Showing posts with label ஆர்.எஸ்.எஸ்.. Show all posts
Showing posts with label ஆர்.எஸ்.எஸ்.. Show all posts

Saturday, January 3, 2015

தீவிரவாத ஒத்திகைக்குக் கிடைத்தவர்கள் முஸ்லீம்கள் தானா?


இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக இந்துத்துவா ஆட்சி என்று அறிவிக்கவில்லையே தவிர, மற்றபடி பிஜேபியும் சரி, அதன் சங்பரிவாரங்களும் சரி ஓர் இந்து ஆட்சி இந்தியாவில் அமைந்துவிட்டதாகவே கருதி, ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர்!

இந்த உண்மை அம்மணமாகத் தெரிந்திருந்தும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் சீப்பை ஒளிய வைத்து கலியாணத்தை நிறுத்துவது என்பது போல நடந்து கொள்வது மிகக் கேவலமான வெட்கக் கேடாகும்.

ஊடகங்கள் உயர் ஜாதி பார்ப்பனர்கள் கைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும் குவிந்து கிடப்பதால் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியே!

ஊடகங்களில் பெரும்பாலும் பணியாற்றுபவர் களாகப் பார்ப்பனர்களாகவே இருக்கின்ற காரணத்தால் இந்துத்துவாவைத் தூக்கிப் பிடிக்கத்தானே செய் வார்கள். உண்மையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு அதன்மீது பொய்களான குரோட்டன்ஸ்களை வளர்க்கவே செய்வார்கள். அதுதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

பிஜேபியில் ஏதோ அனாமதேயங்கள் அல்ல; பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திரமோடியே எப்படி நடந்து கொண்டு வருகிறார் என்பதைக் கவனித்தால் ஒளிவு மறைவு என்பதை எல்லாம் கடந்து, பச்சையாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள மதச் சார்பின்மையைத் தூக்கிப் போட்டு மிதித்து விட்டு, ஒளிந்திருந்த இந்துத்துவாவை ராஜ நடை போட வைத்து விட்டார்.
ஜப்பானுக்குச் சென்ற பிரதமர் நரேந்திரமோடி இந்தியர்கள் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் என்ன பேசினார்?

I brought Gita for gifting (the Japanese Emperor) I do not know what will happen in India after this. There may be a TV debate on this. Our secular friends will create ‘typhoon’ (storm).

ஜப்பான் நாட்டுப் பேரரசருக்கு கொடுக்கக் கீதையைக் கொண்டு   போன இந்தச் செய்தி இந்தியாவை அடைந்தால் அங்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. தொலைகாட்சிகளில் விவாதங்கள் அனல் பறக்கும்; எனது மதச் சார்பற்ற நண்பர்கள் புயலையே கிளப்புவார்கள் என்று பேசினார் என்றால் பார்த்துக் கொள்ளலாமே.

தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்பார்களே அதுபோலதான் செய்யும் தவறு என்ன என்று அவருக்கு மிக நன்றாகவே தெரியும்; இருந்தாலும் அவரைப் பீடித்து ஆட்டும் இந்துத்துவா வெறி அதனையும் கீழே தள்ளி மேலே எழுந்து நிற்கிறது. மதச் சார்பின்மை என்பதை எப்படியெல்லாம் எள்ளி நகையாடுகிறார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இவ்வளவுப் பச்சையான மதவெறியரைத் தேடினாலும் எளிதில் கிடைக்கப் போவதில்லை.
குஜராத் மாநிலத்தை இந்துத்துவாவின் பரிசோ தனைக் கூடமாக உருவாக்கினார். மத அடிப்படையில் மக்களைக் கூறு போட்டு, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். அதையே இந்தியா முழுமைக்கும் பரவலாக்கும் எண்ணம் நொடிதொறும், நொடிதொறும் அவரை உசுப்பி எழுப்பிக் கொண்டு இருக்கிறது. குஜராத்தில் அவரைத் தொடர்ந்து வந்த முதல் அமைச்சர் மோடிக்குச் சளைத்தவரல்ல என்பதைக் காட்டிக் கொண்டு இருக்கிறார்.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் தீவிர வாதிகளை எப்படி முறியடிப்பது என்பதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.

தீவிரவாதிகளாக நடித்தவர்கள் அத்தனைப் பேரும் முசுலிம் உடை அணிந்து, தலையில் குல்லாய் அணிந்து காணப்பட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுவது போல குஜராத் காவல்துறையால் ஒத்திகை நடத்தப் பட்டது.

வன்முறையில் ஈடுபடுவதுபற்றி பிஜேபி.யோ அல்லது சங்பரிவார்க் கும்பலா பேசுவது? பாபர் மசூதி இடிக்கப்பட்டதை விடவா அராஜகத்துக்கும் பயங்கர வாதத்துக்கும் நிர்வாண வன்முறைக்கும் இன்னொரு எடுத்துக் காட்டுத் தேவை?

மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் யார்? ஒரிசா சட்டப் பேரவை வளாகத்துக்குள்ளேயே புகுந்து வன்முறை வெறியாட்டம் போட்டவர்கள் யார்? காவி பயங்கரவாதம் என்ற புதுமொழியை அன்றைய உள்துறை அமைச்சர் புதிய பட்டத்தைச் சூட்ட வில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் பொது மக்களுக்குத் திரிசூலங்களை வழங்கி கிறித்தவர் களையும், முசுலீம்களையும் மதச் சார்பின்மை பேசும் இந்துக்களையும் குத்திக் கிழிக்கத் தூண்டிட வில்லையா?

அரியானா மாநிலத்தில் ஜாஜா பகுதியில் இறந்து போன பசுவின் தோலை உரித்ததற்காக அய்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த கொடியவர்களால் கொல்லப்படவில்லையா?

விசுவ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான கிரிராஜ் கிஷோர் என்பவர் பசுவின் உயிர் (அதுவும் செத்துப் போன) மனித உயிரைக் காட்டிலும் புனிதமானது என்று அப்போது கூறியது எவ்வளவுப் பெரிய காட்டுவிலங்காண்டித்தனம்!

ஏன்? காவல்துறை ஒத்திகை நடத்திக் கொண்டு இருக்கும் குஜராத்தில் நடக்காத வன்முறையா? அரச பயங்கரவாதமாக அல்லவா நடந்தது.

 முசுலிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து அந்தக் கருவை நெருப்பில் தூக்கி எறிந்து வெறிக் கூச்சல் போட்டுக் கூத்தாடவில்லையா? அடுக்கிக் கொண்டே போகலாம்.

 ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலின் வன்முறையைப் பட்டியல் போட்டால் நாட்டில் காகிதங்கள் போதாது.

இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் தீவிர வாதத்தை முறியடிக்கும் பயிற்சிக்கான ஒத்திகைக்காக முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாக ஒப்பனை செய்து நிறுத்தியுள்ளனர்; இந்தியாவிற்கு இப்படி ஓர் ஆட்சியா? மகா மகா வெட்கக் கேடு!

