Showing posts with label அ.இ.அ.தி.மு.க.. Show all posts
Showing posts with label அ.இ.அ.தி.மு.க.. Show all posts

Sunday, July 5, 2015

விடுதலைப்புலிகள்மீது தொடர்ந்து பழி சுமத்தி வருபவர் செல்வி ஜெ. ஜெயலலிதா

முல்லைப் பெரியாறு  அணைக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பால் ஆபத்து என்பதா?

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலிருந்து இந்தப் பகுதியை தமிழக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்!



முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப்புலிகள் அமைப்பால் ஆபத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்து இருப்பதோடு அந்த  சொற்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாத்திட அணைப் பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (Central Industrial Security Force) தேவை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், முற்றிலும் தேவையில்லா வகையில் விடுதலைப் புலிகளையும் அதன் ஆதரவு அமைப்புகளையும் வம்புக்கு இழுத்து இருப்பது கண்டிக்கப் படத் தக்கதாகும்.

விடுதலைப்புலிகளால் ஆபத்தா?

பயங்கர வெடிப் பொருட்களை ஏற்றும்  வாகனங்கள் மூலம் முல்லைப் பெரியாறு அணையைத் தகர்க்கும் சதி வேலை நடந்து கொண்டுள்ளதாகவும் தீவிர மதவாத அமைப்புகளாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் இந்த ஆபத்துகள் ஏற்பட இருப்ப தாகவும் அய்.பி.க்குத் தகவல்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு பலகீனமாக உள்ளது என்றும் அந்த அணை உடைந்தால் இடுக்கி மாவட்டமே மூழ்கிப் போய் விடும்  என்றும் கிளிப்பிள்ளைப் பாடம் போல கேரள அரசு சொல்லிக் கொண்டு வருகிறது.

உண்மை என்னவென்றால் 3.7 ரிக்டர் அளவுக்கு ஒரு முறை நில நடுக்கம்  ஏற்பட்டபோதுகூட அணைக்கு ஒரு சிறு புள்ளி அளவுக்குக்கூட சேதாரம் ஏற்பட்டதில்லை.

கேரள அரசுக்குக் காரணத்தை எடுத்துக் கொடுப்பதா?

இந்த நிலையில், தமிழ்நாடு அரசே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல முல்லைப் பெரியாறு அணைக்கு மதவாத சக்திகளாலும், விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்பினாலும் ஆபத்து என்று சொல்லுவது கேரள அரசுக்குப் புதுக் காரணத்தை எடுத்துக் கொடுப்பது போன்ற முன்யோசனையற்ற - புத்திசாலித்தனமற்ற தமிழ்நாட்டுக்கு விரோதமான செயல் அல்லவா! கேரள அரசே அணையை உடைத்து விட்டு, தமிழ்நாடு அரசு சொன்ன காரணத்தின் அடிப்படையில் மதவாத சக்திகள் தான், விடுதலைப்புலிகள் அமைப்புதான் அணையை உடைத்து விட்டன என்று சொல்லித் தப்பும் வழியை கேரளாவுக்கு அதிமுக அரசு சொல்லிக் கொடுக்கலாமா? உதவி செய்யலாமா?

அணையை ஏற்கெனவே சேதப்படுத்தியதுண்டு கேரள அரசு

இதற்கு முன்பேகூட2015 மே மாதத்தில் கேரள அரசு என்ன செய்தது? அணைக்கு 350 அடி தூரத்தில் 20 மீட்டர் ஆழத்தில் 13 இடங்களில் பாறைகள் 3 அங்குல அளவில் எடுக்கப்பட்டு ஆய்வில் ஈடுபட்டது கேரள அரசு. அதற்கு முன்பும்கூட அணையின் சுற்றுச்சுவர்களைச் சேதப்படுத்தியதும் உண்டு. இந்த நிலையில் கேரள அரசுக்குத் துணை போகும் வகையில் அஇஅதிமுக  அரசு நடந்து கொள்ளலாமா?

இதில் விடுதலைபுலிகள் அமைப்பு எங்கே வந்தது? அவர்களுக்கும் இந்த  பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்? ஓர் இனமே கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு, அதன் மறு வாழ்வுக்காக உலகெங்குமுள்ள மனித உரிமையாளர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், விடுதலைப்புலிகள்மீது அபாண்ட பழி போடலாமா?

விடுதலைப்புலிகள்மீது தொடர்ந்து பழி சுமத்தி வருபவர் செல்வி ஜெ. ஜெயலலிதா

இப்பொழுது மட்டுமல்ல; அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தொடக்க முதலே விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்துவதிலும், அவர்களுக்கு எதிரான காய்களை நகர்த்துவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் என்பதுதானே உண்மை?

நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை சிறீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான L.T.T.E. யின் தலைவரான பிரபாகரனை இங்கு கொண்டு வந்து சேர்த்து  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண் டிருந்தேன் - என்று முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் சட்டப் பேரவையிலேயே பேசவில்லையா? (16.4.2002). 

கலைஞர்மீது கண்டனம்

எப்பொழுதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகி றாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவான பேச்சுகள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறு கின்றன. (ஜெயலலிதா அறிக்கை Dr. நமது எம்.ஜி.ஆர். ஏடு 23.10.2008)

போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி விடுதலைபுலிகள் அமைப்பைக் காப்பாற்று வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல (ஜெ. ஜெயலலிதா  - Dr. நமது  எம்.ஜி.ஆர். ஏடு 16.10.2008).

ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல ஈழத்தில் தமிழின அழிப்புப் போரை சிங்கள அரசு நடத்தியபோது அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா  தெரிவித்த கருத்துதான் இது  (Dr. நமது எம்.ஜி.ஆர். ஏடு - 18.1.2009).

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்னவர்கள் காலங் கடந்தாவது உணர்வார்களா?

இந்தப் பின்னணிகளை எல்லாம் வைத்துப் பார்த்தால் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட மனுவில் விடுதலைப்புலிகள்மீது அபாண்ட மாகப் பழி சுமத்தும் போக்கு - வெறி இன்னும் அடங்கி விடவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்! என்று பிரச்சாரம்  செய்த தோழர்களும், அமைப்புகளும் காலங் கடந்தாவது தாங்கள் செய்த இமாலயத் தவறினை - துரோகத்தை எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.

சொற்களை விலக்கிக் கொள்ள வேண்டும்!

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விடுதலைப்புலிகள்பற்றிக் கூறப்பட்ட பகுதியை தமிழ்நாடு அரசு விலக்கிக் கொண்டு காலா காலத்திற்கும் நின்று உரக்கப் பேசும் பழியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனித உரிமையாளர்களின் மனிதநேயர் களின் முக்கிய வேண்டுகோளாகும்.

இந்தியாவில் இல்லாத அமைப்பின்மீது வீண் பழி சுமத்த வேண்டாம் - வேண்டவே வேண்டாமே!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

05-07-2015

Friday, January 23, 2015

சிறீரங்கம் இடைத் தேர்தலில் திமுகவையே ஆதரிக்க வேண்டும் - ஏன்? - கி. வீரமணி

சிறீரங்கம் இடைத் தேர்தலில் திமுகவையே ஆதரிக்க வேண்டும் - ஏன்?

