Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

Sunday, January 6, 2013

சிங்கால்களின் திசை திருப்பங்கள்!


சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது என்ற பழமொழி உண்டு. அதனை அப்படியே பின்பற்றுபவர்கள்தான் சங்பரிவார கும்பலான ஹிந்துத்துவாவாதிகளான பார்ப்பனர்களும் அவர்தம் தாசானுதாசர்களும்!
பாலியல் வன்கொடுமைகளுக்கு நாட்டில் கடுமையான தண்டனை தர சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பெண்களை வெறும் உடைமையாக்கியும், அடிமையாக்கியும், கொச்சைப்படுத்திய நிலை ஆரிய சனாதன மத நூல்களான இராமா யணம், பாரதம், பகவத் கீதை மனுசாஸ்திரம் மற்றும் புராணங்களில் வண்டி வண்டியாக உள்ளன!
இந்துக் கடவுள்களின் லீலா வினோதங் கள் ஏராளம் உண்டு; அத்தனையும் இ.பி.கோ. என்ற இந்திய கிரிமினல் சட்டத்தின்கீழ் வராத குற்றங்களே அரிதேயாகும்.
இந்த லட்சணத்தில், விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் (பார்ப் பனர்) நேற்று துறவிகள் (?) மாநாட்டில் பேசியுள்ளார். (இதில் சங்கராச்சாரியாரும் பாலியல் வன்கொடுமைபற்றி அலசிப் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்!)
மேற்கத்திய கலாச்சாரத் தினால் தான் இப்படிப் பல பாலியல் வன்கொடுமைகள் நடை பெறுகின்றன என்று கூறியுள்ள அசோக் சிங்கால்களுக்கும் அவரது தொண்டரடிப் பொடி களுக்கும் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்.
1. ஆண்டவன் அவதாரமான பகவான் கிருஷ்ணன் இளவய திலேயே, ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலைகளைத் திருடி, மரத்தின்மேல் வைத்துக் கொண்டு, நீருக்குள் இருந்த பெண்களை ஆடையில்லாத நிலையில் நீருக்கு மேலே வரச் சொன்னது, பாலியல் வன்கொடுமைக்கு முன்னோடி அல்லவா?
2. தாருகாவனத்து ரிஷி பத்தினிகளை (3000 பேர்கள் - அப்பாடி!) கற்பழித்த சிவ லீலை ஹிந்து தர்மத்தின் சிறப்புகளா?
3. அகலிகையைக் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிட - தேவர்களின் தலைவன் இந்தி ரன் முனிவர் வடிவம் ஏற்று, தவறாக அகலி கையும் நடந்து கொண்ட கதை - மேற்கத்திய கலாச்சாரமா? ஹிந்து கலாச்சாரமா?
4. முன்பு இந்திய பிரிட்டனில் இந்திய ஹை கமிஷனராக இருந்த பண்டிட் விஜயலட்சுமி அவர் களுக்கு, பிரிட்டிஷ்காரர் ஒருவர் விருந்து வைத்தார். அப்போது அவரிடம் இந்த அம்மையார் உங்கள் படையெடுப்பில்தான் எங்கள் கலாச்சாரம் கெட்டது என்றாராம். அவர் அதற்கு மிகுந்த மரியாதையுடன், இருக் கலாம் மேடம், ஆனால் நாங்கள் அங்கே வந்திருக்காவிட்டால் நீங்களே உயிருடன் இருந்து இங்கே வந்து என்னுடன் தேநீர் அருந்த முடியாமற் போயிருக் கும் என்று பட்டென்று பதிலளித்தாராம்!
அதாவது விதவையான இவரை சதி என்ற உடன்கட் டையில் ஏற்றி எரித்திருப்பார் களே, அதைச் சட்டம் போட்டு, சதி அல்லது உடன்கட்டை ஏற்றுதலை ஒழித்துக் கட்டியது வெள்ளைக்கார ஆட்சிதானே! என்ற பொருளில் கூறியது கேட்டு, வெட்கி வெலவெலத்துப் போய் விட்டார் இந்த விதவையரான அம்மணி!
இன்னமும் ராஜஸ்தானில் ரூப் கன்வார்கள் எரிக்கப்பட்ட - சதி மாதா கோயில் உள்ளது! குழந்தை மணங்கள் குஜராத் உட்பட பல பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற வண்ணமே உள்ளன!
இவை எல்லாம் மேற்கத்திய கலாச்சாரமா? மேற்கத்திய கலாச்சாரம்தான் காப்பாற்றியும் உள்ளது. மனுதர்மத்திலேயே மாதர், ஆடவர் நிலை பற்றி வெவ்வேறு விதமாகத் தண்டனை கூறியுள்ளதே! உபநிஷத்துக்களில் குருபத்தினி - சீடர்கள் ஒழுக்கக் கேட்டிற்குத் தண்டனை பற்றி வேறுவிதமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள் ளதே! அது எதைக் காட்டுகிறது?
இந்தப் பாலியல் வன்கொடுமை மிகவும் பழைமையான புராதன நடப்பு ஹிந்து கலாச் சாரத்தில் என்பதைத்தானே காட்டுகிறது?
இதனை ஏன் மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவு என்று திசை திருப்புகின்றனர் - இந்த மதவாதிகள்? இன்னும் எத்தனையோ கூற முடியுமே!

