Showing posts with label பெண்ணுரிமை. Show all posts
Showing posts with label பெண்ணுரிமை. Show all posts

Sunday, February 1, 2015

குழந்தைகள் பெறுவதைக் குறைத்தல் அவசியம்

கர்ப்பத்தடை
- தந்தை பெரியார்

குழந்தைகள் பெறுவதைக் குறைத்தல் அவசியம்


ஒரு தேசத்து ஜனங்கள் திரேக ஆரோக்கியமும், புஷ்டியும் பலமும், வீரமும் சுயமரியாதையும் அறிவுமுள்ள வர்களாக இருக்க  வேண்டுமானால் அவர்கள் குழந்தைப் பருவம் முதற் கொண்டே தங்கள் பெற்றோர்களால் நன்றாய் போஷிக்கப்பட்டும், கல்வி கற்பிக்கப்பட்டும், விசாரமில்லாமல் மன உல்லாசமாகவும் வளர்க்கப்பட வேண்டும்.  அவ்விதம் பெற்றோர்களால் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டு மானால் பெற்றோர்கள் தங்கள் தகுதிக் கும் சக்திக்கும், போதுமான அளவே குழந்தைகள் பெறுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.  அப்படி இல்லாமல் சக்திக்கும் அளவுக்கும் மீறி பெற் றோர்கள் அதிகமாகக் குழந்தைகள் பெறுவதால் பெற்றோர்கள் கஷ்டத்திற் குள்ளாவதுடன் குழந்தைகளும் பல வீனர்களாகவும் சௌகரிய மற்றவர் களுமாகி அவர்களைக் கொண்ட தேசமும் தரித்திரத்தில் மூழ்கி மற்ற மக்களுக்கும் துன்பத்தை விளைவிக்க வேண்டியவர்களாகிவிடுகின்றார்கள்.

உதாரணமாக, நமது நாட்டையே எடுத்துக்கொள்ளுவோமேயானால் நாளுக்குநாள் ஜனங்களின் எண் ணிக்கை அதிகமாகி, பெரும்பான்மை யோர்கள் தொழிலில்லாமல், வாழ் வதற்கே வகையில்லாமல் மேலும் மேலும் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் காப்பாற்றவும், படிப்பிக்கவும், சக்தியில்லாமல் கஷ்டப் பட்டுக்கொண்டு துக்கத்தில் ஆழ்ந்து கிடப்பதும் நாம் அனுபவித்தும் பார்த்தும் வருவதுமானச் சம்பவங்களாகும்.  சில குழந்தைகளைக் கொண்ட சிறிய குடும் பங்களுக்கும் அதிகமாக பிள்ளைக் குட்டிகளைக் கொண்ட பெரிய குடும் பங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை நாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிகின்றோம்.  முதலாவது, பிள்ளை களை அதிகமாக பெறப்பெற பெற் றோர்களின் சுகபோகங்கள் தானாகவே குறைந்துகொண்டு வருகின்றன.  அது போலவேதான் ஒரு நாடும் தனது சக்திக்கு மேற்பட்ட மக்களையுடைய தாக ஆகிவிட்டால் அது சதாகாலமும் பஞ்சத்தினாலும் நோயினாலும் துன்பப் பட்டுக்கொண்டிருக்க வேண்டியதோடு அது தன் அழகையும் முற்போக்கையும் இழந்து சுயமரியாதையையுமிழந்து தயங்க வேண்டியதாகி விடுகின்றது.

இந்த உண்மையை அறியாமலே இதுவரை அநேக சமுக சீர்திருத்தக் காரர்கள் என்பவர்களும். பொருளாதார சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களும் தங்கள் நாட்டின் மக்கள் சமுகத்தின் முற்போக்கிற்கும் பொருளாதார முற் போக்கிற்கும் வேறு எத்தனையோ துறைகளில் உழன்று கஷ்டப்பட்டும் பயனடையாமல் சலிப்பின் மீது கடைசியாக ஒரு நாட்டு மக்களை மற்றொரு நாட்டுமக்கள் வெறுக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். சதா காலமும் பிறர் மீதே குற்றம் சொல்ல வேண்டியவர்களாகவுமாகி விட்டார்கள்.  நன்றாய் வாழுபவர்களின் மீது பொறாமை படவேண்டியவர்களாகவும், மற்றவர்களைப் பட்டினி போட்டால் தான் தாம் வாழலாம் என்று நினைக்க வேண்டியவர்களாகவும் ஆகி விட்டார்கள். ஆனாலும், சமீபகாலத்தில் சில நிபுணர்கள் இவ்விஷயங்களை நடுநிலைமையிலிருந்து ஆராய்ச்சி செய்து பார்த்து இவ்விதக் கொடு மையான நிலைமைக்கு உண்மையான காரணங்களைக் கண்டு பிடித்திருக் கிறார்கள்.

அஃதென்னவென்றால், முதலில் குறிப்பிட்டதான அதாவது ஜனங்கள் அதிகமாகப் பிள்ளைகளைப் பெற்று ஜனசமுகத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது என்பதேயாகும். ஆகவே, இந்த முடிவானது இப்போது மேல் நாட்டின் அறிவாளிகள் பலராலும், மற்றும் பொது நல சேவைக் காரர்கள் பலராலும், வைத்திய நிபுணர்கள் பொருளாதார நிபுணர்கள் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு இத்துறைகளில் இறங்கி, மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து மிக்க முற்போக்கான மார்க்கங்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அன்றியும், இந்தத் தத்துவத்தை அநேக அறிஞர்கள் தங்கள் வாழ்க்கைகளில் அமலுக்குக் கொண்டு வந்து கொண்டுமிருக்கின்றார்கள்.  அதாவது மேல் நாட்டார்களின் படித்த வர்கள் என்று சொல்லப்படும் கூட்டத் தார்களிலேயே அநேகர் கர்ப்பம் தரிக்காமலிருக்கத்தக்க பல உபாயங்களைக் கையாண்டு வருகின்றார்கள்.  இதற்காகப் பல சாதனங்களையும் கண்டுபிடித்து பொது ஜனங்களுக்கு அறிவித்து சில சாதனங் களை வினியோகித்தும்  வருகின்றார்கள்.  ஆனால் சாதாரண ஏழை ஜனங்களும், பாமர ஜனங்களும் இதன் உண்மைத் தன்மையை உணரவோ, பயன் அடைய முடியாமலோ இருந்து வருகிறார்கள் உண்மையிலேயே இம்மாதிரி அதிகமான பிள்ளைகளைப் பெறாமல் கருத்தரிக்க விடாமல் - இருக்கக் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியவர்கள் மிக்க ஏழை மக்களேயாவார்கள்.

