Showing posts with label கருஞ்சட்டை. Show all posts
Showing posts with label கருஞ்சட்டை. Show all posts

Friday, June 7, 2013

காவடி அல்ல ஆவடி!

பெரியாரோடு தி.க. குளோஸ் என்று மனப்பால் குடித்துக் கிடந்தனர். அன்னை மணியம்மையார் தலைமையில் இராவண லீலா நடத்தப்பட்டது என்றவுடன் அக்கிரகாரத்தில் எழவு விழுந்தது மாதிரியாகிவிட்டது.
அவரோடு அத்தியாயம் முடிந்துவிடாதா என்று ஆசைப்பட்டுக் கிடந்தனர்.
மானமிகு கி.வீரமணி அவர்கள் பொறுப் பேற்றார். மாவட்டத்துக்கு மாவட்டம் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, ஒழிப்பு மாநாடுகளை நடத்தினார்.
ஆத்திரத்தில் உச்சியிலே சென்ற அக்கிரகார வாசிகள் பழனியிலே மாநாடு கூட்டி அவரைப் பாடை கட்டித் தூக்கிச் சென்றனர். அதன்மூலம் பார்ப்பனர் அல்லாத மக்களின் தலைவர் - பாதுகாவலர் வீரமணிதான் என்று உலகுக்கே அறிவித்துவிட்டனர் பார்ப்பனர்கள். (பார்ப்பனர் களுக்கு முன் புத்தி ஏது?).
ஒரு சூத்திரன் பிணத்தை நான்கு பார்ப்பனர் கள் தூக்கிச் சென்றார்களே, அது எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா என்று எதிர் கேள்வி போட்டு, பார்ப்பனர்களுக்கு கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த மான மரியாதையை யும் கப்பல் ஏற்றினார்.
பெரியார் காலத்தில் 50 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் 69 சதவிகிதமாக உயர்வதற்குக் காரணமாக இருந்தார்.
மாநில அரசு மட்டத்தில் இருந்த பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசுத் துறைகளிலும் (மண்டல் குழு பரிந்துரை) அமல்படுத்தச் செய்தார். (அதற்காக 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் நடத்தினார்).
அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகித இடங்களைப் பெற்றனர்.
அக்கிரகாரத்தின் தலையில் இடிவிழுந்தது மாதிரி ஆயிற்று. பெரியார் பரவாயில்லையே, இந்த வீரமணிதான் மோசம் என்று எழுத, பேச ஆரம்பித்தனர்.
பெரியார் திடலுக்கே வந்து தலைவர் வீரமணி அவர்களைச் சந்தித்து எங்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யுங்கள் என்று பார்ப்பனர்களை  பணிய வைத்தார்.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறதே என்று அங்கலாய்த்தார்கள்.
இவர் காலத்தில் இயக்கம் இளைஞர்களின் பாசறையாகி வருகிறது. கல்வி நிறுவனங்கள் விண்முட்ட எழுந்து நிற்கின்றன. இந்தியாவின் தலைநகரிலே பெரியார் மய்யம் கொண்டுள்ளார். பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகம் தொழச் செய்து வருகிறார்.
சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் இந்த வகையில் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அதன் இரட்டைக் குழல் துப்பாகியான தி.மு.க. அதன் வலிமை வாய்ந்த, முதிர்ச்சிமிக்க தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் 90ஆம் அகவையை எட்டும் காலகட்டத்தில்,
அந்த அரசியல் பணி தொடர, அடுத்த கட்ட இளைஞர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டி யது காலத்தின் கட்டாயம்.
இந்தக் கலைஞர் அரசியலில் இருந்தாலும், வாக்குகளைக் கேட்க வேண்டிய இடத்தில் இருந்தாலும், இடை இடையே அவரின் குரு குலமான ஈரோட்டுச் சரக்கினை வெளிப்படுத்திக் கொண்டேதானிருப்பார். ஈரோட்டு வாசனை வீசிக் கொண்டுதானிருக்கும்.
நான் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பார்; நான் நாத்திகன்தான் என்பார்; ஆரியர் - திராவிடர் போராட்டம் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது என்பார் - அந்த அரசியல் இவர் தலைமுறையோடு முழுக்குப் போடாதா என்று யாகம் நடத்திக் கொண்டு இருப்பவர்களின் ஆசையில் மண் விழ,
தளபதி ஒருவர் தோன்றியிருக்கிறார் - அவரை தாய்க் கழகத்தின் தலைவராக இருக்கக்கூடிய இந்த வீரமணி தூக்கிப் பிடிக்கிறார் - அடையா ளம் காட்டுகிறார் என்றவுடன், ஆரிய தினமலருக்கு அடிவயிறு பற்றி எரிகிறது - ஆத்திரம் அலை மோதுகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்தக் கார்ட்டூன்.
இது வீரமணியார் எடுக்கும் காவடியல்ல - ஆவடி! ஆரியத்தை நோக்கி வீச வேண்டிய ஆயு தத்தைத் தயாரித்துக் கொடுக்கும் தொழிற் சாலைகள் ஆவடியில்தான் உற்பத்தியாகின்றன.
கொலைக் குற்றத்தின்கீழ் ஜெயிலுக்குச் சென்று பெயிலில் அலைந்து கொண்டிருக்கும் லோகக் குருக்களுக்கு ஜால்ரா தட்டும் தர்ப்பைகளா பூர்ணகும்பம் கொடுக்கும் பூணூல்களா ஜால்ரா பற்றிப் பேசுவது?
ஒன்று தெரியுமா இந்தப் பூணூல் கூட்டத் துக்கு? வீரமணி எங்கு இருந்தாலும் ராஜ குரு வாகத்தான் இருப்பார்!
- கருஞ்சட்டை -