Thursday, October 17, 2013

அந்தரங்கம் புனிதமல்ல

இந்து ஆங்கில ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை சங்பரிவார்க் கும்பலைக் கொஞ்சம் வெலவெலக்கச் செய்து விட்டது; வித்யா சுப்பிரமணியம் என்பவ ரால் எழுதப்பட்ட கட்டுரை அது (8.10.2013 நடுப்பக்கக் கட்டுரை).
2005ஆம் ஆண்டில் அத்வானிக்கும், ஆர்.எஸ்.எசுக்கும் இடையே நடைபெற்ற வரலாற்றுப் புகழ்மிக்க மோதலின்போது, தன்னைப் பதவி நீக்கம் செய்ததால் ஏற் பட்ட கோபத்தை அத்வானியால் அவ் வளவு எளிதாகக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் வெளியிட்டதை அவரது சொற்களிலேயே பார்க்கலாம். 2005 செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் பேசும்போது ஆர்.எஸ்.எஸின் அனுமதி இல்லாமல் தனது கட்சியினால் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளப்பட முடியாது என்ற எண்ணத்தை இந்த நிகழ்ச்சி உறுதிப்படுத்தி விட்டது என்று கூறினார். நாம் கொண்டி ருக்கும் இந்தக் கண்ணோட்டத்தினால், பா.ஜ.க.வுக்கோ அல்லது ஆர்.எஸ்.எசுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது. ஒரு நாட்டை மறு கட்டமைப்புச் செய்ய இயன்ற ஒரு தலைவரை உருவாக்குவதற்குப் பதிலாக இத்தகைய கண்ணோட்டம் அவரது நல் தோற்றத்தைக் குலைத்து விடும் என்பது பற்றி ஆர்.எஸ்.எஸ். கவலைப்பட வேண்டும். மக்களிடையே நிலவும் இந்த எண்ணத்தைச் சிறிது சிறிதாகப் போக்கு வதற்கு ஆர்.எஸ்.எசும்., பா.ஜ.க.வும் உண்மையாகப் பாடுபட வேண்டும் என்று எல்.கே. அத்வானி பேசியதை - இந்து கட்டுரை எடுத்துக்காட்டி பிஜேபி யின் லகான் ஆர்.எஸ்.எஸின் கையில் தான் வலுவாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியது.
அபாயகரமான ஆர்.எஸ்.எஸ்.தான் பிஜேபியின் கர்த்தா; ஆர்.எஸ்.எஸ். காலை ஆட்டினால் பிஜேபி தலையாலேயே நடக்கும் என்கிற சங்கதி ஊருக்குத் தெரிந்தால் அரசியல் கட்சியான பி.ஜே.பி.க்கு மக்கள் மத்தியில் பெரும் சேதாரம் ஏற்படும் என்பதால், இந்து ஏட் டின் கட்டுரையை - _ தகவலை சங்பரிவார் -_ பிஜேபி வட்டாரத்தால் இரசிக்க முடியாது. இந்து ஏடு எழுதுவதற்கு முன்பே -_ மோடி ஆர்.எஸ்.எஸின் கட்டளைக் காரண மாகவே முன்னிறுத்தப்பட்டார் என்பது மலிவாகவே தெரிய ஆரம்பித்து விட்டது.
மற்றவர்களைவிட அதிகாரப் பூர்வமில்லாத பிஜேபியின் _ மோடியின் பேச்சாளரான திருவாளர் சோ ராமசாமி அவர்களுக்கு இதன் பாரதூர விளைவு கள் என்னவென்று தெரியும் அல்லவா! அதனால் தமக்கே உரித்தான வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு மோடியின் கன்னத்தில் விழும் அறையைத் தம் கன் னத்தில் தாங்கிக் கொள்வதுபோல் எழுது கோலைத் தூக்கியுள்ளார்.
கேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தான் வழி நடத்துகிறது. என்பது உண்மையா?
பதில்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்ற சொல்ல முடியாது.
அப்படிப்பட்ட நிலை இருந்தால், பா.ஜ.க. சுயமாக எந்த தீர்மானமும் செய்ய முடியாமல் திணறும். நிலைமை அப்படி இல்லை. பா.ஜ.க., வீட்டுப் பெரியவர் ஆர். எஸ்.எஸ்.
அவருடைய மனம் கோணாமல் நடந்து கொள்ள பா.ஜ.க., முயற்சிக்கும். சில சமயங்களில் உரசல் வருவதால் உறவு விட்டுப் போகாது (துக்ளக் 11.9.2013 பக்கம் 20).
எப்படியெல்லாம் நெளிந்து வளைந்து சப்பைக் கட்டுக் கட்டுகிறார் இந்த அய்யர்.
1976 நெருக்கடி நிலையைத் தொடர்ந்து ஜனசங்கத்தைக் கலைத்து விட்டு ஜனதாவில்  அய்க்கியமானதே _ ஆட்சி யில் மாஜி ஜனசங்கத்தவர்களான வாஜ் பேயியும் அத்வானியும் அமைச்சர்களாகக் கூட இருந்தனரே _ -அந்த அய்க்கியம் குலைந்து போனதற்கு என்ன காரணம்?
ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர், ஜனதா விலும் உறுப்பினர் என்னும் இரட்டை உறுப்பினர் தன்மை தானே _ - ஜெயப் பிரகாஷ் நாராயணன் போன்றவர்களால் அரும்பாடுபட்டு உருவாக்கப்பட்ட ஜனதா உருக்குலைந்து போனதற்குக் காரணம்?  பல முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., உறவைத் துண்டிக்க மறுத்தது ஏன்? ஆர்.எஸ்.எஸின் இந்து வெறி மதக் கொள்கை தானே அதற்குக் காரணம்.
