Showing posts with label - தந்தை பெரியார். Show all posts
Showing posts with label - தந்தை பெரியார். Show all posts

Monday, November 6, 2017

மனிதர்கள் கழகம்


மேன்மைக்குரிய தலைவர் அவர்களே, தாய் மார்களே, பெரியோர்களே!

இன்றைய தினம் இந்த செயங்கொண்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை துவக்கி வைக்கும் பேறு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் கூறுகிற, கருதுகிற கருத்துகளை நீங்கள் கேட்கத்தான் கடமைப் பட்டவர்களே தவிர, அப்படியே நம்பக் கடமைப்பட்டவர்களல்ல. கேட்பவற்றை எல்லாம் நம்ப வேண்டுமென்றால், இதுவரை இந்த நாட்டில் என்னைவிட அதிகமாகக் கூறப்பட்ட கருத்துகள் ஏராளம்! ஆகவே, எதையும் நம்பாமல் அறிவு கொண்டு சிந்திக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனிதர்கள் கழகம் என்று பெயர் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு என்ற ஒன்று இருக்கிறது. உலகத்தில் எத்தனையோ கோடி ஜீவன்கள் இருக்கின்றன என்றாலும் அவைகளுக்கு எல்லாம் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு கிடையாது. மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. அப்படி இருக்கும்போது நாம் ஏன் பகுத்தறிவாளர் கழகம் துவக்க வேண்டும்?

இந்தக் கூட்டத்திற்கு வராதவர்கள் எல்லாம் பகுத்தறிவு அற்றவர்களா? பகுத்தறிவாளர் கழகத்தைச் சேராதவர்கள் எல்லாம் பகுத்தறிவு அற்றவர்களா? சிந்திக்க வேண்டும்.

நான் முன்பு ஒருமுறை ஒரு சுயமரியாதை மாநாட்டிற்கு குமாரசாமி ரெட்டியார் என்ற மந்திரியாரை அழைத்து இருந்தேன். அவர் வந்தும் பேசினார். அப்போது சொன்னார், "சுயமரியாதை மாநாடு என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். அப்படியானால், மற்றவர்களுக்கு சுயமரியாதை இல்லை என்று அர்த்தமா?" என்று கேட்டார். அதற்குப் பின்னால் நான் பேசும் போது, அவரைக் கேட்டேன். "நீங்கள் என்ன ஜாதி?" என்று. 'ரெட்டியார்' என்றார். கோவிலுக்குச் சென்றால் எந்த இடத்தில் நிற்கிறீர்கள்? ஓட்டலுக்குச் சென்றால் எங்கே உட்காருகிறீர்கள்? அதற்குக் காரணம் என்ன? நீங்கள் சூத்திரன் என்பதால் அல்லவா என்று கேட்டேன். அசட்டுச் சிரிப்பு சிரித்தார். கூடியிருந்த மக்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

விளையாட்டுக்காக நான் சொல்லவில்லை. இன் றைக்கும் நம் நிலைமை என்ன? சாஸ்திரப்படி மட்டுமல்ல - இன்றைய இந்தியாவின் அரசியல் சட்டப்படியும் நாம் சூத்திரர்கள்தான். எவன் கிறித்தவன் இல்லையோ, எவன் முஸ்லிம் இல்லையோ, அவனெல்லாம் பார்ப்பானைத் தவிர்த்து பகுத்தறிவுவாதி - நாத்திகன் உட்பட சூத்திரன் என்று இன்றைய சட்டத்திலும் இருக்கிறது.

இதற்கு ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் தீவிரமாக இருக்கிறேன். நான் 50 ஆண்டுகளாக இந்த நாட்டில், பகுத்தறிவு சுயமரியாதை பிரச்சாரம் செய்தும் வருகிறேன்.

நம்முடைய இலட்சிய சொல்லாக 'கடவுள் இல்லை - கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் - பரப்பியவன் அயோக்கியன் - வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்று கொண்டு இருக்கிறோம்.

உலகத்திலே இருக்கிற மற்ற நாட்டு பகுத்தறிவு வாதிகள் எல்லாம் புதிய புதிய கருவிகளை எல்லாம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் "படுக்காமலேயே" குழந்தை பெறக் கூடிய சாதனங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. கடுமையான வியாதிகளுக்கு எல்லாம் மருந்து வகைகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. இவை எல்லாம் பகுத் தறிவை பயன்படுத்தியதால் மற்ற நாட்டுக்காரன் செய்து காட்டிய சாதனை.

1952-இல் நம்முடைய சராசரி ஆயுள் 29. இன்றைக்கு நமது சராசரி ஆயுள் 52. இன்னும் நம் நாட்டு வைத்தியன் எல்லாம் செத்தான் என்றால் அது 75 ஆகி விடும். நம் நாட்டு வைத்தியன் செய்த புண்ணியமெல்லாம் நம் உயிரைக் கொன்று தீர்த்தது தான். வெள்ளைக்காரன் வைத்தியம் நாட்டில் வளர்ந்து விட்ட பிறகுதான் நம்முடைய ஆயுள் நீண்டு வருகிறது.

இன்றைக்குச் சொல்கிறேன், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கி.பி. 2,000 முடிவில் இந்திய மனிதனின் சராசரி வயது 75 ஆகவும், வெள்ளைக்காரன் வயது 110ஆகவும் ஆகப் போகிறது. நான் அப்போது இருக்க மாட்டேன். நீங்கள் அதை அனுபவிப்பீர்கள்.

எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நாக்கில் புற்று வந்தது. அந்தத் தழும்புக் கூட இன்னும் இருக்கிறது. டாக்டர் ரத்தின வேலு சுப்பிரமணியமும், டாக்டர் ராயும் வைத்தியம் பார்த்தார்கள்.

டாக்டர் ராய் எலக்டிரிக் டிரீட்மெண்டு செய்து என்னைப் பிழைக்க வைத்தார். இப்படி எல்லாம் மனிதனின் பகுத்தறிவு விஞ்ஞானத் துறையில்; இன்னும் எவ்வளவோ வளர்ந்து வருகிறது.

நம் நாட்டைப் பொறுத்த வரையில் என்னுடைய கவலை எல்லாம் நம்முடைய பகுத்தறிவு, நமது மானத்தைக் காப்பாற்றப் பயன்பட வேண்டும் என்பது தான்.

மற்ற நாட்டுக்காரன் பகுத்தறிவு எல்லாம் வளர்ந்து சந்திர மண்டலத்தில் வீடு கட்டிக் கொண்டு இருக்கப் போகிறான். உணவு முறையிலும் மாறுதல் ஏற்படப் போகிறது.

நம்முடைய நாட்டு மக்களைப் பொறுத்த வரையில், பகுத்தறிவுவாதிகளாக இருப்பதற்கு மான உணர்ச்சி வந்தாக வேண்டும். எவ்வளவு கேவலம்? இந்த நாட்டுக் குடிமக்களை நூற்றுக்கு மூன்று பேராக உள்ள ஒரு கூட்டம் தங்களுக்குத் தாசி மக்கள் என்று இன்றைக்கும் சொல்லி வருகிறது என்றால் இதைவிட ஒரு கேவலம் வேண்டுமா?

எனக்கு ஒருவனுக்கு மட்டும்தான் இந்த வேதனையா? 1925ஆம் வருடத்திலிருந்தே இதற்காக நான்தானே பாடுபட்டு வருகிறேன். எந்த அரசியல் காரன் பாடுபட முன்வந்தான்? அரசியல் காரனுக்கு எல்லாம் என்னோட சேர்ந்து இருப்பதற்கே பயம். காரணம், இவனோடு சேர்ந்தால் ஓட்டுக் கிடைக்காதே என்ற பயம்தான்!

நான் இவ்வளவு பாடுபட்டும் இன்னும் முடிந்த பலனை அனுபவிக்க முடியவில்லையே. நம்முடைய இயக்கத்தால் பார்ப்பானின் ஆதிக்கத்தை சகல துறை களிலும் முறியடித்து விட்டோம். கல்வி, உத்தியோகத் துறைகளில் எல்லாம் நாம் தலையெடுத்து விட்டோம். இவ்வளவும் அமைதியான புரட்சியாக செய்து முடித்து இருக்கிறோம்.

ஒரு பார்ப்பானைக் கொல்லவில்லை, ஒரு பார்ப் பனத்தியைக் கெடுக்கவில்லை. எந்தவித பலாத்காரத் தையும் கையாளாமல் இந்த மாறுதல்களைச் செய்து இருக்கிறோம்.

ஒரு பார்ப்பான் கூட மந்திரியாக இல்லாத ஒரு மந்திரி சபையை தமிழ் நாட்டில் நிலை பெறச் செய்து விட்டோமே! இது ஒன்று போதாதா நம்முடைய வெற் றிக்கு? அதுவும் எப்படிப்பட்ட ஆட்சி! இராமனை செருப்பால் அடித்து வெற்றி பெற்று வந்த ஆட்சி! இது என்ன சாதாரண காரியமா?

வேறு மதக்காரர் ஆளும் நாட்டில் அந்தக் கடவுள்களை இப்படிச் செய்து ஓட்டு வாங்க முடியுமா? இங்கு இராமனை செருப்பால் அடித்து ஓட்டு வாங்கி விட்டோமே! இது என்ன சின்ன காரி யமா? கடவுளாவது - வெங்காயமாவது என்று கருதும் அளவுக்கு மக்களுக்கு உணர்ச்சி வந்து விட்டதே!

மனிதன் ஒவ்வொரு துறையிலும் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் வருகிறான். இப்படி எல்லாத் துறைகளிலும் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டு விட்ட பிறகு, நம்மை தேவடியாள் மக்கள் என்னும் சூத்திர இழிவு ஏன் ஒழிய வில்லை? இதில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லையே, ஏன்?

மானம் இல்லாததாலா? உணர்ச்சி இல்லாததாலா? அறிவு இல்லாததாலா? இல்லை - இல்லை. இவை எல்லாம் மனிதனுக்குத் தாராளமாக இருக்கிறது. இருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை?

மனிதன் பகுத்தறிவைக் கொண்டு எல்லாவற்றையும் சிந்திக்கலாம். ஆனால், கடவுள், மதம் விஷயங்களில் மட்டும் மனிதன் பகுத்தறிவைப் பிரயோகப்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அவனைக் கொல்லலாம் என்று இருக்கிறது. இதை விட என்ன வேண்டும்?

இராமாயணத்திலே கூறப்பட்டு இருக்கிறது, பகுத் தறிவைப் பயன்படுத்தி கடவுள், மத விவகாரங்களில் எவன் தர்க்கம் செய்கிறானோ, அவனைக் கொன்றுவிட வேண்டும் என்று இராமன் கூறுவதாக ஒரு காட்சி வருகிறது. அந்த நிலைமைதான் இன்றைக்கும்.

காந்தியாரைத் தீர்த்துக் கட்டியதும் இதே கருத்துப் படிதான். சாஸ்திரத்தில் தீண்டாமை இருக்கிறது. அதில் கை வைக்க வேண்டும் என்று காந்தியார் முயற்சித்த போது சாஸ்திரப்படி அவரைத் தீர்த்துக் கட்டி விட்டான்.

இன்றைய அரசியல் சட்டம் கூட அப்படித்தான். அரசியல் சட்டத்தில் எதைத் திருத்தினாலும் 'அடிப்படை சட்டங்கள்' என்ற பகுதியை மட்டும் திருத்தக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறான். அரசியல் சட்டத்தில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தத் 'தீண்டாமை' என்ற வார்த்தை இன்வர்ட்டடு கமாவுக்குள் போடப்பட்டுள்ளது. அப்படிப் போடப்பட்டு இருப்பதற்குக் காரணம், அதற்குத் தனி அர்த்தம் இருக்கிறது என்பதுதான்.

வருகிற டிசம்பர் 8, 9 தேதிகளில் சென்னையில் ஒரு பெரிய மாநாடு கூட்டப் போகிறேன். சட்டப்படி இருக்கிற நம்முடைய இழி நிலையை மாற்ற தீர்மானம் கொடுக்கப் போகிறேன். மாற்றினால் போச்சு, இல்லாவிட்டால் போராடத்தான் வேண்டும். போராடினால் கடுமையாகத் தண்டிப்பான். ஏழாண்டு வரை கொடுப்பான். ஏற்கத் தான் வேண்டும். நீங்கள் எல்லாம் ஜெயிலுக்கு வரத் தான் வேண்டும். எதெல்லாமோ செய்து நம்மை ஒழித் துக்கட்டப் பார்ப்பார்கள்.  அதற்கெல்லாம் நாம் தயாராக இருக்க வேண்டும்.

இந்து இல்லை என்று எவன் ஒருவன் சொல் கிறானோ, அவனை விடுதலை செய்ய வேண்டும். அவனை அந்த இழிவுக்குள் புகுத்தக்கூடாது என்று கூறப்போகிறோம். அதற்கு இந்த ஆட்சி என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம்.

இந்த ஆட்சியை ஒழித்து விட்டால் மறுநாளே தீர்ந்தது. நம்முடைய இழிவை ஒழிக்க மறுநாளே ஏற்பாடு செய்து விடலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

அதற்கான ஆயத்தமான மாநாடு தான் நடக்க இருக்கும் சென்னை மாநாடு. மாநாட்டிற்கு ஆண்களும் பெண்களுமாய் இதுவரை மாநாடுகளில் கூடாத அளவுக்கு வந்து கூடியாக வேண்டும். எந்தெந்த வகையில் உங்களது ஒத்துழைப்பு இருக்க முடியுமோ அவ்வளவும் இருக்க வேண்டும். பண வசதி உள்ள வர்கள் தாராளமாக உதவலாம். ஜெயிலுக்கு வர வாய்ப் புள்ளவர்கள் ஏராளமாக வரவேண்டும்.

முதன்முதலில் வடநாட்டுக்காரன் கடையில் மறியல் செய்யலாம் என்று இருக்கிறேன். அவனுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்போம்.

பம்பாயில் சிவசேனைக்காரன் நம்மவர்களை அங்கு விரட்டவில்லையா?

அவன் அங்கு செய்யும்போது நாம் ஏன் இங்கு செய்யக்கூடாது?

துணியவேண்டும். பதவிக்குப் போகிற நாலு பேர் களை அதற்கென்று விட்டு விடுவோம். மற்றவர்கள் நம் முடைய இழிவை ஒழித்துக்கட்ட முயற்சிக்க வேண்டும்.

நமக்கு பதவி வந்தால் போதாது - நம்மில் பலர் இலட்சாதிபதியானால் போதாது. நமக்கு இன்றைக்கு தேவை எல்லாம் நமது மானம் மீட்கப்பட்டாக வேண் டும், நமது இழிவை ஒழித்தாக வேண்டும்.

இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்கப் போகிறேன். எத்தனை நாளைக்கு கத்தப்போகிறேன் நாளைக்கே பொசுக்கென்று போய்விடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கெதி என்ன? என் இடத்தில் உட்கார எவன் வரப்போகிறான். வர விரும்பு கிறவன் இருந்தாலும் எவனை இந்த அளவுக்கு மதிக்கப் போகிறீர்கள்?

மக்களிடம் மதிப்பு பெறுவது என்பது சின்ன காரியமா? அந்த மதிப்பைப் பெற எவ்வளவு பட்டாக வேண்டும்.

ஆகவே தோழர்களே! நாளைக்கு எனக்கு ஏதாவது என்றால் நம் கெதி அவமானகரமானதாகப் போய்விடும்; தலை எடுக்க முடியாது.

எனவே, நீங்கள் எல்லாம் நமது இழிவை ஒழிக்கும் காரியத்தில் துணிந்தாக வேண்டும்.

