Showing posts with label தமிழர் தலைவர் ஆசிரியர் உரை. Show all posts
Showing posts with label தமிழர் தலைவர் ஆசிரியர் உரை. Show all posts

Saturday, August 12, 2017

என்னுடைய வாழ்நாளில் மிக மகிழ்ச்சியாக இருக்கின்ற நாள்கள் இந்த நாள்கள்தான்! பெரியார் கொள்கை உலகம் முழுவதும் பாய்கிற பாய்ச்சலுக்கு இது ஒரு முதல் பாய்ச்சல்!

ஜெர்மனியில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டில் தமிழர் தலைவர்



‘‘இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் புரட்டிப் போட்டு, ஏடு ஏடாய் புரட்டிப் பார்த்தாலும், அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையை சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.’’
கொலோன், ஆக. 11- என்னுடைய வாழ்நாளில் மிக மகிழ்ச்சியாக இருக்கின்ற நாள்கள் என்று சொன்னால், இந்த நாள்கள்தான். இவ்வளவு மகிழ்ச்சியாக என்றைக்கும் இருந்தது கிடையாது என்றும், பெரியார் கொள்கை உலகம் முழுவதும் பாய்கிற பாய்ச்சலுக்கு இம்மாநாடு ஒரு முதல் பாய்ச்சல்  என்றும் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜூலை 27, 28, 29 ஆகிய நாள்களில் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் இரண்டாம் நாளான 28.7.2017 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
தமிழிலும் நடைபெறவேண்டும் என்ற உணர்வோடு...
மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக் கூடிய பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக் கழக வளாகத்தில், பேராசிரியர்  டாக்டர் உல்ரிக் நிக்லஸ் அம்மையார் அவர் களை வரவேற்புக் குழுத் தலைவராகக் கொண்டு சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டினை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் உரை நிகழ்த்த என்னை அழைத்தி ருக்கிறார்கள்.
நேற்றும், இன்றும் நாளையும்கூட  ஆங்கிலத்தில் நிகழ்வுகள் நடைபெறுகின்ற சூழ்நிலையில், தமிழிலும் நடைபெறவேண்டும் என்ற உணர்வோடு இங்கே சிறப்பாகத் தொடங்கி வைத்த நம்முடைய
திராவிடர் கழக துணைத் தலைவர் மானமிகு கலி.பூங்குன்றன் அவர்களே,
நிகழ்வினை ஒருங்கிணைத்து சிறப்பாக செய்து கொண்டிருக்கக்கூடிய பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே,
இந்நிகழ்வில் இன்றைக்கு ஏராளமான கருத்துரைகளை வழங்கியுள்ள,  கருத்துரைகளைப் படைத்து விவாதித்துள்ள அருமை அறிஞர் பெருமக்களே,
கேள்விகளை வினாக்களாகத் தொடுத்து, நல்ல கருத்துரை - விளக்கங்களையெல்லாம் பெற்றிருக்கக்கூடிய அருமை பேராளர்களான பெருமக்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்!
சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்தைப்பற்றி இங்கே சொன்னார்கள். இந்த இயக்கம், அது செய்கின்ற பணி என்பது இருக்கிறதே - அது நன்றி எதிர்பார்க்காத பணியாகும்.
எல்லா மக்களுக்கும் சுயமரியாதை வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்
நாங்கள் கல்லைத் தூக்கி எறிகிறவர்களைப்பற்றி கவ லைப்படுவதில்லை. எங்களுடைய பணி நன்றி பாராட்டாத பணி. அதைவிட மிக முக்கியம் - எல்லா மக்களுக்கும் சுயமரியாதை வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு'' என்று சுட்டிக்காட்டிய தந்தை பெரியார், இந்த இயக்கப் பணியைச் செய்கின்றபொழுது நாங்கள் மானம் பாராத தொண்டர்கள் என்று  மகிழ்ச்சி கொண்டார்கள்.
உலகத்தில் வேறு எந்த இயக்கத்திலும் இல்லாத -  நன்றி பாராட்டாத பணி. புகழை எதிர்நோக்காத பணி - மிக ஆழமான பணி. பெரியார் அவர்கள் ஒரு வித்தியாசமான தலைவர்.
பாதை இல்லாத ஊர்களுக்கெல்லாம் பாதை போடுவதுதான் ஈரோட்டுப் பாதை
சுயமரியாதை இயக்கத்தைக் கொண்டு செல்லவேண்டும் என்றால்,  ஈரோட்டுப் பாதையை வகுக்கிறார். பாதை இல் லாத ஊர்களுக்கெல்லாம் பாதை போடுவதுதான் ஈரோட் டுப் பாதை. ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சிறப்பான வகை யில், அதனை அவர்கள் செய்துகொண்டு போகின்ற நேரத்தில், உலகளாவிய இயக்கமாக என்னுடைய இயக்கம் இருக்கும் என்று அவர்கள் நல்ல அளவிற்கு முன்னோட் டமாக மிக ஆழமாக சொல்லியிருக்கிறார்.
இங்கே ஒரு பகுதியை மட்டும் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.
சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு...
1930 ஆம் ஆண்டில் ஈரோட்டில் தந்தை பெரியார் பேசியதைக் கேட்போம்.
‘‘இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் புரட்டிப் போட்டு, ஏடு ஏடாய் புரட்டிப் பார்த்தாலும், அழ கும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையை சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.’’
இந்த வார்த்தையானது நமது நண்பர்களிலேயே, கொள்கையெல்லாம் நமக்குப் பிடிக்கிறது. ஆனால், சுயமரி யாதை என்கிற சொல் மாத்திரம் பிடிக்கவில்லை என்று சொல்லும் மேதாவிகளுக்குத் தக்க பதிலாகும்.
நானே அச்சடிப்பேன், நானே படிப்பேன்!
யார் என் பின்னால் வருகிறார்கள் என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.
‘குடிஅரசு’ பத்திரிகை நடத்துகிறார் தந்தை பெரியார். அவரிடம் சென்ற ஒருவர் சொல்கிறார், ‘‘அய்யா இந்தப் பத்திரிகை நட்டத்தில் நடைபெறுகிறது. நிறைய பேர் வாங்க மாட்டேன் என்கிறார்கள்; இந்தப் பத்திரிகையைப் பார்த்த வுடன் பயப்படுகிறார்கள் - நாம் பத்திரிகையை நிறுத்தி விடலாம்'' என்கிறார்.
உடனே பெரியார் அவர்கள், ‘‘நான் என்னுடைய பணியை தொடங்கிவிட்டேன். நான் ஒரே ஆள் எழுது வேன். யாரும் வாங்கவில்லை என்றாலும்,  நானே அச்சடிப் பேன், நானே படிப்பேன், நானே அதனை மடித்து வைப்பேன் - நான் அதனை விடமாட்டேன்'' என்றார்.

பெரியாருக்கும், வள்ளலாருக்குமுள்ள வேறுபாடு!
பெரியாருக்கும், வள்ளலாருக்கும் ஒரு வேறுபாடு என்னவென்றால்,
கடை விரித்தோம் கொள்வாரில்லை

கட்டிவிட்டோம் என்றார் வள்ளலார்.

