Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Saturday, June 1, 2013

அம்மணக் கூத்தாடும் ஆ(ரிய)னந்த விகடன்!


- கி. தளபதிராஜ்
"தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்" என்பது போல் ஆனந்த விகடனுக்கு தலைக் கொழுப்பு ஏறிவிட்டதால் அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது. மானங்கெட்ட,சொரணையற்ற தமிழர் பலர் அதை ஆதரிப்பதும், அயோக்கியத்தனமான பணத்தாசை யால் அதை வாங்கி சூதாட நினைப் பதுமே ஆனந்த விகடனின் ஆண வத்துக்கு அஸ்திவாரமாக இருக்கிறது.
(குடிஅரசு -10.10.1937) வகுப்புவாரி இடஒதுக்கீடு கோரி திராவிடர்கழகம் நடத்திவந்த போராட்டங்களை எதிர்த்து அது பிரிவினை வாதம் என்றும் இனத் துவேஷம் என்றும் தொடர்ந்து எழுதிவந்த ஆனந்தவிகடனைக் கண்டித்து குடியரசில் வெளிவந்த கட்டுரை வரிகள்!    முக்காலும் உணர்ந்த முழுஞாயிறு தந்தை பெரியார் அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்னரே கணித்த ஆனந்த விகடன் மீதான மதிப்பீடு!.    ஆச்சாரியார் காலத்தில் துவக்கிய ஆரியக் கூத்தை அம்மையார் ஆட்சிக்காலத்திலும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது ஆனந்த விகடன்!.
1937ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி வெளிவந்த ஆனந்த விகடனில், ஒரு கட்டுரை!. தலைப்போ "வாழிய செந்தமிழ்!". கட்டுரையின் உள்ள டக்கம் என்ன தெரியுமோ? ஹிந்தியை மூன்றாம் பாரம்வரை கட்டாய பாடமாக வைக்க வேண்டும். அப்படி செய் தால் சமஸ்கிருதம் சுலப மாக வந்துவிடும்.  தமி ழைக் கற்றுக் கொடுக்கும் போது தமிழரின் நிலை, கொள்கை ஆகியவற்றை புகுத்தக் கூடாது. இது தான் விகடனின் கட் டுரை.   வாழிய செந்தமிழ் என தலைப்பிட்டு, ஹிந் திக்கு வாழைமரம் கட்டி வந்தனம் பாடியது!. சந்தடி சாக்கில் சமஸ் கிருதத்திற்கு சாமரம் வீசி வரவேற்பு பத்திரம் வாசித்தது!. தமிழினக் கலாச்சாரத்திற்கோ தடைபோட்டது!. ஆனந்த விகடனின் தமிழ்ப்பற்று இது தான்!.  அண்மையில் ஆனந்த விகடன் "பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்" எனும் சொல் அகரா தியை ஆயிரக்கணக்கான பக்கங் களை உள்ளடக்கிய மூன்று தொகு திகளாக வெளி யிட்டது. அதில் வெளிவந்த ஓரிரு வார்த்தைகளின் பொருளைப் பாருங்கள்!
