Thursday, June 7, 2018

நீட்டை ஒழிக்கும்வரை போராடுவோம்! பவளவிழா மாநில மாநாட்டைப் பெருவெற்றியாக்குவோம்!!

திராவிட மாணவர் கழக மாநில, மண்டலப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் சூளுரை

சென்னை, ஜூன் 7- திராவிட மாணவர் கழகத்தின் மாநில, மண்டலப் பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் ஜூன் 6-ஆம் தேதி காலை 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

குடியாத்தம் நகர திராவிட மாணவர் கழகச் செயலாளர் கவிஞர் ம.ஜ.சந்தீப் கடவுள் மறுப்பு கூறிட கலந்துரை யாடல் தொடங்கியது.

சென்னை மண்டல திராவிட மாணவர் கழகச் செய லாளர் பா.மணியம்மை வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து. திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார்.

கும்பகோணத்தில் நடைபெறும் திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட செய்ய வேண்டிய பணிகள், திராவிட மாணவர்களின் தீரமிகு சீருடை அணிவகுப்பு குறித்தும், மாநாட்டின் வெற்றிக்குச் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் உரையாற்றினார். தொடர்ந்து, திராவிட மாணவர் கழக மண்டலச் செயலா ளர்கள் புதுச்சேரி சு.மணிபாரதி, கோவை ராசி.பிரபாக ரன், ஈரோடு ப.வெற்றிவேல், கடலூர் ச.வீரமணி, வேலூர் தே.அ.ஓவியா, திருவாரூர் நாத்திகப் பொன்முடி, மாநில திராவிட மாணவர் கழகத்தின் துணைச் செயலாளர்கள் நா.பார்த்திபன், த.மு.யாழ் திலீபன், ஆ.பிரபாகரன், ச.அஜிதன், அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன், கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

திராவிட மாணவர் கழகத்தின் பவளவிழா மாநாடும், அடுத்து வரவிருக்கும் ஓராண்டும் எவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தவை என்பதையும், நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கான பணிகள் குறித்தும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உரையாற்றினார்.

திராவிட மாணவர் கழகத்தின் வரலாற்றில் குடந்தை யின் தனித்துவம், கட்டுப்பாட்டுடன் பணியாற்ற வேண் டிய கடப்பாடு ஆகியவற்றை பொறுப்பாளர்களுக்கு எடுத்துரைத்தார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன். தொடர்ந்து நீட் தேர்வு மரணங் கள்,பவளவிழா மாநாடு, அமைப்புப் பணிகள், இயக்க ஏடுகளைப் பரப்புதல் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. (தனியே) வேலூர் மண்டலத்தின் சார்பில் முதல்கட்ட கடைவீதி வசூலின் மூலம் கிடைத்த தொகை ரூ.10000-த்தினை மாநாட்டு நிதியாக வழங்கினர். சென்னை மண்டல தி.க.செயலாளர் கொடுங்கையூர் தே.செ.கோபால் ரூ.5000 மாநாட்டு நன்கொடையாக வழங்கினார்.

நிறைவாக, தலைமையுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நீட், புதிய கல்விக் கொள்கை, குருகுலக் கல்வி என தொடர்ந்து மத்திய அரசும், அதை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்சும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும், இவற்றை முறியடிக்க திராவிடர் கழகம் எடுக்கும் தொடர் முயற்சிகளையும் எடுத்துரைத்தார். திராவிட மாணவர் கழகத் தோழர்கள் நடத்தும் மாநாடும், பேரணியும் பேரெழுச்சியை உண்டாக்கிடும் வகையில் அமைய வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தியதோடு வழிகாட்டல் உரை வழங்கிச் சிறப்பித்தார்.

புதுச்சேரி திராவிடர் மாணவர் கழகச் செயலாளர் ஆ.சூரியா நன்றியுரையாற்றினார். கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் கொடுங்கையூர் கோபால், கழகச் சொற்பொழிவாளர் யாழ் திலீபன், தோழர்கள் அமர்நாத், மு.சந்தீஷ், மு.திலீபன், மு.ராகுல், வி.சி.தமிழ்நேசன், இ.ப.சீர்த்தி, இ.ப.இனநலம், செ.பெ.தொண்டறம், இரா.அரவிந்த், கு.பா.கவிமலர்,கு.பா.அறிவழகன், வீ.அறிவரசு, வீ.அன்பரசு, சி.பரசுராமன், விமல்ராஜ், கலைமணி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் எண்:1 - இரங்கல் தீர்மானம்