பெரியார் என்ன சொன்னார் என்றால்,
கடை விரித்தேன், நீங்கள் கொள்ளும் வரை கடையை மூடமாட்டேன் என்றார்.
அந்தக் கடை இப்பொழுது ஜெர்மனிக்கு வந்திருக்கிறது. அந்தக் கடை அமெரிக்காவில் இருக்கிறது; அந்தக் கடை பர்மாவில் இருக்கிறது. அந்தக் கடை உலகம் முழுவதும் சென்றிருக்கிறது.
பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட்
பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட். சாதாரணக் கடைக்கும், சூப்பர் மார்க்கெட்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால், சூப்பர் மார்க்கெட்டில் எல்லா பொருள்களும் கிடைக்கும். சாதாரண கடைகளில் எல்லா பொருள்களும் கிடைக்காது.
ஒரு சிலருக்கு சில பொருள்கள் பிடிக்கும்; அதனை சூப்பர் மார்க்கெட்டில் வாங்குவார்கள்; சில பொருள் பிடிக் காது, அதனை வேறொரு இடத்தில் வாங்குவார்கள். அது போன்று பெரியாருடைய கொள்கைகள் ஒரு பேரங்காடி. பிடித்தவர்கள் அதனை வாங்கட்டும். இது தரமானதாக இருக்கும்; போலியாக இருக்காது; சரக்கு மிகவும் வித்தி யாசமாக இருக்கும் என்று சொல்லக்கூடியது.
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு - அவர்தாம் பெரியார் பார் என்று சொன்னார்.
சுயமரியாதை இயக்கம் பேதத்தை ஒழிக்கின்ற இயக்கமாகும்
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்களுடைய அந்த சிந்தனையில் சொல்கிறார்,
இந்த இயக்கமானது, இன்றைய தினம் மதத்தையும், பார்ப்பனரையும், சாமியையும் (கடவுளையும்), பண்டிதர் களையும் வைது கொண்டு (எதிர்த்துக்கொண்டு), மூடப் பழக்கவழக்கங்களை எதிர்த்துக் கொண்டு, மக்களைப் பரிகாசம் செய்துகொண்டிருப்பது போலவே, என்றைக்கும் இருக்கும் என்றோ, அல்லது இவைகள் ஒழிந்தவுடன், இவ்வியக்கத்திற்கு வேலை இல்லாமல் போய்விடும் என்றோ யாரும் கருதக்கூடாது.
மேற்சொன்னவைகளில், ஆதிக்கங்கள் ஒழிவதோடு, ஒருவன் உழைப்பில், ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கிற தன்மை இருக்கும் வரையில், ஒருவன் தினமும் ஒரு வேளை கஞ்சிக்கு வழியின்றி பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் அய்ந்து வேளை சாப்பிட்டுவிட்டு, வயிற் றைத் தடவிக்கொண்டு, சாய்மான நாற்காலியில் சாய்ந்துகொண்டு இருக்கும் தன்மை இருக்கும் வரையிலும்,

ஒருவன் இடுப்புக்கு வேஷ்டியில்லாமல் திண்டாடு வதும், மற்றொருவன் மூன்று வேஷ்டிப் போட்டுக்கொண்டு உல்லாசமாகத் திரிவதுமாய் இருக்கின்ற நிலை உள்ள வரை,
பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுவதும், தங்கள் சுயவாழ்வுக்கே என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற வரையிலும், சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும். மேற்கொண்டவைகள்  தன்மைகள் ஒழியும் வரையில், இந்த இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது.
அதனால், பேதமற்ற வாழ்வே பெருவாழ்வு! அதனை அழகாகச் சொன்னார் பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கம் பேதத்தை ஒழிக்கின்ற இயக்கமாகும்.
குலதர்மத்திற்கு எதிரானது சமதர்மம்
சமதர்மம் என்றால் என்னவென்று கேட்டார்கள், இருப் பதை எல்லோரும் பகிர்ந்துகொள்வதுதான் சமதர்மம். குலதர்மத்திற்கு எதிரானது சமதர்மம் என்றார்.
இரண்டு கைகள் இருக்கின்றன - அது நன்றாகப் பயன் பட வேண்டும்; மூன்றாவது கை முதுகில் முளைத்தால், நன்றாகத்தான் இருக்கும் சொரிந்து கொள்வதற்கு. யாரும் மூன்றாவது கை முளைக்கவில்லையே என்று வருத்தப்பட மாட்டார்கள் - இருக்கின்ற கைகள் நன்றாக இயங்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.
இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள் இருக்கும்பொழுது, ஒரு கண்ணுக்கு மட்டும் பார்வை - ஒரு காதுக்கு மட்டும் கேட்கும் தன்மை, ஒரு கை மட்டும் இயங்கும் தன்மை, ஒரு கால் மட்டும் இயங்கினால் போதும் என்று நினைப்போமா?
அதுபோன்று, ஆண் - பெண் இருவரும் சரி சமமாக இயங்கினால்தான் உலகம் - அதுதான் சமூகம். ஒன்றைப் பயன்படுத்தி, இன்னொன்றை இயங்கக் கூடாத நிலையில் வைத்திருக்கிறார்களே. மக்களில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்களை அடிமைகளாக வைத்திருக்கிறார்களே - அவர்களுக்குத் தடை போட்டு வைத்திருக்கிறார்களே! இதனைத் தட்டிக் கேட்டவர் தந்தை பெரியார்.
‘‘கடை விரித்தேன், கொள்ளும்வரை விடமாட்டேன்'' என்றார்!
இதற்குமுன் பாரதியார்  சொல்லியிருக்கிறார்; ராமலிங்க அடிகளார் அதற்கு முன் பேசியிருக்கிறார்; சித்தர்கள் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள் - பாடி விட்டுப் போய் விட்டார்கள் - எழுதி விட்டுப் போய்விட்டார்கள்.
பெரியார் ஒருவர்தான், கடை விரித்தேன், கொள்ளும் வரை விடமாட்டேன் என்றார்.
இப்பொழுது அந்த சரக்கு ஏற்றுமதி ஆகிக்கொண்டி ருக்கிறது. இது நல்ல சரக்கு என்கிறார்கள். அமெரிக்காவில் இந்த சரக்கு - இப்பொழுது மிகவும் தேவையாய் இருக்கிறது. மற்ற இடங்களில் தேவை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு வந்திருக்கிறது என்றால், பெரியார் ஒரு தொலை நோக்காளர் என்று யுனெஸ்கோ சொன்னது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஆகவே, நண்பர்கள் இங்கே உரையாற்றும்பொழுது லதாராணி அவர்கள், கவிஞர் அவர்கள் செங்கல்பட்டு மாநாட்டுத் தீர்மானத்தைப்பற்றி சொன்னார்கள்.
1929 ஆம் ஆண்டு, நம்மில் பலர் பிறந்திருக்காத நிலையில், ஒரு சில மூத்தவர்களைத் தவிர, 92 வயது 94 வயதில் இங்கே வந்திருக்கிறார்களே,  அந்த இளைஞர்கள், அவர்கள் எல்லாம் இளைஞரணியினர். அப்படிப்பட்ட வர்கள் வேண்டுமானால், அவர்கள் சிறு பிள்ளையாக இருந்தபொழுது கேள்விப்பட்டிருக்கலாம், அல்லது மாநாட் டிற்குச் சென்றிருக்கலாம்.
மாநாட்டு விளம்பரம்!
அந்த மாநாட்டிற்கான விளம்பரத்தை பெரியார் எப்படி செய்தார் என்றால்,
பள்ளர்களும், பறையர்கள் என்ற தாழ்த்தப்பட்டவர் களும், ஒதுக்கி வைக்கப்பட்டவர்களும், கீழ்ஜாதி என்று அடைமொழிக் கொடுக்கப்பட்டிருப்பவர்களும், தாலி அறுத்தவர்கள், விதவைகள் என்று அவமானப்படுத்தப்படக் கூடியவர்களும், தாசிகளும் இந்த மாநாட்டிற்குக் கட்டாயம் வரவேண்டும்.
இப்படி ஒரு விளம்பரத்தைப் போடுபவர்கள் வேறு யாராவது உண்டா? என்பதை நன்றாக நீங்கள்  நினைத்துப் பார்க்கவேண்டும்.

