Showing posts with label தமிழர் தலைவர் உரை. Show all posts
Showing posts with label தமிழர் தலைவர் உரை. Show all posts

Friday, July 14, 2017

சில்லரை சில்லரையாக பாவம் போக்குவது மற்ற மதங்களில்- ஒட்டுமொத்தமாகப் பாவம் போக்குவது ஹிந்து மதத்தில்தான்!


மதுரை முருகேசன் இல்லத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர்


மதுரை, ஜூலை 14-   மற்ற மதங்களில் எல்லாம் சில்லரை சில்லரையாக பாவங்களைப் போக்கலாம்; ஆனால், அர்த்தமுள்ள ஹிந்து மதத்திலோ ஒட்டுமொத்தமாக ஒரே தடவையில் பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்றால், மதங்களால் ஒழுக்கம் வளருமா என்று சிந்திக்கவேண்டும்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 
 மதுரையில் 9.7.2017 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை மாவட்ட இணைச் செயலாளர் தொப்பி நா.முரு கேசன் - சு.இளமதி, மு.கவின்மதி ஆகியோரின் ‘பெரியார்’ இல்லத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். இல்லத் திறப்பு கல்வெட்டினையும் திறந்து வைத்தார்.

வீடு கட்டும் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய ஒப்பந்தக்காரர், வடிவமைப்பாளர், பணியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். புதிய இல்லம் கட்டிய இணையருக்கு இயக்க நூல்களைத் தமிழர் தலைவர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கவின்மதி வரவேற்புரையாற்றினார். தலைமைச் செயற் குழு உறுப்பினர்கள் தே.எடிசன்ராசா, சாமி.திராவிடமணி, வழக்குரைஞரணி செயலாளர் நீதியரசர் நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைப்புச் செயலாளர் வே.செல்வம்  தொகுப்புரை யாற்றினார்.

பங்கேற்றோர்

மதுரை மண்டலத் தலைவர் முருகானந்தம், மதுரை மண்டல செயலாளர் பவுன்ராசா, மாவட்டத் தலைவர்கள் முனியசாமி, எரிமலை, சிவகுருநாதன், மாவட்டச் செயலா ளர்கள் வேங்கை மாறன், மோதிலால், கணேசன், திண்டுக் கல் மண்டலத் தலைவர் வீரபாண்டி, மாநில ப.க. தலைவர் வா.நேரு. மோகனா அம்மையார், என்னாரெசு பிராட்லா, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், பேராசிரியர் நம்.சீனிவாசன் மற்றும் மதுரை மாவட்டத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

பெரியார் இல்லம் திறப்பு

மிகுந்த மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு, நெகிழ்ச்சி யோடு நடைபெறக்கூடிய அன்புச் செல்வர்கள் முருகேசன், இளமதி, கவின்மதி ஆகியோரின் இல்லமான ‘பெரியார்’ இல்லத் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய அருமைப் பேத்தி கவின்மதி அவர்கள் பேசிய உரையில் மிகத் தெளிவாக ஒரு கருத்தை சொன்னார். பெரியார் கொள்கையைப் பின்பற்றுகின்ற ஒரு குடும்பம். நல்லதோர் குடும்பம். நல்ல குடும்பம் - புரட்சிக்கவிஞர் அவர்கள் சொல்லியதைப்போல, ஒரு பல்கலைக் கழகம்.

இந்தக் குடும்பம் ஒரு சுயமரியாதைப் பல்கலைக் கழகம் என்று சொன்னால், அது மிகையாகாது. அதற்கு ஆதார மாகத்தான் தோழர் செல்வம் அவர்கள் வெள்ளை அடித்தப் பிரச்சினையில் மிகத் தெளிவாக ஒன்றைச் சுட்டிக்காட்டினார்.

பல பேர் தங்களுடைய தவறுகளை மறைப்பதற்கு வெள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள் - மற்ற வாழ்க்கை முறையில் இருப்பவர்கள். எங்கள் தோழர்கள் வெள்ளை யடிக்கும்போதுகூட தவறு நடக்கக்கூடாது என்று கவன மாக இருப்பவர்கள் என்பதை அந்த நிகழ்வின்மூலமாக அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

தொப்பி முருகேசன் வந்துவிட்டாரா?

இந்நிகழ்வைப் பொறுத்தவரையில், இது நம் குடும்ப நிகழ்வு. அவர் சொல்லியதைப்போல, இவருடைய மண விழாவினை - முருகேசனை நான் எப்பொழுதும்  முழுப் பெயரை சொல்லி அழைப்பதில்லை. அவருடைய அடை யாளத்தை மட்டுமே சொல்லி செல்லமாக அழைப்பேன். அது உங்களுக்கு நன்றாக தெரியும். அடையாளம் என்று விரிவாக சொல்லவேண்டிய அவசியமில்லை. தொப்பி முருகேசன் வந்துவிட்டாரா என்று தான் கேட்பேன். அவ்வளவு அன்பொழுக இருக்கக்கூடிய ஒரு பாச மிகுந்த கொள்கைக் குடும்பம் இது.


பெரியார் கொள்கையைப்  பின்பற்றுகிறவர்கள்

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய ஒரு அற்புதமான உறவு என்பது இருக்கிறது -அது ரத்த உறவுகளைவிட கடின மானது, இறுக்கமானது, அதுதான் மிக முக்கியம். கண் ணீரைவிட ரத்த உறவு இறுக்கமானது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

ஆனால், எங்களைப் பொறுத்தவரையில், ரத்த உறவை விட மிகவும் நெருக்கமான உறவு இருக்கிறது - அதுதான் கொள்கை உறவு. அதற்கு ஜாதியில்லை, கட்சியில்லை, மதமில்லை. அதுதான் சுயமரியாதை உணர்வு.

