை இழித்தும், ஈழத் தமிழர்களுக்குத் துரோகமும் செய்த இராணுவ அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் துணைக் குடியரசுத் தலைவராகப் பதவி-யேற்று முதன் முதலாகத் தமிழகத்தில் சென்னைக்கு வந்தபொழுது, அவருக்குக் கறுப்புக்கொடி காட்டிட முனைந்து கழகப் பொதுச் செயலாளர் உள்பட திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

12. ஈழத் தமிழர் பிரச்னையைக் கொச்சைப்படுத்தி, இந்தியா டு டே இதழுக்குப் பேட்டி கொடுத்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் கொடும்பாவி கழகத்தின் சார்பில் எரியூட்டப்பட்டது. (6.10.1984)

13. இராமேசுவரம் தீவைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்களை சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். அதற்கு எந்தவித எதிர்ப்பு நடவடிக்கையையும் எடுக்காத இந்திய அரசே செயல்படு! தமிழக அரசே தூங்காதே! என்று கழகப் பொதுச் செயலாளரும் மதுரை ஆதீனமும் மதுரையில் முகவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக முன் மறியல் செய்து கைது. (3.12.1984)

பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்குக் கழக சார்பில் நிதியும் வழங்கப்பட்டது.

14. ஈழப் பிரச்சினை என்ற முறையில் டெசோ உருவாக்கப்பட்டது. (TESO - TAMIL EALEM SUPPORTERS ORGANISATION)
உருவாக்கப்பட்டது. (13.5.1985)

டாக்டர் கலைஞர் தலைவராகவும், பேராசிரியர் க. அன்பழகன், கி. வீரமணி, மதுரை நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் கொண்டு தனி ஈழம் உருவாக உருப்படியான பணிகளில் ஈடுபட உறுதி எடுத்துக் கொண்டு பிறந்த அமைப்பு இது!

தமிழ்நாட்டில் இருந்து தமிழீழத் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள் என்ற செய்தி வந்ததும் - வராததுமாக இது கொடுத்த 24 மணி நேரம் அழைப்பினைச் செவிமடுத்து இலட்சோப லட்சம் தமிழினத்தார் தலைநகரிலே அணி வகுத்து அரிமாக் குரல் கொடுத்தனர் (25.8.1985)

15. டெசோ சார்பில் இரயில் நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து தமிழ்நாட்டையே வெறிச்சோடச் செய்யப்பட்டது. (30.8.1985).

16. விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கிட திராவிடர் கழகத்தின் சார்பில் நிதி வசூலும் உணவுப் பொருள்களும் வசூல் செய்து கொடுக்கப்பட்டது.

17. தமிழ் ஈழப் பகுதிகளில் உயிரைப் பணயம் வைத்து வீரப்பயணம் நடத்தி, கண்ட கொடுமைகளை வீடியோவாக்கித் தமிழகம் திரும்பிய மாவீரன், ப. நெடுமாறனை பிரதமர் ராஜீவ்காந்தி சந்திக்க மறுப்பது ஏன்? அசாம், பஞ்சாப் தலைவர்களுடன் பேச்சு நடத்தும் ராஜீவ் - தமிழர்களை மதிக்கும் லட்சணம் இதுதானா? என்று மயிலைப் பொதுக் கூட்டத்தில் (3.3.1986) பொதுச் செயலாளர் கி. வீரமணி  வினா எழுப்பினார்.

18. 7.3.1986: திருச்சி மேற்கு மாவட்டக் கழகத் துணைத் தலைவர் கரூர் பழ. இராமசாமி விடுதலைப்புலிகளுக்கு ஜீப் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கினார்:  ஜீப் சாவி, தமிழர் தளபதி மூலம் விடுதலைப்புலித் தோழர் ஒருவரிடம் தரப்பட்டது.

இடையாற்றுமங்கலத்தில் (8.3.1986) நடந்த இ.ச. தேவசகாயம் மணவிழாவில், திருச்சி கிழக்கு மாவட்ட திராவிடர் தொழிலாளரணி அமைப்பாளர் முத்துச்செழியன் புலிகளுக்காக தமிழர் தளபதி மூலம் சுவேகா மோட்டார் சைக்கிள் ஒன்றினை அன்பளிப்பாக அளித்தார்.

19. 20.5.1986: சிங்கள ராணுவம் விமானத்திலிருந்து குண்டு வீசும் போக்கை தடுத்து நிறுத்தவலியுறுத்தி பிரதமருக்கு கழகப் பொதுச் செயலாளர் இன்று தந்தி தந்தார்.

20. இல்லினாய்ஸ் கருத்தரங்கில் 15.7.1986: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரின் இல்லியனாய்ஸ் பல்கலைக் கழக மண்டபத்தில் ஈழத் தமிழர் குறித்த கருத்தரங்கம் - டாக்டர் இளங்கோ ஏற்பாட்டில் நடந்தது. இதில் 25 நிமிடங்கள் ஆங்கில உரையாற்றிய தமிழர் தளபதி - இலங்கைப் பிரச்சினைக்கு  தமிழ் ஈழமே தீர்வு என வலியுறுத்தினார்.