எல்லோரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடவேண்டும் என்று சொன்னார்.
‘‘மலம் கழிக்கும்பொழுது ஒன்றாக இருக்கிறான்; சாப்பிடும்பொழுது பொழுது தனியாக இருக்கிறானே!’’
தமிழகத்திலே பெரியார் போன்று ஒரு பச்சையான உதாரணத்தை சொல்பவர்கள் வேறு யாரும் கிடையாது.
மலம் கழிக்கப் போகின்ற இடத்தில் வரிசையாக உட் கார்ந்து கொண்டிருக்கிறான். ஒருவன் சுருட்டுப் பற்ற வைத்தான் என்றால்,  வரிசையாக செயின் போன்று வத்திப் பெட்டியை வாங்கிக்கொள்கிறார்களே. ஆனால், சாப்பிடும் போது மட்டும் தனித்தனியாக சாப்பிடுகிறார்களே!
சாப்பிடும்பொழுது ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் - மலம் கழிக்கும்பொழுது தனியாக இருக்க வேண்டும். ஆனால், மலம் கழிக்கும்பொழுது ஒன்றாக இருக்கிறான்; சாப்பிடும்பொழுது பொழுது தனியாக இருக்கிறானே இது நியாயமா? என்று கேட்டவர் தந்தை பெரியார்.
சமுதாய சிந்தனைகள் என்பது சாதாரணமானதல்ல. எளிய உதாரணத்தை - மிக முக்கியமான உதாரணத்தை சொல்வார் தந்தை பெரியார் அவர்கள்.
சிதம்பரத்தில் ஒருவர் கேட்கிறார், ‘‘நாயக்கரே, நீங்கள் நன்றாகப் பேசுகிறீர்கள்;  நீங்கள் சொல்வதெல்லாம் சரியாக இருக்கிறது: கடவுளைப் போய் கல்லுன்னு சொல்கிறீர்களே, இது நியாயமா?'' என்கிறார்.
அதற்காக அய்யா பெரியார் வாதம் செய்யவில்லை. வாங்க சிதம்பரம் நடராஜன் கோவிலுக்குப் போவோம்; கையில் தடி இருக்கிறது, தட்டி காட்டுகிறேன், கல்லா, இல்லையா என்பது உங்களுக்குப் புரியும் என்றார்.
இப்படிப்பட்ட பதிலை கேள்வி கேட்டவர் எதிர்பார்க்க வில்லை. கொஞ்சம் சமாளித்துக்கொண்டு அவர் என்ன சொன்னார் என்றால், ‘‘கல்லுதான், ஆனால், எல்லா கல்லு மாதிரியும் அது கிடையாது. அது கடவுள் - மந்திரத்தை உள்ளே விட்டிருக்கிறது'' என்று சொன்னார்.
கல்லினுள் மந்திரம் போகும்பொழுது, மனிதனுக்குள் போகாதா?
அப்படியா, உங்கள் மந்திரத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது; கல்லை கடவுளாக்கும் சக்தி என்றால், அதே மந்திரத்தை எங்களுடைய சகோதரர்களான தாழ்த்தப்பட்ட வன்,  பறையன், பள்ளன், கீழ்ஜாதி, தொடாத ஜாதி என்று சொல்கிறீர்களே, அவர்களிடம் விட்டு, அவர்களை மேல் ஜாதி ஆக்கவேண்டியதுதானே. கல்லினுள் மந்திரம் போகும்பொழுது, மனிதனுக்குள் போகாதா?'' என்றார்.
கேள்வி கேட்டவர், எதுவும் சொல்லாமல், பேசாமல் அமர்ந்துவிட்டார்.
பெரியார் போன்று பளிச்சென்று பதில் சொல்லி, சிந்தனையைத் தூண்டியவர்கள் வேறு யாரும் கிடையாது.
வஞ்சகர், வந்தவர், தமிழால் செழித்தார்!
வாழ்வினில் உயர்ந்தபின், தமிழையே பழித்தார்!
நம்செயல், ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம் இந்நாள், அவரஞ்சி விழித்தார்!
என்றார் புரட்சிக்கவிஞர் அவர்கள்.
பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி!
அப்படிப்பட்ட ஒரு கால சூழ்நிலையில், மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், ஒரு பெரிய மகிழ்ச்சியான, ஒரு திருப்பமாக இதனை முன்னெடுக்கவேண்டும்.
விஞ்ஞானத்தைப் பரப்புவதுபோன்று, சுயமரியாதை தத்துவம் என்பது இருக்கிறது, அது ஒரு சமூக விஞ்ஞானம்.  பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி. அந்த சமூக விஞ்ஞானத்தை யாராலும் தடுக்க முடியாது. எதிர்ப்புகள் வரும் - அதனைப்பற்றி பெரியார் அவர்கள் கவலைப்படமாட்டார். நாங்களும் எதிர்ப்புகளைப்பற்றி கவலைப்படாமல்தான் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். எதிர்நீச்சல் அடிக்கும் பொழுதுதான், வீரமே இருக்கிறது.
ஈரோடு போனவன்; நீரோடு போகமாட்டான்!
கலைஞர் அவர்கள்கூட, ‘‘மானமிகு சுயமரியாதைக் காரன்'' என்று தன்னை வர்ணித்துக் கொண்ட கலைஞர் அவர்களிடம், நெருக்கடி காலத்தில் இப்படி எதிர்த்து நிற்கிறீர்களே; தேசிய நீரோட்டத்தில் கலந்துகொள்ள வில்லையே என்று கேட்டார்கள்.

அதற்குக் கலைஞர் அவர்கள் பட்டென்று பதில் சொன்னார். ஈரோடு போனவன்; நீரோடு போகமாட்டான் என்றார்.
இன்றைக்கு எதிர்நீச்சல் அடிப்பதுதான் மிக முக்கியம். அன்று முதல் இன்றுவரை நாளை வரை இந்த இயக்கம் எதிர்நீச்சல் அடிக்கும் - அடித்து கரை சேரும். வெற்றி பெறும். மூழ்குகிறவர்களையெல்லாம் கைதூக்கி விட்டு கரை சேர்க்கும்.
85 வயதினராக வந்தோம்; 25 வயதினராகத் திரும்புகிறோம்!

எனவே, இந்த இயக்கம் இன்றைக்கு ஜெர்மனியில், 85 ஆண்டுகளுக்கு முன் பெரியார் அவர்கள் வந்ததைப்பற்றி கவிஞர் அவர்கள் இங்கே சொன்னார். இன்றைக்கு அவருடைய தொண்டனாகிய நான், 85 வயதில் இங்கே வந்து, உங்களையெல்லாம் பார்த்து, 25 வயதோடு திரும்பிப் போகிறேன். நாங்கள் வரும்பொழுது எங்களுக்கு வயது 85; திரும்பும்பொழுது 25 வயது.
ஏனென்றால், இதுபோன்ற முயற்சிகள் வேண்டும். எந்த ஒரு கொள்கைத் தத்துவவாதியாக இருந்தாலும், அவர் எவ்வளவு சிறந்த தத்துவங்களை சொன்னாலும், அந்தத் தத்துவங்களை அவர் மட்டுமே பரப்பிவிட முடியாது. அவருடைய தொண்டர்கள்தான் பரப்பவேண்டும். அந்தத் தொண்டர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதுபற்றி அவர் சொன்னார்.
‘‘என்னுடைய தொண்டர்கள் எல்லாம் வருவதற்கு முன் நன்றாக யோசிப்பவர்களாக, பகுத்தறிவாளர்களாக இருக்க வேண்டும். இயக்கத்திற்கு வந்த பிறகு, இராணுவக் கட்டுப் பாடோடு செயல்படவேண்டும்'' என்றார்.
நான் பெரியாருடைய வாழ்நாள் மாணவன். நான் அடிக்கடி ஒரு கருத்தை சொல்லும்பொழுது, என்னை கேலி செய்தார்கள்.
‘‘எனக்கு சொந்த புத்தி தேவையில்லை; பெரியார் தந்த புத்தி போதும்'' என்றேன்.
இவர் என்ன பகுத்தறிவுவாதி; சொந்த புத்தி தேவையில்லை என்கிறாரே என்று.
இதனை ஒருவர் என்னிடம் கேள்வியாகவே கேட்டார்.
பெரியார் தந்த புத்தி போதும்!
ஆமாம். நான் என்ன சொன்னேன், சொந்தப் புத்தி தேவையில்லை என்று சொன்னதோடு நிறுத்தவில்லை; பெரியார் தந்த புத்தி போதும் என்று சொல்லியிருக்கிறேனே என்றேன்.
சொந்த புத்திக்கு பலகீனம் உண்டு
சொந்த புத்திக்கு ஆசாபாசம் உண்டு
சொந்த புத்திக்கு சுயநலம் உண்டு.
பெரியார் தந்த புத்திக்கு பலகீனம் கிடையாது;
பெரியார் தந்த புத்திக்கு ஆசாபாசம் கிடையாது
பெரியார் தந்த புத்தி நன்றியை எதிர்பார்க்காது.
அந்த உணர்ச்சியில் இந்தத் தொண்டர்கள் தயாராக இருக்கின்ற காரணத்தினால்தான், நாம் எதற்கும் தயார் என்று சொல்லக்கூடிய அந்த உணர்ச்சியை நாம் பெற்றிருக் கிறோம். ஆகவே, அருமையாக இந்த உணர்வுகளை அம்மையார் அவர்கள், அவரைச் சார்ந்தவர்கள் இங்கே ஏற்பாடு செய்துள்ளனர். நல்ல அருமையான தத்துவங்கள். என்னுடைய வாழ்நாளில் மிக மகிழ்ச்சியாக இருக்கின்ற நாள்கள் என்று சொன்னால், இந்த நாள்கள்தான். இவ்வளவு மகிழ்ச்சியாக என்றைக்கும் இருந்தது கிடையாது. இனிமேல் எதைப்பற்றியும் கவலை கிடையாது.
பெரியார் தொண்டர்கள் துறவிக்கும் மேலானவர்கள்!

