Tuesday, August 28, 2018

திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களே, வெற்றிப் பயணம் தொடர்க - தாய்க் கழகத்தின் துணையுண்டு - வாழ்த்துகள்!

உச்சிமோந்து வாழ்த்துகிறார் தமிழர் தலைவர்



திமுக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி.

1944 ஆகஸ்டு 27ஆம் தேதி சேலம் மாநகரில் திராவிடர் கழகம் பிறந்தது. கிட்டதட்ட அதே கால கட்ட நாளில் திமுகவின் தலைவராக பாசமிகு சகோதரர் தளபதி மானமிகு மு.க ஸ்டாலின்  அவர்கள் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டது - எத்தகைய வரலாற்றுப் பொருத்தம்!

'மானமிகு சுயமரியாதைக்காரன்' என்பதையே தனது பெருமித அடையாளமாகக் காட்டிக் கொண்ட, நமது இனமானத் தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரை தமது வாழ்நாள்  வழிகாட்டிகளாகவும், லட்சிய கலங்கரை விளக்கங்களாகவும் கொண்டு இறுதி மூச்சடங்கும் வரை 94 ஆண்டுகள் வாழ்ந்து "வரலாறாகி" விட்டார்!

மறைந்தார் என்பதைவிட நம் நெஞ்சங்களில் நிறைந்தார்; அவரது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளின் உணர்வில் கலந்து, ரத்த நாளங்களில் உறைந்தார் என்பது வரலாறு.

அறிஞர் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்து தலைமை தாங்கி நடத்திய நிலையில், அவரது மறைவு மிகப் பெரிய சோகத்தை 1969இல் ஏற்படுத்தியது; 'இனி என்னவாகுமோ' என்ற அச்சத்தை திராவிடர் இயக்கத்தின் எதிர்காலம் குறித்து உருவாக்கியது.

சோதனைகளை வென்று சாதனைகளாக்கும், ஆற்றல், பொறுப்பேற்று நடத்தும் அளப்பரிய தகுதி மானமிகு கலைஞருக்கே உண்டு என்று தொலைநோக்கோடு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்  கணித்து 'கட்டளை' இட்டு, அவரை முதல் அமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தார்! அந்தக் கணிப்பு சரியானது என்பதை வரலாற்றில் வைர வரிகளாக எழுதினார் மானமிகு கலைஞர். அண்ணா வழியில் அயராது உழைத்தார்; அய்யாவின் வழிகாட்டுதலை ஏற்றார்; உழைப்பின் உருவமானார்; அரை நூற்றாண்டில்  தமிழ்நாட்டையே 'புதிய தமிழ்' நாடாக்கி, வரலாறு படைத்த பின்பே வரலாறானார்; இன்று  அவர் திராவிடர் இயக்க லட்சிய பாடமானார் -  வெற்று இடமில்லை இங்கு! கற்றுப் பயன் பெறுவோர் ஏராளம்!

களத்தில் 14 வயது முதலே இளைஞர் அணியிலிருந்து, செதுக்கப்பட்டவரும், சிறை வாழ்க்கை, தியாகத் தழும்புகளோடு, பல பதவிகளையும் பொறுப்புகளாகப் பார்த்து, 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று வாழ்ந்து காட்டி வருபவருமான எம் அரும் சகோதரர் மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் கலைஞர் வகித்த பொறுப்புக்கு ஒரு மனதாக தி.மு.கழகத்தின் தலைவராக அடலேறுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதும், அதுபோலவே அவர் வகித்த பொருளாளர் பதவிக்கு அக்கட்சியில் 40 ஆண்டுகளாக கலைஞரின் நிழல் போல திகழ்ந்த அவரது அரசியல் மாணவர் அருமைச் சகோதரர் மானமிகு துரைமுருகன் அவர்களும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது! அவர்களுக்குப் பெருங் குடையாக மூத்த நம் இனமானப் பேராசிரியர் (க. அன்பழகன்) அவர்களின் ஆசியோடு பொறுப்பேற்றுள்ள திராவிடர் இயக்கத்தின் 4ஆவது தலைமுறை நாயகர் தளபதி, நான்காம் அத்தியாயத்தைத் துவக்குகிறார்!

