Showing posts with label நமது சிறப்புச் செய்தியாளர். Show all posts
Showing posts with label நமது சிறப்புச் செய்தியாளர். Show all posts

Wednesday, June 24, 2015

வடலூர் திருக்குறள் மாநாட்டில் விழி பிதுங்கிய தினமணி வைத்தியநாதய்யர்!

வடலூர் திருக்குறள் மாநாட்டில் விழி பிதுங்கிய தினமணி வைத்தியநாதய்யர்!


வடலூரில் நடைபெற்ற திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் மீண்டும் மீண்டும் ஒலித்த தந்தை பெரியாரின் கருத்துகளால் கருவாட்டை பறிகொடுத்த பாப்பாத்தி போல் ஆனார் அந்த மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்! இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே போன வைத்தியநாதன், புலால் உண்பவர்களுக்கு திருக்குறள் பற்றி பேச தகுதி இருக்கிறதா? என்று பேசி மாநாட்டுப் பார்வை யாளர்களின் கடும் விமர்சனத்துக்கும் ஆளானார்.

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூகநல அறக்கட்டளை இணைந்து வடலூரில் ஜூன் 21ஆம் தேதி மாலை திருக்குறள் தேசிய நூல் மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டு சிறப்பு அழைப்பாளராக வைத்தியநாதன் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த மாநாட்டு மேடையில் பேசிய பேச்சாளர்களில் சிலர், திருக்குறளை பரப்பியதில் திராவிடர் இயக்கம் மற்றும் பெரியாரின் பெரும்பங்கினைப் பற்றியும் ராமாயணம் மகாபாரதம், கீதை ஆகியவற்றை படிப்பதைவிட திருக்குறளை படிப்பதே சிறந்தது எனவும் பெரியாரின் கருத்துகளை மேற்கோள்காட்டிப் பேசினர்.

பேராசிரியர் மோகனராசு

குறிப்பாக இந்த மாநாட்டுக்குத் தலைமை ஏற்றிருந்த, கு.மோகனராசு (ஆசிரியர் -வாழும் வள்ளுவம்), அவர் கள் கீதை எவ்வளவு மோச மான வர்ணாசிரமக் கருத்து களை உடையது ஆனால் திருக்குறள் அதற்கு நேரெ திராக சமத்துவத்தை பேசக் கூடியது என்று அடுக்கடுக் காக கருத்துகளை முன் வைத்தார்.

மோகனராசு பேசியதன் சுருக்கம் வருமாறு: கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் திருக்குறளுக்குத் தான் தேசிய நூலுக்கான முழுத்தகுதியும் உண்டு. இந்தியாவின் அரசியல் சட்டமானது மக்களுக்கான சமத்துவம், சமவாய்ப்பு பற்றி சொல்கிறது. ஆனால், மக்களை நான்கு வர்ணமாகப் பிரித்து ஜாதிக்கு ஒரு தொழிலை பிரித்துக்கொடுக்கிறது கீதை.

இதில் சூத்திரன் அடிமை வேலை செய்யவேண்டும் என்றிருக்கிறது. பேதத்தை வலியுறுத்துகிற ஒரு நூல் எப்படி தேசிய நூலாக முடியும்? ஆனால், திருக்குறளோ பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது. பார்ப்பனர்கள் உழவுத் தொழில் செய்யக்கூடாது என்கிறது வர்ணாசிரமம். ஆனால், உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தையும் உழவர்களின் சிறப்பையும் பற்றி சொல்கிறது திருக்குறள்.

இவ்வாறு தொடர்ச்சியாக, பல திருக்குறள்களை மேற் கோள்காட்டி திருக்குறளின் சிறப்பையும், கீதையின் கேடு பயக்கும் கருத்துகளையும் மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டே போனார் மோகனராசு அவர்கள். அவரின் உரையில், அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், வைத்தியநாதனுக்கு மட்டும் நெரிக்கட்டத் தொடங்கியது. நாற்காலியில் உட்கார்ந்தபடியே நெளிந்தார். முகம் சிவந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்?

தினமணி வைத்தியநாதய்யர்!

அடுத்து பேச வந்தார் வைத்தியநாதன். பார்ப்பன விஷத்தை கக்கினார்.

வள்ளலாரின் வடலூரில் நின்றுகொண்டு வள்ளுவரை பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளுவரும், வள்ளலாரும் கொல்லாமையை, புலால் உண்ணாமையை வலியுறுத்தியவர்கள். எனவே, புலால் சாப்பிடுகிற வாயால் வள்ளுவரைப் பற்றி பேசுவது முறையாகுமா? புலால் உண வையும்,
கள்ளையும் யார் தவிர்க்கிறார்களோ அவர்களுக்கே திருக்குறளைப் பற்றி பேச முழுத்தகுதியும் உண்டு. புலாலையும் சாப்பிட்டுக்கொண்டு திருக்குறளையும் தேசிய நூலாக்க வேண்டும் என்று கேட்பது சரியாகுமா? புலால் உண்பவர்கள் திருக்குறளை பற்றிப் பேசும்போது குற்ற உணர்வோடுதான் பேசவேண்டும் என்று சமாளிக்க முயன்றார்.

