Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Thursday, July 24, 2014

தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை?


கோடை விடுமுறைகளுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்துவிட்டன. பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்த்தவர்களுக்கு வியப்போ வியப்பு! நகரங்களின் அனைத்து வசதிகளையும் பெற்றுப் படிப்பவர்களுக்கு இணையாக, கிராமப்புறப் பள்ளிகளின் பிள்ளைகளும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். ஏழைப் பள்ளி, அரசுப் பள்ளி, கார்ப்பரேசன் பள்ளி என்று இளக்காரமாகப்  பார்த்தவர்கள், தனியார் பள்ளி பற்றிப் பெருமையாகப் பேசியவர்கள் எல்லாம் இன்று வியப்போடு பார்க்கிறார்கள். இந்த வேறுபாடுகள் நீங்கியதற்குக் காரணம் சமச்சீர் கல்வியே என்பதை இப்போதுதான் தமிழகம் உணரத் தொடங்கியிருக்கிறது.

ஆனால் எப்போதும் வேற்றுமைகளைத் தோற்றுவிப்பதிலேயே குறியாக இருப்பவர்களும், ஏற்றத் தாழ்வுகளில் இன்பங் காணுகிறவர்களும் சும்மா கிடப்பார்களா? போதாக்குறைக்கு கல்வித் துறை இன்று பணம் கொழிக்கும் துறை! அதிலும், ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி சேர்க்கவே லட்சக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு, விண்ணப்பம் வாங்குவதற்கே பெரும் அதிகாரிகளும், பணக்காரர்களும் இரவெல்லாம் சாலையில் படுத்திருந்து இடம்பிடிக்கும் போது, அரசுப் பள்ளியிடமிருந்து எதை வேறுபடுத்திக் காட்டிப் பணம் பிடுங்க முடியும்? மேலும், மற்ற பிள்ளைகளைவிட என் பிள்ளை மேல் என்று பெருமை பேசுவதற்கு பள்ளிகளின் பெயர்களும், அவர்களும் கட்டியிருக்கும் தொகையும் தேவையாயிருக்கிறதென்று பெற்றோர்களும் நினைக்கிறார்களாமே! இதுதான் சாக்கென்று, இத்தனை நாள் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வந்தவர்கள் அதனினும் சிறப்பான சமச்சீர் கல்வி வந்தபிறகு, இரண்டும் இல்லாமல் சி.பி.எஸ்.இ-க்குப் போகிறார்கள் என்று ஆங்காங்கிருந்து தகவல்கள் வரத் தொடங்கின.

அது குறித்த தகவல்களை விசாரித்த போது தான், நடப்பது சிறிய அளவில் அல்ல என்பது புரிந்தது. மாநில அரசின் கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் இருந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கொத்துக் கொத்தாக சி.பி.எஸ்.இ முறைக்கு மாறுவதை அறிய முடிந்தது. சி.பி.எஸ்.இ (மத்திய பள்ளிக்கல்வி வாரியம்) பாடத்திட்டத்திற்கு மாறுவது என்பது வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்ல. மாறாக, தமிழக அரசின் கட்டுப்பாட்டிலிருந்தே விலகிச் செல்லுதல் ஆகும். இந்நிலை தொடர்ந்தால் அரசுப் பள்ளிகள் தவிர எதன் மீதும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்குக் கட்டுப்பாடு இருக்காது. அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு? தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு நடக்க இருக்கும் ஆபத்தின் பரிமாணம் விளங்கும். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் மாநில அரசின் கையில் இருக்கும் தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வி உள்ளிட்டவை சத்தமில்லாமல் மத்திய அரசின் கைக்குப் போய்விடும்.

இந்திய அரசியலமைப்பின் தொடக்க காலத்தில் கல்வித்துறை மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. பின்னர் அவசர கால நிலையின் போது மத்திய மாநில அரசுகளுக்குப் பொதுவான பொதுப்பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அடக்குமுறைக் காலத்தில் பெரிதாக எழ முடியாத எதிர்ப்பு, பின்னாளில் கிளம்பியபோதும், பொதுப் பட்டியலிலிருந்து அதை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அதிகார வர்க்கம் தயாராக இல்லை. மேலும், தன்னுடைய கரங்களை கல்வித் துறையை நோக்கி நீட்டி, அதனை கபளீகரம் செய்யவே முயன்றது. இதன் மூலம் மாநில உரிமைகளை நசுக்குவதுடன், இந்தித் திணிப்பிலும் எதிர்ப்பின்றி வெற்றி கண்டுவிடலாம். பாடத்திட்டத்தில் மாநிலங்களின் பண்பாடு, இனம், மொழி குறித்தவையெல்லாம் கிஞ்சிற்றும் இடம்பெறாது. இப்போது பொறுப்பேற்றுள்ள பி.ஜே.பி. அரசு ஒரு பாடத்திட்டத்தில் திருத்தம் செய்தாலே போதுமானது, வெகு எளிதில் நாடுமுழுக்க காவி விதைகளை பிஞ்சு மனதில் தூவி விடலாம்.

இத்தகைய ஆபத்தான போக்கை முளையிலேயே கெல்லி எறியாவிட்டால், மாநில சுயாட்சிக்கு அல்ல; மாநிலங்களின் அடிப்படை உரிமைகளுக்கே மீண்டும் சுழியத்திலிருந்து தான் போராட்டங்கள் தொடங்கப்பட வேண்டியிருக்கும். மாநில அரசுகள் என்ற அமைப்பையே கலைத்துவிட வேண்டும்; பல்வேறு பண்பாடுகள் என்ற அடையாளங்களை அழித்துவிட்டு ஒரே அகன்ற பாரதம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள மோடியின் அரசுக்கு இத்தகைய வாய்ப்புகளெல்லாம் தானாகக் கனிந்த மரங்கள் போல! மறைமுகமாக நடைபெறும் இந்தப் பிரச்சினையில் போதுமான அளவு இன்னும் சமூக அமைப்புகள் கவனம் செலுத்தாமல் இருக்க,  09.05.2014 அன்று கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இப்பிரச்சினை குறித்த தொடக்க அடியினை எடுத்து வைத்துள்ளது.


மேல்நிலைப் பள்ளி வரை தமிழைக் கட்டாயம் படித்திட வேண்டும் என்ற இன்றைய கல்வித் திட்ட முறையைத் தவிர்க்கும் வகையிலும் தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி முறையிலிருந்து தவிர்க்கவும் சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு மாறும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதை இக்கூட்டம் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசு மத்திய அரசின் துணையோடு இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த ஆவன செய்யுமாறு இச் செயற்குழுக்கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது என்ற இந்தத் தீர்மானம் திராவிடர் கழகம் இப்பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது என்பதற்கான நம்பிக்கைக் கீற்றாகும். இந்நிலையில் இந்தப் பிரச்சினையின்  முழுப் பரிமாணத்தையும் விளக்க கல்வியாளர்களை அணுகினோம். சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தினை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த பேராசிரியர் அ.கருணானந்தம் அவர்கள் கூறும் போது, சமச்சீர் கல்வியை நோக்கிய முதல் அடியாக விளங்குவது இந்தப் பொதுப்பாடத்திட்டம். இது தமிழ்நாட்டில் அதுவரை இருந்து வந்த நான்கு வகையான பாடத்திட்டங்களை (எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இண்டியன், ஓரியண்டல்) ஒன்றிணைத்து உருவாக்கிய பாடத்திட்டமாகும். இது தரமற்றதாக உள்ளது என்னும் குற்றச்சாட்டு தவறானதும், கண்டிக்கத்தக்கதுமாகும். சமச்சீர் கல்வி என்பது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்தியுள்ளது. சில பள்ளிகள் தற்போது சி.பி.எஸ்.இ.க்கு மாறக் காரணம் சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் அல்ல. அப்பள்ளிகளின் வணிக நோக்கமே என்று குற்றம் சாட்டினார்.

சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்திற்காக சட்ட ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் போராடியதோடு மட்டுமல்லாமல், பொதுப் பள்ளிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் கேட்டபோது, அவர் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட வரலாற்றிலிருந்து தொடங்கினார்.

தமிழ்நாட்டில் அரசினுடைய பாடத் திட்டமாக எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. இருந்த காலகட்டத்தில், பல்கலைக் கழகப் பாடத் திட்டமாக மெட்ரிகுலேசனும், ஆங்கிலோ இண்டியனும் பாடத்திட்டமாக இருந்தது. இவையிரண்டும் எஸ்.எஸ்.எல்.சி.யைவிட உயர்ந்தவை; இதனைப் படித்தால், பல்கலைக் கழத்திற்குச் செல்ல முடியும் என்ற ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது. இது திட்டமிட்டு காலனி ஆதிக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாடாகும்.

இந்தியா விடுதலை பெற்று ஒரு குடியரசாக ஆன பிறகு, தன்னுடைய பாடத் திட்டங்களை உருவாக்கி, எல்லோருக்கும் நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டது.

