Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

Monday, July 6, 2015

சங்கராச்சாரி முகமூடி கிழிகிறது!

சாட்சியைக் கொல்லப்போவதாக மிரட்டுகிறார்!
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- சமநீதி
அப்பட்டமான ஒரு கொலை! வலுவான சாட்சிகள்! அனைத்தும் இருந்தும் செல்வாக்கு, பணம், அந்தஸ்துக்கு முன் எதுவும் செல்லுபடியாகவில்லை!
துணிந்து நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முயற்சிக்கு நீதிமன்றத் தீர்ப்பு சவாலாக அமைந்தது. ஆனால், நீதியை நிலைநாட்ட அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு பிறழ்சாட்சி ரவிசுப்பிரமணியத்தின் மனுமூலம் வந்துள்ளது.

பொய் சாட்சி கூறிய குற்றம் தன்னை உறுத்த உண்மையைச் சொல்ல முற்படும் ரவி சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், அந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக போலீஸ் அதிகாரி பிரேம்குமார் இருந்தார். அப்பொழுது என்னிடம் பேச வழக்கறிஞர்கள், போலீசார் என அனைவரும் பிரேம்குமார் மீது இருந்த மரியாதையால் பயந்தனர். அதனால், நான் சங்கரராமன் கொலை வழக்கில் அப்ருவராக மாறி ஜெயேந்திரர்தான் சங்கரராமனை அப்பு மூலமாக தீர்த்துக் கட்டினார். அதற்காக அவர் ரவுடிகளுக்கு பணம் கொடுத்தார் என சாட்சியம் அளித்தேன். ஜெயேந்திரர் சார்பாக சுமார் 20 வழக்கறிஞர்கள் என்னை குறுக்கு விசாரணை செய்தார்கள். பிரேம்குமார் கொடுத்த தெம்பால் உண்மையை தைரியமாக கோர்ட்டில் எடுத்து சொன்னேன். துரதிர்ஷ்டவசமாக பிரேம்குமார் அவரது பணியில் நெருக்கடிக்குள்ளானதோடு, திடீரென இறந்தும் போய்விட்டார். அதன் பிறகு நிலைமை தலைகீழானது.
நான் சிறைக்குப் போய் சுமார் 7 வருடம் கழித்து மறுபடியும் என்னை சாட்சியம் அளிக்க அழைத்தார்கள். அப்பொழுது சிறைத்துறை டி.அய்.ஜி.யாக இருந்தவர் ராமச்சந்திரன். அவர் ஜெயேந்திரருக்கு மிகவும் நெருக்கமானவர். ராமச்சந்திரனும் போலீஸ் ஏட்டு கண்ணன், ரவுடி கதிரவன் ஆகியோர் என்னை ஜெயேந்திரருக்கு எதிராக சாட்சி சொல்லாதே என மிரட்டினார்கள். அதிலும் கதிரவன், ராமச்சந்திரன் ஆதரவுடன் சிறைக்கு உள்ளே வந்து, எனதுஅறையில் வைத்து மிரட்டினான். நான் வேறு வழியில்லாமல் பிறழ் சாட்சியானேன். அதேபோல் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் என்னை பிறழ் சாட்சியாக்கினார்கள்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உட்பட குற்றவாளிகள் அனைவரும் விடுதலையானார்கள். அதற்குப் பிறகு என்னை 2013ஆம் ஆண்டு ஜெயிலில் இருந்து விடுதலை செய்தார்கள். சங்கரராமன் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த தேவதாஸ் உட்பட அனைவரும் நீதியை வளைத்து விலை பேச, அதன் மூலம் ஜெயேந்திரர் பெற்ற விடுதலை என் மனதை உறுத்தியது. மறுபடியும் நடந்த உண்மைகளை நான் சொன்னால் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலாவது ஜெயேந்திரருக்கு தண்டனை கிடைக்கும் என யோசித்தேன். ஜெயேந்திரரின் எடுபிடிகளாக இருந்த ரவுடிகள் அப்பு, கதிரவன் ஆகியோர்மரணம் அடைந்துவிட்டார்கள்.
சங்கரராமன் வழக்கில் சங்கரமடத்திற்கு சாதகமாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர் தேவதாஸை போல் இல்லாமல் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் விஜயராஜி மிகவும் நேர்மையாகவும், துணிவுடனும் ஜெயேந்திரரின் பணத்திற்கு விலைபோகாமலும் செயல்படுகிறார்.
முதல்வர் அம்மாவின் ஆட்சியில் உண்மையை சொல்ல நினைக்கும் எனக்கு விஜயராஜி பாதுகாப்பாக இருப்பார் என்பதால்நான் உண்மையைச் சொல்ல முயன்றேன். அதை தெரிந்துகொண்ட ஜெயேந்திரரும், மடத்தில் செல்வாக்காக உள்ள சுந்தரேச அய்யரும், போலீஸ் கண்ணனும் என்னை மிரட்டினார்கள். கடந்த 8ஆம் தேதி ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் அரசு வழக்கறிஞர் விஜயராஜிடம் நான் எனது சாட்சியத்தை மாற்றிக் கூற விரும்புகிறேன் என ஒரு மனு கொடுத்தேன். அதை கவனித்த சங்கர மட மேலாளர் சுந்தரரேச அய்யர், உன்னை பெரியவா பார்க்கணும்னு சொல்றா மடத்துக்கு சாயங்காலம் வந்துட்டு போ என்றார். போகாவிட்டால் ரவுடிகளை அனுப்புவார்கள் என்பதால் அன்று மாலை ஆறரை மணிக்கு சங்கர மடத்திற்குச் சென்று ஜெயேந்திரரை சந்தித்தேன்.
நீ என்ன ராதகிருஷ்ணன் கேஸில் எனக்கெதிரா சாட்சி சொல்லப்போறியா? அந்த கவர்மெண்ட் வக்கீலுக்கிட்ட பெட்டிசன் கொடுத்தியா? எனக் கேட்டார். நான் ஆம் என்று சொன்னேன். உனக்கு சங்கரராமன் கதிதான் ஏற்படும். உன்ன குடும்பத்துடன் சேர்த்து ஒழித்து விடுவேன் என ஜெயேந்திரர் மிரட்டினார். அப்போது அவருடன் இருந்த சுந்தரேச அய்யர், பெரியவா ஜெயேந்திரரை பகைத்துக்கொண்டு இந்தியாவில் எங்கும் நீ இருக்க முடியாது. சென்ட்ரல் கவர்மெண்டே பெரியவாளின் ஆசிர்வாதத்தில்தான் இயங்குது என மிரட்டினார். அந்தநேரம் அங்கே வந்த போலீஸ் கண்ணன், இப்பதான் நான் ஓய்வு பெற்ற சிறைத்துறை டி.அய்.ஜி.யான ராமச்சந்திரனை பார்த்துவிட்டு வருகிறேன். அவர், சங்கரமடத்திற்குச் சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். ராமச்சந்திரனுக்கு ரவுடிகளையும், போலீசாரையும் நன்கு தெரியும். பெரியவாளுக்கு எதிராக சாட்சி சொன்னா, நீ க்ளோஸ் என மிரட்டினார் என்றார்.
மத்தியில்ஆளும் பா.ஜ.க.வுடன் நெருக்கமாக உள்ள ஜெயேந்திரர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறீர்களா என்று கேட்டதற்கு, அம்மா நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன். அவ்வளவுதான் என்று அச்சத்துடன் தன் உள்ளக் குமுறலைக் கொட்டியுள்ளார் ரவி சுப்பிரமணியம். அவரது அச்சம் அர்த்தமுள்ளது. காரணம், ஒரு தடவை ஜெயேந்திரர், 20 வயது பெண்ணை வன்புணர்ச்சி செய்ய வற்புறுத்த, அப்பெண் தப்பித்து வெளியில் ஓட, தன்கதை நாறிவிடும் என்று அதை அப்படியே அமுக்க, தனக்கு வேண்டிய ஆஸ்பத்திரி உரிமையாளர் மூலம் அடியாட்களை அனுப்பி அப்பெண்ணை லாரியேற்றிக் கொன்றவர். (ஆதாரம்: நக்கீரன் வெளியிட்ட ஜெயேந்திரர் வாழ்வும் வழக்கும்) எனவே, தமிழக முதல்வர், ரவி சுப்பிரமணியத்திற்கு பாதுகாப்பு அளித்து, உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா அழிந்துபோக வேண்டும் என்று யாகம் நடத்தியவர் அல்லவா ஜெயேந்திரர். அவருக்குப் பாடம் புகட்ட வேண்டிய கடமையும் முதல்வருக்கு உண்டு. மத்திய அரசின் நிர்பந்தத்திற்கு ஆட்படாமல், முன்னிலும் தீவிரமாய் வழக்கைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே தமிழக மக்கள் விருப்பம்.

Friday, July 3, 2015

பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்?

பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்? 
தொடரும் துரோகக் கும்பலின் புரட்டுக்கு மறுப்பு
அகநாழிகை எனும் அடிவருடி இதழ் ஒன்று ம.பொ.சி.யின் விட்ட குறை தொட்ட குறையாக ம.பொ.சி.யாரின் பேத்தி (தி.பரமேஸ்வரி என்பவர்), இதோ இன்றும் எங்கள் துரோகம் தொடர்கிறது என்று சொல்லும் வகையில் பெரியாரைக் கொச்சைப்படுத்தி எழுதிய ஒரு கட்டுரையை கடந்த மார்ச் மாத இதழில் வெளியிட்டுள்ளது. அவர் காலத்தில் வாழ்ந்த மற்ற பெரியார்களெல்லாம் ஒதுக்கப்பட்டு, ஈ.வெ.ரா பெரியார் என்னும் ஒருவருடைய அதிகபட்ச செயல்பாடுகளையும் மீறிய ஒரு பெரும் பிம்பத்தைக் கட்டமைத்து, ஆதரவானதோர் அலையைத் தொடர்ந்து உருவாக்கி வரும் ஒரு கூட்டத்தார்,

தங்கள் எண்ணங்களை அந்தப் பிம்பத்தின் மீது ஏற்றித் தங்களை ஈடேற்றிக் கொள்கிறார்களோ? என்று தோன்றுமளவு ஈ.வெ.ரா பெரியார் பற்றிய மிகை பிம்பங்களைத் தோற்றுவிக்கும் எழுத்துகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு படிக்கக் கிடைக்கிறது எனத் தொடங்குகிறது அக்கட்டுரை!

