Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts
Showing posts with label மூடநம்பிக்கை. Show all posts

Thursday, January 29, 2015

ஆறா வடுவை ஏற்படுத்தினர்!.



என் நண்பனுக்குத் திரு மணம் ஆகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதுவரை சோகத்துடன் இருந்த நண் பனும், அவனுடைய மனைவி யும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தையின் முதல் பிறந்த நாளை வெகு விம ரிசையாக கொண்டாடினார்கள். அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வெகுநாட்கள் நீடிக்கவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்த சில நாள்களிலேயே நண்பனின் மனைவிக்கு பக்க வாத நோய் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது. நண்பர் எவ்வளவோ பணம் செலவு செய்தும் நோய் குணமாக வில்லை.

அவருடைய மனைவியை பார்த்து நலம் விசாரிக்க வந்த உறவினர்கள் நோயை குழந் தையுடன் சம்பந்தப்படுத்தி பேசினார்கள். பிறந்த குழந் தைதான் தாயை நோயில் படுக்க வைத்துவிட்டது என்று ஒவ்வொருவரும் ஒவ் வொரு விதமாகப் பேசினார்கள். அதைக் கேட்ட நண்பர் வருத் தப்பட்டார். இப்படி எல்லோ ரும் நினைத்துவிட்டால், குழந்தை ஆசையே வராது என்று விரக்தியுடன் கூறினார். நோயாளியைப் பார்க்கச் செல் பவர்கள் ஆறுதல் வார்த்தைகள் கூறாவிட்டாலும், அவர்கள் மனம் புண்படும்படி பேசாமல் இருப்பது நல்லது.

- க.ஆறுமுகம், கழுகுமலை
தினத்தந்தி குடும்பமலர், 25.1.2015

21 ஆம் நூற்றாண்டில் நாடு நடைபோடும் காலகட்டத்தில் சந்திராயன் வெற்றி முழக்கம் கேட்கும் ஒரு தருணத்தில், செவ்வாய்க் கிரக ஆய்வில் அடுத்த கட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதில் இப்படியும் செய்திகள் உலா வரு வதை நினைத்தால் வெட்கித் தலை குனியத்தான் வேண்டும். மதம் மக்களின் மூளையில் புகுந்து நச்சுக் கிருமிகளை உரு வாக்கி விட்டதே - என் செய்ய!

குழந்தை பிறந்ததற்கும், தாய்க்கு வந்த நோய்க்கும் முடிச்சு போடுவதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? மொட் டைத் தலைக்கும், முழங்கா லுக்கும் முடிச்சுப் போடுவதாகக் கேலியாகச் சொல்வார்களே - அதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வருகிறது.

இந்த அர்த்தமுள்ள(?) இந்து மதத்தில்தான் இந்தக் குட்டிச் சுவர் க(ழு)தைகள் எல்லாம்!

ஏற்கெனவே நோய்வாய்ப் பட்டுள்ள ஒருவரிடம் இப்படி சொல்லுகிறோமே, அவர்கள் மனநலமும் பாதிக்காதா என்ற எண்ணம் இல்லாததோடு, இப்படிச் சொல்லுபவர்களின் எண்ணத்தில் மனிதநேயத்தின் மயிரிழைக் கசிவுகூட இல்லை என்பதை நினைக்கவேண்டும்.

அந்தக் குழந்தை வளர்ந்த நேரத்தில், நீ பிறந்துதான் உன் தாயைக் காவு கொடுத்தாய்! என்கிற அளவுக்கு இன்று போடப்படுகின்ற மூட விதை, வளர்ந்து மரமும் ஆகும் என்பதில் அய்யமில்லை.

இது ஒன்றா? இந்தத் திசையில் இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு. பெண் ணுக்குச் செவ்வாய்த் தோஷம் எனச் சொல்லி, தக்க வயது வந்தும், திருமணம்  ஆகாம லேயே தடைபடும் தகவல்கள் நிறைய உண்டு. செவ்வாய்த் தோஷமுள்ள மாப்பிள்ளை யைத் தேடுவார்கள். இது மாமனுக்கு ஆகாது என்றும் கதை கட்டுவார்கள்.

ஜாதகப் பொருத்தம் பார்க்காதீர்கள்; குருதிப் பொருத்தம் பாருங்கள் - மணமக்களுக்கு உடற்சோதனை செய்யுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறிவரும் தேவை யான, அவசியமான கருத்தை இப்பொழுதாவது சீர்தூக்கிப் பாருங்கள்!

- மயிலாடன்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Saturday, January 24, 2015

நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா?....

- குபேரன்

உலகத்தின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருக்கிறேன்,,, என்று உறுதிமொழி கொடுத்தார் இயேசுநாதர். யாரிடம் எப்போது இப்படிப்பட்டதொரு வாக்குறுதியை வழங்கினார்? யோவான் என்பவர் பத்மு என்கின்ற தீவில், தனிமையிலே இருந்தபோது, கனவிலே காட்சியளித்த இயேசு சொன்ன இந்த வார்த்தை களின்பேரில் நூற்றுக்குநூறு நம்பிக்கை வைத்து, அவரது அடியவர்கள் இன்றும் இயேசுவுடன் ஜெபம் என்ற பேரில் உரையாடுகின்றனர். இயேசு அப்பா என பாசம் கலந்த உரிமையுடன் உறவாடி வருகின்றார்கள்.

நேற்றும் இன்றும் மாறாதவர், ஆலோசனைக்கர்த்தா, ஜெபங்களைக் கேட்கின்ற தேவன் மற்றும் ஜெபங் களுக்கு பதிலளிப்பவர் என வாழ்த்தி வணங்கி மண்டியிட்டு தங்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் இயேசுநாதரிடம் தெரிவித்து ஆலோ சனைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். கேளுங்கள் - (மறுமொழி) கொடுக் கப்படும்! என்று கூறியவரிடம் தங்களது வேண்டுதல்களை உடன் நிறை வேற்றியே தீரவேண்டும் என ஒரு சிலர் அவருக்கு உத்தரவுபோடுவதும் உண்டு! ஒரு தடவை சொன்னால் இயேசுவுக்குப் புரியாது - பலர் பட்டினிகிடந்து இரவு முழுவதும் ஜெபம் என்னும்பேரில் இயேசுவோடு பேசிக்கொண்டி ருக்கிறார்கள்!...

பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் முற்றிலும் முரண்பாடான பைபிளின் போதனைகள், பின்பற்றுவோரின் தன்மானத்தையும் துணிச்சலையும் தகர்த்துவிடுகின்றன. ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டால் மறுகன்னத்தையும் காட்டு, பகைவர்களை நேசியுங்கள், உங்களைத் துன்பப்படுத்துவோருக் காகவும் நிந்திக்கிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்! இப்படிப்பட்ட உபதேசங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராதவை! தினனவரும் புலி தனையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்!... என்று பாடிய பாரதியார் போன்ற பிற்போக்குவாதிகள் மட்டுமே பைபிள் உபதேசங்களைப் பாராட்ட முடியும்; நம் போன்ற வர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாது!

நானே உலகின் ஒளி என்று சொன்னாராம் இயேசு. இயேசுவின் மூலமாக உலகம் படைக்கப்பட்டது, என்று பைபிள் பிதற்றுகிறது. ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 மைல்கள் என்பதை அறியாத ஒருவர், நானே உலகின் ஒளி என்கிறார் - என்ன விபரீதம்! பகலும் இரவும் தோற்று விக்கப்பட்டபின், சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டன என எழுதப் பட்டிருக்கும் ஒரு புத்தகத்தின் கதாநாயகருக்கு, விண்ணகத்தில் 10,000 கோடிக்கும் அதிகமான எண்ணிக் கையில் கதிரவன்கள் இருந்து வருகின்றன என்பதும் இந்தப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே வருகின்றது என்பதும் தெரியாது! ஏனென்றால் கதாசிரியர்களுக்குத் தெரிந்த உண்மைகள் மட்டுமே அவர்களாக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களுக்கும் தெரியும். பைபிள் ஆசிரியர்களைப் பொறுத்தவரை சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகின்றது; தட்டையானது பூமி என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.

நான் சொல்லவந்த ஆராய்ச்சி என்னவென்றால் - பகுத்தறிவற்ற பைபிள் பெரும்பாலான மொழிகளில் அச்சிடப்பட்டு இன்றும் விநியோ கிக்கப்பட்டு வருகின்றது. அந்தந்த மொழிகளைச் சார்ந்தவர்கள் தங்களது தாய்மொழியிலே இயேசுநாதரிடம் உரையாடுகிறார்கள். அதே மொழிகளில் பதில்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்கிறார்களாம். பைபிள் மதங்களைச் சேர்ந்தவர்கள் பெருமை பேசிவரும் இந்தத் தகவலின் அடிப் படையில் - இயேசு என்வர் அனைத்து மொழிகளும் தெரிந்தவர், புரிந்தவர்; பதில்களும் சொல்லக்கூடியவர் என்பது உண்மையானால் - பைபிளால் தங்களை மூளைச்சலவை செய்துகொண்ட பாஸ்டர்களும் பாதிரிமார்களும் இப்போது பதில் சொல்லவேண்டும்!

தமக்கு அறவே தெரியாததும், மற்றவர்கள் மூலமாக தெரிந்து கொண்டதுமான ஒரு வேற்று மொழியின் வாசகத்தை இயேசுநாதரிடம் தெரிவித்து; அதனை ஜெபிப்பவரின் தாய்மொழியில் மொழி மாற்றம் செய்து விளக்கவுரை சொல்லும்படி பிரார்த்தனை செய்தால் - இயேசுநாதர் பதில் அளிப்பாரா? மாட்டார் - இப்போது அவரால் எந்தபதிலும் சொல்லமுடியாது! ஜெபம் செய்துவரும் ஒருபக்தர் தமக்கு இந்நாள்வரை தெரிந்திராத இயற்பியல், அல்ஜீப்ரா தொடர்பான வினாக்களைக் கேட்டால் கேளுங்கள் - கொடுக்கப்படும் என்றவர் மறுமொழி கொடுப்பாரா - மாட்டார்!

ஏனென்றால், இயேசுவின் அடிமை களே! நீங்கள் உங்களது சொந்த மனஉருவகத்தைத் தான் (Imaginery) வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் தான் நீங்கள் உருவாக்கிக் கொண்ட உருவங்களுக்குத் தெரியும்.  இயேசுநாதர் ஆலோசனை கூறினார், பேசினார், சிரித்தார், அழுதார் என்பதெல்லாம் உங்களது மனப் பிரேமைகள்! இயேசு என்பவர் பதில் சொன்னார் என்று நீங்கள் சொல்வதனைத்தும் உங்க ளுடைய சொந்த ஊகங்களே. (Auto Suggestions) என்பதில் அய்யமில்லை. எனவேதான் உங்களால் எல்லாமொழி களும் தெரிந்தவராக கருதப்பட்டுவரும் இயேசுநாதரால் உங்களுக்குத் தெரியாத வேறு ஒரு மொழியில் எதுவும் பேச முடிவதில்லை! கதை ஆசிரியர்களுக்கு (ஜெபம் செய்பவர்களுக்கு) தெரிந்த தகவல்கள் மட்டுமே கதாபாத்திரங் களுக்கு (நினைத்துக் கொண்டிருக்கும் தெய்வ உருவங்களுக்கு) தெரியும்!

