Wednesday, May 31, 2017
மாட்டிறைச்சி தடையும் ‘‘திராவிட நாடு’’ கோரிக்கையும்!
80 சதவிகித மக்களின் உணவுப் பிரச்சினையில் மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வசமாகச் சிக்கிக் கொண்டு விட்டது. தனக்குத் தானே தன் கழுத்தில் சுருக்கை மாட்டிக்கொண்டு விட்டது.
இந்திய அளவில் பெரும் அளவுக்கு எதிர்ப்பு எரிமலை தன் குழம்பைக் கக்க ஆரம்பித்துவிட்டது. பி.ஜ.பி. ஆளும் கோவா மாநிலம்கூட இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆரம்பக்கட்டத்திலேயே தன் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளது. மேனாள் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரும், இன்றைய கோவா மாநில முதலமைச் சருமான மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ள கருத்து இங்கு எடுத்துக்காட்டத்தகுந்தது.
‘‘மாட்டிறைச்சி பிரச்சினை காரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் பிசாரா கிராமத்தில் முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. வளமான இந்தியா என்ற கனவிலிருந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது’’ என்று ஒப்புக்கொண்டாரே, இதற்கு என்ன பதில்?
இந்தப் பிரச்சினை எந்த அளவுக்கு இன்று சென்றுள்ளது - திராவிட நாடு பிரிவினைக்குக் குரல் கேரளாவிலிருந்து வரும் அளவுக்குச் சென்றிருக்கிறது.
இது ஏதோ உணர்ச்சிவயப்பட்டு சொல்லப்பட்டது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.
இது பண்பாட்டுப் பிரச்சினையைச் சார்ந்தது. ஆரியர் - திராவிடர் என்ற பண்பாட்டுப் போரைப் பிரதிபலிக்கக் கூடியதாகும்.
ஆரியர்கள் ஒரு காலகட்டத்தில் மாமிசம் சாப்பிட்ட வர்கள்தாம். ஒரு பசு மாட்டின் மாமிசத்தை எப்படி எப்படியெல்லாம் பங்கிடுவது என்பது குறித்து ஆரியப் பார்ப்பனர்களின் மத நூல்கள் விவரிக்கின்றன.
புத்தர் இயக்கம் தோன்றி, ஆரியப் பார்ப்பனர்களின் உயிர்க்கொல்லியாம் யாகக் கலாச்சாரத்தை எதிர்த்த நிலையில், ஆரியக் கலாச்சாரம் முற்றாக மக்கள் மத்தியி லிருந்து தூக்கி எறியப்பட்டு, அரசர்களும், பவுத்தக் கொள்கையை ஏற்று செயல்பட ஆரம்பித்த நிலையில், தங்களைப் புதுப்பித்துக் கொள்ள உயிர்ப்பித்துக் கொள்ளவே பார்ப்பனர்கள் கொல்லாமை என்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டனர் என்பதுதான் வரலாறு!
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் பி.ஜே.பி.யினர் பசுவைக் கையில் எடுத்துக்கொண்டு எப்படியெல்லாம் பேசி வருகிறார்கள். இந்து முன்னணியின் தலைவராக இருக்கக்கூடிய திருவாளர் ராமகோபாலய்யர் என்ன கூறுகிறார்? ‘‘மாட்டுக்கறி சாப்பிடுவதைவிட மலத்தைச் சாப்பிடலாம்‘’ என்று கூறியதையும் கொஞ்சம் சிந்திக் கட்டும்!
‘‘ராகுல்காந்தி மாட்டுக்கறி சாப்பிட்டுச் சென்றால்தான் கேதார்நாத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது’’ என்று சாமியார் சாக்சி என்ற பி.ஜே.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கூறுவது எல்லாம் எதைக் காட்டுகிறது?
தொடக்கத்தில் பசுவை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடியவர்கள் - இப்பொழுது காளைகள், எருமை கள், ஒட்டகங்கள் என்று பட்டியலை விரிவாக்கி விட்டனர்.
இதன்மூலம் என்ன? மக்களை மாமிச உணவுக் கலாச் சாரத்திலிருந்து முற்றிலும் மாற்றித் தங்களின் கலாச்சாரத் தைத் திணிக்கும் ஆரிய நயவஞ்சகம் இதன் பின்னணியில் இருக்கிறது.