உங்கள் பெயரை எல்லாம் பட்டியல் போட்டுக் கொடுங்கள். யார் யாரை எப்படி எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறேன்.

எனக்காக, என் தயவுக்காக நீங்கள் போராட முன்வர வேண்டாம். உங்களுக்காக - உங்கள் பிள்ளைக் குட்டிகளுக்காக உங்கள் சந்ததிக்காக முன் வாருங்கள்.

(10.11.1973 அன்று ஜெயங்கொண்ட சோழபுரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - 'விடுதலை' 12.11.1973)

Monday, October 23, 2017

தென் இந்திய சீர்திருத்தக்காரர்கள் மகாநாடு ஆண், பெண் தன்மைகள்


பொது மக்களில் பெண்கள், தீண்டாதார்கள் என்ப வர்கள் மிக மோசமாக அழுத்தப்பட்டிருக்கிறார்கள் - புலிக்கு ஆடு கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும் - பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும் - ஆணுக்குப் பெண் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அடிமை எனக் கருதி நடத்தப்பட்டு வருகின்றார்கள். உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் ஏற்படுத்தியிருப்பாரானால் முதலிலேயே அந்தக் கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம்  பார்க்க வேண்டும். அய்யோ பாவம்! ஏழைக் கடவுள் மீது எத்தனை பழிதான் போடுவது என்று தோன்றினாலுங்கூட, அந்தக் கடவுளுக்கு இவ்வளவையும் சகித்துக் கொண்டு உயிர் வாழும்படியான அவசியம் என்ன வந்தது என்பது நமக்குத் தெரியவில்லை, கஷ்டமாயிருந்தால் ஒழிந்து தொலையட்டுமே என்றுதான் தோன்றுகின்றது.
உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் எல்லாவற்றையும் விட பெண்கள் நிலையே மிக மோசமானது. அதிலும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பதிவிரதைத் தன் மையை நினைக்கும்போது மனம் குமுறுகின்றது. அதாவது பதிவிரதம் என்கின்ற கற்புதான் அவர்களுடைய கடமை யாம். அதுவும் எத்தகைய பதிவிரதம் என்றால் தன்னைக் கொண்டவனாகிய புருஷன் பழைய சாதமும் சுடுகிறது என்றால் விசிறி எடுத்து விசிற வேண்டுமாம் - தண்ணீர் சேர்ந்தும் போது கணவன் கூப்பிட்டால் அப்படியே கயிற்றை விட்டுவிட்டு ஓடிவர வேண்டுமாம் - ஓடி வந்தால் மாத்திரம் போதாதாம் - அந்தக் கயிறும் பாத்திரமும் கிணற்றின் நடுவே திருப்பி வருமளவும் இராட்டினத்தில் தொங்கி கொண்டிருக்க வேண்டுமாம் - இல்லாவிடில் அந்தப் பெண் கற்புடைய பதிவிரதை அல்லவாம். எனவே, சகோதரர்களே! பெண்களுடைய நிலைமைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டுமென்கிறீர்கள்? அன்றியும் ஆண்கள் பிறவி மூர்க்கப் பிறவி அல்லது தூர்த்தப் பிறவி என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டுமென்கிறீர்கள்? உங்கள் கடவுள்கள் தங்கள் மனைவிகளை இப்படியா நடத்துகின்றன? தலையிலும், நாக்கிலும், மார்பிலும், தோளிலும், தொடைகள் மீதும் தங்களது மனைவிகளை வைத்துக் கொண்டிருக்கிற கடவுள்களைக் கற்பித்துக் கொண்ட உங்கள் புத்தி இவ்விதம் சென்றதற்குக் காரணம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை. பெண்கள் அடிமைகளாய் ஆக்கியதின் பலனாய் மக்கள் அடிமை களால் வளர்க்கப்பட்டார்கள். அடிமைகளால் வளர்க்கப் பட்டதன் பலனாய் மக்கள் சகலத்திற்கும் அடிமைகளா னார்களெனவே மக்கள் அடிமைத் தொழிலினின்றும் நீங்க வேண்டுமானால் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பெண்கள் அடிமை என்பதாகும் பெண்கள் அடிமை நீங்க வேண்டும்! முக்காலமும் பெண்கள் அடிமை நீக்க வேண்டும்.
பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால் முதலா வதாக அவர்களைக் கற்பு என்னும் சங்கிலியில் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும்; கட்டுப் பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலமும் கூடாது! கூடாது!! கூடவே கூடாது!! வாழ்க்கை ஒப்பந்தத் திற்காகவும், காதல் - அன்பிற் காகவும் இருவர்களையும் கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டப்படட்டும்; அதைப் பற்றி நமக்குக் கவலை யில்லை. ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு அடிமைப் படுத்துவதில் ஆசை கொண்ட மூர்க்கத்தனமே அல்லாமல் அதில் கடுகளவும் யோக்கியமும் பொறுப்பும் இல்லை.
இந்த விஷயங்களில் பெண்களுக்கு ஆண்கள் உதவி புரிவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் வேலையே ஆகும். வீரப்பெண்மணிகள் தாங்களாகவே தான் முன் வந்துழைக்க வேண்டும். அரசாங்கத்திலும் அநேகம் செய்யப்பட வேண்டிய இருக்கின்றது. ஆனால் பெண் அரசாட்சியால் (விக்டோரியா மகாராணி) ஆகாத காரியம் ஆண் அர சாட்சியால் ஆகுமா? என்பது சிலருக்கு சந்தேகமாயிருக் கலாம். பெண்களின் உறுதியான ஊக்கமும், உழைப்பும் இருந்தால் கண்டிப்பாய் முடியும். ஆனாலும் சமுதாய சீர்திருத்தக்காரர்கள் இதை மிகவும் முக்கியமாய்க் கருத வேண்டியது என்பதாக முன்னமேயே சொன்னேன். பழக் கத்தையோ, வழக்கத்தையோ, மதத்தையோ, வேதத் தையோ கருதிக் கொண்டு பயப்பட்டுவிடாதீர்கள்; காலதேச வர்த்தமானத்தைப் பாருங்கள். துருக்கியையும், ஆப்கானிஸ் தானத்தையும், சைனாவையும் பாருங்கள்! சைனாப் பெண் களுடைய காலுக்கு விடுதலை ஏற்பட்டுவிட்டது என்பதை நினையுங்கள்.
விதவைத் தன்மை
அடுத்த விஷயமாக உலக வாழ்க்கையில் இருந்து உயிருடன் பிரிக்கப்பட்ட சகோதரிகளான விதவைகள் என்பவர்களைப் பற்றி சில வார்த்தைகள் குறிப்பிட விரும்பு கின்றேன்.
ஜீவ சுபாவத்திற்கே பொருந்தாததான ஒரு நிபந் தனையை நமது சகோதரிகள் மீது சுமத்திக் கொடுமைப் படுத்துவதான விதவைத்தன்மை என்பது எந்த விதத்தி லாவது. பொருத்தமுடையதா என்பதை ஆலோசித்து பாருங்கள். இந்நிலை பெண்களை அடிமைகளாய் நடத்துகின்றோம் என்பது மாத்திரமல் லாமல் நம்மை போன்ற மக்களிடத்தில் நாம் எவ்வளவு அறிவீனமாய் நடந்து கொள்ளும் சுபாவமுடையவர்களாய் இருக்கின் றோம் என்பதற்கு அறிகுறியாகும்.
உலகத்தையும், நதியையும், சக்தியையும் பெண்ணாய் கருதும் இரண்டு பெண்டாட்டிக்கும் கம்மியில்லாத கடவுள் களையுடையதும் 1000, 10000, 60000 பெண்டாட்டிகளைக் கட்டிக்கொண்ட ராஜாக்கள் ஆண்டதுமான இந்த நாட்டில் பெண்கள் வதைக்கப்படுகின்றார்கள்!! உதைக்கப்படுகிறார் கள்! அதிலும் விதவைத் தன்மையால் மிகவும் வதைக்கப்படுகின்றார்கள்!.
பெண்கள் சம்பந்தமான வேறு எந்த காரியத்திற்காவது ஆண்கள் தங்கள் சுயநலத்தைக் கொண்டு கொடுமைப் படுத்துகிறார்கள் என்று சொல்லுவதானாலும் இந்த விதவைத் தன்மையை எதற்காக கற்பித்தார்கள் என்பதே நமக்கு விளங்க மாட்டேன் என்கிறது.
இதில் எவ்வித அறிவுடைமையும் இருப்பதாக நமக்கு விளங்கவில்லை இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் என்பதும் அறியக் கூடவில்லை. ஒரு சமயம் சந்நியாசி களையும் அதிதிகளையும் உத்தேசித்து இப்படி ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்பதாகக் கருதினார்களா அல்லது பெண்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது ஆதலால் இம்மாதிரி செய்வதன் மூலம்; மற்றப் பெண் களுக்கு புருஷன் கிடைக்கட்டும் என்று செய்தார்களா அல்லது வேறு என்ன காரணத்திற்காக இப்படிச் செய்தார்  கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கே முடியாததா யிருக்கின் றது. எப்படி இருந்தாலும் இதைப் போன்ற முட்டாள்தனமும், சித்திர வதைக் கொப்பான கொடுமையானதும், இனி அரைகணமும் பொறுத்துக் கொண் டிருக்க முடியாததுமான காரியம் வேறு இல்லை என்றே சொல்லவேண்டும்.
இந்த விதவைத் தன்மை ஒழிய வேண்டுமானால் பெண்கள் மிக்க தைரியமாகப் பாடுபடவேண்டும்; இது விஷயத்தில் மானம் இன்னது அவமானம் இன்னது என் பதாகவோ, அவர்கள் என்ன சொல்லுவார்கள், இவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதாகவோ சற்றும் கருதாமல் தைரியமாய் நினைப்பார்கள் என்பதாகவோ சற்றும் கருதாமல் தைரியமாய் வெளிக்கிளம்பிவிட வேண்டும்; தங்களுக்கு இஷ்டமான கணவன்மார்களைத் தாங்களே தெரிந்தெடுத்துக் கொண்டதாய் வெளிப்படுத்திவிட வேண்டும்; இவ்விஷயத்தில் சற்று சவுகரியக் குறைவு இருந்தாலும் அதை வலிமையுடன் பொறுத்துக் கொண்டால் அடுத்து வரும் சகோதரிகளுக்கு மிகுதியும் பலனளிக்கும்; அநேக நாடுகளில் இவ்வழக்கம் இருந்து வருகின்றது. நமது நாட்டிலேயே இவ்வழக்கம் நடைபெறுகின்றது. ஆகையால் இதில் இனி தாட்சண்யம் பார்ப்பதென்பது சற்றும் பொருந் தாதெனவே சொல்லுவேன். இதற்கு விதவைகள் அல்லாத ஸ்திரீகளும், கொடுமைப் படுத்தப்பட்ட ஸ்தீரிகளுக்குப் புருஷன் சம்பாதித்துக் கொடுப்பதிலும், அவர்களுக்குத் தைரியமூட்டி கொடுமைப்படுத்தப்பட்ட குடும்பங்களி லிருந்து வெளிப்படுத்தி தனியாகவும் சுயேச்சையாகவும் வாழச் செய்யத் தக்க வழியில் கவலை எடுத்துக் கொண்டு உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளுகின் றேன். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் இதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று கண்டதால்தான்.

ஜாதி வித்தியாசம்
ஜாதி வித்தியாசம் என்பது கற்பிக்கப்பட்டதே ஒழிய வேறில்லை. வலுத்தவன் இளைத்தவனை அடக்கி வைப்பது ஆகும். இது இன்னும் நிலைத் திருப்பது என்றால் இந்த நாடு மிருகப் பிராயத்தில் இருந்து மனிதப் பிராயத்திற்கு இன்னமும் வரவில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. எதற்காக ஒரு மனிதன் உயர்ந்த ஜாதியாகவும் மற்றொரு மனிதன் தாழ்ந்த ஜாதியாகவும் கருதப்படுகின்றான் என்பதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றதா? பிறவி யிலாவது வாழ்க்கை யிலாவது ஒழுக்கங்களில்லாவது அறி விலாவது வித்தியாசங்கள் காணப்படுகின்றதா? ஒன்றுமே இல்லையே! அப்படி ஏதாவது ஒரு வழியில் பிரித்திருந் தாலும் அதற்குச் சமாதானமானது சொல்ல முயற்சிக்கலாம். ஒரு காரணமும் இல்லாமல் பிற மாத்திரத்தில் எதேச் சதிகாரமாய் செய்யப்படும் கொடுமையாகத்தானே விளங்கு கின்றது. இந்த முறை மக்களின் ஒழுக்கத்திற்கே நேர் விரோதமாக இருக்கவில்லையா?
சகோதரர்களே! இந்தக் கொடுமையை ஒப்புக் கொள் ளாதவர்கள் இதை ஒழிக்க வேண்டுமென்று சொல்லாத வர்கள் யார்? இதற்காக எத்தனை காலமாக முயற்சி செய் யப்பட்டு வருகின்றது? ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கூடாது, அதற்கு ஆதாரம் இல்லை என்றும் சொல்லாத பெரியார் யார்? ஆயினும் ஏதாவது பலன் ஏற்பட்டிருக் கின்றதா? ஒரு சிறிதும் காணப்படவில்லையே! இதற்கு ஏதாவது ஒரு வழி செய்துதானே ஆகவேண்டும். இதற்குச் சரியான வழி அறிவினாலோ ஞானத்தினாலோ போதனை யினாலோ ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை. எனக்கு இல்லை. இது பெரிதும் அரசாங்கச் சட்டத்திலும், அரசியல் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தினாலும் தான் இதை (அதாவது இந்த உயர்வு- தாழ்வு வித்தியாசத்தை) ஒழிக்க முடியும்.
ஆனாலும் இது அரசியல் கூட்டமல்ல. இங்கு நான் அரசியலைப் பற்றிப் பேசப்போவதில்லை. அரசாங்கத்தில் நமது முன்னேற்றத்திற்குப் பலவித சட்டம் வேண்டும் என்பதுபோல எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கின்றோம். இதையும் ஏன் வேண்டும் என்கிறோம் என்றால் வலுத்தவன் இளைத்தவனை நசுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவேதான். இது சமுதாய சீர்திருத்தத்தின் பாற்பட்டதா இல்லையா என்பதைத் தாங்களே யோசித்துப் பாருங்கள்.  இன்னும் ஓர் அவசியமும் சொல்லுகின்றேன். அரசியல்காரர்கள் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் கேட்கும்போது எதற்காக வகுப்பு வித்தியாசத் தைக் கற்பிக்கவேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கலாமே என்கின்றார்கள். இதை நம்பி, இந்தப்படியே சமுதாய வாழ்க்கையில் இருக்கலாம் என்றாலோ மத இயல்காரர்கள் அது மதத்திற்கு விரோதம் என்கின்றார்கள் அம்மதத் தடையை நீக்க சட்டம் செய்யலாம் என்றாலோ மத ஆச்சாரியர்கள் மதத்தில் சர்க்காரோ சட்டசபையோ பிரவேசிக்க கூடாதென் கிறார்கள். எனவே இப்போதாவது ஒவ்வொரு வகுப்புக்கும் பிரதிநிதித்துவ உரிமை அளிக்க வேண்டிய அவசியம் என்று சொல்லுவது சரி என்று தோன்ற வில்லையா? அடுத்தபடியாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது என்ன வென்றால் ஜாதி வித்தியாசம் என்பதற்குள் தீண்டாமை என்பதாகும்.
- ‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 02.12.1928

