Showing posts with label பெரியார் பிஞ்சு. Show all posts
Showing posts with label பெரியார் பிஞ்சு. Show all posts

Monday, October 28, 2013

சாமிகளின் பிறப்பும் இறப்பும்-14

மக்கள் சாமிகளும் மதச் சாமிகளும்
- ச. தமிழ்ச்செல்வன்
நாம் இதுவரை இரண்டுவிதமான சாமிகளைப் பற்றிப் பார்த்திருக்கிறோம். மக்களோடு வாழ்ந்து செத்துப்போனவர்களையே சாமியாகக் கும்பிடும் பழக்கத்தில் வந்த நாட்டுப்புறச் சாமிகள் அல்லது ஏழைச்சாமிகள் ஒருவகை.
இரண்டாவது வகை கற்பனையாக மனிதர்கள் உண்டாக்கிய புலால் மறுப்பு (சைவச் சாப்பாடு) போன்ற கருத்துகளை ஒட்டி உண்டாக்கப்பட்ட கற்பனைச் சாமிகள். அவற்றுக்கு மன்னர்களின் ஆதரவு இருந்ததால் அவை வசதியான சாமிகளாக _ பணக்காரச் சாமிகளாக மாறின. அவை பின்னர் மதங்களாக நிறுவன வசதியுடன் வளர்க்கப்பட்டன.
நம்ம ஏழைச்சாமிகளுக்கு மதம் கிடையாது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அது எப்படிச் சாமியாக உண்டானதோ அப்படியே அந்தந்த ஊர்களில் மக்களால் வழிபடப்பட்டு வந்தது.
மன்னர்கள் என்றால் யார் என்று நாம் முதலில் புரிந்துகொண்டால்தான் அவர்கள் ஏன் மதங்களுக்குப் பின்னால் நின்று ஆதரித்தார்கள் என்பது புரியும். மன்னன் என்பவன் நம்மைப் போல சாதாரண ஆள்தான். அவன் வேலை என்ன? நாட்டை ஆள்வது மன்னனின் வேலை என்று நமக்குச் சொல்லித் தரப்பட்டுள்ளது. அது எப்படி அவன் மட்டும் பெரிய இவனா? மக்களையெல்லாம் ஆள்வதற்கு அவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
ஆதிகாலத்தில் நாமெல்லாம் குரங்குகளாக இருந்தபோது மன்னன் கிடையாது. இனக்குழுக்களாக வேட்டையாடித் திரிந்த அடுத்த கட்டத்திலும் மன்னன் கிடையாது. எல்லோரும் எந்த மரத்திலும் பழம் பிடுங்கிச் சாப்பிடலாம். எந்த விலங்கையும் வேட்டையாடலாம். காட்டில் எதை வேண்டுமானாலும் தோண்டிச் சாப்பிடலாம் என்ற நிலைதானே அப்போது இருந்தது. அதில் ஒருவன் வந்து, இந்த மரம் என் மரம், இதை யாரும் தொடக்கூடாது.
தொட்டால் அடிப்பேன் என்று அடியாள் வைத்து தகராறு பண்ணினான். அவனுக்குப் பயந்து, சரி சரி உன் மரம்தான் நாங்க தொடவில்லை, விடு சாமி என்று ஒதுங்கிக் கொண்டார்கள். நாள் ஆக ஆக காட்டு மரங்களெல்லாம் என்னுடையது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டான். அடியாட்கள் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினான்.
காட்டைத் திருத்தி நான் சொல்றபடி யாரெல்லாம் எனக்காக விவசாயம் செய்கிறீர்களோ அவர்களுக்கு நான் சாப்பிடத் தருவேன் என்று ஆரம்பித்தான். இப்படி அநியாயத்துக்கு அடியாள் வைத்து பொதுச் சொத்தைத் தனிச் சொத்தாக மாற்றிய ரவுடிகள்தான் மன்னன் என்ற பேர் பெற்று உலகின் பல பாகங்களிலும் உருவானார்கள்.
சும்மா கிடந்த காடுகளையெல்லாம் அடியாள் வைத்து வளைத்துப் போட்டாலும் உழுது பயிரிட்டு செல்வமாகக் குவிக்க உழைப்பாளிகள் வேண்டுமே? ஆகவே மன்னர்கள் குதிரைப்படையை அனுப்பி காடுமலைகளில் எங்கெல்லாம் மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் போய் மக்களை இழுத்து வந்து மன்னனுடைய வயல்வெளிகளில் உழச்சொல்லிக் கட்டாயப்படுத்தினார்கள்.
அப்படி இழுத்து வரப்பட்ட மக்கள் அடிக்குப் பயந்து மன்னனுக்காக உழுதாலும் அவர்கள் மனசெல்லாம் அவர்கள் விட்டு வந்த ஊர் நினைப்பிலும் ஊரில் விட்டு வந்த அவர்களது சாமிகள் நினைப்பிலுமே இருந்தது.