பெரியாரின் சமகாலத் தலைவர்கள் என்று இவர் குறிப்பிடுவது யாரை?
அம்பேத்கரும், காந்தியும், சர்.ஏ.டி.பன்னீர் செல்வமும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் தான் அவரது சமகாலத் தலைவர்கள்! சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி போன்றவர்கள் பெரியாரைத் தனது தலைவராக ஏற்றுகொண்டவர்கள் அல்லவா? தனது தோளுக்கிட்ட மாலையை பெரியாரின் காலுக்கிடுகிறேன் என்று சொல்லி, மேடையில் இருந்த பெரியார் படத்திற்கு இட்டு அவரை நீதிக்கட்சியின் தலைவராக்கி அழகு பார்த்தவர் அல்லவா திரு.பன்னீர் செல்வம்? ஒருவேளை தன் தாத்தாவைத் தலைவராக நினைத்து இந்த வரிகளை அவர் எழுதியிருப்பாரோ? பெரியார் தன் 84ஆவது பிறந்தநாள் மலரில் (1962) எழுதிய ஒரு கட்டுரையில் தாசி என்ற சொல்லைப் பயன்படுத்தியதைக் கண்டுபிடித்த கட்டுரையாளர் இப்படி பல இடங்களில் பெரியார் பேசி வந்ததாக குறிப்பிட்டு பெண்களின் நிலைகுறித்து தீவிரமாகச் சிந்திக்கக்கூடிய ஒரு மனிதர், பெண்களை இழிவாகக் குறிக்கும் சொல்லாடல்களை எப்படி ஒரு கேள்வியுமின்றி மிக இயல்பாக தன் பேச்சுகளில் பயன்படுத்தியிருக்க முடியும்? என்று கேட்கிறார். பெரியார் வாழ்ந்த காலத்தில் தாசி என்கிற சொல்தானே புழக்கத்தில் இருந்தது! அன்றைக்கு தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டத்தைத் தமிழகத்திலே கொண்டுவரக் காரணமாக விளங்கியவரே தந்தை பெரியார்தானே!
மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார்கூட தாசிகளைப்பற்றி தான் எழுதிய நூலுக்கு தாசிகளின் மோசவலை என்றுதான் பெயரிட்டார்.
அந்தப் பெயரைப் பயன்படுத்தியதால் அம்மையார் அவரையும் பெண்ணியத்திற்கு எதிரானவர் என பட்டியலிடுவாரோ?
1962இல் வெளியான அதே பெரியார் பிறந்தநாள் மலரில், ம.பொ.சி.யாரின் கட்டுரை ஒன்றும் வெளிவந்திருக்கிறது. பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் மாற்றுக் கட்சியினராலும், போற்றிப் புகழத்தக்க மாண்புடையவர். கட்சி வேறுபாடு காரணமாக மட்டுமல்லாமல், கொள்கை வேறுபாடு காரணமாகவும், அவருக்கு நெடுந்தொலைவில் உள்ளவன். எங்கள் இருவருக்கும் நடுவிலுள்ள இடைவெளி எளிதில் கடக்க முடியாததாகும். ஆயினும், பொதுவாழ்க்கையில் அவர் கடைபிடித்துவரும் நேர்மை, கொள்கையில் காட்டிவரும் உறுதியான மனப்பான்மை காரணமாக அவரிடம் எனக்குப் பெருமதிப்புண்டு என குறிப்பிட்டிருந்ததை பேத்தியார் படிக்கவில்லையா?
பெண்ணியம் குறித்த தெளிவான தொடர்ந்த சிந்தனை, வாசிப்பு பெரியாரிடம் இல்லை என்கிறார் இந்த மேதாவி! பெண்கள் மணவிலக்குப் பெறவும், விதவைகளுக்கு மறுமண உரிமை கோரியும் 1929லேயே செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் இயற்றியவர் பெரியார். பெண்களுக்கு ஆண்களைப்போலவே சொத்துரிமை, வாரிசுரிமை ஆண்களைப்போலவே எந்தத் தொழிலையும் செய்வதற்குச் சமஉரிமை, பெண்களைச் சட்டசபைகளுக்கும், நகர சபைகளுக்கும் தேர்ந்தெடுத்தல் போன்ற உயரிய தீர்மானங்களை நிறைவேற்றி அதற்காக களம்கண்டவர் பெரியார்.
பெண்களைப் போகப்பொருளாக, வெறும் பிள்ளை பெறும் எந்திரமாக நடத்தி அடிமைப்படுத்துவதை ஒழிக்க நினைத்த பெரியார்தான், பிள்ளை பெறும் எந்திரமா பெண்கள்? என வினா எழுப்பி, பெண்களே! தேவைப்பட்டால் கருப்பையை அகற்றவும் தயாராகுங்கள் என்று எச்சரித்தார். அதன் தத்துவார்த்தத்தைக் கூட புரிந்துகொள்ளாத கத்துக்குட்டிகள் கர்ப்பப்பைக்கு மருத்துவ விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள்! சேரமாதேவி குருகுல விடுதியில் பிராமணர், பிராமணரல்லாதாருக்கு இருந்த தீண்டாமையில் தீவிரம் காட்டிய பெரியார், கொடுமைகளில் நலிந்து கொண்டிருக்கும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என யாரோ எழுதியதாகச் சுட்டிக்காட்டி இதையே பெரியாரின் பெண்ணியத்துக்கும் பொருத்திப் பார்க்கலாம் என்று எழுதுகிறார்.
பார்ப்பன ராஜாஜி கூட்டத்திற்குக் கைத்தடியாக இருந்து தமிழினத் துரோகியாக வலம் வந்த ம.பொ.சி பரம்பரையில் பிறந்து பார்ப்பனர்களுக்காக பேனா பிடிக்கும் அடிவருடிகளுக்கு பெரியாரின் சேரமாதேவி குருகுலப் போராட்டம் எரிச்சலைத் தருவதில் வியப்பில்லை. பெரியார் மணியம்மை திருமணம் பற்றிக் குறிப்பிடுகையில் 30 வயதுப் பெண்ணின் உணர்வையும், மன நிலையையும் சற்றும் சிந்தியாமல், சேர்த்து வைத்திருந்த பொருளே குறியாக (அதை அவர் இயக்கத்திற்காகவே செய்திருப்பினும்கூட) பெண்ணுணர்வை ஒரு பொருட்டாகவே கருதாத ஈ.வெ.ரா.வை எப்படி பெண்ணிய சிந்தனைவாதியாக ஏற்றுகொள்ள முடியும் எனக் கேட்டு அண்ணாவையும் துணைக்கு அழைத்திருக்கிறார்?
பேரறிஞர் அண்ணா அவர்களே அதற்குப் பதிலளித்துவிட்டார். எனக்கு இன்றைக்கு இருக்கும் உடல் உபாதைகளுக்கு மேலாக அன்று பெரியாருக்கு இருந்தது. மணியம்மையார் போன்று ஒருவர் கிடைத்திராவிட்டால் பெரியார் இத்தனை நாட்கள் வாழ்ந்திருக்க முடியாது என்று சொல்லி வருந்தினார்.
அன்னையார் மீது மிகவும் கரிசனப்பட்டு பெண்ணுணர்வை ஒரு பொருட்டாகவே கருதாத ஈ.வெ.ரா. வை என்று எழுதியிருக்கும் சகோதரியாரே! இந்தத் திருமணத்தைப்பற்றி அன்னை மணியம்மையார் என்றைக்கேனும் வருந்தியதற்கான செய்தி உண்டா? மாறாக, பொது வாழ்கைக்காக தன் வாழ்க்கையையே அழித்துக் கொண்ட மெழுகுவர்த்தி அல்லவா அவர்?
ஈ.வெ.ரா.வுக்கு பெரியார் பட்டம் எங்கு கொடுக்கப்பட்டது? யாரால் கொடுக்கப்பட்டது? அப்படியான என்ன கருத்தாக்கங்களை அல்லது நன்மைகளை அவர் பெண்களுக்குச் செய்திருக்கிறார்? என்பது பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை என்கிறது கட்டுரை.
13.11.1938இல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா அவர்களுக்கு பெரியார் என பட்டம் வழங்கிய செய்தி 1938 நவம்பர் 20ஆம் தேதியிட்ட குடிஅரசு இதழில் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள், செய்ய இயலாமல் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரும் இல்லாமையாலும், அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது என்கிற தீர்மானமும், கணவனை இழந்த பெண்களின் துயர் நீங்க மாதர் மறுமணத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புரட்சிகர தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும், இறுதியில் தீர்மானங்களை விளக்கியும், தமிழ்ப்பெண்கள் நிலைமையை விரித்தும் தோழர் ஈ.வெ.ரா சொற்பொழிவாற்றினார் என்றும் குடிஅரசு பதிவு செய்துள்ளது. இப்படி, சரியான வரலாற்று ஆவணங்கள் இருக்கும்பொழுதே ஆதாரம் ஏதும் இல்லை என முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மூடி மறைக்க முயற்சித்திருக்கிறார் அம்மணி!.
பெரியார் இயக்கத்தின் கீழே ஒரு அறிஞனோ, எழுத்தாளனோ, கவிஞனோ உண்டா? உள்ளவர்கள் எல்லாம் நாலாம்தர பேச்சாளர்கள்!. அய்ந்தாம் தர அரசியல்வாதிகள்! என நிதானமிழந்து பேனாவை நகர்த்தியிருக்கிறார். அம்மையார் சொல்லும் அய்ந்தாம்தர அரசியல்வாதிகளான அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரிடத்தில் பதவி சுகம் தேடி அலைந்தவர் யார் என்பதை நாடு அறியும். ம.பொ.சியார் தன் தலைக்கு மேலே நாற்காலியைத் தூக்கிக்கொண்டு அண்ணா தம்பி வந்திருக்கேன்! அண்ணா தம்பி வந்திருக்கேன்! என இறைஞ்சுவது போல் தமிழகப் பத்திரிகைகள் போட்ட கார்ட்டூன்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
ம.பொ.சியார் மறைந்து பல ஆண்டுகள் ஆகியும் அவரது துரோகம் மட்டும் தொடர்கதையாகிவிட்டது.
- கி.தளபதிராஜ்

