Showing posts with label தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை. Show all posts
Showing posts with label தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை. Show all posts

Saturday, November 25, 2017

தந்தை பெரியார் கட்டளையை நிறைவேற்றுவோம் சென்னை மாநாட்டுக்கு வாரீர்!

ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் ஒரு மைல் கல்!

சூத்திரப் பட்டத்தை ஒழிப்போம்!

தந்தை பெரியார் கட்டளையை நிறைவேற்றுவோம்

சென்னை மாநாட்டுக்கு வாரீர்!



http://viduthalai.in/images/stories/dailymagazine/2017/nov/6/s8.jpg

25.11.2017 சனியன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கும் ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கம், 26.11.2017 ஞாயிறன்று மாலை நடைபெறவிருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வலியுறுத்தும் மாநாடு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும், அதில் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திரண்டு வருவதன் அவசியம் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பார்ப்பனர் அல்லாத தமிழினப் பெரு மக்களே! இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நாம் எல்லாம் இந்து மதத்தில் வருண தர்மப்படி சூத்திரர்களாம், அதாவது பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாம்!

தமிழன் கட்டிய கோயில்களில்

தமிழன் அர்ச்சகனாகக் கூடாதா?

நம் தமிழ் அரசர்கள் கட்டிய கோயில்களில் தமிழர்களாகிய நாம் கர்ப்பக்கிரகம் சென்று பூஜை செய்தால் சாமி தீட்டுப்பட்டு விடுமாம் - செத்துப் போய் விடுமாம்!

நமது தமிழக அரசு பல சட்டங்களை நிறைவேற்றும் பொழுதெல்லாம் சங்கராச்சாரியார், ஜீயர் போன்றவர்களின் எல்லா வகையான ஆசீர்வாதம், பொருளாதாரங்களின் துணையோடு உச்சநீதிமன்றம் சென்று முடக்கி விடுகிறார்கள்.

உச்சநீதிமன்றம் என்ன கூறுகிறது?

ஆனால், உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று திட்டவட்டமாகத் தீர்ப்புக் கூறி விட்டது (6.12.2015).

இதன் அடிப்படையில் அ.இ.அ.தி.மு.க. அரசு நினைத்தால்  இந்து அற நிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் பெற்றுள்ள அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்குக் கடிதங்கள் எழுதப்பட்டும் ஒரு வரி பதில்கூட இல்லை.

கேரளாவுக்கு ஒரு சட்டம்

தமிழ்நாட்டுக்கு வேறொரு சட்டமா?

இதற்கிடையே அண்டை மாநிலமான கேரளாவில் தாழ்த்தப்பட்டவர் 6 பேர் உட்பட பிற்படுத்தப்பட்டவர்களும் அடங்கிய  62 பேர்களுக்கு அர்ச்சகர்களாகப் பணியாற்றிட மாநில அரசு ஆணை பிறப்பித்து, அவர்களும் அர்ச்சகர் பணியைத் தொடங்கி விட்டார்கள்.

கேரளாவுக்கு ஒரு அரசியல் சட்டம் என்றும், தமிழ்நாட்டுக்கு வேறொரு அரசியல் சட்டம் என்றும் கிடையாது. கேரளாவை முன் மாதிரியாகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படலாம்.ஆனால் வேதனைக்குரிய நிலை என்னவென்றால், எதிலும் செயல்படாத அரசாகக் கூனிக் குறுகி விட்டது தமிழ்நாடு அரசு.

தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்டதுதான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கானப் போராட்டம்.

பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளோம் - பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறோம்.

இனிமேலும் நாம் இதில் தாமதத்தை அனுமதிக்க முடியாது.

வரும் சனியன்று கருத்தரங்கம்

ஞாயிறன்று மாநாடு

அந்த வகையில் வரும் சனியன்று (25.11.2017) மாலை நடைபெறும் ஜாதி தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கமும், ஞாயிறன்று மாலை (26.11.2017) நடைபெறும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையைச் செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடும் நடைபெற உள்ளன.

சமூக நீதியில், சமத்துவச் சிந்தனையில், ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் அக்கறை உள்ள தலைவர்கள் எல்லாம் கருத்தரங்கத்திலும், மாநாட்டிலும் பங்கேற்க இருக்கிறார்கள்.

தீர்வு காண்போம் - வாரீர்!

இம்மாநாட்டின் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் வாருங்கள், சூத்திர இழிவை இன்னும் எவ்வளவுக் காலத்திற்குத் தாங்கிக் கொண்டிருப்பது?

"மானமும், அறிவும் மனிதனுக்கழகு - சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!" என்ற நமது அருமைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கோட்பாட்டை நிலை நிறுத்த வாரீர், வாரீர்! என்று அனைவரையும் அழைக்கிறோம்.

இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மனித உரிமை சமத்துவம் மட்டுமே உண்டு - வாரீர்! வாரீர்!!

 கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
24-11-2017

Thursday, November 16, 2017

நிரபராதி பேரறிவாளனை உடனே விடுதலை செய்க!

பேரறிவாளன் விசாரணையில் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில்

ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது உண்மைதான்!


விசாரணை அதிகாரி ஒப்புதல் சொன்னதன் அடிப்படையில் பேரறிவாளனின்   மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது புதிய திருப்பம்!

நிரபராதி பேரறிவாளனை உடனே விடுதலை செய்க!


 

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் விசாரணைக் கைதியாக உள்ள பேரறி வாளனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் முக்கிய பகுதியைப் பதிவு செய்யத் தவறிவிட்டோம் என்று சிபிஅய் விசா ரணை அதிகாரி தியாகராஜன் கூறிய தன் அடிப்படையில், பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு மனுவை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பேரறிவாளன் நிரபராதி என்பது வெளிப்படை. அவரை உடனே விடுதலை செய்ய மாநில, மத்திய அரசுகள் முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளான பேரறி வாளன் உட்பட 7 பேர், கடந்த 25ஆண்டுகளாக வெஞ்சிறையில் வாடி வருகின்றனர்.

ஆயுள் தண்டனையாகக் குறைப்பு

18.2.2014 அன்று உச்சநீதிமன்றத்தால் பேரறி வாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை சி.பி.அய் அதி காரியாக பணியாற்றி பேரறிவாளனை விசாரித்த தியாகராஜன் அவர்கள் தெரிவித்த தகவல் முக்கியமானது.

ஒரு தலைப்பட்சமாக பேரறிவாளனிடம் விசாரணை நடத்தப்பட்டது உண்மை. பேரறி வாளனின்  வாக்குமூலத்தின் முக்கியப் பகுதி பதிவு செய்யப்படவில்லை என்று தமக்கு ஏற் பட்ட மன உறுத்தலை சிபிஅய் அதிகாரி

தியாகராஜன் செய்தியாளர்களிடம் ஒப்புக் கொண்டார்!

தன்னால் வாங்கிக்கொடுக்கப்பட்ட பேட்டரி எந்தக் காரணத்துக்காகப் பயன்படுத்தப்படப் போகிறது என்பது தனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை நாங்கள் பதிவு செய்ய வில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அதுபோலவே உச்சநீதிமன்றத்தில் வழக் கினை விசாரித்த ஜஸ்டிஸ் திரு.கே.டி.தாமஸ் அவர்களே ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் பல குளறுபடிகள் நடந்தன என்பதைத் தனது ஓய்வுக்குப் பின் ஒப்புக் கொண்டாரே!

உச்சநீதிமன்றத்தில்

பேரறிவாளன் மனு

அதனைத் தொடர்ந்து பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுவில் (Special leave petition)   இந்தக் கார ணங்களைக் காட்டி, தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உச்சநீதிமன்றம்  ஏற்பு

மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதற்கு இதைவிட ஆதா ரங்கள் தேவைப்படாது. இந்த நிலையில் பேரறிவாளன் முழு விடுதலை பெறுவதற்கு முழுத் தகுதியைப் பெற்றுவிட்டார் என்பது வெளிப்படையாகிவிட்டது.

மாநில - மத்திய  அரசுகள்

செய்ய வேண்டியது என்ன?

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இப்பிரச்சினையில் காட்டிய ஆர் வத்தைப் புரிந்துகொண்டு, பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான முயற்சியில் ஈடு படுமாறு  தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள் கிறோம்.

மாநில அரசும், மத்திய அரசும் வேறு பிரச்சினைகளை இதில் இணைத்துக் குழப்பிக் கொள்ளாமல் பேரறிவாளனை விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்!



கி.வீரமணி
தலைவர்,       திராவிடர் கழகம்.

சென்னை
15.11.2017

Friday, November 27, 2015

ஏடுகள், எதிர்க்கட்சிகள் என்றால் ஆட்சிக்குத் துதி பாட வேண்டும் என்று நினைக்கலாமா?

ஏடுகள், எதிர்க்கட்சிகள் என்றால் ஆட்சிக்குத் துதி பாட வேண்டும் என்று நினைக்கலாமா?
உச்சநீதிமன்றம் இடித்துக் கூறிய பிறகும்கூட தமிழக ஆட்சி அவதூறு வழக்குகளைத் தொடருவதா?