யாதும் ஊரே யாவரும் கேளிர், அதாவது எல்லாம் உன் ஊர்தான் சும்மா அழும்பு பண்ணாம மன்னனுக்காக உழுங்கப்பா என்று பாட்டெல்லாம் கூட மன்னர்கள் புலவர்களை வைத்து எழுதிப் பாடிப் பார்த்தார்கள். உடல் மன்னருக்குக் கட்டுப்பட்டதாக இருந்தது. ஆனால் அவர்களின் மனசு பூராவும் ஊரில் விட்டு வந்த சாமிகளிடமே இருந்தது.
பார்த்தான் மன்னன். இது சரிப்பட்டு வராது. உடம்பு மனசு ரெண்டுமே நம்ம கண்ட்ரோலுக்கு வரணும், அப்பத்தான் மக்கள் எப்போதும் சீராக நமக்கு அடிமையாகக் கிடப்பார்கள். என்ன பண்ணலாம் என்று திட்டமிட்டான். அப்போது அவனுக்கு உதவிக்கு வந்தது மதம். எல்லோருக்கும் ஒரே சாமி ஒரே மதம் என்கிற நிலையை உருவாக்கினார்கள். ஆனால் மக்கள் ஏற்கவில்லை.
உங்க சாமி சிவபெருமான் எங்க சாமி சுடலைமாடனாச்சே. ரெண்டும் எப்படி ஒன்னாகும் என்று எதிர்க்கேள்வி போட்டார்கள். மதவாதிகள் அதற்கு ஒரு திட்டம் வகுத்தார்கள். ஏமாத்தணும்னு முடிவு பண்ணிட்டா அப்புறம் வழிகளுக்கா பஞ்சம்?
அம்சம், அவதாரம் என்கிற இரண்டு கருத்துகளை மதவாதிகள் உருவாக்கினார்கள். காளியாத்தா யாரு? அது பார்வதியோட அம்சம் என்றார்கள். சுடலைமாடன் யாரு? அது சிவபெருமானோட இன்னொரு அவதாரம் என்றார்கள். இப்படியே நம்ம மக்கள் உண்டாக்கி வைத்திருந்த எல்லாச் சாமிகளையும் பணக்காரச் சாமிகளின் அம்சம், அவதாரம்தான் என்ற கதைகளைக் கட்டிவிட்டார்கள்.
அதை இதிகாசமாகப் புராணமாகக் கதையாக எழுதி ஊர் ஊராகப் போய் பாடிப் பரப்பவும் செய்தார்கள். கதாகாலட்சேபம், பாட்டுகள் மூலம் பிரச்சாரம் செய்து எல்லா மக்கள் தலையிலும் ராமாயணத்தை ஏற்றிவிட்டார்கள். படிக்காத மக்களுக்கும் கூட ராமாயணக் கதை அப்படித்தான் பரவியது.
மக்கள் உண்டாக்கிய சாமிகளுக்குப் பெரிய கோவிலோ கோபுரமோ உண்டா? கிடையாது, அவ்வளவு பெரிசாகக் கட்டுவதற்கு மக்களிடம் பணம் ஏது? ஆனால் மன்னர்கள் உண்டாக்கிய மதச் சாமிகளுக்கு மன்னர்கள் பெரிய பெரிய ஆலயங்கள், கோபுரங்கள் என்று கட்டினார்கள்.
ஒரு கோட்டை அழிக்காமல் சின்னக்கோடாக மாற்ற என்ன செய்ய வேண்டும்? அதற்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய கோட்டைப் போட வேண்டும். அதைத்தான் மன்னனும் மதவாதிகளும் செய்தார்கள். பெரிய பிரம்மாண்டமான கோபுரங்களுக்குக் கீழே நம்ம மக்களின் சாமிகள் அடங்கிப் போயின.
காலப்போக்கில் கோபுரச் சாமிகளைப் பெருந்தெய்வங்கள் என்றும், மக்கள் உண்டாக்கின சாமிகளைச் சிறு தெய்வங்கள் என்றும் சொல்லிச் சிறுமைப்படுத்தினார்கள். உண்மையில் மக்கள் உண்டாக்கிய சாமிகள் சிறு தெய்வங்களா? இல்லை. அவைதான் முதலில் உண்டான சாமிகள். நம் ஊர்களுக்கு முதலில் வந்த சாமிகள் சீனியர் சாமிகள். இந்த சிவபெருமான், கிருஷ்ணர், ராமர், விநாயகர் எல்லோருமே ஜூனியர் சாமிகள். பின்னால் வெளியிலிருந்து நம்ம ஊருக்குள் மன்னர்கள் உதவியோடு வந்து சேர்ந்தவர்கள்தான்.
ஆகவே அறிவியல் பூர்வமாக, வரலாற்றுப் பூர்வமாக சாமிகளைப் பற்றிக் கற்றுக் கொள்ளும் நாம் நாட்டுப்புறத் தெய்வங்களை சிறு தெய்வங்கள் என்று சொல்லவே கூடாது. அவற்றை மக்கள் படைத்த தெய்வங்கள் அல்லது மக்கள் தெய்வங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற சாமிகளை மன்னர் படைத்த சாமி அல்லது மதசாமி என்று சொல்லலாம்.
இரண்டு சாமிகளும் வேறு வேறுதான். அடிப்படையிலேயே வேறானவை. அவற்றைக் கயிறு போட்டுக் கட்டினாலும் ஒன்று சேராது.
அப்படி என்ன அடிப்படை வேறுபாடுகள்?
(தொடரும்)
//
Share