Wednesday, June 5, 2013

நமது எம்.ஜி.ஆருக்கு... கருஞ்சட்டையிடம் விளையாட வேண்டாம்

பருவம் பாராது, மானம் பாராது தொண்டறம் புரிபவர் கருணாநிதி என்று திராவிடர் கழகத் தலைவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் களைப் பாராட்டிவிட்டாராம் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு அண்ணாவின் உருவத்தைக் கொடியிலும் பறக்கவிட்டுக் கொண்டு பூணூலுக்கும், திருநீறுக்கும் தத்துவார்த்தம் எழுதிக் கொண்டு இருக்கும் அக்கிரகார ஆன்மீக ஏடாகவே ஆட்டம் போடும் அ.இ.அ.தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர் ஏடு. அத்திரிபாட்சா கொழுக் கட்டை  என்று சாக்கடை எழுத்துக்களை சந்தனமாகக் கருதி உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை பூசிக் கொண்டுள்ளது (5.6.2013).
இந்த ஏட்டுக்கு அனா ஆவன்னா சொல் லிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.
பருவம் பாராது தொண்டாற்றக் கூடியவர் கலைஞர் என்பதில் என்ன தவறு? இந்தத் தொண்ணூறு வயதிலும் உழைக்கிறார். அன்றாடம், தானே கட்டுரை எழுதுகிறார் - தானே பேசுகிறார் (மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதையல்ல) செய்தியாளர்களைச் சந்திக்கிறார் - அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்கிறார் - இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் - சுயமரியாதைத் திருமணங் களை நடத்தி வைக்கிறார்.
பொதுத் தொண்டாற்றி மறைந்த பெரு மக்களின் உடலுக்கு ஓடோடிச் சென்று இறுதி மரியாதை செலுத்துகிறார் - போராட்டங்களை அறிவிக்கிறார் - தானே அந்தக் களத்திலும் போய் நிற்கிறார் - இவ்வளவும் இந்தத் தொண்ணூறு வயதில் - இதற்குப் பெயர்தான் பருவம் பாராத தொண்டு என்பது.
அதேபோல மானம் பாராத தொண்டு என்று கழகத் தலைவர் பாராட்டியிருக்கிறார்.
இதில் என்ன தவறு இருக்கிறது? தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப் புரிந்து கொண்டவர்கள் - தன்மான இயக்கத்தின் தத்துவத்தை அறிந்து கொண்டவர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இருப்பார்கள்.
தனி வாழ்வில் மானம் பார்க்கலாம்; பொது வாழ்வில் மானம் பாராது தொண்டாற்ற வேண்டும் என்பார் தந்தை பெரியார்.
குடிசெய் வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும் (குறள் 1028)
- என்ற குறள், தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த குறளாகும்.
இதை எல்லாம் புரிந்து கொள்வதற்குக் கொஞ்சமாவது பகுத்தறிவும், பொது அறிவும் தேவைப்படும்.
கலைஞரின் மானம் பாராத பொதுத் தொண்டு என்பதற்கு உதாரணம் வெகு தூரம் போய்த் தேட வேண்டாம்.
ஒவ்வொரு நாளும் அதிமுகவின் எம்.ஜி.ஆர் ஏடு  அவதூறுகளையும், ஆபாசச் சொற்களை யும், அநாகரிகச் சகதிகளையும் அவர்மீது வீசு கிறதே - அவற்றையெல்லாம் அனாயாசமாகப் புறந்தள்ளி, பொதுத் தொண்டில் 90 வயதிலும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாரே - இந்த ஒன்று போதாதா?
திராவிடர் கழகம் - அதன் தலைவர் யாரை ஆதரிப்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும் அது கொள்கை அடிப்படையில் தான் இருக்கும் என்பது ஊருக்கும், உலகுக் குமே தெரியும். அதற்குப் பெயர் ஜால்ராவாம்.
கர்ப்பிணிப் பெண்களைக் கூட அவர்கள் முசுலீம்கள் என்றால் அவர்களின் குடலைக் கிழித்தெறிந்த மோடிகளுக்கெல்லாம் ஜால்ரா போடுபவர்கள் யார் என்று தெரியாதா?
எழுதுகோலை எதிர்த்துப் பிடிக்க ஆரம்பித்தால் நமது எம்.ஜி.ஆர். தாங்காது - கருஞ்சட்டையிடம் விளையாடிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம்!

