Showing posts with label இந்து மதம். Show all posts
Showing posts with label இந்து மதம். Show all posts

Wednesday, February 4, 2015

யார் இந்த “மண்ணுருண்டை மாளவியா?


இந்திய அரசின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருது வழமையாக குடியரசு நாளான ஜனவரி 26இல்தான் - முதல் நாள் இரவு அறிவிப்பார்கள்.

ஆனால் இம்முறை - பிரதமர் மோடி அரசால், மாற்றப்பட்டு, வாஜ்பாயின் 90ஆவது பிறந்த நாளில் அவருக்கு வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.

(அவர் நீண்ட காலம் உடல் நலக் குறைவுடன் உள்ளதாக செய்திகள் வரும் நிலையில் அவர் உடல் நலம்தேற _ மனிதநேய அடிப்படையில் - வாழ்த்துகிறோம் - அவருக்கு வழங்கியது  எந்த அளவுக்குச் சரி என்பதை ஒருபுறம் நாம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறோம்).

அவருடன் இணைந்து மற்றொருவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பண்டிட் மதன்மோகன் மாளவியா; இவர் உத்தரப்பிரதேச காசிப் பகுதியைச் சார்ந்த உயர்ஜாதி _ பார்ப்பனர் (வாஜ்பேயும் உயர்ஜாதி பார்ப்பனர்தான் _- வாஜ்பேயம் என்ற யாகத்தை நடத்த உரிமை பெற்ற உயர் ஜாதியின் உயர் பரிஷத் இந்து சனாதன மதப்படி).

இன்றைய தலைமுறையினரில் பலருக்கு பண்டித மதன் மோகன் மாளவியா யார் என்றே தெரிந்திருக்காது. தெரிய வாய்ப்பில்லை.

இவரது 152ஆவது பிறந்த நாளையொட்டி இவருக்கு மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசால் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேரன் கூறுகிறார்!
19ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒருவருக்கு 21ஆம் நூற்றாண்டில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது!

இவர் ஹிந்து மஹாசபா என்ற சனாதன மதத்தைப் பரப்ப, பாதுகாக்கவே ஒரு அமைப்பை 1915இல் நிறுவியவர்.

RSS என்ற அமைப்புக்கு முன்னோடி இந்த ஹிந்து மகாசபை _- அதன் பெயர் பச்சையாக, வெளிப்படையாகத் தெரிவதை மறைத்து, ஏதோ சேவைக்காகவே தோற்றுவிக்கப்பட்ட தேசிய அமைப்பு என்ற ஒரு உருமாற்றத்தை புனே சித்பவன் -பிரிவு பார்ப்பனர் டாக்டர் ஹெட்கேவாரால், ஹிந்து மஹாசபை தோற்றுவிக்கப்-பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு _ 1925இல் ஆர்.எஸ்.எஸ். உண்டாக்கப்பட்டது. அதே நோக்கத்தோடு!

பண்டித மதன்மோகன் மாளவியா என்ற ஹிந்து சனாதனி _- கீழ்க்கண்ட அமைப்பு-களுடன் அதிக தொடர்பு கொண்டவர்.
அ) பிரக்ய ஹிந்து சமாஜ்.

ஆ) பாரத் தர்ம மகாமண்டல்.

இ) சனாதன தர்ம மஹாசபா போன்ற மத அமைப்புகளுடன் இணைந்து, வேத வைதிக சனாதனத்தைப் புகுத்துவதை தமது வாழ்நாள் பணியாகச் செய்தவர்.
இவரது சனாதன உணர்வு எவ்வளவு தீவிரம் என்றால் இவர் லண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் (1930) கலந்து கொள்ளச் சென்ற போது, ஓர் சனாதன ஹிந்து - கடல் கடக்கக் கூடாது என்ற வேத அய்தீகத்திற்கு மாற்று கண்டுபிடித்து (!) - ஒரு பிடிமண்ணை எடுத்து உருண்டையாக்கி, அதை எடுத்துக் கொண்டே சென்று வெளிநாட்டில் தங்கினால், சொந்த மண்ணிலேயே இருப்பதாக அர்த்தம் என்று வியாக்கியானம்  கூறிக் கொண்டு, கப்பலில் மண் உருண்டையுடன் சென்றவர். எனவே இவரை அக்காலத்தில் மேடைகளில் பேசும்போது மண்ணுருண்டை மாளவியா என்று அழைப்பது வழக்கம்.

(பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போது மாளவியாவைப் பின்பற்றுவதில்லை!)
இந்நாட்டின் பாரத ரத்னமாகிய (?) இவரின் மிகப் பெரிய சாதனை _- காசி ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவியது.

பல்கலைக்கழகம் நிறுவியது எல்லோருக்கும் கல்வி தர என்றால், அதற்கு ஏன் ஹிந்து பல்கலைக்கழகம் என்று பெயர் இட வேண்டும்? இதன் விளைவாக அதே உ.பி.யில் அலிகார் என்ற இடத்தில் இஸ்லாமியர்களுக்காகப்  பல்கலைக்கழகம் ஒன்றும் ஏற்பட்டது!

நம் மக்களின் ஒருமைப்பாடு பட்டபாடு இது! கல்விகூட மதக் கண்ணோட்டத்துடன் என்பதே இந்த நாட்டின் தனிச் சிறப்பு!

ஹிந்து மதத்தின் மிக முக்கிய உயிர் நாடியான சனாதன தர்மத்தின் முக்கியக் கூறான வர்ணாஸ்ரம தர்மம் அதாவது ஜாதி அமைப்பு ஒழியக் கூடாது; நிலைத்து நிற்க வேண்டும் என்று 1929 மே முதல் வாரத்தில் சென்னைக்கு வந்தும், அதன்பின் திருவிதாங்கூர், கொச்சி பகுதிகளிலும் சென்று தீவிரமான சனாதனக் கருத்துகளைப் பரப்பியவர்.

சென்னையில் 1929 மே முதல் வாரத்தில் வந்து பேசிய பண்டித மதன்மோகன் மாளவியா. ஜாதியை ஒரு போதும் ஒழிக்க முடியாது என்றார்!

1. ஜாதி தர்மம் என்பது ஹிந்து தர்மம் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையிலேயே கூறும் தர்மம்!

2. தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக்கம், இந்த வேண்டாத வேலையில் -_ ஜாதி ஒழிப்பில் ஈடுபடுகிறது; அதனை முளையிலேயே இங்குள்ளவர்கள் கிள்ளி எறிய வேண்டும்.
(இன்று சுயமரியாதை இயக்கம் உலகம் முழுவதும் பரவியுள்ள 89 ஆண்டு கால இயக்கம் என்பது கல் போன்ற உண்மை).

3. கோவில்களில் எல்லா  இடங்களிலும் நுழைய வேண்டும் என்று கூறுவது தவறு, எதனால் பிரச்சினைகளும், போராட்டங்களும் ஏற்படுகின்றன என்றால், யார் யார் (எந்தெந்த ஜாதிக்காரர்) எங்கெங்கே, எதுவரை செல்லலாம் என்று நன்கு விளம்பரப்படுத்தி, அறிவிப்புச் செய்யாததாலேயே ஏற்பட்ட தீய விளைவு அது என்று கூறி, ஜாதிமுறைகளை நியாயப்-படுத்தினார்.

4. குழந்தை மணம் (பால்ய விவாஹம்) தடை பற்றி விவாதம் எழுந்தபோது, குழந்தை மணம் தேவை என்று அழுத்தந் திருத்தமாகக் கூறி வாதாடியவர் பண்டித மதன்மோகன் மாளவியா.

இவரை 1929 மே முதல் வாரம் (8.5.1929) கோட்டயத்தில் நடந்த S.N.D.P. யோகம் என்ற சிறீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபையார் நடத்திய மாநாட்டிற்கு அழைத்துப் பேசச் சொன்னபோது, அவர் ஜாதியை ஒழிக்க முடியாது; அது வீண் வேலை, தீண்டாமைக்கு ஹிந்து சாஸ்திரங்களில் இடமில்லை என்று கூறியதோடு, கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்-களையும் தாய் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்ப சுத்தி மூலம் அழைத்து வர வேண்டும்; வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பேசியபோது அங்கே கூடியிருந்தோர் பொறுமை இழந்து, எதிர்க் கேள்வி கேட்டனர்!

அவர்கள் ஹிந்து மதத்திற்குத் திரும்பினால் எந்த ஜாதியில் அவர்கள் வைக்கப்படுவார்கள் என்ற கேள்விகள் கேட்டபோது, மாளவியா பதில் அளிப்பதைத் தவிர்த்தார்! கீதை சொல்லும் குணகர்மப்படி சிறந்தவர்களை உயர் ஜாதியில்  வைப்பார்களா என்று கேட்டனர்.

வைதீக சனாதனிகளும் இவரது குறிப்பிட்ட அளவு தீண்டாமை எதிர்ப்புப் பேச்சைக்கூட ஏற்காமல், எதிர்த்தனர்.

சென்னையில் திரும்பி வந்துபேசும் போது, மதராஸ் சாஸ்திரிகள் ஆன பார்ப்பனர்-களிடம் வேதத்தில் தீண்டாமைக்கான சுலோகங்கள் இல்லை என்று கூறி மாளவியா சில சுலோகங்களையும் கூறினார். மதராஸ் சாஸ்திரிகளோ அதை மறுத்து எங்களிடம் ஆதாரம் உண்டு. வேதம் சனாதன மதம் தீண்டாமையைக் கூறியுள்ளது என்று பதில் கூறினர்.

ஆதாரம் காட்ட  முடியுமா உங்களால் என்று இந்தப் பார்ப்பனர்களை அவர் கேட்க, அவர்கள் அச்சிட்ட சமஸ்கிருத வேத சாஸ்திர புத்தகங்களைக் கொண்டு வந்து காட்ட, இவர் வேறு வழியின்றி, அடுத்து எப்படியிருந்தாலும் இப்படிப்பட்ட மக்களிடம் பரிதாபம் காட்ட வேண்டாமா? என்று அய்யோபாவம் ஆர்கியுமெண்டைப் பேசி, பின்வாங்கினார்.

5. சமஸ்கிருதத்தைப் பொது மொழியாக்கு வதற்குப் பதிலாக ஹிந்தியைப் பொது மொழியாக வைக்க வேண்டும் என்று (ஒரு தந்திரமாக) பேசியவர்.

மேற்காட்டிய அத்துணையும் அந்தக் கால 1929 ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளன _- குடிஅரசு -”Revolt’ ஏடுகளில் இவரது பேச்சுகளையும் -_ கருத்துகளையும் மறுத்து பல கட்டுரைகள் வெளிவந்து விளாசித் தள்ளியுள்ளனர் _ ஆதாரப்பூர்வமாக! உ.பி.யைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற பார்ப்பன நீதிபதியே இன்று அவரது கருத்தாக (இணையத்தில்) வாஜ்பேயிக்கும், மதன்மோகன் மாளவியாவுக்கும் பாரத ரத்னா; விருது அறிவித்தது எவ்வகையிலும் ஏற்கக்கூடியது அல்ல என்று அறிக்கை விடுத்துள்ளார்!
எனவே,

1. இரு விருதுகளும், இரு பார்ப்பனப் பெரு மக்களுக்கு,

2. ஜாதி வர்ண தர்மக் காப்பாளர்களுக்கு,

3. சனாதனப் பாதுகாவலர்களுக்கு,

4. மக்களின் ஒருமைப்பாட்டை உடைத்து - மத அடிப்படையில், ஜாதி அடிப்படையில், அவர்களை வைத்திருப்பது நீடித்து நிலைத்து இருப்பதற்கு.

5. மதமாற்றங்களுக்கு முன்னோடித்தனத்தின் சன்மானம் - இத்தியாதி! இத்தியாதி.

காந்தியைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ்.-காரரான நாதுராம் கோட்சே என்றால், கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல, அவர் இந்து மஹா சபையைச் சேர்ந்தவர் என்று வெகு சாமர்த்தியமாக பிஜேபிகாரர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் கூறுவதுண்டு.

அப்படியே பார்த்தாலும் காந்தியாரைப் படுகொலை செய்த ஹிந்து மஹா சபையைத் தோற்றுவித்த மதன்மோகன் மாளவியாவுக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கலாமா? படுகொலைக்குப் பரிசு பாரத ரத்னாவா?

மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசின் ஆறு மாத நிறைவு எத்தனை சாதனைகளைக் குவிக்கிறது -  பார்த்தீர்களா? _ புரிந்து கொள்ளுங்கள்!

இளைஞர்களே, இளைய தலைமுறையாக பழைய வரலாற்றுச் சுவடுகளை உற்று நோக்கி உண்மையை உணருங்கள்!

ஏமாந்தவர்களாக இனியும் இரோம் என்று விழிப்புற்று எழுக! எழுகவே!!

கி.வீரமணி,
ஆசிரியர்

-----------------------

பிப்ரவரி 01-15


Tuesday, January 27, 2015

சங்கராச்சாரியாரும் - மதமாற்றமும்




இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய மதம் பவுத்த மதமாகும். எனவே புத்த மதத்தை இந்தியர்களின் தாய் மதம் என்று கருத வாய்ப்புள்ளது. புத்த மதத்தை ஒட்டி தோன்றிய மதம் சமண மதம். இந்த இரு மதங்களும் தற்போது நடக்கும் கலியுகத்தில் மனிதர்களால் தொடங்கப்பட்டவை யாகும். இந்த மதங்கள் தோன்றிய போது இந்துமதம் தோன்றவில்லை.

