Monday, October 30, 2017

"பெரியாரை (சு)வாசிப்போம்!" தமிழர் தலைவர் உரை மீதான ஓர் உரையாடல் (2)






தமிழர் தலைவர் உரையைச் செவி மடுத்தவர்கள் தந்தை பெரியார் மீதான தத்துவப் புரிதலுக்கு நமது தலைவர் அவர்கள் இது போன்ற சிறப்புச் சொற்பொழிவுகளை அடிக்கடி நடத்திட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
குவைத்திலிருந்து கழகத் தோழர் செல்ல பெருமாள் தொலைப்பேசியில் பேசுகிறார்: நாங்கள் எங்கள் படிப்பகத்திற்கு "தத்துவ ஞானி பெரியார்" என்று தான் பெயர் சூட்டியுள்ளோம்.
ஆசிரியர் உரையைக் குறுந்தகடாக வெளியிடுங்கள் என்ற கோரிக்கைகள் வெளி வருகின்றன.
நவம்பர் 2,3 ஆகிய இரு நாள்களில் பெரியார் திடலில் மறுபடியும் இரு பொருள்களில் தமிழர் தலைவர், உரை நிகழ்த்தவிருக்கிறார் என்ற மகிழ்ச்சியான தகவலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தந்தை பெரியார் யார்? அவரின் கோபம் எந்த அடிப்படையிலானது? அவர் யாருக்காகப் பேசுகிறார் என்பதை முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய பட்டமளிப்பு விழாப் பேருரையிலிருந்து ஒரு மாணிக்கக் கல்லையெடுத்து ஒளியூட்டினார்.
தந்தை பெரியார், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது, தான் ஓர் அழிவு வேலைக்காரன் என்று சொன்னதை எடுத்துக் காட்டினார் ஆசிரியர்.
உண்மையிலேயே இப்படி ஒருவர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்துவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அதுதான் தந்தை பெரியாரிடத்தில் அளவுக்கு மேல் குவிந்து கிடக்கிறதே!
நீதிபதி ஆசனத்தில் பார்ப்பன நீதிபதி அமர்ந்து இருக்கையில், பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு என்று சொன்ன துணிச்சல் அய்யாவுக்கன்றி வேறு யாருக்குத்தான் வரும்?
"சமுதாயச் சீர்த்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் இடிந்துபோன - துவண்டு போன - ஆடிப்போன பாகங்களைச் சுரண்டி கூறுகுத்தி, மண்ணைக் குழைத்து சந்து பொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அநேகர் கருதி இருக்கின்றார்கள். ஆனால் நம்மைப் பொருத்த வரை நாம் அம்மாதிரி துறையில் உழைக்கும் ஒரு சமுதாய சீர்திருத்தக்காரனல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். மற்ற படி நாம் யார்? என்றால், என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் (மக்கள் சமுதாயம் என்றால் உலக மக்கள் சமுதாயம்) ஏன் சீர் திருத்தப்பட வேண்டிய நிலைமைக்கு வந்தது? என்பதை உணர்ந்து உணர்ந்தபடி மறுபடியும் அந் நிலை ஏற்படாமல் இருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில் அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கின்றபடியால் சமுதாயச் சீர்திருத்தம் என்பதைப்பற்றி மற்ற மக்கள் அநேகர் நினைத்திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கையையும் உடையவராய்க் காணப்பட வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.
இதனாலேயே தான் பலவற்றில் உலக மக்கள் உண்டு என்பதை இல்லை என்றும், சரி என்பதை தப்பு என்றும், தேவை என்பதை தேவை இல்லை என்றும், கெட்டது என்பதை நல்லதென்றும், நல்லது என்பதை கெட்டது என்றும், காப்பாற்றப்பட வேண்டும் என்பதை, ஒழிக்க வேண்டும் என்றும், மற்றும் பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயத்தை கூறுவோராக - செய்வோராகக் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஆனால் நம்போன்ற இப்படிப்பட்டவர்கள் உலகில் நல்ல பெயர் சம்பாதிப்பதும் மதிக்கப்படுவதும் பழிக்கப்படாமல் - குற்றம் சொல்லப்படாமல் இருப்பதும் அருமை என்பது மாத்திரம் நமக்கு நன்றாய்த் தெரியும்."
(குடிஅரசு - 3.5.1931)
என்கிறார் தந்தை பெரியார் உலகத் தலைவர் பெரியாரின் தொண்டு எத்தகையது என்பதை இதன் மூலம் நாம் அறிய முடிகிறது.
தந்தை பெரியார் மேலுக்கு மருந்து தடவும் மருத் துவர் அல்லர். அவர் ஓர் அறுவை சிகிச்சை மருத்துவர் என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டார் ஆசிரியர்.
ஆசிரியராகவே இதனைக் கற்பித்துக் கூறவில்லை. தந்தை பெரியாரே தன்னைப் பற்றி அப்படித் தான் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
"எங்கள் தொண்டு கஷ்டமான வேலை, மக்களுக்குப் பிடிக்காது. எங்கள் வேலை அறுவை சிகிச்சை மாதிரி புண்ணுக்கு மருந்துப் பூசி சவுகரியப்படுத்தலாம் என்பது அல்ல - கொடிய புண் ஆனதினால் கத்தி கொண்டு அறுத்து சிகிச்சை  செய்வது போன்றது ("விடுதலை" 30.10.1960).
"நோயாளியின் புண்ணைக் கிழித்து மருந்திடும் வேலையை டாக்டர் மேற்கொண்டால் அது நோயாளி யின் மீது பழி வாங்கும் எண்ணமில்லை. அது போலவே நமது குறைகள் நீங்க பழிகள் நீங்க பல வேலைகளைச் செய்கிறோம் (விடுதலை 29.1.1954) என்று தந்தை பெரியார் சொன்னது குறித்து ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டபோது "பெரியார் கையிலிருந்த கத்தி தாக்குவதற்கு அல்ல நோயாளியின் உயிரைக் காப்பதற்கு" என்றார்.
தந்தை பெரியாருக்கு இருந்தது மானுடப் பற்று ஒன்றே - வளர்ச்சிப் பற்று ஒன்றே! அதன் காரணமாகத் தான் வேறு எதிலும் அவர் பற்று கொள்ளவில்லை என்பதை நிறுவினார் தமிழர் தலைவர்.
நமது சமுதாயத்தைப் பொறுத்தவரை பிறவியிலேயே வருணத்தைப் புகுத்தியிருப்பதுதான் - பிறவியிலேயே பேதத்தை விதித்து இருப்பது தான் மிகப் பெரிய கேடு.
இது மனிதன் செய்த ஏற்பாடு என்று சொல்லி யிருந்தால் என்றைக்கோ அது ஒழிந்து போயிருக்கும், கடவுள் செய்த ஏற்பாடு என்று நம்ப வைக்கப்பட்டதால், காலம் காலமாக அது  நிலைத்து நிற்கிறது என்று தந்தை பெரியார் கருத்தினைப் பதிவு செய்தார்.
அந்தக் கடவுளைக் காட்டித்தான் நம்மை நம்ப வைத்தனர். அதில் மாற்றம் செய்வது பாவ காரியம் என்று பயப்பட வைத்தனர். எனவே தந்தை பெரியார் அந்தக் கடவுளின்மீதும் கை வைத்தார்.
கடவுளின்மீது அடுக்கடுக்கான வினாக்கணைகளைத் தொடுத்தார் அதன் அஸ்திவாரத்தினை ஆட்டங் காண வைத்தார்.
இதோ பெரியார் பேசுகிறார்.
பகுத்தறிவு கொண்ட மனிதன் சாந்தி, அன்பு, திருப்தி இல்லாமல் கவலையில், அதிருப்தியில் குறையோடு சாவதற்குக் காரணம் கடவுள் அல்லாமல் வேறு என்னவாய் இருக்கக்கூடும்?
அவனவன் முட்டாள்தனம்தான் காரணம் என்றால் பகுத்தறிவு இருப்பது எதற்காக? முட்டாள் தனத்தை உண்டாக்கவா? பகுத்தறிவு இல்லாத ஜீவன்களுக்கு இல்லாத கெட்ட குணங்கள், கவலைகள், குறைபாடுகள் இனவெறுப்புகள், துரோகங்கள் பகுத்தறிவுள்ள ஜீவனான மனிதனுக்கு ஏற்படுவானேன்? பகுத்தறிவற்ற துஷ்ட ஜந்துக்களிடமும் இல்லாத கெட்ட குணங்கள் பகுத்தறிவு உடைய மனிதனிடத்தில் இருப்பானேன்? கடவுளைக் கண்டதாலா? கடவுளைக் கற்பித்துக் கொண்டதாலா? கடவுள் தன்மையை, கடவுள் சக்தியைத் தவறாகக் கொண்டதாலா? எதனால் என்பது பகுத்தறிவுக்குக்கூட எப்படிப் பரிகாரம் செய்து கொள்வது என்பது முடியவில்லையானால், பகுத்தறிவின் பயன்தான் என்ன? கடவுளின் தன்மை தான் என்ன?
கடவுள் எதற்காக? அது மனிதனுக்கு தானாகத் தோன்றியதா? அல்லது வேறு மக்களால் தோற்றுவிக்கப்பட்டதா? தானாகத் தோன்றி இருக்குமானால், ஏன் எல்லோருக்கும் தோன்றவில்லை? தோன்றியவர்களுக்கு ஏன் பலவிதமாய்த் தோன்றப்படுவானேன்?
தோற்றுவிக்கப்பட்டதானால், எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது? எந்தக்காரணத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்டதோ, அந்தக்காரணம் நிறைவேறிற்றா? தோற்றுவித்தவர்கள் வெற்றி கண்டார்களா? கடவுள் காணப்பட்டும், அல்லது கற்பிக்கப்பட்டும் மனிதன் ஏன் கடவுள் தன்மைக்கு, கடவுள் விரும்புகிற தன்மைக்கு மாறாக நடக்கிறான்?
கடவுளால் சர்வமும் நடைபெறுகின்றன. கடவுள் சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளவர் என்பதாக இருந்தும் கடவுளால் என்ன காரியம் நடக்கிறது? எதையும் கடவுள் பெயரைச் சொல்லி மனிதன்தான் செய்கிறான்; கடவுளை அலட்சியப்படுத்திவிட்டு, கடவுளுக்கு இஷ்டமில்லாத காரியம் என்பதைக்கூட மனிதன் செய்கிறான். மனிதனுக்கு வேண்டாததும், மனிதனுக்கு கேடான காரியமும் நடந்தவண்ணமாய் இருக்கின்றன. ஒரு காரியமாவது கடவுள் உணர்ச்சி உள்ள உலகில் பூரணத்துவம்  அதாவது, திருப்தி உள்ளதும் குறைஇல்லாததுமான காரியம் என்பதாகக் காணக் கூடியதாகவே இல்லை. மனித எத்தனப் பாதுகாப்பு இல்லாவிட்டால், வாழ்க்கையில் ஒரு காரியமும் பத்திரப்படாது என்பதோடு  கடவுளுக்குக்கூடப்  பத்திரமில்லை என்றே சொல்லலாம்.
தந்தை பெரியார் தத்துவ விளக்க நூலிலிருந்து இந்தப் பகுதியைத் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டினார்.
பெரியார் தொடுத்த இந்த வினாக்களுக்கு எந்த வேத விற்பன்னர் பதில் சொன்னார்? எந்த சங்கர மடம் பதில் தந்தது சொல்லுங்கள் பார்க்கலாம்.
தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகும் தந்தை பெரியார் சிலைகள் நாட்டில் ஏராளம் திறக்கப்பட்டன. அவற்றின் பீடங்களில் எல்லாம் கடவுள் மறுப்பு வாசகங்கள் செம்மாந்து காணப்படுகின்றன.
இந்தப் புரட்சி, உலக அரங்கில் வேறு எங்கு நடந்திருக்கிறது?
தந்தை பெரியார் கடவுள் மறுப்புப் புரட்சி, உலக நன்மைக்கானது - வளர்ச்சிக்கானது - சுரண்டலின் சூள் அறுக்கக் கூடிய மனித சமத்துவத்துக்கான சகல கூறுகளும் உடையது.
இன்றைக்கு  டெங்குக் காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது ஏராள உயிர்ப் பலிகள் அன்றாடம், அரசாங்கம் என்ன செய்கிறது? டெங்குக்குக் காரணமான கொசுக்களை ஒழிப்பதற்கு மருந்து அடிக்கிறது, எங்கும் தண்ணீர்த் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதமும்கூட விதிக்கிறது!
இதையேதான் தந்தை பெரியாரும் செய்தார் என்று தமிழர் தலைவர் நிகழ்கால நடவடிக்கையோடு ஒப்பிட்டுச் சொன்னது மக்களைச் சிந்திக்க செய்யுமே!
"இந்த நாட்டில் ஜாதி இழிவைப் போக்கப் பாடுபட்டவர்கள் எல்லாம் மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள், மற்றவர்களுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்ல. நானோ மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கிற தண்ணீர்த் தேக்கத்தைக் கண்டு கொசுவை அழித்துத் தடுக்கும் வைத்தியன் போன்றவன்"
- தந்தை பெரியார்
("விடுதலை" 4.11.1961)
தந்தை பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி - சமுதாய மருத்துவர் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

