Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, January 12, 2015

தருண் விஜய் தமிழ்ப் பற்று...

எச்சரிக்கை

http://www.unmaionline.com/new/104-unmaionline/unmai-2014/september/2280-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81.html

உத்தரகாண்ட்
தமிழ்ப்
பற்று...
தமிழ் நாட்டைக்
கைப்
பற்று!
அதற்கான
நோக்கம்
அவ்வளவுதான்
தலைவர்களே!
******
அவசரப் பட்டு
அவரை
அழைத்து
அவர்களுக்கான
தேர்தல்
பிரச்சாரத்திற்கு
ஏற்பாடு
செய்து...

இன்னும் ஒருமுறை
எங்கள்
தமிழர்களை
இளிச்சவாயர்களாக்கி
ஏமாற
விடாதீர்கள்!
***
வள்ளுவருக்குப்
போட்டிருந்த
நூலைக்
கழற்றவே
நூற்றாண்டுகள்
ஆயின!
காவியைப்
பூச
விட்டால்...
கழுவ
கனகாலம்
ஆகும்
தலைவர்களே!
***



ஜனவரி 16-31



Friday, December 19, 2014

பிபிசி தமிழ்ச் சேவை ஹிந்தி சேவையுடன் இணையும் நிலையை முறியடிப்போம்!

பிபிசி தமிழ்ச் சேவை ஹிந்தி சேவையுடன்
இணையும் நிலையை முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


லண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி தமிழ்ச் சேவையை, டில்லிக்கு மாற்றி ஹிந்தியுடன் இணைப்பது தமிழர்களுக்குச் செய்யும் கேடு - இப்பொழுது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி .வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1920-களில் இங்கிலாந்து, தன்னுடைய காலனி நாடு களுக்கான ஒரு பொது வானொலிச் சேவை உருவாக்கியது.  இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ரெத் என்பவரின் சிந்தனை யில் துவங்கிய இந்த வானொலிக்கு ஆரம்பத்தில் ஜான் ரெத் தலைவராக இருந்துவந்தார் 1927 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இது மூடப்பட வேண்டிய நிலையில் இருந்தபோது பிபிசி உலகப் பொது அமைப்பின் (தற்போதைய அய்.நா. போன்ற அமைப்புடன்)  பொது நிதியில் இயங்க ஆரம்பித்தது. (அதுவரை பிரிட்டன் நாடாளுமன்ற கட்டுப்பாட்டில் இருந்து வந்தது) பிபிசி என்ற பெயர் பிரபலமாகிவிட்டதால்   எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து அழைக்கப்பட்டது.

பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் என்னும் பொருள்படும்British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும்.  பிபிசி தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத் தள சேவைகளை வழங்குகிறது. இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.

28 மொழிகளில் ஒலிபரப்பு!

இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது. உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது.

தமிழோசை நிகழ்ச்சிகளை பிப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் நேரடி ஒலிபரப்பு செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளைப் பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பிப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினூ டான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில் தமிழ்ச் சேவை ஒலிபரப்பினை பிபிசி ஹிந்தி சேவையுடன் இணைந்த நிலையில் டில்லியில் இயங் கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிபிசி அறிவித்துள்ளது. 

பிபிசி பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தகவல் தருகையில், பெருகிவரும் நேயர்களுக்கு ஏற்ப பிபிசி தமிழ்ச் சேவை புதுடில்லிக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ்ச் சேவை இந்தியாவில் உள்ள தமிழ் நேயர்களை கவர்ந்துள்ளது. இந்தநிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கை நேயர்களைக் கருத்திற்கொண்டு இந்த மாற்றம் இடம்பெறுவதாகவும் பிபிசியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழோசை என்பது பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையாகும். இவ்வானொலி சேவையானது 1941 மே 3 ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது.

இவ்வானொலி ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் செய்திகளையும் வேறு பல நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது. இங்கு இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவ தோடு செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப் படுகிறது. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இச்சேவை வானலைகளில் ஒலிபரப்பப்படுவதோடு ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்தில் பரப்பப்படுகின்றன.

பிபிசி தமிழ் நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம்  தனது தேசியச் சேவையில் மறு ஒலிபரப்பு செய்கிறது.

இடமாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு

பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதி லுமிருந்து சுமார் 70 லட்சம் நேயர்கள் உள்ளனர்.  முக்கிய மாக பிபிசி தமிழோசை நிகழ்ச்சி உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர் தமிழர்களுக்குப் பொதுவான ஓர் தகவல் தளமாக இருந்து வருகிறது.
டில்லிக்கு மாற்றப்படும் நிலையில் இந்தி மொழியின் ஆதிக்கம் தமிழோசையிலும் மேலோங்கும். டில்லிக்கு மாற்றப்படும்போது பெருவாரியான இலங் கைத் தமிழர்களின் செய்தியைக் கொண்டு செல்வதில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்திய இலங்கை நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்தி களையே அதிகம் ஒலிபரப்பப்படும், அதே வேளையில் இந்தியத் தமிழர்களுக்கான பயனுள்ள எந்த ஒரு நிகழ்ச்சி களும் அதில் இடம்பெறாத சூழல் ஏற்படும். பிபிசி போன்ற பொது ஒலிபரப்பு கூட்டு நிறுவனங்கள் தலைமையை விட்டு தூரச்செல்லும்போது அங்கு அரசியல் நுழையும் வாய்ப்புள்ளது. மேலும் பிபிசி தமிழோசை டில்லிக்கு மாற்றப்படும்போது ஒரே நிர்வாகத்தின்கீழ் இது வருவதால் பிபிசி தமிழோசைக்கு என்று முக்கியத்துவம் தரப்படுவது நிறுத்தப்படும் அபாயம் உண்டு.