ஆனால், இவர்களோ, இம்மாதிரியான அதாவது கருத்தரிக்காமல் இருப்பதற்கான காரியங்களைப் பற்றிப் பேசுவது கூட நாகரிக விரோதமான பேச்சு என்று கருதுகின்றார்கள். அறிவில்லாத பொது ஜனங்களும் மத விஷயத்திலும், கடவுள் விஷயத்திலும் கண் மூடித்தனமான மூட பக்தியுள்ளவர்களும் இதை மத விரோதமானதென்றும், பாவகரமானதென் றும், கடவுள் கோபத்திற்கு இலக்கான காரியமென்றும்பேசி இந்தத் தத்துவங்களை எதிர்த்து வருவதால் ஏழை மக்களும் பாமர மக்களும் இப்படி ஒரு மார்க்கம் இருக் கின்றது என்று அறியக்கூட சவுகரியமில் லாமல் போய்விட்டது.  ஆனால், மேல் நாட்டில் டாக்டர் மோரீஸ்டோப்ஸ்  என்கின்ற ஒர் ஆங்கிலப் பெண் ஒருவர் தைரியமாக முன்வந்து எவ்விதப் பழிப்புக்கும், எதிர்பிரச்சாரத்திற்கும் அஞ்சாமல் இவ்விஷயத்தைக் கர்ப்பத் தடையை பிரச்சாரம் செய்யத் துணிந்ததன் பயனாய், இப்போது இவ்விஷயம், மேல் நாட்டில் எங்கும் சாதாரணமானதும், சகஜமானதுமான விஷயமாய் பேசிக் கொள்ளும்படியாக ஆகிவிட்டது.  அது மாத்திரமல்லாமல், மேல் நாடுகளில் பல இடங்களில் பிள்ளைப் பேற்றை தடுக்கும் படியான வசதிகள் சம்பந்தமாக, பல வைத்திய சாலைகள் ஏற்படுத்தப்பட்டும் இருக்கின்றன.  கருத்தரிக்காமல் இருக்க வேண்டுமென்ற ஆசை உடையவர் களுக்கு அம்மார்க்கங்களைக் கற்றுக் கொடுப்பதுடன் அதற்கு வேண்டிய சாதனங் களையும் கையாளும் முறைகளையும் போதிக்கின்றார்கள். 

 மருந்து வியாபாரக் கடை முதலியவைகளில்,  கர்ப்பத்தடைக்கு, அனுகூலமான மருந்துகளும், சாதனக் கருவிகளும் விற்பனை செய்யவும் ஏற் பாடுகள் செய்து இருக்கின்றார்கள்.

இவைகள் வைத்திய நிபுணர்களாலும், சமுகச் சீர்திருத்த ஆராய்ச்சிக்காரர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதால் இதைச் சட்ட விரோதமென்று யாரும் சொல்லத் துணியவில்லை.  இது எவ்விதத்திலும் சட்டவிரோதமான காரியமுமல்ல என்பதை யாவரும் உணர வேண்டும்.  ஏனெனில், சட்டவிரோதமான காரியம் என்பதெல்லாம் அன்னியனுக்கும் தனக்கும் துன்பத்தையும் நஷ்டத்தையும் கொடுக்கக் கூடிய காரியங்களுக்குத்தான் சொல்லலாம். இதனால் யாருக்கும் எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ அதிருப்தியோ ஏற்படுவதற் கில்லை.

அன்றியும், இந்தக் கர்ப்பத்தடை முறை என்பது கர்ப்பம் ஏற்படாமல் தடுக்கப்பதற்கு உரியதே ஒழிய, கர்ப்பம் ஏற்பட்ட பிறகு அதனை கலைப்பதற்காக ஏற்பட்டதல்ல.  அதற்கு இந்த முறைகள் பயன்படவும் மாட்டாது.  அன்றியும், கர்ப்பம் ஏற்பட்ட பிறகு கலைப்பது என்பது தாயின் சரீர சக்திக்கும், சில சமயங்களில் உயிருக்கும், ஆபத்தை விளைவிக்கக் கூடியதாயிருப்ப தால் கண்டிப்பாக அந்த முறையை யாரும், கையாளக் கூடாது  என்பதே நமதபிப் பிராயம். கர்ப்பத்தைக் கலைக்கும் முறை எதுவானாலும் அது கண்டிப்பாக நீக்கப்பட வேண்டியதேயாகும்.  தேசப் பொது நன்மையையும், சமுக நன்மையையும் மாத்திரமே உத்தேசித்து, அறிஞர்கள் கர்ப்பத்தடையைக் கண்டுபிடிக்கவில்லை மற்றும் என்னென்ன காரியங்களுக்கு கர்ப்பத்தடை அவசியமென்பதையும் சற்று விளக்குவோம்.

பெண்ணானவள் திட சரீரியாயில்லா மலும், காயலாவுடனும், சரியான அமைப்புப் பொருந்தி சரீரமாயில்லாமலும் இருக்கின்ற சமயத்தில் கர்ப்பம் தரித்து, பிள்ளைகளைப் பெறுவது என்பது அவளுக்கு மிகவும் அபாயகரமானதாகவும், கஷ்டமானதாகவும் இருக்கும்.   உதாரணமாக. ட்சயரோகத் தாலும் நீரிழிவு வியாதியாலும், நெஞ்சு துடிதுடிப்பினாலும்,  பீடிக்கப்பட்டிருக்கின்ற பெண்களும், பிள்ளை பெறும் துவாரம் அதிகமாக சிறுத்து இருக்கும் பெண்களும் கர்ப்பம் தரிப்பது மிக்க ஆபத்துக்கும் கஷ்டத்திற்கும் உள்ளான கெடுதியாகும். தொற்று வியாதி, மேக சம்பந்தமான வியாதி, காக்கை வலிப்பு, பைத்தியம், கேனம் முதலிய வியாதியுள்ளவர்கள் கர்ப்பம் தரிப்பதும் பயனற்றதும் வாழ்க்கையில் மிக்க கஷ்டத்தைக் கொடுக்கக்கூடியதுமாகி விடும். பிரசவத்தினால் சரீரமெலிவும், பலக்குறைவும் ஏற்படுகின்ற சுபாவசரீர முடையவர்கள்  சுபாவசரீரமுடையவர்கள் மறுபடியும், மறுபடியும் கர்ப்பமானால், சரீரம் மிகவும் பலவீனமடைந்துவிடும். ஒரு ஸ்திரீ ஒரு குழந்தையைப் பெற்று, அது நன்றாக பால் குடித்து வளர்வதற்கு முன்னாலும் முதலில் கர்ப்பமாகி பிள்ளை பெற்ற பலவீனம் நீங்குவதற்கு முன்பும் கர்ப்பமாகி விட்டால், முதல் குழந்தை சௌகரியமில்லாமல்  மட்டு மல்லாமல்  மறு குழந்தையைப் பெறு வதற்கும் போதிய சக்தியில்லாமல் போய்விடும்.

பெண்ணும், ஆணும் தகுந்த வயது அடைவதற்கு முன் அதாவது பெண்கள் 22 வயதுக்கு முன்னும், புருஷர்கள் 25 வயதுக்கு முன்னும், சதிபதிகளாயிருக் கும் போது பெண்கள் கர்ப்பம் தரித்து விட்டால், அந்தக் குழந்தைகள் மிக்க இளமைப்பருவத்தின் காய்ப்பாகி உறுதி யற்ற சரீரக் கட்டுடையதாகி விடும்.  