சிறீரங்கம் இடைத் தேர்தலில் திமுகவையே ஆதரிக்க வேண்டும் - ஏன்?

நடைபெறவிருக்கும் சிறீரங்கம் சட்டப்  பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரையே ஆதரிக்க வேண்டிய அவசியத்தை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வரும் பிப்ரவரி 13ஆம் தேதி சிறீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது இந்த இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

ஏன் இந்த இடைத் தேர்தல்?

இத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, அது நிரூபிக்க பட்டதால், பெங்களூர் தனி நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்ததால் சட்டத்தின் இயல்பான முறைப்படி முதல் அமைச்சர் பதவியையும், சிறீரங்க சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இந்த இடைத் தேர்தல் சட்டப்படி நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. மற்றபடி இந்த இடைத் தேர்தலுக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.

ஊழல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை!

1) இந்தியாவில் ஊழல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டு, முதல் அமைச்சர் பதவியை இழந்தது என்பது முதன் முதலில் அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் விஷயத்தில்தான் நடந்துள்ளது. இது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது.

ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதால், காலியான சட்டப் பேரவைத் தொகுதிக்கு  இடைத் தேர்தல் நடக்கும் நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிடும் போது, அக்கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்கச் செய்வதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிரான ஆரோக்கியமான பண்பு நலன் கொண்டவர்கள் என்பதை நிலை நிறுத்த முடியும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைப் பொறுத்ததல்ல; ஜனநாயக கடமை ஆகும்.

நாட்டையே ஊழலில் மூழ்கடித்து விடும் - எச்சரிக்கை!

அவ்வாறு இல்லாமல் ஊழல் புரிந்த ஒரு கட்சியின் வேட்பாளரை மீண்டும் வெற்றி பெறச் செய்தால் அது இந்த ஒரு இடைத் தேர்தல் சம்பந்தப்பட்ட ஒன்றாகக் கருதப்பட முடியாமல், நாட்டையே ஊழலில் மூழ்கடிப்பதற்கான ஓர் அங்கீகாரத்தை மக்களே உற்சாகமாக வழங்கி விட்டார்கள் என்ற மனப்பான்மையைத் தானே உருவாக்கும்?

2) இரண்டாவதாக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2011இல் பொறுப்பேற்றது முதல், மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகள் நடைபெற்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ள சொல்லுவதற்கென்று பெரிதாக ஏதுமில்லை என்பது வெளிப்படை!

அத்தியாவசியப் பொருள்களும் - கட்டண உயர்வு

மாறாக மக்களின் அடிப்படை, அன்றாட வாழ்வைப் பாதிக்கும் வகையில், பேருந்துகள் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என்று சாதாரண அடித்தட்டு மக்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் செயல்பட்டு வந்திருக்கிறது. குறைந்த பட்சம் இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவிப்பதற்காவது, இந்த இடைத் தேர்தலை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா!? அப்படி ஒரு தீர்ப்பை சிறீரங்கம் தொகுதி வாக்காளர்கள் வழங்காவிட்டால் மேலும் மேலும் பல துறைகளிலும் விலைவாசியை உயர்த்தும் கைங்கர்யத்தை அ.இ.அ.தி.மு.க. அரசு துணிச்சலாகச் செய்வதற்கான துணிவை அங்கீகாரத்தைக்  கொடுத்ததாகி விடுமே!

மின்வெட்டுத் தொடருகிறதே!

3) நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதங்களில் மின் தட்டுப்பாட்டை அறவே ஒழித்து விடுவோம் என்று அ.இ.அ.தி.மு.க. உத்தரவாதம் கொடுத்தது; நான்கு ஆண்டுகள் ஓடிய நிலையிலும் இன்னும் மின் தட்டுப்பாடு என்னும் இருட்டில் மக்கள், உழலும் பரிதாப நிலைதானே! அதே நேரத்தில் மின் கட்டணம் உயர்வு மட்டுமே நடந்திருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.

தி.மு.க. ஆட்சி பற்றி உச்சநீதி மன்றம்

4) இந்தியாவிலேயே பொது விநியோகத் திட்டத்தில் தமிழ்நாடு அரசை (திமுக அரசை) மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆலோசனை தெரிவித்தது (12.8.2010).
ஆனால், இன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசின் செயல்பாடு என்ன? பொது மக்களின் குமுறலை அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் - ஆட்சி என்ற ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறதா என்பது எங்கும் பேச்சாகவே இருக்கிறது!

மத்தியில் உள்ள பிஜேபி அரசு இந்துத்துவா கொள்கை வெறி கொண்டது என்பது நாடறிந்த உண்மை. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. கட்சி ஆட்சி என்பதும் பெரிதும் அந்தப் போக்குக் கொண்டதே என்பதற்குப் பெரிய எடுத்துக்காட்டுகள் தேவையில்லை.

அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டே மண் சோறு சாப்பிடுவது வரை சர்வ சாதாரணமே!

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர் சட்டத்தின் மூலம் கொண்டு வந்தார். அதன் மூலம் தந்தை பெரியார் உள்ளிட்ட தமிழ்நாட்டு அறிஞர் பெரு மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கை நிறைவேறியது.

தமிழ் ஆண்டு போய் சமஸ்கிருத ஆண்டு வந்தது!

ஆனால் ஆட்சிக்கு வந்த முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா - இந்து மதப் புராணக் கதையின் அடிப்படையில் சமஸ்கிருத ஆண்டுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறி முந்தைய தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியதை மாற்றி தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டத்தைக் கசக்கிக் குப்பைக் கூடையில் வீசி எறிந்தார். இந்த ஒன்றே ஒன்று போதும் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியும், அவர் பொதுச் செயலாளராக இருக்கும் அ.இ.அ.தி.மு.க.வும் தமிழ் - தமிழர் - விரோத இந்துத்துவா ஆட்சி என்பதற்கு. பிஜேபியை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் அது கொண்டுள்ள இந்துத்துவ வெறி என்றால், அதே கண்ணோட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியையும் பார்ப்பதற்குச் சகல தகுதியும் அஇஅதிமுகவுக்கு உண்டு. அந்த வகையிலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார்பின்மை கொள்கைக்கு எதிராக செயல்படுவோர் யாராக இருந்தாலும் வாக்காளர் பெரு மக்கள் வாக்குச் சீட்டு மூலம் தக்க பாடத்தைக் கற்பிக்கக் கடமைப்பட்டுள்ளவர்கள் ஆவார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்....

6) சிறீரங்கம் இடைத் தேர்தலில் பிஜேபி நின்றாலும் சரி, அது தொடர்புடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் (NDA) நின்றாலும் சரி, அது இந்துத்துவா வெறிக்கு, ராம ராஜ்ஜியத்துக்கு, மதச் சார்புத் தன்மைக்கு அளிக்கப்பட்ட ஆதரவாகவே கருதப்பட வேண்டும்.