திராவிட இன மக்களின் உணவு மாமிச உணவு - அதன் அயல் பண்பாடு என்பது ஆரியர்களுக்கானது; அந்தக் கலாச்சாரத்தைத் திணிக்கும் வேலையைத்தான் பா.ஜ.க. என்ற பார்ப்பன ஆதிபத்திய ஆட்சி செய்யத் தலைப்பட்டுள்ளது. அதன் எதிரொலி தான் திராவிட நாடு என்னும் பண்பாட்டுச் சர்ச்சை இப்பொழுது வெடித்துள்ளது.
மாட்டு மாமிசம் என்பது பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வர்கள், மலைவாழ் மக்கள், சிறுபான்மையினருக்கான உணவாகும். இதனைத் தடை செய்வதன் பின்னணியில் உயர்ஜாதி உணர்வு மனப்பான்மை குத்திட்டு நிற்கிறதா இல்லையா?
எப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகர்ப் பயிற்சி பெற்றாலும் கோவிலுக்குள் அர்ச்சகராக முடியாது என்று இந்து மதத்தின் உயர்ஜாதிப் பார்ப்பனர்கள் அடம் பிடிக்கிறார்களோ, நீதிமன்றம் சென்று முடக்குகிறார்களோ, அதே தன்மைதான் இதிலும் - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையிலும் தொல்லைகள் கொடுப்பது என்பது இந்தக் காவிகளின் ரத்தவோட்டமாகும்.
செத்துப்போன பசுவின் தோலை உரித்தனர் என்பதற் காக அரியானாவில் ஜஜ்ஜா எனும் ஊரில் அய்ந்து தாழ்த் தப்பட்டவர்களை அடித்துக் கொன்றது இந்த இந்துத்துவா காவிக் கூட்டம்தானே! குஜராத்தில் உனா எனும் இடத்தில் இறந்துபோன பசுவின் தோலை உரித்த தாழ்த்தப்பட்ட அய்வர் அடித்து நொறுக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டதற்கு என்ன பதில்?
ஆக, ஆரியர் - திராவிடர் போராட்டம் இன்னொரு வடிவத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதனு டைய நீட்சிதான் திராவிட நாடு என்ற கோரிக்கையின் எழுச்சி.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- திருச்சி மாநாடு
- தலைமைச் செயற்குழு தீர்மானம்: அர்ச்சகர்ப் பிரச்சினை!
- மாயாவதியும் - முலாயம்சிங்கும் என்ன செய்யவேண்டும்?
- பெரியாருக்கும்- அண்ணாவுக்கும் குத்தகைக்கு விடப்பட்ட பூமிதான்!
- ஊழலற்றதா மோடி அரசு?
பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு (5)
பேராசிரியர், முனைவர் ந.க.மங்கள முருகேசன் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறையில் பரிதிமாற் கலைஞர் அரங்கில் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி...
தந்தை பெரியார் மறைந்தபோது இனி இயக்கம் அவ்வளவுதான் என்று எண்ணியவர்களின் எண் ணத்தில் மண் விழும்படி அன்னை வீரிட்டெழுந்தார். அய்யாவின் எண்ணம் பொய்த்து விடாதபடி புது வீராங்கனையாகக் கொள்கை கொடி கட்டிப்பறக்கச் செய்பவராகத் தந்தை இல்லாத சோகத்தை நெஞ்சில் தாங்கிப் புறப்பட்டார்.
1973இல் இயக்கத் தலைமைப் பொறுப்பைத் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஏற்றுக் கொண்டவர் செய்த முதல் பணி, தந்தை பெரியாரின் செயல் முடிப்பது. அவர் வகுத்து தந்த பாதையில் நடைபோடுவது என்று முடிவெடுத்தார்.
ஒரு மாபெரும் இயக்கத்தலைவியான அவரிடம் இருந்த இந்த அரிய பண்புகளை, எளிமையை எடுத்துக் கூறாவிடில் மணியம்மையார் பற்றிய கூற்று நிறைவு பெறாது.
