Showing posts with label பிற இதழ்கள். Show all posts
Showing posts with label பிற இதழ்கள். Show all posts

Friday, January 23, 2015

மத்திய புலனாய்வுத் துறை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது இந்து நாளிதழ் தலையங்கம்

போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஜா விடுதலை

மத்திய புலனாய்வுத் துறை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது
இந்து நாளிதழ் தலையங்கம்


ஷொராபுதீன் ஷெயிக்-கின் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த குஜராத் மாநில முன்னாள் அமைச் சரும், தற்போதைய பா.ஜ.க .யின் அகில இந்திய தலை வருமான அமித் ஷா மும்பை விசேட நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருப்பது பா.ஜ.க.க்கு ஊக்கமளிப்பதாக வும், சிறப்புப் புலனாய்வுத் துறைக்கு ஒரு பின்னடைவாக வும் அமைந்துள்ளது.

தனது அரசியல் எஜமானர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதில் ஆர்வம் மிகுந்த அமைப்பு என்று தன் மீது சாட் டப்படும் குற்றச்சாட்டை மத்திய புலனாய்வுத் துறையால் மறுதளிக்க முடியாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.

இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக அமித்ஷா மீது போடப் பட்டுள்ளது என்ற பிரதிவாதி தரப்பு வாதத்தில் நியாயம் இருப்பதாகத் தோன்றுவதாக  மத்தியப் புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.பி. கோசாவி கூறியுள்ளதை அடுத்து,  நாட் டின்  பிரதான புலனாய்வுத் துறை அமைப்புக்கு தனது நம்பகத்தன் மையைத் தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது.

இந்த வழக்கில்  விசாரணைக்கு அமித்ஷா உட்படவேண்டிய தேவை இல்லை என்று கருதிய நீதிபதி வழக்கில் இருந்து அவரை விடுவிக்க முடிவு செய்துள் ளதே,  மத்திய புலனாய்வுத் துறையால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் தன்மையைப் பற்றி நிறைய கூறுவதாக உள்ளது.


புலனாய்வுத் துறையின் விசா ரணை நடைமுறையில்  குறை காண்பது மட்டுமல்லாமல்,  அதன் செயல்பாடு களுக்கு அரசியல் காரணங்கள் கற்பித்துக் கூறப்படுகின்றன.

எப்படி இருந்தாலும்,  முன்பு ஆட்சிப் பொறுப் பில் இருந்த காங்கிரஸ் அரசை மகிழ்ச்சி அடையச் செய்வதற்காக அமித்ஷா மீது பொய் யான குற்றச்சாட்டுகளை புலனாய்வுத் துறை பதிவு செய்திருப்பது உண்மை யானால், தற்போதைய பா.ஜ.க. தலை மையிலான அரசை மகிழ்விப்ப தற்காக ஷா மீது பலமில்லாத வழக்கு ஒன்றை தயாரித்து இருக்கக்கூடும் என்றும் கூறலாம் அல்லவா?

நாட்டில் அதிகாரம் மிகுந்த இரண்டாவது நபராகவும், பிரதமர் நரேந்திர மோடி யின் நெருங்கிய நண்பராகவும் அமித்ஷா விளங்குகிறார் என்பதில் அய்யமேது மில்லை. இந்தக் கேள்வியைத்தான் ஷொராபுதீனின் சகோதரர் ருபாபுதீன் ஷெய்க்கும் எழுப்பியுள்ளார்.

அண்மைக் காலங்களில் மத்தியப் புலனாய்வுத் துறையின் செயல்பாடுகளைப் பார்க் கும்போது, இந்தக் கேள்வியை அவ் வளவு எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. அமித்ஷாவின் மீது வழக்கு தொடுக்க மத்திய புலனாய்வுத் துறைக்கு அர சியல் நிர்ப்பந்தங்கள் இருந் தன என்பது உண்மையா னால்,  இந்த வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவிக்க அதே போன்ற அரசியல் நிர்ப்பந்தங்கள் புலனாய்வுத் துறைக்கு அளிக்கப்பட்டி ருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.

நீதிபதி கோசாவி தெரி வித்துள்ள கருத்துகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர் களின் செல்வாக்கில் இருந்து மத்திய புலனாய்வுத் துறையை விடுவிக்க வேண் டியதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன.

மத்திய புலனாய்வுத் துறை இயக்குநரின் பதவிக் காலம் ஒரு குறிப்பிட்ட காலவரம்பு கொண்டது, அப்பதவிக்கான நியமனம் ஓர் உயர் நிலைக் குழுவினால் செய்யப்படுகிறது என்ற போதிலும், இந்த அமைப்பு இன்னமும் மத்திய அரசின் இழுப்பு களுக்கும், நிர்ப்பந்தங்களுக்கும் இடம் அளிப்பதாகவே இருக்கக்கூடும்.

உயர்மட்டங்களில் நிலவும் லஞ்ச ஊழல் பற்றி விசாரிக்க மேற்கொள் ளப்பட்ட சிவில் உரிமை போராட் டத்தின் விளைவாக, 2013 ஆம் ஆண்டு லோக்பால் சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டதுடன், அரசியல் குறுக்கீட்டி லிருந்து மத்திய புலனாய்வுத் துறையைக் காப்பதற்கான சட்டவிதிகளும் அதில்  சேர்க்கப் பட்டுள்ளன.

ஆனால், உயர் மட்டத்தில், அமித்ஷா சம்பந்தப் படுத்தப்பட்ட இந்த வழக்கு போன்ற அரசியல் உணர்வு மிகுந்த வழக்குகளில், உயர்நீதிமன்றங்கள் கடுமையான தொடர்ந்த கண் காணிப்பை மேற் கொள்ளாமல் போனால், புலனாய்வுத் துறையின் விசாரணை பணம் பெருத் தவர்கள், அதிகார பலம் பெற்றவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக் கவும், சரி செய்யப்பட இயன்றதாகவும் இருக்கக் கூடியதுதான்.

இந்த வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஷொராபுதீன் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். எனவே வழக்கின் சாட்சியங்கள் மறுபடியும் பரிசீலனைக்கு வரக்கூடும்.

இதில்  நிச்சயமான ஏதேனும் ஒன்று இருக்கிறது என்றால்,  அமித்ஷாவுக்கு எதிரான இந்த வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை மேற் கொண்ட விசாரணை பொதுமக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை என்பதுதான் அது.

நன்றி: தி ஹிந்து 01-.01_-2015
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்


Tuesday, October 22, 2013

இருட்டை விட்டு வெளியே வரட்டும், இந்தியா டுடே!