உலகின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருந்துவருகிறேன். என்னும் இயேசுவின் வசனம் உண்மை யானால், அவர் பைபிள் மதங்களில் இத்தனை பிளவுகளை அனுமதித் திருக்கமாட்டார்! தமது பெயரால் சண்டை - சச்சரவுகள், போர்கள், வாதப்பிரதிவாதங்கள் வளர்ந்து; மூளைச்சலவை செய்துகொண்ட இலட்சக்கணக்கான பக்தர்கள் மேல்உலக சன்மானங்களை எதிர் பார்த்தும் நம்பியும் இரத்த சாட்சிகளாக சாவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்!... கணவரோடு பெற்றோர் பிள்ளைகளோடு வாழவேண்டிய பெண்கள், கன்னிமாடங்கள் என்னும் ஆயுட்கால சிறையிலே தள்ளப்பட்டு; அவர்களது மூளைகளும் பைபிள் என்னும் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் கன்னிகையாகவே கல் லறையில் அடக்கம் செய்யப்படவும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.

நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா!... என்று கேட்கும் பைபிள்காரர்கள், இந்தக்கட்டுரையை படித்துப்பார்த்து பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க் பெரியார்! வாழ்க சுயமரியாதை!


Saturday, December 20, 2014

தேசிய நூலாக கீதை: பல இனங்கள் உள்ள நாட்டின் நலனுக்கு உகந்ததா?


பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியிருப்பது பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டின் நலனுக்கு உகந்ததாயிருக்காது என்கிறார் காந்தியச் சிந்தனையாளரும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் ஜெயப் பிரகாசம்.

பகவத் கீதையை காந்தி போன்றோர் உயர்வாக மதித்தனர் என்பது உண்மை ஆனால், கீதை குறித்த அவரது பார் வைக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் வேறுபாடு உள்ளது. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் வன் முறையாலும் தீமையை வெல்வது நீதி யானதுதான் என்ற அர்த்தப்படுத் தினால், இந்த அணு யுகத்தில் அது பேரழிவை உருவாக்கும் என்றார் ஜெயப்பிரகாசம்.

காந்தியோ, கீதையை நன்மைக்கும் தீமைக்குமான மோதலில் மனித மனது, தீமையை வென்று நன்மையாக மாற்று கிறது என்று அர்த்தப்படுத்தினார், என் றார் ஜெயப்பிரகாசம். இது சத்யா கிர ஹத்திற்கான ஒரு நூல் என்று காந்தி பொருள்கொண்டார், பாரதி கூட அப்படித் தான் அதைப் பார்த்தார் என்றார் ஜெயப்பிரகாசம்.

அதே சமயம் அம்பேதகர் போன் றோர் கீதையை போரை நியாயப்படுத் தும் ஒரு புத்தகமாகவும், வர்ண அமைப்பை நியாயப்படுத்தும் ஆவண மாகவும் பார்த்தது குறித்து குறிப்பிட்ட ஜெயப்பிரகாசம், திலகர் கூட தனது " கீதா ரகசியம்" என்ற புத்தகத்தில், கீதையை, போருக்கான புத்தகமாகவே பார்த்தார் என்றார். எனவே இது போன்ற திரு மறைகளை மறு வாசிப்பு செய்வது அவ சியம், தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்றார் அவர்.

மற்ற மதங்களில் உள்ளது போல ஒரே ஒரு நூல்தான் இந்து மதத்தில் திருமறை என்று மதிக்கப்படும் இடத் தில் இல்லை என்றார் ஜெயப்பிரகாசம். தென்னிந்திய மரபில் சைவ சித்தாந்தம் மற்றும் வைணவ சித்தாந்தத்திலும், பகவத் கீதையை அறியாத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். எனவே பாஜகவின் இந்த முயற்சி என்பது , இந்து சமயத்தை மையப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இருக்கிறது என்றார் ஜெயப்பிரகாசம். அதே சமயத்தில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்ற ஒன்று அவசியம் தானா என்று கேட்டதற்கு, நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் நிலையில், இது போன்ற பிரச்சனை களைக் கையில் எடுப்பது தேவை யற்றது என்றும் அவர் கூறினார்.

Friday, December 19, 2014

திருநள்ளாறு - சனிப் பெயர்ச்சிப் பித்தலாட்டம்

விடுதலை செய்தியாளர்களின் நேரடி ரிப்போர்ட்


சூரிய மண்டலத்திலுள்ள இரண்டாவது பெரிய கோள் சனி. இது சூரியனிலிருந்து 142 கோடியே 60 லட்சம் கி.மீ. தொலை வில் உள்ளது. இது சூரியக் குடும்பத்தின் 6ஆவது கோளாகும். இதற்கு 47 துணைக் கோள்கள் இருக்கின்றன.

அதாவது 47 நிலவுகள், சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு (பூமியின் ஆண்டுக் கணக்குப்படி) 30 ஆண்டுகள் ஆகின்றன. சனிக்கோளுக்கு அதுதான் ஓர் ஆண்டு. அதாவது, சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் பூமி சூரியனை 30 முறை சுற்றி வந்துவிடும்.

நமது முன்னோர்கள் பார்வையளவில் கணித்து வைத்திருந்ததை இன்றைய அறிவியல் மிக துல்லியமாக கணித்துக் கொடுத்திருக்கிறது.
இத்தனை கோடி (சுமார் 122 கோடி கி.மீ.) தொலைவிலுள்ள சனிக் கோள், பூமியில் இருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குகிறது என்று எண்ணுவதே மடமை ஆகும்.

அப்படியே அவர்களின் எண்ணப்படியே கணக்கிட்டாலும் அதுவும் மிக மிகத் தவறான ஒன்றே! அதாவது, 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமிக்கு வந்து சேர்வதற்கு 8 நிமிடம் ஆகிறது. அதற்குள் பூமி ஒரு நிமிடத்திற்கு 28 கி.மீ. வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டும், ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் தன் நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றிப் பெயர்ந்து கொண்டுமிருக்கும்..

எனில் அந்த 8 நிமிடத்திற்குள் பூமி 223 கி.மீ. தன்னைத் தானே சுற்றியிருக்கும். நாம் பார்க்கும் நேரத்தில் கிளம்பும் சூரிய ஒளிக்கதிர் பூமியில் விழும் இடம் 223 கி.மீ. மாறியிருக்கும். (அதாவது சென்னைக்கு  விருத்தாசலத் துக்கும் உள்ள தொலைவு) 14300 கி.மீ. தொலைவு சூரியனைச் சுற்றி யிருக்கும். இதற்கிடையில் பூமி 23.5 டிகிரியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது தனிக் கணக்கு. 15 கோடி கி.மீ.க்கே இப்படி என்றால்? 127 கோடி கி.மீ.க்கு எப்படி? அதுவும் சனிக்கோள் ஒளி உமிழக் கூடியதும் அல்ல.

அப்படியே மக்கள் இதை நம்பித் தொலைத்தாலும் சனிப் பெயர்ச்சியை பூமியின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்த்துக் கொள்ளலாம். இதற்கான நேரம் மட்டுமே மாறுபடும். இவ்வளவு தானே தவிர திருநள்ளாற்று கொம்யூன் பஞ்சாயத்துக்குத்தான் வரவேண்டும் என்று கட்டுப்பாடான பிரச்சாரம் செய்வது என்பது இந்து மதம் நிலைத்திருப்பதற்கும் அதற்காக மக்களை முட்டாள்களாகவே வைத்திருப்பது அவசியம் என்பதற்கும், அந்த அப்பாவி மக்களிடம் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் பொருட்களையும் கொள்ளை அடித்து விட்டு, அவர்களை இடை விடா மல் கடவுள் சிந்தனையில் ஆழ்த்தி வைப்பதற்குமே ஆகும்.

இதில் பக்தர்கள் புரிந்து கொண்டிருப்பது இந்த ஹிந்து மதத்தின் சதியைப் பற்றி அல்ல. தன்னை இந்த இந்த இராசிக்காரன் என்றும், ஒரு இராசியிலிருந்து சனி இன்னொரு இராசிக்கு பெயர்கிறது என்பதை பெயர்கிறார் என்றும், அதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகிறது.

ஆகவே, 3 x 2½ = 7½ என்று கணக்கிட்டு 7½ நாட்டு சனி என்றும் மேலோட்டமாக தெரிந்து வைத்திருக்கின்றனர்; புரிந்து அல்ல.

இதை அம்பலப்படுத்த விடுதலை நாளேடு சார்பில் ஒரு குழு, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு சென்று வந்தது.

இனி, ஓவர் டூ திருநள்ளாறு...


சிறீ தர்ப்பாரண்யேஸ்வரர் தான் கருவறையில் இருக்கும் கல் கடவுள். அதாவது, தர்ப்பைப் புல் வளரும் காட்டைப் பாதுகாக்கும் கடவுள். (காட்டைத்தான் மனிதர்களை அல்ல!) ஆனால், வாடகைக்கு வந்தவர் வீட்டுக்காரரையே ஆக்கிரமிப்பு செய்தது போல, தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் வாடகைக்கு வந்த சனி பகவானை வைத்துக் கொண்டு, கருவறையில் இருக்கும் மூலவரை பின்னுக்குத் தள்ளி, சனிபகவானின் பெருமை பேசப்படுகிறது என்று புலம்புகிறார்கள் அங்குள்ள மூத்த குடிமக்கள்.
நளமகாராசனை சனீஸ்வரன் விரட்ட அச்சமடைந்த நளமகா ராசன் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தஞ்சமடைந்ததாகவும், எப்படியும் ஒருநாள் நளமகாராசன் வெளியில் வந்துதானே ஆக வேண்டும் என்று எதிர்பார்த்து சனீஸ்வரனும் அங்கேயே தங்கிவிட்டானாம்.

அரசனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து அச்சப்பட்ட மக்கள் சனீஸ்வரனை வணங்க ஆரம்பித்து விட்டார்கள். ஆக தலப்பட்டா தர்ப்பாரண்யேஸ்வரர் பெயரில் இருக்க, சனீஸ்வரன் சண்டமாருதம் பண்ணி கொண்டிருக்கிறான் என்பது தான் தலவரலாறு.

தர்ப்பாரண்யேஸ்வரரை வைத்து கல்லா கட்ட முடியாமல் தான் சனி பகவான் பேரில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. அது இன்று பலன் தருகிறது என்பன போன்ற விவரங்கள் உண்மை (செப்டம்பர் 16-.30, 2014) இதழில் விரிவாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

சனீஸ்வரன் ஒவ்வொரு ராசியாக இடம் பெயர்ந்து அந்த ராசிக்காரர்களுக்கு கேடு விளைவித்துக் கொண்டிருப்பானாம். இப்படி கேடு விளைவிப்பவன் எப்படி பகவானானான் என்று தெரியவில்லை! நாளேடுகளிலும், ஊடகங்களிலும் சனிப்பெயர்ச்சி திருவிழா வணிக விளம்பரம் முக்கியத்துவம் பிடிக்க, இண்டிபெண்டன்ஸ் டே, 2012, ஏலியன், ஸ்டார் வார்ஸ், அவதார், வார் ஆஃப் வேர்ல்ட்ஸ் என்று ஹாலிவுட் படங்களையெல்லாம் பார்த்திருந்த நமக்கு வானத்தில் நடக்கப்போகும் அதிசயத்தைப் பார்க்கும் ஆவல் இல்லாமலா இருக்கும்? அதுவும் பக்கத்திலேயே நடக்கிறது என்றால் பிளைட் டிக்கெட் மிச்சம்.

அப்படி என்னதான் நடக்கிறது என அறியும் ஆவலுடன்தான் புறப்பட்டுச் சென்றிரு ந்தோம். உள்ளே நுழையும் போதே நளன் குளித்த குளத்திற்குத் தான் முதலில் செல்ல வேண்டும் என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டனர். இதற்காகவே சோப், நல்லெண்ணெய் என்று அந்த வியாபாரம் வேறு களைக்கட்டியது. நாம் நேராக நளன் குளத்திற்குச் சென்றோம்.