எளிமையென்றால் அவ்வளவு எளிமை. தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துக்கள், அவருடைய சொந்தச் சொத்துக்கள் ஏராளம். ஆனால் அவர் நினைத்திருந்தால் ஆடம்பரமாக இல்லாவிடினும், மிகச் சொற்ப வசதிகளுடனும் வாழ்ந்திருக்கலாம். அப்படி வாழ்ந்திருத்தால் கூட 58 வயது என்பதைத் தாண்டி மேலும் சில காலம் வாழ்ந்திருக்கக்கூடும். அவரோ மிக மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
திருச்சியிலிருந்து சென்னை வரும்போது மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் மக்கள் கூட்டத்தோடு ஒருவராக அமர்ந்து வருவார். வருபவர், மாற்று உடை என்று ஒரு சேலை, பாவாடை இவற்றை ஒரு துணிப்பையில் எடுத்து வந்து இரயில் நிலையத்தில் இறங்கி நடந்து வந்து விடுவார். திடலில் இருந்து தகவல் அறிந்து அழைத்துவரச் சென்றால், “இந்த ரயில் நிலையம் அருகிலேயே திடல் இருக்கிறது. எதற்கு வீணாக வர வேண்டும்“ என்று கடிந்து கொள்வார்.
கவிஞர் கலி.பூங்குன்றன் சொன்ன இரண்டு தகவல்களை இங்கே பதிவு செய்தால் சரியாக இருக்கும். “விடுதலை” ஆசிரியர் மணியம்மையார். எனவே கவிஞர் “விடுதலை” பொறுப்பேற்ற போது தலையங்கம் தான் எழுதுவது சரியாக இருக்காது என்று பழைய தலையங்கங்களையே வெளியிட்டு வந்தார்.
ஒரு நாள் மணியம்மையார் கவிஞரை அழைத்து “நாளை முதல் ‘விடுதலை’யை நிறுத்தி விடலாம் என்று இருக்கிறேன். அறிவிப்பு வெளியிட்டு விடு” என்று சொல்ல அதிர்ச்சியுற்ற கவிஞர் “ஏன் அம்மா? அவ்வாறு செய்ய வேண்டும்?” என்று கேட்க “பின் என்ன பழைய தலையங்கங்களையே போட்டுக்கொண்டு இருந்தால் தொண்டர்கள் சோர்வு அடைந்து விடுவார்கள். உன்னை எழுதச்சொன்னேன். நீ எழுதத் தயங்குகிறாய்? பின் பத்திரிகை நடத்தி என்ன பயன். நிறுத்தி விட வேண்டியது தான்” என்று சொல்ல அதன் பின் தாமே தலையங்கம் எழுதுவதாகச் சொல்லி அப்பணியைச் செய்து வந்திருக்கிறார்.
அம்மாவின் பண்பிற்கு மற்றோர் எடுத்துக்காட்டு. சென்னை புரசைவாக்கத்தில் கண் அறுவைச் சிகிச்சை யினை ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மருத்து வமனையில் செய்து கொண்டவரை கவிஞர் சென்று கண்டிருக்கிறார். “என்ன அம்மா இப்படி சொல்லாமல் வந்து மருத்துவ மனையில் இருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு அன்னையார் “டாக்டர் அறுவைச் சிகிச்சை செய்கிறார். நர்ஸ் மருந்து ஊற்றுகிறார். எனக்கு உணவு முதலியன கொடுப்பதற்குத் தங்கை மகள் உடன் இருக்கிறாள். நீ என்ன செய்யப் போகி றாய்! சரி வந்ததற்கு விடுதலையைப் படித்துக் காட்டி விட்டுப்போ” என்று கூறிவிட்டாராம். எவ்வளவு எளிமையான குணம் என்று பாராட்டாமல் இருக்க முடியாது.
இப்படி அம்மாவின் எளிமைக்கு இன்னும் பல சான்று காட்டலாம். மேலும் ஒன்றே ஒன்று. “விடுதலை” சம்பந்தம் இல்லத்திருமணம் மறுநாள் அம்மாவின் தலைமையில் நடைபெற இருக்கிறது. திடலில் பெரிய பந்தல் போட்டு விளக்கு அலங்காரத்துடன் தடபுடல் விருந்து ஏற்பாடுகள் பலமாக இருந்தன.
