Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Monday, March 28, 2016

மாற்றம் சீரழிவுகளிலிருந்து பேரழிவுக்கு

- சமஸ்
தமிழகத்தில் இடதுசாரிகள் அமைத்த மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவிடம் சரணாகதி அடைந்த நாளன்று அக்கூட்டணிக் கட்சிகளைச் சாராதவர்களிடமிருந்தும் வலி மிகுந்த வார்த்தைகள் வெளிப்பட்டதைப் பார்க்க முடிந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 124 தொகுதிகளையும் முதல்வர் வேட்பாளர் என்கிற அந்தஸ்தையும் தேமுதிகவிடம் கொடுத்ததோடு கூட்டணியின் பெயரையும் பறிகொடுத்து, விஜயகாந்த் கூட்டணி ஆக மாறியிருக்கிறது இடதுசாரிகள் அமைத்த நால்வர் அணி, தேமுதிக வாங்கியிருக்கும் 124 இடங்கள் தனிப்பெரும்பான்மைக்குரிய 118 இடங்களைக் கடந்தவை (52.9%) என்பதோடு, குறைந்தபட்சம் கூட்டணி அரசு எனும் வார்த்தையைக்கூட தேர்தல் உடன்பாட்டு அறிக்கையில் நால்வர் அணியால் சேர்க்க முடியவில்லை. பெரிதினும் பெரிது கேள் என்று பேரம் முடித்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த், மிச்சமுள்ள 110 இடங்களை நான்காகப் பிரித்தால், இக்கூட்டணியின் மூலம் அடைந்த பலன் என்ன என்பதை நால்வர் அணிக்குத் தேர்தல் முடிவுகள் உணர்த்தி விடும்.

கவனம் ஈர்த்த முழக்கம்
ஓராண்டுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்‘திராவிட அரசியலுக்கு மாற்று என்ற முழக்கத்துடன் தமிழகத்தைச் சுற்றிவந்தது, பொதுத்தளத்தில் ஒருஈர்ப்பையும் புதிய எதிர்பார்ப்பையும் உண்டாக்கியிருந்தது. அரை நூற்றாண்டு திராவிட அரசியல் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் இன்றைய இழிவான சூழ்நிலையின் வெளிப்பாடு அது. இதே முழக்கத்துடன் பாஜக, பாமக உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் களத்தில் நின்றாலும், இடதுசாரிகள் கவனம் ஈர்க்கக் காரணம் சாதி, மதச்சார்பற்ற அவர்களுடைய நிலைப்பாடும், அவர்கள் பேசும் விளிம்பு நிலை அரசியலும், அவர்கள் தம் முன்னுதாரணங்களாக முன்னிறுத்தும் சங்கரய்யா, நல்லகண்ணு போன்ற எளிமையும் நேர்மையும் மிக்க ஆளுமைகளும்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத சூழலாக, இந்தத் தேர்தலில் சுமார் 1.08 கோடி இளைஞர்கள் - 22.92% பேர் - புதிதாக வாக்களிக்கிறார்கள். திமுக, அதிமுக இரண்டுக்கும் எதிரான மனநிலையை இந்தப் புதிய தலைமுறை வாக் காளர்களிடம் பெரிய அளவில் கவனிக்க முடிந்தது. அவர்களைக் குறிவைத்து இறங்குவதற்கான களம் இடது சாரிகளுக்கு இயல்பாக அமைந்திருந்தது. நிச்சயமாக இடதுசாரிகள் இந்த முறை ஆட்சியைப் பிடிக்கப்போகிறவர்கள் அல்ல என்றாலும்கூட இப்படியான ஒரு தரப்பை ஆதரிப்பது, தமிழகத்தின் சமகால அரசியல் போக்குக்கு எதிராக நிற்பதற் கான தார்மீக ஆதரவாகப் பார்க்கப்பட்டது. இப்போது இடது சாரிகள் உருவாக்கியிருக்கும் கூட்டணியோ எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது. வாக்காளர்கள் முன்பு கடைசியாக அவர்கள் முன்வைத்திருக்கும் தேர்வு என்ன? கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாக விஜயகாந்த்!
மாற்றம் என்னும் அபாய வாள்
இந்திய அரசியலையும், இந்தியாவின் இன்றைய சமூகச் சூழலையும் உற்றுநோக்கும் எவருக்கும் இப்படியொரு கேள்வி அடிக்கடி எழக்கூடும். இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் நாளுக்கு நாள் வறுமையை நோக்கித் தள்ளப்படுகின்றனர். அதிகாரம் பெருமுதலாளிகள் காலில் குவிகிறது. சாதி, மத, இனப் பாகுபாடுகள் அதிகரிக்கின்றன. எல்லாமும் சேர்ந்து சாமானிய மக்களை உக்கிரமாகத் தாக்குகின்றன. இத்தகைய சூழலில் இவை எல்லாவற்றுக்கும் எதிராகப் பேசும், ஒரு இயக்கம் மக்களிடம் இயல்பாகப் பரவ வேண்டும். மக்கள் தன்னெழுச்சியாக அதை வாரி அணைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் நடப்பதென்ன? நேர் எதிராக நாளுக்கு நாள், மிக மோசமாக அடிவாங்குகிறார்கள் இடதுசாரிகள். காரணம் என்ன?
மாற்றம் எனும் சொல் கேட்பதற்கு எவ்வளவு வசீகரிக்கக் கூடியதோ அவ்வளவுக்குக் கையாளும்போது அபாயகர மானது. கைப்பிடியற்ற வாள் அது. எதிரியைத் தாக்குகிறதோ இல்லையோ சரியாகக் கையாளவில்லையெனில், கையாள்ப வரின் கைகளை அது பதம்பார்ப்பது நிச்சயம். அடிப்படையில் தூய்மைவாதத்தை முன்னிறுத்தும் சொல் மாற்றம். இடது சாரிகள் இந்தியாவில் இவ்வளவு தூரம் கீழே வந்ததற்கும், நாளுக்கு நாள் அடிவாங்குவதற்கும் தூய்மைவாதத்துடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு ஒரு முக்கியமான காரணம். இடதுசாரிகளிடம் தூய்மைவாதப்பேச்சு அதிகம் தூய்மை வாதப் பேச்சுக்கான செயல்பாடு குறைவு. ஊரையெல்லாம் விமர்சிப்பவர்கள் கடைசியில் தாம் செல்ல அதே பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நீங்கள் எதிரியின் சுத்தத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் கைகள் மட்டுமல்ல; உங்களுடன் கைகோத்து நிற்பவர்களின் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். சரியாகச் சொல்வதெனில், இடதுசாரிகள் தங்களது எதிரிகளை மிகச் சரியாக நிர்ணயிக்கிறார்கள். நண்பர்களை அடையாளம் காணும்போது மோசமாக சொதப்புகிறார்கள். வரலாற்று வாய்ப்புகளைத் தாமாக முனைந்து நாசப்படுத்திக் கொள்வதில், அலாதியான வேட்கையை வெளிப்படுத்துகிறார்கள்.
தமிழகத்தின் 2016 தேர்தல் சூழலும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்தில் இடதுசாரிகள் தங்கள் தளமெனப் பார்க்கும் இன்றைய வெற்றிடம் எப்படி உருவானது? அரை நூற்றாண்டு திராவிட அரசியல் உருவாக்கிய வெற்றிடம் இது. இங்கே திராவிட அரசியல் என்று நாம் எல்லோருமே குறிப்பிடுவது பெரியாரிய அரசியலின் தொடர்ச்சி அல்ல; கருணாநிதிய, எம்.ஜி.ஆரிய, ஜெயலலிதாவிய அரசியலின் எச்சம். தனிமனித வழிபாட்டுக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் படாடோபத்துக்கும் பேர் போன அரசியலின் எச்சம். இதைத்தான் இடதுசாரிகளும் திராவிட அரசியல் என்று குறிப்பிடுகிறார்கள் என்றால், விஜய காந்த், பிரேமலதாவிடம் வெளிப்படுவது எந்த அரசியல்? தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இன்றைக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் முத்தரசன் கையிலும், ஜி.ராமகிருஷ்ணன் கையிலும் வைகோ திணிக்கும் போர் வாள் எந்த அரசியலின் அப்பட்டமான குறியீடு?
எது உண்மையான மாற்றம்: சமூக வலைதளங்களில் இந்தக் கூட்டணி உண்டாக்கியிருக்கும் விமர்சனங்களுக்கு சில இடதுசாரி எழுத்தாளர்கள் இப்படி ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். “நல்லகண்ணுவை முன்னிறுத்துங்கள், சங்கரய்யாவை முன்னிறுத்துங்கள், தனித்து நில்லுங்கள் என்று இப்போது சொல்கிறீர்கள். 2014 மக்களவைத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து நின்றோம். அப்போது யார் எங்களை ஆதரித்தீர்கள்?”
அபத்தனமான கேள்வி இது. 2014 மக்களவைத் தேர்தல் இந்திய வரலாற்றில் கொந்தளிப்பான அரசியல் சூழலைக் கொண்டிருந்தது. மன்மோகன் சிங் அரசு மீதான ஊழல் எதிர்ப்பு அலையை முன்கூட்டிக் கணித்த மோடியும் பாஜகவும் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் திட்டமிட்டு வேலை செய்தார்கள். புதிய உத்திகளைக் கையாண்டார்கள். முக்கிய மாக, தங்கள் வழமையான மதவாத அரசியலுக்கு வளர்ச்சிப் பூச்சு பூசி சூழலைத் தம்வசம் ஆக்கியிருந்தார்கள். இடது சாரிகள் செய்தது என்ன? ஒரு பெரும் போர்க்களத்தில் கையில் எந்த ஆயுதமும் வியூகமுமின்றி குழப்பமான மனநிலையில், வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்ததுபோல் இருந்தது அவர்களின் செயல்பாடு “ஊழல் காங்கிரஸ், மதவாத பாஜக வேண்டாம்“ என்று சொன்னவர்களால், மாற்று பிரதிநிதியை முன்வைக்க முடியவில்லை. மூன்றாவது அணி என்று அவர்கள் உருவாக்க முயன்று அணுகிய கட்சிகள் யாவும் மாநில அளவில் ஊழல், சாதிய அரசியலில் கரை கண்டவை. ஏனைய மாநில மக்களிடம் மதிப்பிழந்தவை.