அதுதான் அந்தக்குளத்திற்கு பெயர். அங்கே கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக் கள். உடை மாற்றும் அறை, பொருட்கள் வைக்கும் அறை அப்படி இப்படியென்று அமர்க்களப்பட இவைகளை ஜெயா, தந்தி, சன், டைமன்ட் (உள்ளுர்) தொலைக்காட்சிகள் வேறு நேரலை செய்து கொண்டிருந்தன.

பெண்கள், படித்துறை ஓரமாக குளித்துக் கொண்டிருந்தனர், ஒரு பக்கம் பெண்கள் உடை மாற்றும் அறைகள் இருக்க, குளிக்கும் இடத்திலேயே அணிந்திருக்கும் உடையைக் கழட்டிப்போட்டு விட வேண்டு மென்று சட்டம் வேறு. அதையும் அங்கே குளத்தினுள்ளேயே கிரில் கேட் அமைத்து அதில் எழுதியும் மாட்டியிருந்தனர்.

வேறு வழியில்லாமல் பெண்கள் சங்கடத்துடன் உடையைக் களைய வேண்டிய நிலை? இதற்காகவே படித்துறை பக்கம் குளிக்காமல், இளைஞர்கள் குளத்தின் உள்ளே கிரில் கேட் பக்கம் சென்று வேடிக்கை பார்க்கின்றனர். இது இல்லாமலா கோயில்? அண்மைக் காலமாகத்தான் இந்த உடைகளை குளத்தினுள்ளேயே கழற் றிப் போடும் பழக்கம். அதுவே இப்போது வழக்க மாகியிருக்கிறது.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று சனி பெயரும் நேரமான 2.43 பற்றி கவலைப்படாமல் அதற்கு முன்னும் பின் னும் குளித்தவர்கள் கழற்றிப் போட்ட அழுக்குடைகள் கங்கை நதியில் இறந்த பிணங்கள் மிதப்பதை போல அருவருப்புடன் மிதக்க அதிலேயே தான் மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.

அழுக்குத்துணி... 60 லட்சம்!


சரி இதற்கு என்னதான் தீர்வு? மக்கள் இப்படியேதான் குளிக்க வேண்டுமா என்று பார்த்துக்கொண்டிருந்தபோதே சீருடை அணிந்த ஊழியர்கள் அங்கு வந்து அந்த உடைகளை சேகரிக்கின்றனர். அதை சின்ன சின்ன மூட்டையாகக் கட்டி போட்டு டிராக்டரில் எடுத்து செல்கின்றனர்.

நாம் மிகுந்த ஆவலுடன் எங்கு? எதற்கு? எடுத்துச் செல்கிறீர்கள் என்று அவர்களை விசாரித்தததில் கோயில் நிர்வாகத்தைக் கேளுங்கள் என்று நம்மை மர்மத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டனர். நாம் கூடிய மட்டும் கோயில் தொடர்பான நபர்களிடம் விசாரித்ததில் அவர்களிடம் தான் கேட்கவேண்டும், இவரிடம் தான் கேட்கவேண்டும் என்று கூறி நம்மைத் தவிர்ப்பதிலேயே குறியாய் இருந்தனர். துணிக்காக மட்டுமல்ல. எல்லா விசயத்திற்கும்தான்.

வேறு வழியின்றி மக்களிடம் விசாரிக்கும் பொழுதுதான் நமக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதாவது இந்த அழுக்குத் துணிகள் வெளுக்கப்பட்டு மீண்டும் விற்கப்படுகின்றன. அல்லது மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படு கின்றன. இதற்காக இந்த ஆண்டுக்கு ரூபாய் 60 லட்சத்திற்கு கோயில் சார்பாக குத்தகை விடப்பட்டுள்ளது. குத்தகையே 60 லட்சம் என்றால்? குத்தகைதாரர் எவ்வளவிற்கு விற்பார் என் பதை உங்கள் கணக்குக்கே விட்டு விடுகிறோம்.

மக்கள் உடுத்தியுள்ளதையும் கழற்றிப் போட வைத்து அதில் லட்சக்கணக்கில் காசு பார்க்கும் சாமர்த்தியம் பாவமும், புண்ணியமும் நரகமும் இல்லை என்பதை அவர்களாகவே ஒத்துக்கொண்டதாகவே தெரிகிறது. இது மக்களுக்கு விளங்க வேண்டும். விளங்க வைக்கவும் வேண்டும்.

அதுமட்டுமல்ல காலை முதல் மாலை வரை நாம் அங்கேயே சுற்றிச்சுற்றிப் பார்த்ததில் ஊடகங்களின் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் நமக்கு தெரிய வந்தது. அதாவது, போனால் போகிறது என்று அதிகபட்சமாக கணக்கிட்டாலும் 25,000 பேர்களுக்குமேல் வந்து போகிற மக்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் 8 லட்சம், 10 லட்சம், 12 லட்சம் என்று வெட்கமில்லா மல் புளுகித் தள்ளுகின்றனர்.

இந்த ஆண்டு வந்திருக்கின்ற மக்கள் எண்ணிக்கையே கூட சென்ற ஆண்டு வந்தவர்களை விடக் குறைவு என்று அங்கிருக்கும் மக்களே சொல்கின்றனர். அதுமட்டுமல்ல, திரும்பத்திரும்ப வருகிறவர்கள் ஒரு சிலரே. புத்தம் புதிதாக ஏமாறுபவர்கள்தான் அதிகம் வந்து செல்கின்றவர்.

பிறகு கோயில் பக்கம் நம் பார்வை திரும்பியது. பக்தி என்பது வெறும் வியாபாரம் தான் என்பதையே அங்கும் காண முடிந்தது. சாதா தரிசனம் ரூ.200, சிறப்பு தரிசனம் ரூ.500 என்று தனியே கவுன்டர் வைத்து டிக்கெட் விற்கப்பட்டுக் கொண்டிருந் தன. வழக்கம் போல தர்ம தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், நம்மைப் பார்த்ததும் நம்மிடம் சீறியும், புலம்பியும் தள்ளிவிட்டனர்.

காசு இருக்கிறவனுக்குத்தான் கட வுளா? எங்களைப் பார்த்தால் பக்தர்களாக தெரியவில்லையா? கால் கடுக்க, மதிய உணவு கூட உண்ண முடியாமல் தவிக்கி றோமே, இதை எப்படியாவது அம்மாவிடம் சொல்லி நடவடிக்கை எடுங்கள் என்று ஒரு பெண் நம்மிடம் புலம்பினார். என்ன செய்ய... தான் இருப்பது புதுச்சேரி மாநிலம்  என்பதோ, தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் மாறிவிட்டார் என்பதோ தெரியமுடியாத பக்தர் அவர்.

அவர் புலம்பலில், இயலாமையும், ஏமாற்றமும் இருந்ததே தவிர இந்த ஏற்றத் தாழ்வுக்கு இடம் கொடுக்கலாமா இந்தக் கடவுள் என்று கடவுள் மீது கோபம் வரவில்லை? அதுசரி, அது வந்தாதான் அவங்க இந்த கோயிலுக்கே வந்திருக்க மாட்டார்களே.

இது ஒரு பக்கம் இருக்க, எப்படியாவது உள்ளே சென்று சனி பகவானை தரிசித்து விட வேண்டும் என்று தவித்த மக்கள் ரூ.200, டிக்கெட்டை வாங்கியபடி பார்க்க முயன்று முயன்று நேரமாக நேரமாக பொறுக்க முடியாமல், அந்த டிக்கெட்டை பாதி விலைக்காவது விற்க முயல, அதையும் வாங்க ஆளில்லாமல் நொந்து போய் திரும்பினர்.

இன்னொரு பக்கம் இலக்கு வைத்து கல்லா கட்ட கோயில் நிர்வாகம் திறந்து வைத்து கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்த இரண்டாவது சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்ட்டர், டிக்கெட் வாங்க ஆளில் லாமல் உள்ளே இருந்தவர்கள் ஈ ஓட்டிக் கொண்டி ருந்தனர்.

ஊடகங்களின் அதீத விளம்பரம்!

அறிவுக்கும், அறிவியலுக்கும் சற்றும் தொடர் பில்லாத இந்த மூடநம்பிக்கை வணிகக் கொள்ளைக்கு ஊடகங்கள் கொடுத்த விளம்பரங்களால்தான் இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இன்றும் கூட அந்த ஊடகங்கள் தான் அதீத விளம்பரத்தையும், பிரச்சாரத்தையும் செய்துகொண்டிருக்கின்றன.
அதையொட்டி அவர்களுக்கும் பெரிய அளவில் விளம்பர வருவாய், லாபம், கொள்ளை! அதற்கென்று வெளியிடப்படும் சிறப்பு இதழ்களிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மூடநம்பிக்கைக் கருத்துகள் கொஞ்சமும் லாஜிக் இல்லாமல் பொழிந்து தள்ளப்படுகின்றன.

முகநூலில் இது குறித்து அதிஷா எழுதியிருக்கும் இந்த கருத்தே போதுமானது.
மீடியா முழுக்க கடந்த ஒன்றரை மாதமாக சனிப்பெயர்ச்சி என்பதை ஏதோ உலக அழிவுக்கு ஒப்பான ஒரு நிகழ்வாக ஊதிப்பெருக்கி வகுத்து கூட்டி... பாவப்பட்ட அப்பாவி பொது ஜனங் களை உறையும் பீதியில் முடக்கி வைத்திருக்கிறார்கள்.

அனேகமாக இவர்கள் கொடுத்த ஓவர் அலப்பறைஸ் ஆஃப் அஸ்ட்ராலஜியில் சனிபகவானுக்கே பீதியாகி அவரும் கூட நம்ம ராசிக்கு என்ன பலன் போட்டி ருக்கான் எங்கே போய் பரிகாரம் பண்ணலாம் சுவாமிஜி நான் தப்பிக்கவே முடியாதா என்று மென்டலாகி மெர்சலாகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

ரா..ரா...மனசுக்கு...

சனிப்பெயர்ச்சி விழா கூட்டத்தின் ரகசியம் குளக்கரைக்கு சென்றபோதுதான் புரிந்தது. பக்தர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையை அந்தக்குளத்தில் மூழ்கி எழுந்தபின் அங்கேயே களைந்துவிட்டு வந்து விடவேண்டுமாம்.
அப்படி விடுவதன் மூலம் அவர்களை பிடித்த சனி விலகிவிடும் என ஒரு புரட்டை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து அமைப்பினர் திட்ட மிட்டு பரப்ப, அந்தக்காட்சியை காண்பதற்கென்றே இளைஞர்கள் கூட்டம் படையெடுக்க ஆரம்பித் திருக்கிறது.

கூட்டம் கூடுவது ஒரு புறம் அதிகரிக்க, அங்கு அவிழ்த்து விடப்படும் ஆடைகள் பல லட்சத்திற்கு ஏலமும் விடப்படுகிறது. கூட்டத்திற்கு கூட்டமும், வரும்படிக்கு வரும்படியும் வந்து சேருகிறது. (இந்த வியாபாரம் பிற கோயில் குளங்களிலும் விரைவில் அமலாகக் கூடிய அபாயம் இருக்கிறது.)

திருநள்ளாறையும் விடாத திருட்டு டிவிடி

திருநள்ளாறு தல வரலாறு - டிவிடி குறைந்த விலையில் 10, 15, 20 ரூபாய்க்கு என்று  விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதே வேளையில் குறைந்தவிலை என்று  போலி டிவிடிகளை வாங்கி ஏமாறாதீர்கள் என்ற விளம்பரப் பதாகையும் இன்னொரு பக்கத்தில் கண்ணில் பட்டது. சனீஸ்வரா!