Wednesday, February 4, 2015

யார் இந்த “மண்ணுருண்டை மாளவியா?


இந்திய அரசின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருது வழமையாக குடியரசு நாளான ஜனவரி 26இல்தான் - முதல் நாள் இரவு அறிவிப்பார்கள்.

ஆனால் இம்முறை - பிரதமர் மோடி அரசால், மாற்றப்பட்டு, வாஜ்பாயின் 90ஆவது பிறந்த நாளில் அவருக்கு வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.

(அவர் நீண்ட காலம் உடல் நலக் குறைவுடன் உள்ளதாக செய்திகள் வரும் நிலையில் அவர் உடல் நலம்தேற _ மனிதநேய அடிப்படையில் - வாழ்த்துகிறோம் - அவருக்கு வழங்கியது  எந்த அளவுக்குச் சரி என்பதை ஒருபுறம் நாம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறோம்).

அவருடன் இணைந்து மற்றொருவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பண்டிட் மதன்மோகன் மாளவியா; இவர் உத்தரப்பிரதேச காசிப் பகுதியைச் சார்ந்த உயர்ஜாதி _ பார்ப்பனர் (வாஜ்பேயும் உயர்ஜாதி பார்ப்பனர்தான் _- வாஜ்பேயம் என்ற யாகத்தை நடத்த உரிமை பெற்ற உயர் ஜாதியின் உயர் பரிஷத் இந்து சனாதன மதப்படி).

இன்றைய தலைமுறையினரில் பலருக்கு பண்டித மதன் மோகன் மாளவியா யார் என்றே தெரிந்திருக்காது. தெரிய வாய்ப்பில்லை.

இவரது 152ஆவது பிறந்த நாளையொட்டி இவருக்கு மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசால் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேரன் கூறுகிறார்!
19ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒருவருக்கு 21ஆம் நூற்றாண்டில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது!

இவர் ஹிந்து மஹாசபா என்ற சனாதன மதத்தைப் பரப்ப, பாதுகாக்கவே ஒரு அமைப்பை 1915இல் நிறுவியவர்.

RSS என்ற அமைப்புக்கு முன்னோடி இந்த ஹிந்து மகாசபை _- அதன் பெயர் பச்சையாக, வெளிப்படையாகத் தெரிவதை மறைத்து, ஏதோ சேவைக்காகவே தோற்றுவிக்கப்பட்ட தேசிய அமைப்பு என்ற ஒரு உருமாற்றத்தை புனே சித்பவன் -பிரிவு பார்ப்பனர் டாக்டர் ஹெட்கேவாரால், ஹிந்து மஹாசபை தோற்றுவிக்கப்-பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு _ 1925இல் ஆர்.எஸ்.எஸ். உண்டாக்கப்பட்டது. அதே நோக்கத்தோடு!

பண்டித மதன்மோகன் மாளவியா என்ற ஹிந்து சனாதனி _- கீழ்க்கண்ட அமைப்பு-களுடன் அதிக தொடர்பு கொண்டவர்.
அ) பிரக்ய ஹிந்து சமாஜ்.

ஆ) பாரத் தர்ம மகாமண்டல்.

இ) சனாதன தர்ம மஹாசபா போன்ற மத அமைப்புகளுடன் இணைந்து, வேத வைதிக சனாதனத்தைப் புகுத்துவதை தமது வாழ்நாள் பணியாகச் செய்தவர்.
இவரது சனாதன உணர்வு எவ்வளவு தீவிரம் என்றால் இவர் லண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் (1930) கலந்து கொள்ளச் சென்ற போது, ஓர் சனாதன ஹிந்து - கடல் கடக்கக் கூடாது என்ற வேத அய்தீகத்திற்கு மாற்று கண்டுபிடித்து (!) - ஒரு பிடிமண்ணை எடுத்து உருண்டையாக்கி, அதை எடுத்துக் கொண்டே சென்று வெளிநாட்டில் தங்கினால், சொந்த மண்ணிலேயே இருப்பதாக அர்த்தம் என்று வியாக்கியானம்  கூறிக் கொண்டு, கப்பலில் மண் உருண்டையுடன் சென்றவர். எனவே இவரை அக்காலத்தில் மேடைகளில் பேசும்போது மண்ணுருண்டை மாளவியா என்று அழைப்பது வழக்கம்.

(பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போது மாளவியாவைப் பின்பற்றுவதில்லை!)
இந்நாட்டின் பாரத ரத்னமாகிய (?) இவரின் மிகப் பெரிய சாதனை _- காசி ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவியது.

பல்கலைக்கழகம் நிறுவியது எல்லோருக்கும் கல்வி தர என்றால், அதற்கு ஏன் ஹிந்து பல்கலைக்கழகம் என்று பெயர் இட வேண்டும்? இதன் விளைவாக அதே உ.பி.யில் அலிகார் என்ற இடத்தில் இஸ்லாமியர்களுக்காகப்  பல்கலைக்கழகம் ஒன்றும் ஏற்பட்டது!

நம் மக்களின் ஒருமைப்பாடு பட்டபாடு இது! கல்விகூட மதக் கண்ணோட்டத்துடன் என்பதே இந்த நாட்டின் தனிச் சிறப்பு!

ஹிந்து மதத்தின் மிக முக்கிய உயிர் நாடியான சனாதன தர்மத்தின் முக்கியக் கூறான வர்ணாஸ்ரம தர்மம் அதாவது ஜாதி அமைப்பு ஒழியக் கூடாது; நிலைத்து நிற்க வேண்டும் என்று 1929 மே முதல் வாரத்தில் சென்னைக்கு வந்தும், அதன்பின் திருவிதாங்கூர், கொச்சி பகுதிகளிலும் சென்று தீவிரமான சனாதனக் கருத்துகளைப் பரப்பியவர்.

சென்னையில் 1929 மே முதல் வாரத்தில் வந்து பேசிய பண்டித மதன்மோகன் மாளவியா. ஜாதியை ஒரு போதும் ஒழிக்க முடியாது என்றார்!

1. ஜாதி தர்மம் என்பது ஹிந்து தர்மம் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையிலேயே கூறும் தர்மம்!

2. தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக்கம், இந்த வேண்டாத வேலையில் -_ ஜாதி ஒழிப்பில் ஈடுபடுகிறது; அதனை முளையிலேயே இங்குள்ளவர்கள் கிள்ளி எறிய வேண்டும்.
(இன்று சுயமரியாதை இயக்கம் உலகம் முழுவதும் பரவியுள்ள 89 ஆண்டு கால இயக்கம் என்பது கல் போன்ற உண்மை).

3. கோவில்களில் எல்லா  இடங்களிலும் நுழைய வேண்டும் என்று கூறுவது தவறு, எதனால் பிரச்சினைகளும், போராட்டங்களும் ஏற்படுகின்றன என்றால், யார் யார் (எந்தெந்த ஜாதிக்காரர்) எங்கெங்கே, எதுவரை செல்லலாம் என்று நன்கு விளம்பரப்படுத்தி, அறிவிப்புச் செய்யாததாலேயே ஏற்பட்ட தீய விளைவு அது என்று கூறி, ஜாதிமுறைகளை நியாயப்-படுத்தினார்.

4. குழந்தை மணம் (பால்ய விவாஹம்) தடை பற்றி விவாதம் எழுந்தபோது, குழந்தை மணம் தேவை என்று அழுத்தந் திருத்தமாகக் கூறி வாதாடியவர் பண்டித மதன்மோகன் மாளவியா.

இவரை 1929 மே முதல் வாரம் (8.5.1929) கோட்டயத்தில் நடந்த S.N.D.P. யோகம் என்ற சிறீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபையார் நடத்திய மாநாட்டிற்கு அழைத்துப் பேசச் சொன்னபோது, அவர் ஜாதியை ஒழிக்க முடியாது; அது வீண் வேலை, தீண்டாமைக்கு ஹிந்து சாஸ்திரங்களில் இடமில்லை என்று கூறியதோடு, கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்-களையும் தாய் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்ப சுத்தி மூலம் அழைத்து வர வேண்டும்; வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பேசியபோது அங்கே கூடியிருந்தோர் பொறுமை இழந்து, எதிர்க் கேள்வி கேட்டனர்!

