Showing posts with label திராவிடர் கழகத் தலைவர். Show all posts
Showing posts with label திராவிடர் கழகத் தலைவர். Show all posts

Monday, January 26, 2015

பெரியார் பூமியில் மதவெறி அச்சுறுத்தலை தடுக்கவே திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துகிறோம்

பெரியார் பூமியில் மதவெறி அச்சுறுத்தலை தடுக்கவே
திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துகிறோம்

தமிழர் தலைவர் பேட்டி


தமிழர் தலைவர் பேட்டி

காஞ்சிபுரம், ஜன.25- தந்தை பெரியார் பூமியில் ஜாதி வெறி - மதவெறி என்கிற அச்சுறுத்தலை உருவாக்கலாம் என நினைப்பவர்களின் செயலைத் தடுக்கவே திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தி வருகிறோம் என தமிழர் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் நேற்று (24.1.2015 மாலை நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் பங்கேற்க சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் 2000 திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தப்படுவது குறித்து கூறியதாவது:

பெரியார் பூமியில் ஜாதி வெறி, மத வெறி என்கிற அச்சுறுத்தலை உருவாக் கலாம் என்று நினைக்கின்ற காலக் கட்டத்திலே கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னாலேயே திராவிடர்கழகம் இதை மக்களுக்கு எச்சரித்தது. வளர்ச்சி என்ற பெயராலும், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் என்கிற மாயையைக் காட்டியும், ஏற்கெ னவே இருந்த ஆட்சியின்மீதிருந்த அதிருப்திகளையும் பயன்படுத்தி மோடி ஆட்சிக்கு வந்தார். மதவெறிகளை வெளிப்படையாக செய்கிறார்கள்

இப்போது வெளிப்படையாகவே கோட்சேவுக்கு சிலை வைக்கக்கூடிய அளவுக்கு, அறிவிக்கக்கூடிய அளவுக்கு மதவெறிகளை வெளிப்படையாக செய் கிறார்கள். 10 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், எங்களுக்கு ஓட்டுப்போடாதவர்கள் எல்லாம் யாருக்கோ பிறந்தவர்கள் என்று அவதூறுகளைப் பேசி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அமைச்சர்களாக இருப்பவர்களே கண்டிக்கப்படக்கூடிய அளவிலே இருக்கிறார்கள். என்றாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், நாடாளுமன்றத்திலேகூட சரிவர சட்டங்கள் இயற்றாத அளவுக்கு, இன்றைக்கு வேலை வாய்ப்புகள் பறிபோய் இருக்கின்றன.

வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இல்லை

ஏற்கெனவே இருந்த வேலை வாய்ப்புகள் இப்போது இளைஞர்களுக்கு கணினித்துறையில் இல்லை. இந்த ஊருக்கு அருகிலேயே இருக்கக்கூடிய இரண்டு மிகப் பெரிய தொழிற்சாலைகள் ஃபாக்ஸ்கான், நோக்கியா போன்றவையெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. ஆலங் குளம் அரசு சிமெண்ட் தொழிற்சாலையும் மூடப்பட் டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகளிலே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், ஏற்கெனவே இருந்த வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் இருக்கிறதா என்றால் கிடையாது. இவையெல்லாம் ஏன் செய்யவில்லை என்று மக்கள் நினைப்பார்கள் அல்லது கேட்பார்கள் என்று திசைதிருப்புவதற்காக முழுக்க முழுக்க பல்வேறு பிரச் சினைகளை, கோட்சே பிரச்சினைகள் ஆகியவைகளை அவர்கள் சுலபமாக சொல்லுகிறார்கள்.  எனவே, மதவெறியை மாய்த்து, மனித நேயத்தை உருவாக்குவோம் என்று தெளிவான நிலையை உருவாக்க, திராவிடர் இயக்கம் அதனுடைய கொள்கைகள்தான் ஒரே விடியல் என்பதை விளக்குவதற்காக திராவிடர் விழிப்புணர்வு மாநாடு தமிழ்நாடு முழுக்க 2000 மாநாடுகளை திராவிடர் கழகம்  ஒத்த கருத்துள்ள நண்பர்களை எல்லாம் அழைத்து வெகு சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறது. இதுவரையிலே தென்கோடியிலிருந்து 20, 25 மாநாடுகளை நாங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு காஞ்சிபுரத்தில் மாநாடு நடைபெறுகிறது. ஆகவே, இந்தப்பணி தொடரும்.

அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலைப்படு வதைவிட, தலைமுறையைப்பற்றிக் கவலைப்படுவதுதான் திராவிடர் இயக்கத் தினுடைய குறிக்கோள். பதவிக்காக திராவிட இயக்கங்கள் இல்லை. மாறாக, உண்மையான திராவிடர் இயக்கம் தமி ழர்கள் மானத்தோடு, அறிவோடு, உரிமை யோடு வாழ வேண்டும். பகுத்தறிவோடும் வாழவேண்டும். மதவெறி மாய்த்து மனித நேயத்தைக் காக்க வேண்டும் என்பதுதான்.

சிறீரங்கத்தில் பொது வேட்பாளர்

செய்தியாளர் கேள்வி: சிறீரங்கத்தில் அமைச்சர்கள் அனைவருமே முகாமிட்டுள் ளனர். சட்டசபை வெறிச்சோடி எல்லோ ருமே அங்கேதான் இருக்கிறார்களே?

