Showing posts with label ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை. Show all posts
Showing posts with label ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை. Show all posts

Wednesday, June 21, 2017

பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் அறிவிப்பு ஆர்.எஸ்.எஸ். என்ற மத யானைக்கு அணிவிக்கப்பட்ட முகபடாம்!

பதிலடி கொடுக்க எதிர்க்கட்சிகள் பொருத்தமான வேட்பாளரை அறிவித்திடுக!


தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
கி.வீரமணி veeramani
நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி. அறிவித்திருக்கும் வேட்பாளர் என்பது - ஆர்.எஸ்.எஸ். என்ற மத யானைக்கு அணிவிக்கப்பட்ட முகபடாம் என்றும், இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொருத்தமான வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வுக்கான ஓரங்க நாடகம் முடிந்து ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரை பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக முன்னணி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சில நாள்களிலேயே கருத்திணக்க ‘‘சீன்களும்‘’ முடிந்து, அறிவிப்பு வந்துவிட்டது!
கருத்திணக்க முறை, பொது வேட்பாளர் - எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு வேட்பாளர் என்றால், ஆளுங் கட்சி உண்மையில் எப்படி நடந்திருக்க வேண்டும்?
சடங்காச்சாரமான அணுகுமுறை
பெயர்ப் பட்டியலில் இரண்டு அல்லது மூன்று பெயர்களைத் தேர்வு செய்து, ‘இதில் உங்களில் யாருக்கு உடன்பாடு அதனை நாங்கள் (ஆளுங்கட்சி) ஏற்கிறோம்‘ என்றல்லவா உரிய நடைமுறையைப் பின்பற்றி இருக்க வேண்டும்?
அப்படிச் செய்யாமல், ஏதோ ஒரு ‘‘சடங் காச்சாரமாக’’ எதிர்க்கட்சிகளிடம் பேசிவிட்டு, உடனடியாகத் தங்கள் கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டனர்!
இது வழக்கமான மோடி வித்தைகளில் ஒன்றுதான்! அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை ஏமாற்றி அடுத்தடுத்து வரும் தேர்தல் களில் தங்களின் வாக்கு வங்கியைப் பலப்படுத்த திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள ஓர் ஏற்பாடு இது!!
மத யானைக்கு ‘‘தலித்’’ முகபடாம்!
பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்குமேல் அங்கே உள்ள இவர், ஏற் கெனவே மாயாவதியின் கூட்டணி ஆட்சியில் அமைச்சராகவிருந்தார் - ஆர்.எஸ்.எஸ். என்ற மத யானைக்கு அணிவிக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட ‘‘தலித்’’ முகபடாம்  இந்தத் தேர்வு!
பா.ஜ.க. உயர்ஜாதி - பார்ப்பனர் மற்றும் பெரு வணிகர்களின் கட்சி என்ற உண்மை முகத்தின்மீது போடப்பட்ட ஒப்பனை இது!
அதுவும் உத்தரப்பிரதேசத்து ‘‘தலித்’’ இவர் என்ற நிலையில்,  இவர்களின் இரட்டை வேடத் திற்கு உ.பி. அரசியல் நிகழ்வே சரியான சாட்சிய மாகும்.
உ.பி.யில் தீண்டாம  ஒழிப்பு நாடகம்!
 
அங்கே உள்ள புதிய ‘‘சாமியார் முதல்வரான’’ ஆதித்யநாத் ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் - பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தாக்கப்பட்டு கலவரங்கள் வெடித்துக் கிளம்பிய நிலையில், அவர்களில் சிலரை நேரில் பார்த்து ஆறுதல் கூறிய லட்சணம்தான் என்ன?

அம்மக்கள் எல்லோருக்கும் சோப்பு கொடுக் கப்பட்டு - குளித்து ‘சுத்தமாக்கி’ - பிறகு சந்திப்பு!
அந்த சந்திப்பில்கூட, அவர்களை நாற்காலி யில் உட்கார வைத்து முதல்வருக்குக் கைகொடுத்துவிடாமல் இருக்கும்படி பின்னே நின்ற ஒவ்வொரு போலீசும் ஒவ்வொரு நபரின் தோளை அழுத்திப் பிடித்துக் கொண்டது எங்கும் காண முடியாத விசித்திரக் காட்சி!