ஊசி மிளகாய்

Monday, November 19, 2012

பி.ஜே.பி.யும் - காங்கிரசும்!


அடுத்து ஆட்சியை நாங்கள்தான் பிடிக்கப் போகிறோம் என்று தலைகால் புரியாமல் துள்ளிக் குதிக்கும் பி.ஜே.பி.,க்குள் என்ன நடக்கிறது?
பிரதமருக்கான வேட்பாளர்களின் பட்டியல் அங்கு அனுமார் வால்போல நீண்டுகொண்டே போகிறது (இராம பக்தர்கள் அல்லவா! அதனால்தான் இந்த உதாரணம்!).
குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்குக் கழுத்து முட்டும் ஆசை புடைத்துக் கொண்டு இருக்கிறது.
அவர் என்னதான் வேடம் கட்டி ஆடினாலும் குஜராத்தில் சிறுபான்மை மக்களான முசுலிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று நரவேட்டை ஆடிய ரத்த வாடை அடையாளத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே முடியாது!
ஒரு மாநிலத்தின் அதிகாரத்தை வைத்துக் கொண்டே இவ்வளவு ஆட்டம் போட்டவர் பிரதம ரானால் நாடு தாங்காது - உலக நாடுகள் மத்தியில் மாபெரும் தலைக்குனிவுதான்!
அன்றையப் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பேயி குஜராத் படுகொலைகளை மனதிற் கொண்டு, எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்லுவேன்? என்று புலம்பினாரே - அந்தப் புலம் பலுக்கான கருப்பொருள் நரேந்திர மோடியல்லவா!
பி.ஜே.பி.யில் இப்படிப்பட்டவர்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்றால், அந்தக் கட்சியின் யோக்கிய தையும், அடையாளமும் எவ்வளவு மட்ட ரகமானவை என்பதை எளிதிற் புரிந்துகொள்ளலாமே!
உண்மையைச் சொன்ன காவல்துறை அதிகாரிகளையே சிறையில் தள்ளும் இன்னொரு இடிஅமீன் இந்த மோடி! தன் அமைச்சரவையில் இருந்த பெண் அமைச்சர் மாயாபென் கொட் நானிக்கு கொலைக் குற்றவாளியாக 28 ஆண்டுகள் தண்டனை பெற்று இருக்கிறார். இதைவிடக் கொடிய தண்டனைக்கு உரியவர்தான் இந்த நரேந்திர மோடி!
உச்சநீதிமன்றம் நியமித்த  அமிக்கஸ் க்யூரி - இராமச்சந்திரன் (பாரபட்சமற்ற நடுவர்) தம் அறிக்கையில் மோடி மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) உள்ள கட்சிகளே மோடி பிரதமர் ஆவதற்குத் தம் எதிர்ப் பினை மிக வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளன. பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத் துக்கு நரேந்திர மோடி வரக்கூடாது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தடை போட்டதும் யாருக்குத்தான் தெரியாது?
இப்பொழுது இன்னொரு குரல் பி.ஜே.பி.,க்குள்; பி.ஜே.பி. தலைவர் நிதின்கட்காரி மீது ஊழல் புகார் கிளப்பப்பட்டுள்ளதன் பின்னணியில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி இருக்கிறார் என்று ஆர்.எஸ்.எஸின்  மூத்த தலைவர் வைத்யா கூறியதன் மூலம் கட்சிக்குள் ஓர் அணுகுண்டைத் தூக்கிப் போட்டு, அலைகளை எழுப்பியுள்ளார். அதற்கு எதிர்வாதங்களும் எழும்பிக் குதிக்கின்றன.
நிதின்கட்காரி மீது ஊழல் புகார் கிளம்பிய நிலையில், அவரைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ். துடியாய்த் துடிக்கிறது. ஆர்.எஸ்.எஸின் மூத்த ஆலோசகராகக் கருதப்படும் திருவாளர் ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி அய்யரின் பூணூல் எல்லாம்கூட வியர்த்துக் கொட்டுகிறது; எல்லா ஆவணங்களையும் அலசிப் பார்த்துவிட்டாராம் - நிதின்கட்காரி ஊழல் ஏதும் செய்யவில்லை என்று தீர்ப்பே எழுதி விட்டார்!
ஒன்று மட்டும் உறுதி; ஆர்.எஸ்.எஸின் உற்பத்திப் பொருள் இந்த கட்காரி என்பதால், அவரைக் காப் பாற்றும் நிலையில் அது இருக்கிறது என்பதுதான் பெருத்த உண்மை.
பி.ஜே.பி.க்கு என்று ஊழியர்கள் கிடையாது; எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் தொண்டர் குழாம்! தேர்தல் பணி என்று வந்தாலும், அவர்கள்தான் ஈடுபடவேண்டும்.
அந்த ஆர்.எஸ்.எஸ். நிதின் கட்காரியின் கையை வலுப்படுத்துவதன்மூலம் மோடியின் நிலை வெளிறிப் போன பரிதாபம்!
பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களைப்பற்றியோ கேட்கவே வேண்டாம்!
இவ்வளவுக் கேடு கெட்டு பி.ஜே.பி. அல்லாடும் நிலையில்,
காங்கிரஸ் தன் நடவடிக்கைகளால் பி.ஜே.பி.,க்கு உதவி செய்தால்தான் உண்டு; அதனை நம்பிதான் பி.ஜே.பி. இருக்கிறது என்றுகூடக் கருதலாம்.
மக்களின் அடிப்படைப் பிரச்சினை - குறிப்பாக விலைவாசிப் பிரச்சினையில் காங்கிரஸ் கவனம் செலுத்தத் தவறினால் அது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Sunday, October 28, 2012