தமிழகத்தில் இரு பெரிய கட்சிகளையும் தவிர்த்து இடது சாரிகள் தனித்து நின்றது.உண்மை. இந்த முடிவை அறிவிக்கும் முன்பு வரை அவர்கள் எங்கிருந்தார்கள்? அதிமுக கூட்டணியில். கடைசி தருணம் வரை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாமல் காத்துக் கிடந்தார்கள். மக்கள் எல்லாவற்றையும் ஒரே நாளில் மறந்துவிடுவார்களா? நீங்கள் மாறிய ஒரேநாளில் கழுத்தில் மாலை சூடிவிடுவார்களா? சரி, ஒரு பெரும் தேர்தலைத் தனித்து எதிர்கொண்டவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் தனித்து நின்று காட்ட வேண்டாமா? தங்கள் மீது தங்களுக்கே நம்பிக்கையில் லாதவர்கள் மீது மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?
இடதுசாரிகளுடனான உரையாடலின் போதெல்லாம், பலர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்பது உண்டு. தோழர், இந்த வெற்றிடச் சூழலை நிரப்ப வேண்டும் என்றால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களைப் போன்ற பொதுத்தளத்தில் இருப்பவர்கள் நினைக்கிறீர்கள்? நான் அவர்களிடம் சொல்வது. “ஒரு பெரும் அரசியல் இயக்கத்தின் மாற்று முழக்கம் என்பது பளிச்சென்று பட்டவர்த்தனமாகத் தெரிய வேண்டும். அதனுடைய செயல்திட்டங்களில் மட்டு மல்ல; அதன் ஒவ்வொரு அசைவிலும் தெரிய வேண்டும். தேர்தல் களம் என்றால், அது முன்வைக்கும் முழக்கங்கள், அது முன்னிறுத்தும் பிரதிநிதிகள், அதன் பிரச்சார பாணிகள் ஒவ்வொன்றிலும் புதுமை தெரிய வேண்டும். சூழலின் வேறுபாடு தெரிய வேண்டும். பழைய உதாரணம் காந்தியின் காங்கிரஸ். சமீபத்திய உதாரணம் ஆம் ஆத்மி கட்சி”
இடதுசாரிகள் இந்தியாவுக்குப் புதிய கட்சியல்ல. பழைய கட்சி என்பதே ஒரு பெரிய சுமை. இந்தச் சுமையைத் தூக்கிக்கொண்டுதான் ஓட வேண்டும் என்றால், கூடுமான வரைக்கும் தூக்குமூட்டைகளைக் குறைக்க வேண்டும். அமெரிக்காவில் பால்ட் கழுகுகள் தொடர்பாக சுவாரஸ்யமான ஒரு கதை உண்டு. இந்தக் கழுகுகள் முதுமையை அடைந்ததும் ஓரிடத்தில் போய் உட்கார்ந்துவிடுமாம். தன்னுடைய மூக்கின் நுனியை உடைத்துக்கொள்ளுமாம். தன்னுடைய இறகுகள் எல்லாவற்றையும் பிய்த்தெறிந்துவிடுமாம். மீண்டும் புத்தம் புதிதாக எல்லாம் முளைக்க வாழ்க்கையைத் தொடங்குமாம். இன்னொரு ஆயுளை வாழுமாம். பழமையைக் களைதல் என்பது ஒரு மறுபிறப்பு மாற்றம் வெளியில் மட்டும் அல்ல; உள்ளுக்குள்ளும் நடக்க வேண்டும். அப்படி ஒரு மாற்றத்துக்கு இடதுசாரிகள் இங்கே தயாராக வேண்டும் என்றால், முதலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்.
இந்திய இடதுசாரிகளே, திரும்பத்திரும்ப தங்களுடைய பழம்பானைகளில் யோசனைகளைத் தேடுபவர்கள். தமிழகத் தில் இந்தத் தேர்தலை அவர்கள் எதிர்கொள்ளும் வியூகம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்குமுன்வங்கத்தில் தங்கள் கணக்கைத் தொடங்க கையாண்ட வியூகம். வங்கத்து இடது சாரிகளாவது அன்றைக்குத் தங்களைக் காட்டிலும் பலவீன மான கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு, முடிவெடுக்கும் மய்யமாக தங்களை முன்னிறுத்திக்கொண்டு காய் நகர்த்தினர். தமிழகத்தில் உருக்குலைவு நடந்திருக்கிறது.
இடது கூட்டணியை விஜயகாந்த் கூட்டணியாக மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளவில்லை. இத்தனை நாட்களும் எதை மய்யப்பொருளாகப் பேசினார்களோ அதையும் அவர்களே கேலிப்பொருளாக்கிவிட்டார்கள். கூடவே இந்த அரை நூற்றாண்டில் இல்லாத சூழலாக உருவாகியிருந்த மூன்றாவது அணிக்கான ஒரு காத்திரமான சாத்தியத்தையும் நாசமாக்கி விட்டார்கள்.
என்ன சாதித்தார் விஜயகாந்த்?
தமிழக வரலாற்றிலேயே மிக மோசமாக செயல்பட்ட அல்லது செயல்படாத ஒரு சட்டப்பேரவை மற்றும் ஆட்சிக்காலம் என்கிற குற்றச்சாட்டு இந்த அதிமுக ஆட்சி மீது உண்டு ஜெயலலிதா மட்டுமா இதற்குக் காரணம்? சட்டப்பேரவைப் பக்கம் எட்டியே பார்க்காத எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தும் ஒரு காரணம் இல்லையா? மேடைக்கு மேடை மக்களைப் பார்க்காத முதல்வர், பத்திரிகை யாளர்களைச் சந்திக்காத முதல்வர், கேள்வி கேட்க முடியாத முதல்வர்” என்றெல்லாம் இடதுசாரிகள் பேசினார்களே, இவை அத்தனையும் விஜயகாந்த்துக்கும் பொருந்தும் இல்லையா? ஒருஎதிர்க்கட்சித்தலைவர் எப்படிப்போர்க்குணத் துடன் செயல்பட முடியும் என்பதற்கும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை எதிரிலிருந்து எப்படித் தீர்மானிக்க முடியும் என்பதற்கு இன்றைக்கும் தமிழகத்தில் அண்ணாவின் காலகட்டம் நம் நினைவிலிருக்கும் உதாரணம். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு எதிரான கருணாநிதியின் செயல்பாடுகளும் அசாத்தியமானவை. விஜயகாந்துடன் ஒப்பிடுகையில் கடந்த காலங்களில், கருணாநிதிக்கு எதிராகப் பல மடங்கு சிறப்பாகச் செயல்பட்டவராகிறார் ஜெயலலிதா. இன்றைக்குத் தமிழகம் பெருமிதமாகப் பேசும் 69 இடஒதுக்கீடு வந்த வரலாற்றில் ஆளும்கட்சியான அதிமுகவுக்கு இணையாக அன்றைய எதிர்க்கட்சியான திமுகவுக்கும் பங்கிருக்கிறது இல்லையா? சட்டசபையில் பேச முடியவில்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லும் விஜயகாந்த் மக்கள் சபையில் சாதித்தது என்ன?
தனிநபர் வழிபாட்டு அரசியல், குடும்ப அரசியல், வாரிசு அரசியல் எது ஒன்றிலும் விஜயகாந்த்தின் தேமுதிக விதி விலக்கல்ல. திமுக, அதிமுகவாவது ஆட்சிக்கு வந்த பின் ஊழல் குற்றச்சாட்டுக்களில் அடிபட ஆரம்பித்தவை. விஜய காந்த் மீது இப்போதே தேர்தல் பணப் பேரம் குற்றச்சாட்டுகள் அடிபடுகின்றன. சொந்தக் கட்சியினரே பல கதைகளைப் பேசுகிறார்கள்.
மீண்டும் சினிமா கலாச்சாரமா?
தற்கொலை முடிவுகளையும் உள்ளடக்கியது. கட்சியின் எதிர்காலம், தேர்தல் வெற்றி, தோல்விகளைத் தாண்டி ஒரு கட்சியின் தேர்தல் முடிவுகளும் பிரச்சாரங்களும் உருவாக்கும் தாக்கங்களும் விளைவுகளும் பொதுச் சமூகத்துக்கு முக்கிய மானவை. கருணாநிதி, ஜெயலலிதா பாணி அரசியலுக்கு மாற்று என்று சொல்லி அவர்களை மிஞ்சும் விஜயகாந்தை முன்னிறுத்துவதைத் தாண்டி, இந்தத் தேர்தல் மூலம் இடதுசாரிகள் தமிழகத்திற்கு இழைக்கும் மிகப் பெரிய கேடு, சினிமா கவர்ச்சி அரசியலை மீண்டும் அடித்தட்டுமக்களிடம் தர்க்கரீதியாக கொண்டுசெல்வது ஒரு சங்கரய்யாவும் நல்ல கண்ணுவும் விஜயகாந்த் தலைமையை வலியுறுத்திப் பேசும் தாக்கம் என்னவாக இருக்கும்? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் சேரிகளில் எதிர்த்துப் பேசிவந்த சினிமா கவர்ச்சி அரசியலை மீண்டும் அவர்கள் கையாலேயே கொண்டுசேர்க்கும் திருப்பணியை இடதுசாரிகள் கூட்டணி சாதிக்கவிருக்கிறது.