-----------
நமது படம் மூடர் வீட்டில் பூசையில் இருக்க வேண்டுமா?
“மக்கள் நலத்தில் கவலை கொண்டு, பொதுக் காரியத்தில் முனைந்திருப்பவர்கள், சிறிதாவது ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து சாதிக்க வேண்டும் என்று கருதுவார்களேயானால், அவர்களுக்கு முக்கியமான ஒரு யோக்கியதை இருக்கவேண்டும். அதென்னவென்றால், இப்படிப்பட்ட போலிக் கூப்பாடுகளுக்கும் கூலி மாரடிப்புகளுக்கும் மனம் கலங்காமல் இருக்கவேண்டியதேயாகும். மற்றும், ‘நமது கொள்கையைப்பற்றி ஊரார் என்ன நினைப்பார்கள் ? நம்மைப் பற்றி ஊரார் என்ன பேசுவார்கள்?’ என்கின்ற விஷயத்தைப்பற்றி எவ்வளவுக்கெவ்வளவு கவனியாமல், யாவர் அலட்சியமாய் இருக்கின்றார்களோ அவர்களேதாம் அவ்வளவுக்கவ்வளவு புதிய எண்ணங்களையும், புதிய உணர்ச்சிகளையும்,  புதிய  கொள்கைகளையும் மக்களுக்குள் புகுத்தவும், அதைக் காரிய அனுபவத்தில் கொண்டு செலுத்தச் செய்யவும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
உதாரணமாக, நிர்வாணக் கொள்கையை ஒரு நாட்டில் வெற்றிபெற நடத்த வேண்டும் என்று ஒருவன் கருதுவானேயானால் அவன் அக்கொள்கையின் அவசியத்தையும் சரியா, தப்பா என்பதையும் கவனிக்க வேண்டுமேயொழிய, மற்றபடி இக் கொள்கையை எடுத்துச் சொன்னால் மக்கள் என்ன சொல்லுவார்கள் என்று நினைப்பானே யாகில், அக் கொள்கைக்காரன் அந்த வேலைக்குத் தகுதி அற்றவனே ஆவான். நிர்வாணக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தால் பஞ்சாலைத் துணியாலை வியாபாரிகள் எல்லோரும் எதிர்ப் பிரச்சாரத்துக்கு வந்துவிடுவார்கள்; ஜவுளி வியாபாரிகள், ஆலைக் காரர்கள் எல்லோரும் விஷமப் பிரச்சாரத்துக்கு வருவார்கள். இவர்கள் வார்த்தைகளைக் கேட்ட சாதாரண பாமர மக்கள் எல்லோரும் நிர்வாணப் பிரச்சாரகர்கள் மீது கல்லெடுத்துப் போடவும் வருவார்கள். இவற்றைச் சமாளிக்கவோ அல்லது அதன் பயனை அடையவோ தயாராக இருப்பவர்கள்தாம் இந்தப் பிரச்சாரத்தில் புகவேண்டும்; இவர்கள்தாம் வெற்றி பெறக்கூடும். அப்படிக்கில்லாமல், ‘நமது உருவப்படம் மூடர் வீட்டில் பூசையில் இருக்க வேண்டும்’ என்று கருதுகின்றவர்கள் இவ் வேலைகளைச் செய்யச் சிறிதும் தகுதியற்றவர்களேயாவார்கள். ஆதலால், தனக்குள் உறுதியும் அதனால் ஏற்படும் பலனை அனுபவிக்கத் துணிவும் உள்ளவர்களால்தாம் பயன்படத்தக்க மாறுதல்களை உண்டாக்க முடியும் என்றும் அப்படிப்பட்டவர்களால்தாம் உலகில் தலைகீழான மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் எடுத்துக்காட்டுவதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.
- தந்தை பெரியார்,  (‘குடிஅரசு’, 25.12.1932)

சமதர்மம்! -தந்தை பெரியார்


தோழர்களே! இன்று இக்கூட்டத்தில் சமதர்மம் என்னும் பொருள் பற்றிப் பேசும்படியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். சமதர்மம் என்பதற்குப் பல்வேறு தேசங்களிலும், சமு கங்களிலும் பலவேறு அர்த்தத்தில் வழங்கி வருகிறது. சமதர்மம் என்பது சிற்சில இடங்களில் மதத்துக்கும், சில இடங்களில் கடவுளுக்கும், பிறிதும் சில இடங்களில் பணக்காரனுக்கும், புரோகிதனுக்கும் விரோதம் என் றும் கூறப்படுகிறது. ஆனால், பொதுவாக இன்று சமதர்மம் என்னும் சொல் நாட்டிலுள்ள ஏழை மக்க ளின் உள்ளத்திலே கிளர்ச்சியூட்டி ஆவலோடு சமதர்ம மொன்றே தங்களின் வாழ்வை இன்பமயமாக்கும் என் கின்ற மனப்பான்மையை உண்டாக்கியிருக்கிறது. ஆகவே, இன்று சமதர்மத்தை உச்சரிப்பது மிக சகஜமாகப் போய்விட்டது. சமீபத்தில் ராஞ்சியிலும், பாட்னாவிலும் கூடிய சமதர்மவாதிகளால் சமதர்மத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. காந்தியாரும்கூட சம தர்மம் ஆட்சேபகரமான தல்ல என்கிறார். தோழர் ஜவஹர்லால் தான் சமதர்மவாதி என்றும், மக்கள் சமுக நலனுக்கேற்றது சமதர்மம் ஒன்றே என்றும் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். மனித சமுகத்தில் 100-க்கு 90-க்கு மேற்பட்ட பாமர மக்கள், தொழிலாளிகள், பாட்டாளிகள் பூராவும் இன்று இக்கொள்கை வளம் பெறும் நாளை எதிர்நோக்கி நாவூற ஏங்கி கோரி நிற்கின்றனர் என்பது வெளிப்படையான உண்மை.

சமதர்மம் என்றால் சாதாரணமாக பாரபட்சமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு, தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். ஆனால் இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல்கீழ்நிலை இருந்து வருகிறது. இவற்றை ஒழித்து, யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்கு சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம் என்றால் மதக்காரர்களுக்கும் கடவுள் நம்பிக்கை கொண்ட ஆஸ்திகர்களுக்கும் கஷ்டமாயிருக்கிறது. உழைப்பாளி  மக்கள் உடல் வருந்தியுழைத்து பின்னும் குடிக்கக் கூழின்றியும் கட்டக்கந்தையின்றியும், குடி இருப்பதற்கு ஓட்டைக் குடிசைகூட இல்லாமல் பரிதவிக்கும் பொழுது எந்தவிதமான வேலையும் செய்யாது, பணக்காரனாக இருக்கின்ற சந்தர்ப்பத்தால் அக்கிரமமாக அநீதியாக தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டு தான் மட்டும் படாடோபமாக, டம்பாச்சாரித்தனமாக வீண் விரையமாக்குவது சரியல்ல. எல்லோரும் கஷ்டப்பட்டு வேலைசெய்து பலனை எல்லோரும் சமமாக அனுபவிக்கலாம் என்று சொன்னால் அது முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும், ஜமீன்தார், மிட்டாதார் முதலியவர்களுக்கும் விரோதம் என்று வீண் கூக்குரலிடப்படுகிறது. சாதாரணமாக இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலை செய்து சமமாக உண்டு, உடுத்திக் களிப்புடன் வாழ்க்கை நடத்துவதில்லையா? அது போலவே ஒரு கிராமம், ஒரு ஜில்லா ஒரு மாகாணம் அல்லது தேசத்திலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலவும், உள்ள பூமியும் பொருளும் எல்லாம் குடும்ப பொதுச்சொத்து போல் எல்லா மக்களுக்கும் பொதுவாகிய அக்குடும்பத்துக்குச் சொந்தமே அன்றி தனித்தனியாக அவனவன் இஷ்டம் போல் அனுபவிக்கும் தனி உரிமை யாருக்கும் இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கொரு வேலை செய்து உண்டு, உடுத்தி, இன்பவாழ்வு வாழ வேண்டுமென்பது தான் சமதர்மம். மற்றபடி இதில் பயப்படத்தக்க காரியமும் புரியாத காரியமும் இல்லை.

இந்தசமத்துவமானவாழ்க்கைவேண்டுமென்று கூறும்பொழுது சமதர்ம விரோதிகளான மதவாதி களும், ஆத்திகர்களும் துள்ளிக் குதித்து அது கட வுளுக்காகாது; அவனவன் முன்ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்றாற் போல் சுகமான வாழ்க்கையோ கஷ்டமான வாழ்க்கையோ நடத்துகிறான். பணக்காரனாகவோ, ஏழையாகவோ இருப்பது கடவுள் சித்தம், அவர் கடாட்சத்தால் அவனுக்கே தனிவுரிமை கொடுக்கப்பட்டபொருள்களைப்பொதுவுடைமைஆக் கப்படல் அநீதி. கடவுள் கட்டளைக்கு விரோதம் என்றுகூப்பாடுபோடுகிறார்கள்,இன்றைக்குமுனிசிபல் கட்டடத்தையோ, பொது ரஸ்தாவையோ ரயில் வேயையோஎடுத்துக்கொள்ளுங்கள்.இதில்யாருக்கு உரிமையில்லையெனக் கூறமுடியும்? மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவற்றை அனுபவிக் கிறார்களா இல்லையா? இதனால் எந்தக் கடவுளுக்கு, மதத்துக்கு, அல்லது பணக்காரனுக்கு ஆபத்து வந்துவிட்டதாகக் கூற முடியுமா? மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாததான பல வசதிகளையும், சாதனங் களும் வேறொருவரும் அனுபவிக்கக் கூடாது; அந்த சாதனங்களின்றிமற்றவர்கள்கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. எனக்கு தேவை மேலிருந்தாலும், நான் அனுபவிப்பதற்கு வேண்டிய அளவுக்கு மேலிருந் தாலும் அது சும்மா இருந்து வீணாக அழிந்து போவதா னாலும் பிறர் அனுபவிக்க நான் பார்க்கக் கூடாது என்று குறுகிய புத்தியும், கீழான எண்ணமும் சுயநல உணர்ச்சியும் கொண்டவர்களுக்கும் தான் உழைக்கக் கூடாது, உடல் வளையக் கூடாது, ஆனால் பிறமக்கள் உழைப்பதினால் விளையும் பயனைத் தட்டிப் பறித்து அனுபவிக்க வேண்டும் என்னும் சூழ்ச்சிமிக்க சோம் பேறிகளுக்கும்தான் சமதர்மம் கசப்பாகவோ, வெறுப் பாகவோ, விரோதமாகவோ,  இருக்குமே தவிர அவர்கள் இதைப்பற்றி மறுப்பார்களே தவிர மற்றபடி உடலைச் சாராகக் கசக்கிப் பிழிந்து வேலை செய்யும் பாட்டாளி மக்களுக்கு இந்தக் கொள்கை ஒரு நாளும் விரோதமானதல்ல. பெரிதும் சாதகம் செய்யவல்ல வாழ்க்கை நிலைமை உயர்த்தவல்ல ஜீவதாது இது என்று தான் கூற வேண்டும். உலக ஜனத் தொகையில் 100-க்கு 90 பேருக்கு மேற்பட்ட தொழிலாளிகள் பாமர மக்கள் ஆகியவர்களுக்கு அனுகூலமாயிருக்கின்றன. இந்தத் தத்துவத்தை ஞானபுத்தியும், நேர்மையும் நோக்கமும், பரந்த மனப்பான்மையும் கொண்ட அனைவரும் ஆதரித்துத்தான் தீருவார்கள்.