கழிப்பறையா? கோவிலா?


சென்னை அண்ணா சாலை,பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை, கடற்கரைக் காமராஜர் சாலை, தியாகராயர் நகர் தியாகராயர் சாலை, உஸ்மான் சாலைகள், சவுந்திரபாண்டியனார் அங்காடிச் சாலை, உயர்நீதிமன்ற பிராட்வே சாலை .... இப்படி சென்னையின் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகளில் நீங்கள் ஒரு கழிப்பறையையாவது பார்த்திருக்கிறீர்களா? ஆனால்,
சாலையோரங்களில் நடைபாதையை மறைத்துக்கொண்டிருக்கும் கோவில்களை நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

நெருக்கடி மிகுந்த சென்னையின் கிட்டத்தட்ட எல்லாத் தெருக்களிலும் ஒரு இந்துக் கோவிலாவது இருக்கும். அதுவும் போக்குவரத்தை தடை செய்வதாக இருக்கும், அல்லது நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் இந்தக் கோவிலுக்குப் போட்டியாக மாதா சிலைகள் அமைத்து சிறு வழிபாட்டுத்தலங் களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இது தமிழகத் தலைநகர் சென்னையின் நிலை. மாநிலம் முழுதும் உள்ள நிலைகளை வாசகர்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். உங்கள் ஊர்களி லேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
முதலில் இந்தக் கோவில்கள் எல்லாமே சட்டவிரோத மானவை. எந்தவித நில உரிமையும் இல்லாதவை. ஆங்காங்கே சிலரால் சுய நலத்துக்காக அரசின் நிலத்தில், பொதுச் சொத்தினை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருப்பவை.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மதுரையில் பொது இடத்தில் ஆக்கிர மித்துக் கட்டிய கோவில்களை அகற்ற உத்தரவிட்டது. அப்போது சில கோவில் கள் அகற்றப்பட்டன. அதன்விளைவாக சாலைகள் விரிவாயின. போக்குவரத்து சீரானது.
அதனைத் தொடர்ந்து சில ஆண்டு களில் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் பொது இடங்களில் ஆக்கிரமித்து அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கோவில்களை அகற்றவும் ஆணையிட் டது. மாநில அரசுகளுக்கு தாக்கீது அனுப்பியது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அகற்றவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. ஆனால், அது இன்னமும் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வில்லை.
மதச்சார்பற்ற இந்திய அரசின் சட்டமும் அதனை செயல்படுத்தும் நீதிமன்றங்களும் இந்த விஷயத்தில் நடுநிலையோடு தீர்ப்புக் கூறுகின்றன என்பது ஆறுதலான செய்திதான். ஆனால், மதத்தை வைத்தே பிழைத்துவரும் சங்பரிவார்கள்தான் சட்டத்தையும் மதிப்பதில்லை, நீதிமன்றத்துக்கும் மதிப்பளிப்பதில்லை. பொது ஒழுக்கத் தையும் பேணுவதில்லை.
பாபர் மசூதியை இடித்த சங்பரிவார்கள் இந்துக்கோவிலென்றால் கொதித்துப் போகிறார்கள்.
அண்மையில் இப்படித்தான் குய்யோ...முறையோ என்று குமுறினார்கள்.மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ். இவர் ஒன்றும் நாத்திகரோ அல்லது இந்து மதத்தினைச் சாராதவரோ அல்ல. இவர் இந்துதான் என்பதை அவரது பெயரே சொல்லும். நெற்றியில் குங்குமம் இட்டபடியே இவர் தெரிவித்த ஒரு கருத்துக்குத்தான் சங்பரிவார்கள் சாடித்தீர்த்தன. அக்டோபர் 6 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பொது சுகாதாரத்தை வலியுறுத்திப் பேசியபோது "நமது நாட்டில் கழிப்பறைகளை விட கோவில்களே அதிகமுள்ளன.