ஒருவிதத்தில் வரலாறு திரும்புகிறது. எந்த திராவிடக் கட்சிகளுக்கு இன்றைக்கு முடிவு கட்டுவோம் என்று பேசு கிறார்களோ அந்த இரு கட்சிகளையும் இந்த அரை நூற் றாண்டும் மாறிமாறிச் சுமந்தவர்கள் இடதுசாரிகள்.
தமிழகத்தின் சினிமா அரசியல் கலாச்சார பிதாமகனான எம்.ஜி.ஆருக்கும் சினிமா கவர்ச்சி அரசியலின் பீடமான அதிமுகவுக்கும் ஊர் ஊராக தர்க்க நியாயம் கற்பித்தவர்கள் இடதுசாரிகள். இந்த அய்ம்பதாண்டு திராவிட அரசியல் அவலங்களில் இடதுசாரிகளுக்கும் பங்கிருக்கிறது. அன் றைக்கு திமுகவுக்கு மாற்றாக எம்.ஜி.ஆரை முன்வைத்தது போலவே இன்றைக்கு விஜயகாந்த்தையும் தர்க்கரீதியாக மாற்றாக முன்வைக்கிறார்கள் என்றால், இருகோடுகள் தத்துவப்படி இது சரியான மாற்றுதான்!

நன்றி : தமிழ் இந்து நாளிதழ்

Friday, September 25, 2015

திராவிட இயக்கத்தின் பிள்ளை காமராசர்!

- பழ. கருப்பையா
சட்டப்பேரவை உறுப்பினர்
காமராசர் ஒப்பற்ற தலைவர்; தலையாய ஆட்சியாளர்; அறிவு தெளிந்த வயதிலேயே தேசிய நீரோட்டத்தில் கலந்தவர்; விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு ஏறத்தாழப் பத்தாண்டுகளைச் சிறையில் கழித்தவர்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காகப் பத்து ஆண்டுகள் நாடாண்டவர்!
"தாய் மகனை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தியபோது, "விடுதலைக்குப் பிறகு பார்க்கலாம்' என்றவர்! ஆனால் அவருடைய வயதைப் போக்கிவிட்டுத்தான் விடுதலை வந்தது!
முறைசார்ந்த பள்ளிக் கல்வியைப் பெற்றவரில்லை; ஆனால் இணையற்ற அறிஞர்களுக்கு இணையாக அரசியல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் அவரை ஏராளமாகப் படிக்க வைத்தது!
அவர் அரசியலில் இணைந்த காலம் எம்மான் காந்தி இந்த நாட்டை வழி நடத்திய காலம்!
தன்னலமின்மை, உண்மை, தூய்மை, தியாகம், தேசியம், எந்த ஒன்றிலும் அறிவு சார்ந்த பார்வை என்னும் இவையே பொது வாழ்வின் அடிப்படை நிலைப்பாடுகள்! இவற்றில் நனைந்து ஊறி வளர்ந்தவர்தான் காமராசர்!
அரசியல் என்றால் "அகப்பட்டுக் கொள்ளாமல் அகப்பட்டதைச் சுருட்டுவது' என்னும் "அரிய அரசியல் தத்துவம்' அறியப்படாத காலம் அது!
சாதிகள் இருந்தன; ஆனால் அவை தலைதூக்கி ஆட முடியவில்லை; அவற்றிற்குப் பொதுவாழ்வில் எந்தப் பங்களிப்பும் இல்லை. மதத்தின் நிலையும் அதுதான்!
தாய் தளைப்பட்டிருக்கிறாள் என்னும் நிலை, "நாம் ஒரு தாய் மக்கள்' என்னும் உணர்வுப் பெருக்கத்திற்குக் காரணமானது!
1907-இல் வெள்ளைக்கார ஆட்சி வங்காளத்தில், இசுலாமியர்கள் மிகுதியும் வாழ்ந்த பகுதியைக் கிழக்கு வங்காளமாகத் தனித்துப் பிரித்தபோது, இசுலாமியர்களும் இந்திய சமயத்தவர்களும் ஒன்றாக இணைந்து, "நாங்கள் இந்தியர்கள்; எங்களைப் பிரிக்க நீ யார்?' என்று கடுமையாகப் போராடியதன் விளைவு, அந்த பிளவு மூடப்பட்டு மீண்டும் ஒரே வங்கமாக்கப்பட்டது. அந்தப் பிரிவினையை உண்டாக்கிய தலைமை ஆளுநர் கர்சான், பாரதியால் "கர்சான் என்னும் குரங்கு' என்று வாயார வசைபாடப் படுகிறார்!
ஆனால் அந்த வங்கப் பிரிவினையோடுதான் இந்திய விடுதலை மலர முடிந்தது என்னும் கால முரண் வேறு கதை!
ஆயினும் வங்கப் பிரிவினை நிகழ்ந்து சீர்செய்யப்பட்ட சிறிது காலத்தில் தமிழ்நாட்டில் "பார்ப்பனரல்லாதார் இயக்கம்' என்றொரு இயக்கம் பிட்டி தியாகராயர் தலைமையில் முளைவிட்டது!
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றும் நீதிக்கட்சி என்றும், பல்வேறாக அது அறியப்பட்டாலும், அதனுடைய அடிப்படை பார்ப்பன மறுப்பே!
அடிமட்ட நீதிபதியிலிருந்து உயர்நீதிபதி வரை, அரசு அலுவலகங்களில் அடிநிலை எழுத்தரிலிருந்து, வெள்ளைக்காரனின் அதிகாரப் பகட்டில் ஒளிரும் நிருவாக சபை உறுப்பினர்கள் வரை, வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்று எல்லா வகை அலுவல்களும் அதிகாரங்களும் பார்ப்பனமயமாய் இருந்த காலம் அது!
கல்விக்குச் சாதியில்லை என்பதும், மேல், கீழ் என்னும் வேற்றுமை இல்லை என்பதும், கல்வி வாயில்கள் அனைவருக்கும் பொது என்பதும் வெள்ளைக்காரனால் நமக்கு ஏற்பட்ட நன்மைகளிலெல்லாம் பெரிய நன்மை!
கடலனைய பார்ப்பனரல்லாத பெருங் கூட்டத்தில் புதிதாகப் படித்துவிட்டு வந்த சிலருக்குக் கூட அலுவலுமில்லை; அதிகாரமுமில்லை என்பது சூட்டைக் கிளப்பியது!
அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசு முழுக்கப் பார்ப்பனவசமாகி இருந்தது!
ஆங்கிலக் கல்வியின் முதற் பயனைப் பெற்றவர்கள் அவர்கள்தாம்! அதன் காரணமாக கோட்டைக்கு நெருக்கமாகி வெள்ளைக்காரனுக்கு நடைபாவாடை விரித்தவர்களும் அவர்கள்தாம்; "வெள்ளைக்காரனுக்கு இந்த மண்ணில் என்ன வேலை!' என்று முதலில் கேட்டவர்களும் அவர்கள்தாம்!
வெள்ளைக்காரனைக் கனவிலும் கலவரப்படுத்திய கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுச் செக்கிழுக்கும் கொடிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகு, மீண்டும் ஒரு பார்ப்பனரல்லாத தலைமை காமராசர் வாயிலாகக் கிளர்ந்தெழும் காலம் வரை, காங்கிரசு பார்ப்பனப் பிடிக்குள்தான் இருந்தது!
வ.உ. சிதம்பரம் பிள்ளை காலத்திற்குப் பிறகு காங்கிரசு மிதவாதத் தன்மையை அடைந்துவிட்டது!
காங்கிரசுக்காகக் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிடுபவர்கள் மூவர் என்றால் அந்த மூவரும் சேலம் விசயராகவாச்சாரியார், டி. ரங்காச்சாரியார், டி.ஆர். ராமச்சந்திர ஐயர் என்பன போன்ற பெயருக்குரியவர்களாகத்தான் இருப்பார்கள்! அந்தக் காலகட்டத்தில் மயிலாப்பூர்க் குழுவின் தலைவராயிருந்த மயிலாப்பூர் வி. கிருட்டிணசாமி ஐயர் வெள்ளைக்கார அரசில் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்தார்!
வாஞ்சி ஐயர், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர் போன்றவர்கள் நாட்டுப்பற்றில் குறைந்தவர்களல்லர்; தியாகத்திற்குப் பின்வாங்கியவர்களும் அல்லர்!
ஆனால் சாதியால் மேல், கீழ் என்பதல்லாத வெள்ளைக்காரன் ஆட்சி போன பிறகு, ஏற்படப் போகும் காங்கிரசின் ஆட்சி உயர்வு, தாழ்வை நிலைநிறுத்தும் பார்ப்பன ஆட்சியாகவே இருக்கும் என்று பார்ப்பனரல்லாதார் இயக்கம் கருதியதால், அவர்கள் வெள்ளைக்காரனுக்குச் சார்புநிலை எடுக்கும் அளவுக்குச் சென்றார்கள்!
