Showing posts with label சிவராத்திரி. Show all posts
Showing posts with label சிவராத்திரி. Show all posts

Monday, March 7, 2016

‘சிவராத்திரி’ பற்றி அய்யா

மாசி மாதம் வந்தால் சிவராத்திரி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும் தானியவகைகளையும் பலகார வகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல் தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத்தை யும் வயிற்றுவலியையும் உண்டாக்கிக் கொள்வதோடு இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை யாராவது யோசித்துப் பார்க்கின்றார்களா? என்று கேட்கின்றோம்.
இப்படியே ஒவ்வொரு மாதமும் உற்சவமும், பண்டிகைகளும், விரதங்களும், சடங்குகளும் ஏற் பட்டு மொத்தத்தில் வருஷத்தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு, எவ்வளவு வியாதிகள் வரவு, எவ்வளவு உயிர்கள் போக்கு என்பவைகளை யார் கவனிக்கின்றார்கள்? இந்தப் பணம் எல்லாம் தேசிய பணமல்லவா? ஏழை தேசம், தரித்திர தேசம், அடிக்கடி பஞ்சம் வரும் தேசம், வேலையில்லாமல் தொழிலில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல் கும்பலாய் பட்டினி கிடந்து மடிவதுடன் பெண்டு பிள்ளை குழந்தைகளுடன் வெளிநாட்டிற்குக் கூலிக்காக கப்பலேறும் தேசம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நாம் எத் தனை நாட்களை, எத்தனை ரூபாய்களை எத்தனை ஊக்கங்களை இந்த பாழும் அர்த்தமற்ற பொய்யான ஒரு காசுக்கும் உதவாததான - நமக்கு இழிவையும் அவ மானத்தையும் தருவதான பண்டிகைக்கும் உற்சவத்திற்கும் பூஜைக்கும் சடங்குக் குமாக ஒவ்வொரு வரும் செலவு செய்கின்றோம் என்பதைக் கவனித்தால் இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்தி இல்லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.
எனவே, இப்படிக்கெல்லாம் சொல்வதைப்பார்த்தால் இந்த பண்டிகைகளையும் உற்சவம் முதலியவைகளையும் ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில்லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்கலாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன். மற்றபடியோ, என்றால் பெரும்பாலும் அவர் களைச் சுயநலக்காரர்களும், தந்திரக்காரர்களுமே ஆவார்கள் என்பேன்.
என் புத்திக்குட்பட்ட வரையில் இந்த பண்டிகை உற்சவம் முதலியவை எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர்களும் ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டுபிடித்து செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம். உலகத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமைக்கும், கொடுமைக்கும் புரோகிதர்களும், அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர்களாவார்கள். சாதாரணமாக உலக சரித்திரத்தில் கொடுமைக்காரர்களும் சூழ்ச்சிகாரர்களாய் இருந்த வர்களே புரோகிதர்கள் என்கின்ற உயர்ந்த ஜாதிக்காரர்களாகவும் கொள்ளைக்காரர்களும் மூர்க்கர்களுமாயிருந்தவர்களே அரசர்களாகவும் ஏற்பட்டு இருக் கிறார்கள். இவ்விருவரும் ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்த வகை கண்டுபிடிக்க வேண்டிய அவசியமுடையவர்கள்.
அந்தப்படி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ வேண்டுமானால் அந்த மக்களை அறிவினாலும் செல்வத்தினா லும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால் தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடை யவனா யிருப்பானானால் புரோகிதனுக்கு ஏமாற மாட்டான்.  செல்வமிருக்குமானால் அரசனுக்குப் பயப்பட மாட்டான். ஆகையால் அறிவும் செல்வமும் இல்லாமல் செய்வதற்கே கோயில் உற்சவம் பண்டிகை சடங்கு ஆகியதான செலவுக்கு ஏற்றவழிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும் மற்றும் மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமூகத்திற்கே பயன்படும் படியாகவும் மற்றும் மேற்கொண்டு  நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் கடன்காரர்களாக இருக்கவுமே முடியும். எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும் செல்வ முள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூஜை ஆகியவை ஒழிந்தாக வேண்டும்.
(ஈரோடு உண்மை நாடுவோர் சங்க விழாவில் சொற்பொழிவு  - ‘குடிஅரசு’ 20.10.1929)


.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...