நாங்கள் எத்தனையோ ஆண்டுகளாகப் பழகியவர்கள். ஒரு குடும்பமாக இங்கே இருக்கிறோம். ஆனால், யாருக்கும் யார் என்ன ஜாதி என்று தெரியாது. தெரியவேண்டிய அவசியமும் கிடையாது. அப்படி ஒரு நல்ல உறவு.

பெரியார் கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள் - அவர் தெளிவாக குழந்தையின் மூலமாக சொன்னதைப்போல, நாணயம், நேர்மை, ஒழுக்கம், அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுக்காதது, பிறரை ஏமாற்றாதது என்பதுதான் மிக முக்கியம்.


மூத்திரக் குளத்தில்  மூழ்கி எழுந்தால் பாவம் போகுமாம்!

காரணம் என்னவென்றால், அடிப்படை தத்துவ ரீதியாகவே, அவர்களை சங்கடப்படுத்துவதற்காக யாரும் நினைக்கக்கூடாது, உண்மையைச் சொல்கிறோம். அவர் களுக்கெல்லாம் ஒவ்வொரு வழி வைத்திருக்கிறார்கள். நீங்கள் பாவம் செய்திருந்தால், வியாழக்கிழமை அன்று சென்று வழிபட்டால், பாவம் போய்விடும். இன்னொருவர் வெள்ளிக்கிழமை அன்று சென்றால், பாவம் போய்விடும். இன்னொரு மதத்தில் ஞாயிற்றுக்கிழமை போனால், பாவம் போய்விடும். பிறகு திங்கள் கிழமையிலிருந்து புதுக் கணக்கை ஆரம்பிக்கலாம். அர்த்தமுள்ள இந்து மதத்திற்கு ஒரு தனிச் சிறப்பு என்னவென்றால், இப்படி சில்லறை சில்லறையாக பாவத்தையெல்லாம் கழித்தால்கூட, மிச்ச மீதி பாவம் ஒட்டுமொத்தாக இருந்தாலும், 12 ஆண்டுகளாக சேர்த்து வைத்து - மகாமகக் குளத்தில் முக்கி எழுந்து விட்டால் போதும், பாவம் போய்விடுமாம். அது மூத்திர வாடை அடித்துக் கொண்டிருக்கும், அது வேறு விஷயம். ஆனாலும்கூட, அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். இதனால் ஒழுக்கம்  வளருமா?
நாத்திக நன்னெறியாளர்களைப் பொறுத்தவரையில்...

ஆனால், பெரியார் தொண்டர்கள், பகுத்தறிவாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள், நாத்திக நன்னெறியாளர்களைப் பொறுத்தவரையில் தவறு செய்யக்கூடாது. ஒழுக்கக் கேட்டிற்கு ஆளாகக்கூடாது. ஆனால், தண்டனையிலி ருந்து தப்பக் கூடாது, அதுதான் மிக முக்கியம். இதுதான் வள்ளுவருடைய நெறியும்கூட. அதுதான் திராவிட சமு தாயத்தின், தமிழர் சமுதாயத்தின் நெறி.

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றென்ன செய்யாமை நன்று!
என்ற குறளுக்கு என்ன பொருள் என்றால்,
தவறு செய்யாதே! தவறு செய்தால், தண்டனையை அனுபவிப்பதற்குத் தயாராக இரு. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவேண்டும் என்று குறுக்குவழிகளில் ஈடுபடாதே!
மதவாதிகள் என்ன சொல்கிறார்கள்?

ஆனால், மதவாதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், நீங்கள் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்துகொள்ள லாம். அதற்காக தலைமுடியை நீக்கிக் கொண்டால் போதும், உண்டியலில் காசு போட்டால் போதும், வேண்டுதலை நிறைவேற்றினால் போதும் - அதிலும் கெட்டிக்காரனாக இருப்பவன், வெல்லத்திலேயே பிள்ளையாரை செய்து வைத்து, அதிலேயே கொஞ்சம் கிள்ளி காணிக்கையாக வைத்து உள்ளே எடுத்துக்கொண்டு போய்விடுகிறான். இப்படிப்பட்ட சூழல்கள் இன்றைக்கு இருக்கின்றன.

தொப்பி முருகேசன் அவர்கள் எளிய ஒரு தொழில் செய்கிறார். அந்தத் தொழிலை நாணயமாக நடத்தி, அதில் வருவாய்க்கு உட்பட்ட செலவு - அதில் இப்படிப்பட்ட அற்புதமான ஒரு வீட்டைக் கட்டியிருக்கிறார்.

வீட்டைக் கட்டிப் பார் -  கல்யாணத்தை செய்து பார்

இங்கே பேசிய பேத்தி, தாத்தாதான் எங்களுடைய அப்பாவிற்கும், அம்மாவிற்கும் நடைபெற்ற திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். தாத்தாதான் இந்த வீட்டையும் திறந்து வைக்கிறார் என்று சொல்லியது.

பெரியார் தாத்தா பெயரில்தான் வீடு இருக்கிறது - பெரிய தாத்தா பெயரில் என்பதுதான் மிக முக்கியம்.

இந்தக் குடும்பம் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
நம்மூரில் ஒன்றைச் சொல்லி மிரட்டி வைத்திருக்கிறார்கள் - வீட்டைக் கட்டிப் பார் - கல்யாணத்தை செய்து பார் என்று.

இந்த இரண்டையும் சுலபமாகச் செய்யக்கூடியவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள் என்பதை இந்தப் பெரியார் இல்லத் திறப்பு நிகழ்ச்சி தெளிவாக உணர்த்தும்.