Monday, August 21, 2017

அரசியல்வாதிகள் நடுக்கம்


தந்தை பெரியார்
மனித சமூகத்தில் பிராமணன் என்று  ஒரு ஜாதி மேலாக இருந்து பாடுபடாமல் வயிறு வளர்க்கவும், சண்டாளன் என்று ஒரு ஜாதி கீழாக இருந்து பாடுபட்டு பாடுபட்டு இராப் பட்டினியாய் இருக்கவுமான காரியங்கள் கூடாது என்றால் சங்கராச்சாரி என்னும் மதத்தலைவன் அது பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அதற்கு ஆதாரம் பிராமணனுடைய ரத்தத்திலும் சண்டாளனுடைய ரத்தத்திலும் இருக்கின்றது என்றும் சொல்வாரானால் மிஸ். மேயோ நூற்றுக்கணக்காய் ஆயிரக்கணக்காய் இந்த நாட்டில் பிறக்காததும் பிறந்த பெருமையை அடைய முடியாமல் போனதும் இந்தியாவுக்குப் பெருத்த நஷ்டமல்லவா என்று கேட்கின்றோம்.
மிஸ். மேயோ அம்மையார் இந்தியாவிற்கு வரப்போகின்றார் என்கின்ற சேதி எட்டியவுடன் இந்திய அரசியல்வாதி, தேசியவாதி, சீர்திருத்தவாதி என்கின்ற கூட்டங்களுக்குப் புலியைக்கண்ட ஆட்டுக்கூட்டங்கள் போல் நடுக்கங்கள் ஏற்பட்டுவிட்டதைப் பத்திரிகைகளில் காணலாம்.
மிஸ். மேயோ யார்? அவர் புலிக்குச் சமமானவரா? அந்தம்மையாரைக் கண்டால் இந்தியர்கள் நடுங்க வேண்டியதுதானா என்பவைகளை முதலில் யோசிப்போம்.
மிஸ். மேயோ ஒரு ஆங்கில மாது. அவர் 4, 5 வருடங்களுக்குமுன்  இந்தியாவுக்கு வந்து இந்துக்களின் நாகரிகம், பழக்க வழக்கம், மதச்சம்பிரதாயம், வாழ்க்கை முறை முதலியவைகளைப் பற்றி நன்றாய் அனுபவ ஆதாரங்களுடனும், தக்க சாட்சியங்களுடனும் ஆராய்ந்து விசாரித்து அறிந்த உண்மைகளை ஒரு சிறிய புத்தக ரூபமாக்கி இந்தியத்தாய் என்னும் பேரால் உலக மக்களுக்கு வெளியிட்டவர்.
அந்தம்மையார் வெளியிட்ட உண்மைகளை இதுவரை எவரும் அடியோடு பொய் என்று  யாரும் மறுத்துக்கூற முன்வரவில்லை. அரசியல் பிழைப்புவாதிகளும் அரசியல் பிழைப்புப் பத்திரிகைகளும் அம்மையைத் தூற்றின. சில கண்டன உரைகள் பகர்ந்தன. ஆனால் அவை பொய் என்று கூறயெவருக்கும் தைரியம் வரவில்லை.
தோழர் காந்தியார் அப்புத்தகம் இந்திய சீர்திருத்தவாதிகளுக்குள் என்றும் நிலைத்திருக்க வேண்டியதொரு ஆதாரம் என்றார்.
தோழர் ரவீந்தரநாத் டாக்கூர் மத சம்பந்தமான காரியங்களுக்கு இந்தியர் மாட்டுச் சாணியைச் சிறிது சாப்பிடுகின்றார்களே ஒழிய வேறில்லை என்றார்.
தோழர் லாலாலஜபதிராய் அவர்கள் அமெரிக்கா மாத்திரம் வாழுகின்றதா என்று சொன்னார். தென்னாட்டு தேசபக்தர்களுக்குத் தலைவராய் வாய்த்த தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் வேதம், சாஸ்திரம் ஆகியவைகள்தான் எல்லோரும் படிக்கக்கூடாது என்கின்ற நிர்பந்தம் இருந்து வருகின்றதே ஒழிய மற்றப்படி ஒன்றுமே படிக்கக்கூடாது என்கின்ற நிர்பந்தம் இல்லை என்று சொன்னார்.
மகாகாருண்ணியமும், நீதியும், நாகரிக ஞானமும், பகுத்தறிவும் கொண்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பிரிட்டிஷ் அரசாங்கமோ குழந்தைகளைக் கல்யாணம் செய்யக் கூடாது என்ற சட்டம் செய்ய ஏற்பாடு செய்தாகி விட்டது என்று உலகத்துக்குத் தெரிவித்து விட்டார்களே ஒழிய அதைச் சரியானபடி நீதி செலுத்தாமலே இருந்து வருகிறார்கள்.
மேயோ அம்மையார் இந்தியாவுக்கு வந்து இந்திய மக்கள் அவிவிவேகத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையும், மிருகத்தனத்தையும் வெட்டவெளிச்சமாய் ஆதாரங் களோடு விளக்கிக்காட்டி விட்டுப்போய் இன்றைக்கு 4, 5 வருஷங்களாகியும் அவை வெளியான புத்தகங்கள் பல பாஷைகளிலும் பதினாயிரக்கணக்காகச் செலவாகியும் நாளதுவரை அவ்வாபாசமானதும், காட்டுமிராண்டித்தனமானதுமான விஷயங்களில் 100க்கு 10 வீதம்கூட அரசியல்வாதிகளாலோ, தேசியவாதிகளாலோ, சீர்திருத்தவாதி களாலோ, அரசாங்கத்தாராலோ ஒழிக்க முடியவில்லை என்றால் இந்தப் பாழாய்ப்போன இந்திய நாட்டுக்கு ஒரு மேயோ - அதுவும் 5 வருஷத்திற்கு ஒரு தடவை வரும்படியான மேயோ போருமா? என்று கேட்கின்றோம்.
குழந்தை மணம் இன்றும் 4 வயது பெண் குழந்தைக்கு 25 வயது தடி ஆணை மணம் செய்கின்றார்கள். உள்நாட்டில் அந்த சட்டத்தை மீறினால் கேள்வியே இல்லை. வெளிநாட்டுக்குப் போய் அங்கே மணம் செய்து கொண்டு வந்துவிட்டால் பேச்சே இல்லை என்கின்ற முறையில் இன்று நம் நாட்டில் குழந்தை மணம் தடுப்பு இருந்து வருகின்றது. இதைக் கண்டு நம் தேசபக்தர்கள் வெட்கமடைய வேண்டியிருக்க மேலும் மிஸ். மேயோவைக் கண்டு எங்கள் யோக்கியதையைப் பற்றி நீ காகிதத்தில் எழுதினது போராதம்மா தயவு செய்து கல்லில் எழுதிவையம்மா என்று கேட்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.
கல்வி விஷயத்தைப் பற்றி இந்தியாவில் வெள்ளைக்கார நாகரிக அரசாங்கம் வந்து 200 வருஷமாகிய இன்றும் 100-க்கு 8 பெயரே அதுவும் மேல்ஜாதிக்காரர்களுக்குள்ளாகவே கல்வி பெரிதும் நின்றுவிடும் மாதிரியான முறையில் இருக்குமானால் மிஸ். மேயோவை மேளதாளம் வைத்து அழைத்து ஊர்வலம் செய்து வரவேற்பு வாசித்து நமது அரசாங்க ஆட்சியின் யோக்கியதையை உலகெல்லாம் பரப்பும்படி காணிக்கை வைத்துக் கேட்டுக்கொள்ள வேண்டாமா என்று கேட்கின்றோம்.
மனிதத்தன்மை விஷயத்தில் - ஆலயங்களுக்கு மக்கள் செல்லும் விஷயத்தில் இன்ன ஜாதியார் இவ்வளவு இன்ன ஜாதியார் இவ்வளவு தூரம்தான் போகலாம். இன்ன ஜாதியார் போகவே கூடாது என்கின்ற காட்டுமிராண்டி வழக்கத்தை நிறுத்த சட்டம் செய்யவேண்டும் என்று சொன்னால் சர்க்காரார் அது வெகுஜனங்களுக்கு இஷ்டமில்லை. ஆனதால் அதை எதிர்க்கிறோம் என்று சொல்லுவதும், காங்கிரசுக்காரர்கள் வெகுஜனங்களுக்கு விரோதமான காரியத்தைச் செய்யக்கூடாது என்று சொல்வதும், வைதீகர்கள் மதத்தில் அரசாங்கமோ, பொதுஜனங்களோ, காங்கிரசோ, சீர்திருத்தவாதிகளோ பிரவேசிக்கக்கூடாது என்று சொல்லுவதும், கடைசியாக அச்சட்டம் வாபீசு வாங்கிகொள்ள நேர்ந்ததும், அதுவும் காந்தியாரும் ராஜகோபாலாச்சாரியாரும் செய்த துரோகத்தினால் இச்சட்டம் வாபீசு வாங்கிக்கொள்ள நேர்ந்தது என்று சொல்ல நேர்ந்தது என்றால் மிஸ். மேயோ அம்மையாரின் விஜயம் இந்நாட்டுக்குஒரு தடவை அவசியமா, பலப்பல ஆயிரம் தடவை அவசியமா என்று கேட்கின்றோம்.

ஜீவகாருண்ய விஷயத்தில ஆடுமாடுகளை உயிருடன் கட்டிப்போட்டு அதன் வாயையும், மூக்கையும் பிடித்து அமிழ்த்திக் கொண்டு வெதரை நசுக்கி சரீரத்தில் சதை சதையாய் அறுத்து மாமிசத்தை எடுப்பதும், அந்த விதமான கைங்கரியத்துக்கு மதகைங்கரியம் என்ற சொல்லுவதுடன் தான் சித்திரவதைக் கொலையைப் பற்றி வேறுயாருக்கும் பேச உரிமையில்லை என்று சொல்லுவதுமான காரியங்கள் நேற்றும், இன்றும், நாளையும், முக்காலத்தலும் நடந்து வரக்கூடியதாய் இருக்கும்போது மிஸ். மேயோவை இந்தியாவுக்கு வரும்படி இதுவரை அழைக்காமல் இருந்தது இந்நாட்டு மக்கள் அவிவிவேகமல்லவா என்று கேட்கின்றோம்.
மனித சமுகத்தில் பிராமணன் என்று  ஒரு ஜாதி மேலாக இருந்து பாடுபடாமல் வயிறு வளர்க்கவும், சண்டாளன் என்று ஒரு ஜாதி கீழாக இருந்து பாடுபட்டு பாடுபட்டு இராப் பட்டினியாய் இருக்கவுமான காரியங்கள் கூடாது என்றால் சங்கராச்சாரி என்னும் மதத்தலைவன் அது பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அதற்கு ஆதாரம் பிராமணனுடைய ரத்தத்திலும் சண்டாளனுடைய ரத்தத்திலும் இருக்கின்றது என்றும் சொல்வாரானால் மிஸ். மேயோ நூற்றுக்கணக்காய் ஆயிரக்கணக்காய் இந்த நாட்டில் பிறக்காததும் பிறந்த பெருமையை அடைய முடியாமல் போனதும் இந்தியாவுக்குப் பெருத்த நஷ்டமல்லவா என்று கேட்கின்றோம்.
இப்படிப்பட்ட, குறைகள் கொடுமைகள், அவிவிவேகத்தனங்கள், மூர்க்கத்தனங்கள், காட்டுமிராண்டித்தனங்கள் இன்னமும் வண்டிவண்டியாய் இருக்க அவைகளைப்பற்றி சரியாய் பேசாமல் அவைகளை ஒழிக்க யோக்கியமாய் முயற்சிக்காமல் மிஸ்.மேயோ வருகிறாள், மீண்டும் மிஸ்.மேயோ, குப்பைக்காரி மேயோ வருகை என்றெல்லாம் தலைப்புக் கொடுத்து மேயோவை வைவதென்றால் இக்கூட்டத்தாருக்கு மனிதத் தன்மையோ, சுயமரியாதை உணர்ச்சியோ இருக்கின்றதா என்று கேட்கின்றோம்.
மிஸ். மேயோ அம்மையாரின் இந்திய விஜயத்துக்கு அரசாங்கத்தார் உதவி புரிந்ததாகவும் உள்உளவாய் இருந்ததாகவும் இனியும் அப்படிச் செய்வார்களா என்றும், இந்திய சட்டசபையில் கேள்விகள் கேட்கப்பட்டதாகப் பார்த்தோம். இதற்கு அரசாங்கம் வெண்டைக்காய் பதில் சொன்னதையும் பார்த்தோம்.
அரசாங்கத்தார் மேயோ அம்மையாருக்கு உதவி செய்ததற்காகவும், உள்உளவாய் இருந்ததற்காகவும் உண்மையான தேசியவாதிகள் மகிழ்ச்சி அடைய வேண்டுமே யொழிய அதற்காக குற்றம் கூறக்கூடாது என்பதே நமதபிப்பிராயம். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து 200-வருஷமான பிறகும், இந்திய மக்களது உழைப்பின் பயனை-அவர்களது ரத்தத்தைக் காய்ச்சி இறக்கிய சத்தை சமாதானமும் நீதியுமான அரசாட்சி என்னும் பெயரால் மாதம் 1க்கு 1000, 2000, 5000, 10000, 20000, 30000 ரூபாய்கள் என்பதாக லட்சக்கணக்கான பிரிட்டிஷார் அனுபவித்தும் இன்னமும் இந்தியா மிருகப் பிராயத்திலேயே இருந்து வருகின்றது என்றால் உலகோர் முன் இந்தியர்களுக்கு அவமானமா? பிரிட்டிஷ் ஆட்சி முறைக்கு அவமானமா என்பதை நன்றாய் நடு நிலைமையில் இருந்து பொதுநோக்குடன் ஆராய்ந்து பார்க்கும்படி தேசியத் திருக்கூட்டத்தாருக்கு ஞாபகப்படுத்துகிறோம்.
தோழர் காந்தி, ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்களே பெரும்பான்மையான ஜன அபிப்பிராயத்துக்கு விரோதமான காரியங்களைச் செய்யக்கூடாது என்றும் மேல் ஜாதிக்காரர்கள் சம்மதமில்லாமல் மத சம்மந்தமான பழக்க வழக்கங்களைப் பற்றி பேசக் கூடாது-தொடக்கூடாது என்றும் சொல்லி விடுவார்களேயானால் மேயோ போன்ற - அல்லாவிட்டால் லெனின் போன்ற - கமால் பாட்சா போன்ற அமானுல்கான் போன்ற வெளிநாட்டார்களால்தான் மதசம்பந்தமான ஆபாசங்களும் - கொடுமைகளும் குப்பைகளும் சாக்கடைகளும் ஒழிந்து இந்திய நாடு மனிதத் தன்மையை அடைய முடியுமே தவிர வேறில்லை என்றுதான் எண்ண வேண்டியிருக்கின்றது.
ஆகவே, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் இந்த மாதிரியான கூச்சல்களுக்குப் பயப்படாமல் மேயோ அம்மையாரை மறுமுறை அழைத்து வந்து இங்கு சமுகத்தின் பேராலும் மதத்தின் பேராலும் ஆட்சியின் பேராலும் இருந்து வரும் கொடுமைகளையும் குற்றங்களையும் உண்மையாய் அறிய அவகாசம் கொடுத்து அவைகள் சீக்கிரத்தில் ஒழிய உதவி செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.

- 'பகுத்தறிவு', கட்டுரை - 02.09.1934

Friday, July 14, 2017

'நவீன மகாபாரதம்!'

