Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, January 5, 2015

பேய்கள் செய்த படுகொலைகளுக்கு அஞ்சலி செலுத்தின பிசாசுகள்



யாருக்காக நான் அழ.....?
பாமியான் புத்தர் சிலையை
பீரங்கியால் பிளந்தவர்கள்
பள்ளிக் குழந்தைகளை
துப்பாக்கியால் துளைத்தார்கள்
இரண்டுமே இஸ்லாத்தின்
புனிதப் போரென்று
பெருமையும் தான் பட்டார்கள்.
பக்கத்து நாட்டினிலோ
பாபர் மசூதி இடித்து
பகை நஞ்சை விதைத்தவர்கள்
கொழுக்கட்டைப் பிள்ளையாரை
கொலைக் கருவி ஆக்கியவர்கள்
பெஷாவர் பிள்ளைகளுக்கு
அவசர அவசரமாய்
அஞ்சலி என்று சொன்னார்கள்
இந்தியாவை இடித்து
இந்துராஷ்டிரம் அமைப்பவர்கள்

அண்டை நாட்டின்
அல்லாவின் கொலைகளுக்கு
அனுதாபம் சொரிந்தார்கள்
பேய்கள் செய்த படுகொலைகளுக்கு
அஞ்சலி செலுத்தின பிசாசுகள்
சந்தடி சாக்கில்
வந்ததொரு அறிவிப்பு
இனி பகவத் கீதையே
இந்தியாவின் புனித நூலென்னும்
புத்தம் புது கண்டுபிடிப்பு
தயங்காமல் கொல்
தமையனையும் கொல்
எனும் உபதேசம் புனிதமென்றால்
எதற்கிந்த அஞ்சலிகள்?
ஏனிந்த நீலிக் கண்ணீர்?
எங்கிருந்து வந்தது உம் அனுதாபம்?
கீதை உபதேசித்ததை
குரான் செய்து முடித்திருக்கிறது?
பாராட்ட வேண்டாமா
எதற்காக கண்ணீர்?
கிறிஸ்துமஸ் விடுமுறையில்
குதூகலிக்கும்
குழந்தைகளை
கொண்டாட்டத்தை நிறுத்து
எம்அரசின் புகழ்பாடி
கட்டுரைகள் எழுதுஎன
கட்டளை இட்டவர்கள்
கொடுங்கோன்மை செய்பவர்கள்
குழந்தைகள் கொலைக்காக
சிந்துவது கண்ணீரா?
அனுஷ்டிப்பது அஞ்சலியா?
காட்டுவது அனுதாபமா?
அரசியல்! அரசியல்!!
எல்லாம் அரசியல்!!!
குழந்தைகள் கொலைகூட
கேவலமானது அரசியலால்.
பேய்கள் அரசாண்டால்
பிணந்தின்னும் சாத்திரங்கள்
என்றதுவும் இதைத் தானோ?
குரானின் ஜிகாத்தும்,
கண்ணனின் கீதையும்
ஏசுவின் பைபிளும்,
சீக்கியம்
இன்னுமுள்ள
ஏராள மதங்களும்
அவற்றால் ஆன பெரிய
புனித நூல்களும்
கொல், கொல், கொல்லென்றும்
கொல்வது மதக் கடமையென்றும்
எதிரியை மட்டுமல்ல
அவர் வீட்டுக் குழவியையும்
விட்டுவிடாமல் கொல்லென்றும்
உபதேசித்தும்
உருவேற்றியும்
சொல்லியும் செய்தும்
காட்டிய பின்னும்
இவையெல்லாம்
புனிதமென்றும்
போற்றத்தக்க
நூல்களென்றும்
மனிதனை மேம்படுத்தும்
தேவ வாக்கென்றும்
எதைக் கொண்டு
என் பிள்ளைக்கு
நான் சொல்ல?
துள்ளித் திரியும்
பிள்ளைகளைவிட
புனிதம் என்று
ஒன்றுண்டா
இந்த பூமியிலே?