தமிழர் தலைவர் பதில்: தெரிந்த விஷயம்தானே. எல்லாருமே அங்கு இருந்தாலும், வாக்களிக்க வேண்டியவர்கள் மக்கள்தானே. அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. அதனாலே, மக்களுக்குத்  தெளி வாக தெரியக்கூடிய உணர்வுகள் அங்கே இருக்கிறது. ஏன் அந்தத் தேர்தல் வந்தது  என்ற கேள்வி கேட்டாலே அதற் குப் பதிலிலேயே மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண் டுமோ அதைச் செய்வார்கள்.  அதுமட்டுமல்ல, இதற்கு இடையிலே எதிர்க்கட்சிகள் என்பவர்கள் கலைஞர் அவர்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு பொது வேட்பாளரை அவர்கள் நிறுத்தி இருந்தால், யார் உண்மையான எதிரி என்று அவர்களை வீழ்த்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். அதற்கு வாய்ப்பு இல்லாமல், மற்றவர்களை பிரித்தாளக்கூடிய அளவுக்கு, அதன்மூலமாக ஆட்சி அதிகாரம், பலவீனங் களைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால், பாஜக திராவிடர் இயக்கங்களையே வீழ்த்திவிடுவோம் என்று சொல்லி வந்திருக்கிற இயக் கத்தைப் பொறுத்தவரையிலே, ஏற்கெனவே,  பாராளு மன்றத் தேர்தலில் யார்யார் அவர்களோடு இருந்தார்களோ, அவர்கள் எல்லாம் காணாமற் போய் விட்டார்கள். அவர் களுடைய எண்ணிக்கை குறைந்திருக்கிறது. காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் நாங்கள் பலத்த கூட்டணி என்று சொல்கிறார்கள். கேள்வி: மதவெறி சக்தி என்று சொல்லியும் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், அவர்களுக்கு இந்த இடைத் தேர்தல் மூலம் பாடம் புகட்டுவதற்கு இந்த இடைத் தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டது யாருடைய தவறு?

பதில்: மக்களுடையது. ஜனநாயகத்திலே மக்கள் தெளிவாக இருந்திருந்தால், நீங்கள் ஏற்கெனவே சொன்னதுபோல எச்சரித்தோம். அதையும் தாண்டி ஏமாந்தார்கள். ஒரு தடவை ஏமாறலாம். மறுபடியும் திரும்பத்திரும்ப ஏமாந்துகொண்டிருக்கலாமா? தவத்திரு குன்றக்குடி அடிகளார்தான் சொல்வார், விழுவது தப்பில்லை, நேற்று விழுந்த இடத்திலேயே இன்றைக்கும் விழுவது இருக்கிறதே அதைவிட வேறு என்ன கொடுமை? அதேமாதிரி தமிழர்களுடைய நிலை இருக்கிறது. அதை எடுத்துச்சொல்லி, விழிப்புணர்வு ஊட்டுவதற்குத்தான் நாங்கள் அந்தப்பணியைச் செய்து வருகிறோம்.

கேள்வி: பொது வேட்பாளர் நிறுத்துவதில் தவறு எங்கு நேர்ந்தது?

பதில்: தவறியதற்கு பல காரணங்கள் உண்டு. அதிலே குறிப்பாக என்னவென்றால், எல்லோருமே தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, உண்மை நிலையையோ, அல்லது பொதுக்கருத்தையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற பொது எண்ணங்கள் இன்னும் தமிழ்நாட்டில் வரவில்லை. தீப்பிடித்து எரிகின்ற நேரத்தில் அணைப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து அணைக்க வேண்டுமே தவிர, எனக்கு முன்னால் வாய்ப்பு இருக்கிறதா? உனக்கு முன்னால் வாய்ப்பு இருக்கிறதா? என்று நினைத்தால், தீ முழுமையாக வெற்றி பெற்றுவிடும். அணைப்பவர்கள் தங்களை முன்னிலைப் படுத்துவதாலேயே பின்னாலே அவர்கள் பழியை ஏற்கவேண்டி வரும்.

கேள்வி: 2016ஆம் ஆண்டிலே இந்த நிலை மாறும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக மாறும். ஏனென்றால், அரசியல் என்பதே, நாளை காலை என்ன செய்தி என்பது தெரி யாமல் இருப்பதுதான் அரசியல். நேற்று இருந்த செய்தி வேறு, இன்று இருக்கிற செய்தி வேறு. ஆக்ராவுக்கு போகிறார்ஒபாமா என்று சொன்னார்கள். இன்றைக்கு ஆக்ராவுக்கு போகவில்லை என்று சொல்கிறார்கள். உடனே செய்தி மாறுகிறது. அதே போல்தான் எத் தனையோ செய்திகள் மாறும். கால நிலையே இவ்வளவு வேகமாக மாறும்போது, அரசியலில் மாறுவதற்கு என்ன? தாராளமாக மாறும். அவ்வளவுதான்

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, January 23, 2015

அரசின் கொள்கையை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்த்து பேசுகிறார்கள்

திராவிடர் விழிப்புணர்ச்சி 13ஆம் வட்டார மாநாடு:
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்த்து பேசுகிறார்கள்



நன்னிலம், ஜன.22- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை எதிர்த்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பேசுகிறார்கள் - இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்! என தமிழர் தலைவர் கருத்துரையாற்றினார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நேற்று (21.1.2015 மாலை நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு 13ஆம் வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய கருத்துரை வருமாறு: வளர்ச்சி வளர்ச்சி என்று போட்ட சத்தத்தில், மயக்க பிஸ்கட்டில் ஏமாந்து இன்றைக்கு எட்டு மாதங்களுக்கு முன் ஓர் ஆட்சியை மத்தியில் உட்கார வைத்தார்கள் மக்கள் ஏமாந்தார்கள். ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன வளர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தினார்கள்!?