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சூதாட்டத்தில் பணம் சொத்து அத்தனையும் இழந்ததால், இறுதி யாக தனது மனைவியை சூதாட்டத்தில் வைத்து விளையாடிய கேவலம் நடந்துள்ளது. அதிலும் அவர் தோல்வியடைந்தார். இந்த நிலையில் சூதாட்டத்தில் வென்றவர்கள் அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக கணவர் உள்ளிட்ட ஏழு பேரை இந்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

ஜான்சாசவும் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார். அப்புகாரில் அவர் கூறியதாவது, "எனக்கும், கிஷோர் சர்மா என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இத்திருமணத்தில் எனது பெற்றோர்கள் பெரும் பொருட்செலவு செய்தனர். எங்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்த நிலையில் எனது கணவர் குடிப்பழக்கம் மற்றும் சூதாட்டத்தில் அடிமையாகிவிட்டார்.  

நீண்ட நாள்களாக சூதாடி எனது பெற்றோர் கொடுத்த பொருள்  மற்றும் எங்களுக்குச் சொந்த மான வீடு, நிலம் உள்ளிட்ட அனைத்தையுமே சூதாடி இழந்துவிட்டார். இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு கன்ஷியாம் சவுக்கிதார் மற்றும் நவுசத்ராம் இருவருடன் தவுலத்பூர் என்ற ஊரில் சூதாடியுள்ளார். இந்த சூதாட்டத்தில் என்னைப் பணயமாக வைத்து சூதாடியுள்ளார். 
  
சில நாள்களுக்கு முன்பு மூன்று பேர் எனது வீட்டிற்கு வந்து "உனது கணவர் எங்களிடம்  தோற்றுவிட்டார். அவர் தோற்றப் பணத்தை கொடு" என்று என்னை வற்புறுத்தினர். நான் மறுத்த போது உன்னையும் சேர்த்து பணயம் வைத்துதான் விளையாடி தோற்றுவிட்டார், என்று கூறி என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன் பிறகு அவர்கள் 'நடந்ததை வெளியே சொன்னால் குழந்தைகளைக் கொலைசெய்துவிடுவோம்' என்று மிரட்டிவிட்டுச்சென்றுவிட்டனர்.  

இவர்களுக்குப் பயந்து நான் எனது குழந்தை களை அழைத்துக் கொண்டு எனது தாய்வீடு சென்றுவிட்டேன். கடந்த சனிக்கிழமை அன்று மீண்டும் என் வீட்டிற்கு வந்த அவர்கள் "உனது கணவர் மூத்த பெண்ணையும் பணயமாக வைத்து தோற்றுவிட்டார், ஆகவே உனது மூத்த பெண்ணை எங்களுடன் அனுப்பிவிடு" என்று மிரட்டினர். நான் அவர்களை விரட்டிவிட்டேன், ஆனால் அவர்கள் மீண்டும் என் வீட்டிற்கு வந்து மூத்த பெண்ணை அவர்களுடன் அனுப்புமாறு தொடர்ந்து மிரட்டுகின்றனர்" என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  

இவரது புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்து விட்டனர். இதனை அடுத்து அவர் மாவட்ட காவல்துறை ஆணையரிடம் (இந்தூர் கிழக்கு)  புகார் தெரிவித்தார். இதனை அடுத்து காவல்துறை ஆணையர் இப்புகாரை விசாரிக்க ஆணையிட்டார்.   

விசாரணையில் இவரது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் சூதாடியதும், மனைவியைப் பணயம் வைத்து தோல்வியடைந்ததும் தெரியவந்தது, இதனைத் தொடந்து பெண்ணின் கணவர், அவரது நண்பர்கள் உட்பட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்து மதத்தின் இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமும் தான்! இரண்டு  இதிகாசங்களுமே பெண்களை இழிவுபடுத்தக் கூடியவை தான்!

கர்ப்பிணிப் பெண் என்று தெரிந்திருந்தும் தனது மனைவியைக் காட்டுக்கு அனுப்பியவன் இராமன். காதலை வெளிப்படுத்திய பெண்ணின் மூக்கையும், முலையையும் சிதைத்தவன் இராமனின் உடன் பிறப்பு இலட்சுமணன்.

மகாபாரதமோ 'அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி' என்று புது இலக்கணம் வகுத்தது! மனை வியை வைத்து சூதாடியிருக்கிறார்கள் - அந்தக் கலாச்சாரத்தின் தொடர்ச்சிதான்  - தாக்கம்தான் பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடந்தி ருக்கிறது. இந்த இலட்சணத்தில் 1000 கோடி ரூபாய் செலவில் மகாபாரதத்தைத் திரைப்படமாக எடுக்கப் போகிறதாம் மத்திய பிஜேபி அரசு,  இதைவிட வெட்கக் கேடு வேறு உண்டா? தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் 'இது இந்துமத அரசு' என்று முத்திரைப் பதிப்பதில்தான் பா.ஜ.க. முந்திரிக் கொட்டையாகத் துள்ளுகிறது. அரசமைப்புச் சட்டத் தில் வலியுறுத்தப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் காலில் போட்டு மிதிக்கும் மத்திய அரசு சட்டப்படி தொடரத் தகுதி உடையது தானா?

Monday, July 10, 2017

தலையங்கம்

ஜூலை 12

இவ்வாண்டு ஜூலை 12ஆம் நாள் - சமூக நீதி வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள்! ஆம், அன்றுதான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்  ஒன்று நடைபெற உள்ளது.

சமூகநீதி, மதச் சார்பின்மை, மாநில உரிமைகளை முன்னிறுத்தி சென்னைப் பெரியார் திடலில் ஒத்தக் கருத்துள்ள கட்சிகளின் அமைப்புகளின் தலைவர்களை, பிரதிநிதிகளை  - திராவிடர் கழகத்தின் சார்பில் அழைத்து ஒருங்கிணைத்து "ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு" உருவாக்கப்பட்டது (27.3.2017) அதன் ஒருங் கிணைப்பாளராக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை அக்கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

சமூகநீதி, மதச் சார்பின்மை, மாநில உரிமைகள் என்ற முப்பெரும் கோட்பாடுகளை மய்யப்படுத்தி இவ்வமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது.

4.7.2017 அன்று கூடிய அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 12.7.2017 புதனன்று காலை 11 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் சமூகநீதிக்கான மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய் யப்பட்டது.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான 'நீட்' எனும் அகில இந்திய நுழைவுத் தேர்வு ஒன்றினை நடத்திட மத்திய அரசும், இந்திய மருத்துவக் குழுவும் (விசிமி) முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
2016-2017 ஆம் ஆண்டிலேயே இது அறிமுகப் படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்புப் புயல் காரணமாக கடந்தாண்டு தமிழ்நாட்டிற்கு விலக்குக் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் நிரந்தரமாகவே 'நீட்' தேர்விலிருந்து விலக்குத் தேவை என்பதுதான் நமது உறுதியான நிலைப்பாடு. இன்னும் சொல்லப் போனால் சமூகநீதி கண்ணோட்டத்தில் 'நீட்' தேர்வு என்பது இந்திய அளவிலேயேகூட வேண்டாத - கூடாத - ஒவ்வாத ஒன்றாகும். தமிழ்நாட்டைப் போல மற்ற மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்புக் குரல் ஓங்க வேண்டியது அவசியமே!

பிஜேபி என்ற சமூக அநீதிக்கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் 'நீட்' தேர்வை எதிர்க்கின்றன.

தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் 'நீட்'டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குத் தேவை என்ற முறையில் இரு மசோதாக்கள் ஒரு மனதாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன (31.1.2017).
இந்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாட்டில் வற்புறுத்தியும், மாநில அரசு கடிதம் எழுதியும், மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.

இதில் வெட்கக் கேடு என்னவென்றால் தமிழ்நாடு அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கே அனுப்பிக்கூட வைக்கவில்லை மத்திய பிஜேபி அரசு.
இதைவிட மாநில அரசை ஒரு மத்திய அரசு எப்படி அவமதிக்க முடியும்? மாநில அரசை மட்டுமல்ல;  ஒட்டு மொத்தமாக தமிழ்நாடே கொந்தளித்து எழும் ஒரு முக்கியப் பிரச்சினையில் மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறது என்றால், தமிழ்நாட்டு மக்களையே அவமதித்ததாகத்தான் பொருள்படும்.

குடியரசுத் தலைவரிடம் ஏன் அனுப்பவில்லை என்ற கேள்வி தமிழ்நாட்டில் பொங்கி எழுந்த பிறகுகூட, மத்திய பிஜேபி அரசு கண்டு கொள்ளாதது - அதன் ஜனநாயக விரோதப் போக்கையும், சமூக நீதியில் அது கொண்டிருக்கும் கடுமையான வெறுப்புணர்வு நிலைப்பாட்டையும் தானே வெளிப்படுத்துகிறது!

தமிழ்நாடு அரசும் - சட்டப் பேரவையில் நிறைவேற்றி விட்டோம் கடிதமும் எழுதி விட்டோம் - அத்தோடு தமது கடமை முடிந்து விட்டது என்று 'கொட்டாவி' விடுவது கண்டனத்துக்குரியது!
தமிழ்நாடு சமூகநீதிப் பயிரின் தாய்ப்பூமி, இந்திய அரசமைப்புச் சட்டம் முதல் முதலாக திருத்தப்படுவதற்குக் காரணமான தந்தை பெரியாரின் மண்.

69 சதவீத இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாக நிலை நிறுத்திய மாநிலம் தமது நாடு. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது - பிற்படுத்தப்பட்ட  மக்களின் இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு ஆணையைக் கொண்டு வந்ததால், அது வரை தேர்தலில் தோல்வி என்றால் என்னவென்று அறியாத எம்.ஜி.ஆருக்குத் தமிழ்நாட்டு மக்கள் 'நல்லதோர்' பாடம் கற்பித்தனர்.

39 மக்களவைத் தொகுதியில் 37 இடங்களில் எம்.ஜி.ஆர். தோல்வியைத் தழுவினார் என்பதை எம்.ஜி.ஆர். பெயரால் ஆட்சி நடத்தும் அ.இ.அ.தி.மு.க புரிந்து கொள்ள வேண்டாமா?

தமிழ்நாட்டின் சமூகநீதியைப் புறக்கணித்த மத்திய பிஜேபி அரசுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த முகம் கொண்டு அ.இ.அ.தி.மு.க.ஆதரவுக் கரம் நீட்டுகிறது?
மத்திய பிஜேபி அரசிடம் சரணா கதி படலம் என்பதுதான் அஇஅதிமுக அரசின் முக்கிய அடையாளமா?
நடந்து முடிந்த 'நீட்' தேர்வின் முடிவுகள் நாடு எதிர் பார்த்தபடியே,  நாம் எச்சரித்தபடியே ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப்புற மக்கள் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளே நுழை யாதபடி இரும்புக் கதவைப் போட்டு விட்டது.

38.8 சதவீத இருபால் மாணவர்கள்தான் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர் என்றால் இந்தச் சமூக அநீதியை என்னென்று சொல்லுவது!

சமூகநீதி பிரச்சினையில் தந்தை பெரியாரின் தமிழ் மண் எப்பொழுதுமே தோல்வி கண்டதில்லை; எடுத்து வைத்த அடியையும் பின் வாங்குவதில்லை; வீதிகளில் மக்கள் படை வீறு கொண்டு எழுந்தால் எஃகு கோட்டைகளும் தூள் தூளாக ஆகாதா!

ஜூலை 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - அரிமா சேனை யின் போர் முழக்கமாக நடக்கட்டும்! கட்டுப்பாட்டுடன் மக்கள் குரல் விண்ணை முட்டட்டும்!!

கட்சியில்லை - ஜாதியில்லை - மதமில்லை - பேத மில்லை சமூக நீதித் தடத்தில் வெற்றிக் கொடி நாட்டிட அலை அலையாய் வாரீர்! வாரீர்!!

மதம் ஏன் ஒழிய வேண்டும்?

- தந்தை பெரியார்

மதம் என்பதைப் பற்றி இதற்கு முன் “குடிஅரசு”, புரட்சி முதலிய பத்திரிகைகளில் அநேக வியாசங்கள் பல தலைப் புகளின் கீழ் எழுதப்பட்டிருப்பது யாவருக்கும் தெரியும்.

மதமானது இன்று உலகில் மனித சமுகத்தின் வாழ்வைத் துக்க மயமாக்கி, ஜீவராசிகளில் மனிதனுக்கென்று உள்ள பகுத்தறிவை அடிமைப்படுத்தி ஒற்றுமையைக் குலைத்து, மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்து வருகின்றது என்பதற்கு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றோம்.

“தேசிய சிங்கங்களா”ன அலி சகோ தரர்கள் ஒரு காலத்தில் “நாங்கள் முதலில் மகம்மதியர்கள், பிறகுதான் இந்தியர்கள்” அதாவது முதலாவது மதம், பிறகு தான் தேசம் என்றும், “உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா” காந்தி “நானே இந்து மதத்தில் உருவம்!  நான் மூச்சுவிடுவதும், வாங்குவதும் இந்து மதத்திற்காகவே!!  நான் உண்பதும், உயிர் வாழ்வதும் இந்து மதத் திற்காகவே!!!” மதத்தைக் காக்கவே நான் சுயராஜ்ஜியம் கேட்கின்றேன்!!!! அதா வது இந்து மதம் தான் எனக்கு முதலும், கடைசியும், என்றும், “பழைய காங்கிரஸ் வாதி, மாசற்ற தேசாபிமானி, ஒப்பற்ற தியாகி என்று சொல்லப்பட்ட, பண்டித மதன் மோகன மாளவியா எனது மதத்தையும், எனது ஜாதியையும் காப்பதே எனது முதல் வேலை” என்றும், அதாவது வருணாசிரமத்தைக் காக்கத் தான் நான் தேசியவாதி என்றும், சொல்லும்படி செய்துவிட்டது என்றால் மதத் தின் ஆதிக்கத்திற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.

பெருத்த தேசாபிமானிகள், தேசத்துக்காகச் சகலத்தையும் தியாகம் செய்தவர்கள் என்று சொல்லும்படியான இவர்களே அவரவர்களின் மதத் தத்துவத்தை உள் எண்ணமாக வைத்து, அவற்றின் கொள்கைகளைக் காப்பதற்காகவே அவர்களது தேசாபிமானமும், உயிர் வாழ்வும் இருந்து வருகின்றது என்றால் மற்ற சாதாரணமான அதாவது மதத்தைத் தவிர மற்றொன்றும் அறி யாத பாமர மக்களின் யோக்கியதையைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.

வட்ட மேஜை மகாநாடு உடைந்து போனதும் அரசியல் சீர்திருத்தத்தில் இந்திய மக்கள் ஒன்றுபடாமல் போனதும் இந்து முலீம்கள் ஒருவரை ஒருவர் நம்பாமல் அரசியலில் தனித் தொகுதி வேண்டுவதற்கும், காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருப்பதற்கும், தீண்டப்படாத மக்கள் தனித்தொகுதி கேட்பதற்கும் கூட்டுத் தொகுதியில் தனிப் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படவேண்டும் என்று கேட் பதற்கும், மக்களை மக்கள் தீண்டப் படாதவராய் கீழ் மேல் ஜாதியாராய் கருதப்பட்டு வருவதற்கும் மதமே காரணமாய் இருந்து வருகின்றது என்பதையும் எவராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

மற்றும் மனித சமுக வாழ்வுக்கு ஏற்ற சீர்திருத்தங்கள், முன்னேற்றங்கள் என்பவைகளில் பெரும்பான்மையான மக்களால் அவசியம் என்றும், அறிவுக்கு ஏற்றது என்றும் கருதப்படும் அனேக விஷயங்களைப் பற்றி சட்டங்கள் செய்யவோ, சட்டங்கள் செய்தாலும் அமலுக்குக் கொண்டு வரவோ தடையாய் இருந்து வருவதற்கு மதங்களே காரண மாகச் சொல்லப்படுகின்றதா, இல்லையா என்று கேட்கின் றோம். ஆகவே மனித வாழ்க்கைக்கு மதங்கள் இதைவிட வேறு என்ன கொடுமைகள் செய்ய வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.

