Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Monday, March 14, 2016

சிறுவனின் கேள்வி

கனடா நாட்டை சேர்ந்த 4ஆம் வகுப்பு மாணவன் எழுப்பிய கேள்விக்கு கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சீஸ் அளித்துள்ள பதில் பரிதாபமானது.
கத்தோலிக்க மதத் தலை வரான போப் பிரான்சீசிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி ஒன்று சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
6 முதல் 13 வயதுடைய சிறுவர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில், 26 நாடு களிலிருந்து 250 மாணவர்கள் கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருந்தனர்.
இவற்றில் 50 கேள்வி களைத் தெரிவு செய்து அதற்குப் பதிலளித்து ஒரு புத்தகமாக தயாரிக்கப்பட்டது. இந்த 50 சிறுவர்களில் கனடா நாட்டை சேர்ந்த ரியான் என்ற சிறுவனும் பங்கேற்றுள்ளான்.
சிறுவன் ரியான் போப் புக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அன்பிற்குரிய போப் அவர்களே, இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்னர் கடவுள் என்ன செய்து கொண்டு இருந்தார்? எதுவும் படைக்கப்படுவதற்கு முன்னர் உலகமே வெறுமையாகத் தானே இருந்திருக்கும்? அப்போது கடவுள் தனிமையாக இருந்தது போன்று உணர்ந்தாரா?’ என்ற கேள்வியை எழுதி அனுப்பியுள்ளான்.
‘Dear Pope Francis’  என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட அந்த புத்தகம் 1.3.2016 அன்று வெளியிடப்பட்டது. அந்நூலில் ரியான் கேட்ட கேள்விக்கு - போப் அளித்த பதிலும் இடம்பெற்றுள்ளது.
ரியானின் கேள்விக்கு போப் ஆண்டவர் பதி லளித்தபோது, ‘உலகத்தை படைப்பதற்கு முன்னர் கடவுள் காலத்தை (Time) படைத்தார். ஆனால், இதையெல்லாம் படைப்பதற்கு முன்னால் கடவுள் அன்பை விரும் பினார். அன்பு தான் கடவுள்’ என பதிலளித்துள்ளார்.
போப்பின் பதில்களைப் பெற்ற இந்த 50 சிறுவர்களும் ரோம் நகருக்குச் சென்று போப்பை நேரில் சந்தித்து, வாழ்த்து மற்றும் பரிசுகளைப் பெற்று வந்துள்ளனர்.
பரிசுகளைப் பெற்றதும் வாழ்த்துக்களைப் பெற்றதும் இருக்கட்டும். சிறுவன் எழுப்பிய வினாவுக்கு போப் சொன்ன பதில் சரியானது தானா? அறிவுக்குப் பொருந் தக் கூடியதுதானா?
காலத்தைப் படைத்தா ராமே கடவுள்? காலம் என் றால் என்ன? அது தனியாகத் தொங்கிக் கொண்டு இருக் கிறதா?
மனிதனாகப் பார்த்துக் கணித்துக் கொண்டதுதானே - காலம் இதில் படைப்பு என்பது எங்கிருந்து வந்தது? அன்பை விரும்பினாராம் என்பது இன்னொரு பதில். அந்த அன்புதான் கடவுளாம்.. சரி அன்புதான் கடவுள் என்றால் கடவுள் என்ற ஒன்று தனியாக இல்லை என்பதாக ஆகி விட்டதா இல்லையா?
அந்த அன்புதான் உலகைப் படைத்ததா? மனிதனைப் படைத்ததா? காலம், அன்பு  என்பவை வடிவமற்றவையல்லவா? வடிவமற்றவை வடிவமுள்ள பொருள்களைப் படைத்ததா?
கடவுள் பிரச்சினை என்று வந்து விட்டால் போப் முதல் சங்கராச்சாரி வரை பூஜ்ஜியம்தானா?
- மயிலாடன்


.
 