பேராசிரியர் மோகனராசு அவர்களின் உரைக்குப் பதில் சொல்ல வக்கத்து வேறு கிளைக்குத் தாவும் பரிதாபத்தைப் பாரீர்!

எதிரிலே உட்கார்ந்திருக்கிற நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் புலால் உண்பவர்கள் என்று நன்றாக தெரிந்திருந்தும் அவர்களுக்கு திருக்குறள் பற்றிப் பேசும் தகுதி இல்லை என்று அங்கேயே ஜாதி உணர்வோடு பேசினார்.

அதாவது புலால் உண்ணாமையை கடைப்பிடிக்கிற பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் திருக்குறளைப் பற்றி பேசுகிற முழுத்தகுதியும் உண்டு என்று மறைமுகமாகச் சொல்கிறார்!

கூட்டத்தில் அமர்ந் திருந்தவர்களோ,  கேலி யாக சத்தம் போட்டனர். அப்படிப் பேசிக்கொண்ட வர்கள் வைத்தியநாதனை காய்ச்சி எடுத்தார்கள்.

திருவள்ளுவரும், வள் ளலாரும் கொல்லாமையை மட்டும்தான் வலியுறுத்தி னார்கள் என்பதுபோல் பேசுகிறாரே? பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர். வைத்தியநாதன் இதை ஏற்கக்கூடியவரா? பார்ப்பனர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று சொல்பவராயிற்றே என்றார் ஒருவர். சாதி, மதம், சடங்குகள், ஏன் உருவ வழிபாட்டுக்கே எதிரானவர் வள்ளலார்.

கண்மூடிப்பழக்கம் எலாம் மண்மூடிப்போக என்றார் வள்ளலார். வைத்தியநாதன் இதைப் பின்பற்றுகிறாரா? என்னமோ இவருக்கு மட்டுந்தான் வள்ளுவரையும், வள்ளலாரையும் பற்றி பேசுகிற தகுதி உண்டு என்கிற ரீதியில் பேசுகிறாரே என்றார் இன்னொருவர். புலால் உண்பதாலேயே எங்களுக்கு திருக்குறள் பற்றிப் பேசத் தகுதி இல்லை என்றால் உருவவழிபாட்டையும் பேதங்களையும் மனு தர்மத்தையும்,

வர்ணாசிரமத்தையும் ஏற்றுக் கொள்கிற வைத் தியநாதனுக்கு அந்தத் தகுதி முற்றாகவே கிடையாது என்றார் ஒரு முதிய தமிழன்பர். வைத்தியநாதனுக்கு பிறகு வேறு யாரையாவது உரையாற்றவிட்டிருந்தால், இந்த பார்ப்பனக் கருத்துகளை கிழித்தெடுத்திருப்பார்கள் என்றார் மற்றொருவர்.

 பெரியார் மறைந்தாலும்...

ஆக, ஒவ்வொருவரும் பெரியாரின் கருத்துகளை வெவ்வேறு குரல்களில் பேசிக்கொண்டேதான் அரங்கில் இருந்து கலைந்து சென்றனர். மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் பார்ப்பனர்களை குத்திக்குடைந்திருக்கிறார் பெரியார் என்பது இந்த விழாவே எடுத்துக்காட்டு! அதனால்தான், பார்ப்பனர்கள் பெரியார் என்ற பெயரைக் கேட்டாலே கொதிக்கிறார்கள்.

வைத்தியநாதன் அவர்களே, நீங்கள் எங்கே சென்றாலும் பெரியார் கருத்துகள் உங்களை தொடர்ந்துவரும். அதனால்தான், இதை பெரியார் மண் என்கிறோம். எச்சரிக்கையும், அசிங்கப்பட்டதற்கு வாழ்த்துகளும்!

- நமது சிறப்புச் செய்தியாளர்

Wednesday, October 31, 2012

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததற்காக வெற்றிச் சின்னமா? அல்ல - அது வெறிச் சின்னமே!


ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததற்காக வெற்றிச் சின்னமா?
அல்ல - அது வெறிச் சின்னமே! தமிழர் தலைவர் முழக்கம்!
ஈழத் தமிழர்கள் பிரச்சினையை கலைஞர் மீதான விமர்சனமாகக் குறுக்க வேண்டாம்!
பேரா. சுப வீரபாண்டியன் வேண்டுகோள்!