அந்த புனிதங்களை
சுட்டுப் பொசுக்கிய,
பிணங்களாக்கிய
புல்லர்களை
பிள்ளைக் கறி சமைத்த மாபாதகரை
கண்டிக்க வார்த்தையுண்டா?
தண்டிக்கத்தான் வழியுண்டா?
கொலையை தடுக்காதமதமும்
குழந்தையை காக்காத கடவுளும்
மழலைக்கு மயங்காத மனிதனும்
இருந்தென்ன? இறந்தென்ன?
இதில்யாருக்காக நான் அழ?
குழவியைக் கொன்ற
மதத்தின் மரணத்துக்கா?
காக்க மறுத்த
கடவுளின் சாவுக்கா?
மழலையைக் கொன்ற
மனிதமிருகத்தின் மறைவுக்கா?
இல்லை இந்த மூன்றின்
கூட்டுக் கொலை வெறியால்
துள்ளத் துடிக்க
கொடூரமாய் மரணித்த
மழலைகளின் மறைவுக்கா?
காணாமல் போன அவர்தம்
கள்ளமில்லாச் சிரிப்புக்கா?

(முக நூலில் இருந்து: எல்.ஆர்.ஜெகதீசன்)

Wednesday, September 12, 2012

கிரிக்கெட் சவக்குழி


புதியவன்
கூண்டுக்குள் முழிக்கும்
சிறுத்தைப் போல
அழகானது கிரிக்கெட்
எங்கள் உழைப்பிற்குள் மட்டும்
பந்து வீசுபவர்களைவிட
திறமையாக வீசினோம்
கரையில் குவிந்தது
கடல்மீன் கூட்டம்
சதம் அடிப்பவர்களைவிட
திறமையாக அடித்தோம்
வண்ண ஆடைகளைக் கட்டிக்கொண்டு
உலகம் வெட்கப்பட்டது
பந்தை விழுந்து பிடிப்பவர்களைவிட
திறமையாகப் பிடித்தோம்
செங்கல் கூட்டமும்
தட்டு சிமெண்ட்டும்
கட்டடங்களாக மின்னின
உங்கள் கிரிக்கெட் ரவுடி
மக்கள் மூளைக்குள்
கஞ்சா கசக்குகிறது
எங்கள் பையிலிருந்து
லட்சங்களையும் கோடிகளையும்
திருடுகிறது
எங்கள் தலையில்
சந்து பொந்து சண்டைகளை
வாந்தி எடுக்கிறது
எங்கள் வாழ்விற்காக
ஏமாற்றங்களைத் தவிற
ஏதேனும் சாதித்ததா! உழைக்கும் மலர்களுக்கு வண்ணமாகுமா?
கற்பனை மனங்களுக்கு காவியமாகுமா?
மண்ணின் வியர்வைக்கு பசுமையாகுமா?
உள்ளன்போடு ஒரே ஒரு முத்தமிடுமா?...
விளையாட்டு எங்களுக்கு விருந்தல்ல
விருந்தும்! மருந்தும்!
உங்கள் வெளுத்துப்போன அழகில்
புளுத்துப் போனது எங்கள் மூளை!
உள்ளே நிரம்புகிறது
உண்மைப் பேரொளி
அணையை உடைத்து
வெள்ளம் போல வெளிவரும்!
நேரம் நெருங்கிவிட்டது
விளம்பரக் குப்பைகளே
மூலதனப் பொறுக்கிகளே
உங்கள் சவக்குழிகளை
தயார் செய்யுங்கள்.
- புதியவன்

Thursday, January 19, 2012

வெறிச்சோடினாய் திடலே!