நீட் தேர்வுக்காக தமிழகத்தைத் தாண்டியும், தொலை தூர மாவட்டங்களுக்கும் அலைக்கழிக்கப்பட்டு அதனால் உயிரிழந்த பெற்றோர் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி, சிங்கம்புணரி கண்ணன் ஆகியோருக்கும், செஞ்சி பெரு வளூரைச் சேர்ந்த பிரதீபா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீட் தேர்வினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் மறைவுக்கும்,  தூய்மையான காற்று, கெட்டுப் போகாத நீராதாரம், நோயற்ற சூழல் வேண்டும் என்ற நோக்கில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் திரண்டெழுந்து போராடிய மக்கள் மீது காவல் துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்ட மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பதினான்கு பேரின் மறைவுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், இவற்றுக்குக் காரணமான மத் திய, மாநில அரசுகளுக்குக் கண்டனத்தையும் இக் கூட் டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 2 -தொடரும் நீட் கொடுமைகள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முழுமனதாக நிறை வேற்றி அனுப்பப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தராமல் காலந்தாழ்த்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், அதற்கு உரிய அழுத்தம் தராத மாநில அ.தி.மு.க. அர சுக்கும் இக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. நீட் தேர்வைத் திணித்ததோடு மட்டுமல்லா மல், அதிலும் தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள் தேர் வாகிவிடக் கூடாது என்னும் தீய நோக்கில், தேர்வுக் கூடங்களை ஒதுக்குதலில் அலைக்கழிப்பு, தமிழில் தரப்பட்ட வினாத்தாளில் திட்டமிட்ட குழப்பங்கள் மூலம் மதிப்பெண் இழக்கச் செய்தல் உள்ளிட்ட கீழ்த்தரச் செயல்களில் இறங்கி, தமிழர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை முற்றாகத் தடுக்கும் மத்திய அரசு, அதற்கு தலையாட்டும் மாநில அரசைக் கண்டிப்பதோடு, நீட் நுழைவுத்தேர்வை முழுமையாக ஒழிக்கும்வரை அனைத் துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து,  மக்கள் மன்றங் களில் விழிப்புணர்வூட்டியும், நீதிமன்றங்களில் சட்டரீதியாகவும் போராட்டத்தைத் தொடருவது என்று இக் கூட்டம் உறுதி பூணுகிறது.

தீர்மானம் எண்: 3 -பவளவிழா மாநாடு

திராவிட மாணவர் கழகத்தின் பவளவிழாவையொட்டி, தமிழர் தலைவர் அனுமதியுடன் ஜூலை 8-ஆம் நாள் குடந்தையில் அறிவிக்கப்பட்டுள்ள மாநில மாநாட்டினை மிகுந்த எழுச்சியோடும், வெகு மாணவர்களைத் திரட்டி யும் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 4 - சீருடை அணிவகுப்பு

பெரியாரை சுவாசிப்போம் என்ற சீருடையுடன் திரா விட மாணவர்கள் பங்கேற்கும் அணிவகுப்பை நேர்த்தியு டனும், இயக்கத்துக்கே உரிய கட்டுப்பாட்டுடனும் மிடுக் குடனும்  அனைவரும் வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 5 - அமைப்பை வலுவாக்குதல்

சமூக நீதி, பகுத்தறிவு, அறிவியல் சிந்தனை வளர்ப்பு, ஜாதி, -மத, -மது, -பதவி உள்ளிட்ட போதைகளிலிருந்து விடுவிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி திராவிட மாண வர்களைத் திரட்டும் வகையில் பிரச்சாரப் பணிகளை அமைத்து, திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநாட்டிலும், அதனைத் தொடர்ந்தும் வலுவான அமைப்பாக திராவிட மாணவர் கழகத்தை அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் உருவாக்கும் வகையில் உழைப் பது என்றும் இக் கூட்டம் உறுதியேற்கிறது.

தீர்மானம் எண்: 6 - இயக்க ஏடுகளைப் பரப்புதல்

தந்தை பெரியாரின் கருத்துக்களை மாணவர்களிடம் எளிமையாக கொண்டு சேர்க்கவும், கொள்கை எதிரிகள், குழப்பவாதிகளின் திட்டமிட்ட பிரச்சாரத்தை முறியடித்து பெரியாரை சுவாசித்து பெரு வாழ்வு பெறவும், இயக்க ஏடுகளை கடைக்கோடி வரை, கொண்டு செல்லப் பாடுபடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயமே!

மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் உயர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நியமனம் குறித்த தகவல் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' (2.6.2018) ஏட்டில் வெளியாகியுள்ளது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் 2005இன் கீழ் நூறு நாள் வேலைத் திட்டமாக 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்' 2005 (என்ஆர்ஜிஇஏ) காங்கிரசு தலைமையிலான மத்திய அரசில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

2005ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய வேலைவாய்ப்பு உத்தரவாத கவுன்சில் அமைக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் உள்ள அனைவருக்கும் நூறு நாள்கள் வேலையை உறுதிப்படுத்துவதற்கான வேலைஉத்தரவாத சட்டம் 2005அய் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க குழு  ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

அக்குழுவில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களை அனைத்து மாநிலங்களிலும் நியமித்து வருகிறது.

