Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, February 23, 2015

திருமண வீடு - சாவு வீட்டில்கூட - சந்திக்க மறுக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் வடநாட்டைப் பார்க்கட்டும்!

திருமண வீடு - சாவு வீட்டில்கூட - சந்திக்க மறுக்கும்

தமிழ்நாட்டுத் தலைவர்கள் வடநாட்டைப் பார்க்கட்டும்!

பிரதமர் மோடியும் - லாலுவும் - முலாயமும் கூடிக் குலவும் காட்சியைப் பார்த்த பிறகாவது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புதிய நாகரிகத்தை வளர்க்கட்டும்



வடநாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அன்பு பாராட்டி அளவளாவும் நாகரிகத்தைப் பார்க்க முடிகிறது; அதே நேரத்தில் துக்க வீட்டில்கூட ஒருவரை ஒருவர் சந்திக்க மறுக்கும். தயங்கும் நிலை அல்லவா இங்கு இருக்கிறது. உ.பி. திருமணச் சடங்கு ஒன்றில் பிரதமர் மோடியும், லாலு பிரசாத்தும், முலாயம்சிங் யாதவும் கூடி மகிழ்கின்றனர். வடநாட்டில் நிலவும் இந்த நனி நாகரிகத்தை தமிழ்நாட்டின் தலைவர்களும், பிரமுகர்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:

தமிழ்நாடும் தென் மாநிலங்களும் மிகவும் பண்பட்டவை நனி நாகரிகம் படைத்தவை. வடநாட்டவர்களைவிட பல துறைகளில் முன்னேறியவர்கள் என்று பெருமைபேசி மகிழுபவர்கள் என்ற நிலை அரசியல் கட்சிகளின் தவறான அணுகுமுறையால் ஒரு கட்சித் தலைவரோ, அல்லது வேறு பொறுப்பாளர்களோ, திருமணம், வரவேற்பு மற்றும் துக்க, இரங்கல் நிகழ்ச்சிகளில் கூட ஒருவரை மற்றொருவர் சந்திப்பது, குறைந்தபட்ச மரியாதையை, விசாரிப்புகளை ஒருவருக்கொருவர் இன்முகத்தோடு பரிமாறிக் கொள்ளுதல் போன்றவைகூட, - காணாமற் போனவையாக ஆகி விட்டன! இது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய கூடா ஒழுக்கம் ஆகும்!

தலைவர்களே, வடநாட்டைப் பாருங்கள்!

வடநாட்டைப் பார்த்து தமிழ்நாட்டவர் கற்றுக்கொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் எவ்வளவு கடுமையாக கட்சித் தலைவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ பேசித் தாக்கிக் கொண்டாலும் மத்திய அரங்கம் (Central Hall Parliament) என்ற நாடாளுமன்ற அரங்கில் நுழையும்போது, தோள் மேல் கைபோட்டு, நட்புறவும் நயத்தக்க நனி நாகரிகமும் பொங்கி வழிவது போல் பேசிக் கொள்ளும் நடைமுறை வெகு சர்வ சாதாரணம் ஆனால் - தமிழ்நாட்டில்....? இந்நிலையை மாற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நடப்பது என்ன?

சட்டமன்றம் கூடுகிற நிலையில், ஒருவரைப் பார்த்து மற்றொரு கட்சியினர் வணக்கம் கூறும்போது மறுபுறம் அதற்கு பதில் வணக்கத்தை புன்னகையோடு கூறும் நிலைகூட அருகிப் போய் விட்ட அவலம் உள்ளது!

தலைவர்கள் எதிர்பாராமல், ரயில் நிலையம், விமான நிலையம் - விமானப் பயணம் போன்றவைகளில் அடுத்தடுத்த பகுதிகளில் - ஒரே பெட்டியில் - பயணம் செய்யும்போதுகூட, ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து விடக் கூடாது என்று ஓடோடி அறைக் கதவைச் சாத்திக் கொள்வது, அல்லது சந்திப்பைத் தவிர்க்க இரயில் நிற்பதற்கு முன்பேகூட குதித்து ஓடுவதுபோல கீழே இறங்கி குடுகுடுவென்று காரில் ஏறிக் கதவை அடைத்துக் கொள்வது எல்லாம் கசப்பான நிகழ்வுகள் அல்லவா!

பிறந்த நாளிலாவது வாழ்த்து கூறக் கூடாதா?

திராவிடர் இயக்கத்தின் பிறப்புக்குப் பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதனை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

எவ்வளவு கருத்து வேறுபாடு, கொள்கை மாறுபாடு இருந்தாலும், பிறந்த நாள்களுக்கு வாழ்த்து அனுப்பியோ; நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறுவதோ, மனித நேயத்தையும், மக்கள் பண்பையும் வளர்த்து, தொண்டர்கள் மத்தியில் வெறுப்புக் குறைய, அல்லது மறைய வாய்ப்பை ஏற்படுத்தும்.

அந்தக் காலத்துத் தலைவர்களின் அன்பும், பண்பும் அகிலம் அறிந்தவை. (ஒரு பெரிய புத்தகமே எழுதலாம்).

பிரதமர் மோடி - லாலு - முலாயம் - சந்திப்பும் அளவளாவலும்
நேற்று (22.2.2015) ஒரு படம் பல நாளேடுகளில் வந்துள்ளது.

உ.பி. மாநிலத்தில் ஒரு ஊரில் (சைபை) திருமணச் சடங்கு விழா ஒன்று.

லாலு பிரசாத் மகளுக்கும், முலாயம் சிங் பேரனுக்கும் மணவிழா; அதில் பிரதமர் மோடி சென்று ஒரு மணி நேரம் - எதிரும் புதிருமாக இருக்கும் தலைவர்களுடன் - கலகலப்பாக சிரித்துப் பேசி மகிழ்ந்துள்ள செய்தி எவ்வளவு வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க, பின்பற்றப்பட வேண்டிய முறை!

பிரதமரைச் சந்தித்த கெஜ்ரிவால் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தேர்தல் முடிந்த நிலையில் பிரதமரைச் சந்திக்கச் சென்றபோது அவரது இல்லத்தில் பிரதமர் மோடி அவர்கள் கெஜ்ரிவால் இருமல் - ஆஸ்தமாவிலிருந்து விடுபட தனது மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்தி உதவுவதாகக் கூறி, தமது பண்பைக் காட்டியுள்ளார்.

வடநாட்டுத் தலைவர்கள் பலரிடமும் நான் பழகியுள்ளேன் - எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுபவர்கள் அவர்கள்.

தமிழ்நாட்டில் தான் இப்படி ஒரு வெறுக்கத்தக்க நோய் எப்படியோ கடந்த 30 ஆண்டுகளாகப் பரவி விட்டது. யார்மீதும் குற்றம் சுமத்தி புண்ணைக் குடைய விரும்பவில்லை நாம்.

தமிழர்களை உலக அரங்கில் உயர்த்தும்

நம் நாட்டில் கட்சி, கொள்கை வேறுபாடுகளைத் தள்ளி வைத்து (தற்காலிகமாக) பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் தயங்காமல் சந்தித்து அன்புடனும், பண்புடனும் தலைவர்கள், பொறுப்பாளர்கள் நடத்து கொள்ளுவது தமிழர்களை உலக அரங்கில் உயர்த்திட, திராவிடத்திற்கு ஏற்றம் தேடிடச் செய்ய அணுகுமுறை மாற்றம் அவசரம் அவசியம் என்று கனிவுடன் வேண்டுகோளாக வைக்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

23-02-2015

Friday, February 13, 2015

டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

டில்லி யூனியன் பிரதேசத்தில்
இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

டில்லி சட்டமன்றத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் அமைப்புகளுக்கும், பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கும், அக்கட்சிக்கும் படுதோல்வியைப் பரிசாக, டில்லி வாக்காளர்ப் பெரு மக்கள் வழங்கி, விட்டனர். மதவெறி அரசியலும், அதிகாரப் போதை, ஆணவ உளறலும், இனிமேல் செல்லாது என்று உணர்த்தி உள்ளனர்.

அமித்ஷா - மோடி கூட்டு ஏதோ பெரிய அற்புத அதிசயங்களை யெல்லாம் தரக்கூடிய அலாவுதீனின் அற்புத விளக்கு என்பதைப் போன்ற (மாய்மாலப் பிரச்சாரப் புரட்டு என்ற) பெரிய பலூனை - கெஜ்ரிவால் என்ற சின்ன குண்டூசியைக் கொண்டு குத்தி ஒன்று மில்லாமல், பரிதாபத்திற்குரிய நிலையில் எதிர்க்கட்சித் தகுதியைக்கூடப் பெறாது வீழ்த்திப் பாடம் புகட்டி யுள்ளனர்!

நாடாளுமன்றத் தேர்தலில் மோடியால் இளைஞர் களுக்கும், ஏனையோருக்கும் தரப்பட்ட குளோரோபாம் - மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவில்லை; மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவும் கூடாது; அது மரணத்தில்தான் போய் முடியும்!