- நமது சிறப்புச் செய்தியாளர்

சென்னை, அக்.30 - ஈழத் தமிழர்கள் பகுதியில் போர் நினைவுச் சின்னம் என்பது, சிங்கள அரசின் வெறிச் சின்னமே தவிர, வெற்றிச் சின்னமல்ல என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
ஈழத் தமிழர்களுக்காகப் பேசுவது என்ற பெயரில் கலைஞர் மற்றும் திமுக மீதான விமர்சன மாகக் குறுக்க வேண்டாம் என்றார். திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
ஈழத் தமிழர்களை இழிவுபடுத்த போர் நினைவுச் சின்னமா? எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை - பெரியார் திடலில் நேற்று (29.10.2012) மாலை 7 மணிக்கு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.
ஈழத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் எதற்காக இந்த நினைவுச் சின்னம்? யாரை எதிர்த்துப் போரில் வெற்றி பெற் றனர்?
சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்ததற்காக நினைவுச் சின்னமா? விடுதலைப்புலிகளை எதிர்த்து எப்பொழு தாவது இலங்கை இராணுவம் வெற்றி பெற்றதுண்டா?
சீனா, பாகிஸ்தான், இந்தியா உள் ளிட்ட நாடுகளின் இராணுவ உதவிகளை யும், ஆயுதங்களையும் பெற்று தானே அப் பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்காக ஒரு நினைவுச் சின்னமா என்று கேட்டார் வரவேற்புரையில்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டதாவது:
இலங்கையில் இரு நாடுகளுக்கிடை யேவா போர் நடந்தது? இல்லையே; அப்படி இருக்கும்பொழுது எங்கிருந்து வந்தது போர் நினைவுச் சின்னம்? ஈழத் தமிழர்கள் இலங்கையின் குடிமக்கள் இல்லையா?
வெளிநாட்டோடு ஒரு நாடு சண்டை யிட்டால்தான் அது போர்! மாறாக இலங்கைத் தீவில் நடைபெற்றது சுதந்திரப் போராட்டம்! (பலத்த கரஒலி!)
இந்து ஏட்டில் இன்று வெளிவந்துள்ள கட்டுரையில் அவர்களையும் தாண்டி சில உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதி யுள்ளனர்.
வங்கிகளில் கடன் வாங்குவ தற்கு சொத்து ஆதாரங்கள் கேட்கப்படு கின்றன; அவர்களின் ஆதாரங்கள் எல்லாம்தான் அழிக்கப்பட்டு விட்டனவே - இந்த நிலையில் பரிதாபத்திற்குரிய எங்கள் தமிழர்கள் எந்த ஆதாரங்களைக் கொண்டு வந்து கொடுக்க முடியும்? உலகத்தை  ஏமாற்றுவதற்குத்தானே இந்தப் பிரச்சாரங்கள்?
இராணுவத்துக்குச் சம்பந்தமில்லாமல், காவல்துறைக்குச் சம்பந்தமில்லாமல் உடல் முழுவதும் கிரீசைத் தடவிக் கொண்டு தமிழர்களின் வீடுகளில் புகுந்து தாக்குகிறார்கள் - பெண்களிடம் வார்த் தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நடந்து கொள்கிறார்கள் - உடல் முழு வதும் கீரிஸ் தடவிக் கொண்டு வருவதால் அவர்களைப் பிடிக்கவும் முடிவதில்லை - வழுக்கிக் கொண்டு ஓடி விடுகிறார்கள்.
ஈழத் தமிழர்கள் கல்வியில் ஆர்வம் உடையவர்கள். ஆனால் ஒரே ஒரு பல்கலைக் கழகம் - அதிலும் குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கைக்கு அனுமதி கல்வியிலும் மண்ணை அள்ளிப் போடு கிறார்கள். பெரும்பாலான தமிழர்கள் அங்கே வாழும் மன நிலையில் இல்லை. அனைத்தையும் பறிகொடுத்த மன நிலையில் பரிதாபத்தின் எல்லைக்கே விரட்டப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் அழிக்கப்பட்டதாக நினைக் கலாம்; அவர்கள் அழிக்கப்படவில்லை - உண்மையைச் சொல்லப் போனால் விதைக்கப்பட்டுள் ளனர். (கரஒலி)
வரலாற்றில் இடி அமீன், கடாபி போன்றவர்களை நாம் பார்க்கவில்லையா? அவர்களின் இறுதிக் காலம் என்ன நிலைக்கு ஆளானது? பதவி அதிகாரத்தில் இருக்கும் வரை ஒன்றும் தெரியாது பதவி பறிபோனால் அவர்கள் கதி என்னாகும் என்பதை வரலாறு நமக்குத் தெரிவித் துள்ளது. இத்தகையவர்களை வரலாறு குப்பைக் கூடையில்தான் தூக்கி எறியும்.