2019 தேர்தலுக்க ஒரு பாதுகாப்பு அரண்
 
இந்தக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆர்.எஸ்.எஸ். ஒப்புதல் பெறப்பட்டே அறி விக்கப்பட்ட வேட்பாளர்.

இரண்டாவது, தாழ்த்தப்பட்டோர் வாக்கு வங்கியைப் பலப்படுத்த, இது ஒரு பிரச்சார புதிய அரசியல் மூலதனம்.

மூன்றாவதாக, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையு டன் சேராமல் இருக்க, பிரித்தாளும் தந்திர வியூகம்!
இப்போதே பீகார் முதல்வரின் ஆதரவு - தொனியில் மாற்றம்; மாயாவதியின் குரலுக்கு ஒரு வேகத்தடை!

2019 தேர்தல் அரசியல், பின்வரும் இந்துத் துவ அரசியல் நிகழ்வுகளுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒரு பாதுகாப்பு அரண்!

இத்தனையையும் மனதிற்கொண்டே செய் யப்பட்ட ஏற்பாடு இது!

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரை குடியரசுத் தலைவராக்கி அமர வைத்தது முந்தைய காங் கிரசு ஆட்சி (கேரளத்து வைக்கம் தொகுதியி லிருந்தே திரு.கே.ஆர்.நாராயணன் அவர்கள்) எனவே, முதல் தடவை அல்ல!

எதிர்க்கட்சிகள் செய்யவேண்டியது என்ன?
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சிதைந்து விடாமல், இதற்குச் சரியான பதிலடியாக அது நிறுத்தும் வேட்பாளர் தேர்வு அமைதல் அவசி யம்; அவசரம்!
இதற்கிடையில் நடந்த மற்றொரு பதவி யாசைக் கூத்தும்  வேடிக்கையான பார்ப்பன பதவியாசை கடைசி நேரக் கூத்து!
வங்கத்துப் பார்ப்பனரான தற்போதுள்ள குடியரசுத் தலைவர் - தனது மாளிகைக்கே ஆர்.எஸ்.எஸ். தலைவரை அழைத்து தேநீர் விருந்து உபச்சாரம் செய்தது எதற்கு என்பது யூகிக்க முடிகிறதல்லவா?
அதுமட்டுமா? கொலைக்குற்றம் சுமத்தப் பட்டு,  பிறழ் சாட்சியத்தாலும், மேல் அப்பீல் இதுவரை செய்யாததாலும் தப்பித்துக் கொண் டுள்ள காஞ்சி சங்கராச்சாரியார்களைக் கண்டு ஆசி - (பரிந்துரையாகவும் இருக்கலாமோ) காஞ்சிபுரம் வந்து சென்ற கேலிக்கூத்து; ஆசை வெட்கமறியாது - பதவி ஆசை எதையுமே அறியாது அல்லவா!
அரசியல் என்றால் இப்படி செப்படி வித்தைகளின் அரங்கேற்ற நாடகம்தானா?
அந்தோ ஜனநாயகமே!இந்நாட்டில் நீ படும்பாடு விநோதம்தான் என்ன? என்ன?

கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.


சென்னை
20.6.2017


Friday, May 26, 2017

சி.பி.எஸ்.இ. முறையில் தேர்வு என்பது ஒரு சார்புடையது - இந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் சூழ்ச்சி!