இந்தச் சார்பு நிலை வரலாற்றில் பெரும் அதிர்வை உண்டாக்கிய ஈரோடு வெங்கடப்ப நாயக்கரின் மகன் இராமசாமி விடுதலை அடைந்த நாளைத் "துக்க நாள்' என்று வெளிப்படையாக அறிவிக்கும் நிலைக்கு இழுத்துச் சென்றது!
ஒரு பெருந் தேசபக்தராகவும், காந்தி பக்தராகவும் விளங்கிய ஈ.வெ.ரா., காந்தி கள்ளுக்கடை ஒழிப்பைச் சமூக உருவாக்கப் பணிகளில் ஒன்றாகக் கொண்டபோது, அதற்காகத் தன் தோட்டத்திலிருந்த விலைபெற்ற ஐநூறு தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய பெருந்தகை; கதரைத் தலையில் தூக்கி விற்ற சீமான் வீட்டுப் பிள்ளை; தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராகத் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு பெருந் தலைவர், ஒருநாள் "எது தேசம்? எதற்கு அதன்மீது பக்தி? யார் இந்தக் காந்தி?' என்னும் தலைகீழ் மாற்றத்தை அடைந்தார் என்றால், அதற்குக் காரணம் என்ன என்பது வரலாற்றில் பெரிய கேள்வி அல்லவா?
அதற்கு அடிப்படையான காரணங்கள் பல உண்டு என்றாலும், காங்கிரசில் பெரியாரோடு சேர்ந்து பணியாற்றிய வ.வே.சு. ஐயரின் ஒரு நிலைப்பாடு, அந்த "ஈரோட்டு வெடிமருந்துக் கிடங்கு' தீப்பற்றிக் கொள்வதற்கும், அது வெடித்துச் சிதறி, தமிழ் நிலத்தில் ஒரு பூகம்பம் ஏற்படுவதற்கும் காரணமானது!
அண்ணல் காந்தி ஆங்கிலேயக் கல்வி நிறுவனங்களை மறுத்துத் தாய்மொழி வழியாகக் கல்வி என்பதை முன் வைத்ததை ஒட்டி சுதேசக் கல்வி நிறுவனங்கள் தோன்றின!
வ.வே.சு. ஐயர் அத்தகையதொரு கல்வி நிறுவனத்தைக் குருகுலம் என்னும் பெயரில் 1922-இல் சேரன்மாதேவியில் தொடங்கினார்!
காங்கிரசின் கல்விக் கொள்கையை வ.வே.சு. ஐயர் நடைமுறைப் படுத்த முன் வந்ததை ஒட்டி, காங்கிரசு அவருடைய நிறுவனத்திற்கு நிதி உதவி செய்தது; தனியார்களும் உதவினார்கள்!
ஆனால் குருகுலத்தில் உணவு உண்ணச் செய்யும்போது மாணவர்களை அமர்த்தி வைப்பதில் வேறுபாடு காட்டப்பட்டது என்பது பெருஞ் சலசலப்பை ஏற்படுத்தியது.
பார்ப்பனப் பிள்ளைகள் வேறு இடத்திலும், பார்ப்பனரல்லாத பிள்ளைகள் வேறு இடத்திலும் உணவு உண்ணுமாறு செய்யப்பட்டார்கள்!
சொ. முருகப்பா, வரதராசலு நாயுடு, அன்றையத் தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராக இருந்த ஈ.வெ.ரா. எனப் பலர் கொதித்தெழுந்தனர்! காந்தி வரையிலும் குறுக்கிட நேர்ந்தது!
"எங்களை இழிவுபடுத்துவதற்கா நாங்கள் பணம் கொடுத்தோம்? கொடுத்த பணத்தைத் திருப்பித் தாருங்கள்' என்றார் ஈ.வெ.ரா.!
"தருமம் செய்துவிட்ட பணத்தைத் திருப்பிக் கேட்கிறவர் நமது நாயக்கர் ஒருவர்தான்' என்று வ.வே.சு. ஐயர் நகையாடினாரே ஒழியப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவுமில்லை; முறையை மாற்றிக் கொள்ளவும் இல்லை!
""சன சமூகத்தில் இருக்கும் ஆசாரங்களை ஒட்டியே குருகுல ஆசாரங்களும் இருக்கும்'' என்னும் நிலைப்பாட்டில் திண்ணமாக இருந்தவர் வ.வே.சு. ஐயர்!
அருவியில் தவறி விழுந்த மகளைக் காப்பாற்றப் போய், தானும் தவறி விழுந்து வ.வே.சு. ஐயர் இயற்கை எய்தும் காலம் வரை இந்தச் சச்சரவு நீடித்தது.
பெரியார் காங்கிரசிலிருந்து வெளிவந்ததற்கு இடஒதுக்கீடு போன்ற இன்னும் பல காரணங்கள் உண்டெனினும், விடுதலை அடைந்த இந்தியாவில் பார்ப்பனரல்லாதாரின் நிலை எவ்வளவு இழிந்ததாக இருக்கும் என்று பெரியாரை உணரச் செய்தது சேரன்மாதேவி குருகுல நிலைப்பாடுதான்!
தன்மான இயக்கம் பிறக்கிறது. பார்ப்பனரல்லாதாரின் நலன் நீதிக்கட்சியினும் கூடுதலாக வலியுறுத்தப்படுகிறது.
"சமூகம் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் குருகுலமும் இருக்கும்' என்று அதை நியாயப்படுத்த முயன்றவர்களை முறியடிக்க வேண்டுமென்றால், சமூகத்தை மாற்றியமைக்க வேண்டுமெனப் பெரியார் எண்ணினார்.
பார்ப்பன எதிர்ப்பு நிலை வேகம் பெற்றது! நாம் திராவிடர்கள் என்னும் புதிய நிலை முன்னெடுக்கப்பட்டது. நம்முடைய மொழி வேறு; நாகரிகம் வேறு; பழக்கவழக்கங்கள் வேறு; சமூக மதிப்பீடுகள் (Social Values) வேறு என்பது பார்ப்பனரல்லாதாருக்கு விளங்குமாறு எடுத்துரைக்கப்பட்டது! பெரியார் இந்த அரும்பெரும் பணியை வெல்லத்தக்க வகையில் செய்வதற்கு அண்ணா பெருந்துணையாக இருந்தார்!
வ.வே.சு. ஐயர் காலத்திற்கு முந்தியும் பிந்தியும் காங்கிரசில் பார்ப்பனத் தலைமையே நிலைபெற்றிருந்தது. 1937ல் இராசாசி தமிழ்நாட்டின் முதல்வரானார்!
ஆனால் பெரியாரின் திராவிட இயக்கம் தமிழ்நாட்டைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பெரும் மாறுதல்கள் நிகழத் தொடங்கிவிட்டன!
காங்கிரசு பார்ப்பனர் கட்சி என்னும் நிலை காங்கிரசையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் பதவிக்குத் தேர்தல் வருகிறது.
காங்கிரசின் தலைமைக்குப் போட்டியிட வேண்டியவர்கள் அதைத் தங்களின் பிடியில் வைத்திருந்த இராசாசியும் சத்தியமூர்த்தியும்தான்! அவர்கள் ஒருவருக்கொருவர் பகை!
நாடு திராவிட உணர்வுகளுக்கு ஆளாகி நிற்கும் நிலையில் காங்கிரசு மக்களிடையே வாழ வேண்டும் என்றால், தாங்கள் தமிழ் மக்களின் கண்ணை உறுத்தாமல் பின்னால் இருந்துதான் இயங்கியாக வேண்டும் என்னும் நிலைக்கு இரு தலைவர்களும் உள்ளாகினர்.
எந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க முடியாமல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினாரோ, அந்தக் கட்சியின் பார்ப்பனத் தலைவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையைப் பெரியார் வெளியில் இருந்து ஏற்படுத்தி விட்டார்!
காங்கிரசு மக்களிடம் நிலை கொள்ள வேண்டும் என்றால், பார்ப்பனரல்லாத ஒருவரின் தலைமை மலர்ந்தாக வேண்டும் என்பது காலக் கட்டாயம்!
1940-இல் நடைபெற்ற அந்தத் தேர்தலில் சத்தியமூர்த்தி தன் சீடர் காமராசரையும், இராசாசி தன் சார்பாக சி.பி. சுப்பையாவையும் நிறுத்துகின்றனர்!
காமராசர் வெறும் இரண்டே இரண்டு வாக்குகளில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராகிறார். ஒரு பார்ப்பனரல்லாதார் தலைவராகி, அவருடைய அதிகாரத்தால் சத்தியமூர்த்தி செயலாளராக நியமனம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது!
ஆயினும் காமராசர் சத்தியமூர்த்தியை ஒரு குருவுக்குரிய இடத்தில் வைத்து இறுதி வரை போற்றினார்!
சத்தியமூர்த்தி காலத்திற்குப் பிறகு வலிமைமிக்க தலைவராக உருவானார் காமராசர்! பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்தார்! இறக்கும்வரை தமிழ்நாடு காங்கிரசு அவர் கைப்பிடிக்குள் இருந்தது.
1945-இல் திருப்பரங்குன்றத்தில் இராசாசிக்கும் காமராசருக்கும் நடந்த மோதலிலே காமராசர் மேலும் ஊன்றிக் கொண்டார்!
1952-இல் குற்றாலத்தில் குளித்து விட்டுக் காற்று வாங்கிக் கொண்டிருந்த இராசாசியை அழைத்து வந்து முதல்வராக்கினார்! அவருடைய கல்வித் திட்டம் "குலக் கல்வித் திட்டம்' எனத் திராவிட இயக்கத்தாரால் பழிக்கப்பட்டு, தமிழ்நாடு போர்க்களமானபோது, அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு இராசாசியிடம் காமராசர் வலியுறுத்தினார்! இராசாசி மறுத்துவிட்டுப் பதவியை உதறிவிட்டு வெளியேறினார்!