ஓர் ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவா யில்லை; ஆர்.எஸ்.எஸ்.தான் எங்களுக்கு மிக மிக முக்கியம் என்று மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதற்கு என்ன காரணம்?
ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளராக இருந்த எச்.வி. சேஷாத்திரி இதோ பேசுகிறார்:
4.4.1998 இரவு 11 மணிக்கு தொலைக் காட்சி அலைவரிசை 1-இல் அவர் அளித்த பேட்டி இதோ!
கேள்வி: பி.ஜே.பி. ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோலாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகக் கூறுவதுபற்றி..
சேஷாத்திரி: வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி இவர்கள் எல்லாம் யார்?
ஆர்.எஸ்.எஸ். தானே? அப்படியிருக்க இன்னொரு ரிமோட் கண்ட்ரோல் எதற்கு?
கேள்வி: ஆர்.எஸ்.எஸின் லட்சியங் களையும், கனவுகளையும் பி.ஜே.பி. நிறை வேற்றும் என்று நம்புகிறீர்களா?
சேஷாத்திரி: நிச்சயமாக ஒவ்வொரு பிரச்சாரர் அல்லது ஸ்வயம் சேவக்கின் தகுதியையும், திறமையையும் பொறுத்து சில கடமைகளை ஆர்.எஸ்.எஸ். அவர்களுக்கு அளித்துள்ளது. வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை பி.ஜே.பி.க்கு ஜனசங்கிற்கு அனுப்பினோம். ஆர்.எஸ்.எஸின் பெருமை மிக்க தொண் டர்களான அவர்கள் நிச்சயம் தங்களின் பணிகளை நிறைவேற்றுவார்கள். அதே போல, தமிழ்நாட்டு பி.ஜே.பி.க்கு எங்கள் தகுதி வாய்ந்த தொண்டரான இல. கணே சனைத் தந்துள்ளோம். அவரும் சிறப்பான பணி ஆற்றி வருகிறார் என்று கூறினாரே!
பிரதமர் வாஜ்பேயிலிருந்து மத்தியில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் ஆர்.எஸ். எஸ்.காரர்கள்.
அவர்களை பி.ஜே.பி.க்கு நாங்கள்தான் அனுப்பினோம். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கனவுகளை நிறைவேற்றுவார்கள் என்று வெளிப் படையாக சொல்லவில்லையா?
ஆர்.எஸ்.எஸில் முழு நேர ஊழியராக உள்ள ஒருவரைத்தான் பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளராக நியமிக்க வேண் டுமென்று பி.ஜே.பி.யின் அமைப்பு விதியி லேயே திருத்தம் செய்யப்பட்டு விட்டதே! (The Hindustan Times 29.6.1997).
ஆர்.எஸ்.எஸ். தலைவரான ராஜுபையா என்ற இராஜேந்திர சிங் இடுப்பு எலும்பு முறிந்து ஜண்டேவலான் நகரில் மருத்துவ உதவி பெற்று ஓய்வில் இருந்தார். அவரை பிரதமர் வாஜ்பேயி சந்திக்கச் சென்றார்.
அது வெறும் உடல்நல விசாரிப்புக்கான நிகழ்ச்சி மட்டுமல்ல; பல அரசியல் முக்கி யத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது.
1) ஆர்.எஸ்.எஸின் நம்பிக்கை இல்லாத எவரையும் பி.ஜே.பி. வேட்பாளராகத் தேர்தலில் நிற்க வைக்கக் கூடாது.
2) ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ள ஏழு உறுப்பினர் கொண்ட கொள்கை வகுப்புக் குழுதான் வேட்பாளர்களை இறுதி செய்யும். (ஆர்.எஸ்.எஸ். தலைவரான இராஜேந்திர சிங், பொதுச் செயலாளர் எச்.வி. சேஷாத்திரி முதலியோர் அக்குழுவில் முக்கியமாக இருப்பர்).
3) சென்ற 12ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 70 பி.ஜே.பி. உறுப்பினர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.பற்றி சரியாகத் தெரியவில்லை என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடு என்றாரே சேஷாத்திரி.
பி.ஜே.பி. என்கிற அரசியல் கட்சிக்கு ரிமோட் கண்ட்ரோலாக இருப்பது சூப்பர் அரசியல் கட்சியான ஆர்.எஸ்.எஸ். தான் என்பது இன்னுமா விளங்கவில்லை?
5.2.1998 நாளிட்ட இந்து ஏட்டுக்கு எல்.கே. அத்வானி சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸின் சர்சங்சலக் (உயர் தலைவர் இராஜேந்திர சிங்) உட்பட யாரையும் கேட்காமலேயே வாஜ்பேயிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவித்தேன் என்றாரே!
பிரதமர் பதவிகூட ஆர்.எஸ்.எஸ். தலைவரைக் கேட்டுத்தான் முடிவு செய் யப்பட வேண்டும் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?
தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று நிகரற்ற சக்தியாக விளங்கும் காலத் தில் இவர்கள் எப்படி நடந்து கொள்வார் களாம்?
இதோ வாஜ்பேயி கூறுகிறார்:
பாரதீய ஜனசங் கட்சியாக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸுடனான எங்கள் தொடர்பு வெறும் கருத்தியல் மட்டத் தோடும் வரலாற்று ரீதியானதாகவும் ஆகியது. இத்தகைய இறுக்கமான தொடர்போடு பத்தாண்டுகளைக் கடந்து விட்டோம். பி.ஜே.பி.க்குள் இருந்து வேலை செய்கின்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எங்களின் கருத்தியல் அடித்தளத்தை எல்லோருக்கும் புரிய வைப்பதற்கு விருப்பப் பூர்வமான முயற்சிகளை செய்து வருகிறார்கள். சகோதர அமைப்புகளாகிய விஸ்வ இந்து பரிஷத், வித்யார்த்தி பரிஷத், பாரதீய மஸ்தூர் சபா, சேவாபாரதி, கல்யாண ஆஸ்ரம் ஆகிய வற்றோடு எங்களுக்குள்ள தொடர்பையும் அவர்கள் புரிய வைக்கிறார்கள். இந்த அமைப்புகள் அத்தனையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து பெற்ற உந்துதலின் அடிப்படையில் இயங்குபவை. எங்களது முயற்சிகளை இன்னும் நாங்கள் தீவிரப் படுத்த வேண்டும். அரசியலில் பாரதீய ஜனதா கட்சிக்குள்ள கூடுதல் வாய்ப்புகளின் அடிப்படையில் இவற்றுக்கான ஏற்பு அதிகமாகும்.
(டெலிகிராம் ஏடு 17.5.1990).
மேற்கண்ட ஆதாரங்கள் எதைத் தெரிவிக்கின்றன? ஆர்.எஸ்.எஸ்தான் அவர்களின் அடிப்படை ஆதாரச் சுருதி என்பது அப்பட்டமாக விளங்கி விட்டதே!
பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர்கூட ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்ற முழு நேரப் பேர் வழியாக இருக்க வேண்டும் என்று கட்சியின் அடிப்படை விதியிலேயே பாதுகாப்பாக வைத்துள்ளார்களே.
ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ள ஏழு பேர் கொண்ட குழுதான் தேர்தலில் போட்டி யிடுபவர்கள் யார் யார் என்பதை முடிவு செய்யும் என்கிற அளவுக்கு நிலைமை இருக்கும்பொழுது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்று சொல்ல முடியாது என்று முழு யானையைப் பிடி சோற் றில் மறைக்கப் பார்க்கிறார் மனு குலத்தாரான சோ.
6.3.1978 அன்று நாக்பூர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் தேவரசும், பொதுச் செயலாளர் ராஜேந்திர சிங்கும் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
ஆர்.எஸ்.எஸ்., நடவடிக்கைகள் ஓர் அரசியல் நோக்கம் கொண்டதுதான். நாங்கள் அதிகார அரசியலில் தீவிரம் காட்டாவிட்டாலும்கூட! அது மட்டுமல்ல; தற்போதுள்ள இதன் சட்ட திட்டங்களின்படி உறுப்பினர்கள் அரசியலில் பங்கெடுக்க முடியும். பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மாநில அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். (குஜராத்தில் ஒரு வெள்ளோட்டம் என்ற தலைப்பில் ஆதவன் - தீட்சண்யா எழுதிய கட்டுரை தினமணி 18.2.2000 பக்கம் 4).
ஆர்.எஸ்.எஸ். வெறும் கலாச்சார அமைப்புதான்; - அரசியலில் ஈடுபடாது என்று பேசுவது - எழுதுவது எல்லாம் பம்மாத்து வேலை என்பது நீதிமன்றத்தில் அவர்கள் கொடுத்த வாக்குமூலமே காட்டிக் கொடுத்து விட்டதே!
மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது நடந்த ஒன்றை நினைவூட்டுவது பொருத்தமாக இருக்கும். மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருந்த போது புதுடில்லியில் கல்வி அமைச்சர்கள் மாநாடு கூட்டப்பட்டது (1998 அக்டோபர் 22).
அந்தக் கூட்டத்தில் சரஸ்வதி வந்தனா பாடப்பட்ட போது தமிழ்நாடு அரசின் சார்பில் அதில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் வெளி நடப்புச் செய்தார்.
அந்த மாநாட்டில் அளிக்கப்பட்ட கல்வித் திட்டத்தைத் தயாரித்தவர் ஆர்.எஸ்.எஸ். நிபுணர் என்று கூறப்பட்ட சிட்டியங்லா. மூன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரைக்கும் சமஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்க வேண்டும். சரஸ்வதி வணக்கம் வந்தே மாதரம் பாடல்கள் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம். உபநிஷத்துகள் வேதங்கள் முதலியன பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த  ஆர்.எஸ்.எஸின் கல்வித் திட்டம்; கடுமையான எதிர்ப்பின் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.