அத்வானி ஏற்படுத்திய அதிர்வு....

பி.ஜே.பி.யில் மூத்தத் தலைவரும், கடந்த மக்களவைத் தேர்தலின்போது (2009) பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளருமான லால்கிஷண் அத்வானி, மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் (1.6.2013) பேசிய பேச்சால் பிஜேபி கூடாரம் அதிர்ந்து போயிருக்கிறது.
தாம்தான் பிஜேபிக்கான அதிகாரப் பூர்வமான பிரதமர் வேட்பாளர் என்று எச்சில் ஒழுகிக் கொண்டிருந்த நரேந்திரமோடியின் தலையில் நறுக்குக் குட்டு ஒன்றை வைத்தார் மூத்தத் தலைவர் அத்வானி!
மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானைப் பாராட்டு மழையால் குளிர வைத்தார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி போல அடக்கமானவர் என்று அடையாளப்படுத்தினார்.
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியையும் அக்கூட்டத்தில் அவர் பாராட்டியிருந்த போதிலும் ம.பி. முதல்வர் சவுகானுக்கு அதிகார மமதை கிடையாது என்று குறிப்பிட்டார். குஜராத்தைவிட மத்திய பிரதேசத்தில் சாதனைகள் அதிகம் என்று விளாசினார். இதன் மூலம் மோடியை அத்வானி மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்பட்டது என்று தினமணியே கூறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மோடி பிரதமருக்கான வேட்பாளர் என்பதில் அத்வானிக்கு மாறுபட்ட கருத்து உண்டு. ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அது கிட்டியவுடன் சடார் என்று போட்டு உடைத்து விட்டார்.
அதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட மாநிலம்  மத்திய பிரதேசம்; காரணம் அங்குதான் பிஜேபியின் முதல் அமைச்சராக சவுகான் இருக்கிறார்.
குஜராத் மோடி ஆட்சியில் குபீரென்று முன்னேறி விட்டது என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்ட நிலையில், ம.பி.யில் சவுகான் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று அத்வானி ஒரு போடு போட்டதன் மூலம் மோடியும், அவரைத் தோளில்  தூக்கி வைத்துள்ள கூட்டத்தாரும் ஒரு கணம் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக்  கொண்டனர்.
அத்வானி, சுஷ்மா சுவராஜ் போட்டி வேட்பாளர்கள் என்ற ஒரு கருத்து நிலவும் சூழ்நிலையில், மூன்றாவதாக சவுகானை அத்வானி களத்தில் இறக்க முயற்சிப்பதன் சூட்சுமத்தைப் புரியாமல் பிஜேபி வட்டாரம் திகைக்கிறது.
ஒருக்கால் தனக்கு வாய்ப்புக் கிடைக்கா விட்டாலும் சவுகானுக்குக் கிடைக்க வேண்டும் என்று அத்வானி நினைக்கிறார் போலும்!
பி.ஜே.பி. ஆட்சியில் உள்ள இரு மாநில முதல் அமைச் சர்களை மோத விடுவதுதான் சுவையான காட்சியாகும்.
கருநாடக மாநிலத் தேர்தலில் காயடிக்கப்பட்ட பிஜேபி விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் கால கட்டத் தில், உள்நாட்டுப் புயல் உக்கிரமாக வீசத் தொடங்கி விட்டது.  அடுத்தடுத்த காட்சிகள் வேடிக்கை, விநோதம் நிறைந்ததாக இருக்கக் கூடும்.
மோடி பிரதமருக்கான வேட்பாளர் என்றால் ஒட்டு மொத்தமான சிறுபான்மை மக்களின் வாக்குகள் பிஜேபிக்கு எதிராக சிந்தாமல்  சிதறாமல் செல்லும்.
பார்ப்பன ஆதிக்கம் கொண்ட பா.ஜ.க.வை எதிர்த்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் கைகோக்க அதிக வாய்ப்புண்டு.
சமூக நீதியாளர்கள், மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் பிஜேபிக்கு எதிராகத் திரளவும் அதிக வாய்ப்புண்டு. தலைப்பாகையை மாற்றி னாலும்  தலைவலி தீரப் போவதில்லை என்பதுதான் உண்மை.
கடைசி செய்தி (Tail Piece) : என்னைவிட மோடிதான் சிறந்த முதல் அமைச்சர் என்று ம.பி. முதல் அமைச்சர் சவுகான் கூறியுள்ளார். இதுவும் ஒரு மோடி மஸ்தான் வேலையாகத்தான் இருக்கும். இதுபோன்ற வேலைகளைச் செய்வதில் மோடி பலே கில்லாடி ஆயிற்றே!
- கருஞ்சட்டை