கோவில்களை விட கழிப்பறைகள் மிக முக்கியம். நாட்டில் எத்தனை கோயில்கள் உள்ளன என்பது முக்கியமல்ல. கழிப்பறைகளுக்கும், சுகாதாரத்துக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசிவிட்டார்.
இந்த உரையை தொலைக் காட்சிகள் ஒளிபரப்பின.அதைப் பார்த்தபோது அவர் திட்டமிட்டுப் பேசவில்லை என்பதை உணரமுடிகிறது. பொதுச் சுகாதாரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர் இயல்பாக நாட்டு நடப்பை எடுத்துக் காட்டும் விதமாக கழிப்பறைகளைவிடக் கோவில்கள் அதிகமுள்ளன என்ற உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். அவ்வளவுதான் சங்பரிவாரின் அரசியல் முகமாக பா.ஜ.க.வின்செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி,`` மத நம்பிக்கையின் அடிப்படையில் கோயில்களைக் கட்டுவது என்பதும், கழிவறைகளை அமைப்பது என்பதும் வெவ்வேறு விஷயங்கள்.
இந்தியா பல்வேறு மதங்களை உள்ளடக்கிய நாடு. கோயில், மசூதி, குருத்வாரா, தேவாலயம் ஆகிய மக்களால் புனிதமான இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒன்றுக்கொன்று தொடர் பில்லாத விஷயங்களை தொடர்புபடுத்தி அமைச்சர் பேசியிருப்பது பெரும் தவறுஎன்று கூறியுள்ளார்.
வழக்கம்போல காங்கிரஸ் வழவழா மறுப்பைக் கூறியுள்ளது. அதன் தொடர்பாளர் மணீஷ் திவாரி, ``எங்கள் கட்சி அனைத்து மதங்களின் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளது. எந்த சூழ்நிலையில், எதை வலியுறுத்துவதற்காக ஜெய்ராம் ரமேஷ் அப்படி பேசினார் என்பது சரியாகத் தெரியவில்லை. நாங்கள் அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கின்றோம், என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்ராம் ரமேஷ் வீட்டுக்கு முன்பாக விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து, தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்தினார்களாம்.
எதற்காக ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கேட்கவேண்டும்? அவர் சொன்னதை துணிவோடு மறுக்க சங்பரிவார்களால் முடியுமா?அது உண்மையில்லை என்றுதான் அவர்களால் கூறமுடியுமா? நாட்டில் சரி பகுதிக்கு மேல் ஒரு வேளை உணவே உண்ணும் மக்களைப் பற்றிக் கவலைப் படாமல், கடவுளையும் மதத்தையும் பற்றி மட்டுமே கவலைகொள்ளும் காவிகளுக்கு மக்களின் பொதுச்சுகாதாரம் பற்றிப் பேசத்தான் அருகதை உண்டா?
இதற்கு முன் நாட்டை ஆண்ட பா.ஜ.கவுக்குத் தெரியாதா இந்தியாவின் பொதுச் சுகாதார நிலை? புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன?  நாட்டில் 18 விழுக்காட்டினருக்கு தண்ணீருடன் கூடிய அய்ரோப்பிய மாதிரிக் கழிப்பறைகளும்,11.5 விழுக்காட்டினருக்கு சாதாரண குழிக் கழிப்பறைகளும், 6.9 விழுக்காட்டினருக்கு பிறவகைக் கழிப்பறைகளும் மட்டுமே உள்ளன.எஞ்சிய 63.6 விழுக்காட்டினருக்கு கழிப்பறைகள் கிடையாது. இதில் கிராமப்புரங்களில் வாழும் மக்களே அதிக அளவில் கழிப்பறைகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்த தகவல்.