இந்தியா டுடே வார இதழ் பெரியாருக்குத் தடை? எனும் தலைப்பில் செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது (16.10.2013, பக்கங்கள் 8, 9).
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்ட விருத்தாசலம் திராவிடர் மாணவர் கழக மாநாட்டில் மதவெறி, ஜாதி வெறி கொண்ட ஒரு சிறுகூட்டத்தார் வன்முறையில் ஈடுபட்டதைப் பற்றிக் கூறிவிட்டு, இந்தியா டுடே தன் கருத்தை எழுதுகிறது! எப்படி தெரியுமா?
இந்த சம்பவம், தமிழகத்தில் பெரியார் கொள்கை களை இனி சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்ய முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது என்று எழுதுகிறது இந்தியா டுடே!
இது இந்தியா டுடேயின் ஆசையா? அல்லது நடைமுறை உண்மையா?
(1) எதிர்ப்பு நெருப்பாற்றில் நீச்சல் போட்டுப் போட்டுத்தான், இந்த இயக்கம் மகத்தான வெற்றி களைக் குவித்திருக்கிறது.
தந்தை பெரியார் பேசிய கூட்டங்களில் எல்லாம்கூட செருப்புகள் வீசப்பட்டதுண்டு - கற்கள் வீசப்பட்ட துண்டு - முட்டையில் ஓட்டைப் போட்டு, அதில் மலத்தை வைத்து பெரியார்மீது வீசியதுண்டே! சால்வையால் அதைத் துடைத்து எறிந்துவிட்டு, தன் பிரச்சாரத்தைத் தொடர்ந்தாரே தவிர, தொடை நடுங்கி ஒதுங்கிடவில்லை.
சின்னாளப்பட்டியில் கடுமையாக கற்கள் வீசப்பட்ட நேரத்தில், தானும் முண்டாசு கட்டிக்கொண்டு, கூட்டத்தில் கலந்துகொண்டவர்களையும் முண்டாசு கட்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட நிகழ்வுகள் எல்லாம் உண்டே!
இவற்றையெல்லாம் சந்தித்தே - தந்தை பெரியாரை ஒட்டுமொத்தமான சமூகமே ஏற்றிப் போற்றிடும் ஒரு நிலையைத் தன் வாழ்நாளிலேயே கண்டு கண் மூடினார்.
தேர்தல் அரசியலில் தன்னையோ, தன் இயக்கத் தையோ ஈடுபடுத்தாத தந்தை பெரியாருக்கு இந்த அமைச்சரவையே காணிக்கையாக்கப்பட்டது என்று ஒரு முதலமைச்சர் (அறிஞர் அண்ணா) சொன்னார் என்றால், அது என்ன சாதாரணமா?
இது சூத்திரர்களின் அரசு என்று சட்டப்பேரவை யில் ஒரு முதலமைச்சர் (கலைஞர்) கூறியதெல்லாம் எந்த அடித்தளத்திலிருந்து?
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களை எடுத்துக்கொண்டால்கூட, இத்தகு தாக் குதல்கள் ஒன்றும் புதியன அல்ல - இதற்கு முன்புகூட நான்கு முறைகள் அவர் உயிருக்குக் குறி வைக்கப்பட்ட துண்டே! அதனால் என்ன ஓய்ந்துவிட்டாரா? பொதுத் தொண்டிலிருந்துதான் ஒதுங்கிவிட்டாரா?
உலகத்தில் எந்த நாட்டிலும் கேள்விப்படாத அள வுக்குப் பொது இடங்களில் தந்தை பெரியார் சிலைகளை எழுப்பி, கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டுதானே வருகிறது - இப்பொழுதும்!
அதனை எதிர்த்து நீதிமன்றங்களுக்குச் சென்றதும் உண்டே! ஆன்மிகவாதியான ஜஸ்டிஸ் திரு.மு.மு.இஸ் மாயில் அவர்களே கூட வழக்கைத் தள்ளுபடி செய்து, பெரியார் சிலையில், பெரியார் கருத்துகளைப் பொறிக் காமல், வேறு யாருடைய கருத்துகளைப் பொறிக்க வேண்டும்? என்று மண்டையில் அடித்துத் தீர்ப்புக் கூறினாரே!
பெரியார் மறைந்த ஓராண்டு நிறைவு நாளிலே இராவண லீலா நடத்தி, ராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களைக் கொளுத்தியது திராவிடர் கழகம்தானே - அன்னை மணியம்மையார்தானே - வழக்குப் போட்டார் களே - வெற்றி பெற்றனரா? மாறாகக் கழகம் அல்லவா வெற்றி பெற்றது.
எதிர்ப்பைப்பற்றி, உயர்த்தி எழுதுகிறார்களே! உண்மை என்ன? திராவிடர் கழகத் தலைவர் பயணம் செய்த வாகனத்தின்மீது தடிகொண்டு தாக்கிய தடியர்களைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டவர்கள்தானே அதிகம். விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை என்றால், அதற்குள் அரசியலும், கூட்டணியும் இரகசியமாக இருக்கிறது - அவ்வளவே!
(2) இன்னொன்றை புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டு எழுதி இருக்கிறது - இந்தியா டுடே. கடவுள் என்று ஒன்று இல்லை. எனவே, அதனை இழிவுப்படுத்திப் பேசவேண்டிய அவசியம் இல்லை ஆசிரியர் வீரமணிக்கு என்று சொல்லுகிறது.
கடவுள் என்ற ஒன்று இல்லை என்று இந்தியா டுடே ஒப்புக்கொண்டதே கூட, திராவிடர் கழகத்திற்கும், அதன் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும் கிடைத்த வெற்றியே!
இன்னொன்று கடவுளை இழிவுபடுத்திப் பேசவேண் டிய அவசியம் இல்லை என்று இதோபதேசம் செய்தும் உள்ளது.
எதை - எந்தக் கடவுளை இழிவுபடுத்திப்பேசி இருக் கிறார் வீரமணி? மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்ற தோரணையில் எழுதலாமா?
இராமன் என்றும், கிருஷ்ணன் என்றும், விநாயகன் என்றும், சிவன் என்றும், பிரம்மா என்றும், சரஸ்வதி என்றும் கடவுள்கள்பற்றிப் புராணங்களை எழுதியது திராவிடர் கழகத் தலைவரா?
இந்தப் புராணங்களில் இந்தக் கடவுள்கள் பிறப்பு எல்லாம் ஆபாசமாகத்தானே எழுதப்பட்டுள்ளது.
பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து உருட்டித் திரட்டியவன்தானே விநாயகன் என்று எழுதி வைத்ததும்; - அதனை இன்றுவரை நம்பி விநாயகன் ஊர்வலங்களை நடத்துவதும் - அதனை மய்யப்படுத்தி சிறுபான்மை மக்களைத் தாக்குவதும் சரியானதுதானா?
சரஸ்வதியின் தந்தையும் பிரம்மா - கணவனும் பிரம்மா என்று எழுதப்பட்டுள்ளதே - இந்தக் கேவலத்தை எப்பொழுதாவது சுட்டிக்காட்டி - நாட்டு மக்களுக்கு நல்லதைச் சொல்லியிருக்கிறதா இந்தியா டுடேக்கள்?
ஒழுக்கமாகக்கூட ஒரு கடவுளை உண்டாக்க முடிய வில்லையே - அதற்காக வெட்கப்படவேண்டாமா?
பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையில் கூறப்பட்டுள்ளதே - இப்படிக் கூறுபவன் பகவான் கிருஷ்ணன் என்று கூறு வதும், அந்தக் கீதையை ஒப்பற்ற நூல் என்று புகழ்வதும் மதிமயக்கத்திலும், மூட நம்பிக்கைச் சகதியிலும் மூழ்கிக் கிடப்பவர்களுக்குச் சரியானதாகப் படலாம். காரணம், பக்தி வந்தால்தான் புத்தியைப் பயன்படுத்துவது இல்லையே!
ஆனால், சமூக அக்கறையும், ஒழுக்கத்தின்மீது உயர்நாட்டமும் - அறிவின்மீது அளப்பரிய ஆர்வமும் கொண்டவர்களுக்கு ஆபாசங்களையும், இழிவையும், அறியாமையையும் சுட்டிக்காட்டி, தேவைப்பட்டால் இடித்துக் காட்டிச் சொல்லவேண்டிய சமூக அக்கறை யும், கடமை உணர்ச்சியும் எங்களுக்கு இருக்கிறது!
அது இந்தியா டுடேயிடம் இல்லை என்றால், அய்ம்பொறிகளையும் பொத்திக்கொண்டு நாய் விற்ற காசு குரைக்காது என்ற தன்மையில் வியாபாரப் பொழைப்பை நடத்திக் கொள்ளட்டும்!
அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை அறிவு வெளிச்சப் பாதைக்கு அழைத்து வருவதையும் ஆண்டாண்டுக் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதிக்காக அயராது பாடுபடுவதை யும், பெண்ணடிமைத் தனத்தின் முதுகெலும்பை முறித்து ஆணுக்கு நிகர் பெண்கள் என்ற பாலியல் உரிமை களுக்காகக் குரல் கொடுப்பதையும், பிறவியில் பேதம் பேசும் வருணதர்மத்தையும், அதனைக் கட்டிக் காக்க உருவாக்கப்பட்ட கடவுள்கள், புராணங்கள், இதிகாசங் கள், சாஸ்திரங்களை எதிர்ப்பதையும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்குவதையும் உயிர் மூச்சாகக் கொண்டு, எந்தவித சுயநலச் சிறைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல், பதவிப் பக்கம் தலைவைத்துப் படுக்காமல், சொந்த வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு, ஊருக்காக உழைக்கும் கழகத்தையும், அதன் தன்னிகரற்ற தலைவரையும் சரியாக எடை போடாமல் எழுதவேண்டாம் - இந்தியா டுடேக்கள்!