அதனுடைய விளைவாக, 1970களில் மால்கம் ஆதிசேஷய்யா அவர்கள் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், இனி நாங்கள் பள்ளிக் கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் உயர்கல்வியைத் துறையை எடுத்துக் கொள்கிறோம்; பள்ளிக் கல்வியை அரசு பார்த்துக் கொள்ளட்டும் என்றது. இதற்குமுன்  மெட்ரிக் பள்ளிகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால், அன்றைய அரசு இவர்களை மாநிலப் பாடத்திட்டத்தோடு இணைப்பதற்குப் பதிலாக,-  மெட்ரிக்குலேசன் வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி, அதில் எல்லா மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர்களையும் உறுப்பினர்களாக்கி, அதற்கு ஒரு தனி அந்தஸ்தைக் கொடுத்து மெட்ரிக் பள்ளிகள் சுயநிதி ஆங்கில வழிப் பிரிவுகளாக இருக்கும் என்று சொல்லிவிட்டார்கள். ஆங்கிலோ இண்டியன் பள்ளிகளைப் பொறுத்தவரையில், அதில் படிப்பதற்கும் ஆங்கிலோ இண்டியன்கள் இல்லை. அவற்றுக்கென்று தனித்த சிறப்பான பாடத்திட்டமும் எதுவும் இல்லை.

அரசு உருவாக்கிய முத்துக்குமரன் குழு மேற்கொண்ட ஆய்வில், நான்கு பாடத்திட்டங்களின் உள்ளடக்கம் ஒன்றாகவே இருப்பதும், தனித்தனியான இந்தப் பெயர்களால் மாணவர்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படுவதைத் தவிர வேறு பயன் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது. எல்லோருக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டம் என்பது சரியானதாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் புதுப் பாடத்திட்டமான சமச்சீர் கல்வி என்று நாம் கூறும் பொதுப்பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள் என்று விளக்கினார்.

சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தைவிட சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் சிறந்ததா?

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் எனபது மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் வசதிக்காக உருவாக்கப்பட்ட பள்ளிகள் ஆகும். அவை இந்தியா முழுவதும் உள்ள பொதுக்கல்விக்கான பாடத்திட்டம் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தால் வளமான எதிர்காலமும் வேலைவாய்ப்பும் கொட்டிக்கிடக்கின்றன என்னும் மக்களின் அறியாமை இவர்களுக்கு ஒரு வாய்ப்பாகிவிட்டது. எனவே, ஏழை மக்களை ஈர்க்கவே இந்தப் பள்ளிகள் தற்போது இந்த மாற்றத்தை விரும்புகின்றன. பொதுப் பாடத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ள சூழலில் அவர்கள் தங்களது வணிகத்தைப் பெருக்குவதற்கு ஒரு புதிய பாடத்திட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது என்ற பேராசிரியர் கருணானந்தத்தின் குற்றச்சாட்டைத் தான் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் வழிமொழிகிறார்.


பள்ளி நிர்வாகத்தினுடைய பார்வையைப் பொறுத்தவரைக்கும், எஸ்.எஸ்.எல்.சி. என்ற ஒரு பாடப்பிரிவு இருந்த காலகட்டத்தில், மெட்ரிக் பள்ளிப் படிப்பு உயர்ந்தது என்று சொல்லி மக்களை ஏமாற்ற முடிந்தது; இப்பொழுது இரண்டிற்கும் ஒரே பாடத் திட்டம் என்றால், நாங்கள் ஏன் கூடுதலாகப் பணம் செலுத்தவேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி வந்து, இரண்டு, மூன்று தேர்வுகள் நடைபெற்றதும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகள், மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகளைவிட அதிக மதிப்பெண் பெற்றதைப் பார்த்தனர்.

பிறகு, ஏன் தங்களுடைய பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில்  படிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்தது. மெட்ரிக் பள்ளிகளுக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக, தங்களுடைய சந்தை போய்விடுமோ என்கிற காரணத்தினால், சி.பி.எஸ்.இ.க்கு மாறிவிடுகிறார்களே தவிர, இவர்கள் பாடத் திட்டத்தை ஆய்வு செய்து, சி.பி.எஸ்.இ. தான் சிறந்த பாடத் திட்டம் என்று நிரூபித்து அதற்கு மாறவில்லை.

சி.பி.எஸ்.இ.-க்கு மாறவேண்டும் என்றால், 2005 ஆம் ஆண்டு என்.சி.ஆர்.டி. புதிய கல்வித் திட்டத்தைக் கொடுத்தவுடன், அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அப்பொழுதே சி.பி.எஸ்.இ.க்குச் சென்றிருக்கலாமே! என்றும் கேள்வியெழுப்புகிறார்.

பெற்றோர் விரும்புவதால்தான் இப்படி பாடத்திட்டங்களை மாற்றுவதாக சில பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்துக் கேட்டபோது, இல்லை என்று ஆதாரத்தோடு மறுக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

குறிப்பாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமானால், சென்னை வேப்பேரியில்  ஒரு மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளி உள்ளது. 175ஆண்டுகள் பாரம்பரியமான ஒரு பள்ளி அது. அந்தப் பள்ளி மெட்ரிக் பள்ளியாக இருந்தது. கடந்த ஆண்டு அந்தப் பள்ளி அய்.சி.அய்.சி. பள்ளியாக மாறுவதற்காக முயற்சி செய்து, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. உடனே பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு சங்கமாக உருவாக்கி, அந்தச் சங்கத்தின் சார்பாக நிர்வாகத்திற்கு ஒரு நோட்டீசைக் கொடுத்தார்கள்.

அந்த நோட்டீசில், நீங்கள் எந்த வகையில் இந்தப் பாடத்திட்டம் என்பது சி.பி.எஸ்.இ., அய்.சி.அய்.சி. பாடத்திட்டத்தைவிட குறைந்தது என்று சொல்ல வருகிறீர்கள். உங்களிடம் அதற்கான ஒப்பாய்வு ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால், அந்த ஒப்பாய்வினை எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்படி தெரியப்படுத்தாமல், நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள்.

இந்த நோட்டீஸ் கிடைத்த இரண்டு வாரத்தில், பள்ளி நிர்வாகம் ஏற்கெனவே கொடுத்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுகிறோம் என்று இன்னொரு சுற்றறிக்கையை அனுப்பினார்கள்.

அப்படிச் செய்த பிறகு, மறைமுகமாகப் பெற்றோர்களை அழைத்து, கட்டாயப்படுத்தி அய்.சி.அய்.சி.யில் சேர வைத்திருக்கிறார்கள்.

உடனே, நடந்தவற்றை விளக்கி அந்தப் பெற்றோர் சங்கம், பள்ளிக் கல்வி இயக்குநருக்கு ஒரு மனு கொடுத்தது. ஒரே பள்ளி வளாகத்தில் இன்னொரு சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்குவதோ, அல்லது அய்.சி.அய்.சி.  பள்ளி தொடங்குவதோ அல்லது இருக்கிற பள்ளியை அய்.சி.அய்.சி.யாக மாற்றுவதோ எங்களுக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. எனவே, அரசு இதற்கு என்.ஓ.சி. கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருந்தார்கள்.

இதிலிருந்து இரண்டு செய்திகள் தெரியவருகின்றன.
 
ஒன்று, பெற்றோர்கள் விரும்பி மாறுகிறார்கள் என்பது தவறு என்பதற்கு இது ஒரு சான்று.

இரண்டாவது, நிர்வாகத்திடம் எந்தவிதமான ஒப்பாய்வு அறிக்கையும் கிடையாது. இவர்கள் பாடத் திட்டத்தையெல்லாம் ஆய்வு செய்யவில்லை. ஒரு வணிக நோக்கத்திற்காகத்தான் மாறுகிறார்கள் என்பதற்கும் இதுவே சான்று என்றும் போட்டுடைத்தார்.

வணிகம் என்பதைத் தாண்டி இதனால் பள்ளி நிர்வாகங்களுக்கு வேறு ஏதேனும் ஆதாயம் இருக்கிறதா? என்ற சந்தேகமும் நமக்கு இல்லாமலில்லை.

மக்கள்தொகை காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் அரசு ஏராளமான பொதுப் பள்ளிகளை உருவாக்க வேண்டும். ஆனால், அரசு உருவாக்கவில்லை. அந்தப் பணிகளை தனியார் பள்ளிகளிடம் தாரை வார்க்கின்றனர். ஆனால் தனியார் பள்ளி நிர்வாகங்களோ தமிழ்நாட்டிற்குள் உள்ள பொதுப் பாடத்திட்டத்திலிருந்தும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தும் விடுபடவே இவ்வாறு செய்கின்றனர் என்கிறார் பேராசிரியர் அ.கருணானந்தம். இந்தக் கருத்து உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துகிறது பிரின்ஸ் கஜேந்திரபாபு தரும் தகவல்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைப் பொறுத்தவரையில், ஒரே ஒரு தென்மண்டல அலுவலர்தான் இருக்கிறார். தென் மண்டலம் என்று சொன்னால், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் இவை அனைத்தும் சேர்ந்தது தென்மண்டலம். இதற்கு ஒரு மண்டல அலுவலர்தான். இவருடைய அலுவலகம் சென்னை அண்ணா நகரில் உள்ளது.