தன்னுடைய தொண்டர்களைப்பற்றி பெரியார் சொல் கிறார்,

‘‘எனது தொண்டர்கள்  துறவிக்கும் மேலானவர்கள்'' என்று சொன்னார்.
ஆனால், இன்றைக்குத் துறவி என்றால், வேறு அர்த்தம் - சாமியார் எல்லாம் அய்டெக் சாமியார்கள்; கார்ப்பரெட் சாமியார்கள். இந்தியாவில் ஒரு வகையான சாமியார்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். சாமியார் ராஜ்ஜியம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சாமியார்கள் தான் இன்றைக்கு இருக்கிறார்கள்.
உண்மையான துறவிகள் என்றால், நம்முடைய குன்றக் குடி அடிகளார் போன்று, காலையில் இங்கே வந்தாரே இம்மானுவேல் பாதிரியார் போன்றவர்கள்தான்.
துறவிகளுக்கும் மேலானவர்கள் என்னுடைய தொண்டர்கள் என்று சொல்லிவிட்டு, அதற்கு விளக்கமும் சொன்னார்.
துறவிகளிடம் சென்று, ஏன் நீங்கள் இல்லறத்தைவிட்டு, துறவறத்திற்கு வந்தீர்கள் என்று கேட்டால், அவர்கள் என்ன சொல்வார்கள்?
இது நிலையாமை - இது சிற்றின்பம். மேலே சென்றால், பேரின்பம்.  அங்கே ரம்பை, திலோத்தமை, ஊர்வசி எல்லாம்  டான்ஸ் ஆடுவார்கள். தனியாக சமைக்கவேண்டிய அவசியம் கிடையாது. அண்டா அண்டாவாக சாம்பார் இருக்கும்; பாயாசம் இருக்கும்; எப்பொழுது வேண்டு மானாலும் சாப்பிடலாம்; வேலை செய்யவேண்டிய அவசியமில்லை. அங்கேயே அமர்ந்து டான்ஸ் பார்க்கலாம்; சினிமா ஸ்டாரைவிட அழகாக இருப்பார்கள் என்று சொல் லக்கூடிய அளவிற்கு - மோட்சத்திற்குப் போவதற்காகத்தான் நான் சாமியாராகிவிட்டேன் என்பார்கள்.
மோட்சம், நரகம் பித்தலாட்டம் என்று சொல்பவர்கள் நாங்கள்!
துறவிகளாவது, எதையோ எதிர்பார்த்து துறவிகளா கிறார்கள். ஆனால், எங்களுடைய தொண்டர்கள், மோட் சம், நரகத்தைப் பித்தலாட்டம் என்று சொல்பவர்கள். துறவிக்கும் மேலானவர்கள், எதையும் எதிர்பார்க்காதவர்கள் என்று சொன்னார்.
எனவே, அப்படிப்பட்ட தொண்டர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களுடைய சொந்த செலவில் வந்ததைப்பற்றி இங்கே தெளிவாக சொன்னார்கள். நிறைய பேர் வருவதற்கு இருந்தார்கள் - இவர்களை மீண்டும் கொண்டு போய் பத்திரமாக சேர்க்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
எவ்வளவு உணர்ச்சிபூர்வமானவர்கள் இங்கே வந் திருக்கிறார்கள். ஒன்றை நான் சொல்லியாகவேண்டும் - இந்த இயக்கம் எவ்வளவு பெரியவர்களை தயாரித் திருக்கிறது என்று சொன்னால்,
இங்கே வருவதற்கான ஏற்பாட்டினை தோழர் கும ரேசன் அவர்கள் செய்தார். பயணச்சீட்டு, விசா போன்றவை கிடைக்கவேண்டும் - அனைவருக்கும் ஒன்றாகக் கிடைக்கவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார்.
தடைகற்கள் ஆயிரம் என்றாலும்,
தாங்கும் தடந்தோள்கள் உண்டு.
கழகத் தோழர்களின் உணர்ச்சிபூர்வமான
ஒரு கடிதம்!
திடீரென்று இரண்டு பேர் வந்திருந்தார்கள். தங்கமணி - தனலட்சுமி ஆகியோர் 26 ஆண்டுகளாக வாழ் விணையர். அந்த அம்மையார் அரசாங்க அதிகாரியாக இருக்கிறார். ஒரு நாள் என்னுடைய அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தார்.
என்னம்மா, புறப்படுவதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா? என்று நான் அவர்களைப் பார்த்து கேட்டேன்.
இல்லீங்க அய்யா, எல்லாம் தயாராக இருக்கிறது. உங்களிடம் ஒரு கடிதத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக நிற்கிறோம் என்றார்கள்.
மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு சூழல். அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்தேன். அதில்,
நாங்கள் ஜெர்மனி மாநாட்டிற்குச் செல்கிறோம். நாங்கள் மாநாட்டிற்குச் சென்றுவிட்டு வரும்பொழுது ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது எங்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, எங்கள் சொத்து முழுவதும் இந்த இயக்கத் திற்கு நாங்கள் எழுதி வைத்திருக்கிறோம் என்று இருந்தது.
மானத்தை, மரியாதையை, உரிமையை வழங்கிய இயக்கம்
இதுபோன்ற ஓர் இயக்கத்தைக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? இந்த இயக்கம் அவர்களுக்குப் பதவி வழங்கவில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, மானத்தை, மரியாதையை, உரிமையை வழங்கிய இயக்கம்.
நன்றி பாராட்டாத ஓர் இயக்கத்தில், நன்றி காட்டக்கூடிய தொண்டர்கள்.
புகழை எதிர்பார்க்காத ஓர் இடத்தில், அற்புதமான தோழர்கள்.
உலக வரலாற்றில் ஜெர்மனி மாநாடு இடம்பெறும்!
ஆகவே, அம்மையார் உல்ரிக் அவர்களும், அவரைச் சார்ந்த கிளாடியா அவர்களும், பேராசிரியர் அவர்களும், மற்றவர்களும் இங்கே வந்து இவ்வளவு பேரை தயார் செய்திருக்கிறார்கள். என்ன லாபம் என்றால், நாமெல்லாம் அறிவு பெற்றோம், மானம் பெற்றோம் என்பதுதான். இது வரலாறு. நாளைய வரலாறை எழுதும்பொழுது, ஜெர்மனி மாநாடு முதலிடம் பெறப் போகிறது என்பதுதான் மிக முக்கியம்.
வளமையாகத் திரும்பவில்லை நாங்கள் - இளமையாகத் திரும்புகிறோம்!
ஆகவே, உங்களுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துகின்றோம். நாங்கள் வயதானவர்களாக வந்திருக் கலாம்; பெரும்பாலானவர்கள் அப்படித்தான். ஆனால், திரும்பும்பொழுது, இளமைத் துடிப்போடு திரும்புகிறோம். அது உங்களால்!
வளமையாகத் திரும்பவில்லை நாங்கள் - இளமையாகத் திரும்புகிறோம். கொள்கையில் வளமை - வாழ்வில் இளமை - தொடர்ந்த தொண்டு. நம்முடைய அய்யா செல்வநாயகம் போன்றவர்கள், சோம.இளங்கோவன் போன்றவர்கள், டாக்டர் இலக்குவன் தமிழ் போன்றவர்கள், பெரியார் பன்னாட்டமைப்பு வைத்து,  குவைத்தில் இருக்கக்கூடிய எதையும் கருதாத ஓர் எடுத்துக்காட்டான தொண்டராய் இருக்கக்கூடிய நம்முடைய செல்லபெருமாள் போன்றவர்கள், அவருடைய பேராளராக, பிரதிநிதியாகத் தான் லதாராணி அவர்கள் கலந்துகொண்டார்கள். நாளைக்கும் நிகழ்ச்சிகள் இருக்கிறது.
பெரியார் அவர்களுக்கு எதிர்ப்பு வந்தபொழுது, பெரியாருடைய தொண்டர்கள் என்ன சொல்வார்கள் என்றால்,
வீட்டிலிருந்து புறப்படும்பொழுது, செலவு கணக்கில் தான் எழுதி விட்டு வந்தோம்.  திரும்பிப் போனால்தான், மறுபடியும் வரவு என்று, இதோ இங்கே வந்திருக்கிறார்களே!
புது குடும்பங்கள் இணைந்திருக்கின்றன
பணியாற்றுவதற்கு எங்களைப் போன்றவர்கள் குடும் பம் குடும்பமாக இருக்கிறார்கள். அதுதான் மிகவும் முக்கியம். சுயமரியாதைக் குடும்பங்களை உருவாக்குவதில், எங்களுக்குப் புது குடும்பங்கள் இணைந்திருக்கின்றன - ஜெர்மனியில், அமெரிக்காவில், உலகளவில்.
எனவே, குடும்ப உறவுகள் - நீரினும் ரத்தம் வலிமையானது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், ரத்தத்தைவிட வலிமையான ஒன்று உண்டு. அதுதான் கொள்கை உறவு. அதுதான் சுய மரியாதை. அந்த சுயமரியாதை வெல்லட்டும்! சுயமரியாதை வாழ்க்கை சிறந்து மிளிரட்டும்.
பெரியார் கொள்கைகள் உலகம் முழுவதும் பாய்கின்ற பாய்ச்சலுக்கு முதல் பாய்ச்சல்!
இங்கு முதல் அடி எடுத்து வைத்திருக்கிறோம். நேற்று நான் சொன்னேன், நிலவில் இறங்கிய மனிதன் சொன்னான், இது மனிதனுடைய காலடி என்று நினைக்காதீர்கள். மனித குலத்தின் பாய்ச்சல் என்று சொன்னார்கள். அதுபோல, இந்த மாநாடு இன்றைக்கு ஒரு சிறிய அறையில் நடை பெறுவதாக இருந்தாலும், நாளைக்கு இதுதான் பெரியார் கொள்கைகள் உலகம் முழுவதும் பாய்கின்ற பாய்ச்சலுக்கு முதல் பாய்ச்சல் என்று சொல்லி, நன்றி, நன்றி, நன்றி! என்று கூறி முடிக்கிறேன்.
வாழ்க பெரியார்!  வளர்க சுயமரியாதை!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