Friday, December 7, 2012

கல்வியும் கடவுளும்


மாணவச் செல்வங்களும், மழலைப் பிஞ்சுகளும் ஒன்றை உள்ளத்தில் கொள்ள வேண்டும். உண்மை என்பது எது? உறுதி செய்யப்படுவது மட்டுமே! எவை உறுதி செய்யப்படவில்லையோ அவை உண்மையல்ல. அவை வெறும் நம்பிக்கை. நம்பிக்கையென்பவை காரணகாரியத்துடன் இல்லாமல் இருப்பின் அதற்குப் பெயர் மூடநம்பிக்கை!
எந்தவொரு செய்தி பலவிதமாகச் சொல்லப்படுகிறதோ அது உண்மையல்ல. இதுவே நீங்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதியச் செய்யவேண்டிய கருத்து. உண்மையென்றால் அது ஒரேமாதிரி சொல்லப்படும். இந்த அளவுகோலைக் கடவுளுக்குப் பொருத்திப் பார்த்தால் அது உண்மையா, கற்பனையா என்பது உறுதியாகும்.
கடவுள் எது என்றால், ஒருவர் சொல்கிறார் அன்பே கடவுள். இன்னொருவர் கருணையே கடவுள். இன்னொருவர் அறிவே கடவுள். காற்று கடவுள், நீர் கடவுள், நிலம் கடவுள், நெருப்புக் கடவுள். இப்படிச் சொல்பவர் சிலர். நான்கு தலை, அய்ந்து தலை, ஆறு தலை கடவுள்களுக்கு உண்டு. அது மனிதனைப்போல என்பவர்கள் சிலர். சிலர் கடவுளுக்கு உருவம் இல்லை. உருவம் இல்லையென்றால் ஆண் கடவுள் பெண் கடவுள் என்பது பொய்.
ஆக, உருவம் உள்ள கடவுளை வணங்குகிறவர்களைப் பார்த்து உருவமற்ற கடவுளை வணங்குகிறவர், உங்கள் கடவுள் இல்லை என்கிறார். எனவே, கடவுளை நம்புகிறவனே இன்னொருவர் கடவுளை இல்லையென்கிறான்.
இப்படி கடவுள் என்பது பலவிதமாகச் சொல்லப்படுவதிலிருந்தே அது உண்மையல்ல என்பது உறுதியாகிறது. மனிதன் தன் விருப்பத்திற்கும், எண்ணத்திற்கும், சூழலுக்கும் ஏற்பவே கடவுளை உருவாக்குகிறான். எனவே, கடவுள் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டதேயன்றி அப்படியெதுவும் இல்லை.
மீனவர்கள் கடலைக் கடவுள் என்கிறார்கள். உழவர்கள் சூரியனைக் கடவுள் என்கிறார்கள். வீரர்கள் வீரத்தைக் கடவுள் என்கிறார்கள்; செல்வர்கள் பணத்தைக் கடவுள் என்கிறார்கள்; தொழிலாளிகள் தனக்குப் பயன்படும் கருவிகளைக் கடவுள் என்கிறார்கள்; அதைப்போல் படிப்பாளிகள் கல்வியைக் கடவுள் என்கிறார்கள்.
ஆக, தனக்கு அடிப்படையானதை மனிதன் மதிக்கிறான். அதன் உச்சமாக அதை வழிபடுகிறான். அது கடவுளாக்கப்படுகிறது. இவையே உண்மை! இந்த அடிப்படை உண்மையை பிஞ்சுகள் நெஞ்சில் பதிக்க வேண்டும்.
இது ஆயுத பூசை, சரஸ்வதி பூசை நேரம். தொழிற் கூடங்களிலும், கல்விக் கூடங்களிலும் படையல் போடுவார்கள். உங்களையும் கூப்பிடுவார்கள்; கும்பிடச் சொல்வார்கள். ஆனால்,இவை கடவுள்களா? சிந்திக்க வேண்டும். நமக்குப் பயன்படுபவை அவ்வளவே. நாம் அவற்றை வணங்குகிறோம் என்பது அக்கருவிகளுக்கோ அல்லது அந்த புத்தகங்களுக்கோ தெரியுமா? தெரியாது அல்லவா? அவை வெறும் அச்சிட்ட தாள்கள், வார்த்த, வடித்த, உருவாக்கிய கருவிகள் அவ்வளவே! எனவே அவற்றை வணங்குதல், அவற்றிற்கு பூசை, படையல், வழிபாடு என்பவையெல்லாம் அறிவுக்கு உகந்த செயலா? என்பதை பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நம் முன்னோர்கள் படையல் போட்டார்கள். நாமும் படையல் போடவேண்டும் என்று எண்ணுவது தவறு. நம் முன்னோர்கள் செய்ததையெல்லாம் நாம் செய்வதில்லை. நம் முன்னோர்கள் சிண்டு வைத்திருந்தார்கள், கோவணம் கட்டி நின்றார்கள். நாமும் அப்படி செய்கிறோமா?
நம் முன்னோர்கள் கட்டை வண்டியில் சென்றார்கள். நாம் செல்வோமா? நம் முன்னோ ருக்கு கம்ப்யூட்டர் தெரியுமா? வானொலி, தொலைக்காட்சி, தொலைப்பேசி தெரியுமா?
அவர்கள் காலத்தில் அவர்கள் சிந்தனைக்கு அவர்கள் செய்தார்கள். நாம் நம் சிந்தனைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்ப நாம் செய்ய வேண்டும்.
அறிவுக்கு உகந்ததை ஏற்று ஒவ்வாததை உதறித்தள்ளி வாழ்வதே அறிவுள்ள, கற்ற, தெளிவுள்ள மனிதர்க்கு அழகு.
கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்றால் நம் தாத்தாவிற்கும், கொள்ளுத் தாத்தாவிற்கும் ஏன் கல்வியை அது கொடுக்கவில்லை. ஆரிய பார்ப்பனர்களுக்கு மட்டும் ஏன் கொடுத்தது? கடவுள் என்றால் அப்படிச் செய்யுமா? சிந்திக்க வேண்டும்.
பெரியார் போராடித்தான் நமக்கு கல்வி கிடைத்தது. எனவே, கடவுளை மறக்க வேண்டும்; மனிதர்களை நினைக்க வேண்டும்; பெரியாரைப் பின்பற்ற வேண்டும்!
- சிகரம்

Friday, November 2, 2012

ஒரு சிறுமியின் புரட்சி



நான் மலாலா, நானும் மலாலாதான் என்னும் குரல் கேட்கிறது உலகெங்கும். மடோனா, ஏஞ்சலினா ஜூலி போன்ற உலகப் புகழ்பெற்ற பெண் கலைஞர்கள் முதல் சாதாரணமான ஆட்கள் வரைக்கும் மலாலாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஒரு நடிகருக்கு, ஒரு அரசியல் புரட்சியாளருக்கு, ஒரு விளையாட்டு வீரருக்கு இதுபோல உலகம் முழுவது மிருந்து ஆதரவுக் குரல்கள் வந்திருக்கும். ஆனால் ஒரு சிறுமிக்கு, இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை. யார் இந்த மலாலா-? ஏன் இவ்வளவு பேர் மீண்டும் மீண்டும மலாலா, மலாலா என்கிறார்கள்.
*****
மலாலா யூசுப்சாய் _1997 ஜூலை 12ஆம் நாளில் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பிறந்தவர். இப்போது அவருக்குப் பதினைந்து (15) வயது. கடந்த அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட மலாலா, இப்போது லண்டன் மருத்துவமனையில் உடல்நலம் தேறி வருகிறார். பயங்கரவாதிகள் திட்டமிட்டு ஒரு 15 வயதுச் சிறுமியைக் கொல்ல முற்பட வேண்டியதன் காரணம் என்ன?
நம் நாட்டில் இன்று நல்ல மதிப்பெண் அதிகமாக வாங்குவது யார் என்று பார்த்தால், பெண்கள் என்றுதான் பதில் வரும். ஒவ்வொரு ஆண்டும் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெண்களின் தேர்ச்சி விகிதமும், முதல் இடங்களுக்கு அவர்களின் போட்டியும் அவர்கள் பெறும் மதிப்பெண்களும்தான் அதிகம் என்று அண்மைக்கால வரலாறு சொல்கிறது.