இந்த நேரத்தில் தமிழ்நாட்டின் நிலையை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். ராஜபக்சேயை மறந்து விட்டு நமக்குள் தேவையில்லாமல் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. எங்கேயோ வைக்கப்பட வேண்டிய குறி, தடம் மாறிப் போய்க் கொண்டு இருக்கிறது.  இதன் மூலம் ராஜபக்சேக்களுக்கு பலம் சேர்க்காதீர்கள் என்பதுதான் எங்களின் கனிவான வேண்டுகோள்!
எங்களைவிட உங்களால் மேலும் வலிமையாக சிறப்பாக ஈழத் தமிழர் பிரச்சினையில் செயல்பட முடியுமானால் தாராளமாகச் செய்யலாம்; நாங்கள் ஒன்றும் குறுக்கே நிற்கப் போவதில்லை. யாரால் நடந்தது என்பது முக்கியமல்ல- காரியம் வெற்றிகரமாக நடக்கிறதா என்பதுதான் முக்கியம். இடையில் சிண்டு முடிந்திடுவோர் இருக்கின்றனர் என்பதை மறவாதீர்கள் என்பதும் நமது வேண்டுகோளாகும்.
போர் நிறுத்தம் மற்ற இடங்களில் ஏற்படுவது இருக்கட்டும்; முதலில் நம்மிடையே போர் நிறுத்தம் வர வேண்டும் - என்று கேட்டுக் கொண்டார்.
திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியிலே சிங்கள அரசு நிறுவி இருப்பது வெற்றிச் சின்னமல்ல- அவமானச் சின்னம்!
ராஜபக்சேவை விழுந்து விழுந்து ஆதரிக்கும்  இந்து ஏடுகூட இன்று ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு எழுதி யுள்ளது.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் 18 ஆயிரம் இராணுவ வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் அத்தனைப்  பேரும் சிங்களவர்களே என்று இந்து குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினம் இலங்கை என்பது சீனாவின் தொங்கு சதையாகி விட்டது. போரே இல்லாமல், போரையை மேற்கொள் ளாமல் கொழும்பில் சீனாவின் நினைவுச் சின்னம் நிறுவப்பட இருப்பதை விரைவில் காணலாம்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் வளர்ந்தால், வலிமை பெற்றால் இந்தியாவுக் குப் பாதுகாப்பானது. இதனை பிரதமராக இருந்த இந்திரா காந்தி உணர்ந்திருந்தார். அதன் காரணமாகவே புலிகளை அவர் ஆதரித்தார். புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கவும் அனுமதி கொடுத்தார்.
சீனாவின் முத்துமாலை திட்டம் என்பது இந்தியாவைச் சுற்றி வளைப்பதற்குத்தான், தமிழர்களை இந்தியா காப்பாற்றுவது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
பெரியார் திடல் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந் தால் இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் ஈழத் தமிழர்கள் பற்றிய உணர்வு எங்களுக்கெல்லாம் உண்டாகி யிருக்குமா? இந்திய இராணுவம் ஒரு பேட்டை ரவுடிபோல் நடந்து கொள்ளலாமா என்று இதே மேடையில் வினா எழுப்பியவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்தான்.
ஈழத் தமிழர்களும் சாகக் கூடாது; இந்திய இராணுவ வீரர்களும் மடியக் கூடாது என்று சொன்னவர் திராவிடர் கழகத் தலைவர்.
அன்று கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ உருவாக்கப்பட்டது - போராளிகள் பக்கம் நின்று; இன்று கலைஞர் தலைமையில் டெசோ உருவாகி இருப்பது கொலைகாரன் ராஜபக்சேவைக் கூண்டில் ஏற்ற - எஞ்சி யுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற.
இன்றைய தினம் ஈழத் தமிழர்களுக்காக என்று சொல்லப்படும் மேடைகள் ஈழத் தமிழர்களுக்காக என்ற நிலைமாறி கலைஞரையும், திமுகவையும் தூற்றுவது என்கிற அளவுக்குக் குறுகிவிட்டது என்று குறிப்பிட்டார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, May 28, 2012