அந்தணர்
இந்தியாவில் உள்ள நால்வர் ணங்களில் முதல் பிரிவைச்சேர்ந்தவர். வேதகாலத்தின் பிற்பகுதியிலிருந்தே புரோகிதர் சாதி இருந்து வந்துள்ளது. மற்ற பிரிவினர்களை விட இவர்கள் அதிகமான சடங்குத்தூய்மை உடையவர்கள் என நம்பப்பட்டது. எனவே இவர்கள் மட்டுமே மதச் சடங்குகள் செய்யத் தகுதியுடையவர் களாகவும் கருதப்பட்டனர். வேதகீதங்களின் தொகுப்பைப் பாதுகாக்கும் பொறுப்பும் இவர்கள் வசமே விடப்பட்டது. உயர்ந்த அந்தஸ்தும் கல்விப்பாரம்பரியமும், இருந்த காரணத்தால் இந்திய அறிவாராய்ச்சியில் இவர்கள் பல நூற்றாண்டுகளாக அதிகாரம் செலுத்தி வந்தனர். ஆன்மீகத்திலும், அறிவிலும் மேன்மையான இவர்கள் அரசியல் சக்திவாய்ந்த சத்திரிய குலத்தினர்க்கும் அறிவுரை வழங்கி வந்தனர். சட்டப் படியான அங்கீகாரம் இல்லை என்றாலும் இன்றும் இவர்களில் பலர் தங்களது மரபுச் சிறப் புரிமைகளைத் தக்க வைத்துக் கொண் டுள்ளனர். சிலவகையான தடை விலக்குகளைக் கடைபிடித்தல், சைவ உணவு உண்ணல், சில தொழில் களிலிருந்து விலகியிருத்தல் ஆகிய வற்றின் மூலம் ஆச்சாரத் தூய்மை களைக் காப்பாற்றி வருகின்றனர்.
ஆரியர்(கள்):
ஈரானிலும் வடக்கு இந்தியா விலும், குடியேறிய வரலாற்றுக் காலத்திற்கும் முந்தைய மக்கள். இவர் களுடைய ஆரிய மொழியி லிருந்துதான் தெற்கு ஆசியாவின் இந்தோ அய்ரோப்பிய மொழிகள் உருவாகின. ஆரிய இனம் பிற மக்கள் இனங்களைவிட உயர்ந்தது எனக்கருதப்பட்டது. இந்தக்கருத்தால் அடால்ப் ஹிட்லர் பீடிக்கப்பட்டார். இதன் அடிப்படையிலேயே யூதர்கள், நாடோடிகள்(ரோமா), ஆரியர் அல்லாதவர்கள் ஆகியோரை அழிக்க வகைசெய்த நாஸி கொள்கையை ஹிட்லர் உருவாக்கினார்.
மனு:
இந்தியப்புராணங்களின்படி உலகின் முதல் மனிதர். மனுஸ் மிருதியை ஆக்கியவர். முதல் யாகத்தை நடத்தியவர் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் அரசராகவும் அறியப்படுகிறார். இடைக்கால இந்தியாவை ஆட்சி செய்தவர்களில் பலரும் இவரைத்தான் முன்னோர் என உரிமை கொண்டாடுகிறார்கள்.பிரளயவெள்ளம் குறித்த கதையில் நோவா மற்றும் ஆதாம் ஆகிய இருவரின் இயல்பு களையும் ஒருசேரக்கொண்டவர். மீன் ஒன்றினால் பெருவெள்ளம் குறித்து எச்சரிக்கப்பட்டதால் ஒரு படகை உருவாக்கினார். இவரது படகு மலையின் உச்சியை அடைந்து நின்றது. வெள்ளம் வடிந்த பிறகு பாலும் வெண்ணெயும் கலந்த ஒரு கலவையை மனு ஊற்றினார். ஓராண்டுக்கு பிறகு தன்னை மனுவின் மகள் என்று கூறிகொண்டு ஒரு பெண் அந்த நீரிலிருந்து தோன்றி னாள். இவர்கள் இருவரும் இணைந்து பூமியில் மீண்டும் மனிதகுலம் வளர்வதற்கு காரணமா னார்கள். ஆனந்த விகடன் தகவல் களஞ்சியத்தின் யோக்கியதை இதுதான்!. பார்ப்பனப்பண்ணையம் கேட்பாரில்லை என்கிற போக்கில் தவறான தகவல்களை அள்ளித் தெளித்திருக்கிறது.