ரொட்டேசனில் பூஜைப் பொருட்கள்

இது பல கோவில்களிலும் நடக்கும் ஒன்று தான். இங்கேயும் உண்டு - ஆனால் இங்கே மேட்டர் துண்டுதான். கோவிலுக்குப் பூஜைக்குச் செல்லும்போது அர்ச்சனைப் பொருட்களை (எள்ளு, கருப்புத் துண்டு, பூ, பழம், தேங்காய் எக்சட்ரா.. எக்சட்ரா..) வீட்டிலிருந்து நீங்கள் எடுத்துவரக்கூடாது. அங்கு உள்ள கடைகளில் தான் வாங்க வேண்டும். அப்படி வாங்குவது எல்லாமே பக்தர்கள் வீட்டுக்குச் செல்வதில்லை.

அவற்றை கோயி லிலேயே கொடுத்துவிடவேண்டுமாம். விருப்பப்படும் சிலர் மட்டும் கையில் வாங்கிச் செல்கிறார்கள். மற்றபடி, 90 விழுக்காடு மடிப்புக் கலையாத துண்டுகள் மீண்டும் அடுத்த சுற்று விற்பனைக்கு கோயிலின் உள்ளே உள்ள கடைகளுக்கு வந்துவிடுகின்றன. (உணவு டோக்கன்கள் பற்றி தனியாக படித்திருப்பீர்கள்)

சனிப்பெயர்ச்சியைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தவர்கள் அங்கிருந்த வியாபாரிகளே! பக்திப் பிரவாகத்தோடு மதியம் 2:43 மணி-க்குக் காத்திருந்த பக்தர்களிடம் இருந்து கூடுமானவரை காசுவாங்கி கல்லாவை நிரப்புவதில் குறியாய் இருந்தது கோயில் நிர்வாகமும், சுற்றுப்பட்டு கடைகளும்! வெளியூர் களிலிருந்து வந்து கும்பிட்டுக் கொண்டிருந்த பக்தர்கள் மத்தியில், உள்ளூர்க்காரர்களும் சுற்றுப்பட்டு கிராமத்த வர்களும் புது வியாபாரிகளாக மாறியிருந்தனர்.

பலித்தவரை பார்ப்பனியம் என்பது போல, முடிந்த வரையிலும் மக்களிடம் சுரண்டும் தொழில் அங்கு நடந்து கொண்டிருந்தது.

இதெல்லாம் சரி, அந்த உலகப் புகழ் பெற்ற சனிப் பெயர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். அந்த 2.43இல் என்னதான் நடந்தது. ஆனால், அதிலும் ஒரு முக்கியமான சதி நடந்தது.

அதாவது, நளன் குளத்தைச் சுற்றி புறாக்கள், காகங்கள், பருந்துகள் ஆகியவை பறந்தும், சுற்றியிருக்கும் மரங்களில், அமர்வது மாக இருந்தன. இது மக்கள் கூடத் தொடங்கியதுமே அவைகள் பறக்கத் தொடங்கிவிட்டன. இப்படி பறப் பதும், அமர்வதும் என்று இருந்த பறவைகள் 2.30க்கு மேல் சென்று அதனதன் இடங்களில் அடங்கிவிட்டன.


பிரளயம் போல் ஏதாவது நடந்திருக்க வேண்டு மல்லவா? ம்... ஹூம்... நஹி... நஹி... 2.43 மணிக்காக குளத்தில் மக்களும், வெளியில் மிகக் குறைந்த அளவில் மீடியாக்களும் என்ன நடக்குமோ என்று காத்தி ருந்தனர். 2.43 மணியும் தொடங்கியது. சரி, எப்படித்தான் இதை அறிவிப்பார்கள் என்றிருக்கையில், கோயில் தேர் வடம் பிடிப்பதை அறிவிக்க வேட்டு வைப்பார்களே! அந்த வேட்டை மூன்று முறை வெடித்தார்கள். உடனே குளத்தில் இருந்தவர்கள் உணர்ச்சி வயப்பட்டு முங்கி எழுந்தனர். மறுமுறை இரண்டு வேட்டு விட்டனர்.

வேட்டு நளன் குளத்தருகில் வைக்காமல், திட்டமிட்டு வெளியில் வைத்ததால், வேறு வழியின்றி பறவைகள் நளன் குளத்தின் மேலேயே பறந்தன. வேட்டு இங்கே வைத்திருந்தால், பறவைகள் குளத்திற்கு வெளியே பறந்திருக்கும். இந்தச் சதியைப் புரிந்து கொள்ளாமல், பறவையோடு பறவையாக பறந்த பருந்துகளையும், சனி பகவானையும் இணைத்து மக்கள் பரவசமடைந்தனர். மதியம் மணி 2:43அய் இயல்பாகக் கடந்து 2:44க்கு நகர்ந்தது கடிகார முள்.
எப்படியும் ஏமாற, மக்கள் தயாராக இருக்கும் போது இப்படிப்பட்ட மோசடிகள் நடந்து கொண்டுதானிருக்கும். இத்தகைய மடமைகளுக்கு எதிரான நம் போராட் டமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

பணமும் கோவிந்தா? புண்ணியமும் கோவிந்தா?

எந்த கோயிலாக இருந்தாலும் சரி அன்னதானம் செய்தால் புண்ணியம் என்பது பொதுவான அய்தீகம். (அதற்காகவென்றே சுற்றிலும் பிச்சைகாரர்கள் கும்பல்) அதற்கு இந்த திருநள்ளாறு கோயிலும் விதிவிலக்கல்ல. அங்கு வந்து சமைத்து வைத்து படைக்க வாய்ப்பில்லாததால், பக்தர்கள் சிலர் அங்குள்ள உணவுக் கூடங்களில் (Hotels) உணவுக்கான சீட்டு (Token) வாங்கி அதை தானம் பெற காத்திருப்போரிடம் கொடுத்துவிடுகின்றனர்.

அதை வாங்குவது பெரும்பாலும் பிச்சை எடுப்பவர்களே. இப்படி ஒரே பிச்சைக்காரரிடம் உணவிற்கான எண்ணற்ற சீட்டுகள் (Token) சேர்ந்துவிடுகிறது. சரி அவர்களாவது இதை பயன்படுத்தினால், அதை வாங்கிக்கொடுத்துவருக்கு புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால் அதிலும் மண்தான். அதாவது பிச்சைக்காரர்கள் அங்கு ஓசியில் கிடைக்கும் உண்டைக்கட்டி உணவை வாங்கி சாப்பிட்டுவிடுவதால், அவர்களுக்கு தானம் செய்யப்பட்ட அந்த உணவுக்கான சீட்டை அந்தப் பிச்சைகாரரும்  பயன்படுத்தவில்லை.

சரி, என்னதான் செய்கிறார் என்று பார்த்தால் அது, எந்த உணவுக்கூடத்தில் காசுக்காக வழங்கப்பட்டதோ அதே உணவுக் கூடத்துக்கு பாதி விலைக்கே திரும்ப போய்விடுகிறது. (சாப்பாட்டுக் கடைக்காரருக்கும், பிச்சைக்காரருக்கும் இடையே இப்படி ஓர் ஒப்பந்தம்) இது எப்படி இருக்கிறது? கடைக்காரருக்கு காசு!

உணவும் தயாரிக்கப்படாமல், வழங்கப்படாமல் அதோடு மட்டுமா? வழங்கப்பட்ட உணவுச்சீட்டும் பாதி விலைக்கே திரும்ப எடுத்துக் கொண்டார் அல்லவா? மீண்டும் அந்த உணவு டோக்கன் விற்பனைக்குத்தயார். இது எப்படியோ போகட்டும். இந்த அன்னதானம் செய்ய நினைத்தாரே... அந்த பக்தரின் நிலை?

இருந்த பணமும் கோவிந்தா!! இல்லாத புண்ணியமும் கோவிந்தா!

வியாபாரத் துளிகள்
  • சிறு துணியில் கட்டி விற்கப்படும் எள்ளை வாங்கி எரிந்து கொண்டிருக்கும் கொப்பறையில் போட்டால், பாவம் தொலையும் என்பதால், பக்தர்கள் தங்கள் தலையைச் சுற்றி எண்ணை அந்த கொப்பறையில் போடுகின்றனர். கொஞ்ச நேரத்தில் காசு கரியாகிறது.
  • ஒட்டு மொத்த பாவம் போக்க சனி பெயர்ச்சி, அது இது என்று ஒரு பக்கம் மக்கள் பையிலிருக்கும் பணத்தை பிடுங்காத குறையாக வாங்கிவிட, இது போதாதென்று கைரேகை, ஜோதிடம், கல் விற்பனை என்று இது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது.
  • சனிப் பெயர்ச்சிக்கு மக்களை வரவேற்று கோயில் நிர்வாகம் சார்பிலும், ஹிந்து மதம் சார்பிலும் வரவேற்பு பேனர்கள் எங்கெங்கும் காணக்கிடக்க, நாங்கள் மட்டும் இளைத்தவர்களா என்ன என்று, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளின் உள்ளூர்ப் பிரநிதிகளும் அந்த வரிசையில் கலந்து கொண்டனர்.
  • மோடி என்றாலே மோசடி என்பது போல, பிரத மர் மோடி பற்றிய ரூ.10 மதிப்பு உள்ள புத்தகம் ரூ.20க்கு விற்றுக் கொண்டிருந்தனர். அதே போல, பத்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த தேங்காய், கோயில் பக்கத்தில் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
  • மக்களை நெறிப்படுத்த முயன்று கொண்டிருந்த காவல் துறையினருக்கே தங்கள் மீது நம்பிக்கையில்லை திருடர்கள் ஜாக்கிரதை என்று நூற்றுக்கணக்கானவர் களின் படத்துடன் பிளெக்ஸ் போட்டு நிறுத்தியிருந்தனர். ஆக, மக்கள் கோயிலில் இழந்தது போக, இந்த திருடர் களிடமும் இழந்திருக்க வேண்டும். இது பற்றிய செய்தி கள் வராமலேயே கூட போகலாம்.
  • அழுக்கும், சிறுநீரகம் சேர்ந்த நளன் குளத்து நீரை பம்ப் செட் வைத்து தொடர்ந்து வெளியேற்றுகின்றனர். அதையும் சிலர் பாட்டிலில் பிடித்துக் செல்கின்றனர். இதிலென்ன வேடிக்கை, அண்மையில் மறைந்த ஒரு பார்ப்பனர், இந்தப் புனித (?) நீரை சின்னச் சின்ன பாட்டில் களில் அடைத்து விற்பனையே செய்திருக்கிறார்.
  • பிராமணாள் கபே ஒழிந்து ஆங்காங்கே "அய்யர் காபி" விற்பதை பார்க்க முடிந்தது
  • சனீஸ்வர பகவானுக்கு வேண்டி மொட்டை யடிக்க (இதுவும் அந்தக் கோயிலில் அண்மைக்கால புது வியாபாரமே) ரஜினிகாந்த் மொட்டைத்தலை கெட் அப்பில் உள்ள படத்தைப் போட்டு விளம்பரம் செய் திருந்ததைப் பார்த்து குபீரென சிரித்துவிட்டோம்.
  • முன்பெல்லாம் தில தீபம் என்று ஒற்றைத் திரியை வைத்து கொளுத்தி வழிபடுவதுதான் வழக்கமாம். நடிகர் ரஜினிகாந்த் இந்த கோவிலுக்கு வந்து 12 தீபங்களை ஒரே தட்டில் வைத்து வழிபட்டதிலிருந்து, புதிதாக அந்தப் பழக்கமும் சேர்ந்துவிட்டதாம். கோயிலுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டதே சிவாஜி என்ற படத்தில் இக்கோயிலைப் பற்றிக் காண்பித்தபின்பு தானாம். ஏதோ வியாபாரம் ஆனால் சரி!
  • கோயிலில் அர்ச்சகர்களுக்குள் முறை வைத்து, அதற்கென ஆள்போட்டு அர்ச்சனைத் தட்சணையில் பங்கு வைக்கப்படுமாம்.
செயற்கைக்கோள் செயலிழக்குமா? பொய்ப்பித்த தொலைக்காட்சி நேரலை
சனீஸ்வர பகவானின் அருளால், தாக்கத்தால் சனிக் கிரகத்திலிருந்து வரும் ஒளிக்கற்றை அல்லது கதிர்வீச்சால் திருநள்ளாறுக்கு மேலே பறக்கும் விமானம், செயற்கைக்கோள் அல்லது ராக்கெட் போன்றவை ஓரிரு நிமிடங்கள் அல்லது நொடிகள் செயலிழந்து விடுகின்றன அல்லது நின்று மீண்டும் பறக்கின்றன. (எதுவும் உறுதி இல்லாததால் தான் இத்தனை அல்லதுகள்.