திருச்சியிலிருந்து மாலை அம்மா வந்து சேர்ந்தார் கள். பலத்த ஏற்பாடுகளைக் கண்டு அதிர்ச்சி. ஆசிரி யரை அழைத்தார்கள். “வீரமணி நாம் திருமணங்களை எளிமையாக நடத்தவேண்டும் என்று உபதேசம் செய்கிறோம். ஆனால் நம் திடலிலேயே இவ்வளவு ஆடம்பரமா? நாளை நான் வரப்போவதில்லை” என்று கூறி விட்டு ஷெனாய் நகர் சுந்தரவடிவேலு இல்லம் சென்றவரை ஆசிரியர் சென்று சமாதானம் செய்து அழைத்து வந்தார்கள்.
எளிமைக்கு மட்டுமல்ல; துணிச்சலுக்கும் தொண் டர்களை மதித்துப் போற்றுவதிலும் அம்மாவின் வாழ்வில் இடம் உண்டு.
1957இல் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் சிறைப் பட்ட வேளையில் திருச்சி சிறையில் இறந்த இரு தொண்டர்களின் உடலைக் கொடுக்காமல் சிறை நிருவாகம் அழிச்சாட்டம் செய்தபோது அன்னையார் சென்னை வந்து அமைச்சர்களிடம் பேசி இருவர் உடலையும் வெளிக்கொணர்ந்து காவிரிக் கரையில் புதைக்க முயன்றபோது, காவல்துறை அதிகாரிகுறிப்பிட்ட பாதை வழியேதான் செல்ல வேண்டும் என்று கட்டளையிட “முடியாது” என்று மறுத்துச் சாலையில் அமர்ந்து மறியல் செய்தவர் நம் தங்கத்தாய் மணியம்மையார். இது நடந்தது திராவிடர் கழக ஆதரவு பெற்ற காமராசர் ஆட்சியில்.
அதைப் போலவே பின்னால் திராவிடர் கழக ஆதரவு பெற்ற கலைஞர் ஆட்சியில் அம்மாவின் சாதனை நிகழ்வு இராவண லீலா நடத்தியது. தடையை மீறி இராவண லீலா நடத்த முயன்றபோது டில்லியில் இருந்த இந்திரா அரசு தமிழகத்தில் ஆட்சி செய்த கலைஞர் அரசை அதை எப்படியும் நடத்த விடாமல் தடுக்கும்படி நெருக்கடி கொடுத்தது.
தலைவர் கலைஞர் காவல்துறை ஷெனாயையும், துரையையும் அனுப்பி அம்மாவிம் பேசச் சொன்னார். அம்மாவிடம் வந்து பேசினர். அம்மா உறுதியாக இராவண லீலா நடைபெறும், இராம, லட்சுமணர் உருவங்களுக்குப் பெரியார் திடலில் எரியூட்டப்படும் என்று கூறிவிட்டார். எனவே அவர்கள் அம்மாவிடம் விடை பெற்றுச் செல்கையில், “அய்யாவாக இருந்தால், எங்கள் வேண்டுகோளை ஏற்றுப் போராட்டத்தை நிறுத்தியிருப்பார்” என்று சொல்ல, அம்மா நச்சென்று அவர்களிடம் சொன்ன பதில் “ஆமாங்க! அவர் தலைவர். அவர் சொன்னால் தொண்டர்கள் மீற மாட்டார்கள். நான் இயக்கத் தலைவியானாலும் தொண்டர் தான். நான் சொன்னால் எந்த அளவிற்கு கேட்பார்கள் என்று உறுதி சொல்ல முடியாது” என்று கூறிவிட்டார்.