இப்படிப்பட்ட இந்த மதம் ஒன்று இரண்டு என்று இல்லாமல் நூற்றுக்கணக்காய் இருந்துகொண்டு பலவித கடவுள்களை சிருஷ்டித்து பலவித மேல் உலகங்களையும் மோட்ச நரகங்களையும் கற்பித்து அவரவர் கடவுளுக்குத் தனிப்பட்ட குணங்களும், அவரவர் மேல் உலகங்களுக்கு தனிப்பட்ட பூகோளங்களும், அவரவர்கள் மோட்ச நகரங் களுக்குத் தனிப்பட்ட வருணனைகளும் கற்பித்து மக்களை மயக்கி வருவதோடு வாழ்க்கை ஒழுக்கம், நடத்தை என்பவை களும் அவரவர் மதத்துக்கு ஒவ்வொருவிதமாய் கற்பிக் கப்பட்டு நடந்து வருவதும் அறிஞர்கள் அறியாததா?

இப்படிப்பட்ட மதத்தை மக்களுக்குள் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு சில நபர்கள் பாதிரி என்றும், முல்லா என்றும், தம்பிரான் என்றும், சங்கராச்சாரி என்றும், ஜீயர் என்றும், சாமியார் என்றும், பெயர்கள் வைத்துக் கொண்டு, உலகச் செல்வத்தில் தனிப்பெரும் பாகத்தை வீணாக்கி மக்களுக்குப் போதை ஊட்டிவருவதானது எவ்வளவு அவிவேகமான காரியம் என்பது சுய அறிவோடு பரிசுத்த தன்மையில் இருந்து யோசிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. இவைகளைப் பற்றி இன்னமும் விவரிக்குமுன் மதம் என் றால் என்ன என்று நாம் கருதிக் கொண்டு அதைப்பற்றி இவ்வளவு எழுதுகின்றோம் என்பதை வாசகர்களுக்கு விளக்க ஆசைப்படுகின்றோம்.

1. மதம் என்பது இவ்வுலக மானிட வாழ்வுக்கு ஏற்ற சட்ட திட்டங்கள் என்று சொல்லப்படுமானாலும்,

2. அல்லது மதம் என்பது இவ்வுலகில் மக்கள் கூடி வாழ்வதற்கு ஏற்ற ஒழுங்கு முறைகளைக் கொண்டது என்று சொல்லப்படுமானாலும்,

3. அல்லது (ஒருவர் கூறியபடி) மதம் என்பது மனிதனுக்கும் மற்ற ஜீவராசி களுக்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவது என்று சொல்லப்படு மானாலும், அவைகளைப் பற்றியெல் லாம் நாம் அதிகக் கவலைக் கொண்டு மதங்களை எதிர்க்க ஆசைப்படுவ தில்லை.

அப்படிக்கெல்லாம் அல்லாமல்.

1. மதமானது மனிதனுடைய ஜட சம்பந்தத்தை விட்டு விட்டு ஜடம் நீங்கின “ஆத்மா”வைப் பொறுத்ததென்றும்.

2. மதமானது இவ்வுலக வாழ்வை இன்ப துன்பத்தைத் துச்சமாக மதித்து விட்டு மேலுலக வாழ்வை முக்கியமாகப் பொறுத்ததென்றும்.

3. மதமானது கடவுளுக்கும் மனிதனுக்குமுள்ள சம்பந் தத்தை விளக்குவதைப் பொறுத்ததென்றும்

4. மதமானது பஞ்சேந்திரியங்களுக்கு விளக்கக்கூடிய வது என்ற தத்துவத்தை விட்டு பஞ்சேந்திரியங்களாலும் உணர முடியாத “ஆத்மார்த்தம்” ஆவிதத்துவத்தை, அசரீரியை அடிப்படையாகக் கொண்டது என்றும்,

5. மதமானது உலக போக போக்கியம் இன்ப துன்பம் ஆகியவைகளை அலட்சியம் செய்து “கடவுளின்” பாதார விந்தத்தை அடையவும், மோட்ச சாம்ராஜ்யத்தைப் பெறவும், ஏற்ற மார்க்கம் என்றும் சொல்லப்படும் மதங்களையும், மதத் தத்துவங்களையும் பற்றி நாம் பேசுகின்றோம், என்றாலும் முதலில் கூறப்பட்ட அதாவது,

மதம் மனித வாழ்க்கைக்கு ஏற்ற சட்டதிட்டங்களுக்கோ மக்களின் கூட் டுறவு வாழ்க்கைக்கு ஏற்ற ஒழுங்கு முறைக்கோ ஏற்பட்டது என்கின்ற விஷயங்களிலும் கூட நமது ஆட்சே பணையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதாவது இன்று நாம் மதங்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவை களில் மேற்கண்ட குணங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது ஒருபுறமிருந்தாலும், இந்தக் காரியங் களுக்காக மக்கள் செலவில் நடைபெறும் அரசாங்க நிருவாகமும், சிவில் கிரிமினல் சட்டதிட்டங்களும் அவைகளை நிறைவேற்ற நியாயதலம், தண்டனை, சன்மானம் ஆகிய முறைகளும் இருந்து வரும்போது இவை அல்லாத ஒரு சாதனம் அதாவது மதம் என்கின்ற விஷயம் எதற்காக இருக்க வேண்டும்?

அரசாங்கம், சட்டதிட்டம், நீதி நிர்வாகம், தண்டனை முதலியன இல்லாமல் மனித சமுகம் எப்படிப்பட்ட மதத்தினா லாவது கூடி ஒழுங்கு முறையுடன் வாழ முடியுமா? என்பதை யோசித்தால் மதம் மேல் கண்ட காரியங்களுக்கு உண்மையாய் பயன்படுகிறதா என்பது விளங்கும். இன்று எந்த தேசத்திலும், எந்த மதத்திலும், எந்த சமூகத்திலும் உள்ள மக்களின் சொத்தும், சரீரம் காப் பாற்றப்படுவது மதத்தினாலா, அர சாங்க சட்ட திட்டங்களினாலா என் பதை யோசித்துப் பார்த்தாலே, மதத் தின் காப்பும் நடப்பும் எப்படிப்பட்டது என்பது சுலபத்தில் விளங்கிவிடும். மதம் “எல்லா ஜீவராசிகளிடமும் அன்பாய் காருண்யத்துடன் இருக்க வேண்டும் என்று கற்பிக்கின்றது” என்று மதக்காரர்கள் சொல்லக்கூடும். ஆனால், மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளையும் பற்றி கவலைப்படாமல் மற்ற ஜீவராசிகளைக் கொல்லவும், தின்னவும், இம்சிக்கவும் தனக்கு இடையூறு என்று கருதினால் அழிக்கவும் செய்கிறான். ஆனால் மனிதனை மாத்திரம் அந்தப்படி செய்வதில்லை. இதற்குக் காரணம் மதமா?  அல்லது அரசாங்க சட்ட திட்டமா? என்று கேட்கின்றோம். மனிதனை அந்தப்படி எங்கோ ஒன்று இரண்டு சமயம் செய்வதாக வைத்துக் கொண்டாலும் அதற்காகத் தண்டனையை அடைகின்றான்.

ஆதலால் மதம் எங்கே பொது வான ஒழுங்கு முறையை, ஒழுக்கத்தைக் காப்பாற்றுகின்றது என்று கேட்கின்றோம்.

மதம் மனிதனுக்கும், மற்ற ஜீவராசி களுக்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவது என்று சொல்லப்படுவதும் மிகுதியும் பொருத்தமற்றது என்றே கருதுகின்றோம்.

மனிதனுக்கும் மற்ற ஜீவவர்க்கத்துக்கும் உள்ள வித்தியாசம் எந்தத் துறையினாலும், அறிய வேண்டுமானால், பிராணி வர்க்கத் தத்துவம் கொண்ட நூல்களைப் பார்த்தால் தாராளமாக மதசம்பந்தம் இல்லாமலே அவைகளைத் தெரிந்து கொள்ள லாம். அப்படியில்லாமல் மதத்தின் மூலம் அறிந்த ஜீவத் தத்துவங்கள் இன்று சிரிப்புக் கிடமாகத்தான் இருந்து வரு கின்றன.
மதம் மனிதனுக்கு மனிதன் வித்தி யாசம் கற்பிக்கின்றது. மிருகங்களை, பட்சிகளை, பூச்சிகளை, புல் பூண்டுகளை மனிதனைவிட உயர்வாய் மதிக்கின்றது. ஒரு மிருகத்தை உயர்வாய், ஒரு மிருகத்தை தாழ்வாய் கற்பிக்கின்றது. இந்த விஷயங்களுக்குப் பிராணி சாத்திரமே முக்கியமானதும், சரியானதுமே தவிர, மதத்தின் மூலம் அறியக் கூடியதாய் இருக்கும் தன்மை மிகவும் மோசமானதும், மூர்க்கத்தன மானதும், முட்டாள்தனமானது மென்றே சொல்லுவோம்.

மேற்கண்ட 1, 2, 3 விஷயங்களைப் பற்றிய வரையி லாவது மதத்தை ஒப்புக் கொள்ள செய்யலாமென்று பார்த் தாலும் கூட, அதுவும் அறிவுக்குப் பொருத்த மற்றதும், மூர்க்கத்தனம் கொண்டதுமான கருத்துக்களால் பாதகமடைகின்றது. அதாவது எந்த மதக்காரனும் தன்தன் மதத்தைப் பற்றிய ஆதாரங்களும், கொள்கை களுமே எந்த தேசத்துக்கும் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என்றும், அவைகளில் ஒரு முற்றுப்புள்ளிக் குறிப்புக் கோடு கூட மாறக் கூடாது என்றும், தன்தன் மதத்துக்குத் தலைவன் என்பவன் எவனோ அவனே உலக மதத்தலைவனாக இருக்க வேண்டும் என்றும் செய்யப்படும் பிடிவாதங்களும் முரட்டுத் தனங்களும் எந்த மதத்தையும் மனித சமுக வாழ்வுக்கு வழிகாட்டி என்று ஒப்புக் கொள்ள முடியாமல் செய்கின்றது.

ஆகவே மனித சமூகக் கூட்டு வாழ்வுக்கும், ஒழுக்க முறைக்கும் மதங்களைவிட அரசாங்கத் சட்டதிட்டங் களையே ஆதாரமாகக் கொள்வது தான் அறிவுடைமை என்று கூறுவோம். அதுதான் இன்று உலகமெங்கும் அனுபவத்தில் இருக்கின்றது என்றும் சொல் லுவோம். ஏனெனில் அவைகளில் காலத்துக்கும், தேசத்துக்கும், ஒத்தபடி, அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஏற்றபடி, மாற்றிக் கொள்ளவும், திருத்திக் கொள் ளவும் உரிமை இருக்கின்றது.
மதங்களில் அவை காணவே முடியாது அப்படி ஏதாவது முயற்சித்தாலும் கலகம், கொள்ளை, கொலை முதலியவைகளை உண்டாக்கி விடுகின்றது.
எனவே இந்த விஷயங்களே அதாவது இந்த உலக பிரத்தியட்ச மனித வாழ்வு சம்பந்தப்பட்ட இந்த விஷயங்களை மதத்தின் பயனாக இப்படி இருந்தால் இனி “மேலுலக” மனித னுடைய கண்ணுக்கும் மனதுக்கும் பஞ்சேந்திரிங்களுக்கும் எட்டாத விஷயங்களைப் பற்றிய மத போதனைகள் என்ன பயனைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்? எப்படிப்பட்ட தாக இருக்கும்?  என்பதைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.

மற்றபடி “மதம் சட சம்பந்தத்தை விட்டு விட்டு ஆன் மாவைப் பொறுத்தது” என்று சொல்லப்படுவதைப் பற்றிய தென்றால் இந்தக் காரணத்துக்காகவே மதங்களை எல்லாம் அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

ஆத்மா என்பதை இதுவரை ஒரு மனிதனும் அர்த்தத் தோடு உறுதிப் படுத்தவேயில்லை.

“4+3=10” என்று சொல்லிவிட்டு அந்த பத்தைப் பற்றியே விவரித்துக் கொண்டிருக்கின்றது போலவே, அதாவது 10அய் யார் யாருக்கு எப்படி பங்கிடுவது எங்கு எங்கு வைப்பது என்று வேண்டு மானால் பேசு. அதற்கு மேல் 4+3 எப்படி 10 என்று மாத்திரம் கேட்கக்கூடாது என்கின்ற நிலையில்தான் இன்று ஆத்ம தத்துவம் இருந்து வருகின்றது.

அதாவது ஆத்மா என்றால் என்ன?  அது எப்படி சரீரம் பெற்றது?  அதற்கு எப்படி கருமம் ஒட்டிற்று?  அதன் நடத் தைக்குக் காரணம் என்ன?  அது எப்படி மோட்சம் போகின் றது?  அது எப்படி மறுபடியும் சரீரம் பெற்று எழுகின்றது?  மனித ஆத்மா, மிருக ஆத்மா. பட்சி ஆத்மா, புழு பூச்சி ஆத்மா ஆகியவைகளில் உள்ள வித்தியாசம் என்ன?  என்பனவற்றைப் பற்றி எல்லாம் பேசலாம், விவரிக்கலாம். வால்யூம், வால்யூமாக புத்தகம் எழுத லாம். ஆனால் ஆத்மா என்றால் என்ன?  அது எப்படிப்பட்டது?  அப்படி ஒன்று இருக்க விஞ்ஞான சாத்திரம் (சையன்ஸ்) அல்லது ஜீவ தத்துவ சாதிரம் இடம் கொடுக்கின்றதா?  என்பதைப் பற்றி யாரும் எவ்விதக் கேள்வியும் கேட்கக்கூடாது. ஆத்மா இருப்பதாக அவர் சொன்னார், இவர் சொன்னார், மகமது சொன்னார், கிறிஸ்து சொன்னார், கிருஷ்ணன் சொன்னார், புத்தர் சொன் னார்,... என்று சொல்லி விடுவதும் “ஆத்மாவை நம்பாதவர் கடவுளை நம்பாத நாத்திகனை விடக் கேடானவன். மடையன், மட்டி” என்றும் “கடவுளை நம்பாவிட்டால் ஆத்மாவை நம்பித்தான் ஆக வேண்டும்” என்று சொல்லி விடுகிறார்களே ஒழிய காரண காரியங்களுடன் அறிவு அனுபவங்களுடன் பேசுகின்றவர்களே காணக் கிடைப்பதில்லை.

இது ஒரு புறமிருந்தாலும், ரூபம் இல்லாதவது  தத்துவமில்லாத மனதுக் குப் புரியாத விசயத்துக்காக இவ்வுலக பிரத்தியட்ச வாழ்க்கையையும், அடையும் இன்ப துன்பங் களையும் பற்றிய கவலை கூடாது என்றோ அல்லது இக் கவலையை விட “ஆத்மா” கவ லையே பிரதானமென்றோ, பெரிய தென்றோ சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட மதத்துக்கு உலகில் மனித ஜீவன்கள் இடம் கொடுக்கலாமா என்றுதான் கேட்கின்றோம்.

நிற்க “மதமானது மேல் உலக வாழ் வுக்கு ஆதாரமானது” என்று சொல்லப்படுமானால் முதலாவதாக மேல் உலகம் என்பது என்ன என்பதைப் பற்றி இதுவரை யாராவது, எங்காவது விளக்கி, இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்.