இந்த வீட்டை நன்றாக சுற்றிப் பார்த்தாலும், பூசணிக்காய் எங்கேயும் இருக்காது. ஆனால், நம் நாட்டில் பூசணிக்காயை உபயோகிக்காமல் இருக்கமாட்டார்கள். கிரகப் பிரவேசம் என்பார்கள் - இது தமிழ்ச்சொல் அல்ல.

பெரியார் இல்லத் திறப்பு விழா என்று அழைப்பிதழில் போட்டிருக்கிறார்கள் - தனித்தமிழில்.
பஞ்சகவ்யம் என்பது என்ன?

நுழையக்கூடாதது நுழைந்தது - நடக்கக்கூடாதது நடந்தது.

முருகேசன் அவர்களும், நம்முடைய இளமதி அவர் களும்  வைதீகக் கருத்துகளுக்கு ஆளாகியிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? வீடு திறப்பிற்கு என்னை அழைத் திருக்க மாட்டார்கள். மாட்டை அழைத்து வந்து, ரிவர்ஸ் கியரில் விடுவார்கள். அதற்குப் பின்னால் ஒரு சொம்பை வைத்துக்கொண்டு, அதனுடைய மூத்திரத்தைப் பிடிப் பார்கள். பிறகு அய்யர் வந்தவுடன், எந்த அய்யர்மீதும் நமக்குத் தனிப்பட்ட முறையில் கோபம் கிடையாது.
அவர் வந்தவுடன் என்ன செய்வார் என்றால், அதில் பால், தயிர், மோர் அத்தனையும் போட்டு அதனை பஞ்சகவ்யம் என்று சொல்வார். பஞ்சகவ்யம் என்பது என்ன செவ்வாய்க் கோளில் இருந்து கொண்டு வந்த ஸ்பெஷல் மிக்சரா அது.

மூத்திரத்தைக் குடிக்கிறாயா? என்றால்...

பஞ்சகவ்யத்தை அவர் கொடுத்தால், இவர் குடித்து, இவர் குடும்பத்தினரையும் குடிக்க வைத்து, இது போதா தென்று, தலையில் ஒன்றும் இல்லை என்று காட்டுவதற்காக தலையிலும் தடவிக்கொண்டு, கொடுத்தவரிடம் என்ன சொல்வார்கள் என்றால், ‘‘நீங்கள் அடுத்த முறையும் வந்து இதுபோன்று கொடுக்கவேண்டும் என்று சொல்லி, 50 ரூபாயை வைத்துக்கொள்ளுங்கள், 100 ரூபாயை வைத்துக்கொள்ளுங்கள்’’ என்பார்கள்.

பகுத்தறிவிற்கும், பகுத்தறிவு இல்லாதவர்களுக்கும் இதுதான் வித்தியாசம்.
அண்மையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில்கூட சொன்னேன், சாதாரணமாக ஒருவரிடம் மூத்திரத்தைக் குடிக்கிறாயா? என்றால், என்னை என்ன அவ்வளவு கேவலமானவன் என்று நினைத்துவிட்டாயா என்று கன்னத்தில் ஓங்கி அறைவான்.

ஆனால், பஞ்சகவ்யம் குடிக்கிறாயா என்றால், கொடுங் கள், கொடுங்கள் என்று வாங்கிக் குடித்துவிட்டு, கொடுத்த வருக்கு பணம் கொடுக்கிறான்.

ஆக, அந்த அடிப்படை எவ்வளவு நாசமாகப் போய் விட்டது பாருங்கள். பகுத்தறிவு சிந்தனை வந்ததினால், இன்றைக்கு இவருடைய வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருக்கிறது.
பகுத்தறிவு என்பது வெறும் வறட்டுத் தத்துவமல்ல. அது வாழ்வியல். அந்த வாழ்வியலினால் இவருக்கு என்ன தேவையோ, அந்த அளவிற்கு வீடு கட்டியிருக்கிறார். அவர்களுடைய தேவைக்கேற்ப.

வாஸ்து என்பது தமிழ்ச்சொல்லா?

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இப்பொழுது திடீரென்று முளைத்திருக்கிறது. 50 ஆண்டு களுக்கு முன்பு இது கிடையாது. அது என்னவென்றால், வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டவேண்டும் என்று சொல்கிறார்கள். வாஸ்து என்பது தமிழ்ச்சொல்லா? என் பதை நினைத்துப் பாருங்கள்.

தேர்தலில் நின்று பல லட்ச ரூபாய் செலவு செய்துவிட்டு, தோல்வியுற்ற ஒருவர் மனம் நொந்து போய் உட்கார்ந் திருக்கிறார்.

அவரைப் பார்த்து ஒருவர் சொல்கிறார், ‘‘நீங்கள் ஏன் தோற்றுப் போனீர்கள் என்பதற்கு இப்பொழுதுதான் சரி யான காரணத்தைக் கண்டுபிடித்தேன்’’ என்கிறார்.

தோற்றுப் போனவர் ஆர்வமுடன், ‘‘என்னங்க, அதைச் சொல்லுங்கள்’’ என்று கேட்கிறார்.
‘‘வேறு ஒன்றும் இல்லீங்க, இந்த வாசற்படியை இடித்து விட்டு, அந்தப் பக்கமாக வாசற்படியை வைக்கவேண்டும்’’ என்கிறார்.

வாசல்படிக்கு என்னமோ வாக்குரிமை இருப்பது போன்றும், அது இவருக்கு வாக்களிக்காமல் போனது போலவும் இருக்கிறதே, இது எவ்வளவு பெரிய மூடத்தனம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டிற்குள் கழிப்பறைக்கு இடமில்லை!