Wednesday, January 21, 2015

நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

நிதி நெருக்கடியில் திண்டாடும் மத்திய அரசு கோயில் நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

தமிழர் தலைவர் ஆசிரியர்  அறிக்கை


நிதி நெருக்கடி என்று கூறி, பல முக்கியத் துறைகளுக்கான நிதியை வெட்டும் மத்திய அரசு, கோயில்களில் குவிந்து கிடக்கும் நிதியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. (மத்திய) அரசு தனது நிதிப் பற்றாக்குறைக்காக நல்ல லாபம் தரும் - பொன் முட்டை இடும் வாத்தைக் கொல்வது போன்று - பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஈடுபட்டு வருகிறது.

மக்களின் சுகாதாரத் திட்டத்திற்காக செலவு செய்வதில் 20 விழுக்காடு வெட்டு!
உயர் கல்வித் துறை வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டில் 3000 கோடி ரூபாய்க்கு மேல் வெட்டு.

வரிமூலம் பறிக்கும் அரசு

பெட்ரோல், டீசல் (ஏழை விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நிலையில்) உலகச் சந்தை விலை சரி பாதிக்கு மேல் வீழ்ச்சி அடைந்தும், அதன் பயனை நுகருவோரான மக்களைச் சென்று அடையாமல், மத்திய அரசு வரி விதிப்பின் மூலம் இடையே பறித்துக் கொள்கிறது!

உரவிலையும் கூடவே விவசாயிகளின் தலையில் விடிகிறது; சந்தைப் பொருளாதாரத்தின் கொள்ளை லாபக் குபேரர்கள் கொள்ளையடிக்க ஏதுவாக கட்டுப்பாடுகளை நீக்கி கதவுகள் -  திறந்து விடப்படும் கொடுமையும் நாளும் வளர்ந்துவருகிறது!

மக்களைத் துன்புறுத்தும் இந்த மாய வளர்ச்சியின் உண்மைத் தன்மையை வாக்களித்தவர்கள் உணரத் தலைப்பட்டு வருகிறார்கள்!

கோயில்களில் குவிந்துள்ள நிதியைப் பயன்படுத்தலாமே!

நிதி ஆதாரம் தேடும் மத்திய அரசு, பல லட்சம் கோடி ரூபாய்களை உள்ளடக்கிய கோயில்களான திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், குருவாயூரப்பன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை  பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக கடன் பத்திரங்களாக்கி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு - திருப்பிக் கொடுக்கலாமே!
மக்கள் பணத்தை முழுமையாக மக்கள் நலத்திற்குச் செலவிடுவதில் என்ன தவறு?
   
திருப்பதி ஏழுமலையான் கோயில் பட்ஜெட்டைப் பாரீர்!

எடுத்துக்காட்டாக, கடவுள்களிலேயே அதிக வருவாய் பெறும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் வருமானம் 2014-2015 பற்றிய ஒரு புள்ளி விவரம் இதோ:

அதன் பட்ஜெட் ரூ.2401 கோடி,  ரூ.900 கோடி உண்டியல் மூலம் வசூல்; வங்கியில் உள்ள டெபாசிட்டுகளுக்கான வட்டி மூலம் வருவாய் 655 கோடி ரூபாய், பக்தர்களின் மொட்டை - மயிர்மூலம் ரூபாய் 190 கோடி வருவாய், கட்டட வாடகை மூலம் ரூபாய் ஆண்டு ஒன்றுக்கு  ரூ.108 கோடி - வருவாய்.
செலவு விவரம் பாரீர்!

ஹிந்து தர்ம பிரச்சாரத்திற்கு ரூ.109 கோடி!
மருத்துவமனைகளுக்கு ரூ.55 கோடி
மற்ற பெரும் பகுதி - ஊழியர்கள் சம்பளம்.
இதன் வைப்பு நிதி மூலதனம் 7,000 கோடி ரூபாய்!


இந்து மதப் பிரச்சாரத்துக்கு
ரூ.100 கோடியாம்

மற்ற அறக்கட்டளைகளுக்கு வருமான வரித் துறையினர்  தரும காரியங்களுக்கு எவ்வளவு விழுக்காடு செலவு செய்தீர்கள் என்று கேள்வி கேட்கும்போது, வெங்கடாஜலபதி கோயிலில் கொழுத்த பார்ப்பனர் சுரண்டல் எப்படி உள்ளது பார்த்தீர்களா? இவர்கள் ஆண்டுக்கு ரூ.100 கோடியில் ஹிந்து தர்ம பிரச்சாரமாம்! அதன் விவரத்தை அளிக்கவேண்டாமா?