மதவாதத்தைக் கிளப்பி வருகிறார்கள். யானைக்கு மதம் பிடித்தாலே ஆபத்து! மனிதனுக்கு மதம் பிடித்தால் என்னவாகும்? ஒரு கட்சிக்கோ, ஆட்சிக்கோ மதம் பிடித்தால் என்ன ஆகும்? அதுதான் இப்பொழுது நடக்கிறது.

காந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள், இப்பொழுது கோட்சேவுக்குச் சிலை வைப்போம் என்கிறார்கள். ஒரு நாடு எப்பொழுது வளர்ச்சி அடையும்? அந்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இணக்கமாக கைகோர்த்து வாழ்ந்தால் தான் அந்நாடு வளர்ச்சி அடையும்.

ஆட்சியிலே உள்ளவர்களே சிறுபான்மை, பெரும் பான்மை பேசி மக்களை ஒருவரோடு ஒருவர் மோத விட்டால் அந்த நாடு வளர்ச்சி அடையுமா?

குஜராத்தில் என்ன நடந்தது? அது நாடு முழுவதும் நடைபெற வேண்டுமா? நாம் அதைஅனுமதிக்கலாமா? ஏற்கத்தான் முடியுமா?

120 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கிக் கொண்டு தவிக்கிறது. எதை எதையெல்லாம் விற்கலாம் என்று திட்டம் போடுகிறார்கள் மத்தியில் உள்ள ஆட்சியாளர்.

இந்த லட்சணத்தில் ஒவ்வொரு வரும் நான்கு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒருவர் கூறுகிறார் - இன்னொரு சங்கராசசாரியாரோ - ஒவ்வொரு வரும் பத்துப் பிள்ளைகளைப் பெற்று  தள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள் - மத்தியில் ஆள்பவர்கள். இவற்றை யெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. மக்கள் தொகை யைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை எதிர்த்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பேசுகிறார்கள் - இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்!

ஒரு பெண் எத்தனை குழந்தையைப் பெற்றுக் கொள் வது என்பதை ஆண்கள் முடிவு செய்யலாமா?

கருவைப் பத்து மாதம் சுமந்து பிரசவிக்கும் பெண்ணுக்கல்லவா அதன் வலியும் சுமையும் தெரியும்.

கேட்டால் கடவுள் கொடுக்கிறான் என்று சமாதானம் சொல்கிறார்கள். அந்தக் கடவுளிடமே சொல்லுங்கள். அவர்தான் சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே! பெண்களின் கருப்பையை ஆண்களுக்கு மாற்றி வைக்கச் சொல்லுங்கள். பத்து மாதம் ஆண்கள் கருவைச் சுமந்து பிரசவிக்கட்டுமே! ஏற்றுக் கொள்வார்களா? (பலத்த சிரிப்பு - கை தட்டு!)

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சியில் ஒரு பக்கம் பார்ப்பனர் ஆதிக்கம்; இன்னொரு பக்கத்தில் கார்ப்பரேட்டு நிறுவனங்கள் இரண்டும் நாட்டைச் சூறையாடுகின்றன.

அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நிற்பதாக சத்தியம் செய்து கொடுத்துப் பதவி ஏற்கிறார்கள். அந்த அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார் பின்மைக்கு விரோதமாகப் பேசுகிறார்கள் - நடந்து கொள்கிறார்கள்.

இத்தகையவர்களை அடையாளம் காணுங்கள் என்று எச்சரிக்கவே திராவிடர் கழகம் நடத்தும் திராவிடர் விழிப்புணர்ச்சி மாநாடுகள்!

வீட்டுக்காரன் தூங்கலாம்; குறட்டை விட்டுக் கூடத் தூங்கலாம்; ஆனால், காவல்காரன் தூங்கலாமா? தூங்கத்தான் முடியுமா?

அந்தக் காவல்காரனாக இருந்துதான் திராவிடர் கழகம் எச்சரித்துக் கொண்டு இருக்கிறது. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் என்ற பழமொழிதான் உங்களுக்குத் தெரியுமே! என்றார்.

தொடர்புடைய செய்திகள்:

Saturday, December 20, 2014

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை விசாரணை ஆணையம் தேவை! - கி. வீரமணி

  • புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை
  • ஆசிரமத்தில் ரவுடிகள் ராஜ்ஜியமா?

உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் தேவை!