ஆகவே நாடு அழிவை நோக்கி - மதவெறி பழைய வர்ண தர்ம வெறி, சிறுபான்மையினரை மிக மோசமாக சித்தரித்து நடத்திய வன்கொடுமைக்கு வாக்கு பெட்டி வழியே இப்படி ஒரு மவுனப் புரட்சியை டெல்லி வாக்காளர்கள் நடத்திப் பாடம் போதித்துள்ளனர்.

5 முறை தேர்தல் பிரச்சாரத்தினை மும்முரமாக நடத்திய மோடி பிரச்சாரம் பரிதாபத்திற்குரிய நிலையில் 5 இடங் களைக்கூட பெற முடியாமல், வெறும் 3 இடங்களையே பெற்றுள்ளது!

கிரண்பேடி என்ற ஒரு பச்சோந்தி பதவி ஆசைப் பெண்ணை -விளம்பர வியாதியால் வீணே அலைந்த ஒரு பெண்ணை - ஒரே நாளில் கட்சித் தாவ வைத்து, எடுத்த எடுப்பிலேயே முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்து பெண்கள் வாக்குளைப் பெற இந்த மாயமான் காட்சியை நடத்தியும்கூட கை கொடுக்கவில்லை.

அவரே தோற்றுப் போனார்!

கூடு விட்டுக் கூடு பாயும் குணவதிக்கு வாக்குகளால் பாடம் கற்பித்துள்ளனர்!
அவருக்குத் திடீர் பிரோமோஷன் கொடுத்த ஷாவின் வித்தைகளின் விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது!

அதைவிட டில்லி வாக்காளர்கள் இந்தப் பெருத்த தோல்வியை பா.ஜ.க.  அணிக்குத் தந்து, நன்றாகக் கரி பூசி விட்டனர்.

எவ்வளவு கேவலமான பேச்சு! - தேர்தல் பிரச்சாரத்தில்? ஒரு ஆர்.எஸ்.எஸ். கதாகாலட்சேப பெண்ணைக் கொண்டு வந்து மத்திய இணை அமைச்சராக்கியதோடு, அவரை டில்லி தேர்தல் பிரச்சாரத்திலும் களம் இறக்கினர் - பிரதமர்.

அந்தப் பெண் அமைச்சர்  உதிர்த்த நாகரிகமான கருத்து - தேர்தல் பிரச்சார வரலாற்றில் எங்கே தேடினாலும் கிடைக்காது.

அருவருக்கத்தக்க ஆணவப் பேச்சு! பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லாம் இராமனின் பிள்ளைகள். மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லோரும் முறை தவறிப் பிறந்தவர்கள்

- எத்தகைய கேவலமான இழி நிலைப் பேச்சு! இப்படிப்பட்டவர் மோடி அரசில் இன்னமும் மந்திரியாக தொடருவதும், பிரதமர் மவுனமாக இருப்பதும் சரிதானா?

67 இடங்களைப் பெற்று வியக்கத்தக்க வெற்றி பா.ஜ.க.வுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. பா.ஜ.க. வெறும் மூன்றே இடங்களைத்தான் பெற்றுள்ளது! அப்படியானால்

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பிரச்சாரகரான அந்தஅமைச்சர் அம்மாவின் கணக்குப்படி டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறந்தவர்கள் வெறும் மூன்று தொகுதிகளில்தான் உள்ளனர்.

மற்றவர்கள் எல்லாம்....? நமக்கே எழுதிடக் கை கூசுகிறது!
 
இப்படிப்பட்ட கழிசடைகளையெல்லாம் துடைப்பத் தால் கூட்டி வாரிக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டார்கள்!

வார்த்தைகளால் பதில் கூறாமல் வாக்குகளால் செயலில் காட்டி, மூக்கறுத்துள்ளனர்.

கெட்டிக்காரன் புளுகுக்கேகூட உச்ச வரம்பு எட்டு நாள்கள்!

ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் புளுகுக்கு எட்டு மாதங்கள் போலும்!
இனியாவது ஆர்.எஸ்.எஸ். பல குரல்  மன்னர்களின் ஆணவம் குறையுமா?
எங்கே பார்ப்போம்!


- ஊசி மிளகாய்



Friday, January 30, 2015

தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டது

தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டது
நான்கு வகை வருணத்தைத் திணித்தவர்களும் ஆரியர்களே!

ஆவடி வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் முழக்கம்!


ஆவடி, ஜன.29- தமிழர்களிடையே இல்லாதிருந்த ஜாதி யைத் திணித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் - தமிழரு டைய கலாச்சாரம் கெட்டதும் அவர்களால்தான் என்றார் தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.

சென்னையை அடுத்த ஆவடியில் 25.1.2015 அன்று மாலை நடைபெற்ற வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை வருமாறு:

இந்தி எதிர்ப்பு உணர்ச்சி இன்னும் கலைஞரிடத்தில் இருக்கிறது!

இந்தி மொழிக்கு தமிழ் நாட்டில் இடம் கிடையாது. தமிழ் நாட்டில்  வாய்ப்பைத் தேடி வந்த இந்திப் பெண்ணே, நீ இந்த நாட்டை நம்பாதே ஓடிப்போ! என்று பாடியவர் கலைஞர். அன்று தொடங்கிய அந்த உணர்ச்சி இன்றும், கலைஞரிடத்தில் அவருடைய பேச்சில், செயலில்,  எழுத்தில் நீடிக்கிறது. உண்மையாக இந்தி மொழி மட்டும் நம் எதிர்ப்பு அல்ல. இந்தி மொழிக்கு முன்னாலே ஏறத்தாழ 500 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் தமிழருடைய உரிமை யைப் பறிக்கக்கூடிய முறையில் சமஸ்கிருதம் திணிக்கப் பட்டது. திருக்கோவில்களில் எல்லாம் ஆண்டவனுக்கு சமஸ்கிருதத்தில் வழிபாடு. தமிழ் வீட்டுத் திருமணங்கள் எல்லாம் புரோகிதர்களைக் கொண்டு நடத்துகின்ற ஒரு நிலை. நான் சிறுவனாக, மாணவனாக இருந்த போது நாட் டில் பல இடங்களில் பிராமணர்களுக்கென்றே பாடசாலை கள். அந்தப் பாடசாலைகள் எல்லாம் வேத பாடசாலைகள். ஒவ்வொரு வேத பாடசாலைகளிலும் 30 பேர், 40 பேர் பிரா மணர்கள்தான் படிப்பார்கள். அவர்களுக்கு இலவசமாக சாப்பாடு, இலவசமாக குடியிருப்பு, இலவசமாக எண்ணெய், பால், இலவசமாக ஆடை எல்லாம் வழங்கப்பட்டன. பார்ப்பனரல்லாதவர்க்கு பள்ளிக்கூடமே இருக்காது.

 வெள்ளைக்காரன் வந்தான். ஏதோ அவர்களுக்கு ஆட்கள் தேவை என்பதற்காக பள்ளிக்கூடங்களை வளர்த்தார்கள் என்ற ஒரு கருத்து. அவர்கள் ஆட்கள் தேவை என்று வளர்த்தாலும்கூட அவன்தான் பள்ளிக் கூடத்தில் நம்மை எல்லாம் நுழைய விட்டான்.தாழ்த்தப்பட்ட தோழர் கிருஷ்ணசாமியோ, அவருடைய தந்தையோ, பாட்டனோ ஒரு அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கூடங்களுக்குள் நுழைய முடியாது. கிருஷ்ணசாமி படித்தது ஆச்சரியம்.  பள்ளிக்கூடத்தை திறந்துவிட்டது நீதிக் கட்சித் தலைவர்கள். நீங்கள் எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள் சர்பிட்டி தியாகராயர் - தெலுங்கர். டாக்டர் டி.எம்.நாயர் - மலையாளி, டாக்டர் நடேசனார் - முதலியார்! -தமிழன். இந்த மூன்று பேரும் கலந்து பேசி தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இருக்கிறது.
பிராமணீய ஆதிக்கம் இருக்கிறது. தமிழ் மக்களை தலை எடுக்கவிடாத அளவிற்கு அந்த ஆதிக்கம் இருக்கிறது. 

அரசாங்க உத்தியோகத்திலே எல்லாம்  நூற் றுக்கு மூன்று பேராக இருக்கிற பிராமணர்களுக்கு நூற்றுக்கு எழுபத்தைந்து இடம். தமிழர்களாகிய நாம் ஏறத்தாழ 90 பேர், நமக்கு சமுதாயத்தில் இருபது இடம். 90 பேருக்கு இருபது இடம். மூன்று பேருக்கு 75 இடம். இது என்ன நியாயம்?அப்படி இருந்ததைத்தான் தியாகராயரும், டாக்டர் நாயரும் எதிர்த்து கண்டித்தார்கள். வெள்ளைக்கார அரசு பார்ப்பனீயர்களின் கைப்பாவையாக இருக்கிறது. ஆங்கி லேயர்கள் தமிழ்நாட்டில், இந்தியாவில் பிராமணர் அல் லாதாரை ஒதுக்கிவிட்டு செல்வாக்குள்ள பிராமணர்களை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். இந்த முறை கேட்டை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்கள். எனக்குத் தெரிந்து, 1930 ஆவது  ஆண்டில் தமிழ்நாட்டில் பள்ளிக் கூடங்களில் பார்ப்பனரல்லாதாருக்கு இடம் கொடுத்தாலும் கூட ஆதிதிராவிடர்களுக்கு இடம் கிடையாது.  ஆரம்பப் பள்ளிக்கூடத்துக்குப் போய் கிருஷ்ணசாமியின் சொந்தக் காரர் தன்னுடைய பிள்ளையை சேர்க்கப் போனால் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். கிருஷ்ணசாமிக்கு மட்டுமல்ல; டாக்டர் அம்பேத்கருக்கே இந்த கதிதான்.