ஏற்றத் தாழ்வுகள் மலிந்த இன்றைய சமுக அமைப்பால், யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ, சாந்தியோ சமாதானமோ உண்டு என்று கூற முடியுமா? ஏழைக்குக் கஞ்சியில்லை, கட்டத் துணியில்லை, இருக்க வீடில்லை ஓய்வில்லை, இல் லாத பிள்ளைக்குக் கல்வி வசதியில்லை என்பன போன்ற பல ஓயாக் கவலையே கவலையாய்ச் சதா வறுமைக் கடலிலே கிடந்துழல்கிறான். பணம் படைத்த பணக்காரர்களுக்கோ இருப்பதைக் காக்க வேண்டும், மேலும் பெருக்கவேண்டும், பிறர் கவராமல் காப்பாற்றவேண்டும், என்னும் கவலையோடு பேராசை மிகுதியால் மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்கவே ஆசைப்படுகின்றார்கள். சாதாரணமாக ஒரு தோட்டி வேலை செய்யும் கீழ்த்தர நிலையில் உள்ளவன் ஆடு, கோழி வளர்த்துக் கொஞ்சம் பணக் காரனாக வேண்டும், பின்னர் கிராம மணியகாரனாக ஆகவேண்டும் என்றெண்ணுகிறான். மணிய வேலை கிடைத்தாலும் தாசில்தாராக வேண்டுமென்று ஆசிக்கிறான். அப்படியானாலும், கலெக்டர் ஆக வேண்டும், கவர்னர் ஆகவேண்டும் வைஸ்ராயாக வேண்டும், ஏக சக்கிராதிபதியாய் உலகாள வேண்டும்; இன்னும் இதற்கு மேல் வேறு உலகங்கள் இருந்தாலும் அவற்றையும் தான் ஒருவனே கட்டி ஆள வேண்டும் என்று கருதுகின்றான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்னவென்றால் கஷ்டப்பட்டு உழைக்காது சுகவாழ்வு நடத்துவதும், தேவைக்கு மேற்பட்ட சொத்துக்களுக்குச் சொந்தக்காரனாக இருப்பதும் ஒரு கவுரவம் என்றும், தனி மதிப்புக்குப் பாத்திரமானது என்றும், கண்ணியமானது என்றும் கருதுகின்ற ஒரு மூட நம்பிக்கையே தவிர வேறில்லை.

இந்த மூடநம்பிக்கையின் பயனாய்த்தான், மனிதன் தேவைக்கு மேற்பட்ட பொருள் போகங்களைத் தானும் அனுபவியாது, பிறரையும் அனுபவிக்க விடாது, வைக் கோல் போரைக் காக்கும் நாய் போல் வாழ்கின்றான். இந்தத் தனியுடைமை வாழ்க்கையில் பல ஆயிரக்கணக் கான, கோடிக்கணக்கான மக்களுக்குப் பயன்படக் கூடிய பல பொருள்கள் சாதனங்கள் வீண் விரையம் செய்யப்படுகின்றன.

உதாரணமாக, மோட்டார் காரை எடுத்துக்கொள் வோம். ஒரு செல்வந்தர் குடும்பத்துக்குத் தனியாக ஒன்று அல்லது மேற்பட்ட கார்கள் வைத்துக் கொண்டி ருப்பது இன்றைய அனுபவம். ஒரு நாளில் சாதாரண மாக ஒரு மனிதனுக்கு 3, அல்லது 4 மணி நேரத் தேவைக்காக உபயோகப்படும் மோட்டார் ஒரு நாளில் 20 மணி நேரம் வீணாக யாதொரு பயனுமின்றி இருக் கிறது. இதில் வீணாக பணம் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலை மாறி பஞ்சாயத்து போர்டு அல்லது முனிசி பாலிட்டிகளில் ஜனத்தொகைக்குத் தக்கவாறு 10, 15, 20 கார்கள் வைத்துக்கொண்டால், பொதுவில் தேவைப்பட்ட நேரங்களில் உபயோகித்துக் கொண் டால், வீணாகப் பணம் முடங்கிக்கிடக்கவேண்டிய தேவையில்லை. இம்மாதிரியான முறைகளை அனு சரிப்பதால் வீண் விரயங்கள் தடுக்கப்பட்டு மக்கள் எல்லோரும் மனித வாழ்வை இன்பமயமாக்கும் பல சாதனங்களையும் அனுபவித்துப் பயன்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்படும். இதற்குப் பாடுபடாது பிறருழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப் பதும், கண்ணியமான, பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை யென்பது தெளிவாக்கப்பட வேண்டும்.
(திருப்பூரில் செங்குந்தர் 12ஆவது மாநாடு செங்குந்தர் 2ஆவது வாலிபர் மாநாடும்

20, 21.05.1934 தேதிகளில் நடந்தபோது இரண்டாம் நாள் மாநாட்டில் சமதர்மம் என்ற தலைப்பில் ஆற்றிய உரை)

- ‘புரட்சி' சொற்பொழிவு - 10.06.1934

Saturday, October 28, 2017

அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (3)



புத்தகங்களை வாங்கிக் குவிக்கும் டாக்டர் அம்பேத்கருக்கு நண்பரான யு.ஆர்.ராவ் (தாக்கர் அன்ட் கோ பதிப்பாசிரியர்) டாக்டர் ஏராளமான புத்தகங்களை வாங்கி, அதற்கே தனது வருவாயில் பெரும் பகுதியைச் செலவழித்து  விடுவது மிகப்பெரிய வியப்பு என்றாலும், இவ்வளவு புத்தகங்களையும் எப்படி இவரால் படித்து முடிக்க முடியும்? புரிய வில்லையே! என்ற கேள்வி அவரது மனதை வெகுநாளாகக் குடைந்துகொண்டே இருந்தது!

ஒரு நாள் இதனைத் தெளிவுபடுத்திக் கொள்ள டாக்டரிடம், ‘‘டாக்டர் நீங்கள் இவ்வளவு புத்தகங்களை வாங்கிக் கொண்டு சென்று, சேர்த்து வைக்கிறீர்களே, இவைகளை  உங்களால் எப்படிப் படிக்க முடிகிறது?’’ என்று ஒரு கேள்வியைக் கேட்டார்!

தனது மூக்குக் கண்ணாடி வழியே என்னை (யு.ஆர்.ராவ்) உற்றுப் பார்த்தார்; பிறகு ஒரு கேள்வி கேட்டார், என்னிடம்,

‘‘படிப்பது  என்றால் என்ன?’’ என்று கேட்டார்.

அதிர்ச்சியடைந்த நான் (யு.ஆர்.ராவ்), கொஞ்சம் தடுமாறிக் கொண்டும், தயங்கிக்கொண்டும், ‘‘ஒரு புத்தகத்தைப் படிப்பது என்றால், பக்க வாரியாகப் படித்து, முதலிலிருந்து கடைசிவரை அதை முடித்த பிறகு, அதைப் புரிந்து, நன்கு செரிமானம் செய்துகொள்வது’’ என்று பதில் கூறினேன்.

உடனே டாக்டர் புன்னகைத்துக்கொண்டே சொன் னார். ‘‘எனது புத்தகப் படிப்பு முறை அதற்குச் சற்று மாறுபட்டது.

சில புத்தகங்களைத் தான் நாம் அப்படி ஆழமாகப் படித்து, உள்வாங்கி, செரிமானம் செய்யும் நிலை உள்ளது; அவை  மிகவும் சொற்பமே! மற்றவை நாம் அறிந்த பல செய்திகளின் தொகுப்புதான். அப்படிப் பட்ட புத்தகங்களில் முக்கிய பகுதிகளைப் படிப்பேன். மற்றவை நமக்கு அறிமுகமான பகுதிகள் - இப்படி செய்தாலே புத்தகத்தைப் படித்து முடித்ததாகப் பொருள்’’ என்றார்.

இதிலிருந்து புத்தக வாசிப்பு என்பது எப்படி சரியான முறையாக அமையவேண்டும் என்பதற்கு பாபா சாகேப் அம்பேத்கர் இலக்கணம் வகுத்து நமக்குப் பாடம் நடத்துகிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

எப்போதும் புத்தகங்களில் எவை ஆழமாகப் படித்துப் பதிய வைக்கவேண்டியவை; எவை ஏதோ கதை வாசிப்பதுபோல வேகமாகப் படிக்கவேண்டி யவை என்று தரம் பிரித்துப் படிக்கும் பழக்கத்தை உடையவர்களாக நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.

ஒரு முக்கியப் பிரச்சினை  - அதன் தேவையும், முக்கியத்துவமும் பற்றிய அந்தப் புத்தகம் எதனை நமக்குப் புதிதாகக் கற்றுத் தருகிறது என்று புரிந்து படித்து நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

வள்ளுவரின்,

நவில்தொறும் நூல்நயம்போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு  (குறள் 783)

இதனை ஆழ்ந்து படித்துப் பொருளை அறிந்தால், திரும்பத் திரும்ப படித்துச் சுவைக்கும் தகுதியுள்ள புத்தகங்கள் போலும்தான்,  எத்தனை முறை பழகி னாலும் இன்னும் அவரிடம் பழகி, அவரது பண்பை நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா என்ற ஆசையினால், உந்தப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று நட்புக்கு இலக்கணம் நல்ல நூல் என்பது எது எப்படிப்பட்ட தன்மையது என்பதையும் விளக்குகிறது.

அதையே டாக்டர் அம்பேத்கர் - குறளைப் படிக்கா மலேயே, தனது பகுத்தறிவு, தனித்த சிந்தனை சமூகக் கவலை, பொதுநலம் - இவற்றில் புத்தகங்களையே சாதாரணமாக படிக்கவேண்டியவை - வாசிக்க வேண்டியவை. சிலவே சுவாசிக்கவேண்டியவை என்று நமக்கு இப்பதிலில் கற்றுத் தருகிறார்.

தந்தை பெரியார் அவர்கள் ஏராளமான புத்தகங்களைப் படிப்பார்.

ஏன் ‘தமிழ் அகராதி’, ‘அபிதான சிந்தாமணி’, ‘அபிதான கோசம்‘ போன்ற பழைய தமிழ்க் களஞ்சியங்களை - நூல்களைப் படித்து ஆய்வுக்குரியதாகவே சில பகுதிகளை மனதிற்கொண்டதோடு, எழுதுவதற்கோ, பேசுவதற்கோ அப்பகுதியை உடனடியாக - நேரத்தை வீணாக்காமல் - கண்டு ஆதாரமாகக் கூறிட - அப்புத்தகத்தின் இறுதியில் உள்ள வெள்ளைத் தாளில் உள்பகுதி - அட்டையிலும் தன் கைப்பட சிறு எழுத்துக்களில் எழுதி வைத்து - ‘‘இராமன் பிறப்பு -பக்கம் 29’’ இப்படி குறிப்பை அந்தந்த புத்தகங்களின் இறுதியில் எழுதி வைப்பார். டாக்டர் அம்பேத்கரின் நூல்களை அய்யா பெரியார் படித்து அப்படி பக்க குறிப்பு வைத்துள்ளார் என்பது மிகவும் வியக்கத்தக்க உண்மை அல்லவா?

