Showing posts with label குடியரசு. Show all posts
Showing posts with label குடியரசு. Show all posts

Thursday, December 19, 2013

தேவதாசி விண்ணப்பம்

நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபடவேண்டு மென்பதாக பலர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, சென்னை சட்டசபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்ட சபையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

அதன் தத்துவம் என்னவென்றால், விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும், அப்படிச்செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி, என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த விண்ணப்பம் அச்சகோதரி களால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும், அதற்குப்பின்புறம் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது.

ஏனெனில், அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவது, அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்கு கற்புகெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகுமென்றாவது நாம் நினைக்கமுடியாது.

ஆனால், அப்பெண்களுக்கு தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வைகூட நிலத்தில் விழாமல் மேலா மினுக்காய் இருந்து வாழ்ந்துவரும் மாமாக்கள் என்று சொல்லு கின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும்.

ஆதலால், அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூல கர்த்தாக்களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும், இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும், சமூகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப்பதை விட அதர்மமானதும், கொடுமையானதுமான காரியம் வேறில்லை.

தவிர, மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம்.

ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து,

அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபணை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும், கற்பு அபிமானத்திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித்தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன.

தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்ற பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும், அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்ற பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது.

இப்படிச் சொல்லு வதானது, ஆண் சமூகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும் கடவுள் சித்தமும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவ் விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்பது நமது அபிப்பிராயம்.

ஆனாலும், பெண்களுக்கு காவலும், கட்டுப்பாடும், நிபந்தனையும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பை, கற்பு என்று நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.

இவ்விஷயத்தில், உலகத்தில் உள்ள எல்லா மதமும் பழக்கத்தில் தனிமயமாகத்தான் நடந்து கொள்ளுகின்றது. ஆனால், இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இரு பாலர்க்கும் சரி சமானமான சுதந்திரம் இல்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.10.1927


ஸ்ரீமான் காந்தி

ஸ்ரீமான் காந்தி அவர்களுக்கு இப்போது அழைப்புமேல் அழைப்பு வரத்தொடங்கி விட்டது. ஒவ்வொரு ஊர் ராஜாக்களும்  வரவேற்கிறார்கள். ரயில்வே வியாபாரிகள் போன்று அய்ரோப்பியர்கள் எல்லோரும் வரவேற்கிறார்கள். சர்க்கார் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். ராஜப் பிரதிநிதி வரவேற்கிறார், அழைக்கிறார்.

நமது நாட்டுப் பார்ப்பனர்களும் தாசானுதாசராய் இருக்கிறார்கள் ஆகவே, அவர் அவ்வளவு தூரம் அய்ரோப்பிய அரசாங்கத்திற்கும், அய்ரோப்பிய வியாபாரிகளுக்கும், பார்ப்பனர் களுக்கும்  பரமானந்த சாதுவாக ஆகிவிட்டார் என்பது நன்றாய் விளங்குகிறது.

இப்படி அய்ரோப்பியருக்கும், பார்ப்பனருக்கும் பரமானந்த சாதுவாயும், வரவேற்றுக் கொண்டாடத்தக்கவராகவும் ஒருவர் இருந்தால் அவரால் நாட்டுக்கு என்னவிதமான நன்மை விளையக்கூடும்? மேல் கொண்டு, இக்கூட்டத்தாரால் நசுக்குண்டு வாழும் கோடிக்கணக்கான அய்ரோப்பியரல்லாத பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும் அல்லவா?
- குடிஅரசு - கட்டுரை - 30.10.1927


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-/71287-2013-11-30-11-36-55.html#ixzz2nzRerrrF

Saturday, March 3, 2012

பெரியார் களஞ்சியம் குடிஅரசு 1946 - தொகுதி (36) பெண்மை உயர்வு போற்றிய பெரியார் எனும் மாமனிதர் (4)