Friday, February 15, 2013

சபாஷ் மனுஷ்யபுத்திரன், சார்!


மனுஷ்யபுத்திரன் சார் - உங்களுக்கு ஒரு சபாஷ் போடுகிறோம்.
காதலர் தினத்தையொட்டி நேற்று இரு தனியார் தொலைக்காட்சிகளில் விவாதப் போர் நடைபெற்றது.
அதில் நீங்கள் எடுத்து வைத்த கருத்துகள் முற் றிலும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை மய்யத்திலிருந்து வெடித்துக் கிளம்பியவைதான்.
(தந்தை பெரியார் பெயரை நீங்கள் உச்சரிக்கா விட்டாலும், அதுதான் உண்மை - பெரியார் பெயரை உச்சரித்திருந்தால் விவாதத்தை வேறு தடத்திற்கு இழுத்துச் சென்று இருப்பார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது).
இரு தொலைக்காட்சிகளிலும் காதலை ஏதோ ஒரு வகையில் எதிர்த்துப் பேசியவர்கள் இந்துத்துவா சிந்தனை உள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்கள். (விவா தத்தில் பங்கு கொண்ட ஒரு சகோதரி கூட அதனை இடித்துச் சொன்னார்)
உங்கள் முருகன் வள்ளியைத் துரத்தித் துரத்திக் காதலிக்கவில்லையா? கிருஷ்ணன் எனும் கடவுள் கோபியர்களை லீலை செய்யவில்லையா? என்று அழ கான அறிவாயுதத்தைத் தூக்கி வீசினார். எதிர்தரப்பு அம்மையார் அரசியலுக்குப் போகாதீர்கள் என்றார். ஆம்! அவர்கள் அரசியலே அந்தப் புராண இதிகாசக் கழிசடைத்தனத்தை மூல ஊற்றாகக் கொண்டது தானே!
பூமியாகிய தேவிக்கும், பன்றி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் காதல் ஏற்பட்டது, அவர்களுக்குப் பிறந்த பிள்ளைதான் நரகாசுரன் என்று புராணம் எழுதி வைத்து  ஆண்டுதோறும் அதற்காக தீபாவளி கொண்டாடுகிறவர்கள் - யதார்த்தத்தில் காதல் என்றால் சீறுவதுதான் வேடிக்கை.
இடையில் புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளைப் பாடியது தன் பக்கத்துக்குத்தானே கோல் அடித்துக் கொண்டதாகும் (Same Side Goal).
காதல்என்பது உயிரியற்கை - அது கட்டில் அகப்படும் தன்மையதோ? என்று பாடியவர் புரட்சிக்கவிஞர்!
(அந்த இடத்தில் புரட்சிக்கவிஞரின் வரிகள் என்ற வரிப் புலியை ஏவி விட்டு இருக்கலாம்).
கோரிக்கையற்று கிடக்குதண்ணே - அந்த வேரில் பழுத்த பலா என்று விதவைப் பெண்களுக்காக வக் காலத்துப் போட்டு வாதாட வந்த வக்கீல் புரட்சிக்கவிஞர்.
கலாச்சாரம் - பண்பாடுபற்றி டாக்டர் அம்மா நீட்டி முழங்கினார்களே - அது என்ன கலாச்சாரம்?
ருதுவானவுடன் உடனடியாக பெண்ணை ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்திடவேண்டும் என்பதுதானே? பெண்ணைப் பார்த்துப் பொட்டைக் கழுதை என்று பெண்ணை விட்டே பேச வைத்த கலாச்சாரம்தானே?
என்ன ஆம்பிளைப் பயலாட்டம் குதிக்கிற? என்று பெண்களை உடலளவில் பலம் குன்றியவர்களாக வார்த்தெடுத்ததுதானே அந்தப் பழம் கலாச்சாரம்!
அவர்கள் கூறும் அந்தக் கலாச்சாரத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் உண்டா?