கிறித்துவர்களின் கல்வித் தொண்டு மருத்துவத் தொண்டுக்கு முன் இது எம்மாத்திரம்?  அரசின் மக்கள் நலப் பணிகள் மருத்துவம், கல்வி, முதலியவற்றை இவைகளை ஒருங்கிணைத்தாவது செய்தால் திருப்பதி ஏழுமலையான் கோபித்துக் கொண்டு வெளி நாட்டிற்கா போய் விடுவார்?

மூடபக்தியினால் திருப்பதிக்கு வாரி வழங்கும் பணக்காரர்களும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கட்டும்.

பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும்
எனவே - மனிதர்களை வாழ விடுங்கள்.

விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்திட அரசுகள் வழி காணட்டும்!


பெரியார் கூறிய மூன்று வகை முதலாளிகளில்

1) உயிருடன் மூலதனம் போடும் முதலாளிகள்
2) கடவுள் (கல்) முதலாளிகள்
3) பிறவி முதலாளிகளான பார்ப்பனர்

இந்த முதலாளித்துவத்தை எதிர்த்து ஒழித்தால் ஒழிய சமதர்மம் வருமா? சிந்தியுங்கள்.


கி.வீரமணி
தலைவர்,     திராவிடர் கழகம்
சென்னை
21.1.2015

Monday, January 5, 2015

பேய்கள் செய்த படுகொலைகளுக்கு அஞ்சலி செலுத்தின பிசாசுகள்



யாருக்காக நான் அழ.....?
பாமியான் புத்தர் சிலையை
பீரங்கியால் பிளந்தவர்கள்
பள்ளிக் குழந்தைகளை
துப்பாக்கியால் துளைத்தார்கள்
இரண்டுமே இஸ்லாத்தின்
புனிதப் போரென்று
பெருமையும் தான் பட்டார்கள்.
பக்கத்து நாட்டினிலோ
பாபர் மசூதி இடித்து
பகை நஞ்சை விதைத்தவர்கள்
கொழுக்கட்டைப் பிள்ளையாரை
கொலைக் கருவி ஆக்கியவர்கள்
பெஷாவர் பிள்ளைகளுக்கு
அவசர அவசரமாய்
அஞ்சலி என்று சொன்னார்கள்
இந்தியாவை இடித்து
இந்துராஷ்டிரம் அமைப்பவர்கள்

அண்டை நாட்டின்
அல்லாவின் கொலைகளுக்கு
அனுதாபம் சொரிந்தார்கள்
பேய்கள் செய்த படுகொலைகளுக்கு
அஞ்சலி செலுத்தின பிசாசுகள்
சந்தடி சாக்கில்
வந்ததொரு அறிவிப்பு
இனி பகவத் கீதையே
இந்தியாவின் புனித நூலென்னும்
புத்தம் புது கண்டுபிடிப்பு
தயங்காமல் கொல்
தமையனையும் கொல்
எனும் உபதேசம் புனிதமென்றால்
எதற்கிந்த அஞ்சலிகள்?
ஏனிந்த நீலிக் கண்ணீர்?
எங்கிருந்து வந்தது உம் அனுதாபம்?
கீதை உபதேசித்ததை
குரான் செய்து முடித்திருக்கிறது?
பாராட்ட வேண்டாமா
எதற்காக கண்ணீர்?
கிறிஸ்துமஸ் விடுமுறையில்
குதூகலிக்கும்
குழந்தைகளை
கொண்டாட்டத்தை நிறுத்து
எம்அரசின் புகழ்பாடி
கட்டுரைகள் எழுதுஎன
கட்டளை இட்டவர்கள்
கொடுங்கோன்மை செய்பவர்கள்
குழந்தைகள் கொலைக்காக
சிந்துவது கண்ணீரா?
அனுஷ்டிப்பது அஞ்சலியா?
காட்டுவது அனுதாபமா?
அரசியல்! அரசியல்!!
எல்லாம் அரசியல்!!!
குழந்தைகள் கொலைகூட
கேவலமானது அரசியலால்.
பேய்கள் அரசாண்டால்
பிணந்தின்னும் சாத்திரங்கள்
என்றதுவும் இதைத் தானோ?
குரானின் ஜிகாத்தும்,
கண்ணனின் கீதையும்
ஏசுவின் பைபிளும்,
சீக்கியம்
இன்னுமுள்ள
ஏராள மதங்களும்
அவற்றால் ஆன பெரிய
புனித நூல்களும்
கொல், கொல், கொல்லென்றும்
கொல்வது மதக் கடமையென்றும்
எதிரியை மட்டுமல்ல
அவர் வீட்டுக் குழவியையும்
விட்டுவிடாமல் கொல்லென்றும்
உபதேசித்தும்
உருவேற்றியும்
சொல்லியும் செய்தும்
காட்டிய பின்னும்
இவையெல்லாம்
புனிதமென்றும்
போற்றத்தக்க
நூல்களென்றும்
மனிதனை மேம்படுத்தும்
தேவ வாக்கென்றும்
எதைக் கொண்டு
என் பிள்ளைக்கு
நான் சொல்ல?
துள்ளித் திரியும்
பிள்ளைகளைவிட
புனிதம் என்று
ஒன்றுண்டா
இந்த பூமியிலே?