அந்தணர்  மற்ற பிரிவினர்களை விட அதிகமான சடங்குத்தூய்மை உடையவர்களாம். சில தொழில்களிலிருந்து விலகியி ருத்தல் மூலம் ஆச்சாரத்தூய்மை களைக் காப்பாற்றி வருகின்றனராம். மலம் அள்ளுவதும், நாற்று நடுவதும், கல்லுடைப்பதும் எமது இனத்திற்கே உரிய தொழிலா? இந்தத் தொழில்களிலிருந்து விலகியிருத்தல் மூலம் ஆச்சாரத்தூய்மைகளைத் தாங்கள் காப்பாற்றிக் கொள்வதாக கொழுப்பெடுத்து எழுதியிருக்கிறது. ஆரிய இனம் பிற மக்கள் இனங் களைவிட உயர்ந்தது எனக் கருதப்பட்டதாக தற்பெருமை பேசுகிறது விகடன்.
மனுவின் கதையோ ஆபாசத்தின் உச்சம்!. பாலும் வெண்ணெயும் கலந்த ஒரு கலவையை மனு ஊற்றினானாம். ஓராண்டுக்கு பிறகு தன்னை மனுவின் மகள் என்று கூறிகொண்டு ஒரு பெண் அந்த நீரிலிருந்து தோன்றினாளாம். இவர்கள் இருவரும் (அப்பனும் மகளும்) இணைந்து  பூமியில் மீண்டும் மனிதகுலம் வளர்வதற்கு காரணமானார்களாம். அட ஆபாசத்தின் அடித்தளமே உன் பெயர்தான் ஆரியமா? இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தகவல் களஞ்சியம் என்ற பெயரில் இப்படி அருவறுப்பான புனைக் கதைகளைக் கட்டவிழ்த்து விட வெட்கமாக இல்லையா உங்களுக்கு?
இப்படிப்பட்ட கூட்டத்திற்குத் தான்  ஈழத்தமிழர் மீது இப்போது திடீர் அக்கறை முளைத்திருக்கிறது!. விகடனில் வாரந்தோறும் எது வந்தாலும் வராவிட்டாலும் ஈழம் தொடர்பான கட்டுரை வராம லிருப்பதில்லை. கலைஞரை வசை பாடவே துவக்கப்பட்ட கட்டுரைக் களம் அது. டெசோ உட்பட கலைஞர் எதைச்செய்தாலும் அதை விமர்சிக்கவேண்டும் என்ற நோக் கிலேயே விஷம் கக்குகிறது. மீண்டும் கலைஞர் ஆட்சிபீடத்தில் அமர்ந்து விடக்கூடாது என்கிற ஆற்றா மைதான் ஆனந்த விகடன்களை இப்படி அம்மணக்கூத்தாட வைக் கிறது. சில எடுபிடிகளும் இனத் துரோகிகளும் வேண்டுமானால் அவர்களுக்கு வாளாகியிருக்கலாம். எந்த ஒரு மானமுள்ள தமிழனாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1937இல் குடியரசில் வெளிவந்த கட்டுரை வரிகளை மீண்டும் நினைவுகொள்வோம்! ஆனந்த விகடன் வகையறாக்களை புறக்கணிப்போம்!.

Saturday, December 29, 2012

தகுதி - திறமை...?


எதைக் கொடுத்தாலும் சூத் திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்று கூறுவதுதான் மனுதர்மத்தின் அடிப்படைத் தத்துவம் ஆகும்.
எனவே அதனை அடியொற்றி நடக் கின்ற பார்ப்பனர்கள் சூத்திர மக் களுக்கு கல்வியைக் கொடுக்காமல் பல்லாண்டு காலமாக அவர்களை ஏய்த்து, அடக்கி, ஒடுக்கி கோலோச்சி வந்தனர்.
இத்தகைய அநீதியைக் கண்ட பெரியார் சிங்கமெனச் சிலிர்த்தெழுந்து பாமர மக்களிடையே கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தை யும், அதன் இன்றியமையாத் தேவை யையும் எடுத்துக் கூறி பாமர மக்களை சிந்திக்கத் தூண்டினார்.