'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்' 2005இன் கீழ் நூறு நாள் வேலைத்திட்டத்தைக் கண்காணிப்பது மற்றும் நடைமுறைப்படுத்தும் பணிகளை கவுன்சில் உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும். கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஆர்.எஸ்.எஸ். ஏடான பாஞ்சன்யா இதழாசிரியர், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் மற்றும் ஒரு தொழில்நிறுவன தலைமைச் செயல் அலுவலர் ஒருவர் உள்பட பலர் கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அலுவல் சாரா உறுப்பினர்களாக பல்வேறு மாநிலங்களிலும் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய வேலைவாய்ப்பு உத்தரவாத கவுன்சில் உறுப்பினர்கள் நியமனம்குறித்த அமைச்சக அறி விப்புக்கு எதிராக கடந்த மாதத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்போதைய கவுன்சில் குழு ஓராண்டில் காலாவதியாகும் நிலையில்,   கவுன்சிலில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உறுப்பினர்களின் பணிக்காலம் 20.6.2018 முதல் ஓராண்டுக்கு இருக்கும்.

டில்லியில் அலுவல் சாரா உறுப்பினராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வார ஏடான பாஞ்சன்யாவின் ஆசிரியர் ஹிதேஷ் சங்கர் கவுன்சிலில் பொறுப்பு வகித்து வருகிறார். அவர்தான் கடந்த ஆண்டில் கவுன்சிலின் பணிகளில் முக்கிய பங்காற்றியவர்.

ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் ஆசீஷ் கவுதம் தொடங்கிய திவ்ய பிரேம் சேவா மிஷன் நிறுவனம்போல் தனி நிறுவனமான டிவைன் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் எனும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சதுர்வேதி என்பவரை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிறுவனங்கள் அரித்துவாரில் உள்ள சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனப் பட்டியல்களில் இடம் பெற்றுள்ளதுடன், கார்ப்பரேட் நிறுவன பங்குதாரர்களாகவும் உள்ளவையாகும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவரான ஏக்நாத் ரானடேவால் தொடங்கப்பட்ட இந்து ஆன்மிக அமைப்பாகிய விவேகானந்தா கேந்திரா அமைப்பைச் சேர்ந்த ஜி.வாசுதேவ் கன்னியாகுமரியிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்து தேசம் அமைப்பதற்கான ஆலோசனைக்கான அழைப்பு எனும் தலைப்பில் கூட்டத்தை கடந்த ஆண்டு ராஜஸ்தானில்  அவர் நடத்தியதாக அதன் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது.

கவுன்சிலின் உறுப்பினராக சுதிர் அகர்வால் நியமிக் கப்பட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்தவரான சுதிர் அகர்வால் தன்னார்வ நிறுவனங்களின் கூட்டமைப்பின் நிறுவனத் தலை வரான தன்னைப்பற்றிக் கூறுகையில், இளமைக்காலந்தொட்டே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் (சுயம் சேவக்காக) இருந்துள்ளதாகக் கூறுகிறார். அகர்வால் ஒரு வழக்குரைஞராக சாமியார் ராம்தேவின் வழக்கில் வாதாடியதை தன்னுடைய முக்கிய பணிகளில் ஒன்றாக கூறியுள்ளார். அமைச்சக அறிவிப்பில் தன்னார்வ நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவராகவே அவரைக்  குறிப்பிட்டுள்ளது.

கவுன்சில் உறுப்பினராக விக்ஷூத் முண்ட்கர் என்பவரை அமைச்சகம் நியமித்துள்ளதாக அறிவிப்பில் கூறியுள்ளது. இவர் பெங்களூருவைச் சேர்ந்த ஹூவி ஏர் டெக்னாலஜிஸ் பிரைவேட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும், கூட்டு நிறுவனரும் ஆவார். புனேவைச் சேர்ந்த பிரிமூவ் இஞ்சினியரிங் நிறுவனத்தின் இயக்குநர் சந்தோஷ் ரகுநாத் கொண்டாலேகர். விவசாய கழிவுகளிலிருந்து பையோகாஸ் பிரித்தெடுக்கும் நிறுவனத்தின் இயக்குநர் ஆவார்.

இவரைப் போன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன்  நெருக்கமான தொடர்பு கொண்டவர்கள், பெரும் தொழிலதிபர்கள் ஆகியோரை அலுவல் சாரா உறுப்பினர்களாக அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை கவுன்சில் உறுப்பினர்களாக, அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிப்பதற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பரிந்துரை செய்துள்ளார்.

கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்கப்படும் இவர்கள் அனைவரும் மாநிலங்களின் பிரதிநிதிகளாகவும், பஞ்சாயத்ராஜ் அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் கூடுதலாக செயல்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கவுன்சில் உறுப்பினர்களாக தொடக்கத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அருணா ராய், ஜீன் டிரேஸ், நிகில் டே போன்ற பொருளாதார வல்லுநர்கள்  நியமிக்கப்பட்டார்கள். அவர்கள்தான் வேலை உத்தரவாத சட்ட விதிமுறைகள், கண் காணிப்பு பணிகளை நடைமுறைப்படுத்துவது என்று பிப்ரவரி 2006இல் சட்டம் தொடங்கப்பட்டபோது பணியாற்றியவர்கள் ஆவர். இப்பொழுது எல்லாம் தலைகீழ்தான்!

மத்திய பாஜக அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தின், உயர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரையே நியமித்துள்ளது   அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயமே!

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தாழ்த்தப்பட்டவர் என்பதால் குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?''
தீண்டாமை ஒழிப்புச் சட்டம் எங்கே? எங்கே? குறட்டை விடுகிறதா?


|

சென்னை, ஜூன் 7 இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களும், அவரது துணைவியாரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதைக் கண்டித்தும், மனித உரிமை - தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில் இன்று (7.6.2018) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு இந்தியாவின் முதல் குடிமகனான - முப்படைக்கும் தலைவரான குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் தன் துணைவியாருடன் சென் றுள்ளார்.

குடியரசுத் தலைவராக இருந்தால் என்ன? அவர் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராயிற்றே! ஏற்குமா இந்த சனாதனக் கூட்டம்? எனவே, சாமி' கும்பிட அவரை கோவிலுக்குள் நுழையவே அனுமதிக்கவில்லை.

எந்தப் பதவியில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்றால் கோவிலுக்குள் இடமில்லை என்று கறாராகக் கூறிவிட்டனர். அதன் விளைவு படியில் அமர்ந்து வழிபாடு செய்துவிட்டுப் புறப்பட்டு விட்டார் - 120 கோடி இந்திய மக்களின் முதல் குடிமகன்.

வழிபாடு செய்ய குடியரசுத் தலைவர் கோவிலுக்குள் நுழை யவே அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி எத்தகைய கொடுமை - எவ்வளவுக் கேவலமான ஜாதியின் பெயரால் அவமதிப்பு? ஜாதி ஆணவம்?

குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர் களும், அவர்தம் துணைவியாரும் கோவில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே! கோவிலுக்குள் செல்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே! இதற்குக் காரணம் என்ன? குடியரசுத் தலைவராக இருந்தாலும், அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால்தானே இந்தக் கொடுமை!

இது மன்னிக்கப்பட முடியாத மிகப்பெரிய குற்றமே - தீண் டாமை ஒழிப்புச் சட்டம் என்ன செய்கிறது? இதில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள், நிருவாகிகள் பிணையில் வர முடியாத சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டாமா?

இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினையல்ல - மனித உரிமைப் பிரச்சினை - சட்டத்தின் மரியாதையைக் காப்பாற்றும் பிரச் சினை. எனவே, குடியரசுத் தலைவரையே கோவிலுக்குள் நுழைய விடாததைக் கண்டித்து சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் சார்பில் முதற்கட்டமாக 7.6.2018 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (7.6.2018) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒத்தக் கருத்துள்ள அனைவருடன் இணைந்து திராவிடர் கழகம் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில்....

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்று முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டிருக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.

போராடுவோம் வெற்றி பெறுவோம்!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! போன்ற ஒலி முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் விண்ணதிர முழங்கப்பட்டன.

என தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  திருவள்ளூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வழக்குரைஞர் சைதை சுப்பிரமணி, கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் நிகழ்த்தினர்.

முன்னதாக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன் வரவேற்புரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் இ.ச.இன்பக்கனி, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன், செயலாளர் இரா.விஜயகுமார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற வகையில் இந்திய அரசே சட்டம் கொண்டுவர வேண்டும்




*இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடை செய்வதா?

*தீண்டாமை ஒழிப்புக்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்பட சட்டத் திருத்தம் தேவை!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆவேச உரை - பேட்டி

சென்னை,ஜூன்7ராஜஸ்தானில்கோவிலுக்குள்நுழை வதற்கு இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுமதி மறுத் திருப்பது கண்டிக்கத்தக்கது; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கு வழிவகுக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே திருத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தினார்.