ஆனால்  அப்போது  ஆரியர்கள் சிந்து சமவெளியில் இருந்து கங்கைச் சமவெளிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் செய்த யாகங்களில் ஆயிரக் கணக்கான கால்நடைகள் பலியிடப்பட் டன. இதனால் பாதிக்கபட்ட கங்கைச் சமவெளி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது ஆரியர் களின் யாகங்களை எதிர்த்தும் உயிர் களைக் கொல்வதை எதிர்த்தும் பவுத்த மதமும் சமண மதமும் தோன்றின. இந்த சூழ்நிலையில் இந்து மதத்தின் தோற்றம் பற்றியும்  மதமாற்றம் பற்றியும் மறைந்த  காஞ்சி மடாதிபதி அவர்கள் தனது நூலில் (தெய்வத்தின் குரல்) கூறியுள் ளதை தொகுத்து கீழே தரப்படுகின்றது

இந்து மதத் தோற்றம்

பவுத்த மதம் மற்றும் சமண மதம் போல அல்லாமல் இந்து மதம் எந்த ஒரு தனி மனிதனாலும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு இடத்தில் நிறுவப்பட வில்லை. இந்தக் கலியுகத்தில் இந்தி யாவில் வேத காலந்தொட்டு புத்தர் காலம் வரை பல மகான்கள் ரிஷிகள் தோன்றினார்கள்.

இவர்கள் மனித வாழ்க்கை பற்றியும் உலகத்தைப் பற்றியும் பல  தத்துவங்களை மக்களிடம் பரப்பினார்கள். ஆனால் இவர்கள் யாரும் எந்த ஒரு மதத்தையும் தோற்று விக்கவில்லை. ஆனால் ஆரியர்கள் வேதகாலத்தில் எந்த தர்மத்தைக் கடைப் பிடித்தார்கள்.

என்பது பற்றி  மறைந்த பெரிய சங்கராச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் என்ற நூலில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

1)   ---ஆனால் ஹிந்து என்பது  நமது பூர்வீகப் பெயர் அல்ல.வைதிக மதம் சனாதன தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது இந்து மதத்திற்கு எந்த பெயரும் குறிப்பிடவில்லை. ( பக் 126)

2)-----பல்வேறு மதங்கள் இருக்கிற போதுதான் ஒன்றிலிருந்து இன்னொன் றுக்கு வித்தியாசம் தெரிவதற்காகப் பெயர் கொடுக்க வேண்டும். ஒரே மதந்தான் இருந்தது  என்றால் அதற்குப் பெயர் எதற்கு?  (பக். 127)

3) ---புத்தமதம் என்றால் அது கவுதம புத்தரால் ஸ்தாபிக்கப்பட்டது. எனவே அவருக்கு  (புத்தருக்கு) முன் அந்த மதம் இல்லை என்றாகிறது. --- (பக். 127)

4)- --(பெயரில்லாமல் இருந்த தற்போதைய இந்து மதத்திற்கு) அப்படி ஒரு ஸ்தாபகரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

பிரம்ம சூத்திரம் செய்த வியாசரை சொல்லலாமா கீதை சொன்ன கிருஷ்ண பரமாத்மாவை சொல்லாமா என்றால் அவர்களும் தங்களுக்கு முன்னே இருக்கிற வேதங் களை சொல்லுகிறார்கள்.. ( கிருஷ்ண பரமாத்மா  மற்றும்  கவுதம புத்தர் துவாபரயுகத்தில் அவதரித்தவர்கள். (விக்கிபீடியா தகவல்) ஆனால் ரிக் வேதம் இந்த கலியுகத்தில் இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள் சிந்து சமவெளியில் தங்கிய போது சுமார் கிமு 1500-ல் இயற்றப்பட்டது. இது ஒரு பெரிய முரண்பாடு ஆகும் ) (பக் 128)

5)----- இந்த வேதங்களை) ரிஷிகள் தபோ மகிமையால் இந்த சிருஷ்டியிலிருந்து ஜீவர்களை கடைத்தேற்றுகிற சப்தங் களை (வேதங்களை) மந்திரங்களாகக் கண்டார்கள். ( பக் 129 )

இவ்வாறு பல ஆயிரம் ஆண்டு களாக தற்போதைய இந்து மதம் பெயர் இல்லாமலும் ஸ்தாபகர். (நிறுவியவர்) இல்லாமலும் இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்து என்ற பெயர் எப்படி வந்தது என்பதை சங்கராச்சாரியார் தனது நூலில் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:-

1)-----இப்போது ஹிந்து மதம் என்று சொல்கிறோமே இதற்கு உண்மையில் இந்த பெயர் கிடையாது.---நம்முடைய பழைய (வேதம் முதலான) சாஸ்திரம் எதிலும்  ஹிந்து மதம் என்ற வார்த் தையே கிடையாது. (பக் 125)

2) -----ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர் தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியைக் கடந்தே பாரத நாட்டுக்கு வரவேண்டி யிருந்தது அல்லவா? ஆனபடியால் ஸிந்துவை ஹிந்து   என்றும் அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும் அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். (பக் 125)

3) ---- நமக்குள் சைவர்கள் வைஷ்ணவர் கள்  என்று வேறாக சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தாம். அவன் வைத்த பெயர் நம்மை காப்பாற்றியது.-------------------- இப்போது ஹிந்து சமூகம் என்று பொதுப் பெயரில் சொல்லப் படும் சமுதாயத்தை  இப்படி ஏழெட்டு மதங்களாகப் (சைவம் வைணவம்  சாக்தர் முருக பக்தர் ஐயப்பன் பக்தர்) என்று பிரித்து விட்டால் அதற்கு அப்புறம் ஒவ்வொரு ஊரிலும் முஸ்லீம் கிறிஸ்தவர்கள் போன்ற மதஸ்தர்கள் தான்  அதிகம் இருப்பார்கள். (பக். 267)

4) ----ஹிந்து என்று சொல்லப்படும்  நமது மதம் ஒன்றே ஆதியில் லோகம் முழுவதும் பரவியிருந்தது. அந்த ஒரே மதம் இருந்ததால்தான் அதற்குத் தனியே பெயர் வைக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனால் தான் நம் ஆதார நூல்களில் ஹிந்து மதத்திற்குப் பெயரே இல்லை.

மதமாற்றம்

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உலக நியதி. கடவுள் படைத்ததாக சொல்லப்படும் மனிதர்களில்  ஆண்கள் சிலர் அறுவை சிகிச்சை மூலம் பெண் ணாக மாறிய செய்திகள் உண்டு. இதே போல் அறுவை சிகிச்சைகள் மூலம் முகத் தோற்றத்தையே மாற்றுகிறார்கள்.

மேலும் .இதயம சிறுநீரகம கண்கள் போன்றவை மாற்றம் செய்யபடுகின்ற இந்த காலத்தில்  மதமாற்றம் நிகழ்வதில்  ஆச்சரியம் ஒனறும் இல்லை. எல்லா மதங்களும் பொதுவாக சொல்வது நல்ல செயல்களை செய்வதன் மூலம் ஒருவர் சொர்க்கத்தை அல்லது கடவுளை அடைய முடியும் என்பது ஆகும்.

இத்தகைய மதங்களுக்கு    (இந்து மதம் உள்பட)  முன் வாழ்ந்த மனிதர்கள் யாரும் சொர்க்கத்தை அடையவில் லையா? இந்த கேள்வியை கேட்பவர் சங்கராச்சாரியார்.

மதமாற்றம் பற்றி சங்கராச்சாரியார்

1)----- ஹிந்து மதத்தில் கடைப்பிடிக்கப் படும் மதச்சடங்குகள் ரிக் முதலான நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. வேதங்கள் உருவான காலத்தில் இந்து மதம் என்று ஒன்றும் இல்லை. அப்போது இருந்த மதத்தின் பெயர் வைதிக மதம் அல்லது சனாதன தர்மம் என்று அழைக்கப்பட் டது.

அந்த காலத்தில் மற்ற மதங்கள் --- புத்த சமண மதங்கள் சீக்கிய மதம் கிருத்துவ மதம் இஸ்லாமிய மதம் போன்றவை தோன்றவில்லை. எனவே மதம் மாற்றம் எதுவும் நடக்கவில்லை என சங்கராச்சாரியார் கூறுகிறார். மேலும் அவர் கூறுவது கீழே தரப்பட்டுள்ளது.-

2)  ஒரு தேசத்து மக்களே ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு. மாறவும் செய்கிறார்கள். புத்தர் காலத்தில் வேத மதத்திலிருந்து வேத மதஸ்தர்கள் பவுத்த மதத்திற்கு மாறினாரகள். பிற்காலத்தில் எத் தனையோ ஹிந்துக்கள் முகம்மதிய மதத்திலும் கிறித்துவமத்திலும் சேர்ந் திருக்கிறாரகள்.

ஜைனர்கள் வைஷ்ண வர்களாக மாறி புஷ்டி மார்க்கிகள் என்று பெயர் பெற்றிருக்கிறார்கள். (இதிலிருந்து வைணவ மதம் என்பது இந்து மதத்திலிருந்து வேறு பட்டது என்பதை அறியலாம். மேலும் ஜைன மதம் தோன்றியபின்புதான் வைணவ மதம் தோன்றியுள்ளது என்பதையும் அறியலாம்.) (பக் 117 )

3) ---யார் யார் எந்த மதத்திற்குப் போனாலும் கடைசியில் (அத்தனை மதத்தினரும்) ஒரே பரமாத்மாவிடத்தில் வந்து சேருவார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகிற விசால மனப்பான்மை நம் சாஸ்திரங்களிலேயே காணப்படுகிறது. இதனால்தான் பிறரை ஹிந்துவாக மதமாற்ற நம் சாத்திரங்கள் இடம் கொடுக்கவில்லை. (பக் 148)

4) ----- -ஒருத்தனை புது மதத்திற்கு மாற்றுவது என்றால்  அதற்கென ஒரு சடங்கு இருக்க வேண்டும். இப்போது கன்வரட்செய்கிற மதங்களில் எல்லாம் அப்படி ஒன்று ஞானஸ்நானம் என்கிற மாதிரி---- ஏதாவது ஒன்று இருக்கிறது.

மற்ற எந்த மதங்களை விட மிக அதிகமாக சொல்கிற சடங்குகளை சொல்கிற இந்து மத சாஸ்திரங்களைப் பார்த்தால் இப்படி நம் மதத்திற்கு மற்ற மதஸ்தனை  மதமாற்ற ஒரு சடங்கும் இல்லை. இதுவே நாம் மத மாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி.  ( பக் 114)

5).----தங்களிடையே கோட்பாடுகளிலும் அநுஷ்டானங்களிலும் சில வித்தி யாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களும் ஒன்று போல் இருக்க வேண்டிய அவசியம் இல்-லை. ஒரே மாதிரி ஆக்காமலே எல்லா மதங்களும் (மதத்தினரும்) மனத்தில் ஒற்றுமையோடு இருப்பது தான் அவசியம். யுனிபார்மிட்டி அவசியம் இல்லை. யுனிட்டிதான் அவசியம்.  (பக் 115) எனவே இந்து மதத்தில் மத மாற்றம் அனுமதிக்கப் படவில்லை என கூறலாம்.

முடிவுரை:- இயற்கையில் நாள் தோறும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பல முன்னேற் றங்கள்   மற்றும் மாற்றங்கள் நிகழ்கின் றன. அதே போல் மனித குலம் இந்த பூமியில் நீடித்து வாழ மனிதனுக்கு தேவையான வளங்கள் மற்றும் வசதிகள் ஆகியவற்றில் எல்லாம் மாற்றங்கள் நிகழ்கின்றன.

இந்த மாற்றங்கள் எல்லாம் மனிதனின் நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மாற்றி அமைக் கின்றன. முற்றிலும் நம்பிக்கையின் அடிப் படையில் ஏற்பட்ட மத நம்பிக்கைகளை யும் மற்றும் சடங்குகளை மாற்றுவது தவிர்க்க முடியாது. இதனால் மதமாற் றங்கள் நிகழ்கின்றன என அறியலாம்.