கண்ணதாசனோ, ஜேசுதாசோ... பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு என்ற திரைப்பட நகைச்சுவை போலத் தான் இருக்கிறது இவர்கள் கதையும்!) சரி... இப்படிச் சொன்னது யார்? நாசாவாம்! திருநள்ளாறின் இந்த சக்தியைக் கண்டு அதிசயித்து ரகசியமாக வந்து ஆராய்ச்சி செய்து பார்த்தார்களாம்.

ஆனால், எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்! இப்படி ஒரு புரட்டுக் கதையை உலகப் புகழ் பெற்ற நாசா ஆய்வு மய்யத்தை வைத்தே, 7 ஆண்டுகளுக்கு முன்னர் கிளப்பிவிட்டனர். ஆனால், இன்றும் அது புதுசு போலவே ஓடிக் கொண்டிருக்கிறது. இதையே விளம்பரமாகவும் கொடுத்திருக்கிறார்கள். அதைப் படித்துவிட்டு நம்மிடம் நாசாவே வியந்த திருநள்ளாறு என்று பதிகம் பாடாத குறையாக வியந்து புகழ்கிறார்கள் பக்தர்கள்.

நாசா அப்படிச் சொன்னதா? ஓரிரு நிமிடங்களோ, நொடியோ செயற்கைக் கோள் செயலிழந்து போகுமா? அப்படி செயலிழந்தால் மீண்டும் செயல்படவைக்க முடியுமா? அதன் சுற்றுப் பாதையில் சுற்றுமா? நியூட்டன் விளக்கிச் சொன்ன விதிப்படி, எந்த ஒரு புற விசையும் இல்லாமல் ஒரு பொருள் மீண்டும் நகரமுடியுமா? அப்படியே சனிபகவான் சக்தியால், செயற்கைக் கோள் நிற்குமேயானால், பின்னர் யார் சக்தியால் பறக்கிறது? செயற்கைக் கோள் செயலிழக்கும் என்றால், கூகிள், விக்கிபீடியா மேப்புகளில் திரு நள்ளாறு படம் வந்தது எப்படி?  என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினால், இல்லையில்லை... அது சனிப்பெயர்ச்சி நடக்கும் நேரத்தில் தான் அப்படி.

அதுவும் அந்தக் குளத்தில் தான் நடக்கும்.! என்றார்கள் சிலர். இல்லை யில்லை..கோவிலில் என்றார்கள் சிலர். செயற்கைக் கோளையே செயலிழக்க வைக்கும் அளவு சக்தியுள்ள ஒரு ஒளி/ஒலிக்கற்றை சனிக் கோளிலிருந்து வரமுடியுமா? சனி ஒளி உமிழும் கோள் அல்ல.. அது சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கக் கூடிய ஒன்று தான். அங்கிருந்து அப்படி எந்த ஒளியோ, அலையோ, கதிர்வீச்சோ இங்கு வர வாய்ப்பில்லை.

அப்படி வருவதாயிருந்தாலும் அது வந்துசேர்வதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை முன்பு நாம் சொன்ன சூரிய ஒளிக் கணக்கை வைத்து நீங்கள் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். அதே சனிப்பெயர்ச்சி நேரத்தில் செயற் கைக் கோளே செயலிழந்து போகும் எனில், செல் பேசிகள் என்னாவது? குறைந்தபட்சம் அவையாவது செயலிழந்து போக வேண்டாமா? அதையும் சோதித்துப் பார்த்தோம்.

அதே 2:43 மணிக்கு கோயிலுக்குள்ளிருந்து நண்பர் அழைத்த அழைப்பை, குளத்திலிருந்து எடுத்துப் பேசிய போதும் எந்த வித சிக்னல் பிரச்சினையு மில்லாமல் தெளிவாகக் கேட்டது. (அதைப் பதிவு செய்தும் வைத்துள்ளோம்.) அடுத்த ஆண்டில் ஜாமர் கருவிகளைப் போட்டு தடை செய்ய முயன்று மீண்டும் அறிவியலைத் தேடி வந்தாலும் வருவார்கள்.

தவிர, காவல்துறையினரின் வாக்கிடாக்கிகள் இயங்கின. திருநள்ளாறிலிருந்து நேரலை (செயற்கைக் கோள்களின் உதவியுடன்) செய்துகொண்டிருந்த சன் நியூஸ், தந்தி, ஜெயா மற்றும் சில உள்ளூர் தொலைக் காட்சிகளின் ஒளிபரப்புகளும் எவ்வித சிக்னல் சிக்கலுமின்றி துல்லியமான ஒளிபரப்புடன் இயங்கின. 2:43 மணி-க்கு சனியிலிருந்து வரும் கருநீலக் கதிர்களை படம்பிடித்துவிடலாம் என்று எதிர்பார்த்து சுற்றிலும் கேமராவோடு நம்மைப்போலவே நின்றுகொண்டி ருந்த யாருக்கும் கதிர்கள் புலப்படவில்லை;

கதிர்களால் எந்தத் தடையும் ஏற்படவில்லை. ஊடகங்கள் பரப்பிய புரளியும், பொய்யும் அந்த ஊடகங்களின் நேரலை ஒளிபரப் பினாலேயே பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதே! இனியாவது, இந்த ஊடகங்கள் இந்த பித்தலாட்டத் திற்குத் தரும் விளம்பரத்தை நிறுத்திக் கொள்ளுமா?

Mobile Court

வந்திருக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பாவத்தை போக்குவதற்காக இங்கே வந்திருக் கிறார்கள் என்று ஜலக்கிரீடையை நேரலை செய்த தனியார் தொலைக்காட்சிகள் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன. ஆக, அங்கு வந்திருக்கும் மக்கள் ஏதோ ஒரு வகையில் பாவம் செய்தவர்களே!

அதாவது, குற்றங்களைச் செய்து விட்டு, இதிலிருந்து - அந்த பாவத்திலிருந்து விடுபட நளன் குளத்திற்கு வந்திருக்கின்றனர்.

அப்படி என்றால்? வந்திருக்கும் அனைவரின் மீதும் FIR போட்டு குற்றப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்திருக் கலாமே? வந்தவர்களை விட்டுவிட்டு, பின்னர் வடை போச்சே என்று திரைப்பட நடிகர் வடிவேலு மாதிரி அங்கலாய்க்க வேண்டியதில்லை அல்லவா?

திருநள்ளாற்றைச் சுற்றி வளைக்கும் இந்துத்துவாக்கள்!


திருநள்ளாறுக்குச் சென்று இறங்கிய உடனேயே நமக்குக் கிடைத்த தகவல்களில் ஒன்று. போன வருசம் மாதிரி இந்த வருசம் கூட்டமில்லை என்பது. அதனால் உடனே பக்தி போய்விட்டது என்றெல்லாம் முடிவு கட்டிவிட முடியாது.

அந்த ஆட்டோகாரரின் கருத்துப்படி, இப்போ பிஜேபி ஆட்சியிலிருப்பதால் இந்து முஸ்லிம் பிரச்சினை அது இதுன்னே ஏதாவது பிரச்சினையாகும்கிற பயம் இருக்கு! என்றார். அவர் சொன்னதில் ஓர் உண்மை உண்டு. திருநள்ளாறு பகுதியில் உள்ள பக்தி வணிகத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவக் கும்பல் பலவகையிலும் உள்ளே புகுந்திருக்கிறது.

பி.ஜே.பி.யில் வந்து சேருங்கள்... எங்களுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று எர்வாமாட்டின் விளம்பரம் போல சுற்றிலும் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளில் ஒரு கையை உயர்த்தியபடி ஷோ காட்டுகிறார் மோடி.

கூடவே அமித்ஷா, உள்ளூர் பி.ஜே.பி.யினர் படங்கள். ஹரே ராமா... ஹரே கிருஷ்ணா என்று கீதையை ரூ.100க்கும், நூற்றி சொச்சத்துக்கும் உரக்கக் கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள் சில சிண்டு தரித்த பார்ப் பனர்கள். அவர்களுக்குப் பக்கத்திலேயே கையேந்திக் கொண்டிருக்கிறார்கள் பார்வையற்ற பக்தர்கள் சிலர்!

உங்களுக்காகப் பிரார்த்திக்கிறோம்... உங்கள் உடல்நலனுக்காகப் பிரார்த்திக்கிறோம்... அதற்காக இந்த(து) அமைப்பு! உங்கள் கல்வி வளர்ச்சிக்காகப் பிரார்த்திக்கிறோம்... அதற்கு இந்து மதம் இன்னின்ன வழிமுறைகளைக் கூறுகிறது அதற்காக இந்த அமைப்பு! எப்படி மந்திரங்களைச் சொல்லி, இறைவனைப் பிரார்த்தித்து அதிக மதிப்பெண் பெறுவது என்பதைச் சொல்லுவதற்கும், வழிகாட்டுவதற்கும் (!?) ஓர் அமைப்பு! நீங்கள் இதில் பயன்பெறலாம்... வந்து பார்க்கலாம்... அங்கு எண்ணற்றோர் உதவிபெறுகிறார்கள்...

எல்லோருக்கும் தங்குமிடம், உணவு இலவசம்... என்று நான்கைந்து துண்டறிக்கைகளைக் கையில் திணித்துவிட்டு, உங்களால் முடிந்ததைக் கொடுத்து உதவலாம் என்று வருகிறது கடைசி வார்த்தை. பிறகு பார்க்கலாம் என்றால்... இருப்பதைக் கொடுங்க என்கிறார் அந்தப் பெண்மணி. சில்லறை இல்லைங்க என்றால், எவ்ளோன்னாலும் நாங்க கொடுக்கிறோம் என்கிறார்.

சரி, பார்ப்போம் என்று கிளம்பியவரிடம், நோட்டீசுக்காவது காசு கொடுங்க என்றார். 10 ரூபாய் எடுத்து நீட்டியவரிடம் 20 ரூபாயைப் பிடுங்கிக் கொண்டு தான் விட்டார் அந்த அம்மையார். பக்கத்தில் இருந்து பார்த்ததே நம்மை பயமுறுத்த, மாட்டுவோமா நாம்? எஸ்கேப்.

தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு. ஏகப்பட்ட அய்யர்களையும், அய்யாக்களையும் இந்திராணிகளையும் காணாமல் அறிவிப்பு வந்துகொண்டிருக்க, ஜோசியர் சுப்பிரமணியத்தின் மனைவியைக் காணாமல் அவர் தேடிக் கொண்டிருந்தபோது தான், மனுசன்... இதைக் கண்டுபிடிக்க முடியாமல் என்ன ஜோசியர் என்று அலுத்துக் கொண்டார்கள் பக்தர்கள்.பாவம்!

அறிவிப்பு செய்தவரைத் தவிர மற்ற அனைவரையும் தேடியிருப் பார்கள் போல... அவர்கள் அறிவித்த பட்டியல் அவ்ளோ நீளம். திருநள்ளாறு கோயில், குளத்தைச் சுற்றிலும் ஒலித்துக் கொண்டிருந்த இந்த அறிவிப்புகளின் மூலமாக தங்களுடைய ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருந்தது ஜன கல்யாண் அமைப்பு! ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் அவர்கள் நடத்துவதைப் போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவித்திருந்தது மக்கள் மத்தியில்.

பக்தி மய்யங்களை இந்துத்துவாவின் பெயரால் ஒன்றிணைப்பது எளிது என்பதுதானே அவர்களின் வளர்ச்சிக்கான சூத்திரம்!
- விடுதலை சிறப்புச் செய்தியாளர் குழு

Friday, December 5, 2014

உலகம் இருளில் மூழ்குமா?




அமெரிக்க வானியல் ஆய்வுத்துறையான நாசா கூறியதாக அவ்வப்போது கட்டுக்கதைகளை உலகெங்கிலும் உள்ள சில மதவாதிகள் பரப்பிவிடுவதுண்டு. அதுவும் நாசாவின் இணையதளத்தில் இருந்து எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உலகை நம்ப வைப்பது தற்போது ஓர் ஏமாற்றுக் கலையாகப் போய்விட்டது.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதோ ராமர் பாலம் நாசாவே உறுதிசெய்த படம் என்று கூறி இந்து மத அமைப்புகள் பரபரப்பை உண்டாக்கின. இதற்கு நாசாவே மறுப்புத் தெரிவித்தும் இன்றும் ஒரு கூட்டம் இதை நம்புகிறது.

சிதம்பரம் கோவிலுக்கு நேர் எதிரே வானவெளியில் இருந்து படம் எடுத்தால் அது வெண்மையாகத் தெரியும் என்பதும் நாசா பெயரில் வந்த கட்டுக்கதை. திருநள்ளாறுக்கு நேர் எதிராக வான்வெளியில் கடக்கும் எல்லா செயற்கைக் கோள்களும் சில வினாடிகள் செயலிழந்துவிடுமாம். இவை போன்ற மூடநம்பிக்கைகள் நாசாவின் பெயரால் பரப்பப்படுவதால் நாசா அவ்வப்போது மறுப்பு வெளியிட்டு வந்துள்ளது. இப்போது மேலும் ஒரு புரளி
"2014 டிசம்பர் மாதம் உலகம் இருளில் மூழ்கப் போகிறதாம்?

கிறித்தவ மதத்தின் சில பிரிவினர் இதோ தேவ மைந்தனின் இரண்டாம் வருகை என்று அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் தற்போது தங்களின் வியாபாரத்திற்கு நாசாவையும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். 'உலகம் மூன்று நாட்கள் இருளில் மூழ்கும். அப்போது இறைவனுக்கு எதிரானவர்கள் அழிக்கப்-படுவார்கள்' என்பது கிறித்தவ மதத்தில் ஒரு பிரிவினரது நம்பிக்கை ஆகும். அவர்கள் தற்போது புதிய கட்டுக்கதையை விட்டு மக்களைக் குழப்பி இருக்கிறார்கள்.

அதற்கேற்ப, வரும் டிசம்பர் 2014 இல் உலகம் ஆறு நாட்கள் இருளில் மூழ்க இருப்பதாகவும், சூரியனில் ஏற்படும் காந்தப்புயலே இதற்குக் காரணம் என நாசா கூறிவிட்டது என்ற அறிவியல் கதையை விட்டுக் குழப்பியுள்ளார்கள்.

எப்போதும் போல் இது போன்ற மடமைத்தனமான செய்திகள் மேலும் பரவிவிடாமல் இருக்க நாசா முன்-னெச்சரிக்கை-யாக மறுப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் மாதம் 6 நாள்கள் உலகம் இருளில் மூழ்கி இருக்கும் என்ற கட்டுக்-கதைகள் நாசாவின் பெயரால் பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மையல்ல. அறிவுள்ள அனைவருக்கும் தெரியும், உலகம் பாதி நாள் இருளிலும் பாதி. நாள் பகலிலும் உள்ளது.

இருளை மனித இனம் விளக்குகளின் வெளிச்சத்தில் வென்றுவிட்டது. தற்போது சிலரால் பரப்பப்படும் கட்டுக்கதைகளின்படி மின்சாரம் தடைபட்டால்தான் இருளில் மூழ்க வாய்ப்புள்ளது. சூரியப்புயல் மட்டு-மல்ல, எந்த ஒரு இயற்கைக் காரணத்தாலும் மனிதனால் செயற்கையாகத் தயாரிக்கப்படும் மின்சாரத்தைத் தடைசெய்ய முடியாது. பருவநிலை மாற்றங்களான மழை, வெள்ளம், புயல் போன்ற நேரங்களில் மின்சாரம் தடைப்படுவது அந்த அந்தப்பகுதியில் மாத்திரமே நிகழும். அதுவும் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். ஆகவே உலகம் இனி வரும் காலத்தில் மேலும் அதீத அறிவியல் வளர்ச்சி பெற்று முன்னேறுமே தவிர இப்படி பொய்யான கதைகள் போன்று இருளில் மூழ்காது.  மேலும், அந்தப் பொய்யான இணைய-தளத்தில் சிலர் தொலைக்காட்சியில் உரையாடுவது போன்ற நிகழ்ச்சி, அதன் பின்புலத்தில் நாசாவின் அடையாளம் எல்லாம் பொய்யாகத் தயாரிக்கப்பட்டவை.

   சூரியப்புயல் என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புவியின் மேற்பரப்புவரை வந்து செல்கிறது. இதை, புவியின் மேலடுக்கில் உள்ள வளிமண்டலம் தடுத்து மீண்டும் வானவெளிக்கே அனுப்பிவிடும். இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று நாசா வெளியிட்டுள்ள மறுப்புச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மூடநம்பிக்கையைப் பரப்ப நினைக்கும் மதவாதிகளும், இதைக் கடவுள் வந்து சொன்னார் என்று சொல்வதில்லை. உலகம் இருளில் மூழ்கும் என்று கடவுள் சொன்னதாகச் செய்தி பரப்பினால், கக்கத்தில் கைவைத்து கேலிச் சிரிப்பே பரிசாகக் கிடைக்குமென்பதால் அறிவியல் மய்யமான நாசாவைப் பயன்படுத்துகிறார்கள் நாசக்கார மதவாதிகள்.  ஆனால் பொய்கள் பரவும் வேகத்தில் நாசாவின் உண்மை பரவுவ-தில்லை. ஊடகங்களும் பொய்க்குத் தரும் முக்கியத்துவத்தை உண்மைக்குத் தருவதில்லை.
- சரவணா ராஜேந்திரன்

Friday, October 18, 2013

அலகு குத்துதல் - சிலுவையில் அறைதல் - சுத்தியில் வெட்டிக்கொள்ளல் உண்மை நிலை என்ன?

- சரவணா இராஜேந்திரன்


அலகு குத்துதல், பறவைக்காவடியில் தொங்குதல், தீ மிதித்தல், கற்பூரம் கொளுத்திக் கையில் வைத்தல் மற்றும் வாயில் போடுதல் ஆகிய செயல்கள் கோவில் விழாக்களில் சிலரால் செய்யப்படுவதை நாம் பார்த்திருப்போம். கடவுள் சக்தியாலோ, கடவுள் அருள் மனிதன் உடலில் ஏறுகிறது என்று பக்தர்கள் சொல்வதாலோ செய்ய இயலும் செயல்கள் அல்ல என்பதை விளக்குகிறது இந்த அறிவியல் விளக்கக் கட்டுரை.



எச்சரிக்கை: இது ஒரு மதத்தைக் குறைகூறும் பதிவல்ல, உலகில் பல பகுதிகளில் இந்தப் பழக்கம் இயற்கைக்கு மாறான மனிதச்செயல் (Taboo) மற்றும், தொழில் முறை வித்தை, வீர விளையாட்டாகவும் காணப்படுகிறது.

உடலின் அனிச்சைச் செயல்கள்: மனிதத் தசை நார்கள், திடீரெனத் தாக்கப்படும்போது அதைத் தவிர்க்க மூளைக்குச் செய்திகளை அனுப்பும். மூளை உடனடியாக வலியை உருவாக்கும் எக்ஸைம்களை அனுப்பி இரத்த ஓட்டத்தைச் சுருக்க ஆரம்பிக்கும். அப்போது பாதிக்கப்படும் தசை நார்களுடன் இணைந்துள்ள அனைத்து செல்களும் ஒரு பாதுகாப்பு எதிர்வினையை உருவாக்கும்.

முதலில் தன்னிச்சையாக அந்தத் தாக்குதலைத் தவிர்க்க உடல் முயற்சிக்கும் தற்காப்பு நடவடிக்கை (Defence Activity).. பிறகு அதை உடலில் ஏற்படும் திடீர்க் காயங்கள் மற்றும் மேலும் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்.

எ.கா: யாராவது நம்மைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்க வருவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இது திடீர்த் தாக்குதலில் மட்டும்தான். ஆனால், அலகு குத்துபவர்கள், வித்தைக்காரர்கள், டாபோக்கள் இதை ஒரு தேவைப்பட்ட ஒன்றாக எடுத்துக் கொள்கின்றனர். இந்தச் செய்தி மூளைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனை அடுத்து, மூளை இது தேவையான ஒன்றுதான் என்று உணர்ந்து ஆபத்தான சமயங்களில் செய்யும் அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் நிறுத்திவிடுகிறது.

விளைவு, தசை நார்கள் பெரிய ஸ்க்ரூ ட்ரைவரைக் கொண்டு மெல்ல மெல்ல (முக்கியமான உள்ளுறுப்புகள் இல்லாத பகுதியில்) ஊடுருவ இடைவெளி தருகிறது. அங்குள்ள இரத்த நாளங்கள் கிழிபடும்போது ஏற்படும் வலியைத் தவிர வேறு ஒன்றும் உணரமாட்டோம்.

மற்றொரு விசித்திர செய்தி, நாம் அனைவரும் இதன் அனுபவத்தை உணர்ந்திருக்கிறோம். ஆம், செவிலியர், இரத்தப் பரிசோதகர், பல் மருத்துவர் மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர் நமது உடலில் ஊசியால் குத்தும்போது ஏற்படும் அதே உணர்வுதான் அலகு குத்தும்போது ஏற்படுவது.

பறவைக்காவடி: நமது தசை நார்கள் ஒரு லாரியை இழுக்கும் அளவு வலுவானவைகள். முதுகில் கொக்கிகளைக் குத்தி அதில் ஒரு லாரியை இணைக்கும் கயிற்றைக்கட்டி இழுக்கச் சொன்னால், வலிமையுள்ளவர்கள் எளிதாக இழுத்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது நமது உடல் எடை என்பது பெரிய பிரச்சினையே அல்ல. அதாவது, ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல, உங்களுக்கு விருப்பப்படும்போது அல்லது இயற்கை உபாதைகளுக்கு மட்டும் இறங்கி வந்தால் போதும். மற்றபடி நீங்கள் தொங்கிக்கொண்டே இருக்கலாம். ஈர்ப்பு விசையால் பாதிப்பு என்பது எடை தாங்காத அளவிற்கு எடை கூடும்போது தசைகள் கிழிபடும்.