டாக்டர் அம்பேத்கரை ஒரு ஓரத்தில் உட்கார வைத்தார்கள்!

டாக்டர் அம்பேத்கர் படிக்கப் போனபோது மற்ற பிள்ளைகளை எல்லாம் உட்கார வைத்து  அம்பேத்கரை ஒரு ஓரத்தில் உட்கார வைத்தார்கள். ஒரு தட்டிக்குப் பக்கத் திலே உட்கார வைத்தார்கள். இந்தத் தட்டிக்கு அப்பால் ஆதிதிராவிடர்கள். இந்த தட்டிதான் ஆதிதிராவிடர்களைக் காப்பாற்றியது. தட்டிக்கு அப்பால் ஆதிதிராவிடர்கள், தட்டிக்கு இப்பால் ஆதி திராவிடர் அல்லாதவர்கள். அதற்கு மேலே ஆசிரியர்கள்! தண்ணீர் வேண்டுமானால் இந்த ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் இருந்து தான் வாங்கி குடிப்பார். அம்பேத்கர் தண்ணீர் குடிக்கவேண்டுமானால் அங்கே இருக்கும் பானையிலே தண்ணீர் எடுக்கக்கூடாது. அவர் வெளியிலே போய்தான் யார் வீட்டிலாவது தண்ணீர் வாங்கி குடிக்கவேண்டும். அது எவ்வளவுப் பெரிய வெட்கக் கேடு, நம்முடைய தமிழன் இந்த பார்ப்பனீயக் கொள் கைக்கு எப்படியோ அடிமைப்பட்டான். இன்றைக்கு  நான் உங்களிடத்தில்  பெருமையாகச் சொல்கிறேன். திருவள்ளு வர் பிறந்த தமிழகத்தில் திருவள்ளுவருக்கு சாதி கிடை யாது. திருவள்ளுவர் காலத்தில் இருந்து புரவலர்களுக்கு சாதி கிடையாது.வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மன்னர்களுக்கு சாதி கிடையாது.

தமிழருடைய கலாச்சாரம்
ஆரியத்தால் கெட்டுவிட்டது!

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது அப்போது உயர்ந்த மொழி! அப்படி இருந்த காலத்தில் சமஸ் கிருதத்திற்கு இங்கே வேலையில்லை. யாரோ சில பேர் இங்கே சமஸ்கிருதம் படித்தார்கள். அவர்கள்தான் பிரா மணர்கள். நம்முடைய கோவில்களில் எல்லாம் சமஸ் கிருதம் ஆக்கிரமிக்கவில்லை. அப்போது நம்முடைய வீட்டுத் திருமணங்களை பிராமணர்கள் நடத்துகின்ற ஒரு நிலை கிடையாது. அது ஒரு காலம். அந்தக் காலம் மாறிப் போய் எவ்வளவோ ஆண்டுகள் ஆகி, ஆரிய ஆதிக்கம் மெல்ல மெல்ல வேரூன்றியது. தந்தை பெரியார் சொல்வார். ஆரிய ஆதிக்கம் என்பது பாம்புப் புற்றுக்கு பால் வார்ப் பதைப் போல. நாம் அதை ஆதரித்து விட்டோம். நம்மு டைய அறியாமை என்று. பாம்பு புற்றில் பால் வார்த்தால், பாம்பு நம்மை கடிக்காது என்று தாய்மார்கள் சொல்வார்கள். 

அது பால் இருக்கும் வரைக்கும் குடிக்கும். அது கிடைக் காதபோது கடிக்கும். ஆனால், இந்தப் பாம்பு பாலையும் குடித்து இரத்தத்தையும் குடிக்கும். அந்த ஆரிய கலாச் சாரத்தை எதிர்ப்பதுதான் தமிழருடைய பாதுகாப்பு என்று பிராமண அறிஞர்களே சொன்னார்கள். பி.டி.சீனிவாச அய்யங்கார் என்ற வரலாற்றுப் பேரறிஞர் எழுதினார். தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டுப் போய்விட்டது. நான்கு வகை சாதியை ஆரியர்கள் தமிழகத்தில் புகுத்தினார்கள். இந்த நால்வகை சாதி இல்லாவிட்டால் தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்க முடியும். பிராமணன், சத்திரியன், வைஸ்யன், சூத்திரன் என்றெல்லாம் ஆண்டவன் படைப்பு என்று ஏமாற்றி விட்டார்கள்.

பிராமணன் என்றால் உயர்ந்த சாதி, கிருஷ்ண சாமி என்றால் தாழ்ந்த சாதி. அவர் எப்படித் தீண்டப் படாதவர், நீ எப்படி எல்லாருக்கும் மந்திரம் சொல்பவர்? கேட்டால் பிரா மணர் சொல்லக்கூடிய வார்த்தை என்ன தெரியுமா? 

ஆண்டவன் படைப்பு. ஆண் டவன் யார் என்று கேட்டால் பிரம்மா என்பார்கள். பிரம்மா எப்படி படைத்தார் என்றால், பிரம்மா முகத்தில் இருந்து பிரா மணரை படைத்தார், தோளில் இருந்து சத்திரியனை படைத்தார். தொடையில் இருந்து வைஸியனைப் படைத்தார், வைஸி என்றால் வியாபாரி. பாதத்தில் இருந்து சூத்திரனைப் படைத்தார். முகத் தில் இருந்து பிராமணர்களை படைத்த தால் அவர்களுக்கு அறிவு சாதியாம். தோளில் இருந்து படைத்த சாதி என்றால் அது வீர சாதியாம்.

தொடையில் இருந்து படைத்த சாதி ஊர் ஊராக சுற்றும் சாதியாம். காலில் இருந்து படைத்த சாதி என்றால் வேலை செய்கிற சாதியாம். அந்த சூத்திரனுக்குக் கீழே பஞ்சமன்.

வெளிநாடுகளில் நான்கு வகை சாதிகள் உண்டா?

பஞ்சமன் என்றால் பறையன், பள்ளன், தாழ்த்தப்பட்டவன். தீண்டாதவர்கள் யாரோ அவர்கள் எல்லாம் இதில் அடங் கும். இதையெல்லாம் சொன்னபோதுதான், பெரியார் சொன்னார் இப்படியெல்லாம் பிரித்து ஆண்டவன் படைப்பானா, ஆண் டவன் இப்படி நான்கு சாதியைப் படைத்து இருந்தால் மிச்ச சாதிக்கெல்லாம் யார் கணக்கு சொல்வது. இந்த நான்கு சாதியை இந்தியாவில்தான் படைத்தானா, அய் ரோப்பாவில் நான்கு சாதியைப் படைத் தானா? வெள்ளைக்காரன் இடத்தில் படைத்தானா, மற்ற நாட்டில் எல்லாம் படைக்காமல் இங்கே மட்டும் படைத்தான் என்றால் அவன் ஆண்டவனா? அப்படித் தான் படைத்தார்கள் என்றால் அவரவர் வேலையைச் செய்து இருக்கலாம் இல்லையா, ஆனால் பார்ப்பனர்களுக்கு சூத்திரர்கள் எத்தக் காலத்திலும் தொண்டு செய்வது அவர்களுடைய கடமை. அடி மையாக வேலை செய்யவேண்டி இருக்கே, எங்களுக்கு விடுதலை கிடை யாதா என்றால், விடுதலை என்று நீ கேட் டாலே மோட்சத்திற்குப் போக மாட்டாய். விடுதலை கேட்டால் நரகத்திற்குத்தான் போவாய். பிராமணர்களுக்கு தொண்டு செய்வதிலிருந்து விடுதலை சூத்திரர் களுக்குக் கிடையாது. எவ்வளவு காலமாக ஆனாலும் பிராமணருக்கு சூத்திரன் தொண்டு செய்துதான் மேல் நிலைக்கு வர வேண்டும். பிராமணர்கள் வேலை செய் வதற்கு கூலி கொடுக்காவிட்டால்கூட வேலை செய்யவேண்டும். சூத்திரர் களுக்கு சொத்து எது எது என்று கருது கிறார்களோ அந்தச் சொத்துக்கள் அத் தனையும் பிராமணர்களுக்குச் சொந்தம்.