ஆட்சியின் பரம இரகசியம்கூட ஆர்.எஸ்.எசுக்குத் தெரிவிக்கப்பட வேண் டும் என்பது எழுதப்படாத சட்டமாகும்.
1999 மே 11,13 ஆகிய இரு நாள்களில் மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு இராஜஸ் தான் மாநில பொக்ரான் பாலைவனத்தில் அய்ந்து அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. அரசாங்கத்தின் மிக முக்கியமான இரகசியம் இது. குடியரசுத் தலைவருக்குக்கூட முதல் நாள் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வளவு பரம இரகசியமான செயல் ஆர்.எஸ்.எஸ்சுக்குத் தெரிவிக்கப்பட்டுள் ளதே!
எந்த நாளில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டதோ அந்த நாளி லேயே ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் அணு ஆயுத இந் தியா என்ற தலைப்பில் ஒரு சிறப்பு இதழே வெளியிட்டது என்றால், இது எப்படி சாத்தி யமாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும்!
அணுகுண்டு வெடிப்புத் தகவல் முன் கூட்டியே ஆர்.எஸ்.எஸுக்குத் தெரிந்திருந் தாலொழிய இந்தச் சிறப்பிதழைக் கொண்டு வந்திருக்க முடியுமா? குடியரசுத் தலைவருக்கே தெரியாத அரசு இரகசியம் ஆர்.எஸ்.எஸுக்குத் தெரிகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பா.ஜ.க.வின் ஆட்சி லகான் அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸிடம் தான் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
அமைச்சர் பதவியேற்கும்போது அரசு இரகசியங்களைக் காப்பாற்றுவோம் என்றுகூறி உறுதி எடுத்தவர்கள். அதற்கு மாறாக அணுகுண்டு சோதனை போன்ற அரசு இரகசியங்களைக்கூட ஆர்.எஸ். எசுக்குத் தெரிவித்துள்ளார்களே.
1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரில் ஒரு கட்டுரை வெளி வந்தது. அதற்குரியவர் ஏ.பி. வாஜ் பேயிதான். அந்தக் கட்டுரையின் தலைப்பு Sangh My Soul
என்பதாகும். அதுதான் பாரதீய ஜனதா கட்சியின் வெப்சைட்டிலும் இடம் பெற்றதாகும்.
ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா என்ற அந்தக் கட்டுரையில் நல்லவர் என்ன சொல்லுகிறார்?
முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமாம்? இதோ அவர் எழுதுகிறார்:
1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (Organising)
2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது (Assimilation)
(இதன் பொருள்: முஸ்லிம்க ளுக்கென்று உள்ள அடையாளங்களை அழித்து அவர்களை இந்து மயமாக்குவது).
அப்படி முஸ்லிம்களை உட்கொள்ளு வதற்கு அவர் கூறும் வழிகள் மூன்று:
1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.
2) முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரசின் அணுகுமுறை.
3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.
இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி என்றார் வாஜ்பேயி.
பி.ஜே.பி.க்கு ஆர்.எஸ்.எஸ். வெறும் உடம்பு அல்ல அவர்கள் நம்பும் ஆன்மா! சொல்பவர் சாதாரணமானவரல்லர் - பிஜேபியின் மிகப் பெரிய தலைவர் வாஜ்பேயி.
இவர்கள் ஆர்.எஸ்.எஸில் சேரும்போது ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி என்ன?
எனது புனிதமான இந்து மதத்துக்கும், இந்து சமுதாயத்துக்கும், இந்துக் கலாச் சாரத்துக்கும் பாடுபட்டு பாரத் வர்ஷத்தில், அதுவே உயர்ந்தது என்பதை நிலைநாட்ட இந்த ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கில் (ஆர்.எஸ்.எஸ்.) நான் உறுப்பினராகிறேன் என்பதை எல்லாம் வல்ல இறைவன் முன்னாலும், எனது மூதாதையர் முன்பும் பிரமாணம் எடுக்கிறேன்.
இந்தச் சங்கத்தின் பணிகள்  அனைத் தையும் இதய பூர்வமாக ஏற்று வாழ்நாள் முழுவதும் செயல்படுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் டிராயர் போட்டால் ஆர்.எஸ்.எஸ்., வேட்டி கட்டினால் பிஜேபி.
ஏற்கெனவே நரேந்திரமோடியைப் பற்றி நிலவும் கணிப்பு - ஊரும் உலகமும் அறிந்ததே!
ஆர்.எஸ்.எஸ். என்கிற முத்திரை அதிகாரப் பூர்வமாக விழுந்து விடக் கூடாது என்பது அவர்களின் வியூகம்.
என்னதான் கம்பிமேல் ஏறி நின்று சாமர்த்தியம் காட்டினாலும் அத்வானியை உதாசீனம் செய்ததும் மோடியை முன்னிறுத்தியதும் ஆர்.எஸ்.எஸ்.தான் என்பது ஊர் சிரித்த ஒன்றே!
ஆர்.எஸ்.எஸைப்பற்றி அறிந்தவர் களுக்கு ஒன்று நன்றாகவே தெரியும்; குஜ ராத்  மாநில இனப்படுகொலையாளர்கள் தான் ஆர்.எஸ்.எசுக்குத் தேவைப்படுவர். அந்த வகையில் அவர்கள் மோடியைத் தவிர உறுதியாக வேறு யாரைத் தேர்வு செய்ய முடியும்?
அந்தரங்கம் புனிதமானது என்பார்கள். பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை அவர்களின் அந்தரங்கமான ஆர்.எஸ்.எஸ். புனித மானதல்ல -_ அசிங்கமானது _- ஆபத் தானது! - அருவருப்பானது!! - எச்சரிக்கை! எச்சரிக்கை!!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>