அவர்கள் ஹிந்து மதத்திற்குத் திரும்பினால் எந்த ஜாதியில் அவர்கள் வைக்கப்படுவார்கள் என்ற கேள்விகள் கேட்டபோது, மாளவியா பதில் அளிப்பதைத் தவிர்த்தார்! கீதை சொல்லும் குணகர்மப்படி சிறந்தவர்களை உயர் ஜாதியில்  வைப்பார்களா என்று கேட்டனர்.

வைதீக சனாதனிகளும் இவரது குறிப்பிட்ட அளவு தீண்டாமை எதிர்ப்புப் பேச்சைக்கூட ஏற்காமல், எதிர்த்தனர்.

சென்னையில் திரும்பி வந்துபேசும் போது, மதராஸ் சாஸ்திரிகள் ஆன பார்ப்பனர்-களிடம் வேதத்தில் தீண்டாமைக்கான சுலோகங்கள் இல்லை என்று கூறி மாளவியா சில சுலோகங்களையும் கூறினார். மதராஸ் சாஸ்திரிகளோ அதை மறுத்து எங்களிடம் ஆதாரம் உண்டு. வேதம் சனாதன மதம் தீண்டாமையைக் கூறியுள்ளது என்று பதில் கூறினர்.

ஆதாரம் காட்ட  முடியுமா உங்களால் என்று இந்தப் பார்ப்பனர்களை அவர் கேட்க, அவர்கள் அச்சிட்ட சமஸ்கிருத வேத சாஸ்திர புத்தகங்களைக் கொண்டு வந்து காட்ட, இவர் வேறு வழியின்றி, அடுத்து எப்படியிருந்தாலும் இப்படிப்பட்ட மக்களிடம் பரிதாபம் காட்ட வேண்டாமா? என்று அய்யோபாவம் ஆர்கியுமெண்டைப் பேசி, பின்வாங்கினார்.

5. சமஸ்கிருதத்தைப் பொது மொழியாக்கு வதற்குப் பதிலாக ஹிந்தியைப் பொது மொழியாக வைக்க வேண்டும் என்று (ஒரு தந்திரமாக) பேசியவர்.

மேற்காட்டிய அத்துணையும் அந்தக் கால 1929 ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளன _- குடிஅரசு -”Revolt’ ஏடுகளில் இவரது பேச்சுகளையும் -_ கருத்துகளையும் மறுத்து பல கட்டுரைகள் வெளிவந்து விளாசித் தள்ளியுள்ளனர் _ ஆதாரப்பூர்வமாக! உ.பி.யைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற பார்ப்பன நீதிபதியே இன்று அவரது கருத்தாக (இணையத்தில்) வாஜ்பேயிக்கும், மதன்மோகன் மாளவியாவுக்கும் பாரத ரத்னா; விருது அறிவித்தது எவ்வகையிலும் ஏற்கக்கூடியது அல்ல என்று அறிக்கை விடுத்துள்ளார்!
எனவே,

1. இரு விருதுகளும், இரு பார்ப்பனப் பெரு மக்களுக்கு,

2. ஜாதி வர்ண தர்மக் காப்பாளர்களுக்கு,

3. சனாதனப் பாதுகாவலர்களுக்கு,

4. மக்களின் ஒருமைப்பாட்டை உடைத்து - மத அடிப்படையில், ஜாதி அடிப்படையில், அவர்களை வைத்திருப்பது நீடித்து நிலைத்து இருப்பதற்கு.

5. மதமாற்றங்களுக்கு முன்னோடித்தனத்தின் சன்மானம் - இத்தியாதி! இத்தியாதி.

காந்தியைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ்.-காரரான நாதுராம் கோட்சே என்றால், கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல, அவர் இந்து மஹா சபையைச் சேர்ந்தவர் என்று வெகு சாமர்த்தியமாக பிஜேபிகாரர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் கூறுவதுண்டு.

அப்படியே பார்த்தாலும் காந்தியாரைப் படுகொலை செய்த ஹிந்து மஹா சபையைத் தோற்றுவித்த மதன்மோகன் மாளவியாவுக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கலாமா? படுகொலைக்குப் பரிசு பாரத ரத்னாவா?

மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசின் ஆறு மாத நிறைவு எத்தனை சாதனைகளைக் குவிக்கிறது -  பார்த்தீர்களா? _ புரிந்து கொள்ளுங்கள்!

இளைஞர்களே, இளைய தலைமுறையாக பழைய வரலாற்றுச் சுவடுகளை உற்று நோக்கி உண்மையை உணருங்கள்!

ஏமாந்தவர்களாக இனியும் இரோம் என்று விழிப்புற்று எழுக! எழுகவே!!

கி.வீரமணி,
ஆசிரியர்

-----------------------

பிப்ரவரி 01-15


Monday, January 12, 2015

தருண் விஜய் தமிழ்ப் பற்று...

எச்சரிக்கை

http://www.unmaionline.com/new/104-unmaionline/unmai-2014/september/2280-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81.html

உத்தரகாண்ட்
தமிழ்ப்
பற்று...
தமிழ் நாட்டைக்
கைப்
பற்று!
அதற்கான
நோக்கம்
அவ்வளவுதான்
தலைவர்களே!
******
அவசரப் பட்டு
அவரை
அழைத்து
அவர்களுக்கான
தேர்தல்
பிரச்சாரத்திற்கு
ஏற்பாடு
செய்து...

இன்னும் ஒருமுறை
எங்கள்
தமிழர்களை
இளிச்சவாயர்களாக்கி
ஏமாற
விடாதீர்கள்!
***
வள்ளுவருக்குப்
போட்டிருந்த
நூலைக்
கழற்றவே
நூற்றாண்டுகள்
ஆயின!
காவியைப்
பூச
விட்டால்...
கழுவ
கனகாலம்
ஆகும்
தலைவர்களே!
***



ஜனவரி 16-31



Saturday, January 3, 2015

ஊடகங்களுக்கு முக்கியம் நடிகர்கள்தான் - நோக்கியா அல்ல!


தமிழ்நாட்டின் நோக்கியா ஆலை மூடப்படு வது இந்தியாவின் தொழில் முதலீட்டை எப்படியெல்லாம் பாதிக்கும் என்று இந்த கட்டுரை விவரிக்கிறது.

ஆனால் இதில் நேரடியாகவும் உடனடியாகவும் பாதிக்கப்படும் தமிழ் நாட்டில் இவ்வளவு முக் கியத்துவம் வாய்ந்த பிரச்சினை  இது குறித்து தேவைப்படும் அளவுக்கு பெரிதாக எந்தக் கவ லையோ, விவாதமோ நடக்கவே இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டின் தமிழ் மொழியின் ஊட கங்கள் (செய்தித்தாள், சஞ்சிகைகள், 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சி கள் மற்றும் வானொலி) இவ்வளவு பெரிய மாநி லத்தின் தொழில்துறை, தொழிலாளர் வாழ்க் கையை நேரடியாக பாதிக் கும் பிரச்சினை குறித்து எவ்வளவு நேரம் ஒதுக்கி செய்தி வெளியிட்டன என்று நீங்கள் ஆராய்ந் தால் தமிழ்நாட்டின்/ தமிழ் மொழியின் ஊடகத் துறையின் உண்மையான பிரச்சினை என்ன என்று நீங்கள் தெரிந்து கொள் ளலாம்.

குறிப்பாக நடிகர் விஜயின் கத்தி மற்றும் ரஜினிகாந்தின் லிங்கா ஆகிய இரண்டு திரைப் படங்களுக்கு தமிழ் நாட்டு/தமிழ்மொழி ஊடகங்கள் ஒதுக்கிய இடம், நேரத்தை கணக் கிட்டு, இதே ஊடகங்கள் இந்த நோக்கியா ஆலை விவகாரத்துக்கு எவ்வளவு இடம், நேரத்தை ஒதுக் கின என்பதையும் கணக் கிட்டால் இதில் இருக்கும் விபரீதத்தின் ஆழ அக லங்கள் புரியக்கூடும். என்ன காரணம்?

தமிழ்நாட்டு, தமிழ் மொழியின் ஊடகங்களில் ஊடுருவிவிட்ட சுய தணிக்கை முறைதான் இதற்கு உண்மையான காரணம். அரசுக்கு எதி ரான செய்தியைப் போடாதே என்பது தமிழக ஊடகத்துறையின் எழுதப்படாத விதியாகவே இன்று ஆகிவிட்டது.

அப்படியானால் எதைச் செய்தியாக்குவது? சினிமாவைச் செய்தியாக்கி உண்மையான செய்தி களை ஒதுக்குவது என்பது இங்கே ஒருவித கலையா கவே வளர்க்கப்பட் டிருக்கிறது.

அதனால் தான் கமல் ஹாசன் தன் வீட்டை விற்பேன் என்று மிரட்டுவது முதல்பக்க தலைப்புச் செய்தியாகிறது. ரஜினிகாந்த் மனைவியின் சொத்துக்கள் ஏலத்துக்கு வரலாம் என்பது அதை விடப் பெரிய செய்தியாகிறது. ஆனால் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின், சுமார் 25000 தொழிலாளர்களை (நேரடியாகவும் மறைமுகமாகவும்) உட னடியாக பாதிக்கும், நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசு நிலம் அநியாயத் துக்கு வீணாகும் செய்தி முதல் பக்கத்துக்கு வரா மல் பார்த்துக் கொள்ளப் படுகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதார பலங்களில் ஒன்றான தயாரிப்புத் துறைக்கு இதனால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பின்னடைவு குறித்து எந்த விவாதமும் இதுவரை ஊடகங்களில் உரிய முறையில், உரிய அளவில் முன்னெடுக்கப் பட வில்லை.

