Showing posts with label பகவத் கீதை. Show all posts
Showing posts with label பகவத் கீதை. Show all posts

Wednesday, May 24, 2017

பெண்களைப் "பாவ யோனி"யில் பிறந்தவர்கள் என்று கூறும் பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்குவதா?

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து நாடாளுமன்றத்தில் எதிர்த்து முறியடிப்பீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

பெண்களை 'பாவ யோனியில்' பிறந்தவர்கள் என்றும், நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்றும், பகவான் கிருஷ்ணன் சொன்னான் என்றும் கூறும் கீதையைப் பள்ளிகளில் பாடநூலாகக் கட்டாயமாக வைக்க வேண்டும் என்ற பி.ஜே.பி.யின் முயற்சியை எதிர்த்தும், இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்துக் குப்பைக் கூடையில் போட வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்தியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்பெறும் மோடி தலைமையிலான பா.ஜ.க. சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, என்.டி.ஏ. என்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்ற பெயருடனே கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
வளர்ச்சி, வேலைவாய்ப்புகளைப் பெருக்குதல், விவசாயிகளின் வாழ்வைப் பன்மடங்கு வளப்படுத்துவோம் என்றெல்லாம் தேர்தலில் கூறிவிட்டு, ஆட்சிக்குப் பெரும் பலத்தோடு வந்துவிட்ட பிறகு ‘மதச் சார்பற்ற’ என்ற அரசமைப்புச்சட்டம் விதித்துள்ள ஆட்சிமுறையையே தூக்கி எறியும் வண்ணம் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு
கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்து ஒற்றை ஆட்சிமுறை (Unitary System) யைக் கொண்டு வரும் வகையில், மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் பணியையும் அடக்கமாகவும், அதேநேரத்தில் உறுதியாகவும் திட்டமிட்டே நடத்துகின்றது.
பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள ஜனநாயகக் குடியரசினை மாற்றி `ஹிந்து ராஷ்டிரமாக்கிட’ அவ்வப்போது தொடர்முயற்சிகளை பல்வேறு ரூபத்தில் நடத்திட முயலுகின்றது.
ஜாதி, வர்ணாஸ்ரமம், அந்நிலைக்கு கர்ம வினைப்பயனே காரணம்; ஆத்மா அழியாதது ஆகையால் நாட்டில் கொலைகள் உடலை மட்டும்தான் அழிக்கின்றன என்ற  ஜாதி தர்மம் நிலைக்கப்பாடுபட வேண்டும்.
பகவத் கீதை பள்ளிகளில் கட்டாயமாம்!
மக்கள் தொகையில் சரிபகுதியாக உள்ள பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்பது போன்ற அறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை உள்ளடக்கிய `பகவத் கீதை’ என்ற நூலை கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் கட்டாயமாக்கிட வேண்டும் என்று பா.ஜ.க.வின் எம்.பி. ரமேஷ் பிடாரி என்ற ஒருவர் தனி நபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மசோதா நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும், இதை அமலாக்காத பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மசோதா கூறுகிறது.
அரசின் மதச்சார்பின்மை பலி!
அரசின் மதச்சார்பின்மை எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுத் தப்படுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா?
சதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று கடவுள் அவதாரமான கண்ணன் கூறுகிறான் என்று எழுதி, ஜாதியைப் பாதுகாக்கிறது!
பெண்களை அசிங்கமாக அருவருக்கத்தக்க வகையில் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று  கீதை கூறுகிறது!
கொலையை நியாயப்படுத்தும் நூல் இந்நூல் - காந்தியாரைக் கொன்ற கோட்சே, `நான் கீதையைப் படித்தபிறகே இந்த முடிவுக்கு வந்தேன்’ என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளான்.
இந்த வன்முறையைத் தூண்டும் நூலை- மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் புகுத்தினால் அது நஞ்சைப் புகுத்துவது அல்லவா?
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து
எதிர்க்க வேண்டும்
இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடித்து, குப்பைக் கூடைக்கு அனுப்ப வேண்டும்.
கல்வி எப்படி காவிமயமாக்கப்படுகிறது பார்த்தீர்களா? வன்மையான கண்டனங்கள் குவியட்டும்.
பகவத் கீதையை தேசிய நூலாக்க அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு - கண்டனம் புயல்போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது.
மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி; எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை 

23-5-2017
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
        



Saturday, January 3, 2015

தீவிரவாத ஒத்திகைக்குக் கிடைத்தவர்கள் முஸ்லீம்கள் தானா?


இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக இந்துத்துவா ஆட்சி என்று அறிவிக்கவில்லையே தவிர, மற்றபடி பிஜேபியும் சரி, அதன் சங்பரிவாரங்களும் சரி ஓர் இந்து ஆட்சி இந்தியாவில் அமைந்துவிட்டதாகவே கருதி, ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர்!

இந்த உண்மை அம்மணமாகத் தெரிந்திருந்தும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் சீப்பை ஒளிய வைத்து கலியாணத்தை நிறுத்துவது என்பது போல நடந்து கொள்வது மிகக் கேவலமான வெட்கக் கேடாகும்.

ஊடகங்கள் உயர் ஜாதி பார்ப்பனர்கள் கைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும் குவிந்து கிடப்பதால் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியே!

ஊடகங்களில் பெரும்பாலும் பணியாற்றுபவர் களாகப் பார்ப்பனர்களாகவே இருக்கின்ற காரணத்தால் இந்துத்துவாவைத் தூக்கிப் பிடிக்கத்தானே செய் வார்கள். உண்மையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு அதன்மீது பொய்களான குரோட்டன்ஸ்களை வளர்க்கவே செய்வார்கள். அதுதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

பிஜேபியில் ஏதோ அனாமதேயங்கள் அல்ல; பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திரமோடியே எப்படி நடந்து கொண்டு வருகிறார் என்பதைக் கவனித்தால் ஒளிவு மறைவு என்பதை எல்லாம் கடந்து, பச்சையாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள மதச் சார்பின்மையைத் தூக்கிப் போட்டு மிதித்து விட்டு, ஒளிந்திருந்த இந்துத்துவாவை ராஜ நடை போட வைத்து விட்டார்.
ஜப்பானுக்குச் சென்ற பிரதமர் நரேந்திரமோடி இந்தியர்கள் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் என்ன பேசினார்?

I brought Gita for gifting (the Japanese Emperor) I do not know what will happen in India after this. There may be a TV debate on this. Our secular friends will create ‘typhoon’ (storm).

ஜப்பான் நாட்டுப் பேரரசருக்கு கொடுக்கக் கீதையைக் கொண்டு   போன இந்தச் செய்தி இந்தியாவை அடைந்தால் அங்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. தொலைகாட்சிகளில் விவாதங்கள் அனல் பறக்கும்; எனது மதச் சார்பற்ற நண்பர்கள் புயலையே கிளப்புவார்கள் என்று பேசினார் என்றால் பார்த்துக் கொள்ளலாமே.

தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்பார்களே அதுபோலதான் செய்யும் தவறு என்ன என்று அவருக்கு மிக நன்றாகவே தெரியும்; இருந்தாலும் அவரைப் பீடித்து ஆட்டும் இந்துத்துவா வெறி அதனையும் கீழே தள்ளி மேலே எழுந்து நிற்கிறது. மதச் சார்பின்மை என்பதை எப்படியெல்லாம் எள்ளி நகையாடுகிறார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இவ்வளவுப் பச்சையான மதவெறியரைத் தேடினாலும் எளிதில் கிடைக்கப் போவதில்லை.
குஜராத் மாநிலத்தை இந்துத்துவாவின் பரிசோ தனைக் கூடமாக உருவாக்கினார். மத அடிப்படையில் மக்களைக் கூறு போட்டு, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். அதையே இந்தியா முழுமைக்கும் பரவலாக்கும் எண்ணம் நொடிதொறும், நொடிதொறும் அவரை உசுப்பி எழுப்பிக் கொண்டு இருக்கிறது. குஜராத்தில் அவரைத் தொடர்ந்து வந்த முதல் அமைச்சர் மோடிக்குச் சளைத்தவரல்ல என்பதைக் காட்டிக் கொண்டு இருக்கிறார்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் தீவிர வாதிகளை எப்படி முறியடிப்பது என்பதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.

தீவிரவாதிகளாக நடித்தவர்கள் அத்தனைப் பேரும் முசுலிம் உடை அணிந்து, தலையில் குல்லாய் அணிந்து காணப்பட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவது போல குஜராத் காவல்துறையால் ஒத்திகை நடத்தப் பட்டது.

வன்முறையில் ஈடுபடுவதுபற்றி பிஜேபி.யோ அல்லது சங்பரிவார்க் கும்பலா பேசுவது? பாபர் மசூதி இடிக்கப்பட்டதை விடவா அராஜகத்துக்கும் பயங்கர வாதத்துக்கும் நிர்வாண வன்முறைக்கும் இன்னொரு எடுத்துக் காட்டுத் தேவை?

மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் யார்? ஒரிசா சட்டப் பேரவை வளாகத்துக்குள்ளேயே புகுந்து வன்முறை வெறியாட்டம் போட்டவர்கள் யார்? காவி பயங்கரவாதம் என்ற புதுமொழியை அன்றைய உள்துறை அமைச்சர் புதிய பட்டத்தைச் சூட்ட வில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் பொது மக்களுக்குத் திரிசூலங்களை வழங்கி கிறித்தவர் களையும், முசுலீம்களையும் மதச் சார்பின்மை பேசும் இந்துக்களையும் குத்திக் கிழிக்கத் தூண்டிட வில்லையா?

அரியானா மாநிலத்தில் ஜாஜா பகுதியில் இறந்து போன பசுவின் தோலை உரித்ததற்காக அய்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த கொடியவர்களால் கொல்லப்படவில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான கிரிராஜ் கிஷோர் என்பவர் பசுவின் உயிர் (அதுவும் செத்துப் போன) மனித உயிரைக் காட்டிலும் புனிதமானது என்று அப்போது கூறியது எவ்வளவுப் பெரிய காட்டுவிலங்காண்டித்தனம்!

ஏன்? காவல்துறை ஒத்திகை நடத்திக் கொண்டு இருக்கும் குஜராத்தில் நடக்காத வன்முறையா? அரச பயங்கரவாதமாக அல்லவா நடந்தது.

 முசுலிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து அந்தக் கருவை நெருப்பில் தூக்கி எறிந்து வெறிக் கூச்சல் போட்டுக் கூத்தாடவில்லையா? அடுக்கிக் கொண்டே போகலாம்.

 ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலின் வன்முறையைப் பட்டியல் போட்டால் நாட்டில் காகிதங்கள் போதாது.

இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் தீவிர வாதத்தை முறியடிக்கும் பயிற்சிக்கான ஒத்திகைக்காக முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாக ஒப்பனை செய்து நிறுத்தியுள்ளனர்; இந்தியாவிற்கு இப்படி ஓர் ஆட்சியா? மகா மகா வெட்கக் கேடு!

Saturday, December 20, 2014

தேசிய நூலாக கீதை: பல இனங்கள் உள்ள நாட்டின் நலனுக்கு உகந்ததா?


பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியிருப்பது பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டின் நலனுக்கு உகந்ததாயிருக்காது என்கிறார் காந்தியச் சிந்தனையாளரும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் ஜெயப் பிரகாசம்.

பகவத் கீதையை காந்தி போன்றோர் உயர்வாக மதித்தனர் என்பது உண்மை ஆனால், கீதை குறித்த அவரது பார் வைக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் வேறுபாடு உள்ளது. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் வன் முறையாலும் தீமையை வெல்வது நீதி யானதுதான் என்ற அர்த்தப்படுத் தினால், இந்த அணு யுகத்தில் அது பேரழிவை உருவாக்கும் என்றார் ஜெயப்பிரகாசம்.

காந்தியோ, கீதையை நன்மைக்கும் தீமைக்குமான மோதலில் மனித மனது, தீமையை வென்று நன்மையாக மாற்று கிறது என்று அர்த்தப்படுத்தினார், என் றார் ஜெயப்பிரகாசம். இது சத்யா கிர ஹத்திற்கான ஒரு நூல் என்று காந்தி பொருள்கொண்டார், பாரதி கூட அப்படித் தான் அதைப் பார்த்தார் என்றார் ஜெயப்பிரகாசம்.

அதே சமயம் அம்பேதகர் போன் றோர் கீதையை போரை நியாயப்படுத் தும் ஒரு புத்தகமாகவும், வர்ண அமைப்பை நியாயப்படுத்தும் ஆவண மாகவும் பார்த்தது குறித்து குறிப்பிட்ட ஜெயப்பிரகாசம், திலகர் கூட தனது " கீதா ரகசியம்" என்ற புத்தகத்தில், கீதையை, போருக்கான புத்தகமாகவே பார்த்தார் என்றார். எனவே இது போன்ற திரு மறைகளை மறு வாசிப்பு செய்வது அவ சியம், தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்றார் அவர்.