காமராசர் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். பத்தாண்டுகள் நிகரற்ற ஆட்சி நடத்தினார்! ஒரு நாள் அந்த நாற்காலியைப் புறங் காலால் எற்றி விட்டு தில்லி போனார்!
இராசாசி வெளியேற்றத்தோடு தமிழ்நாட்டு அரசியலில் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது. பெரியாரின் நோக்கம் முற்றுப் பெற்றது!
செயலலிதாவின் எழுச்சி அவரின் திராவிட இயக்க நுழைவின் காரணமாக வேறுவகையானது. அது தனி ஆய்வுக்குரியது!
பற்றற்ற மனநிலையினரான இராசாசியின் பார்ப்பனத் தலைமை, இன்னொரு பற்றற்ற மனநிலையினரான காமராசரின் பார்ப்பனரல்லாத் தலைமையில் வெல்லப்பட்டது!
பார்ப்பனப் பிடியிலிருந்த காங்கிரசு பார்ப்பனரல்லாதாரைத் தலைவராக ஏற்றாக வேண்டும் என்னும் காலநிலையைப் பெரியாரின் போராட்டமும், அவருக்குத் துணையிருந்த அண்ணாவின் அருந்தமிழ் ஆற்றலும் ஏற்படுத்தின!
காமராசரின் தனி ஆற்றலும் பெருமையும் தான் அவருடைய உயர்வுக்குக் காரணம் என்றாலும், பெரியாரின் திராவிட இயக்கம்தான், ஓர் எளிய பார்ப்பனரல்லாதாரின் பயணத்தை இயலும் நிலைக்கு உள்ளாக்கியது!
பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டிருக்காவிட்டால், பதினாறாம் லூயியின் வாரிசுகள்தாம் நாடாண்டு கொண்டிருப்பார்கள்! பிரெஞ்சுப் புரட்சி பதினாறாம் லூயியை ஒழித்துக் கட்டியது! காலியாக இருந்த அரியணையில் நெப்போலியன் ஏறி அமர்ந்து கொண்டான்.
அதனால் நெப்போலியனைப் பிரெஞ்சுப் புரட்சியின் பிள்ளை என்பார்கள் வரலாற்றாசிரியர்கள்!
அதுபோல, தலைவர்களுக்கெல்லாம் தலைவரான காமராசர் திராவிட இயக்கத்தின் பிள்ளை!
நன்றி: தினமணி 23.9.2015

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, July 6, 2015

நடராஜர் சிலையை சொல்லி- வாட்ஸ்அப் / பேஸ்புக்கில் பரவும் வீடியோ! - தமிழர்களே உஷார்! உஷார்!

தமிழர் வரலாற்றை மாற்ற முயலும் புது முயற்சி!

நடராஜர் சிலையை சொல்லி- வாட்ஸ்அப் / பேஸ்புக்கில் பரவும் வீடியோ!
தமிழர்களே உஷார்! உஷார்!
-க.பூபாலன்
சமீபகாலமாக  வாட்ஸ்அப்/முக நூலில் "நடராஜர் சிலையை" சொல்லி தமிழர்களின் வரலாற்றை காக்க வேண்டும்" என்ற ஒரு வீடியோ  செய்யப்படுகிறது.  அது எந்த அளவுக்கு போலியானது என் பதை தமிழர்களுக்கு புரியவைக்க தான் இந்த பதிவு.
அந்த வீடியோவில் நான் ஒரு  Physics Student  என்று சொல்லி. அய்ரோப் பிய அணு ஆராய்ச்சி கழகத்தின் வாச லில் சிதம்பரம் நடராஜர் சிலையை வைத்திருக்கிறார்கள் அது ஏன் என்று தெரியுமா?  என்று ஆரம்பித்து.....
கி.பி. 7, 8 மற்றும் 9ஆம் நூற்றாண்டு களில் சோழர்கள் கட்டிய கோயில்களை தெரிந்து கொள்ள வேண்டும்..... 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறி வியல் அறிஞர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டின்    தத்துவத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும்..... இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் சர். சி.வி. இராமன் (1930), அதன் பின் சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசு பெற்றார் (1983). அவர்கள் இருவருமே தமிழர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று  சொல்கிறார். ஆனால் எதைபற்றியும் முழுமையாக சொல்லவில்லை.
அடுத்து 1950-களுக்குப் பிறகு திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த தினால் தமிழர்களின் கலாச்சாரமும், கலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன என்று அரசியல் பேச ஆரம்பித்து. தி.மு.கவும், அ.தி.மு.கவும் இதர திராவிட கட்சிகளும் தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்ற போர்வையில். தமிழ் கலையையும், கலாச்சாரத்தையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
திராவிடகட்சி ஆட்சியால் இன்ஜினியரிங் கல்லூரி பெருகிவிட்டது அதனால் தாவரவியல், உயிரியல், வேதியியல் (Botany- Zoology-Chemistry) எல்லாம் அழிந்து வருகிறது. அது மட்டுமல்ல  அடிப்படை அறிவியல் -(Basic-science)- இல்லாமல் போய் விட்டது.
அடிப்படை அறிவியலை  வளர்ப்பதற்கு கோயில்களையும், தமிழ் சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும், யோகா கலையையும் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும் என்று அடிப்படை அறிவியலுக்கு   புது விளக்கத்தைக் கொடுக்கிறார்!
தமிழர்களின் கலாச்சாரத்தையும், கலையையும் வளர்க்க தடையாக இருப்பது திராவிடகட்சிகளின் மொழி-அரசியலும் சாதி-அரசியலும் தான் அதாவது தமிழ்மொழி வளர்ச்சியும், சாதி ஒழிப்பும் தான் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் கலையை வளர்க்க  தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்.
அது புரியாமல் நடராஜர் சிலைன்னு கடவுள் பெயரை சொன்ன வுடன் நம்ம தமிழன் அந்த வீடியோவை எல்லாருக்கும் வாட்ஸ்அப்/பேஸ்புக்கில்    பகிர்ந்து வருகிறான்! சரி அவருடைய நோக்கம் என்ன?
1. நடராஜர் சிலையை பற்றி கூற வேண்டுமா? இல்லை.
2.சிற்பக் கலையை வளர்க்க வேண்டுமா? இல்லை.
3. தமிழர் வரலாறை எடுத்து கூற வேண்டுமா? இல்லை.
4. நோபல் பரிசை பற்றி கூறி அறி வியலை வளர்க்க வேண்டுமா? இல்லை.
5. --அடிப்படை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பை வளர்க்க வேண்டுமா? இல்லை.
6. சாதிகள் ஒழிந்து எல்லோரும் சமத் துவமாக வாழ வேண்டுமா? இல்லை.
7.தமிழ் மொழியை வளர்க்க வேண் டுமா? இல்லை.
இப்படி எதுவுமே இல்லையென்றால்
1. அவருடைய நோக்கம் தான் என்ன?
திராவிட கட்சிகளை ஒழிக்க வேண் டும். திராவிட சிந்தனையை ஒழிக்க வேண் டும்.
2.    ஏன் ஒழிக்க வேண்டும்?
தமிழர்களிடம் மொழி உணர்வை வளர்த்ததும்! சாதி உணர்வை அழிப் பதும்! திராவிடர் கட்சிகள்தான் அத னால் திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும்.
3. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.  இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983) இருவரும் தமி ழர்களா?
இல்லவே இல்லை!. தமிழ் நாட்டில் வாழ்ந்த ஆரியர்கள் பார்ப்பனர்கள். தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் அவர்கள் தமிழர்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
தமிழ்பேச தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று ஆகிவிடமுடியுமா?
அப்படியென்றால் ஆங்கிலம்பேச தெரிந்தவர்கள் எல்லாம் ஆங்கிலே யர்கள் ஆகிவிடமுடியுமா?
மொழி என்பது ஒரு கருவி. அதை கற்றுக்கொண்டால் யார் வேண்டு மானாலும் பேசலாம். ஆனால் இனம் என்பது மக்களை அவர்களின் வரலாற்று நாகரிகத்தின்படி பிரிக்கப் படுவது. சர்.சி.வி. இராமன் நோபல்பரிசு பெற்ற ஆண்டு 1930, அப்போது தமிழர்களுக்கு பள்ளிக்கூடமே கிடையாது! படிக்கவும் முடியாது! ஆரிய-பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்க முடியும் அப்போது குலக்கல்வி முறை இருந்த காலகட்டம்!
அந்த அநீதியை எதிர்த்து தமிழர்கள் படிக்க உரிமை வேண்டும் என்று போராடியவர் தந்தை பெரியார்! அப்போது தோன்றியது-தான் திராவிடர் இயக்கம்!
இப்படி அய்யர் படிக்க முடிந்த காலத்தில் தமிழர்கள் படிக்கவே முடியாதபடி அடிமையாக வாழ்ந்த வரலாற்றை மறைத்து விட்டு.
நோபல்பரிசு வாங்கும் அளவுக்கு தமிழர்கள் இருந்துள்ளார்கள் என்று கூறுவது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி!
4.    கோயில்களை, பரத நாட் டியத்தை, தமிழ் சங்கீதத்தை பாடமாக சொல்லி கொடுக்க வேண் டும் என்பதன் நோக்கம் என்ன?
அப்போதுதான் மத சிந்தனையை வளர்க்க முடியும்; காரணம்
கோயில்கள்; கடவுள் என்ற நம்பிக் கையை வளர்க்க புராணக் கதையின் அடிப்படையில் உருவானது!