புத்தகங்களை படிப்பதில்கூட பல முறைகள் உள்ளன என்பதை இவர்களது புத்தக வாசிப்பின்மூலம் எளிதில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்- இல்லையா?

மழையிலும் கொள்கை உறுதியோடு நடைபெற்ற திருப்பூர் பொதுக்கூட்டம்!




திருப்பூர், அக். 27 மழையிலும் கொள்கை உறுதியோடு  திருப்பூரில் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பகுத்தறிவுப் பகலவன்,உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 139ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட,மாநகர திராவிடர் கழகம் சார்பில் 17.9.2017 அன்று மாலை 6 மணியளவில் திருப்பூர் வெள்ளியங்காடு, நான்கு சாலை பகுதியில் நடந்தது.

இக்கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் யாழ்.ஆறுச்சாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர கழக தலைவர் இல.பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

இரா.சுப்பையன்( திருப்பூர் 50ஆவது வட்ட மதிமுக செயலாளர்) அ.செந்தில்குமார் (50ஆவது வட்ட கிளை செயலாளர் சிபிஅய்), கோ.பொம்முதுரை (தெற்கு மாநகர குழு உறுப்பினர் சிபிஅய்(எம்), கே.சிவாச்சல மூர்த்தி (திராவிட இயக்கத் தமிழர் பேரவை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இரா.ஆறுமுகம் (மாவட்ட தலைவர்), மு.நந்த கோபால் (50ஆவது வட்ட செயலாளர், திமுக), தம்பி சுப்பிரமணி (முன்னாள் 50ஆவது வட்ட செயலாளர், அஇஅதிமுக) வழக்குரைஞர் எ.ந .கந்தசாமி (மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர், மதிமுக), நா.சேகர் (மாவட்ட குழு உறுப்பினர், சிபிஅய்), சு.சுந்தரம் (மாவட்ட குழு உறுப்பினர், சிபிஅய் (எம்), மு.கண்ணன் (மாவட்ட செயலாளர், பகுஜன் சமாஜ் கட்சி), துரை. தண்டபாணி (மாநகர செயலாளர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை), அனுப்பட்டி. பிரகாஷ் (மாவட்ட செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), அங்ககுமார் (பெரியார் தொண்டர்) ஆகியோர் உரை யாற்றினார்கள். ச.மணிகண்டன் (கோவை மண்டல கழக இளைஞரணி செயலாளர்) இணைப்புரை வழங்கினார்.

திருப்பூர் விநாயகா குழுமத்தைச் சார்ந்த தொழில் அதிபர் நா.செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
இரா.பெரியார் செல்வன் உரை:

நிகழ்வில் சிறப்புரையாளராகப் பங்கேற்ற கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வம் அவர்கள் உரை யாற்றியதாவது:  இங்கே உரையாற்றிய அனைத்து அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் "தமிழ்நாடு தந்தை பெரியாருக்கு பட்டா போடப்பட்ட மண்" என்பதை பதிவு செய்துவிட்டு அமர்ந்திருக்கிறார்கள்.

பெரியார் பிறவாமலிருந்தால் என்ன நடந்திருக்கும்? நாம் தெருவில் நடக்க முடியுமா? தோளில் துண்டு தான் போடமுடியுமா? பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்,

"ஒரு சமூகத்தை புரட்டிப் போட்ட புரட்சியாளர் பெரியார்". எந்தத் தலைவருக்கும் இல்லாத சிறப்பு பெரியாருக்கு உண்டு! ஒரு கொள்கையை உருவாக்கி, அதற்கு இயக்கத்தை ஏற்படுத்தி, தலைவர் பொறுப்பேற்று, பிரச்சாரம் செய்து தான் ஏற்படுத்திய கொள்கை தன் வாழ்நாளிலேயே வெற்றி பெறுவதை பார்த்த தலைவர் உலகத்திலேயே பெரியார் ஒருவர் தான்! வர்ண பேதத்தால் பார்ப்பனர்கள் மத்தியில் காந்திக்கும், வ.உ.சி.க்கும் ஏற்பட்டிருந்த  இழிவையே ஒழித்து அவர்களுக்கு மனிதன் என்ற உரிமையைப் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பெற்றுத் தந்தது!

தற்போது மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு சாதித்தது என்ன? எந்தத் துறையில் முன்னேற்றம் பட்டியல் போட முடியுமா?  வளர்ச்சிக்கு முன் உதாரணமாக சொல்லப் படுகின்ற பிஜேபி ஆளும் குஜராத்தில் 1500க்கும் மேற் பட்ட கிராமங்களில் சாலை வசதி,மின்சார வசதி, கழிப்பறைகள் இல்லாததோடு குடிசை வீடுகளே அதிகம் என்ற நிலையே உள்ளது.பொய்யை உண்மை என்று சொல்லி ஓட்டைப் பெற்றார்கள்! இந்திய வரலாற்றிலேயே விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொண்டி ருக்கின்ற ஆட்சி மோடி ஆட்சி!

அனிதாவின் சுடர் பிஜேபியின் அடிப்பீடத்தை ஆட்டியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாண வர்கள் மருத்துவர்களாக வரவே கூடாது என்பதற்குத் தானே நீட் தேர்வு! இந்த அநீதியை தமிழகத்திற்குள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதித்தாரா? நுழையவிட்டாரா? தமிழ்நாட்டை ஆளும் தற்போதைய அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களின் அடிப்படையில் மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? எந்த மாநிலம் நுழைவுத் தேர்விலிருந்து விலக்குக் கேட்கிறதோ அம்மாநிலத்திற்கு விலக்குக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை தெரிவிக்கிறதே, அப்படியிருந்தும் "நீட்" தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசு முன் வராதது ஏன்? அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது மத்திய பிஜேபி அரசும் , தமிழ்நாடு அரசும் தான் !தற்போது பேரபாயமாக "நவோதயா" பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் வந்திருக்கிறது.

ஆகவே வெகுமக்களே நாங்கள் உங்களை பணிவோடு கேட்டுக் கொள்வது என்னவென்றால் நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும்,எந்த அமைப்பில் வேண்டு மானலும் இருங்கள்! ஆனால் இது பெரியார் பிறந்த மண்! பெரியார் பண்படுத்திய மண்! சமூக நீதிக்கு வித்திட்ட மண்! இங்கு மதவாத தன்மைக்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது! நம்மிடையே வண்ணங்கள் வேறுபட்டாலும், எண்ணங்கள் ஒன்றுபட்டுள்ளது! பசுவதை என்ற பெயரில் சிறுபான்மை மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஒடுக்க பிஜபி அரசு சதி வலைகளைப் பின்னிக்கொண்டிருக்கிறது.

எனவே இதையெல்லாம் முறியடித்து இம்மண்ணின் மகத்துவத்தை பாதுகாக்க இளைஞர்களே, மாணவர்களே நமக்கு ஒரே வழிகாட்டி, ஒரே தலைவர்,நாம் கையிலேந்தி புறப்படவேண்டிய ஒரே அறிவுச்சுடர் தந்தை பெரியார்!  தந்தை பெரியார் அவர்கள் தன் இறுதிக் காலத்தில்  நீரிழிவு நோயினால் அவதியுற்ற போதிலும்  தமிழர்களே உங்களை சூத்திரர்களாக, பஞ்சமர்களாக விட்டுவிட்டு சாகமாட்டேன் என்று இந்த மக்களின் மீது  சுமத்தப் பட்டுள்ள இழிவுத் தன்மைகளை ஒழிக்கப் போராடினார். எனவே தந்தை பெரியாரின் லட்சியப்பணி தொடர்ந்திட இந்தத் தமிழ்ச் சமுதாயம் புறப்படவேண்டும்! ஆர்ப் பரிக்க வேண்டும்! பார்ப்பன கூடாரங்கள் தவிடு பொடி யாக்கப்படவேண்டும்!     இளைஞர்களும், மாணவர்களும் மக்கள் மத்தியில் சகோதரத்துவத்தையும், சமத்துவத்தை யும், மனிதநேயத்தையும்  உருவாக்கவேண்டும்! மதவெறி மாய்க்கப்படவேண்டும்! மனிதநேயம் பாதுகாக்கப் படவேண்டும்! இதையே  தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்த நாளில் அனைவரும் சூளுரையாக ஏற்க வேண்டும்! கூட்டத்தை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன் என்று பெரியார் செல்வன் உரையாற்றினார்.

பறை இசை நிகழ்வு


கூட்டத்தின் துவக்கத்தில் பெரியார் இயக்கக் கூட்டமைப்பைச் சார்ந்த தோழர்கள் அரங்கேற்றிக் காட்டிய "பறை இசை நிகழ்ச்சி" இனமான முழக்கமாக அமைந்தது.

பல வண்ணம்! ஒரே எண்ணம்

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது உரையில் "தமிழ்நாட்டில் காவிக் கூட்டத்திற்கு இட மில்லை" என்று முழங்கிய வீராவேச  முழக்கம் உறுதி யாக டில்லியை எட்டியிருக்கும் என்பதில் அய்ய மில்லை! திருப்பூரில் நடைபெற்ற கூட்டங்களிலேயே பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்ற முதல் கூட்டம் என்ற பெருமையை தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள்  பொதுக்கூட்டம் பெறுகிறது.

திருப்பூர் மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கு பணியாற்றுவது போல் தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டப் பணிகள் நடைபெறுவதற்கு பலவகையிலும் உதவிகரமாக இருந்தார்கள்.

கலந்து கொண்டோர்

கோட்டை முபாரக் (மாவட்ட பொதுச் செயலாளர், இந்திய தேசிய காங்கிரஸ்),வே.இளங்கோவன் (மேற்கு மண்டல செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) துரைவளவன் (மாநில துணை செயலாளர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை), பா.சிவராஜ் (த.மா.கா), சி.என்.லோக நாதன் (எம்.ஜி.ஆர் பேரவை), ஆட்டோ. தங்கவேல் (திருப்பூர் மாநகர துணை தலைவர்), ப.ராமேஸ்வரன் (மாநகர திராவிடர் கழகம்), குளத்துப்பாளையம் ப. அண்ணாதுரை (மாநகர கழக இளைஞரணி அமைப்பாளர்), கரு.மைனர் (பெரியார் புத்தக நிலையம்), "ஒரத்தநாடு" ராசப்பன், ஈஸ்வரி ஆறுச்சாமி (கழக மகளிரணி), கமலவேணி வேலுச்சாமி (கழக மகளிரணி), நா.வேலுச்சாமி (தி.தொ.ச), பா.சதீஸ்குமார் (கழக இளை ஞரணி), சு.மகேந்திரன் (கழக இளைஞரணி), வேலு.வீரக்குமார் (கழக மாணவரணி), வேலு.தமிழ்ச்செல்வன் (கழக மாணவரணி), "தையற்கலைஞர்" வெள்ளியங்காடு. ராமகிருஷ்ணன் மற்றும் திமுக, அஇஅதிமுக, மதிமுக, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, சிபிஅய், சிபிஅய் (எம்) ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும், வெகு மக்கள் பலரும் மழையினால் ஏற்பட்ட இடையூறை பெரிதெனக் கருதாமல் கடைகளில் நின்றபடியே கழகச் சொற்பொழிவாளரின் கொள்கைச் சொற்பெருக்கை கூர்ந்து கவனித்தனர்.
பொதுக்கூட்ட முடிவில் திருப்பூர் மாநகர கழக செயலாளர் பா.மா.கருணாகரன் நன்றி கூறினார்.a

டாக்டர் ராம் புனியானி பெரியார் திடல் வருகை





சென்னை, அக்.27 இந்தியாவில் அதிகரித்து வருகின்ற அடிப்படை வாதங்களுக்கு எதிராகவும், மனித உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்திடவும் தொண்டாற்றி வருபவரான டாக்டர் ராம் புனியானி அவர்கள் சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்கு நேற்று (26.10.2017) வருகை தந்தார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, தற்போது நடைபெற்று வருகின்ற பாஜக ஆட்சியில், குடிமக்களிடையே நல்லிணக்கத்தை பாதிக் கக்கூடிய பல்வேறு நிகழ்வுகள் நாடுமுழுவதும் நடைபெற்று வருவது குறித்து மிகவும் கவலையுடன் கலந்துரையாடினார்.