- பொறியாளர் கோவிந்தராசன் BE, MBA, MA

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



Monday, January 5, 2015

பேய்கள் செய்த படுகொலைகளுக்கு அஞ்சலி செலுத்தின பிசாசுகள்



யாருக்காக நான் அழ.....?
பாமியான் புத்தர் சிலையை
பீரங்கியால் பிளந்தவர்கள்
பள்ளிக் குழந்தைகளை
துப்பாக்கியால் துளைத்தார்கள்
இரண்டுமே இஸ்லாத்தின்
புனிதப் போரென்று
பெருமையும் தான் பட்டார்கள்.
பக்கத்து நாட்டினிலோ
பாபர் மசூதி இடித்து
பகை நஞ்சை விதைத்தவர்கள்
கொழுக்கட்டைப் பிள்ளையாரை
கொலைக் கருவி ஆக்கியவர்கள்
பெஷாவர் பிள்ளைகளுக்கு
அவசர அவசரமாய்
அஞ்சலி என்று சொன்னார்கள்
இந்தியாவை இடித்து
இந்துராஷ்டிரம் அமைப்பவர்கள்

அண்டை நாட்டின்
அல்லாவின் கொலைகளுக்கு
அனுதாபம் சொரிந்தார்கள்
பேய்கள் செய்த படுகொலைகளுக்கு
அஞ்சலி செலுத்தின பிசாசுகள்
சந்தடி சாக்கில்
வந்ததொரு அறிவிப்பு
இனி பகவத் கீதையே
இந்தியாவின் புனித நூலென்னும்
புத்தம் புது கண்டுபிடிப்பு
தயங்காமல் கொல்
தமையனையும் கொல்
எனும் உபதேசம் புனிதமென்றால்
எதற்கிந்த அஞ்சலிகள்?
ஏனிந்த நீலிக் கண்ணீர்?
எங்கிருந்து வந்தது உம் அனுதாபம்?
கீதை உபதேசித்ததை
குரான் செய்து முடித்திருக்கிறது?
பாராட்ட வேண்டாமா
எதற்காக கண்ணீர்?
கிறிஸ்துமஸ் விடுமுறையில்
குதூகலிக்கும்
குழந்தைகளை
கொண்டாட்டத்தை நிறுத்து
எம்அரசின் புகழ்பாடி
கட்டுரைகள் எழுதுஎன
கட்டளை இட்டவர்கள்
கொடுங்கோன்மை செய்பவர்கள்
குழந்தைகள் கொலைக்காக
சிந்துவது கண்ணீரா?
அனுஷ்டிப்பது அஞ்சலியா?
காட்டுவது அனுதாபமா?
அரசியல்! அரசியல்!!
எல்லாம் அரசியல்!!!
குழந்தைகள் கொலைகூட
கேவலமானது அரசியலால்.
பேய்கள் அரசாண்டால்
பிணந்தின்னும் சாத்திரங்கள்
என்றதுவும் இதைத் தானோ?
குரானின் ஜிகாத்தும்,
கண்ணனின் கீதையும்
ஏசுவின் பைபிளும்,
சீக்கியம்
இன்னுமுள்ள
ஏராள மதங்களும்
அவற்றால் ஆன பெரிய
புனித நூல்களும்
கொல், கொல், கொல்லென்றும்
கொல்வது மதக் கடமையென்றும்
எதிரியை மட்டுமல்ல
அவர் வீட்டுக் குழவியையும்
விட்டுவிடாமல் கொல்லென்றும்
உபதேசித்தும்
உருவேற்றியும்
சொல்லியும் செய்தும்
காட்டிய பின்னும்
இவையெல்லாம்
புனிதமென்றும்
போற்றத்தக்க
நூல்களென்றும்
மனிதனை மேம்படுத்தும்
தேவ வாக்கென்றும்
எதைக் கொண்டு
என் பிள்ளைக்கு
நான் சொல்ல?
துள்ளித் திரியும்
பிள்ளைகளைவிட
புனிதம் என்று
ஒன்றுண்டா
இந்த பூமியிலே?

அந்த புனிதங்களை
சுட்டுப் பொசுக்கிய,
பிணங்களாக்கிய
புல்லர்களை
பிள்ளைக் கறி சமைத்த மாபாதகரை
கண்டிக்க வார்த்தையுண்டா?
தண்டிக்கத்தான் வழியுண்டா?
கொலையை தடுக்காதமதமும்
குழந்தையை காக்காத கடவுளும்
மழலைக்கு மயங்காத மனிதனும்
இருந்தென்ன? இறந்தென்ன?
இதில்யாருக்காக நான் அழ?
குழவியைக் கொன்ற
மதத்தின் மரணத்துக்கா?
காக்க மறுத்த
கடவுளின் சாவுக்கா?
மழலையைக் கொன்ற
மனிதமிருகத்தின் மறைவுக்கா?
இல்லை இந்த மூன்றின்
கூட்டுக் கொலை வெறியால்
துள்ளத் துடிக்க
கொடூரமாய் மரணித்த
மழலைகளின் மறைவுக்கா?
காணாமல் போன அவர்தம்
கள்ளமில்லாச் சிரிப்புக்கா?

(முக நூலில் இருந்து: எல்.ஆர்.ஜெகதீசன்)

Saturday, January 3, 2015

தீவிரவாத ஒத்திகைக்குக் கிடைத்தவர்கள் முஸ்லீம்கள் தானா?


இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக இந்துத்துவா ஆட்சி என்று அறிவிக்கவில்லையே தவிர, மற்றபடி பிஜேபியும் சரி, அதன் சங்பரிவாரங்களும் சரி ஓர் இந்து ஆட்சி இந்தியாவில் அமைந்துவிட்டதாகவே கருதி, ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர்!

இந்த உண்மை அம்மணமாகத் தெரிந்திருந்தும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் சீப்பை ஒளிய வைத்து கலியாணத்தை நிறுத்துவது என்பது போல நடந்து கொள்வது மிகக் கேவலமான வெட்கக் கேடாகும்.

ஊடகங்கள் உயர் ஜாதி பார்ப்பனர்கள் கைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும் குவிந்து கிடப்பதால் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியே!

ஊடகங்களில் பெரும்பாலும் பணியாற்றுபவர் களாகப் பார்ப்பனர்களாகவே இருக்கின்ற காரணத்தால் இந்துத்துவாவைத் தூக்கிப் பிடிக்கத்தானே செய் வார்கள். உண்மையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு அதன்மீது பொய்களான குரோட்டன்ஸ்களை வளர்க்கவே செய்வார்கள். அதுதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

பிஜேபியில் ஏதோ அனாமதேயங்கள் அல்ல; பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திரமோடியே எப்படி நடந்து கொண்டு வருகிறார் என்பதைக் கவனித்தால் ஒளிவு மறைவு என்பதை எல்லாம் கடந்து, பச்சையாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள மதச் சார்பின்மையைத் தூக்கிப் போட்டு மிதித்து விட்டு, ஒளிந்திருந்த இந்துத்துவாவை ராஜ நடை போட வைத்து விட்டார்.
ஜப்பானுக்குச் சென்ற பிரதமர் நரேந்திரமோடி இந்தியர்கள் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் என்ன பேசினார்?

I brought Gita for gifting (the Japanese Emperor) I do not know what will happen in India after this. There may be a TV debate on this. Our secular friends will create ‘typhoon’ (storm).

ஜப்பான் நாட்டுப் பேரரசருக்கு கொடுக்கக் கீதையைக் கொண்டு   போன இந்தச் செய்தி இந்தியாவை அடைந்தால் அங்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. தொலைகாட்சிகளில் விவாதங்கள் அனல் பறக்கும்; எனது மதச் சார்பற்ற நண்பர்கள் புயலையே கிளப்புவார்கள் என்று பேசினார் என்றால் பார்த்துக் கொள்ளலாமே.

தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்பார்களே அதுபோலதான் செய்யும் தவறு என்ன என்று அவருக்கு மிக நன்றாகவே தெரியும்; இருந்தாலும் அவரைப் பீடித்து ஆட்டும் இந்துத்துவா வெறி அதனையும் கீழே தள்ளி மேலே எழுந்து நிற்கிறது. மதச் சார்பின்மை என்பதை எப்படியெல்லாம் எள்ளி நகையாடுகிறார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இவ்வளவுப் பச்சையான மதவெறியரைத் தேடினாலும் எளிதில் கிடைக்கப் போவதில்லை.
குஜராத் மாநிலத்தை இந்துத்துவாவின் பரிசோ தனைக் கூடமாக உருவாக்கினார். மத அடிப்படையில் மக்களைக் கூறு போட்டு, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். அதையே இந்தியா முழுமைக்கும் பரவலாக்கும் எண்ணம் நொடிதொறும், நொடிதொறும் அவரை உசுப்பி எழுப்பிக் கொண்டு இருக்கிறது. குஜராத்தில் அவரைத் தொடர்ந்து வந்த முதல் அமைச்சர் மோடிக்குச் சளைத்தவரல்ல என்பதைக் காட்டிக் கொண்டு இருக்கிறார்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் தீவிர வாதிகளை எப்படி முறியடிப்பது என்பதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.

தீவிரவாதிகளாக நடித்தவர்கள் அத்தனைப் பேரும் முசுலிம் உடை அணிந்து, தலையில் குல்லாய் அணிந்து காணப்பட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவது போல குஜராத் காவல்துறையால் ஒத்திகை நடத்தப் பட்டது.

வன்முறையில் ஈடுபடுவதுபற்றி பிஜேபி.யோ அல்லது சங்பரிவார்க் கும்பலா பேசுவது? பாபர் மசூதி இடிக்கப்பட்டதை விடவா அராஜகத்துக்கும் பயங்கர வாதத்துக்கும் நிர்வாண வன்முறைக்கும் இன்னொரு எடுத்துக் காட்டுத் தேவை?

மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் யார்? ஒரிசா சட்டப் பேரவை வளாகத்துக்குள்ளேயே புகுந்து வன்முறை வெறியாட்டம் போட்டவர்கள் யார்? காவி பயங்கரவாதம் என்ற புதுமொழியை அன்றைய உள்துறை அமைச்சர் புதிய பட்டத்தைச் சூட்ட வில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் பொது மக்களுக்குத் திரிசூலங்களை வழங்கி கிறித்தவர் களையும், முசுலீம்களையும் மதச் சார்பின்மை பேசும் இந்துக்களையும் குத்திக் கிழிக்கத் தூண்டிட வில்லையா?

அரியானா மாநிலத்தில் ஜாஜா பகுதியில் இறந்து போன பசுவின் தோலை உரித்ததற்காக அய்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த கொடியவர்களால் கொல்லப்படவில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான கிரிராஜ் கிஷோர் என்பவர் பசுவின் உயிர் (அதுவும் செத்துப் போன) மனித உயிரைக் காட்டிலும் புனிதமானது என்று அப்போது கூறியது எவ்வளவுப் பெரிய காட்டுவிலங்காண்டித்தனம்!

ஏன்? காவல்துறை ஒத்திகை நடத்திக் கொண்டு இருக்கும் குஜராத்தில் நடக்காத வன்முறையா? அரச பயங்கரவாதமாக அல்லவா நடந்தது.

 முசுலிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து அந்தக் கருவை நெருப்பில் தூக்கி எறிந்து வெறிக் கூச்சல் போட்டுக் கூத்தாடவில்லையா? அடுக்கிக் கொண்டே போகலாம்.

 ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலின் வன்முறையைப் பட்டியல் போட்டால் நாட்டில் காகிதங்கள் போதாது.

இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் தீவிர வாதத்தை முறியடிக்கும் பயிற்சிக்கான ஒத்திகைக்காக முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாக ஒப்பனை செய்து நிறுத்தியுள்ளனர்; இந்தியாவிற்கு இப்படி ஓர் ஆட்சியா? மகா மகா வெட்கக் கேடு!

பி.கே. திரைப்படத்தை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பது ஏன்?

பி.கே. திரைப்படத்தை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பது ஏன்?
இந்தியாவை காவிமயமாக்கும் முயற்சிதான் காரணம்

இந்து ஏடே அம்பலப்படுத்துகிறது


சென்னை, ஜன.3_ பி.கே. என்ற முற்போக்கு எண்ணம் கொண்ட திரைப்படத்தை இந்துத் துவவாதிகள் எதிர்ப்பதற்கு முக்கிய காரணமே இந்தியாவை இந்துத்துவாவாக்கும் முயற்சி அதிகரித்து வருவதுதான் என்று இந்து ஆங்கில ஏட்டில் வெளி வந்துள்ள கட்டுரை தோலுரித்துக் காட்டுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாத்சாயனர் என்ற ஒரு இந்து எழுதிய நூலை இன்று திரைப் படமாக ஆக்கினால், அது தணிக்கைக் குழுவின் சான்றினை எப்போதுமே பெறமுடியாது.

ஜெயதேவர் என்ற மற்றொரு இந்து எழுதிய பாலுணர்வு மிகுந்த கற்பனை நூலான கீதகோவிந்தம் கிருஷ்ண பரமாத்வாவின் அங்க அழகினை ஆழ்ந்த உணர்வுடன் எடுத்துக் காட்டுகிறது. அடிக்கடி உடலுறவு கொள்வது ஒருவரின் வாழ்நாளைக் குறைத்துவிடும் என்று அண்மையில் குறிப்பிட்ட போபால் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் சஞ்சாருக்கு இந்த நூலை அறிமுகப்படுத்த நீங்கள் விரும்பக் கூடும். என்றாலும்,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறுதியாக நின்று வரும் இந்து மதம் சிலர் நகைச் சுவையாகக் கூறும் கேலியினாலும், கிண்டலினாலும் அழிந்து போகும் என்று நினைப்பவர்களிடம் இருந்து இந்து மதத்தைப் பாதுகாக்கவேண்டிய நிலை மறுபடியும் நமக்கு ஏற்பட்டுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி என்ற ஒரு இந்து இயக்குநர் தயாரித்து வெளியிட்டுள்ள பி.கே. என்ற திரைப்படத்தைப் பற்றி எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளைப் பற்றித்தான் நான் இப்போது குறிப்பிடுகிறேன். 

விசுவ இந்து பரிஷத் இந்த திரைப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று கோருகிறது;  இந்த அமைப்பின் உறுப்பினர்களும், பஜ்ரங் தள உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டு இத் திரைப்படத்தின் சுவரொட்டிகளைக் கிழிந்தெறிந்து விட்டு, அத்திரைப்படம் திரையிடப்படுவதைத் தடுக்க முற்பட்டுள்ளனர். இதன் காரணம் என்ன? பி.கே. திரைப்படம் இந்து மதத்தைக் கேலிசெய்கிறது என்று விசுவஇந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர் பாளர் வினோத் பன்சால் கூறுகிறார். மதநல்லி ணக்கத்தைக் காக்கும் நோக்கத்தில் இத் திரைப் படத் தின் சில காட்சிகளை சென்சார் குழு நீக்கிவிட வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட சட்டக் குழுவும் கேட்டுள்ளது.