18.7.86: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வாஷிங்டன் ஏரியா உயர்நிலைப் பள்ளியில் தமிழர் தளபதிக்கு நிகழ்த்திய வரவேற்புக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து உரை நிகழ்த்தினார்.

தமிழர் பிரச்சினை பற்றி தமிழர் தளபதியை அமெரிக்க வானொலி (வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா) பேட்டி கண்டது.

21. பெங்களூர் சார்க் மாநாட்டிற்கு இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே வந்தபோது நமது எதிர்ப்புணர்வைக் காட்டும் வகையில் தமிழ்நாடெங்கும் ஜெயவர்த்தனே கொடும்பாவி கழகத் தோழர்களால் எரியூட்டப்பட்டது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர் (17.11.1986).

22. ஈழப் போராளிகளின் தொலைத் தொடர்பு கருவிகளைத் தமிழக அரசு பறிமுதல் செய்தபோது கழகம் கடுமையாக கண்டித்தது. அரசின் நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகளின் தளபதி தம்பி பிரபாகரன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரதத்தை பொதுச் செயலாளர் கண்டித்து எழுதினார். மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அன்றே பொதுச் செயலாளர் நேரில் வீட்டுக்குக்கூட செல்லாமல் உண்ணா விரதத்தை முடித்து வைத்தார் (23.11.1986).

23. யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு உணவை அனுப்பாமல் முற்றுகையிட்டுக் கொன்ற கொலைகார சிங்களவெறி அரசுக்குத் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இந்திய அரசு கப்பல் மூலம் உணவு ஏற்றுமதி செய்த கொடுமையைக் கண்டித்து திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரசும் இணைந்து கப்பல் மறியல் போராட்டம் நடத்தியது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். (20.2.1987).

24. யாழ் மருத்துவமனையை மூடி தமிழீழ மக்களை அவதிக்குள்ளாகக் திட்டமிட்டிருந்த ஜெயவர்த்தனே அரசை எதிர்த்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன் திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரசும் இணைந்து  ஆர்ப்பாட்டம் நடத்தின (8.5.1987). இதன் காரணமாக யாழ் மருத்துவமனை மூடாமல் தடுக்கப்பட்டது.

25. சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இரண்டு தமிழர்களின் குடும்பத்தினரை சேது பாவா சத்திரத்திற்கு உடனடியாக கழகப் பொதுச் செயலாளர் சென்று அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி கழகத்தின் சார்பில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக அளிக்கப்பட்டது. (26.5.1987)

26. சென்னை சைதாப்பேட்டையில் தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் தனது எடைக்கு ஈடாக அளிக்கப்பட்ட ரூபாய் நாணயங்களையும் (10 ஆயிரம் ரூபாய்) அதோடு கழகத்தால் வசூல் செய்யப்-பட்ட நிதியையும் சேர்த்து ரூ.25,684-57 தொகையையும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகளையும் விடுதலைப்புலிகளுக்குப் பொதுச் செயலாளர் அவர்கள் கடற்கரை விழாவில் (1.5.1987) வழங்கினார்கள்.

27. ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு காட்டிவரும் அலட்சியத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இரயில் மறியல் போராட்டம் நடத்தியது. திராவிடர் கழகத்துடன், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தோழர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள நாடெங்கும் தோழர்கள் கைது செய்யப்பட்டனர் (1.6.1987)

28. சென்னையில் உள்ள இலங்கைத் தூதர் திசா ஜெயக்கொடி என்பவரின் நடவடிக்கைகள் இந்தியப் பாதுகாப்புக்கு ஆபத்தானவை - அவரை வெளியேற்ற வேண்டும் என்று வீரமணி அவர்களும் நெடுமாறன் அவர்களும் விட்ட அறிக்கையைத் (5.6.1987) தொடர்ந்து 2.7.1987 அன்று மத்திய அரசால் அவர் வெளியேற்றப்பட்டார்.

29. ஈழத் தமிழர்கள்மீது சரித்திரம் காணாத துரோக ஒப்பந்தத்தைத் திணித்த இந்திய அரசைக் கண்டித்தும், ஒப்பந்தத்தை எதிர்த்தும், ராஜீவ்காந்தி -ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எரித்து அதன் சாம்பல் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது (2.8.1987) திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரசும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தின. நாடெங்கும் பல்லாயிரக்கணக்கில் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

30. நாடாளுமன்றத்தில் கொழும்பு ஒப்பந்தம்பற்றி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கும் நோக்கத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்களும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நெடுமாறன் அவர்களும், டெல்லி சென்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் சந்தித்து, கொழும்பு ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள துரோகத் தனங்களைத் தோலுரித்துக் காட்டினர் (13.8.1987). அதன் எதிரொலியை நாடாளுமன்றத்தில் கேட்க முடிந்தது.

31. கொழும்பு ஒப்பந்தத்தின் நயவஞ்சகத்தை தமிழ்நாட்டு மக்களிடத்திலே எடுத்துரைக்கும் கட்டுப்பாட்டுடன் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்களும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நெடுமாறன் அவர்களும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு கட்டமாகச் சூறாவளிச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்கள் (16-6-1987 முதல் 21.6.1987 முடிய 7.9.87 முதல் 11.9.1987 முடிய)

32. 1.10.1987-இல் மறைந்த மாவீரன் திலீபனுக்காக இரங்கல் ஊர்வலம்.