திடலே, திடலே,
பெரியார் திடலே!
வெறிச்சோடிப்
போனாயே, போனாயே!
மூன்று நாள் எனும்
முற்றத்தில்
ஆன்ற தமிழ்க்கலை
அத்தனையும்
ஆடிப்பாடக் கண்டு
ஆழ்ந்து கிடந்தோமே!
தமிழ்ப் பண்பாட்டுத்
தாயின் மடியில்
தாலாட்டுப் பால்
குடித்து மகிழ்ந்தோமே!
கண்ணை மூடிக்
கண்ணைத் திறந்தபோது
காணாது போனதே
காட்சி மலரெல்லாம்!
எதையோ இழந்ததுபோல்
ஏங்கித் தவிக்கின்றோமே!
அடடே, பெரியார்
பிஞ்சு முதல்
அடலேறு அடங்க
அத்தனைப் பேரும்
குடும்பம் குடும்பமாகக்
குலைதள்ளிக் கிடந்தோமே!
கொத்திச் சென்றது யார்?
கூறாய் விடுதலையே!
என்ன ஆட்ட பாட்டம்
இருபால் மக்களும்
தமிழ் என்றால் இனிமை
தாண்டவத்தைப் பார்த்தோம்!
நுழைவு வாயிலே
நரைத்த கிராம வீடு
கொஞ்சு முகத்தோடு
குடமளவு பால் தேக்கி
பார்த்த பசுவும்
பால்மறவாக் கன்றும்
தாயுள்ளத்தோடு
தலையாட்டி
ம்மா என்று கூவி
அழைத்த வரவேற்பு
அடடே, ஆயிரம்
ஆயிரம் பொன்போலும்!
சர்க்கரைப் பொங்கல்
தொன்னையோடு
அக்கறையோடு அனைவரையும்
அன்பு முகம் காட்டி
அழைத்த உழவன்
உழத்தியர் இருவர்!
அய்யா சிலையங்கே
ஆரம் தரித்து!
அதன் தொடர்ச்சியைக்
கேளுங்கள், கேளுங்கள்!
தமிழ்ப் புத்தாண்டு
தை முதலென்று
தரணிக்குச் சொன்ன
தமிழறிஞர்களின்
படமும், குறிப்பும்
பாயிரம் பாடிற்று!
காலந்தோறும் தமிழ்
எழுத்து வடிவக்
கோலம் காட்டும்
குறிப்புச் சுவடி!
உறி அடி
போட்டி ஒரு பக்கம்
சைக்கிள் வீரரின்
சாகசம் மற்றோர் பகுதியில்!
எதைப் பார்ப்பது
எதை விடுவது என்று
தடுமாற்றம்
எம் மக்களிடத்தில்
விருது நகர்
வீச்சுப் பரோட்டா
நெய் மணக்கும்
நெல்லை அல்வா
மணப்பாறை
முறுக்கோடு
கோவில்பட்டி சேவு
மட்டுமா?
தலைப்பாக்கட்டி
பிரியாணி
திண்டுக்கல்லின்
திகட்டா மலைப்பழம்!
படிக்கும் போதே
ஊறுகிறதா எச்சில்?
நேரில் பார்த்த
எங்களுக்கு எப்படியிருக்கும்?
அந்த வெட்கக்கேட்டை
சொல்ல வேண்டுமா?
நிகழ்ச்சி முடிந்து
சாப்பிடலாம் என்று
நாக்கைத் தீட்டி வைத்தோம்
நாசமாய்ப் போக!
எல்லாம் தீர்ந்தது
என்று அறிவிப்பு!
மூன்று நாளும்
இதே கூத்து!
விழித்துக் கொண்ட
சிலரோ,
பார்சல் கட்டினார்
முன்னெச்சரிக்கையாய்!
பண்டைத் தமிழரின்
இசைக் கருவி அரங்கம்
மூலிகைச் செடிகளின்
முத்திரை வரிசை
கரகாட்டம்!
தப்பாட்டம்!
மயிலாட்டம்!
ஒயிலாட்டம்!
பறையாட்டம்!
நையாண்டி
மேளமென்று
மேளாவே