அதன் பயனாய் விதியை நினைத்து, வெந்ததைத் தின்று வீதியில் உறங்கிக் கிடந்த பாமர மக்கள் மெல்ல மெல்ல சிந்திக்கத் தொடங்கினர். இதன்மூலம், பாமர மக்கள் மத்தியில் எழுச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டு புதிய இரத்தம் பாய்ச்சியது போன்ற ஓர் உணர்வைப் பெற்றனர்.
உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், மற்ற நாட்டு மக்களைப் போன்று நம் நாட்டு மக்களும் கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்று இரவு - பகலாக சிந்தித்ததன் விளைவால்;
தந்தை பெரியார் காரணமாகவும், கல்வி வள்ளல் காமராசர் காரியமாக வும் இருந்து செயல்பட்டதன் பயனாய் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பள்ளிகள் திறந்து கல்வி நீரோடையை வெள்ளம் போல் பாய்ந்தோடச் செய் தனர்.
இவ்விரு தலைவர்களின் தன்னல மற்ற, தளராத உழைப்பின் பயனாய் பாமர மக்கள் கல்வியின் அவசியத்தை யும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க ஆர்வமுடன் முன்வந்தனர்.
ஆண்டாண்டு காலமாக இன எதிரி களால் வஞ்சிக்கப்பட்டு கல்வி - வேலை வாய்ப்பின்றி முடங்கி முடமாகிப் போன பாமர மககள், மேற்கண்ட அப்பழுக்கற்ற இரு பெரும் தலைவர்களின் பெரு முயற்சியால் கல்வியின் பயனை நுகரத் தொடங்கி அதன் மூலம் தற்போதுதான் வேலை வாய்ப்பினை எட்டியுள்ளனர்.
அதற்குள்ளாக, நாட்டின் பெரும் பான்மை மக்களாக உள்ள ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அங்கம் வகிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள், எப்படியாவது இதனை தடுத்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தகுதி - திறமை பற்றி கூப்பாடு போட ஆரம்பித்து விட்டனர்.
ஆம், அண்மையில் நாளேட்டினை நோக்கியபோது (19.11.2012) ஆசிரியர் பணிக்கு தகுதிதான் அடிப்படை! எனும் தலையங்கத்தை கண்ணுற்றேன்.
அத்தலையங்கத்தின்படி, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதித் தேர்வுதான் திறமையைத் தீர்மானிக்கும் அளவுகோல் என்றால்; பட்டப் படிப்பு முடித்து அதன் பிறகு ஆசிரியர் பணிக்காக பயிற்சி மேற் கொண்ட மாணவர்களுக்கு கல்வித்துறை சான்றிதழ் வழங்கியது எதற்காக?
தகுதித் தேர்வு தான் அடிப்படை எனில், ஆசிரியர் பணிக்கென்று படித்த மாணாக்கர்களுக்கும், சான்றிதழ் வழங்கிய கல்வித் துறைக்கும் தகுதி இல்லை என்று பொருளா? கல்வித் துறை, ஆசிரியர் பணிக் கென்று தனியாக பட்டயப் பயிற்சி அளித்து அதில் தேர்ச்சி பெற்றவர்களைத் தானே பதிவு மூப்பு மூலம் இத்தனை ஆண்டுகாலம் ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுத்தது.
பிறகு, தற்போது எங்கிருந்து குதித் தது மேலும் ஓர் தகுதித் தேர்வு? பட்டப் படிப்பும் அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பட்டயப் பயிற்சியும் (பி.எட்) முடித்து பத்து அல்லது பதினைந்து வருடங்கள் ஆன நிலையில் தகுதித் தேர்வு என்று ஒன்றை அவர்கள்மீது திணித்தால், அதில் அவர்களால் எப்படி தேர்ச்சி பெற இயலும்?