நேற்றைய தொடர்ச்சி...
பெண் உரிமை
பெண்கள் உரிமைக்குக் குரல் கொடுக்காததை ஒதுங்கி இருப்பதை இப்படிச் சாடுகிறார்.
பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாதது ஏன்? என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டாளா? பெண்களை அனுபவிக்கிறவர் அவர் களிடம் வேலை வாங்கிப் பயன் அடை கிறவன் காப்பாற்றமாட்டானா? என்பதுதான். அதற்கேற்ற நகை துணி ஆகியவையே போதும்.
அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன் ? என்று எந்தப் பெண்ணாவது பெற்றோராவது கட்டினவனாவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
இவ்வாறு கேட்டு, நம் பெண்கள் மாத்திரம் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா என்று கேட்கிறேன் என்று கேட்கிறார் பெரியார்.
பெண்களுக்கு இது போன்ற அற்புத மான அறிவுரை கூறிய வேறு எந்தத் தலைவனையும் என்னால் காண முடியவில்லை என்று நாம் கூறுவது உண்மை.
ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும் ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் பார்க்கச் செய்ய முடியும். உறுதியாய் முடியும் என்பேன். ஆனால் நகைப் பயித் தியம், துணி அலங்காரப் பயித்தியம் அணிந்து கொண்டு சாயல் நடை நடக் கும் அடிமை இழிவு சுயமரியாதை அற்ற தன்மைப் பயித்தியம் ஒழியவேண்டும்.
ஆண்கள்தான் காரணமா?
பெரியார் இன்றைக்கு 65 ஆண்டு களுக்கு முன்பே நம் பெண்கள் நாட்டுக்குச் சமூகத்துக்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு ஆண்கள் கண்களுக்கு விருந்து ஆன தற்குக் காரணம் இந்தப் பாழாய்ப் போன ஒழுக்கமற்ற சினிமாப் படங்களேயாகும்  என்று சினிமாவைச் சாடும் பெரியார் மட்டும் இன்றிருந்தால் சினிமா பெற்ற பிள்ளை சின்னத் திரையையும் சாடாமல் இருக்கமாட்டார்.
இறுதியாக, டீசென்சி, சுத்தம் கண்ணுக்கு வெறுப்பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று நான் சொல்லுவதாக யாரும் கருதக்கூடாது. அது அவசியம் வேண்டும். ஆனால் அது அதிகப் பணம் கொண்ட மக்கள் கவனத்தை ஈர்க்கத் தகுந்த, பேஷன், நகை, துணிவெட்டு போன்ற அலங்காரத்தால் அல்ல என்றும் சாதாரண குறைந்த தன்மையால் முடியும் என்றும் சொல்லுவேன் என்று விளக் கமும் அளிக்கிறார்.
பெண்மை உயர்வுக்கு வழிகாட்டல்
அத்துடன் பெரியார் கூறும் இந்த அறிவுரையை அனைவரும் கடைப்பிடித்து ஒழுகினால் பெண்மை உயர்வு பெறும். பெற்றோர்கள் தங்கள் பெண் களைப் பெண் என்றே அழைக் காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண் கள் பெயர்களையே இட வேண் டும். உடைகளும் ஆண்களைப் போல கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா, பெண்ணா என்று மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத மாதிரி யில் தயாரிக்க வேண்டும். பெண் களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல் மனித சமுதாயத்திற்குத் தொண் டாற்றும் கீர்த்தி, புகழ் பெறும் பெண்மணியாக்க வேண்டும். பெண்ணும் தன்னைப் பெண் இனம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் நமக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? உயர்வு தாழ்வு என்ற எண்ணம் எழ வேண்டும். ஏன் இப்படிச் சொல் கிறேன் என்றால் நம் பெண்கள் வெறும் போகப் பொருளாக ஆக்கப்படாது அவர்கள் புது உலகைச் சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. இந்தப்டி பேசுகின்ற தன்மையும் இதற்குத்தான்.