Thursday, February 7, 2013

தாலிபான் ஆதரவாளருடன் ஆர்.எஸ்.எஸ். - அத்வானி சந்திப்பு


தாலிபான் ஆதரவாளருடன் ஆர்.எஸ்.எஸ். - அத்வானி சந்திப்பு இந்துஸ்தான் டைம்ஸ் தரும் திடுக்கிடும் தகவல்கள்


புதுடில்லி, பிப்.7- பாகிஸ்தானின் தாலிபான் தலைவ ருடன் அத்வானி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் சந்தித்தது குறித்து திடுக்கிடும் தகவல் களை இந்துஸ்தான் டைம்ஸ் அம்பலப்படுத்தி யுள்ளது.
பா.ஜக. தலைவர் அத்வானி ஃபசூல் அர் ரகுமான் என்ற பாகிஸ்தான் தலைவரை 2005ஆம் ஆண்டில் சந்தித்துள்ளார். ரகுமான், தாலிபான் ஆதரவாளர் என்று சொல்லப்படுபவர். ஏன் ஆர்.எஸ்.எஸ்.,  பா.ஜ.க. , தலைவர்கள் அவரைச் சந்திக்க வேண்டும்? பல நேரங்களில் இந்திய  கிரிக்கெட் போட்டிகளையே பல தடவை பொறுத்துக் கொள்ளாதவர்கள் அவர்கள்.
அந்த சந்திப்பில் எதுபற்றி விவாதிக்கப்பட்டது என்பதை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., தெரிவிக்கவில்லை.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் பயன்படுத்தப்பட்டன
- தேசிய புலனாய்வுக் கழகம்
ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் வலதுசாரி தீவிரவாதி களின், பயங்கரவாதச் செயல்களைப்பற்றி சதித் திட்டம் தீட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுவ தாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ராஷ்டிரீய சுயம் சேவக் சங்கத்தின் நாக்பூர் அலுவல கத்தில் இந்த்ரேஷ்குமார் என்ற மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர். வலதுசாரி தீவிரவாத மூளை எனப்படும் சுனில் ஜோஷி என்பவரை 2006ஆம் ஆண்டு மே மாதத்தில் சந்தித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
வெடிமருந்து வாங்க ரூ.50 ஆயிரம் பணம்
சுனில்ஜோஷி, மேலும், சம்ஜிவாதா வழக்கில் சாட்சியாகவும் ஆஜ்மீர் ஷரீப் வழக்கில் பின்னாளில் குற்றம் சாட்டப்பட்டவருமான பாரத் பாய் என்பவருடன் அசி மானந்த் என்பவரும் நாக்பூர் சென்று  இந்த ஜோஷியை சந்தித்துள்ளனர். அவர், அவர்களுக்கு வெடி மருந்து மற்றும் இதர பொருள்கள் வாங்குவதற்காக ரூபாய் 50,000 கொடுத்ததாக சம்ஜுவாதா (Samthauta)  குற்றப் பத்திரி கையில் கூறப்பட்டுள்ளது.
வலதுசாரி தீவிரவாத வழக்குகள் எதிலும், இந்த் ரேஷ் பங்கு பெற்றதாகக் குற்றம் சாட்டப்படவில்லையானாலும் அவரது பங்களிப்பு பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்த்ரேஷ்  சார்பாக வழக்கறிஞர் மீனாட்சி லேகி, இவையெல்லாம் பொய்த் தகவல்கள்; சிமி இயக்கத் தலைவர் சைதர் நகோரி மீது நடத்தப்பட்ட மன இயல் ஆய்வு உட்பட பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்ட சம்ஜுவாதா குண்டுவெடிப்பு பற்றிய அரசின் ரகசிய ஆவணங்கள் ஆரிஃப் காஸ்மானி என்ற லஸ்கர் என்ற பொருளுதவி செய்ததானது பற்றியதும் அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானமும் பற்றிய 3500 பக்கங்கள் கொண்ட அறிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றார்.
சந்தித்தது உண்மையே!
புலனாய்வாளர்கள் பாரத் பாயிடம் பேசியபோது, அவர், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், இந்த்ரேசையும், சுனில் ஜோஷியையும் சந்தித்ததை ஒப்புக் கொண் டுள்ளார்.
இந்த்ரேஷ் மனேஜீக்கு, சுனில் ஜோஷி ரூ.50,000 கொடுத்தார். அவர்கள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர். எதற்காக அவர் பணம் கொடுத்தார் என்று கேட்டதற்கு  மனேஜ், ஒரு முக்கிய  மான காரியத்துக்காகக் கொடுத்ததாக சொன்னார். அவர்களது தொடர்பு பற்றிய மேலும் இரு நிகழ்வுகள்  உள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் 1999ஆம் ஆண்டில் டங்கர்கான் என்ற இடத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில்,  சுனில் ஜோஷியும் அவரது மற்ற 2 சகாக்களும் சேர்ந்து வெடிப் பொருள்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். சுனில் ஜோஷி  கொல்லப்பட்டார்
ஆஜ்மீர் சபரி குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள  மிஜோரம் என்ற இடத்தில் உள்ள ஆர். எஸ்.எஸ். அலுவலகத்தில் பல சந்திப்புகள் நடந்துள்ளன.
2007, டிசம்பர் 29ஆம் தேதி சுனில்ஜோஷி அவரது சகாக்களாலேயே மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார்.
இருந்தாலும், ஷீட்டல் கெலாட் என்ற ஒரு சாட்சி புலன் ஆய்வாளர்களிடம் ஜோஷியின் கொலைக்குப் பிறகு, தேவாசில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலிருந்து, இரண்டு பைகளில் துப்பாக்கிகள், இரும்புத் துண்டங்கள், மின் ஒயர்கள் முதலியன வைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக  குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சி தப்பித்து ஓடியவன், அங்கிருந்த ஒரு பையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். மற்ற பையானது நர்மதை ஆற்றில் வீசப்பட்டது.
எந்த அளவிலும்  எந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் தீவிரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை. புலனாய்வு களை நம்பாதீர்கள் எங்களுக்கு நீதி அமைப்பில் முழு நம்பிக்கை இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸின் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் சொல்லியுள்ளார்.
அத்வானி சந்திப்பின் மர்மம் என்ன?
2005-இல் நிகழ்ந்த, பாகிஸ்தான் தலைவர் ஃபசூல் ரகுமான் எல்.கே. அத்வானி இடையே நடந்த சந்திப்பினைப் பற்றிய விளக்கங்கள் வேண்டுமென்று NCP அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்வானியுடன்கூட மற்ற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். பெருந் தலைகள்   தாலிபான் ஆதரவாளர் ரகுமானு டனான சந்திப்பில் பங்கு கொண்டுள்ளனர். டில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் நடந்த சந்திப்பில், என்ன கருத்துப் பரிமாற்றம் நடந்தது? அந்த மாதிரி தலைவர்களுடன் எந்த மாதிரியான தொடர்பு உள்ளது? என்று NCP தொடர்பாளர் நவாப்  மாலிக் கேட்டுள்ளார்.
- (தகவல்: ஹிந்துஸ்தான் டைம்ஸ் புதுடில்லி 25.1.2013)