மூன்று முட்டாள்கள் என்ற திரைப்படம்

சிறிது நேரத்துக்கு நாம் பி.கே. திரைப்படத்தை மறந்துவிடுவோம். நடிகர் அமீர்கானை வைத்து இதே இயக்குநர் ஹிரானி எடுத்து பெரு வெற்றி பெற்ற முந்தைய திரைப்படமான மூன்று முட்டாள்களை எடுத்துக் கொள்வோம். தேர்வுகள் பற்றி கவலைப்படும் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் தாங்கள் தேர்ச்சி பெற கடவுளை வழிபடுவதைப் பற்றி இத் திரைப்படத்தில் காட்சிகள் உள்ளன. தேர்வு முடிவுகள் இன்று வெளியாகப் போகின்றன. கடவுளுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய நேரமிதுதான்   என்று கூறுவது போல கிண்டலாக அக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு கடவுளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

ஒரு மாணவர் மணியடித்துக் கொண்டே, இந்து கடவுள்களின் படங்கள் நிறைந்துள்ள ஒரு சுவரின் முன்னர் கற்பூர ஆரத்தி காட்டிக்கொண்டே,  கடவுளே எனது எலக்டிரானிக்ஸ் தேர்வு விடைத் தாளை கவனித்துக் கொள்ளுங்கள். அப்படி செய்தால், உங்களுக்கு நான் ஒரு தேங்காய் உடைக்கிறேன் என்று முணுமுணுக்கிறான். தனது இயல்பியல் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு உதவினால், நாகதேவதைக்கு தினமும் ஒரு லிட்டர் பால் வார்ப்பதாக ஒரு பாம்பின் முன் வணங்கி நிற்கிறான் இன்னொருவன்.

மூன்றாவது மாணவன் தனது கையில் வைத்திருக்கும் புல்லினை ஒரு பசுவின் வாயில் திணித்துக் கொண்டிருக்கிறான்.  தனது தேர்வுகளில் தேர்ச்சி பெற கோமாதா தனக்கு உதவ வேண்டும் என்று அவன் விரும்புகிறான். மற்றொரு மாணவன் வேறொரு கடவுள் சிலையின் முன்னர் நின்று கொண்டு மாதா மாதம் 100 ரூபாய் காணிக்கை செலுத் துவதாக உறுதி அளிக்கிறான்.

காட்சியை விவரிப்பவர், இந்த 100 ரூபாயால் போக்குவரத்து காவல்காரரைக் கூட திருப்தி படுத்தமுடியாது; அப்படி இருக்கும்போது கடவுளை எப்படி இது திருப்திபடுத்தும் என்று குறிப்பிடுகிறார்.

இதுபோன்று இந்து மதம் கேலி செய்யப்படுவது பற்றித்தான் பி.கே. திரைப்படம் மீது குற்றம் சுமத்தப் படுகிறது. இத்துடன் முடிந்துவிடவில்லை; இதற்கு மேலும் உள்ளது.

3 முட்டாள்கள் படத்தில்  இத் தகைய கேலியான விமர்சனம் செய்யும் வர்ணனை யாளர் ஃபர்ஹான் குரேஷி என்பவர். இந்தக் காட்சி களில் எல்லாம் திரைப்படத்தின் கதாநாயகன் எங்கே வந்தான்? ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறான்.

கற்பூர ஆரத்தி காட்டப்படும்போது கூறப்பட்ட மந்திரம், அப்போது அடிக்கப்பட்ட மணியின் ஓசை ஆகியவற்றாலும் அவனை உறக்கத்தில் இருந்து எழுப்பமுடியவில்லை. இவற்றை எல்லாம் கடந்த நிலையில் அவன் இருக்கிறான் என்று கூறுவதற்கான மற்றொரு வழி இது.

ஆனால் அப்போது,  நாட்டின் பல பகுதிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையான சடங்குகள் எவை என்பது பற்றியும்,  அந்த திரைப்படத்தின் மய்யத்தில் தேவதூதனைப் போலக் காட்டப்படும் கதாநாயகனுக்கு சடங்குகள் என்ற ஊன்றுகோல் ஏன் தேவைப்படவில்லை என்பது பற்றியும் முஸ்லிம் வர்ணனையாளரின் கேலி, கிண்டல் பற்றி  எவர் ஒருவரும் எந்த சத்தமும் எழுப்பாததன் காரணம் என்ன என்ற வியப்பு எவருக்கும் ஏற்படவே செய்யும்.

கிறிஸ்தவ, சீக்கிய, முஸ்லிம் மாணவர்கள் எவரும் தீவிரமாக அவரவர்களின் கடவுள்களை வழி படுவதைப் பற்றி இப்படத்தில் எதுவும் இடம் பெற வில்லை என்பது பற்றி ஒரு வார்த்தை கூட அப்போது பேசப்படவில்லை. மதசார்பற்ற, பகுத்தறிவு மனம் கொண்டவர்கள்  இந்துக்கள் பின்பற்றும் பழக்க வழக் கங்களை மட்டுமே கேலியாகப் பார்ப்பது ஏன் என்று ஒருவர் கேட்கலாம்.

கமலஹாசனின் விசுவரூபம் படம்
 
மூன்று முட்டாள்கள் திரைப்படம் முழுக்க முழுக்க மதத்தைப் பற்றியதல்ல  என்பதால் எவரும் இந்தக் கேள்வியை எழுப்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் பி.கே. திரைப்படத்தின் நோக்கம் நன்கு புலப்படுவதாக இருக்கிறது.

இத்தகைய இனிமையான திரைப் படத்தைப் பற்றி பேசும்போது தாக்குதல் என்ற சொல் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்ற போதிலும் இதில், எவரது கருத்து, உணர்வு பற்றி சிறிதும் கவலைப்படாமல்  மதத்தின் மீது  வெளிப்படையான கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   இது ஒரு பெரிய திரைப்படம், இதில் நடிப்பவர் ஒரு பெரிய நடிகர் என்பதால் இதற்கு எதிராகப் பேசினால், அது அதிக அளவிலான கவனத்தை ஈர்க்கும் என்பதாலேயே இத்திரைப்படத்தின் மீது இத்தகைய முழுமையான கவனம்  குவிக்கப்பட்டிருக்கக்கூடும். கமலஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு என்ன நேர்ந்ததோ அதனைப் போன்றதுதான் இதுவும். முஸ்லிம்கள் தீட்டிய ஒரு சதித்திட்டத்தை தோற் கடிக்கும் அப்படத்தின் கதாநாயகன் தவறாமல் தொழுகை புரியும் ஒரு முஸ்லிம் என்பதை அப்படத்தை எதிர்த்த  முஸ்லிம் அமைப்புகள் நன்கு அறிந்தே இருந்தன. இது போன்ற கருத்து கொண்ட இதர திரைப்படங்களில் பெரும்பாலானவை கதாநாயகனை ஓர் இந்துவாகவே காட்டுபவையாக இருக்கும் என்ற நிலையில் அப்படத்தின் கதாநாயகன் ஒரு முஸ்லிமாக காட்டப்படுவதை அந்த முஸ்லிம் அமைப்புகள் கொண்டாடியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.  அப்படியில்லை. தீவிரவாதிகள் எப் போதுமே பெரும்பாலும் அது போல பார்க்க மாட்டார்கள்.

முப்பது ஆண்டுகளுக்குமுன்

பி.கே.திரைப்படத்தின் மீதான மற்றொரு குற்றச் சாட்டு அது காதல்புனிதப்போரை ஆதரிப்பதாக இருக்கிறது என்பதுதான். சர்பார்ஸ் என்ற பாகிஸ்தானிய இளைஞனுக்கும், இந்த உலகைப் படைத்தவள் என்ற பொருள் தரும் ஜகத்ஜனனி என்ற கடவுள் பெயரைக் கொண்ட ஒரு இந்து பெண் ணுக்கும் இடையே ஏற்படும் காதலைப் பற்றிய திரைப்படம் இது. ஆனால் இந்த காதல் கதை நடப்பது இந்தியாவிலோ பாகிஸ்தானத்திலோ அல்ல. எனது பெயர் கான் என்று கூறியவுடனேயே, அமெரிக்காவில் உள்ள ஒரு முஸ்லிம் இளைஞனுக்கும், ஒரு இந்து யுவதிக்கும் இடையே அது காதலைத் தோற்றுவித்துவிடுவது போலவே நடுநிலை நாடான பெல்ஜியத்தில் நடப்பதாக அக்கதை அமைந்துள்ளது. இந்த இரு திரைப் படங்களின் கதாநாயகிகளும் நன்கு படித்தவர்கள், தாராளமனம் கொண்டவர்கள், திருமணத்திற்குப் பிறகு அவர்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறிவிடுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.

மனஉறுதி படைத்த ஜோதாஅக்பர் தனது மதத்தைத் துறந்தது போல தங்களது மதத்தைத் துறக்கத் தயாராக இருப்பவர்கள் அல்ல அவர்கள்.  இருபது முப்பது ஆண்டு களுக்கு முன்னர் வெளிவந்த முகந்தர் தா சிக்கந்தர் போன்ற திரைப்படங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். அவற்றில் கதாநாயகன் ஒரு முஸ்லிம் பெண்ணால் வளர்க்கப்பட்டிருப்பான்; ஆனால் அவன் ஓர் இந்து பெண்ணைக் காதலிப்பான்.  பாலியல் துருவங்கள் மாறி யிருக்கும் மதக்கலப்பு காதல் கதைகளைப் பார்த்தால், கடார் படத்தில் முஸ்லிம் பெண்ணும் -சீக்கிய இளை ஞனும், வீர் ஜாரா, ராஞ்சஹானா, ஏக் தா டைகர் ஆகிய  படங்களில் முஸ்லிம் பெண்ணும்-இந்து ஆணும் காதலிக்கும் கதைகள் கொண்டவை. இப்படங்களுக்குப் பெரிய எதிர்ப்பு ஏதும் ஏற்பட்டதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்கள் அனைத்தும் பெருவெற்றி பெற்றவை. வசூலில் ரூ.200 கோடிக்கும் மேல் ஈட்டி சாதனை படைத்த முதல் திரைப்படம் மூன்று முட்டாள்கள் தான். அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த பார்வையாளர்களின், குறிப்பாக நமது நாட்டில் பெரும்பான்மையானவர்களாக உள்ள இந்து மக்களின் ஆதரவு இன்றி, இத்தகைய வசூலை ஒரு படத்தால் ஈட்டித் தர முடியாது. இப்படத்தில் செய்யப்படும் மென்மையான கேலியைப் பற்றி அவர்களே பெரியதாகக் கவலைப்படவில்லை என்னும்போது,  அவர் களுக்காக தடிகளை ஏந்திக்கொண்டு தாக்குவதற்கு ஓடி வருவதற்கு,  இந்த சந்தர்ப்பவாத அரசியல் கட்சி உறுப்பி னர்களும், மற்றவர்களும் யார்? திரைப்படங்கள் தேர்தல் களைப் போன்றவை என்பதை அவர்கள் உணர வில்லையா? மக்கள் வரிசையில் அமைதியாகக் காத்திருந்து, வாக்குச் சாவடிக்குள் சென்று, ஒரு வாக்கினை வாங்கி வாக்களிப்பார்கள். 

அதுபோல, பி.கே.போன்ற படங்கள் பெருவெற்றி பெறும்போது, 300 கோடி ரூபாய்க்கும் மேலான வசூலை அது அள்ளித்தரும் என்ற உறுதி ஏற்பட்டிருக்கிறது. இச்சாதனை புரியக்கூடிய முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். அப்படியென்றால், அளவு கடந்த, மிகப் பெரிய பெரும் பான்மையான மக்களால் அது ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது என்பதே அதன் பொருளாகும். தங்கள் ஆதரவின் மூலம் மக்கள் பேசியுள்ளனர். ஒரு பக்கத்தில், இந்தப் படத்தின் கதையைப் பற்றி கவனிக்கும்படி காவல் துறையை மகாராஷ்டிர மாநில அரசு கேட்டுள்ளது; மறு பக்கத்தில்,  மும்பை வட்டத்தில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் கொடுக்கும் முதல் படமாக பி.கே. இருக்கும் என்று பாக்ஸ்ஆபீஸ்இந்தியா இணையதளம் உறுதிபடக் கூறுகிறது. இந்த இடத்தில் நீங்கள் கேட்கவேண்டிய கேள்வி இதுதான். இங்கே உண்மை யிலேயே எவருடைய மனஉணர்வுகள்  பாதிக்கப்பட்டுள்ளன?