இவருடைய பணி என்னவென்றால், பாடத்திட்டத்தை பின்பற்றுகிறார்களா என பார்ப்பது, சுற்றிக்கைகளைக் கொடுப்பது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது போன்றவைதான். அவருடைய பணியாகும். நாள்தோறும் நடைபெறும் நிர்வாக நடவடிக்கையில் அவர் தலையிடமாட்டார். மாநில அரசுதான் தலையிட வேண்டும். ஆனால், மாநில அரசும் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தில் தலையிடவில்லை. தங்களுடைய கட்டுப்பாட்டில் அதனை வைத்துக்கொள்ளவில்லை.

எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறிவிட்டால், யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது ஒரு காரணமாகும்.

இரண்டாவதாக, தமிழ் மொழி இல்லாமல் படித்து முடித்துவிடலாம்; இதனைத் தாண்டி மாநில அளவில் கல்விக் கட்டணத்திற்கென்று அளவுகோல் உண்டு. கண்காணிக்க அதிகாரிகள் உண்டு. கட்டமைப்பு உண்டு. இவை எதுவும் அங்கு கிடையாது. யாரும் அதற்காக முறையிடவுமில்லை; மாநில அரசும் தலையிடவில்லை. இதெல்லாம் பள்ளி நிர்வாகங்களுக்குக் கிடைக்கும் வசதிகள்.

இப்படி தனது கட்டுப்பாட்டிலிருந்து சி.பி.எஸ்.இ முறைக்கு மாறுவதைத் தடுத்து பள்ளிக் கல்வித் துறையை மாநில அரசு காக்க முடியாதா? தமிழ்நாடு அரசு ஆங்கிலவழியில் கல்வி கொண்டுவருவதாக சொன்னதுகூட மெட்ரிக் பள்ளிகளின் மாற்றத்துக்குக்  காரணமாக இருக்குமா?

இல்லை. ஏனென்றால், அரசு ஆங்கிலவழிக் கல்வி கொண்டுவருவதாக அறிவிக்கும் முன்பும் பின்பும் கூட தடையின்மை சான்று கோரி பல பள்ளிகளின் சார்பில் மனு கொடுத்திருந்தார்கள்.

 பல பள்ளிகளுக்குத் தடையின்மை சான்றும் வழங்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு சி.பி.எஸ்.இ. சார்பில் தடையின்மை சான்று தேவை இல்லை என்று திருத்தம் கொண்டுவந்துவிட்டார்கள். எனினும் திருத்தப்பட்ட விதிகளின்படி மாநில அரசு அல்லது யாராவது ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார்களானால், அப்போதுதான் தடையின்மை சான்று வாங்க வேண்டும் என்று உள்ளது. எனவே, மாநில அரசு இந்தப் பள்ளிகளின் வணிக நோக்கத்தையோ, ஒரே பள்ளி வளாகத்தில் இரண்டு பாடத்திட்டங்கள் கூடாது என்பதையோ எடுத்துக்காட்டி அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்புக் காட்டினால்,  திருத்தப்பட்ட விதிகளுக்குப்பிறகுகூட சி.பி.எஸ்.இ.யால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் பிரின்ஸ். இது குறித்து பேரா.கருணானந்தம் குறிப்பிடும் போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறுவதைத் தடுக்க வேண்டும் என்றால் முன்பு இருந்ததைப் போல் ஆறாம் வகுப்பு முதல்தான் தொடங்க முடியும். அதுவும் மாநில அரசின் அனுமதி பெற்றுத்தான் தொடங்கப்பட முடியும் என்ற விதிமுறைகளை மீண்டும் கொண்டு வர மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு இதையெல்லாம் தடுக்க முயற்சிகள் எதையும் எடுப்பதாகத் தெரியவில்லை. அரசு தனியார் கல்வி நிர்வாகங்களுக்குத் துணைபோகவே விரும்புகிறது என்று உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறார்.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. பொதுப்பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு, மாநில அரசு இரண்டுபேருக்குமே உரிமை இருக்கிறது. பொறுப்பும் இருக்கிறது. ஒரே பொருளில் இரண்டு பேரும் சட்டம் கொண்டுவந்தால், மத்திய அரசு கொண்டுவரும் சட்டம்தான் செல்லும். அதே நேரம் பொதுப்பட்டியலில் இருந்தால் மாநில அரசுக்கு உரிமை கிடையாது என்றும் சொல்லமுடியாது. மேலும், கல்வி என்பது பண்பாட்டின் ஒரு கூறு. எனவே, ஒரு மொழிவாரி மாநிலம் என்கிற அடிப்படையில் ஒரு இனத்தினுடைய பண்பாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது. அந்த வகையில் கல்வியை பண்பாட்டுடைய ஒரு கூறாகப் பார்த்து  அவர்கள்  தங்களுடைய உரிமைகளையும், தாங்கள் கல்வித்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசுக்குத் தெரிவிக்க முடியும்.

73 நாடுகளைக் கொண்ட பிசா அறிக்கையில், எந்தெந்த நாட்டிலெல்லாம் அரசினுடைய பொறுப்பிலும், செலவிலும் கல்வி கொடுக்கப்படுகிறதோ, அந்த நாட்டில் எல்லாம் குழந்தைகளினுடைய கற்றல் திறமை அதிகமாக இருக்கிறது; எந்த நாட்டிலெல்லாம் தனியார் பள்ளிகள் அதிகமாக இருக்கிறதோ, அங்கே குழந்தைகளின் கற்றல் திறமை குறைவாக இருக்கிறது  என்று சொல்கிறார்கள்.

உலகெங்கும் கல்வியாளர்கள் சொல்லும் இந்தக் கருத்து நம் மக்கள் காதில் விழாத வண்ணம் தடுத்துநிற்கும் போலி கவுரவப் போக்குகளும் மாற வேண்டும் என்பதும் உண்மையே!

இந்தப் பிரச்சினையைப் பொறுத்தளவில், பந்து இப்போது தமிழக அரசின் கையில் இருக்கிறது. தன்னிடம் இருந்து பள்ளிக்கல்வித் துறை பறிபோய்விடும் என்ற உண்மையாவது தமிழக அரசுக்குத் தெரியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, பொதுப் பள்ளிகளையும், அருகமைப் பள்ளிகளையும் அதிகப்படுத்துவதும், பாடத்திட்டத்தைச் செழுமையாக்குவதில் மேலும் கவனம் செலுத்துவதும், மக்களிடம் தனியார் பள்ளிகள் மேல் உள்ள மோகத்தைச் சரி செய்து, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை விரிவாக்கி, ஆங்கில வழிப் பாடம் என்பதை விட மொழியாக இங்கிலீசிற்கு தனியிடம் தந்து பன்மொழி கற்கும் வாய்ப்போடு கூடிய தாய்மொழிக் கல்வி மூலமே உலக அரங்கை நோக்கிப் பயணிக்கலாம் என்ற நம்பிக்கை ஊட்டுவதிலும்தான் சரியான கல்விக்கான பாதை இருக்கிறது.

- சமா.இளவரசன்

உதவி : வை.கலையரசன், ச.பாஸ்கர்

நன்றி : http://www.unmaionline.com/new/2057-tn-education-department.html 



Tuesday, July 22, 2014

ஆசிரியர் நியமனங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை


மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
கல்வி மானியக் கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் அல்லாத 3459 புது ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

தொடக்கத்தில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து வந்த 5 அமைச்சர்கள், ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழப்பமான புள்ளி விவரங்களை அறிவித்தனர். 

இப்போது 6 ஆவதாக வந்துள்ள அமைச்சர் வீரமணி, கடந்த 3 ஆண்டில் 51 ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 18 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அறிவித்தார். 

ஆனால் பேரவையில் அறி வித்தது வேறு. எனவே ஆசிரியர் நியமனங்கள், நிலை வாரியாக, நிர்வாக வாரியாக மாவட்ட வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும். 

 இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, June 12, 2013

சமச்சீர் கல்வி: துடிக்கிறது ஆரியம்!

கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்
10ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகள் வெளி வந்தன. ஊர் எங்கும் குதூகலம்! ஏழை, எளிய மக்கள், குக்கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பிள்ளைகள் எல்லாம் மதிப்பெண்களைப் பெரும் அளவில் பெற்று மகிழ்ச்சித் திருவிழா நடத்தினர்.
குடிசைகளிலும் கொள்ளை மகிழ்ச்சி. நடைபாதையில் குடியிருந்த மக்களின் வீட்டுப் பிள்ளைகளும் மூக்கின்மேல் விரலை வைக்கும் அளவுக்குப் பெரு வெற்றி பெற்றனர். 89 விழுக்காடு வெற்றி, கடந்தாண்டைவிட இது 2.8 விழுக்காடு கூடுதல் வெற்றி! மாணவர்கள் 86, மாண விகள் 92 விழுக்காடு தேர்ச்சி பெற் றுள்ளனர்.
ஒன்பது பேர் 500_-க்கு 498 மதிப் பெண்கள் பெற்றுச் சாதனை படைத்துள் ளனர். 497 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 52 பேர்! 496 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 137 பேர்கள்.
சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலை யிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளியான குருவித்யா 480 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அவரின் வேதனைக் கண்ணீர் இதோ:
அய்ந்து வயது இருக்கும் போது வீட்டில் மிகவும் கஷ்டம். ஒரு வேளை சாப்பாட்டுக்குக்கூட வழி இருக்காது, நான்காவது படிக்கும்போது, படிப்பைப் பாதியில் விட்டு, சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். 10 வயது இருக்கும்போது என்னைப் பள்ளியில் சேர்த்தனர். மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன். 480 மார்க் வாங்கியுள்ளேன். மேல் படிப்புக்கு வழியில்லை யாராவது உதவி செய்தால் படிப்பேன்.
திருச்சிராப்பள்ளியில் வீட்டு வேலை யிலிருந்து மீட்கப்பட்ட மகாலட்சுமியின் மனதை உருக வைக்கும் அவலம் இதோ:
சின்ன வயதில் அப்பா இறந்து விட்டார். தாய் கட்டட வேலை செய்கிறார். என்னுடன் பிறந்தவர்கள் 2 பேர். அப்பா இல்லாததால் மூன்று பேரும் குடும்பப் பாரத்தைத் தாங்க வேலைக்கு வந்து விட்டோம். நானும் என் தங்கை யும் வீட்டு வேலைக்குச் சென்றோம். எங்களை மீட்ட அதிகாரிகள் பள்ளியில் சேர்த்தனர். 475 மார்க்குகள் வாங்கி யுள்ளேன். மேற்படிப்பில் தொடர அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமச்சீர் கல்வியை செயல்படுத்தியதால் கல்வியில் மகத்தான புரட்சி ஏற்பட் டுள்ளது என்பதை மறுக்கவே முடியாது.
ஆனால் பார்ப்பனக் கூட்டம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள் கிறது! தரம் கெட்டு விட்டது என்று தகர டப்பா சத்தம் போடுகிறது.
தினமணியின் தலையங்கம் (4.6.2013) ஒன்று போதும். இப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு விஜயபாரதம் வார இதழ் இரண்டாம் பட்சம்தான்.
திருவாளர் வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்த நாள் தொட்டு, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கூடாரத்துக்கு அதிகாரபூர்வமான நாளேடாக தினமணி ஆகிவிட்டது.
இவை கொடுக்கப்பட்ட மதிப்பெண் களே தவிர மதிப்பீடுகள் அல்ல; அள்ளித் தரப்பட்ட மதிப்பெண்களால் மகிழ்ச்சி அடைவது பேதைமை! என்று எழுதி முடித்து விட்டது. ஆம், தினமணி தீர்ப்பே வழங்கி விட்டது. (தலையங்கம் தனியே காண்க).
அவாள் மட்டுமே அதிக மதிப் பெண்கள் பெற்று அவாள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற போது _ கல்வி தரமாக இருந்தது. தீப் பெட்டி தொழிற்சாலையிலும், வீட்டு வேலையிலும் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றால் தினமணி பார்ப்பன வகையறாக்களின் பார்வையில் கல்வியின் தரம் கெட்டு விட்டதாகப் பொருள், தராசு -சாய்ந்த தராசாக ஆகி விடுகிறது.
தேர்வு எழுதாமலேயே அனை வரையும் தேர்ச்சி செய்து விடலாமே என்று அடி வயிற்றில் குத்திக் கொள்கிறது. சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்கவே கூடாது என்று சாத்திரம் எழுதி வைத்து அதன்படி அரசர்களை ஆட்டி வைத்த பரம்பரையல்லவா -_ புத்திமாறி விடுமா என்ன!
சமச்சீர் கல்வி திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்களுக்குப் பலனில்லை என்று எட்டுப் பத்தி தலைப்பிட்டு தினமலர் தன்  குடுமியைத் தட்டி விட்டுக் கொண்டு செய்தி வெளியிடுகிறது.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்கு பெரிய அளவில், எவ்வித பலனும் கிடைக்க வில்லை என்பது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெட்ட வெளிச்சமாக்கியது. மாறாக, தனியார் பள்ளி மாணவர்களே மாநில அளவில், அனைத்து இடங்களை யும் வாரி சுருட்டினர் என்று செய்தி வெளி யிடுகிறது தினமலர் (1.6.2013 பக்கம் 2).
முதல் மூன்று இடங்களைப் பிடித்த வர்கள் அதிகம் தனியார் பள்ளிகள் தான் என்று ஆதாரம் காட்டுகிறது.
சமச்சீர் கல்வி வருவதற்கு முன்பும் இந்த நிலைதானே? புதிதாகக் கூறி குற்றப்படுத்துவதன் நோக்கம் என்ன?
அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் சமச்சீர் கல்வி அமலுக்குப் பின் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனவா இல்லையா என்பதுதான் முக்கியமே தவிர மாநில அளவில் அதிக மதிப் பெண்கள் பெற்றவர்கள் யார் என்ற பிரச்சினையை வேறு இடத்திற்குத் தள்ளிக் கொண்டு போகப் பார்ப்பது அசல் பார்ப்பனத்தனமே!
சமச்சீர் கல்வி திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பலன் அடையவில்லையாதலால் சமச்சீர் கல்வி திட்டத்தால் பலனில்லை என்று தினமலரும் தீர்ப்பு எழுதி விட்டது. இதில் வயிறு குலுங்க சிரிக்கும் இடம் உண்டு; அதே தினமலர்தான் அதே நாளில் 2ஆம் பக்கத்தில் தலைப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் அபாரம்! முதல் முறையாக 90 சதவீதத்தை கடந்து தேர்ச்சி விகிதம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. பாவம் சமச்சீர் கல்வி பார்ப்பனர்களைப் பாடாகத்தான் படுத்திக் கொண்டிருக்கிறது.
பார்ப்பனர்கள் இப்படிப் புலம்புவது ஒன்றே சமச்சீர் கல்விக்கு கிடைத்த மகத்தான வெற்றிதான் என்பதற்கான அளவுகோல்.
அதிக மதிப்பெண்கள் எங்களால்தான் பெற முடியும். அதிக அளவு தேர்ச்சி எங்களால் தான் ஈட்ட முடியும் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த அக்கிரகார மமதை மனப்பான்மையில் சமச்சீர் கல்வி என்னும் இடி விழுந்து விட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது.
சமச்சீர் கல்விப் பிரச்சினையில் தொடக்க முதலே பார்ப்பன சக்திகள் எந்த கருத்தைக் கொண்டிருந்தன என்பதைத் தெரிந்து கொண்டால் தான். சமச்சீர் கல்வியால் தேர்ச்சி விகிதம் எகிறியிருப்பதன் மீது பார்ப்பனர்கள் விழுந்து பிடுங்குவதன் இரகசியம் - _ மர்மம் புரியும்.
2006இல் ஆட்சிக்கு வந்த திமுகதான் சமச்சீர் கல்வி திட்டத்தை அறிவித்தது. கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத் தது. 109 பரிந்துரைகளுடன் கூடிய சிறப்பான அறிக்கையை அந்தக் குழு அளித்தது (4.7.2006)
2010_-11 கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் 6ஆம் வகுப்புகளிலும் 2011_-12 கல்வி ஆண்டில் 2 முதல் 5 மற்றும் 7 முதல் 10ஆம் வகுப்பு வரை செயல்படுத்தவும் சட்டம் இயற்றப்பட்டது (30.11.2009).
இதனைக் கடுமையாக எதிர்த்தவர் _- விமர்சித்தவர் துக்ளக் ஆசிரியர். திருவாளர் சோ ராமசாமிதான். அனைத்துக் கல்வி முறைகளையும் கீழே இறக்கி சமன் செய்யும் சமத்தாழ்வு கல்வித் திட்டம் என்று புலம்பினார். ஒரு சிலர் உயர் கல்வி பெறுவதைத் தடுப்பதற்குத்தான் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்படுவதாக புரண்டு புரண்டு கண்ணீர் வடித்தார் (துக்ளக் 15.6.2011) சிலர் நீதிமன்றமும் சென்றனர். இந்தச் சட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பும் கூறியது (30.4.2010) மேல் முறையீட்டுக்காக உச்சநீதிமன்றமும் சென்றனர் அங்கும் தோல்வியைத் தான் கட்டித் தழுவினர்.
சமஸ்கிருதத்தை மய்யப்பாடமாகக் கொண்டு செயல்படும் ஓரியண்டல் பள்ளிகளின் நிருவாகிகள் தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விட்டது என்று அலறினர்.
தமிழ்நாட்டில் ஓரியண்டல் பள்ளிகளின் எண்ணிக்கை 27 தான்; எங்களுக்குச் சமச்சீர் கல்வி வேண்டவே வேண்டாம் என்று  ஓரியண்டல் பள்ளி களின் செயலாளர் வாசுதேவாச்சாரியார் 2011இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கான காரணத்தை அவர் மறைக்கவும் இல்லை சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான கருவி; எனவே சமச்சீர் கல்வி திட்டத்தை ஏற்றால் சமஸ்கிருதம் ஓரம் கட்டப்பட்டு விடும்; ஆகவே அந்தக் கல்வி திட்டம் கூடாது என்றார் வாசுதேவாச்சாரியார்.
ஜெயலலிதா மட்டும் இத்தகைய உணர்வில் பின்வாங்கக் கூடியவரா?
சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வராது என்று கறாராக தெரிவித்தார். முதல் வரவேற்பு இந்து முன்னணி நிறுவனர் அமைப்பாளர் திருவாளர் இராம கோபாலனிடமிருந்துதான்.
ஜெயலலிதா தலைமையிலான அமைச் சரவையின் முதல் கூட்டத்திலேயே (22.5.2011) சமச்சீர் கல்வி திட்டம் நிரா கரிக்கப்பட்டது. இதற்காக அமைச்சரவை எடுத்துக் கொண்ட நேரம் முழுவதுமாக ஒரு மணி நேரம்கூட இல்லை. அவ்வளவு ஆத்திரம்! இந்த வகையில் சட்டமன்றத்தில் மசோதாவும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது (7.6.2011).