33. 9.10.1987 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் பார்ப்பன உணர்வோடு செயல்படும் இலங்கைத் தூதர் தீட்சத்துக்குப் பதில் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டுகோள் விடப்பட்டது.

34. 14.10.1987, 19.10.1987 ஆகிய இரு நாள்களிலும் சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு.

17.10.1987 அன்று தமிழ்நாடெங்கும் அரைநாள் கடையடைப்புப் போராட்டம்.

26.10.1987 அன்று தமிழ் நாடெங்கும் உள்ள வானொலி நிலையங்கள் சென்னைத் தொலைக்காட்சி நிலைய முன் மறியல் - பொதுச் செயலாளரும் தலைவர்களும் தொண்டர்களும் கைது - சிறை.
நாடெங்கும் நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தில் பங்கேற்பு (6.11.1987).

21,22.12.1987

தமிழ்நாடு வந்த பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் ஆங்காங்கே கறுப்புக் கொடி காட்டப்பட்டது.

25.1.1988

இந்தியக் குடியரசு நாள் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் அழைக்கப்பட்டார். அதனைக் கண்டிக்கும் வகையில் சனவரி 26 அன்று கருப்புக் கொடி ஏற்றவும் - ஜெயவர்த்தனேயின் கொடும்--பாவியைக் கொளுத்தவும் திராவிடர் கழகம் அறிவித்தது. எங்கெங்கும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கொடும்பாவியைக் கொளுத்த முயன்றபோது காவல்துறையினர் தடியடி நடத்தினர். கழகப் பொதுச் செயலாளர் உட்பட கழகத் தோழர்கள் பலரும் காயம் அடைந்தனர். கழகப் பொதுச் செயலாளர் உள்பட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

(22-ஆம் முறையாகக் கழகப் பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டார்)

21.3.1988

ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் உள்பட தோழர்கள் கைது.

7.6.1988

பிரபாகரன் உயிருக்குக் குறி வைக்காதே! என்று குரல் கொடுத்து சென்னையில் உள்ள தென் மண்டல இராணுவம் தலைமையகம்முன் ஆர்ப்பாட்டம்

29.7.1988

ராஜீவ் - ஜெயவர்த்தனே துரோக ஒப்பந்தத்திற்கு ஒரு வயது ஆனதை முன்னிட்டு அந்நாளில் நாடெங்கும் கண்டன  ஊர்வலங்கள்.

28.7.1988 - 22.8.1988

உலக அரங்கில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் சக்திகளின் முகத்திரைகளைக் கிழித்தெறிந்திட கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கனடா, அமெரிக்கா சுற்றுப் பயணம்.

31.7.1988

அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் குடியரசுத் தலைவரின் வெள்ளை மாளிகைமுன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மானமிகு கி. வீரமணி கலந்து கொண்டார்.

18.8.1988

தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த விடுதலைப்புலிகளை சிறையில் அடைத்தமையைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு.

மாநாடுகள்

விடுதலைப்புலிகளின் கைதைக் கண்டித்து நாட்டின் பல முக்கிய பகுதிகளில் கண்டன மாநாடுகள்

மதுரை -2.9.1988, தஞ்சாவூர் - 8.9.1988 சேலம் - 14.9.1988

10.9.1988

கால் ஊனமுற்று வீட்டில் இருந்த விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவைச் சந்திக்கச் சென்ற திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் கைது.

19.9.1988

தமிழகத்தில் இருந்த ஈழப் போராளிகளைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தபோது அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் விடுதலைப்புலிகளை அழைத்துப் பேச வேண்டியும் பிரதமர் ராஜீவ்காந்திக்குக் கழகப் பொதுச் செயலாளர் தந்தி கொடுத்தார்.

26.9.1988

பாதுகாப்புச் சட்டத்தின் பேரால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை விடுதலை செய்யக் கோரி திலீபன் நினைவு நாளில் சென்னை, மதுரை மத்தியச் சிறைச்சாலைகள் முன் ஆர்ப்பாட்டம்.  பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட போராளிகள் பிரச்சினைமீது நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழுமுன் கழகத்தின் சார்பில் போராளிகளுக்காக வாதாடப்பட்டது.

14.5.1989

இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழர் மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் கலந்து கொள்ளல் (29,30.4.1989) வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்புப் பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பங்கேற்பு (14.5.1989).

24.7.1989

மாவீரன் பிரபாகரன் சுட்டுக்கொலை என்று கோழைத்தனமாகக் கிளப்பப்பட்ட புரளியை எதிர்த்து உலகிற்கு உண்மையை எடுத்துரைத்த முதல் தலைவர் வீரமணி.  முதல் ஏடு விடுதலை (24.7.89).

29.7.1989

ஈழத்தைவிட்டு இந்திய இராணுவம் வெளியேறக் கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன் தமிழ் நாடெங்கும் ஆர்ப்பாட்டம் தமிழர் தேசியக் கட்சியுடன் இணைந்து நடத்தப்பட்டது.