நம்மைப் பொறுத்தவரையில் பெண்கள் படிப்பது என்பது ரொம்ப சாதாரணமான ஒன்று என்று நமக்குத் தோன்றும். இப்படித்தான் எப்போதும் இருந்திருக்கும்போல என்று நினைக்கக் கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. நம் நாட்டில் பெண்கள் மட்டுமல்ல, எல்லா சமூகத்து ஆண்களும் நினைத்ததை நினைத்தவாறு படிக்க முடியாது என்ற கொடுமையான நிலை இருந்தது.

பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவர்கள். அவர்கள் படிக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற கருதி, பெண்களைப் படிக்க அனுமதித்ததில்லை நம் நாட்டில். இந்நிலை மாற வடநாட்டில் மகாத்மா ஜோதிபாபூலே போன்றவர்கள் செய்த பணியும், தென்னாட்டில் தந்தை பெரியார் செய்த பணியும் மிகப்பெரியது.   ஊர் ஊராகப் பேசிப் பேசித்தான் பெண்களைப் பள்ளிக்கு அனுப்பவேண்டும், படித்தால் நல்ல இடம் பிடிக்க முடியும் என்று புரியவைத்து, தைரிய மூட்டியதன் விளைவுதான் இன்று பெண்கள் அதிக அளவில் நம் நாட்டில் படிக்கிறார்கள். பட்டம் பல பெற்று, பதவி பெற்று எல்லைதாண்டி வெற்றியடைந்திருக்கிறார்கள்.

பெண்களைப் படிக்கவிடாமல் தடுத்தது எது? மதம். மதங்கள்தானே மனிதனை இன்னும் சிந்திக்கவிடாமல் வைத்திருக்கின்றன. உலகின் பல பகுதிகளில் இன்றும்கூட மதவாதம் மத அடிப்படையிலான விசயங்கள் மக்களின் வளர்ச்சியைத் தடை செய்து வைத்திருக்கின்றன.

அப்படித்தான் பாகிஸ்தானில் இஸ்லாமிய மதவாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அந்த மதத்தைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லும் தாலிபான் பயங்கரவாதிகள், பெண்கள் படிக்கக்கூடாது; தெருவில் நடமாடக் கூடாது; காய்கறிக் கடைக்குக்கூட போகக்கூடாது என்று தடை விதித்திருக்கின்றனர். அதை எதிர்த்துப் பேசியதும், எழுதியதும் செயல்பட்டதும்தான் மலாலா சுடப்பட்டதற்குக் காரணம்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஸ்வாட் பகுதியின் மிங்கோரா என்னும் ஊரில் பிறந்தவர். மலாலா யூசுப்சாயின் தந்தை -_ கவிஞர் ஜியாவுதீன் யூசுப்சாய் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி, தோற்று பின்னர் பாகிஸ்தானின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் தாலிபான் படையினரின் மதவாதக் கருத்துகள்மீது ஜியாவுதீன் யூசுப்சாய்க்கு எப்போதும் எதிர்க்கருத்து உண்டு. யூசுப்சாய் என்பது அப்பகுதி பழங்குடி மக்களின் கூட்டமைப்பு ஆகும். ஜியாவுதீனுக்கும் தன் மகள் மீது பெரும் மதிப்பு உண்டு. அதே பற்று மலாலாவுக்கும் உண்டு.

தாலிபான்களின் ஆதிக்கத்தால் தனது கல்வி உரிமை பாதிக்கப்படுகிறது என்று மலாலாவுக்குப் புரியும்போது, அதை எதிர்த்துக் கேட்கும் துணிச்சல் அவளுக்குப் பிறந்தது.

தன் மகள் தன்னிடம் கேட்ட கேள்வியைக் கண்ட ஜியாவுதீன் பெஷாவரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மலாலாவைப் பேசவைத்தார். உலகமே கண்டு நடுங்கும் தாலிபான்களை நோக்கி, என்னுடைய அடிப்படையான உரிமையான கல்வியைத் தடுக்க இந்தத் தாலிபான்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்? என்று கேட்டாள் மலாலா. இந்தக் கேள்வியை மலாலா கேட்டபோது, அவளுக்கு வயது 11.

அடுத்த ஆண்டு உலகப் புகழ்பெற்ற பி.பி.சி. செய்தி நிறுவனம், ஒரு மாணவியே தங்களின் கல்வி குறித்து எழுதினால் நலம் என்று தேடியது. 2009-ஆம் ஆண்டு தொலைக்காட்சி, இசை, பெண் கல்வி ஆகியவற்றைத் தடைசெய்துவிட்ட தாலிபானின் ஆட்சியில் பெண்களின் நிலைபற்றி எழுத ஜியாவுதீனின் பள்ளியில் ஒரு மாணவியைத் தேர்ந்தெடுத்தனர். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தயக்கம் காட்டவே தன் மகளையே எழுத வைத்தார் ஜியாவுதீன்.

தனது 12ஆவது வயதில் பி.பி.சி.யில் ஒரு பள்ளி மாணவயின் டைரிக் குறிப்பு என்ற தலைப்பில் எழுதத் தொடங்கினாள் மலாலா. முதலில் தன்னை யாரென்று அடையாளம் காட்டாமல்தான் எழுதத் தொடங்கினார்.