சமச்சீர் கல்வி ஆதரவாளர்கள் பேன் குத்திக் கொண்டு இருக்கவில்லை. உயர்நீதிமன்றம் சென்றனர். விளைவு புதிய அரசின் முடிவு நிராகரிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் -_ டி.எஸ். சிவஞானம் அடங்கிய அமர்வு சமச்சீர் கல்வி திட்டத்திற்குப் பச்சைக் கொடி காட்டியது.
அடங்கி போய் விடுமா ஆரியம்? விடயம் அடிமட்ட மக்களும் கல்வி ஏணியில் உயரே ஏறும் திட்டமாயிற்றே!
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுகளையும் வேக வேகமாக மிதித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக்வர்மா பி.எஸ். சவுகான் ஆகியோர் அடங்கிய அமர்வு நறுக்குக் குட்டு வைத்தது. 25 காரணங்களை அடுக்கிக் காட்டி சமச்சீர் கல்வியைத் தொடர ஆணை வழங்கியது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கல்வியாளர் குழு ஒன்றினை அதிமுக அரசு நியமித்தது.
அந்தக் குழுவின் உறுப்பினர்கள் யார் _ யார் தெரியுமா? சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்; அத்தனைப் பேரும் பார்ப்பனர்கள் _ பார்ப்பனர்களே!
1) தேவேந்திரநாத் சாரங்கி (தமிழக அரசு தலைமைச் செயலாளர்) பார்ப்பனர்.
2) ஜி. பாலசுப்பிரமணியன் (மத்திய இடைநிலைக் கல்வி வாரிய முன்னாள் இயக்குநர்) பார்ப்பனர்.
3) விஜயலட்சுமி சீனிவாசன் (முன்னாள் முதல்வர், லேடி ஆண்டாள் மெட்ரிகுலேசன் பள்ளி சென்னை மற்றும் ஆலோசகர்) பார்ப்பனர்.
இரு கல்வியாளர்கள்:
4) சி. ஜெயதேவ் (நிறுவனர் மற்றும் செயலாளர் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமம் கோபாலபுரம், சென்னை) பார்ப்பனர் (குறிப்பு: இவர் பள்ளியின் நிர்வாகியே தவிர கல்வியாளர் அல்லர்).
5) திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி (இயக்குநர், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகள் குழுமம், சென்னை) பார்ப்பனர்
இவர் கல்விக்கூடம் ஒன்றின் உரிமையாளரே தவிர கல்வியாளர் அல்ல. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) இரு பிரதிநிதிகள்.
6) பேராசிரியர் பி.கே. திரிபாதி (அறி வியல் மற்றும் கணிதவியல், கல்வித்துறை -_ டில்லி) பார்ப்பனர்
7) பேராசிரியர் அனில் சேத்தி (சமூக அறிவியல் துறை, புதுடில்லி, பஞ்சாபி).
8) டி. சபீதா (பள்ளிக் கல்வித்துறை செயலாளர்).
9) வசுந்தராதேவி (பள்ளிக்கல்வி இயக்குநர்) இவர்கள் இருவரும் அதி காரிகள் ஆதலால்
பார்ப்பனர்களாகப் பார்த்துப் போட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
ஒன்பதுபோர் கொண்ட குழுவில் ஆறு பேர் பார்ப்பனர்களாகப் பார்த்துப் பொறுக்கி எடுத்து நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகவும், மிகவும் கவனிக்கத்தக்கது.
மூவர் தனியார் பள்ளிகளை நடத்தக் கூடியவர்கள். சமச்சீர் கல்வியே கூடாது என்று அரட்டை அடிப்பவர்கள் _ ஆக நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத் தாயிற்று.
இதில் ஒரு வேடிக்கை என்ன தெரி யுமா? அமைச்சரவை கூடி, சமச்சீர் கல்வியைத் தள்ளுபடி செய்வதற்கு முதல் நாளே - பழைய கல்வி திட்டப்படி பாடங் களை நடத்த புத்தகங்களை அச்சிட தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஆணையை வழங்கி விட்டது. ஆகா! எவ்வளவு பெரிய வேகம்!
பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் பாடத்தில் தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் எனும் தலைப்பில் வெளிவந்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பிட்டி தியாகராயர், டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் தருமாம்பாள் போன்றோர் பற்றிய குறிப்புகள் மட்டுமல்ல; அந்தத் தலைப்பில் உள்ள அனைத்தும் கிழிக்கப்பட்டன.
இதுதான் அண்ணா பெயரையும் திராவிடப் பெயரையும் தாங்கியுள்ள திராவிடர் கட்சியா..? வெட்கக் கேடு! சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படாத  நிலையில் பல மாதங்கள் யோகா பயிற்சி போன்றவற்றை அளித்து மாணவர்களை வெட்டிப் பொழுது கழிக்கச் செய்தனர்.
வேறு வழியின்றி சமச்சீர் கல்வி திட்டத்தைச் செயல்படுத்திய அதிமுக அரசு, ஏற்கெனவே கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த திமுக ஆட்சியில் கல்வியாளர் குழுவால் தயாரிக்கப்பட்டு இருந்த பாடங்களைப் பக்கம் பக்கமாகப் புரட்டி பல பகுதிகளை அடித்துத் தீர்த்தது. திருவள்ளுவர் உருவமும்கூடத் தப்ப வில்லை. சூரியன் பற்றிய பாடம் கூடச் சொல்லிக் கொடுக்கப்படக் கூடா தாம்.
காரணம்  சூரியன் திமுகவின் தேர்தல் சின்னமாம். என்னே கோமாளிக் கூத்து.
இதில் இன் னொன்றை என்றைக்கும் என்றைக்கும் நினைத்து நினைத்து விலா வொடிய விலாவொடிய  சிரித்து சிரித்து மகிழலாம். ஏன், அரட்டையும்கூட அடிக்கலாம்.
உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பி.பி.ராவ் தெரிவித்த கருத்துக் கருவூலங்கள் தான் அந்தத் தமாஷ்!
இதோ பி.பி.ராவ் பேசுகிறார் _ உச்சநீதி மன்றத்தில் கேண்மின்! கேண்மின்!!
தமிழக அரசுக்குக் கல்வி, சட்டம் ஆகிய துறைகளில் அறிவுரை கூறுவ தற்குச் சரியான ஆட்கள் இல்லை. அத்தகைய ஆட்கள் இருந்திருந்தால், தமிழக அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்திருக்கத் தேவையில்லை என்று கால் பந்தை தன் பக்கம் அடித்துக் கோலாக்கி விட்டார் (Sameside Goal).
இந்தப் பின்னணி வரலாறுகளை, தகவல்களைத் தெரிந்து கொண்டால்தான் 2013 _ பத்தாம் வகுப்புத் தேர்வில் ஆண் டாண்டு காலமாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள் பகுதியிலிருந்து ஏராளமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றதையும் அதிக மதிப்பெண்கள் குவித்ததையும் கண்டு அக்கிரகாரம் ஆத்திர அம்மண ஆட்டம் போடுவதன் சூட்சமம் சூரிய வெளிச்சமாகப் புலப்படும்.
விடுதலை விரிவாக எழுதிக் கொண்டே இருந்தது. பிரபல அரசியல் விமர்சகர் சோலை அவர்கள் நக்கீரனில் எழுதிய சிறப்புக் கட்டுரையில் (9.7.2011) பின் வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
எதனையும் வர்க்கக் கண்ணோட்டத் தோடு பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இவர்கள் எதிர்ப்பதன் பின்னணி தெரிய வில்லை. அய்யா, எதிர்ப்பவர்கள் வர்ணா ஸ்ரம கண்ணோட்டத்தில் எதிர்க்கிறார்கள். இது சோலைக்குத் தெரியவில்லையா? என்று ஒரு வாசகர் நமக்குக் குட்டு வைத்தார்.
சமச்சீர் கல்வி திட்ட எதிர்ப்பும், அன்று ராஜாஜி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த குலக்கல்வி திட்டமும் ஒன்றுதான் என்று அவர் நமக்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதன் பின்னர்தான் நமது சிந்தனைச் சாளரம் திறந்தது. விடுதலையில் தோழர் மின்சாரம் தொகுத்துத் தந்துள்ள கருத்துகள் மண்டையில் உறைத்தன - என்று சோலை அவர்கள் எழுதினாரே!
பறையனுக்கும், பார்ப்பானுக்கும் ஒரே கல்வி திட்டத்தைத் தருகின்ற சமச்சீர் கல்வியை இங்கே நடை முறைப்படுத்தி விடக் கூடாது. அதனை அழித்தே தீருவேன் என்ற கருத்துப் போர் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர். எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் (தமிழ்மண் -  ஜூன் 2011) எழுதியதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
அது உண்மையாகி விட்டதே! குப்பன் வீட்டுப் பிள்ளையும், சுப்பன் வீட்டுப் பிள்ளையும் பார்ப்பனன் வீட்டுப் பிள்ளையும் சம மதிப்பெண் பெறும் நிலை வந்து விட்டதே என்று எண்ணும் போது அவர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் தான் தினமணி தலையங்கமே தீட்டுகிறது இது கொடுக்கப்பட்ட மதிப்பெண்களே தவிர, மதிப்பீடுகள் அல்ல என்று எழுதுகிறது.
தமிழ்நாட்டில் அய்ந்து வகை கல்வி இருந்து வந்தது. 1) மாநிலக்கல்வி வாரியம் 2) மெட்ரிகுலேசன் 3. ஆங்கிலோ - இந்தியன் கல்வி முறை 4) கீழ்த்திசைப் பாடத் திட்டம் 5) நர்சரி பள்ளிக் கல்வி முறை. இவையெல்லாம் ஒழிக்கப்பட்டு ஒரே சீரான கல்வி என்பதுதான் சமச்சீர் கல்வி. பொதுவாக சமம் என்ற சொல்லைக் கேட்டாலே குமட்டிக் கொண்டு வரும் குல்லூகப் பரம்பரைக் கூட்டத்துக்கு; சமச்சீர் கல்வியிலும் இதுதான் இழை யோடுகிறது.
பார்ப்பனர் அல்லாத மக்களை அவதூறாக நினைக்கும் துவேஷம் என்ற நெருப்பால் நெஞ்சுக்குள் சுட்டுக் கொண் டிருக்கும் பார்ப்பனர்கள் _- அவர்களின் ஊடகங்கள் தங்களின் புத்தியைச் சுத்திகரித்துக் கொள்ளப் போவதில்லை.
தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு எழுதினார் -_ இந்தப் பிரச்சினையில் ஊடகங்களே! ஊமையன் கனவு கண்டதுபோல் மென்று விழுங்காமல் உள்ளதை உள்ளபடி எழுதி, ஊராள்வோருக்குத் தக்க அறிவுரை கூறி, உங்கள் மதிப்பை, மரியாதையை உயர்த்திக் கொள்ளுங்கள் என்பதும்கூட நமது வேண்டுகோள் (விடுதலை 9.8.2011) என்று எழுதினாரே!
அவர்கள் திருந்தவில்லை திருந்த மாட்டார்கள் என்பதற்கு அடையாளம் தான் தினமணியின் தலையங்கம் _- தினமலரின் செய்தி வெளியிடும் முறை!
சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான்!
-_- டாக்டர் டி.எம். நாயர்