மக்கள் எழுச்சி கூட்டத்தை நடத்திட திராவிடர் கழகம் தயங்காது
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் விரும்பத் தகாத போக்குகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமத் தின்மீது ஏராளமான புகார்கள் - ஊழல்கள் - பாலியல் கொடுமைகள் பற்றியவை - பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன.

அது ஒரு போட்டி அரசுபோல  - புதுவையில் (Parallel Government)   நடந்து வரும் ஒரு மர்ம ஆசிரமம் ஆகி வெகு காலம் ஆகி விட்டது.
அதனுடன் வடபுலத்திலும், மத்திய அரசில் அங்கம் வகித்தவர்களும் கொண்ட ஆதி நாள் தொடர்பு காரணமாக, அதில் நடைபெற்றவை களைக் குறித்து யாரும் கவலைப்படாமல், அதை தனிக்காட்டு ராஜ்ஜியம்போல் நடத்தி வந்தனர்.

எந்த நோக்கத்திற்காக அந்த ஆசிரமத்தை வங்கத்தைச் சேர்ந்த அரவிந்த்கோஷ் -  பிரிட்டிஷ் அரசால் நாடு கடத்தப்பட்ட கால கட்டத்தில் வந்து தங்கி துவக்கி நடத்தினாரோ, அந்த நோக்கம் இப்போதும் அங்கு நிறைவேறும் வண்ணம் அதன் செயல்பாடுகள் இருக்கின் றனவா என்பது குறித்து விரிவாக ஆராயப்படல் வேண்டும்.

அங்கு கடந்த சில காலமாக நடந்து வந்த பாலியல் வன்கொடுமைகளும், ஏனைய ஊழல்களும்  கொதி நிலை அதிகமாகி வெடித் துக் கிளம்பியுள்ளது ஒருபுறம்;  மற்றொருபுறம் அய்ந்து பேர்களைக் கொண்ட, பீகாரிலிருந்து வந்து தொண்டு செய்ய விரும்பி, பல ஆண்டுகள் அங்கே தொண்டாற்றிய ஒரு குடும்பத்தினர் கொடுமைகளை சகிக்க முடி யாமல் அநீதியை அகற்ற முடியாமல், அத னையே நாளும் பூண் போட்டுப் பாதுகாக் கிறார்களே என்ற வேதனை காரணமாக தற்கொலை முயற்சிகளை மேற் கொண்டுள்ளனர்!
புதுவையில் உள்ள ஒரு அரசு இதற்குரிய தடுப்பு நடவடிக்கையை சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றிடும் வகையில், உரிய நேரத்தில் எடுத்திருந்தால், இந்த மூன்று உயிர்க் கொலையை தடுத்து நிறுத்தியிருக்கலாம்; அதைச் செய்யத் தவறி விட்டது.

ரவுடிகள் ராஜ்ஜியமா?

அங்கே ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெறு கிறது; கொலைகளும், கொள்ளைகளும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என்ற அனைத் துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களை அந்த அரசும் முதல்வரும் - ஏன் மத்திய அரசும்கூட (யூனியன் பிரதேசம் என்பதால் அதற்கும் முக்கிய பங்கு உண்டு)  கவனத்தில் கொள்ள வில்லை? சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தவறிவிட்டது.

இந்நிலையில், புதுவை மக்கள் பொங்கி எழுந்து, தங்களது ஆவேச உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுத்த நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகளும், தவிர்க்க இயலாமல் நடை பெற்றுள்ள செய்தி பொது அமைதிக்குக் கேடு தருவதான கவலையை உருவாக்குகிறது!

விசாரணை ஆணையம் அமைத்திடுக!

இதுபற்றி உடனடியாக மத்திய அரசு இந்த ஆசிரமத்தின் நடப்புகள்பற்றி - விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சமூக ஆர்வலர்கள், முதலிய மூவரைக் கொண்ட ஒரு ஆணையம் அமைத்து, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் (Time Bound) விசாரித்து, ஒரு அறிக்கையைப் பெற்று, பொது மக்கள் - சமூக ஆர்வலர்கள், நலம்விரும்பிகள் அனைவரின் கருத்துக்களைக் கேட்டுத் தர வேண்டும்.

அதன் மூலம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை மத்திய - மாநில அரசுகளுக்கு உண்டு. உடனே செய்யட்டும்! இதனை வற்புறுத்தி, புதுவையில் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிக் கூட்டத்தை ஒத்த கருத்துள்ள வர்களை அழைத்து திராவிடர் கழகம் - அரசியல் பார்வை ஏதும் இன்றி - பொது நலக் கண்ணோட்டத்தோடு நடத்திடவும் தயங்காது.


கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்
திருச்சி
19-12-2014


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Read more: http://viduthalai.in/headline/93080-2014-12-19-09-46-52.html#ixzz3MPYI9vqB

Wednesday, December 10, 2014

திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும்

திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும்
வருணபேதம் பேசும் கீதை புனித நூல் அல்ல!