7) கடந்த எட்டு மாத மத்திய பிஜேபி ஆட்சியில் நடைபெற்றவை எல்லாம் இந்துத்துவா மதவெறி முழக்கங்கள்தான்; அது காந்தியாரைப் படுகொலை செய்த கோட்சேக்குக் கோயில் கட்டுவோம் என்று சொல்லும் அளவுக்கு மிகப் பெரிய துணிச்சலைக் கொடுத்து விட்டதா இல்லையா?

வளர்ச்சியா - தளர்ச்சியா?

8) வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி மக்களுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து ஏமாற்றி, மத்தியில் ஆட்சியிலே அமர்ந்த நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தளர்ச்சியைத் தவிர மக்கள் கண்ட பலன் என்ன?

இலாபம் தரும் பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் தனியார்க்குத் தூக்கிக் கொடுக்கும் நாட்டின் செல்வத்தை தனியார்க்கு ஏகபோகமாக்கும் கேடு கெட்ட வேலையில்தான் மோடி அரசு வேக வேகமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது.

விவசாயம் வேகமாக வீழ்ச்சியை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டு வரப்பட்ட பயிர்க் காப்பீட்டு (இன்ஷ்யூரன்ஸ்) திட்டத்தை யாருக்கும் தெரியாமல் கையுறை போட்டுக் கொன்று குழியில் தள்ளி மூடிவிட்டது. கிராம மக்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டமான நூறு நாள் வேலை திட்டம் அனேகமாக ஊற்றி மூடப்பட்டு விட்டது.

உள்நாட்டுத் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றனவே!

வெளிநாட்டு முதலாளிகளைக் கூவிக் கூவி அழைக்கும் பிஜேபி அரசு, ஏற்கெனவே இந்தியாவில் நடைபெற்று வந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றனவே - அதனைத் தடுக்க ஒரு தூசைக்கூட அசைக்கவில்லையே!

ஆர்.எஸ்.எஸ். சாவி கொடுத்தால் ஆடும் இந்துத்துவா பொம்மையாகத்தான் மோடி அரசு நடனமாடிக் கொண்டு இருக்கிறது.

அதன் காரணமாகவே நடைபெற்ற  அனைத்துத் தேர்தல்களிலும் பெரிய அளவுக்கு வாக்குச் சரிவை பிஜேபி சந்தித்துக் கொண்டு இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். குறுகிய காலத்திலேயே வெகு மக்கள் எதிர்ப்பை வாரி அணைத்துக் கொண்டு விட்டதே. பிரதமர் மோடிவெற்றி பெற்ற உ.பி. வாரணாசி தொகுதிகளில் நடைபெற்ற கண்டோன்மென்ட் தேர்தலில்  அனைத்து இடங்களிலும் பிஜேபி தோல்வியைக் கண்டுள்ளது.

குறுகிய காலத்திலேயே பிஜேபி ஆட்சியின் தரம் எத்தகையது என்பதை இந்திய வாக்காளர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். சிறீரங்கம் இடைத் தேர்தல் மேலும் ஒரு பாடத்தைக் கற்பித்தால் எதிர் காலத்திற்கு நன்மையாக முடியும்.

கூட்டணியிலிருந்து விலகல்

கடந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சியின்மீது கடும் அதிருப்தி கண்டு, வெளிப்படையாகவே குற்றம் சாட்டி, கூட்டு முறிந்தது என்று அறிவித்து, வெளியேறி விட்டனர் என்பதையும் சிறீரங்கம் தொகுதி வாக்காளர்கள் தெரிந்து  கொள்ள வேண்டும்.

இடதுசாரிகள் கவனத்துக்கு...

9) சிறீரங்கம் இடைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்கிஸ்ட்) போட்டியிடுவதாக அறிவிப்பு வந்துள்ளது. தேர்தலில் போட்டியிடுவது என்பது அரசியல் கட்சிக்குரிய உரிமையே! அதே நேரத்தில் யார் வெற்றி பெறுவது என்பதைவிட யார் தோற்கடிக்கப்பட வேண்டியது எது என்பது முக்கியம் அல்லவா! தெரிந்தோ தெரியாமலோ தோற்டிக்கப்பட வேண்டிய சக்திகளுக்கு நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ துணை போய் விடக் கூடாது என்பதில் இடதுசாரிகள் எச்சரிக்கையாக இருந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். ஒரே நேரத்தில் பல போர் முனைகளைத் தேர்வு செய்யக் கூடாது என்பது இடதுசாரிகளுக்குத் தெரியாததல்லவே!

தி.மு.க. வேட்பாளரை ஆதரிப்பீர்!

10) மதவாத பிஜேபி நிலைப்பாட்டை வெளிப்படையாகவே விமர்சித்து தனது எதிர்ப்பினை திமுக பொதுக்குழு (சென்னை 9.1.2015) வலுவான தீர்மானத்தின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் கூடுதல் வாய்ப்பு திமு.க.வுக்கு மட்டுமேதான் இருக்கிறது என்ற நிலையில் அதனைப் பிரகாசமாக்கி, திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதன் மூலம் மத்தியில் உள்ள மதவாத பிஜேபி அரசு, மாநிலத்தில் அதே மனப்பான்மை கொண்ட அ.இ.அ.தி.மு.க. அரசுகளுக்கு தோல்வியைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

இதனை சிறீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர்கள் தெளிந்து உணர்ந்து அத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு வெற்றியை ஈட்டித் தருமாறு திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு கொள்கைக் கண்ணோட்டத்திலும், நாட்டு மக்களின் வளர்ச்சி நோக்கிலும் இந்த வேண்டுகோளை திராவிடர் கழகம் வாக்காளர்களுக்கு முன் வைக்கிறது.


கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்

சென்னை
23-1-2015


Saturday, January 3, 2015

ஊடகங்களுக்கு முக்கியம் நடிகர்கள்தான் - நோக்கியா அல்ல!


தமிழ்நாட்டின் நோக்கியா ஆலை மூடப்படு வது இந்தியாவின் தொழில் முதலீட்டை எப்படியெல்லாம் பாதிக்கும் என்று இந்த கட்டுரை விவரிக்கிறது.

ஆனால் இதில் நேரடியாகவும் உடனடியாகவும் பாதிக்கப்படும் தமிழ் நாட்டில் இவ்வளவு முக் கியத்துவம் வாய்ந்த பிரச்சினை  இது குறித்து தேவைப்படும் அளவுக்கு பெரிதாக எந்தக் கவ லையோ, விவாதமோ நடக்கவே இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டின் தமிழ் மொழியின் ஊட கங்கள் (செய்தித்தாள், சஞ்சிகைகள், 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சி கள் மற்றும் வானொலி) இவ்வளவு பெரிய மாநி லத்தின் தொழில்துறை, தொழிலாளர் வாழ்க் கையை நேரடியாக பாதிக் கும் பிரச்சினை குறித்து எவ்வளவு நேரம் ஒதுக்கி செய்தி வெளியிட்டன என்று நீங்கள் ஆராய்ந் தால் தமிழ்நாட்டின்/ தமிழ் மொழியின் ஊடகத் துறையின் உண்மையான பிரச்சினை என்ன என்று நீங்கள் தெரிந்து கொள் ளலாம்.

