Showing posts with label ராஜீவ் கொலை. Show all posts
Showing posts with label ராஜீவ் கொலை. Show all posts

Thursday, March 3, 2016

மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு விடுதலை செய்யட்டும்!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரும்
‘இரட்டைஆயுள்தண்டனையை’அனுபவித்த பிறகும்விடுதலைசெய்யப்படாததுஏன்?
மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு விடுதலை செய்யட்டும்!
வீண் பழியைச் சுமக்க வேண்டாம் மத்திய அரசு

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை


மூன்றாவது மொழி என்றபெயரால் பிஜேபி அரசில் சமஸ்கிருதம் நுழைகிறது

ராஜீவ் கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனையை 7 பேரும் அனுபவித்த பிறகும் - சிறையில் நன் னடத்தைச் சான்றினைப் பெற்ற பிறகும், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று  அவர்களை விடுதலை செய்வதன் மூலம் வீண் பழியை மத்திய அரசு சுமப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 18.2.2014 அன்று தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
இதனையடுத்து இதில் ஏற்கெனவே ஆயுள் தண்டனை பெற்ற ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய 4 பேர்களையும் சேர்த்து மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்வது என்று தமிழ்நாடு அ.தி.மு.க. அரசு முடிவு எடுத்தது!
தமிழக அரசின் கடிதமும்
மத்திய அரசின் செயல்பாடும்
19.2.2014 அன்று உடனடியாக தமிழ் நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் அதன் கருத்தை 3 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டிருந்தார்.
இதனால் அன்றைய மத்திய அரசு (காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு அரசு (U.P.A.)  தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இத்தனை விசாரித்த உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு 7 கேள்விகளை முன் வைத்தது. பிறகு 2.12.2015இல் இந்த கேள்விகளுக்கு விடையளிக்க 5 நீதிபதி களைக் கொண்ட அரசியல் சட்ட சாசன அமர்வு மீண்டும் விசாரிக்க தமிழக அரசின் முடிவு பற்றியறிய ஆணையிட்டது.
3 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதி மன்றத்தின் புதிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதுவரை விசாரணைக்கே, எடுத்துக் கொள்ளப்படவில்லை.
பாதிக்கப்பட்ட எழுவரின் மனு
இந்நிலையில் தாங்கள் 20 ஆண்டு களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி பேரறிவாளன், சாந்தன், முருகன் முதலிய 7 பேரும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் தங்களை விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு தனி மனுவும் தாக்கல் செய்துள்ளனர்.
இதனையொட்டி தமிழக அரசு நேற்று (2.3.2016) அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத் தால் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிறிசி  435ஆவது  பிரிவின்படி), இந்த முடிவு குறித்து மத்திய அரசின் கருத்தைத் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளதோடு, முன்பு 2.12.2015 அன்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் அமைப்பின் சட்டப் பிரிவு பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி, சீராய்வு மனு தாக்கல் செய்த அதன் உரிமை பாதிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது!
1. இந்த 7 பேரும், இரட்டை ஆயுள் தண்டனை போன்று 24 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளனர். நன்னடத்தையுடன் அங்கே எந்தப் பிரச்சினையும் இன்றி நடந்து சிறை அதிகாரிகள் நல்லெண்ணத்தையும் பெற்றுள்ளனர்.
நீதிபதியும், காவல்துறை
அதிகாரியும் சொன்னதென்ன?
2. இவர்களை உச்சநீதிமன்றத்தில் தண்டித்த மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் என்ற நீதிபதியும், விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரியும், தான் பதிவு செய்த வாக்குமூலம் மனசாட்சியைக் கொன்று விட்டது என்று ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்கள்!
எனவே 24 ஆண்டுகளுக்குப் பின் இவ்வேழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவை மத்திய அரசு ஏற்பது, மனிதாபிமானம் காட்டுவது என்பதுடன் தவறாகச் சென்றவர்களை (Miscalculation of Justice)  சரியான வழியில் கொணர்ந்து நிறுத்துவதும் ஒரு அரிய முன் மாதிரியாகவும் அமையும்!
உள் நோக்கம் கற்பிக்க வேண்டாம்
மனிதநேயம் பொங்கி, கருணை தழைத்தோங்க வேண்டிய இந்த வாய்ப்பில், தமிழக அரசின் முடிவு குறித்தும் உள்நோக்கம், அரசியல் லாப நோக்கம் என்பதைப் பற்றியும் வீணாகஆய்வு செய்வது பெரிதும் விரும்பத்தக்கதல்ல - தேவையும் அல்ல.
முன்பு தமிழக அரசு, மத்திய அரசுக்கு மூன்று நாள் கெடு விதித்தது தவறு என்றாலும், இப்போது பார்க்க வேண்டிய பார்வை மனிதநேயப் பார்வை மட்டுமே!
மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்?
இப்போது ‘பந்து’ மத்திய அரசிடம் உள்ளது; மத்திய அரசு இதில் வன்மம், அல்லது வேறு அரசியல் கண்ணோட்டம்
பற்றி எண்ணாமல், அந்த ஏழு பேரையும் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை ஆதரிப்பது அவசியம் - அவசரமும்கூட!
இதன் விளைவும், பெருமையும் இரண்டு அரசுகளுக்கும் வரும்; இன்றேல் வீண் பழியைத்தான் சுமக்க நேரிடும் - மத்திய அரசு. உலகத் தமிழர்கள் பெரு விருப்பமும் அதுவே!
‘செயத்தக்க செய்யாமையாலும் கெடும்!’  என்ற
குறள் வாக்கு சுட்டிக் காட்டத் தகுந்தது!

கி.வீரமணி 
தலைவர்,     திராவிடர் கழகம்


சென்னை
3.3.2016


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...