இதைப்படிக்கிறபோது, இப்படிப் பெண்மை போற்றிய ஒரு மாபெரும் தலைவன் இல்லையே, பெரியார் என்னும் மாமனிதர் இல்லையே, பெண்களுக்கு வாதிடக் கூடிய வழக்கறிஞர் பெரியார் போல் ஒருவர் இல்லையே என்ற ஏக்கம் எவருக்கும் எழாமல் போகாது.
திரைப்படம் நினைவுக்கு வருகிறது
சக்கரவர்த்தித் திருமகன் என்ற திரைப்படம் ஒன்றில் டேப் சொக்கனாக வரும் கலைவாணர் எம்.ஜி.ஆரிடம் கேள்விகள் தொடுப்பார். அதில் ஒன்று, கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே? என்பது. அதற்குப் பதிலாக எம்.ஜி.ஆர். பல திண்ணைத் தூங்கிப் பசங்க இருப்பதாலே என்று பதில் கூறுவார்.
இந்தப்பதில் எங்கிருந்து பிறந்திருக் கிறது? என்பதைப் பார்த்தால் எல்லாம் அய்யாவிடத்திருந்துதான் என்பது எல் லோருக்கும் கல்வி என்ற குடியரசுத் தலையங்கத்திலிருந்து கிடைக்கிறது குடியரசுத் தலையங்கம்,  இது அய்யா எழுதியது இல்லை என்றாலும் இக்கருத்து பெரியார் ஏற்ற கருத்து.
சாணக்கியர் எழுதிய அர்த்த சாத் திரத்தில் கோவில் கட்டப்படுவதற்குரிய காரணங்களைக் காணலாம். உழைக் கின்ற இனம் என்றென்றும் அரசனுக்கும், உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று கருதப் படுகின்றவர்களுக்கும் அடிமையாயிருக்க வேண்டுமென்று திட்டங்கள் பல வகுத் தனர். அத்திட்டங்களில் கோவில் கட்டு வதும் ஒன்றாகும்.
மதுவிலக்கு சிந்தனை
மதுவிலக்கு என்பது பெரியாரின் இதயத்துக்கு இதமான கொள்கை என்பதற்கான ஆதாரம் இத் தொகுப்பில் காணக் கிடைக்கிறது.
பெரியாரின் மதுவிலக்குக் கொள்கை யாது? என்று எவரேனும் கேட்டால் இதுதான் என்று சொல்லத் தக்க ஆவண மாக இத்தொகுப்பில் விளங்குகிறது மதுவிலக்கு எனும் தலைப்பில் அமைந்த தலையங்கம்.
மதுவிலக்கு வெற்றியடைந்தாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. சர்க்கார் இந்த (மதுபான) வியாபாரம் செய்யக் கூடாது என்பதுதான் எனது மது விலக்குத் திட்டம் என்று பெரியார் அடிக் கடி சொல்லுவார் என்று தலையங் கத்தைத் தொடங்குகிறார். மதுவிலக்கை அரசு நடைமுறைப்படுத்தியது குறித்துத் தம் பாராட்டைத் தெரிவிக்கத் தயங்க வில்லை அவர்.
எப்படியானாலும் மது வியாபாரம் ஜில்லாக்களில் இம்மாகாணத்தில் மூன்றில் ஒரு பாகத்தில் நிறுத்தப் பட்டது பாராட்டுக்குரியதுதான்.; ஆனால் மற்ற இரண்டு பாகத்திலும் உடனடியாக நாளை வருஷமே நிறுத்தினால்தான் இதில் அரசியல் அதிகார வெறி, சூழ்ச்சி, பார்ப்பன சூழ்ச்சி இல்லையென்னலாம் என்று சொல்லும் பெரியார் இயலக்கூடிய அரசு மேற்கொள்ள வேண்டிய ஆலோ சனையையும் முன்வைக்காமல் இல்லை.
ஆளுவோருக்கு அரிய யோசனை
சர்க்காருக்கு ஒரு யோசனை. மது விலக்கால் திருட்டுகள் நடக்கின்றனவ் என்று பயப்பட வேண்டியதில்லை. சில நாளைக்குச் சில இடங்களில் நடந்து தான் தீரும். மற்ற ஜில்லாக்களிலும் நிறுத்தப்படுவதுதான் அதற்குப் பெரு மளவு பரிகாரமாகும். தொழில் இழந்த வர்களுக்குத் தொழில் தேடிக் கொடுக்க பம்பாய் முதலிய வெளிநாட்டுச் சரக்குகள் பலவற்றையும் உடனே நிறுத்திவிட்டுத் தொழிற்சாலைகள், சிறுசிறு தொழிற் சாலைகள் உடனே துவக்க வேண்டும். முதலாளிக்கும், தொழிலாளிக்கும் செலவு போகப் பங்கு ஏற்படுத்திடவேண்டும்.
தீபாவளி வேண்டாம்
குடிஅரசு தொடக்க காலம் தொட்டு தீபாவணி வேண்டாம் திராவிடர்க்கு என்று கூறிவந்த பெரியார் 1946 லும் கேட்கிறார், திராவிடர்களே இன்னுமா தீபாவளி? என்று. தீபாவளி நாளில் திரா விடத் தோழர்கள் செய்ய வேண்டுவது என்ன என்பதையும் பெரியார் அன்றே கூறிச் சென்றுள்ளார்.