மூன்றாவது நிகழ்ச்சி எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நடந்தது. தொண்டர் பொருட்டு அம்மா எந்த அளவிற்குப் பொங்கி எழுவார் என்று காட்டக்கூடியது. இந்திரா காந்திக்குக் கறுப்புக் கொடி காட்டச்சென்றபோது, மறைமலையடிகள் பாலத்தில் அன்னை, ஆசிரியர் உள்ளிட்டோரை கைது செய்தபோது வேனில் அமர்ந்திருந்தவர், வெள்ளைச்சாமி என்ற காவல் அதிகாரி தொண்டரை அடித்துக்கொண்டிருந்ததைக்கண்டபோது வேனில் இருந்து இறங்கி, அந்த அதிகாரியிடம் “ஏன் அடிக்கிறாய்!” என்று துணிவுடன் கேட்டபோது, அங்கு வந்த வால்டர் தேவாரம் அந்த அதிகாரியைக் கண்டிக்காது, ஒரு மாபெரும் இயக்கத் தலைவியாம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரைப் பார்த்து, அவரெல்லாம் அந்தப்பதவிக்கு வரக்காரணமாக இயக்கத் தலைவி அன்னையாரைப் பார்த்து
“மி ஷ்வீறீறீ sலீஷீஷீt ஹ்ஷீu” - “உங்களைச் சுட்டுக் கொல்வேன்” என்று மிரட்டியது கண்டும் மிரளாமல், அஞ்சாமல் துணிவுடன் இருந்தவர் அன்னையார். எளிமைக்கும், துணிச்சலுக்கும், அன்னைப் பண்புடன் இயக்கத் தோழர்களுக்குத்தோழர்நாகம்மையார்போல் வடித்துக் கொட்டிய, தாமே சமைத்துப் போட்ட ஒருதலைவியை வேறு எங்கும் காணமுடியாது. உலகி லேயே பகுத்தறிவு இயக்கத்திற்குத் தலைமையேற்ற ஒரே தலைவியை வேறு எங்கும் காணவியலாது.
அன்னையாரின் தொலை நோக்கத்தையும், அருட்கொடை உணர்வினையும் கூறாவிடில் இந்த உரை நிறைவு பெறாது.
தொலைநோக்கு என்பது, தனக்குப்பின் இந்த இயக்கம் நிலை பெறுவது யாரால் என்று கண்டுபிடித்து தமிழர்தலைவர்ஆசிரியர்வீரமணிதான்இயக்கத்தை வழிநடத்த, தந்தை பெரியாரை உலக மயமாக்க உகந்தவர் என்று கண்டறிந்த ஒன்று போதும் அன்னையாரின் பெருமை கூற! இயக் கத்தில் எவ்வளவோ மூத்த தலைவர்கள், சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் இருந்தனர். ஆயினும் அன்னையார் அதைக் கண்டு கொண்டாலும், இயக்கம் தழைக்க தந்தை பெரியாரின் தொண்டு சிறக்க ஆசிரியர் வீரமணியே தகுந்த வாரிசு என்று உயில் எழுதி வைத்தார்.
இன்னுமொரு சம்பவம். மருத்துவமனையில் இருந்த அம்மா பொதுக் குழுக்கூட்டத்திற்கு வந்து தாம் வகித்த பொறுப்பைத் துறப்பதாகவும், ஆசிரியரிடம் அதனை ஒப்புவிப்பதாகவும் மருத்துவமனையி லேயே எழுதி எடுத்து வந்த கடிதத்தை ஆசிரியர் ஒப்புக்கொள்ளாது கிழித்துப் போட்ட நிகழ்ச்சியும் உண்டு.
இப்படி எத்தனை, எத்தனையோ நிகழ்வுகள். எடுத்துச் சொல்லவும் ஆவல் தான். எனினும் கால நெருக்கடி கருதி இவ்வாய்ப்பு அளித்த தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக விளங்கிய முனைவர் ஏகாம்பரம், முனைவர் நெடுமாறன் அவர்களுக்கும் நன்றி கூறி இந்த அறக்கட்டளைப் பொழிவை நிறைவு செய்கிறேன்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பேராசிரியர் ந. சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு (4)
- பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு (3)
- பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு (2)
- பேராசிரியர் ந.சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு
- கருப்புச் சட்டைப் படை:
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நடத்தியவர்களை ‘‘குண்டர் சட்டத்தில்'' சிறையில் தள்ளுவது கண்டனத்திற்குரியது!
உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்புகளுக்கும் எதிரானது
உடனடியாக அவர்களை விடுதலை செய்க!