மலாலா கொடுத்த செய்தியும், அங்கு நடக்கும் கொடுமையும் உலகின் கவனத்தை ஈர்த்தது. சமூகத்திற்கு நம் பங்குக்கு என்ன செய்வது என்று தந்தையுடன் அடிக்கடி பேசிய மலாலாவின் மனது, டாக்டராகும் கனவிலிருந்து அரசியல் துறையில் மக்கள் பணியாற்றும் முடிவுக்கு வந்தது.
தைரியமாகப் பொது இடங்களில் தன் கருத்தைத் தெரிவிக்கத் தொடங்கினாள் மலாலா. பெண் கல்வியின் அவசியத்தையும், கல்வி என்பது அனைவரின் அடிப்படை உரிமை என்றும் பேசினாள். பாகிஸ்தானின் இளம் அமைதிப்பரிசு _ 2011 மலாலாவுக்குக் கிடைத்தது.

மலாலாவுக்கு ஆதரவுக் குரல்கள் பெருகிய நேரத்தில்தான் தாலிபான்கள் அவளது உயிருக்கும் குறிவைத்தனர். சுடப்பட்டாள் மலாலா; உலகம் துடித்தது; மக்கள் எழுந்தனர்.

மலாலாவுக்கு உலகெங்கும் ஆதரவுக்குரல் வெடித்தது.  நான் மலாலா என்று பதாகை தாங்கியடி மாணவ, மாணவிகள் வலம் வருகின்றனர். உலகப் பெரும் தலைவர்கள் மலாலாவைக் காக்கக் குரல் எழுப்பியுள்ளனர்.

இப்போது மலாலா லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குண்டுகள் அகற்றப்பட்டு நிற்கத் தொடங்கியுள்ளார்.

உலகெங்கும் அவள் கால்கள் நடக்கத் தொடங்கும். மலாலா தன் உரிமைக்காக உயிர்துறக்கத் துணிந்தார்.

உலகம் அவளை ஏற்றிப் போற்றுகிறது. கல்வியை நமக்கெல்லாம் வழங்கிய பெரியாரின் பேரன், பேத்திகளான நாமும் மலாலாவை வாழ்த்துவோம். அவரது குரலோடு நம் குரலையும் இணைப்போம்.
- சமா. இளவரசன்

சாமிகளின் பிறப்பும் இறப்பும் - 2

எத்தனை எத்தனை சாமியடா?