இந்தியாவைக் காவிமயமாக்கும் முயற்சி

தணிக்கைக் குழுவின் ஒப்புதலைப் பெற்று ஒரு திரைப்படம் வெளியிடப்பட்ட பிறகு, தங்கள் உணர்வுகளை அது காயப்படுத்துகிறது என்று கூறி, அதனை திரைப்பட அரங்குகளிலிருந்து திரும்பப் பெறவேண்டும் என்று கேட்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி உணர்ச்சி கொண்டவர்களாக இருக்கின்றனர். அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால், உங்களால் ஒரு திரைப்படத்தைக் கூடத் தயாரிக்கவே முடியாது. நீங்கள் இதனை அறிவீர்கள்; நானும் அறிந்திருக்கிறேன். எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளும் இதனை அறிந்திருக்கின்றன. பிறகு ஏன், அவர்கள் தொடர்ந்து கோபப்படுபவர் களாகவும், கவலைப்படுபவர்களாகவும் இருக்கின்றனர்?  சிலர் கூறுவது போல, இந்தியாவை காவிமயமாக்கும் முயற்சி அதிகரித்து வருவதுதான் இதன் காரணம். இப்போது உள்ள கலாச்சார தட்பவெப்ப நிலை, ஹரேராமா, ஹரேகிருஷ்ணா திரைப்படம் வெளிவந்த 1970 களில் நிலவிய தட்பவெப்பநிலையில் இருந்து மாறுபட்டதாகவே உள்ளது.

தனது  தலைப்பிலும், காட்சிகளிலும் கடவுள்களுக்கு நுகத்தடி பூட்டி, கேலிச்சித்திரமாகக் காட்டுவதற்கு ஹரேராமா, ஹரேகிருஷ்ணா திரைப்படத்தினால் முடியும் என்றால், (இப்படத்தின் தம்மரே தம் என்ற பாடல் பெருவெற்றி பெற்றது) கணக்கு வழக்கின்றி ஹூக்கா புகைக்கும் காட்சிகளும், திருமணத்திற்கு முன்பான உடலுறவுக் காட்சிகளும் இடம் பெறச் செய்ய முடியும் என்றால், சாதாரணமான கேலியைக் கூடப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை எதனால் இப்போது வந்தது? இதற்கு மிகப்பெரிய முக்கியமான காரணம் என்னவென்றால், நமது தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், இன்டர் நெட்டுக்கும் வாரம் 7 நாட்களும் தினமும் 24 மணி நேரமும் ஒளிபரப்ப செய்திகள் தேவைப்படுகின்றன. அந்த செய்தி ஒரு மாபெரும் வெற்றி பெற்ற திரைப் படத்தைப் பற்றிய செய்தியாக இருந்துவிட்டால், அந்தச் செய்தியே பெரியதாக ஆகிவிடுகிறது. உணர்ச்சி  மயமான, பார்வையாளர்களையும், வாசகர்களையும் கவரும் செய்திகள்இவை.

எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த அமைப்புகள் மலிவான, எளிய, உறுதிஅளிக்கப் பட்ட விளம்பரம் தேடும் தங்கள் தாகத்தின் காரணமாக, கலவரங்களை விளைவித்து, சுவரொட்டிகளைக் கொளுத்துவதன் மூலம் தங்களைப் பற்றிய பொது மக்களிடையேயான அச்சத்தை வளர்க்க முயல்கின்றனர். இதில் உள்ள சோகம் என்னவென்றால், இது உங்களுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும்; எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளுக்கும் இது தெரியும் என்பதுதான்.

நன்றி: தி ஹிந்து 2-1-2015
கட்டுரை ஆசிரியர்: பரத்வாஜ் ரங்கன்
தமிழில் : த.க.பாலகிருட்டிணன்

Saturday, December 20, 2014

தேசிய நூலாக கீதை: பல இனங்கள் உள்ள நாட்டின் நலனுக்கு உகந்ததா?


பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியிருப்பது பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டின் நலனுக்கு உகந்ததாயிருக்காது என்கிறார் காந்தியச் சிந்தனையாளரும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் ஜெயப் பிரகாசம்.

பகவத் கீதையை காந்தி போன்றோர் உயர்வாக மதித்தனர் என்பது உண்மை ஆனால், கீதை குறித்த அவரது பார் வைக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் வேறுபாடு உள்ளது. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் வன் முறையாலும் தீமையை வெல்வது நீதி யானதுதான் என்ற அர்த்தப்படுத் தினால், இந்த அணு யுகத்தில் அது பேரழிவை உருவாக்கும் என்றார் ஜெயப்பிரகாசம்.

காந்தியோ, கீதையை நன்மைக்கும் தீமைக்குமான மோதலில் மனித மனது, தீமையை வென்று நன்மையாக மாற்று கிறது என்று அர்த்தப்படுத்தினார், என் றார் ஜெயப்பிரகாசம். இது சத்யா கிர ஹத்திற்கான ஒரு நூல் என்று காந்தி பொருள்கொண்டார், பாரதி கூட அப்படித் தான் அதைப் பார்த்தார் என்றார் ஜெயப்பிரகாசம்.

அதே சமயம் அம்பேதகர் போன் றோர் கீதையை போரை நியாயப்படுத் தும் ஒரு புத்தகமாகவும், வர்ண அமைப்பை நியாயப்படுத்தும் ஆவண மாகவும் பார்த்தது குறித்து குறிப்பிட்ட ஜெயப்பிரகாசம், திலகர் கூட தனது " கீதா ரகசியம்" என்ற புத்தகத்தில், கீதையை, போருக்கான புத்தகமாகவே பார்த்தார் என்றார். எனவே இது போன்ற திரு மறைகளை மறு வாசிப்பு செய்வது அவ சியம், தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்றார் அவர்.

மற்ற மதங்களில் உள்ளது போல ஒரே ஒரு நூல்தான் இந்து மதத்தில் திருமறை என்று மதிக்கப்படும் இடத் தில் இல்லை என்றார் ஜெயப்பிரகாசம். தென்னிந்திய மரபில் சைவ சித்தாந்தம் மற்றும் வைணவ சித்தாந்தத்திலும், பகவத் கீதையை அறியாத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். எனவே பாஜகவின் இந்த முயற்சி என்பது , இந்து சமயத்தை மையப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இருக்கிறது என்றார் ஜெயப்பிரகாசம். அதே சமயத்தில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்ற ஒன்று அவசியம் தானா என்று கேட்டதற்கு, நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் நிலையில், இது போன்ற பிரச்சனை களைக் கையில் எடுப்பது தேவை யற்றது என்றும் அவர் கூறினார்.

Friday, December 19, 2014

திருநள்ளாறு - சனிப் பெயர்ச்சிப் பித்தலாட்டம்

விடுதலை செய்தியாளர்களின் நேரடி ரிப்போர்ட்


சூரிய மண்டலத்திலுள்ள இரண்டாவது பெரிய கோள் சனி. இது சூரியனிலிருந்து 142 கோடியே 60 லட்சம் கி.மீ. தொலை வில் உள்ளது. இது சூரியக் குடும்பத்தின் 6ஆவது கோளாகும். இதற்கு 47 துணைக் கோள்கள் இருக்கின்றன.

அதாவது 47 நிலவுகள், சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு (பூமியின் ஆண்டுக் கணக்குப்படி) 30 ஆண்டுகள் ஆகின்றன. சனிக்கோளுக்கு அதுதான் ஓர் ஆண்டு. அதாவது, சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் பூமி சூரியனை 30 முறை சுற்றி வந்துவிடும்.

நமது முன்னோர்கள் பார்வையளவில் கணித்து வைத்திருந்ததை இன்றைய அறிவியல் மிக துல்லியமாக கணித்துக் கொடுத்திருக்கிறது.
இத்தனை கோடி (சுமார் 122 கோடி கி.மீ.) தொலைவிலுள்ள சனிக் கோள், பூமியில் இருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குகிறது என்று எண்ணுவதே மடமை ஆகும்.

அப்படியே அவர்களின் எண்ணப்படியே கணக்கிட்டாலும் அதுவும் மிக மிகத் தவறான ஒன்றே! அதாவது, 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமிக்கு வந்து சேர்வதற்கு 8 நிமிடம் ஆகிறது. அதற்குள் பூமி ஒரு நிமிடத்திற்கு 28 கி.மீ. வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டும், ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் தன் நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றிப் பெயர்ந்து கொண்டுமிருக்கும்..

எனில் அந்த 8 நிமிடத்திற்குள் பூமி 223 கி.மீ. தன்னைத் தானே சுற்றியிருக்கும். நாம் பார்க்கும் நேரத்தில் கிளம்பும் சூரிய ஒளிக்கதிர் பூமியில் விழும் இடம் 223 கி.மீ. மாறியிருக்கும். (அதாவது சென்னைக்கு  விருத்தாசலத் துக்கும் உள்ள தொலைவு) 14300 கி.மீ. தொலைவு சூரியனைச் சுற்றி யிருக்கும். இதற்கிடையில் பூமி 23.5 டிகிரியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது தனிக் கணக்கு. 15 கோடி கி.மீ.க்கே இப்படி என்றால்? 127 கோடி கி.மீ.க்கு எப்படி? அதுவும் சனிக்கோள் ஒளி உமிழக் கூடியதும் அல்ல.

அப்படியே மக்கள் இதை நம்பித் தொலைத்தாலும் சனிப் பெயர்ச்சியை பூமியின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்த்துக் கொள்ளலாம். இதற்கான நேரம் மட்டுமே மாறுபடும். இவ்வளவு தானே தவிர திருநள்ளாற்று கொம்யூன் பஞ்சாயத்துக்குத்தான் வரவேண்டும் என்று கட்டுப்பாடான பிரச்சாரம் செய்வது என்பது இந்து மதம் நிலைத்திருப்பதற்கும் அதற்காக மக்களை முட்டாள்களாகவே வைத்திருப்பது அவசியம் என்பதற்கும், அந்த அப்பாவி மக்களிடம் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் பொருட்களையும் கொள்ளை அடித்து விட்டு, அவர்களை இடை விடா மல் கடவுள் சிந்தனையில் ஆழ்த்தி வைப்பதற்குமே ஆகும்.

இதில் பக்தர்கள் புரிந்து கொண்டிருப்பது இந்த ஹிந்து மதத்தின் சதியைப் பற்றி அல்ல. தன்னை இந்த இந்த இராசிக்காரன் என்றும், ஒரு இராசியிலிருந்து சனி இன்னொரு இராசிக்கு பெயர்கிறது என்பதை பெயர்கிறார் என்றும், அதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகிறது.

ஆகவே, 3 x 2½ = 7½ என்று கணக்கிட்டு 7½ நாட்டு சனி என்றும் மேலோட்டமாக தெரிந்து வைத்திருக்கின்றனர்; புரிந்து அல்ல.

இதை அம்பலப்படுத்த விடுதலை நாளேடு சார்பில் ஒரு குழு, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு சென்று வந்தது.

இனி, ஓவர் டூ திருநள்ளாறு...


சிறீ தர்ப்பாரண்யேஸ்வரர் தான் கருவறையில் இருக்கும் கல் கடவுள். அதாவது, தர்ப்பைப் புல் வளரும் காட்டைப் பாதுகாக்கும் கடவுள். (காட்டைத்தான் மனிதர்களை அல்ல!) ஆனால், வாடகைக்கு வந்தவர் வீட்டுக்காரரையே ஆக்கிரமிப்பு செய்தது போல, தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் வாடகைக்கு வந்த சனி பகவானை வைத்துக் கொண்டு, கருவறையில் இருக்கும் மூலவரை பின்னுக்குத் தள்ளி, சனிபகவானின் பெருமை பேசப்படுகிறது என்று புலம்புகிறார்கள் அங்குள்ள மூத்த குடிமக்கள்.
நளமகாராசனை சனீஸ்வரன் விரட்ட அச்சமடைந்த நளமகா ராசன் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தஞ்சமடைந்ததாகவும், எப்படியும் ஒருநாள் நளமகாராசன் வெளியில் வந்துதானே ஆக வேண்டும் என்று எதிர்பார்த்து சனீஸ்வரனும் அங்கேயே தங்கிவிட்டானாம்.

அரசனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து அச்சப்பட்ட மக்கள் சனீஸ்வரனை வணங்க ஆரம்பித்து விட்டார்கள். ஆக தலப்பட்டா தர்ப்பாரண்யேஸ்வரர் பெயரில் இருக்க, சனீஸ்வரன் சண்டமாருதம் பண்ணி கொண்டிருக்கிறான் என்பது தான் தலவரலாறு.

தர்ப்பாரண்யேஸ்வரரை வைத்து கல்லா கட்ட முடியாமல் தான் சனி பகவான் பேரில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. அது இன்று பலன் தருகிறது என்பன போன்ற விவரங்கள் உண்மை (செப்டம்பர் 16-.30, 2014) இதழில் விரிவாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

சனீஸ்வரன் ஒவ்வொரு ராசியாக இடம் பெயர்ந்து அந்த ராசிக்காரர்களுக்கு கேடு விளைவித்துக் கொண்டிருப்பானாம். இப்படி கேடு விளைவிப்பவன் எப்படி பகவானானான் என்று தெரியவில்லை! நாளேடுகளிலும், ஊடகங்களிலும் சனிப்பெயர்ச்சி திருவிழா வணிக விளம்பரம் முக்கியத்துவம் பிடிக்க, இண்டிபெண்டன்ஸ் டே, 2012, ஏலியன், ஸ்டார் வார்ஸ், அவதார், வார் ஆஃப் வேர்ல்ட்ஸ் என்று ஹாலிவுட் படங்களையெல்லாம் பார்த்திருந்த நமக்கு வானத்தில் நடக்கப்போகும் அதிசயத்தைப் பார்க்கும் ஆவல் இல்லாமலா இருக்கும்? அதுவும் பக்கத்திலேயே நடக்கிறது என்றால் பிளைட் டிக்கெட் மிச்சம்.