பரதநாட்டியம், தமிழ் சங்கீதம் போன்றவை உடல்மொழியை வெளிப் படுத்தும் ஒரு கலை! அறிவியல்; அறிவின் அடிப்படையில் விஞ்ஞானத்தை வளர்ப் பது! இப்படி ஒன்றுக்கொன்று தொடர் பில்லாததை பாடத்திட்டத்தில் வைத்தால் அறிவியல் சிந்தனையைவிட ஒரு மதத்தின் சிந்தனையைதான் அதிகமாக வளர்க்க முடியும்.
காரணம்  கோயில், பரதநாட்டியம், தமிழ்சங்கீதம் மூன்றும் இந்து மதத்தின் அடிப் படையில் போற்றப்படுபவை!.
5. கோயில்களையும் கடவுள் சிலை களையும் உருவாக்கியது தமிழர்களா?
கடவுள் சிலையை செதுக்கிய சிற்பி யும், கோயிலை கட்டிய கொத்தனார்கள் மட்டும்தான் தமிழர்கள்! ஆனால், கோயிலை கட்டச்சொல்லி மன்னர் களுக்கு ஆலோசனை கூறியது ஆரி யர்கள் பார்ப்பனர்கள்!
அதனால்தான் அந்த காலத்தில் கோயிலை கட்டிய தமிழனே கோயிலுக் குள் போகமுடியாத நிலை இருந்தது. அது பெரியார் போராட்டத்தின் விளைவாக ஒழிக்கப்பட்டு இன்று நாம் கோயிலுக்குள் போக முடிகிறது. அதற்கு உதாரணம் தான் இப்போ தும் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய இராஜராஜசோழன் சிலை கோயிலுக்கு வெளியில் உள்ளது.
அதுமட்டுமல்ல இன்றும் நாம் சாமி சிலை இருக்கும் கருவறைக்குள் செல்ல முடியாதே! அங்கு அய்யர் மட்டும்தான் செல்ல முடியும். அதனை எதிர்த்து திராவிட இயக்கம் மட்டும் தான் போராடி வருகிறது.
அதே போன்று கடவுளுக்கு அர்ச் சனை செய்யும் உரிமையும் தமிழுக்கு கிடையாது. ஆரியர்களின் சமஸ்கிருத மொழிக்கு தான் உண்டு! கோவிலையும் கடவுளையும் தமிழன் கண்டுபிடித் திருந்தால் அர்ச்சனை செய்யும் மொழி யாக தமிழ் இருந்திருக்கும். அந்த கட வுளுக்கும் தமிழ்மொழி புரிந்திருக்கும்!
அதனை வெளிக்காட்டுவது தான் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்! திருக்குறளில் எந்த ஒரு கோயி லையும், கடவு ளையும், சிலை யையும், மதத் தையும் போற்றி புகழக்கூடிய குறள் இல் லையே.
அதனால் தான் திருக்குறள் "உலகப் பொது மறை" நூலாக பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட் டுள்ளது.
மேலும் ஒரு உதாரணம் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்.  அவர் உரு வாக்கிய சமரச சன்மார்க்கத்தில் உருவவழிபாடு கிடையாதே! ஒளி வழிபாட்டை போற்றி அருட் பெருஞ் ஜோதி! தனிப்பெருங் கருணை! என்று தான் கூறுகிறார்.  திருவருட்பா அனைத்தையும் தமிழில் தான் எழுதினார்! பாடினார்!. சமஸ்கிருதத்தில் பாட வில்லையே! தமிழர் பண்பாட்டில் சிலைவழிபாடு இல்லை என்பதற்கான அடையாளம் தான் அது!
6. ஏன் மொழி அரசியல் என்று கூறுகிறார்?
தமிழ்மொழி உணர்வு வளரக் கூடாது. மொழியால் தமிழர்கள் ஒன்று படக்கூடாது, தமிழர்களின் வரலாற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் தான்.
ஓர் இனத்தில் தாய்மொழி உணர்வை குறைத்து விட்டால் அந்த இனத்தில் ஒற்றுமை வளராது. ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அல்லது அந்த இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால். முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும்.
அதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் இன்று தமிழர்களின் வயதை தமிழ் வருடபிறப்பின்படி கணக்கிட முடியாது. காரணம் தமிழ் புத்தாண்டை "எண் களின்". அடிப்படையில் கொண்டாடா மல் சமஸ்கிருத பெயர்களின் அடிப் படையில் கொண்டாடுகிறோம் இது ஆரிய பண்பாட்டு கலப்பினால் வந்த விளைவு.
அதுவும் பெயரை வைத்தும் தமிழர்களின் வரலாற்றைக் கணக்கிடக் கூடாது என்பதற்காக வெறும் அறுபது ஆண்டுகள்தான் தமிழ்ஆண்டுகள் என்று ஆபாச புராணகதைகளை கூறி உருவாக்கி வைத்துள்ளார்கள். இதை விட கேவலம் வேறு உண்டா?
அதை மாற்ற வேண்டும் என்று தான் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் ஐந் நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், புலவர்கள், சான் றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி முடி வெடுத்து இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பே திருவள்ளுவர் பிறந்துள்ளார். அதனால் திருவள்ளுவர் பெயரில் தமிழ் ஆண்டை கணக்கிட்டு  தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என முடிவு செய்தார்கள்.
அந்த கணக்குபடி இப்போது நடப்பது. திருவள்ளுவர் ஆண்டு 2046 ஆகும். இந்த வரலாறு எத்தனை இளை ஞர்களுக்கு தெரியும்? அப்படியே தெரிந் தாலும் அதன்படி நாம் கடைப் பிடிக்கிறோமா?
சிந்தியுங்கள்! இப்படி முடிவு செய்த வர்கள் யாரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. கடவுள் மீது நம்பிக்கை உள்ள வர்கள் என்பதை நன்கு உணர வேண்டும். காரணம் கடவுள் நம்பிக்கை என்பது வேறு. நம் இனத்தின் வரலாறு என்பது வேறு.
7.    மொழி அரசியல், சாதி அரசியல் என்று குற்றம்சாட்டுபவர் ஏன் மத அரசியலை பேசவில்லை?
மத அரசியலை பேசினால் ஸி.ஷி.ஷி. ஙி.யி.றி. போன்ற இந்து அமைப்புகளைக் குற்றம் சொல்ல வேண்டும். அப்படி குற்றம் சொன்னால் இந்து மத சிந் தனையை வளர்க்க முடியாது என்ற காரணத்தினால் திராவிடர் கட்சி களைத் திட்டுகிறார்கள். காரணம் திராவிடர் நாகரிகத்தில் கடவுள், மதம், சாதி என்று மனிதனை பிரிக்கக் கூடிய எந்த முறையும் கிடையாது.
ஏனென்றால் "திராவிடர்" என்பது ஒரு மதத்தை போற்றும் சொல் அல்ல அது ஒரு நாகரிகத்தை குறிக்கும் சொல். அப்படியொரு உயர்ந்த நாகரிகத்தின் மூத்த குடிமக்கள் தான் தமிழர்கள்.  அந்த நாகரிகத்தின் சிறப்பைதான் வள்ளுவர் குறள் 972-இல்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
என்று எழுதி பிறப் பினால் வேற் றுமைபடுத் தாமல் "பிறப் பினால் அனைவரும் சமம்" என்கிறார். அதனால் புரிந்து கொள்ளுங்கள். திராவிடர் கட்சிகளை ஒழிக்க வேண் டும், திராவிடர் சிந்தனையை ஒழிக்க வேண்டும். மொழி உணர்வை ஒழிக்க வேண்டும். என்று கூறினால் அதன் பொருள் தமிழர் நாகரிகத்தை ஒழிக்க வேண்டும், தமிழர் வரலாற்றை அழிக்க வேண்டும் என்பதன் நோக்கமாகும்.
அதனால் தமிழர்களே! இளை ஞர்களே விழிப்போடு இருங்கள்! வர லாற்றை கொஞ்சம் தெரிந்து கொள் ளுங்கள்.
திராவிட இயக்கம் ஒன்றும் திடீ ரென்று வானத்திலிருந்து குதிக்க வில்லை. அது ஒரு உயர்ந்த நாகரிகத்தின் பெயரில் தோன்றிய இயக்கம்!  அதனு டைய தோற்றம் ஒரு பரிணாம வளர்ச்சி போன்றது.
தமிழர்களின் நாகரிகத்தை  வாழ்வி யலுக்கு வழிகாட்டும் நெறியாக வள்ளுவர் திருக்குறளில் எழுதினார்.  "அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங் கருணை!" என்று சொல்லி தமிழர்கள் சாதி மத மூட நம்பிக்கையற்ற சமத்துவ சமூதாயமாக  வாழவேண்டும். என்று வள்ளலார் சமரச சன்மார்க்கத்தை தோற்றுவித்தார்.
சமஸ்கிருதத்தை புறக்கணித்து தமிழ்மொழியை காக்க வேண்டும் என்று கூறி தமிழர் வரலாற்றை காக்க தை- 1-_யை தமிழ் புத்தாண்டாக கொண் டாட வேண்டும் என்று மறைமலை அடிகளார் சொன்னார்.
இப்படி திருவள்ளுவர் காலம் முதல் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டிய தமிழ் அறிஞர்கள் நிறைய உண்டு ஆனால் அவர்களால் தமிழர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததே தவிர பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை காரணம் மதம் கடவுள் என்ற பயத்தை ஏற்படுத்திய ஆரியர் களின் சூழ்ச்சி.