மதிப்பெண்கள்.. மதிப்பீடல்ல..!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளி யானதில்,  மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இன்ப அதிர்ச்சி! அவர்களே எதிர்பாராத அளவுக்கு பலரும் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள்.
இந்தத் தேர்வில் 9 பேர் 498 மதிபெண்கள் பெற்று முதலிடம் வகித்தனர். 52 பேர் இரண்டாம் இடம். 137 பேர் மூன்றா மிடம். இதுதவிர, தமிழ்ப்பாடம் அல்லாமல் சம்ஸ்கிருதம் படித்து 499 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருபுறம். சில பெற்றோர்கள் வெளிப்படை யாகவே, "என் பையன் இந்த அளவுக்கு மதிப்பெண் பெறுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை' என்று வியந்தார்கள்.
பிள்ளைகளைக் குறைத்து மதிப்பிடுவதுதான் பல பெற்றோரின் குணம். ஆனால், மாணவர்களே, தங்களுக்குள் பாராட் டிக்கொள்ளும்போது, "எப்படிடா? எனக்கே தெரியவில்லை!' என்று பூரிப்பார்கள் என்றால், எங்கேயோ பிழை இருக்கிறது என்பதைத்தான் உணர முடிகிறது. வினாத்தாள் மிக எளிதாக இருந்தது என்பது ஒரு வாதம். சமச்சீர் கல்வி முறையால் தான் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல மதிப்பெண் கிடைத்தது என்பது இன்னொரு வாதம். விடைத் தாள் திருத்தும் நடைமுறைகள், மாணவர்களுக்கு மதிப்பெண்களை அள்ளி வழங்கச் சொல்கின்றன என்பது ஒரு சிலருடைய வாதம்.
கடைசி ஒரு மாதத்தில், மாதிரி வினாத்தாள் மூலம் தொடர்ச்சியாகத் தேர்வு நடத்தியதும், மாதிரி வினாத்தாள்களில் இருந்த கேள்வி களே பொதுத்தேர்விலும் இடம் பெற்றதும் இந்த அளவுக்கு அனைத்து மாணவர்களும் மதிப்பெண் பெறக் காரணம் என்றும் சொல்கிறார்கள்.  இந்த வாதங்கள் அனைத்துமே உண்மையாக இருக்கலாம். இருப்பினும், இந்த உண்மைகள் தமிழகத்தின் நலன் கருதும் கல்வியாளர்களுக்குக் கசப்பான வையாகவே இருக்கும்.
ஏனென்றால், அடுத்த தலைமுறைக்கு இந்த வரலாற்றுச் சாதனைகளால் எந்தவித நன்மையும் விளையப்போவதில்லை. அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்புப்  பொதுத்தேர்வில், இதைவிடக் கூடுதலான மாணவர்கள் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறுவார்கள். டி.வி. தொடர் நாடகத்துக்குக் கிடைக் கும் "ரேட்டிங்' போல, பொதுத் தேர்வுகளுக்கும் ஆண்டுதோறும், ஆட்சிதோறும் "ரேட்டிங்'கா தர முடியும்?
ஆண்டு நிறைவில் நடத்தப்படும் தேர்வு என்பது, ஒரு மாணவரின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காகவும், அடுத்த படிநிலையில் அவரை உயர்த்துவதற் காகவும்தான். ஒரு பத்தாம் வகுப்பு மாணவர் ஒரு பாடப்புத்தகத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடங்களி லும் புரிதல் கொண்டவராக இருக் கிறாரா என்பதைச் சோதிப்பதுதான் தேர்வு. ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் கற்றல் திறனும் ஒன்று போல இருக்காது.
சில மாணவர்கள் முழுமையாகப் படித்து அறிந்திருக்கலாம். சிலர், சில பாடங்களில் சிறப்பாகவும், சில பாடங்களில் புரிதல் இல்லாமலும் இருக்கலாம். எல்லா பாடங்கள் தொடர்பாகவும் கேள்விகளைப் பல படிநிலைகளில் அமைத்து, அதன் மூலம் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் திறனை அளவிடுவதுதான் தேர்வு. இந்த அடிப்படையில்தான் வினாத்தாள் தயாரிக்கப்பட வேண்டும்.
எல்லா மாணவர்களும் தேர்ச்சிபெற வேண்டும், எல்லாரும் அதிக மதிப் பெண் பெற வேண்டும் என்பதற்காக வினாத்தாளை மிக எளிமையாக அமைப்பதும், மாதிரி வினாத்தாளில் பயிற்சி கொடுத்துவிட்டு அதையே மீண்டும் பொதுத்தேர்வில் எழுதச் சொல்வதும், மாணவர்களின் மதிப்பெண்களை 90 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்த வேண்டுமானால் உதவலாமே தவிர, மாணவரின் அறிவுத் திறனை அறிய உதவாது.
இப்படி ஒரு தேர்வை நடத்துவதைக் காட்டிலும் தேர்வு நடத்தாமலேயே அனைவருக்கும் தேர்ச்சி அளித்துவிடலாம்.  கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெறுவதுகூட சில மாணவர்களால்தான் முடியும் என்றிருந்த காலம் ஒன்று உண்டு. விடை சரியாக இருந்தால்கூட முழு மதிப்பெண் வழங்கமாட்டார்கள். ஒரு கணக்கை எவ்வாறு, படிப்படியாக அணுகி, மாணவனால்  விடை காணப்படுகிறது என்பது முக்கியம். சில படிகள் தாவி, விடையைச் சரியாக எழுதினாலும் அடித்து விடுவார்கள். "ஒரு சிக்கலை ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கும் மனப்பயிற்சிதான் கணிதம். விடையைவிட, அதற்கான வழிதான் முக்கியம்' என்று மதிப்பெண் தர மறுத்த ஆசிரியர்களும் இதே தமிழ்நாட்டில் இருந்தார்கள்.
ஆங்கிலம், தமிழ் விடைத்தாள் என்றால் திருத்தல் இன்னும் கடுமையாக இருக்கும். ஆங்கிலம், தமிழ்  இரண்டாம் தாளில் கட்டுரைக்கு 10 மதிப்பெண் உண்டு. அதில் ஒரு தலைப்பின் கீழ் எழுதப்படும் கட்டுரையில் இன்னின்ன விவரங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று 7  மதிப்பெண் வகுத்துக்கொள்வார்கள். மீதி 3 மதிப்பெண் அந்தக் கட்டு ரையில் மாணவர் கையாளும் சொந்த மொழிநடை, கருத்தை எடுத்துச் சொல்வதில் தெளிவு, எழுத்துப் பிழையில்லாமல் இருத்தல் ஆகிய வற்றுக்குத்தான்.
ஆகவே மொழிப்பாடத்தில் "நூற்றுக்கு நூறு' என்பது சாத்தியமே இல்லாமல் இருந்தது.  அறிவியல் பாடத்தில் 38,154 பேர் நூற்றுக்கு நூறு! கணிதத்தில் 29,905 பேர் நூற்றுக்கு நூறு! சமூக அறிவியலில் 19,680 பேர் நூற்றுக்கு நூறு! ஆங்கிலத்திலும்கூட பல மாண வர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்கள். வினாத்தாள் மட்டும் எளிமையாகவில்லை, விடைத்தாள் திருத்துவதும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது. அள்ளித் தரப்பட்ட மதிப்பெண் களால் மகிழ்ச்சி அடைவது பேதைமை!  கல்வி இலவசமாக இருக் கலாம்; இருக்க வேண்டும். ஆனால் தேர்ச்சி என்பது கடுமையாகத்தான் இருந்தாக வேண்டும்.
தேசிய அளவில் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அதிக மதிப்பெண்கள் உதவலாமே தவிர தேர்வுபெற உதவாது. தரம் குறைந்த கல்வியால் தங்கள் குழந் தைகளுக்கும் தமிழ்ச் சமுதாயத் துக்கும் தலைகுனிவுதான் ஏற்படும் என்பதை ஏனோ யாரும் உணர் வதாகவே தெரியவில்லை.
ஒவ்வொரு மாணவரும், பெற்றோரும், ஆசிரி யர்களும், தமிழக அரசும் சுயமதிப்பீடு செய்தால் புரியும் - இவை கொடுக் கப்பட்ட மதிப்பெண்களே தவிர, மதிப்பீடுகள் அல்ல என்பது!
(தினமணி 4.6.2013)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, November 8, 2012