முக்கியமாக சில தமிழ் விரோத சக்திகள் காழ்ப்புணர்ச்சி யுடன் செயல்படும்போது எதிர்காலத்தில் பிபிசி தமிழோசை முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும்.   எடுத்துக் காட்டாக இலங்கை வானொலியின் சுதந்திரமான அமைப் பில் அரசியல் நுழைந்த பிறகு தமிழ் ஒலிபரப்பு முற்றிலுமாக மக்களின் ஆதரவை இழந்து இன்று பெயருக்கு இயங்கி வருவதுபோல் பிபிசி தமிழோசையின் எதிர்காலமும் அமைந்துவிடும்.  இதனால் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களுக்குப் பொதுவான ஒரு தகவல் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

தமிழக அரசின் கவனத்துக்கு....

இத்தகைய காரணங்களால் இலண்டனைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம்  - அதே முறையில் செயல்படுவது தொடரப்பட வேண்டும்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களும், அமைப்புகளும், உலகத் தமிழர்களும், அமைப்புகளும் சிறப்பாக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மிக முக்கியமான பிரச்சினையில் கருத்தைச் செலுத்துமாறு வலியுறுத்து கிறோம்.

ஏதோ ஒரு வகையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கின்றன. எல்லாவற்றையும் அரசியல் கண்கொண்டு பார்க்காமல் தமிழர்களுக்கான பொதுப் பிரச்சினையில் ஒத்த குரல் கிளம்புவது அவசியமாகும்.


கி.வீரமணி   
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை5.11.2014

Wednesday, December 10, 2014

எல்லோரும் திருக்குறளைப் படியுங்கள் - எனது ஆசை - - பெரியார் ஈ.வெ.ரா

இந்நாட்டு மக்களனைவர்க்கும் சிறப்பாக இந்த நாட்டுப் பழங்குடி மக் களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் குறள் ஒரு பெரிய செல்வ மாகும். நமது பெருமைக்கும் நெறிக்கும் (மதத்திற்கும்) நாகரிகத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல சங்கதிகளை நாம் காணலாம். இக்குறளின் பேரால் நம் பெருமையைத் திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது.

நமது சரித்திரத்திற்கும் நாகரிகத் திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும், பல காவியங்களிலிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியும். ஆயினும் அவை பெரும்பாலும் பண்டிதர்களுக் குத் தான் புரியுமாகையால், பயன் படுமாகையால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக்கு ஏற்ற ஆதாரமாய் அமைந்திருக்கிறது.

திருக்குறளின் பெருமையை 45 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எடுத்துக்காட்டியவர் காலஞ்சென்ற தோழர் பா.வே.மாணிக்க நாயகர் ஆவார். அவரும் நானும் அடிக்கடி வேடிக்கை யாகவும் விதாண்டாவாதமாகவும் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அந்தச் சமயங்களிலெல்லாம் அவர் திருக் குறள் கருத்துக்களைத் தான் மேற்கோளாக எடுத்துக்கூறி என்னை மடக்குவார்.

அவருடைய விளக்க உரைகளால் திருக்குறளில் அடங்கியிருக்கும் பல அற்புத அதிசயக் கருத்துக்களை என்னால் அறிய முடிந்தது. திருவள் ளுவர் நூல் ஒன்றே போதும் - இந் நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை யுண்டாக்க. குறள்களை மட்டுமே எடுத் துக்கொண்டு, அதிலுள்ள எல்லாத் தலைப்புகளின் கீழ் வருவனவற்றையும் இரண்டு மூன்று பிரிவுகளாக, அதாவது படித்த மாத்திரத்தில் பொருள் விளங்கு வனவற்றைக் கீழ் வகுப்புகளுக்கும், சற்றுக் கடினமான குறள்களை நடுத்தர வகுப்புக்கும், மிகுந்த புதை பொருள் கொண்டு கூட்டிப் பொருள் காண வேண்டியவற்றை மேல் வகுப்புக்கும் வைத்தால் பள்ளிகளில் மதப்படிப்போ, ஒழுக்கப்படிப்போ தனியாக வைக்க வேண்டிய அவசியமே இராது. ஒரு மாணவன் தன்னுடைய பரீட்சைக்குள் திருக்குறள் முழுமையையும் உணரும்படி செய்யப்பட்டால், அது எவ்வளவோ நன்மை. பி.ஏ.படித்தவனுடைய உலக ஞானத்திற்கு மேற்பட்ட அறிவு அனுபவத்துடன் படிப்பதாக அமையும்.