இப்பொழுது வீடு கட்டி முடித்தவர்கள் வீட்டை சுற்றிக் காட்டும்பொழுது, இதுதான் மாஸ்டர் பெட்ரூம், இது வரவேற்புரை, இது சமையலறை என்று சொல்வார்கள் மாஸ்டர் பெட்ரூமில் கழிவறை, குளியலறை இருக்கிறது - குளித்து மற்ற காரியங்களைச் செய்துவிட்டு வரலாம். இதுபோன்று ஒரு வீட்டில் இரண்டு, மூன்று அறைகள் இருக்கிறது என்றால், அது பெருமைதான். வாஸ்து சாஸ் திரத்தில் கழிப்பறைக்கே வீட்டிற்குள் இடம் கிடையாது.

தன்னம்பிக்கையோடு  வளர்ந்த காரணத்தினால்....

ஆகவே, மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லாமல், தன்னம்பிக்கையோடு அவர்கள் வாழ்ந்த காரணத்தினால், இன்றைக்கு முருகேசன் - இளமதி அவர்களுடைய இல்லம் இருக்கிறதே அது மிகப்பெரிய அளவிற்கு வளர்ந்து, ஒரு சிறப்பான, தேவையான இல்லமாக இன்றைக்கு அமைந்திருக்கிறது.

அப்படிப்பட்ட அவர்களுடைய வாழ்க்கை சிக்கனம் மிக முக்கியம். தந்தை பெரியார் அவர்கள் சிக்கனமாக வாழுங்கள் என்று சொன்னார்.

பல பேருக்கு சிக்கனத்திற்கும், கருமித்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாது. சிக்கனத்திற்கும், ஆடம்பரத்திற்கும் வித்தியாசம் தெரியாது.

ஆடம்பரம் என்பது தேவைக்குமேல் செலவழிப்பது - தேவையற்ற செலவு. 
சிக்கனம் என்பது - தேவைக்கு செலவழிப்பது.

கருமித்தனம் என்பது தேவைக்கே செலவழிக்காமல் இருப்பது.
சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு

ஆகவே, கருமிகளாக இருக்கவேண்டிய அவசிய மில்லை. சிக்கனம் வேறு; கருமித்தனம் வேறு. அந்த வகையில், முருகேசன் அவர்கள் சிக்கனவாதி. இயக்கத் திற்காக தன்னுடைய குறிப்பிட்ட நேரத்தை அவர் செல விடுபவர். எங்களை சந்திக்கும்பொழுதுகூட, தன்னுடைய தொழிலை நடத்திவிட்டுத்தான் வந்து சந்திப்பார்.

அப்படிப்பட்ட அற்புதமான ஒரு தோழர் முருகேசன் அவர்கள். எங்களுடைய இயக்கத் தோழர், எங்களுடைய குடும்பத் தோழர். எங்களுக்குக் கொள்கை உறவுதான் மிக முக்கியம்.

சிக்கனமாகவும், சிறப்பாகவும் வாழலாம்

ஆகவே, அவர்கள் எல்லா துறைகளிலும் இதுபோல் அவர் வளரவேண்டும். இந்நிகழ்ச்சியை கூட எதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால், ஒரு பிரச்சாரத்திற்காகத்தான். நாங்கள் இந்தக் கொள்கையைப் பின்பற்றியதினால், தாழ்ந்துவிடவில்லை, வீழ்ந்துவிடவில்லை. நாங்கள் வளர்ந் திருக்கிறோம். நீங்களும் இந்தக் கொள்கையைப் பின் பற்றினால், சிக்கனமாகவும், சிறப்பாகவும் வாழலாம் என்று காட்டியிருக்கிறார்கள்.

எனவே, அவர்கள் சிறப்பாக வாழவேண்டும். அது போலவே, அந்தப் பெண் குழந்தை - பேத்தி சிறப்பாக பேசினார். அவர்களையும், கவின்மதி அவர்களையும் பாராட்டி, காலத்தின் நெருக்கடியினால் உங்களுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து, விடைபெறுகிறேன்.
வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக போராடவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்!

தமிழ்நாடு காங்.தலைவர் சு.திருநாவுக்கரசர் பொதுவாழ்வுப் பொன்விழாவில் தமிழர் தலைவர் உரை

சென்னை, ஜூலை 14  சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி உரிமை என்கிற ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவேண்டிய காலகட்டத்தில், அவசியத்தில் நாம் இருக்கிறோம்; ஒன்று சேர்ந்து போராடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று (13.7.2017) நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசரின் பொதுவாழ்வுப் பொன்விழாவில் பங்கேற்று சு.திருநாவுக்கரசர்பற்றிய நூலினை வெளி யிட்டு திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:  

சிறப்பாக நடைபெறக்கூடிய அருமை நண்பர் அரசியலிலே பொன் விழா காணுகின்றவர்.
மிக அற்புதமான நட்புக்குரிய நண்பர் என்று அனைவராலும் மதிக்கப்படக் கூடிய தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் அருமை நண்பர் திருநாவுக்கரசர் அவர்களுடைய பிறந்தநாள் பெருவிழா, பொதுவாழ்வில் பொன்விழா ஆகிய அற்புதமான நிகழ்ச்சிக்கு தலைமையேற்றிருக்கக்கூடிய பாட்டாளிகளின் தோழரும், எளிமையின் இலக்கணமும், தமிழகத்தினுடைய மூத்த தலைவராக கலைஞர் அவர்களுக்கு அடுத்தபடியாக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடியவருமான அன்பிற்குரிய தோழர் நல்லக்கண்ணு அவர்களே, தமிழகத்தினுடைய நம்பிக்கையாக, தமிழ்நாட்டினுடைய தற்போதைய நிலைகளுக்கெல்லாம் ஒரு விடியலாக வந்திருக்கக்கூடிய தமிழகத்தின் ஒப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர், திமுக செயல் தலைவர் அருமைச்சகோதரர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து மலரை வெளியிட்டிருக்கக்கூடிய அன்பிற்குரிய புதுவை மாநில ஜனநாயகப்போராளி, முதல்வர் என்பது இரண்டாவது, ஜனநாயகப்போராளி என்ற பெருமையை இன்றைக்கும் பெற்றிருக்கக்கூடிய மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களே, அனைத்து இயக்கங்களைச்சார்ந்த, கட்சி களின் தலைவர்களே, சான்றோர்களே, காங்கிரசு பேரியக்கத்தின் அனைத்து முக்கியப் பொறுப்பாளர்களே, தாய்மார்களே, நண்பர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