தீ மிதித்தல்: இது மிகவும் எளிமையான ஒரு மெக்கானிசம். கிராமத்தில் அடுப்பு எரிக்கும்போது சில நேரங்களில் கனன்று கொண்டு இருக்கும் கட்டையில் இருந்து கனல் வெளியில் விழுந்ததும், அதனைக் கையில் எடுத்து எரிந்து கொண்டிருக்கும் நெருப்பினுள் போடுவதைப் பார்த்திருப்போம்.

இதே மெக்கானிசம்தான் தீ மிதிக்கும்போதும் ஏற்படுகிறது. நமது பாதங்கள் எண்ணிடலங்கா மெல்லிய இரத்த நாளம் மற்றும் கரோட்டின் செல்களால் ஆனது. இந்த கரோட்டின் செல்களை நுண்ணோக்கியால் பார்த்தோமென்றால் கண்ணாடிப் பொருட்களைப் பாதுகாக்கும் காற்றுக்குமிழ் அடங்கிய பிளாஸ்டிக் சீட் போன்று இருக்கும்.

அங்கு காற்றுக்குமிழ், இங்கு இரத்தம். இதுதான் வித்தியாசம். கரோட்டினுள் அதிக அழுத்தத்தில் பாயும் இரத்தம் குறிப்பிட்ட அளவு வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நமது பாதங்களை உள்ளங்கைகளைக் காப்பாற்றுகிறது.

இது குறிப்பிட்ட அளவு மட்டும்தான் தணலைக் கட்டுப்படுத்தும். அதே நேரத்தில் உலோகம், மணல், கல் போன்றவைகளில் இந்தத் தீமிதி வேலை செய்தல் கூடாது. காரணம், இவை தணலைப்போல் எளிதில் வெப்பத்தைக் குறைத்து கூட்டும் தன்மையுடையவை அல்ல.

கடவுள் சக்தி, நம்பிக்கை போன்றவைகள் இங்கு ஒரு ஏமாற்று வேலையாகத்தான் நடக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை.

பள்ளிப் பருவத்தில் ப்ளேடால் கையைக் கிழித்து பெண் நண்பரின் பெயர் எழுதுவது, மெழுகுவர்த்தியில் கம்பியைச் சுடவைத்து பெயர் எழுதுவது, காது மூக்கு குத்துவது, பச்சை குத்துவது போன்றவையும் இதே வகைதான்.

வடக்கில் உள்ள சாமி சாமியாரினிகள் செய்யும் முள்படுக்கை, ஆண்குறியில் செங்கற்களைக் கட்டித் தூக்குவது, மார்பகங்களில் கூரான உலோகங்களைக் கட்டி கடவுளர்களின் சிலைகளைத் தொங்கவிட்டு வருவதும் இதே முறையில்தான்.
 
இது உலகில் உள்ள அனைத்து மதங்களிலும் உள்ளது. கிறித்துவர்கள் சிலுவையில் அறைந்து கொள்வது, இஸ்லாமியரில் ஒரு பிரிவினர், கத்தியால் தங்கள் உடலில் கிழித்துக் கொள்வது போன்றவையும் இந்த வரைமுறையில் அடங்கும்.

Friday, November 2, 2012

சுவீடனிடம் தோல்வி


சுவீடனிடம் தோல்வி: ருமேனிய வீரர் ஹாஜி வேதனை 

எங்கள் பிரார்த்தனைகள் பலிக்கவில்லை


எங்கள் பிரார்த்தனைகள் பலிக்கவில்லை என்று சுவீடனிடம் தோற்ற ருமேனிய வீரர் ஹாஜி வேதனையுடன் கூறினார்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் சுவீடன் - ருமேனியா அணிகள் மோதின. இந்த போட்டியின் முடிவு விறுவிறுப்பாக அமைந்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சம நிலையில் இருந்தது. கூடுதல் நேரம் கொடுக்கப்பட்ட போது அதிலம் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமமாக இருந்தது. எனவே பெனால்டி முறை கொண்டு வரப்பட்டது. இதிலும் இரு அணிகளும் 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலையை கடைப்பிடித்தது.

எனவே வெற்றி தோல்வியை முடிவு செய்ய சடன் டெத் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ருமேனியாவை வீழ்த்தி சுவீடன் ஜெயித்தது.

இந்த போட்டியில் ருமேனியா ஜெயிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும் அதை பயன்படுத்த அவர்கள் தவறி விட்டனர் தோல்வி குறித்து ருமேனிய கேப்டனும், கார்பதியின் சின்மரடோனா என அழைக்கப்படும் ஜியார்ஜி ஹாஜி கூறியதாவது:

சுவீடனுக்கு எதிரான போட்டியில் நாங்கள் ஜெயித்து இருக்கவேண்டும். ஆனால் முடிவு வேறுவிதமாகி விட்டது.

வெற்றிக்காக நாங்கள் செய்த பிரார்த்தனை பலிக்கவில்லை. கடவுள் சுவீடன் அணி பக்கம் இருந்து விட்டார். - இவ்வாறு அவர் கூறினார்.

கால் இறுதிப் போட்டியில் தோற்ற போதிலும் ருமேனிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 லட்சம் கிடைக்கும். இது தவிர 12 வீரர்களுக்கு மெர்சி டஸ் காரும் பரிசாக வழங்கப்படும்.

ருமேனிய வீரர்கள் நேற்று விமானம் மூலம் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்கள்.

(மாலை முரசு, 12.7.1994)

Sunday, October 28, 2012

தசராவின் கதை


இன்றைய தினம் விஜயதசமி எனப்படும் தசராவை அப்பாவி மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக் கின்றார்கள். தசராவைப் பற்றி இந்து புராணக் கதைகள் விலா வாரியாக விவரிக்கின்றன. பத்துத் தலை இராவணனைப் பற்றி புராணங்கள் புளுகித் தள்ளுகின்றன. தீமையை நன்மை வெற்றி கொண்டதால் இந்த விழாவாம். இந்தக் கதைகளை எல்லாம் பகுத்தறிவாளர்களால் நம்ப முடியுமா? இந்தக் கதைகளின் உண்மை முகத்தைக் கண்டால் அருவருப்பே மிஞ்சும்.
அயோத்தி மன்னனான இராமனுக் கும், இலங்கையை ஆண்ட இரா வணன் என்னும் அரசனுக்கும் இடையே நிகழ்ந்த போர் என்பதே உண்மை.
சீதை மட்டுமா பழி வாங்கப்பட் டாள்? சூர்ப்பனகைப் பழி வாங்கப் பட்டதைப்பற்றி என்னவென்று சொல்வது? இலக்குவனிடத்திலே, தன் அன்பான காதலை எடுத்துக் கூறிய ஒரே காரணத்திற்காக அவளின் அழகிய மூக்கு வெட்டப்படுகிறது என்றால் என்ன பொருள்? சூர்ப் பனகையின் காதலை ஏற்றிட இலக்கு வன் மறுத்திருக்கலாம். அதற்கான உரிமை அவனுக்குண்டு. ஆனால் அவளின் மூக்கை வெட்டுவதென்பது என்ன நியாயம்? வெள்ளைத் தோல் கொண்டவன் என்கின்ற ஆணவத் திமிர்தானே இதற்குக் காரணம். வெள்ளை நிறத்தினரான ஆரியர்கள், கறுப்பு நிறத்தினரான தென்னிந்தியர் களை வெறுத்ததுதானே இதற்குக் காரணம்? இங்கு இலக்குவனின் மனிதப் பண்பு கீழ்த்தரமானதாக உள்ளது. காட்டுமிராண்டிகள்கூட, தன் அன்பை எதிர்பார்த்து வந்த பெண்ணை இந்த வகையில் மானபங்கப் படுத்த மாட்டார்கள்.
இராவணனின் நாகரிகத்தை அதே சமயம் நாம் போற்ற வேண்டியுள்ளது. அசோகவனத்தில் சீதை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறாள். தன் அதிகாரத்தின்கீழ் இருக்கும் சீதையை இராவணன் நினைத்திருந்தால், என்னவெல்லாமோ செய்திருக்க முடியும்.
ஆனால் இராவணனோ நாகரிகம் மிக்கவன். மனிதநேயக் காவலன். சீதையினிடத்தில் பண்புடன் நடந்து கொண்டான். தன்னுடைய தங்கை சூர்ப்பனகையை மூக்கரிந்து மானபங்கம் செய்த இலக்குவனின் அண்ணி என்கிற வகையில் சீதையை பழி வாங்கி இருக்க லாம். ஆனால் நாகரிகம் மிக்க இராவணன் அவ் இழி நிலைக்குச் சென்றானில்லை. இராவணன் மரியாதைக்குரியவனாக இங்கே தோற்றமளிக்கிறான். நற்பண்புகள் கொண்ட மனிதனாக இராவணன் மிளிர்கின்றான்.
ஆனால் காலத்தின் போக்கு எதிர் திசையில் அல்லவா அமைந்து விட்டது. இராவணன் மாபாதகன் என்றல்லவா வருணித்து விட்டார்கள் மாபாதகர்கள்.
வெண்தோல் கொண்ட ஆரிய அரசன் இராமனுக்கும், கருமை நிறத் திராவிட அரசன் இராவணனுக்கும் இடையே நிகழ்ந்த போர்தானே இது.
இன்றைய தலித்துகள் இருக்கும் நிலைமைக்கும், அன்றைய இராவணன் இருந்த நிலைமைக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லையே. ஆனாலும் ஆரிய சூழ்ச்சிக்கு இராவணன் இரையானானே?
குரங்குப் படையின் கதைதான் என்ன? குரங்குப் படை என்பது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு தானே? கருந்தோல் திராவிடர்களை இழிவுப்படுத்தத்தானே இந்த குரங்குப் படையைப் பற்றிய கதை.
இலஜோரி இராம்பாலி என்பவர் அம்பேத்காரியவாதி. அனைவராலும் மதிக்கப்படுபவர். அவர் இராவணனை சர்வ சாதாரணமாக இராவணன் என்று கூறுவதில்லை, மகாத்மா இராவணன் என்றே கூறுவார்.
உழைப்பாளி வர்க்கத்தை அடிமைப்படுத்தி அதனால் சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நயவஞ்சக ஆரியர்களின் கதைதான் இந்த விஜயதசமியைப் பற்றிய கதை.
இராவணன் என்றும் மாமனித னாகத் திகழ்ந்தான் என்பதுதானே உண்மை.
இராம் பாலி கூறுகிறார்: தீபாவளி அன்று தீபங்களின் அணிவகுப்பு என் கிற வகையில் அதை இரசிக்கிறேன். ஆனால் இராமனின் கதையை என் னால் நம்ப முடியவில்லையே?
அம்பேத்கார் தத்துவத்தை பின்பற்றும் இராம்பாலியின் கள்ளங்கபடமற்ற கூற்று அனைவரும் ஏற்கத்தக்கது.