நடந்தது
கருங்குழி கணேஷ்
குழு பலே, பலே!
மேலும் உண்டு
சிலம்பாட்டம்
சடுகுடுவென்று
சேர்ந்து கொண்டது
நிகழ்ச்சிப் பட்டியலில்!
பொய்க்கால் குதிரை
போடுபோ டென்று!
இந்த அரிய கலைகள்முன்
ஆரியக் களை என் செயும்?
பொய்க்கால் குதிரை
ஆடும்
பார்ப்பானைக்
பார்த்ததுண்டா?
கரகாட்டத்தின்
கலைநுட்பத்தில்
கைதேர்ந்த எங்கள்
தமிழச்சிக்கு ஈடு யார்?
கலைவாணரின்
கற்கண்டு இசை
பன்னீர் செல்வத்தின்
பகுத்தறிவுப் பாடல்கள்
தஞ்சை செல்விக்
குழுவினர்தம்
நாட்டுப்புற இசையா
நடன நட்டுவனாரா?
பாடினார்கள் அவர்கள்
பார்வையாளரோ ஆடினார்கள்
ஆட்டம் நிற்கவில்லை
ஆடிக்கொண்டே இருந்தார்கள்
இப்பொழுது நினைத்தாலும்
இப்படியும் அப்படியுமாக
எங்கள் கால்கள்
ஆடிக்கொண்டுதானிருக்கின்றன
இந்தக் கலைகள்முன்
எந்தக் களைகள் எடுபடும்?
என்றாலும்,
என்ன சொல்லுகின்றன
இந்த இழிந்ததுகள்?
இவை கீழ்ஜாதி
கலைகளாம்!
கலையில்கூட
கீழ்ஜாதி, மேல் ஜாதியா?
கிழிந்துவிடும் கன்னம்
கிளர்ந்தெழுவர் தமிழர்!
எச்சரித்தார்
எங்கள் இனத் தலைவர்!
மூன்று நாள் முற்றத்திலும்
முத்தான நிகழ்வு
பெரியார் விருதுகள்
சாதனையாளர் விருதுகள்
இமயமாய் உயர்ந்த
எங்கள் தமிழர்க்கு!
தோளில் தூக்கி வைத்து
ஆடுவோம்!
தகுதி திறமை பேசும்
தறுதலைகளே
இதோ எங்கள்
இமய தமிழர்கள்
என்று செவுளில்
அறைந்த காட்சி அது!
பூரிப்புடன் புகழ்மாலை
சூட்டினார் தமிழர் தலைவர்
பெரியாரால் வாழ்கிறோம்!
பேச்சுப் போட்டி!
மூன்று பிரிவுகள்-
மூன்று முதல் பரிசுகள்
ஒவ்வொன்றுக்கும்
ஒரு லட்சம் ரூபாய் முதல் பரிசு
இரண்டாம் பரிசு
அய்ம்பதாயிரம் ரூபாய்
பரிசு பெற்றவர்கள்
பேசினார்கள்
பேச்சா அது?
பேரிகை முழக்கம்!
கேட்டோர் வியந்தனர்
கைதட்டல் பேரிடி-
கட்டடத்தை அசைத்தது
கண்களில் ஆனந்தம்
கன்னித்தமிழ் உரையின் கர்ச்சனையால்!
பெரியார் மறையவில்லை
பெரியார் திடல்
மறையவிடாது
காப்பாற்றும்
மன்பதை உணர்ந்தது
தமிழ் ஆண்டைச்
சிதைத்து விட்டோம்
சித்திரைக்குத்
தலைப்பாகை
கட்டி விட்டோமென்று
ஆர்ப்பரிக்கும் ஆரியமே!
அது நடக்காது
அரிமாப் படை இதோ!
அரிமாப் பெரியாரின்
அடிச்சுவடுகள்
சிங்கமாய் எழும்
பண்பாட்டுப் படையெடுப்பை
எதிர்கொள்ளும்!
உறியடித்துச்
சொல்லுகிறோம்
முறியடிக்கும்
முற்றிலுமாய்
என்னும் எக்காளமே
இந்தத் திருவிழா!
இனப் பெருவிழா!