குன்னூரில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

குன்னூர், டிச.9 - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமே தவிர, பிறப்பில் பேதம் பேசும் கீதையை அறிவிப்பது ஆபத்தானது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.  இன்று  (9.12.2014) குன்னூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கேள்வி: பாஜக விலிருந்து வைகோ வெளியே வந்தது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இது காலம் தாழ்ந்த முடிவாக இருந்த போதிலும்கூட, வரவேற்கவேண்டிய சிறந்த முடிவு. வைகோ எங்கள் சகோதரர். திராவிட உணர்வு, திராவிடத் தால் எழுந்தோம் என்பதில் எப்போதும், அந்த கொள்கையி லிருந்து மாறாதவர். அரசியல் நிலைப்பாட்டில்பல நேரங்களிலே அவர்களுடைய நிலைநாங்கள் ஏற்கத் தக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அடிப்படை உறவை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே, அதை வரவேற் கிறோம்.

அதேநேரத்தில் திராவிட உணர்வுகளை அழிப்பதற்காக இப்போது பல சக்திகள் ஒன்று சேருகிற இந்தக் காலக் கட்டத்திலே வைகோ போன்ற கொள்கை தெளிவாளர்கள் அடுத்து எடுக்கக்கூடிய முடிவு என்பதை முன்புபோலவே அவசரப்பட்டு எடுக்காமல் இன உணர்வு, மொழி உணர்வு, திராவிட பாரம்பரிய  வரலாறு இவைகளோடு ஒத்துப் போகக்கூடிய சிறந்த முடிவை அவர் சுதந்திரமாக எடுத்து, அதன்மூலமாக காலங்காலமாக அவர் கூறி வருகின்ற பெரியார், அண்ணா கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கு என்றைக்கும் தமிழ்மக்களுக்கும் இந்தப் பயணத்தில் உறுதுணையாக அமைய வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பகவத் கீதை புனித நூலா!

கேள்வி: பகவத் கீதையை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப்போவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளது குறித்து?

பதில்: அரசியல் சட்டத்தின்மீது பிரதமர் மோடி, வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்பட பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு நேர் எதிரான செய்கை இந்த பகவத் கீதையை தேசிய நூலாக ஆக்குவோம் என்று கூறியிருப்பது. பகவத் கீதை என்பது ஜாதியை, பெண்ணடிமையை, பெண்களைக் கொச்சைப் படுத்துகின்ற பல்வேறு ஒவ்வாத கருத்துகளைக் கூறுகின்ற ஒரு நூலாகும். இதை நீண்ட காலத்துக்கு முன்னால் கீதையின் மறுபக்கம் என்கிற தலைப்பில் ஆதாரபூர்வமாக ஒரு நூலாக, ஆய்வு நூலாக, ஆராய்ச்சி நூலாக இதை நான் தெளிவு படுத்தி இருக்கிறேன். இந்த நிலையில் திருக்குறள் போன்றமதங்களுக்கு அப்பாற்பட்ட  அனைவருக்கும் அறநெறியைக் கூறக்கூடிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறக் கூடிய வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்டோம் என்று பெருமைப்படத்தக்க ஒரு திருக்குறள் போன்ற நூலை வைக்க வேண்டும் என்று இங்குள்ள தலைவர்கள் பலரும் கலைஞர் முதல் அனைத்துக்கட்சித் தலைவர்கள் பலரும் கூறுகின்ற காலத்தில், திட்டமிட்டே இந்துத்துவாவைப் பரப்ப வேண்டும் என்ற அஜெண்டாவின் இன்னொரு நிகழ்ச்சியாக இதை அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை அவர் தனிப்பட்ட நிலையில் கூறியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மத்திய அரசாங்கத்தை நடத்துகிறது என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. இப்படிச் செய்தால் இந்தியாவை மதரீதியில் அவர்கள் துண்டு போடுகிறார்கள் என்று பொருள். மதச் சார்பின்மை என்ற கொள்கையை  குழிதோண்டிப் புதைக் கிறார்கள் என்று பொருள். எனவே, வன்மையான கண்டனத்துக்குரியது. இதை நான் சேலத்திலேயே 2 நாள்களுக்கு முன்னால் பேசும்போது உடனடியாகச் சொல்லியிருக்கிறேன்.

சமஸ்கிருதம் கட்டாயமாம்

 கேள்வி : கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் சமஸ் கிருதம் கட்டாயப்படுத்தும்போது தமிழ் வெளியே துரத்தப்படுகிறதே?

பதில் : ஆர்.எஸ்.எஸ்சினுடைய கொள்கைகளிலே முதல் கொள்கை இந்தியா முழுவதும் சமஸ்கிருதமயமாக் கப்பட வேண்டும் என்பதுதான். எனவே, பிள்ளைகளுக்குக் கட்டாயமாக சமஸ்கிருதத்தைப்படிக்க வேண்டும் என்று அவர்கள் ஆக்குகிறார்கள். இதற்கு எதிர்ப்பு என்பது பல கட்சிகளிடமிருந்து உடனடியாக வந்துவிட்டது. மோடி வந்தால், அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றால் இந்தியாவைத் தலைகீழாக மாற்றிவிடுவார் என்பது போன்று தேர்தல் நேரத்திலே அப்பாவி இளைஞர்கள் இணையதளத்தைப் பார்த்து ஏமாந்து, வளர்ச்சி என்ற முகமூடியைக் காட்டி வந்தார்கள். இப்போது வளர்ச்சி யாருக்கு? எப்படிப்பட்ட வளர்ச்சி? ஆர்.எஸ்.எஸ்சுக்கு வளர்ச்சியா?அகில இந்தியாவினுடைய வளர்ச்சியா? என்பது இப்போது புரிந்து விட்டது.மோடியினுடைய முகமூடி கிழிகிறது. ஆர்.எஸ்.எஸ். இந்தியாவை ஆளுகிறது என்பதற்கு இது அடையாளம். எவ்வளவு வேகமாக அவர்கள் செய் கிறார்களோ, அவ்வளவு வேகமாக அதனுடைய விளை வுகளும் இருக்கும்.