இன்று (7.6.2018) சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:  தேசிய அவமானம்

வேறு கிடையவே கிடையாது!


பாரதீய ஜனதா கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், அஜ்மீர் மாவட்டம் புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள், குடும்பத்தோடு போய் கும்பிடுவதற்காகச் சென்றிருக்கிறார்.

அங்கே அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த வர் என்கிற காரணத்திற்காக குடியரசுத் தலைவரை நாங்கள் உள்ளே அனுமதிக்கமாட்டோம். எந்தத் தாழ்த் தப்பட்டவரையும் நாங்கள் இந்தக் கோவிலுக்குள் அனு மதிப்பதில்லை என்று சொல்லி, குடும்பத்தோடு சென்ற குடியரசுத் தலைவரை தடுத்து நிறுத்தி விட்டனர்.

அதன் காரணமாக, அவமானப்படுத்தப்பட்ட குடிய ரசுத் தலைவர், நமது இந்திய குடியரசுத் தலைவர் வேறு வழியில்லாமல்,  படிக்கட்டுகளில் அமர்ந்து வழிபாடு செய்து திரும்பியிருக்கிறார் என்கிற செய்தி இருக்கிறதே, இதைவிட தேசிய அவமானம் வேறு கிடையவே கிடை யாது.

இந்திய அரசியல் சட்டத்தினுடைய 17 ஆவது விதி, தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்வது எவ்வளவு நடைமுறைப் போலித்தனம் என்பது விளங்கவில்லையா? குடியரசுத் தலைவரையே கூட கோவிலுக்குள் விடவில்லை என்று சொன்னால், ஜாதி வெறி, தீண்டாமைக் கொடுமை இந்த நாட்டில் எவ்வளவு அதிகம் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பெரியாரின் அந்தத் தொலைநோக்கு

எவ்வளவு சரியானது!

இந்திய அரசியல் சட்டப்படி, அவர் நாட்டின் முதல் குடிமகன் என்பது மட்டுமல்ல, அதைவிட முப்படை களுக்கும் அவர்தான் சுப்ரீம் கமாண்டர்!' அவர் ஆணையிட்டால், முப்படைகளும் எந்த நாட்டின்மீதும் படையெடுக்கலாம். அவ்வளவு சக்தி வாய்ந்த ஒருவருக்கு, அரசியல் சட்டம் அதிகாரம் கொடுத்திருந்தும், சனாதனம், இந்துத்துவா சக்திகள் அவரை பிரம்மா கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று சொன்னால், அவர் ஒன்றும் கோவிலுக்குள் சென்று சிலையை உடைக்கச் செல்லவில்லை. அவர் கும்பிடுவதற்காகத்தான் சென்றார் - அப்படிப்பட்டவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று சொன்னால், இந்த நாட்டில், ஜாதி ஒழிப்பு, தீண் டாமை ஒழிப்பு என்பது எவ்வளவு விரைந்து வேகமாக செயல்படவேண்டும் என்கிற பெரியாரின் அந்தத் தொலை நோக்கு எவ்வளவு சரியானது என்பதை நினைத்துப் பாருங்கள்.

எனவேதான், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற சட்டம் இருக்கிறதே, அது அகில இந்தியா முழுவதும் வரவேண்டிய ஒரு சட்டமாகும். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, எல்லா மாநிலங்களுக்கும் வரவேண்டும், எல்லோரும் கட்சி வேறுபாடின்றி, ஜாதி வேறுபாடின்றி அனைவரும் அதனை வரவேற்க வேண்டும்.

இது ஒரு மனித உரிமைப்  பிரச்சினை; கடவுளைக் கும்பிடுகிற பிரச்சினையல்ல. அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக, அவர் எவ்வளவு பெரிய பதவிக்குப் போனாலும்கூட, அவரால் இந்த நாட்டில் கடவுளைக்கூட கும்பிட முடியாது என்று சொன்னால், இதைவிட மானக்கேடு, இதைவிட வெட்கக்கேடு வேறு இருக்க முடியுமா?

இந்தச் செய்தி பெரும்பாலும் மறைக்கப்பட்டு விட்டது. தவறான விளக்கங்கள் சொல்லப்பட்டன. அவருடைய துணைவியாருக்கு மூட்டு வலி அதனால்தான் கோவி லுக்குள் போகவில்லை என்று ஒரு  சமாதானம் சொன் னார்கள். அவருடைய துணைவியாருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னால், இவராவது கோவிலுக்குள் சென்றிருக்கலாம் அல்லவா! அது சரியான சமாதானம் அல்ல.

எனவேதான், உண்மையை மூடி மறைக்கக்கூடாது,. புண்ணை மூடி மறைத்தால், புற்றுநோயை மூடி மறைத்தால் அது ஆளுக்கு ஆபத்து - நாட்டுக்கு ஆபத்து!.