Friday, January 4, 2013

மனிதர்களை படிக்கிறேன்


வழக்கறிஞர், ஆசிரியர் கி.வீரமணி 80ஆவது பிறந்த நாள் - வாழ்த்துப் பெறுவோம்
திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை நாளிதழ் ஆசிரியரும், வழக்கறிஞருமான திரு. கி.வீரமணி அவர்கள் தனது 80ஆவது பிறந்த நாளை டிசம்பர் 2ஆம் தேதி கொண் டாடினார்.
தமிழர் தம் பண்பாட்டில் - 80 வயதில் வாழ்ந்து தொடர்ந்து வெற்றி நடைபோடும் மூத்த குடிமக்களிடம் வாழ்த்துப் பெறுவது சமூக கடமையாக கருதப்படுகிறது. வாழ்த்துப் பெறுவது மன மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு மேலும் மேலும் உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங் கும். 80ஆவது பிறந்த நாள் விழாவை சென்ற டிசம்பர் 2ஆம் தேதி தமிழ் கூறு நல்லுலகமே ஒன்று சேர்ந்து ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடியது.
விடுதலை நாளிதழில் ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் இவரை ஆசிரியர் என்று கூறி அழைப்பதில் தமிழ் கூறும் நல்லுலகம் மகிழ்ந்து பாராட்டுகிறது. தமிழர் துன்பப்படும்போதெல்லாம் அவர்களுக் காக குரல் கொடுக்கவும், தமிழர் களுடைய உரிமைகள் மறுக்கப்படுகிற போதெல்லாம் அவர்களுக்காக போராடுவதும், தமிழர்களுடைய பண்பாடு சிதைக்கப்படுகிறபோது அதை எதிர்த்து குரல் கொடுப்பதும் இருவடைய நற்றொண்டு. தொடர்ந்து தன் இளம் பருவத்திலிருந்து இன்று வரை அயராது உழைத்து வருபவர்தான் திரு. கி.வீரமணி. தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையால் ஈர்க் கப்பட்டு, சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பகுத்தறிவு இயக்கம், திராவிடர் கழகம் இணைந்த சமூக பொருளாதார மறுமலர்ச்சி இயக்கத் தில் சேர்ந்து தன்னுடைய இளமைக் காலம் தொட்டு கடந்த 70 ஆண்டு காலமாக தொடர்ந்து பணியாற்றி வருபவர்தான் திரு கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட திராவிடர் கழகம் தமிழர்களுடைய வளர்ச்சிக்காக, திராவிட இன மேம்பாட்டுக்காக, திராவிடர்களுக்கு என்று தனி நாடு பெற வேண்டும் எனும் நோக்கத் திற்காக இந்தியா விடுதலை அடையும் வரையில் போராடியது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் திராவி டர்களை மேன்மை பெறச் செய்யவும், திராவிட இன மக்கள் சுயமரியாதையுடன் வாழவும் அதன் மூலம் சமூக அந்தஸ்தில், அரசியலில், அரசாங்கத்தில், உரிய இடத்தை பெற வேண்டும் எனும் சமூக நீதிக்காக காலமெல்லாம் இயக்கம் நடத்தி வந்த தந்தை பெரியார் அவர்களுக்கு உறுதுணையாக, சீடராக, தொண்டராக, செயலாளராக, திராவிடர் கழகத்திற்கு பொதுச் செயலாளராக பணியாற்றி தலைவராக உயர்ந்தவர்தான் திரு. கி.வீரமணி அவர்கள்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் எம்.ஏ. பொருளாதாரத்தில் தங்கப் பதக்கம் பெற்று முதலாவது மாணவராக பட்டம் பெற்று தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியிலும் சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றியவர் திரு. கி.வீரமணி அவர்கள்.
10 வயது முதல் இன்றுவரை சமூகப் பணி, பொதுப் பணி, சட்டப் பணி, சுய மரியாதைப் பணி என பல்வேறு பணி களில் முத்திரை பதித்து, மனித இனத்தை சமநோக்கில் எடுத்துச் செல்லவும், உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்கிற பேதத்தை ஒழித்து, சமதர்ம சமுதாயத்தை படைக்க கடவுள் மறுப்புமூலம்தான் மனித உரிமையை நிலைநாட்ட முடியும் என்ற தந்தை பெரியார் கொள்கையை ஏற்று தீவிரமாக பணியாற்றியவர் திரு. கி.வீரமணி அவர்கள்.
1976இல் இந்தியாவில் அவசரக் காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது போலீசாரால் கைது செய்யப்பட்டு ஓராண்டு மிசா கைதியாக சிறைக்கூடத் தில் இன்னல்களை எதிர்கொண்டவர் திரு.கி.வீரமணி அவர்கள்.
தமிழ்நாட்டில் அனைத்து கிராமங் களுக்கும், குக்கிராமங்களுக்கும், நகரங் களுக்கும் பயணம் செய்து தமிழர்களைத் தட்டி எழுப்பிய திறமைமிகு பேச்சாளர் திரு கி.வீரமணி அவர்கள். தந்தை பெரியார் கொள்கையை  இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் தலைமைத் தளபதியாக எடுத்துச் சென்று பணியாற்றி வந்தார், வருகிறார்.
திரு. கி.வீரமணி அவர்கள் சமூகநீதிக் கொள்கையையும், அதை நடை முறைப்படுத்திய விதத்தையும் பாராட்டி 2003ஆம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி அவரது சாதனைகளுக்கு பல்கலைக் கழக அங்கீகாரம் வழங்கியது. தமிழ் நாட்டில் - இந்தியாவில் வாழும் திராவி டர்கள் ஏன் உலகம் முழுவதும் வாழ்கிற திராவிடர்களுடைய வளர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டு வரும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், திராவிடர் தலைவர் கி.வீரமணி என்று அழைக்கவும் பொருத்தமானவராவார்.
ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர் களை நான் மாநில கல்லூரியில் 1974இல் படித்துக் கொண்டிருந்தபோது முதன் முதலாக சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை அவரை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சந்திப்பதையும், அவரிடம் சமூகநீதி, தமிழர் வளர்ச்சி குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளுவதையும் நான் எப்பொழுதும் வாடிக்கையாக கொண்டிருப்பேன். தமிழர் களுள் எவரொருவர் திறமையானவராக இருந்தாலும் அவரை அழைத்து ஊக்கு விப்பதும், பாராட்டி மகிழ்வதும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைசிறந்த பண்புகளில் ஒன்றாகும். அதன் அடிப் படையில் ஆசிரியர் அவர்கள் பல நேரங் களில் சட்டக்கதிர் பணியினையும், அதைத் தொடர்ந்து 20 ஆண்டு காலமாக நான் நடத்தி வருவதைக் கண்டும் மகிழ்ச்சி அடைவதோடு சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பில் சட்டக்கதிரை பாராட்டி விருதும் வழங்கி மகிழ்ந்தார். நன்றி என்பதைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் பிரச்சினைகள் வருகிறபோ தெல்லாம் தமிழர்களுக்கெல்லாம், முரசாய், கேடயமாய் விளங்கி வருபவர் திரு. கி.வீரமணி அவர்கள்.
வழக்கறிஞர் கி.வீரமணி அவர்கள் செல்வி மோகனா அவர்களை திருமணம் செய்து கொண்டார். இது கலப்புத் திருமணம். இவர்களுக்கு இரண்டு மகன் களும், மகளும் உள்ளனர். இவர்களும் கலப்புத் திருமணம் செய்துகொண் டனர். ஜாதி, மதம், கடவுள் மறுப்பு கொள்கையில் இவரது குடும்ப உறுப்பி னர்கள் உறுதி யுடன் இன்றுவரை கடைப்பிடித்து வரு கின்றனர். இவரது மகன் திரு.அன்புராஜ் தலைசிறந்த கல்வியாளராக தன்னை உயர்த்திக் கொண்டு தன் தந்தையின் கொள்கை களை தொடர்ந்து உலகமெல்லாம் உள்ள தமிழர்களிடம் எடுத்துச் செல்லும் தளபதியாக விளங்கி வருகிறார்.
சமூகநீதிக் காவலராக விளங்கும் திரு.கி.வீரமணி அவர்களுக்கு இந்தி யாவின் உயரிய விருதான பத்மசிறீ விருது வழங்கி அவர் செய்துவரும் பணியினை ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டை சார்ந்த அரசியல்வாதி மணிசங்கர் அய்யர், நடிகைகள் வைஜயந்திமாலா, ஹேமமாலினி, ரேகா, அறிவியல் அறிஞர் எம்.எஸ். சாமி நாதன், பத்திரிகையாளர் சோ ராமசாமி, வழக்கறிஞர் பராசரன், அணுவிஞ் ஞானி கஸ்தூரிரங்கன் ஆகியோர் குடியரசுத் தலைவரால் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட் டுள்ளனர். சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் திராவிடர்களின் கலை பண்பாட்டினை பிரதிபலிக்கும் விடு தலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்க தமிழக தலைவர்கள் குடியரசுத் தலை வருக்கு பரிந்துரை செய்திட வேண்டும்.
80ஆவது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் திரு. வீரமணி அவர்கள் வழக்கறிஞராகவும், சமூக சேவையாள ராகவும், கடவுள் மறுப்பாளராகவும், சமுதாய சீர்திருத்தவாதியாகவும், திராவிடர்களின் தலைவராகவும் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து  பணி யாற்றி வருபவர். அவரை வாழ்த்து வதிலே, வாழ்த்துப் பெறுவதிலே சட்டக் கதிர் மகிழ்ச்சி கொள்கிறது. அவர் மேலும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் கூறு நல்லுலகத்திற்கு பணியாற்ற வேண்டும் என்பதனையே திராவிட இன மக்கள் என்றும் எதிர்நோக்கிக் காத்திருக் கிறார்கள்.
வாழ்க, வாழ்க பல்லாண்டு.
(நன்றி: சட்டக்கதிர் சனவரி 2013)