உண்மையான செய்தியைக் கவனமாக புதைத்துவிட்டு, அதை மறைப்பதற்கு ஊருக் கெல்லாம் பயாஸ்கோப் காட்டிக் கொண்டிருக்கி றோம்   ஊடகங்களில்.
உண்மையை சொல்வ தானால் இன்றைய நிலை யில் தமிழ்நாட்டு ஊட கங்களுக்கு வெளியார் தணிக்கை என்று பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. 

அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எழும் சிறு சிறு சலசலப்புகளைத் தவிர. மாறாக தமிழ் நாட்டு ஊடகங்களின் உண்மையான பிரச்சினை இந்த சுய தணிக்கை முறை தான். ஊடகசுதந்திரத் திற்கு வெளி ஆபத்து இல்லை. உள் ஆபத்தே உண்மையான பேராபத்து.

(மோகன் குருசாமி முகநூலிலிருந்து)



ஜனவரி 16-31

Thursday, November 20, 2014

மார்க் எடுக்காத குழந்தைகள் மக்குகளா?

படிப்பில் ஆர்வம் குறைந்த பள்ளிக் குழந்தைகளுக்கான சிகிச்சைகளும் தீர்வுகளும்

- டாக்டர் ம.அமலி விக்டோரியா மஸ்கரன்ஹஸ் எம்.டி (மனநலம்)


ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் உட்கார்ந்து, அவர்களின் வீட்டுப்பாடங்களை முடிப்பதற்கு உதவி செய்வது பொதுவான ஒரு காட்சிதான். பெற்றோரின் எதிர்பார்ப்பு-களுக்கேற்ப பிள்ளைகள் தங்களின் வீட்டுப்-பாடங்களைச் செய்து முடித்தால் அந்த மாலை நேரம் அமைதியானதாகவும் இனிமையான-தாகவும் அமையும். இல்லையென்றால், கீழ்க்காணும் வார்த்தைகளில் ஏதாவது ஒன்றையாவது நாம் கேட்க நேரிடும்.

இதைக்கூட புரிஞ்சிக்க மாட்டியா?, திரும்பத் திரும்ப ஒரே பாடத்தை எத்தனை தடவை சொல்லிக்கொடுக்கிறது?, நீ கவனிக்கிறியா, தூங்கிக்கிட்டே கனவு காணுறியா?, மனப்பாடம் செஞ்சி எழுது. காப்பியடிக்காதே?, கணக்குன்னா ஏன் இப்படிப் பயந்து சாகுறே?

-இப்படிப்பட்ட வார்த்தைகளில் ஒரு சிலவேனும் நம் காதுகளில் விழும். பெற்றோரின் எதிர்பார்ப்புக்கேற்ப பிள்ளைகள் வீட்டுப்-பாடத்தைச் செய்யாமல் இருப்பதற்கு சோம்-பேறித்தனமும் ஆர்வமின்மையும் காரணமாக இருக்கலாம். (அவர்களுக்கு ஆர்வம் தரக்கூடிய ஒரு நிகழ்ச்சி கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் அந்த நேரம் ஓடிக்கொண்டிருக்கலாம்). அதே நேரத்தில், சில குழந்தைகளிடம் காணப்படும் குறிப்பிடத்தக்க குறைபாடுகளே வீட்டுப்பாடம் செய்ய முடியாமல் போவதற்கான ஆணிவேர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம். இந்தக் குறைபாடுகள் பள்ளியிலும் குழந்தைகளின் செயல்பாடுகளில் தலை-காட்டுவதால், இயல்பான புத்திசாலித்-தனத்துடன் இருக்கும் பிள்ளைகளும் சரி, கூடுதல் புத்திக்கூர்மையுடன் உள்ள பிள்ளைகளும் சரி, குறைவான மதிப்பெண்கள் எடுப்பதற்குக் காரணமாக அமைகிறது.

இயல்பான புத்திசாலித்தனத்துடனான பிள்ளைகளும் புத்திக்கூர்மையுடன் உள்ள பிள்ளைகளும் தேர்வில் மதிப்பெண்களைக் குறைவாகப் பெறுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்கள் மட்டுமே குழந்தைகளின் அறிவை அளவிடும் அளவுகோலாக நீண்டகாலமாக இருந்து வருவதால், துரதிர்ஷ்டவசமாக இத்தகைய குழந்தைகள், பள்ளிகளில் மக்குப் பிள்ளைகளாக முத்திரை குத்தப்படுகிறார்கள். உண்மையிலேயே இக்குழந்தைகளில் பலர் நல்ல  புத்திக்-கூர்மையுடன் மட்டுமின்றி ஒழுக்கம், அர்ப்-பணிப்பு, கடின உழைப்பு கொண்டவர்களாக இருந்தும் அவர்களால் பள்ளிக்கல்வியைச் சரியாக முடிக்க முடியாமல் பாதியிலேயே பள்ளியைவிட்டு நிற்க வேண்டிய சூழலுக்-குள்ளாகிறார்கள். இந்த இடைநிற்றலுக்குக் காரணம், அவர்களுக்குரிய பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு காணப்படாததும், அது குறித்த அவர்களின் பெற்றோரின் குறைவான விழிப்புணர்வுமேயாகும். எனினும், இது இப்போது உருவான பிரச்சினை அல்ல. இக்காலத்தில் நம்மால் இப்பிரச்சினைகள் குறித்து ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு பெருமளவில் சரி செய்யமுடியும். அதன் மூலமாக குழந்தைகளை இத்தகைய சூழல்களிலிருந்து மீட்டு, படிப்பில் அவர்களுக்குள்ள குறை-பாடுகளைச் சரிசெய்ய முடியும்.

இயல்பான அறிவாற்றல் உள்ள குழந்தைகள் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதற்கான காரணங்கள்

குழந்தைகளில் இயல்பான அறிவாற்றலும் கூடுதல் அறிவாற்றலும் உள்ளவர்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து, மக்குப் பிள்ளைகள் எனப் பள்ளிகளில் முத்திரை குத்தப்படுவதற்கு பின்வரும் நிலைப்பாடுகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களோ இருக்கும்.

உடல்ரீதியான காரணங்கள், தாமதமான வளர்ச்சி, மொழி _ -பேச்சு -_- உடல் செயல்-பாட்டுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள், கல்வித் திறனில் குறிப்பிடத்தக்க தாமதம், கவனச்சிதறல், உணர்ச்சிவயப்படுதல், நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளிட்டவை அத்தகைய காரணங்களாகும்.

இதுகுறித்த விவரத்திற்குள் நாம் செல்வதற்கு முன், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மனிதர்களைப் பொறுத்தவரை, இயல்பான என்ற வார்த்தை, குறிப்பிட்ட மதிப்பைக் குறிப்பிடுவது அல்ல. குறிப்பிட்ட வரையறையைக் குறிக்கிறது. உதாரணத்திற்கு, இயல்பான உயரம் என்று குறிப்பிட்ட அளவு எதுவும் கிடையாது. ஆனால் இத்தனை அடியிலிருந்து இத்தனை அடி வரை இருந்தால் இயல்பான உயரம் என வரையறை செய்துள்ளோம். அதுபோலவே உணவுக்கு முன்பாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுக்கும் இயல்பான வரையறை ஒன்று இருக்கிறது. உதாரணமாக, 80 - 120 mg/dl எனக் கொள்கிறோம். அதுபோல மனது மற்றும் உடலுக்கான இயல்பான வளர்சசி என ஒரு வரையறை உண்டு.

குறைந்த கல்வித்திறனுடன் இருப்பதற்கான உடல்ரீதியான காரணங்கள்

பள்ளியில் குறைந்த திறனை வெளிப்படுத்தும் பிள்ளைகளுக்கு மூன்று வகையில் உடல்சார்ந்த பிரச்சினைகள் இருக்கலாம். பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மூளைத்திறன் குறைபாடு. ஆகியவையாகும். கரும்பலகையில் எழுதிப்போடுவதை நோட்டுப்-புத்தகத்தில் எழுத முடியாமலோ, அல்லது ஆசிரியர் சொல்வதைக் குறிப்பெடுக்க முடியாமலோ உள்ள குழந்தைகளைக் கவனக்-குறைவான குழந்தைகள் என்றோ, சோம்பேறிக் குழந்தைகள் என்றோ முடிவு கட்டிவிடாமல், அவர்களுக்கு பார்வைக் குறைபாடோ அல்லது செவித்திறன் குறைபாடோ நிச்சயமாக  இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். கண் மருத்துவரிடமோ, காது-_மூக்கு_-தொண்டை மருத்துவரிடமோ அவர்களைக் காட்டுவது, பள்ளியில் அந்தக் குழந்தைகளின் செயல்-பாடுகளை அதிகரிக்க உதவும்.

நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய மூளைத்திறன்  குறைபாடு என்பது மற்றொரு முக்கிய அம்சமாகும். நரம்பு பாதிப்பு என்ற சொல்லைக் குறிப்பிட்டதும் வலிப்பினால் கை, கால்களை உதறும் மனிதர்களின் பயங்கரமான உருவம் உங்கள் மனக்கண்ணில் தோன்றக்கூடும். பள்ளிக்குழந்தைகளைப் பொறுத்தவரை திடீரென அவர்களின் நினைவாற்றலில் ஒரு தேக்கம் ஏற்படும். அது பழைய நினைவுகளை இழக்கும் அளவிற்கு இருக்காது. சில விநாடிகளுக்கு மட்டுமேயான இந்த நரம்பு மண்டல பாதிப்பும் நினைவாற்றல் தடுமாற்றமும் மீண்டும் சரியாகிவிடும். எனினும், இத்தகையை குறைபாடுகள் கொண்ட குழந்தைகள் திடீர் திடீரென விழிப்பதும், கண்களைச் சிமிட்டுவதும், கைகளை உதறுவதுமாக இருக்கும்.