ஏதோ சில காரணத்தால் சூத்திரனுக்கு சொத்துக்கள் கிடைத்தாலும்கூட அதை
பிராமணன் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வான். இப்படியெல் லாம் எதை எதையோ எழுதி வைத்திருக் கிறார்கள். அதையெல்லாம் பிராமணர் கள் சாஸ்திரம் என்கிறார்கள். முட்டாள் தனம் எல்லாம் சாஸ்திரமா? சாஸ்திரத் தில் சொல்லி இருந்தால் எதையும் நாம் அனுமதிக்கலாமா?

சாஸ்திரத்தில் நீங்கள் மேல் சாதி நாங் கள் கீழ் சாதி என்று சொல்லி இருந்தால் அதை ஒப்புக் கொள்ளவேண்டுமா? ஆண்டவன் படைத்தான் என்றால் அதற் காக நாங்கள் அடிமையாக இருக்கவேண் டுமா? அப்படியானால் ஆண்டவனே அடிமையாக இருக்கட்டும். என்னை ஏன் அடிமையாக இருக்கச்  சொல்கிறீர்கள்? எனவே சாஸ்திரத்தின் பெயரால், கட வுளின் பெயரால், தெய்வத்தின் பெயரால் கற்பனையாக நம்மையெல்லாம் முட்டா ளாக்கி நான் சொல்கிற வார்த்தைக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் நம்மை யெல்லாம் அடிமைகளாக்கினார்கள். தமிழ்நாட்டில் இப்போது நம் கண்ணுக்குத் தெரியவில்லை. நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது நான் படித்த, மயிலாடுதுறை யில் இரண்டு தெருக்கள். இந்த இரண்டு தெருவிலும் இருநூறு வீடுகள். இந்த இருநூறு வீடுகளில் 195 வீடுகளும் பிரா மணர்கள் வீடுகள்தான். ஒரு அய்ந்தாறு வீடுகளில்தான் முதலியார், செட்டியார் போன்றோர் இருந்திருப்பார்கள். வன்னி யரைக்கூட உள்ளே விடமாட்டார்கள். ஆதிதிராவிடர்கள் அந்தத் தெருவிலே நடக்கக் கூடாது. யாராவது இறந்து போனால் தூக்கிக் கொண்டு போகலாமே தவிர நடக்கக்கூடாது.

தீண்டாமையை ஒழிப்பதுதான் பெரியாரின் முதல் வேலையாக இருந்தது!

இந்தத் தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பதுதான் பெரியாரின் முதல் நோக் கம். தீண்டாமையை ஒழிக்க பள்ளியில் இடம் கொடுத்தது நீதிக்கட்சி. அரசாங்க நிலையிலே பங்கு கொடுத்தது நீதிக் கட்சி. நீதிமன்றத்தில் நீதிபதியாக ஒரு சூத்திரரை உட்கார வைத்தது கலைஞர். ஆதிதிரா விடர்களை உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆக்கியது கலைஞர். கிருஷ்ணசாமிதான் நீதிபதியாக ஆக வேண்டும் என்று கட் டாயமில்லை. ஒரு ஆதிதிராவிடர் ஆகி விட்டால் கிருஷ்ணசாமி ஆனது போலத் தான். நம்முடைய இனம் உள்ளே நுழை யக் கூடாது என்கிறார்கள். அந்த இடத் திற்கு நுழையக் கூடிய ஒரு உரிமையை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலை ஞர் அவர்கள் தேடிக் கொடுத்திருக்கிறார்.

சமஸ்கிருதத்தை பெண்கள் படிக்கக்கூடாது!

இப்படி நடைபெற்ற அநீதிகளுக் கெல்லாம் காரணம் சமஸ்கிருதம். சமஸ் கிருதம் தேவ மொழி, தமிழ் நீச மொழி என்று சொன்னார்கள். தமிழ் பிறந்த காலத்தில் சமஸ்கிருதம் பிறக்கவில்லை. தமிழ் இலக்கியங்கள் பிறந்த காலத்தில் சமஸ்கிருதம் பிறக்கவில்லை. தமிழில் உள்ள நீதி நூல்களுக்கு ஈடாக சமஸ் கிருதத்திலே கிடையாது. தமிழ் எல் லோரும் படிக்கலாம். ஆனால், சமஸ்கிரு தத்தை  பிராமணர்கள் மட்டும் தான் படிக் கலாம். அது  அவர்களுக்காகவே தயா ரிக்கப்பட்ட மொழி. தமிழ் மொழி எல் லோருக்கும் உரியது. சமஸ்கிருதத்தை பெண்கள் படிக்கக் கூடாது. மனைவி, தாய் படிக்கக் கூடாது. ஆனால், தமிழை எல் லோரும் படிக்கலாம், மனைவி படிக்கலாம், தாய் படிக்கலாம். தங்கை படிக்கலாம், முதலாளி, தொழிலாளிகள் என்று எல் லோரும் படிக்கலாம்.

தமிழ் நம்மை வாழவைத்த மொழி, சமஸ்கிருதம் நம்மை சாகடித்த மொழி. அந்த சமஸ்கிருதம் பிராமணர்களுக்கு பயன்படுகிறது.

 அந்த சமஸ்கிருதத்திலே தான் இந்தி வளர்க்கப்பட்டு புகுத்தப்படு கிறது என்ற காரணத்தால் ஏற்கெனவே நாங்கள் சமஸ்கிருதத்தால் பாதிக்கப்பட்ட வர்கள். மறுபடியும் நீங்கள் இந்தியைக் கொண்டு வருகிறீர்கள் அதை ஏற்க மாட்டோம் என்று பெரியார் சொன்னார், மறைமலை அடிகள் சொன்னார். மிகப் பெரிய தமிழறிஞர்கள் எல்லாம் சொன் னார்கள்.

பாரதியாரே தமிழ் மொழியைத் தான் போற்றிப் பாடினார். பாரதிதாசன் இந்தி மொழி நுழைவதைக் கண்டித்துப் பாடி னார். இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும்! என்று கேட்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

தமிழனை சொரணை உள்ளவனாக ஆக்கியது இந்த இயக்கம்!

இந்த இயக்கம் தமிழனை சொரணை உள்ளவனாக ஆக்கி இருக்கிறது. எனக்கு தெம்பு இருந்தால், நான் கொள்கையோடு வாழ்ந்தால், ஒரு லட்சியம் எனக்கு இருந் தால், நான் பேசுகிற போது அந்தப் பேச்சில் நம்பிக்கை இருந்தால் அத்தனையும் கொடுத்தது திராவிட இயக்கம். தியாகராயர் இல்லாவிட்டால், டி.எம். நாயர் இல்லாவிட்டால் அந்த வழியிலே வந்த தலைவர்கள் இல்லாவிட்டால் இந்தி திணிப்பை எதிர்க்கின்ற ஒரு உணர்வு இல்லாவிட்டால், எங்களைப் பொறுத்த வரையில், எங்களைப் போன்றவர்களுக்கு இன்றைக்கு கலைஞருக்கோ, எனக்கோ இந்த இயக்கத்தில் முன்னோடிகளாக இருந்து பணியாற்றுகின்ற அந்த சூழ் நிலையே வந்திருக்காது.

இந்திமொழியைத் திணிக்க மாட்டோம் என நேரு கொடுத்த உறுதிமொழி!

அண்ணாவே உயர்ந்த நிலைக்கு வந்திருக்க மாட்டார். காமராஜருக்கே மரியாதை வந்திருக்காது. ராஜாஜியை எதிர்த்து காமராஜர் போராடியபோது கருப்பு காந்தி என்று காமராஜரை சொன் னார்கள். அப்படி இந்த நாட்டில் சாதி உணர்வு, வைதீக ஆதிக்கம், பிராமணிய மேலாண்மை, சூத்திரர்களை இழிவுபடுத் துவது இவையெல்லாம் எதிர்த்து நின்ற ஒரு வலுவான சக்தி திராவிட இயக்கம். அந்த வழியில் தான் இந்தி மொழியைத் திணிக்காதே., பள்ளிக் கூட மாணவர் களுக்கு அரசாங்கத்திலே கொண்டுவந்து எல்லா இடத்திலும் இந்தியைப் பரப்பாதே என்று அன்றைக்கு போராட ஆரம்பித்து, பண்டித ஜவஹர்லால் நேரு அதை ஒத்துக் கொண்டு, இந்தி மொழி பேசாத மக்கள் ஒப்புக்கொள்கிற வரையில் நாங்கள் இந்தியை அந்த மக்களுக்கு ஆட்சி மொழியாக ஆக்க மாட்டோம் என்று உறுதிமொழி கொடுத்தார். நீங்கள் ஒத்துக் கொண்டால்தான் ஆட்சி மொழி - இல்லா விட்டால் நாங்கள் திணிக்க மாட்டோம். இது லால்பகதூர் சாஸ்திரியும் சொன்னார்.

இவ்வாறு தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார்.

Wednesday, January 28, 2015

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சோசலிஸ்ட், செக்குலர் என்பதை நீக்கி மத்திய அரசு விளம்பரமா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சோசலிஸ்ட், செக்குலர் என்பதை நீக்கி மத்திய அரசு விளம்பரமா?
அரசமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் ஹிட்லரிசத்துக்கு மத்திய செய்தி விளம்பரத் துறை மன்னிப்புக் கோரவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சோசலிஸ்ட், செக்குலர் என்பதை நீக்கி மத்திய அரசு விளம்பரமா?