குறிப்பாக நடிகர் விஜயின் கத்தி மற்றும் ரஜினிகாந்தின் லிங்கா ஆகிய இரண்டு திரைப் படங்களுக்கு தமிழ் நாட்டு/தமிழ்மொழி ஊடகங்கள் ஒதுக்கிய இடம், நேரத்தை கணக் கிட்டு, இதே ஊடகங்கள் இந்த நோக்கியா ஆலை விவகாரத்துக்கு எவ்வளவு இடம், நேரத்தை ஒதுக் கின என்பதையும் கணக் கிட்டால் இதில் இருக்கும் விபரீதத்தின் ஆழ அக லங்கள் புரியக்கூடும். என்ன காரணம்?

தமிழ்நாட்டு, தமிழ் மொழியின் ஊடகங்களில் ஊடுருவிவிட்ட சுய தணிக்கை முறைதான் இதற்கு உண்மையான காரணம். அரசுக்கு எதி ரான செய்தியைப் போடாதே என்பது தமிழக ஊடகத்துறையின் எழுதப்படாத விதியாகவே இன்று ஆகிவிட்டது.

அப்படியானால் எதைச் செய்தியாக்குவது? சினிமாவைச் செய்தியாக்கி உண்மையான செய்தி களை ஒதுக்குவது என்பது இங்கே ஒருவித கலையா கவே வளர்க்கப்பட் டிருக்கிறது.

அதனால் தான் கமல் ஹாசன் தன் வீட்டை விற்பேன் என்று மிரட்டுவது முதல்பக்க தலைப்புச் செய்தியாகிறது. ரஜினிகாந்த் மனைவியின் சொத்துக்கள் ஏலத்துக்கு வரலாம் என்பது அதை விடப் பெரிய செய்தியாகிறது. ஆனால் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின், சுமார் 25000 தொழிலாளர்களை (நேரடியாகவும் மறைமுகமாகவும்) உட னடியாக பாதிக்கும், நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசு நிலம் அநியாயத் துக்கு வீணாகும் செய்தி முதல் பக்கத்துக்கு வரா மல் பார்த்துக் கொள்ளப் படுகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதார பலங்களில் ஒன்றான தயாரிப்புத் துறைக்கு இதனால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பின்னடைவு குறித்து எந்த விவாதமும் இதுவரை ஊடகங்களில் உரிய முறையில், உரிய அளவில் முன்னெடுக்கப் பட வில்லை.

உண்மையான செய்தியைக் கவனமாக புதைத்துவிட்டு, அதை மறைப்பதற்கு ஊருக் கெல்லாம் பயாஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கி றோம்   ஊடகங்களில்.
உண்மையை சொல்வ தானால் இன்றைய நிலை யில் தமிழ்நாட்டு ஊட கங்களுக்கு வெளியார் தணிக்கை என்று பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. 

அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எழும் சிறு சிறு சலசலப்புகளைத் தவிர. மாறாக தமிழ் நாட்டு ஊடகங்களின் உண்மையான பிரச்சினை இந்த சுய தணிக்கை முறை தான். ஊடகசுதந்திரத் திற்கு வெளி ஆபத்து இல்லை. உள் ஆபத்தே உண்மையான பேராபத்து.

(மோகன் குருசாமி முகநூலிலிருந்து)



ஜனவரி 16-31

Monday, December 23, 2013

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சிந்தனைக்கு...

இறை நம்பிக்கை உள்ளவர் களுக்கு அதிசயம் ஏற்படும். நம்பிக்கையை இழப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது. இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உங்களிடம்  இருந்தால் உங்கள் வாழ்வின் வெற்றி நிச்சயம்!

இவ்வாறு பேசியிருப்பவர் வேறு யாராகத் தான் இருக்க முடியும் -  அம்மையார் ஜெயலலிதாவைத் தவிர?

இந்தக் கருத்தைக் கூறுமுன் ஒரே ஒரு நொடி, தந்தை பெரியாரை நினைத்துப் பார்த்திருக்க வேண் டாமா? அப்படி நினைத்துப் பார்க்கும் நிலை இல்லாவிட்டால் உங்கள் சுவரொட்டிகளில் தந்தை பெரியார் படம் எதற்கு? பெரியார் உருவாக்கிய திராவிட எதற்கு? என்ற கேள்வி எழாதா?

அனைத்திந்திய அண்ணா தி.மு.க. என்பதற்குப் பதிலாக அக்கிரகார முன்னேற்றக் கழகம் என்று வைத்துக் கொள்ளலாமே!

அண்ணாவின் பெயரைக்கூட கட்சியில் வைத்துக் கொள்ளும் அருகதை கூடக் கிடையாதே!

அண்ணா எந்தக் கோயிலுக்குச் சென்றார்? அண்ணா யாகம் நடத்தினார், மண் சோறு சாப்பிடச் சொன்னார் என்று சொல்ல முடியுமா?

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் வெற்றி பெற முடியாதாமே!

அடேயப்பா - எப்படிப்பட்ட கண்டு பிடிப்பு!

சமுதாயப் புரட்சி இயக்கம் நடத்தி மக்களிடம் மண்டிக் கிடந்த மூடநம்பிக் கைகளை, ஆரியச் சழக்குகளை, ஆண்டவன்களின் ஆபாசச் சேற்றை யெல்லாம் அணு அணுவாகச் சிதைத்து விழிப்புணர்வு எரிமலையை ஏற்படுத்தி, மாபெரும் வெற்றி பெற்ற உண்மையான புரட்சித் தலைவர் தந்தை பெரியார் அல்லவா!

அதனால்தானே அறிஞர் அண்ணா அவர்கள் பெரியார் ஒரு தனி மனிதரல்லர்; ஒரு சகாப்தம், கால கட்டம், திருப்பம்! என்று  ஆணி அடித்தது போல கணித்தார்.

பெரியார் கடவுள் மறுப்பாளர்தான்!

கடவுள் இல்லை; இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

பரப்பியவன் அயோக்கியன்

வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர்தான்.

அந்த பெரியார் அவர்களுக்குத் தான் இந்த அமைச்சரவையே காணிக்கை என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் அண்ணா பிரகடனப்படுத்தினார்.

இந்த வரலாறெல்லாம் அம்மையா ருக்குத் தெரியாது என்றால் யாருக் காவது அ.இ.அ.தி.மு.க.வில் திராவிடர் இயக்க வரலாறு தெரியும் என்றால்(?!) அவர்களிடம் பாடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்! அல்லது விடுதலை ஏட்டை நாளும் படிக்கட்டும்; அல்லது திராவிடர் கழக வெளியீடுகளைப் படித்துப் பார்க் கட்டும்!

அ.இ.அ.தி.மு.க. என்பதில் அண்ணா இருக்கிறார் - திராவிடமும் இருக்கிறது. இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டு கருத்துச் சொல்ல அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாள ருக்கு அதிகாரம் கிடையாது. அவர் கருத்தை பாரம்பரியமிக்க  கருத்தாக் கமுடைய சொல்லாடல்களைக் கொண்ட கட்சியின் மீது திணிக்க முடியாது - திணிக்கவும் கூடாது.