அக்டோபர் 16-31 - 2013

Thursday, February 7, 2013

தாலிபான் ஆதரவாளருடன் ஆர்.எஸ்.எஸ். - அத்வானி சந்திப்பு


தாலிபான் ஆதரவாளருடன் ஆர்.எஸ்.எஸ். - அத்வானி சந்திப்பு இந்துஸ்தான் டைம்ஸ் தரும் திடுக்கிடும் தகவல்கள்


புதுடில்லி, பிப்.7- பாகிஸ்தானின் தாலிபான் தலைவ ருடன் அத்வானி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் சந்தித்தது குறித்து திடுக்கிடும் தகவல் களை இந்துஸ்தான் டைம்ஸ் அம்பலப்படுத்தி யுள்ளது.
பா.ஜக. தலைவர் அத்வானி ஃபசூல் அர் ரகுமான் என்ற பாகிஸ்தான் தலைவரை 2005ஆம் ஆண்டில் சந்தித்துள்ளார். ரகுமான், தாலிபான் ஆதரவாளர் என்று சொல்லப்படுபவர். ஏன் ஆர்.எஸ்.எஸ்.,  பா.ஜ.க. , தலைவர்கள் அவரைச் சந்திக்க வேண்டும்? பல நேரங்களில் இந்திய  கிரிக்கெட் போட்டிகளையே பல தடவை பொறுத்துக் கொள்ளாதவர்கள் அவர்கள்.
அந்த சந்திப்பில் எதுபற்றி விவாதிக்கப்பட்டது என்பதை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., தெரிவிக்கவில்லை.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் பயன்படுத்தப்பட்டன
- தேசிய புலனாய்வுக் கழகம்
ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் வலதுசாரி தீவிரவாதி களின், பயங்கரவாதச் செயல்களைப்பற்றி சதித் திட்டம் தீட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுவ தாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ராஷ்டிரீய சுயம் சேவக் சங்கத்தின் நாக்பூர் அலுவல கத்தில் இந்த்ரேஷ்குமார் என்ற மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர். வலதுசாரி தீவிரவாத மூளை எனப்படும் சுனில் ஜோஷி என்பவரை 2006ஆம் ஆண்டு மே மாதத்தில் சந்தித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
வெடிமருந்து வாங்க ரூ.50 ஆயிரம் பணம்
சுனில்ஜோஷி, மேலும், சம்ஜிவாதா வழக்கில் சாட்சியாகவும் ஆஜ்மீர் ஷரீப் வழக்கில் பின்னாளில் குற்றம் சாட்டப்பட்டவருமான பாரத் பாய் என்பவருடன் அசி மானந்த் என்பவரும் நாக்பூர் சென்று  இந்த ஜோஷியை சந்தித்துள்ளனர். அவர், அவர்களுக்கு வெடி மருந்து மற்றும் இதர பொருள்கள் வாங்குவதற்காக ரூபாய் 50,000 கொடுத்ததாக சம்ஜுவாதா (Samthauta)  குற்றப் பத்திரி கையில் கூறப்பட்டுள்ளது.
வலதுசாரி தீவிரவாத வழக்குகள் எதிலும், இந்த் ரேஷ் பங்கு பெற்றதாகக் குற்றம் சாட்டப்படவில்லையானாலும் அவரது பங்களிப்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்த்ரேஷ்  சார்பாக வழக்கறிஞர் மீனாட்சி லேகி, இவையெல்லாம் பொய்த் தகவல்கள்; சிமி இயக்கத் தலைவர் சைதர் நகோரி மீது நடத்தப்பட்ட மன இயல் ஆய்வு உட்பட பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்ட சம்ஜுவாதா குண்டுவெடிப்பு பற்றிய அரசின் ரகசிய ஆவணங்கள் ஆரிஃப் காஸ்மானி என்ற லஸ்கர் என்ற பொருளுதவி செய்ததானது பற்றியதும் அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானமும் பற்றிய 3500 பக்கங்கள் கொண்ட அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றார்.
சந்தித்தது உண்மையே!
புலனாய்வாளர்கள் பாரத் பாயிடம் பேசியபோது, அவர், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், இந்த்ரேசையும், சுனில் ஜோஷியையும் சந்தித்ததை ஒப்புக் கொண் டுள்ளார்.
இந்த்ரேஷ் மனேஜீக்கு, சுனில் ஜோஷி ரூ.50,000 கொடுத்தார். அவர்கள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர். எதற்காக அவர் பணம் கொடுத்தார் என்று கேட்டதற்கு  மனேஜ், ஒரு முக்கிய  மான காரியத்துக்காகக் கொடுத்ததாக சொன்னார். அவர்களது தொடர்பு பற்றிய மேலும் இரு நிகழ்வுகள்  உள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் 1999ஆம் ஆண்டில் டங்கர்கான் என்ற இடத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில்,  சுனில் ஜோஷியும் அவரது மற்ற 2 சகாக்களும் சேர்ந்து வெடிப் பொருள்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். சுனில் ஜோஷி  கொல்லப்பட்டார்
ஆஜ்மீர் சபரி குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள  மிஜோரம் என்ற இடத்தில் உள்ள ஆர். எஸ்.எஸ். அலுவலகத்தில் பல சந்திப்புகள் நடந்துள்ளன.
2007, டிசம்பர் 29ஆம் தேதி சுனில்ஜோஷி அவரது சகாக்களாலேயே மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார்.
இருந்தாலும், ஷீட்டல் கெலாட் என்ற ஒரு சாட்சி புலன் ஆய்வாளர்களிடம் ஜோஷியின் கொலைக்குப் பிறகு, தேவாசில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலிருந்து, இரண்டு பைகளில் துப்பாக்கிகள், இரும்புத் துண்டங்கள், மின் ஒயர்கள் முதலியன வைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக  குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சி தப்பித்து ஓடியவன், அங்கிருந்த ஒரு பையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். மற்ற பையானது நர்மதை ஆற்றில் வீசப்பட்டது.
எந்த அளவிலும்  எந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை. புலனாய்வு களை நம்பாதீர்கள் எங்களுக்கு நீதி அமைப்பில் முழு நம்பிக்கை இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸின் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் சொல்லியுள்ளார்.
அத்வானி சந்திப்பின் மர்மம் என்ன?
2005-இல் நிகழ்ந்த, பாகிஸ்தான் தலைவர் ஃபசூல் ரகுமான் எல்.கே. அத்வானி இடையே நடந்த சந்திப்பினைப் பற்றிய விளக்கங்கள் வேண்டுமென்று NCP அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்வானியுடன்கூட மற்ற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். பெருந் தலைகள்   தாலிபான் ஆதரவாளர் ரகுமானு டனான சந்திப்பில் பங்கு கொண்டுள்ளனர். டில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் நடந்த சந்திப்பில், என்ன கருத்துப் பரிமாற்றம் நடந்தது? அந்த மாதிரி தலைவர்களுடன் எந்த மாதிரியான தொடர்பு உள்ளது? என்று NCP தொடர்பாளர் நவாப்  மாலிக் கேட்டுள்ளார்.
- (தகவல்: ஹிந்துஸ்தான் டைம்ஸ் புதுடில்லி 25.1.2013)

Wednesday, January 9, 2013

இதுதான் இந்துத்துவா சித்தாந்தம்!