- கவிஞர் கலி.பூங்குன்றன் -










பொய்க்கால் குதிரை ஆட்டம்










தப்பாட்டத்தில் சாகசம்
செல்வி அய்யப்பன் குழுவினரின் இசை நிகழ்ச்சி


Saturday, December 24, 2011

குலவெறியைத் தூண்டும் குருபூசை


தீண்டாமை அண்டாமை தினவெடுத்துத் திரிந்த
நாட்டில் குலக் கொடுமைக் கெதிராய்
மண்டும் அறியாமை மாய்த்து மானுடம் தழைக்கப் பாடுக ளாற்றிய
தொண்டில் தோய்ந்த தூயநல் தலைவர்க்குப்
பிறந்தநாள் நினைவுநாள் எடுக்கின்றோம்
தொண்டறம் தொடர அவர்தம் தொண்டினை
நினைவு கூர்கிறோம் நன்றியுடன்!

தந்தை பெரியார் தமிழ்க்கடல் மறைமலையார்
அயோத்திதாச பண்டிதர் திரு.வி.க.
சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர்
ஈகப்பெருந் தலைவர் வ.உ.சி.
பொதுவாழ்வில் புடம்போட்ட புகழ்பெரும் சீயங்கள்
தன்னலங் கருதாத் தங்கங்கள்
பொதுமை நோக்கும் புதுமைப் போக்கும்
கொண்ட தன்மானத் தலைவர்கள்!

தமிழ்ப்பண் பாட்டிற் கெதிராய் தேசியம்
தெய்விக மதஞ்சார் புலம்பல்
தமிழனைத் தாழ்த்தி தலைகுனிய வைக்கும்
ஆதிக்கக் குலத்தாரின் அத்துமீறல்
ஆரியத்தின் அடிவருடி அடியாள் வேலையில்
பார்ப்பனியப் பாது காவலராய்
குருபூசை என்னும் பேரால் தமிழகத்தில்
குலவெறியைத் தூண்டும் கொடுமை!

வீர மரபினில் உதித்ததாய் வீரார்ப்புப்
பேசிடும் இவர்கள் பள்ளுப்
பறையிடம் காட்டுவர் வீரத்தை பார்ப்பனிய
மேலாண்மைக்குப் பணிந்து நிற்பர்
புராண இதிகாசப் புனைவுகளாம் தேவர்
தேவேந்திரர் என்பதில் இழிவே
சரியான புரிதலின்றி சகுனிகள் வகுத்த
சனாதனத்தைக் கட்டி யழுவதா?

பரமக் குடியில் பதைக்கப் பதைக்க
பட்டப் பகல் பச்சைப் படுகொலை
அரசின் ஒருசார்பு நிலையால் கலவரம்
காவல் துறையினரின் வெறியாட்டம்
ஆதிக்கக் குலத்தாரை அனுசரித்தே அன்றும்
இன்றும் அரசியல் கட்சிகள்
பாதிக்கப் பட்டோர் வழக்கம் போல் ஊருக்கு
இளைத்தவர் தாழ்த்தப் பட்டோரே!
- இனியன், திருச்சி 13.

Thursday, December 1, 2011

ஊதியம் பெறாத ஊழியனே; வாழ்க! வாழ்க!!


இவரன்றோ
தமிழர் தலைவர்
வேறு
எவருண்டு
சொல்வாய்; தமிழா!
பத்து
அகவையிலிருந்தே
இவர்
ஆற்றுகிற
ஒரே பணி
எது சொல்; தமிழா?
தலைவர்
வீரமணி செய்கின்ற பணியெல்லாம்
பெரியார் பணியெனப்
பகைவனும்
சொல்வானே; தமிழா!
ஆசை, ஆசை
அதிகம்
ஒரு  நூறாண்டு
வீரமணி
வாழ வேண்டும்; ஆசை!
பொன்விழா
கண்டவருக்கு
மீண்டுமொரு பவளவிழா
புரிகிறதா தமிழா
உனக்கா புரியாததா...?
அறுபத்து
ஒன்பதாண்டு
பொது வாழ்வில்
ஆசிரியராய்ப்
பணியாற்றும்,
50 ஆண்டு
பணிநிறைவு பவள விழா