Friday, June 2, 2017

கலைஞர் 94 பிறந்த நாள்விழா

பெரியார் நினைவு சமத்துவபுரங்களை ஏற்படுத்தி,
ஜாதிகள் இல்லை என்பதை நடைமுறைப்படுத்தியவர் கலைஞர்
தமிழர் தலைவர் வாழ்த்துரை
சென்னை, ஜூன் 1 சென்னை வேப்பேரி பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (31.5.2017) மாலை திமுக தலைவர் கலைஞர் அவர்களின் 94 ஆம் பிறந்த நாள்விழா மகுடம் 9Õ கலைஞர் 94 சான்றோர் போற்றும் தமிழ் அரங்கம் எனும் தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக மற்றும் எழும்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில் சிறப்புற நடந்தது.
விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந் தினர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் பயனாடை, நினைவுப்பரிசு அளிக்கப் பட்டது. விழா மேனாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் தலைமையில் நடை பெற்றது. கவிஞர் இளைய கம்பன் வரவேற்புரையுடன் விழாவில் இணைப் புரை வழங்கினார்.
மேனாள் மத்திய அமைச்சர் ஜெகத் ரட்சகன் தலைமையுரையாற்றினார். கவிஞர் நெல்லை ஜெயந்தா, பேரா சிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா, நக்கீரன் ஆசிரியர் கோபால்,  திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன், காங்கிரசு கட்சி மேனாள் தலை வர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் ஆகி யோர் உரையை அடுத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவு சிறப் புரையாற்றினார்.
பள்ளி சிறார்களுக்கான கல்வி உத வியைத் தொடங்கிவைத்தார். கலைஞர் 94ஆம் பிறந்த நாள்விழா, கலைஞர் சட்டமன்ற வைரவிழாவையொட்டி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.
விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிஞர் காசி.முத்துமாணிக்கம். சட்ட மன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எழும்பூர் கே.எஸ்.இரவிச்சந்திரன், காங் கிரசு கட்சி ரங்கபாஷ்யம், சிவராமன், சம்பத், திராவிடர் கழக  சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
வரலாற்று நாயகர் வைரத்தைப் பாராட்டும் விழாவாக இவ்விழா நடை பெறுகிறது. தனி மனிதனாக தன் கொள்கையைத் தியாகம் செய்யாமல் ஒரே கட்சியில் தொடர்ந்து 60 ஆண்டு காலமாக சட்டமன்றத்தில் அமர்ந்தது பேரதிசயம்.
எழுத்தில், பேச்சில், மூச்சில் பெரியார், அண்ணா கொள்கைகளில் தம்பிகளை, ஓர் இயக்கத்தை நடத்தும் தலைவருக்கு 94ஆம் பிறந்த நாள். அவர் கொடுத்த ஆயுதங்களை நாம் பயன் படுத்த வேண்டும்.
பெண்களுக்கு இன்னமும் இட ஒதுக்கீடு கோரி போராடி வருகின்ற நிலையில் இங்கே 50 விழுக்காடு பெண்கள் வந்துள்ளனர். கலைஞர் பெற்ற வெற்றி சின்னங்களாக இங்கே ஏராளமான பெண்கள் உள்ளனர். இவர்கள் போராட்டத்துக்கும் வரக் கூடிய வீராங்கனைகள். கலைஞர் பேசினாலும், அமைதியாக இருந்தாலும் திராவிட இயக்கத்தை எந்த கொம் பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.
கலைஞர் பல்கலைக்கொள்கலன். நிர்வாகத்துறையில் முடிவெடுப்பதில் அவரை எவரும் தாண்ட முடியாது. அப்படிப்பட்ட அவரிடம் செய்தியாளர் தங்களைப்பற்றி ஒரு வரியில் விமர் சனமாகக் கூறுங்களேன் என்றதும், உடனடியாக Ôமானமிகு சுயமரியாதைக் காரன்Õ என்றார்.
சுயமரியாதை என்றால் என்ன? என்று தந்தை பெரியார் கூறும்போது, சுயமரியாதை எனும் சொல்லுக்கு இணையாக வேறில்லை என்றார். ஆனால்,  மாட்டின்மூலம் இன்றைக்கு இன எதிரிகள்மூலம், கொள்கை எதிரிகள் மூலமாக சுயமரியாதையைப் பெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு விஞ்ஞானி தயாரித்தளித்த கருவி எப்போதும் பயன்படுவதுபோல், கொள்கையைக் கொண்டு நமக்கு ஏற்பட்டுள்ள அறைகூவல்களை சந்திக்க வேண்டும்.
நெருக்கடிக்காலத்தை சந்தித்தவர் கலைஞர்.  ஆதரித்தாலும், எதிர்த்தாலும் உறுதி காட்டக்கூடியவர் கலைஞர். ஜாதியால் சீரழிந்திருக்கிறோம் என்ப தால், பெரியார் நினைவு சமத்துவபுரங் களை ஏற்படுத்தி, ஜாதிகள் இல்லை என்பதை நடைமுறைப்படுத்தினார்.
இந்த விழாவில் சூளுரை ஏற்போம். இந்த இனத்தின் மீட்சிக்கு நாம் சூளுரைப்போம். நம்மை அழிக்கின்ற இந்துத்துவா திணிப்பு, நீட் தேர்வு திணிப்பு, மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்கிற ஆணை போன்ற மோடி வித்தைகளை முறியடிப்போம்.
நாமாவளி பாட அல்ல இந்த விழா. போர்ப்பரணி பாட. பெரியார், அண்ணா கொள்கைகளை நடைமுறைப்படுத் தினார். கலைஞர் நூறாண்டுகள் தாண்டி வாழ்வார். மீள்வார். பெரியார் அண்ணா கொள்கைவழி இலட்சிய வழியில் கலைஞர் ஆட்சி நடத்திக்காட்டினார். 1929 செங்கற்பட்டு திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை ஆட்சிக்கு வந்தபோது சட்ட மாக்கியவர் கலைஞர்.  பெண்களுக்கு சம உரிமை சொத்துரிமை, இடஒதுக்கீடு எனும்போது, ஆட்சி என்பது அதிகா ரத்துக்காக இல்லாமல்,  கொள்கைக்காக நடத்திக்காட்டியவர். சிறிய வயதில் தமிழ்க்கொடி என அப்போது வில், கயல், புலிக் கொடி ஏந்தி போராடினார். அவர் தொடர்ந்த சமூக நீதிப் போராட் டத்தை, அவர் தந்த கருவிகளுடன் புறப் படுவீர்! போராடுவோம்!! போராடு வோம்!!!
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றும்போது குறிப் பிட்டார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, October 9, 2015

உடலில் உள்ள மற்ற உறுப்புகள் எல்லாம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்; இதயம் ஓய்வெடுக்க முடியாது! இதயம் போன்றதுதான் திராவிடர் கழகம்!


உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

உடுமலை, அக். 8- உடலில் உள்ள மற்ற உறுப்புகள் எல்லாம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்; ஆனால், இதயம் ஓய்வு எடுத்தால், உயிர் போய்விடும். இதயம் போன்றது தான் திராவிடர் கழகம். நாங்கள் ஓய்வெடுக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்
30.9.2015 அன்று உடுமலையில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
முதலாவது அரசியல் சட்டத் திருத்தம்
இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது இந்தியாவில் உண்டானது என்று சொன்னால், அப்பொழுது நேரு பிரதமராக இருந்தார்; அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சராக இருந்தபொழுது, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் செய்த மாபெரும் கிளர்ச்சி - கட்சி வேறுபாடின்றி மக்கள் அவரோடு இருந்ததனால்தான், இன்றைக்கு வகுப்புவாரி உரிமை சட்டம்.
நேரு சொன்னார், ஏன் இந்த அரசியல் சட்டத்தைத் திருத்துகிறோம் என்று கேட்டால், இது இந்தியாவில், தமிழ் நாட்டில் மட்டும் நடந்தது என்று மட்டும் நினைக்காதீர்கள்; அதனுடைய எதிரொலி மற்ற இடங்களிலும் கேட்கும். அதனால்தான் அரசியல் சட்டத்தைத் திருத்துகிறோம் என்றார்.
முதல் அரசியல் சட்டத்தை பெரியார் திருத்தினார். பெரியாருக்கு எத்தனை எம்.பி. இருந்தார்கள்? எப்படி அரசியல் சட்டத்தைத் திருத்த முடிந்தது? பெரியார் இமயமலை; பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டனர். அதெல்லாம் இருக்காது; ஊருக்கு நான்கு வயதானவர்கள் இருப்பார்கள், அதோடு முடிந்துவிடும் என்று நினைத்தார்கள்.
ஆனால், பெரியார் காலத்தில் இருந்த இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 41 சதவிகிதம் (25+16) - காமராசர் ஆட்சிக் காலத்தில். பிறகு தி.மு.க. ஆட்சி காலத்தில் 49 சதவிகிதம்.
50 சதவிகிதத்திற்குக் கீழ்தான் இருக்கவேண்டும் என்று ஒரு பூச்சாண்டி காட்டினார்கள். அப்பொழுது முதலமைச்சர் அண்ணா  அவர்கள் மறைந்து, கலைஞர் ஆட்சிக்கு வந்தார். சட்டநாதன் ஆணையத்தைச் சேர்ந்தோர் திருச்சிக்குச் சென்று பெரியாரைச் சந்தித்தனர். நீங்கள் முதலில் பரிந்துரை செய்யுங்கள், 49 சதவிகிதம் கொடுக்கலாமே என்றார் பெரியார்.
49 சதவிகிதம் என்பது 50 சதவிகிதத்திற்குக் கீழ்தானே!
அந்தக் கமிட்டியில் இருப்போர், மத்திய அரசு ஒப்புக்கொள்ளாது என்று சொன்னார்கள்.
ஏன்? என்று பெரியார் கேட்டார்.
அவர்கள் ஆட்சேபிப்பார்கள் என்று சொன்னார்கள்.
அப்படி ஆட்சேபித்தால், நான் சொல்கின்ற பதிலைச் சொல்லுங்கள் என்று பெரியார் ஆரம்பித்தார்.
49 சதவிகிதம் என்பது 50 சதவிகிதத்திற்குக் கீழேதான் என்று சொன்னார்.
இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு வந்திருக்கிறது.
பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் இருக்கிறதா? இல்லையா என்பதற்கு என்ன அடையாளம் என்றால், இட ஒதுக்கீடு பெரியார் காலத்தில் 49 சதவிகிதம்; பெரியாருக்குப் பிறகு இன்றைக்கு 69 சதவிகிதம்.
தமிழ்நாட்டில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அத்துணை பேரும் அனுபவிக்கிறார்கள் கட்சி வேறுபாடின்றி. நாளைக்கு இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டால், உங்கள் பிள்ளைகள் கல்லூரிக் குச் செல்ல முடியுமா? இதனை ஒழிப்பதற்குத்தானே இன்றைக்கு நாடி பிடித்துப் பார்க்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்லியிருக்கிறாரே!
வடக்கே லாலு பிரசாத், நிதிஷ்குமார் அவர்கள் உடனே என்ன சொன்னார்கள், இரண்டாவது மண்டல் புரட்சி வரும். இட ஒதுக்கீட்டில் நீங்கள் கை வைத்தால், நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்; இட ஒதுக்கீட்டை உங்களால் ஒழிக்க முடியுமா? என்று கேட்டனர்.
உடனே அவர்களுக்குப் பயம் வந்துவிட்டது; ஆர்.எஸ். எஸ். பாம்பு தலையை உள்ளே இழுத்துக் கொண்டது.
இன்றைக்கு வெளிவந்த இந்து பத்திரிகையில் வெளி வந்த செய்தியைச் சொல்கிறேன்.
பிகாரில் நடைபெறுவது
தேர்தல் போராட்டமல்ல!
பிகாரில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Lalu Prasad - Modi as police file FIR
Lalu Prasad’s remarks at a public meeting at Terasia in Raghopur of Vaishali district on Sunday last. He had said the Yadavs should stand “united” as the Assembly polls marked a “battle between the backward and forward castes.”
அங்கே நடைபெறுகின்ற போராட்டம் தேர்தல் போராட்டமல்ல; பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், முன்னே றிய ஜாதிக்காரர்களுக்கும்தான். வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், புளியேப்பக்காரனுக்கும், பசியேப்பக்கார னுக்கும்தான் போராட்டம் நடைபெறுகிறது. நீண்ட காலமாகப் பட்டினி இருக்கிறான் பாருங்கள் அவனுக்கும், செரிமானம் ஆகவில்லை என்று  ஏப்பம் விடுகிறான் பாருங்கள் அவனுக்கும்தான் போராட்டம் நடைபெறுகிறது.
அதைத்தான் லாலுபிரசாத் சொன்னார்.
Mr. Lalu Prasad also criticised the RSS, the BJP’s ideological mentor. “The RSS is an organisation of Brahmins and Mr. Modi should confer the Bharat Ratna on RSS chief Mohan Bhagwat for suggesting an end to reservation.”
யார் யாருக்கோ பாரத ரத்னா விருது தருவதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார் மோடி. மோகன் பகவத் என்கிற ஆர். எஸ்.எஸ். தலைவர் இருக்கிறார்; அவர்தான் இட ஒதுக் கீட்டை ஒழிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற் காக அவருக்கு பாரத ரத்னா விருதை நீங்கள் கொடுத்து விடலாம் என்று கிண்டலாகச் சொல்லியிருக்கிறார்.
இது பிகாரின் நிலை. குஜராத்தில் என்ன நிலை என்றால், அன்றைக்கு எந்தப் பட்டேல் ஜாதிக்காரர்கள் இட ஒதுக்கீடே வேண்டாம்; அதனை ஒழித்தே தீருவோம் என்று குஜராத்தில் சொன்னார்களோ, இன்றைக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அவர்கள் ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்; எதற்காக கேட்கிறார்கள்; அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களா? இல்லையா? என்பதெல்லாம் பிறகு.
இட ஒதுக்கீடே வேண்டாம் என்று சொன்னவன், இன்றைக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறான். காரணம் என்ன? இன்றைக்கு சமூகநீதியால் எல்லோரும் முன்னேறி வருகிறார்கள்; நாம் பின்தங்கி விட்டோமே என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
திராவிடத்தால் வீழ்ந்தோமா?
இந்த இட ஒதுக்கீடு போராட்டம் வந்திருக்கிறது என்றால், அந்தச் செய்தியும் இந்து பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது, அதனைப் படிக்கிறேன் கேளுங்கள்:
On Thursday, Patel women forced the BJP to cancel meetings or social functions at half a dozen places across the State.
In Naroda, Ahmedabad, party MLA Nirmala Waghvani fled the venue of a function in her constituency when more than 100 women of the Patel community stormed the venue with plates and rolling pins or spoons.