காவிரி டெல்டா மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுமா? மத்திய ரயில்வேதுறை!


தமிழகத்தின் தொன்மையான ரயில்பாதைகளில் திருச்சியிலிருந்து மயிலாடுதுறை-விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் மெயின்லைன் பாதையும் ஒன்று. 1999ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் ஜாபர் செரீப் ரயில்வேதுறை அமைச்சராக இருந்தபொழுது இந்தமீட்டர்  இருப்புப் பாதை அகலப்பாதையாக மாற்றும் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த பணிகளை விரைவுபடுத்த கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும், வர்த்தகர்களும்,பொதுமக்களும் கூடி ஆர்ப்பாட்டம் - கடையடைப்பு - பட்டினிப் போராட்டம் எனப் பல நிலைகளில் போராடியதன் விளைவாக திருச்சி-தஞ்சை வழித்தடம் 1998-லும், தஞ்சை-கும்பகோணம் 2002-லும், கும்பகோணம்-மயிலாடுதுறை 2004-லும் மயிலாடுதுறை-விழுப்புரம் 2009லுமாக மெல்ல மெல்ல அகலப்பாதைப்பணி நிறைவுற்று ஒரு சில ஆண்டுகளாக இந்தத்தடத்தில் திருச்சி-சென்னைக்கு தொடர்வண்டிகள் இயக்கப் படுகின்றன.     சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பே மீட்டர் பாதையில் 12-க்கும் மேற்பட்ட வண்டிகள் ஓடிகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உயர்ந்துவரும் மக்கள் தொகைக்கேற்ப அகலப்பாதைப்பணிக்கு பிறகு வண்டிகளின் எண்ணிகையை அதிகரிக்கவேண்டிய மத்தியஅரசு பழைய வண்டிகளின் எண்ணிகையையும் குறைத்துவிட்டது.அத்துடன் தற்போது இயக்கப்படும் வண்டிகள் அனைத்தும் விரைவு வண்டிகளாகவே உள்ளன. நடுத்தரமக்களுக்கு பயன்படும் வகையில் பயணிகள் தொடர்வண்டி வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.    ஜாபர்செரீப் காலத்தில் நாகூரிலி ருந்து, மயிலாடுதுறை-கடலுர்-விருத்தா சலம்-சேலம் வழியாக பெங்களூரு வரை விடப்பட்ட பயணிகள் தொடர்வண்டி, அகலப்பாதை மாற்றத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இயக்கப்படவில்லை. இதனால் மயிலாடு துறையிலிருந்து பெங்களூரு செல்ல இரண்டுமணி நேரத்தை அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஈரோடு-கருர் வழியாக பெங்களூருவுக்கு ஒரேயொரு வண்டி மட்டும் இயக்கப்படுவ தால் பயணிகள் கூட்டநெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.     மயிலாடுதுறை-திருவாருர் அகலப் பாதை பணி முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் முடிந்து சரக்குவண்டியும் இயக் கப்பட்ட நிலையில் இதுவரை பயணிகள் வண்டி இயக்கப்படாதது இந்தப்பகுதி யினரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியஅரசின் மெத்தனப்போக்கை கண்டித்து போராடுவது அன்றாட நிகழ்வாகி விட்டது.         இதுகுறித்து மயிலாடுதுறை நகராட்சித் தலைவர் திருமதி பவானி சீனுவாசன் கூறுகையில் புனிதத்தலங்கள் நிறைந்த பகுதியாக விளங்குவதால் நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பயணநேரத்தை குறைக்கவும் கடலுர்-விருத்தாசலம் மார்க்கத்தில் பெங்களூருவுக்கு உடனடி யாக தொடர்வண்டி இயக்கப்பட வேண்டியது அவசியம்.