“நீட்” தேர்வு முடிவுக்கு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை வரவேற்கத்தக்கதே!
சி.பி.எஸ்.இ. முறையில் தேர்வு என்பது ஒரு சார்புடையது -
இந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் சூழ்ச்சி!
நீதிமன்றத்திலும் - வீதிமன்றத்திலும் சந்திக்க
மாணவர்களே, பெற்றோர்களே தயாராவீர்!
தமிழர் தலைவர்
ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
சுதந்திர நாட்டில் ஜாதி ஒழிப்புக்கான அரசின் திட்டம் என்ன?  - கி.வீரமணி அறிக்கை
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கு மாநிலம் வேறு வேறு வினாத் தாள்களும் வழங்கப்பட்டு ‘நீட்’ தேர்வு நடைபெற்றுள் ளதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தேர்வு முடிவை வெளியிடுவதற்கு மதுரை உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது வரவேற் கத்தக்கது - இறுதி நியாயம் கிடைக்கும்வரை மாண வர்களும், பெற்றோர்களும் நீதிமன்றங்களிலும், வீதிமன்றங்களிலும் போராடி வெற்றி பெறத் தயாராக வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  அவர்கள் கி.வீரமணி அறிக்கை விடுத் துள்ளார். அறிக்கை வருமாறு:
‘நீட்’ தேர்வு சம்பந்தமாக நடைபெற்ற குளறுபடியால் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகள் தொடுத்த வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் நீதிபதி ஜஸ்டீஸ் எம்.வி. முரளிதரன் அவர்கள் எதிர்த்தரப்பான சி.பி.எஸ்.இ.யிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு இதுவரை பதில் இல்லை என்று அரசு வழக்குரைஞர் கூறிய பின், ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள் ளார் என்பது பல பெற்றோர்களாலும், கல்வி அறிஞர் களாலும், பாதிக்கப்பட்ட மாணவர்களாலும், சமூகநீதி வேட்கையாளர்களாலும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்!
நீதிபதியின் கருத்துகள்
இதுபற்றி உயர்நீதிமன்ற நீதிபதி இடைக்காலத் தடை ஆணை பிறப்பிப்பதற்குமுன் தெளிவுபடுத்தியதாவது:
“மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அந்த நிபந்தனையை மீறி ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி வினாத் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன என மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதைப் பார்க்கும்போது ‘நீட்’ தேர்வில் பாரபட்சம் நடைபெற்றிருப்பது தெரிய வருகிறது. எனவே, ‘நீட்’ தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் அடுத்த விசாரணையை ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, மனுவுக்கு மத்திய குடும்ப நலத்துறை செயலாளர், பொது சுகாதாரப் பணிகள் இயக்குநர் ஜெனரல், இந்திய மருத்துவக் கழக தலைவர், சி.பி.எஸ்.இ. செயலாளர்/ தலைவர், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த ‘நீட்’ தேர்வு என்பது - மருத்துவக் கல்லூரிகளில் ஒடுக்கப்பட்டோர், கிராமப்புற மாணவ, மாணவிகள் டாக்டர்களாக வருவதைத் தடுக்கவே உருவாக்கப்பட்ட கண்ணிவெடியாகும்!
‘தகுதி திறமை’ என்ற தங்கமுலாம் பூசப்பட்ட பித்தளையாகும்!
மாணவர்களுக்கு அளப்பரிய சுமையை மன அழுத் தத்தைத் தரக்கூடிய தேவையற்ற தலைச் சுமையாகும்!
10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பொதுத் தேர்வினை (இனி வரும் ஆண்டுகளில்) தொடர்ந்து சந்திக்கவிருக்கும் இளம் மாணவர்களுக்கு இந்த ‘நீட்’ ஆயத்தம் என்பது அவ்வளவு எளிதா?
ஏற்கெனவே பல மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குச் சென்றுள் ளனர் - கொஞ்சம் மதிப்பெண் குறைந்ததாலே!
தமிழ்நாட்டின் வரலாறு தனியானது. இது அனைவ ருக்கும் அனைத்தும் தரும் அமைதி பூங்கா - சமூகநீதி தழைக்கும் பெரியார் பூமி!
21 ஆண்டுகள் போராடி நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டில் ஒழிப்பு!