.
 1

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, December 29, 2011

இழிவை ஒழிக்க வழி

இன்று நமக்குள்ள தராசுக் கொடியானது இந்நாட்டில் எங்கும் காணப்படுகின்ற கொடுமைகளையும், அநீதிகளையும், பேத முறைகளையும் ஒழித்து, ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு இல்லை என்னும் சமநீதியைக் காட்டுவதற்கு அறிகுறியாக விளங்கு கிறது எனலாம். இந்தக் கொடியில்கூட மாறுதல் ஏற்படலாம்.
ஏனெனில், இதுவரையில் நமக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்த தென்னிந் திய நல உரிமைச் சங்கமானது பழைய காங்கிரசைப் போல எங்கள் உரிமை களை எங்களுக்கு வழங்குங்கள், எங்களுக்குப் பட்டம், பதவிகள் அளியுங்கள் என்று வேண்டுகிற முறையில் அமைந்திருந்தது. இப்பொ ழுதோ அதேசங்கத்தின் பேரால் அந்த நிலைமாறி பிறருக்கு அவரவர் களுடைய உரிமைகளை வழங்குகின்ற முறையில் நாம் திட்டம் வகுத்துக் கொண்டோம்.
நம்மையும், நம் இனத் தையும், நம் நாட்டையும் உணர்ந்து கொண்டோம். அதன் பலன்தான் இன்றைய தினம் தென் இந்திய நல உரிமைச் சங்கத்தை திராவிடர் கழகம் என்று சொல்லுகிறோம். திராவிடர் கழகம் தொடங்கிய தானது நம்நாட்டு முழுப் பங்கையும் அடைந்து, மற்றவர்களுக்கு அவரவர் பங்கை தகுதிப்படி வழங்குவதற்குப் போராட்டம் தொடங்கியது என்றே கூறலாம். போராட்டம் என்றதும் சிலர் அஞ்சலாம். ஆனால், போராட்டம் நமக்குப் புதியதல்ல - யாராவது கூறட்டும் - இந்த நாடு எக்காலத் திலாவது போராட்டமின்றி சமாதான மாய் இருந்ததா என்பதை ஆதிமுதல் இன்றுவரை எதிலும் போராட்டந்தான்.
முதலில் உண்டானதாகக் கூறப்படும் ஆரியருடைய நாலு வேதங்கள் என்ன? ஆரிய - திராவிடர் போராட் டம், தேவர் - அசுரர் போராட்டம் தானே! இதிகாசங்களில் கூறுகிற விஷ்ணுவின் பத்து அவதாரக் காரணங்கள் தான் என்ன? அவையும் ஆரிய - அரக்கர் போராட்டம் தானே! கந்த புராண கந்தன் - சூரன் போராட்டமும் அதுபோல்தானே? அவை போகட்டும், இந்த நாட்டுச் சரித்திரத்தின் நிலைதான் என்ன? அதுவும் அப்படியேதான்; அதாவது ஆரியமதம் - புத்த மதம்; பிறகு இந்து - முஸ்லிம்தான். ஆகவே, மதத்தின் பேராலும் கடவுளின் பேராலும், நிகழ்ந்து வந்த போராட்டங்கள் எத்தனையோ உண்டு. இன்று காண்பது புதிதல்ல என்கிறோம். இந்தத் தொல்லைகளை ஒழிப்பதற்குப் பழைய முறைகள் அல்லாமல் நாகரிகமான முறையிலே சிந்தனை செய்ததன் பலன்தான் திராவிடர் கழகமாகும்.
சென்ற காலங்களில் இந்தத் தொல்லைகளைத் தொலைத்து உரிமைகளைப் பெறுவதற்காக நம்மவர் கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எத்தனையோ! இன்று மட்டும் அல்ல; எவ்வளவோ காலமாய் நமது முன் னோர்கள் அரும்பாடுபட்டார்கள். காங்கிரசு சபை உண்டாக்கி சத்தி யாக்கிரகமும் நடத்தினார்கள். வேளை தவறாது கோவிலுக்குச் சென்று முறைப்படி கும்பிட்டு வந்தார்கள். கவர்ன்மெண்டோ, கடவுளோ இன்று வரை கவனித்ததாகத் தெரியவில்லை.