சாமிகளில் ரெண்டு வகை உண்டு.
ஒன்று ஏழைச்சாமிகள்.
இன்னொன்று பணக்காரச் சாமிகள்.
ஏழைச்சாமிகளை ஏழைகள் கும்பிடுவார்கள். பணக்காரச்சாமிகளை பணக்காரர்கள் கும்பிடு-வார்கள். பணக்காரச் சாமிகளைக் கும்பிட்டால் நாமும் அவர்-களைப் போல பணக்காரர் ஆகிவிடலாமே என்று ஆசைப்பட்டு ஏழைகளும் கூட்டம் கூட்டமாகப் பணக்காரச் சாமிகளைக் கும்பிடப் போகிறார்கள். ஆனால் பணக்காரர்கள் யாரும் போனால் போகட்டும் என்றுகூட ஏழைச்-சாமிகளைக் கும்பிட வருவதில்லை. அதுகளைக் கும்பிட்டு நாமும் ஏழையாகிவிட்டால் என்ன செய்வது என்று பயம் போலும்.
அதுசரி ஏழைச்சாமி என்றால் யார்? பணக்காரச் சாமி என்றால் யார்?
ஏழை என்றால் யார்? பணக்காரன் என்றால் யார்? என்பது தெரிந்தால் சாமிகளையும் அடை-யாளம் பார்த்துவிடலாம்.
யாரை நாம் ஏழை என்கிறோம்? சொந்த வீடு இல்லாதவர்கள், ஒரு சைக்கிள் கூட இல்லா-தவர்கள், செருப்பு கூட இல்லாதவர்கள், நல்ல வருமானம் காசு இல்லாதவர்கள், தினசரி மூணு வேளையும் சாப்பாடு கூட சரியாகக் கிடைக்கா-தவர்கள். இவர்களைத்தான் ஏழைகள் என்கிறோம்.
யாரைப் பணக்காரர்கள் என்கிறோம்? சொந்-தமாகப் பெரிய வீடு, பங்களா, கார்வசதி உள்ள-வர்கள், வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் தினசரி மூக்குப்பிடிக்க சாப்பிட வசதி உள்ளவர்-கள், பெட்டி பெட்டியாகப் பணம் வைத்திருப்பவர்கள், பேங்க்கில் நிறையக் காசு வைத்திருப்பவர்கள் இவர்களைத்தான் பணக்-காரர்கள் என்கிறோம்.
இப்பொழுது நம் ஊர்களில் உள்ள சாமிகளைப் பற்றி எண்ணிப் பாருங்கள். ரோட்-டோரம் நடுகல்லாக உள்ள சாமிகள், சின்னக் கிராமங்-களில் கோயில் இல்லாமல் சும்மா வெறும் கல்லாக நிற்கும் சாமிகள், பீடமாகக் கட்டி வெயிலிலும் மழையிலும் கூரைகூட இல்லாமல் நிற்கும் சாமிகள்; இந்த சாமிகளுக்கெல்லாம் சொந்த வீடு இல்லை அல்லவா? தினசரி பூஜை செய்து அதுகளுக்குப் படையல் பொங்கல், சுண்டல் யாரும் தருவதில்லை.
வருசத்தில் ஒருநாள் இந்தச் சாமிகளுக்கு திருவிழா நடக்-கும். அப்போதுதான் இந்தச் சாமிக-ளுக்குச் சாப்-பாடு கி-டைக்கும். மத்த நா-ளெல்லாம் இந்தச் சாமி--கள் பட்டினி-தான். நம் ஊர்-களில் வெயி-லில் கிடக்கும் இந்த மாரி-யம்மன், காளி-யம்மன், மாடன், காடன், இசக்கி, சங்கிலிக்-குப்பன், பூதத்தான், தீப்பாஞ்ச அம்மன், கும்பா-ளம்மன், நாட்ட-ராயன், கம்பராயன், கருப்பராயன், முனியப்பன், பெரியாண்டவர், பெரியாண்டிச்சி, மதுரை வீரன், அய்யனார், குட்டியாண்டவர், ஏழு கன்னிமார், மாத்தையன், அய்கோர்ட் ராஜா, கவர்னர் பாடிகாட் என்றும் இன்னும் இதுபோலவும் ஏராளமான ஏழைச்சாமிகள் நம் ஊர்களில் இருக்கிறார்கள். எண்ணி முடியாது. ஒரு மாவட்டத்துக்கு நூறு சாமியாச்சும் இருக்கும். இவர்களுக்கு வாகன வசதியும் கிடையாது.
இன்னொரு புறம் பெரிய பெரிய கோபுரங்கள், பிரகாரங்களோடு கூடிய பெரிய்ய கோவில்கள், உயரமான சர்ச்சுகள் இருக்கின்றன. அவற்றுக்குள்ளே கர்ப்பக்கிரகத்துக்குள்ளே, பீடத்திலே இருக்கும் பணக்காரச் சாமிகள் அவர்களுக்கு தினசரி பூஜை உண்டு, சுண்டல் உண்டு, அப்பம் உண்டு, இந்தச் சாமிகள் பிரயாணம் _ சுற்றுலா செல்ல அலங்காரமான தேர்கள் சப்பரங்கள் என்று வாகனங்களும் உண்டு.
இந்தச் சாமிகளின் கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்கள் நிரம்பி வழியும். இதெல்லாம் நிறைய காசுள்ள பணக்காரச்சாமிகள், சிவன், கிருஷ்ணன், பெருமாள், ஏசு, அல்லா(உருவமில்லாத சாமி), மாதா, காமாட்சி, மீனாட்சி, சுப்பிரமணியர் என்று பல பேர்களில் இந்தச் சாமிகள் நம் ஊர்களில் கொலு வீற்றிருக்கின்றன.
ரொம்ப காலம் ஏழையாகவே இருந்து திடீர்ப் பணக்காரர் ஆகி-விடும் சாமிகளும் ஒன்றி-ரண்டு இருக்கும். அதைக்-கும்பி-டுகிற மக்கள் கொ-ஞ்சம் வசதி வந்து-விட்-டால் தங்-கள் சாமி-களையும் நல்-லா கவனிப்-பார்-கள் அல்-லவா? ஆதி-ப-ராசக்தி, கொல்லூர் -_ மூகாம்பிகை போன்றவை சில உதாரணங்கள்.
சாமிகளில் எப்படி ஏழை _ பணக்காரர் வித்தி-யாசம் வந்தது?
இதுமட்டுமல்ல, சாமிகளில் சாதி வித்தியாசமும் உண்டு. மேல் சாதிச்சாமிகள், கீழ்ச்சாதிசாமிகள் என்றும் உண்டு. பொதுவாக மேலே குறிப்பிட்ட ஏழைச்சாமிகள் எல்லாமே கீழ்ச்சாதி என்று ஒதுக்கப்பட்ட மக்களால் வணங்கப்படும் சாமி--க-ளாகும். எனவே அந்தச் சாமிகளும் ஆட்டோ-மேட்டிக்காக கீழ்ச்சாதிச் சாமிகளாகி-விட்டன.