ஒன்றை வேண்டுமானால் வெளிப் படையாகக் கூறட்டுமே பார்க்கலாம்; அ.இ.அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நெற்றியிலே பட்டையும், குங்குமமும் அணிந் திருக்க வேண்டும்,

கழுத்திலே உருத்திராட்சக் கொட்டை தொங்க வேண்டும். கையிலே மந்திரக் கயிறு கட்டி இருக்க வேண்டும் - இவை இருந்தால்தான் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் என்று அதிகார பூர்வமான சட்ட விதிகளிலே திருத்தம் கொண்டு வரலாமே!

ரிலேட்டி விட்டி விதியைக் கண்டு பிடித்த அய்ன்ஸ்டின் நாத்திகர்தான் - அந்தத் தத்துவத்தை மட்டும் அவர்  கண்டு பிடிக்கவில்லையென்றால் இன் றைக்கு ஏற்பட்டுள்ள விஞ்ஞான சாதனைகளில் மஞ்சள் குளிக்க முடியுமா?

நோபல் பரிசு பெற்ற பெரும் பாலான விஞ்ஞானிகள் எல்லாம் நாத்திகர்கள்தான். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்கூட கடவுள் மறுப்பாளர் தான்.

கடவுள்தான் மனிதனைப் படைக் கிறார் - மனிதன் ஆயுளை நிர்ணக் கிறான் என்பது இப்பொழுது தவிடு பொடியாகவில்லையா?

கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டு விட்டதே!

காலரா நோய்க்கு காரணம் காளியாத்தா - அம்மை நோய்க்குக் காரணம் மாரியாத்தா என்று நம்பி கோயில்களில் கூழ்  காய்ச்சி ஊற்றிக் கொண்டு கிடந்தார்களே அவற்றாலா காலராவும், அம்மையும் ஒழிந்தன?

தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த தால் அல்லவா - பெரியம்மை இருப்ப தாகக் கண்டுபிடித்துச் சொன்னால் ஆயிரம் ரூபாய் பரிசு என்று அரசு விளம்பரம் செய்ததே!

அம்மைத் தடுப்பு நோயைக் கண்டுபிடித்த ஜென்னரையும்,  உலகம் உருண்டை என்ற கலிலியோவையும்,  பரிணாமத் தத்துவத்தைக் கண்டு பிடித்த டார்வினையும் எதிர்த்ததும் அவர்களைத் தண்டித்ததும்கூட மதம் தானே!

டார்வின்மீதும், கலிலியோ மீதும் கிறித்துவ மதம் தண்டனையை ஏவிய தற்காக போப் - இப்பொழுது வருத்தம் தெரிவித்துள்ளாரே. இந்த வரலாறு எல்லாம் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்குத் தெரியுமா?

Religious People are less intelligent than atheists - Study finds என்ற சிறப்பு மிக்க கட்டுரையை முதல் அமைச்சர் படித்துப் பார்த்ததுண்டா?

அமெரிக்காவின் ராச் செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வு பற்றி அறி வாரா?

மிரான் ஜீக்கர் மேன் என்ற ராச் செஸ்டர் பல்கலைக் கழகப் பேராசிரி யரின் தலைமையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், அறிவாற்றலுக்கும், மதப் பழக்கத்திற்கும் ஏற்பட்டுள்ள வேலைப் பாடுகளைப் பற்றிய 63 ஆய்வுகளில் 53 ஆய்வுகள் மத நம் பிக்கை உடையவர்கள் குறைந்தளவு அறிவாற்றல் உடையவர்கள் என்பதை ஆய்வுகள்மூலம் நிரூபித்துள்ளனரே!

அரசியலில் அடாவடித்தனமாகப் பேசுவதுபோல பகுத்தறிவாளர்கள் மீதும், அறிவியல்வாதிகள்மீதும் கல்லெறியலாம் என்று அம்மையார் ஆசைப்பட வேண்டாம்.

- மின்சாரம்



தோழர் தா.பா.வும் தோழர் ஜி.ஆரும் என்ன செய்தார்களாம்?


தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா பேசிய இந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில  செயலாளர் தோழர் தா.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்ட்டு) தமிழ் மாநில  செயலாளர் தோழர் ஜி. இராமகிருட்டிணன் ஆகியோரும் அந்தக் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்களே - முதல் அமைச்சர் ஜெயலலிதா சொன்ன கருத்து அவர்களையும் சேர்த்துத்தானே?

மார்க்சும் - ஏங்கல்சும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்ததால் அவர்கள் வெற்றி பெறவில்லையா? அந்த இடத்தில் முதல் அமைச்சருக்குப் பதில் கூற வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கலாம். அவர்கள் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு களானஜனசக்தி தீக்கதிரில் முதல் அமைச்சர் கருத்துக்கு மறுப்புக் கூறுவார்களா? எங்கே பார்ப்போம்!

Read more: http://www.viduthalai.in/2011-07-25-07-58-59/72465-2013-12-22-10-09-36.html#ixzz2oGn8SJK8

Wednesday, December 4, 2013

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி சாதித்தது என்ன?



சட்டம் - ஒழுங்கு கடும் பாதிப்பு - ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இரட்டை வேடம்!

தி.மு.க.வுக்கே வாக்களித்து தடம்புரளாமல் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவீர்!

ஏற்காடு தொகுதி மக்களுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்!


சங்கர்ராமன் படுகொலை வழக்கு: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - கி.வீரமணி அறிக்கை

நடக்கவிருக்கும் ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கே வாக்களித்து ஜனநாயகம் தடம் புரளாமல் காப்பாற்றவேண்டும் என்று ஏற்காடு தொகுதி வாக் காளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதியன்று, ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற விருக்கிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், உண்மையான எதிர்க்கட்சி தி.மு.க.தான் என்று ஜன நாயகத்தைக் காக்கும் வகையில் நாட்டுக்கு அறிவிக்கும் வகையில் தி.மு.க.வும் போட்டியிட களத்தில் இறங்கி யுள்ளன.

இடைத்தேர்தல் முடிவு

ஒரு இடைத்தேர்தலின் முடிவு ஆட்சியை மாற்றப் போவதில்லை; ஆனால், ஜனநாயகத்தின் முக்கிய தேவை யான வாக்காளர்களின் மனநிலை எப்படி ஆட்சியின் பால் உள்ளது என்பதற்கான எடைமேடை அல்லவா?

செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்று சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது.

இதில் அவரது ஆட்சியில் ஏற்கெனவே பொதுத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற் றப்பட்டுள்ளனவா? ஏற்கெனவே வாக்களித்த மக்களின் நம்பிக்கை இவ்வாட்சியின்மீது அதேபோல் உள்ளதா, குறைந்திருக்கிறதா என்று அளந்து பார்க்கும் அரசியல் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்.

அதேநேரத்தில், இது ஒரு சம போட்டி என்றும் கருதிட முடியாத அளவுக்கு, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் பற்றிய ஏராளமான புகார்கள் பறப்பதை வைத்துப் பார்க்கையில், நிச்சயம் சமவாய்ப்பில் லாத போட்டி என்ற நிலையே உள்ளது.