கேள்வி: ராஜபக்சே திருப்பதி வருகை...?

பதில்: ராஜபக்சேவை அவருடைய நாட்டில் அவர் தேர்தலில் நிற்பதற்கு அங்கேயே எதிர்ப்பு இருக்கிற நிலையில், வேறொரு நிகழ்ச்சியிலே சந்திக்கிறபோது, அவருக்கு வெற்றி வாய்ப்பு வரவேண்டும் என்று நம்முடைய பிரதமர் மோடி விரும்புவது என்பது இவர்கள் இருவருடையஎண்ணங்களும், அணுகுமுறைகளும் எப்படி இருக்கின்றன என்பதை அதுவே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே, அவர் திருப்பதிக்கு வருவதோடு அவருக்கு சிவப்புக்கம்பளம் கொடுத்து ஏற்கெனவே அவரைப் பதவி ஏற்புக்கு அழைத்ததைப்போல, குடியரசு நாளுக்கும் தலைமை விருந்தினராக அழைக்காமல் இருந்திருக்கிறார். அதுவரையிலும் மகிழ்ச்சி. பரவாயில்லை அதற்கு ஒபாமா கிடைத்திருக்கிறார்.

கேள்வி: கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு அப்பீல் சென்றுள்ளார்களே?

பதில்: நீதிமன்றத்தில் வழக்கு இருப்ப தாலே எந்தக்கருத்தையும் சொல்வ தற்கில்லை.
நிழல் முதல் அமைச்சரா?

கேள்வி: நிழல் முதல் அமைச்சர் என்று ஓ.பன்னீர் செல்வத்தைக் கூறு கிறார்களே, தமிழக அரசுடைய நிலை என்ன? சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் சரியாக உள்ளதாக கூறியுள்ளாரே?

பதில்: பரவாயில்லை. அவர் முதலமைச்சர் என்று நினைத்து சொல்லி இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

கேள்வி: அரசு எந்திரமே முடக் கப்பட்டிருப்பதாக ஒரு புகார் உள்ளது. அவர் சொன்னால்தான் நடக் கும், அவர் படம் கணினி உள்பட பல இடங்களிலும் உள்ளது. இதுகுறித்து கலைஞரும் வலியுறுத்தி போராட்டம் நடக்கும் என்றும் கூறியிருந்தார். இதற்கு தாங்கள் என்ன கருத்து கூறுகிறீர்கள்?

பதில்: ஜனநாயகத்தில் ஒரு முதல்வர் போய் இன்னொரு முதல்வர் வரும்போது இயல்பாகவே இருக்கைகள் மாறும். படங்கள் மாறும். ஆட்சிகள் மாறியிருக் கிற காரணத்தால். ஆனால், இங்கே காட்சிகள் அதேபோல இருக்கின்றன. ஆட்சிகள் மாறிவிட்டன என்று சொல்லப் படுகின்றன என்று சொல்லுவது உலக ஜனநாயகத்தில் விசித்திரமாக நம் முடைய நாடு இருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

கேள்வி: இன்றைக்கு இங்கே (குன்னூர்) என்ன நிகழ்ச்சி?

பதில்: பெரியார் 1000 என்று சொல்லி பெரியாருடைய வாழ்க்கை வரலாறு இவைகளைப்பற்றி ஒரு புத்தகம். மாணவ உள்ளங்களிலே சமூக நீதி, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெரியாருடைய தொண்டு இவைகளைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக பெரியார் 1000 வினா விடை என்கிற அந்தப் புத்தகத்தை இதுவரையிலே 1 இலட்சம் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் விரும்பி தேர்வு எழுதி பரிசு பெற்றிருக்கிறார்கள். நாடுபூராவும் 1 இலட்சம் மாணவர்கள் அதிலே வெற்றி பெற்றிருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் பல மாவட்டங் களில் இருக்கிறார்கள். அதிலே இந்த நீலகிரி மாவட்டத்திலே இங்கே நம் முடைய மாவட்ட செயலாளர் முபாரக் போன்றவர்கள், நம்முடைய தோழர்கள் பலரும் உதவி செய்து, அவரவர்கள் அவரவர்களுக்கு வேண்டிய பரிசுகள் மற்றவைகள்கொடுத்து உதவ முன் வந்திருக்கிறார்கள்.எனவே, இந்த பரி சளிப்பு விழாவுக்காக மாணவர்கள், பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள். இந்த நீலகிரி மாவட்டத்திலே இந்த அளவுக்கு சிறப்பாக மாணவர்கள் வந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. இது மேலும் வளர வேண்டும். காரணம் பெரியார் அனை வருக்கும் உரியார்.

மது விலக்கு!