குஜராத் மாநிலத்தில் ஒரு ஆறு, ஏழு இடத்தில் பா.ஜ.க.வினர் நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல், அந்த இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் காரணமாக நிறுத்திக் கொண்டார்கள். தட்டு, கரண்டி இவையெல்லாவற் றையும் எடுத்துக்கொண்டு பி.ஜே.பி. பெண் சட்டமன்ற உறுப்பினர் ஓடினார் என்று எழுதியிருக்கிறார்கள்.
பிகார், குஜராத், ராஜஸ்தான் இவை வடக்கே உள்ள மாநிலங்கள்.
இங்கே தெற்கே உள்ள கேரளாவில் என்ன நிலை என்பதைப் பாருங்கள். பெரியாருடைய சமூகநீதியை யாராலும் அழிக்க முடியாது. திராவிடத்தால் வீழ்ந் தோம் என்பவர்கள் கண் திறக்கவேண்டும்; அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
‘டெக்கான் கிரானிக்கல்’ ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்தி!
CPM to corner SNDP on quota - என்ற தலைப்பில் இன்றைய ‘டெக்கான் கிரானிக்கல்’ நாளிதழில் வந்துள்ள செய்தியைப் படிக்கின்றேன் கேளுங்கள்!
Backwards and Dalits have now seen the true face of the RSS, thanks to Bhagwat. It is also a major setback for the SNDP which is desperately trying to push the community to the Sangh Parivar camp said CPM state secretary Kodiyeri Balakrishnan.
கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொல்கிறது என்றால், இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியாது; நாங்கள் இட ஒதுக்கீட்டை வரவேற்கிறோம். அதுமட்டுமல்ல,
நாராயண குரு தரும பரிபாலனத்தை எப்படியாவது இழுத்து அதனை ஆர்.எஸ்.எஸ். ஆக்கவேண்டும்; இந்து மதம் என்று ஆக்கவேண்டும் என்று சொல்வது இருக்கிறதே அதைக் கேட்டு நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள்; இதற்காகவே நாங்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கப் போகிறோம். அக் டோபர் 2 ஆம் தேதியிலிருந்து ஒரு விழிப்புணர்வு பிரச்சா ரத்தை கேரளா முழுவதும் செய்யவிருக்கிறோம் என்று சி.பி.எம். கொடியேறி பாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.
ராஜஸ்தானில் இட ஒதுக்கீடு சட்டத்தை 9 ஆவது அட்ட வணை பாதுகாப்பிற்கு வருகிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் நாங்கள் இட ஒதுக்கீட்டை எவ்வளவு சுலபமாக ஆக்கியி ருக்கிறோம். நீங்கள் எல்லோரும் சுலபமாக இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறீர்கள். ஆனால், இந்த வரலாறு எல்லாம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை.
இன்றைக் குத் தமிழ்நாட்டில் எவ்வளவு சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக் கிறது என்று நேர்முகத் தேர்வில் கேள்வி கேட்டால், இன்றைய இளைஞர்கள் தெரியாது என்று பதிலளிக்கிறார்களே!
மூச்சுக் காற்றின் முக்கியத்துவம்
எப்போது தெரியும்?
இவ்வளவு பேர் நாம் உட்கார்ந்துகொண்டிருக்கி றோமே, மூச்சுக் காற்று விட்டால்தானே நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கு அடையாளம். மூச்சு விடுதல் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிராண வாயு உள்ளே செல்கிறது; கரியமிலவாயு வெளியே வருகிறது. மூச்சு இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்போது சோதித்துப் பார்க்கிறார்கள். மூச்சுக் காற்றின் முக்கியத்துவம் எப்போது தெரியும்.
இதயம் போன்றது திராவிடர் கழகம்
உடலில் மற்ற உறுப்புகள் எல்லாம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்; ஆனால், இதயம் ஓய்வு எடுத்தால், உயிர் போய்விடும். இதயம் போன்றதுதான் திராவிடர் கழகம். மற்ற வர்கள், யார் எப்படி இருந்தாலும், நாங்கள் ஓய்வெடுக்க முடியாது; எங்கள் உடல்நிலையைப்பற்றி கவலைப்படுவ தில்லை.
மூச்சுக் காற்றின் முக்கியத்துவம் மூச்சுத் திணறும் போதுதான் தெரியும். மூக்கில் குழாயை வைத்து ஆக்சிஜன் செலுத்தும்போதுதான் தெரியும்.
இந்த இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எப்பொழுது சட்ட வடிவம் கொடுத்தார்கள் தெரியுமா? யாருடைய ஆட்சிக் காலத்தில் தெரியுமா? தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள், சட்டமன்றத்திலேயே தான் ஒரு பாப்பாத்தி என்று சொன்ன அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது.
அப்பொழுது மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் யார்; காங்கிரஸ் தலைமையில் இருந்த நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது; நரசிம்மராவ் யார் தெரியுமா? அவர் ஒரு ஆந்திரப் பார்ப்பனர்.
அப்பொழுது குடியரசுத் தலைவராக இருந்தவர் சங்கர் தயாள் சர்மா அவர்கள். இவர் உத்தரப்பிரதேச பார்ப்பனர் ஆவார்.
குடியரசுத் தலைவர் பார்ப்பனர்; பிரதமர் பார்ப்பனர்; முதலமைச்சர் பார்ப்பனர் என்றாலும் பெரியார் வென்றார். சமூகநீதியை சாய்க்க முடியவில்லை. அந்த சட்டத்தை நிறைவேற்றியதால், அந்த அம்மையாரைப் பாராட்டினோம்.  ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என்று பட்டத்தைக் கொடுத் தோம்.
அதில் ஒன்றும் தவறில்லையே! அதனால்தானே தமிழ்நாட்டில் இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் இருக்கிறது.
‘‘மகளிர் உரிமைக் காத்த மாண்பாளர்’’ கலைஞர்
தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில்தானே, இந்தியாவி லேயே தமிழகத்தில் மகளிருக்கு சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு வந்தது கலைஞர்தானே! திராவிடர் கழகம்தான் அவருக்கு ‘‘மகளிர் உரிமைக் காத்த மாண்பாளர்’’ என்று பட்டம் கொடுத்தது.
ஆகவே, இந்த இட ஒதுக்கீடு சட்டத்தில் யாரும் கை வைக்க முடியாது. குஜராத்தில் பட்டேல் சமுதாயத்தினர் தான் இட ஒதுக்கீடு கோரி வருகிறார்கள் என்பதில்லை. கேரளாவில் உள்ள பார்ப்பனர்கள், கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து நாங்களும் உங்களோடு வருகிறோம், எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் அவர் கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், நான் சென்னை பெரியார் திடல் அலுவலகத்தில் இருந்தேன். அப்பொழுது உங்களைப் பார்ப்பதற்கு நடிகர் எஸ்.வி.சேகர் வருகிறார் என்றார்கள். வரச் சொல்லுங்கள் என்றேன்.
அவர் என்னைச் சந்தித்து, ‘‘நான் பிராமணர் சங்கத்தின் சார்பாக உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்’’ என்றார்.
மிகவும் மகிழ்ச்சி;  என்ன விஷயம் சொல்லுங்கள் என்றேன்.
நாங்கள் ஏழு சதவிகிதம் இருக்கிறோம்; எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக் கிறேன் என்றார்.
நான் உடனே, ஓ! பெருகிவிட்டீர்களா நீங்கள். 3 சத விகிதத்திலிருந்து ஏழு சதவிகிதமாக. பரவாயில்லை, எத்தனை சதவிகிதம் என்பதை பிறகு முடிவு செய்து கொள்ளலாம். சரி, அதற்காக என்னிடம் வந்திருக்கிறீர்களே? என்றேன்.
நாங்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறோம். முதலமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்தித்தோம். அவர் இட ஒதுக்கீட்டை கொடுத்துவிடலாம், அதில் ஒன்றும் தப்பில்லை. நீங்கள் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைப் பார்த்து, அவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள் என்றார். அதற்காகத்தான் உங்களிடம் வந்திருக்கிறேன் என்றார்.