குடும்பத்திற்குப் போதியவரும்படி இல்லாத நிலையில் பெண்கள் பிள்ளை களைப் பெற்று விட்டால் குடும்பத்திற்குத் தரித்திரமும், கஷ்டமும் அதிகமாகி வாழ்க்கை திருப்தியுமற்றதாகி  விடும். அன்றியும், ஆண், பெண் ருதுசாந்தியான வுடன் பெண் கர்ப்பமாகிவிட்டால் கொஞ்சகாலமாவது தம்பதிகள் இயற்கை இன்பம். கல்வி இன்பம் அடைவதற்குச் சாவகாசமில்லாமல் போய்விடும். இவ் வளவு விஷயங்களில், பெண்கள் கர்ப்ப மாவது அசம்பாவிதமா யிருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கு இந்தக் கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக் கின்றது.  என்னவெனில் பெண்களுக்குக் கர்ப்பத்தை உண்டாக்குகின்ற பொறுப்பு மாத்திரம் ஆணை சேர்ந்ததாயிருக்கின் றதே தவிர, மற்றபடி கர்ப்பமான நிமிஷ முதல் பிள்ளை பெறும் வரை, அதன் பொறுப்பு முழுவதும் பிள்ளை பெறும் போது அடையும் பிரசவ வேதனையும், அதனால் உண்டாகும் ஆபத்துகளும்  பெண்களே  அடைகின்றார்கள்.  பிள் ளையைப்பெற்ற பின்பும், தாயானவள் தான் இரத்தத்தைப் பாலாக்கி, குழந்தை களுக்கு ஊட்டி வளர்க்கின்றாள்.

குழந்தைக்கு வரும் வியாதிகளுக்குக் தானே பத்தியமிருக்க வேண்டியவளா கிறாள்.  அதைச் சுமந்து போஷிக்கும் வேலை முழுவதும் தாயே செய்ய வேண்டியவளாகிறாள்.  பெண்ணானவள் ஒன்று இரண்டு பிள்ளைகளைப் பெற்ற வுடனேயே சகல விதசுகபோகங்களிலும் விரக்தியுடையவளாகிவிட வேண்டிய வளாகிறாள்.

குழந்தை பெற்ற உடனே குழந்தையின் போஷனையையும், வளர்ச்சியையும் உத்தேசித்துத் தனது சுதந்திரத்தைவிட்டு புருஷனுக்கும். குடும்பத்திற்கும் அடிமையாகிவிட வேண்டிய வளாகிறாள்.

புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும் பெண் ஜாதி ஒரு புருஷனைத் தவிர, வேறு புருஷனை எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த  தடையாயி ருக்கின்றது.

பிள்ளைகளைப் பெறுவதாலேயே பெண்களுக்கு சுதந் திரம், மானம், அறிவு எல்லாவற்றையும் விட்டு விட நேரிடுகின்றது.

சிறிதளவா வது  சுயேச்சையுள்ள பெண்ணாய் விளங்குவதைவிட, பிள்ளைகளைப் பெறும் அடிமையான இயந்திரமாகவே இருக்க வேண்டியதாய் இருக்கின்றது.  கூறி வந்தவைகளாலும், இதுவரை இன்னும் பல காரணங்களாலும் பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது முக்கியமான காரியமாகும் என்று சொல்லுகின்றோம்.

ஆகவே, இந்தத் தலையங்கத்தில் கர்ப்பத் தடையின் அவசியத்தைப் பற்றி ஒருவாறு விளக்கினோம்.  இனி அடுத்த வியாசத் தில் அதன் உபாயங்கள் என்ன என் பதைப் பற்றி நிபுணர்கள் என்பவர்களின் அபிப் பிராயத்தை எடுத்து விளக்கம் எண்ணியுள்ளோம்.

Monday, January 26, 2015

பெண்களின் கண்ணியத்தை காக்க வேண்டும்

பெண்களின் கண்ணியத்தை காக்க வேண்டும்
மதத்தின் பெயரால் வன்முறைகள் வேண்டாம்

குடியரசுத் தலைவர் உரை



புதுடில்லி, ஜன.26: நாட்டின் 66வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஆற்றிய உரை:

பாலியல் வன்முறை, கொலைகள், சாலைகளில் நடக்கும் துன்புறுத்தல்கள், குழந்தைகள் கடத்தல், வரதட்சணை கொடுமை யால் நிகழும் மரணங்கள் ஆகியவற்றால், தங்களது சொந்த நாட்டிலேயே பெண்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். எந்த விதத்தில் வன்முறை நடந் தாலும், பெண்களின் கண்ணியத்தை காக்க வேண்டும் என ஒவ்வொரு இந்தியரும் உறுதியேற்க வேண்டும். பெண்களுக்கு மரியாதை அளிப்பது, அவர்களை வலிமைப்படுத் துவது ஆகியவற்றின் மூலமே, ஒரு நாடு உலக அளவில் சக்தி மிக்கதாக மாறும்.

நாம் ஏராளமான சட் டங்களை இயற்றுகிறோம். இருப்பினும், பாதிக்கப் படாதவர்களும் குரல் எழுப்பாதவரை நீதி கிடைக்காது என்கிற பெஞ்சமின் பிராங்ளினின் கருத்தை இங்கு குறிப்பிடு கிறேன். மதத்தால் வன்முறை வேண்டாம்:

மதம் என்பது மக்களை ஒன்றுபடுத்தும் சக்தி என்றார்  காந்தியார். வன்முறை நடப்பதற்கு மதம் ஒரு காரணமாக அமைந்து விடக்கூடாது. நம்முடைய அரசியல மைப்பு சட்டம் என்பது ஜனநாயகத்தின் புனித நூல். அது, வேற்றுமையில் ஒற்றுமை என்பதை கொண்டாடும் இந்தியா வின், சமூக பொருளாதார மாற்றத்துக்கான துருவ நட்சத்திரம். அது பொறு மையை வலியுறுத்துகிறது. வேறுபாடு கொண்ட சமூகங்களுக்கு இடையே, நமது அரசியலமைப்பு சட்டம் நல்லெண் ணத்தை தூண்டுகிறது. இந்த மதிப்பு மாண்புகள் காப்பாற்றப்பட வேண்டும்.

வளர்ச்சியை தடுக்க முடியாது:
 
இந்தியாவுடைய வளர்ச்சியை அதனுடைய எதிரிநாடுகள் ஒருபோதும் தடுத்துவிட முடியாது. தீவிரவாதமும், வன்முறை யும் நம்முடைய எல்லை யில் நிலவி வருகிறது. அமைதி, அகிம்சை, அண்டை நாடுகளுடன் நட்புறவு ஆகியவை நம்முடைய வெளியுறவுக் கொள் கையின் அடிப்படையாக உள்ளன. எல்லையில் மீண்டும் மீண்டும் நடக்கும் அத்து மீறல்கள், தீவிரவாத தாக் குதல்கள் ஆகியவற்றுக்கு வலிமையான ராஜதந்திரத் தின் மூலமாகவும், அசைக்க முடியாத ராணுவ வலி மையாலும் நமதுநாடு தக்க பதிலடி கொடுக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா தொடுத்துவரும் போரில், உலக நாடுகளும் இணைந்து கொள்ள வேண்டும். நாட்டு மக் களுக்கு எதிரான எந்த வொரு அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு, அதனை முறியடிக்கக்கூடிய வலிமை, நம்பிக்கை, மன உறுதி ஆகியவை நமது நாட்டுக்கு உண்டு.