தமிழக அரசுக்கு தமிழர் தலைவர் வற்புறுத்தல்
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுசரித்த திருமுருகன் உள்ளிட்ட தோழர்களைக் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டனத்திற் குரியது. உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கும் விரோதமானது; விமர்சனம் செய்தாலே குற்றம் என்பதெல் லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தமிழ்நாடு அரசு உடனடி யாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் களை விடுதலை செய்யவேண்டும் என்று வற்புறுத்தி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நினைவு நிகழ்வாக, சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி, வணக்கம் தெரிவித்த மே 17 இயக்கத்தின் தலைவரான தோழர் திருமுருகனையும், அவரது சக அறப்போராளிகளான தோழர்கள் டைசன், இளவழகன், அருண்குமார் ஆகியவர் களையும் தமிழ் நாடு அரசு குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அடக்குமுறைப் பிரயோகத்தின் உச்சமாகும்! இது கண்டனத்திற்குரியது. கடந்த பல ஆண்டுகளில் இத்தகு நிகழ்ச்சிகள் நடத்தப்பட அனுமதி தந்தது எப்படி?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி நடந்துகொண்டார்?
ஈழத் தமிழர்களுக்காக கசிந்து, கண்ணீர் சிந்தி, பல வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்ட மறைந்த முதலமைச்சரும், அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதாவின் (‘‘அம்மாவின்’’) அரசு என்று கூறிக்கொண்டுள்ள இந்த தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசு இப்படி ஒரு யதேச்சதிகாரமான தோரணையில் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பது எவ்வகையிலும் நியாயம் அல்ல.
எதற்கெடுத்தாலும் ‘குண்டர் சட்டமா?'
அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள்மீதும் இதுபோன்ற அறப்போராளிகள்மீதும் குண்டர் சட்டம் ஏவுவது சட்ட துஷ்பிரயோகம் என்பதில் அய்யமில்லை.
சட்டத்தின் தலைப்பே ‘குண்டர் சட்டம்.’ அப்படி இருக்கையில் இப்படி அதீதமாகப் பயன்படுத்துவது தவறான நடவடிக்கை.
உச்சநீதிமன்றம் இதுபற்றி சில முக்கிய தீர்ப்புகளைத் தந்து, குண்டர் சட்டம் என்ற ரவுடிகளை அடக்கப் போடப்பட்ட சட்டத்தை ஒரு அரசு தனக்கு எதிராக அரசியல் விமர்சனம் செய்பவர்களையும், போராளிகளையும் இச்சட்டத்தின்கீழ் தண்டிப்பது எவ்வகையிலும் சட்டப்படியும், நீதிப்படியும் உரியதல்ல.
சட்டம் மீறுபவர்களை உரிய சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முன்வரட்டும், அதை விடுத்து, நாட்டில் எத்தனையோ சமூக விரோதிகள் ‘சுதந்திரமாக’ திரிவதும், அதேநேரத்தில் இப்படிப்பட்ட அறப்போராளிகள்மீது அச்சட்டம் பாய்வதும் நியாயப்படுத்த முடியாத அநியாயம்!
உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்
எனவே, நீதிமன்றங்கள் அரசின் இச்செயலைக் கண்டித்து ஆணைகளையும், தீர்ப்புகளையும் வழங்குவதற்கு முன்பே, விடுதலை செய்தால் தமிழக அ.தி.மு.க. தனது கவுரவத்தை நிலைநாட்டிட உதவும்.
எனவே, அவர்களை உடனே விடுதலை செய்வதே சாலச் சிறந்தது; அவர்கள் ‘‘சமூக விரோதிகளோ, குண்டர்களோ'' அல்ல!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
30.5.2017
சென்னை
30.5.2017
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பிஜேபி ஆட்சியின் மதவாத இந்துத்துவா போக்கை எதிர்த்து, கண்டித்து மே 30 மாலை சென்னை பெரியார் திடலில் மாபெரும் பொதுக் கூட்டம்
- திருச்சி - பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் 36 தீர்மானங்கள்
- மாட்டிறைச்சி உணவுக்குத் தடைபோடுவதா? ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
- கோபால கிருஷ்ண காந்தியை குடியரசு தலைவராகத் தேர்வு செய்ய வேண்டும் - கி.வீரமணி
- திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவின் முக்கிய தீர்மானங்கள்
‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலை மகளிர் உள்ளந்தோறும் சென்றடைய உழைப்பீர்!