ஒரு நினைவூட்டல்
விடுதலையை
நிறுத்திட
எண்ணிய பெரியாருக்கு
நினைவில்
தோன்றியவர் வீரமணி!
இது இவரால் முடியும்
இவரால்
முடியாதது
எவராலும், முடியாது
ஆம்
அய்யா
ஒரு தொலை நோக்காளர், அல்லவா!
தொழிலில்
பிரபலம்
நல்ல வருமானம்
வருகிற காலம்
வீரமணியே வருக விடுதலை
ஆசிரியராக
பொறுப்பேற்க வருவீர்
வழங்குகிறேன்; ஊதியம்
ஊதியம்
வாங்கியா
விடுதலையில்
ஊழியம் செய்வது?
தலைவருக்குக்
குழப்பம்
அம்மா
மோகனாவோடு
ஒரு கலந்தாய்வு
இன்றுவரை
ஊதியம்
பெறாத, ஊழியன்
50
ஆண்டு
ஆசிரியர் பணி
அண்ணாவுக்கு
அழுத்தமா....?
அவசரமா.....?
அண்ணா நீண்ட
காலம்
வாழ்ந்திருந்தால்
கூறியிருப்பார்
தமிழருக்கு
இதயக்கனி; வீரமணியென்றே!
வீரமணியின்
விடுதலை ஆசிரியர் பணி
கின்னஸிலும்
இடம் பெறலாம்
பத்திலிருந்து
பகுத்தறிவைப்
பரப்புகிற
அறிவி, விருந்து
நோயாளித்
தமிழனுக்கு
உயிர் காக்கும், மாமருந்து
ஆகவே தமிழர்
தலைவரின்
பிறந்தநாள் சூளுரை
தோழா நீ
ஏற்கவேண்டும் ஏற்புரை
50 ஆயிரத்துக்குப் பதிலாக
79
ஆயிரம் சந்தாக்கள்
வழங்கினால் உனக்குச்
சரித்திரம், வழங்கிடும்; பாராட்டுரை!
நாட்கள்
குறைவு மிகக்குறைவு
தமிழா
நீ
கடைசி நேரக் கதாநாயகன்
புறப்படு
தமிழா புறப்படு
இப்போதே
இன்றே நீ புறப்படு
வீடுதோறும்
சென்று வா...!
வீதியெங்கும்
விடுதலைக்குச் சந்தா கேள்
உற்றார் உறவினர்
நண்பர்கள்
யாரையும், விட்டுவிடாதே!
திருமணமா...?
காதுகுத்தா....?
கருமாதியா...?
கணக்கைத் திற!
விடுதலைக்கு
மொய் பெய்து
சந்தாக்களைக் குவித்திடு
தமிழா
நீ
செயல்படும் வேகத்தால்
அக்ரகார ஆட்சிக்கு
ஏற்படும், மூக்கறுப்பு!
இனி
பகைவர்
குலை நடுங்கும்
தமிழா
உன்
மூச்சே, விடுதலை
இருட்டுத்
தமிழனின்
இல்லத்தில்
விடுதலை, விளங்கட்டும்.
முயன்றுபார், தமிழா
நீ முறையாக
முயற்சித்தால்
ஒரு இலட்சத்தைத்
தாண்டும், விடுதலை சந்தா!
நீ
இருக்காதே இனி சும்மா
தொண்டறம் மாறாத
தலைவருக்குப்
பிறந்தநாள் காணிக்கை
இதுதான்; தமிழா!
புறப்படு, தமிழா!
புறப்படு...!

வழக்குரைஞர் கி.மகேந்திரன்,
தலைவர்,
மாநிலச் சட்டத்துறை, திராவிடர் கழகம்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...