எனவேதான், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்பது எவ்வளவு தலையானது என்பது இந்தச் சம்பவம் மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது.

இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய

மனித உரிமைப் போராளிகள்


ஏற்கெனவே ஜெகஜீவன்ராம் அவமானப்படுத்தப்பட் டார், ராணுவ அமைச்சராக இருந்தபொழுது அது நடந்தது; இப்பொழுது குடியரசுத் தலைவரே அவமானப் படுத்தப்பட்டு இருக்கிறார். மோடி ஆட்சியில் இதற்கு என்ன பதில்? இதைத்தான் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மனித உரிமைப் போராளிகள் கேட்கவேண்டும்.

எனவேதான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம். இங்கே மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.

செய்தியாளர்: தலித் மக்களுடைய பாதுகாவலனாக பா.ஜ.க. இருக்கிறது. பா.ஜ.க. தலைவர்கள் எல்லாம் தலித் வீட்டிற்குச் சென்று சாப்பிடுகிறார்களே, இந்த சம்பவத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

தமிழர் தலைவர்: இந்தக் கேள்வி அவர்களை நோக்கிய கேள்வி. அவர்களிடம் எப்பொழுதுமே இரட்டை வேடம் உண்டு. பேசுநா இரண்டுடையாய் போற்றி! போற்றி!! என்று அண்ணா சொன்னார். அதுபோன்று இரட்டை வேடம் - இரட்டைக் குரல் என்பதற்கு இது அடையாளம். இல்லையானால், இந்த நிகழ்ச்சி நடைபெற்றதற்கு ஒரு வரிடமிருந்தும் கண்டனங்கள் வரவில்லை.

எனவே, இதிலிருந்து அவர்கள், ராம்நாத் கோவிந்த் அவர்களை வாக்கு வங்கிக்காக குடியரசுத் தலைவராக - பொம்மையாகப் பயன்படுத்தி இருக்கிறார்களே தவிர - தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினுடைய விடுதலைக்காக அவரைப் பயன்படுத்தவில்லை என்பது இங்கே அப்பட்ட மாக வெளியாகி இருக்கிறது.

அம்மா ஆட்சி என்று சொல்கிறவர்கள்

உடனடியாக செய்யவேண்டாமா?


செய்தியாளர்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற குரல் தமிழகத்தில் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறது?

தமிழர் தலைவர்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராக வேண்டும் என்பதற்கு உச்சநீதிமன்றத்தில் எந்தத் தடையும் இல்லை. அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி செயல்படுத்தவேண்டும். கலைஞர் கொண்டு வந்த சட்டம் என்றாலும், எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபொழுது அவரும் சட்டமன்றத்தில் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்.

அந்த வழியில் இப்பொழுது இருக்கிற மாநில ஆட்சி - அம்மா வழியில் ஆட்சி - அண்ணா வழியில் ஆட்சி - எம்.ஜி.ஆர். வழியில் ஆட்சி என்று சொல்கிறவர்கள் உடனடியாக இதனை செய்யவேண்டாமா?.

இந்த சட்டம் தமிழ்நாட்டில் இப்பொழுது இருக்கிறது. அனைத்து இந்திய அளவில் நடைமுறைக்குக் கொண்டு வர நாடாளுமன்றத்திலேயே இந்தச் சட்டத்தை நிறை வேற்றவேண்டும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

Friday, May 25, 2018

25 ஆம் தேதி முழு வேலை நிறுத்தம் வெற்றியடைய ஒத்துழைப்பு தாரீர்!

தமிழர்  தலைவர்  அறிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  எதிர்த்து நடத்தப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தை சரியான அணுகுமுறையின்றி, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி  வரலாற்றில் இதற்குமுன் எப்போதும் தமிழ் நாட்டில் நடந்திராத வகையில் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது தமிழ்நாட்டு மக்களிடத்தில் மட்டுமல்ல; மனிதநேயம், மனித உரிமை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் சட்டப்படி எந்தவித விதிமுறை களையும், நியதிகளையும்கூட பின்பற்றாது, ஆலை முதலாளிகளுக்கு அனுசரணையாக மாநில அரசும், காவல்துறையும் நடந்துகொண்ட போக்கு கண்டிக்கத் தக்கதாகும். தூத்துக்குடியை சுடுகாடாக்கும் போக்கிற்கு முடிவு கண்டாகவேண்டும்.

மக்களின் கண்டன உணர்வைப் பதிவு செய்யும் வகையிலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும், தமிழ்நாடு தழுவிய அளவில் நாளை (25.5.2018) அறிவிக்கப்பட்டுள்ள முழு வேலை நிறுத்தத்தை வெற்றியடையச் செய்யுமாறு பொது மக்களையும், வணிகப் பெருமக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.