திருச்சி: பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநில மாநாடு மகத்தான வெற்றி!
அரும்பாடுபட்ட கழக வீராங்கனைகள் அனைவருக்கும் பாராட்டு
தந்தை பெரியார் படத்தை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்பீர்!
‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலை மகளிர் உள்ளந்தோறும் சென்றடைய உழைப்பீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
கடந்த சனியன்று (மே 27) திருச்சியில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பில் நடத்தப்பட்ட ‘‘பெண் ணுரிமைப் பாதுகாப்பு மாநாடு’’ வெற்றிகரமான மாநாடு, கழகத்தின் எதிர்காலம் ஒளிமிகுந்ததாகும் என்பதை எடுத்துக்காட்டும் மாநாடு என்றும் குறிப்பிட்டு, இல்லந்தோறும் தந்தை பெரியார் படம் இடம்பெறவேண்டும்; தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ எனும் நூல் உள்ளந்தோறும் சென்றடையவேண்டும் என்றும், அதற்காக கழக மகளிரணி யினர், பாசறையினர் பாடுபடவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
கழகத்தின் எதிர்காலம் வெகுவாக ஒளிமிகுந்ததாகும்
திருச்சியில் கழக மகளிரணியும், திராவிடர் மகளிர் பாசறையும் இணைந்து, கடந்த சில மாதங்களாக எடுத்த தொடர்முயற்சிகள் காரணமாக, இவ்வாண்டு பிப்ரவரியில் திருவாரூரில் துவங்கிய எழுச்சி, திருச்சியில் 27.5.2017 நடைபெற்ற மாநில மகளிரணி கலந்துரையாடலிலும் சரி, அன்று மாலை திருச்சி உழவர் சந்தையில் ‘‘பஞ்சப்பட்டி சாவித்திரி’’ அம்மாள் நினைவரங்கத்தில் நடைபெற்ற ‘‘பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாடு - கருத் தரங்க’’த்திலும் சரி, 1200 கழக மகளிர் - பெரிதும் இளைய தலை முறை, நடுத்தர வயதினர் (மூத்தோர் எண்ணிக்கைக் குறை வாகவே இருந்தது) கலந்துகொண்டது ஒரு புத்தாக்கத்தையும், கழகத்தின் எதிர்காலம் வெகுவாக ஒளிமிகுந்ததாகும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாகவும் அமைந்தது! இது மிகையல்ல; யதார்த்தமான அனுபவ உண்மை.
பெண்களின் ஈடுபாடும், ஆதரவும்தான் என்பதை எவரே மறுக்க முடியும்?
எந்த அமைப்பானாலும், ஏன் கலைத்துறை போன்றவற்றில் கூட, அவை பரவலாகி, மக்களை ஈர்த்து வேர்ப்பிடித்து - எளிதில் வீழ்த்திட முடியாத அளவுக்குப் பிடிப்புடன் இருப்பதற்கான அடிக்கட்டுமானத்தின் பெரும்பகுதி பெண்களின் ஈடுபாடும், ஆதரவும்தான் என்பதை எவரே மறுக்க முடியும்?
திருச்சியில் வந்தவர்கள் அனைவரும் கொள்கைத் தங்கங்கள்; போராட்டக் களத்திலும், புது முறுக்கோடு இறங்கிட என்றும் தயாராக உள்ள வீராங்கனைகள் ஆவார்கள்!
காலையில் பெரியார் கொள்கைகளை வீச்சுடன் எடுத்து விளக்கி 35 முதல் 40 பேர் பேசினார்கள்!ஒவ்வொரு பேச்சும் ‘நறுக்குத் தெறித்த’ நல்ல சொல் அம்புகளாகப் பாய்ந்தன!
அவர்களின் தெளிவும், துணிவும் - உரை வீச்சில் பளிச்சிட்டது; அனைவரையும் வியக்க வைத்தது!
‘இல்லந்தோறும் பெரியார்!’
‘உள்ளந்தோறும் பெரியார்!’
தந்தை பெரியார் படம் ‘இல்லந்தோறும் பெரியார்!’ மக்கள் குறிப்பாக மகளிர் ‘உள்ளந்தோறும் பெரியார்’ என்ற ஒரு தனித்த முயற்சிதான் அவர்களின் தொடர் ஓட்டத்தின் தொய்வில்லா அடுத்த பணியாகும்!