அப்படி என்னதான் நடக்கிறது என அறியும் ஆவலுடன்தான் புறப்பட்டுச் சென்றிரு ந்தோம். உள்ளே நுழையும் போதே நளன் குளித்த குளத்திற்குத் தான் முதலில் செல்ல வேண்டும் என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டனர். இதற்காகவே சோப், நல்லெண்ணெய் என்று அந்த வியாபாரம் வேறு களைக்கட்டியது. நாம் நேராக நளன் குளத்திற்குச் சென்றோம்.

அதுதான் அந்தக்குளத்திற்கு பெயர். அங்கே கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக் கள். உடை மாற்றும் அறை, பொருட்கள் வைக்கும் அறை அப்படி இப்படியென்று அமர்க்களப்பட இவைகளை ஜெயா, தந்தி, சன், டைமன்ட் (உள்ளுர்) தொலைக்காட்சிகள் வேறு நேரலை செய்து கொண்டிருந்தன.

பெண்கள், படித்துறை ஓரமாக குளித்துக் கொண்டிருந்தனர், ஒரு பக்கம் பெண்கள் உடை மாற்றும் அறைகள் இருக்க, குளிக்கும் இடத்திலேயே அணிந்திருக்கும் உடையைக் கழட்டிப்போட்டு விட வேண்டு மென்று சட்டம் வேறு. அதையும் அங்கே குளத்தினுள்ளேயே கிரில் கேட் அமைத்து அதில் எழுதியும் மாட்டியிருந்தனர்.

வேறு வழியில்லாமல் பெண்கள் சங்கடத்துடன் உடையைக் களைய வேண்டிய நிலை? இதற்காகவே படித்துறை பக்கம் குளிக்காமல், இளைஞர்கள் குளத்தின் உள்ளே கிரில் கேட் பக்கம் சென்று வேடிக்கை பார்க்கின்றனர். இது இல்லாமலா கோயில்? அண்மைக் காலமாகத்தான் இந்த உடைகளை குளத்தினுள்ளேயே கழற் றிப் போடும் பழக்கம். அதுவே இப்போது வழக்க மாகியிருக்கிறது.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று சனி பெயரும் நேரமான 2.43 பற்றி கவலைப்படாமல் அதற்கு முன்னும் பின் னும் குளித்தவர்கள் கழற்றிப் போட்ட அழுக்குடைகள் கங்கை நதியில் இறந்த பிணங்கள் மிதப்பதை போல அருவருப்புடன் மிதக்க அதிலேயே தான் மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.

அழுக்குத்துணி... 60 லட்சம்!


சரி இதற்கு என்னதான் தீர்வு? மக்கள் இப்படியேதான் குளிக்க வேண்டுமா என்று பார்த்துக்கொண்டிருந்தபோதே சீருடை அணிந்த ஊழியர்கள் அங்கு வந்து அந்த உடைகளை சேகரிக்கின்றனர். அதை சின்ன சின்ன மூட்டையாகக் கட்டி போட்டு டிராக்டரில் எடுத்து செல்கின்றனர்.

நாம் மிகுந்த ஆவலுடன் எங்கு? எதற்கு? எடுத்துச் செல்கிறீர்கள் என்று அவர்களை விசாரித்தததில் கோயில் நிர்வாகத்தைக் கேளுங்கள் என்று நம்மை மர்மத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டனர். நாம் கூடிய மட்டும் கோயில் தொடர்பான நபர்களிடம் விசாரித்ததில் அவர்களிடம் தான் கேட்கவேண்டும், இவரிடம் தான் கேட்கவேண்டும் என்று கூறி நம்மைத் தவிர்ப்பதிலேயே குறியாய் இருந்தனர். துணிக்காக மட்டுமல்ல. எல்லா விசயத்திற்கும்தான்.

வேறு வழியின்றி மக்களிடம் விசாரிக்கும் பொழுதுதான் நமக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதாவது இந்த அழுக்குத் துணிகள் வெளுக்கப்பட்டு மீண்டும் விற்கப்படுகின்றன. அல்லது மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படு கின்றன. இதற்காக இந்த ஆண்டுக்கு ரூபாய் 60 லட்சத்திற்கு கோயில் சார்பாக குத்தகை விடப்பட்டுள்ளது. குத்தகையே 60 லட்சம் என்றால்? குத்தகைதாரர் எவ்வளவிற்கு விற்பார் என் பதை உங்கள் கணக்குக்கே விட்டு விடுகிறோம்.

மக்கள் உடுத்தியுள்ளதையும் கழற்றிப் போட வைத்து அதில் லட்சக்கணக்கில் காசு பார்க்கும் சாமர்த்தியம் பாவமும், புண்ணியமும் நரகமும் இல்லை என்பதை அவர்களாகவே ஒத்துக்கொண்டதாகவே தெரிகிறது. இது மக்களுக்கு விளங்க வேண்டும். விளங்க வைக்கவும் வேண்டும்.

அதுமட்டுமல்ல காலை முதல் மாலை வரை நாம் அங்கேயே சுற்றிச்சுற்றிப் பார்த்ததில் ஊடகங்களின் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் நமக்கு தெரிய வந்தது. அதாவது, போனால் போகிறது என்று அதிகபட்சமாக கணக்கிட்டாலும் 25,000 பேர்களுக்குமேல் வந்து போகிற மக்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் 8 லட்சம், 10 லட்சம், 12 லட்சம் என்று வெட்கமில்லா மல் புளுகித் தள்ளுகின்றனர்.

இந்த ஆண்டு வந்திருக்கின்ற மக்கள் எண்ணிக்கையே கூட சென்ற ஆண்டு வந்தவர்களை விடக் குறைவு என்று அங்கிருக்கும் மக்களே சொல்கின்றனர். அதுமட்டுமல்ல, திரும்பத்திரும்ப வருகிறவர்கள் ஒரு சிலரே. புத்தம் புதிதாக ஏமாறுபவர்கள்தான் அதிகம் வந்து செல்கின்றவர்.

பிறகு கோயில் பக்கம் நம் பார்வை திரும்பியது. பக்தி என்பது வெறும் வியாபாரம் தான் என்பதையே அங்கும் காண முடிந்தது. சாதா தரிசனம் ரூ.200, சிறப்பு தரிசனம் ரூ.500 என்று தனியே கவுன்டர் வைத்து டிக்கெட் விற்கப்பட்டுக் கொண்டிருந் தன. வழக்கம் போல தர்ம தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், நம்மைப் பார்த்ததும் நம்மிடம் சீறியும், புலம்பியும் தள்ளிவிட்டனர்.

காசு இருக்கிறவனுக்குத்தான் கட வுளா? எங்களைப் பார்த்தால் பக்தர்களாக தெரியவில்லையா? கால் கடுக்க, மதிய உணவு கூட உண்ண முடியாமல் தவிக்கி றோமே, இதை எப்படியாவது அம்மாவிடம் சொல்லி நடவடிக்கை எடுங்கள் என்று ஒரு பெண் நம்மிடம் புலம்பினார். என்ன செய்ய... தான் இருப்பது புதுச்சேரி மாநிலம்  என்பதோ, தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் மாறிவிட்டார் என்பதோ தெரியமுடியாத பக்தர் அவர்.

அவர் புலம்பலில், இயலாமையும், ஏமாற்றமும் இருந்ததே தவிர இந்த ஏற்றத் தாழ்வுக்கு இடம் கொடுக்கலாமா இந்தக் கடவுள் என்று கடவுள் மீது கோபம் வரவில்லை? அதுசரி, அது வந்தாதான் அவங்க இந்த கோயிலுக்கே வந்திருக்க மாட்டார்களே.

இது ஒரு பக்கம் இருக்க, எப்படியாவது உள்ளே சென்று சனி பகவானை தரிசித்து விட வேண்டும் என்று தவித்த மக்கள் ரூ.200, டிக்கெட்டை வாங்கியபடி பார்க்க முயன்று முயன்று நேரமாக நேரமாக பொறுக்க முடியாமல், அந்த டிக்கெட்டை பாதி விலைக்காவது விற்க முயல, அதையும் வாங்க ஆளில்லாமல் நொந்து போய் திரும்பினர்.

இன்னொரு பக்கம் இலக்கு வைத்து கல்லா கட்ட கோயில் நிர்வாகம் திறந்து வைத்து கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்த இரண்டாவது சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்ட்டர், டிக்கெட் வாங்க ஆளில் லாமல் உள்ளே இருந்தவர்கள் ஈ ஓட்டிக் கொண்டி ருந்தனர்.

ஊடகங்களின் அதீத விளம்பரம்!

அறிவுக்கும், அறிவியலுக்கும் சற்றும் தொடர் பில்லாத இந்த மூடநம்பிக்கை வணிகக் கொள்ளைக்கு ஊடகங்கள் கொடுத்த விளம்பரங்களால்தான் இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இன்றும் கூட அந்த ஊடகங்கள் தான் அதீத விளம்பரத்தையும், பிரச்சாரத்தையும் செய்துகொண்டிருக்கின்றன.
அதையொட்டி அவர்களுக்கும் பெரிய அளவில் விளம்பர வருவாய், லாபம், கொள்ளை! அதற்கென்று வெளியிடப்படும் சிறப்பு இதழ்களிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மூடநம்பிக்கைக் கருத்துகள் கொஞ்சமும் லாஜிக் இல்லாமல் பொழிந்து தள்ளப்படுகின்றன.

முகநூலில் இது குறித்து அதிஷா எழுதியிருக்கும் இந்த கருத்தே போதுமானது.
மீடியா முழுக்க கடந்த ஒன்றரை மாதமாக சனிப்பெயர்ச்சி என்பதை ஏதோ உலக அழிவுக்கு ஒப்பான ஒரு நிகழ்வாக ஊதிப்பெருக்கி வகுத்து கூட்டி... பாவப்பட்ட அப்பாவி பொது ஜனங் களை உறையும் பீதியில் முடக்கி வைத்திருக்கிறார்கள்.

அனேகமாக இவர்கள் கொடுத்த ஓவர் அலப்பறைஸ் ஆஃப் அஸ்ட்ராலஜியில் சனிபகவானுக்கே பீதியாகி அவரும் கூட நம்ம ராசிக்கு என்ன பலன் போட்டி ருக்கான் எங்கே போய் பரிகாரம் பண்ணலாம் சுவாமிஜி நான் தப்பிக்கவே முடியாதா என்று மென்டலாகி மெர்சலாகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

ரா..ரா...மனசுக்கு...

சனிப்பெயர்ச்சி விழா கூட்டத்தின் ரகசியம் குளக்கரைக்கு சென்றபோதுதான் புரிந்தது. பக்தர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையை அந்தக்குளத்தில் மூழ்கி எழுந்தபின் அங்கேயே களைந்துவிட்டு வந்து விடவேண்டுமாம்.
அப்படி விடுவதன் மூலம் அவர்களை பிடித்த சனி விலகிவிடும் என ஒரு புரட்டை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து அமைப்பினர் திட்ட மிட்டு பரப்ப, அந்தக்காட்சியை காண்பதற்கென்றே இளைஞர்கள் கூட்டம் படையெடுக்க ஆரம்பித் திருக்கிறது.

கூட்டம் கூடுவது ஒரு புறம் அதிகரிக்க, அங்கு அவிழ்த்து விடப்படும் ஆடைகள் பல லட்சத்திற்கு ஏலமும் விடப்படுகிறது. கூட்டத்திற்கு கூட்டமும், வரும்படிக்கு வரும்படியும் வந்து சேருகிறது. (இந்த வியாபாரம் பிற கோயில் குளங்களிலும் விரைவில் அமலாகக் கூடிய அபாயம் இருக்கிறது.)

திருநள்ளாறையும் விடாத திருட்டு டிவிடி

திருநள்ளாறு தல வரலாறு - டிவிடி குறைந்த விலையில் 10, 15, 20 ரூபாய்க்கு என்று  விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதே வேளையில் குறைந்தவிலை என்று  போலி டிவிடிகளை வாங்கி ஏமாறாதீர்கள் என்ற விளம்பரப் பதாகையும் இன்னொரு பக்கத்தில் கண்ணில் பட்டது. சனீஸ்வரா!

ரொட்டேசனில் பூஜைப் பொருட்கள்

இது பல கோவில்களிலும் நடக்கும் ஒன்று தான். இங்கேயும் உண்டு - ஆனால் இங்கே மேட்டர் துண்டுதான். கோவிலுக்குப் பூஜைக்குச் செல்லும்போது அர்ச்சனைப் பொருட்களை (எள்ளு, கருப்புத் துண்டு, பூ, பழம், தேங்காய் எக்சட்ரா.. எக்சட்ரா..) வீட்டிலிருந்து நீங்கள் எடுத்துவரக்கூடாது. அங்கு உள்ள கடைகளில் தான் வாங்க வேண்டும். அப்படி வாங்குவது எல்லாமே பக்தர்கள் வீட்டுக்குச் செல்வதில்லை.