-கி.வீரமணி,

தலைவர்  திராவிடர் கழகம்.

சென்னை

24.5.2018

தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்தார் கழகத் தலைவர்



திராவிட முன்னேற்ற கழக தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை - சென்னை கோபாலபுரம் இல்லத்தில், 23.5.2018 இரவு 8 மணியளவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து, கலைஞர் எழுதிய சக்கரவர்த்தியின் திருமகன்'', பூந்தோட்டம்'' ஆகிய திராவிடர் கழகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்ட நூல்களை வழங்கினார். கலைஞர்அவர்கள் நூல்களை ஆர்வமுடன் பார்த்தார். உடன் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி .பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், முன்னாள் மத்திய அமைச்சர்  ஆ. இராசா ஆகியோர் உள்ளனர்.

போராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தவே அரசு - காவல்துறை இப்படி நடந்திருக்கிறதா?

ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன்?

ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க எந்தவித விதிமுறைகள், நியதிகளைப் பின்பற்றாமல் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தைப் பார்க்கும்போது இனி போராட்டம், மக்கள் பேரணி என்று நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் - சாவுதான் என்று அச்சுறுத்துவதற்காகவே நடத்தப்பட்டதாகக் கருதவேண்டியுள்ளது என்று தெரிவித்த   திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தூத்துக்குடியில் நிர்மாணிக்கப்பட்ட வேதாந்தா' என்னும் பன்னாட்டு நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது முதலாகவே கடந்த 20 ஆண்டு களுக்குமேல் மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. ஆலையை மூடுமாறு 2010 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் தடையை நீக்கி விட்டது. இந்த ஆலை வந்தபோதே தொடக்கத்தில் மீனவர்கள் போர்க்கொடி தூக்கினர்.

காற்று, நிலத்தடி நீர் உள்படப் பாதிப்பு!

இந்த ஆலையின் கழிவால் காற்று, நிலத்தடி நீர்ப் பெரிதும் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார 14 கிராமப் பகுதி மக்களும் கடும் நோய்க்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த ஸ்டெர்லைட் ஆலை என்பது உலகின் பல நாடுகளாலும் கண்டனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளாகி யுள்ளது.

பல இடங்களில் விரட்டப்பட்ட ஆலை


இந்தியாவில் குஜராத்தில் தொடங்கப்பட இருந்தபோது கடும் எதிர்ப்புக்குப் பிறகு கைவிடப்பட்டது - அதன்பின் கோவா, மகாராட்டிரத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் இந்த ஆலை தொடங்க அறிவிப்பு வந்த நேரத்திலேயே மக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே அங்கிருந்து விரட்டப் பட்ட இந்த ஸ்டெர்லைட் ஊருக்கு இளைத்தது தமிழ்நாடு என்ற இளக்காரத்தின் அடிப்படையில் இங்கே கொண்டு வந்து திணிக்கப்பட்டது.

99 நாள்களாக அப்பகுதி மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டுப் போராடி வருகிறார்கள். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல, ஆலை மேலும் விரிவாக்கம் என்ற செய்தி வருகிறது.

நூறாவது நாளில் மக்கள் பேரணி ஒரு லட்சம் பேர் திரளுவோம் என்று அறிவிப்பு வெளிவந்த நிலையில், தமிழ்நாடு அரசு என்ன செய்திருக்கவேண்டும்?

மக்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, போதிய அளவு உத்தரவாதம் கொடுத்துப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கவேண்டாமா?

தொலைநோக்குப் பார்வை இல்லாதது ஏன்?

ஒரு லட்சம் மக்கள் திரளுகிறார்கள் என்றால், காவல் துறை அதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கவேண்டாமா?

நடந்துள்ளவற்றைப் பார்த்தால், திட்டமிட்ட வகையில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்திருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.

பேரணி தொடங்குவதற்குமுன் நுண்ணறிவு காவல் துறை என்னானது?

பேரணி தொடங்கும் இடத்திலேயே தடுத்திருக்கவேண் டாமா? மக்களை உள்ளே செல்ல அனுமதித்துவிட்டு, காக்கைக் குருவிகளைச் சுடுவதுபோல் அல்லவா வேட் டையாடியுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்துக்குமுன்
பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றாதது ஏன்?