30 ஆண்டுகாலத்துக்கு பிறகு, தனிக்கட்சி ஒன் றுக்கு மக்கள் பெரும் பான்மை அளித்துள்ளார் கள். அவர்களது நம்பிக் கையை, அரசு காப்பாற்ற வேண்டும். தூய்மையான, ஆற்றல் மிக்க, வெளிப் படையான, நட்புறவு மிக்க அரசு அமைவதற்காக நாட்டு மக்கள் வாக் களித்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சட்டங் களை இயற்றவது நாடா ளுமன்றத்தின் கடமை. விவாதமின்றி சட்டங் களை இயற்றுவது என்பது, சட்டம் இயற்றும் விஷயத்தில் நாடாளு மன்றத்துடைய பங்க ளிப்பை பாதிக்கும். அரசு மீது மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு, அவசர சட்டங்கள் வழி வகுக்கும். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, April 16, 2013

கணவனே ஆனாலும் குற்றம் குற்றமே!


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு  சட்டமுன் வரைவு மக்களவையில் 19.3.2013 அன்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு ஆயுள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொந்தரவு செய்யும் நோக்கில் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது, அமிலம் வீசுவது உள்ளிட்ட குற்றங்களுக்கான தண்டனைகள்   கடுமையாக்கப்பட்டுள்ளன. இருவரும் சம்மதத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான வயது வரம்பு 16 ஆக குறைக்கப்படவில்லை. 18 ஆகவே நீடிக்கிறது.