குறிப்பாக  கலைஞர் பிறந்த ஊர் திருவாரூர். மயிலாடுதுறை-திருவாருர் அகலப்பாதை பணி முடிந்து வெகு நாட்களாகியும் வண்டி இயக்கப்படாதது வேதனையளிக்கிறது.
மயிலாடுதுறையிலிருந்து நாகைக்கு ரயிலில் செல்ல கும்பகோணம், தஞ்சாவூர் என ஊர் சுற்றி செல்ல வேண்டியிருக் கிறது என்றார். வர்த்தகசங்க தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில் திருச்சி-சென்னை மெயின்லைன் 3 வருடங்களில் அகலப்பாதையாக மாற்றப்படும் என்று ஆரம்பிக்கப்பட்டது.
பல ஆண்டுகள் ஆகியும் பணி நிறைவடையாததால் பொதுமக்களோடு சேர்ந்து வர்த்தக சங்கமும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. பட்டினி போராட்டம், ரயில் மறியல் என பல நிலைகளை எடுத்தோம். ரயில் மறியலில் ஈடுபட்ட எங்கள் சங்க கவுரவத் தலைவர் அந்த இடத்திலேயே மாரடைப்பால் உயிர்விட்டார் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.கோரிக்கைகள் மட்டும் அப்படியே இருக்கின்றன. அறிவிக்கப் பட்ட நாகூர்-பெங்களூரு வண்டி இயக்கப்படவில்லை.
மயிலாடுதுறையிலிருந்து சென் னைக்கு பயணிகள் ரயில் கேட்டோம். எந்த பதிலும் இல்லை. மயிலாடுதுறை-திருவாரூர் அகலப்பாதை பணி நிறைவு பெற்று பலநாட்கள் ஆகிறது அந்த தடத்திலும் வண்டி இயக்கப்படவில்லை என்றார்.  நாகை மாவட்ட தி.மு.க. செய லாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ்.விஜயன் அவர்களிடத்தில் கேட்டபோது நாடாளுமன்றத்தில் கேள்விநேரத்தில் இதுபற்றி, தான் பேசியிருப்பதாக குறிப்பிட்டார்.
பெட்டிகளின்(கோச்) பற்றாக்குறையே காலதாமதத்திற்கு காரணம் என்றும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் உறுதியளித்ததாகவும் கூறினார். மயிலாடுதுறை-திருவாருர் வழித்தடத்தில் பயணிகள் ரயில் துவக்க விழாவிற்கு முதலமைச்சரிடம் தேதி கேட்டிருப்பதாக அறிகிறோம். அதனால் தான் காலதாமதமாகி கொண்டிருக்கிறது என்றார்.  இதற்கிடையில் மயிலாடுதுறை-தரங்கம்பாடி மீட்டர்  பாதையில் இருந்த தண்டவாளங்களை பல ஆண்டு களுக்கு முன்பே ரயில்வேதுறை அகற்றிவிட்டது தண்டவாளங்கள் அகற்றப்பட்டாலும் வழித்தட இடம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எனவே மீண்டும் மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயிலை எனது முயற்சியில் ஓடவிடுவேன் என்று மயிலாடுதுறை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் மேலவை உறுப் பினருமான மணிசங்கர் அய்யர் மயிலாடு துறைப்பகுதிக்கு வரும்போதெல்லாம் கூறிவருகிறார்.  காவிரி டெல்டா பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை களுக்கு தீர்வு கிடைக்குமா?
- கி. தளபதிராஜ்,
விடுதலை செய்தியாளர்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, March 1, 2012