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தவேண்டுமானால், அதற் கென்று வழிமுறைகளும், நடைமுறைகளும் இருக் கின்றனவே. எச்சரிக்கை செய்யவேண்டும்; வானத்தை நோக்கிச் சுடவேண்டும்; சுடுவதற்குமுன் அதற்குரிய அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். இவற்றிற்குப் பிறகும், சுடவேண்டிய அவசியம் ஏற் பட்டால், முழங்காலுக்குக் கீழே சுடவேண்டும் - இவற்றில் எந்த நியதிகளையும் பின்பற்றாது காவல்துறை நடந்திருப்பதைப் பார்க்கும்பொழுது, நாம் ஒரு ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்று உடலைக் கிள்ளிப் பார்க்கவேண்டியுள்ளது.

குறி வைத்து சுட்ட கொடுமை!


வாகனத்தின்மேல் ஏறிக்கொண்டு (காவல்துறை உடை யில்லாதவர்கள்கூட) குறி பார்த்துச் சுட்ட காட்சியைப் பார்த்தபோது குலையெல்லாம் நடுநடுங்கியது. குருதியே உறைந்துவிடக் கூடிய மனிதாபிமானமற்ற  கொடூரமான மனித வேட்டை அது என்பதில் அய்யமில்லை.

அரசு என்ற ஒன்று இருக்கிறதா?

22 ஆம் தேதிதான் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் - தமிழ்நாட்டு மக்கள் கொதி நிலைக்கு ஆளானார்கள்; தலைவர்கள் எல்லாம் கண்டித்து அறிக்கைகளை விட் டனர்.

இவ்வளவுக்குப் பிறகும் மறுநாளும் (நேற்று - 23.5.2018) துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி ஒருவர் கொல்லப்படுகிறார் என்றால், இது என்ன அக்கிரமம் - ஆணவம்!

அரசு ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா? அதன் கையைவிட்டுக் காவல்துறை சென்றுவிட்டதா?

இனி போராட்டம் என்றால் துப்பாக்கிச் சூடு என்று அச்சுறுத்தலா?
நேற்று ஒரு தோழர் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நாயை அடித்துக் கொன்று தரையில் இழுத்து வருவதுபோல, தரதரவென்று இழுத்து வந்த காட்சியைக் கண்டபோது ஏற்பட்ட ஆத்திரத்திற்கு அளவேயில்லை. இனிப் போராட்டம் நடந்தால், இப்படித்தான் நடக்கும் - எச்சரிக்கை என்பதற்காகவோ, ஆலை முதலாளியைத் திருப்திப்படுத்துவதற்காகவோதான் காவல்துறை இப்படி நடந்துகொண்டுள்ளது என்ற கருத்து பொதுவாக மக்களிடையே உருவாகியுள்ளது என்பதைத் தெரி வித்துக் கொள்கிறோம். உளவுத் துறை என்ன செய்து கொண்டுள்ளது என்றும் தெரியவில்லை!

இதற்கிடையே இணைய தளங்களின் செயல்பாட்டை முடக்கி இருக்கிறது தமிழக அரசு. சில தொலைக்காட்சி சேவையையும் முடக்கி இருக்கிறது. நாட்டில் அறிவிக் கப்படாத நெருக்கடி நிலை வந்துவிட்டதா?

அமைச்சர்கள் செல்லாதது ஏன்?


பாதிக்கப்பட்ட பகுதிக்கு முதலமைச்சர் சென்று இருக்கவேண்டாமா? அமைச்சர்களே அந்தப் பக்கம் தலைகாட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டதோ என்று கருதவேண்டியுள்ளது.

டில்லியில்கூட தமிழ்நாடு அரசு இல்லத்தின்முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் வீட்டின்முன் அங் குள்ள தமிழர்கள் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

நிரந்தரமாக மூடுக!


நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என்று மத்திய - மாநில அரசுகள் அறிவிக்க இதுவே சரியான தருணம் - இதில் சுணக்கம் காட்டப்படுமேயானால், மக்கள் போராட்டம் என்பது கலவரமாக எங்கும் பரவக்கூடிய ஆபத்து இருப்பதை அரசு உணரத் தவறக்கூடாது. வருமுன்னர் காப்பது தான் புத்திசாலித்தனம். அரசின் கொள்கை முடி வாக (Policy Decision) அமைச்சரவை கூடி முடி வெடுத்தால், நீதிமன்றங்களும் தலையிட முடியாது.

விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும்!


துப்பாக்கிச் சூடுபற்றி விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி. அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓர்ந்து கண்ணோடாது தீர விசாரித்து அறிக்கையினை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.

தளபதி மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட

தலைவர்களின்மீது வழக்கா?


துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று பார்த்த திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகி யோர்மீது வழக்குத் தொடுத்திருப்பது மிகவும் கண்டனத் திற்குரியது. விநாசகாலே விபரீத புத்தி என்பது இதுதான்!

தலைவர்கள் மீதான வழக்குகளை அரசு திரும்பப் பெறவேண்டும்.

கி.வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

24.5.2018

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...