Friday, May 25, 2018

போராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தவே அரசு - காவல்துறை இப்படி நடந்திருக்கிறதா?

ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன்?

ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று கோரி மக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க எந்தவித விதிமுறைகள், நியதிகளைப் பின்பற்றாமல் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தைப் பார்க்கும்போது இனி போராட்டம், மக்கள் பேரணி என்று நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் - சாவுதான் என்று அச்சுறுத்துவதற்காகவே நடத்தப்பட்டதாகக் கருதவேண்டியுள்ளது என்று தெரிவித்த   திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தூத்துக்குடியில் நிர்மாணிக்கப்பட்ட வேதாந்தா' என்னும் பன்னாட்டு நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது முதலாகவே கடந்த 20 ஆண்டு களுக்குமேல் மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. ஆலையை மூடுமாறு 2010 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் தடையை நீக்கி விட்டது. இந்த ஆலை வந்தபோதே தொடக்கத்தில் மீனவர்கள் போர்க்கொடி தூக்கினர்.

காற்று, நிலத்தடி நீர் உள்படப் பாதிப்பு!

இந்த ஆலையின் கழிவால் காற்று, நிலத்தடி நீர்ப் பெரிதும் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார 14 கிராமப் பகுதி மக்களும் கடும் நோய்க்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த ஸ்டெர்லைட் ஆலை என்பது உலகின் பல நாடுகளாலும் கண்டனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளாகி யுள்ளது.

பல இடங்களில் விரட்டப்பட்ட ஆலை


இந்தியாவில் குஜராத்தில் தொடங்கப்பட இருந்தபோது கடும் எதிர்ப்புக்குப் பிறகு கைவிடப்பட்டது - அதன்பின் கோவா, மகாராட்டிரத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் இந்த ஆலை தொடங்க அறிவிப்பு வந்த நேரத்திலேயே மக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே அங்கிருந்து விரட்டப் பட்ட இந்த ஸ்டெர்லைட் ஊருக்கு இளைத்தது தமிழ்நாடு என்ற இளக்காரத்தின் அடிப்படையில் இங்கே கொண்டு வந்து திணிக்கப்பட்டது.

99 நாள்களாக அப்பகுதி மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டுப் போராடி வருகிறார்கள். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல, ஆலை மேலும் விரிவாக்கம் என்ற செய்தி வருகிறது.

நூறாவது நாளில் மக்கள் பேரணி ஒரு லட்சம் பேர் திரளுவோம் என்று அறிவிப்பு வெளிவந்த நிலையில், தமிழ்நாடு அரசு என்ன செய்திருக்கவேண்டும்?

மக்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, போதிய அளவு உத்தரவாதம் கொடுத்துப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கவேண்டாமா?

தொலைநோக்குப் பார்வை இல்லாதது ஏன்?

ஒரு லட்சம் மக்கள் திரளுகிறார்கள் என்றால், காவல் துறை அதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கவேண்டாமா?

நடந்துள்ளவற்றைப் பார்த்தால், திட்டமிட்ட வகையில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்திருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.

பேரணி தொடங்குவதற்குமுன் நுண்ணறிவு காவல் துறை என்னானது?

பேரணி தொடங்கும் இடத்திலேயே தடுத்திருக்கவேண் டாமா? மக்களை உள்ளே செல்ல அனுமதித்துவிட்டு, காக்கைக் குருவிகளைச் சுடுவதுபோல் அல்லவா வேட் டையாடியுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்துக்குமுன்
பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றாதது ஏன்?

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தவேண்டுமானால், அதற் கென்று வழிமுறைகளும், நடைமுறைகளும் இருக் கின்றனவே. எச்சரிக்கை செய்யவேண்டும்; வானத்தை நோக்கிச் சுடவேண்டும்; சுடுவதற்குமுன் அதற்குரிய அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். இவற்றிற்குப் பிறகும், சுடவேண்டிய அவசியம் ஏற் பட்டால், முழங்காலுக்குக் கீழே சுடவேண்டும் - இவற்றில் எந்த நியதிகளையும் பின்பற்றாது காவல்துறை நடந்திருப்பதைப் பார்க்கும்பொழுது, நாம் ஒரு ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்று உடலைக் கிள்ளிப் பார்க்கவேண்டியுள்ளது.