மற்ற மதங்களில் உள்ளது போல ஒரே ஒரு நூல்தான் இந்து மதத்தில் திருமறை என்று மதிக்கப்படும் இடத் தில் இல்லை என்றார் ஜெயப்பிரகாசம். தென்னிந்திய மரபில் சைவ சித்தாந்தம் மற்றும் வைணவ சித்தாந்தத்திலும், பகவத் கீதையை அறியாத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். எனவே பாஜகவின் இந்த முயற்சி என்பது , இந்து சமயத்தை மையப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இருக்கிறது என்றார் ஜெயப்பிரகாசம். அதே சமயத்தில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்ற ஒன்று அவசியம் தானா என்று கேட்டதற்கு, நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் நிலையில், இது போன்ற பிரச்சனை களைக் கையில் எடுப்பது தேவை யற்றது என்றும் அவர் கூறினார்.

Wednesday, December 10, 2014

திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும்

திருக்குறளைத்தான் தேசிய நூலாக்க வேண்டும்
வருணபேதம் பேசும் கீதை புனித நூல் அல்ல!

குன்னூரில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

குன்னூர், டிச.9 - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமே தவிர, பிறப்பில் பேதம் பேசும் கீதையை அறிவிப்பது ஆபத்தானது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.  இன்று  (9.12.2014) குன்னூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கேள்வி: பாஜக விலிருந்து வைகோ வெளியே வந்தது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இது காலம் தாழ்ந்த முடிவாக இருந்த போதிலும்கூட, வரவேற்கவேண்டிய சிறந்த முடிவு. வைகோ எங்கள் சகோதரர். திராவிட உணர்வு, திராவிடத் தால் எழுந்தோம் என்பதில் எப்போதும், அந்த கொள்கையி லிருந்து மாறாதவர். அரசியல் நிலைப்பாட்டில்பல நேரங்களிலே அவர்களுடைய நிலைநாங்கள் ஏற்கத் தக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அடிப்படை உறவை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே, அதை வரவேற் கிறோம்.

அதேநேரத்தில் திராவிட உணர்வுகளை அழிப்பதற்காக இப்போது பல சக்திகள் ஒன்று சேருகிற இந்தக் காலக் கட்டத்திலே வைகோ போன்ற கொள்கை தெளிவாளர்கள் அடுத்து எடுக்கக்கூடிய முடிவு என்பதை முன்புபோலவே அவசரப்பட்டு எடுக்காமல் இன உணர்வு, மொழி உணர்வு, திராவிட பாரம்பரிய  வரலாறு இவைகளோடு ஒத்துப் போகக்கூடிய சிறந்த முடிவை அவர் சுதந்திரமாக எடுத்து, அதன்மூலமாக காலங்காலமாக அவர் கூறி வருகின்ற பெரியார், அண்ணா கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கு என்றைக்கும் தமிழ்மக்களுக்கும் இந்தப் பயணத்தில் உறுதுணையாக அமைய வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பகவத் கீதை புனித நூலா!

கேள்வி: பகவத் கீதையை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப்போவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளது குறித்து?

பதில்: அரசியல் சட்டத்தின்மீது பிரதமர் மோடி, வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்பட பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு நேர் எதிரான செய்கை இந்த பகவத் கீதையை தேசிய நூலாக ஆக்குவோம் என்று கூறியிருப்பது. பகவத் கீதை என்பது ஜாதியை, பெண்ணடிமையை, பெண்களைக் கொச்சைப் படுத்துகின்ற பல்வேறு ஒவ்வாத கருத்துகளைக் கூறுகின்ற ஒரு நூலாகும். இதை நீண்ட காலத்துக்கு முன்னால் கீதையின் மறுபக்கம் என்கிற தலைப்பில் ஆதாரபூர்வமாக ஒரு நூலாக, ஆய்வு நூலாக, ஆராய்ச்சி நூலாக இதை நான் தெளிவு படுத்தி இருக்கிறேன். இந்த நிலையில் திருக்குறள் போன்றமதங்களுக்கு அப்பாற்பட்ட  அனைவருக்கும் அறநெறியைக் கூறக்கூடிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறக் கூடிய வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்டோம் என்று பெருமைப்படத்தக்க ஒரு திருக்குறள் போன்ற நூலை வைக்க வேண்டும் என்று இங்குள்ள தலைவர்கள் பலரும் கலைஞர் முதல் அனைத்துக்கட்சித் தலைவர்கள் பலரும் கூறுகின்ற காலத்தில், திட்டமிட்டே இந்துத்துவாவைப் பரப்ப வேண்டும் என்ற அஜெண்டாவின் இன்னொரு நிகழ்ச்சியாக இதை அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை அவர் தனிப்பட்ட நிலையில் கூறியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மத்திய அரசாங்கத்தை நடத்துகிறது என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. இப்படிச் செய்தால் இந்தியாவை மதரீதியில் அவர்கள் துண்டு போடுகிறார்கள் என்று பொருள். மதச் சார்பின்மை என்ற கொள்கையை  குழிதோண்டிப் புதைக் கிறார்கள் என்று பொருள். எனவே, வன்மையான கண்டனத்துக்குரியது. இதை நான் சேலத்திலேயே 2 நாள்களுக்கு முன்னால் பேசும்போது உடனடியாகச் சொல்லியிருக்கிறேன்.