Monday, December 24, 2012

ஆனந்த விகடன் பொக்கிஷம்


வேப்பேரியில் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் அருகில் ரண்டால்ஸ் ரோட்டில் உள்ள பெரியார் திடலில், பெரியார் ஈ.வெ.ரா. அடக்கம் செய்யப்பட்டதற்கு மறுநாள் - காலை 9 மணி. சிங்கம் உலாவிய குகை ஒன்றைப் பார்ப்பதுபோன்ற உணர்ச்சி ஏற்படுகிறது.
திடலில் கூட்டங்கள் நடக்கும் கொட்டகைக்கு வலதுபுற மூலையில் பெரியார் நினைவுச் சின்னம் இருக் கிறது. ஓர் ஓரத்தில் பெரியார் கடைசியாகப் பயன்படுத்திய 9595 எண் உள்ள வேன் நிற்கிறது. வேனுக்கு மேல் சக்கர நாற்காலி மடங்கிக் கிடக்கிறது. ஆகஸ்ட் மாதம் பெரியாருக்கு இந்த வேன் வழங்கப்பட்டது. வேனின் ஒரு கதவை மேடை போல மாற்றி, பொதுக் கூட்டங்களில் அதிலேயே அமர்ந்து அவர் பேச வசதி செய்யப்பட்டு இருந் தது. 19ஆம் தேதி தி.நகரில் கடைசி யாக நடந்த பொதுக் கூட்டத்தில், இந்த வேனில் அமர்ந்துதான் பேசினார் பெரியார்.
பேச்சின் இடையில் திடீரென்று அவர், ஐயோ... அம்மா... என்று உரத்த குரலில் வலி தாங்காமல் வேதனையுடன் கூவினார். கூட்டமே திடுக்கிட்டு என்ன... என்ன? என்று வேனை நோக்கிப் பாய்ந்தது. ஆனால், பிறகு பெரியார் எப்படியோ சமாளித் துக் கொண்டு நீண்ட நேரம் பேசி னார்.
பங்களா வேண்டாம்!
பெரியார், ஹெச்.டி. ராஜா, ஜி.டி. நாயுடு மூவரும் சேர்ந்து வாங்கிய பகிர்ந்து கொண்ட இடத்தில் பெரியார் திடல் உருவானது. விடுதலை அலுவலகம் அங்கேதான் இருக்கிறது. அதன் ஒரு  பகுதியிலேயே பெரியார் இல்லம் இருக்கிறது. திடலில் நுழைந்ததும் கட்டிலில் பெரியார் அமர்ந்திருக்கும் காட்சிதான் முதலில் கண்ணில் படும்.
சிந்தாதிரிப்பேட்டையிலும் பெரியா ருக்கு ஒரு வீடு இருக்கிறது. அங்கே சந்தடி அதிகம் என்று அவர் தங்கு வதற்காகப் பெரியார் திடலிலேயே பெரிய பங்களா ஒன்று கட்டப்பட்டது. பெரியார் அந்த பங்களாவை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டார். இவ்வளவு பெரிய பங்களா எனக்கு எதற்கு? என்று அங்கே தங்க மறுத்துவிட்டார். பிறகு, விடுதலை அலுவலகத்தின் ஒரு பகுதியே இல்லமாயிற்று. பெரியார் தங்கியிருந்த இடம் எளிமையாகக் காட்சி தருகிறது. காலியாக உள்ள பெரியார் கட்டிலின் எதிரே, சோகமே உருவாக மணியம்மை அமர்ந்திருந்தார்.
பற்கள் கிடையாது...
பொதுக் கூட்டங்கள் இல்லாத நாட்களில் இரவு 7.30 மணிக்குப் படுக்கச் சென்றுவிடுவார் பெரியார். காலையில் சீக்கிரம் எழுந்து விடுவார். கொதிக்கத் கொதிக்க ஒரு கப் காபி சாப்பிடுவார். பிறகு சற்று நேரம் கழித்து இரண்டு இட்லி மலைப்பழம் சாப்பிடுவார். பழங் களில் மலைப் பழம்தான் பெரியாருக்குப் பிடித்தது. பிற்பகல் 12 மணிக்குக் குறை வான சோற்றுடன் மட்டன் சாப்பிடுவார். சாதம் குழைவாக இருக்க வேண்டும். மட்டன் நன்றாகப் பக்குவம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இரண்டு மூன்று கறி வகைகள் கூடாது ஏதாவது ஒன்றுதான் இருக்க வேண்டும்.
சரியாக 2.30 மணிக்கு அம்மா என்று மணியம்மைக்குக் குரல் கொடுப்பார். காபி வர வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு காபிதான். இடையே வேறு எதுவும் சாப்பிட மாட்டார். ஆனால், கழகத் தொண்டர்கள் அன்புடன் கொடுப்பதை மட்டும் சாப்பிடுவதுண்டு. ஒரு வேளை தான் சாப்பாடு. உணவுக்குப் பிறகு, கட்டித் தயிரில் சர்க்கரை போட்டுச் சாப்பிடுவார். இனிப்புகளை பெரியார் நிறையச் சாப்பிடு வார். இறுதி வரை அவருக்கு சர்க்கரை  வியாதியோ, ரத்த அழுத்தமோ வர வில்லை. ஹெர்னியா தொல்லை மட்டும் பல ஆண்டுகளாக இருந்தது.
பெரியாருக்குப் பற்கள் கிடையாது. ஆனால், அவர் பேசுவதையோ, சாப்பிடு வதையோ பார்த்தால் அது தெரியாது. ஈறு பலமாக இருந்தது. முறுக்குகளைக் கூட பெரியார் மென்று சாப்பிடுவார்.
கடைசி நாள்கள்...
டிசம்பர் 21ஆம் தேதி வட ஆர்க்காடு பயணம் தொடங்க இருந்தார் பெரியார். ஆனால் 20-ஆம் தேதி பிற்பகல் ஹெர் னியா தொல்லையால் வலி கண்டு சென்னை பெரியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.
அச்சமே இல்லாத பெரியாருக்கு, ஊசி குத்திக் கொள்வது என்றால் மட்டும் குழந் தைகளைப் போலப் பயம். பார்த்துக் குத் துங்க... என்று சொல் வார். சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன், அந்த அறையில் இதற்கு முன்பு யார் இருந்தார்கள். அந்த நபருக்கு என்ன சிகிச்சை நடந்தது என்றெல்லாம் விசா ரித்து இருக்கிறார். ஏனோ, வேலூருக்குச் சென்று சிகிச்சை பெறவே அவர் விரும்பினார். அவர் விருப்பப்படியே 21ஆம் தேதி பிற்பகல் வேலூர் மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள்.
வேலூரில் சேர்த்தவுடன் ஓர் இன் ஜெக்ஷன் போட்டிருக்கிறார். டாக்டர் பட். உணவு, ஊசி மூலம் செலுத்தப்பட்டது. அன்று இரவு நன்றாகத் தூங்கியிருக் கிறார். மறுநாள் 22ஆம் தேதி காலை 8.30 மணிக்கு எழுந்து, பேப்பர்களைப் படித் திருக்கிறார். ஹார்லிக்ஸ் சாப்பிட்டார். தூங்குவதற்காகத் தூக்க மருந்து கலந்த ஊசி போடப்பட்டது.
பிற்பகல்  2 மணிக்கு வீரமணி என்று அழைத்து, வயிற்றில் வலி மிகுதியாக இருப்பதாக டாக்டரிடம் சொல்லும்படி கூறி இருக்கிறார். வீரமணி டாக்டரை அழைத்து வந்தார். வாயுவினால் வலி இருக்கலாம் என்றும், எனிமா கொடுத்து வயிற்றைக் காலி செய்தால் சரியாகும் என்றும் கூறிய டாக்டர், எனிமா கொடுத்தார். வயிறு சுத்தமான பிறகு, பெரியாருக்கு வலி குறைந்திருக்கிறது. அன்று இரவு 8 மணி வரை சரியாக இருந்தார்.
நள்ளிரவு 12 மணிக்கு பெரியாருக்குத் திடீரென்று மூச்சு வாங் கியது. தூங்கும்போது வாய் மூலம் சுவாசிக்கும் பழக்கம் உள்ளவர் பெரியார். அதனால் தொண்டைச் சளி கட்டிக் கொண்டு சிரமப்பட்டு இருக்கிறார். டாக்டர் இன்ஜெக்ஷன் கொடுத்தவுடன் சற்று சரியாயிற்று.
23ஆம் தேதி தூக்க மருந்து கொடுக்கப்பட்டதால் நல்ல தூக்கத் தில்  இருந்திருக்கிறார். ஆனால், உணர்வு இழக்கவில்லை. மணியம்மை குளுகோஸ், கொடுத்தபோது,  என்ன அய்யா, வாயில் ஊத்த ணுமா? நீங்களே கையில எப்பவும் மாதிரி வாங்கிச் சாப்பிடுங்களேன் என்று கூறியபோது, பெரியார் கையில் வாங்கி குளுகோஸ் குடித்தார். புரை ஏறியிருக்கிறது. தலையில் தட்டிக் கொண்டார். எதையாவது சாப்பிட் டால் தாடியை அழுத்தமாகத் துடைத் துக் கொள்வதுபோல அப்போதும், துடைத்துக் கொண்டார் என்றார் வீரமணி.
23ஆம் தேதி இரவு மூச்சு வாங்க ஆரம்பித்தது. பல முறை பேசி கெஞ்சிக் கெஞ்சி ஆக்ஸிஜன் டியூப்பை பெரி யாரின் மூக்கில் வைத்தார் டாக்டர் ஜான்சன். ஆனால் பெரியார் அதைப் பிடுங்கி எறிந்துவிட்டார். கடைசியில் முகமூடி போன்று இருக்கும் ஆக்ஸி ஜன் குழாயைப் பொருத்தினார்கள்.
24ஆம் தேதி துயரம் மிக்க அந்தப் பொழுது விடிந்தது. பல்ஸ் குறைந்து டாக்டர்கள் நம்பிக்கை இழந்தார்கள். காலை 7.10 மணிக்கு மசாஜ் செய்து, இதயத்தை இயங்கச் செய்ய முயன் றார்கள். நேரிடையாக இதயத்துக்கு ஊசி போட்டார்கள். 7.22-க்கு பெரி யாரின் உயிர் மெதுவாகப் பிரிந்தது.
யார் இறந்தாலும் அழக் கூடாது என்பது அய்யாவின் கொள்கை. உயிர் பிரிந்த அய்யாவின் சடலத்தை அம்மா (மணியம்மை) அவர்கள் அப்படியே சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார். பின்னர் 22 ஆண்டு களுக்கு முன்பு ஒரு சமயம் அய்யா அவர்கள் அவருக்கு அளித்த புட வையை எடுத்துவந்து, அவர் கால் மீது வைத்துவிட்டு அப்படியே நின்றார். அவர்கள் அப்படி நிற்பதைக் கண்டு சம்பத் உட்பட நாங்களும் கண்ணீரை அடக்கிக் கொண்டு நின்றோம். அங்கே பேரமைதி நிலவியது. பிறகு, அந்தப் புடவையைக் காலடியில் இருந்து எடுத்து உடனே உடுத்திக் கொண்டார். எல்லோரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு, பெரியாருடைய கறுப்புச் சட்டையையும் கைலியையும் - கொண்டு வரச் செய்து, அவற்றை அய்யா அவர்களுக்கு அணிவித்தார். பெரியார் உடல் அருகே அசையாமல் அமர்த்திருந்த அம்மா, வேனில் உடலை ஏற்றி வேலூரைவிட்டுப் புறப்பட்டவுடன் துக்கம் தாளாமல் கணவரின் காலடி யில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கதறித் தீர்த்துவிட்டார்
உணர்ச்சிமிக்க இந்த நிகழ்ச் சியைக் கண்கள் கலங்கக் கூறினார். விடுதலை வீரமணி.
- ராவ்
(நன்றி: ஆனந்தவிகடன் 26.12.2012)