அந்த சூழ்ச்சியை முறியடிக்கத் தான் 20ஆம் நூற்றாண்டில் பெரியார் சுயமரியாதை இயக்கம் என்று தொடங்கி திராவிடர் நாகரிகத்தின் பெயரில் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார். அதன் தொடர்ச்சியாக திராவிடர் இயக்கங்கள் அரசியலில் தோன்றியது,
அதன் விளைவு பல மாற்றங்கள் அடைந்து இன்று தமிழர்கள் ஏற்றம் பெற்றுள்ளார்கள்! இன்னும் நிறைய ஏற்றம் பெறவேண்டியுள்ளது. உங் களுக்கு தெரியுமா?
திருக்குறள் உலகறிய பரவியது திராவிடர் இயக்கத்தினால்.
வள்ளுவருக்கு உருவம், சிலை, கோட்டம் வந்தது திராவிடர் இயக்கத் தினால்.
வள்ளுவருக்கு பூணூல் போட்டு அய்யராக்கும் முயற்சி தடுக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்
வள்ளலாரின் ஒளி வழிபாட்டை ஒழித்து சிலைவழிபாடாக மாற்றும் முயற்சி தடுக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்!
மறைமலை அடிகளாரின் திருவள் ளுவர் ஆண்டு கணக்கீட்டை அரசு அலுவலகங்களில் நடைமுறைக்கு வந்தது திராவிடர் இயக்கத்தினால்!
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது திராவிடர் இயக்கத்தினால்!
சென்னை மாகாணம் "தமிழ்நாடு" என்று பெயர் மாறியது திராவிடர் இயக்கத்தினால்!
பெண்கள் உரிமைபெற முடிந்தது திராவிடர் இயக்கத்தினால்!
தமிழ்முறை சுயமரியாதை திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்!
கோயிலுக்குள் செல்ல முடிந்ததும் திராவிடர் இயக்கத்தினால்!
நாம் எல்லோரும் படிக்க முடிந்ததும் திராவிடர் இயக்கத்தினால்!
இப்படி சொல்லிகொண்டே போகலாம்............
இதையெல்லாம் யார் செய்தார்கள்? என்று யோசிக்காமல். ஏன் செய் தார்கள்? என்று யோசித்து பாருங்கள் அப்போது புரியும் தமிழர்களின் வரலாறு. காரணம் கடவுள், மதம், அர சியல் இவைகளுக்காக நம் வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. அதனுடைய ஒரு வடிவம்தான் இது போன்ற வீடியோக்களும்.
எதிலும் அரசியல் பார்வை என்பது வரலாற்றை மறைக்கவும், அழிக்கவும் உதவும், ஆனால் வரலாற்று பார்வை என்பது அந்த அரசியலையே மாற்றவும், தமிழர்களின் உரிமையை காக்கவும், மீட்கவும் உதவும். அதனால் சிந்தியுங்கள்!
நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம் இன்னும் மாற்றம் பெற வேண்டியது நிறைய இருக்கிறது. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நாம் மேலும் அறிவு பெற்று முன்னேற சிந்திக்க வேண்டும், செயல்பட வேண் டும்! அதற்கு பதிலாக நாம் வளர்ந்து வந்த நாகரிக முறையும்,  நம்மை வளர்த்த திராவிடர் சிந்தனையும், இயக் கத்தையும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால். ஒழிவது திராவிடர் இயக்கம் கிடையாது. தமிழர் இனம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்! போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்!
திராவிடர் நாகரிகத்தை தமிழர் வரலாற்றை
அழித்தும் திரித்தும் ஆரியத்தை புகுத்தியவர் ஆரியர்! ஆய்ந்து ஆதாரமாக்கி நூலாக தந்தவர் ஆங்கிலேயர்!
அழிந்து ஒழிந்துவிடாமல் போராடி வென்றவர் பெரியார்!
அவரால் பிறந்து வளர்ந்தது திராவிடர் இயக்கம்! தமிழர் நாகரிகத்தை வளர்ப்பது ஒன்றே நோக்கம்!
தமிழர் உரிமையை காக்கும், மீட்கும் இயக்கம்!
இதை நாம் புரிந்தால் நீங்கும் ஆரிய மயக்கம்! போற்றினால் ஓங்கும் சுயமரியாதையெனும் ஒழுக்கம்!
இது வரலாற்று உண்மை! இதை தெரிந்து- புரிந்து நடப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை!

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

கோடைக்கானலைக் கண்ட மிஷனரிகளும் குறிஞ்சி ஆண்டவர் வரலாறும்


-மு.வி.சோமசுந்தரம்
தமிழைக் காதலித்த மிஷனரி
பேராயர் ராபர்ட் கால்டுவெல், ஜி.யு. போப், ஜோசப் பெஸ்கி இந்தப் பெயர்களெல்லாம், நெடுஞ்செழியன், அன்பழகன், இளம்வழுதி போன்ற தமிழ்ப் பெயர்களாக இல்லை. என்பது உண்மையே. ஆனால் அவர்கள் தமிழ் மொழியின்மேல் ஈடுபாடு கொண்டனர். தமிழ் இலக்கியங்கள் அவர்களை ஈர்த்தன.
ஆய்வு செய்வதில் ஆர்வம் கொண்டனர். தமிழ் மொழியின் செழு மையை, செம்மொழியின் சீர்மையை, உயர்வை உலகறிய எடுத்துக் கூறினர். கடல் கடந்து வந்து கைம்மாறு கருதாது கன்னித் தமிழின் மேன்மையைக் காசினி எங்கும் கொண்டு சென்றனர்.
இவர்களின் தொண்டினைப் போற்றும் நேரத்தில், உண்டு கெடுக்கும் ஓரினம், தமிழ்ப் பயிர்க் கொல்லியாக இருந்து தமிழ் நீச்சமொழி, தரம் தாழ்ந்த மொழி என கொச்சைப்படுத்தும் குடிலன்களாக வலம் வந்து கொண்டிருப்பது வேத னையை ஏற்படுத்துகிறது.
சமயமா? தொண்டா?
மேலே குறிப்பிட்ட மேலை நாட் டவர்கள், தமிழ் கற்கத் தமிழகம் வந்த வரல்லர். அவர்கள் சமயத்தைப் பரப்பு வதற்காக அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் மிஷனரி அமைப்பைச் சேர்ந் தவர்கள். சமயப் பணியை நெஞ்சில் ஏந்தி, பொதுத் தொண்டை களப் பணியாக மேற்கொண்டு செயல்பட்ட வர்கள்.
மிஷினரி மக்கள். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம், இங்கு மலை சூழ்ந்த பகுதியில் வாழும் பூர்வீகக் குடி மக்களின் முன்னேற்றம், நலம் கவனிக்கப்படாமல் இருந்து வந்தது. அவர்களின் தேவைபற்றி கருத்தரங்கு களில் பேசப்பட்டாலும், மிசோரம் மக்களின் தேவைகள் கவனிக்கபடா மலும். அவர்களின் குரல் எவர் காதிலும் விழாமலும் இருந்தது.
இந்த நிலைமையில் மிஷனரி தொண்டர்கள் மேற்கொண்ட அணுகுமுறையால், பழங் குடி மக்களின் உடை அணியும் முறை யில், பழக்கங்கள்முறையில்  கல்வியில், சுகாதாரத்தில் பெரும் மாற்றங்களைக் காண முடிந்தது. இன்று கல்வி வளர்ச்சியில் சிறப்பிடத்தைப் பெற்ற பெருமையுடன் விளங்குகிறது.
அயிஸ் வால் மாவட்டம் இந்திய நாட்டிலேயே எழுத்தறிவு பெற்ற முதன்மை மாவட்ட மாகத் திகழ்கின்றது. மிஷனரி தொண்டின் சிறப்பை அறிய ஓர் எடுத்துக்காட்டு மிசோரத்தின் வளர்ச்சி இத்தகைய முனைப்பு, ஈடுபாட்டை Missionary Zeal என்று சுட்டுவர்.
வேலூரும், மதுரையும்
இனி ஒரு மிஷனரி அமைப்பின் செயல்பாட்டைக் கூறுவோம். முதல் அமெரிக்க மிஷனரி சங்கம், தென் ஆசியப் பகுதிக்கு 1820ஆம் ஆண்டு வருகை தந்து சிலோனில் (இலங்கை) தன் சங்கத்தை  நிறுவியது. 1830இல் அந்த சங்கம் மதராஸ் (சென்னை) வந்தது. பிறகு ஆர்க்காட்டுக்கும், மதுரைக்கும் சென்றது.
உலகப் புகழ் பெற்ற மருத்துவமனையை வேலூரிலும் புகழ்மிக்க அமெரிக்கன் கல்லூரியை மதுரையிலும்  அமைத்தது. ஜாஃப்னா (யாழ்ப்பாணம்), மதுரை, வேலூர் போன்ற இடங்களின் கோடை வெப்பத்தை மிஷனரி சங்க உறுப்பினர்கள் தாங்க முடியாமல் தவித்தனர். ஆறு வாரங் களுக்கு குளிர்ந்த மலைப் பகுதியில் தங்கும் வசதி கொண்ட இடத்தைக் கண்டறிய தலைப்பட்டனர்.
கோடைக்கானலைக் கண்டனர்
உதகையைப்பற்றி சிந்தித்தனர். அங்கு முன்னதாகவே இங்கிலாந்து நாட்டு மிஷனரி மக்கள் தங்கியிருந்தனர். இவர்கள் அமெரிக்கர்கள். ஆங்கிலே யர்கள் கர்வம் கொண்டவர்கள் என்ற எண்ணம் இருந்ததால் உதகையைத் தவிர்த்தனர். மதுரைப் பக்கம் இருந்த சிறுமலையை ஆய்வு செய்ததில், போது மான குளிர்ச்சி கிடைக்காது என்று உணர்ந்தனர்.