சமூக நீதிக் கொள்கையை நேரடியாக எதிர்க்க முடியாத இன எதிரிகள், மறைமுகமாக தகுதித் தேர்வு என்று ஒன்றை திணிப்பதன் மூலம் சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்புவதற்கான சதி வலையை சன்னமாகப் பின்னுகின்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
சமூகநீதி அடிப்படையில் ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படாமல், சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தில் இத்தகைய தகுதித் தேர்வினை நடத்து வது என்பது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நல னுக்கு எதிராக நடத்தப்படும் அநீதி அல்லாமல் வேறு என்ன? என்று சமூக நலனில் அக்கறை கொண்ட சமூகநீதிச் சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் ஆகியோர் கேள்வி எழுப்புகின்றனர்.
தகுதி - திறமை என்பது ஒரு மோசடிச் சொல் என்று கல்வி வள்ளல் காமராசர் கூறியதில், எவ்வளவு பொருள் பொதிந்த உண்மை அடங்கியிருக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
பகுத்தறிவுப் பகலவன் - தந்தை பெரியாரின் பெரு முயற்சியால் கிடைக்கப் பெற்ற இடஒதுக்கீட்டின் பயனை, நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள ஒடுக் கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்த வகையிலும் அனுபவித்து விடக் கூடாது என்கின்ற நயவஞ்சக நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இத்தகைய தகுதித் தேர்வினை அனைத்து தரப்பு மக்களும் கடுமை யாக எதிர்க்க முற்பட்டுள்ளனர்!
மேலும், இவை பெரும்பான்மை மக் களுக்கு எதிரானதும், விரோதமான தும் ஆகும் என்பதால் முற்போக்கு சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், பகுத்தறிவாளர்கள், சமூகநல ஆர்வலர் கள், ஆசிரியர் சங்கங்கள், மகளிர் நல அமைப்பினர் ஆகியோர் மத்தியில் தகுதித் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆசிரியர் பணிக்குத் தேர்ந்தெடுக் கப்படுபவர்கள் ஒழுக்கமுள்ளவர் களாக, அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர் களாக, மனிதநேயம் மிக்கவர்களாக, கட்டுப்பாடு உடையவராக இருந்தாலே ஆசிரியர் பணி என்பது அறப்பணி  யாக அமையும் என்பதே பெரும் பான்மை மக்களின் கருத்தாகவும், எண்ணமாகவும் உள்ளது.
ஆதலால், சமூகநீதிக்கு எதிராக வும், விரோதமாகவும் எந்த அரசு செயல்பட்டாலும் அதனை தமிழ் மண் ஏற்றுக் கொள்ளாது - அனுமதிக்காது என்பதை எடுத்துக்காட்டும் வகை யிலும்; மேலும் தகுதித் தேர்வால் ஏற்படுகின்ற இன்னல்களையும், அதில் அடங்கியுள்ள சூட்சுமத்தையும், அத னால் பெரும்பான்மை மக்களுக்கு எதி ராக இழைக்கப்படுகின்ற அநீதிகளை யும் விளக்கிடும் வகையில் இளைஞர் களும், மாணவர்களும் ஒன்றிணைநது நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள மக்களிடையே மாபெரும் பிரச்சாரப் பயணத்தை துவக்கிட ஆயத்தமாகி விட்டனர்!
ஆகவே, தமிழக அரசு சமூக நீதிக் கண்ணோட்டத்தோடு இவ்விடயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி, ஆசிரியர் பணிக்காக நடத்தப்படுகின்ற தகுதித் தேர்வினை ரத்து செய்து பெரும்  பான்மை மக்களாக உள்ள ஒடுக் கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகோல ஆவன செய்ய வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் கனிவான வேண்டுகோளாகும்.