Friday, October 26, 2012

ராமலீலா கொண்டாடுவோர் பார்வைக்கு?


இராமாயணத்தைப் பொறுத்தவரை இராவணன் வில்லன். ஆனால் இராவ ணனைத் தெய்வமாக வணங்கும் கிராமமும் நம் நாட்டில் இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராமாபாய் நகர் மாவட்டத்தில் உள்ள புக்ராயன் கிராமத்தில்தான் ராவணனை வணங்குகிறார்கள்.
சமீபத்தில் இங்கு நடைபெற்ற ராவணமேளாவின்போது, கதே கிளேஷ், ஜெய் லங்கேஷ் என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. நமது துயரங்களைப் போக்கும் இலங்கை அரசர் வாழ்க என்பது இதன் அர்த்தம். வட இந்தியாவில் தசரா நடைபெறும் வேளையில் புக்ராயன் கிராமத்தில் ராவண விழா களை கட்டுகிறது.
கடந்த 18 ஆண்டுகளாக இக் கிராமத்தில் ராவண மேளாவை முன் னெடுத்து நடத்தி வருகிறது பாரதீய தலித் பேந்தர் கமிட்டி இக்கிராமத் தினர், ராவணன் புத்த மதத்தைப் பின்பற்றியவன், வேத நிபுணன் என்று கூறுகிறார்கள். அவன் ஒரு சிறந்த சிவபக்தன் என்றும் சொல்கிறார்கள்.
பத்துத் தலைகள் காரணமாக ராவணனுக்கு தசனன் என்ற பெயரும் உண்டு. பத்துத் தலைகளும் அவரின் ஞானத்தையே குறிக்கின்றனவே தவிர, அரக்கத்தனத்தை அல்ல என்பது அவர்களின் கருத்து.
தசராவின்போது நாடெங்கும் பிரமாண்ட ராவண உருவங்கள் எரிக்கப் படுகையில், புக்ராயன் கிராமத்தினர் அதை எதிர்க்கின்றனர். ராவண மேளா வில் பவுத்த தீட்சை நிகழ்வும் நடைபெறு கிறது. இவ்வேளையில், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து புக்ராயன் கிராமத் தில் குழுமும் தலித் மற்றும் பிற்படுத்தப் பட்ட இன மக்கள், புத்த துறவிகள் முன் னிலையில் புத்த மதத்தைத் தழுவுகின் றனர்.
தீட்சை நிகழ்வுக்கு முன்னால் ரத ஊர்வலம் நடைபெறுகிறது. கிராமத் தெருக்களில் சுற்றிச் சுற்றி வரும் அந்த ரதத்தில் இடம் பெற்றிருப்பவர் வேறு யார், ராவணன் தான்! ரதம் நகர நகர அதன் மீது மக்கள் பூக்களையும், வண்ணப் பொடிகளையும் தூவுகிறார்கள்.
யாரும் தவறியும் ராவணனை அவமதித்துவிடக் கூடாது என்பதில் விழாக் குழுவினர் கண்டிப்பாகவும், கவனமாகவும் இருக்கிறார்கள். ராவண னின் தம்பி கும்பகர்ணன், மகன் மேக நாதனின் உருவங்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
உண்மையில் ராவணனைப் போற்றி வணங்குவது புக்ராயன் கிராமத்தில் மட்டும் உள்ள வழக்கமல்ல, அருகில் உள்ள ஷிவாலா பகுதியிலும் இவ்விழா தடபுடலாக நடக்கிறது. இங்குள்ள சின் மஸ்திகா கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி ராவணனை வணங்கு கிறார்கள்.
இங்கு தசனன் கோவில் என்ற பெயரில் ராவணனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. தசராவின் போது மட்டும் 12 மணி நேரம் திறந்திருக்கும் இக்கோவி லில், தீவிர சிவபக்தனாக ராவணன் வணங்கப்படுகிறான்.
115 ஆண்டுப் பழைமையான தசனன் கோவிலில் 5 அடி உயர ராவணன் சிலை இருக்கிறது. சின்மஸ்திகா தேவியின் காவலனாக இப்பகுதி புராணக் கதைகள் ராவணனை குறிப்பிடுகின்றன.
ஆண்டுக்கு ஒருமுறை விஜயதசமி யின்போது அதிகாலையில் இக் கோவில் கதவுகள் திறக்கப்படும். சிறந்த சிவபக்தரான ராவணன், சின்மஸ்திகா தேவியின் காவலராக  இருக்கும் வரத்தைக் கோரிப் பெற்றார். அதனால்தான் சின்மஸ்திகா கோவி லுக்கு வெளியே ராவணனின் சிலை நிறுவப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகியான கே.கே. திவாரி கூறு கிறார். தசராவின்போது இக்கோவி லில் பெருங்கூட்டம் திரள்கிறது. ராவணனைப் பக்தி சிரத்தையோடு வணங்குகிறது. ஆனால் மாலையில் நாட்டின் பிற பகுதிகளில் ராவண உருவங்கள் எரிக்கப்படும்போது இங்கு கதவு அடைக்கப்படுகிறது.
ராவணன் மிகச் சிறந்த வீரர், உண்மையானவர், ராவணனின் நல்ல அம்சங்கள் காரணமாகவே நாங்கள் அவரை வணங்குகிறோம் என்பது திவாரி போன்ற ராவண பக்தர்களின் கருத்து.