பூகோள சாதிர நிபுணர்கள், பூமியின் கீழ் மனதிற்கு எட்டக் கூடிய அளவு வரையும், பூமியின் மேல் ஆகாய மார்க்கமாக மனதிற்கு எட்டக் கூடிய அளவு வரையிலும் ஆராய்ந்து பார்த்து லட்சக் கணக்கான மைல் ஏன் கோடிக்கணக்கான மைல் தூரம் வரையில் ஆராய்ச்சி செய்து மேல் கீழ் நிலைமையை விளக்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு நிபுணத் துவர்கள் என்கின்ற நிலையிலும் அனேக வருஷ காலம் அதற்காகப் பாடுபட்டு உழைத்து அனேக கருவிகளின் உதவியைக் கொண்டு கண்டு பிடித்தும் சொன்ன பிரத்தியபடி அனுபவ ருஜுப்பிக்கக் கூடிய உண்மைகளே ஒழிய “ஞான திருஷ்டி” அதா வது ஒரு மனிதனுடைய புத்திக்கு திடீரென்று தோன்றிய விஷயம் என்று சொல்லப்படுவது போல் சொல்லப் பட்டதல்ல. அன்றியும் பள்ளிக் கூடங் களில், அல்லது பூகோள புதகங்களில் முறையே கற்பிக்கப்படாததும், காணப் படாதது மான விஷயங்களுமல்ல.

அப்படியிருக்கும்போது இந்த பிரத்தியட்ச உலக விஷ யத்தை விட்டு விட்டு மேலுலக விஷயத்தை பற்றிப் பேசுவது என்றால் அதில் அடங்கியிருக்கும் மவுடீகத் தன்மைக்கு எதை ஒப்பிடு வது என்பது நமக்கு விளங்கவில்லை.
இதுவரையில் மனிதன் மேல் உலகத்தை எப்படிக் கண்டு பிடித்தான்?  அதன் விதீரனத் தன்மை என்ன?  என்பவை களைப் பற்றிய உண்மை எதுவும் சொல்லப்படாமல் “முதலில் மேல் உலகத்தை நம்பு. பிறகு எப்படி வேண்டு மானாலும், அதாவது மோட்சம் எப்படிப்பட்டது? நரகம் `எப்படிப் பட்டது?  தண்டனை எப்படிப்பட்டது?  அது யாருக்குச் சொந்தம்?  பரம பிதாவா, அல்லாவா, வைகுண்ட நாதரா?  கைலாச வாசரா?  யார் அதற்கு எஜமான்?  என்பதைப் பற்றி எவ்வளவு வேண்டு மானாலும் வாதம் செய்” என்று கற்பிப்பதாய் இருப்பதைத் தவிர வேறு என்ன உண்மை, அல்லது அறிவுடைமை மேல் உலக விஷயத்தில் இருக்கிறது என்று கேட்கின்றோம்.
அதுபோலவே மதம் “கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது” என்று சொல்லப்படும் வார்த் தையும், அர்த்தமற்றதாகவே இருக்கிறது.

கடவுளைப் பற்றி அதாவது, கடவுள் என்றால் என்ன என்பதைப் பற்றி இதுவரை ஒரு ஆத்தீகனாவது, அல்லது கடவுள் தன்மை பெற்ற பெரியவர்களாவது விளக்கினவர்களே அல்ல. கடவுள் என்றால் “கண்ணுக்கும், மன துக்கும் எட்டாதது. ரூபமும் குணமும் இல்லாதது, சர்வ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளது என்று சொல்லிவிடுவதும், அதைச் சொல்லு கின்றவர்களே அந்தக் கருத்தை நம்பாமல் இருப்பதும் பிறகு அதற்கு முரணாகப் பேசுவதுமான காரியங்களுக்கே இதுவரை கடவுளைப் பற்றிய வாதங்களின் முடிவுகள் இருந்து வந்திருக்கின்றன.

மனத்துக்குட்படாத கடவுளைப் பற்றி மனிதன் எப்படி எந்த இந்திரி யத்தினால் உணர்ந்தான் என்று கேட்டால் அதற்குப் பதிலே இல்லை. குணமும் ரூபமும் இல்லாத வதுக்குச் செய்கை எது என்று கேட்டால் அதற்கும் பதிலே இல்லை. சர்வசக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுள் செயலில் நன்மை, தீமை, துன்பம் - இன்பம், மேல் - கீழ், சுகம் - துக்கம், மோட்சம் - நரகம், எப்படி உண்டாயிற்று என்று கேட்டால் இதற்கு பதில் இல்லை. அதைப்பற்றியெல்லாம் யாரும் கேட்கக் கூடாது கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாதவன் நாத்திகன் நம்பாவிட்டால் நரகம், அரச தண்டனை - ஆஸ்திகர்கள் கண்டனம் கிடைக்கும்” என்று மிரட்டுவதும், உருட்டுவதும் தவிர கடவுளைப் பற்றி வேறு விளக் கமே இல்லை.

சர்வ சக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுளால் சிருஷ்டிக்கப் பட்ட நான் ஏன் கடவுளை அறியமுடியவில்லை?  ஏன் கடவுளே இல்லை?  என்று சொல்லுகிறேன், என்று ஒருவன் கேட்டால், அது உன்னுடைய அகம்பாவம், உன்னுடைய மடமை, உன்னுடைய பாவச் செய்கை என்று சொல்லிக் கட வுளைவிட அவனைப் பெரியவனாக மதித்து இகழ்வதாயிருக் கின்றதே தவிர வேறு சமாதானமில்லை.

இப்படிப்பட்ட தத்துவங்கள் கொண்ட மதங்களைப் பற்றி, மக்கள் வேற்றுமை உணர்ச்சி கொண்டு ஒருவரை ஒருவர் வெறுத்து பலாத்காரச் செய்கைகள் செய்து மக்களைத் துன்புறுத்துவதென்றால் மதத்தை ஒழிக்காமல் இருக்க யாருக்குத்தான் மனம் வரும் என்று கேட்கின்றோம்.

மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங்களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற் படுகின்றதே ஒழிய சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.

கிறித்தவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்குக் ‘குடிஅரசு’ பத் திரிகை நிறுத்தப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி, எழுதின தற்காக புரட்சிப் பத்திரிகை நிறுத்தப் பட்டு போயிற்று.

இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்காக தினம் தோறும், நிமிஷம் தோறும் அடைந்துவரும் தொல்லையும், நசுங்கு சேட்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது. பார்ப்பனர்களை உத்தி யோகஸ்தர்களைக் கொண்ட போலீஸ் இலாகா, போடல் இலாகா, ரயில்வே இலாகா, நீதி இலாகா, நிர்வாக மற்றும் அனேக துறைகளில் கீழே இருந்து ஹைகோர்ட் நிர்வாகசபைவரையில் ஆங் காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து வரும் கஷ்டம், சித்திரவதைக் கொப் பாக இருந்து வருகின்றது.

நாம் மாத்திரமல்லாமல் நம்மைப் போல் கஷ்டப்படும் மக்கள் கோடிக் கணக்காக எல்லா மதங்களிலும் இருந்து வருகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.

மதமானது பணக்காரத் தன்மையைப் பிரதிபலித்துக் கொண்டும், அதை ஆதரித்துக் கொண்டும் இருந்து வருகின்ற சாதனமாய் இருப்பதால்; அதற்கு இவ்வளவு ஆதிக்கம் இருந்து வருவதில் அதிசயமில்லை. ஆதலாலே யேதான் மதங்கள் ஒழிக்கப்படுவதாலேயே மனித சமுகத்துக்கு ஒற்றுமையும் சாந்தியும் ஏற்படும் என்று கருதுவதோடு, பணக்காரத் தன்மையின் கொடுமையும் ஒழியுமென்று கருதுகின்றோம்.

சென்ற வாரத்தில் சென்னைக் கடற்கரையில் நடந்த மத சம்பந்தமான ஒரு முஸ்லீம் கூட்டத்தில் கலகம் ஏற்பட்டு ஒரு முஸ்லீமை ஒரு இந்து குத்தி விட்டானாம். முஸ்லீமும் அத னால் செத்துவிட்டான். நாளைய தினம் “ஒரு கிறிஸ்தவன் அதை விசாரித்து உண்மை கண்டு இந்துவை தண்டிக்கப் போகிறான்” என்றாலோ அதில் அதிசயமில்லை. ஒரு கிறிஸ்தவன் முகம்மது நபியைப் பற்றி ஏதோ எழுதிவிட்டால் முகம்மதியர்களுக்கு ஆத்திரம் வருகின்றதும், ஒரு முகம் மதியன் கிறிஸ்துவைப் பற்றி எழுதிவிட்டால் கிறிஸ்தவ னுக்கு ஆத்திரம் வருவதும், இது போலும் இந்துக்களுக்கும், கிறிஸ்து முகம்மதியர்களுக்கு நேருவதும், அதற்காக கொலை, கொள்ளை, கொடு மைகள் நடப்பதுமான காரியங்கள், அதுவும் இன்று நேற்று அல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக, அதுவும் இந்தியாவில் மாத்திரம் அல்லாமல் அய்ரோப்பா, அரேபியா, ஆப்பிரிக்கா முதலிய எல்லா தேசங்களிலும் நடந்து வருகின்றது என்றும் மதம் மக்களுக்கு கூட்டு வாழ்க்கையை யும், ஒற்றுமையையும் சகிப்புத் தன்மையையும் வாழ்க்கை ஒழுங்குகளையும், ஒழுக்கங்களையும் போதித்து வருகின்றதா? என்றும் கேட்கின்றோம்.

மதம் ஒழுக்கத்தை, கூட்டு வாழ்க்கை ஒழுங்கு மனிதர் களிடத்தில் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய தன்மையை எங்கே எப்படி முறையை கற்பித்து இருக்கின்றது என்று மத பக்தர்களைக் கேட்கின்றோம்.