கோபாலபுரம் மாணவர் கழகப் பொறுப்பாளராக, திமுகவின் இளைஞரணி மாநில செயலாளராக, மாநிலப் பொருளாளராக, செயல் தலைவராக ஒளி வீசி, இன்று திமுகவின் தலைவராக  கட்சி நீரோட்டத்திலும், சென்னை மாநகர வணக்கத்துக்குரிய மேயராக, சட்டப் பேரவை உறுப்பினராக, அமைச்சராக, துணை முதல் அமைச்சராக, ஆற்றல்மிகு எதிர்க்கட்சித் தலைவராக இயற்கையில் நிகழும் முறையான பரிணாம வளர்ச்சி பெற்றவர் அருமைச் சகோதரர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆவார்!

கட்சியைக் கட்டமைப்பது, ஆட்சி நிருவாகத்தை ஆற்றுலுடன் நிர்வகிப்பது என்பதெல்லாம் அவருக்குக் கைவந்த கலையாக இருப்பதைக் கடந்த காலத்தில் நாடே பார்த்து வியந்திருக்கிறது.

அவரின் அடுத்தகட்ட நகர்வினை நாடே ஆர்வமுடனும், நம்பிக்கையுடனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அவர் மிகுந்த தன்னடக்கமும், தளரா உழைப்பும், உடன் பிறப்புகளின் உணர்வுகளை உணர்ந்து அரவணைத்துச் செயல்படும் பண்பாட்டையும் பெற்றுள்ளவர்!

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் திராவிடர்  இயக்க சித்தாந்தம் - பகுத்தறிவு சுயமரியாதைக் கொள்கைகளை கட்டிக் காப்பேன் என்று உறுதி கூறியிருப்பதன் மூலம் - திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்க  முழுத் தகுதி உடையவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

திமுகவின் சொத்துக்கள் பற்றி சில ஏடுகள் கணக்கெடுக்கின்றன. உண்மையில் திராவிடர் இயக்கங்களைப் பொறுத்தவரையில், ஏராளமான அசையாச் சொத்துகளும் அசையும் சொத்துகளும்  உண்டு என்பது நமக்கு என்றும் பெருமையானது!

ஆம்! ஏராளமான அசையா சொத்துகள்;

அசையும் சொத்துக்கள் உண்டு, உண்டு!


எவராலும் அழிக்க முடியாத "ஆயிரங்காலத்துப் பயிரான" அந்த திராவிடத்து அசையா சொத்துகள் - கொள்கைகள்! லட்சியங்கள்! சித்தாந்தங்கள்!

அசையும் சொத்துகள் இலட்சோபலட்சம் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளான கடமை வீரர்களும், காணக் கிடைக்காத கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவருமே!

இந்த 'சொத்துகள்' பறிபோகாமல் பாதுகாக்கும் காவலராக, லட்சியப் பணியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து, பதவிகளால் அளக்கப்படுவதைவிட, பணிகளின் சிறப்பால் தூய தொண்டறத்தால் மதிக்கப்படும் தலைமைக்கு இவரன்றோ எடுத்துக்காட்டு என்று, தமது தந்தை - தலைவரை மிஞ்சும் சாதனை வீரராகத் திகழ்ந்து சரித்திரமான 4ஆம் அத்தியாயம் எனும் புதிய பொன்னேட்டை இணைத்திடும் இனமானம் காக்கும் இணையற்ற வீரராக என்றும் திகழ்ந்து, ஆட்சி என்பது காட்சிக்காக அல்ல. இன மீட்சிக்காக என்பதை அகிலத்திற்கு உணர்த்திடும் அரும்பெரும் வீரராக உயர்வார் எனத் தாய் கழகம், உச்சி மோந்து வாழ்த்துகிறது! தாய்க் கழகத்தின் துணையும், அரவணைப்பும் உண்டு - புது வரலாறு படைத்திடுக!



கி.வீரமணி,

திராவிடர் கழகம் தலைவர்

சென்னை

28.8.2018

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...