அந்த புனிதங்களை
சுட்டுப் பொசுக்கிய,
பிணங்களாக்கிய
புல்லர்களை
பிள்ளைக் கறி சமைத்த மாபாதகரை
கண்டிக்க வார்த்தையுண்டா?
தண்டிக்கத்தான் வழியுண்டா?
கொலையை தடுக்காதமதமும்
குழந்தையை காக்காத கடவுளும்
மழலைக்கு மயங்காத மனிதனும்
இருந்தென்ன? இறந்தென்ன?
இதில்யாருக்காக நான் அழ?
குழவியைக் கொன்ற
மதத்தின் மரணத்துக்கா?
காக்க மறுத்த
கடவுளின் சாவுக்கா?
மழலையைக் கொன்ற
மனிதமிருகத்தின் மறைவுக்கா?
இல்லை இந்த மூன்றின்
கூட்டுக் கொலை வெறியால்
துள்ளத் துடிக்க
கொடூரமாய் மரணித்த
மழலைகளின் மறைவுக்கா?
காணாமல் போன அவர்தம்
கள்ளமில்லாச் சிரிப்புக்கா?

(முக நூலில் இருந்து: எல்.ஆர்.ஜெகதீசன்)

Monday, September 16, 2013

அட, தமிழக அரசியலே! மலத்தில் அரிசி பொறுக்கலாமா?