பள்ளிகளில் கிரிக்கெட் பயிற்சி- எச்சரிக்கை!


இன்றைக்கு இளைஞர்களை, மாணவர்களைக் கெடுக்கும் பல்வேறு போதைகளில் கிரிக்கெட் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் நீண்ட காலமாகவே கூறி வருகிறார். இந்தக் கருத்தை இன்றைக்கு வேறு பலரும் பொதுவாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
வெள்ளைக்காரர்களால் அவர்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட இந்தச் சோம்பேறி விளையாட்டு சூரியன் அஸ்தமிக்காத பேராட்சியை மேற்கொண்ட இங்கிலாந்து எந்தெந்த நாடுகளைத் தன் ஆதிக்கத் தின்கீழ் கொண்டு வந்ததோ, அந்தந்த நாடுகளில் எல்லாம் இந்தக் கிரிக்கெட் விதையும் தூவப்பட்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை எப்படி பிரிட்டிஷார் ஆட்சி காலம் உள்ளவரை இந்தியாவில் நீடிக்க வேண்டும் என்று பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டங்களில் காங்கிரஸ் மாநாடுகளில் தீர் மானங்களை நிறைவேற்றினார்களோ, அதுபோலவே வெள்ளைக்காரர்களின் கிரிக்கெட்டையும், சிக் கெனப் பிடித்துக் கொண்டனர்.
மற்ற மற்ற விடயங்களில் எல்லாம் சுதேசி பற்றி வாய்கிழியப் பேசும் பார்ப்பனர்கள் இந்தக் கிரிக்கெட்டில் மட்டும் அந்த வகையில் சிந்தனையைச் செலுத்த மாட்டார்கள்.
விவசாயம் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கையில் இருக்கக்கூடிய காரணத்தாலும், அது உடலுழைப்பைச் சார்ந்ததாக இருப்பதாலும் அத னைப் பாவத் தொழில் என்று மனுதர்மம் சொல்கிறது.
உடலுழைப்புத் தேவைப்படும் விவசாயத் தொழிலை தாங்கள் செய்யாமல் தவிர்த்துக் கொள்ள சாஸ்திர ரீதியாக ஏற்பாடு செய்துகொண்டதைக் கவனிக்கவேண்டும்.
அதேபோல்தான் உடலுழைப்புக்கு அதிகம் வேலையில்லாத இந்தக் கிரிக்கெட்டையும் பெரும் பாலும் தங்கள் வலைக்குள் வளைத்துக் கொண்டு விட்டனர்!
ஊடகங்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களின் கைகளில் வலுவாக வசமாகிவிட்டதால், இந்தக் கிரிக்கெட்டை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி விட்டனர்.
உள்நாட்டு விளையாட்டும், உழைப்புக்கும், உண்மை யான திறமைக்கும் எடுத்துக்காட்டானதுமான சடு குடு, கால்பந்து, கைப்பந்து விளையாட்டுகளுக்கு இந்த ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் கூட்டி ஒதுக்கிவிட்டன. குறிப்பாக தொலைக் காட்சிகள் இந்த வேலையைச் செய்துவிட்டன.
இதன் காரணமாக கிராமங்களில் வயல்வெளி களில் கூட கிரிக்கெட் ஆக்கிரமிப்புச் செய்துவிட்டது. இப்படி ஒரு போதையை ஏற்றி, மக்களிடம் பண வசூல்மூலம் பெரும் சுரண்டல் தொழிலை நடத்தி வரு கின்றனர். ஒரு போட்டி அரசாங்கம்போல கிரிக்கெட் வாரியத்தின் வரவு - செலவு அமைந்துவிட்டது.
கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஆவதற்குக் கடும் போட்டி - அதிலும் ஏகப்பட்ட ஊழல் - நீதிமன்றம் வரை சிரிப்பாய் சிரிக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் மட்டும் அல்ல - நடுவர்கள்கூட சூதாட்டத்தில் சிக்கி, விளையாட்டு என்பதன் வீரியமே கொச்சைப்படுத்தப்பட்டு விட்டது.
பணம் காய்ச்சி மரமாகி விட்டது கிரிக்கெட், டெண்டுல்கருக்கு விளம்பரம் ஒன்றுக்கு எட்டு கோடி ரூபாயாம். நூறாவது சதம் அடித்ததற்காக ஹேமில் டன் பிளான்ட் என்னும் நிறுவனம் ரூ.30 கோடி அளித்துள்ளது.
கிரிக்கெட்டில் அவருக்கு இதுவரை கிடைத்தது 500 கோடி ரூபாயாம், என்ன கொள்ளை இது!
அதுவும் அய்.பி.எல். 20-20 ஆட்டம் வந்தாலும் வந்தது, பகற்கொள்ளைதான். நிமிடம் ஒன்றுக்கு ஆட்டக்காரருக்குச் சம்பளம் ரூ.1200.
இவ்வளவுக் கொள்ளை அடிப்பவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகளோ கொஞ்சநஞ்சமல்ல!
எல்லாவற்றையும் பெரும் கேடு நம் இளைஞர் களின் மத்தியில் ஏறிய சகிக்க முடியாத போதை யாகும்.
இந்தக் கிரிக்கெட் போதையை மேலும் பரப்பும் வகையில் திட்டமிட்ட ஒரு வேலையில் பார்ப்பனர்கள் இறங்கியுள்ளனர். தமிழ்நாடு ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேசன் என்னும் ஓர் அமைப்பை உண்டாக்கி, தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்குக் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் ஒரு வேலையில் இறங்கியுள்ளனர். (இது ஒரு வகையான பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்புதான்!)
குறிப்பாக, நாகை மாவட்டத்தில் கொள்ளிடக் கரை முதல் கோடியக்கரைவரை 200 பள்ளிக்கூடங் களுக்கு இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு அனுமதியுடன் இது நடக்கிறதா? அரசுப் பள்ளிகளில் தனியார் அமைப்புகள் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாமா? தமிழ்நாடு கல்வித் துறை இதில் தலையிடவேண்டும் என்பது நமது அழுத்தமான வேண்டுகோளாகும்.