தந்தை பெரியார் ஆற்றிய மனித நேயப் பணிகள்குறித்து டாக்டர் ராம்புனி யானிநெகிழ்ச்சியுடன்கருத்துகளைபகிர்ந்து கொண்டார். மேலும், மீண்டும் தமிழகத்துக்கு வருகைதந்து திராவிட இயக்கத் தலைவர் களுடன் கலந்துறவாட ஆர்வமுடன் உள்ள தாகவும் தெரிவித்தார்.

பெரியார் நூலகம், ஆய்வகத்தை பார் வையிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் தந்தை பெரியார் நினைவிடம் சென்று பெரியார் நினைவிடத்தில் மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினார்.

டாக்டர் புனியானி மும்பை அய்.அய்.டி. நிறுவனத்தில் மூத்த மருத்துவத்துறை அலு வலராக 27 ஆண்டுகள் பணியாற்றியவர். 2004ஆம் ஆண்டில் விருப்பு ஓய்வு பெற்றார். இந்தியா முழுவதும் நல்லிணக்கத்தை வளர்த்திட முழுநேர செயற்பாட்டாளராக தம்மை மாற்றிக் கொண்டார்.

மதசார்பற்ற ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான இந்து ராஷ்டிராவை உருவாக்குவதாகக் கூறி,  மத அடிப்படைவாதங்களுடன் உள்ள சங் பரிவார பாசிசம்  குறித்த நூல் ஆக்கங்களின் மூலமாக சங் பரிவாரங்களை தோலுரித்துள்ளார். 30 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

முன்னதாக  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் டாக்டர் ராம்புனியானி அவர்களுக்கு தந்தை பெரியார் புத்தகங்களை வழங்கியும், பயனாடை அணிவித்தும்  வரவேற்று சிறப்பு செய்தார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் கருணானந்தம், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உடனிருந்தார்கள்.

பி.ஜே.பி.யின் அதிகார வட்டத்துக்குள் தேர்தல் ஆணையமா?

குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக அவசர அவசரமாக

11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

 காந்திநகர், அக்.27 இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு நவம்பர் 9 இல் தேர்தல் என்று தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் நடைபெறும் தேதியை அறிவிப்பதில் காலம் தாழ்த்தி வந்துள்ளது. காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் செயலைக் கடுமையாக விமர்சித்து வந்துள்ளன.

ஆனால், குஜராத் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு  எதையுமே பொருட்படுத்தாமல், 12.10.2017 முதல் 15 நாள்களுக்குள்ளாக 24 திட்டங்கள், சலுகைகளுக்கான நிதி ஒதுக் கீட்டை ரூ.11ஆயிரம் கோடி மதிப்பில்  அவசர கதியில் ஒதுக்கியுள்ளது.

தேர்தல் ஆணையம் தேதி அறிவிப்பதில் காலம் தாழ்த்தி வந்த நிலையில், குஜராத் மாநில பாஜக அரசு குஜராத் மாநிலத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில் 11 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடுசெய்துள்ளது.இதுபாஜகவின் அதிகார, பதவிப் பசி, வாக்கு வேட் டைக்கான திட்டமாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் துணை முதல்வர் நிதின் பட்டேல் அம்மாநிலத்திற்கான சலுகைகள், திட்டங்களை அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பில், தனிப்பட்ட வகைகளில் அவரவர் தொகுதிகளுக்கும், பாஜகவின் வளர்ச்சியை முன் னிட்டு, பல்வேறு சலுகைகள், திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

43ஆயிரம் ஆஷா சுகாதாரப் பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 50 விழுக்காடு ஊக்கத் தொகை, ஒப்பந்த பணியாளர்களுக்கு பயன்கள், சொட்டு நீர்ப்பாசன விவசாயிகளுக்கு சலுகைகள், அகமதாபாத் முதல் காந்திநகர் வரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6,700 கோடி உள்ளிட்ட 24 துறைகளில் பல்வேறு திட்டங்களுக்காக குஜராத் மாநில அரசு ரூ11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்குவட்டியில்லாகடன், வரி விலக்கு, ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கு ஊதிய உயர்வு, நான்காம் நிலை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ், படேல் இனத்தவருக்கான இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட படேல் வகுப்பினர் 326பேர்மீதான வழக்குகள் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு, கடந்த ஆறு மாத காலமாக ஊதிய விகிதத்தை உயர்த்தக்கோரி போராடிவந்த சுகாதார செவிலியர்கள் 43ஆயிரம்பேருக்கு ஊதிய ஊக்கத்தொகை மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு இலவசமாக சேலைகள், உடைகள் அளிப்பதாக துணை முதல்வர் நிதின் படேல் அறிவித்தார்.

துணைமுதல்வர் அறிவிப்பின்அடுத்த கட்டமாக அதேநாள் மாலையில், அகமதா பாத், காந்திநகர் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப்பணிகளுக்கு ரூ.6,700 கோடி நிதி ஒதுக்கீடு, சொட்டு நீர்ப் பாசனத்துக்கான கருவி வாங்கும் விவசாயிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி 18 விழுக்காடு திரும்ப விவசாயிகளுக்கு அளிப்பதற்கு ரூ.77.64 கோடி நிதி ஒதுக்கீடு, பல்வேறு அரசுப் பணிகளில் நிரந்தரமான ஊதியத்துடன் 11 மாதங்களில் பணியாற்றிய  ஒப்பந்த பணி யாளர்களுக்கு சாதாரண விடுப்பில் கூடுதலாக 11 நாள்கள், ஓராண்டுபணிநிறைவுபெற்றஒப் பந்த பணியாளர்களில் இரண்டு குழந்தைகள் பெறும்வரை பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு அதிகபட்சமாக 90 நாள்கள், அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய விகிதத்துக்கு ஏற்ப, பயணப்படி இதர படிகள் ரூ.250 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் பணியின்போது உயிரிழந்தால், அவருடைய வாரிசுகளுக்கு கருணைத் தொகையாக ரூ.2 லட்சம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை குஜராத் மாநில அரசு அறிவித்தது.

இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையிலேயே, தூங்கிக் கொண்டிருந்த அரசு, திடீரென விழிப்பைப் பெற்றதைப்போல், தேர்தல் வரும்போது மக்களை சந்திக்கவேண்டிய கட்டாயத்தில், வாக்கு பெறவேண்டிய நிலையில், தேர்தலை முன்னிறுத்தியே ஆளும் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் அலட்சி யம் காட்டி, தற்போது தேர்தல் வருகிறதே என்று தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பாக மாநில பாஜக அரசு சலுகை மழை, அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளது.

இந்நிலையில்தான், காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங் களுக்கிடையே  குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் தேதியாக டிசம்பர் 9, டிசம்பர் 14 என இரண்டு நாள்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மிகவும் தாமதமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீதாராம் யெச்சூரி

‘‘குஜராத் விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிப்பதாக வெற்று அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு இப்படித்தான் அங்கு நடக்கும் என்று நாம் எச்சரித்திருந்தோம். பாரதீய ஜனதாக கட்சியிடமிருந்து நியாயமான எதையும் நாம் எதிர்பாக்க முடியாது. அதனால்தான் இதில் தலையிடவேண்டிய அதிகாரம் கொண்ட அமைப்புகளான தேர்தல் ஆணையமும், இந்திய ரிசர்வ் வங்கியும் முறையாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அதுவும் நடக்கவில்லை.''

இவ்வாறு சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

Friday, October 27, 2017

கந்து வட்டி ஒழிவது எப்போது?

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்தனர். இதில் நால்வரும் உயிரிழந்து விட்டனர். கந்து வட்டி கும்பலிடம் சிக்கி மீளமுடியாமல் தமிழகத்தில் பல குடும்பங்கள் ஊரை காலி செய்து விட்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். பலரோ தற்கொலை செய்து கொள்கின்றனர். கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின்படி, அதிக வட்டி வசூல் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் வகையில் கந்துவட்டி தடுப்புச் சட்டம் 2003இல் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த சட்டம் அப்பாவி மக்களை காப்பதாக தெரியவில்லை. கடன்பட்டு விட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமல்ல. ஏனெனில் ஒருமுறை கடன் பட்டவர்கள் அதிலிருந்து மீள முடியாத அளவிற்குச் சுழலில் சிக்கிக் கொள்கின்றனர்.

கந்து வட்டி, பல்வேறு பெயர்களில் மருவி விட்டது;  நகரங்களை சாலையோர வியாபாரிகளில் மணி வட்டி என்று கூறி கொடுப்பார்கள். அதாவது 10 மணிக்கு ஒரு தொகை கொடுத்தால் அதற்கான வட்டியை 12 மணிக்கு கொடுத்து விடவேண்டும் தாமதமானால் தரத்தவறிய வட்டிக்கு வட்டி போட்டு விடுவார்கள். 500 ரூ கொடுத்துவிட்டு ஒரே நாளில் 5000 வரை கூட வசூல் செய்யும் கொடுமை இன்றும் இருக் கிறது.

இப்படி பல்வேறு வகையில் வட்டித் தொழில் தமிழகம் முழுவதும் உள்ளது. வட்டிக்குப் பணம் வாங்கும் பல அப்பாவிகள்  பலியாகி வருகின்றனர். தமிழகத்தின் மத்திய மாவட்டப்பகுதிகளில் சிறிய தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருள் வாங்க வட்டி வாங்குவார்கள். இவர்கள் தயாரித்த பொருட்களை வாங்க வருபவர்களால் வட்டிக்கு வாங்க மிரட்டப்படுகிறார்கள். இதில் தொழிற்சாலை, வீடு, தோட்டம் என அதற்கான ஆவணங்களை அடமானம் வைத்துவிடு வார்கள். தற்போது ஆதார் அட்டை, ரேசன் கார்டு, ஏடிஎம் கார்டுபோன்றவற்றை வட்டிக்கு கொடுப்பவர்கள் பிடுங்கி வைத்துக்கொள்கிறார்கள்.

வட்டிகொடுக்கமுடியாமல் போகும் நேரத்தில் வீடு தோட்டம் என அனைத்தையும் இழந்து பரதேசிகளாக வேறு ஒரு ஊருக்கு சென்று கூலித்தொழில் செய்து பிழைக்கும் கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல!

மீட்டர் வட்டி என்ற ஒன்று உண்டு. ஒரு லட்சம் ரூபாய்க்கு 85 ஆயிரம் மட்டுமே கொடுப்பார்கள். வாரம் 10 ஆயிரம் வீதம் 10 வாரங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கட்ட வேண்டும். ஒருவாரம் தாமதித்தாலும் வட்டி இருமடங்காகும்.

சென்னை போன்ற நகரங்களில் சிறுவணிகர்கள் முதல் ஏழைகள் வரை வாங்கும் வட்டியில் ஒரு வாரத்திற்கு 10 ஆயிரம் கடன் வாங்கினால் அதில் 2 ஆயிரம் எடுத்துக் கொண்டு 8 ஆயிரம் கொடுப்பார்கள். ஒரு வாரத்தில் திருப்பி செலுத்தும் போது 10 ஆயிரம் செலுத்த வேண்டும். 

தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியா குமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் கடந்த 15 ஆண்டுகளாக ஏராளமான நிலமோசடி, கந்து வட்டி மூலம் வீடுகள், நிலங்களை அபகரிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் டிஜிபி அலுவலகத்தில் குவிந்தன. சட்டம் சொல்வது என்ன? கடன் பெற்றவர்களிடம் கந்து வட்டி, மணி நேர வட்டி, தண்டல் என வட்டிப் பணம் வசூலிப்பவர்களை ஒடுக்கும் விதமாக வும், வட்டிக் கொடுமையால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பாற்றவும் கடந்த 2003ஆம் ஆண்டு, கந்து வட்டி தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டம் தொடர்பான ஆணை, கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர், 14ஆம் தேதிஅரசிதழில் வெளியிடப் பட்டது.

அதில் கந்து வட்டி, ரன் வட்டி என்ற பெயரில் கடன் பெற்றவர்களிடம் அதிக பணம் வசூலிப்பது நிரூபிக்கப்aபட் டால், மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் என்ன செய்கிறார்கள்? வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு ஆண்டு முழுவதும் தவிக்கும் அப்பாவி மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். அப்பாவிகளைக் காக்க கந்து வட்டி தடுப்பு சட்டம் மூலம் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் சோகம்.   
நெல்லையில் நடந்த அவலம் மிகவும் கொடூரமானது, வட்டிக்கொடுமையால் கடுமையாக மிரட்டப்பட்டதன் விளைவாக 6 முறை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத் தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இசக்கிமுத்துவின் குடும்பம் இந்த கொடூர முடிவிற்கு வந்துவிட்டது.   

6 முறை மனு கொடுத்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அதன்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அப்படியே அவர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு இந்த புகார் குறித்துவிசாரிக்க அனுப்பியிருந்தார் என்றால் அந்த மனு எந்த நிலையில் உள்ளது என்று விசாரித்தாரா? மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனுக்களைப் பெறுவது அதை துறைவாரியாக பிரிப்பது என்று பல அலுவலர்கள் இருக்கின்றனரே!

 தற்போதைய அரசு மனித உயிர்களை பலிவாங்கி ஆட் சியாளும் ஆட்சியாகவே அமைந்துவிட்டது, நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம் தான் இந்த தற்கொலைகள். சட்டம் நிறைவேற்றுவது முக்கியமல்ல. அது எப்படி செயல்பாட்டுக்கு வருகிறது என்பதுதான் முக்கியம். வேலியே பயிரை மேய்வதுபோல, காவல்துறையே கந்துவட்டிக்காரர்களுக்குப் பெருந்துணை என்றால், கந்து வட்டி ஒழிவது எப்போது?

அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (2)




‘தாக்கர் அன்ட் கோ’வின் முக்கிய பொறுப்பாசிரி யரான யு..ஆர்.இராவ் அவர்கள் அம்பேத்கர் புத்தக வெளியீட்டகத்திற்கு வரும்போது, அவருடைய நூல்களை வெளியிடுமுன் சில மாற்றங்கள் செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற தனது கருத்தை டாக்டரிடம் கூறி, அவரைக் கேட்க விரும்புவதாக அதன் தலைமை நிர்வாகியிடம் சொன்னார்.
அவர் இதைக் கேட்டு அதிர்ந்து போய், ‘யோவ், அவரிடம் போய் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் மாற்றம் செய்யுங்கள் என்று கேட்கப் போகிறீர்களா? டாக்டர் அதை எப்படி எடுத்துக்கொள்வாரோ தெரியவில்லை; ஏன் உங்களுக்கு இந்த வீண்வம்பு? அவர் எழுதிக் கொடுத்ததை அப்படியே வெளியிட்டு விடக்கூடாதா?’ என்று தயக்கத்துடன் கேட்டார்.

யு.ஆர்.ராவ், ‘இல்லை இந்த மாற்றம் செய்தால் வாசிப்பதற்கு மேலும் சுவையைக்கூட்டி விறுவிறுப்பு டன் அமையும் என்றுதான் கூறலாம்‘ என்று, டாக்டர் அம்பேத்கரிடம் சொன்னபோது, அவர் இசைவு தந்தார், எந்த மறுமொழியும் சொல்லாமல் என்பது இவருக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது! புத்தகம் சிறப்பாக அமைந்தது!

டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, டாக்டர் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே, (1950 இல் இந் நிகழ்வு) டி.ஏ.தலாங் (D.A.Talang) என்ற பிரபல கல்வி யாளர் சேர்த்து வைத்திருந்த ஏராளமான புத்தகங் களைக் கொண்ட தனியார் நூலகம் பம்பாய் மட்டுங்கா பகுதியில் இருந்தது; அவர் இறந்தவுடன், அவரது சொந்தக்காரர்கள் அந்த நூல்களை விற்றுவிடுவதாக உள்ளார்கள் என்று, அவரது பக்கத்து வீட்டுக்கார நண்பர் ஆர்.கே. என்பவர் கூறுகிறார் என்று கூறி, அப்புத்தகங்களின் நீண்ட பட்டியலைக் கொடுத்தார். தனித்தனியே இவைகளை விற்பதாக உள்ளார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால், அதனை அப்படியே பெற்றுக்கொள்ளலாம் என்றவுடன், தலாங்கின் வீட்டு நூலகமாக ஆக்கினால், நிச்சயம் அது சிறப்பானதாக இருக்கும். எனவே, பெரும் புத்தகப் பிரியரான அந்த மனிதரின் நூல்களை வாங்கலாம்; விலை எவ்வளவு சொல்கிறார்கள் என்று விசாரியுங்கள் என்றார் அம்பேத்கர்.

நான் புத்தகம் ஒன்றுக்கு ஆறு ரூபாய் விலை போட்டு எடுத்துக் கொள்ளச் சொல்லுகிறார்கள் என்று, விசாரித்துவிட்டுச் சொன்னேன்.

உடனே டாக்டரிடமிருந்து ஒரு ‘புயல்’ அடித்தது!

‘என்ன நான் என்ன கோடீசுவரனா? அவ்வளவுப் பணம் என்னால் கொடுக்க முடியுமா? இந்தப் பணம் எங்கேயிருந்து கொடுக்கப்படுகிறது தெரியுமா? People’s Educational Society  யிலிருந்து. அதனிடம் உள்ள நிதியே குறிப்பிட்ட அளவுதான்.

அந்த  தலாங் உறவினர்களிடம் சொல்லுங்கள். அவர்களுடைய அத்துணை நூல்களையும் அது பெரியதோ, சிறியதோ, பவுண்ட் அட்டையோ, மெல்லிய சிறு வெளியீடோ சகட்டுமேனிக்கு புத்தகம் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் என்று போட்டுத் தரலாம்; அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால், கேட்டுச் சொல்லுங்கள், வாங்கலாம்‘ என்று கூறி, பேரம் செய்தார்! அவர்களும் ஒப்புக்கொண்டு வாங்கினார். ஒரு லாரி லோடு அளவுக்கு வாங்கி அவரது கல்லூரி நூலகத்திற்கு அனுப்பினார்.

இவருடைய தனிப்பட்ட வீட்டு நூலகப் புத்தகங் களையெல்லாம் - அரிய நூல்கள் சேகரிப்பு ஆகும்; அவற்றை அவர் துவக்கிய சித்தார்த்தா கல்லூரியே அவரது நூலகத்தைப் பாதுகாத்து வந்தது. அவர் மறைந்த பிறகு இதுபற்றியும் யாருடைய பொறுப்பில் அவரது வீட்டு நூலகம் பராமரிப்புக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்பதற்கும் வழக்குகள் நடந்தன.

டில்லி உயர்கல்வி நூலகத்திற்கு இதை அளித்தால் பயனுள்ளதாக இருக்கும். அது முடியுமா? என்று நாங்கள் ஆராய்ந்தோம். அப்புத்தகங்கள் பண்டல் பண்டல்களாக - பார்சல் மூட்டைகளாக்கப்பட்டதால், அவர்கள் எடுத்துக்கொள்ள முன்வரவில்லை என்பது தான் துயரமானது!

- கி.வீரமணி

திராவிடர் கழகத்தின் போராட்ட முறை பஞ்சாபிலும் வெடிக்கிறது! இந்தி எழுத்துகள் தார் பூசி அழிப்பு!


பஞ்சாப், அக்.26 பஞ்சாப் மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் பெயர்ப்பலகை வரிசையில் முதலிடத்தில் பஞ்சாபி மொழியிலேயே  எழுதப்படவேண்டும் என்பதை வலி யுறுத்தி போராட்டம் வெடித்துள்ளது.

பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைந்த மொழிப்போர் இயக்கமாக உருவாக்கப்பட்டு, நெடுஞ்சாலைகளில் உள்ள பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றுள்ள இந்தி, ஆங்கில மொழிகளில் எழுதப் பட்ட எழுத்துகள் தார்பூசி அழிக்கப்பட்டன.

தள் கல்சா, சாட் (அமிர்தசரசு), பிகேயூ (கிராந்திகாரி) மற்றும் மால்வா இளைஞர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து ஓர் இயக்கமாக   உருவாக்கப்பட்டுள்ளது. பஞ்சாபி மொழியை முத லிடத்தில் எழுத வலியுறுத்தி போராட்டங்கள் அவ் வியக்கத்தின் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
பஞ்சாபி மொழிக்கான அவ்வியக்கத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகளில் உள்ள பெயர்ப்பலகைகளில் உள்ள  இந்தி, ஆங்கில மொழி எழுத்துகளைத் தார் பூசி அழித்துள்ளனர்.

பத்திண்டா ஃபாரிட்கோட் தேசிய நெடுஞ்சாலை (எண் 15)யில் 25 கி.மீ. தொலைவில் உள்ள பெயர்ப்பலகைகளில் இந்தி, ஆங்கில மொழி எழுத்து களை தார் பூசி அழித்தார்கள்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பஞ்சாபி மொழிக்கான அவ்வியக்கத்தினர் தங்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி பரப்புரை செய்து வந்தார்கள். ஏற்கெனவே இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற் றுள்ளன. இம்மாதத் தொடக்கத்தில் பத்திண்டா துணை ஆணையர் திப்ரவா லக்ராவை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், எதுவுமே நடக்கவில்லை. ஆகவே, போராட்டத்தில் குதிக்க வேண்டியதாயிற்று என்று பஞ்சாபி மொழிக்கான இயக்கத்தினர் கூறு கிறார்கள்.

தார் பூசி அழிக்கும் போராட்டத்தின்போது காவல்  துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். அதனால், போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு தரப்பினரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சாலை மறியலைக் கைவிட்டனர்.

தள் கால்சா துணைத் தலைவர் ஹர்தீப் சிங் கூறியதாவது:

“அனைத்து மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். அதேநேரத்தில்பஞ்சாபில்,பஞ்சாபிமொழிக்குமுன் னுரிமை அளிக்கப்பட வேண்டும். எங்கள் கோரிக்கையை பொறுப்பில் உள்ளவர்கள் ஏற்று செயல்படவில்லை என்றால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்’’ என்றார்.

இதனிடையே, மொழிப்போராட்டத்தில் ஈடுபட்ட மால்வா இளைஞர் கூட்டமைப்பின் தலைவரான லக்பீர் சிங், லகா சிதானா, ஹர்தீப் சிங் மற்றும் சிலர் மீது நெகியன்வாலா காவல்நிலையத்தில் பொதுச்சொத்துக்கு சேதப்படுத்திய சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு: 1952, 1953, 1954 ஆம் ஆண்டுகளில் ரயில்வே நிலையங்களில் பெயர்ப் பலகைகளில் இந்தி முதல் இடத்தில் இருந்ததை எதிர்த்து அதனைத் தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆணைப்படி திராவிடர் கழகம் நடத்தியது. திருச்சி ரயில்வே ஜங்சனில் தந்தை பெரியாரே அழித்தார். அதன் விளைவு இப்பொழுது தமிழ் முதலிடத்திற்கு வந்துள்ளது. அதன் எதிரொலியை பஞ்சாப் இளைஞர்களிடம் இப்பொழுது பார்க்க முடிகிறது!