12.7.1990

ஈழத்தில் தமிழினப் படுகொலை புரியும் இலங்கை அரசை எதிர்த்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் அலுவலக முன் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

26.9.1990

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில்  எல்லாம் கண்டனப் பேரணிகள் - திராவிடர் கழகத்தின் சார்பில்.

13.7.1992

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் ஈழ அகதிகள் கல்விப் பாதுகாப்பு மாநாடு

6.6.1995

ஈழத்தில் இந்திய ராணுவத் தலையீடு கூடவே கூடாது என்ற பொருளில் தியாகராயர் நகர் சங்கர்தாஸ் கலையரங்கில் பழ. நெடுமாறன் தலைமையேற்க திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி பங்கேற்று கருத்துரையாற்றினார்.

17.7.1995

ஈழத்தில் முப்படைகளைக் கொண்டு தமிழர்களை அழிக்கும் சிங்கள அரசின் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் இலங்கைத் துணைத் தூதர் அலுவலகத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தூதரக அதிகாரியிடம் - போரை நிறுத்தக் கோரி மனுவும் அளிக்கப்பட்டது. முன்னதாக சென்னை பெரியார் திடலிலிருந்து கண்டன ஊர்வலம் புறப்பட்டு, கல்லூரி சாலையில் உள்ள தூதர் அலுவலகத்திற்கு முழக்கமிட்டு ஊர்வலமாகச் சென்றனர் கழகத் தோழர்கள்.

29.7.1995

ஈழத்தில் இனப் படுகொலை என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் எழுச்சியுரை ஆற்றினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி.

1.8.1995

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்த அய்.நா.விடம் கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை திராவிடர் கழகம் இன்று தொடங்கியது. 31.9.1995 அன்றுவரை இப்பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

10.8.1995

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், கையெழுத்து இயக்கம் நடத்திடவும் தென் சென்னை மாவட்டத்தில் இன்று துவங்

கி நூறு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

6.11.1995

ஈழத் தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய இடங்களில் கண்டனப் பேரணி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி பங்கேற்றார்.
கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு அனைத்துத் தரப்பினரும் எரியும் தீயை அணைப்போம் வாரீர்! என்று வேண்டுகோள் விடுத்தார் கழகப் பொதுச் செயலாளர்.

9.11.1995

ஈழத்தில் நடைபெறும் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்திட திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்டது.

23.2.1996

சென்னை பெரியார் திடலில் ஈழத் தமிழர்களுக்-கெதிரான இந்தியத் தலையீடு பற்றி கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, பழ. நெடுமாறன், பழ. கருப்பையா, சேவியர் அருள்ராஜ் ஆகியோர் பேசினர்.

30.4.1996

ஈழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்-களில் மனிதச் சங்கிலி அறப்போர் நடைபெற்றது.

20.8.1996

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை மே தினப் பூங்கா அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து பேரணி புறப்பட்டு, ஆதித்தனார் சாலை பாந்தியன் சாலை, கல்லூரி சாலை வழியாக இலங்கைத் துணைத் தூதரகத்தின்முன் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்-பட்டது.

28.5.1997

சென்னைப் பெரியார் திடலில்  ஈழத் தமிழர்ப் பிரச்சினைபற்றி முடிவு எடுக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை திராவிடர் கழகம் கூட்டியது.

6.6.1997

ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்காக தமிழகம் தழுவிய அளவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. ஆயிரக்-கணக்கில் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

17.6.1997

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில், தமிழர் தலைவர் கி. வீரமணி, பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, பழ. நெடுமாறன் ஆகியோர் உரையாற்றினர்.

26.7.1997

தமிழக மீனவர் பாதுகாப்பு, கச்சத் தீவு மீட்புரிமை மாநாடு இராமேசுவரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி. வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசு, மருத்துவர் ச. இராமதாசு, பழ. நெடுமாறன், கா. ஜெகவீரபாண்டியன், டாக்டர் இரா.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து-கொண்டனர்.

29.7.1997

கச்சத்தீவு உரிமை தமிழக மீனவர் பாதுகாப்பு கோரி திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. (வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

14.12.1997

ஈழத் தமிழர் ஆதரவு பன்னாட்டு மாநாடு டில்லி-யில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசு அவர்களை அமைப்பாளராகக் கொண்ட அம்மாநாட்டில் தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் பங்கு கொண்டனர். அரங்கில் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜார்ஜ் பெர்னாண்டசு இல்லத்தில் நடத்தப்பட்டது. நடுநிலையாளர்கள் முன்னிலையில் விடுதலைப்புலிகள் - இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

25.2.1998

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தீர்ப்பு குறித்து சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில்  நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோர் உரையாற்றினர். ராஜீவ் கொலை வழக்கில் மறு விசாரணை தேவை என்றார் திராவிடர் கழக பொதுச் செயலாளர்.

7.1.2006

இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மா.வை. சேனாதி ராஜா, மலைவாழ் மக்கள் முன்னணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பொ. சந்திரசேகரன் ஆகியோர் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடினர்.

1.6.2006

சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். பாவலர் அறிவுமதி, பா.ம.க., தலைவர் கோ.க. மணி (எம்.எல்.ஏ.,) ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.