வழக்குகளை - வாபஸ் வாங்குக!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
ஆளும் கட்சிமீது குறைகூறும் - விமர்சனம் செய்யும் ஏடுகள்மீது பழி வாங்கும் நோக்கில் அவதூறு வழக்கு களைத் தொடர்ந்து கொண்டு இருப்பது ஒரு ஜனநாயக ஆட்சிக்கு உகந்ததல்ல - இன்னும் சொல்லப் போனால் விமர்சனங்களை வரவேற்கும் பக்குவம் தான் ஓர் ஆட்சிக்கு நல்லது; தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை உடனடியாக வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஒரு ஜனநாயக நாட்டில், ஆட்சி, நிர்வாகம், நீதித்துறை, பத்திரிகை ஆகியவை முறையே தூண்கள் என்பது உலகம் ஒப்புக் கொண்ட நியதி.
பாராட்டுவதற்காகத்தான் பத்திரிகையா?
பத்திரிகைத் துறை என்றால் வெறும் பாராட்டும் ஒலி குழல் என்று நினைப்பது தவறானது. இன்னும் சொல்லப் போனால் பத்திரிகைகளுக்குத் தான் பல கண்கள். துழாவித் துழாவி செய்திகளைக் கொண்டு வருவதும்,  அவற்றின் அடிப்படையில் விமர்சனங்கள் எழுதுவதும் பத்திரிகைத் துறையின் மிகப் பெரிய பண்பாடும் கடமையும் ஆகும். துதிபாடுவதுதான் பத்திரிகா தர்மம் என்று எதிர்பார்ப்பது ஒரு வகையான எதேச்சதிகார மனப்பான்மையாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆட்சியின் பார்வை என்பது ஜனநாயகத்துக்கு விரோதமாக இருந்து வருவது வேதனைக்குரியது - கண்டிக்கத்தக்கதும்கூட
விமர்சனத்தை விரும்புவதே ஆளும் கட்சிக்கு நன்மை!
உண்மையைச் சொல்லப் போனால் ஆட்சியைக் குறை கூறியும், கண்டித்தும் எழுதுவதை நல்லாட்சி என்றால் அதனை வரவேற்க வேண்டும். தவறுகளைத் திருத்திக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மகிழ வேண்டும்; நோயைக் சுட்டிக் காட்டினால் டாக்டர்மீது பாயலாமா?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்               (குறள் 448)
என்ற குறள் மற்றவர்களைவிட ஆட்சியில் இருப்ப வர்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஆட்சிக்கு எதிராகப் பேசுவோர்மீதும், ஆட்சியைக் குறை கூறும் ஏடுகள்மீதும் வழக்கு என்பது எந்த வகையில் மக்கள் ஆட்சிக்கு உகந்தது?
ஒருபடி மேலே சென்று விமர்சனம் செய்யும் ஏடுகளை விற்பனை செய்யும் இடத்திலும் சென்று அச்சுறுத்துவது, முக நூலை முடக்குவது போன்றவை அபாயகரமான போக்காகும்.
மறுப்பு எழுத வேண்டியது தானே?
ஒரு இதழில் - ஏட்டில் வெளிவந்த தகவல் தவறாக இருந்தால் - அதனைச் சுட்டிக் காட்டி, மறுப்பு அறிக்கையை அரசு சார்பில் கொடுக்கலாம். அந்த மறுப்பை வெளியிடா விட்டால், சட்டப்படியான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட ஏடுகள்மீது எடுக்கலாம் - அது நியாயமும்கூட!
அத்தகு சந்தர்ப்பத்தைக் கொடுக்காமல், ஒரு சார்பாகவே முடிவெடுத்து - ஏடுகள்மீது  வழக்குத் தொடுப்பதற்குப் பெயர் வழக்கல்ல - வல்லடி வழக்கே!
உள்ளெண்ணம் இல்லாது நல்லெண்ணத்துடன் விமர்சனம் செய்தால் அது சட்டப்படி எப்படி குற்றமாகும்?
கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் இதே நிலைதான்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - அதுவும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஆட்சிக்கு எதிராக விமர்சனம் எழுந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளும் - அதனைப் பற்றி சிந்திக்கும் பக்குவமின்றி, இம்மென்றால் சிறைவாசம் என்ற எதேச்சதிகாரத் தொனி ஏற்புடையதல்ல.
ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த ஒரு கட்டு ரைக்காக ஆனந்த விகடன் மீதும், அதனை எடுத்துக்காட்டி, கட்டுரை எழுதியதற்காக 5 முறை முதல் அமைச்சராக இருந்த - மூத்த பத்திரிகையாளர் கலைஞர்மீதும் அவதூறு வழக்கு என்பதெல்லாம் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும்.
பழி வாங்கப்பட்ட ஏடுகளின் பட்டியல்!