‘பெரியார் தம் அருட்கொடை
அனைத்தும் மக்களுக்கே!’
‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலும், ‘பெண்களுக்குப் பெரியார் அறிவுரை’ நூலும், அழகுற - பெண்ணுரிமை பேணியத் தந்தை பெரியாருக்கு 1938 இல் ‘‘பெரியார்’’ பட்டமளித்தபோது கூறப்பட்ட காரண விளக்க வாசகம் கருத்துரைகள் - அழகுமிகு தந்தை பெரியார் படத்தையும் வீட்டுக்கு வீடு, அது கிராமம், நகரம், மாநகரம் என்றெல்லாம் பேதமிலா விநியோகத்தை - எளிய நன்கொடைகளைப் பெற்று, ஒருவகையான திண்ணைப் பிரச்சாரத் திட்டம் - ‘பெரியார் தம் அருட்கொடை அனைத்தும் மக்களுக்கே’ என்று தந்து சென்ற ஒப்பாரும் மிக்காருமிலாத தலைவர் அவர் என்ற கருத்தினை வலியுறுத்தி விளக்கிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பகுதிகளில் இப்பணி அரும்பணியாகிட வேண்டும்!
தொண்டறத்தைப்போல உற்சாகமளிக்கும் மாமருந்து வாழ்வில் எதுவுமே இல்லை என்பதை அப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்களால் மட்டுமே உணர்ந்திட முடியும்!
வற்றாத மகிழ்ச்சிதான், அதனால் நாம் பெறும் விளைச்சல்!
திராவிடர் மகளிர் பாசறை, மகளிரணி பொறுப்பாளர்களான மானமிகு செயல்வீராங்கனைகளான தோழர்கள் கலைச்செல்வி, செந்தமிழ்ச்செல்வி, உமா, இன்பக்கனி, தகடூர் தமிழ்ச்செல்வி, கிரேசி போன்றவர்களுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்த அனைத்துக் கழக கொள்கைத் தோழர்களான மகளிரணிப் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டு உள்ளடங்கிய ஒன்றுதான் என்பதைக் கூறத்தான் வேண்டுமா?
ஒவ்வொரு பகுதியிலும் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை முளைத்துக் கொண்டும், கிளைத்துக் கொண்டும் இருக்கவேண்டும்!
மாநாட்டு வெற்றிக்கு ஒத்துழைத்த திருச்சி மாவட்ட, நகர தோழர்களுக்குப் பாராட்டுகள்!
பிரச்சார களத்தையும், போராட்டக் களத்தையும் இரண்டு தளங்களாக்கி
‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’ என்ற பெருமிதத் துடன் பிரச்சார களத்தையும், போராட்டக் களத்தையும் இரண்டு தளங்களாக்கி விரைந்து இலக்கை நோக்கிய பயணத்தை இன்னும் வேகமாக முடுக்கி விடுங்கள் - மகளிரணித் தோழர்களே!
நெஞ்சம் வழியும் பாராட்டுகள்!
உங்களுக்கு எங்கள் நெஞ்சம் வழியும் பாராட்டுகள்! வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வாழ்த்துகள்!
அணிவகுப்பீர்!
பணி முடிப்பீர்!!
உங்கள் தோழன்,
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
30.5.2017
சென்னை
30.5.2017
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நடத்தியவர்களை ‘‘குண்டர் சட்டத்தில்'' சிறையில் தள்ளுவது கண்டனத்திற்குரியது!
- பிஜேபி ஆட்சியின் மதவாத இந்துத்துவா போக்கை எதிர்த்து, கண்டித்து மே 30 மாலை சென்னை பெரியார் திடலில் மாபெரும் பொதுக் கூட்டம்
- திருச்சி - பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் 36 தீர்மானங்கள்
- மாட்டிறைச்சி உணவுக்குத் தடைபோடுவதா? ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
- கோபால கிருஷ்ண காந்தியை குடியரசு தலைவராகத் தேர்வு செய்ய வேண்டும் - கி.வீரமணி
Subscribe to:
Posts (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...