மரபணு சார்ந்த இத்தகைய குறைபாடுகள் 4 முதல் 8 வயது வரையிலோ, அல்லது பதின்-பருவ வயதின் தொடக்கத்திலோ 15 முதல் 20 விழுக்காடு குழந்தைகளுக்கு இருக்கிறது.

இத்தகைய நினைவாற்றல் தேக்கம் ஒரு-நாளைக்கு நூற்றுக்கணக்கான தடவை  அந்தக் குழந்தைகளுக்கு ஏற்பட்டாலும் அவை அதுபற்றி உணரக்கூடியவைகளாகவோ அது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடிய அளவிலோ இருக்காது. அந்தளவுக்கு இந்தப் பிரச்சினை மிக நுண்ணிய அளவில் இருப்பதால், இதுகுறித்த முன் அனுபவம் ஏதுமற்ற பெற்றோர்களாலும் இதைக் கண்டுபிடிப்பது கடினம். இந்தக் குறைபாட்டை சரியாக உணர்ந்து, உரிய முறையில் சிகிச்சை  அளித்தால், அத்தகைய குழந்தைகள் ஒரு சில வாரங்களில் தங்கள் கல்வித்திறனில் மேம்பாடு அடையும்.

தாமதமான  வளர்ச்சி

ஒரே  நாளில் விதைக்கப்பட்ட எல்லா விதைகளும் எப்படி ஒரே நாளில் சீராக முளைத்து-விடுவதில்லையோ அதுபோலவே எல்லாக் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் வளர்ச்சியும் ஒரே சீராக இருப்பதில்லை. சிலருடைய வளர்ச்சி மெதுவாகவே இருக்கும்.

மொழி - பேச்சு - உடல்திறன் மேம்பாட்டு சிக்கல்கள்

படிப்பது, எழுதுவது, ஒரு கோடு வரைவது எல்லாமே குழந்தைகளுக்குச் சிக்கலான செயல்பாடுகள்தான். இதற்கு நன்கு வளர்ச்சி-பெற்ற மூளை, நரம்பு, தசை, மூட்டு ஆகியவை தேவை.

I என்ற ஆங்கில எழுத்தை எழுதுவதற்கு ஒரு டஜன் தசைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவற்றை மூளை கட்டுப்படுத்தும்.

G என்ற ஆங்கில எழுத்தை எழுதுவது கூடுதல் சிக்கலானது. வலது கையில் உள்ள 40 தசைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சில குழந்தைகளுக்கு எலும்புகள், மூட்டுகள், தசைகள், சவ்வுகள் ஆகியவை விரைவாக வளர்ச்சியடைந்துவிடும். சில குழந்தைகளுக்கு இவற்றில் ஒரு சில மெதுவாக வளர்ச்சியடையும். அதனால் அவற்றின் செயல்பாட்டின் மூலமாக செய்ய வேண்டிய பணிகளில் அத்தகைய குழந்தைகள் சிரமப்படும். எனினும் அவை சீராக வளர்ந்தபிறகு, மற்ற குழந்தைகளைப் போல இந்தக் குழந்தைகளும் செயல்படும். இது குறித்து கவனம் செலுத்தி, குழந்தைகளின் வளர்ச்சி நிலை குறித்த உண்மையை அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
வளர்ப்போம்...

அண்மையில் மறைந்த டாக்டர் அமலி விக்டோரியா அவர்கள், குழந்தைகளின் படிப்பார்வம் குறித்தும், அவற்றை மேம்படுத்துவது குறித்தும் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்

Thursday, July 24, 2014

தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை?


கோடை விடுமுறைகளுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்துவிட்டன. பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்த்தவர்களுக்கு வியப்போ வியப்பு! நகரங்களின் அனைத்து வசதிகளையும் பெற்றுப் படிப்பவர்களுக்கு இணையாக, கிராமப்புறப் பள்ளிகளின் பிள்ளைகளும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். ஏழைப் பள்ளி, அரசுப் பள்ளி, கார்ப்பரேசன் பள்ளி என்று இளக்காரமாகப்  பார்த்தவர்கள், தனியார் பள்ளி பற்றிப் பெருமையாகப் பேசியவர்கள் எல்லாம் இன்று வியப்போடு பார்க்கிறார்கள். இந்த வேறுபாடுகள் நீங்கியதற்குக் காரணம் சமச்சீர் கல்வியே என்பதை இப்போதுதான் தமிழகம் உணரத் தொடங்கியிருக்கிறது.

ஆனால் எப்போதும் வேற்றுமைகளைத் தோற்றுவிப்பதிலேயே குறியாக இருப்பவர்களும், ஏற்றத் தாழ்வுகளில் இன்பங் காணுகிறவர்களும் சும்மா கிடப்பார்களா? போதாக்குறைக்கு கல்வித் துறை இன்று பணம் கொழிக்கும் துறை! அதிலும், ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி சேர்க்கவே லட்சக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு, விண்ணப்பம் வாங்குவதற்கே பெரும் அதிகாரிகளும், பணக்காரர்களும் இரவெல்லாம் சாலையில் படுத்திருந்து இடம்பிடிக்கும் போது, அரசுப் பள்ளியிடமிருந்து எதை வேறுபடுத்திக் காட்டிப் பணம் பிடுங்க முடியும்? மேலும், மற்ற பிள்ளைகளைவிட என் பிள்ளை மேல் என்று பெருமை பேசுவதற்கு பள்ளிகளின் பெயர்களும், அவர்களும் கட்டியிருக்கும் தொகையும் தேவையாயிருக்கிறதென்று பெற்றோர்களும் நினைக்கிறார்களாமே! இதுதான் சாக்கென்று, இத்தனை நாள் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வந்தவர்கள் அதனினும் சிறப்பான சமச்சீர் கல்வி வந்தபிறகு, இரண்டும் இல்லாமல் சி.பி.எஸ்.இ-க்குப் போகிறார்கள் என்று ஆங்காங்கிருந்து தகவல்கள் வரத் தொடங்கின.

அது குறித்த தகவல்களை விசாரித்த போது தான், நடப்பது சிறிய அளவில் அல்ல என்பது புரிந்தது. மாநில அரசின் கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் இருந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கொத்துக் கொத்தாக சி.பி.எஸ்.இ முறைக்கு மாறுவதை அறிய முடிந்தது. சி.பி.எஸ்.இ (மத்திய பள்ளிக்கல்வி வாரியம்) பாடத்திட்டத்திற்கு மாறுவது என்பது வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்ல. மாறாக, தமிழக அரசின் கட்டுப்பாட்டிலிருந்தே விலகிச் செல்லுதல் ஆகும். இந்நிலை தொடர்ந்தால் அரசுப் பள்ளிகள் தவிர எதன் மீதும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்குக் கட்டுப்பாடு இருக்காது. அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு? தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு நடக்க இருக்கும் ஆபத்தின் பரிமாணம் விளங்கும். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் மாநில அரசின் கையில் இருக்கும் தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வி உள்ளிட்டவை சத்தமில்லாமல் மத்திய அரசின் கைக்குப் போய்விடும்.

இந்திய அரசியலமைப்பின் தொடக்க காலத்தில் கல்வித்துறை மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. பின்னர் அவசர கால நிலையின் போது மத்திய மாநில அரசுகளுக்குப் பொதுவான பொதுப்பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அடக்குமுறைக் காலத்தில் பெரிதாக எழ முடியாத எதிர்ப்பு, பின்னாளில் கிளம்பியபோதும், பொதுப் பட்டியலிலிருந்து அதை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அதிகார வர்க்கம் தயாராக இல்லை. மேலும், தன்னுடைய கரங்களை கல்வித் துறையை நோக்கி நீட்டி, அதனை கபளீகரம் செய்யவே முயன்றது. இதன் மூலம் மாநில உரிமைகளை நசுக்குவதுடன், இந்தித் திணிப்பிலும் எதிர்ப்பின்றி வெற்றி கண்டுவிடலாம். பாடத்திட்டத்தில் மாநிலங்களின் பண்பாடு, இனம், மொழி குறித்தவையெல்லாம் கிஞ்சிற்றும் இடம்பெறாது. இப்போது பொறுப்பேற்றுள்ள பி.ஜே.பி. அரசு ஒரு பாடத்திட்டத்தில் திருத்தம் செய்தாலே போதுமானது, வெகு எளிதில் நாடுமுழுக்க காவி விதைகளை பிஞ்சு மனதில் தூவி விடலாம்.

இத்தகைய ஆபத்தான போக்கை முளையிலேயே கெல்லி எறியாவிட்டால், மாநில சுயாட்சிக்கு அல்ல; மாநிலங்களின் அடிப்படை உரிமைகளுக்கே மீண்டும் சுழியத்திலிருந்து தான் போராட்டங்கள் தொடங்கப்பட வேண்டியிருக்கும். மாநில அரசுகள் என்ற அமைப்பையே கலைத்துவிட வேண்டும்; பல்வேறு பண்பாடுகள் என்ற அடையாளங்களை அழித்துவிட்டு ஒரே அகன்ற பாரதம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள மோடியின் அரசுக்கு இத்தகைய வாய்ப்புகளெல்லாம் தானாகக் கனிந்த மரங்கள் போல! மறைமுகமாக நடைபெறும் இந்தப் பிரச்சினையில் போதுமான அளவு இன்னும் சமூக அமைப்புகள் கவனம் செலுத்தாமல் இருக்க,  09.05.2014 அன்று கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இப்பிரச்சினை குறித்த தொடக்க அடியினை எடுத்து வைத்துள்ளது.