சமஸ்கிருதம் கட்டாயமாம்

 கேள்வி : கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் சமஸ் கிருதம் கட்டாயப்படுத்தும்போது தமிழ் வெளியே துரத்தப்படுகிறதே?

பதில் : ஆர்.எஸ்.எஸ்சினுடைய கொள்கைகளிலே முதல் கொள்கை இந்தியா முழுவதும் சமஸ்கிருதமயமாக் கப்பட வேண்டும் என்பதுதான். எனவே, பிள்ளைகளுக்குக் கட்டாயமாக சமஸ்கிருதத்தைப்படிக்க வேண்டும் என்று அவர்கள் ஆக்குகிறார்கள். இதற்கு எதிர்ப்பு என்பது பல கட்சிகளிடமிருந்து உடனடியாக வந்துவிட்டது. மோடி வந்தால், அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றால் இந்தியாவைத் தலைகீழாக மாற்றிவிடுவார் என்பது போன்று தேர்தல் நேரத்திலே அப்பாவி இளைஞர்கள் இணையதளத்தைப் பார்த்து ஏமாந்து, வளர்ச்சி என்ற முகமூடியைக் காட்டி வந்தார்கள். இப்போது வளர்ச்சி யாருக்கு? எப்படிப்பட்ட வளர்ச்சி? ஆர்.எஸ்.எஸ்சுக்கு வளர்ச்சியா?அகில இந்தியாவினுடைய வளர்ச்சியா? என்பது இப்போது புரிந்து விட்டது.மோடியினுடைய முகமூடி கிழிகிறது. ஆர்.எஸ்.எஸ். இந்தியாவை ஆளுகிறது என்பதற்கு இது அடையாளம். எவ்வளவு வேகமாக அவர்கள் செய் கிறார்களோ, அவ்வளவு வேகமாக அதனுடைய விளை வுகளும் இருக்கும்.

கேள்வி: ராஜபக்சே திருப்பதி வருகை...?

பதில்: ராஜபக்சேவை அவருடைய நாட்டில் அவர் தேர்தலில் நிற்பதற்கு அங்கேயே எதிர்ப்பு இருக்கிற நிலையில், வேறொரு நிகழ்ச்சியிலே சந்திக்கிறபோது, அவருக்கு வெற்றி வாய்ப்பு வரவேண்டும் என்று நம்முடைய பிரதமர் மோடி விரும்புவது என்பது இவர்கள் இருவருடையஎண்ணங்களும், அணுகுமுறைகளும் எப்படி இருக்கின்றன என்பதை அதுவே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே, அவர் திருப்பதிக்கு வருவதோடு அவருக்கு சிவப்புக்கம்பளம் கொடுத்து ஏற்கெனவே அவரைப் பதவி ஏற்புக்கு அழைத்ததைப்போல, குடியரசு நாளுக்கும் தலைமை விருந்தினராக அழைக்காமல் இருந்திருக்கிறார். அதுவரையிலும் மகிழ்ச்சி. பரவாயில்லை அதற்கு ஒபாமா கிடைத்திருக்கிறார்.

கேள்வி: கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு அப்பீல் சென்றுள்ளார்களே?

பதில்: நீதிமன்றத்தில் வழக்கு இருப்ப தாலே எந்தக்கருத்தையும் சொல்வ தற்கில்லை.
நிழல் முதல் அமைச்சரா?

கேள்வி: நிழல் முதல் அமைச்சர் என்று ஓ.பன்னீர் செல்வத்தைக் கூறு கிறார்களே, தமிழக அரசுடைய நிலை என்ன? சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் சரியாக உள்ளதாக கூறியுள்ளாரே?