பி.ஜே.பி ஆளும் மத்திய பிரதேசத்தில் அவல நிலை பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க முடியுமாம்! ஏழு பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் நடக்க வேண்டுமாம்!


மு.கண்ணன்
- நமது சிறப்புச் செய்தியாளர் - புதுக்கோட்டை,
மார்ச் 1- பி.ஜே.பி. ஆளும் மத்திய பிரதேசத்தில் சமூக அவல நிலைப் பற்றிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. பார்ப்பனர்கள் மட்டும் தான் படிக்க முடியுமாம்.
சமீபத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களிலும் உள்ள கடைவீதிகள் மக்கள் கூடுமிடங் களில் அதிரடியாய் இரும்படிக்கும் சத்தம் காதைப் பிளக்கிறது. என்ன ஏது என்று உற்றுப் பார்த்தால் அங்கே திடீரென்று முளைத்திருக்கும் கொல்லுப் பட்டறை. அந்தக் கொல்லுப் பட்டரையில் நீண்ட இரும்பு ராடுகளைத் துண்டுகளாக்கி கோடாரிகள் வாச்சாத்துகள், களைக்கொட்டுகள் போன்ற இரும்புக் கருவிகளை மக்கள் விரும்பும் வண்ணம் வடிவமைத்துக் கொடுக்கிறார்கள். விவசாயிகளும் பொதுமக்களும் ஆர்வமாய் வாங்கிச் செல்கிறார்கள்.
திடீர்க் கொல்லுப் பட்டறைகள்
ஆர்வமாய் வாங்குவதற்குக் காரணம் ஒரு கருவியை வடிவமைக்கவோ சரிசெய்யவோ வேண்டும் என்றால், கொல்லுப்பட்டறையில் மாதக் கணக்கில் அலைய வேண்டியிருக்கும். குறிப்பிட்ட காலத்தில் கிடைப்பதில்லை. இவர்கள் அப்படியல்ல. அதனால் விவசாயிகளுக்கோ பொதுமக்களுக்கோ கிடைக்கும் லாபம் என்று பார்த்தால் உடனே கிடைத்து விடுகிறது. பேரத்திற்கு வேலையில்லை. கிலோ ஒன்று ரூபாய் 150. எந்தக் கருவியை எடுத்தாலும் அதன் எடையைப் பார்த்துக் காசு கொடுத்து வாங்கிவிடுகிறார்கள்.
அவ்வாறு திடீர்க் கொல்லுப்பட்டறை போட் டிருக்கும் அவர்கள் குஜராத்திலிருந்து வந்திருப்பவர் கள். நரசிங்கபுரம், போபால், சாகர், குணால் ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து சுமார் 2500-பேர் தமிழகத்திற்கு வந்து பலஊர்களிலும் இந்தத் தொழிலைச் செய்து வருகிறார்கள்.
அவர்களில் பலரிடமும் இந்தி தெரிந்த நண்பர் களின் உதவியோடு பேசியபோது 'நாங்கள் மன்னர் ராணாபிரதாப் சிங் வம்சா வழியினர். மன்னர் பரம்பரையில் வந்த நாங்கள் இப்போது ஒரு வேளை உணவுக்கே சிரமப்படுகிறோம். ஏற்கெனவே வறட்சி யால் தாக்குதலுக்குள்ளாகி இருந்த போபால் விஷவாயுத் தாக்குதலுக்குப் பின் அங்கிருந்த மக்களின் வாழ்க்கை நிலை மாறிப்போய் விட்டது. அங்கிருந்த மக்கள் அங்கேயும் வாழமுடியவில்லை. அங்கிருந் தும் வெளியேறி எங்கே போய் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே கிடக்க வேண்டிய நிலை. போபால் சம்பவத்திற்குப் பின் விவ சாய நிலங்கள் பெரும் பணக்காரர்களின் ஆக்கிரமிப் புக்குள்ளாகி விட்டது. அபகரித்துக் கொண்டு விட்டார்கள். சாதாரண மக்கள் வசிக்க முடியாத நிலை. அதற்காக நாங்கள் திருடவோ கொள்ளை யடிக்கவோ போக முடியாது.
மன்னர் பரம்பரை?
மன்னர் பரம்பரையில் வந்தாலும் எங்கள் முன்னோர்கள் மன்னருக்கு போர்க்கருவிகள் தயாரித்துக் கொடுக்கும் பணியில் இருந்திருக்கிறார் கள். இப்போது போர்க்கருவிகளா தயாரிக்க முடியும்? அதனால் விவசாயக் கருவிகள் தயாரித்து விற்று வருகிறோம். தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கருநாடகா, சட்டீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம் என்று ஊர் ஊராகப் போய்த் தொழில் செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை மதுரை, சேலம் போன்ற பெரு நகரங்களில் இரும்பு ராடுகளை விலைக்கு வாங்கி வந்து அறுத்து துருத்தி கொண்டு விவசாயக் கருவிகளாகவும் கோடரி போன்றவையும் உருவாக்கி விற்கிறோம். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம். இதுபோல் ஆண்டில் எட்டு மாதங்கள் ஊர் சுற்றுகிறோம். நான்கு மாதங்கள் ஊரில் போய் தங்கி விடுகிறோம்.
ஏழு பார்ப்பனர்கள்
எங்கள் இனத்தில் யாரும் எளிதில் விரும்பித் திருமணம் செய்து கொள்ள முடியாது. அவ்வாறு ஒருவருக்கொருவர் விருப்பம் இருந்தால் பெரிய வர்களிடம் பேசி திருமணம் செய்து கொள்வோம். அவ்வாறு திருமணம் செய்து கொள்வது எங்கள் சொந்த ஊரில் வைத்து மட்டும்தான். ராமன் பெருமாள், சிவன், காளியம்மன் போன்ற தெய்வங் களை வணங்குகிறோம். திருமணத் தின்போது ஏழு பிராமணர்களை வைத்துத் தான் திருமணம் செய்ய வேண்டும். ஒருவர் குறைந் தாலும் எங்கள் இனத்தில் ஒத்துக் கொள்ள மாட் டார்கள். வீட்டுக்குப் பெரியவராக குடும்பத்தில் அப்பாவோ அண்ணனோதான் இருப் பார்கள். அவர்களில் ஒருவர் சொல்வதைத் தான் கேட்டுக் கொள்வோம். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக குடும்ப உறுப் பினர்கள் எப்பொழுதும் இருக்க மாட் டோம். அவர்கள் சம்மதமில்லாமல் எந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முடியாது. அவர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தால் திருமணமே தடைப்பட்டுப் போய் விடும். மீறித் திருமணம் செய்து கொண்டால் சாதியி லிருந்து விலக்கி வைத்து விடுவோம். நாங்கள் செய்யும் இந்தத் தொழிலை எந்த இடத்திலும் செய்ய முடியாது என்றார்கள்.