66 ஆவது குடியரசு நாளுக்காக மத்திய செய்தி விளம்பரத் துறையின் சார்பில் ஏடுகளுக்குக் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உறுதி செய்யப்பட்டு இடம் பெற்றுள்ள சோசலிஸ்ட், செக்குலர் என்ற சொற் களைத் திட்டமிட்டு நீக்கியதைச் சுட்டிக்காட்டி, இந்த அத்துமீறலை - சட்ட விரோதச் செயலை மேற்கொண்ட செய்தி விளம்பரத்துறை பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில், ஏழு மாதங்களுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற - ஆர்.எஸ்.எஸ். - ஆணைப்படி நடக்கும் - பா.ஜ.க. என்ற ஆட்சியில் பகிரங்க மாக, பட்டாங்கமாய் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைந்து உருவாக்கப்பட்டவற்றை அரசின் அடிப்படை நோக்கத்தையே, அமைதியான முறையில் அகற்றிடும் முயற்சிகள் இந்த 66 ஆவது இந்தியக் குடியரசு நாள் முதலே தொடங்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் பரவலாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது!

அப்பட்டமான ஹிந்து மதவாத ஹிந்துத்துவ முயற்சிகள் - சிறிதும் கூச்சநாச்சமின்றி, மோடி அரசில் இடம்பெற்றுள்ள அவரது சக அமைச்சர்கள், பா.ஜ.க. எம்.பி.,களால் நிறைவேற்றப்பட்டு வருவதை நாடே பார்க்கத் தவற வில்லை.
தி எகனாமிக் டைம்ஸ் ஆங்கில நாளேட்டில் இன்று (28.1.2015) 3 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள செய்தியும், பின்னணியும்!

அரசமைப்புச் சட்டத் திட்டத்தில் உள்ள முக்கிய சொற்களை நீக்கி விளம்பரம்!

இதே பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள - 66 ஆவது குடியரசு நாளையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை என்ற செய்தித் துறை அமைச்சு (Information and Broadcasting Ministry) விளம்பரத்தில்,

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள முன்னுரை பூர்வப் பீடிகை (Preamble) வாசகங்களையே மாற்றி அரசு சார்பில் விளம்பரம் தரப்பட்டுள்ளது. நமக்கு நாமே வழங்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் - இந்திய மக்களாகிய நாம் இந்திய அரசினை இறையாண்மையுடன் கூடிய சமதர்ம, மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசாக அமைந்துள்ள ஆட்சி என்பதாகத்தான் தொடங்குகிறது.

இந்தப் பீடிகை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாற்றப்படக்கூடாத அடிப்படை அரசியல் சட்டக் கட்டுமானப் பகுதியாகும்.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும்...

இந்த அரசின் மாற்றப்படக் கூடாத அடிக்கட்டுமான (Basic Structure of the Constitution) சொற்களான சோஷலிஸ்ட், செக்யூலர் (Socialist and Secular) என்பதனை நீக்கி, விளம்பரம் கொடுத்துள்ளனர். உச்சநீதி மன்றத்தில் இரண்டு வழக்குகளில் அதை நீக்கிட முடியாது - அது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அடிப் படை நோக்கப் பகுதி என்று தெளிவாக உறுதியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது!

திட்டமிட்டே நீக்கப்பட்டுள்ளது!

இப்போது வேண்டுமென்றே திட்டமிட்டு இந்திய அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான (I&B Ministry) அதிகாரபூர்வமாகத் தந்த விளம்பரத்தில் - திட்டமிட்டே ஆழம் பார்க்கும் வகையில், ஹிட்லரிசம் தலைதூக்கி, சமதர்மம், மதச் சார்பின்மை (சோலிஸ்ட், செக்குலர்) இரண்டு நோக்கங்களையும் எங்கள் அரசு தூக்கி எறிந்து விட்டது என்று சொல்லுவதாக அரசு விளம்பரம் தருகிறது!

சப்பைக் கட்டா?

இதற்குச் சப்பைக் கட்டுக் கட்டுவதற்கு சில ஜால் ராக்களும், ஆமாம் சாமிகளும் ஊடகங்களுக்குக் கிடைத் தும் இருப்பது விந்தையிலும் விந்தை! வெட்கக்கேடானதும் கூட!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தொடக்கத்தில் இது இல்லையாம்; 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம்தான் இந்த இரண்டு சொற்றொடர்களும் புகுத்தப் பட்டனவாம்! முன்பு இருந்த வாசகங்களைக் கொண்டே இந்த அரசு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளதாம்!

- இப்படி ஒரு வெண்டைக்காய், விளக்கெண்ணெய் வியாக்கியானம் - விளக்கம்!

கேழ்வரகில் நெய்வடிகிறது என்று இந்த ஜால்ரா நிபுணர்கள் ஒத்து ஊதுகிறார்கள்! கேட்பவருக்கு மதியில்லை என்ற நினைப்போ!

இந்திய அரசமைப்புச் சட்டமானாலும் அல்லது வேறு எந்த சட்டப் பிரிவானாலும் - ஏன் ஒரு அரசு ஆணைகூட, தற்போது எப்படி அதில் உள்ளதோ அதை அப்படியே மாற் றாமல்தான் எடுத்தாளவேண்டும் - கடைப்பிடிக்கவும் வேண்டும்.

திட்டமிட்டே சில முக்கிய அதுவும் இலட்சிய குறிக் கோள் சொற்களை விட்டுவிட்டு அரசு விளம்பரம் தரலாமா?
 
மன்னிப்புக் கோரவேண்டும்

இது தற்செயலாக நிகழ்ந்த தவறு அல்ல; திட்டமிட்டு - ஆழம் பார்க்கும் - ஹிந்துத்துவா உணர்வின் வெளிப்பாடு - அசல் ஹிட்லரிசத்தின் அருவருக்கத்தக்க வெளிப்பாடு!

இதனை முற்போக்குக் கருத்துள்ளவர்கள் அனைவரும் வன்மையாகக் கண்டித்து, நாடு தழுவிய அளவிலே கண்டனக் குரல் எழுப்பி, இந்திய தகவல் ஒலிபரப்புத் துறையை மன்னிப்புக் கேட்க வைக்கவேண்டும்.

வருமுன்னர் காக்கத் தவறக்கூடாது. மோடி அரசு நாட்டை எப்பாதையில் அழைத்துப் போகத் திட்ட மிட்டுள்ளது என்பதற்கான ஒரு முன்னோட்டம் இது!
எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை செய்கிறோம் மக்களே விழிப்புடன் இருப்பீர்!

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்
சென்னை
28.1.2015

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, January 23, 2015

சிறீரங்கம் இடைத் தேர்தலில் திமுகவையே ஆதரிக்க வேண்டும் - ஏன்? - கி. வீரமணி

சிறீரங்கம் இடைத் தேர்தலில் திமுகவையே ஆதரிக்க வேண்டும் - ஏன்?

சிறீரங்கம் இடைத் தேர்தலில் திமுகவையே ஆதரிக்க வேண்டும் - ஏன்?

நடைபெறவிருக்கும் சிறீரங்கம் சட்டப்  பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரையே ஆதரிக்க வேண்டிய அவசியத்தை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வரும் பிப்ரவரி 13ஆம் தேதி சிறீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது இந்த இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

ஏன் இந்த இடைத் தேர்தல்?

இத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, அது நிரூபிக்க பட்டதால், பெங்களூர் தனி நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்ததால் சட்டத்தின் இயல்பான முறைப்படி முதல் அமைச்சர் பதவியையும், சிறீரங்க சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இந்த இடைத் தேர்தல் சட்டப்படி நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. மற்றபடி இந்த இடைத் தேர்தலுக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.

ஊழல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை!

1) இந்தியாவில் ஊழல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டு, முதல் அமைச்சர் பதவியை இழந்தது என்பது முதன் முதலில் அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் விஷயத்தில்தான் நடந்துள்ளது. இது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது.

ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதால், காலியான சட்டப் பேரவைத் தொகுதிக்கு  இடைத் தேர்தல் நடக்கும் நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிடும் போது, அக்கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்கச் செய்வதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிரான ஆரோக்கியமான பண்பு நலன் கொண்டவர்கள் என்பதை நிலை நிறுத்த முடியும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைப் பொறுத்ததல்ல; ஜனநாயக கடமை ஆகும்.

நாட்டையே ஊழலில் மூழ்கடித்து விடும் - எச்சரிக்கை!

அவ்வாறு இல்லாமல் ஊழல் புரிந்த ஒரு கட்சியின் வேட்பாளரை மீண்டும் வெற்றி பெறச் செய்தால் அது இந்த ஒரு இடைத் தேர்தல் சம்பந்தப்பட்ட ஒன்றாகக் கருதப்பட முடியாமல், நாட்டையே ஊழலில் மூழ்கடிப்பதற்கான ஓர் அங்கீகாரத்தை மக்களே உற்சாகமாக வழங்கி விட்டார்கள் என்ற மனப்பான்மையைத் தானே உருவாக்கும்?