ஏற்கெனவே பாலியல் வன்முறை வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே போன்ற குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். தொந்தரவு தரும் நோக்குடன் பெண்களைப் பின்தொடர்வது, பாலியல் நோக்கத்துடன் பார்ப்பது போன்ற குற்றங்களில் இரண்டாவது முறையில் ஈடுபடுவோர் ஜாமீனில் வெளியே வர முடியாது.
அமிலம் வீசுவது மிகக் கடுமையான குற்றம், இதில் பாதிக்கப்படுபவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எதிர் நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு என்று சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.  பாலியல் வன்முறைக்கு உள்பட்டவர்கள், அமிலத் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவமனைகள் முதல் உதவி மற்றும் சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள வேண்டும். சிகிச்சை அளிக்க மறுத்தால் தண்டனை அளிக்கப்படும். பெண்களைப் பின் தொடர்வது, பாலியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது போன்றன முதல்முறையாக தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளன. இப்படி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள சூழ்நிலையில், பெண்களின் மீதான வன்முறை எப்படி இருக்கிறது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. மாறிவரும் சமுதாயச் சூழ்நிலையில், பாலுறவு பற்றிய கருத்துகள் பலதரப்பட்டவையாக உள்ளன.
வன்புணர்வு மட்டும் அல்லாமல், மனைவியுடன் கொள்ளும் உறவுகூட அவள் சம்மதத்துடன்தான் நடைபெற வேண்டும்; இல்லையேல், அது குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்ற குரல்களும் உரத்துக் கேட்கின்றன.
பெண்ணானவள் தனித்து ஆண் துணையில்லாமல் வாழ முடியாது; மனுநீதியின்பால் வகுக்கப்பட்ட எல்லாச் சட்டங்களும் ஒழிக்கப்பட வேண்டும். அவளது கணவனுடன்கூட பாலுறவிற்கு மறுத்துரைக்கும் உரிமைகள் அவளுக்குண்டு. அவளது மனக்குமுறல்களை எடுத்துரைக்க அவளுக்கு உரிமை உண்டு. அவள் மதிக்கப்பட வேண்டும். இந்தியர்கள் பெண்களை ஒரு பொருளாகத்தான் நடத்துகிறார்களேயொழிய, ஒரு மனித உருவாக நடத்துவதில்லை. அவளால், தந்தை, கணவன் அல்லது மகன் ஆகியோரது பாதுகாப்பின்றி சுதந்திரமாக வாழமுடியும் என்று முன்னாள் பெண்களுக்கான அமைப்பின் தலைவரான (Former Chairperson Womens’ Commission) ஆர். ராமாத்தாள் கூறியுள்ளார்.
வன்புணர்வு என்றால் என்ன? இந்திய தண்டனைச் சட்டம் 375ஆவது பிரிவு வன்புணர்வு பற்றிச் சொல்கிறது.
1. அவளுடைய விருப்பத்திற்கு மாறாக,
2. அவளுடைய சம்மதம் இன்றி,
3. அவளுக்குப் பிடித்த ஒருவரின் மரண பயம் காட்டியோ, துன்புறுத்தியோ சம்மதம் பெறுதல்,
4. அவள் சட்டப்படி மணந்து கொண்டுள்ள கணவன் அல்ல என்று தெரிந்திருந்தும், அவள் அவனைக் கணவன் என்று நம்பி இருக்கும் சமயத்தில், அவளுடைய சம்மதத்துடன்,
5. அவள் சரியான மனநிலையில் இல்லாதிருக்கும்போதோ அல்லது போதை வயப்பட்டிருக்கும்போதோ அவளது சம்மதத்துடன்,
6. அவள் 16 வயதுக்குட்பட்டிருக்கும் பட்சத்தில், அவளது சம்மதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்,
அவை வன்புணர்வாகக் கருதப்படும்.
ஆனால், பதினைந்து வயது நிரம்பாதிருக்கும் மனைவியுடன் அவள் கணவன் கொள்ளும் உறவானது, வன்புணர்வாக மாட்டாது-. (இந்தக் கருத்தானது மறுதளிக்கப்பட வேண்டும்; மாற்றப்பட வேண்டும்.)
ஒரு மனிதன் யாரையாவது தாக்கினால், அது, தண்டனைக்குரிய குற்றமாகும். அவன் அதே செயலை மனைவியிடம் செய்யும்போதும், அது கொடுஞ்செயல்தானே!
ஒரு மனிதன் ஒருவரைக் கடும் வார்த்தைகளால் வைது, காயப்படுத்தினால், அது தண்டனைக்குரியது.
அதேபோலத்தான் ஒருவன் தன் மனைவியைப் பொதுஇடத்திலோ அல்லது வீட்டிலோ வையும்போது அது கொடுஞ்செயலாகிறது.
குடும்பக் கொடுமைச் சட்டத்தின் கீழ் (Domestic Violence Act) தண்டனைக்குரியதே.
ஒரு மனிதன் ஒருவரை சைகையின் மூலம் அச்சுறுத்தினால், அது குற்றமாகும். அதுபோலவே, அவன் மனைவியைப் பயமுறுத்தினாலும் அது குற்றமே.
அதைப்போலவே, மற்றொரு பெண் அல்லது சிறுமியுடன் உறவுகொள்வது தண்டனைச் சட்டம் 376ஆவது பிரிவின்படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். அதைப்போலத்தான் மனைவியைக் கட்டாயப்படுத்தித் தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கணவன் செய்தலும் ஆகும்.
சம்மதத்துடன் உறவு கொள்ளும்போது, எதுவும் குற்றமல்ல; சம்மதம் இல்லாதபோது அச்செயல், அந்த நபர் சிறுமியாகவோ, வேறொரு பெண்ணாகவோ அல்லது மனைவியாகவோ இருந்தாலுமே, குற்றமாகி விடுகிறது. அதுவே நாட்டின் சட்டம். உடலுறவின்போது, பெண் அதில் தன்னைத் தொடர்புபடுத்திக்  கொள்ளாதபோது, அது கணவனேயாக இருந்தாலும், அவளைத் துன்புறுத்தி, அதன் காரணமாக கட்டாயத்தினால் அவள் இணங்கியிருந்தாலும்கூட அச்செயலின் விளைவாக அவளுக்கு வலி, கேடு மற்றும் விருப்பத்துக்கு மாறாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது காரணமாக அது வன்புணர்ச்சிபாற் கொண்டு வரப்பட வேண்டும்.
உடலுறவிற்கு அணுகும்போது, மனைவி மறுதளித்தால் அதற்கான மாற்று, அவளிடமிருந்து தள்ளி இருத்தல் அல்லது மணமுறிவு பெறுதலே ஆகும். அதற்காக அவன் அவளை எவ்வழியிலும் கட்டாயப்படுத்தக் கூடாது.
திருமணமென்பது ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல்தான். அதற்கு அப்பால் யாதொன்றுமில்லை. திருமணமென்பது ஒரு வளர்ச்சி பெற வேண்டிய இணக்கம் (Sense)  தான். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதற்குத்தான். ஒருவரை அடக்கித் துன்புறுத்த அல்ல. பல அவமானங்களையும், அடக்குமுறைகளையும் சந்திக்கும் பெண்ணிற்குத் திருமணம் ஒரு தண்டனையாக அமையக் கூடாது. அதுவும் வன்புணர்ச்சிக்கு இணையான வல்லுறவாக அது அமையக் கூடாது. ஆனால், இஸ்லாமியச் சட்டம் என்ன சொல்கிறது?
இஸ்லாமியச் சட்டப்படி (The Muslim Personal Law) பெண்ணிற்குத் தரவேண்டிய சீதனம் (மெகர்) கேட்கப்பட்டும்கூட கொடுக்கப்படாவிட்டால், மனைவி அவனைப் புறக்கணிக்கலாம்; சமைக்க மறுக்கலாம்; துணி துவைக்க மறுக்கலாம்; ஏன் எதையும் செய்ய மறுக்கலாம்; ஆனால், அவள் பாலுறவு வாழ்வை மறுக்க முடியாது. கணவன் அழைக்கும்போது அவள் போய்த்தான் ஆகவேண்டும்.
இது குறித்து தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் மீனா கந்தசாமி, ஒரு பெண்ணுக்குப் பாலியல் விருப்பம் உண்டு என்று ஒப்புக்கொள்ளும்  சமுதாயம் மட்டுமே, அவளுக்குச் சில  நேரங்களில் அந்த விருப்பங்கள் இல்லை என்று ஒப்புக்கொள்ளும்.
இங்கே பெண்ணுக்கு அவள் ஆசையை வெளிப்படுத்தும் இடமும் இல்லை, வேண்டாம் என்று சொல்லிவிடக் கூடிய வாய்ப்பும் இல்லை என்று நடப்பு உண்மையை உடைத்துப் பேசுகிறார். இது குறித்த தனது கட்டுரை ஒன்றில் தான் குறிப்பிட்டுள்ள கருத்தைப் பின்வருமாறு எடுத்து வைக்கிறார். ஓர் இரவு நேரத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட உறவின் காரணமாக இரத்தப் போக்கு ஏற்பட்டு நீங்கள் மருத்துவமனைக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
உங்கள் கணவர் அவரது ஆண் தன்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்ததற்காக வாழ்த்துக் கூறும் புன்னகையை மருத்துவர் உதிர்ப்பதை எதிர்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு வேண்டியிருக்கும். இதற்காக நீதிமன்றம் செல்ல இயலாது. இந்திய குற்றவியல்/ஆண் குறியியல் சட்டத்தில் (Indian Penal/Penile Code) திருமண உறவில் பாலியல் வன்முறையின் மீது நடவடிக்கை எடுக்க பிரிவே இல்லை.  கடந்த டிசம்பரில், தில்லி மாவட்ட நீதிபதி ஜே.ஆர்.ஆர்யன் என்பவர் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், இந்திய குற்றவியல் சட்டம் திருமண உறவுக்குள் பாலியல் வன்முறை என்ற பார்வையையே ஏற்றுக் கொள்ளவில்லை. கட்டாயத்தினாலோ, தனது விருப்பத்திற்கு மாறாகவோ தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார் என்று கணவன் மீது மனைவி புகார் தெரிவித்தாலும் அது குற்றமாகாது என்று தெரிவித்துள்ளார். சட்டபூர்வமாகச் சொல்வதானால் உன் கணவன் உன் உடலின் உரிமையாளன். திருமணம் என்பது இலவசப் பாலுறவுக்காக ஆணுக்குக் கிடைத்த லைசன்ஸ் மற்றும் திரும்பத் திரும்பச் செய்யப்படும் பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்கும் வழி! என்கிறார் மீனா கந்தசாமி.
திருமணத்தை கிரிமினல் குற்றம் ஆக்க வேண்டும் என்ற பெரியார், பெண்ணின் பாலியல் தேர்வையும் 80 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினார். பெரியாரின் சிந்தனையை இன்று உலகம் பேசுகிறது.

Sunday, January 6, 2013

சிங்கால்களின் திசை திருப்பங்கள்!


சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது என்ற பழமொழி உண்டு. அதனை அப்படியே பின்பற்றுபவர்கள்தான் சங்பரிவார கும்பலான ஹிந்துத்துவாவாதிகளான பார்ப்பனர்களும் அவர்தம் தாசானுதாசர்களும்!
பாலியல் வன்கொடுமைகளுக்கு நாட்டில் கடுமையான தண்டனை தர சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பெண்களை வெறும் உடைமையாக்கியும், அடிமையாக்கியும், கொச்சைப்படுத்திய நிலை ஆரிய சனாதன மத நூல்களான இராமா யணம், பாரதம், பகவத் கீதை மனுசாஸ்திரம் மற்றும் புராணங்களில் வண்டி வண்டியாக உள்ளன!
இந்துக் கடவுள்களின் லீலா வினோதங் கள் ஏராளம் உண்டு; அத்தனையும் இ.பி.கோ. என்ற இந்திய கிரிமினல் சட்டத்தின்கீழ் வராத குற்றங்களே அரிதேயாகும்.
இந்த லட்சணத்தில், விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் (பார்ப் பனர்) நேற்று துறவிகள் (?) மாநாட்டில் பேசியுள்ளார். (இதில் சங்கராச்சாரியாரும் பாலியல் வன்கொடுமைபற்றி அலசிப் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்!)
மேற்கத்திய கலாச்சாரத் தினால் தான் இப்படிப் பல பாலியல் வன்கொடுமைகள் நடை பெறுகின்றன என்று கூறியுள்ள அசோக் சிங்கால்களுக்கும் அவரது தொண்டரடிப் பொடி களுக்கும் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்.
1. ஆண்டவன் அவதாரமான பகவான் கிருஷ்ணன் இளவய திலேயே, ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலைகளைத் திருடி, மரத்தின்மேல் வைத்துக் கொண்டு, நீருக்குள் இருந்த பெண்களை ஆடையில்லாத நிலையில் நீருக்கு மேலே வரச் சொன்னது, பாலியல் வன்கொடுமைக்கு முன்னோடி அல்லவா?
2. தாருகாவனத்து ரிஷி பத்தினிகளை (3000 பேர்கள் - அப்பாடி!) கற்பழித்த சிவ லீலை ஹிந்து தர்மத்தின் சிறப்புகளா?
3. அகலிகையைக் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிட - தேவர்களின் தலைவன் இந்தி ரன் முனிவர் வடிவம் ஏற்று, தவறாக அகலி கையும் நடந்து கொண்ட கதை - மேற்கத்திய கலாச்சாரமா? ஹிந்து கலாச்சாரமா?
4. முன்பு இந்திய பிரிட்டனில் இந்திய ஹை கமிஷனராக இருந்த பண்டிட் விஜயலட்சுமி அவர் களுக்கு, பிரிட்டிஷ்காரர் ஒருவர் விருந்து வைத்தார். அப்போது அவரிடம் இந்த அம்மையார் உங்கள் படையெடுப்பில்தான் எங்கள் கலாச்சாரம் கெட்டது என்றாராம். அவர் அதற்கு மிகுந்த மரியாதையுடன், இருக் கலாம் மேடம், ஆனால் நாங்கள் அங்கே வந்திருக்காவிட்டால் நீங்களே உயிருடன் இருந்து இங்கே வந்து என்னுடன் தேநீர் அருந்த முடியாமற் போயிருக் கும் என்று பட்டென்று பதிலளித்தாராம்!
அதாவது விதவையான இவரை சதி என்ற உடன்கட் டையில் ஏற்றி எரித்திருப்பார் களே, அதைச் சட்டம் போட்டு, சதி அல்லது உடன்கட்டை ஏற்றுதலை ஒழித்துக் கட்டியது வெள்ளைக்கார ஆட்சிதானே! என்ற பொருளில் கூறியது கேட்டு, வெட்கி வெலவெலத்துப் போய் விட்டார் இந்த விதவையரான அம்மணி!
இன்னமும் ராஜஸ்தானில் ரூப் கன்வார்கள் எரிக்கப்பட்ட - சதி மாதா கோயில் உள்ளது! குழந்தை மணங்கள் குஜராத் உட்பட பல பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற வண்ணமே உள்ளன!
இவை எல்லாம் மேற்கத்திய கலாச்சாரமா? மேற்கத்திய கலாச்சாரம்தான் காப்பாற்றியும் உள்ளது. மனுதர்மத்திலேயே மாதர், ஆடவர் நிலை பற்றி வெவ்வேறு விதமாகத் தண்டனை கூறியுள்ளதே! உபநிஷத்துக்களில் குருபத்தினி - சீடர்கள் ஒழுக்கக் கேட்டிற்குத் தண்டனை பற்றி வேறுவிதமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள் ளதே! அது எதைக் காட்டுகிறது?
இந்தப் பாலியல் வன்கொடுமை மிகவும் பழைமையான புராதன நடப்பு ஹிந்து கலாச் சாரத்தில் என்பதைத்தானே காட்டுகிறது?
இதனை ஏன் மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவு என்று திசை திருப்புகின்றனர் - இந்த மதவாதிகள்? இன்னும் எத்தனையோ கூற முடியுமே!