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு கிரக அமைப்புகளே காரணம் என்று சட்டீஸ்கர் அமைச்சர் தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் நன்கேர் என்ற இடத்தில் அரசு நடத்தும் உறைவிடப்பள்ளியில் தங்கியுள்ள சிறுமிகள் 9 பேர்களால் பாலியல் வன்முறை செய்யப்பட்டது சமீபத்தில் தெரியவந்தது. இது தொடர்பாக, பள்ளியின் காவலாளி மற்றும் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உயர்நிலை விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பல மாநிலங்களிலும் இதுபோன்ற பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங் களுக்கான காரணம் குறித்து சட்டீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் நன்கிராம் கன்வர் தெரி வித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூரில் அவர் அளித்த பேட்டியில், ஜாதகத்தில் கிரகங்களும், நட்சத்திரங்களும் மோசமான நிலையில் இருந்தால் ஒருவருக்கு தீங்கு ஏற்படும்.
பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களுக்கு கிரக அமைப்பே காரணம்; இதற்கு நம்மிடம் பதில் இல்லை.
ஜோதிடர்தான் கணிக்க முடியும் என்றார். அமைச்சர் கன்வரின் இந்தக் கேவலமான கருத்துக்கு பெண்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்வருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் படேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். படேல் தலைமையில் காங்கிரஸ் நிருவாகிகள் ஆளுநர் சேகர் தத்தை நேற்று முன்தினம் சந்தித்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் தோல்வி யடைந்துவிட்ட மாநில அரசை நீக்கக் கோரி மனு அளித்தனர்.
நாடு எந்தத் திசையில் சென்று கொண்டிருக் கிறது? கேவலங்களையும், அநாகரிகங்களையும், காட்டுவிலங்காண்டித்தனங்களையும், வன்முறை களையும், சுரண்டல்களையும், பிற்போக்குத்தனங் களையும் காப்பாற்றவும், நியாயப்படுத்தவும்தான் நம் நாட்டு மதமும், சாஸ்திரங்களும், பஞ்சாங்கங்களும், ஜோதிடமும் இருந்து வருகின்றன என்பதற்கு அமைச்சரின் கூற்றே போதுமான சாட்சியமும், ஆதாரமும் ஆகும்.
ஒவ்வொரு கேட்டுக்கும், குற்றத்திற்கும் கிரகப் பலன்களே காரணம் என்றால், மனிதர்களைக் குற்றப்படுத்த என்ன இருக்கிறது? மனிதனைத் தண்டிப்பதில்தான் அர்த்தம் உண்டா?
கீதையில் கூட சண்டை போடுவதற்கும், உறவினர் களைக் கொல்லுவதற்கும் தூபம் போடுபவனாகத் தானே கிருஷ்ண பகவான் கற்பிக்கப்பட்டுள்ளான்.
உயிர்கள் அழிந்தாலும் ஆத்மா அழிவதில்லை என்று சொல்லுவது எவ்வளவுப் பெரிய தர்ம அநீதியான ஆபத்தான உபதேசம்?
கொலைக்குற்றம் சாற்றப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் குற்றவாளி ஒருவன் தனது வாக்குமூலத்தில் நான் என் எதிரியைக் கொன்றது உண்மை; அவன் உயிரை அழித்தேனேயொழிய, அவனது ஆத்மாவை அழிக்கவில்லை என்று கீதை யில் கிருஷ்ணன் சொல்லியிருப்பதை எடுத்துக்காட்டி, நான் குற்றமற்றவன் என்று சொன்னால், நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா?
நாட்டில் நல்லொழுக்கம், நற்பண்பு, நீதிமுறை, நியாயமுறை, ஒழுங்கு முறை நிலை நிறுத்தப்பட வேண்டுமானால், மதத் தொடர்பான பிரச்சாரங்கள், வெளியீடுகள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டாக வேண்டும்.
திருப்பித் திருப்பி வெகுமக்கள் இந்தத் தீய வட்டத்தின் சுழற்சிக்குள் சிக்குண்டு கிடந்தால், அவர்களின் சிந்தனைகளில் மறுமலர்ச்சி மலர வாய்ப்புண்டா? கெட்டதைக் கெட்டது என்று அறியும் திறன் ஏற்படுமா? உண்மைக்கும், பொய்க்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்திட முடியுமா?
பெண்கள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படுவ தெல்லாம் கிரகப் பலன் என்று சொல்லக் கூடிய ஒருவர், ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சர் (பி.ஜே.பி.) என்றால், இந்த வெட்கக்கேட்டை என்னென்று சொல்லுவது!
ஒரு பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பெண்கள் வீட்டு வேலைக்குத்தான் லாயக்கு என்கிறார்; இன்னொரு பக்கத்தில் மாநில அமைச்சர் ஒருவர் பெண்கள் மீதான வன்புணர்ச் சிக்குக் காரணம் கிரகப் பலன் என்கிறார். இந்த இந்துத்துவா தத்துவத்தை ஒழிக்கவேண்டாமா? சிந்திப்பீர்!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...