இராமாயணத்தில் நூறு பாட்டும், பெரிய புராணத்தில் இருநூறு பாட்டும், பாரதத்தில் நூறு பாட்டும், பாகவதத் தில் இருநூறு பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறளைப் படிப்பது எவ்வளவோ மேலாக இருக்கும். பொருளை வீணாக்கி, காலத்தை வீணாக்கி பி.ஏ.பட்டமும், எம்.ஏ., பட்டமும் பெறுவதைக் காட்டிலும் திருக்குறளை முற்றும் உணர்ந்து பட்டம் பெறுவது எவ்வளவோ மேலாக இருக்கும். பி.ஏ., படிப்பதாலும், எம்.ஏ., படிப்பதாலும் அனுபவ அறி வொன்றும் நாம் பெற்றுவிடுவதில்லை. உத்தியோகம் பெற ஒரு பகுதியாகத்தான் அதுவும் பார்ப்பனருடன் உத்தியோகத் திற்கு நம்மைப் போட்டி போட முடி யாமல் செய்யத்தான் பயன்படுகிறதே யொழிய, உத்தியோகத்திற்கு அந்தப் படிப்பு ஒன்றும் பயன்படுவதில்லை. ஆனால் திருக்குறளின் ஒவ்வொரு கருத் தும் ஒருவன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு துறையும் நன்றாக அதில் விளக்கப்பட்டிருக்கிறது.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்

ஒருவன் மற்றவனை இரந்து, பிச்சை யெடுத்துத்தான் பிழைக்க வேண்டு மென்கிற நிலை வந்தால் அந்நிலைக்குக் காரணமான கடவுள் ஒழிக்கப்பட வேண்டுமென்று கூறியிருக்கிறார்.
பாட்டாளி மக்களின் புரட்சியைத் தடுத்து அவர்களை வேறுபக்கம் திருப்பப் பித்தலாட்டக்கூப்பாடுகள் வேண்டா.

ஒரு தொழிலாளி தன் பட்டினிக்கு ஜகத்தைக் காரணமாக நினைப்பதில்லை. கடவுள் தான் அப்படிப் பாடுபட்டு அவனைப் பட்டினி கிடக்கும்படி உற்பத்தி செய்துவிட்டான் என்று நினைக்கிறான்.

அவனுக்கு, போடா, போ! கடவுளாவது வெங்காயமாவது! பாடுபட்டும் நாமெல்லாம் பட்டினி. பாடுபடாத அவனெல்லாம் வயிறு வீங்க உண்பது - இதுதான் கடவுள் நீதியா?

இப்படி ஒரு கடவுள் இருக்குமா? இருந்தால் அந்தக் கடவுள் நமக்கு வேண்டவே வேண் டாம் என்று கூறினால் கடவுள் ஒழிந்து விடும். அப்புறம் உலகப் பொருள் யாவருக்கும் சரி பங்கு என்ற உணர்ச்சி ஏற்படும். அதனால் அவன் உணர முடியும். தான் பட்டினியிருக்கத் தன் முட்டாள்தனமே காரணமென்று. இதைத்தான் கூறியிருக்கிறார் திருக் குறள் ஆசிரியர்.

நூறு ரூபாய்க்கும் இருநூறு ரூபாய்க்கும் பாடப்புத்தகங்கள் வாங்கிப் படித்து மடையர்கள் ஆவதைவிட, நாலணாவுக்குத் திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்று தான் நான் கூறுவேன். திருக்குறள் ஒன்றே போதும் உனக்கு அறிவு உண்டாக்க; ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுக்க, உலக ஞானம் ஏற்பட. அப் படிப்பட்ட குறளைத்தான் நாம் இது வரை அலட்சியப்படுத்தி வருகிறோம்.

ஒரு தாசில்தார், ஒரு மாஜிஸ்ட்ரேட், ஒரு நீதிபதி, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இவர்களுக்குக் கூடத் திருக்குறள் ஒன்றே போதும். தமது வேலையைச் சரியாகச் செய்ய. அவர்களுக்கு உத்தியோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பரீட்சை வைக்கும் போது கூட. திருக்குறளை நன்குணர்ந் தால் போதும் என்று அவர்களுக்கு உத்தியோகம் வழங்க வேண்டும். அவர்கள் உத்தியோகத்திற்கு அவர்கள் படிக்கும் பூகோள சாஸ்திரமோ, வான சாஸ்திரமோ, திரி கணிதமோ, சரித் திரமோ பயன்படுவதில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

அனைவரும் திருக்குறளைப் படித்து, அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழ வேண்டும் என்பது தான் எனது ஆசை.

- முல்லை பி.எல்.முத்தையா தொகுத்த திருக்குறளின் பெருமை என்ற நூலிலிருந்து வெளியீடு: முனைவர் ஆறு. அழகப்பன், தமிழ்ச்சுரங்கம்


Read more: http://viduthalai.in/home/viduthalai/rationalism/92417-2014-12-06-08-25-44.html#ixzz3LNaT6odi

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...