இங்கே வரவேற்புரையாற்றிய அருமை நண்பர் விசுவநாதன் சுட்டிக்காட்டினார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எப்படி ஒரு வாக்கியத்தை தோழர் திருநாவுக்கரசருக்கு சொன்னார்கள் என்பதை சிறப்பாக எடுத்து சுட்டிக்காட்டினார்.

‘‘ஜனக்கட்டு’’ உடையவர்
என்றைக்கும் மக்களோடு இருக்கக்கூடிய ஒரு மக்கள் தொண்டனாக, தோழனாக பணியாற்றக்கூடியவராக, தலைவராக திகழக்கூடிய ஒருவர் என்ற பெருமை இருக்கிறதே, இதுதான் எளிதில் எவரும் சம்பாதிக்க முடியாத ஒன்றாகும். அதிலே அவர் தனித்தன்மையோடு இருக்கக்கூடியவர்.

அறந்தாங்கியானாலும், புதுக்கோட்டை மாவட்ட மானாலும், அங்கே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுவாழ்க்கையிலே நேசிக்கப்படக்கூடிய தோழர் அருமை திருநாவுக்கரசர் ஆவார். அங்கே எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், எந்த இயக்கத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்களின் இல்லங்களில் நல்ல நிகழ்ச்சியாக இருந்தாலும், துயர நிகழ்ச்சியாக இருந்தாலும் அது எத்துணை மாதங்களானாலும் அவர்கள் வீட்டுக்குச் சென்று தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிற ஓர் எடுத்துக்காட்டான தலைவர் என்று சொன்னால், அவர் தோழர் திருநாவுக்கரசர் ஆவார்.

மாணவர் பருவத்திலேயே  திராவிடர் இயக்கம்

அவர் மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கத்திலேயே இருந்து வளர்க்கப்பட்டவர். காங்கிரசு பேரியக்கத்தில் நமக்கு ஒன்றும் பெரியஅளவில் கருத்துப்போர் கிடையாது. ஆனால், அவரை திராவிட இயக்கம்தான் வளர்த்து காங்கிரசு இயக்கத்துக்கு தந்திருக்கிறது. விவசாயத்திலே ஒரு புதுமையான கண்டுபிடிப்பு உண்டு. விதைகளாக வைத்து, செடிகளாக வைத்து நடுவது என்பது ஒரு முறை, மரங்களையே அப்படியே பெயர்த்து எடுத்து வைப்பது இன்னொரு முறை. திருநாவுக்கரசர் இரண்டாவது முறையைச் சார்ந்தவர். திராவிட இயக்க மண்ணிலிருந்து, திராவிட இயக்கத்தாலே வளர்ந்த காரணத்தாலேதான் அவர்களுக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொன்ன அண்ணாவினுடைய குணம் உண்டு. எனவேதான், அவர் திராவிட இயக்கத்துக்கும், தேசிய இயக்கத்துக்கும் முரண்பாடல்ல,  உறவுப்பாலம் உண்டு. 

அதுவும் இந்த காலகட்டத்திலே, இன்றைக்கு தோன்றியிருக்கிற சங்கடமான மிகப்பெரிய அளவில், மதசார்பின்மைக்கு அறைகூவல், சமூக நீதிக்கு அறைகூவல், மாநிலங்களின் உரிமைகளுக்கு அறைகூவல், ஆளுநர்களே உரிமைகளைப் பறிக்கக் கூடிய அளவிற்கு அறைகூவல். அதற்கு புதுவையைவிட நல்ல உதாரணம் வேறு கிடையாது. நாம் அதைப்பற்றி பேசவேண்டிய அவசியத்தில் - தமிழ்நாட்டில் ஆளுநரே இல்லை. பல காலம் ஆளுநரால் பிரச்சினை இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆளுநரே பொறுப்பு ஆளுநர். பொறுப்பில்லாத பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கெல்லாம் அவரைத் தேடிக்கொண்டு போவார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் சந்திக்க வேண்டும் என்றால்கூட, மும்பைக்குப்போய்த்தான் சந்திக்கிறார்கள். எனவே, அதைக் கேட்பதற்குக்கூட உரிமை இல்லை.
போர்த் தளபதிகள் கூடியிருக்கின்றனர்

இந்தக் காலக்கட்டத்திலேதான் இந்த மேடையிலே இருக்கிற அனைவரும் திருநாவுக்கரசரை பாராட்டுவதற்காக, அவரது பொன்விழாவைக் கொண்டாடுவதற்காக, அல்லது நாமெல்லாம் ஒன்றாக இருக்கிறோம் என்று காட்டுவதற்காக என்பதல்ல, ஜனநாயக உரிமைக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்தை எதிர்த்துப் போரிடுகின்ற போர் வீரர்கள். போர்த் தளபதிகள். இதிலே எல்லோரும் சேர்ந்திருக்கிறார்கள்.  இதிலே கட்சியில்லை, கருத்து மாறுபாடுகள் இல்லை. இதைக்காட்டுக¤ன்ற விழாவாக இந்த விழா இருக்கிறது.