அதாவது இந்தக் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 70 கோடி மக்கள் திறந்தவெளிகளில், வயல்வெளிகளில், சாலை ஓரங்களில் மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள மக்கள் நகராட்சிப் பூங்காக்களில் மலம் கழிக்கின்றனர். தொற்றுநோய் பரவுவதற்கு இவையே முக்கியக் காரணியாக உள்ளதாக சுகாதாரம் குறித்த ஆய்வு கூறுகிறது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 49.8 விழுக்காட்டினர் திறந்தவெளிகளிலும், 3.2 விழுக்காட்டினர் மட்டுமே பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துபவர் களாகவும் இருக்கின்றனர்.
இதுபோக பள்ளி செல்லும் 3 கோடி குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் கிடையாது. இந்நிலையில் பள்ளிகளில் கட்டாயம் கழிப்பறைகளும் குடிநீர்வசதிகளும் செய்துதரப்பட வேண்டும் என்றும் அது மாணவர்களின் உரிமை என்று 2011 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது.
-இந்தக் கணக்கோடு நாட்டில் உள்ள கோவில்களின் கணக்கையும் ஒப்பிட்டுப்பாருங்கள். தெருவுக்குத் தெரு கோவில்கள் உண்டு. ஆனால், எல்லாத்தெருக்களிலும் கழிப்பறைகள் உண்டா? கோவில்களைக் கட்ட ஒரு கூட்டம் எப்போதும் வசூல் நோட்டைத்தூக்கிக் கொண்டு காசு பார்ப்பது உண்டு.
ஆனால், சாலையோரங்களில், சந்துபொந்து களில், வெட்டவெளிப்பொட்டல்களில் மலம்-_ சிறுநீர் கழிப்பதை நிறுத்தி, பொதுக்கழிப்பிடம் கட்ட வசூல்நோட்டைத்தூக்கியதுண்டா? கோவிலுக்காக சண்டைபோடும் பக்த சிரோன்மணிகள் கழிப்பறைகளுக்காக வாய் திறந்த துண்டா? அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் கட்டிக்கொடுத் துள்ள கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரிப் பதுதான் உண்டா? சாலைப் போக்குவரத்தை ஆக்கிரமித் துள்ள கோவில்களை இடிக்க அரசு முனையும் போது அதனை எதிர்த்து மறியல் செய்யும் மதவெறி மாக்கள், எங்கள் தெருவுக்கு கழிப்பறை வேண்டும் என மறியல் நடத்தியதுதான் உண்டா? நாட்டின் நிலை இவ்வாறிருக்க அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியது சரிதானே!
அன்றாடம் இரண்டு வேளை ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தேவைப்படும் கழிப்பறை அவசியமா? மனித அறிவை மழுங்கடித்து  பணத்தையும் பறிக்கும் கோவில்கள் அவசியமா?
* நாத்திகக் கலைஞானி கமல்ஹாசனின் `நம்மவர் என்ற படத்தில் ஒரு காட்சி.கமல் அவர்களே அக்காட்சியில் பேசுவார்.``எனக்கு அவசரமா பக்தி வந்திருச்சு;பக்கத்தில கோவில் எங்க இருக்கு ன்னு யாராவது கேக்குறாங்களா?அவசரமா யூரின் வருது;கக்கூஸ் எங்க இருக்குன்னுதானே கேக்குறாங்க...
அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசுனது ஒரு வகையில இதுமாதிரிதானே!
* இந்துத்துவ சோதனைக் களமான குஜராத்தில் நவீன ஹிட்லர் நரேந்திரமோடி சாலைகளை அகலப் படுத்த முனைந்தார். அப்போது சாலைகளில் உள்ள கோவில்களை அகற்றவேண்டிவரும் என்று அதிகாரி கள் கூறினார்கள்.சத்தமில்லாமல் அதற்கு ஒப்புதல் கொடுத்தார் மோடி. அங்கு இந்துத்துவ வியாபாரத் தலங்களான கோவில்கள் பலநூறு இடிக்கப்பட்டன. அங்குமட்டுமல்ல,இந்தியாவின் வேறு எங்கும் இந்துத்துவாக்கள் இதுபற்றி மூச்சுவிடவில்லை. மோடி இடித்தால் குட்டிச்சுவர்; மற்றவர் இடித்தால் கோவிலோ?