- பகுத்தறிவு - தலையங்கம் - 09.09.1934

Monday, July 3, 2017

மேடைப் பேச்சு குறித்து பெரியார்

சுற்றுப்பயணத்தின் போது சேலம் செவ்வாய்ப்பேட்டை சுயமரியாதைச் சங்கத்தில் மேடைச் சொற்பொழிவுக் கழகத் துவக்க விழாவில் தலைமை வகித்துப் பேசிய தந்தை பெரியார், மேடைப் பேச்சுக்கு வகுத்துக் கொடுத்த இலக் கணம் இதில் பேச்சு எப்படி இருக்க வேண்டும். பேச் சாளனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் குறித்து ஒரு சுவையான விளக்கம் அளித்தார். சுவை மிக்க தந்தை  பெரியாரின் சொற்பொழிவு இலக்கணப் பேச்சு இது:
இளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமே யாகும். சென்னையிலும் மற்ற நகரங்களிலும் இம்மாதிரி பயிற்சிக் கழகம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. மேல் நாட்டிலும் இம்மாதிரி கழகங்கள் (டிபேடிங் சொசைடி) ஒவ்வொரு சிறு கிராமத்திலும் இருந்து கல்வி துறையில் வேலை செய்து வருகின்றன.
பேசப் பழகுவோர் எதையும் சிந்தித்துப் பேச வேண்டும். கேட்பவருடைய சிந்தனையைக் கிளரும் விதத்தில், தான் எடுத்துச் சொல்லும் கருத்துகள் அவர்கள் மனதில் நன்கு பதியும் விதத்தில் பேச வேண்டும் சிந்தனையற்ற பேச்சு பிறர் சிந்தனையைத் தூண்டாத பேச்சு எவ்வளவு அழகாக அடுக்காக இருந்தாலும் ஒரு போதும் நல்ல பேச்சாகாது. அதனால் ஒரு பயனும் விளையாது.
பேச்சின் மூலம் நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் சாதிப்பதே பேச்சுத் திறமை என்று சிலர் நினைக்கலாம். பேச்சுக்கு அந்த திறமையுண்டு என்றாலும் அந்தப்படியான பேச்சு பேசுவதில் இளைஞர்கள் பழகக் கூடாது. பழக ஆசைப்படவும் கூடாது. திரித்துக் கூறுவதில் சாதுர்யம் காட்டுதல் என்பது விரும்பக் கூடாததாகும். வெறுக்கத்தக்கதாகும் தவறுமாகும். அது கெட்டிக்காரத் தனமாகுமே தவிர யோக்கியமோ, நாணயமோ ஆகாது.
சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக பேச்சை ஒரு தொழிலாக ஜீவன் மார்க்கமாக வைத்திருக்கிறார்கள். உதாரணமாக அப்படிப்பட்டவர்களை தேர்தல் சமயத்தில் பார்க்கலாம். யார் யார் தம்மைக் காசு கொடுத்து அழைக்கிறார்களோ, அவர்களுக்காகப் பரிந்து பேசி, எதிரிகளை குறை கூறி கண்டபடி வைவார்கள். தங்களுக்குக் கூலி கொடுத்தவர் களைப் புகழ்வார்கள். அந்தப் படியான பேச்சாளியாவதற்கு இளைஞர்கள் விரும்பக் கூடாது. நல்ல யோக்கியமான பேச்சாளி தனது பேச்சுக்களை அப்படிப்பட்ட காரியத் துக்குப் பயன்படுத்த மாட்டான்.
பொதுநலத் தொண்டுக்காகப் பேசப் பழகுவதுதான் விரும்பக் கூடியதாகும். போற்றக்கூடியதுமாகும். நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லவே இளைஞர்கள் பழக வேண்டும். மக்களை நல்வழியில் திருப்பக்கூடிய நல்ல கருத்துகளையே எடுத்து சொல்ல வேண்டும். நல்ல கருத் துகளை எடுத்துக் கூறி - உண்மையைக் கூறி - குறைப் பாடுகளைக் கூறி - உண்மை தேவைகளைக் கூறி மக் களைத் தன்வயப்படுத்துவோனே நல்ல பேச்சாளியாவான்.
சிலர் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தாம் பேச எடுத்துக் கொண்ட விஷயத்தை மறந்துவிட்டு பெரு மையை எடுத்துக் கூறுவதில் ஈடுபட்டு விடுவார்கள். பண்டிதர்களில் வெகுவாசி பேர் அப்படித்தான். சிலர் தம்மை மக்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்வதற் கென்றே, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கென்றே பொதுக் கூட்டங்களில் பேச முன்வருவார்கள். அத்தகை யோருக்கு கொள்கை பற்றிய கவலையே இராது. பேசச் சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என்று துடியாய்த் துடிப்பார்கள். சிலர் எதைப் பேசினால் சிரிப்பு வருமோ, அதையே பேசுவார்கள். தாம் பேச வேண்டும், மக்கள் அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் விஷயம் உண்டோ, இல்லையோ அது பற்றிக் கவலையில்லை. சிலர் எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டுவிட்டு தமக்கு யார் விரோதியோ அவரை வைய அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். சிலர் யாரையாவது புகழ்ந்துக் கூறி பலன் பெறவே பேச்சைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இத்தகைய பேச்சாளிக ளெல்லாம் விரும்பக் கூடாத பேச்சாளிகள் ஆவார்கள்.
எடுத்துக்கொண்ட விஷயத்தை விட்டு விலகாமலும், சம்பந்தமில்லாத சங்கதிகளை அதில் கொண்டு வந்து புகுத்தாமலும் அனாவசியமாக பொருளற்ற சொற்களால் நீட்டாமலும் பேசுவதுதான் நல்ல பேச்சாகும். அப்படிப் பேசுவது சிறிது கஷ்ட மாகத்தான் இருக்கும் என்றாலும் அந்தப் படி பேசப் பழகுவதுதான் நலமாகும். பேசுவதில் ஒரு சொல்லை எடுத்து விட்டாலும் கருத்து கெட்டு விடும்படியாகவும், ஒரு சொல்லை சேர்த்தாலும் மிகுதி யாகும் படியாகவும் நிறுத்தி அளவறிந்து பேச வேண்டும்.
அடுக்கு அடுக்காகப் பேச வேண்டுமென்றும், அலங் காரமாய்ப் பேச வேண்டுமென்றும், மோனை எதுகையாய் பேச வேண்டுமென்றும், சிலர் இன்னும் ஆசைப்படு கிறார்கள். இதற்கு ஆக பல கருத்துகளையும் பல பயனற்ற சொற்களையும் கொண்டு வந்து குவித்தும், எடுத்துக் கொண்ட பொருளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்து பாழாக்குகின்றனர்.
இந்த நோய் இன்று மாணவருக்கு அதிகம் உண்டு என்றாலும் இது பேச்சுக்கு வந்த பெருநோய் என்றே நான் சொல்லுவேன். அலங்காரமாகவும், அடுக்கடுக்காகவும் பேச விரும்புவோன் அடுத்து வரும் வார்த்தை எதுவாயிருந்தால் அலங்காரமாய் இருக்கும் என்று யோசிக்கும்போதே கருத்து வேறு பக்கம் ஓடிவிடும். அது பேச்சின் பலனையே கெடுத்துவிடும்.
சிலர் பேச ஆரம்பித்து விட்டால் மக்கள் தமது பேச்சை விரும்புகிறார்களோ, இல்லையோ பேசிக்கொண்டே இருப் பார்கள். தலைவர் நிறுத்தும்படி ஜாடை காட்டினால்கூட நிறுத்த மாட்டார்கள். கையைப் பிடித்து இழுத்து உட்கார வைக்கும் வரையில் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
பேச்சுக்கு ஒரு நோய் வருவதுபோல் பேச்சாளர்களுக்கும் ஒரு நோய் வருவதுண்டு. அந்த நோயில் 100க்கு 95 பேச்சாளிகளுக்கு மேல் சிக்கிக் கொண்டு விடுவார்கள். அந்த நோய் வந்தால் அதிலிருந்து அவர்கள் தப்பவே மாட்டார்கள். நாலு வார்த்தைகள் காதுக்கினி மையாய் பேசத் தெரிந்து விட்டால் போதும். ஒரு நாலு கூட்டங்களில் பேசிவிட்டால் போதும். நாலைந்து தடவை கூட்டத்தில் உள்ள மக்களின் கை தட்டல்கள் கிடைத்து விட்டால் போதும். உடனே தன்னை பேச்சில் வல்லவன் என்று நினைத்துக் கொண்டு, தனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, இனி அடுத்தபடியாக நான் ஒரு தலைவன் ஆகவேண்டும் என்று தோன்றும். இந்த நோய் வந்தவர்கள் 100க்கு 90 பேர் உருப்படுவதில்லை. அநேகர் அந்த எண்ணம் கொண்டதன் பயனாய் அடைந்த தோல்வி யால் பொது வாழ்க்கை விட்டே விலக வேண்டி ஏற்பட்டு விடும். அந்த ஆசையும் அப்படிப்பட்ட நினைப்பும் பேச்சாளன் ஒருவனுக்கு வரவே கூடாது.
தன் பேச்சை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிற நினைப்பால் தலைவனாக ஆகிவிட வேண்டும் என்று நினைப்பவன் உண்மையில் பைத்தியக்காரனே ஆவான். தன்னைத் தற் கொலை செய்து கொள்பவனேயாவன். பேச் சுக்கும் தலைமைப் பதவிக்கும் சம்பந்தம் கிடையாது; சம்பந்தம் வைக்கவும் கூடாது.
தலைமைத் துறை வேறு; பேச்சுத் துறை வேறு; தலைமைத் துறை காரணமாக சிலர் பேச்சாளிகளாக ஆகலாம். பேச்சுத் துறை காரணமாக யாரும் தலைவராக முடியாது. அனேகர் இந்தக் கருத்தை உணராது மோசம் போய் இருக்கிறார்கள். பேச்சாளி என்று ஒருவனை மதித்தால் அவனைத் தலைவ னென்று அவர்களே அதாவது மதித்தவர்கள் ஏற்க மாட்டார்கள். உதாரணமாக சத்திய மூர்த்தி அய்யர் தலைவராகவே முடியவில்லை. பொதுவாகவே இதுவரை எந்தப் பேச்சாளியும் தலைவராக வில்லை. தலைவர்கள் பேச்சாளி களாகி விடுகிறார்கள்.
ஆபாசப் பேச்சுக்கள் உபயோகிக்கக் கூடாது; பாமர மக்கள் கை தட்டுதலைப் பார்த்து, அது நல்ல பேச்சென்று பேச்சாளிகள் கருதிக் கொள்ளக் கூடாது. ஆயிரம் பாமர மக்கள் ஆதரிப்பதைவிட நூறு அறிஞர்கள் வெறுப்பது மிக மோசமான பேச்சென்றுதான் ஆகும். சங்கீத வித்வான் நன்றாகப் பாடினால் சபையில் கொஞ்சம் பேர்தான் ரசிப் பார்கள். சில்லரைப் பாட்டு, தில்லாலே பாட்டு, துக்கடா பாடினால் வெகு பேர் ரசிப்பார்கள். ஆனால், வித்துவானுக்கு மதிப்பு சங்கீதப்பாட்டினால் தான் உண்டாகும். அதுபோல் பாமர மக்கள் திருப்தியாலும் பாமர மக்கள் ஏமாறும்படி பேசுவதாலும் பேச்சுக்காரன் மதிக்கப்பட்டு விடமாட்டான்.
சிலர் மக்களிடையே சிறிது செல்வாக்கு ஏற்படுத்திக் கொண்டதும், தாம் எந்த மேடை முகமாக அறிமுகப்படுத் தப்பட்டோம், எந்த கொள்கை பேசி செல்வாக்கு பெற்றோம் என்பதையே மறந்து விடுவார்கள். அதற்கு எதிர் கொள் கைக்கோ அல்லது அக்கொள்கையை அழிக்கவோ அந்த செல்வாக்கைப் பயன்படுத்துவார்கள். தனது சொந்த அறிவு இப்படிக் கூறுகிறது. தன்னுடைய சொந்தக் கருத்து இது என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள். சொந்த அறிவு, சொந்தக் கருத்து இவற்றின் பேரால் தாம் அது வரைக்கும் எடுத்துக் கூறி வந்ததையே மறுக்க ஆரம்பித்து விடுவார்கள். மறுக்கும்போது மக்கள் கை தட்டல்தான் செய்வார்கள். எதிர்ப்பை வரவேற்கத்தான் செய்வார்கள். ஆனால், அவர்கள் எப்போதும் ஏமாந்து போய் விட மாட்டார்கள்.
அவர்களின் ஆதரவை நம்பிச் சொந்தக் கருத்து பேசிய பேச்சாளத் தோழருக்குத்தான் பிறகு மேடை கிடைக்காமற் போகும். பெருத்த ஏமாற்றம் அடைவார். பொது வாழ்க் கைக்கும் தமக்கும் வெகு தூரம் என்று கருதிக் கொண்டு வேறு வேலைக்குப் போய் விடுவார். இது எனது அனுபவம்.
பத்திரிகை ஆபீசில் புரூப் ரீடர் வேலைக் கமர்ந்து ஒருவன் வேலை அங்கு நடந்து வரும் விதத்தையும் பத்திரிகைச் சொந்தக்காரர் பெற்று வரும் லாபத்தையும் பார்த்து தானும் ஒரு பத்திரிகை நடத்தலாம் என்று நினைத்து வெளியேறி ஒரு பேப்பரையும் துவக்கி கையில் உள்ள காசையும் எப்படி தொலைப்பானோ. அதுபோல் பைத்தியக் காரத்தனமான செய்கை தான் பேச்சாளிகள் சிலர் சேர்ந்து கொண்டு தங்கள் பேச்சு சாமர்த்தியத்தை நம்பி புதுக் கழகம் அமைப்பதும் ஆகும்.
மேடையில் பேச வருவோர் மிகவும் பயத்தோடும் கவலையோடும் பேச வேண்டும். வார்த்தைகள் நிறுத்திப் பேச வேண்டும். உண்மையே பேச வேண்டும். தெளிவு டனும் பேச வேண்டும். தனது தகுதியை கவனத்தில் இருத் தியும் பேச வேண்டும். தனக்குத் தகுதி இருப்பதாக நினைத் துக் கொண்டு எவனும் என் கருத்து இது. நான் சொல்கிறேன் இப்படி என்று பேச்சாளி பேசக் கூடாது. நல்ல பேச்சாளி யாவதற்கு இலக்கணமோ, இலக்கியமோ படித்திருக்க வேண்டும் என்பதில்லை. தெளிவுடன் பேசத் தெரிந்தால் போதும். கொஞ்சம் அறிவு நுட்பம் இருந்தால் போதும். தன் கருத்தைப் புரியும்படி கொள்ளும்படி பேசினால் போதும். பிறரை வைகிற பேச்சு பேச்சாளிகளுக்கு கூடவே கூடாது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் கூட மிகவும் கணக்காகவே மிக்க மறைமுகமாகவே கெட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்த வேண்டும். எனக்கு 70 வயது ஆகிவிட்டது. நான் சற்று தவறான வார்த்தை - சற்று அசிங்கமானது என்று கருதும்படியான வார்த்தை உபயோகப் படுத்தினாலும் யாரும் கோபித்துக் கொள்ள வும் மாட்டார்கள். தவறான எண்ணம் கற்பிக் கவும் மாட்டார்கள். ஆனால், அதே சங் கதியை ஒரு இளைஞன், மாணவன், வயிற்றுப் பிழைப்புக்கு ஆக பேசுபவன் பேசுவானாகில் இந்தக் கூட்டத்திற்கு வந்ததே தப்பென்று ஆண்கள், பெண்கள் எல்லோரும் கருது வார்கள். எழுந்து போய்விடுவார்கள். ஆகவே, தனது தகுதி, நிலை, வயது, அனுபவம் இவற்றைப் பொறுத்துதான் தனது பேச்சும் சில மணியாகும் என்பதை ஒவ்வொரு பேச்சாளனும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். தனது பேச்சுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால் பேச்சாளி அடங்கி ஒடுங்கிப் பேச வேண்டும். தனது தாழ்மையான கருத்து இது. தனது பணிவான அபிப்பிராயம் இது. தனது பணிவான அபிப்பிராயம் இது என்கிற தன்மையில் தனது அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். எதிர்ப் பாளிகளும் அக்கருத்தை விரும்பாதவர்களும் கூட ஐயோ பாவம் உண்மையிலேயே அவருடைய கருத்து அது வாக்கும் என்று பரிதாபப்படும் அளவுக்கு பணிந்து பேச வேண்டும். வீட்டிலிருந்து கொண்டே எழுதிக் கொண்டி ருப்பவன் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் பேச்சாளி அப்படிப்பட்டவனல்ல, அடிக்கடி மக்கள் முகத்தில் விழிக்கக் கூடியவன் அவன். எனவே தவறாகப் பேசி கெட்ட பேர் எடுத்துவிட்டால் மக்கள் மதிக்க மாட் டார்களே என்கிற அச்சத்தோடு தான் பேசவேண்டும்.
ஒரு இயக்கத்தின் சார்பில் மேடைக்குப் பேச வரு பவர்கள் சிரிப்புக்காகவும், வெறும் விளையாட் டிற்காகவும், தனக்குக் கெட்டிக் காரப் பட்டம் வரவேண்டும் என்பதற்காக வும் தம் பேச்சைப் பயன்படுத்தக் கூடாது.
அப்படிப் பயன்படுத்தினால் அவருடைய பேர் கெட்டுப் போவதோடு இயக்கத்தின் பேரும் கெட்டுப் போய்விடும். இயக்கத்தின் மரியாதையும் யோக்கியதையும் வெகுவாகக் குறைந்துவிடும்.
பேச்சு ஒரு அருமையான கலை பண்டைக் காலத்தில் வசன நடைப் பேச்சே கிடையாது. எல்லாம் பாட்டு மயம். இன்று நிலைமை மாறிவிட்டது. பாட்டுக்காரனுக்கு இருந்து வந்த மதிப்பு தற்போது போய் விட்டது. இனி பாட்டுக்காரனை விட நாடகக்காரனை விட பேச்சுக்காரனுக்குத் தான் அதிக மதிப்பு ஏற்படப் போகிறது. நாடு இன்றுள்ள நிலையில் பேச்சு மிக மிகத் தேவை யாகவும் இருக்கிறது. நாடகம், சினிமா காலட்சேபங்களில்கூட இன்று பேச்சாளிக்கு இருக் கும் மதிப்பு, பாட்டுப் பாடுபவர்களுக்கு பண்டிதர்களுக்கு கிடையாது. எவரும் பேச்சு பயன்படுகிற மாதிரி பாட்டு நடிப்பு பயன்படுவது இல்லை. நல்ல தொண்டுக்கு நல்ல பேச்சுத்தான் தேவை. பேச்சாளி ஒரு ஆசிரியராவான். ஒரு வழி காட்டியாவான்.
அப்படிப்பட்ட பேச்சுக்காரர்களாக இருக்க வேண்டி யவர்கள். பேச்சு படித்ததும் தாங்கள் விளம்பரமாக வேண் டும் என்பதற்காக கூட்டத்தை கண்ட மாத்திரத்தில் சிலர் பேச வேண்டும் என்கின்ற ஆத்திரம் கொண்டு சீட்டு அனுப்புவது சிலர் தனக் காக சிலரைக் கொண்டு சீட்டு அனுப்புவது, தலைவர்கள் பேசுவதற்கென்று ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் தங்களுக்குப் பேச இடம் தர வேண்டும் என்பதாகப் பல்லைக் கெஞ்சிப் புகுந்து கொண்டு, பின்னால் பேசுகிறவர்களுக்கு சங்கடம் வரும்படி பேசுவது, இவைகளையெல்லாம் நல்ல பேச்சாளிகள் கவனித்து ஒதுக்க வேண்டும்.
விளம்பரத்துக்கு ஆகப் பேசும் குணத்தை விட்டுவிட வேண்டும். ஈரோட்டில் ஒரு காங்கிரஸ் ஜில்லா மாநாடு நடந்தது. அதில் ஒரு விஷயம் பற்றி ஒரு தீர்மானத்தில் தகராறு ஏற்பட்டு 5, 6 பேர்கள் பேசி விட்டார்கள். ஓட்டுக்கு விடும் சமயத்தில் ஒரு வக்கீல் எழுந்து தான் சிறிது பேச வேண்டும் என்றார். தலைவர் தடுத்து நேரமாகி விட்டது. முடிக்க வேண்டும் என்றார். பேச எழுந்தவர் ஒரே ஒரு பாயிண்டு அதை சொல்லி விடுகிறேன் என்றார். தலைவர் அவரை நோக்கி, நீங்கள் பேசுவது தீர்மானத்துக்கு சாதக மாகவா? எதிர்த்தா? என்று கேட்டார். அதற்கு பேசுபவர் ஆதரித்துப் பேசப் போகிறேன் என்றார். அதற்கு தலைவர் ஆதரித்து 4 பேர் பேசி விட்டார்கள். ஆதலால் இனி ஆதரித்துப் பேச வேண்டியதில்லை. உட்காருங்கள் என்றார். அதைக் கேட்டவுடன் பேச எழுந்தவர் அப்படி யானால் நான் எதிர்த்து இரண்டு வார்த்தை சொல்லுகிறேன் என் றார். உடனே தலைவர் சிரித்துக் கொண்டே தயவு செய்து உட்காருங்கள் என்று சொல்லி, கையையும் அமரும் படி அவர் உட்காரும்வரை ஜாடை காட்டிக் கொண்டே இருந்தார்; பேச எழுந்தவர் சிறிதுகூட வெட்கப்படாமல் வெகு சங்கடத்துடன் மெதுவாய் உட்கார்ந்தார்.
தலைமை வகித்த தலைவர் டாக்டர் நாயர், பேச எழுந்தவர் ஒரு பி.ஏ.,பி.எல்., வக்கீல் அய்யர்.
சிலர் பேசி பெற்ற செல்வாக்கால், கிடைத்த மக்கள் அறி முகத்தால் உடனே பத்திரிகை ஆரம்பித்துக் கொள்ளுவது. அது கண்ணியமாய் நடத்தக் கட்டாவிட் டால் நன்கொடை வசூலிக்க அதைப் பயன்படுத்துவது, கொடுத்தவர்களைப் புகழவும் கொடுக்காதவர்களை வையவுமாக எழுதுவதற்கும் தம் பேச்சு பழக்கத்தை உபயோகிப்பது பணம் கிடைக்கா விட்டால் கொள்கையை மாற்றிக் கொள்வது. இப்படி யெல்லாம் பல காரியங்கள் பேச்சுப் படிப்பதால் ஏற்படுவது உண்டு.
ஆகவே, தகுதி அற்றவன், பொறுப்பும் நாணயமும் அற்றவன் பேச்சாளியாக ஆகிவிட்டால் அது ஒரு பெருந் தொல்லை யாகவும் முடிவதுண்டு. இப்படிப்பட்டவர் களை பேச்சாளியாக்கி விட்டோமே என்று துக்கப்பட வேண்டி ஏற்பட்டாலும் ஏற்படும். ஆதலால் தக்கவர்களையே சேர்த்து வையுங்கள். தக்க பொறுப்புடன் பழகுங்கள். உங்கள் பேச்சு உங்களுக்கு, உங்களைவிட மக்களுக்குப் பயன்படும்படி இருக்கட்டும் என்பதாகப் பேசினார்.
- விடுதலை, 6.11.1949

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, August 1, 2016

எது கடவுள்? எது மதம்?


தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்கள் என்றும், சமயாச்சாரியார்கள் என்றும் கட்டியழுபவர்கள் ஒன்று பகுத்தறிவில்லாதவர் களாக இருக்க வேண்டும்; அல்லது வயிற்றுப் பிழைப்புக்குப் புறப்பட்ட புரட்டர்களாயிருக்க வேண்டும் என்பதை அபிப்பிராயமாகக் கொண்டு, வெகுகால முதலே பல தடவைகளில் பல பெரியார்கள் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.

அதுபோலவே சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ, அல்லது ஒரு ஆசாமி என்றோ, அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் உண்மை ஞானமற்றவர்களின் கொள்கை என்றும் பலர் சொல்லிவந்திருக்கிறார்கள். இதைத்தான் சுயமரியாதைக்காரர்கள் எடுத்துக்காட்டி வருகிறார்கள். ஆதலால் உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்விப்பு, அழிவிப்பு என்பவையான மூவகைத் தன்மைகளையும், மேற்படி சாமிகளோ, ஆசாமிகளோ ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ, அல்லது ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கின்றான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்கள் விசார ஞானமற்றவர்கள் என்றே சொல்லுவோம்.

மற்றபடி மேல்கண்ட ஒவ்வொரு தன்மைக்கும் மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது என்றும், அது ஒரு உருவமல்ல, ஒரு உருப்படி அல்ல என்றும், உற்பத்தி, வாழ்வு, அழிவு என்னும் தன்மையையும், அத்தன்மைக்கு ஆதாரமான தோற்றங்களைத்தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ, சாமி என்றோ, ஆண்டவன் என்றோ கருதுகிறோம் என்பதாகவும், தானாகத் தோன்றிற்று, தானாக வாழ்ந்தது, தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான் என்றும், அவ்வியற்கைக்குத்தான் கடவுள், ஆண்டவன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின்றோம் என்பதாகவும் மற்றும் இவ்வி யற்கைத் தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்கவேண்டுமே என்றும், அந்தக் காரணத்திற்கோ, சக்திக்கோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என்கின்ற பெயர் கொடுக்கபட்டிருக்கின்றது என்பதாகவும் சொல்லிக்கொண்டு மாத் திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது பெரியதொரு தகராறு இல்லை.

ஆனால் அந்தக் கடவுள் என்பவைகளுக்கு கண், மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண் பெண் தன்மை, பெண்ஜாதி, புருஷன், வைப்பாட்டி, தாசி, குழந்தை குட்டி, தாய், தகப்பன் முதலியவைகளைக் கற்பித்து, அவைகளினிடத்தில் பக்தி செய்ய வேண்டும் என்றும், அவற் றிற்குக் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பாலாபிஷேகம், படைப்பு, பூஜை முதலியன செய்யவேண்டும் என்றும், அச்சாமிகளுக்குக் கல்யாணம் முதலியவை செய்வதோடு அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளையாடல்கள் முதலியவை செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்யவேண்டும் என்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும் திருவிளையாடல்களைப் பற்றியும் பாடவேண்டும் என்றும், அப்பாடல்களை வேதமாக ‘திருமுறையாக’ பிரபந்தமாக அப்படிப்பட்ட கடவுள்கள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ளவேண்டும் என்றும், அப்பாடல்களைப் பாடின வர்களை சமயாச்சாரியார்களாக ஆழ்வார்களாக, சமய குரவர்களாக, நாயன்மார்களாக அற்புதங்கள் பல செய்த அவதாரங்களாகக் கொள்ளவேண்டும் என்றும், இதுபோன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார்கள் என்றும் மற்றும் நாம் செய்த - செய்கின்ற - செய்யப்போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கியத்தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப் பார் என்றும் சொல்லப்படுபவைகளான மூடநம்பிக்கையும் வயிற்றுப் பிழைப்பும் சுயநலப்பிரசாரமும் ஒழிய வேண்டு மென்பதுதான் நமது கவலை. ஏனெனில், இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட்டார்கள்போல நம் நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்படாமல் மற்ற நாட்டார்களைப்போல விஞ்ஞான (சையன்ஸ்) சாஸ்திரத்திலே முன்னேற்றமடையாமல் இருப்பதற்கும், அந்நிய ஆட்சிக் கொடுமையிலிருந்து தப்பமுடியாமல் வைத்த பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதற்கும் இம்மூடநம்பிக்கைகளும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரச்சாரமும், இவை களினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும், செலவுகளுமே தான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

நாமும் நமது நாடும் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும், ஒருவரையொருவர் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொடுமைப் படுத்தி ஒற்றுமையில்லாமல் செய்திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பயன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும், சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல் இருப்ப தற்கும் மேற்கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியார்கள் என்பவர்களும் அவர்களது பாடல்களும் நெறிகளுமே முக்கிய கார ணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம். சொல்லத் தயாராயிருக்கின்றோம்.

நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூஜைக்கும், அபிஷேகத்திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவத்திற்கும், பஜனை முதலிய காலட்சேபத்திற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்தி ஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக் கும், இக்கடவுள் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள் களைப்பற்றிப் பாடின பாட்டுகளையும் அச்சடித்து விற்கும் புத்தகங்களையும் வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக்காகச் செலவாகும் பொருள்களாலும் நேரங்களாலும் ஏற்படும் செலவும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் சுமார் இருபது கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக்கொண்டு வருகின்றன என்று சொல்லுவது மிகையாகாது.

இவ்விருபது கோடி ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக் கிறைக்காமல், மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ விஞ்ஞான (சையன்ஸ்) வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ செலவாக்கப்பட்டு வருமானால் நம்நாட்டில் மாத்திரம் வாரம் லட்சக்கணக்கான மக்களை நாட்டை விட்டு அந்நிய நாட்டிற்குக் கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும் தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பதும் ஏற்படுமா? தீண்டக் கூடாத - நெருங்கக்கூடாத - பார்க்கக் கூடாத - மக்கள் என்போர்கள் கோடிக் கணக்காய் புழு, பூச்சி, மிருகங்களுக்கும் கேவலமாயிருந்து கொண்டிருக்க முடியுமா? 100-க்கு மூன்று பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களைச் சண்டாளர், மிலேச்சர், சூத்திரர், வேசி மக்கள், தாசி மக்கள், அடிமைப்பிறப்பு என்று சொல்லிக்கொண்டு அட்டை இரத்தத்தை உறிஞ்சுவது போல் உறிஞ்சிக்கொண்டும், நம்மையும் நம் நாட்டையும், அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்து கொண்டும் இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.

நமக்குக் கல்வி இல்லாததற்குச் சர்க்கார் மீது குற்றம் செலுத்துவதில் கவலை கொள்ளுகின்றோமேயல்லாமல் நம் சாமியும், பூதமும், சமயமும் நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றி யாராவது கவலை கொள்ளுகின்றோமா என்று கேட்கின்றோம்.

நிற்க, அன்பையோ, அருளையோ, ஒழுக்கத்தையோ, உபசாரத்தையோ மாறு பெயரால் கடவுள் என்று கூப்பிடு கின்றேன்; அதனால் உனக்கு என்ன தடை? என்று யாராவது சொல்ல வருவார்களானால், அதையும் (அதா வது அக்குணங்கள் என்று சொல்லப்பட்ட கடவுள் என்பதையும்) பின்பற்றும்படியான குணங்களாகவோ, கடவுள்களாகவோதான் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றோமே ஒழியக் குணங்களைப் பின்பற்றாமல் வெறும் வணங்கும்படியான கடவுளாக இருக்க நியாயம் இல்லை என்றே சொல்லுவோம்.
மதம்

இதுபோலவேதான் மதம் என்பதும், சமயம் என் பதும், சமயநெறி என்பதும் மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ளவேண்டிய நடையைபற்றிய கொள்கைகளைக் கொண்டது என்பவர்களிடத்தில் நமக்குத் தகராறு இல்லை! அன்பே சிவம் என்பதான சிவனிடத்தில் நமக்குச் சண்டையில்லை! அன்பு என்னும் குணம்தான் சிவம்; அந்த அன்பைக்கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம் என்பதானால் நாமும் சைவன் என்று சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுகின்றோம். அதுபோலவே ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, ஜீவன்களுக்கு உதவி செய்வது ஆகிய குணங்கள்தான் விஷ்ணு, அக்குணங்களைக் கைக்கொண்டு ஒழுகுவதுதான் வைணவம் என்பதான விஷ்ணுவிடத்திலும் வைணவனிடத்திலும் நமக்குத் தகராறில்லை என்று சொல் லுவதோடு நாமும் நம்மை ஒரு வைண வன் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம். நமக்கும் மற்றும் உள்ள மக்களுக்கும் அச்சைவத் தன்மையும் வைணவத் தன்மையும் ஏற்பட வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.

அப்படிக்கில்லாமல், இன்னமாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகின்றவன்தான் சைவனென்றும், அப்படி வணங்குகிறவன் இன்ன மாதிரி யான உடை பாவனை கொண்டவனாகவும் இன்னமாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள இன்ன காரியம் செய்த கடவுள்களைப் பற்றிப் பாடின, எழுதின ஆசாமி களையும் புஸ்தகத்தையும் வணங்குவதும் மரியாதை செய்வதும்தான் சைவம் என்றும், மற்றபடி வேறு இன்ன உருவமோ, பேரோ உள்ள கடவுள் என்பதை வணங்குகிறவர்களையும் வேறு குறி இடுகின்றவர் களையும் யாதொரு குறியும் இடாதவர்களையும் சைவரல்லாதவர் என்று சொல்வதுமான கொள்கைக்காரரிடமே நமக்குப் பெரிதும் தகராறு இருக்கின்றது என்று சொல்வதுடன் அக்கொள்கை களையும், அச்சமயங்களையும், அக்கடவுள் களையும் பாமர மக்களிடம் பரவவிடக் கூடாது என்றும் சொல்லுகின்றோம்.
அன்றியும், பல சமயப் புரட்டர்கள் இம்மாதிரி விவகாரம் வரும்போது நான் கடவுள் என்பதாக ஒரு தனி வஸ்துவோ, ஒரு குணமோ இருப்பதாகச் சொல்ல வில்லை என்றும், மலைதான் கடவுள், ஆறுதான் கடவுள், சமுத்திரம்தான் கடவுள், மரம் செடிதான் கடவுள், புஷ்பம்தான் கடவுள், அதன் மணம்தான் கடவுள், அழகுதான் கடவுள், பெண்தான் கடவுள், அதன் இன்பம்தான் கடவுள், இயற்கைதான் கடவுள், அத்தோற்றம்தான் கடவுள், என்பதாக தமக்கே புரியாமல் உளறுவதும், மறுபடியும் சிவன்தான் முழுமுதற் கடவுள், மற்றபடி விஷ்ணுவும், பிரம்மாவும் அவரது பரிகார தேவதைகள், சைவ சமயம்தான் உண்மைச் சமயம் அதுதான் முக்தி அளிக்கவல்லது என்பதும் அல்லது விஷ்ணுதான் முழுமுதற்கடவுள் என்பதும், அதுதான் பரத்துவம் கொண்டது. மற்றவை விஷ்ணுவின் பரிவார தேவதைகள் என்பதும், வைஷ்ணவ சமயம்தான் உண்மை சமயம் அதில்தான் பரத்திற்கு மார்க்கம் உண்டு என்பதும் அச்சிவனையோ, விஷ்ணுவையோ முழுமுதற் கடவுளாகக் கொண்டு அக்கடவுள்களையும், அச்சமயங்களையும் பாடினவர்கள் தான் கடவுள் நெறியையும் நிலைமையையும் உணர்த்திய பெரியார்கள் - சமயாச் சாரியார்கள் என்பதுமாக மக்கள் முன் உளறிக் கொட்டி அவர்களது மனதை குழப்பச் சேற்றில் அழுத்துகின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களது புரட்டையும் பித்தலாட்டங்களையும் வெளி யாக்கி மக்களைக் குழப்பச் சேற்றிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று தான் சொல்லுகின்றோம்.

உலகத்தில் கடவுள் என்பது இன்னது என்பதாக மனதில் விளம்பரப்படுத்திக் கொள்ளாமலே கடவுளைப் பற்றிய தர்க்கங்களும் தகராறுகளும் தினமும் நடைபெற்று வருகின்றன. இது இன்று நேற்று ஏற்பட்ட விவகாரம் அல்ல என்றுங்கூடச் சொல்லுவோம்.

எனவே, மக்களின் பாரம்பரியமானதும் எங்கும் பரவியிருக்கும் படியானதுமான மடமைக்கு இதைவிட வேறு உதாரணம் கிடையாது என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில், இந்த விவகாரம் பாமர மக்களிடையில் மாத்திரம் நடைபெற்று வருகின்றது என்று சொல்லுவதற்கில்லை. இது பெரும்பாலும் படித்தவன், ஆராய்ச் சிக்காரன், பண்டிதன், பக்திமான் என்கின்ற கூட்டத்தாரிடையேதான் பெரிதும் (இவ்வறியாமை) இடம்பெற்று உரம் பெற்றிருக்கின்றது. இவைகள் ஒழியச் செய்யும் காரியத்தை நாஸ்திகமென்றும், பாபச் செயல் என்றும் யார் சொன்னாலும் சுயமரியாதைக் காரர்கள் பயப்படக்கூடாது.

‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 09.06.1945


.

 

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...