பதில்: பரவாயில்லை. அவர் முதலமைச்சர் என்று நினைத்து சொல்லி இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

கேள்வி: அரசு எந்திரமே முடக் கப்பட்டிருப்பதாக ஒரு புகார் உள்ளது. அவர் சொன்னால்தான் நடக் கும், அவர் படம் கணினி உள்பட பல இடங்களிலும் உள்ளது. இதுகுறித்து கலைஞரும் வலியுறுத்தி போராட்டம் நடக்கும் என்றும் கூறியிருந்தார். இதற்கு தாங்கள் என்ன கருத்து கூறுகிறீர்கள்?

பதில்: ஜனநாயகத்தில் ஒரு முதல்வர் போய் இன்னொரு முதல்வர் வரும்போது இயல்பாகவே இருக்கைகள் மாறும். படங்கள் மாறும். ஆட்சிகள் மாறியிருக் கிற காரணத்தால். ஆனால், இங்கே காட்சிகள் அதேபோல இருக்கின்றன. ஆட்சிகள் மாறிவிட்டன என்று சொல்லப் படுகின்றன என்று சொல்லுவது உலக ஜனநாயகத்தில் விசித்திரமாக நம் முடைய நாடு இருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

கேள்வி: இன்றைக்கு இங்கே (குன்னூர்) என்ன நிகழ்ச்சி?

பதில்: பெரியார் 1000 என்று சொல்லி பெரியாருடைய வாழ்க்கை வரலாறு இவைகளைப்பற்றி ஒரு புத்தகம். மாணவ உள்ளங்களிலே சமூக நீதி, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெரியாருடைய தொண்டு இவைகளைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக பெரியார் 1000 வினா விடை என்கிற அந்தப் புத்தகத்தை இதுவரையிலே 1 இலட்சம் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் விரும்பி தேர்வு எழுதி பரிசு பெற்றிருக்கிறார்கள். நாடுபூராவும் 1 இலட்சம் மாணவர்கள் அதிலே வெற்றி பெற்றிருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் பல மாவட்டங் களில் இருக்கிறார்கள். அதிலே இந்த நீலகிரி மாவட்டத்திலே இங்கே நம் முடைய மாவட்ட செயலாளர் முபாரக் போன்றவர்கள், நம்முடைய தோழர்கள் பலரும் உதவி செய்து, அவரவர்கள் அவரவர்களுக்கு வேண்டிய பரிசுகள் மற்றவைகள்கொடுத்து உதவ முன் வந்திருக்கிறார்கள்.எனவே, இந்த பரி சளிப்பு விழாவுக்காக மாணவர்கள், பெற்றோர்கள் வந்திருக்கிறார்கள். இந்த நீலகிரி மாவட்டத்திலே இந்த அளவுக்கு சிறப்பாக மாணவர்கள் வந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. இது மேலும் வளர வேண்டும். காரணம் பெரியார் அனை வருக்கும் உரியார்.

மது விலக்கு!

சேலம் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மிக முக்கியமான ஒரு தீர்மானமாக பூரண மதுவிலக்கு இந்தியா முழுவதும் மத்திய அரசாலும், மாநில அரசாலும்கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி இருக் கிறோம். இதைத் தீவிரமான பிரச்சாரம், சட்ட நடவடிக்கைகள் இவற்றின்மூலமாக உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், தற்போதைய இளைய சமுதாயம் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்கூட இந்த குடிப்பழக்கத்துக்கு ஆளாகி பெண்கள், குடும்பங்களிலே மிகப்பெரிய அவதியை உருவாக்கக்கூடிய அளவுக்கு, அனுபவிக்கக்கூடிய அளவுக்கு கொடு மைகள் பரவலாக ஓங்கிக் கொண்டி ருக்கின்றன. எனவே, உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இந்த மதுவை ஒழித்து, வேறுவகையில் வருமானங்களை உருவாக்குவதில் திட்டமிட வேண்டும்.

கேள்வி: சட்டசபையில் கலைஞருக்கு போதிய வசதி, இருக்கை அமைக்க படாமல் இருந்ததுகுறித்து? ஆனால், ஏற்கெனவே சபாநாயகர் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தாரே...உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் 2 நாள்களுக்கு முன் னாலே ஏற்கெனவே அறிக்கை கொடுத் திருக்கிறேன். கலைஞரை அழைத்தவர் அவருக்கு வேண்டிய இருக்கையை ஏற்பாடு செய்யவில்லையானால், அவர் அழைப்பு உண்மையானதுதானா என் பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.  இதுவே ஒரு நல்ல சந்தர்ப்பம்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Read more: http://www.viduthalai.in/headline/92584-2014-12-09-10-49-04.html#ixzz3LNZwEgcp

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...