வாரப் பத்திரிகை ஒன்றில் கேள்வி - பதில் பகுதியில்,
கேள்வி: பெண்களை பாவயோனி யில் பிறந்தவர்கள் என்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா என கி.வீரமணி கேட்கிறாரே? அவருக்கு வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், மற்றவர்களுக்கு?
பதில்: பகவான் கிருஷ்ணன் சொன்ன பகவத் கீதையின் எத்தனையோ வாழ்க்கை தத்துவங்களைவிட்டு, வீரமணியின் கண்ணில் பட்டது எது பார்த்தீர்களா? அவரவர் தரத்திற்கு தகுந்தாற்போல்தான் எண்ணமும், பார்வையும்! கடவுளை நிந்திப்பதாக நினைத்து தன் சுயமரி யாதையை நிந்தித்துக் கொண்டிருக்கிறார் பெரியவர். தந்தை பெரியார் எவ்வளவோ பகுத்தறிவு - சீர்திருத்த வாதங்களை சமூகத்திற்கு அளித்தார். அதையெல்லாம் மறந்துவிட்டு, பறச்சிகளும், பள்ளச்சி களும் ரவிக்கை போட ஆரம்பித்ததால்தான் துணிவிலை ஏறிவிட்டது என்று பெரியார் அன்றைய சூழ்நிலையில் சொன்னதை மட்டும் நினைவு வைத்துக் கொள்வாரா வீரமணியார்? இப்படி ஒரு பதில்.
இவற்றைப் படித்துப் பார்ப்பவர்கள் ஒன் றைச் சிந்திக்கவேண்டும்.
ஆபாசம் - அசிங்கம் - இவற்றின் பெருக் கல் தொகையாக ஒரு கடவுள் கற்பிக்கப்பட் டுள்ளார். குளிக்கும் பெண்களின் நிர்வா ணத்தை இரசிப்பவன் கடவுளா? நாரதன் என் கிற ஆண் கடவுளோடு புணர்ந்த கிருஷ்ண னைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியுமா?
கிருஷ்ணனைப்பற்றி நாம் எடுத்துக் காட்டுவது நமது கற்பனையல்ல - இந்துப் புராணங்கள் எழுதி வைத்தவைதான்.
நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண் டும் என்று நினைக்கிறவர்கள், ஒழுக்கத்தை யும், அறிவையும் மதிக்கிறவர்கள் - மக்களுக்கு வழிகாட்டுவதை ஒரு கடமையாகக் கருதுபவர் கள் ஒரு கருத்தைக் கூறுகிறார்கள் என்றால், கொஞ்சம் புத்தியும், கடுகு மூக்கு அளவுக்கு ஒழுக்கமும் உள்ளவர்கள் அவற்றை வரவேற் பார்கள்.
அப்படியானால் இப்படி சொல்பவர்களை, எழுதுபவர்களைக் கொச்சைப்படுத்துபவர் களைப் பொதுமக்கள்தான் அடையாளம் காணவேண்டும்.
வீரமணிக்கு வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் - மற்றவர் களுக்கு? என்று கேள்வி கேட்டுள்ளார்.
கேள்வி கேட்பவருக்கு - கடவுள் நம்பிக்கை இருந்து தொலையட்டும் - அந்தக் கடவுள் நம்பிக்கை குறைந்தபட்சம் ஒழுக்கத்தின் அடிப்படையில் இருக்கவேண்டாமா என்பது தான் நமது கேள்வி.
மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள யோக்கி யதை உடையவன் கடவுள் என்று அவர் ஏற்றுக்கொள்கிறாரா? என்பதுதான் கேள்வி.
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்கிறார் இவர்கள் போற்றும் கிருஷ்ணன் என்ற கடவுள் (கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32).
ஆதாரத்தோடு திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் கீதையின் மறுபக்கம் எனும் தலைப்பில் எழுதப்பட்டது 1998 இல். அதற்குப் பின் பல பதிப்புகளும் வெளிவந்துவிட்டன. தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் வெளி யிடப்பட்டுள்ளது (Bhagavad Gita Myth or Mirage?).