12.11.2006

நாள்தோறும் ஈழத் தமிழர்கள் சிங்கள இராணுவத்-தால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்தும், பட்டினியால் சாகடிக்கப்படும் கொடுமையைக் கண்டித்தும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலை-நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி  தலைமை தாங்கி நடத்தினார். சென்னையில் திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை தலைமை தாங்கினார்.

19.12.2006

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்திட இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்று கோரி தந்தி அல்லது தொலைப்பதிவி மூலம் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரசு தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு அனுப்பி வைக்குமாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர்களுக்கு வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டார்.

22.12.2006

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்புக் கோரி தமிழ்நாடெங்கும் மனிதச் சங்கிலி அறப் போராட்டம் திராவிடர் கழகத்தால் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. திமுக., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சியினர் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன், மதிமுக சார்பில் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு  அணி வகுக்கப்பட்டது.

5.2.2007

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கம், பத்மநாபன் அரியநேத்திரன் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை சென்னைப் பெரியார் திடலில் இன்று சந்தித்து உரையாடினர். உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளர் டாக்டர் இரா. ஜனார்த்தனமும் உடன் வந்தார்.

6.3.2007

ஈழத்தில் நடைபெறுவது என்ன? என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டத்தில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும் உரையாற்றினர்.

20.7.2007

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை கோரி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் மெமோரியல் ஹால் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையேற்றார்.

31.12.2007

இலங்கை சுதந்திர தினவிழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் கலந்து கொள்வதை எதிர்த்து சென்னை மெமோரியல் ஹால் முன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. அதன் காரணமாக பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

4.8.2008

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை கோரியும், தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கோரியும் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை மெமோரியல் ஹால்முன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

22.9.2008

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து   திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை சென்ட்ரலில் இரயில் மறியல் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் - திருமாவளவன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளரும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்-கில் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

20.10.2008 பற்றி எரிகிறதே ஈழம் என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பொதுக் கூட்டத்-தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.

24.10.2008 தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி இன்று சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலிப் பேரணியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கொட்டும் மழையில் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

6.11.2008 பற்றி எரியும் ஈழமும் பார்ப்பனப் பத்திரிகைகளும் என்ற தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரை நிகழ்த்-தினார். திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை தலைமை தாங்கினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் வரவேற்-புரையாற்றினார்.

1983 முதல் இந்நாள் வரை ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தொய்வின்றித் தொடர்ச்சியாக ஒரே நிலையில் (Consistency)  நின்று குரல் கொடுத்தும், போராடியும் வரும் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு வரலாற்றில் என்றும் நின்று பேசக் கூடியதாகும்.

பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் எழுச்-சியூட்டும் தொடர் பயணங்கள் மாநாடுகள், பேரணிகள், போராட்டங்கள் மட்டுமல்ல தமிழர்களுக்கு இழைக்-கப்படும் கொடுமைகளை விளக்கும் கண்காட்சி-களையும் கழகம் நடத்தியிருக்கிறது என்பது குறிப்-பிடத்தக்கதாகும்.


தொகுப்பு : கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்

- உண்மை இதழ் டிசம்பர் 01-15 - 2008

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லையானால் தொடர்போராட்டத்தில்ஈடுபடுவோம்!

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லையானால் தொடர்போராட்டத்தில்ஈடுபடுவோம்! செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் அறிவிப்பு


தஞ்சாவூர், டிச.15- தமிழக மீனவர்கள் தாக்கப் படுவது தொடர் கதையாக உள்ளது. இதற்கொரு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லையானால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தஞ்சாவூர் - வல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது (14.12.2013).

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். இது ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. கண்ணீரும் கம்பலை யுமாக அம்மக்கள் பேட்டி கொடுப்பதை  பார்க்கும் பொழுது ரத்தக் கண்ணீர் வடிக்கிறோம்.

மாநில அரசு பிரதமருக்கு எழுதுவது - மத்திய அரசு ஏதோ சமாதானம் கூறுவது - கவலையளிக் கிறது என்று கூறுவது எல்லாம் கேட்டுக் கேட்டுப் புளித்து விட்டது. இதற்கு நிரந்தரமான தீர்வை மத்திய அரசு எடுக்காவிட்டால் தொடர் போராட் டத்தை நடத்துவோம் டெசோ தலைவரின் கருத்தினையும் அறிந்து அத்தகைப் போராட்டத்தை மேற்கொள்வோம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. என்பதை மத்திய அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதக் கலவரத் தடுப்பு சட்டம்

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மதக் கல வரத் தடுப்புச் சட்டம் வரவேற்கத்தக்கது.

தேவைப்படும் தருணத்தில் மாநில அரசுகளைக் கலந்து கொண்டு, அவற்றின் ஒப்புதலோடு மத்திய அரசு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மதக் கலவரங்களைத் தடுக்க முனைவது அவசியமே!

இதனைக் கூடாது என்று கூறுபவர்கள் கூக்குரல் போடுபவர்கள் யார்? நாடெங்கும் மதக் கலவ ரத்தைத் தூண்டுபவர்கள்; மோடியைத் தூக்கி நிறுத்துபவர்கள்தான்; அவர்கள் மடியில் கனம் இருப்பதால், இதனை எதிர்க்கிறார்கள்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்

இந்திய அரசமைப்புச் சடடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். சீர்திருத்த எண்ணம் உருவாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.(51A (h).