தினத்தந்தி 6.11.2011 பக்.3

Monday, September 17, 2012

சில்லறை வர்த்தக அந்நிய முதலீடும்; சில்லரைத்தனமான விளக்கங்களும்


மத்திய அய்.மு.கூட்டணி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதோ இல்லையோ, அமெரிக்காவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை விசு வாசத்துடன் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறது. வெள்ளியன்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச் சரவை எடுத்த முடிவுகளைக் கண்டு பாரக் ஒபாமா நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார். இனி அவர் மிக தைரிய மாக இரண்டாம் முறையாக அதிபர் ஆவதற்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வார்.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனங் களும் மன்மோகன்சிங் அரசின் அறிவிப்பால் உற்சாகம் அடைந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. படுபாதாளத்தில் இருக்கும் அமெரிக்க பொருளா தாரத்தை தூக்கிநிறுத்த படாதபாடு பட்டு வரும் ஒபாமா சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசுகையில், இந்தியாவில் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு செயல்படும் விதம் போது மானதாக இல்லை.
பொருளாதார சீர்திருத்தங்களை விரைந்து அமலாக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித் திருந்தார்.அது மறைமுகமாக மன்மோகன் சிங் அரசுக்கு விடுத்த எச்சரிக்கைதான். அமெரிக்காவின் நலனுக்கு எது முக் கியம் என்பதை ஒபாமா நன்கு அறிவார். மன்மோகனும், அமெரிக்கா என்ன விரும்புகிறது என்பதை அறிவார்.
அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவ தால் இந்தியாவிற்குச் செல்லும் வெளி வேலை ஒப்பந்தங்களை (அவுட் சோர் சிங்) வெட்ட வேண்டும் என்று கூறியவர் தான் ஒபாமா. இந்தியா சில சீர்திருத்த நடவடிக்கைகளைச் செய் தாக வேண்டும் என்று பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு, முன்னர் புஷ் அரசும் பின்னர் ஒபாமா அரசும் நிர்ப்பந்தம் அளித்து வந்திருப்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் டீசல் விலை உயர்த்தப்பட்ட பின்னணியில், இங்குள்ள சில  அரசியல் கட்சிகளிடையே சில அரசியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. சொந்த பல மற்ற மன்மோகன்சிங் அரசுக்கு முலாயம் சிங் தலைமையிலான சமாஜ் வாதி கட்சியும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் அரசு கவிழ வேண்டியது தான்.
இந்த இரு கட்சிகளும் தங்களது மாநில அரசியலில் மக் களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. அய்முகூட்டணி அரசு மூழ்கிக்கொண்டிருக் கும் நிலையில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த கட்சிகள் எந்த நேரத்தி லும் ஃபீஸ் ஒயர் பிடுங்க தயங்காது என்ற எண்ணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவேதான் வெளியேறுவதற்கு முன்னர் அவசர அவசரமாக, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கும் முடிவை மத்திய ஆட்சியாளர்கள் எடுத்துள் ளனர் என்று கூறப்படுகிறது.
பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை 51 விழுக்காடு வரையும் ஒற்றைப் பொருள் சில்லரை வர்த்தகத்தில் 100 விழுக்காடு வரையும் அந்நிய முதலீடுகளை அனு மதிக்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையும் தரச்சான்றிதழ் அளிக்கும் ஸ்டாண்டர்டு அன் பூவர்ஸ், பிட்ச் அன்ட் மூடி ஆகிய நிறுவனங்களும் என்ன சொல்லியிருக்கின்றன தெரியுமா? உலகளாவிய நிர்ப்பந்தத்திற்கு இந்திய அரசு கவிழ்ந்து விட்டது என்று கூறியுள்ளன. அந்த உலகளாவிய நிர்ப்பந்தம் என்பது உண்மை யில் அமெரிக்க நிர்ப்பந்தம்தான் என விளக்க வேண்டியதில்லை.
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகும் என்றும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கு அதிகப்படியான விலையை பெறுவார்கள் என்றும் கிரா மப்புற அடிப்படை கட்டமைப்பு மேம்படும் என்றும் சிலர் வாதிடு கிறார்கள். ஆனால் ஏற்கனவே சில்லரை வர்த்த கத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதித்த நாடுகளில் இருந்து வரும் அதிகாரபூர்வ தகவல்கள் அவர்களின் கூற்றைத் தள்ளுபடி செய்கின்றன.
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு களை அதிகரிப்பதால் நோஞ்சானாக உள்ள வேளாண்துறை எழுந்து ஒடும் என்று மன்மோகன் சிங் கூறுகிறார். இது உண்மையா? சாத்தியமா? அமெரிக்காவில் உள்ள விவசாயிகளை, அந்நாட்டில் சில்லரை விற்பனையில் பெருமளவு முதலீடு செய்துள்ள நிறு வனங்கள் காப்பாற்றவில்லை. நிலைமை மோசமாவதை உணர்ந்த அமெரிக்க அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் வேளாண் மசோதா ஒன்றை கொண்டுவந்துதான் அவர்களை காப்பாற்ற வேண்டிய தாயிற்று.மேலும் அடுத்த அய்ந்தாண்டுகளுக்கு விவசாயி களுக்கு 307 பில்லியன் டாலர் நிதியுதவி தரும் திட்டத்தையும் அறிவிக்க வேண்டியதாயிற்று.
எனவே சில்லரை வர்த்தகத்தில் வரும் நேரடி அந்நிய முத லீடுகளால் விவசாயிகளுக்கு ஒரு பய னும் இல்லை என்பதற்கு அமெரிக்க விவசாயிகளே சாட்சி. மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறு வனங்கள் வந்தால் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை அந்த நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு விற்று லாபம் ஈட்டமுடியும் என்று ஆசை காட்டப் படுகிறது. அய்ரோப்பிய நாடுகளின் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்கள் நுழைந்த பின்னரும் விவசாயி களுக்கு அந்த அரசாங்கங்கள் மேலும் மேலும் மானியம் அளிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
அதன் பின்னரும் நிமிடத்திற்கு ஒரு விவசாயி விவசாயத் தொழிலை விட்டுச் செல்வதாக பன்னாட்டு உணவு மற்றும் வேளாண் கொள்கை குறித்த ஆய்வாளர் தேவிந்தர் சர்மா கூறுகிறார். மிகப்பெரிய நிறு வனங்கள் வந்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றும் விவசாயிகள் நேரடியாக பயன டைவார்கள் என்றும் ஒரு சிலர் வாதிடு கிறார்கள். அதுவும் எவ்வளவு மோசடி யான வாதம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