நாம் பாடுபடும் மக்கள்; நாம் உழைப்பாளிகள்; நம் கையினால் செய்த பொருள்களே இன்று உலகத்தில் உள்ளன. நம்பாடுகளே இன்று உலகமாக இருக்கின்றன. இது மாத்திரமா! நம்மைப் படைத்ததாகக் கருதப்படும் கடவுளைக்கூட நாமே செய்தோம்; செய்கிறோம்; அவை களைக் காப்பாற்றியும் வருகிறோம். அப்படியிருந்தும் நம்முடைய நிலைமை என்ன? நம்முடைய உரிமைகள் எங்கே? இன்று நமக்குள்ள இழிவுகள் எவ்வளவு? கொஞ்சமா? இத்தனை காலமாகப் பிறர் நமக்குச் செய்வார் கள் என்று நம்பியிருந்தோம். ஏமாந் தோம்.
ஆகவே இனி நாமே வழங்கு வோம் என்று கிளம்புகிறோம் இந்த நாட்டு கடவுள்களைப் போலவே. காங்கிரசும் பாமர மக்களிடையே செல்வாக்கும், மதிப்பும், பெருமையும், நம்பிக்கையும் பெற்றது. ஆயினும், இன்றைய வரையிலே இந்த இரு கூட்டத்தாரும் செய்தவை என்ன என்பதை  யோசிக்கும் பொழுதுதான் இந்த நிலையிலே ஒரு மாறுபாடு வேண்டும், ஒரு புரட்சி தேவை என்கிறோம். எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக. இவை களுக்கு இருப்பிடங்கள் யாவை? காரணகர்த்தர் யார் என்பதை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்யவேண்டும். இவைகளைக் கூறினால் நம் பெரியவர்களுக்குக் கோபம் வந்து நமக்கு நாத்திகர், வகுப்புத்துவேஷி என்கிற பட்டமளிக்கின்றனர். நாளைய வரையில் காப்பி ஓட்டலில் உள்ள பேதம் ஒழியவில்லை. உள்ளதைக் கூறினால் இவர்களுக்குக் கோபம் வருகிறது. இவர்களைச் சூத்திரன் என்றும், பார்ப்பன தாசர் என்றும் வைப்பாட்டி மக்கள் என்றும், அவர்கள் கூப்பிடுவதுகூட  இவர்களுடைய விஷ யத்தில் சரிதான் என்றே படுகின்றது.
எங்களுக்குப் பார்ப்பனர் மீதோ, கடவுள்கள் மீதோ கோபமா? அல்லது கொடுமையா? உலகம் எவ்வளவு விரைவாக முன்னேறி வருகிறது! மணிக்கு  நாலு மைல் நடந்தவன் ஆகாயத்தில் நானூறு மைல் வேகத் தில் பறக்கிறான், மணிக்கு 4 மைல் போன சேதி, மணிக்கு 4000 மைல் பேசுகிறது, மற்றும் பேசும்படம், ரேடியோ முதலிய அதிசயங்கள், அற்புதங்கள் எத்தனை இருக்கின்றன! நாம் மட்டும் நாளடைவில் கண்ணை மூடிக்கொண்டே காட்டுமிராண்டி வாழ்க்கைக்குப் போய்க் கொண்டிருக் கிறோம். இன்னும் சூத்திரனாகவே பறையனாகவே இருக்கிறோம். இதற்குச் சாதகமானவை எதாயிருந் தாலும் ஒழித்தால்தானே முன்னேற முடியும்? இவ்வளவு அறிவும், ஆராய்ச் சியும் நிரம்பிய காலத்தில்கூட தோலைக்கட்டிக் கொண்டு, சாம் பலைப் பூசி, எலும்பை