Thursday, October 26, 2017

திராவிட இயக்கம் சாதித்தது என்ன?



பிராமணர் அல்லாதார் இயக்கமான திராவிட இயக்கம் தோன்றியதற்கு முக்கியக் காரணம், காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய பிராமண வழக்கறிஞர்கள்தான். அவர்கள் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்தது என்பதைத் தனது ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூலில் பதிவுசெய்திருக்கிறார் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்திவந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

பிராமணர் அல்லாதோர் நிலை

அந்தக் காலகட்டத்தில் உத்தியோகத் துறையில் எங்கும் பிராமணர் ஆதிக்கம்; பிராமணர் அல்லாதாருக்கு முட்டுக்கட்டை என்ற நிலை இருந்தது. எடுத்துக்காட்டாக 1912-ல் சென்னை மாகாணத்தின் நிலை என்ன? துணை ஆட்சியர்களில் 55%, சார்பு நீதிபதி 82.5%, மாவட்ட முன்சீப்களில் 72.6% பிராமணர்கள். இந்தப் பதவிகளில் இந்து பிராமணர் அல்லாதார் முறையே 21.5%, 16.7%, 19.5%. கடப்பை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உயர் பதவி வகித்த டி.கிருஷ்ணாராவ் (ஹுஸுர் செரஸ்தார் - மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது) என்பவரின் உறவினர்கள் 116 பேர் அந்தத் துறையில் இருந்தனர். சென்னை சட்ட மன்றத்தில் 1914-ல் சட்ட மன்ற உறுப்பினர் குன்சிராமன் நாயர் எழுப்பிய வினாவுக்குக் கொடுக்கப்பட்ட பதில் என்ன? சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்யப்பட்ட 650 பட்டதாரிகளில் பிராமணர்கள் 452 பேர், பிராமணர் அல்லாத இந்துக்கள் 12 பேர், பிற இனத்தவர் 74 பேர்!
கல்வி, வேலைவாய்ப்பு நிலைதான் இப்படி என்றால் சமுதாய நிலை என்ன? உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர். பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பிட முடியாது. எடுப்புச் சாப்பாடுதான் வாங்கிச் சென்று வெளியே சாப்பிட வேண்டும். சென்னையில் அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர். ரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமல்ல. இருப்புப் பாதைகள் போடப்பட்டு, ரயில் பயணம் தொடங்கிய காலத்தில், நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்து மத வேதியக் கூட்டம் ரயில்வே நிர்வாகத்தைக் கேட்கும் அளவுக்குப் பேதங்கள் மோசமாக இருந்தன.

இயக்கத்தின் தொடக்கம்

இப்படிப்பட்ட சூழலில்தான் 1912-ல் டாக்டர் சி.நடேசனாரின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது ‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’. அதுவே 1913 முதல் பிராமணர் அல்லாதாரைக் குறிக்க ‘திராவிடர் சங்கம்’ என்று புதுப் பெயர் பெற்றது.
1916-ல் டி.எம்.நாயர், தியாகராயர் உள்ளிட்டோர் முன்னின்று தொடங்கிய தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், நீதிக் கட்சியாக அழைக்கப்பெற்றது. நீதிக் கட்சி திராவிடர் கழகம் ஆனது. திராவிடர் கழகத்திலிருந்து திமுகவும் அதிலிருந்து அதிமுகவும் உருவாயின. ஒட்டுமொத்தமாக இவற்றை ‘திராவிடர் இயக்கம்’ என்று ஒரு பொதுச் சொல்லால் குறிப்பதாகக் கொண்டால், இழிவுகள் பலவற்றிலிருந்து இந்தத் திராவிடர் இயக்கமே நம் மக்களை மீட்டெடுத்தது.
திராவிடர் என்ற பெயர் மாற்றமே திராவிட இயக்கத்தின் சாதனை என்று சொல்லலாம். ஏனென்றால், 1901-ல் எடுக்கப்பட்ட சென்னை மாகாணத்து மக்கள்தொகைக் கணக்கில் ‘பிராமணர்கள் 3.4%, சூத்திரர்கள் 94.3%’ என்று பிராமணர் அல்லாதாரை அரசாங்கமே சூத்திரர்கள் என்று குறிப்பிடும் இழிநிலைதான் அன்று இருந்தது. இந்த நிலையில்தான் பெரியார், ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!’ என்ற பெருமுழக்கத்தை வீதிகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தார். பின்னதாக, நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை ‘சூத்திரன்’ என்ற இழி பட்டத்தைப் பதிவேடுகளிலிருந்து ஒழித்தது.
ஆட்சியில் பங்கேற்று நேரடி மாற்றங்களைக் கொண்டுவந்தது மட்டும் அல்லாமல், எல்லாத் தளங்களிலும் மாற்றுகளை உருவாக்க முற்பட்டது திராவிட இயக்கம். டாக்டர் சி.நடேசன், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் 1916-ல் உருவாக்கிய திராவிட சங்க விடுதியை (Dravidian Association Hostel) ஓர் உதாரணமாகச் சொல்லலாம். மாணவர் விடுதிகளில்கூடப் பாகுபாடுகள் நிறைந்திருந்த காலத்தில் மாற்றாகத் தொடங்கப்பட்ட மாணவர் விடுதி இது. பிற்காலத்தில் இந்திய நிதியமைச்சராக ஆகவிருந்த ஆர்.கே.சண்முகம், பாரிஸ்டர் ரங்கராமானுஜம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களாக விளங்கிய டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் மற்றும் சடகோப முதலியார், பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்களெல்லாம் இந்த விடுதியில் தங்கிப் படித்தவர்கள்தான்!

திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்கள்

திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. சுதந்திரத்துக்கு முன்பு சென்னை மாகாணத்தில் 1920-1937 காலகட்டத்தில் ஆட்சியிலிருந்து நீதிக் கட்சி ஆட்சி கொண்டுவந்த மாற்றங்கள். 2. ஆட்சியிலிருந்து இறங்கிய நீதிக் கட்சியின் தலைவராக 1938-ல் பெரியார் பொறுப்பேற்று, பிறகு 1944-ல் திராவிடர் கழகமாக அதை உருமாற்றிய பின்னர், தேர்தல் அரசியலிலிருந்து விலகி, பொதுத் தளத்திலிருந்து அது மேற்கொண்டுவரும் மாற்றங்கள். 3. 1967 முதலாகத் தமிழகத்தில் ஆட்சியில் இருந்துவரும் திமுக, அதிமுக இரு திராவிடக் கட்சிகள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த மாற்றங்கள்.
இவற்றில் தேர்தல் அரசியலில் பங்கேற்காமல், பொதுத் தளத்தில் நின்று அரசியல் கட்சிகளுக்கான சமூக நீதி அழுத்தங்களையும் கொடுத்துவரும் திராவிடர் கழகம் வெளியிலிருந்து உண்டாக்கிவரும் மாற்றங்கள் என்றால், இரு திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சிக் காலம் மட்டுமின்றி காமராஜரின் ஆட்சிக் காலகட்டத்தையும்கூடச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். பிராமணியத்துக்குத் துணை போகும் காங்கிரஸை ஒழிப்பதே என் கடமை என்று கூறி காங்கிரஸிலிருந்து வெளியேறி வந்த பெரியார், காமராஜரின் ஆட்சிக்காக அதே காங்கிரஸைத் தன் தோளில் தூக்கிச் சுமந்தார் என்பதும் பெரியார் முன்மொழிந்த பல திட்டங்களையும் யோசனைகளையும் நிறைவேற்றியவர் காமராஜர் என்பதும் வரலாறு. ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியார் தலைமை தாங்கி தடுத்து நிறுத்தியது முக்கியமான ஒன்று. எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், சமூக நீதி, தமிழ், தமிழர் நலன் என்பதே எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு திராவிடர் கழகத்தின் உயிர்மூச்சாக இருந்திருக்கிறது. அதேபோல, பொதுத் தளத்தில் அது உருவாக்கிய கருத்துருவாக்கம், கட்சிக்கு அப்பாற்பட்டு ஆட்சியாளர்களைச் செயல்பட வைத்திருக்கிறது. ஆகையால், திராவிடர் கழகம் பொதுத் தளத்தில் செய்த காரியங்களை இந்தச் சின்ன கட்டுரைக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றது என்பதால், முன்னதாக நீதிக் கட்சி வடிவிலும் பின்னதாக திராவிடக் கட்சிகளுக்குப் பின்னின்றும் செய்த மிக முக்கியமான மாற்றங்களை மட்டும் இங்கே தருகிறேன்.

நீதிக் கட்சி கொண்டுவந்த
முக்கியமான 10 அரசாணைகள், சட்டங்கள்

.நாட்டிலேயே முன்னோடியாகப் பெண்களுக்கு வாக்குரிமை (10.05.1921).
.பஞ்சமர் என்ற சொல் நீக்கி ஆதிதிராவிடர் என்றழைக்கும் அரசாணை (25.3.1922).
.கல்லூரிகளில் எல்லாத் தரப்பு மாணவர்களையும் சேர்க்க குழுக்கள் அமைக்கும் அரசாணை (20.5.1922). கல்வி மறுக்கப்பட்ட பிராமணரல்லாத குழந்தைகளைத் தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை (21.6.1923). புதிய பல்கலைக்கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இது காரணமாயிற்று.
.தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்ப்பதற்கான நடவடிக்கை (24.9.1924).
.குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டிவிட்டு, தேவரடியார் என்று முத்திரை குத்தும் முறைக்கு முடிவுகட்டும் சட்டம் (1.1.1925).
.கோயில்களில் கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவர இந்து சமய அறநிலையச் சட்டம் (27.01.1925).
.சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பிராமணரல்லாத மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தரவு (15.9.1928).
.எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் (13.9.1928). வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கான அரசாணை (27.2.1929).

சமூக மாற்றத்துக்கு அடித்தளமிட்ட
கல்வி, சமூக நலத் திட்டங்கள்

கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பிராமணர்களாகவே இருந்த நிலையில், பிராமணர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருந்த காலகட்டம் அது; பனகல் அரசர் என்ன செய்தார்? ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் நடைமுறையை நீக்கினார். ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை இந்தியமயமாக்கிய பெருமையும் நீதிக் கட்சி முதலமைச்சர் பனகல் அரசரையே சேரும்.
சென்னை மாநிலக் கல்லூரி சம்ஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300, தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயனாருக்கு மாதச் சம்பளம் ரூ.81 என்றிருந்தது. இந்த பேதம் நீக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர, தமிழ் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது. நீதிக் கட்சிப் பிரமுகர்கள் ஆர்.வெங்கடரத்தினம் நாயுடு, டி.என்.சிவஞானம் பிள்ளை, எஸ்.முத்தையா முதலியார், டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியார் போன்ற தலைவர்கள் போராடிப் போராடிதான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவதற்கு வழிவகுத்தனர்.
பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான், 1921-ல் பள்ளிகளில் இலவச நண்பகல் உணவு அளித்தார். இதற்காக சென்னை மாநகராட்சிப் பணம் செலவழிப்பதை நகராட்சி சட்டத்தைத் திருத்தி மாகாண அரசே ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாகப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த தகவல் உண்டு. இலவச இரவுப் பள்ளிகள் நடத்த முன்வந்தால், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைப்பாடுதான் அது. பகல் பொழுதில் பணியாற்றச் செல்வோர் இரவில் படிக்கும் ஒரு வாய்ப்புக்குத் கதவைத் திறந்துவிட்டவர் நீதிக் கட்சித் தலைவர் பிட்டி. தியாகராயர்தான்.
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சம்ஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி, தமிழும் சொல்லிக்கொடுக்கப்பட ஆவன செய்தார் நீதிக் கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வம். பிராமண மாணவர்கள் மட்டும் பயன் கண்ட ராஜா மடம், ஒரத்தநாடு விடுதிகள் மற்றவருக்கும் திறந்துவிடப்பட்டன. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் அரைச் சம்பளம் கட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமையை நிலைநாட்ட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட உத்தரவிடப்பட்டது.
பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று ஆணையிட்டு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரிலிருந்து பள்ளிகளை நோக்கிச் செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன். தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் முன்னோடிகளில் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரன்.
தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதித் தனி அலுவலர்கள் நியமனம். தனி அலுவலர் என்பது ‘லேபர் கமிஷனர்’ என்று மாற்றம். இம்மக்களுக்கு 7 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது. குறவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2,776 கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியோருக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. மீனவர் நலன் காப்பதற்காக ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது. இதேபோல கள்ளர் சமுதாய முன்னேற்றத்துக்காகவும் ‘லேபர் கமிஷன்’ நியமிக்கப்பட்டது.