பன்னாட்டு சில்லரை வணிக நிறுவனங்களுக்கு தங்களது வேளாண் பொருட்களை விற்ற அமெரிக்க விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதற்கு மாறாக கடந்த நூற்றாண்டி லேயே 70 விழுக்காட்டிற்கு கீழ் வீழ்ச்சி அடைந்துவிட்டது. அது மேலும் மோச மாகி கடந்த 2005ஆம் ஆண்டு 4 விழுக்காடாக குறைந்து விட்டது. இதன் பின்னர் விவசாயத்தில் ஈடுபடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையும் மளமளவெனச் சரிந்தது.
இடைத்தரகர்கள் இல்லைதான். ஆனால் அவர்களது இடத்தில் தரக் கட்டுப் பாட்டாளர், தரப் பராமரிப்பாளர், சான்றிதழ் முகவர், பதனிடுபவர், பேக் கேஜிங் ஆலோசகர் என பல தரகர்கள் தோன்றி விட்டனர்! அவர்களையெல்லாம் சமாளித்தால்தான் ஒரு விவசாயி வருவாயை ஈட்டமுடியும். ஆனால் மிக வும் நவீன முறையில் விவசாயம் செய்யும் அமெரிக்க விவசாயி களுக்கே இது கட்டுப்படியாகவில்லை.
கடைசியில் அவர்கள் அரசின் மானியத்தை வைத்து தான் பிழைப்பை ஓட்டவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். பிறகெங்கே அப்பாவி இந்திய விவசாயிகள் வளம் பெறுவது? பன்னாட்டு சில்லரை வர்த்தக நிறு வனங்கள் வருவதால் விலை குறைந்து நுகர்வோரும் பலனடைவர்கள் என்று நுகர்வோருக்கும் வலைவிரிக்கப்படுகிறது. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் பன்னாட்டு சில்லரை வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதியில் அங்கு விற்கப்படும விலையை விட திறந்தவெளிச் சந்தையில் பொருட்களின் விலை 20 முதல் 30 விழுக்காடு வரை குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
எனவே சில்லரை வர்த்தகத்தால் நுகர்வோருக் கும் பயன் இல்லை. கடைசியாக பன்னாட்டு சில்லரை வணிக நிறு வனங்கள் மிகப்பெரிய குளிர் பதன கிடங்குகளை வைத்திருக் கின்றன. எனவே இதனால் இந்தியா போன்ற இத்தகைய வசதி குறைவான நாடுகளில் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் அழுகாமல் பாதுகாக்கப் படும் என் றும் அழுகி வீணாவது தவிர்க்கப்படும் என்றும் வாதிடப்படுகிறது. அதிலும் உண்மையில்லை. காரணம் ஏற்கனவே உணவுக் கிடங்குகளை கட்ட முதலீடு செய்யலாம் என்று அரசு அனுமதி அளித்து பல ஆண்டுகளாகிறது.
ஆனால் முதலீடு களைதான் காணவில்லை.அந்நிய முதலீடுகளால் வேலை வாய்ப்பு பெருகுமா? இந்திய சில்லரை வணிக சந்தையின் மதிப்பு 400 பில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு கோடியே 20லட்சம் சில் லரை வணிகர்கள், 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகின்றனர். உலக பகாசுர நிறுவனமான வால்மார்ட்டின் ஒட்டுமொத்த விற்றுமுதல் 420 பில்லியன் டாலர்கள். இந்திய சில்லரை வணிகத்தின் ஒட்டுமொத்த மதிப்பை விடசற்று அதிகம். ஆனால் அந்த நிறுவனம் அளித்துள்ள வேலை வாய்ப்போ அதன் கிளைகள் உள்ள எல்லா நாடுகளிலுமாக வெறும் 21 லட்சம்தான்.
சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிக்கும் முடிவை மாநில அரசுகளின் விருப்பத்திற்கே விடுவதாக மன்மோகன் சிங் அரசு கூறி யுள்ளது. ஆனால் இது சாத்தியமா? மாநில அரசுகளால் இத்துறையில் அந் நிய முதலீடுகளை தடுத்து நிறுத்த முடியுமா? முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள். ஒரு நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றால் அது தேசிய அளவிலான அனு மதியே தவிர மாநில அளவிலான அனுமதி அல்ல. மேலும் சர்வதேச வணிக நெறி முறைகள் படி உறுப்பு நாடு தனது வணிகத்தை முழுவதுமாக திறந்து விட வேண்டும்.
மேலும் இரு தரப்பு முதலீட்டு மேம்பாடு மற்றும் வணிக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (பிஅய்பிஏ) கையெழுத்திட வேண்டும். எனவே இந்தியாவில் பன்னாட்டு சில்லரை வணிக நிறுவனங்களுக்கு தேசிய அளவிலான அனுமதி அளிக்கப் பட்டதாகவே கருதப்படும். இந்த ஒப்பந்தத்தில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே கையெழுத்திட்டு விட்டன. எனவே சில்லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை அனும திக்க மறுக்கும் மாநில அரசுகளை சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் மூலமாக ஏக போக நிறுவனங்கள் எளிதாக வளைக்க முடியும். சில்லரை வணிகத்தில் ஒரு பெரிய நிறுவனம் நுழைந்தால் எப்படி பாரம்பரிய சிறுவணிகர்கள் அழிந்து போகிறார்கள் என்பதற்கு உலகில் பல நாடுகளை உதாரணமாக காட்டமுடியும்.
மெக்சிகோவில் வால்மார்ட் நுழைந்த பிறகு பத்தாண் டுகளில் 50 விழுக்காடு சில்லரை வணி கத்தை விழுங்கி விட்டது என்று நியூயார்க் டைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இதில் கவனமாக பார்க்கவேண்டியது என்னவென்றால் மெக்சி கோவில் மானியம் என்ற பெயரில் உள்ளே நுழைந்த வால்மார்ட் ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து 2011இல் 431 கிளைகளை துவக்கி தனது வணிகத்தை நிலை நிறுத்திக் கொண்டதுதான். அமெரிக்காவில் ஆர்க் கான்சாஸ் மாகாணத் தில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உள் தணிக்கையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தனது கடையை விரிக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் வால்மார்ட் மட்டும் 52 கோடி ரூபாயை லஞ்சமாக சிலருக்கு கொடுத்துள் ளதாக அமெரிக்காவில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள் ளனர். ஒரு நிறுவனத்தின் லஞ்சமே இவ்வளவு என்றால் இந்தியாவில் நுழைய காத்திருக்கும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்த நேரம் எவ்வளவு கொடுத்திருப்பார்கள். அவர்கள் எத் தனை லட்சம் கோடி ஆதாயம் அடைவார்கள் என்பதை எவரும் ஊகிக்கலாம்.
எனவே சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதித்தால் அது இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தையும் காப்பாற்றப் போவதில்லை. வணிகர் களையும் வாழவைக் காது. எனவே நாட்களை எண்ணிக் கொண்டி ருக்கும் காங்கிரஸ் - திமுக-திரிணாமுல் கூட்டணி அரசுக்கு பாடம் கற்றுத் தர மக்கள் நல அரசியல் இயக் கங்களும் மக்களும் களத்தில் இறங்க வேண்டியது இன்றைய அவசர அவசியத் தேவையாகும்.
-அ.விஜயகுமார்
நன்றி: தீக்கதிர் - 16.9.2012


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...