Saturday, October 6, 2012

இந்து மதத்தில் பெண்கள் நிலை



- தந்தை பெரியார்

இந்து மத தருமத்தில் பெண்கள் ஈனப் பிறவி, கடவுளாலேயே விபச்சாரிகளாகப் பிறப்பு-விக்கப்பட்டார்கள். சுதந்திரத்திற்கு அருகதை-யற்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னு-டைய தாய் விபச்சாரம் செய்திருப்பாள் என்கிற நம்-பிக்-கையோடுப் பிரா-யச்சித்தம் செய்து- கொள்-ளக் கூடியவன். பெண்கள் கலியாணம் செய்து கொள்ளும் வரையில் தகப்பனுடைய பந்தோபஸ்தில் இருக்க வேண்டும். கலியாணம் செய்து கொண்ட பிறகு புரு-ஷ-னு-டைய பந்-தோபஸ்திலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒழுக்க வீணர்களாய்ப் போய்விடுவார்கள். பெண்களுக்குச் சொத்து இருக்கக் கூடாது. அவர்களிடத்தில் புருஷர்கள் உண்மை பேசக்கூடாது, ரகசியம் சொல்ல கூடாது. இன்னும் இவைபோன்ற எத்தனையோ நிபந்-தனைகள் தரும சாஸ்திரத்திலும் கலியுகத்திற்கு, ஆதாரமான பராசரஸ்-மிருதியிலும் மற்றும் அவைகளை ஆதரிக்கும் இதிகாசப் புராணங்-களிலும் சொல்லப்-பட்டிருக்கிறது.
இவைகளை (இந்த புஸ்தகங்களையும் சாதிரங்-களையும்) ஒப்புக் கொள்ளுகிறவனும் உண்மையான சநாதன ஹிந்து என்று சொல்லிக் கொள்ளுகிற எவனுக்கும் பெண்கள் சுதந்திரத்தைப் பற்றி பேச உரிமை இல்லை என்பதே தான் எனது அபிப்-பிராயம்.
இந்த விஷயத்தில் திராவிட தர்மமோ, சமண தருமமோ எல்லாம் ஒரேவித யோக்கி-யதைக் கொண்டதே என்பது எனது அபிப்பி-ராயம். தெய்வத் தன்மை பொருந்தியவரென்று சொல்லும் திருவள்ளுவர் என்பவர் கூட தம் பெண் சாதியை விபச்சாரியா பதிவிரதையா என்று பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டு மணலை சோறாகச் சமைக்கச் சொல்லி அந்த அம்மாளும் அது போலவே சமைத்துப் போட்ட பிறகே தான் கலியாணம் செய்து கொண்ட-தாகச் சொல்லப்-படுகிறது. இந்தப் படி பரீட்சை செய்து பார்த்தால் இன்றையதினம் உலகத்திலுள்ள பெண்கள் எல்லாம், இங்கு இருக்கிற பெண்கள் எல்லாம் விபசாரிக-ளென்று தான் நாம் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் ஒரு சகோதரியாலும் மணலை அரிசிச் சாதமாக சமைக்கவோ மழை பெய்ய சொல்லவோ, பச்சை வாழைத்தண்டுவைக் கொண்டு சமையல் செய்யவோ முடியாதென்று சொல்ல வேண்டியிருக்கிறது. வேறு எந்தக் காரியத்துக்காக-வும் இந்து மதத்தை ஒழிக்காமல் தாட்சண்யம் பார்ப்ப தாயிருந்தாலும் பெண்களுடைய சுதந்திரத்தை உத்தேசித்தாவது இந்து மதமென்-பது அழிய வேண்டியது மிக்க அவசியமாகும். இந்து மத புராண இதிகாசங்களில் புருஷன் தாசி வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனதாக-வும், புருஷன் குஷ்டரோகியாகி விட்ட-தால் அவனைக் கூடையில் சுமந்து கொண்டு போன-தாக நளாயினி முதலிய கதைகள் சொல்லப்-படுகிறது. எவ்வளவு அக்கரமும் கொடுமையு-மானக் கொள்கை இது என்பதை யோசித்துப் பாருங்கள். என்னுடைய மகள் நளாயினியைப் போல் இருப்-பாளானால் கட்டாயம் அவளை நான் விஷம் வைத்துக் கொன்று விடுவேனே-யொழிய குஷ்ட ரோகியை சுமந்து கொண்டு தாசி வீட்டிற்குக் கொண்டுபோய் விடும்படிப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். பெண்கள் விபச்சாரிகள் என்பதை ஆதரிக்க எழுதி வைத்த ஆதாரங்களில் ஒன்று தான் பாரதம் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் பாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான திரவுபதை என்பவள் தனக்கு அய்ந்து புருஷன் மார்கள் உண்டு என்றும் அவ்வளவும் போதாமல் ஆறாவது புருஷன் ஒருவன் மீது தனக்கு ஆசையிருந்தது என்றும், ஆதலால்தான் விபாச்சாரி என்றும் உலகத்தில் பெண் தன் புருஷனைத் தவிர வேறு ஆண்களே இல்லா-மலிருந்தால்தான் பெண்கள் பதிவிரதையாய் இருக்க முடியுமென்றும் ஓர் உயர்குலப் பெண்ணேத் தன் வாயினால் சொன்னதாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அரிச்சந்திர புராணத்தில் தன் பெண் ஜாதியை பல சொத்துகளில் ஒன்றாகக் கருதி வேறு எவனுக்-கோ விலைக்கு விற்றதாகவும், அவளும் தன்னை ஒரு உண்மையான அடிமை என்பதை ஒப்புக் கொண்டு வாங்கப் பட்டவனிடம் தொண்டு செய்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. வேறு புண்ணிய புராணங்களில் அடியார்கட்கு பெண்சாதிமார்களைக் கூட்டிக் கொடுத்ததாக-வும் அந்தப் பெண்களும் அப்புருஷர்கள் வாக்கைத் தட்டக்கூடாது என்று கருதி அடியார்-களிடம் போய் படுத்துக் கொண்டதாகவும் சொல்லப்-பட்டிருக்கிறது. மற்றும் சில நீதிக் கதைகளில் தங்கள் புருஷன்மார்களுடைய வைப்பாட்டி-களுக்குத் தொண்டு செய்ததாகவும் சொல்லப் பட்டிருக்கிறது. இராமாயணம் என்கிற இதிகாசத்தில் ஒருவன், ஒரு நீதியான சக்கரவர்த்தி அறுபதினாயிரம் பெண்சாதிகளை மணந்து கொண்டதாகவும் பட்டத்துக்கு தன் சொந்த அரண்மனையில் வேறு மூன்று பெண்டாட்டிகளை மணந்து கொண்டிருந்ததாகவும், யாகத்தில் அவர்களைப் பார்ப்பனர்களுக்குத் தன்னுடைய சொத்துவைப் போல கருதித் தருமமாக கொடுத்து விட்ட-தாகவும் அவர்களாலே பெண்களை வைத்து நிர்-வகிக்க முடியாமல் திரும்பவும், பணம் வாங்கிக் கொண்டு ராஜாவுக்கே கொடுத்து விட்டதாகவும், இம்மாதிரி பண்ட மாற்றுதலுக்கு பெண்களை உபயோகப் படுத்தினதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் நம்முடைய பழைய அரசர்கள் ஒருவராவது ஒரு பெண்சாதியுடன் இருந்த-தாகவோ, பெண்சாதிகளை சமமாகவோ காண் பதற்கில்லை. அப்படி எங்காவது காணப்படுவ-தாயிருந்தாலும் அது ஒருக்காலும் மேற்படி மததர்மங்கட்கு முரணானது என்று தான் சொல்ல வேண்டும். இது வரையிலும் மக்கள் பெண்கள் சுதந்திரம் என்று பேசிக் கொண்டு வந்ததெல்லாம் வெறும் புரட்டும் முன்னுக்குப் பின் முரணுமாய் முடிந் திருக்கிறதே தவிர காரியத்தில் உண்மையாகப் பெண்கள் விடு-தலைக்கு மார்க்கங்கூட கண்டுப்பிடிக்கப்பட-வில்லை என்பது தான் எனது அபிப்பிராயம். பெண்கள் விடுதலைக்கு வெளியில் வருபவர்கள் பெண் சம்மந்தமான இந்துமத தர்மத்தையும், சாஸ்திரத்தையும், புராணத்தையும், இதிகாசத்-தையும் நீதிக் கதையையும் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் வர வேண்டும். அப்படிக்கில்லாமல் மேற்கண்ட அழுக்கு மூட்டைகளைச் சுமந்து கொண்டு யார் எங்கு போய் பெண்கள் சுதந்திரம் பேசினாலும் அது கட்டுப்பாடு உள்ள அடிமை பிரகாரமாகத்தான் முடியுமே தவிர அது சிறிதும் விடுதலையை உண்டாக்காது. மற்றும் பெண்-களைப் படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லி எழுத்து வாசனையுண்டாக்கி அவர்-கட்கு அரிச்சந்திர புராணத்தையும், நளாயினி கதையையும், இராமாயணத்தையும், பாரதத்-தையும் படிக்க வைத்தால் பின்னும் அதிக-மாக அடி-மைகள் ஆவார்களா? சுதந்தர-மடைவார்களா? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள்.
(31.5.1930இல் கள்ளிக்கோட்டையில் நடைபெற்ற S.N.D.P. யோகம் என்று சொல்லப்படும் தீயர் மகாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது-8.6.1930 குடிஅரசு இதழில் வெளியானது).

Thursday, August 2, 2012

வால்நட்சத்திரம் தெரிந்தால் ஆட்சி மாற்றம் வருமா?


வால்நட்சத்திரம் தெரிந்தால் ஆட்சி மாற்றம் வருமா என்பது பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
தமிழ்நாடு அறிவியல்  இயக்கத்தின் நிர்வாகிகள்  சி.ராமலிங்கம், பா.சிறீகுமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹோல் பாப் வால் நட்சத்திரம் பூமியில் இருந்து தெரியும் வகையில் வர உள்ளது. இதை அடுத்து பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. நாட்டில் ஆட்சி மாற்றம் வரும். விலைவாசி உயரும்,  நண்பர்கள் பிரிவார்கள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்ற வதந்தி உலா வருகிறது. நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் வால் நட்சத்திரம்  தெரிவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஆகாயத்தில் ஆயிரக்கணக்கான வால் நட்சத்திரங்கள் உள்ளன. 126 வால் நட்சத்திரங்கள் 6 வருடத்திற்கு குறைவான  காலத்தில் பூமியை ஒரு முறை சுற்றி வரும். 839 வால் நட்சத்திரம் 12 வருடத்திற்கு ஒருமுறை பூமியை சுற்றும். அதுபோல் 2 ஆயிரத்து 670 வால் நட்சத்திரங்கள் நூறு வருடத்திற்கு  ஒருமுறை தெரியும். இப்படி பார்த்தால்  வருடத்திற்கு 2 அல்லது 3 நட்சத்திரங்களை  பூமியில் இருந்து பார்க்கலாம். அப்படி நட்சத்திரங்கள் தெரிவதன் மூலம் ஆட்சி மாற்றம் வரும் என்றால் ஒரு வருடத்திற்கு 2 அல்லது 3 முறை ஆட்சி மாற்றம் வரும்.
எனவே நட்சத்திரம் தெரிவதற்கும்  ஆட்சி மாற்றம்  வருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வால் நட்சத்திரத்தைப் பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் வால் நட்சத்திர விழா ஒன்றை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்துகிறது.
அதன்படி ஒரு மாவட்டத்தில் 20 இடத்திற்குமேல் வால் நட்சத்திர விழா நடத்தி வருகிறோம். இதில் நட்சத்திரம் பற்றிய சிலைடு காட்சிகள், பதாகை கண்காட்சிகள், இரவு நேரத்தில் நட்சத்திரங்களை தொலைநோக்கி மூலம் விளக்கி சொல்லுதல் ஆகிய முறையில்  வால் நட்சத்திரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.
மேலும் நட்சத்திரங்கள் பற்றிய விளக்கம் அடங்கிய ஹலோ! வால்நட்சத்திரம் என்ற கையேடு ஒன்றையும் வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



ஆகஸ்ட் 01-15

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...