2) இரண்டாவதாக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2011இல் பொறுப்பேற்றது முதல், மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகள் நடைபெற்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ள சொல்லுவதற்கென்று பெரிதாக ஏதுமில்லை என்பது வெளிப்படை!

அத்தியாவசியப் பொருள்களும் - கட்டண உயர்வு

மாறாக மக்களின் அடிப்படை, அன்றாட வாழ்வைப் பாதிக்கும் வகையில், பேருந்துகள் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என்று சாதாரண அடித்தட்டு மக்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் செயல்பட்டு வந்திருக்கிறது. குறைந்த பட்சம் இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவிப்பதற்காவது, இந்த இடைத் தேர்தலை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா!? அப்படி ஒரு தீர்ப்பை சிறீரங்கம் தொகுதி வாக்காளர்கள் வழங்காவிட்டால் மேலும் மேலும் பல துறைகளிலும் விலைவாசியை உயர்த்தும் கைங்கர்யத்தை அ.இ.அ.தி.மு.க. அரசு துணிச்சலாகச் செய்வதற்கான துணிவை அங்கீகாரத்தைக்  கொடுத்ததாகி விடுமே!

மின்வெட்டுத் தொடருகிறதே!

3) நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதங்களில் மின் தட்டுப்பாட்டை அறவே ஒழித்து விடுவோம் என்று அ.இ.அ.தி.மு.க. உத்தரவாதம் கொடுத்தது; நான்கு ஆண்டுகள் ஓடிய நிலையிலும் இன்னும் மின் தட்டுப்பாடு என்னும் இருட்டில் மக்கள், உழலும் பரிதாப நிலைதானே! அதே நேரத்தில் மின் கட்டணம் உயர்வு மட்டுமே நடந்திருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

தி.மு.க. ஆட்சி பற்றி உச்சநீதி மன்றம்

4) இந்தியாவிலேயே பொது விநியோகத் திட்டத்தில் தமிழ்நாடு அரசை (திமுக அரசை) மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆலோசனை தெரிவித்தது (12.8.2010).
ஆனால், இன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசின் செயல்பாடு என்ன? பொது மக்களின் குமுறலை அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் - ஆட்சி என்ற ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறதா என்பது எங்கும் பேச்சாகவே இருக்கிறது!

மத்தியில் உள்ள பிஜேபி அரசு இந்துத்துவா கொள்கை வெறி கொண்டது என்பது நாடறிந்த உண்மை. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. கட்சி ஆட்சி என்பதும் பெரிதும் அந்தப் போக்குக் கொண்டதே என்பதற்குப் பெரிய எடுத்துக்காட்டுகள் தேவையில்லை.

அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டே மண் சோறு சாப்பிடுவது வரை சர்வ சாதாரணமே!

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர் சட்டத்தின் மூலம் கொண்டு வந்தார். அதன் மூலம் தந்தை பெரியார் உள்ளிட்ட தமிழ்நாட்டு அறிஞர் பெரு மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கை நிறைவேறியது.

தமிழ் ஆண்டு போய் சமஸ்கிருத ஆண்டு வந்தது!

ஆனால் ஆட்சிக்கு வந்த முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா - இந்து மதப் புராணக் கதையின் அடிப்படையில் சமஸ்கிருத ஆண்டுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறி முந்தைய தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியதை மாற்றி தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டத்தைக் கசக்கிக் குப்பைக் கூடையில் வீசி எறிந்தார். இந்த ஒன்றே ஒன்று போதும் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியும், அவர் பொதுச் செயலாளராக இருக்கும் அ.இ.அ.தி.மு.க.வும் தமிழ் - தமிழர் - விரோத இந்துத்துவா ஆட்சி என்பதற்கு. பிஜேபியை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் அது கொண்டுள்ள இந்துத்துவ வெறி என்றால், அதே கண்ணோட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியையும் பார்ப்பதற்குச் சகல தகுதியும் அஇஅதிமுகவுக்கு உண்டு. அந்த வகையிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார்பின்மை கொள்கைக்கு எதிராக செயல்படுவோர் யாராக இருந்தாலும் வாக்காளர் பெரு மக்கள் வாக்குச் சீட்டு மூலம் தக்க பாடத்தைக் கற்பிக்கக் கடமைப்பட்டுள்ளவர்கள் ஆவார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்....

6) சிறீரங்கம் இடைத் தேர்தலில் பிஜேபி நின்றாலும் சரி, அது தொடர்புடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் (NDA) நின்றாலும் சரி, அது இந்துத்துவா வெறிக்கு, ராம ராஜ்ஜியத்துக்கு, மதச் சார்புத் தன்மைக்கு அளிக்கப்பட்ட ஆதரவாகவே கருதப்பட வேண்டும்.

7) கடந்த எட்டு மாத மத்திய பிஜேபி ஆட்சியில் நடைபெற்றவை எல்லாம் இந்துத்துவா மதவெறி முழக்கங்கள்தான்; அது காந்தியாரைப் படுகொலை செய்த கோட்சேக்குக் கோயில் கட்டுவோம் என்று சொல்லும் அளவுக்கு மிகப் பெரிய துணிச்சலைக் கொடுத்து விட்டதா இல்லையா?

வளர்ச்சியா - தளர்ச்சியா?

8) வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி மக்களுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து ஏமாற்றி, மத்தியில் ஆட்சியிலே அமர்ந்த நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தளர்ச்சியைத் தவிர மக்கள் கண்ட பலன் என்ன?

இலாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் தனியார்க்குத் தூக்கிக் கொடுக்கும் நாட்டின் செல்வத்தை தனியார்க்கு ஏகபோகமாக்கும் கேடு கெட்ட வேலையில்தான் மோடி அரசு வேக வேகமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது.

விவசாயம் வேகமாக வீழ்ச்சியை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டு வரப்பட்ட பயிர்க் காப்பீட்டு (இன்ஷ்யூரன்ஸ்) திட்டத்தை யாருக்கும் தெரியாமல் கையுறை போட்டுக் கொன்று குழியில் தள்ளி மூடிவிட்டது. கிராம மக்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டமான நூறு நாள் வேலை திட்டம் அனேகமாக ஊற்றி மூடப்பட்டு விட்டது.

உள்நாட்டுத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றனவே!

வெளிநாட்டு முதலாளிகளைக் கூவிக் கூவி அழைக்கும் பிஜேபி அரசு, ஏற்கெனவே இந்தியாவில் நடைபெற்று வந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றனவே - அதனைத் தடுக்க ஒரு தூசைக்கூட அசைக்கவில்லையே!

ஆர்.எஸ்.எஸ். சாவி கொடுத்தால் ஆடும் இந்துத்துவா பொம்மையாகத்தான் மோடி அரசு நடனமாடிக் கொண்டு இருக்கிறது.

அதன் காரணமாகவே நடைபெற்ற  அனைத்துத் தேர்தல்களிலும் பெரிய அளவுக்கு வாக்குச் சரிவை பிஜேபி சந்தித்துக் கொண்டு இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். குறுகிய காலத்திலேயே வெகு மக்கள் எதிர்ப்பை வாரி அணைத்துக் கொண்டு விட்டதே. பிரதமர் மோடிவெற்றி பெற்ற உ.பி. வாரணாசி தொகுதிகளில் நடைபெற்ற கண்டோன்மென்ட் தேர்தலில்  அனைத்து இடங்களிலும் பிஜேபி தோல்வியைக் கண்டுள்ளது.

குறுகிய காலத்திலேயே பிஜேபி ஆட்சியின் தரம் எத்தகையது என்பதை இந்திய வாக்காளர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். சிறீரங்கம் இடைத் தேர்தல் மேலும் ஒரு பாடத்தைக் கற்பித்தால் எதிர் காலத்திற்கு நன்மையாக முடியும்.

கூட்டணியிலிருந்து விலகல்

கடந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சியின்மீது கடும் அதிருப்தி கண்டு, வெளிப்படையாகவே குற்றம் சாட்டி, கூட்டு முறிந்தது என்று அறிவித்து, வெளியேறி விட்டனர் என்பதையும் சிறீரங்கம் தொகுதி வாக்காளர்கள் தெரிந்து  கொள்ள வேண்டும்.

இடதுசாரிகள் கவனத்துக்கு...

9) சிறீரங்கம் இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்கிஸ்ட்) போட்டியிடுவதாக அறிவிப்பு வந்துள்ளது. தேர்தலில் போட்டியிடுவது என்பது அரசியல் கட்சிக்குரிய உரிமையே! அதே நேரத்தில் யார் வெற்றி பெறுவது என்பதைவிட யார் தோற்கடிக்கப்பட வேண்டியது எது என்பது முக்கியம் அல்லவா! தெரிந்தோ தெரியாமலோ தோற்டிக்கப்பட வேண்டிய சக்திகளுக்கு நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ துணை போய் விடக் கூடாது என்பதில் இடதுசாரிகள் எச்சரிக்கையாக இருந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். ஒரே நேரத்தில் பல போர் முனைகளைத் தேர்வு செய்யக் கூடாது என்பது இடதுசாரிகளுக்குத் தெரியாததல்லவே!