இதன் அடிப்படையில் மகாராட்டிர மாநிலத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருநாடகா வில் கொண்டு வரவிருப்பதாக மாநில முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

தந்தை பெரியார் பிறந்த  தமிழ்நாட்டிலும் இத்தகு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.  மத்திய அரசே கூட இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இந்த நேரத்தில் வலியுறுத் துகிறோம்.

நீதிபதி கங்குலி விவகாரம்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி மீது பாலியல் குற்றத் தொடர்பான புகாரின் அடிப் படையில் உச்சநீதிமன்றம் அமைத்த குழு  குற்றச் சாற்றுக்குப் பூர்வாங்கமான தடயங்கள் இருக் கின்றன என்று கூறியுள்ளது. கங்குலி ஓய்வு பெற்ற தால் அவர்மீது நடவடிக்கை எடுக்க இயலாது என் கிற முறையில் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரி வித்துள்ளது.

உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மாநில அரசு சட்டப்படியான நடவடிக்கையைத் தொடர வேண்டும்.

மற்றவர்களைவிட நீதிபதியாக இருக்கக் கூடியவர்கள் நேர்மையான முறையில் ஒழுக்கமான முறையில் நடந்து காட்ட வேண்டும். வேலியே பயிரை மேயும் நிலையை அனுமதிக்கக் கூடாது.

மேற்கு வங்க மாநிலத்தில் மனித உரிமைக் குழு தலைவராக கங்குலி இருந்து வருகிறார். நேர்மை அவரிடம் இருக்குமானால் அந்தப் பதவியிலிருந்து அவர் விலகி இருக்க வேண்டும்; அவர் விலகாத நிலையில்  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கேரளாவில் தமிழர்கள் பிரச்சினை

கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் அட்டப்பாடி, சோலையூர், புதூர் போன்ற கிராமங் களில் 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் கேரள அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

40 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள் அவர்கள்.

அந்தப் பகுதிகளை தமிழர்கள் ஒன்றும் ஆக்கிர மிக்கவில்லை; பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்; பத்திரவுப் பதிவுகள் எல்லாம் முறைப்படி இருக் கிறது. 12 ஆண்டுகள் குடியிருந்தாலே அவர்களுக்கு உரிமை கிடைத்து விடுகிறது.(Prescription Right)
இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு அவசரம் காட்ட வேண்டும்  கேரள முதல் அமைச்சருடன் உடனே பேச வேண்டும், மத்திய அரசும் உடனடி யாகத் தலையிட வேண்டும்.

இந்தியாவில் எந்த ஒரு இடத்திலிருந்தும் இன் னொரு இடத்திற்கும் செல்லலாம். குடியேறலாம் என்று தான் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு கிறது - இந்திய ஒருமைப்பாடுபற்றிப் பேசுபவர்கள் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும்.

மதவாத சக்திகளை அனுமதிக்கக் கூடாது

மோடி அலை மோடி அலை என்று ஓர் அலையைக் கிளப்பி விடுகிறார்கள்.

மோடி அலை வீசுவது உண்மையென்றால், டில்லியில் அல்லவா அது செல்லுபடியாகி இருக்க வேண்டும். டில்லியில் தான் மோடி அதிகமாக அக்கறை செலுத்தினார் - பிரச்சாரம் செய்தார்; முடிவு வேறு விதமாகி விட்டதே!

மத்தியப் பிரதேசத்தில்கூட வெற்றி பெற்றதற்குக் காரணம் மோடி அல்ல. அம்மாநில முதல் அமைச் சர்தான் காரணம்; மோடி பேசிய பொதுக் கூட்டத் தில்கூட அம்மாநில முதல்அமைச்சர் சவுகான் படத்தைத்தான் பொது மக்கள் தூக்கிக் காட்டி னார்கள்.

புதிய புதிய யுக்திகளையெல்லாம் பயன்படுத்தி செயற்கையான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். பன்னாட்டுப் பண முதலைகள் மோடியின் பின்னணியில் இருக்கின்றன. அவர்கள் பணத்தை வாரி இறைத்து நரேந்திர மோடியை பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்க முயற்சிக் கிறார்கள் என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள் வார்கள்.

உண்மை வெளிவரும் - ஒப்பனைகளும் அப்பொ ழுது கலையும்.

பெரியார் உலகம்

திருச்சியையடுத்த சிறுகனூரில் 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவ  வெண்கலச் சிலையை நிறுவும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

பெரியார் வாழ்க்கைவரலாறு ஒலி, ஒளிக் காட்சிகள் நூலகம் என்று தந்தை பெரியார்பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வகையில் பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது.

இதற்காக 1005 சவரன் தங்கத்தை கொடுத்துள் ளார்கள். கட்சி, ஜாதி, மதங்களைக் கடந்து மக்கள் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சிக் குரியது என்று குறிப்பிட்டார்.

மகளிர் மசோதா

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண் களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா 1996 முதல் நிலுவையில் உள்ளது. உடனடியாக இந்த சட்டம் உள் ஒதுக்கீடுடன் கூடியதாக நிறைவேற்றப்பட வேண்டும்.