அதற்கு இதுவரை எந்த ஒரு கொம்ப னாலும் மறுப்பு எழுதப்பட முடியவில்லை. எழுத முடியாத கோழைகள் கொம்பேறித் தாவிக் கொரிக்கிறார்கள்.
கீதையில் பகவான் கிருஷ்ணன் எத்த னையோ வாழ்க்கைத் தத்துவங்களையெல்லாம் கூறியிருக்கிறாராம்.
கீதை ஒரு கொலை நூல் - கீதையின் சுலோகத்தை எடுத்துக்காட்டித்தான் காந்தி யாரைப் படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ். காரனான நாதுராம் கோட்சே நீதிமன்றத் திலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளான் என்ற அரிச்சுவடி தெரியுமா தமிழக அரசியல் எழுத்தாளருக்கு.
சரி.... அவர் விவாதப்படியே கீதையில் நல்ல விடயங்கள் சொல்லப்பட்டதாக வைத்துக் கொள்வோம். ஒரு கேள்வி அந்த எழுத்தா ளருக்கு.
தாட்டு இலை போட்டு, பத்து வகைப் பதார்த் தங்களைப் பரிமாறி, அதன் ஒரு மூலையில் மலத்தை வைத்து இருந்தால், பரவாயில்லை - இத்தனை வகைக் கறிகளை பிரமாதமாக சமைத்திருக்கிறார்கள் - ஓரத்தில்தானே மலம் இருக்கிறது என்று எண்ணி, வயிறு முட்ட சாப்பிடுவார்களா?
கேள்விக்குப் பதில் எழுதிய வெறும் சோற்றுத்துருத்திகள் சாப்பிட்டாலும் சாப் பிடுவார்கள் - யார் கண்டது?
திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டி யுள்ள பகுதி ஏதோ அலட்சியப்படுத்தக் கூடிய பகுதியும் அல்ல!
கீதையின் அடிப்படைத் தத்துவமே வருணப் படைப்புதான்!
நான்கு வருணங்கள் என்னால் உண் டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங் களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது (கீதை அத்தியாயம் 4; சுலோகம் 13).
அதன் அடிப்படையில்தான் கீதை அத்தி யாயம் 18; சுலோகம் 44 இல்
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று இவர்கள் நம்பும் பகவான் கிருஷ்ணன் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
பாவ யோனியில் பிறந்ததாக, ஏதோ கிருஷ்ணன் பிரசவம் பார்த்ததுபோல எழுது கிறானே - அதைச் சொன்னால் வீரமணியின் தரத்தைப்பற்றி எழுதுகிறாரே - அவர் தரத்தைப்பற்றி எழுதுவதற்கு பெண்களின் புடவைகளைத் திருடும் கடவுளை கும்பிடும் தரம் உள்ளவர்களா தகுதி உடையவர்கள்?
பதில் எழுதியவர் இதில் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்? பார்ப்பனராக இருந்தால் - இன் றைக்கும் அவர்கள் மற்றவர்களை இழிவு படுத்துவதில் ருசி காண்பவர்களாக இருக் கிறார்கள் என்று பொருள்.
பார்ப்பனர் அல்லாத சூத்திரராக இருந் தால் வெட்கப்படவேண்டாமா? நமது தாயைக் கொச்சைப்படுத்தி கிருஷ்ணன் சொல்லி யிருக்கிறானே என்று ஆத்திரப்பட்டு இருக்க வேண்டாமா - சொரணை இருந்தால்!
திராவிடர் கழகத் தலைவர் எழுதியதில் என்ன தவறு?
உண்மையைத்தானே எழுதி இருக்கிறார் என்று பதில் எழுதி இருக்கவேண்டாமா?