அணிந்து, கையில் அரிவாளுடன் காலின்கீழ் மனிதனை மிதித்துக்கொண்டிருக்கும் ஒரு காட்டுமிராண்டி காலத்துக் கடவுளைக் கும்பிடலாமா? இன்றைய நிலைமைக்கு 6000 மைலுக்கு அப் பாலுள்ள லண்டன், நியூயார்க், பெர்லின், பாரிஸ், டோக்கியோ முதலிய எந்த ஊரையும் ஒரு சிறு பொத்தானைத் திருகுவதன் மூலம் நேரில் கேட்கவைக்கின்ற ரேடியோ வையல்லவா - அதைச் செய்வதனை யல்லவா கடவுளாகக் கும்பிட வேண்டும்? அந்த அறிவைப் பெற வல்லவா முயல வேண்டும்.
காலத் திற்கேற்ப நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டாமா? இதைக் கூறினால் தவறா? இந்த விஷயத்தில் மாத்திரம் சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளக் கூடாது; பெரிய புராணம், ராமாயணம், கீதை படிப்பதில் மட்டும் சமயத்திற்கும் இடத்துக்கும் தக்கபடி அர்த்தம் மாற்றிக் கொள் ளலாம் என்றால் என்ன நியாயம்? இதிகாச புராணங்களைக்  குறைகூறிய வுடன் இன்றைக்கு நாட்டில் இராமா யணம், கீதை படிப்பது அதிகமாகி வருகிறது. டாக்டர் அம்பேத்கர் கூறிய படி, கீதையை ஒரு மதநூல் என்பதை விட, ஒரு ஜாதியின் ஆதிக்கத் தந்திர நூல் என்று சொல்லலாம். ஒரு பக்கத் தில் நானே எல்லா ஜீவனுக்குள்ளும் பேதமின்றி நிறைந்திருப்பவன் என்றும், மற்றொரு பக்கத்தில், நானே பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரரென்ற நால் வருணங்களை உண்டாக்கி, சூத்திரரைப் பிறருக்கு அடிமையாக்கினேன். ஆகையால் அவன் அடிமையாகவே இருக்க வேண்டும் என்றும் கூறுவதுதானே கீதை? இதைப் படிப்பது பக்தியா என்று எடுத்துக் கூறிவிட்டால், அதை தவறு, பாவம் என்று சொன்னால் அது என்ன நீதி என்று கேட்கிறோம்.
இந்த நாட்டு அறிவாளிகள், பக்தர் கள், புலவர்கள் நாளையவரையில் எது கடவுள்? என்பதற்கு என்ன கூறினார்கள்? இவர்களால் என்ன கூற முடியும்? கடவுளைப் பற்றி எல்லாம் அறிந்தவர் போலவும், அவருக்கு நேரான வாரிசுக்காரர் போலவும், பேச வருகின்றனரே, கடவுளையே கேட்டுப் பார்த்திருப் பார்களா? இன்றைய தினம் வரையில், உனது வருஷ வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு, எந்த வகையிலே செலவழித்தாய் என்று யாராவது கேட்கிறார்களா? தமிழ்நாட்டில் சுமார் 3000 கோவில்களின் வருஷ வரு மானம் 2ஙூ கோடி ரூபாய். அதாவது, ஆண்டு ஒன்றுக்கு 250 முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் வரும்படி வருகின்ற கோவில்கள் நம் நாட்டில் சுமார் 3000 என்றால், அவ்வளவு பொருளும் அநாவசியமான முறையில் செலவாகிறது என்றால், இதைப் போன்ற அக்கிரமம் இந்த உலகத்தில் வேறெங்காவது காணமுடியுமா? இதைச் சொன்னால் பொல்லா தவனா? கடவுள் என்றால் நமக்குப் புரியாத, ஆனால் மிகவும் நம்பிக்கை