ஊசி மிளகாய்

Thursday, June 28, 2012

பெண்கள் விடுதலை



இராஜன்: ஏண்டா, டேய்! இராமா! பெண்கள் விடுதலை, பெண்கள் விடுதலை என்று பேசுகிறார்களே, அதென்ன விடுதலை? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?
இராமன்: உனக்கெப்படியப்பா புரியும்? உனக்கு கால் டஜன் பெண் டாட்டிகள் இருக்கிறார்கள்; அரை டஜன் வைப்பாட்டிகள் இருக்கிறார்கள்; அதோடு நிறையப் பணமும் இருக்கிறதே?
இராஜன்: நான் சொல்லுவது உனக்குக் கேலியாக இருக்கிறது. இந்தப் பெண்களிடமிருந்து எனக்கு (ஆண் களுக்கு) விடுதலை கிடைப்பதுதான் பெரிய கஷ்டமாயிருக்கிறது? ஒருத்தி விட்டால் மற்றொருத்தி இழுக்கிறாள். இவர்களைவிட்டு நான் எப்படி விடுதலை அடைகிறது?
இராமன்: சரிதான்; இப்போது புரிந்தது. நீ அந்தப் பெண்களிடம் கஷ்டப்படுவதினால் உனக்குத்தான் விடுதலை வேண்டும் என்கிறாய். உனக்கு 9 பெண்கள் எதற்கு? ஒரு பெண் இருந்தால் போதாதோ? ஒரு பெண் 9 கணவனை மணம் செய்து கொண்டும் காதலனாக வைத்துக் கொண்டும் இருந்தால் நீ அந்த ஒன்பதில் ஒருவனாக இருக்க சம்மதிப்பாயா?
இராஜன்: ஒரு பெண்ணுக்கு 9 புருஷன் என்றால் அது என்ன மிருகமா? நாமென்ன மிருக சாதியா? நன்றாய்ச் சொல்லுகின்றாய் நாக்கு கூசாமல்!
இராமன்: பெண்கள் விடுதலை என்றால் இப்போது உனக்கு அருத்தமாச்சுதா? நீ ஒன்பது பெண்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய இயற்கை உணர்ச்சிக்கு உன்னை வலிய இழுக்க வேண்டிய மாதிரிக்கு அவர் களை அடைத்து வைக்கலாம்.அது மனுஷத்தன்மை என்கிறாய். ஒரு பெண் 9 கணவனை வைத்துக் கொண்டி ருந்தால் அது மிருகத்தனம் என்கிறாய், இந்தக் கொள்கை போக வேண்டு மென்பதைத் தான் பெண்கள் விடுதலை என்று சொல்லுவது. புரிந்ததா?
இராஜன்: புரிந்தது. நன்றாய்ப் புரிந்தது. நான் அவசரப்பட்டு மிருகத் தன்மை என்று சொல்லிவிட்டேன். ஒரு பெண்ணுக்கு 9 பேர் என்பது இன்றும் தாராளமாய் நடக்கின்றதே. நம்ம தேவதாசிகளைப் பாரேன். நம்ம விலைமாதர்களைப் பாரேன். 9 தானா 90ம், 900-மும்கூட இருக்கும் போலிருக் கின்றதே.
மக்கள் அங்கு போவ தில்லையா? அவர்களுக்கு மரியாதை செய்வதில்லையா? அந்தப் பெண் களுக்குச் சுதந்திரமில்லையா? தங்கள் இஷ்டம் போல் பணம் கேட்பதும் தங்கள் இஷ்டம் போல் ஒருவனை நீ வேண்டாம் வெளியில் போ என்பதும் நாம் தினமும் பார்க்கவில்லையா? ஆகவே அவர்களுக்குச் சுதந்திரமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
இராமன்: பொறு, பொறு அவசரப்படாதே. சுதந்திரம் இருப்பதாக நீ சொல்லும் பெண்கள் யார் என் பதைத் தெரிந்து கொண்டாயா? தேவதாசிகளுக்கும் விலைமாதர் களுக்கும் சுதந்திரம் இருப்பதாகச் சொன்னாய். நீ சொல்கிறபடி பார்த்தால் ஒரு பெண் சுதந்திரமாக இருக்க வேண் டுமானால் ஒன்று தேவதாசியாகப் போய்விட வேண்டும்.
அல்லது விலைமாதாகப் போய்விட வேண்டும். வெள்ளைத் தமிழில் சொல்ல வேண் டுமானால் தேவடியாளாக அல்லது குச்சுக்காரியாகப் போய்விட வேண்டும் என்கிறாய். ஒருவனையே கணவனாகக் கொண்டு திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிற பெண்களுக்கு விடுதலை என்பது ஒரு ஆணுக்குப் பல பெண்களில் ஒருத்தியாய் இருந்து அடைபட்டுக் கிடக்க வேண்டியதுதான் கடமைபோல் இருக்கிறது.
இராஜன்: ஒரு பெண் தனிமையில் இருந்து வாழ்க்கை நடத்திக் கொள்ளட்டுமே, யார் வேண்டாம் என் கின்றார்கள்? பெண்கள் தாங் களாகத்தானே யாருக்காவது ஒருவ னுக்கு வாழ்க்கைப்பட வேண்டும் என்று துடிக்கிறார்கள். அவர்கள் பெற் றோர்களும் வயது வந்துவிட்டதே என்ன செய்வது? யார் தலையிலாவது கட்டிவிட வேண்டுமே, இல்லா விட்டால் கெட்ட பெயர் வந்து விடுமே என்று கவலைப்படுகிறார்கள். அதற்கேற்றபடியே கல்வி இல்லாமலும் தொழிலில் பழக்காமலும் வளர்க் கிறார்கள்.
அப்படிப்பட்ட பெண்ணைக் கட்டிக் கொள்ள வருபவனும் தனக்கு அடிமைத் தொழில் செய்ய ஒரு ஜீவன் வேண்டும் என்று கருதியே பெண்ணைத் தேடுகிறான். அதோடு இவள் பெறுகின்ற குழந்தைகளுக்கும் இவளுக்கும் வாழ்விற்கு வேண்டியதை எல்லாம் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு செய்கிறான்.
இதற்கு மேல் அடிமை புகுந்தவளுக்கு எஜமானன் வேறு என்ன செய்ய முடியும்? தான் தேடிய சொத்துக்களையும் அடிமை பெற்ற குழந்தைகளுக்கே வைத்து விட்டுப் போகிறான். இன்னும் என்ன தான் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறாய்?
இராமன்: நீ சொல்லுவதைப் பார்த்தால் பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என்கிறாய் போல் இருக்கிறது. கல்யாணம் செய்து கொண்டால் அடிமையாகத்தான் இருக்க வேண்டும் என்கின்றாயாக்கும்?
இராஜன்: நான் அப்படிச் சொல்லவில்லை; இயற்கை அது. கொடுப்பவன் கை மேலாகவும்,  வாங்குபவன் கை கீழாகவும்தான் இருக்கும். கல்யாணம் இல்லாமல் இருந்தால் என்ன முழுகிப்போய் விடும்? மலையாளத்தில் சில இராணிகளும் ஜமீன்தாரணிகளும் சம்பளம் கொடுத்து புருஷன்மார்களை வைத்துக் கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் கவுரவம் குறைந்துபோய் விட்டதா? அல்லது சமுதாயத்தில் குறை கூறுகிறார்களா?
அவ்வளவு தூரம் போக உன்னால் முடியாவிட்டால் பெண்களை நன்றாய்ப் படிக்க வைத்து அல்லது ஏதாவது ஒரு தொழிலில் அமர்த்தி, 25 வருடம் வரை கல்யாணப் பேச்சு பேசாமல் 25 முதல் 30 வயதிற்குள் அந்தப் பெண்ணையே தனக்குப் பிடித்தவனை ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துகொள்ளும்படிச் செய். வாழ்க்கைக்கு (அன்னவஸ்திரத்துக்கு) புருஷன் கையை எதிர்பார்க்காமல் செய். அப்போது பெண் விடுதலை வேண்டி இருக்குமா அல்லது ஆண் விடுதலை வேண்டியிருக்குமா அல்லது இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் கட்டுப் படுத்திக் கொள்வார்களா என்று பார்!
(சித்திரபுத்திரன்  என்ற புனைபெயரில் தந்தை பெரியாரால் எழுதப்பட்டது)
குடிஅரசு 27.9.1945