தறுதலையாக ஒருவன் திரிந்தால் கம்மனாட்டி வளர்த்த பிள்ளையல்லவா? கழிசடையாகத்தானிருக்கும் என்று சொலவடைதானே அவர்கள் கூறும் கலாச்சாரம்!
பெண்களும், சூத்திரர்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று பகவான் கிருஷ்ணனே கூறியதாக கீதையில் (அத்தியாயம் 9, சுலோகம் 32) கூறப்பட்டிருக் கிறதா, இல்லையா?
பெண்களையும், பிராமண ரல்லாதார்களையும் கொல்லுதல் பாதகமாகாது (மனுதர் மம், அத்தியாயம் 11, சுலோகம் 65).
பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு, பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்கவேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது. (மனுதர்மம், அத்தியாயம் 5, சுலோகம் 148).
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவான வர் கற்பித்தார்.
(மனுதர்மம், அத்தியாயம் 9, சுலோகம் 17)
கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரீலோலனாக இருந்தாலும், நற்குணமில்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப்போல பூசிக்கவேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் சுலோகம் 154).
இந்த இந்துத்துவா சிந்தனைகளைக் கண்மூடித்தன மாக நம்புபவர்கள், ஏற்றுக்கொள்பவர்கள் பெண்ணுரிமை யின் வெளிப்பாடான காதல் உணர்வை ஏற்றுக் கொள் வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?
பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள், பொருளீட்ட ஆரம்பித்துவிட்டனர். சுயமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். அது கூடாது என்பதுதானே எதிர்தரப் பினரின் வாதம்.
அவர்கள் வாதம் வெற்றி பெற வேண்டுமானால், பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது. உத்தியோகங் களுக்கும் அனுப்பக்கூடாது.
(வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம்கெட்ட வர் கள் என்று சொன்னவர்தானே அவர்களின் லோகக் குரு வான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி).
உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வாழும் வீடு, பழக்கவழக்கம் என்பது ஓர் அரைநூற்றாண்டுக் காலத்தில் எவ்வளவோ மாற்றம் அடைந்துள்ளன.
தம் வாழ்வை நிர்ணயித்துக் கொள்ளும் மிக முக்கிய மான திருமணத்தில் மட்டும் வயது அடைந்த ஓர் ஆணுக் கும், பெண்ணுக்கும் உரிமையில்லை என்று கூறுவது அத்துமீறியது - சட்டவிரோதமானது - மனித உரிமை மீற லல்லாமல் வேறு என்னவாம்?
பெண்களைப் படிக்க வைத்து பொருளீட்டவும் அனுப்பிய பிறகு 18 வயது நிறைந்த பெண்களின் அறிவு வெளிச்சத்தை உரிமையின் கூர்மையை ஜாதி என்னும் வலையை வீசி தடுத்திடுவது சரியல்ல. அது ஆகக் கூடியதும் அல்ல - அல்லவே அல்ல!
தம்மின் தம் மக்கள் அறி வுடைமை என்பது ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.
கொங்கு வேளாளர் சமூ கத்திற்குத் தானே ஏகப் பிரதி நிதி என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர் ஒருவர் கூட தங்கள் பெண்களுக்குச் சமத்துவம் கொடுப்பதாகக் கூறினார்.