அவற்றை கோயி லிலேயே கொடுத்துவிடவேண்டுமாம். விருப்பப்படும் சிலர் மட்டும் கையில் வாங்கிச் செல்கிறார்கள். மற்றபடி, 90 விழுக்காடு மடிப்புக் கலையாத துண்டுகள் மீண்டும் அடுத்த சுற்று விற்பனைக்கு கோயிலின் உள்ளே உள்ள கடைகளுக்கு வந்துவிடுகின்றன. (உணவு டோக்கன்கள் பற்றி தனியாக படித்திருப்பீர்கள்)

சனிப்பெயர்ச்சியைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தவர்கள் அங்கிருந்த வியாபாரிகளே! பக்திப் பிரவாகத்தோடு மதியம் 2:43 மணி-க்குக் காத்திருந்த பக்தர்களிடம் இருந்து கூடுமானவரை காசுவாங்கி கல்லாவை நிரப்புவதில் குறியாய் இருந்தது கோயில் நிர்வாகமும், சுற்றுப்பட்டு கடைகளும்! வெளியூர் களிலிருந்து வந்து கும்பிட்டுக் கொண்டிருந்த பக்தர்கள் மத்தியில், உள்ளூர்க்காரர்களும் சுற்றுப்பட்டு கிராமத்த வர்களும் புது வியாபாரிகளாக மாறியிருந்தனர்.

பலித்தவரை பார்ப்பனியம் என்பது போல, முடிந்த வரையிலும் மக்களிடம் சுரண்டும் தொழில் அங்கு நடந்து கொண்டிருந்தது.

இதெல்லாம் சரி, அந்த உலகப் புகழ் பெற்ற சனிப் பெயர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். அந்த 2.43இல் என்னதான் நடந்தது. ஆனால், அதிலும் ஒரு முக்கியமான சதி நடந்தது.

அதாவது, நளன் குளத்தைச் சுற்றி புறாக்கள், காகங்கள், பருந்துகள் ஆகியவை பறந்தும், சுற்றியிருக்கும் மரங்களில், அமர்வது மாக இருந்தன. இது மக்கள் கூடத் தொடங்கியதுமே அவைகள் பறக்கத் தொடங்கிவிட்டன. இப்படி பறப் பதும், அமர்வதும் என்று இருந்த பறவைகள் 2.30க்கு மேல் சென்று அதனதன் இடங்களில் அடங்கிவிட்டன.


பிரளயம் போல் ஏதாவது நடந்திருக்க வேண்டு மல்லவா? ம்... ஹூம்... நஹி... நஹி... 2.43 மணிக்காக குளத்தில் மக்களும், வெளியில் மிகக் குறைந்த அளவில் மீடியாக்களும் என்ன நடக்குமோ என்று காத்தி ருந்தனர். 2.43 மணியும் தொடங்கியது. சரி, எப்படித்தான் இதை அறிவிப்பார்கள் என்றிருக்கையில், கோயில் தேர் வடம் பிடிப்பதை அறிவிக்க வேட்டு வைப்பார்களே! அந்த வேட்டை மூன்று முறை வெடித்தார்கள். உடனே குளத்தில் இருந்தவர்கள் உணர்ச்சி வயப்பட்டு முங்கி எழுந்தனர். மறுமுறை இரண்டு வேட்டு விட்டனர்.

வேட்டு நளன் குளத்தருகில் வைக்காமல், திட்டமிட்டு வெளியில் வைத்ததால், வேறு வழியின்றி பறவைகள் நளன் குளத்தின் மேலேயே பறந்தன. வேட்டு இங்கே வைத்திருந்தால், பறவைகள் குளத்திற்கு வெளியே பறந்திருக்கும். இந்தச் சதியைப் புரிந்து கொள்ளாமல், பறவையோடு பறவையாக பறந்த பருந்துகளையும், சனி பகவானையும் இணைத்து மக்கள் பரவசமடைந்தனர். மதியம் மணி 2:43அய் இயல்பாகக் கடந்து 2:44க்கு நகர்ந்தது கடிகார முள்.
எப்படியும் ஏமாற, மக்கள் தயாராக இருக்கும் போது இப்படிப்பட்ட மோசடிகள் நடந்து கொண்டுதானிருக்கும். இத்தகைய மடமைகளுக்கு எதிரான நம் போராட் டமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

பணமும் கோவிந்தா? புண்ணியமும் கோவிந்தா?

எந்த கோயிலாக இருந்தாலும் சரி அன்னதானம் செய்தால் புண்ணியம் என்பது பொதுவான அய்தீகம். (அதற்காகவென்றே சுற்றிலும் பிச்சைகாரர்கள் கும்பல்) அதற்கு இந்த திருநள்ளாறு கோயிலும் விதிவிலக்கல்ல. அங்கு வந்து சமைத்து வைத்து படைக்க வாய்ப்பில்லாததால், பக்தர்கள் சிலர் அங்குள்ள உணவுக் கூடங்களில் (Hotels) உணவுக்கான சீட்டு (Token) வாங்கி அதை தானம் பெற காத்திருப்போரிடம் கொடுத்துவிடுகின்றனர்.

அதை வாங்குவது பெரும்பாலும் பிச்சை எடுப்பவர்களே. இப்படி ஒரே பிச்சைக்காரரிடம் உணவிற்கான எண்ணற்ற சீட்டுகள் (Token) சேர்ந்துவிடுகிறது. சரி அவர்களாவது இதை பயன்படுத்தினால், அதை வாங்கிக்கொடுத்துவருக்கு புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால் அதிலும் மண்தான். அதாவது பிச்சைக்காரர்கள் அங்கு ஓசியில் கிடைக்கும் உண்டைக்கட்டி உணவை வாங்கி சாப்பிட்டுவிடுவதால், அவர்களுக்கு தானம் செய்யப்பட்ட அந்த உணவுக்கான சீட்டை அந்தப் பிச்சைகாரரும்  பயன்படுத்தவில்லை.

சரி, என்னதான் செய்கிறார் என்று பார்த்தால் அது, எந்த உணவுக்கூடத்தில் காசுக்காக வழங்கப்பட்டதோ அதே உணவுக் கூடத்துக்கு பாதி விலைக்கே திரும்ப போய்விடுகிறது. (சாப்பாட்டுக் கடைக்காரருக்கும், பிச்சைக்காரருக்கும் இடையே இப்படி ஓர் ஒப்பந்தம்) இது எப்படி இருக்கிறது? கடைக்காரருக்கு காசு!

உணவும் தயாரிக்கப்படாமல், வழங்கப்படாமல் அதோடு மட்டுமா? வழங்கப்பட்ட உணவுச்சீட்டும் பாதி விலைக்கே திரும்ப எடுத்துக் கொண்டார் அல்லவா? மீண்டும் அந்த உணவு டோக்கன் விற்பனைக்குத்தயார். இது எப்படியோ போகட்டும். இந்த அன்னதானம் செய்ய நினைத்தாரே... அந்த பக்தரின் நிலை?

இருந்த பணமும் கோவிந்தா!! இல்லாத புண்ணியமும் கோவிந்தா!

வியாபாரத் துளிகள்
  • சிறு துணியில் கட்டி விற்கப்படும் எள்ளை வாங்கி எரிந்து கொண்டிருக்கும் கொப்பறையில் போட்டால், பாவம் தொலையும் என்பதால், பக்தர்கள் தங்கள் தலையைச் சுற்றி எண்ணை அந்த கொப்பறையில் போடுகின்றனர். கொஞ்ச நேரத்தில் காசு கரியாகிறது.
  • ஒட்டு மொத்த பாவம் போக்க சனி பெயர்ச்சி, அது இது என்று ஒரு பக்கம் மக்கள் பையிலிருக்கும் பணத்தை பிடுங்காத குறையாக வாங்கிவிட, இது போதாதென்று கைரேகை, ஜோதிடம், கல் விற்பனை என்று இது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது.
  • சனிப் பெயர்ச்சிக்கு மக்களை வரவேற்று கோயில் நிர்வாகம் சார்பிலும், ஹிந்து மதம் சார்பிலும் வரவேற்பு பேனர்கள் எங்கெங்கும் காணக்கிடக்க, நாங்கள் மட்டும் இளைத்தவர்களா என்ன என்று, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளின் உள்ளூர்ப் பிரநிதிகளும் அந்த வரிசையில் கலந்து கொண்டனர்.
  • மோடி என்றாலே மோசடி என்பது போல, பிரத மர் மோடி பற்றிய ரூ.10 மதிப்பு உள்ள புத்தகம் ரூ.20க்கு விற்றுக் கொண்டிருந்தனர். அதே போல, பத்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த தேங்காய், கோயில் பக்கத்தில் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
  • மக்களை நெறிப்படுத்த முயன்று கொண்டிருந்த காவல் துறையினருக்கே தங்கள் மீது நம்பிக்கையில்லை திருடர்கள் ஜாக்கிரதை என்று நூற்றுக்கணக்கானவர் களின் படத்துடன் பிளெக்ஸ் போட்டு நிறுத்தியிருந்தனர். ஆக, மக்கள் கோயிலில் இழந்தது போக, இந்த திருடர் களிடமும் இழந்திருக்க வேண்டும். இது பற்றிய செய்தி கள் வராமலேயே கூட போகலாம்.
  • அழுக்கும், சிறுநீரகம் சேர்ந்த நளன் குளத்து நீரை பம்ப் செட் வைத்து தொடர்ந்து வெளியேற்றுகின்றனர். அதையும் சிலர் பாட்டிலில் பிடித்துக் செல்கின்றனர். இதிலென்ன வேடிக்கை, அண்மையில் மறைந்த ஒரு பார்ப்பனர், இந்தப் புனித (?) நீரை சின்னச் சின்ன பாட்டில் களில் அடைத்து விற்பனையே செய்திருக்கிறார்.
  • பிராமணாள் கபே ஒழிந்து ஆங்காங்கே "அய்யர் காபி" விற்பதை பார்க்க முடிந்தது
  • சனீஸ்வர பகவானுக்கு வேண்டி மொட்டை யடிக்க (இதுவும் அந்தக் கோயிலில் அண்மைக்கால புது வியாபாரமே) ரஜினிகாந்த் மொட்டைத்தலை கெட் அப்பில் உள்ள படத்தைப் போட்டு விளம்பரம் செய் திருந்ததைப் பார்த்து குபீரென சிரித்துவிட்டோம்.
  • முன்பெல்லாம் தில தீபம் என்று ஒற்றைத் திரியை வைத்து கொளுத்தி வழிபடுவதுதான் வழக்கமாம். நடிகர் ரஜினிகாந்த் இந்த கோவிலுக்கு வந்து 12 தீபங்களை ஒரே தட்டில் வைத்து வழிபட்டதிலிருந்து, புதிதாக அந்தப் பழக்கமும் சேர்ந்துவிட்டதாம். கோயிலுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டதே சிவாஜி என்ற படத்தில் இக்கோயிலைப் பற்றிக் காண்பித்தபின்பு தானாம். ஏதோ வியாபாரம் ஆனால் சரி!
  • கோயிலில் அர்ச்சகர்களுக்குள் முறை வைத்து, அதற்கென ஆள்போட்டு அர்ச்சனைத் தட்சணையில் பங்கு வைக்கப்படுமாம்.
செயற்கைக்கோள் செயலிழக்குமா? பொய்ப்பித்த தொலைக்காட்சி நேரலை
சனீஸ்வர பகவானின் அருளால், தாக்கத்தால் சனிக் கிரகத்திலிருந்து வரும் ஒளிக்கற்றை அல்லது கதிர்வீச்சால் திருநள்ளாறுக்கு மேலே பறக்கும் விமானம், செயற்கைக்கோள் அல்லது ராக்கெட் போன்றவை ஓரிரு நிமிடங்கள் அல்லது நொடிகள் செயலிழந்து விடுகின்றன அல்லது நின்று மீண்டும் பறக்கின்றன. (எதுவும் உறுதி இல்லாததால் தான் இத்தனை அல்லதுகள்.

கண்ணதாசனோ, ஜேசுதாசோ... பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு என்ற திரைப்பட நகைச்சுவை போலத் தான் இருக்கிறது இவர்கள் கதையும்!) சரி... இப்படிச் சொன்னது யார்? நாசாவாம்! திருநள்ளாறின் இந்த சக்தியைக் கண்டு அதிசயித்து ரகசியமாக வந்து ஆராய்ச்சி செய்து பார்த்தார்களாம்.

ஆனால், எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்! இப்படி ஒரு புரட்டுக் கதையை உலகப் புகழ் பெற்ற நாசா ஆய்வு மய்யத்தை வைத்தே, 7 ஆண்டுகளுக்கு முன்னர் கிளப்பிவிட்டனர். ஆனால், இன்றும் அது புதுசு போலவே ஓடிக் கொண்டிருக்கிறது. இதையே விளம்பரமாகவும் கொடுத்திருக்கிறார்கள். அதைப் படித்துவிட்டு நம்மிடம் நாசாவே வியந்த திருநள்ளாறு என்று பதிகம் பாடாத குறையாக வியந்து புகழ்கிறார்கள் பக்தர்கள்.

நாசா அப்படிச் சொன்னதா? ஓரிரு நிமிடங்களோ, நொடியோ செயற்கைக் கோள் செயலிழந்து போகுமா? அப்படி செயலிழந்தால் மீண்டும் செயல்படவைக்க முடியுமா? அதன் சுற்றுப் பாதையில் சுற்றுமா? நியூட்டன் விளக்கிச் சொன்ன விதிப்படி, எந்த ஒரு புற விசையும் இல்லாமல் ஒரு பொருள் மீண்டும் நகரமுடியுமா? அப்படியே சனிபகவான் சக்தியால், செயற்கைக் கோள் நிற்குமேயானால், பின்னர் யார் சக்தியால் பறக்கிறது? செயற்கைக் கோள் செயலிழக்கும் என்றால், கூகிள், விக்கிபீடியா மேப்புகளில் திரு நள்ளாறு படம் வந்தது எப்படி?  என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினால், இல்லையில்லை... அது சனிப்பெயர்ச்சி நடக்கும் நேரத்தில் தான் அப்படி.