வீரமணி அவர்களின் தரம் உலகம் அறிந்தது. தந்தை பெரியாரால் தட்டிப் பார்க்கப்பட்ட பொறுக்குமணி அவர். அவரைப்பற்றி தரக்குறைவாக எழுதி தன் தரத்தைக் காட்டியுள்ளார்.
சூத்திரன் என்றால் என்ன பொருள் என்று எழுத்தாளருக்குத் தெரியுமா? (எதையும் படிக்காமல் வயிற்றுப் பிழைப்புக்காக பேனா பிடித்தால் நாம் என்ன செய்வது?).
சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்:
1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன்
3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழி யஞ் செய்கிறவன்
4. விபசாரி மகன்
5. விலைக்கு வாங்கப்பட்டவன்
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7. தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்
(மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 8; சுலோகம் 415).
என்னை விபச்சாரி மகன் என்று சொன்ன தைப்பற்றி எனக்குக் கவலையில்லை - அதே மனுதர்ம சாஸ்திரத்தில் நல்லவை ஏராளம் கூறப்பட்டுள்ளன என்று எழுதட்டுமே பார்க் கலாம். (யார் கண்டது? ஆசாமி எழுதினாலும் எழுதுவார்).
பெரியார் எவ்வளவோ பகுத்தறிவு சீர் திருத்த வாதங்களை சமூகத்திற்கு அளித்தார் என்றும் எழுதியுள்ளார் - திராவிடர் கழகத் தலைவரை இழிவுபடுத்தவேண்டும் என்றால் பெரியாரைப் பெருமைப்படுத்துவது என்பது ஒரு தந்திரம் அவ்வளவுதான்.
சரி... எவ்வளவோ நல்லதைப் பெரியார் சொல்லி இருக்கிறாரே - இந்த ஏடு பெரியார் சொன்ன அந்த உயர்ந்த கருத்துகளை வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறதா? பெரியார் சொன்னதைவிட மிகப்பெரிய விஷ யங்களைத் தான் வெளியிட்டு மக்களுக்குப் பெரிய உதவியைச் செய்துகொண்டு இருக்கிறதா?
தாழ்த்தப்பட்டவர்கள்பற்றி பெரியார் சொன்னதாக அவதூறு கிளப்பியுள்ளதே (இதுதான் பெரியாரை மதிக்கும் செயலா?). அதற்கு என்ன ஆதாரம்?
நாம் எழுதுபவை அத்தனைக்கும் ஆதாரத் தைக் குறிப்பிடுகிறோம். அறிவு நாணயம் இருந் தால் அடுத்த இதழில் பெரியார் சொன்னதற் கான ஆதாரத்தை வெளியிடட்டும் பார்க்கலாம் - சவால் விட்டுக் கேட்கிறோம்.
இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான் என்று தந்தை பெரியார் எழுதினாரே - (விடுதலை, 17.9.1969) அதுதான் நினைவிற்கு வருகிறது.
மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்றார் தந்தை பெரியார். மானத்தைப்பற்றி கவலைப்பட்டிருந்தால் நமது தாயை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையில் உள்ளதை திராவிடர் கழகத் தலைவர் குறிப் பிட்டதற்கு நன்றி சொல்லவேண்டும்.
பெரியார் திடலுக்கு ஓடோடி வந்து வணக்கம் தெரிவித்திருக்கவேண்டும்.
அறிவைப் பயன்படுத்தி இருந்தால் ஆதா ரத்தோடு அல்லவா எழுதியிருக்கிறார் என்று சிந்தித்திருக்கவேண்டும். இரண்டும் இல்லாத துகள் தரத்தைப்பற்றி எழுதுவது கண்டு வாயால் சிரிக்க முடியவில்லை.
குறிப்பு: இதுபோன்ற ஏடுகளின் யோக்கி யதையைத் தமிழர்கள் தெரிந்துகொள்ளட்டும்!