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, March 8, 2012

தமிழகத்தில் பெண் கல்வி


1866ஆம் ஆண்டில்தான் பெண் கல்வி குறித்த சிந்தனையானது ஆங்கிலேயரது தீவிரமான கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
1865-லிருந்து 1870ஆம் ஆண்டு வரை தொடக்கக் கல்வியினைக் கற்ற பெண்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
ஆண்டுகள் பள்ளிக்கூடங்களில் இசுலாமியப் பெண்களின் பெண்களின் எண்ணிக்கை எண்ணிக்கை
1865-66        4,111        5
1866-67        4,638        8
1868-69        8,099        3
1869-70        9,421        7
1872-73இல் அரசாங்கம் இசுலாமிய இனத்தவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்பட்டது. இதனால் இவ்வாண்டில் ஆளுநராக இருந்த ஈ.பி.பவல் என்பவர் இசுலாமியப் பெண்களின் திறமையையும், அறிவாற்றலையும் உயர்த்துதல் பற்றி உயர்குடி முகமதியர்களிடம் கலந்து ஆலோசித்தார். இதன் பின்னர், இசுலாமியப் பெண் கல்வி வளர்ச்சிக்கெனக் குறிப்பிடத்தக்க நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், பள்ளிகள் பெரும்பான்மை கிறித்துவ சமயப் பரப்பாளர்களால் நடத்தப்பட்டதால் அவற்றில் இசுலாமியப் பெண்கள் குறைவான எண்ணிக்கையிலேயே கல்வி பயின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளில் சென்ற ஆண்டுகளை விடவும் இவ்வெண்ணிக்கை கூடுதலாக இருந்ததை அறிய முடிகிறது.
ஆண்டுகள்        சமயப்பரப்பு        அரசுப் பள்ளிகளில் பள்ளிகளிலும்        இசுலாமியப் பெண்களின் அறநிலையங்களிலும் எண்ணிக்கை பயின்ற இசுலாமியப் பெண்களின் எண்ணிக்கை
1871-72            7            5
1872-73            -            58
1873-74            67          238
1874-75            9            615
1871ஆம் ஆண்டு பொதுவாகப் பெண்கல்வி வளர்ச்சிக்கு ஆங்கில அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பை நல்கியது. இருப்பினும், 1871ஆம் ஆண்டு சென்னையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 620 பெண் மக்கள் தொகைக்கு ஒரே ஒரு பெண் மட்டுமே படித்தவராக இருந்தார். இவ்வாண்டில் உள்ளூரில் பயிலும் பெண்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்ற சட்டம் அரசால் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் சென்னையில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உதவி தொகையானது தொடக்கப் பள்ளிகளில் பயில்பவரில் பதினாரு பேருக்கு நடுவிலே பள்ளிகளில் பயில்பவரில் முதல் நான்கு பேருக்கும் உயர்கல்விக்கு 75 விழுக்காடும் வழங்க ஆணையிடப்பட்டிருந்தது. இவற்றுடன் அவர்களுக்கு ஊதிய உதவித்தொகை வழங்கவும் அனுமதிக்கப்பட்டது.
ஆனால், எந்தப் பள்ளிக்கும் ஊதிய உதவித் தொகை வழங்கப்படவும் இல்லை. இது தொடங்கப்படவும் இல்லை என்பதை அறிய முடிகிறது. மேலும் மூன்று மாதத்திற்கான சராசரி வருகைப் பதிவேடு இருபது மாணவிகளைக் கூட கொண்டதாக அமையவில்லை. இதற்கேற்றாற் போல், மொத்த ஊதியத்துடன் ஒரு பாதியைக் கூட கொண்டதாக அவ்வுதவித்தொகை அமையவில்லை.
ஆசிரியைகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வரையறைகளைக் கொண்டு பயிற்சி பெற்ற சான்றிதழ்களை அல்லது சாதாரணச் சான்றிதழ்களை வைத்திருந்த ஆசிரியைகளுக்கு ஊதிய உதவித் தொகை வழங்கப்பட்டது. சான்றிதழ் பெறாத ஆசிரியைகளுக்குக் கொடுக்கப்பட்ட மொத்த ஊதியத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கும் மிகாமல் மானியம் வழங்கப்பட்டது. ஆனால், இவர்களின் கல்வித் தகுதி நடுநிலை அல்லது உயர்நிலை அல்லது உயர் தொடக்க நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது.
பல்வேறு கல்வி நிலையங்களில் பயின்ற பெண்களின் எண்ணிக்கை:
1870ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் தமிழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8010 பெண்கள் கல்வி பயின்றனர். இவற்றில் சென்னையில் 3440 பெண்களும், திருநெல்வேலியில் 2317 பெண்களும், தஞ்சாவூரில் 689 பெண்களும் பயின்றனர். எல்லா மாவட்டங்களை விடவும், சென்னையில் அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் கல்வி பயின்றது தெரிய வருகிறது.
1865ஆம் ஆண்டில் இருந்து 1871ஆம் ஆண்டு வரை தொடக்கக் கல்வியில் பெண்கள் மிகவும் பின்தங்கி இருந்தனர் என்பதைப் பின்வரும் அட்டவணையால் அறிய முடிகிறது.
ஆண்டுகள்        பள்ளிக்கூடங்களில் பெண்களின்  எண்ணிக்கை
1865-66        4,111 1866-67        4,638 1868-69        8,099 1869-70        9,421
1870-71        10,185
1870ஆம் ஆண்டு சென்னையில் அரசுப் பள்ளிகளில் கீழ்நிலை தொடக்கக் கல்வியில் ஒரு பெண் கூட படிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், தனியார் மற்றும் மேற்பார்வைக் குழுக்களால் நடத்தப்பட்ட பள்ளிகளிலும் பெண்கள் கல்வி பயிலவில்லை. ஆனால், அரசு மானியம் பெற்று நாற்பத்தைந்து தனியார் பள்ளிகள் இயங்கின. இப்பள்ளிகளில் ஆயிரத்து அறுநூற்று முப்பத்து இரண்டு பெண்கள் கல்வி கற்றனர். இப்பள்ளிகள் உள்ளூர் நிதியும், அரசு நிதியும் பெற்று இயங்கின.
கிறித்துவ சமயப் பரப்பாளர்களின் பங்கு
கிறித்துவ சமயப் பரப்பாளர்கள் கல்வி வளர்ச்சியில் குறிப்பாக பெண் கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தனர் என்பதை அவர்களது செயல்பாடுகளின் வாயிலாக அறிய முடிகிறது.
தொடக்க காலத்தில் ஆங்கில வாணிகக் குழுவினர் இந்தியாவுக்கு வந்ததும் நாட்டுக் கல்வி முறை நடப்பிலிருப்பதை கண்ணுற்றனர். அவற்றில் அவர்கள் தலையிடவோ அல்லது அவற்றை வளர்க்கவோ முற்படவில்லை. மேலும், கலங்கிய அரசியல் குட்டையில் அகப்பட்டதைச் சுருட்டிக் கொள்ளும் எண்ணம் படைத்த அவர்கள் நாட்டு மக்களின் நலன்களில் கருத்தைச் செலுத்தாமல் போர், முற்றுகை, சூழ்ச்சி ஆகியவற்றிலேயே கருத்தாய் இருந்தனர். இதனால் இந்து, இசுலாமியக் கல்வி முறைகளைத் தொடர்ந்து செயல்பட அனுமதித்தனர். கிறித்துவ சமயப் பரப்பாளர்களே. இவர்களது உள்நோக்கம் சமய மாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டமைந்ததெனினும் இதற்குக் கல்வியமைப்பைச் சிறந்த ஊடகமாகப் பயன்படுத்தியதில் இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் பெரிதும் பயனடைந்தனர் எனலாம். ஆங்கிலேயர் ஆட்சியில் இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை சாசனம் புதுப்பிக்கப்படுவது வழக்கத்தில் இருந்தது. இந்நிலையில்  1698ஆம் ஆண்டு சாசனம் புதுப்பிக்கப்பட்ட பொழுது, அதில் சமயப் பரப்பாளர்கள் இந்தியாவிற்கு வந்து சமயப்பணி புரிவதற்கும் கல்வி பணி புரிவதற்கும் வாய்ப்புகள் அளிக்கப் பட்டிருந்தன.இதற்காகும் செலவுகளை வணிகக் குழு நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் எனக் கூறப்பட்டது. இதன் மூலம் 1698இல் டேனிய சமயப் பரப்பாளர்கள் தரங்கம்பாடி வந்திருந்தனர். இவர்கள் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டனர்.
(தமிழகத்தில் பெண் கல்வி, - முனைவர் க.கண்மணி பிரியா)

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...