குறி வைத்து சுட்ட கொடுமை!


வாகனத்தின்மேல் ஏறிக்கொண்டு (காவல்துறை உடை யில்லாதவர்கள்கூட) குறி பார்த்துச் சுட்ட காட்சியைப் பார்த்தபோது குலையெல்லாம் நடுநடுங்கியது. குருதியே உறைந்துவிடக் கூடிய மனிதாபிமானமற்ற  கொடூரமான மனித வேட்டை அது என்பதில் அய்யமில்லை.

அரசு என்ற ஒன்று இருக்கிறதா?

22 ஆம் தேதிதான் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் - தமிழ்நாட்டு மக்கள் கொதி நிலைக்கு ஆளானார்கள்; தலைவர்கள் எல்லாம் கண்டித்து அறிக்கைகளை விட் டனர்.

இவ்வளவுக்குப் பிறகும் மறுநாளும் (நேற்று - 23.5.2018) துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி ஒருவர் கொல்லப்படுகிறார் என்றால், இது என்ன அக்கிரமம் - ஆணவம்!

அரசு ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா? அதன் கையைவிட்டுக் காவல்துறை சென்றுவிட்டதா?

இனி போராட்டம் என்றால் துப்பாக்கிச் சூடு என்று அச்சுறுத்தலா?
நேற்று ஒரு தோழர் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நாயை அடித்துக் கொன்று தரையில் இழுத்து வருவதுபோல, தரதரவென்று இழுத்து வந்த காட்சியைக் கண்டபோது ஏற்பட்ட ஆத்திரத்திற்கு அளவேயில்லை. இனிப் போராட்டம் நடந்தால், இப்படித்தான் நடக்கும் - எச்சரிக்கை என்பதற்காகவோ, ஆலை முதலாளியைத் திருப்திப்படுத்துவதற்காகவோதான் காவல்துறை இப்படி நடந்துகொண்டுள்ளது என்ற கருத்து பொதுவாக மக்களிடையே உருவாகியுள்ளது என்பதைத் தெரி வித்துக் கொள்கிறோம். உளவுத் துறை என்ன செய்து கொண்டுள்ளது என்றும் தெரியவில்லை!

இதற்கிடையே இணைய தளங்களின் செயல்பாட்டை முடக்கி இருக்கிறது தமிழக அரசு. சில தொலைக்காட்சி சேவையையும் முடக்கி இருக்கிறது. நாட்டில் அறிவிக் கப்படாத நெருக்கடி நிலை வந்துவிட்டதா?

அமைச்சர்கள் செல்லாதது ஏன்?


பாதிக்கப்பட்ட பகுதிக்கு முதலமைச்சர் சென்று இருக்கவேண்டாமா? அமைச்சர்களே அந்தப் பக்கம் தலைகாட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டதோ என்று கருதவேண்டியுள்ளது.

டில்லியில்கூட தமிழ்நாடு அரசு இல்லத்தின்முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் வீட்டின்முன் அங் குள்ள தமிழர்கள் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

நிரந்தரமாக மூடுக!


நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என்று மத்திய - மாநில அரசுகள் அறிவிக்க இதுவே சரியான தருணம் - இதில் சுணக்கம் காட்டப்படுமேயானால், மக்கள் போராட்டம் என்பது கலவரமாக எங்கும் பரவக்கூடிய ஆபத்து இருப்பதை அரசு உணரத் தவறக்கூடாது. வருமுன்னர் காப்பது தான் புத்திசாலித்தனம். அரசின் கொள்கை முடி வாக (Policy Decision) அமைச்சரவை கூடி முடி வெடுத்தால், நீதிமன்றங்களும் தலையிட முடியாது.

விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும்!


துப்பாக்கிச் சூடுபற்றி விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி. அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓர்ந்து கண்ணோடாது தீர விசாரித்து அறிக்கையினை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.

தளபதி மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட

தலைவர்களின்மீது வழக்கா?


துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று பார்த்த திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகி யோர்மீது வழக்குத் தொடுத்திருப்பது மிகவும் கண்டனத் திற்குரியது. விநாசகாலே விபரீத புத்தி என்பது இதுதான்!

தலைவர்கள் மீதான வழக்குகளை அரசு திரும்பப் பெறவேண்டும்.

கி.வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

24.5.2018

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...