Saturday, September 29, 2012

பள்ளிகளில் சர்வ சமய வழிபாடா?


தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க)
இப்படி ஓர் ஆணைக்கு அவசியம் என்ன? சர்வ சமய வழிபாடு என்ற ஒன்று சரியானது தானா? அப்படி ஒரு திட்டம் அவசியமானது தானா?
இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதன் பின்னணி என்ன? முதல் அமைச்சர் அல்லது வேறு அமைச்சர் யாராவது இப்படி ஓர் ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினரா?
சமயவழிபாடு கட்டாயம் என்றால், எந்தச் சமயத்தையும் சாராத பிள்ளைகளின் நிலை என்ன?
சமய நம்பிக்கையுள்ள மாணவன் அல்லது மாணவிதான் பள்ளிக்கூடம் செல்லவேண்டுமா?
இந்த நம்பிக்கை இல்லாதவர்களின் வீட்டுப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லக்கூடாதா?
மதச் சார்பற்ற ஓர் அரசின் இத்தகு ஆணை சட்டப்படி சரியானதுதானா?
சர்வசமய வழிபாட்டின் மூலம்தான் ஒழுக் கத்தைக் கற்பிக்க முடியுமா?
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது அறிவைக் கூர்மைப்படுத்துவற்கா அல்லது மழுங்கச் செய்வதற்கா?
இந்திய அரசமைப்புச் சாசனம் 51 -கி(லீ) விஞ் ஞான ரீதியான சிந்தனை, அணுகுமுறை, மனிதாபி மானம்,  ஆய்வு, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப் பது காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று சொல்லவில்லையா?
அதற்கு மாறாக சர்வசமய பிரார்த்தனை நடத் துவது சட்டத்தையே அவமதிப்பதாக ஆகாதா?
இந்திய அரசமைப்புச் சாசனத்தில் கூறப்பட் டுள்ள மேற்கண்ட கடமைக்காக எந்த செயல் திட்டம் கல்வித் துறையிடம் உள்ளது?
தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆணையின் கர்த்தா யார்?
இதில் காவிகளின் - ஆர்.எஸ்.எஸ்.சின் ஊடுரு வல் ஏதாவது இருக்கிறதா?
இது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும். தன்னிச்சையாகச் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஆணை உடனடியாக விலக்கிக் கொள்ளப் படவும் வேண்டும்.
இல்லையென்றால் பகுத்தறிவாளர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும்!
எச்சரிக்கை!  எச்சரிக்கை!!
(குறிப்பு: யோகா பயிற்சி என்ற பெயரால் கடைப் பிடிக்கப்படும் மூடநம்பிக்கைகளும் கைவிடப்பட வேண்டும்.).

தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணை
சுருக்கம்
பள்ளிக் கல்வித்துறை- அனைத்து வகை அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகள், மாநகராட்சி, மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2012-2013ஆம் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவப் பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது திட்டங்கள் சிறப்பாக அமைய பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளல் ஆணை வெளியிடப் பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் (இ1) துறை
அரசாணை (1டி) எண்.264    நாள்:06.07.2012 படிக்கப்பட்டது:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநரின், கடித ந.க.எண்.796/ஈ2/2012 நாள் 16.05.2012.
---------
ஆணை:
2012- 2013 ஆம் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு எட்டாம் வகுப்பு வரை முப்பருவப் பாடநூல் முறையையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையையும் நடைமுறைப் படுத்த ஆணையிடப்பட்டுள்ளது எனவும், இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் மாணவர்களுக்குப் புத்தகச் சுமை, பாடச் சுமையைக் குறைத்து, மன அழுத்தமின்றிப் பாடங்களை மனப் பாடம் செய்யாமல், செயல்பாடுகள் வாயிலாகப் புரிந்து கொண்டு கற்பித்தல் ஆகும் என்றும், இம்முறைமூலம் மாணவர்கள் அறிவை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, மாணவர்களின் அனைத்துத் திறன்களையும் முழுமையாக வெளிக்கொணர்ந்து நல்ல பண்புகளை உடைய ஆளுமைத் திறன் பெற்றவர்களாக உருவாக்க இயலும் என்றும் தெரிவித்து, மேற்கண்ட நோக்கங்கள் முழுமை யாகவும், சிறப்பாகவும் அமைய, பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஆணை வெளியிடுமாறு மேலே படிக்கப்பட்ட கடிதத்தில்  மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசிடம் வேண்டியுள்ளார்.
2) மேற்காணும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநரின் கருத்துருவினை நன்கு பரிசீலிக்கப்பட்டு பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது.
அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கீழ்வரும் செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று பொது காலை வழிபாட்டுக் கூட்டமும் மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அனைத்து மாணவர்களும் சுழற்சி முறை யிலும் அமைக்குமாறும், சான்றாகப் பட்டியலில் உள்ள நிகழ்வான தமிழ்த்தாய் வாழ்த்தை ஒவ்வொரு மாணவனும் தன்முறை வரும்போது பாட வேண்டும். இச்செயல்பாடுகளை மேற்கொள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள கையேட்டினைப் பள்ளிகள் பின்பற்றுதல் வேண்டும்.
வ. எண்.                       நிகழ்வுகள்                                              நிமிடங்கள்

1.               தமிழ்த்தாய் வாழ்த்து                                                   1.30
2.               கொடி ஏற்றுதல், கொடி வணக்கம் *                              2
3.               கொடிப் பாடல்*                                                             2
4.                உறுதிமொழி                                                                4
5.               சர்வ சமய வழிபாடு*                                                    1
6.               திருக்குறள் மற்றும் விளக்கம்                                     2
7.              செய்தி வாசித்தல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)               4
8.              இன்றைய சிந்தனை (பொது அறிவு/பழமொழி)            2
9.              பிறந்தநாள் வாழ்த்து                                                   0.30
10.            ஆசிரியர் உரை                                                              1
மொத்தம்                         20
* வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை மட்டும் செயல்படுத் தப்பட வேண்டும் மற்ற நாள்களில் செயல்படுத்த தேவையில்லை.
தியானம் 5 நிமிடம்
(i)  மதிய உணவு இடைவேளைக்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக
எளிய யோகா பயிற்சி - 15 நிமிடங்கள்.
அடுத்த 15 நிமிடங்களில் கையேட்டில் உள்ளவாறு பின்வரும் பாட இணைச் செயல்பாடுகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.
1. விழுமக் கல்வி
2. உடல் நலக்கல்வி
3. கலைக்கல்வி
4.    பணி அனுபம்
5.    சுற்றுச்சூழல் கல்வி
6.    முதல் உதவி மற்றும் தற்காப்பு விதிகள்
(ii)  மதிய உணவு இடைவேளைக்குப் பின்
1. வாய்ப்பாட்டை செலுத்துல்.
2.    ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு இரண்டு சொற்களை சொல்வதை எழுதச் சொல்லுதல்.
3.    ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு இரண்டு சொற்களை சொல்வதை எழுதச் சொல்லுதல், வாக்கியமாக அமைத்தல்...
ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை யன்று இறுதி ஒரு மணி நேரம்.
(III) மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழிகள் கூறுதல், பழமொழிகள் கூறுதல், படைப்பாற் றல் போன்ற செயல்பாடுகளை ஒவ் வொரு மாணவரும் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3) மேற்கூறிய செயல்பாடுகளை, அனைத்து வகை அரசு மேல் நிலை, உயர் நிலை, நடுநிலை, மற்றும் தொடக்கப் பள்ளிகள், மாநகராட்சி, மெட்ரிக், ஆங்கிலே - இந்தியன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்திட இவ்வாணையினை சுற்றறிக்கையாக அனுப்புமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
(ஆளுநரின் ஆணைப்படி)
த.சபிதா
அரசு முதன்மைச் செயலாளர்
பெறுநர்:
மாநில கல்வியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், சென்னை-6
பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை -6
தொடக்கக் கல்வி இயக்குநர்,  சென்னை -6
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர், சென்னை - 6
நகல்:
மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சரின் நேர்முக உதவியாளர், சென்னை -9
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சென்னை - 9 பிற்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை - 9.
//ஆணைப்படி அனுப்பப்படுகிறது//
பிரிவு அலுவலர்

- மின்சாரம்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...