மேல்நிலைப் பள்ளி வரை தமிழைக் கட்டாயம் படித்திட வேண்டும் என்ற இன்றைய கல்வித் திட்ட முறையைத் தவிர்க்கும் வகையிலும் தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி முறையிலிருந்து தவிர்க்கவும் சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு மாறும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதை இக்கூட்டம் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசு மத்திய அரசின் துணையோடு இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த ஆவன செய்யுமாறு இச் செயற்குழுக்கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது என்ற இந்தத் தீர்மானம் திராவிடர் கழகம் இப்பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது என்பதற்கான நம்பிக்கைக் கீற்றாகும். இந்நிலையில் இந்தப் பிரச்சினையின்  முழுப் பரிமாணத்தையும் விளக்க கல்வியாளர்களை அணுகினோம். சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தினை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த பேராசிரியர் அ.கருணானந்தம் அவர்கள் கூறும் போது, சமச்சீர் கல்வியை நோக்கிய முதல் அடியாக விளங்குவது இந்தப் பொதுப்பாடத்திட்டம். இது தமிழ்நாட்டில் அதுவரை இருந்து வந்த நான்கு வகையான பாடத்திட்டங்களை (எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இண்டியன், ஓரியண்டல்) ஒன்றிணைத்து உருவாக்கிய பாடத்திட்டமாகும். இது தரமற்றதாக உள்ளது என்னும் குற்றச்சாட்டு தவறானதும், கண்டிக்கத்தக்கதுமாகும். சமச்சீர் கல்வி என்பது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்தியுள்ளது. சில பள்ளிகள் தற்போது சி.பி.எஸ்.இ.க்கு மாறக் காரணம் சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் அல்ல. அப்பள்ளிகளின் வணிக நோக்கமே என்று குற்றம் சாட்டினார்.

சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்திற்காக சட்ட ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் போராடியதோடு மட்டுமல்லாமல், பொதுப் பள்ளிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் கேட்டபோது, அவர் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட வரலாற்றிலிருந்து தொடங்கினார்.

தமிழ்நாட்டில் அரசினுடைய பாடத் திட்டமாக எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. இருந்த காலகட்டத்தில், பல்கலைக் கழகப் பாடத் திட்டமாக மெட்ரிகுலேசனும், ஆங்கிலோ இண்டியனும் பாடத்திட்டமாக இருந்தது. இவையிரண்டும் எஸ்.எஸ்.எல்.சி.யைவிட உயர்ந்தவை; இதனைப் படித்தால், பல்கலைக் கழத்திற்குச் செல்ல முடியும் என்ற ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது. இது திட்டமிட்டு காலனி ஆதிக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாடாகும்.

இந்தியா விடுதலை பெற்று ஒரு குடியரசாக ஆன பிறகு, தன்னுடைய பாடத் திட்டங்களை உருவாக்கி, எல்லோருக்கும் நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டது.

அதனுடைய விளைவாக, 1970களில் மால்கம் ஆதிசேஷய்யா அவர்கள் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், இனி நாங்கள் பள்ளிக் கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் உயர்கல்வியைத் துறையை எடுத்துக் கொள்கிறோம்; பள்ளிக் கல்வியை அரசு பார்த்துக் கொள்ளட்டும் என்றது. இதற்குமுன்  மெட்ரிக் பள்ளிகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால், அன்றைய அரசு இவர்களை மாநிலப் பாடத்திட்டத்தோடு இணைப்பதற்குப் பதிலாக,-  மெட்ரிக்குலேசன் வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி, அதில் எல்லா மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர்களையும் உறுப்பினர்களாக்கி, அதற்கு ஒரு தனி அந்தஸ்தைக் கொடுத்து மெட்ரிக் பள்ளிகள் சுயநிதி ஆங்கில வழிப் பிரிவுகளாக இருக்கும் என்று சொல்லிவிட்டார்கள். ஆங்கிலோ இண்டியன் பள்ளிகளைப் பொறுத்தவரையில், அதில் படிப்பதற்கும் ஆங்கிலோ இண்டியன்கள் இல்லை. அவற்றுக்கென்று தனித்த சிறப்பான பாடத்திட்டமும் எதுவும் இல்லை.

அரசு உருவாக்கிய முத்துக்குமரன் குழு மேற்கொண்ட ஆய்வில், நான்கு பாடத்திட்டங்களின் உள்ளடக்கம் ஒன்றாகவே இருப்பதும், தனித்தனியான இந்தப் பெயர்களால் மாணவர்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படுவதைத் தவிர வேறு பயன் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது. எல்லோருக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டம் என்பது சரியானதாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் புதுப் பாடத்திட்டமான சமச்சீர் கல்வி என்று நாம் கூறும் பொதுப்பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள் என்று விளக்கினார்.

சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தைவிட சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் சிறந்ததா?

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் எனபது மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் வசதிக்காக உருவாக்கப்பட்ட பள்ளிகள் ஆகும். அவை இந்தியா முழுவதும் உள்ள பொதுக்கல்விக்கான பாடத்திட்டம் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தால் வளமான எதிர்காலமும் வேலைவாய்ப்பும் கொட்டிக்கிடக்கின்றன என்னும் மக்களின் அறியாமை இவர்களுக்கு ஒரு வாய்ப்பாகிவிட்டது. எனவே, ஏழை மக்களை ஈர்க்கவே இந்தப் பள்ளிகள் தற்போது இந்த மாற்றத்தை விரும்புகின்றன. பொதுப் பாடத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ள சூழலில் அவர்கள் தங்களது வணிகத்தைப் பெருக்குவதற்கு ஒரு புதிய பாடத்திட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது என்ற பேராசிரியர் கருணானந்தத்தின் குற்றச்சாட்டைத் தான் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் வழிமொழிகிறார்.


பள்ளி நிர்வாகத்தினுடைய பார்வையைப் பொறுத்தவரைக்கும், எஸ்.எஸ்.எல்.சி. என்ற ஒரு பாடப்பிரிவு இருந்த காலகட்டத்தில், மெட்ரிக் பள்ளிப் படிப்பு உயர்ந்தது என்று சொல்லி மக்களை ஏமாற்ற முடிந்தது; இப்பொழுது இரண்டிற்கும் ஒரே பாடத் திட்டம் என்றால், நாங்கள் ஏன் கூடுதலாகப் பணம் செலுத்தவேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி வந்து, இரண்டு, மூன்று தேர்வுகள் நடைபெற்றதும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகள், மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகளைவிட அதிக மதிப்பெண் பெற்றதைப் பார்த்தனர்.

பிறகு, ஏன் தங்களுடைய பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில்  படிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்தது. மெட்ரிக் பள்ளிகளுக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக, தங்களுடைய சந்தை போய்விடுமோ என்கிற காரணத்தினால், சி.பி.எஸ்.இ.க்கு மாறிவிடுகிறார்களே தவிர, இவர்கள் பாடத் திட்டத்தை ஆய்வு செய்து, சி.பி.எஸ்.இ. தான் சிறந்த பாடத் திட்டம் என்று நிரூபித்து அதற்கு மாறவில்லை.

சி.பி.எஸ்.இ.-க்கு மாறவேண்டும் என்றால், 2005 ஆம் ஆண்டு என்.சி.ஆர்.டி. புதிய கல்வித் திட்டத்தைக் கொடுத்தவுடன், அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அப்பொழுதே சி.பி.எஸ்.இ.க்குச் சென்றிருக்கலாமே! என்றும் கேள்வியெழுப்புகிறார்.

பெற்றோர் விரும்புவதால்தான் இப்படி பாடத்திட்டங்களை மாற்றுவதாக சில பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்துக் கேட்டபோது, இல்லை என்று ஆதாரத்தோடு மறுக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

குறிப்பாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமானால், சென்னை வேப்பேரியில்  ஒரு மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளி உள்ளது. 175ஆண்டுகள் பாரம்பரியமான ஒரு பள்ளி அது. அந்தப் பள்ளி மெட்ரிக் பள்ளியாக இருந்தது. கடந்த ஆண்டு அந்தப் பள்ளி அய்.சி.அய்.சி. பள்ளியாக மாறுவதற்காக முயற்சி செய்து, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. உடனே பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு சங்கமாக உருவாக்கி, அந்தச் சங்கத்தின் சார்பாக நிர்வாகத்திற்கு ஒரு நோட்டீசைக் கொடுத்தார்கள்.

அந்த நோட்டீசில், நீங்கள் எந்த வகையில் இந்தப் பாடத்திட்டம் என்பது சி.பி.எஸ்.இ., அய்.சி.அய்.சி. பாடத்திட்டத்தைவிட குறைந்தது என்று சொல்ல வருகிறீர்கள். உங்களிடம் அதற்கான ஒப்பாய்வு ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால், அந்த ஒப்பாய்வினை எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்படி தெரியப்படுத்தாமல், நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள்.

இந்த நோட்டீஸ் கிடைத்த இரண்டு வாரத்தில், பள்ளி நிர்வாகம் ஏற்கெனவே கொடுத்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுகிறோம் என்று இன்னொரு சுற்றறிக்கையை அனுப்பினார்கள்.

அப்படிச் செய்த பிறகு, மறைமுகமாகப் பெற்றோர்களை அழைத்து, கட்டாயப்படுத்தி அய்.சி.அய்.சி.யில் சேர வைத்திருக்கிறார்கள்.