யான இடமாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்று இதுவரையில் நாங்கள் சொன்னதில்லை. எது கடவுள் என்கின்றோம். கடவுள் பெயரால் நடக்கின்ற தீமைகள், அநியாயமான காரியங்கள், இவைகளைச் சரியா என்றும், இந்த அக்கிரமங்களை கடவுள் அனுமதிக்கலாமா என்றும் கேட்கிறோம். இதுதான் நாத்திகமா? நாத்திகம் என்றால் முதலில் உங்க ளுக்கே புரியுமா என்று கேட்கிறோம்.
உழைப்பாளி மக்கள் உணவு உடை இல்லாமல் கஷ்டப்படுகின்ற நிலையில் புரோகிதர் பூணூலைக் கை முதலாகக் கொண்டு எவ்வளவு சுலபமாக மேன்மையான வாழ்வு வாழ்கின்றனர். பிறர் தயவினால் ஒரு சிறிய ஓட்டலை தொடங்குகிறான் ஒரு பார்ப்பனன். நாளடைவில் சாமியாகவும், ஒரு முதலாளியாகவும் ஆகி விடுகிறார். காப்பிக் கடையில் கணேசர் முதல் காந்தி, சாயிபாபா வரையில் படங்கள் தொங்குகின்றன. பிராமணாளுக்கு மாத்திரம் என்று பலகையும் தொங்கு கிறது. பின்னர் அங்கே இரண்டு, மூன்று பார்ப்பனப் பத்திரிகைகள், ஆகவே அது ஒரு சிறந்த ஆஸ்திக காங்கிரஸ் பிரசார நிலையமாகவும், ஜாதி பிரித்துக் காட்டும் ஸ்தாபன மாகவும் ஆகி விடுகிறது. இப்படித் தானே இருக்கிறது இவர்கள் (ஆஸ்திகர்கள்) முன்னேற்றம்! இவர் களுக்குத் துணையாக உள்ளவை தானே இந்த நாட்டில் உள்ள தேசியப் பார்ப்பனப் பத்திரிகைகளும், எப்படி யாவது நம் மீது கெட்ட அபிப்பிரா யத்தை உண்டாக்கி ஒழிக்கப்பார்ப்பது தானே, இவர்கள் வேலையாகி விட்டது.
ஆதலால், இம்மாதிரியான எதிர்ப் பிரசாரங்களாலும், போலிச் செய்தி களாலும் மக்கள் ஏமாந்து போகாமல் நாட்டினுடைய உண்மையான நிலை, நாட்டு முன்னேற்றத்துக்குச் சரியான வழி ஆகியவற்றை உணர்ந்து அதற்கு ஏற்ற வழியிலே முயற்சியுடன் நடந்து வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். மேலும், நான் அடிக்கடி கூறி வருவது போல நமது சமுகத்துக்கு நீங்காத மலேரியாக்காய்ச்சல் கண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கொசுவென்று அறிந்தவுடன், கொசுவலை போட்டுக் கொண்டால் மட்டும் போதாது.
கொசு உண்டாவ தற்கு மூலகாரணமான சாக்கடைகள், அழுக்குக் குட்டைகள், குப்பை கூளங் கள் ஆகியவற்றை அடியோடு ஒழித் துச் சுத்தமாக்கினால்தான் கொசுக் கள் ஒழியும். மலேரியாக் காய்ச்சலும் நீங்கும். அந்த அசுத்த அழுக்குக் குட்டைதான் புராணம், கீதை, புரோ கிதம், கோவில்களாய் இருக்கின்றன. அங்கு இருந்துதான் இந்த கொசு பிறக்கிறது. அவைகளை அகற்றுங்கள்.
(17.12.1944 அன்று சேலம் பொத்தனூரில் திராவிடர் கழகத் திறப்பு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 23.12.1944

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...