எனவேதான், நல்ல தளபதிகள் இங்கே அமர்ந்தி ருக்கிறார்கள். நடக்கக்கூடிய போரில் வெல்வோம், வெல்வோம். இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
விழாவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், புதுவை முதல்வர் வி.நாராயணசாமி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி.இராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, காங்கிரசு கட்சி முதுபெரும் தலைவர் குமரிஅனந்தன், திராவிடர்கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  ஆதித்தமிழர் கட்சித் தலைவர் ஜக்கய்யன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.

Wednesday, May 24, 2017

கூடலூர், திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் உரைகள்

கடந்த 20ஆம் தேதி கூடலூரிலும், 21ஆம் தேதி திண்டுக் கல்லிலும் நடைபெற்ற தந்தை பெரியார் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. கட்சி களையும் கடந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
அவ்விரு நாட்களில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவ்விரு கூட்டங்களிலும் முக்கியமாக நாட்டை ஆளும் இந்துத்வா சக்திகளினால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் சமூக நீதிக்கு ஏதிரான அவற்றின் நடப்புக் குறித்தும் மதச் சார்பின்மைக்கு விரோதமான நடவடிக்கைகள் குறித் தும் குறிப்பாக மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்குத் திணிக் கப்பட்ட ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வு குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். மாலை நேர வகுப்பு போல அவ்வுரைகள் அமைந்திருந்தன என்றே கூறவேண்டும்.
அரசியல் நோக்கமின்றி சமூக பொறுப்புடன் பொது நிலையிலிருந்து திராவிடர் கழகம் நாட்டு நலனில் அக்கறை கொண்டு பாடு படக் கூடிய சமூகப் புரட்சி இயக்கம். அத்தகு இயக்கத்திற்கு உள் நோக்கம் கற்பிக்க முடியாது என்ற விதமாக, தம் உரையைத் தொடங்கினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர்  முனைவர் அறவாணன் அவர் களின் ஆய்வு நூலிலிருந்து ஒரு முக்கிய தகவலைத் தெரி வித்து, பின்னால் தாம் கூறும் கருத்துக்கு வலு சேர்த்தார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழர்களில் படித்தவர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவு; அரசிளங்குமரன் கூடப் படித்திருக்கவில்லை என்று அந்நூலிலிருந்து எடுத்துக் காட் டிய தமிழர் தலைவர் அவர்கள் நமது அரசர்கள் பள்ளிகள் கண்டதெல்லாம் பார்ப்பனர்கள் சமஸ்கிருதம் படிப்பதற்கே என்று கூறியது வரலாற்றுப் பேருண்மையே!
எடுத்துக்காட்டாக பலவற்றைக் கூறமுடியும். 11ஆம் நூற்றாண்டில் தென் ஆற்காடு மாவட்டத்தில் எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் சோழ அரசர் கல்விக் கூடம் ஒன்றை உருவாக்கினார். 140 மாணவர்கள் படித்தனர். 14 ஆசிரியர்கள், 45 வேலி நிலம் அதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது என்ன?
மீமாம்ச வேதாந்தத் தத்துவம், சமஸ்கிருத இலக்கணங்கள் கற்பிக்கப்பட்டன. திருபுவனம், திருவாவடுதுறை போன்ற இடங் களிலும் இதே நிலைதான்.
இராபர்ட் டி. நொபுலி என்ற இத்தாலிய பாதிரியார் எழுதிய ஒரு கடிதத்தில் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு தகவல் என்ன தெரியுமா?
1610ஆம் ஆண்டில் விஜயநகர மன்னர்கள் ஆட்சியில் மதுரை யில் 10 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். அவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்களே என்று எழுதியுள்ளார் என்றால் நம் நாட்டின் நிலையைத் தெரிந்துகொள்ளலாமே!
நூற்றாண்டு காணும் திராவிடர் இயக்கம்தான் நம் மக்களுக்கு கல்வி உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்து - போராடியது - அதில் வெற்றியும் கண்டுள்ளது.
உலகத்திலேயே தங்களைத் தவிர மற்றவர்களுக்கு அதா வது சூத்திர, பஞ்சம மக்களுக்கு கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன ஒரே ஒரு மதம் ஹிந்து மதம்தான். அந்தப் பார்ப்பன மேல்ஜாதி ஆதிக்க மதத்தை எதிர்த்துப் போராடிப் போராடித்தான் கல்வி உரிமை கிடைத்தது. இந்தியத் துணைக் கண்டத்திலேயே 69 சதவீத இடஒதுக்கீடு சட்டப்படி கிடைக்கச் பெற்றுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதானே!
96 சதவீதம் அளவுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்றால் இது கல்வி வளச்சியைக் காட்டுவதல்லவா?
இந்தக் கல்வி வளர்ச்சிக்கு இடை இடையே முட்டுக்கட் டைகள் வரும்பொழுதெல்லாம் அவற்றைத் தகர்த்தெறிந்து நம் மக்கள் கல்வியின் பயனைத் துய்ப்பதற்கான பணியில் முழு மூச்சாக ஒப்படைத்துக் கொண்டு பாடுபடுவது - போரா டிப் பாதுகாத்துத் தருவது திராவிடர் கழகம் அல்லவா?
குறிப்பாக எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதனையும் தொடக்கம் முதலே எதிர்த்து வந்தது திராவிடர் கழகமே! (2007)
கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது அந்த நுழைவுத் தேர்வு முற்றிலுமாக சட்டரீதியாகவே ஒழிக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கான உருவாக்கத்திற்குத் தேவையான யோசனை களைச் சொன்னதும் திராவிடர் கழகமே.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆண்டு வருமானம் ரூபாய் ஒன்பதாயிரம் என்றால் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று எம்.ஜி.ஆர். ஆட்சி கொண்டுவந்த நிலை யில் அதனையும் முறியடித்தது திராவிடர் கழகமே.
இப்பொழுது மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வை மத்திய பி.ஜே.பி. ஆட் சியால் திணிக்கப்பட்டுள்ளது. +2 தேர்வில் எவ்வளவு மதிப் பெண் பெற்றிருந் தாலும் அதனைக் குப்பைக் கூடையில் தூக்கி எரிந்துவிட்டு, ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்தான் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான தகுதியாக நிர்ணயிப்பது என்றால் இது என்ன அநியாயம் என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர்.
இந்தியா முழுதும் ஒரே மாதிரியான கல்வி இல்லாதபோது - குறிப்பாக சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வு நடத்துவது என்பது பொதுவான (Uniformity) அளவு கோலாக இருக்க முடியுமா என்ற வினாவைத் தொடக்கம் முதலே எழுப்பி வருவது திராவிடர் கழகமே!
அது மாத்திரமல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ் வேறு கேள்விகள் அடங்கிய வினாத்தாள் என்றால் அது எப்படி சமமான முறையில் மதிப்பீடு செய்வதாக இருக்க முடியும்? என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் எழுப் பிய வினாவின் நியாயத்தை நன்கு உணர்ந்தனர் என்பதற்கு அடையாளம் பொதுமக்களின் மிக நீண்ட கரஒலியே!
ஒரு மாநிலத்திற்குள் நடத்தப்பட்ட தேர்வில்கூட தமிழில் கேட்கப்பட்ட கேள்விகள் வேறு, ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் வேறு என்பது பார்ப்பனியத்திற்கே உரித்தான பிரித்தாளும் சூழ்ச்சிதானே!
இதில் இன்னொரு சதிப் பின்னணியும் இருக்கிறது என்பதைப் கவனிக்கத் தவறக் கூடாது. சி.பி.எஸ்.இ. முறை யில்தான் ‘நீட்’ தேர்வு என்பதால் மாணவர்கள் பெரும்பாலும் சி.பி.எஸ்.இ. பள்ளிக் கூடங்களில் சேரும் ஆர்வம்தானே சிறகடித்துப் பறக்கும். அப்படி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்கள் சேர்வார்களேயானால் அங்கே சமஸ்கிருதம் அல்லது இந்தியைக் கட்டாயமாகப் படித்திட வேண்டும் அல்லவா? எப்பொழுதும் திரைமறைவு சூழ்ச்சி என்பது பார்ப்பனியத்திற்கே உரித்தான கைவந்த கலையாயிற்றே! இத்தகைய கருத்துகளையெல்லாம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த முகாமிலிருந்து கேட்க முடியும்?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Friday, November 27, 2015

“சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிட இயக்கம் என்ற நூற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்டது சிவகங்கை’’



சிவகங்கை 27 கழகத்தின் சார்பில் நாடு முழுவதும் நடைபெறும் தெருமுனை  பகுத்தறிவு பரப்புரை தொடர் பயணத்தின் இரண்டாம் குழு நிறைவு விழா மற்றும் 370ஆவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு 26.11.2015 அன்று சிவகங்கை நகரில் சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் உ.சுப்பையா தலைமை வகித்திட நகர தலைவர் அ.மகேந்திரராசன் வரவேற்புரையாற்றி னார்.  மாநில வழக்குரைஞரணிச் செயலாளர் வழக்கு ரைஞர் ச.இன்பலாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, மண்டல செயலாளர் வேம்பத்தூர் ஜெயராமன், மாவட்டச் செயலாளர் ஜெ.தனபாலன, பொதுக்குழு உறுப்பினர் மணிமேகலை சுப்பையா, மாவட்ட அமைப்பாளர் சி.ச.கருப்பையா,மண்டல இளைஞர் அணி செயலாளர் காளாப்பூர் ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் ஜாதி ஒழிப்பு வீரர் ஜெயராமன் நினைவு கம்பத்தில்  கழக கொடியினை மொழிக்காவலர் தூதை கணேசன் ஏற்றி வைத்தார்.
தொடக்கத்தில் தலைமை கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.அவர் தமது உரையில்:_
நீண்ட இடைவெளிக்கு பின் சிவகங்கை நகருக்கு வந்துள்ளேன். இடையிடையே  தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு வந்திருப்போம் என்றாலும் இன்றைக்கு சுயமரியாதை இயக்கத்திற்கு 100 ஆண்டுகள் ஆக போகிறது என்ற நிலையில் இந்த இயக்கத்தின் சேவைகளில் சிவகங்கை நகருக்கு பெரும் பங்கு உண்டு என்ற அடிப்படையில் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி அதனை தொடர்ந்து திராவிட இயக்கம் என்று பாரம்பரியமாக தனிப்பெருமை கொண்ட நகரம் சிவகங்கை ஆகும்.
அய்யா இராமச் சந்திரனார், அவரை தொடர்ந்து இராம.சுப்பிரமணியம், நீதிபதி சத்தியேந்திரன், அய்யா சண்முகநாதன் என்று தொடர்ந்து இந்த பகுதிகளில் மக்களுக்கு பல்வேறு வகையில் சமூக சேவை செய்தவர்கள். சர்வீஸ் கமிசன் துறையில் எண்ணற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியவர்கள் ஆவார்கள். இங்கே இந்த கருத்துக்கள் அடங்கிய நூல்கள் மலிவு விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாங்கி படித்து வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் படிக்க வேண்டும். எங்கள் தொண்டர்கள் துறவிகளுக்கு மேலானவர்கள் என்று அய்யா பெரியார் சொன்னார்கள். ஏன் என்றால் துறவிகளுக்கு கூட கீழ் லோகம், மேல்லோகம் என்று சில பற்றுகள் இருக்கும். அதையும் தவிர்ப்பவர்கள் எங்கள் தொண்டர்கள் என்ற அடிப்படையில் அதை சொன்னார்கள்.திராவிட இயக்கம் அறிவுலகம் நோக்கி சிந்திக்க வைக்கின்ற இயக்கமாகும்.
செவ்வாய் மண்டலத்தில் இறங்கி  ஆராய்ச்சி நடத்தும் காலம் வந்து விட்டது. ஆனால் நம் நாட்டில் இன்னும் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு பெண்களுக்கு திருமணம் செய்வதில் தடையாக உள்ளது. இன்றைக்கு  மிகப்பெரிய மாற்றத்திற்கு வந்து விட்டோம். உடை, கல்வி என்று அனைத்தும் மாறி விட்டது. பச்சை தமிழர் காமராசர் அவர்களை வைத்துக்கொண்டு குலக்கல்வி திட்டத்தை குழி தோண்டி புதைத்து விட்டோம்.
இன்றைக்கு உடல் உறுப்பு தானம் என்பது மிகப் பெரிய அளவிற்கு விழிப்புணர்வு வந்து விட்டது. அதற்கெல்லாம் முன்னோடியாக தந்தை பெரியார் அவர்கள்தான் தமிழனுக்கு முதுகெலும்பை தானமாக தந்தவர். எதற்கெடுத்தாலும்  காலில் விழுகிறான். 