அத்துடன் பல நோய்கள் உண்டாகலாம் என்று கருதினர். இறுதியாக கோடைக்கானல் மலையைத் தேர்வு செய்தனர். இதன்மூலம் தென் னிந்தியாவின் இரண்டாவது கோடை வாழிடம் தோன்றியது. 1845இல் அமெ ரிக்க மிஷனரி சங்கத்தினர், சன்னிசைட், ஷெல்டான் என்ற இரண்டு வீடுகளைக் கட் டினர். நாளடைவில் அமெரிக்க பன்னாட் டுப் பள்ளியும் செயல்படத் தொடங்கியது.
குறிஞ்சி ஆண்டவர்
அடுத்து கோடைக்கானல் என்றதும் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலரைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. அத் துடன் இணைத்து குறிஞ்சி ஆண்டவர் கோயிலைப்பற்றி கூறாமல் இருக்க மாட்டார்கள்.
ஆனால், அந்தக் கோயில் தோன்றிய வரலாற்று செய்தியைப்பற்றி பலருக்கும் தெரியாது. சில முறை அங்கு சென்றிருந்தும் தற்போதுதான் அறிய வந்தேன். அதன் வரலாறு சுவையானது. அது என்ன? இதோ:
ஆஸ்திரேலியா அம்மையார்
ஆர்.எல். ஹாரிசன் என்ற அம்மை யார் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஆங் கிலேய அம்மையார். அவருடைய தந்தையார், ஆஸ்திரேலியாவில் தங்கச் சுரங்கப் பணியில் இருந்தார். ஆஸ் திரேலியாவில் இருந்த பிரம்மஞான சபை எனப்படும் தியாசபிகல் கழகத் துடன் இளம் வயதில் ஹாரிசனுக்கு தொடர்பிருந்தது.
அதன் விளைவாக, மேலும் ஆன்மிகத் தெளிவு பெற வேண் டும் என்ற உந்துதலால் சிலோனுக்குச் சென்றார். அங்கு சர். பொன்னம்பல இராமநாதன் என்பவரைச் சந்தித்து அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார்.
பொன்னம்பல இராமநாதன்
இராமநாதன் தென்னாசியாவின் வரலாற்றில் பலராலும் அறியப்பட்ட இலங்கை வாழ் குடிமகன். அந்நாட்டின் முன்னணி வழக்குரைஞர் இங்கிலாந்தில் உள்ள சட்டக் கல்வி அளிக்கும் இன்ஸ் கோர்ட்டில் பயின்று தேர்வு எழுதி பட்டம் பெறாவிட்டாலும் சட்டக் கல்வி நிறுவனம் அவருக்கு மதிப்புறு பாரிஸ்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
அடுத்து சிலோன் சட்ட மன்றத்திற்கு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக 1879ஆம் ஆண்டில் அவரின் 28ஆவது வயதில் நியமிக்கப்பட்டார். சட்டசபை யில் குறைந்த வயதுடைய உறுப்பினர் என்ற சிறப்பையும் பெற்றார்.
சிலோனுக்கு உரிமைகள்
பத்து ஆண்டுகள் கழித்து சிலோன் தேசியக் கழகம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார் இராமநாதன். இந்த அமைப்பின் மூலம், சிலோன் விடுதலை பெற வேண்டும் என்பதற்கான முயற் சிக்கு வித்திட்டார். 1890ஆம் ஆண்டில், சிலோன் தீவு மக்களுக்கு அதிக உரிமைகள் வழங்க வேண்டும் என்ற மனுவை இங்கிலாந்து நாடாளுமன்றத் திற்கு அனுப்பினார்.
அதன் விளைவாக சிலோனில் வயது வந்தோர் அனைவருக் கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. சிலோன் மக்களின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், பல முறை அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தார்.
சட்டப்பணியும் சைவ சித்தாந்தமும்
நாட்டின் சட்ட வல்லுநராக விளங் கியவர் அரசியல், சட்டத்துறையை விட்டு ஆன்மிகத்தில் எண்ணம் அலை பாய்ந்தது. ஆனால், மக்கள் மன்றம் அணை போட்டு, ஆன்மிகப் பாதையி லிருந்து அரசியல் கூடாரத்துக்குக் கொண்டு வந்தது. அனைவருக்கும் வாக்குரிமை பெற்று, டிசம்பர் 13, 1911இல் நடைபெற்ற தென் ஆசியத் தேர்தலில் முதன் முறையாக சிலோன் பங்கேற்றது.
அந்த தேர்தலில், இராமநாதனைப் போட்டியிடச் செய்து, திருத்தி அமைக் கப்பட்ட சட்டமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்படும் வாய்ப்பை வழங்கினர். சிலோன் உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்படுவதற்குத் தகுதியானவர் இவர் என்ற கருத்து நிலவியது.
சிலோனின் சுவாமி விவேகானந்தர்
சட்டமன்றத்தினுள் அற்புதமாக செயல்பட்டு வந்த இராமநாதனுக்கு, வெளியில் ஆன்மிகத்தில் தடுமாற்றமில் லாத பற்று இருந்தது. இதற்குக் காரணம் இவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த அருள்பரமானந்த சுவாமிகளு டன் ஏற்பட்ட தொடர்பு என்பதாக அறிய முடிகிறது. இந்தத் தொடர்புக்குப் பிறகு, இராமநாதன் தஞ்சைக்கு வழக்கமாக வந்து போவதுமாக இருந்தார்.
விரைவில், இராமநாதன் சைவ சித்தாந்த தத்துவ முன்னோடிப் பரப்புரையாளராக மாறி விட்டார். சைவ சித்தாந்த தத்துவத்தில் அவருக்கு இருந்த ஆழமான அறிவும், புலமையும், ஈடுபாடும் அவரை 1906 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று ஓராண்டு சுற்றுப் பயணம் செய்து சொற்பொழிவு நிகழ்த் தச் செய்தது.
இந்தப் பணியில் அவர் திளைத்து விட்ட  காரணத்தால், சட்ட மன்ற உறுப்பினராக 13 ஆண்டுகள் போற்றத்தக்க வகையில் பணியாற்றிய பதவியை விட்டு விலகி விட்டார். சிலோ னில் அவரை, சிலோனின் சுவாமி விவே கானந்தர் என்று அன்புடன் அழைத்தனர்.
ஹாரிசன், லீலாவதியானார்
இராமநாதன், ஓராண்டு அமெரிக்கச் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அவரது மாணாக்கரும் செயலாளருமாக இருந்த ஆர்.எல். ஹாரிசன் அம்மை யாரும் உடன் சென்றார். சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பிய பிறகு பல ஆண்டுகள் இணையரை இழந்தவராக வாழ்ந்து வந்தவர், ஹாரிசன் அம்மை யாரை மணந்தார் அம்மையார் இந்து மதத்திற்கு மாறி லீலாவதி என்ற பெயரையும் வைத்துக் கொண்டார்.
அதன் பிறகு அவர்கள் பெரும் பகுதியை கோடைக்கானலில் கழித்து வந்தனர். அங்கு அவர்கள் அம்மனடி சிவனடி; முருகனடி; என்ற பெயரில் மூன்று வீடுகளைக் கட்டினார்கள்.
நினைவுச் சின்னம்
இராமநாதன் 1924இல் இயற்கை எய்தினார். இந்து விதவைகள் அணிய வேண்டிய உடை, வெள்ளைப் புடவை என்ற எண்ணத்தில் வெள்ளை உடையை லீலாவதி அம்மையார் அணிந்து வந்தார். பழனிமலை முருகன் கோயிலைப் பார்த்த திசையில் கண வரின் நினைவாக ஒரு கோயிலைக் கட்டி, தினமும் மதிய நேரத்தில் வழி பாடு செய்து வந்தார். கோயிலை ஒட்டிய மலைச்சரிவில் குறிஞ்சி மலர்ச் செடி களை நட்டு வைத்தார்.
மகளின் ஏற்பாடு
இராமநாதன், லீலாவதிக்கு ஒரு மகள் இருந்தார். அந்தப் பெண், இராமநாதனின் தஞ்சாவூர் குருவின் பெயரன் எஸ். நடேச பிள்ளையை மணந்தார். அவர்கள் சிலோனில் வாழ்ந்து வருகிறார்கள்.
லீலாவதி அம்மையார் மறைவுக்குப்பின் அவரின் மகள், மேலை நாட்டு வாழ்க்கை முறையில் வாழ்ந்து சைவ சித்தாந்த தத்துவத்தைக் கடைப்பிடித்த தன் தந்தைக்கு, இந்து மதத்தைத் தழுவிய ஆங்கிலேய துணைவியார் நினைவு சின்னமாக கட்டிய குறிஞ்சி ஆண்டவர் கோயிலை பழனி தேவஸ்தானத்திடம் ஒப்படைத்து விட்டார்.
இன்று கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க விரும்பி கோடைக்கானலுக்குச் செல்வோர் குறிஞ்சி ஆண்டவர் கோயிலைத் தேடிச் செல்ல தவற மாட்டார்கள். ஆனால் அதன் வரலாற்றைத் தெரிந்திருப் பார்களா? என்பது ஒரு கேள்விக் குறி.
(செய்தியின் மூலம்: திரு எஸ். முத்தையா, தி இந்து 4.5.2015இல் வழங்கியது.)
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...