தி.மு.க. வேட்பாளரை ஆதரிப்பீர்!

10) மதவாத பிஜேபி நிலைப்பாட்டை வெளிப்படையாகவே விமர்சித்து தனது எதிர்ப்பினை திமுக பொதுக்குழு (சென்னை 9.1.2015) வலுவான தீர்மானத்தின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் கூடுதல் வாய்ப்பு திமு.க.வுக்கு மட்டுமேதான் இருக்கிறது என்ற நிலையில் அதனைப் பிரகாசமாக்கி, திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் மத்தியில் உள்ள மதவாத பிஜேபி அரசு, மாநிலத்தில் அதே மனப்பான்மை கொண்ட அ.இ.அ.தி.மு.க. அரசுகளுக்கு தோல்வியைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

இதனை சிறீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர்கள் தெளிந்து உணர்ந்து அத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு வெற்றியை ஈட்டித் தருமாறு திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு கொள்கைக் கண்ணோட்டத்திலும், நாட்டு மக்களின் வளர்ச்சி நோக்கிலும் இந்த வேண்டுகோளை திராவிடர் கழகம் வாக்காளர்களுக்கு முன் வைக்கிறது.


கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்

சென்னை
23-1-2015


Friday, January 11, 2013

தினமலர்களா ஜால்ராவைப் பற்றிப் பேசு வது!


தி.மு.க.வின் அடுத்த தலைமைக்கு அடை யாளப்படுத்தப்பட்ட தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை கொடுத்து விட்டாராம்.
இது தினமலர் கும் பலுக்குக் குமட்டிக் கொண்டு  வருகிறது. ஜால்ரா சத்தமாம் அது.
கார்ட்டூன் போட்டு வேறு கிண்டல்!
யாருக்கும் ஜால்ரா அடிப்பது திராவிடர் கழகத் தின் வேலையல்ல. அடிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. தலைப்புக் கொடுப்பதிலிருந்து செய்தி வெளியிடும் முறைவரை ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் தினமலர்களா ஜால்ராவைப் பற்றிப் பேசு வது!
ஒரு கருத்தை வர வேற்பது ஜால்ரா என்று பொருளானால் எந்த ஊடக மும் எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது - கூடவும் கூடாது.
திராவிடர் கழகம் தாய்க் கழகம் என்கிற முறையில் தி.மு.க. பற்றிக் கருத்துக் கூற உரிமையுள்ளது.
இதற்கு முன்பும்கூட திராவிடர் கழகம்  அந்தக் கடமையைச் செய்துள்ளது. திமுகவிலிருந்து எம்.ஜி. ஆர். பிரிந்தபோதுகூட தந்தை பெரியார் எம்.ஜி. ஆரை அழைத்துப் பேச வில்லையா!
கலைஞருக்கும் நாவல ருக்கும், கருத்து மாறுபாடு ஏற்பட்டபோது அன்னை மணியம்மையார் அந்தக் கடமையினைச் செய்துள் ளார்களே.
ஏன்? தி.மு.க., அ.தி. மு.க. இணைப்புக்குக்கூட திராவிடர் கழகத்  தலைவர் தன்னாலான முயற்சியை மேற்கொள்ளவில்லையா?
இந்திய யூனியன் முசுலிம் லீக்கில் அப்துல் சமது, அப்துல் லத்தீப் ஆகியோருக்கிடையே கருத்து வேற்றுமை வந்த போதுகூட சிறுபான்மை மக்கள் மத்தியிலே பிளவு வரக்கூடாது; அது பாது காப்பானதல்ல என்ற அடிப்படையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதுண்டே!
மீண்டும் இரு அமைப் புகளும் ஒன்று சேர்ந்த போது நாவலர் அப்துல் சமது அவர்கள் முதலாவ தாகத் தொடர்பு கொண்டு நன்றி சொன்னது திரா விடர் கழகத் தலைவர் அவர்களுக்குத்தான் என்பதெல்லாம் புரியாமல் பூணூல்கள் பேனா பிடிக்கக் கூடாது.
தி.மு.க.வில் பிளவு ஏற்படாதா! அதன் மூலம் பார்ப்பனீயம் என்ற பார்த் தீனியம் தமிழ் மண்ணில் மண்டக் கூடாதா என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த கூட்டத் துக்கு தி.மு.க.வில் அது நடக்கவில்லை என்கிற போது அய்யோ அப்பா அம்மா என்று அம்மிக் குழ வியை எடுத்துக் கொண்டு வயிற்றில் குத்திக் கொள் கிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.
தினமலர், நமது எம்.ஜி.ஆர்.கள் புலம்புவது திராவிடர் கழகத் தலைவர் சரியான கடமையை சரி யான தருணத்தில் மிகச் சரியாகச் செய்துள்ளார் என்பதற்கான நற்சான்றிதழே!
-   மயிலாடன்