பெண்களுடைய வாக்குகள் கிட்டதட்ட சரி பங்கு இருக்கின்றன என்பதை அரசியல் கட்சிகள் மறந்திட வேண்டாம்!

- செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் 14.12.2013

Read more: http://www.viduthalai.in/headline/72098-2013-12-15-10-21-34.html#ixzz2nzD2xaku

Tuesday, October 22, 2013

இருட்டை விட்டு வெளியே வரட்டும், இந்தியா டுடே!

இந்தியா டுடே வார இதழ் பெரியாருக்குத் தடை? எனும் தலைப்பில் செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது (16.10.2013, பக்கங்கள் 8, 9).
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்ட விருத்தாசலம் திராவிடர் மாணவர் கழக மாநாட்டில் மதவெறி, ஜாதி வெறி கொண்ட ஒரு சிறுகூட்டத்தார் வன்முறையில் ஈடுபட்டதைப் பற்றிக் கூறிவிட்டு, இந்தியா டுடே தன் கருத்தை எழுதுகிறது! எப்படி தெரியுமா?
இந்த சம்பவம், தமிழகத்தில் பெரியார் கொள்கை களை இனி சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்ய முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது என்று எழுதுகிறது இந்தியா டுடே!
இது இந்தியா டுடேயின் ஆசையா? அல்லது நடைமுறை உண்மையா?
(1) எதிர்ப்பு நெருப்பாற்றில் நீச்சல் போட்டுப் போட்டுத்தான், இந்த இயக்கம் மகத்தான வெற்றி களைக் குவித்திருக்கிறது.
தந்தை பெரியார் பேசிய கூட்டங்களில் எல்லாம்கூட செருப்புகள் வீசப்பட்டதுண்டு - கற்கள் வீசப்பட்ட துண்டு - முட்டையில் ஓட்டைப் போட்டு, அதில் மலத்தை வைத்து பெரியார்மீது வீசியதுண்டே! சால்வையால் அதைத் துடைத்து எறிந்துவிட்டு, தன் பிரச்சாரத்தைத் தொடர்ந்தாரே தவிர, தொடை நடுங்கி ஒதுங்கிடவில்லை.
சின்னாளப்பட்டியில் கடுமையாக கற்கள் வீசப்பட்ட நேரத்தில், தானும் முண்டாசு கட்டிக்கொண்டு, கூட்டத்தில் கலந்துகொண்டவர்களையும் முண்டாசு கட்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட நிகழ்வுகள் எல்லாம் உண்டே!
இவற்றையெல்லாம் சந்தித்தே - தந்தை பெரியாரை ஒட்டுமொத்தமான சமூகமே ஏற்றிப் போற்றிடும் ஒரு நிலையைத் தன் வாழ்நாளிலேயே கண்டு கண் மூடினார்.
தேர்தல் அரசியலில் தன்னையோ, தன் இயக்கத் தையோ ஈடுபடுத்தாத தந்தை பெரியாருக்கு இந்த அமைச்சரவையே காணிக்கையாக்கப்பட்டது என்று ஒரு முதலமைச்சர் (அறிஞர் அண்ணா) சொன்னார் என்றால், அது என்ன சாதாரணமா?
இது சூத்திரர்களின் அரசு என்று சட்டப்பேரவை யில் ஒரு முதலமைச்சர் (கலைஞர்) கூறியதெல்லாம் எந்த அடித்தளத்திலிருந்து?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களை எடுத்துக்கொண்டால்கூட, இத்தகு தாக் குதல்கள் ஒன்றும் புதியன அல்ல - இதற்கு முன்புகூட நான்கு முறைகள் அவர் உயிருக்குக் குறி வைக்கப்பட்ட துண்டே! அதனால் என்ன ஓய்ந்துவிட்டாரா? பொதுத் தொண்டிலிருந்துதான் ஒதுங்கிவிட்டாரா?
உலகத்தில் எந்த நாட்டிலும் கேள்விப்படாத அள வுக்குப் பொது இடங்களில் தந்தை பெரியார் சிலைகளை எழுப்பி, கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டுதானே வருகிறது - இப்பொழுதும்!
அதனை எதிர்த்து நீதிமன்றங்களுக்குச் சென்றதும் உண்டே! ஆன்மிகவாதியான ஜஸ்டிஸ் திரு.மு.மு.இஸ் மாயில் அவர்களே கூட வழக்கைத் தள்ளுபடி செய்து, பெரியார் சிலையில், பெரியார் கருத்துகளைப் பொறிக் காமல், வேறு யாருடைய கருத்துகளைப் பொறிக்க வேண்டும்? என்று மண்டையில் அடித்துத் தீர்ப்புக் கூறினாரே!
பெரியார் மறைந்த ஓராண்டு நிறைவு நாளிலே இராவண லீலா நடத்தி, ராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களைக் கொளுத்தியது திராவிடர் கழகம்தானே - அன்னை மணியம்மையார்தானே - வழக்குப் போட்டார் களே - வெற்றி பெற்றனரா? மாறாகக் கழகம் அல்லவா வெற்றி பெற்றது.