சாதிகளில் உயர்ந்த சாதி எனப்படும் சாதியார் இக்கீழ்ச்சாதிச் சாமிகளைக் கும்பிட மாட்டார்கள். இச்சாமிகளின் பெயர்களை தம் பிள்ளை-களுக்குச் சூட்டவும் மாட்டார்கள். சுடலைமாட அய்யங்கார் என்றோ கருப்பணசாமி அய்யர் என்றோ முனியப்ப ஆச்சாரியார் என்றோ உலகத்தில் யாருக்கும் பேர் இருக்காது.
மனிதனை விட சாமி உயர்ந்தவர்தானே? அப்படி-யானால் எந்தச் சாதிக்காரர் ஆனாலும் எல்லாச் சாமி பேரையும் பிள்ளைகளுக்கு வைக்க வேண்டும்தானே? ஆனால் நம் ஊர்களில் யாரும் அப்படி வைப்பதில்லை அல்லவா?
சாமிகளைப் பெத்து வளர்த்தது மனிதர்கள். ஆகவே மனிதர்களிடம் உள்ள எல்லா கூத்துக்களும் சாமிகளிடமும் இருக்கும். அடடா... குழப்பமாக இருக்கே! மனிதர்களைப் படைத்ததுதானே சாமி. நீங்க சாமிகளைப் படைத்தது மனிதன் என்று சொல்கிறீர்களே?
சரி, சில சாமிகள் பிறந்த கதையை இப்போது பார்ப்போம். அதற்குப் பிறகு நாம் இந்தக் கேள்விக்கு மறுபடியும் வருவோம் சரியா?
முதலில் மதுரை வீர சாமியின் கதையைப் பார்ப்போம். மதுரைப்பக்கம் ஒரு முந்நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதன்தான் மதுரைவீரன். அவர் சக்கிலியர் எனப்படும் அருந்ததியர் சாதிக்காரர். சக்கிலியர் என்றால் உங்களுக்குத் தெரியும்தானே? கக்கூஸ் சுத்தம் செய்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது, நாம் இருந்து வைக்கும் மலத்தை அள்ளிச் சென்று ஊருக்கு வெளியே கொட்டுவது, செருப்புத் தைப்பது, சுடுகாட்டில் பிணங்களை எரிப்பது போன்ற வேலைகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. மிக மிக முக்கியமான இந்த வேலைகளைச் செய்கிறவர்கள் இந்தச் சக்கிலியர் சாதிக்காரர்கள்தான்.
ஆனால் இவர்களை நாம் மதிப்பதில்லை. அடுத்தவர் இருந்து வைத்த அசிங்கத்தில் நாம் தெரியாமல் காலை வைத்துவிட்டால் அச்சச்சோ என்று ஓடிப்போய் காலை உடனே கழுவப்போகிறோம். ஆனால் ஊரார் எல்லாருடைய மலத்தையும் சுத்தம் செய்கிற இந்த சக்கிலியர் உண்மையில் எவ்வளவு பெரிய மனசுக்காரர்கள்! நான் மாட்டேன் போ என்று இவர்கள் சொல்லி-விட்டால் என்ன ஆகும்.
ஊரே நாறிப்போகு-மல்லவா? அப்படிப்பட்ட புனிதமான இவர்களை நமக்கு ஆய் கழுவி சுத்தம் செய்கிற அம்மா மாதிரியான இவர்களை சாதியில் எல்லாம் கடைசியில் கீழே வைத்திருக்கிறோம். எவ்வளவு மோசமான மனிதர்கள் நாம்? இந்த கக்கூஸ் அள்ளும் வேலையும் கூட சிலநூறு ஆண்டுக-ளுக்குமுன் அவர்கள்மீது கட்டாயமாக திணிக்கப்-பட்ட வேலைதான்.
இந்த சக்கிலியர் சாதியில் பிறந்த மதுரைவீரன் உண்மையிலேயே பெரிய வீரன். கள்ளர்களை அடக்கினான். நாட்டுக்குப் பாதுகாப்பாக இருந்தான். அவன் மீது மதுரை மன்னரின் மகள் பொம்மி காதல் கொண்டாள். அய் லவ் யூ சொன்னாள். சரி என்று மதுரை வீரனும் சொல்ல ரெண்டு பேரும் கலியாணம் செய்து கொண்டார்கள். இப்படி ஒரு கீழ்ச்சாதிக்காரன் பொம்மியைக் கல்யாணம் செய்து விட்டானே என்று மேல்சாதிக்காரர்களுக்குக் கோபம். ஆகவே அவனைப் பிடித்துக் கொலை செய்துவிட்டார்கள்.
நாம் எத்தனை சினிமாக்களில் பார்க்கிறோம். காதலிப்பது அய் லவ் யூ சொல்வது. பிடித்திருந்தால் கல்யாணம் செய்து கொள்வது எல்லாம் பெரிய தப்பா? ஆனால் அன்றைக்கு போலீஸ் ஸ்டேசன், சட்டம், நீதி எல்லாமே மன்னர்தான். ஆகவே மதுரை வீரன் மாண்-டான், மக்கள் அழுதனர். காதலிச்சது குற்றமா? இப்படிப் பண்ணிட்-டாங்களே என்று கதறினார்கள். ஆனால் மன்னனை மீறி அன்றைக்கு ஒண்ணும் செய்ய முடியாதல்லவா? எதிர்த்துப் பேசினாலே வெட்டிப் போடுவான்.
ஆகவே மக்கள் யோசித்தார்கள். மதுரை வீரனை ஒரு சாமியாக்கி கும்பிட ஆரம்பித்தார்கள். மன்னனால் இப்போது என்ன சொல்ல முடியும்? சாமி கும்பிடுவதை தடுக்க முடியாது. அது சாமி குத்தம் ஆகிப் போகும். மன்னனால் கொல்-லப்பட்ட ஒரு மனிதனை ஏழை எளிய மக்கள் சாமியாக்கிக் கும்பிட்டார்கள். அவர்களின் எதிர்ப்பை அப்படித்தான் அன்றைக்கு காட்ட முடிந்தது. இப்படியாகத்தான் இன்றைக்கு வரைக்-கும் மதுரை வட்டாரத்திலும் தென் மாவட்டங்களிலும் மதுரை வீரசாமி வழிபடப்பட்டு வருகிறார்.
(தொடரும்)
- ச. தமிழ்ச்செல்வன்
Share