- சீ. இலட்சுமிபதி,
தாம்பரம், சென்னை - 45

Tuesday, December 18, 2012

மோடி - ஊதிப் பெருக்கும் ஊடகங்கள்


நமது ஊடகங்களின் தலையாய பணி - தகுதி அற்றவரையும் மிகுதியாகக் காட்டுவதே எடுத்துக் காட்டு பிரதமர் கனவு காணும் மோடியை இந்தியா விலேயே மிக முன்னேற்றமடைந்த மாநிலமாக குஜராத்தை உயர்த்தியவர் போன்று ஒரு மாயையை தோற்றுவித்தது தான். நம் நாடு விடுதலை அடைந்த பின்பு  வட மாநிலங்கள் வளர்ச்சி கண்டன. அவற் றில் குஜராத் மாநிலமும் ஒன்று. இதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் ஊடகங்கள் ஏதோ மோடி ஆட்சிக்கு வந்த பின்புதான் குஜராத் உலகம் வியக்கும் அளவில் அங்கு பாலும் தேனும் கரை புரண்டு ஓடுவது போல மிகைப்படுத்துகின்றன.
ஒரு மாநிலத்தின் கட்டமைப்புகள் முன்னேற்றத் துக்கு வழி வகுக்கும். போக்குவரத்துக்கேற்ற  தெருக்கள், மின்சாரம், குடிநீர் கல்வி சுகாதாரம் போன்றவை அடிப்படைத் தேவைகள் . இவைகளில் வேறு மாநிலங்கள் சிறப்பாக செய்திருந்தாலும் குஜராத் மட்டுமே சாதனை புரிந்தது போல ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றன. அந்த மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கான அளவுகோலையும் நாம் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, அச்சமற்ற நிலை, சம நிலை, மாநில வருமானம் மற்றும் முன்னேற்றம் எல்லா தரப்பினரையும் சென்றடைகின்றனவா என்பதனையும் நாம் நோக்க வேண்டும். சில புள்ளி விவரங்களை சுருக்கமாகக் காண்போம்.
திரு. அதுல் சூட் நவம்பர் 30ஆம் நாள் இந்து நாளேட்டில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். அவர் துவக்கத்திலேயே சொல்வது, குஜராத் முன்னேற்றம் கவலை அளிப்பதாக உள்ளது என்று. ஒன்றல்ல பல விடயங்களில் அதி வேக முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்ற திட்டத்தில் அந்த மாநிலம் மக்களின் கல்வி சமூக சம நிலை, சுகாதாரம், நிரந்தர வாழ்வாதாரம், நீதி அமைதி போன்றவை புறந்தள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறுகிறார். பளபளக்கும் மேல் பூச்சுக்கு அடியில் புற்று நோய் உள்ளனவோ என்று தோன்றுகிறது. குஜராத் போன்றே நல்ல  முன்னேற்றத்தை காண்பிக்கும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் அரியானா. ஆனால் இந்த மாநிலங்களின் முன்னேற்றங்கள் ஊடகங்களுக்கு முன்னேற்றமாகத் தெரியவில்லை. ஊடகங்களின் ஒரே குறிக்கோள் மோடியை தூக்கிப் பிடிப்பதுதான். அதுல்சூட் கூறும் விளக்கங்கள்.
1. வேலை வாய்ப்பு: மோடியின் சாதனையின் முதல் வீழ்ச்சி வேலை வாய்ப்பில் காணப்படும் தேக்க நிலை. புதிய  வேலை வாய்ப்புகள் பெருக வில்லை. ஊதிய உயர்வும் நிகழவில்லை. தொழிலாளர்கள் நிலை பரிதாபமே.
2. கிராமங்களில் நிலவும் ஏழ்மை... பட்டணங்களில் காணப்படும் பளபளப்பு கிராமங்களில் காணும் அவலங்களை மறைக்கின்றன ஜீஷீஸ்மீக்ஷீஹ் ணீனீவீபீ ஜீக்ஷீஷீஜீமீக்ஷீவீஹ் என்கிறார்.