எதிர்ப்பைப்பற்றி, உயர்த்தி எழுதுகிறார்களே! உண்மை என்ன? திராவிடர் கழகத் தலைவர் பயணம் செய்த வாகனத்தின்மீது தடிகொண்டு தாக்கிய தடியர்களைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டவர்கள்தானே அதிகம். விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை என்றால், அதற்குள் அரசியலும், கூட்டணியும் இரகசியமாக இருக்கிறது - அவ்வளவே!
(2) இன்னொன்றை புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டு எழுதி இருக்கிறது - இந்தியா டுடே. கடவுள் என்று ஒன்று இல்லை. எனவே, அதனை இழிவுப்படுத்திப் பேசவேண்டிய அவசியம் இல்லை ஆசிரியர் வீரமணிக்கு என்று சொல்லுகிறது.
கடவுள் என்ற ஒன்று இல்லை என்று இந்தியா டுடே ஒப்புக்கொண்டதே கூட, திராவிடர் கழகத்திற்கும், அதன் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும் கிடைத்த வெற்றியே!
இன்னொன்று கடவுளை இழிவுபடுத்திப் பேசவேண் டிய அவசியம் இல்லை என்று இதோபதேசம் செய்தும் உள்ளது.
எதை - எந்தக் கடவுளை இழிவுபடுத்திப்பேசி இருக் கிறார் வீரமணி? மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்ற தோரணையில் எழுதலாமா?
இராமன் என்றும், கிருஷ்ணன் என்றும், விநாயகன் என்றும், சிவன் என்றும், பிரம்மா என்றும், சரஸ்வதி என்றும் கடவுள்கள்பற்றிப் புராணங்களை எழுதியது திராவிடர் கழகத் தலைவரா?
இந்தப் புராணங்களில் இந்தக் கடவுள்கள் பிறப்பு எல்லாம் ஆபாசமாகத்தானே எழுதப்பட்டுள்ளது.
பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து உருட்டித் திரட்டியவன்தானே விநாயகன் என்று எழுதி வைத்ததும்; - அதனை இன்றுவரை நம்பி விநாயகன் ஊர்வலங்களை நடத்துவதும் - அதனை மய்யப்படுத்தி சிறுபான்மை மக்களைத் தாக்குவதும் சரியானதுதானா?
சரஸ்வதியின் தந்தையும் பிரம்மா - கணவனும் பிரம்மா என்று எழுதப்பட்டுள்ளதே - இந்தக் கேவலத்தை எப்பொழுதாவது சுட்டிக்காட்டி - நாட்டு மக்களுக்கு நல்லதைச் சொல்லியிருக்கிறதா இந்தியா டுடேக்கள்?
ஒழுக்கமாகக்கூட ஒரு கடவுளை உண்டாக்க முடிய வில்லையே - அதற்காக வெட்கப்படவேண்டாமா?
பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையில் கூறப்பட்டுள்ளதே - இப்படிக் கூறுபவன் பகவான் கிருஷ்ணன் என்று கூறு வதும், அந்தக் கீதையை ஒப்பற்ற நூல் என்று புகழ்வதும் மதிமயக்கத்திலும், மூட நம்பிக்கைச் சகதியிலும் மூழ்கிக் கிடப்பவர்களுக்குச் சரியானதாகப் படலாம். காரணம், பக்தி வந்தால்தான் புத்தியைப் பயன்படுத்துவது இல்லையே!
ஆனால், சமூக அக்கறையும், ஒழுக்கத்தின்மீது உயர்நாட்டமும் - அறிவின்மீது அளப்பரிய ஆர்வமும் கொண்டவர்களுக்கு ஆபாசங்களையும், இழிவையும், அறியாமையையும் சுட்டிக்காட்டி, தேவைப்பட்டால் இடித்துக் காட்டிச் சொல்லவேண்டிய சமூக அக்கறை யும், கடமை உணர்ச்சியும் எங்களுக்கு இருக்கிறது!
அது இந்தியா டுடேயிடம் இல்லை என்றால், அய்ம்பொறிகளையும் பொத்திக்கொண்டு நாய் விற்ற காசு குரைக்காது என்ற தன்மையில் வியாபாரப் பொழைப்பை நடத்திக் கொள்ளட்டும்!
அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை அறிவு வெளிச்சப் பாதைக்கு அழைத்து வருவதையும் ஆண்டாண்டுக் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதிக்காக அயராது பாடுபடுவதை யும், பெண்ணடிமைத் தனத்தின் முதுகெலும்பை முறித்து ஆணுக்கு நிகர் பெண்கள் என்ற பாலியல் உரிமை களுக்காகக் குரல் கொடுப்பதையும், பிறவியில் பேதம் பேசும் வருணதர்மத்தையும், அதனைக் கட்டிக் காக்க உருவாக்கப்பட்ட கடவுள்கள், புராணங்கள், இதிகாசங் கள், சாஸ்திரங்களை எதிர்ப்பதையும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்குவதையும் உயிர் மூச்சாகக் கொண்டு, எந்தவித சுயநலச் சிறைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல், பதவிப் பக்கம் தலைவைத்துப் படுக்காமல், சொந்த வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு, ஊருக்காக உழைக்கும் கழகத்தையும், அதன் தன்னிகரற்ற தலைவரையும் சரியாக எடை போடாமல் எழுதவேண்டாம் - இந்தியா டுடேக்கள்!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...