Tuesday, July 10, 2012

தகுதி-திறமை-மோசடி:தகர்த்த மாணவன்


-சிகரம்
தகுதியும், திறமையும் பிறப்பால் தீர்மானிக்கப்படுவதாக ஒரு மோசடியான கருத்து மக்களிடம் திணிக்கப்பட்டு அது நீண்ட நெடுங்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டும் வந்தது.
ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, உயர்ஜாதி, தாழ்ஜாதி என்று தரம் நிர்ணயிக்கப்பட்டு, உயர்ஜாதிக்கு திறமையும், தகுதியும் அதிகம், தாழ்ஜாதிக்கு அது குறைவு அல்லது இல்லை என்று கூறப்பட்டது.
உடல் உழைப்பு வேலைகளை மட்டுமே செய்ய தாழ்ந்த ஜாதிக்காரனால் முடியும், அவனால் அறிவுசார், நுட்பம்சார், திறமைசார் வேலைகளை, பணிகளைச் செய்ய இயலாது என்று முடிவு கட்டினர். பிரம்மாவே அப்படித்தான் படைக்கிறேன் என்று இக்கருத்தைக் கடவுளோடு முடிச்சுப் போட்டு,  வலுவாக்கினர்.
இதன் நீட்சியால் அப்பன் தொழிலையே பிள்ளை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இதன்வழி கற்றல் என்பது ஒர குறிப்பிட்ட ஜாதிக்கு என்று ஒதுக்கிவிட்டு, மற்ற ஜாதியினர் கற்கக் கூடாது என்று கல்வி மறுக்கப்பட்டனர்.
இதன் விளைவு மிகமிகப் பெரும்பான்மை மக்கள் (90%) கல்வி அறிவு பெறமுடியாமல், விழிப்பும், பகுத்தறிவும் பெறாது காலம் தள்ளினர். இதை எதிர்த்து குரல் கொடுக்கவும், போராடவும் அடித்தட்டு மக்களுக்கு விழிப்பும் இல்லை; துணிவும் இல்லை.
இந்தியாவில் இதை எதிர்த்து குரல்கொடுக்கும் துணிவும், இந்த நிலைக்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு (மூலம் அறிந்து) அவர்களை எதிர்க்கும் நுட்பமும் தந்தை பெரியாருக்கு வந்தது. அவருக்குமுன் இந்த எண்ணமும், துணிவும் சிலருக்கு இருந்தபோதிலும், அதைச் செயல் வடிவமாக்கி, இயக்கமாக்கி, போராடியவர் பெரியார் என்பது வரலாற்று உண்மை.
பிறப்பால் ஜாதியைப்பிரித்து ஒதுக்கி, கல்வி மறுத்ததுபோல, பிறப்பால் பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கும் கல்வி மறுத்தனர். இதன் வழி மக்களில் 50% பேருக்கு கல்வி மறுக்கப்பட்டு, அவர்கள் சமையலறைக்குள் ஒடுக்கப்பட்டனர்.
பெரியார் அப்படிப்பட்ட பெண்களும் விழிப்பு பெற, உரிமை பெற, ஆணுக்கு நிகராய் அனைத்தும் பெற முதன்முதலில் போராட்டம் நடத்தினார், பரப்புரையாற்றினார், விழிப்புண்டாக்கினார். இதனால் பயன்பெற்ற பெண்கள்தான் பெரியார் என்ற பட்டத்தையே அவருக்குக் கொடுத்தனர்.
ஆக, ஆரியப் பார்ப்பனர்களைத்தவிர மற்ற ஜாதியினருக்கும், ஒட்டுமொத்த பெண்களுக்கும் கல்வி அறிவு பெறவும், உயர்பதவி பெறவும் தகுதியில்லை என்று சாத்திரப்படியும், சட்டப்படியும் கட்டாயக் கருத்துத் திணிப்புச் செய்தனர் ஆரியப் பார்ப்பனர்கள்.
கல்வியளித்து, இடஒதுக்கிடு கொடுத்தால் ஒடுக்கப்பட்ட ஜாதிமக்களும், பெண்களும் உயர் ஜாதியினரைவிடப் பெரும் சாதனைப் புரிவர் என்று எடுத்து விளக்கினார் பெரியார். அதற்காக பெரும் போராட்டங்களையும், பெரும் மாநாடுகளையும் நடத்தினார். மக்கள் எழுச்சியை வைத்து சட்டத்திருத்தம் செய்ய வைத்தார். எல்லோருக்கும் கல்வி என்பதும் இடஒதுக்கீடு என்பதும் நடப்புக்கு வந்தது.
இதன் விளைவாய் படிப்பு வராது என்று ஒதுக்கப்பட்ட மக்களெல்லாம் நன்றாகப் படிக்கின்றனர்; நிறைய படிக்கின்றனர். திறமை இல்லா ஜாதியினர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் எல்லாம் இன்று எண்ணற்ற சாதனைகள் புரிந்து வருகின்றனர்.
அடுப்பூதும் வேலையே பெண்களுக்கு என்று அடைக்கப்பட்ட நிலைமாற்றி, ஆண்களுக்கு நிகராய் இன்று பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதிக்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளை கணக்கில் கொண்டு ஆய்வு செய்தால் கல்வியிலும், மற்ற வேலைவாய்ப்புகளிலும், ஆட்சிப்பணிகளிலும் ஆரியப் பார்ப்பனர்களைவிட அதிகம் சாதிக்கின்றவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களேயாவர். அதேபோல் ஆண்களைவிட பெண்களே பெரிதும் சாதிக்கின்றனர்.
மாநில அளவில் முதல் மதிப்பெண் ஆரிய பார்ப்பன மாணவர்கள் பெறவில்லை. மற்ற ஜாதி மாணவர்களே பெறுகின்றனர். அதிலும் ஆண்களைவிட பெண்களே பெறுகின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாய் பெண்களே முதல் மதிப்பெண் பெறுகின்றனர். ஆண்களின் தேர்ச்சி விழுக்காட்டைவிட பெண்களின் தேர்ச்சி விழுக்காடே அதிகம் உள்ளது.
பிஞ்சுகளுக்கு இவற்றையெல்லாம் ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், பிறப்பால் நாம் தாழ்ந்தவர் என்று எந்தப் பிள்ளையும் தாழ்வு மனப்பான்மை கொள்ளக்கூடாது. பிறப்பால் அறிவும், திறமையும் தீர்மானிக்கப்படுவதில்லை. வாய்ப்பாலும், உழைப்பாலுமே தீர்மானிக்கப் படுகிறது. எனவே, கிடைக்கும் வாய்ப்பை, திறமையாகப் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும்.
இந்த ஆண்டு தேர்வு முடிவுகளையும், இந்த ஆண்டு நீதித்துறை தேர்வு முடிவுகளையும் கணக்கில் கொண்டு பார்த்தால் இந்த உண்மையை எல்லோரும் அறியலாம்.
பிஞ்சுப் பிள்ளைகளுக்கு இந்த நம்பிக்கையை ஊட்ட வேண்டியது பெரியவர்கள் கடமையாகும். பெரியவர்கள் விடுதலை போன்ற ஏடுகளைப் படித்து, அவற்றை பிள்ளைகளும் படிக்கச் செய்து, பிஞ்சு உள்ளத்திலே அஞ்சா நிலையையும், குலையா நம்பிக்கையையும், தெளிவான விழிப்பையும் உண்டாக்க வேண்டும். வருங்கால பெரியார் பிஞ்சுகள் உயர்ந்து சாதிக்க வேண்டும். ஆதிக்கம்  அழிக்க வேண்டும்.
ராஜாபாண்டியின் சாதனை
தகுதியும் திறமையும் பிறப்பால் வருவதல்ல என்பதை நிரூபிக்கும் இந்த ஆண்டு மாணவனாக ராஜபாண்டி உயர்ந்து நிற்கிறார். ஊர் ஊராய்ச் சுற்றும் நரிக்குறவர் சமுதாயத்தில் பிறந்தவர் இந்த ராஜபாண்டி.கிருஷ்ணகிரி அருகே உள்ள வெள்ளிமலையில் தன் தாய் வெள்ளச்சியுடன் வாழ்கிறார்.
ஊசிமணி பாசிமணி விற்பது, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி அன்றாடம் வயிற்றுப்பாட்டுக்கே போராடும் தாய் வளர்த்த ராஜபாண்டி இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வில் பெறற மதிப்பெண் 1200 க்கு 1167.(தமிழ் 190, இங்கிலீஷ் 186, கணிதம் 200, இயற்பியல் 196, வேதியியல் 195,உயிரியல் 200) கல்வி கற்பது குறிப்பிட்ட ஜாதிக்கே உரியது என்ற வன்மம் நிறைந்த பொய்யை உடைத்தெரிந்து சாதித்திருக்கும் மாணவன் ராஜபாண்டியை பெரியார் பிஞ்சுகள் சார்பில் வாழ்த்துவோம்; பாராட்டுவோம்.
Share

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...