அப்படியா! நண்பர் சேகர் அவர்களே, உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த இட ஒதுக்கீடு 50 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கு எவ்வளவு இருந்தது தெரியுமா? மக்கள் சதவிகிதத்தில் 2 சதவிகிதமாக இருந்த உங்களுக்கு, 16 சதவிகித இட ஒதுக்கீடு இருந்தது. தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டது நீங்கள்தானே! இட ஒதுக்கீடு செல்லாது என்று நீங்கள்தானே சொன்னீர்கள் என்றேன்.
உடனே அவர், எனக்குத் தெரியாதுங்க, அந்த விவரம் எல்லாம் என்றார்.
இன்றைக்குப் பார்ப்பனர் உள்பட இட ஒதுக்கீடு கேட்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில் வகுப்புவாரி உரிமையில், அனைவருக்கும் அனைத்தும்; எல்லாருக்கும் எல்லாமும் கிடைப்பதில் தவறில்லை. அடுத்தவர்களின் பங்கை சாப்பிடுவது என்பதுதானே தவறு.
இன்றைக்குப் பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார்!
விமானத்தில் பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் இருக்கை ரிசர்வ் செய்யப்படுகிறது. யாராவது ஜன்னலில் ஏறி இடம் பிடிக்கிறார்களா? ரயிலில் செல்லும்பொழுதுகூட ரிசர்வ் செய்த இடத்திற்கு யாராவது சண்டை போடுகிறார் களா? அன் ரிசர்வ் கம்ப்பார்மெண்ட்டில்தான் இடம் பிடிப் பதற்குப் போட்டி போடுகிறார்கள்.
இன்றைக்கு இட ஒதுக்கீடு, சமூகநீதியை எந்த ஆர். எஸ்.எசோ, பி.ஜே.பி.யோ, மற்றவர்களோ நினைத்தாலும் ஒழிக்க முடியாது. இன்றைக்கு அவர்களே வந்து எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கின்ற அளவிற்கு பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார்!
பெரியார் ஏன் தேவைப்படுகிறார்! இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்பதற்கு பகிரங்கமான முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆகவேதான், பெரியார் தேவைப்படுகிறார்.
ஈழத்தில் எங்களுடைய சகோதரிகளான தமிழச்சிகள் 90 ஆயிரம் பேர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர்களுக்கு கை, கால் போனது! ராஜபக்சே என்கிற ஒரு அயோக்கியன், இனப்படுகொலை செய்த ஒரு கொலை காரன். அய்.நா. சபையில் பான் கி மூன் குழு அமைத்து, போர்க்குற்றவாளி ராஜபக்சே; அந்தப் போர்க்குற்றத்தை விசாரித்து தண்டனை கொடுக்கவேண்டும் என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
அந்தக் குழுவில் இருந்த நவநீதம் அம்மையார் அவர்கள் விசாரிக்கச் சென்றார், அவரை அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தினார்கள்.
தமிழர்களுடைய இதயத்தில் ரத்தம் வடிகிறதே!
மத்தியில் அங்கம் வகித்த தி.மு.க. ஏன் வெளியேறி யது?  ஈழப் பிரச்சினையால்தானே, வெளியேறினார்கள்.
இன்றைய முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதனை எல்லோரும் பாராட்டி, வரவேற் றோம். அமெரிக்கா சொல்கிறது, உள்ளூர் விசாரணையே போதும்; சர்வதேச விசாரணை வேண்டாம் என்று தீர்மானம் கொண்டு வருகிறது.
இலங்கைக்குள் சீனாவின் ஆதிக்கம் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக, இலங்கைக்கு ஆதர வாக அமெரிக்கா செயல்படுகிறது. ஆனால், நாம் தொப்புள் கொடி உறவு அல்லவா! இந்தியாவின் நிலைப்பாடு அப் படியா! எங்களுக்கு நீங்கள் மத்திய அரசு அல்லவா! நீங்கள் என்ன வேறொரு அரசா? வெளிநாட்டு அரசா? எங்கள் மக்கள் வாக்களித்ததினால்தானே மோடி இன்றைக்குப் பிரதமர்.
அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தது அமெரிக்கா; வழிமொழிந்தது இலங்கை. இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று நம் நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோன்று, இந்திய அரசு, இலங்கை அரசினுடைய நிலைப்பாட்டைத்தான் ஆதரிக்கும் என்று சொல்கிறார்கள்.
மோடி வந்தால் மாற்றம் வரும், மாற்றம் வரும் என்று சொன்னார்களே, எதில் மாற்றம் வந்தது? தமிழர்களுடைய இதயத்தில் ரத்தம் வடிகிறதே! இதனைக் கேட்பதற்கு நாதியில்லை. தமிழக மீனவர்களுக்கு மீன் பிடித் தொழில் தானே வாழ்வாதாரம். அவர்களை சிறைப் பிடித்துச் செல் கிறார்களே! தமிழக முதல்வர் கடிதம் எழுதுகிறார், பிரதமர் மோடிக்கு! இலங்கையிலிருந்து ரணில் இந்தியாவிற்கு வரும்பொழுது, கைது செய்தவர்களை வெளியில் விடுவார்கள்; அவர் சென்றதும் மீண்டும் மீனவர்களை சிறை பிடிப்பார்கள்.
காவிரி நீர்ப் பிரச்சினையில் என்ன நிலைமை? காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று எப்போதோ உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது! ஆனால், அதை செயல்படுத்தவில்லை என்று மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடவேண்டிய அளவிற்கு வந்திருக் கிறதே!
திராவிடர் கழகம் கலங்கரை விளக்கம் போன்றது!
ஆகவே, நண்பர்களே நினைத்துப் பாருங்கள், இந்த இயக்கம் உங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற இயக்கம்; உங்கள் சமத்துவத்திற்காகக் குரல் கொடுக்கின்ற இயக்கம்; உங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுக்கின்ற இயக்கம். எங்களுக்கு என்று எதுவும் தேவையில்லை.
எங்களுக்கு மாலை போட்டாலும், கல்லைப் போட்டாலும் - நீங்கள் எங்களைக் கண்டித்தாலும், வரவேற்றாலும், நீங்கள் எங்களைத் திட்டினாலும், வாழ்த்தினாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. இந்த சமுதாயத்திற்கு நாங்கள் என்றென்றைக்கும் உயிர் மூச்சு இருக்கின்ற வரையில், தொண்டர்களாக இருந்து,
வழிகாட்டிகளாக இருக்கக்கூடியவர்களாக இருந்து, காவலர்களாக இருக்கக்கூடியவர்களாக இருந்து இந்தப் பணிகளைச் செய்வோம்.
எனவேதான், தமிழ்நாட்டில் தந்தை பெரியாருடைய பெரும் பணி என்பது இன்னமும் தேவைப்படுகிறது. எதிரிகள்  மறைந்தும், ஒளிந்தும் சில நேரங்களில் வெளியே வந்தும், சில நேரங்களில் உள்ளே சென்றும் இருக்கிறார்கள்.
அதனை அடையாளம் காட்டக்கூடிய ஒரு சரியான இயக்கம் - கலங்கரை விளக்கம்போன்றது இந்த இயக்கம். இதனுடைய வெளிச்சத்தில்தான் கப்பல்கள் செல்ல வேண்டும்; இல்லையென்றால், பாறைகளின்மீது கப்பல்கள் மோதவேண்டியது இருக்கும்.
ஆகவேதான், இந்த இயக்கம் அதனுடைய பணிகளை இடையறாது செய்துகொண்டிருக்கிறது. கொட்டும் மழையானாலும், கொளுத்தும் வெயிலானாலும்
‘‘குடிசெய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக்கெடும்’’ என்று சொல்லக்கூடிய இயக்கம் என்று சொல்லி, இந்த மழையையும் பொருட்படுத்தாமல் நீங்கள் வந்தீர்கள். எதிர்ப்பிலே இயற்கையையும் வெல்லக்கூடிய ஆற்றல் பகுத்தறிவாளர்களாகிய எங்களுக்கு உண்டு என்று காட்டக்கூடிய வண்ணம், எங்களோடு போட்டி போட்டு மழை தோற்றது - நாங்கள் வென்றோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.
இளைஞர்களே, இந்த இயக்கத்தை நோக்கி வாருங்கள்!!
இளைஞர்களே, இந்த இயக்கத்தை நோக்கி வாருங் கள்! நீங்கள் வந்தால், அதைக் கொடுப்போம், இதைக் கொடுப் போம் என்று சொல்லமாட்டோம். லட்சியத்தால் உங்களுக்கு மானத்தைக் கொடுப்போம், உங்களுக்கு அறிவை கொடுப் போம், உங்களுக்குத் தெளிவைக் கொடுப்போம் - இந்த இயக்கத்தை நோக்கி வாருங்கள்,
வாருங்கள் என்று கேட்டு, குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த நம் முடைய உடுமலை இயக்கத் தோழர்கள், அவர்களுக்கு ஆதரவு காட்டிய நண்பர்கள் எல்லோருக்கும் மனமுவந்த பாராட்டுத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...