உடனே, நடந்தவற்றை விளக்கி அந்தப் பெற்றோர் சங்கம், பள்ளிக் கல்வி இயக்குநருக்கு ஒரு மனு கொடுத்தது. ஒரே பள்ளி வளாகத்தில் இன்னொரு சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்குவதோ, அல்லது அய்.சி.அய்.சி.  பள்ளி தொடங்குவதோ அல்லது இருக்கிற பள்ளியை அய்.சி.அய்.சி.யாக மாற்றுவதோ எங்களுக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. எனவே, அரசு இதற்கு என்.ஓ.சி. கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருந்தார்கள்.

இதிலிருந்து இரண்டு செய்திகள் தெரியவருகின்றன.
 
ஒன்று, பெற்றோர்கள் விரும்பி மாறுகிறார்கள் என்பது தவறு என்பதற்கு இது ஒரு சான்று.

இரண்டாவது, நிர்வாகத்திடம் எந்தவிதமான ஒப்பாய்வு அறிக்கையும் கிடையாது. இவர்கள் பாடத் திட்டத்தையெல்லாம் ஆய்வு செய்யவில்லை. ஒரு வணிக நோக்கத்திற்காகத்தான் மாறுகிறார்கள் என்பதற்கும் இதுவே சான்று என்றும் போட்டுடைத்தார்.

வணிகம் என்பதைத் தாண்டி இதனால் பள்ளி நிர்வாகங்களுக்கு வேறு ஏதேனும் ஆதாயம் இருக்கிறதா? என்ற சந்தேகமும் நமக்கு இல்லாமலில்லை.

மக்கள்தொகை காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் அரசு ஏராளமான பொதுப் பள்ளிகளை உருவாக்க வேண்டும். ஆனால், அரசு உருவாக்கவில்லை. அந்தப் பணிகளை தனியார் பள்ளிகளிடம் தாரை வார்க்கின்றனர். ஆனால் தனியார் பள்ளி நிர்வாகங்களோ தமிழ்நாட்டிற்குள் உள்ள பொதுப் பாடத்திட்டத்திலிருந்தும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தும் விடுபடவே இவ்வாறு செய்கின்றனர் என்கிறார் பேராசிரியர் அ.கருணானந்தம். இந்தக் கருத்து உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துகிறது பிரின்ஸ் கஜேந்திரபாபு தரும் தகவல்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைப் பொறுத்தவரையில், ஒரே ஒரு தென்மண்டல அலுவலர்தான் இருக்கிறார். தென் மண்டலம் என்று சொன்னால், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் இவை அனைத்தும் சேர்ந்தது தென்மண்டலம். இதற்கு ஒரு மண்டல அலுவலர்தான். இவருடைய அலுவலகம் சென்னை அண்ணா நகரில் உள்ளது.

இவருடைய பணி என்னவென்றால், பாடத்திட்டத்தை பின்பற்றுகிறார்களா என பார்ப்பது, சுற்றிக்கைகளைக் கொடுப்பது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது போன்றவைதான். அவருடைய பணியாகும். நாள்தோறும் நடைபெறும் நிர்வாக நடவடிக்கையில் அவர் தலையிடமாட்டார். மாநில அரசுதான் தலையிட வேண்டும். ஆனால், மாநில அரசும் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தில் தலையிடவில்லை. தங்களுடைய கட்டுப்பாட்டில் அதனை வைத்துக்கொள்ளவில்லை.

எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறிவிட்டால், யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது ஒரு காரணமாகும்.

இரண்டாவதாக, தமிழ் மொழி இல்லாமல் படித்து முடித்துவிடலாம்; இதனைத் தாண்டி மாநில அளவில் கல்விக் கட்டணத்திற்கென்று அளவுகோல் உண்டு. கண்காணிக்க அதிகாரிகள் உண்டு. கட்டமைப்பு உண்டு. இவை எதுவும் அங்கு கிடையாது. யாரும் அதற்காக முறையிடவுமில்லை; மாநில அரசும் தலையிடவில்லை. இதெல்லாம் பள்ளி நிர்வாகங்களுக்குக் கிடைக்கும் வசதிகள்.

இப்படி தனது கட்டுப்பாட்டிலிருந்து சி.பி.எஸ்.இ முறைக்கு மாறுவதைத் தடுத்து பள்ளிக் கல்வித் துறையை மாநில அரசு காக்க முடியாதா? தமிழ்நாடு அரசு ஆங்கிலவழியில் கல்வி கொண்டுவருவதாக சொன்னதுகூட மெட்ரிக் பள்ளிகளின் மாற்றத்துக்குக்  காரணமாக இருக்குமா?

இல்லை. ஏனென்றால், அரசு ஆங்கிலவழிக் கல்வி கொண்டுவருவதாக அறிவிக்கும் முன்பும் பின்பும் கூட தடையின்மை சான்று கோரி பல பள்ளிகளின் சார்பில் மனு கொடுத்திருந்தார்கள்.

 பல பள்ளிகளுக்குத் தடையின்மை சான்றும் வழங்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு சி.பி.எஸ்.இ. சார்பில் தடையின்மை சான்று தேவை இல்லை என்று திருத்தம் கொண்டுவந்துவிட்டார்கள். எனினும் திருத்தப்பட்ட விதிகளின்படி மாநில அரசு அல்லது யாராவது ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார்களானால், அப்போதுதான் தடையின்மை சான்று வாங்க வேண்டும் என்று உள்ளது. எனவே, மாநில அரசு இந்தப் பள்ளிகளின் வணிக நோக்கத்தையோ, ஒரே பள்ளி வளாகத்தில் இரண்டு பாடத்திட்டங்கள் கூடாது என்பதையோ எடுத்துக்காட்டி அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்புக் காட்டினால்,  திருத்தப்பட்ட விதிகளுக்குப்பிறகுகூட சி.பி.எஸ்.இ.யால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் பிரின்ஸ். இது குறித்து பேரா.கருணானந்தம் குறிப்பிடும் போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறுவதைத் தடுக்க வேண்டும் என்றால் முன்பு இருந்ததைப் போல் ஆறாம் வகுப்பு முதல்தான் தொடங்க முடியும். அதுவும் மாநில அரசின் அனுமதி பெற்றுத்தான் தொடங்கப்பட முடியும் என்ற விதிமுறைகளை மீண்டும் கொண்டு வர மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு இதையெல்லாம் தடுக்க முயற்சிகள் எதையும் எடுப்பதாகத் தெரியவில்லை. அரசு தனியார் கல்வி நிர்வாகங்களுக்குத் துணைபோகவே விரும்புகிறது என்று உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறார்.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. பொதுப்பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு, மாநில அரசு இரண்டுபேருக்குமே உரிமை இருக்கிறது. பொறுப்பும் இருக்கிறது. ஒரே பொருளில் இரண்டு பேரும் சட்டம் கொண்டுவந்தால், மத்திய அரசு கொண்டுவரும் சட்டம்தான் செல்லும். அதே நேரம் பொதுப்பட்டியலில் இருந்தால் மாநில அரசுக்கு உரிமை கிடையாது என்றும் சொல்லமுடியாது. மேலும், கல்வி என்பது பண்பாட்டின் ஒரு கூறு. எனவே, ஒரு மொழிவாரி மாநிலம் என்கிற அடிப்படையில் ஒரு இனத்தினுடைய பண்பாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது. அந்த வகையில் கல்வியை பண்பாட்டுடைய ஒரு கூறாகப் பார்த்து  அவர்கள்  தங்களுடைய உரிமைகளையும், தாங்கள் கல்வித்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசுக்குத் தெரிவிக்க முடியும்.

73 நாடுகளைக் கொண்ட பிசா அறிக்கையில், எந்தெந்த நாட்டிலெல்லாம் அரசினுடைய பொறுப்பிலும், செலவிலும் கல்வி கொடுக்கப்படுகிறதோ, அந்த நாட்டில் எல்லாம் குழந்தைகளினுடைய கற்றல் திறமை அதிகமாக இருக்கிறது; எந்த நாட்டிலெல்லாம் தனியார் பள்ளிகள் அதிகமாக இருக்கிறதோ, அங்கே குழந்தைகளின் கற்றல் திறமை குறைவாக இருக்கிறது  என்று சொல்கிறார்கள்.

உலகெங்கும் கல்வியாளர்கள் சொல்லும் இந்தக் கருத்து நம் மக்கள் காதில் விழாத வண்ணம் தடுத்துநிற்கும் போலி கவுரவப் போக்குகளும் மாற வேண்டும் என்பதும் உண்மையே!

இந்தப் பிரச்சினையைப் பொறுத்தளவில், பந்து இப்போது தமிழக அரசின் கையில் இருக்கிறது. தன்னிடம் இருந்து பள்ளிக்கல்வித் துறை பறிபோய்விடும் என்ற உண்மையாவது தமிழக அரசுக்குத் தெரியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, பொதுப் பள்ளிகளையும், அருகமைப் பள்ளிகளையும் அதிகப்படுத்துவதும், பாடத்திட்டத்தைச் செழுமையாக்குவதில் மேலும் கவனம் செலுத்துவதும், மக்களிடம் தனியார் பள்ளிகள் மேல் உள்ள மோகத்தைச் சரி செய்து, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை விரிவாக்கி, ஆங்கில வழிப் பாடம் என்பதை விட மொழியாக இங்கிலீசிற்கு தனியிடம் தந்து பன்மொழி கற்கும் வாய்ப்போடு கூடிய தாய்மொழிக் கல்வி மூலமே உலக அரங்கை நோக்கிப் பயணிக்கலாம் என்ற நம்பிக்கை ஊட்டுவதிலும்தான் சரியான கல்விக்கான பாதை இருக்கிறது.

- சமா.இளவரசன்

உதவி : வை.கலையரசன், ச.பாஸ்கர்

நன்றி : http://www.unmaionline.com/new/2057-tn-education-department.html 



குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...