கிராமங்களில் நிலவும் ஏழ்மையைக் குறைப்பதில் குஜராத் மாநிலம் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைவிட பின் தங்கியே உள்ளது. 2009-_10 இறுதியில் குஜராத் கிராமங்களில் நிலவும்  ஏழ்மை அரியானா மற்றும் தமிழ்நாட்டைவிட அதிகம். தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களோடு ஒப்பிடுகையில் ஏழ்மையின் ஏற்றத் தாழ்வு குறைப்பு விகிதம் மிக மெத்தனமாக உள்ளது. இன்று குஜராத் கல்வியிலும், சுகாதாரத்திலும் பின் தங்கிய பணக்கார மாநிலம். கல்வி அறிவு பெற்றோரில் அது ஐந்தாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உயர் கல்வி பெறுவோரில் இருபத்தோராம் இடத்திலிருந்து இருபத்தாறாவது இடத்திற்கு தாவி உள்ளது.
சுகாதாரம் குழந்தை இறப்பு தடுப்பில் குஜராத் பத்தாவது இடத்தில் உள்ளது. ஊட்ட உணவு போதாமை 1998_-99இல் இருந்ததைவிட 2005-_2006 இல் அதிகரித்துள்ளது. நோயிலிருந்து தடைக் காப்பு அளிப்பதில் ஒன்பதாவது இடத்திலிருந்த குஜராத் பதினோராவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சமூக முன்னேற்றங்களுக்கான நிதி பகிர்வு குறைந்து கொண்டே வந்துள் ளது. வேறு துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதுதெளிவு.
பத்து ஆராய்ச்சியாளர்கள் இந்திய மாநிலங்களின் முன்னேற்றங்களைப் பற்றிய ஆய்வில் இது போன்ற குறியீடுகளை நாம் காண முடிகின்றது.
குஜராத்துடன் ஒப்பிடுகையில், மகாராஷ்டிரா அரியானா மற்றும் தமிழ்நாடு சிறந்த முன்னேற்றங்களை பல்துறைகளில் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக தமிழ்நாடு இந்த மாநிலங்களின் முன்னேற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் அகில இந்திய மட்டில் குஜராத் மட்டுமே தலை நிமிர்ந்து உள்ளது என்ற வறட்டு வாதத்தை நமது ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. இவைகளின் உள்நோக்கமே வேறுதான்.
மேனியின் வெளி பளபளப்பு புற்று நோயை மறைக்கின்றதோ!
- சி. நடராசன்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Sunday, December 16, 2012

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளதா?


ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா (13.12.12) அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். பட்டதாரி ஆசிரியர்கள் 10,621 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 8,722 பேர் உட்பட 19,343 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்க்கப்பட்டதில் சிலர் தகுதி இழந்ததாக கூறி 18,382 பேர் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு .பணி நியமன ஆணை வழங்கியுள்ளது.    இந்த பணிநியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப் பட்டுள்ளதா? தாழ்த்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள், தங்கள் இட ஒதுக்கீட்டிற்கு உரிய விகிதாச்சாரப்படி இடம்பெற்றிருக் கிறார்களா?
கணவரை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், மொழிப்போர் தியாகிகள், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டோர் போன்ற முன்னுரிமை  வரிசையில் எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்?    தேர்வு மதிப்பீட்டில் பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கு தகுதி மதிப்பெண் 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்தில் "சமுக நீதிஅடிப்படையில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கு தகுதி மதிப்பெண் குறைக்கப்படவில்லை"என்கிற வழக்கு சிலதினங்களுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டதில் நீதிபதி சந்துரு தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி தாக்கீது அனுப்பியுள்ள நிலையில் அவசர அவசரமாக இந்த பணிநியமன விழா நடைபெற்றுள்ளது.     தமிழகஅரசின் தகுதித்தேர்வு மோசடியில் சமூகநீதி அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிடுமா?
- கி. தளபதிராஜ், மயிலாடுதுறை

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...