சேலம் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மிக முக்கியமான ஒரு தீர்மானமாக பூரண மதுவிலக்கு இந்தியா முழுவதும் மத்திய அரசாலும், மாநில அரசாலும்கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி இருக் கிறோம். இதைத் தீவிரமான பிரச்சாரம், சட்ட நடவடிக்கைகள் இவற்றின்மூலமாக உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், தற்போதைய இளைய சமுதாயம் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்கூட இந்த குடிப்பழக்கத்துக்கு ஆளாகி பெண்கள், குடும்பங்களிலே மிகப்பெரிய அவதியை உருவாக்கக்கூடிய அளவுக்கு, அனுபவிக்கக்கூடிய அளவுக்கு கொடு மைகள் பரவலாக ஓங்கிக் கொண்டி ருக்கின்றன. எனவே, உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இந்த மதுவை ஒழித்து, வேறுவகையில் வருமானங்களை உருவாக்குவதில் திட்டமிட வேண்டும்.

கேள்வி: சட்டசபையில் கலைஞருக்கு போதிய வசதி, இருக்கை அமைக்க படாமல் இருந்ததுகுறித்து? ஆனால், ஏற்கெனவே சபாநாயகர் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தாரே...உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் 2 நாள்களுக்கு முன் னாலே ஏற்கெனவே அறிக்கை கொடுத் திருக்கிறேன். கலைஞரை அழைத்தவர் அவருக்கு வேண்டிய இருக்கையை ஏற்பாடு செய்யவில்லையானால், அவர் அழைப்பு உண்மையானதுதானா என் பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.  இதுவே ஒரு நல்ல சந்தர்ப்பம்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Read more: http://www.viduthalai.in/headline/92584-2014-12-09-10-49-04.html#ixzz3LNZwEgcp

Wednesday, February 6, 2013

தமிழர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சே இந்தியா வர எவ்வித யோக்கியதையும் இல்லை!


கறுப்புடை அணிந்து 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வீரர்களே, வீராங்கனைகளே, திரள்வீர்! திரள்வீர்!!
தமிழர் தலைவரின் உணர்ச்சியூட்டும் அறிக்கை

போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம்  வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!