மக்களின் அதிருப்தி அலை கரைபுரண்டு ஓடினாலும், அதைப் பல வகையிலும் - பண பலம், இன பலம், பத் திரிகை பலம், அதிகாரவர்க்க பலம் இவை ஆளுங் கட்சியினருக்கு உள்ள ஒரு கூடுதல் வாய்ப்பு.

அவையெல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் ஜன நாயகக் கடமையைச் செய்ய முன்வந்துள்ள தி.மு.க. முடிவும் இடையறாத முயற்சிகளும் பாராட்டத்தக்கவை.

எதிர்க்கட்சி என்று அறிவிக்கப்பட்டுள்ள கட்சியோ, தேசியக் கட்சிகள் என்பவைகளோ தேர்தலில் போட்டி யிட்டு, ஆளுங்கட்சியின் பல்வேறு வசதி வாய்ப்புகளோடு ஈடுகொடுத்து போட்டி போட முடியாது என்று தயங்கி, பின்வாங்கிவிட்ட நிலையில், ஒதுங்கிக் கொண்டுவிட்டன. தி.மு.க. முன்வந்து களத்தில் துணிவுடன் இறங்கி தனது தேர்தல் பணிகளை எதிர்நீச்சலாக செய்து வருகிறது!

கடந்த காலத்தில் ஆளும் கட்சியின் சாதனைகள் என்ன?

ஆளுங்கட்சியின் ஆளுமை கடந்த ஆண்டுகளில் எப்படி இருக்கிறது என்று சீர்தூக்கிப் பார்த்து, வாக் களிக்க வேண்டிய கடமை ஏற்காடு வாக்காளர்களுக்கு உண்டு.

1. ஆட்சியை ஏற்ற மூன்றே மாதங்களில் மின்தட்டுப்பாட்டை - மின்வெட்டை நீக்குவோம் என்று வாக்குறுதி தந்து வந்த ஆட்சியில் இன்றுள்ள மின்வசதி எப்படி உள்ளது?

2 மணிநேர மின்வெட்டு அதுவும் சிலகாலம் ஏற்பட்டதற்காக தி.மு.க.வை அதற்காக குறை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அவர்களது ஆட்சியில் வெளியூர்களில் மூன்று மணிமுதல் 10 மணிநேரம்வரை மின்வெட்டு; அதுவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரங்கள்!

விவசாயிகள், வீட்டு உபயோகிப்பாளர்கள் இருட்டு வேதனை ஒருபுறம் என்றால்,  குறு, சிறு தொழில் செய்வோர் குறிப்பாக கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலை இழந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் துயரமும், துன்பமும் நாளும் குறையாமல் பெருகிய வண்ணம் உள்ளது!

தொழிற்சாலை நடத்துவோர் கோடிக்கணக்கில் முதலீடு - கடன் வாங்கிச் செய்யும் எங்களது இயந்திரங் கள் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக ஓட்டப்பட்டால்தான் பழுதடையாமல் இருக்கும்; இப்பொழுது விட்டுவிட்டு வரும் மின்வெட்டு காரணமாக அந்த இயந்திரங்களும்கூட பழுதாகி, கூடுதல் இழப்பு ஏற்படும் அபாயம் பெருகுகிறது என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார்கள்.

சில மாதங்கள்முன் மின் மிகை மாநிலமாகும் விரைவில் என்று கூறப்பட்டது; ஆனால், இப்போது ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல பல மணிநேரம் மின்வெட்டு, இருட்டு - அதன் காரணமாக பெருகிடும் திருட்டு, கொள்ளைகள், கொலைகள் - என்னே கொடுமை!

தமிழக அரசு இதற்கு ஒரு புது காரணம் கூற முற்பட் டுள்ளது; மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை; தமிழக அரசுக்கு எதிரான சதி என்றெல்லாம் கூறி, மத்திய அரசு மீது பழிபோடுவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதாகாது.

மேட்டூர், தூத்துக்குடி முதலிய பல மின் நிலையங்கள் மத்திய அரசு நிர்வகிப்பதன்று. கூடங்குளம் அணுமின் நிலையம் என்பது தற்போது உருவான ஒன்று - அது இன்னும் முழுமையான உற்பத்தி பெருக்கத்திற்கு வராத நிலை. அதுவே ஏற்கத்தக்கக் காரணம் ஆகிவிடுமா?

ஒன்று முந்தைய தி.மு.க. ஆட்சிமீது குற்றச்சாற்று; இன்றேல் மத்திய அரசின்மீது பழி. இவைகளால் மக்கள் குறைகளை எவ்வளவு காலம் திசை திருப்ப முடியும்?

வளர்ச்சித் திட்டங்களுக்காக மற்ற மாநிலங்கள் மத்திய அரசை வற்புறுத்தி வாதாடுகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன?
அடுத்தவர்மீது பழிபோடுவதா?

ஏற்கெனவே பணி தொடங்கப்பட்ட திட்டங்களைக் கூட, ஒத்துழைப்புத் தராது முடக்கப்படும் நிலையை ஒரு மாநில அரசே செய்யும் அவலம் - இதுவரை கேள்விப்படாத ஒன்று அல்லவா?

1885 கோடி ரூபாய் திட்டமான மதுரவாயல் பறக்கும் திட்டம்மூலம், சென்னை துறைமுகத் திலிருந்து நேரடியாக விரைந்து சரக்குகள் - சாலைப் போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் அத்திட்டத்திற்கு இதுவரை 900 கோடி செலவிட்ட நிலையில், தமிழக அரசால் இது தடை செய்யப்பட்டு, இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு போடப் பட்டுள்ளது. இதுதான் வளர்ச்சிக்கான வழிகாட்டுதலா?

பிரதமர் மன்மோகன்சிங் தனது ஆலோசகர் நாயர் தலைமையில் ஒரு குழு, தமிழக முதலமைச்சரைச் சந்தித்து, இத்திட்டத்திற்கு ஒப்புதலை விரைவுபடுத்த கேட்டுக்கொண்டது - விழலுக்கு இரைத்த நீர்தானா?

2. தமிழகத்தில் பத்தாயிரம் கோடிக்கான நெடுஞ் சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு தமிழக அரசின் ஒத்துழையாமையால் ஏராளமாய் முடங்கிக் கிடக்கின்ற அவலம் மற்றொரு புறம்! சேது சமுத்திரத் திட்டத்தில் அந்தர்பல்டி!

3. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ஏன் மத்திய அரசு விரைவுபடுத்தவில்லை என்று இரண்டு தேர்தல் அறிக்கைகளில் கேள்வி கேட்டு துளைத்து, இப்போது தி.மு.க.வின் இடைவிடா முயற்சியால் அத்திட்டத்திற்கு ரூ.800 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டு, இன்னும் 12 கிலோ மீட்டர்தான் முடிவடைய இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடையாணை வாங்கி, மணல் திட்டு - ஆதாம் பாலம் -என்று முன்பு சொன்னதையே மாற்றிக் கொண்டு, இப்போது இராமர் சேது பாலம் அதை உடைக்கக் கூடாது என்றும், மீன்வளப் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று இல்லாத காரணத்தைக் காட்டி, தென்மாவட்டங்களின் பெரும் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கி வைத்தவர்கள்தான் வாக்குகளை அள்ள ஏற்காடு வருகிறார்கள்.