நுழைவுத் தேர்வை ரத்து செய்ய 21 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு அரசே தனிச் சட்டம் இயற்றியது! உயர்நீதிமன்றமும், கல்வி நிபுணர் களின்  அறிக்கையையும் ஆராய்ந்து ஏற்று சட்டம் செல்லும் என்ற தனி வரலாறு படைத்த மாநிலம்.
பொதுப்பட்டியலில் மாநில அரசுக்குள்ள சட்ட உரிமையையொட்டி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி விலக்குக் கோரியுள்ள மசோதாவை மத்திய அரசு முடக்கி, குடியரசுத் தலைவருக்கே அனுப்பாமல், அதற்குரிய தகுந்த காரணங்கள் எதையும் சொல்லாமலும் காலந்தாழ்த்தி வருவது ஏன்?
மத்திய மனிதவளத் துறை (கல்வி) அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரும், சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா என்பவரும் தமிழ்நாட்டுக்கு விதிவிலக்குத் தர முடியாது என்று கூறுவது எவ்வகையில் இந்திய அரசி யல் சட்டப்படி சரியானதாகும்?
தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் என்னாயிற்று?
அரசியல் சட்டப்படி, மாநிலங்களுக்குள்ள அதிகாரத் தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதற் கென தனி மசோதா அனைத்துக் கட்சிகளாலும் முன்மொழியப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, டில்லிக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏறத்தாழ நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதே! அங்கே போய்ச் சேர்ந்ததாகவே தெரியவில்லையே!
இங்குள்ள தமிழ்நாடு முன்னாள், இந்நாள் முதலமைச்சரும், இதர அமைச்சர்களும், “நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கப் பிரதமரிடம் டில்லியில் வலியுறுத் தியுள்ளோம்; கோரிக்கை  வைத்துத் திரும்பியுள்ளோம்” என்ற கீறல் விழுந்த கிராமப்போன் தட்டு குரல் ஒலிபோல கூறுவதால், என்ன விழுமிய பயன் ஏற்பட்டுள்ளது?
நாம் கேட்பது சலுகையோ, பிச்சையோ அல்ல!
தமிழ்நாடு அரசு கேட்பது சலுகையோ, பிச்சையோ அல்ல; ஜல்லிக்கட்டு விதிவிலக்குச் சட்டம் எப்படியோ அதுபோன்றே இதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டாக வேண்டும் என்பதற்கு அதற்குமேலும் கூடுதல் காரணங்கள் பல உண்டு.
விதிவிலக்கு அளிக்கக்கோரும் தமிழ்நாட்டுச் சட்டம் பற்றிய வரலாற்றை மத்திய அரசுக்கு நினைவுபடுத்துவது மாநில அரசின் சட்டக் கடமை - அரசின் பொறுப்பு!
“நீட்” தேர்வுக்கும் பயிற்சி என்று மாநில அரசு கூறுவதே இரட்டை நாக்கு நடை, இரட்டை வேடப் போக்கு, இது கூடவே கூடாது!
ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும்!
கேள்வித் தாள்கள் பல வகை ஏன்?
நடத்தப்பட்ட நீட் தேர்வில் நடைபெற்ற விரும்பத் தகாத - உடற்சோதனைகளும், மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் கேள்வித்தாள்கள், மொழிக்கு மொழி மாறுபடும் கேள்வித் தாள்களும் முரண்பாடுகள் மட்டு மல்ல; எதிர்ப்பவர்களைப் பழிவாங்கும் போக்கும் அல்லவா!
நீதிமன்றம், வீதிமன்றங்களில் சந்திப்போம்!
ஒரே கேள்விதானே சீர்மையின் அடையாளமாக இருக்க முடியும்?
குஜராத் மாநிலத்திற்கு எளிய கேள்விகள்;
தமிழ்நாட்டிற்கும், மேற்கு வங்கத்திற்கும் கடினமான கேள்விகள் என்று மாணவர்கள் தரப்பில் கூறப்படு வதுபற்றி ஆராயவேண்டும்.
பெற்றோர்களும், மாணவர்களும் நீதிமன்றங்களா னாலும், வீதி மன்ற தளமானாலும் இடையறாத விழிப் புடன் போராடினால், இனிவருங்கால கிராம சமுதாய மாணவர்களின் டாக்டர் கனவை நிறைவேற்ற முடியும்!
சி.பி.எஸ்.இ. என்று ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளைக் கட்டாயமாக்க, திணிக்கவே இப்படி ஒரு உத்தியை மத்திய அரசு கையாளுகிறதோ என்ற அய்யம் பரவலாக எழுந்துள்ளது.
நீதிமன்றங்களை நோக்கி படையெடுக்க ஆயத்த மாவீர்! மக்கள் மன்றம் திரண்டாலொழிய இத்தகைய சமூக அநீதிக்கு - நீட்டிற்குத் தக்கப் பரிகாரம் காண முடியாது. எனவே, விழிப்போடு விரைந்து செயலாற்றுவீர்!
கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.


சென்னை
25.5.2017
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...