Wednesday, January 9, 2013

தி.மு.க. தலைமைக்கு அடையாளப்படுத்தப்பட்ட மு.க. ஸ்டாலின்!- கி.வீரமணி வரவேற்பு


தி.மு.க. தலைமைக்கு அடையாளப்படுத்தப்பட்ட மு.க. ஸ்டாலின்!
கலைஞர் அறிவிப்பு-காலச் சிலாசாசனம்!
சாதித்துக் காட்டுவார் மு.க. ஸ்டாலின்
கட்டுப்பாடு காத்து தி.மு.க.வின் பணிகள் தொடரட்டும்!
தமிழர் தலைவரின் மிக முக்கிய அறிக்கை
போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம்  வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!
தி.மு.க. தலைமைப் பொறுப் புக்கு மு.க. ஸ்டாலினை நான் முன் மொழிவேன் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பை வரவேற்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஜனநாயக இயக்கம். கட்சியின் தேர்தலில் குறிப்பாக தலைமைக் கழகத்தின் தேர்தலில் - தலைவராகவோ, பொதுச் செயலாளர் பதவிக்கோ ஒருவர் நிற்க வேண்டுமென்றால், அதை முன் மொழிந்து பொதுக் குழுவிலேதான் பெரும்பான்மையோர் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். அப்படி முன்மொழியக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையிலே வருமே யானால், அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி - இப்போது சொல்கிறேன் -  ஸ்டாலினைத்தான் முன் மொழி வேன். ஏனென்றால், இது ஏற்கெனவே பொதுச் செயலாளர் பேராசிரியர் முன் மொழிந்து, அதை நான் வழிமொழிவ தாகத்தான் அர்த்தம்.
- இவ்வாறு 6.1.2013 அன்று  அண்ணா அறிவாலயத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை யளிக்கும் வகையில் மானமிகு சுயமரி யாதைக் காரராக என்றும் வாழும் தமிழ்ச் சமுதாய தனிப் பெரும் தலைவர், தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் அளித்துள்ள பதில், வெறும் சொற் கோவைகள் அல்ல; தி.மு.க. தொண்டர் களுக்கும், உறுப்பினர்களுக்கும் நாட்டுக் கும் அறிவிக்கப்பட்ட செப்பேடு, சிலாசா சனம்; சீரிய நல் கல்வெட்டும் ஆகும்.
சமுதாய கொள்கை உடைய ஒரே அரசியல் கட்சி தி.மு.க.!
தி.மு.க. என்பது, உண்மையான இன உணர்வாளர்கள், திராவிட சமுதாய வளர்ச்சியில் ஆழமான பற்றும், பாசமும் கொண்ட பகுத்தறிவாளர்களுக்கு ஒரு மாபெரும் இனப் பாதுகாப்பு அரண் - பெரியார் தம் லட்சியங்களை அண்ணா வழியில், அரசியலில் - முடிந்தவரை அயராது செயலாக்கம் செய்யும் ஓர் அற்புதமான அரசியல் விஞ்ஞானம் என்பது தெரியும்; தெரிய வேண்டும். சமுதாயக் கொள்கை கொண்ட அரசியல் இயக்கம் என்பது தி.மு.க. மட்டுமே! இது தி.மு.க.வுக்கே உரித்தான தனிச் சிறப்பு!
தாய்க் கழகமான திராவிடர் கழகத்தி லிருந்து 1949இல் அது பிரிந்த நிலையில், அதன் நிறுவனர் அறிஞர் அண்ணா அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்:
தி.மு.க. தாய்க் கழகமான தி.க.வுக்கு வாழையின் கீழ்க் கன்று போல் அமையாது; மாறாக, ஆல மரத்தின் விழுதாகவே என்றும் இருக் கும். திராவிடர் கழகமும் தி.மு.கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகவே என்றும் இயங்கும் என்று கூறினார்.
அது வெறும் பேச்சல்ல; நீர் மேல் எழுத்தல்ல என்று நிரூபித்துக்காட்ட காலவெள்ளத்தையும் அண்ணா பயன்படுத்திக் கொண்டார்; 1967-ல் தாம் பறித்த வெற்றிக்கனியை நேரே திருச் சிக்கே சென்று தனது தலைவர் தந்தை பெரியார்தம் காலடிகளில் காணிக்கையாக வைத்து ஆசி பெற்றார்; அமைச்சரவையை அய்யாவுக்கே காணிக்கை என்று சட்டப் பேரவையில் கூறி சரித்திரம் படைத்தார்!
18 ஆண்டுகள் பிரிவு அவர்களைப் பொறுத்தவரை, கனவாய் மறைந்து, கரைந்து போனது; காவலுக்குக் கெட்டிக்காரப் பணியை கருஞ்சட்டைக் கழகம்   இன எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் கேடயமாய் திராவிடர் கழகம் தந்தை பெரியார் தலைமையில் நேர்த்தியுடன் செயல்பட்டது - செயல்பட்டும் வருகிறது.
பெரியாருக்கு ஏற்பட்ட கவலை!
அண்ணா மறையும்போது அதன் எதிர்காலம் பற்றி  தி.மு.க.வினரைவிட அதிக கவலைப்பட்டவர் அய்யா அவர்கள் என்பது அருகில் இருந்த எங்களைப் போன்றவர்களுக்கே தெரியும்.
தி.மு.க. - கெட்டியான பூட்டு; அதற்குக் கள்ளச் சாவி யாரும் போட்டு விடாமல் பார்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உண்டு
அவர்களுக்குள்ளே ஏதாவது பெரும் பிளவு, பிரச்சினை ஏற்பட்டு, கவிழ்த்துக் கொண்டால் ஒழியதி.மு.க.வை வீழ்த்த எவராலும் முடியாது  என்று கூறி எச்சரிக்கை மணியையும் ஓங்கி அடித்தார் அறிவு ஆசான் தந்தை பெரியார்!
அது மட்டுமா? அவர்களுக்குத் தந்தை யாக, குருவாக இருந்து பாடமும் எடுத்தார்;
அண்ணா சொன்ன  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் உள்ள மற்றமுன் இரண்டும்கூட எனக்கு முக்கியமல்ல; இயக்கம் காப்பாற்றப்பட, ஒழுங்குற நடைபெற கட்டுப்பாடுதான் உயிர் மூச்சு என்றும்  உணர்த்தினார்!
எந்த ஒரு இயக்கமானாலும் இது மிகவும் முக்கியமான பாலபாடமாகும்.
பெரியாரின் ஆணை
அண்ணா மறைவுற்ற நிலையில், அதனைக் கட்டிக் காப்பாற்றி கரை சேர்க்கும் ஆற்றல் கலைஞர் கருணாநிதி என்ற கப்பல் தலைவனுக்கே (கேப் டனுக்கே) உண்டு என்பதை உணர்ந்தே, அவர்  தலைமையேற்க பெரியார் அவ ருக்கே ஆணையிட்டார். அதற்கு வாழும் சாட்சி உண்டு.  அறிஞர் அண்ணாவும் கலைஞரின் ஆற்றலை அளந்து சரியாக மதிப்பீடு செய்ததால்தான், மன்னார்குடி பொதுக் கூட்டத்தில்,
முற்பாதியை நான் எழுதுகிறேன் என்றால் பிற்பாதியை என் தம்பி கருணாநிதி செய்து முடிப்பார் என்ற கருத்துப்பட பொது மக்களுக்கே சொல்லத் தயங்க வில்லை.
கலத்தைச் செலுத்திய மாலுமி
கலைஞரின் தலைமையால் பல்வேறு சாதனைகள் ஒருபுறம் என்பதைவிட, சோதனைகள், நெருக்கடி காலத்தில் இயக்கத்திற்கு ஏற்பட்டபோது, அதனை எதிர்கொண்ட நேர்த்தி, அரசியல் ஞான அணுகுமுறை, இயக்கத்தால் வளர்ந்த பிறகு யூதாஸ் ஆனவர்களின் முதுகு  குத்தல்கள் எல்லாவற்றையும் தாண்டி, சுனாமிகளையும் சந்தித்து, எதிர் நீச்சலில் போட்டு வெற்றி கண்டு, தி.மு.க. என்ற கலத்தை சேதாரமில்லாமல் செலுத்தும் சிறந்த மாலுமியாக இருந்து வருகிறார்!
அவருக்கு அருந்துணையாக அசைக்க முடியாத கொள்கை வீரராய் - அவரினும் மூத்தவராய் இருப்பினும், ஆற்றல் காரணமாக அவரையே தலைவர் என்று ஏற்றுக் கொண்டதோடு, அதை அகிலத்திற்கும் வெளிப்படையாக கூறும் இனமானப் பேராசிரியரும் அமைந்தது - பெரு வாய்ப்பே ஆகும்!
கடும் உழைப்பிற்கு மறுபெயரே கலைஞர். இந்நிலையில் தேர்தல் வெற்றி - தோல்விகள் எந்த அரசியல் கட்சிக்கும் இடையில் நிகழும் சம்பவங்களே தவிர, இறுதியை முடிவு செய்யும்  எழ முடியாத சோகங்களாகி விடாது.
வேக நடை போடுவோர், தடுக்கி விழுவது போன்றது; அதனால் எந்த இயக்கமும் அழிந்து விடாது - கொண்ட கொள்கையில், லட்சியப் பயணத்தில் உறுதியாக இருந்தால்.
முடிந்து போன கதையல்ல தி.மு.க., அதனால்தான் தி.மு.க. இப்போது (விஸ்வரூபம்), பெரு உரு கொண்டு வருகிறது.
இதை முடிந்து போன கதை என்போர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் பேதமையாகும்.
இந்நிலையில், முதிர்ச்சி ஒருபுறம் என்றாலும், தவிர்க்க இயலாத இயற்கை முதுமையும் எவர்க்கும் இயற்கை என்ப தால், அடுத்த கேள்வி எந்த  - இயக்கத் திலும்  நிகழக் கூடியதுதான் - அதிலும் கல்லடி பெறத் தயாராக இருக்கும் காய்த்த மரமாகும் தி.மு.க. விலக்காகுமா?
கேள்வி எழுப்பியோர் இருவகையினர்
அத்தகைய கேள்வி எழுப்பியவர்கள் இரு வகையினர்.
1. நல்லெண்ணத்தோடு நாட்டாருக்கு உணர்த்திட வேண்டும் என்ற அவாவு டையோர் ஒரு வகை;
2. இன எதிரிகள் - கலக மூட்டியே காசு சம்பாதிப்போர் - இன உணர்வு இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தங்கள் இனத்தின் மகுடங்களைப் பாதுகாக்கச் செய்யும் விஷமதான மனப்பான்மையுடை யோர் இன்னொருவகை!
இதை வைத்தே பல ஊடகங்கள் தீனி பொறுக்கி தினம் தினம் வாழ்கின்றன!
அவற்றுக்கெல்லாம் ஆணி அடித் ததைப் போல,   இந்த ஈரோட்டுக் குருகுல மாணவர் இணையற்ற முறையில் பதில் கூறி, இராவணனின் மைந்தன் - இந்திரனை ஜெயித்த இந்திரஜித்து என்று காட்டி விட்டார்!
தாய்க் கழகத்தின் மகிழ்ச்சி!
தாய்க் கழகம் இது கேட்டு மகிழ்ச்சிக் கண்ணீர்த் துளிகளை விடுகிறது!
முன்பும் கண்ணீர்த் துளிகள்; இப் போதும் கண்ணீர்த் துளிகள் - பன்னீர்த் துளிகளாக!
யாருக்கோ முடிசூட்டும் அறிவிப்பல்ல இது; உளறுவாயர்களே! இது நாதியற்றுப் போகும் கலகக் கூடாரமாக ஒருபோதும் ஆகாது - கருச்சிதைவு முயற்சிகளால் என்று பதில் கூறும் பாங்குதான் அம் மகிழ்ச்சிக்குக் காரணம்!
எதிர்காலக் கேள்வி குறிக்குக் கம்பீரமான விடையளித்த பகுதி இது.
எனவே தந்தை பெரியார் அவர்கள் கலைஞர் அவர்களை கண்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி, தாய்க் கழகத்திற்கு இப்போது கலைஞரின் பிரகடனத்தால் ஏற்பட்டுள்ளது!
கட்டுப்பாடு காப்பீர்!
மானமிகு கலைஞர் அவர்களின் இந்த அறிவிப்பின் மூலம் கட்சிக்குள்ளும் சரி, வெளியிலும் சரி தேவையற்ற சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்து முத்திரை பதித்து விட்டார். தலைமையின் அறிவிப்பை ஏற்று கட்டுப்பாடு காத்து தி.மு.க.வினர் வீறு கொண்டு களப்பணி செய்வார்கள் என்பதில் அய்யமில்லை.
கலைஞரின் ஆயுள் இதனால் நீளும், கழகத்தின் ஆயுளும், வளர்ச்சியும் இதன் மூலம் மேலும் வளரும்.
சருகுகளின் சலசலப்புகள் தானே அடங்கும். வாழ்க தி.மு.க., வாழ்க கலைஞர் - பேராசிரியர்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.1.2013





இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...