தன் சொந்த நாட்டு குடிமக்களான ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவெறியன் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எவ்வித யோக்கியதையும் கிடையாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் கறுப்புடை அணிந்து 8ஆம் தேதி நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்க தமிழர்களுக்கு அழைப்பினை விடுத்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:
இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! இன்னமும் அங்கே  இயல்பு நிலை திரும்பவில்லை. சொந்த நாட்டு மக்களாகிய தமிழ் மக்கள் அங்கே ஏதோ பிடிபட்ட நாட்டின் போர்க் குற்றவாளிகள் போல் கொடுமையாய் நடத்தப்படும் கோரம் படமெடுத்தாடுகிறது.
முள்வேலிக்குள்தான் அங்கு எஞ்சியுள்ள தமிழர்கள் பலர் முதியவர்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் - சொல்லொணாத் துயரத்துடன் அரை வயிற்றுக் கஞ்சிக் குக்கூட வழியில்லாமல் அவலமான வாழ்க்கையை சுமந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடும் பரிதாப நிலை!
எம் தமிழ்ச்சிகளின் நிலையோ எழுதவும் கூசும் வகையில் சிங்கள இராணுவத்தால் நடத்தப்படுகின்ற சோகம் தொடர் கதையாகி  வருகிறது!
குறைந்தபட்ச மனித உரிமை, வாழ்வுரிமைகூட இன்னும் எம் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை.
வட பகுதியான யாழ்ப்பாணம் கிழக்குப் பகுதிகள் எங்கும் சிங்கள இராணுவ ஆட்சியே;  ஒவ்வொரு குடி மகனுக்கும் ஒரு இராணுவ சிப்பாய் என்பதுபோன்று உள்ள நெருக்கடி நிலை!
போர் முடிந்த நிலையிலும் வாழ்வாதாரம் இல்லையே!
போர் நடந்து முடிந்தபிறகு தமிழர்களை மீள் குடியமர்த்துதல் நடைபெறாமல், அந்தப் பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களைக் குடியமர்த்தும் திட்டமிட்ட அநீதி அரங்கேறிக் கொண்டுள்ளது.
தமிழர்களின் அடையாளங்களைக்கூட விட்டு வைக்கக் கூடாது என்ற சிங்களப் பேரினவாதம்  நிர்வாணத் தன்மையில் வெறிகொண்டு, ஊர்ப் பெயர்களை மாற்றுவது முதல் அங்கே தமிழர்கள் வழிபடும் கோயில், சர்ச், பள்ளிவாசல் எல்லாம் அழித்தொழிக்கப்படும் அவலம் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன.
இதுபற்றி டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் இந்தியப் பிரதமருக்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியாகாந்தி அவர்களுக்கும் தமது வேதனையைத் தெரிவித்து, தடுத்து நிறுத்த வேண்டும் என்று எழுதிய கடிதத்திற்கு அந்த அம்மையார் அவர்கள், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் கலைஞருக்குக் கடிதம் எழுதி, இதுபற்றி கவலை கொள் கிறேன்; அவசியம் வெளி உறவுத் துறை அமைச்சருடன் பேசி ஆவன செய்வதாக குறிப்பிட்டிருப்பது சற்று ஆறுதல் தருகிறது. நடவடிக்கை செயலில் தெரிய வேண்டும்.
மத்திய அரசின் வெண்டைக் காய்ப் பதில்
இது ஒருபுறம்; தமிழக மீனவர்கள்மீது சிங்கள இராணுவத்தின் தாக்குதல், உரிமைகள் பறிப்பு நாளொரு முறையும் பொழுதொரு வேளையும் நடந்த வண்ணமே உள்ளது. வழக்கமான வெண்டைக்காய் பதிலையே மத்திய அரசு தருகின்ற நிலை!
இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல், போருக்குப் பின் மேலும், மோசமான இடி அமீன்தர்பார், ஆள் தூக்கிச் செல்லும் அரசின் கூலிப்படை ஏவுதல் மூலம் காணாமற் போனவர்கள் பட்டியலில்  பல்லாயிரக் கணக்கில் உள்ளனர்.
அமெரிக்கத் தீர்மானம் - இந்தியாவின் நிலைப்பாடு
வருகின்ற மார்ச் மாதத்தில் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் இந்த அடாவடி அட்டகாசத்தை எதிர்த்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், மனிதாபிமானத்தின் மற்றொரு வெளிப்பாடு; இதில் இந்திய அரசு அதன் பங்கை அதிகமாகச் செய்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்றிட வேண்டும்.
தமிழ்நாட்டின் தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களின் வாக்களிப்பால்தான் மத்தியில் இன்றைய இந்திய அரசு உள்ளது என்ற உண்மையை உணர்ந்து தம் கடமையைச் செய்திட தயங்கக் கூடாது.
இந்நிலையில் உலக நாடுகள் உண்மைகளை உணர்ந்து, இலங்கையின் யதேச்சதிகார ஆட்சி எப்படி  மனித உரிமைகளைப் பறிக்கும் ஹிட்லர் ஆட்சியாக மாறி யுள்ளது என்று உணர்ந்திடும் நிலை கண்டு, இலங்கை அதிபர் கொடுங்கோலன் ராஜபக்சே குமுறுகிறார் - கொக்கரிக்கிறார்.
உள்நாட்டுப் பிரச்சினையா?
அய்.நா.வும், இதர பல உலக நாடுகளும் இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றனவாம்; பசப்புரை பகருகின்றார். மிரட்டுகிறார். அய்.நா.வை மிரட்டி, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர்களையும் போர் நடக்கும்போது மிரட்டி, கப்பலேற்றிய கபட வேடதாரி மற்றொரு வேடம் தரித்து உள்நாட்டு இறையாண்மை பற்றிப் பேசுகிறார்.
எதுவரை உள்நாட்டு விவகாரம் எதுவும்?
எம் தமிழினம் பூண்டோடு, கூண்டோடு அழிக்கப்படும் முயற்சிகளை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்க வேண்டுமா?
அய்.நா.வின் நோக்கம் என்ன? உலகம் ஒரு குலம் என்ற நிலை ஓங்கியுள்ளபோது, அநீதி, அக்கிரமம், அழிப்பு வேலைகளை கை கட்டி மனிதநேயம் உள்ளோர் வேடிக்கை பார்ப்பார்களா?
கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேசிடும் குடும்ப வாழ்க்கையில் தான் பிறர் தலையிடக் கூடாதே தவிர, கணவன் மனைவியைக் கொலை செய்ய முயன்றால் அடுத்த வீட்டுக்காரன் வேடிக்கை பார்க்கலாமா? கண்டித்துக் கடமையாற்றுவது தவறா என்று அறிஞர் அண்ணா அவர்கள் நல்லதொரு உவமை கூறியதைவிட, வேறு இதற்குப் பொருத்தமான பதில்தான்  ஏது?
உள்நாட்டுப் பிரச்சினையென்றால் உதவிக்கு வெளிநாடுகளில் மனு போடுவானேன்?
உள்நாட்டுப் பிரச்சினை என்றால், இந்திய அரசிடம் இலங்கை உதவி  கேட்கலாமா? இராணுவப் பயிற்சிக்கு வரலாமா? 1000 கோடி ரூபாய்களைப் பெற்று அந்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க -  புனர் வாழ்வுக்கு நிதி கேட்கலாமா? இந்திய வீடு  கட்டுவோரை, பல்கலைக் கழகத்தவரை அழைக்கலாமா?
சர்வதேச போர்க் குற்றவாளியான ராஜபக்சேக்களை உலகம் பார்த்து தண்டனை வழங்கும் காலம் தூரத்தில் இல்லை.
எனவேதான் அவருக்கு இந்தியா வர எவ்வித உரிமையும், யோக்கிதையும் இல்லை எனக் காட்ட - 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னையில் டெசோ சார்பில் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கவுள்ள மாபெரும் கறுப்புடை அணிந்த கடமை வீரர்கள், வீராங்கனைகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மற்றும் அனைத்துத் தமிழர்களும் கட்சி, ஜாதி, மதம் வேறுபாடு இன்றி பல்லாயிரக்கணக்கில் 8.2.2013 காலையில் கலந்து கொண்டு கொடுங் கோலர்களுக்கு அமைதி வழியில் பாடம் புகட்டிட வாரீர்!  வாரீர்!! என அழைக்கின்றோம்!

கி.வீர‌மணி  
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை  
5.2.2013


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...