Thursday, January 17, 2013

கும்பமேளா என்னும் குரூர விழா!


கும்பமேளா தொடங்கப்பட்டு விட்டது - 12 கோடி பக்தர்கள் நீராடப் போகிறார்களாம். இது 55 நாட்கள் நீடிக்குமாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் இந்த அழுக்கு விழா அரங்கேற்றம்.
இதற்கு என்ன பின்னணியாம்? பாற்கடலைக் கடைந்தபோது அமுத கலசம் ஒன்று வெளிப்பட்டதாம். இதனைப் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் சண்டை போட்டுக் கொண்டார்களாம். இந்தச் சண்டையின் காரணமாக அமுதக் கும்பத்தில் இருந்த தேவாமிர்தத் துளிகள் சிந்தி விட்டனவாம். இந்தத் துளிகள் அலகாபாத், நாசிக், உஜ்ஜய்னி, அரித்துவார் ஆகிய இடங்களில் சிந்தினவாம். இப்படி கதை எழுதும் ஏடுகள் சர்வ விழிப்பாக - என்பது அய்தீகம் என்று நழுவிக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கே தெரிகிறது இவை எல்லாம் அறிவுக்குப் பொருந்தாதவை - ஆனாலும் பாமர மக்களின் நம்பிக்கையோடு நாமும் அந்தச் சங்கமத்தில் சங்கமித்து விடுவோம் - பத்திரிகை விற்பனையும் கன ஜோராக நடக்கும் என்பது அவர்களின் திட்டம்.
கலசத்தில் இருந்து சிந்திய நான்கு ஊர்களும் புண்ணியதலங்களாம். இந்த நான்கு ஊர்களிலும் தான் கும்பமேளா நடக்கும்.
அலகாபாத்தில் (பிரயாகை என்றும் சொல்லுவர்) திரிவேணி சங்கமம் உள்ளது. இதில் கங்கையும், யமுனையும் சங்கமிக்கின்றன. எல்லோரும் நேரில் பார்க்கலாம். இதில் சரஸ்வதி நதியும் கலக்கிறது என்று பொய்க் கதையைக் கட்டி விடுகிறார்கள். அப்படி ஒரு நதியே கிடையாது என்பதுதான் புவியியல் உண்மையாகும். வரலாற்று ஆசிரியர்களும் சரஸ்வதி நதி என்றே கிடையாது என்று அறுதியிட்டு உறுதி செய்கிறார்கள்.  அரியானா பகுதியில் சரஸ்வதி நதி ஓடியது என்றும், அது ஆரிய நாகரிகத்திற்கானது என்றும் இட்டுக் கட்டி நிலைக்க வைப்பதற்காக ஆரியர் கட்டி விட்ட கதையாகும்.
கும்பமேளா என்றாலே நிர்வாண சாமியார்கள் தான் நினைவிற்கு  வருவார்கள். ஆண்களும், பெண்களும் புண்ணிய நீராடுகிறார்களாம் - நிர்வாண சாமியார்கள் சகிதமாக.
பக்தி என்று வந்து விட்டால் பெண்கள்கூட வழக்கமாக அவர்கள் அனுசரிக்கும் சுபாவக் கூறுகளைப் புறந்தள்ளி விடுவார்கள். பக்தி என்னும் போதை மூளையில் ஏறி அவர்களை கிறுகிறுக்க வைக்கிறது.
இவ்வளவுக்கும் இவர்கள் குளிக்கும் நதிகள் இருக்கின்றனவே -  அவை புண்ணிய நதிகளா, மரணக் குழிக்கு இழுத்துச் செல்லும் நோய்க் கிருமிகளின் ஒட்டு மொத்தமான கூடாரமா என்பதுதான் முக்கியமாகும்.
இந்தப் புண்ணிய நதியில்தான் நகரப் புறங்களின் சாக்கடைகள்  கலக்கின்றன. கங்கை நதியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் அரையும் குறையுமாக எரிக்கப்பட்டு  தூக்கி எறியப்படுகின்றன. அப்படி செய்வது  அவர் களுக்குப் புண்ணியமாம். கிழட்டுப் பசுக்களும் உயிரோடு இந்த நதியில் தள்ளப்படுகின்றன (இது பசுவதை இல்லையா? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இதனை ஏன் எதிர்ப்பதில்லை? ஓ, பசுக்கள் எல்லாம் மோட்சத்துக்குப் போகின்றனவோ!)
1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி யிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் தொற்று நோய்ப் பற்றிக் கொண்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் மாண்டு போனார்கள்.
இந்தியாவில் மற்ற மற்ற பகுதிகளில் எல்லாம் ஆயிரத்துக்கு  94 குழந்தைகள்  மரணிக்கின்றன என்றால் காசி வட்டாரத்தில் மட்டும் 13,394 குழந்தைகள் மரணம் அடைகின்றன என்பது எவ்வளவுப் பெரிய கொடுமை!
மக்கள் நல அரசு என்றால் இந்தக் கொடுமை யிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே! மாறாக அரசும் மக்களின் மூடத்தனத்தோடு சங்கமிக் கிறார்களே! மக்களிடத்தில் விஞ்ஞான மனப் பான்மையைப் பரப்ப வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம்  சொல்லுகிறதே - அது வெறும் ஏட்டுச் சுரைக்காய் தானோ!

Saturday, December 8, 2012

கடவுள்


periyar
1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகிறது.
2. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.
3. பெரும்பாலும் சுயநலக்காரர்களும் தந்திரக்காரர்களுமே கடவுளையும், வேதத்தையும், ஜாதியையும் உண்டாக்குகிறார்கள்.
4. கடவுள் உண்டானால் பேய் உண்டு. பேய் உண்டானால் கடவுள் உண்டு. இரண்டும் ஒரே தத்துவங் கொண்டவை.
5. இந்தியாவில் காகிதம், புத்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாக பாவிக்கப்பட்டு வணங்கி வந்தாலும் 100-க்கு 5 பேரே படித்திருக்கின்றார்கள்.
6. மேல்நாட்டில் காகிதங்களினால் மலம் துடைத்து சரஸ்வதியை அலட்சியம் செய்தும் அங்கு 100-க்கு 90 பேர் படித்திருக்கிறார்கள்.
7. கோயில்கள் சாமிக்காகக் கட்டியதல்ல. வேறெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக்காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக்கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமைகளாக்கவும் கட்டப்பட்டதாகும்.
8. எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கை இடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவர்களுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதத்தை வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கியதையற்ற வனாவான்.
9. சுயமரியாதைக்காரன் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனி தனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது.
ஆனால் நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டிருப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரன் செய்து கொண்டிருக்கின்றான்.
10. பத்துமாதக் குழந்தையை கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.
11. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பானைச் சாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.
- தந்தை பெரியார்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...