அதுவும் அந்தக் குளத்தில் தான் நடக்கும்.! என்றார்கள் சிலர். இல்லை யில்லை..கோவிலில் என்றார்கள் சிலர். செயற்கைக் கோளையே செயலிழக்க வைக்கும் அளவு சக்தியுள்ள ஒரு ஒளி/ஒலிக்கற்றை சனிக் கோளிலிருந்து வரமுடியுமா? சனி ஒளி உமிழும் கோள் அல்ல.. அது சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கக் கூடிய ஒன்று தான். அங்கிருந்து அப்படி எந்த ஒளியோ, அலையோ, கதிர்வீச்சோ இங்கு வர வாய்ப்பில்லை.

அப்படி வருவதாயிருந்தாலும் அது வந்துசேர்வதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை முன்பு நாம் சொன்ன சூரிய ஒளிக் கணக்கை வைத்து நீங்கள் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். அதே சனிப்பெயர்ச்சி நேரத்தில் செயற் கைக் கோளே செயலிழந்து போகும் எனில், செல் பேசிகள் என்னாவது? குறைந்தபட்சம் அவையாவது செயலிழந்து போக வேண்டாமா? அதையும் சோதித்துப் பார்த்தோம்.

அதே 2:43 மணிக்கு கோயிலுக்குள்ளிருந்து நண்பர் அழைத்த அழைப்பை, குளத்திலிருந்து எடுத்துப் பேசிய போதும் எந்த வித சிக்னல் பிரச்சினையு மில்லாமல் தெளிவாகக் கேட்டது. (அதைப் பதிவு செய்தும் வைத்துள்ளோம்.) அடுத்த ஆண்டில் ஜாமர் கருவிகளைப் போட்டு தடை செய்ய முயன்று மீண்டும் அறிவியலைத் தேடி வந்தாலும் வருவார்கள்.

தவிர, காவல்துறையினரின் வாக்கிடாக்கிகள் இயங்கின. திருநள்ளாறிலிருந்து நேரலை (செயற்கைக் கோள்களின் உதவியுடன்) செய்துகொண்டிருந்த சன் நியூஸ், தந்தி, ஜெயா மற்றும் சில உள்ளூர் தொலைக் காட்சிகளின் ஒளிபரப்புகளும் எவ்வித சிக்னல் சிக்கலுமின்றி துல்லியமான ஒளிபரப்புடன் இயங்கின. 2:43 மணி-க்கு சனியிலிருந்து வரும் கருநீலக் கதிர்களை படம்பிடித்துவிடலாம் என்று எதிர்பார்த்து சுற்றிலும் கேமராவோடு நம்மைப்போலவே நின்றுகொண்டி ருந்த யாருக்கும் கதிர்கள் புலப்படவில்லை;

கதிர்களால் எந்தத் தடையும் ஏற்படவில்லை. ஊடகங்கள் பரப்பிய புரளியும், பொய்யும் அந்த ஊடகங்களின் நேரலை ஒளிபரப் பினாலேயே பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதே! இனியாவது, இந்த ஊடகங்கள் இந்த பித்தலாட்டத் திற்குத் தரும் விளம்பரத்தை நிறுத்திக் கொள்ளுமா?

Mobile Court

வந்திருக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பாவத்தை போக்குவதற்காக இங்கே வந்திருக் கிறார்கள் என்று ஜலக்கிரீடையை நேரலை செய்த தனியார் தொலைக்காட்சிகள் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன. ஆக, அங்கு வந்திருக்கும் மக்கள் ஏதோ ஒரு வகையில் பாவம் செய்தவர்களே!

அதாவது, குற்றங்களைச் செய்து விட்டு, இதிலிருந்து - அந்த பாவத்திலிருந்து விடுபட நளன் குளத்திற்கு வந்திருக்கின்றனர்.

அப்படி என்றால்? வந்திருக்கும் அனைவரின் மீதும் FIR போட்டு குற்றப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்திருக் கலாமே? வந்தவர்களை விட்டுவிட்டு, பின்னர் வடை போச்சே என்று திரைப்பட நடிகர் வடிவேலு மாதிரி அங்கலாய்க்க வேண்டியதில்லை அல்லவா?

திருநள்ளாற்றைச் சுற்றி வளைக்கும் இந்துத்துவாக்கள்!


திருநள்ளாறுக்குச் சென்று இறங்கிய உடனேயே நமக்குக் கிடைத்த தகவல்களில் ஒன்று. போன வருசம் மாதிரி இந்த வருசம் கூட்டமில்லை என்பது. அதனால் உடனே பக்தி போய்விட்டது என்றெல்லாம் முடிவு கட்டிவிட முடியாது.

அந்த ஆட்டோகாரரின் கருத்துப்படி, இப்போ பிஜேபி ஆட்சியிலிருப்பதால் இந்து முஸ்லிம் பிரச்சினை அது இதுன்னே ஏதாவது பிரச்சினையாகும்கிற பயம் இருக்கு! என்றார். அவர் சொன்னதில் ஓர் உண்மை உண்டு. திருநள்ளாறு பகுதியில் உள்ள பக்தி வணிகத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவக் கும்பல் பலவகையிலும் உள்ளே புகுந்திருக்கிறது.

பி.ஜே.பி.யில் வந்து சேருங்கள்... எங்களுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று எர்வாமாட்டின் விளம்பரம் போல சுற்றிலும் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளில் ஒரு கையை உயர்த்தியபடி ஷோ காட்டுகிறார் மோடி.

கூடவே அமித்ஷா, உள்ளூர் பி.ஜே.பி.யினர் படங்கள். ஹரே ராமா... ஹரே கிருஷ்ணா என்று கீதையை ரூ.100க்கும், நூற்றி சொச்சத்துக்கும் உரக்கக் கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள் சில சிண்டு தரித்த பார்ப் பனர்கள். அவர்களுக்குப் பக்கத்திலேயே கையேந்திக் கொண்டிருக்கிறார்கள் பார்வையற்ற பக்தர்கள் சிலர்!

உங்களுக்காகப் பிரார்த்திக்கிறோம்... உங்கள் உடல்நலனுக்காகப் பிரார்த்திக்கிறோம்... அதற்காக இந்த(து) அமைப்பு! உங்கள் கல்வி வளர்ச்சிக்காகப் பிரார்த்திக்கிறோம்... அதற்கு இந்து மதம் இன்னின்ன வழிமுறைகளைக் கூறுகிறது அதற்காக இந்த அமைப்பு! எப்படி மந்திரங்களைச் சொல்லி, இறைவனைப் பிரார்த்தித்து அதிக மதிப்பெண் பெறுவது என்பதைச் சொல்லுவதற்கும், வழிகாட்டுவதற்கும் (!?) ஓர் அமைப்பு! நீங்கள் இதில் பயன்பெறலாம்... வந்து பார்க்கலாம்... அங்கு எண்ணற்றோர் உதவிபெறுகிறார்கள்...

எல்லோருக்கும் தங்குமிடம், உணவு இலவசம்... என்று நான்கைந்து துண்டறிக்கைகளைக் கையில் திணித்துவிட்டு, உங்களால் முடிந்ததைக் கொடுத்து உதவலாம் என்று வருகிறது கடைசி வார்த்தை. பிறகு பார்க்கலாம் என்றால்... இருப்பதைக் கொடுங்க என்கிறார் அந்தப் பெண்மணி. சில்லறை இல்லைங்க என்றால், எவ்ளோன்னாலும் நாங்க கொடுக்கிறோம் என்கிறார்.

சரி, பார்ப்போம் என்று கிளம்பியவரிடம், நோட்டீசுக்காவது காசு கொடுங்க என்றார். 10 ரூபாய் எடுத்து நீட்டியவரிடம் 20 ரூபாயைப் பிடுங்கிக் கொண்டு தான் விட்டார் அந்த அம்மையார். பக்கத்தில் இருந்து பார்த்ததே நம்மை பயமுறுத்த, மாட்டுவோமா நாம்? எஸ்கேப்.

தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு. ஏகப்பட்ட அய்யர்களையும், அய்யாக்களையும் இந்திராணிகளையும் காணாமல் அறிவிப்பு வந்துகொண்டிருக்க, ஜோசியர் சுப்பிரமணியத்தின் மனைவியைக் காணாமல் அவர் தேடிக் கொண்டிருந்தபோது தான், மனுசன்... இதைக் கண்டுபிடிக்க முடியாமல் என்ன ஜோசியர் என்று அலுத்துக் கொண்டார்கள் பக்தர்கள்.பாவம்!

அறிவிப்பு செய்தவரைத் தவிர மற்ற அனைவரையும் தேடியிருப் பார்கள் போல... அவர்கள் அறிவித்த பட்டியல் அவ்ளோ நீளம். திருநள்ளாறு கோயில், குளத்தைச் சுற்றிலும் ஒலித்துக் கொண்டிருந்த இந்த அறிவிப்புகளின் மூலமாக தங்களுடைய ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருந்தது ஜன கல்யாண் அமைப்பு! ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் அவர்கள் நடத்துவதைப் போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவித்திருந்தது மக்கள் மத்தியில்.

பக்தி மய்யங்களை இந்துத்துவாவின் பெயரால் ஒன்றிணைப்பது எளிது என்பதுதானே அவர்களின் வளர்ச்சிக்கான சூத்திரம்!
- விடுதலை சிறப்புச் செய்தியாளர் குழு

Tuesday, July 8, 2014

சுருக்கேள்விகள்..... மனிதன் கேட்கிறான்

காசிக்கும், கயிலைக்கும் செல்வதன் மூலம் சொர்க்கத்தை அடைய முடியும் எனில் - காசில்லாதவன் சொர்க்கத்தை எவ்வாறு அடைவது?

அனைவரும் கடவுளின் குழந்தைகள் எனில், சோமாலியா மக்கள் யாருடைய குழந்தைகள்?

ஈரேழு உலகிற்கும் படைப்பின் கடவுள் பிரமன் எனில் - வேறு மதம் சார்ந்தவர்கள் யாரால் படைக்கப்பட்டார்கள்?
மதங்கள் என்பவை மனித மனதை ஒழுங்குபடுத்தத் தோன்றியவை எனில் - கோயில்களும் - மசூதிகளும் ஏன் இடிக்கப்படுகின்றன?

முற்றும் துறந்தவன் முனிவன், முனிவர்க் கெல்லாம் முனிவன் கடவுள் எனில் - பல கோடீஸ்வரக் கடவுள்கள் இருப்பது எப்படி?

தூணிலும் இருப்பான், துரும்பிலும், இருப்பான் கடவுள் எனில், தனிப்பட்ட முறையில் கோடீஸ்வரர்கள் எதற்கு?

அநீதியை அழிப்பவன் கடவுள் எனில், பாவங்கள் நிறைந்த கலியுகம் எப்படிக் கடவுளின் விதியால் நிகழ்ந்து கொண்டிருக்கும்?

பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்வதன் மூலம் கடவுளின் ஆசி கிடைக்கும் எனில், வழி அற்ற வறியவனுக்கு கடவுளின் ஆசி எப்படிக் கிடைக்கும்?

கோயில் திருவிழாக்கள், ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் கலவரங்களை ஏற்படுத்துமாயின் கலவரங்களை ஏற்படுத்தும் கடவுளும், மதங்களும் தேவையா?
கருணை உள்ளவன் கடவுள் என்றால்  உயிர்ப் பலி கேட்டது யார்?

எல்லாம் விதியின் செயல் எனில், தண்டனை ஏன் நமக்கு?

ஒழுக்கத்தில் பிறந்த கடவுளைக் கவர, திருவிழாக்களில் அரைகுறை ஆடைகளுடன் ஆட்டங்களை ஆடச் சொன்னது யார்?

எல்லாம் அவன் செயல் எனில், குற்றங்களுக்குப் பின்னாலும் கடவுள் நிற்கிறாரா?
தெய்வம் நின்று கொல்லும் அதுவரை, பாதிக்கப்பட்டவன் உயிரோடு இருப்பானா?

எல்லாவற்றையும் காக்கும் கடவுளைக் காக்க, கதவும் பூட்டும் எதற்கு?

நல்லவர் மனதெங்கும் கடவுள் உள்ளார் எனில், கடவுளை மலையேறித் தரிசிக்க வேண்டிய அவசியம் என்ன?

கடவுள் முன் அனைவரும் சமம் எனில், சிறப்புக் கட்டண நுழைவுவாயில் எதற்கு?

அவனன்றி ஓர் அணுவும் அசையாது அணுவின்றி அவனாலும் அசைய முடியாது

பாவத்தின் சம்பளம் மரணம் எனில், பிறந்த குழந்தைகளும் இறப்பது ஏன்?

சமஸ்கிருதம் கடவுளின் மொழி எனில், சமஸ்கிருதம் தெரியாதவர்கள் கடவுளை எவ்வாறு தொடர்பு கொள்வது? கற்களில் செய்யப்பட்டு, கதவுகளில் அடைக்கப் பட்டவர் கடவுள் எனில், கதவுகளுக்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கு கடவுள் எப்படி உதவுவார்?
ரா.கேசவன்,
புதுக்கோட்டை


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...