நக்கீரன்  தி இந்து, இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆனந்தவிகடன் ஜூனியர் விகடன் முரசொலி, தினகரன் ஏடுகள் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியால் அவதூறு வழக்குப் புனையப்பட்ட ஏடுகளாகும்.
இதுவரை இத்தகு வழக்குகளில் ஆட்சிக்குச் சாதகமான தீர்ப்புகள் வந்ததுண்டா?
2003ஆம் ஆண்டில்கூட இந்து நாளிதழில் எழுதப்பட்ட தலையங்கம் தமிழக சட்டசபையின் உரிமையை மீறியதாக ஹிந்து ஏட்டின் ஆசிரியர் மற்றும் உரிமையாளர், அந்தத் தலையங்கத்தை மொழி பெயர்த்து வெளியிட்ட முரசொலி யின் நிர்வாகியைக் கைது செய்ய ஆணைப் பிறப்பித்தார் - சபா நாயகர் மாண்புமிகு காளிமுத்து என்பதையும் - இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆனந்த விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியம் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
சகிப்புத் தன்மை இன்மை!
சகிப்புத் தன்மை இன்மைபற்றி இந்தியாவில் மதவா தத்தை முன்னிறுத்தி சர்ச்சைப் பெரும் அளவுக்குப் புயலாக வீசிக் கொண்டு இருக்கிறது. அந்தச் சகிப்புத் தன்மை இன்மைப் பட்டியலில் தமிழக ஆட்சியின் இந்தச் செயல் பாடுகளையும் இணைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
வடக்கைப் பாரீர்!
மத்திய அமைச்சர்களை முகநூலில் விமர்சித்திருந்த அய்தராபாத்தைச் சேர்ந்த இரு நபர்கள் கைது செய்யப் பட்டனர்; 2012ஆம் ஆண்டில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயை அவமதித்து முகநூலில் எழுதிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கடும் எதிர்ப்புக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவை எல்லாம் தமிழக ஆளும் தரப்பினருக்குத் தெரியாதா?
உச்சநீதிமன்றம் இடித்துக் கூறியதே!
தமிழ்நாடு அரசு தொடர்ந்து வரும் அவதூறு வழக்கின் தன்மைபற்றி உச்சநீதிமன்றமே இடித்துச் சொன்ன பிறகாவது, தம் போக்கைத் தமிழக அரசு மாற்றிக் கொண்ட தாகத் தெரியவில்லையே!
2001-2006 ஆட்சியில் இருந்தபோது அ.இ.அ.தி.மு.க. வின் இத்தகு நடவடிக்கைகளால் மக்கள் தேர்தலில் பாடம் கற்பித்ததைக்கூட ஒரு பாடமாக ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
மத்திய மாநில ஆட்சியில்..
மத்தியிலும் மாநிலத்திலும் சகிப்புத்தன்மை இல்லாத ஜனநாயகக் கண்ணோட்டம் இல்லாத இரு ஆட்சிகளின் கீழ்  நாடு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. திருத்திக் கொள்ளவில்லையென்றால் மக்கள் அதற்கான தண்ட னையைச் சரியான நேரத்தில் வழங்குவார்கள் என்பதில் அய்யமில்லை.
ஆளும் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடுகளில் அருவருக்கத்தக்க எழுத்துகளுக்கு என்ன பதில்?
ஒரு செய்தி - மற்ற மற்ற ஏடுகள்மீது அவதூறு வழக்கைப் போடும் தமிழக அரசு - அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில் எழுதப்படும் அவதூறு கொழிக்கும் ஆபாசமான அருவருக்கத்தக்க அடாவடித்தனமான எழுத்துகளுக்கு என்ன பதில்? ஒவ்வொரு நாளும் வெளிவரும் அவ்வேட்டின்மீது வழக்குத் தொடுக்க ஏராளமான காரணிகள் உண்டு. அவற்றை அலட்சியப்படுத்தும் பெருமான்களாக தலை வர்கள் இருந்து வருகிறார்கள்; அதனைக் கோழைத்தனம் என்று எண்ணிவிட வேண்டாம்!
ஆளும் கட்சி என்பது கண்ணாடி மாளிகை எச்சரிக்கை!
ஆளும் கட்சி - ஆட்சி என்பது கண்ணாடி மாளிகை - அங்கிருந்து மற்றவர்கள்மீது கல்லெறிய ஆசைப்படக் கூடாது; ஆசைப்பட்டால் எதிர்வினையைத்தான், விளை வைத்தான் சுமக்க நேரிடும். அவதூறு வழக்குகளை வாபஸ் வாங்குவது அவசியம். கட்சிக் கண்ணோட்டமின்றி இதனை எடுத்துச் சொல்லுவது எங்கள் கடமை - கசப்பான உண்மையும் ஆகும். ஆட்சித் தலைமை சிந்திக்குமாக!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
27-11-2015

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...