படிப்பு உயர் ஜாதியினருக்கே!
மேலும், கல்வி குறித்துக் கேட்டபோது 'எங்கள் தொழிலுக்குக் கல்வி எதற்கு என்று விட்டு விட்டோம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்று விட்டு விட்டோம். எங்கள் அரசாங்கம் எங்களுக்குக் கல்வி கற்றுத் தருவதில்லை. அரசுப் பள்ளிகள் ஏதாவது ஓர் ஊரில் இருக்கும். அங்கு போய்ப் பார்த்தால் உயர் சாதியைச் சேர்ந்தவர்களுக் கும், பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளுக்கும் மட்டும் சொல்லிக் கொடுப் பார்கள். எங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றால் பல்லாயிரக்கணக்கில் செலவு செய்ய வேண் டும். அல்லது தனியார் கல்வி நிறுவனங் களைத் தேடிப் போயாக வேண்டும். இரும்படித்துப் பிழைக்கிற நாங்கள் கல்விக்குச் செலவு செய்ய எங்கே போவது? அதனால் கணக்குகள் தெரியுமளவிற்கு குடும்பத்தில் ஒருவருக்குத் தெரிந்திருந்தால் போதும். உயர் கல்வி கற்று நாங்கள் ஆட்சிக்கா வரப்போ கிறோம்.
பிழைக்கப் போகிற இடத்தில் மொழி தெரியாத எங்களுக்கு எந்தச் சிக்கலும் சிரமமும் வந்து விடக் கூடாது என்பதற்காக, நாங்கள் தங்கியிருக்கும் இந்தக் கூடாரங்களை விட்டு எந்த இடத்திலும் தங்க மாட்டோம். அருகில் யாராவது எதையாவது திருடி விட்டு பழியை எங்கள் மீது போட்டு விடக் கூடாது என்பதால் மிகவும் நேர்மையாக நடந்து கொள் வோம். அதேபோல் எங்கள் வீட்டுப் பெண்களுக்கும் மற்றவர்களால் எந்தவித தொந்தரவும் வந்து விடக் கூடாது என்பதால் பாதுகாப்பாக இருந்து கொள் வோம். இரும்படிக்கும் இந்தத் தொழிலில் ஆண் களை விட அதிக தைரியமாக சம்மட்டி கொண்டு அடிப்பதில் பெண்கள்தான். அவர்கள்தான் எங்கள் தெய்வம் என்கிறார்கள். இந்துக்கள் என்று சொன் னாலும் தங்கியிருக்கும் ஊரில் உள்ள ஒரு இஸ்லா மியரை அழைத்து வந்து அவர்கள் வேதம் ஓதி அறுத்துக் கொடுக்கும் கோழிக்கறியை மட்டும் எப்போதாவது ஒரு முறை அசைவமாக சமைத்து சாப்பிட்டுக் கொள்கிறார்கள். மற்றபடி கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட சுக்கா ரொட்டிதான் அவர்களின் உணவு.
தமிழ்நாட்டைப் பாரீர்!
இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் என்ன செய்திருக் கிறது என்பதை அறியாமல் தான் கற்ற கல்வியால் தான் கற்கவும் அரசுப் பணிகளில் அமரவும் முடிந்திருக் கிறது என்று எண்ணிக் கொண்டும் அதையே சொல்லிக்கொண்டும் இருக்கும் அதிமே தாவிகள் இந்த மக்களின் நிலையைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் நரிக்குறவர் தொடங்கி மனித மலம் அள்ளிக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணி செய்யும் நம் தமிழக மக்களின் நிலை எங்கே? மன்னர் பரம்பரையில் வந்தும் பிழைக்கவும் வழியில் லாமல் கல்வியும் உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரில் நிரந்தரமாக வசிக்கவும் முடியாமல் ஊர் ஊராகச் சுற்றி வரும் மக்களின் நிலையையும் எண்ணிப் பார்த்திடல் வேண்டும். எந்த இடத்திலும் தங்க மாட்டோம். ஊர் சுற்றுவதுதான் எங்கள் வேலை என்று சுற்றித்திரிந்த நரிக்குறவர் களையும் கான்கிரீட் வீடுகளில் தங்க வைத்தது கலைஞர் காலத்து அரசாங்கம். தமிழக அளவில் என்றாலும் இந்திய அளவில் என்றாலும் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு என்று அனைத்து சலுகை களையும் உரிமைகளையும் மக்களுக்குக் கிடைக்கவும், அதனைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் உரிமை களுக்காகப் போராடவும் உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ளவும் போராடக் கற்றுக் கொடுத் தவர் தந்தை பெரியார் அவர்கள். அவர் தமிழகத்தில் இருந்ததாலும் அவரது தாக்கத்தாலும் இன்றைக்கு திராவிடப் பகுதிகள் முன்னேறியிருக்கின்றன. ஆனால் வட மாநிலத்தில் உள்ள மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த இரும்படிக்கும் மன்னர் பரம்பரையே சாட்சி.


.
 4

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...