* 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு வினோத யதார்த்தம் இது. இந்தியாவில் 49.8 விழுக்காட்டினருக்கு கழிப்பறைகள் இல்லை. ஆனால், 63.2 விழுக்காட்டினர் தொலைப் பேசியும், 53.2 விழுக்காட்டினர் செல்பேசியும் வைத்துள்ளனர்.
- மணிமகன்-

Monday, December 27, 2010

பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் 9 கேள்விகள்


பெங்களூரு, டிச.27- மத்தியில் பா.ஜ.க. ஆட்சியிலிருந்த போது அதன் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எச்.என்.அனந்தகுமாருக்கு நீரா ராடியாவுடனான தொடர்புகள் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கேள்விக் கணை தொடுக்கப்பட்டுள்ளது.

2-ஜி அலைக்கற்றை ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அரசியல் தரகர் நீரா ராடியாவுக்கும், பா.ஜ.க. ஆட்சியில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எச்.என். அனந்தகுமாருக்குமிடையிலான தொடர்பு கள் குறித்த செய்திகள் வெளியாயின. கருநாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.கே.சந்திரசேகர் இவர்களது தொடர்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பெங்களூருவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகை யில் அனந்த் குமார் மீது குற்றம் சாற்றப்பட்டால் பா.ஜ.க.யின் தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி ஏன் பதில் அளிக்கிறார்? இது வினோதமாக உள்ளது என்றார். மேலும் அவர், அனந்த் குமார் பதிலளிக்கவேண்டிய கேள்விகள் என ஒரு பட்டியலை அளித்தால், அதில் உங்களுக்கு நீரா ராடியாவைத் தெரியுமா? எப்போது அவரை முதலில் சந்தித்தீர்கள்? உங்களுக்கும் நீரா ராடியாவுக்குமான தொடர்பு எத்தகையது?

ராடியா ஒரு விமான நிறுவனத்தைத் துவக்கப் போகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்ததா? அரசு  சம்பந்தமான தகவல்களை ரகசியமாக ராடியாவுக்கு வழங்கினீர்களா? ராடியாவை ரத்தன் டாடாவுக்கு அறிமுகம் செய்து வைத்தீர்களா? ராடியாவை எல்.கே.அத்வானி, வாஜ்பேயி, நிதின் கட்காரி, வாஜ்பேயியின் வளர்ப்பு மகன் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆகியோருக்கு அறிமுகம் செய்து வைத்தீர்களா?

நீங்கள் நகர் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது ராடியாவுடன் தொடர்புடைய ஒரு அறக்கட்டளைக்கு நிலம் ஒதுக்கினீர்களா? நீங்கள் தனியாகவோ அல்லது ராடியாவுடனோ ராவ் தீரஜ் சிங்கைச் சந்தித்தது உண்டா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து, அனந்தகுமார் தாம் தூய்மையானவர் என்று நிரூபிக்க வேண்டும் என்று பி.கே.சந்திரசேகர் கூறியுள்ளார். அனந்தகுமார் பெங்களூரு வின் தென்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...