மந்திரியாக இருந்தவர்களும்சரி மந்திரியாக ஆக வேண்டும் என்று நினைப்பவனும் சரி.கால் எதற்கு இருக்கிறது நடப்பதற்கல்லவா? சிந்திக்க வேண்டும். இத்தனை கோயில்கள் இருக்கிறதே அத்தனையும்  தமிழன் கட்டிய கோயில்கள் ஒரு கோயிலாவது பார்ப்பான் கட்டி யிருப்பானா? கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போல நாம் கட்டிய கோயிலில் பார்ப்பான் குடிகொண்டு நம்மை உள்ளே விட அனுமதிக்க வில்லையே?
இந்த நிலை மாறத்தான் கலைஞர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வருவதற்கு சட்டம் கொண்டு வந்தார். இது போன்ற நிலைகளை கொண்டு வர தந்தை பெரியாரால் மட்டும் தான் முடிந்தது. மறுக்க முடியுமா?மாட்டு மூத்திரத்தை குடிக்க வச்சுட்டானே பார்ப்பான். 
அதுவும் அய்.ஏ.எஸ்.அய்.பி.எஸ், நீதிபதி என்று வித்தியாசமில்லாமல் அவ்வளவு பேரும் வரிசையில் நின்னு வாங்கி குடிக்கிறார்களே! பஞ்ச கவ்யம் என்பது என்ன சந்திர மண்டல மிக்சரா?இவ்வளவு நாகரிகம் வளர்ந்த காலத்தில் நரபலி கொடுக்கிறானே? அப்படியென்றால் இந்த நாட்டில் பகுத்தறிவு இயக்கத் திற்கு இன்னும் எவ்வளவு தேவை இருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்
ஒரு முறை தி.மு.க. அமைச்சர் மன்னை நாராயணசாமி அவர்களை மேடையில் பக்கத்தில் வைத்துக்கொண்டு அய்யா பெரியார் அவர்கள் சொன்னார்கள். என்னதான் மந்திரி ஆனாலும் எனக்கும் மன்னை நாராயணசாமிக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். நான் வெறும் சூத்திரன். இவர் மாண்புமிகு சூத்திரன் அவ்வளவுதான் என்று சொன்னார்கள். எட்டு வயது பாப்பார பையன் என்பது வயதான நமது மிராசுதாரை பேரைச் சொல்லி அழைக்கும் காலம் ஒரு காலம்! பஞ்சமன், பறையன் என்ற பெயரை மாற்றிய இயக்கம் திராவிட இயக்கம்.  பழைய நிலைகளை மீண்டும் கொண்டு வரத்தான் மத்தியில் உள்ள ஆட்சி யாளர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைகளில் இருந்து நாங்கள் சொல்வதை நன்றாக சிந்தித்து பாருங்கள் என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார் தமிழர் தலைவர்.

இந்த நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தென் மாவட்ட அமைப்பு செயலாளர் மதுரை வே.செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தி.எடிசன் ராசா, காரைக்குடி மாவட்ட கழக தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட கழக செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட துணை செயலாளர் இரா.பெரியார் குணாஹாசன், 
சிவகங்கை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் திருமலை ஆ.முத்துராமலிங்கம், மாவட்டதி.மு.க. மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், சிவகங்கை நகரமன்ற தலைவர் அர்ச்சுனன், தி.மு.க.நிர்வாகி ஜெயக் குமார்,  மதுரை மண்டலச் செயலாளர் மா.பவுன்ராசா, மதுரை மாவட்டச் செயலாளர் மீ.அழகர்சாமி, மதுரை நா.முருகேசன், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மண்டபம் முருகேசன்,மந்திரமா?தந்திரமா நிகழ்ச்சியாளர் பழனி அழகிரிசாமி,சிவகங்கை நகர செயலாளர் புகழேந்தி, காரைக்குடி நகர தலைவர் ந.செகதீசன், தேவகோட்டை ஒன்றிய தலைவர் கொ.மணிவண்ணன், வையகளத்தூர் ஆ.தங்கராசன், நாட்டரசன்கோட்டை முரளிதரன் நகர இளைஞர் அணி தலைவர் சிவகங்கை அ.நேரு மற்றும் த.மு.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...