சட்டம்-ஒழுங்கு மோசமோ மோசம்!

சட்டம் ஒழுங்கு என்பது ஒரு ஆட்சிக்கு முக்கியம். கொலை, கொள்ளை, செயின் அறுப்பு என்பவை நிகழாத நாள்கள் உண்டா?

எனது ஆட்சியில் கொள்ளையர்கள், திருடர்கள் ஆந்திராவிற்கு ஓடிப் போய்விட்டார்கள் என்று முதல்வர் கூறியதை, மக்களால் மறக்க முடியுமா? இப்போது என்ன நிலை?

மூன்று ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத கொலைகள் திருச்சி இராமஜெயம், மதுரை பொட்டு சுரேஷ் - இப்படி பல - மக்களிடையே உள்ள கேள்விகள் இவை!

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் இரட்டை வேடம்!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கோ பெரும் வாய்ப்பூட்டு! குரல்வளை நெரிக்கப்படுவதுபோல பேச்சுரிமை மறுப்பு - மீறினால் வெளியே தள்ளுவதும், கடும் நடவடிக்கை எடுப்பதும்!

சட்டமன்றத்தில் இல்லாதவர்கள், பொறுப்பான தலைவர்கள்மீது தரக்குறைவான தாக்குதல் விமர் சனங்கள் - அதற்காக அத்தகைய சாதனையாளர் களுக்கு பதவிப் பரிசுகள்! தமிழ்நாட்டு ஜனநாயகத் தின்(?) விசித்திரங்கள் இவை!

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் இரண்டு தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இந்த அ.தி.மு.க. அரசு, தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து, எதிர்த்தவர்கள்மீது வழக்கைப் போட்டு சிறைக்கு அனுப்பியது ஏன்?

இது இரட்டை நிலைப்பாடு, இரட்டை வேடம் என்பது உலகத் தமிழர்களுக்கு விளங்கிவிட்டதே! வாக்காளர் களுக்கு - ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு உண்மையாக பாடுபட்டு வருபவர்கள் யார் என்பது புரிந்துவிட வில்லையா?

விரிக்கின் பெருகும் என விடுத்து, ஏற்காடு வாக்காளர்களே,

ஜனநாயகம் காக்க, ஆளுங்கட்சி சரியான முறையில் ஆட்சி செய்ய, நீங்கள் மற்ற சபலங்களுக்கு ஆளாகாமல், தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தால், ஆளுங்கட்சி சற்று சுயபரிசோதனை செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.

தி.மு.க.வுக்கே வாக்களிப்பீர்!

தி.மு.க.வை வெற்றி பெறச் செய்வது, தி.மு.க.வுக்காக மட்டுமல்ல; ஜனநாயகம் காக்க, மக்கள் தீர்ப்பின்மூலம், இடிப்பாரை மக்கள் தீர்ப்பாக அது அமைந்து தடம்புரளும் ஜனநாயகம் சற்று நிதானித்துத் தடத்தில் எஞ்சிய காலத்தில் பயணிக்க உதவியதாக அமையக்கூடும் என்பதால் கூறுகிறோம்.

இன்றேல், நட்டம் தி.மு.க.வுக்கு அல்ல; தமிழர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு - ஜனநாயகத்திற்கு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!

சென்னை    தலைவர்,
28.11.2013    திராவிடர் கழகம்.

குறிப்பு: இதனைத் துண்டறிக்கையாக ஏற்காடு தொகுதி திராவிடர் கழகத் தோழர்கள் வழங்குவார்கள்.

Friday, September 27, 2013

அ.தி.மு.க. ஆட்சியில் சமூக (அ)நீதி!

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் சலுகை வழங்க முடியாதாம்
சென்னை, செப்.26- ஆசிரியர் தகுதித் தேர் வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்வதில் இடஒதுக்கீடு முறையில் சலுகை காட்ட முடியாது என்று சென்னை உயர்நீதிமன் றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்குரை ஞர் பழனிமுத்து, கருப் பையா உட்பட பலர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுக்களில் கூறியிருப்பதாவது:-
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பிறப்பித் துள்ள உத்தரவின் அடிப் படையில், தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர் வினை நடத்துகிறது. இதில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்தினாளிகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மதிப் பெண் வழங்கப்படாமல் தேர்வுகள் நடத்தப் படுகிறது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பிறப்பித்த உத்தரவில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் மாநில அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றலாம் என்று கூறியுள்ளது.
இதனடிப்படையில் ஆந்திரா, ஒரிசா உள் ளிட்ட பிற மாநிலங் களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படு கிறது. எனவே தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில், இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி உத்தர விட வேண்டும் இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அக்ரவால், நீதிபதி எம். சத்தியநாராயணன் ஆகி யோர் முன்பு விசார ணைக்கு வந்தது.  அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப் பினர் செயலாளர் டி.வசுந்தரா தாக்கல் செய்துள்ள பதில் மனு வில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஆசிரி யர் தேர்வு வாரியம் என்பது ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தும் முக்கிய அமைப்பாகும். இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் களை தமிழக அரசுதான் நிர்ணயம் செய்ய முடியும்.
மேலும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி களில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு ஆசிரியர் கள் தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எனவே இந்த தகுதித் தேர்வில் பங்கேற்பவர் களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பல் வேறு மதிப்பெண்கள் வழங்க முடியாது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய இந்த உயர்நீதி மன்றம் ஒரு கமிட்டி நியமித்தது. அந்த கமிட்டி அளித்த அறிக்கையில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணில் சலு கைகள் வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது.
தமிழகத்தில் ஆசிரி யர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. மாணவர் களுக்கு தரமான கல் வியை வழங்குவதற்காக இந்த குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இந்த முடிவில் சமர சம் செய்து, தேர்ச்சி மதிப்பெண் வழங்குவ தில் யாருக்கும் சலுகை வழங்க முடியாது என் றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதுமுள்ள மாணவர்களுக்கு தர மான கல்வி வழங்க ஆசிரியர் தகுதித் தேர் வில் தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. எனவே தரமான ஆசிரியர்களை தேர்வு செய்வதில் எந்த சமரச மும் செய்ய முடியாது. இந்த தேர்வில் சலுகை கள் வழங்க தேவை யில்லை. இந்த வழக்கு களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, September 11, 2013

இந்து அறநிலையத்துறை இந்து முன்னணியின் வேலையைச் செய்யலாமா?

  • கோயில் மண்டபங்களை நாத்திகர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பது சட்ட விரோதம்!
  • இந்து மதத்தில் நாத்திகத்துக்கும் இடம் உண்டு என்பதை மறுக்க முடியுமா?
  • இந்து அறநிலையத்துறை இந்து முன்னணியின் வேலையைச் செய்யலாமா?

ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் - நீதிமன்றம் சென்றால் சட்டத்தின்முன் இந்த சுற்றறிக்கை நிற்காது!  தமிழர் தலைவர் விடுத்த முக்கிய அறிவிப்பு

இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மண்டபங்களில் நாத்திகர்களுக்கு, மதச் சார்பற்றவர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்திட அனுமதியில்லை என்ற தமிழ்நாடு அரசின் - இந்து அற நிலையத்துறையின் ஆணை சட்ட விரோதமானது. அதனைத் திரும்பப் பெற வேண்டும்; இல்லையெனில் நீதிமன்றம் செல்ல நேரிடும் - அங்கு சட்டத்தின்முன் இந்தச் சுற்றறிக்கை நிற்காது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினரின் மேற்பார்வையில், அல்லது கண்காணிப்பில் உள்ள பல திருமண மண்டபங்களை நாத்திகர்களுக்கு நிகழ்ச்சி நடத்த வாடகைக்குத் தரக் கூடாது என்பதாக இந்து அறநிலையத் துறையினர் ஒரு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளதாக ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன!
கண்டனத்துக்குரியது
இது மிகவும் கண்டனத்திற்குரியது, குடிமக்களின் அடிப்படை உரிமையான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரைப்படி அரசியல் சட்ட விரோதமான நடவடிக்கை ஆகும்!
கொராடச்சேரி அருகில் உள்ள கண் கொடுத்த வனிதம் என்ற  ஊரில் உள்ள ஒரு மண்டபத்தில் எனது நிகழ்ச்சி, அவ்வட்டார திராவிடர் விவசாயிகளின் - சுயமரியாதைக் குடும்பங்களின் சந்திப்பு நிகழ்ந்தது; அதை மனதில் வைத்துச் சிலர் அனுப்பிய தகவலின் அடிப்படையில் இதுபோன்ற சுற்றறிக்கையைத் தமிழக அரசு அனுப்பியிருப்பதாகத் தெரிகிறது.
இந்தியா இந்து நாடல்ல
மதச் சார்பற்ற நாடு (Secular State) என்று அரசியல் சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது, இது ஒன்றும் இந்து நாடு அல்ல; (நேப்பாளத்தில் மட்டும்தான் உலகின் ஒரே இந்து நாடு இருந்தது; அதுவும் காலாவதி ஆகி, அங்கே மாவோயிஸ்டுகள் கூட்டணி அரசு - ஆட்சி நடைபெற்று வரும் நிலை!)
எந்த அடிப்படையில் நாத்திகர்களான திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிகளுக்கு இந்து அறநிலையத் துறைக்குச்  சொந்தமான  மண்டபம் தரக் கூடாது என்று தமிழக அரசால் கூறப்படுகிறது என்பது நம்மால் புரிந்து கொள்ளப்பட முடியவில்லை.
இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை என்பதோ, இந்த ஆட்சியோ, இந்து முன்னணியின் கிளை ஸ்தாபனம் அல்ல; ஜனநாயகப்படி, அனைத்து மக்களாலும் வாக் களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி.
இந்து அறநிலையத் துறையின் வேலை என்ன?
இந்து அறநிலையத்துறையின் வேலையும்கூட, பக்தியைப் பரப்புவதோ, இந்து மதப் பிரச்சாரம் செய்வதோ அல்ல.
தணிக்கைத்துறை, கோயில் சொத்துக்களை தனியார் கொள்ளையிலிருந்து பாதுகாத்து, வரவு - செலவுகளைத் தணிக்கை செய்யும் வேலையே தவிர, இந்து மதப் பிரச்சாரம் செய்வதோ, அதைக் காப்பாற்றும் வேலையோ அல்ல. 1923 முதல் பனகல் அரசர் பிரதமராகவிருந்த நீதிக் கட்சி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம்  பற்றிய விவாதத்தைப் பார்த்து தெளிவடையட்டும்!
இந்து மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டே!
மேலும் இந்து மதத்திலேயே நாத்திகம் என்பது ஒரு பிரிவு என்பது தத்துவ ரீதியாக ஒப்புக் கொள்ளப் பட்டதேயாகும்.
சார்வாகர்கள் - பிரகஸ்பதிகள் இராமனுக்கு மந்திரியாக இருந்ததாக இராமாயணத்தில் கூறப்பட்ட ஜாபாலி போன்றவர்கள் நாத்திகர்கள் ஆவர்!
கடவுள் உண்டு என்பவரும் ஹிந்து மதத்தில் இருக்கலாம்; கடவுள் இல்லை என்று கூறும் கடவுள் மறுப்பாளரும்கூட இந்து மதத்தில் இருக்கலாம்.
இது சட்டப்படி - ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை யாகும்.
சுயமரியாதைத் திருமணம் நடைபெறக் கூடாதா?
அறிஞர் அண்ணா முதல் அமைச்சராகி சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார்களே, அதுவே இந்து திருமணச் சட்டத்தின் ஒரு திருத்தச் சட்டமேயாகும்.
இந்த திருமணங்களில், கடவுளுக்கோ, இந்துமத சாங்கிய, சம்பிரதாயங்களுக்கோ, சடங்குகளுக்கோ இடமே இல்லை; என்றாலும் இந்தச் சட்டப்படியான சுயமரியாதைத் திருமணங்கள் - ஹிந்து கோயில்களின் திருமண மண்டபங்களில் நடைபெற்று வருகின்றன என்பது இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்குத் தெரியாமற் போனதேன்?
திருமண மண்டபங்கள் சமூகக் கூடங்கள் (Community Halls) என்பதால் அனைவரும் அதைப் பயன்படுத்தும் உரிமை உடையவர் ஆவர்.
சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலுக்குரிய (இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள)  கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் எத்தனையோ  - சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளனவே.
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், ஆத்தி கர்கள் - நாத்திகர்கள் உட்பட கலந்து கொண்டுள் ளனரே!
இந்தச் சுற்றறிக்கை கோயில் நிருவாக அதிகாரிகள் - பொது மக்கள் இடையிலே வீணான சர்ச்சையை தகராறை உருவாக்கக் கூடியதாகும்.
நீதிமன்றம் சென்றால் அரசுக்குத் தோல்விதான்!
இந்த சுற்றறிக்கையை அறநிலையத்துறை திரும்பப் பெறுவதே புத்திசாலித்தனமான நடவடிக்கை
இல்லையேல் நீதிமன்றத்தில் சட்டப்படி பகுத்தறி வாளர்கள் இந்தச் சுற்றறிக்கையை ரத்துச் செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தால் சட்டத்தின்முன் இந்த ஆணை நிற்காது.
எனவே அரசும், இந்து அறநிலையத்துறையும் கோயில் உண்டியல் காணாமற் போவதையும் திருட்டுப் போகும் கடவுளர் - கடவுளச்சிகளை பாதுகாப்பதையும் கவனத் தில் கொண்டு போதிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். காஞ்சிபுரம் தேவநாதன் குருக்கள் ஈடுபட்ட கர்ப்பகிரக லீலைகள் நடைபெறா வண்ணம் தடுக்கவும் ஆன முயற்சிகளில் இறங்குவது நல்லது; தேவையும்கூட!
நியாயத்துக்கும், சட்டத்துக்கும் விரோதமான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்பதே முதற்கட்டமாக நமது வேண்டுகோள்!

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


சென்னை 
10.9.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...