அப்படி சொல்லுகிறவரின் முகத்திரை எங்கே கிழிந்து தொங்குகிறது தெரியுமா?
பெண்களுக்குச் சொத்துரிமை கூடாது என்று தீர்மானமாகச் சொன்னவர்தான் அவர்?
27.1.2013 நாளிட்ட `இந்து ஏட்டில் 9 ஆம் பக்கத்தில் ஒரு செய்தி வந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த இளைஞன் இராசசேகரன் வன்னியர். அதே மாவட்டம் அரூரைச் சேர்ந்த ஜீவியா என்ற பெண்ணை (கொங்கு வேளாளர்) காதலித்துத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
பெண்ணைக் கடத்திச் சென்றதாக வழக்கு - நீதிமன்றத்திலேயே நெற்றியடியாக அந்தப் பெண் சொல்லிவிட்டார். `இல்லை, அது தவறு நானாக விரும்பித் திருமணம் செய்து கொண்டேன்!` என்று அடித்துச் சொல்லி விட்டார்.
பெண் கர்ப்பம் ஆனாள், பெண்ணின் பெற்றோர்கள் விடுவதாக இல்லை - வீட்டுக்கு வரச் சொல்லி, நைசாக இராசிபுரத்திற்குக் கொண்டு சென்று, கருச்சிதைவு செய்துகொள்ள வற்புறுத்தினர், மறுத்தாள் அந்தப் பெண்.
தகவல் அறிந்த பெண்ணின் காதலனாகிய இராச சேகரன் புகார் கொடுத்ததன் பேரில், பெண்ணின் பெற்றோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது (செக்சன் 366, 312).
பெண்ணைக் கடத்தியதாக இராசசேகரன்மீது புகார் கொடுத்தனர். இப்பொழுதோ திருமணமான பெண்ணைக் கடத்தினார்கள் (Kidnapping) என்று பெற்றோர்கள்மீதே  வழக்கு - விசித்திரம் பார்த்தீர்களா? இதுதான் இன்றைய சட்டப்படியான நிலைப்பாடு.
வன்னியரைத் தாண்டி திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று கூறுகிறார்கள்.
கவுண்டரைத் தாண்டித் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. இதுதான் எங்கள் கலாச்சாரம் - அகமுறை என்று இவர்கள் சொல்லுகிறார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் நடந்ததோ இந்த இரு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கிடையேதான் - எப்படி?
இராசசேகரன் - ஜீவியாக்கள் வாழ்வியல்தான் யதார்த் தமானது. ஜாதி வலை அறுந்து சுக்கல் நூறாகும்.
யாரும் அதைக் காப்பாற்ற முடியாது.
மனுஷ்யபுத்திரன் சார், நன்றாகத்தான் சூடு கொடுத்தீர்கள். ஆனால், அதில் அதிகக் கோபக்கனல் கொந்தளித்தது. அது புரிந்துகொள்ளப்படக் கூடியதே! ஆனாலும், சொல்ல வந்தது சில இடங்களில் புரியாமல் போய்விட்டதே!
சித்திரத்தில் பெண் எழுதி ...
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழ விட மாட்டாயோ
காவியத்தில் காதலென்றால் கரைந்துருகும் கற்பனையே
கண்ணிறைந்த காதலுக்கு கண்ணீர்தான் உன் வழியோ
அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுதத் தெய்வமெல்லாம் ஏட்டில் வரும் தேன்தானோ
மன்னர் குலக் கன்னியரும் கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்துப் பெண்களுக்கு வாய்த்த விதி இதுதானோ!
- கருஞ்சட்டை

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, October 5, 2012

கலைஞர் போட்ட கறுப்புச் சட்டை! பூணூல்களின் புழுக்கம்!




இன்றைய தினமணி ஏட்டில் 9ஆம் பக்கத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கறுப்புச் சட்டை அணிந்துள்ள படத்தைப் போட்டு, அவரது அறிக்கைக்கு இனி என்றும் கறுப்புச் சட்டைதான் அணிவேன் என்று தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதே பக்கத்தின் முன் பத்தியில் கறுப்புச் சட்டை - பாசிசத்தின் அடையாளம்? என்று விஷமமாகப் போட்டு முறுக்கு மீசைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்த்துள்ளார் ஆரிய வைத்தியநாத அய்யர்!
பூணூல் கூட்டத்தின் புதிய கொலம்பஸ், கறுப்புச் சட்டை என்றால் அது பாசிசத்தின் அடையாளம் என்று முசோலினியைத் தேடி இத்தாலிக்கு ஓடியுள்ளார்!
மற்ற வகையில் இத்தாலி என்றால் கடுமையாக விமர்சிக்கும் இவர்கள், இதற்கு மட்டும் இத் தாலியை நாடி ஓடி அந்த சரித்திரத்தைக் காட்டுகிறார்கள்!
அவர்களைக் கேட்கிறோம். திராவிடர் கழகத்தவரும் கலைஞ ரும், தி.மு.க.வினரும் கறுப்புச் சட்டை அணிந்தால் அவர்களை; பாசிஸ்டுகள் என்று வர்ணிக்கும் வர்ணாசிரம வாரிசுகளே,
மக்களுக்கு நீதி வழங்கும் நீதிமன்றங்களில் - உயர் நீதி மன்றம், உச்சநீதிமன்றம் வரையில் - வாதாடும் வக்கீல்களும், தீர்ப்பு எழுதிடும் நீதிபதிகளான நியாய வான்களும் கறுப்புடை அணிந்து அமர்ந்து விசாரணை செய்கின் றனரே - அவர்கள் எல்லாம் பாசிஸ்டுகளா?
மீசையும் தலையும்  வெளுத்தா லும் அது வெள்ளையாகத் தெரியக் கூடாது என்பதற்காக கறுப்பு டையை அடித்து, மீசை முறுக்கி விட்டுக் கொள்ளும் மனிதர்கள் எல்லாம் கூட பாசிஸ்டுகள் தானா?
வைத்தியநாத அய்யர்கள் தூக்கிப் பிடிக்கும் கீதையும், மனு தர்மமும் போதிக்கும் வன்முறையை மீறிய பாசிஸ்ட் ஏடுகள்,  உடினந -கள் உலகில் உண்டா?
ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்ட நிலையில் அதன் கொடி, ஜெர்மனி நாட்டின் ஹிட்லரின் சுவஸ்திக் சின்னம் நாசிசம் அல்லவா?   அவரின் கூட்டாளிதான் முஸோ லினி  என்பது வசதியாக மறந்து விட்டதா?
இத்தாலி வரலாற்றை, இரண் டாம் உலகப் போரில் இத்தாலியின் ஆட்சி பற்றி ஆராய்ந்து எழுதும் வைத்திய நாதர்கள் கொஞ்சம்  ஹிட்லரையும் ஜெர்மனியையும் கூட சிந்தித்து,
ஆர்.எஸ்.எஸ்.  கொடிய ஆரியத் தின் சின்னமாக சுவஸ்திக்கைத் தேர்வு செய்த கதை மறந்து விட்டதா? (பிறகு மாற்றியது வேறு விஷயம்).
யாருக்கு பாசிசம், நாசிசம் - அதிக உறவு -பூணூலிசத்துடன் தானே! இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் ஹிட்லர் வெற்றி பெறுவான் என்று எதிர்பார்த்து ஜெர்மன் மொழியை விழுந்து விழுந்து படித்த பார்ப்பனர்களா இசங்களைப் பேசுவது?
பூணூல் என்பது சமதர்ம - சமத்துவ - சமாதான -சாட்சாத் சகோதரத்துவ  - மனிதநேயத்தின் மறு பதிப்போ! ஹி... ஹி... இந்தப் பிறவிப் பூணூல் பாசிசத்தை ஒழிப்பதற்குத் தான் இந்தக் கருப்புச் சட்டை என்பதை மறவாதீர்!
கண்ணாடி வீட்டிலிருப்பவர்கள் கற்கோட்டையை நோக்கி கல் வீசலாமா?
- ஊசி மிளகாய் -

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...