திராவிடக் கட்சிகள் முன்னெடுத்த
பெரும் மாற்றத்துக்கான நகர்வுகள்

திமுகவின் முதல் முதல்வரான அண்ணா மிக விரைவில் காலமாகிவிட்டதால், இரண்டாண்டுக்கும் குறைவாகவே ஆட்சியில் இருந்தார். எனினும், திராவிடக் கட்சிகள் செல்ல வேண்டிய திசையைச் சுட்டும் வகையில், நான்கு முக்கியமான முடிவுகளை அவர் முன்னெடுத்தார். 1. சடங்குகள், தாலி மறுத்து நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம். 2. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம். 3. தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை; தமிழ், ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழி என்ற இருமொழிக் கொள்கை முடிவு. 4. அரசு அலுவலகங்களில் எந்த மதம் தொடர்பான கடவுள் படங்களும் உருவங்களும் இருக்கக் கூடாது என்ற ஆணை.
கருணாநிதி பொறுப்பேற்றார். கல்வி, வேலைவாய்ப்பில் அதுவரை 31% ஆக இருந்த இடஒதுக்கீடு 49% ஆக உயர்த்தப்பட்டது. அடுத்தடுத்து வந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சிகளும் சமூக நீதிப் பாதையிலேயே சென்றதன் விளைவாக இன்று நாட்டிலேயே முன்னோடியாக 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருக்கிறது. அதற்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பும் இருக்கிறது.
கிராம அலுவலர்கள் பதவிகள் பெரும்பாலும் பிராமணர்கள் கையில் இருந்ததை மாற்றி, அரசு அலுவலர்களாக மாநிலத் தேர்வு ஆணையத்தின் மூலம் தேர்வுசெய்யும் நடவடிக்கையைக் கொண்டுவந்தார் எம்ஜிஆர். தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்டார். சாதி ஒழிப்புப் பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தைக் கொண்டுவந்தார் கருணாநிதி. சுடுகாட்டில் - இடுகாட்டில் பணியாற்றியோரை, ‘வெட்டியான்’ என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களை அரசுப் பணிச் சட்டகத்துக்குள் கொண்டுவந்தார். எல்லாச் சமூகத்தினரும் இணைந்து வாழும் சமத்துவபுரங்களைக் கொண்டுவந்தார். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்குப் பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டம் வரை கட்டணம் ரத்துசெய்யப்பட்டது.
நீதிக் கட்சித் தலைவர் பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டம் - காமராஜர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டு, எம்ஜிஆர் காலத்தில் மேம்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டமானது. மதிய உணவோடு வாரம் முழுவதும் முட்டைகள் அளிக்கும் திட்டத்தைக் கருணாநிதி கொண்டுவந்தார். தமிழகத்தில் கல்விச் சூழலை வெகுவாக மேம்படுத்திய புரட்சித் திட்டம் இது.
மத்திய அரசிடம் குவிந்து கிடக்கும் அதிகாரங்களைப் பரவலாக்கி, மாநிலங்களின் அதிகாரத்தை உயர்த்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தப் பரிந்துரைத்தது பி.வி. ராஜமன்னார் குழு. நாட்டிலேயே இப்படி ஒரு குழுவை ஒரு மாநில அரசு அமைத்தது இதுவே முதல் முறை. மாநிலங்களுக்குத் தனிக் கொடி வேண்டும் என்று கருணாநிதி தொடங்கிய போராட்டமே, பிற்பாடு சுதந்திர நாளன்று தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியேற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு வாங்கித் தந்தது. மத்திய அரசு - மாநில அரசுப் பணியாளர்களுக்கு இடையேயான ஊதிய வேறுபாட்டையும் நீக்கினார்.
நில உச்ச வரம்பை 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் வரையறைக்குக் கொண்டுவந்தார் கருணாநிதி. பெரும் நிலச் சீர்திருத்த நடவடிக்கை இது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டது. விவசாயிகளின் உற்பத்தி விளைபொருட்கள் விற்பனைக்கு உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. விவசாயிகளின் நலன் பேண ஒரே நேரத்தில் 40,433 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 7,000 கோடி கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடிசெய்யப்பட்டது. விவசாயத் தொழில் நலவாரியம் உட்பட 34 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவிலேயே ஒரு புரட்சியாக, குடிசைகளிலும் நடைபாதைகளிலும் வாழ்ந்த மக்களுக்குக் குடிசை மாற்று வாரியம் கொண்டுவந்து குடியிருப்புகள் கட்டப்பட்டன. கைரிக்சாக்களை ஒழித்தார் கருணாநிதி.

பெண்கள் உயர்வுக்கும் மறுமலர்ச்சிக்கும்
அடுக்கடுக்கான திட்டங்கள்

ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம். ஈ.வெ.ரா.மணியம்மையார் விதவைத் தாய்மார்களின் மகள் திருமண நிதி உதவித் திட்டம். அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஆதரவற்ற பெண்களுக்குத் தங்கம் வழங்கும் திட்டம். இப்படி ஒரு பெண்ணின் படிப்பில் தொடங்கி திருமணம், மகப்பேறு வரை துணை நின்றது அரசு. அரசுப் பணிகளில் பெண்கள் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் 30% இடஒதுக்கீட்டை அவர்களுக்குக் கொண்டுவந்தார் கருணாநிதி. அதேபோல, அரசியலில் பெண்கள் பங்கேற்பை அதிகரிக்கவும் உள்ளாட்சியில் 33% இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார் கருணாநிதி. பின்னாளில் இதை 50% ஆக உயர்த்தினார் ஜெயலலிதா. ‘அரவானிகள்’ என்று அதுவரை குறிப்பிடப்பட்டவர்கள் மூன்றாவது பாலினத்தவராக அறிவிக்கப்பட்டதோடு ‘திருநங்கைகள்’ என்று அழைக்கப்பட்டு, அவர்கள் நலனுக்காகத் தனி வாரியம் உருவாக்கப்பட்டது.
தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டவர்களுக்குப் பணி நியமனங்களில் 20% அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் பெறப்பட்டது. செம்மொழித் தமிழ் ஆய்வுக்காக சென்னையில் மத்திய நிறுவனம் கொண்டுவரப்பட்டது. தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் பிறப்பித்தார் கருணாநிதி.
இவை எல்லாவற்றைக் காட்டிலும் பெரும் சாதனை ஒன்றுண்டு. இந்த மண்ணின் உணர்வில் அழியா சக்தியாக திராவிடர் எனும் உணர்வை விதைத்தது. மண்ணுள்ள வரை விதைக்கப்பட்ட விதைகள் துளிர்த்துக்கொண்டே இருக்கும். பெருமரங்கள் விழுது பரப்பிப் புது மரங்கள் காடாகப் பெருகிக்கொண்டே இருக்கும்!
- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

நன்றி : தமிழ் இந்து நாளிதழ்

அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (1)




புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ‘நூற்களை விழுங்கிய நுண்ணறிவாளர்’; அவரின் புத்தகக் காதல் என்றும் தணியாத காதல்.

அவரது இல்லத்தில் புத்தகங்கள் ‘ஆக்கிரமிக்காத’ இடங்களே இல்லை; ஆம்! ‘ராஜகிரகா’வின் நூலகம் - தலைசிறந்த எடுத்துக்காட்டான தனியார் நூலகம் (Private Library).

அந்தக் காலகட்டத்திலேயே அந்நூலகத்தில் இடம்பெற்ற நூல்களின் எண்ணிக்கை 69,000 ஆகும்!

பெரும்பாலான அவரது நூல்களை - சேகரிப்புகளை அவர் உருவாக்கிய கல்வி அறக்கட்டளையான மக்கள் கல்விக் கழகத்திற்கே (People’s Educational Society) (நிறுவிய ஆண்டு 8.7.1945) அளித்துள்ளார்! அக்கல்விக் கழகம் என்ற அறக்கட்டளை அமைப்பு - பல கல்லூரிகளை மும்பையில் நடத்துகிறது. இது பாபா சாகேப் அவர்களது இறுதிக்கால ஏற்பாடு.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய நூல்களை வெளியிடும் பொறுப்பை ‘தாக்கர் அன்ட் கோ’ என்ற வெளியீட்டகம் ஏற்று, அவரது நூல்களைக் கொண்டு வந்தது.

அதில் நூல்களைப் பதிப்பிக்கும் மேலாளராக, நூற்களைப் படித்து, வாசகர்கள் தேவைக்கு ஏற்ப சில பகுதிகளை மாற்றியோ, சுருக்கியோ, பெருக்கியோ, வரிசையை மாற்றியோ வெளிவர ஏற்பாடு செய்யும் பணியில் இருந்தவர் யு.ஆர்.ராவ் என்பவராவார்.

அம்பேத்கரின் புத்தகக் காதல், அளவற்ற ‘மோகம்' பற்றி அவர் பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார்.

அம்பேத்கரின் நூற்களை பதிப்பிக்கவும், மேற்பார்வையிட்டு செப்பனிட்டுத் தரும் கடமையும், உரிமையும் உள்ளவராக இந்த யு.ஆர்.ராவ் அக்கம் பெனியாரால் நியமிக்கப்பட்டு, பணியாற்றியவர். அவர் டாக்டர் அம்பேத்கருடன் நெருங்கிப் பழகிடும் வாய்ப்புகளை நிரம்பப் பெற்றவர். இவர் 1945 முதல் 1949 வரை அப்பதிப்பகத்தில் பொறுப்பேற்று பணி யாற்றிய நிலையில், அவர் கூறும் பல்வேறு செய்திகள் மிகவும் ஈர்ப்பானவை.

பழைய பம்பாய் நகரில் டாக்டர் (அம்பேத்கர்) இருக்கிறார் என்றால், அவர் இவர்களது பதிப்பகம் - விற்பனையகத்திற்கு வராமல் இருக்கவேமாட்டாராம். தாக்கர் அன்ட் கோவிற்கு வந்து, அவர்களது பிற வெளியீடுகள், நூல்களையும் பார்த்து, விலை கொடுத்து வாங்கிக் கொண்டே செல்வார் என்கிறார் யு.ஆர்.ராவ்.

புத்தகங்கள்மேல் அவருக்கு எவ்வளவு தீராத ஆசை - ‘மோகம்‘ தணியாத ஒன்றோ அதேபோன்ற இன்னொரு ஆசை - சிறுபிள்ளைகளுக்குப் புதுப்புது பொம்மைகளைக் கண்டால் எப்படியோ, அப்படி - அக்கம்பெனியின் விற்பனைப் பிரிவான ‘ஸ்டேஷனரி’ பிரிவில் பல்வகையாக - நீளம், குட்டை, பல வண்ணங்கள் என்ற பல மாதிரி புத்தம் புதிய பேனாக்கள், எழுதுகோல்களைப் பார்த்து, எழுதி எழுதிப் பார்த்து ஏராளமானவற்றை விலைக்கு வாங்கிக் கொள்ளத் தயங்கவே மாட்டார்! ஒரு அரை டஜனுக்குக் குறையாமல் வாங்கி தனது கோட் பாக்கெட்டில் அடைத்துக் கொள்வாராம்.

தந்தை பெரியாருக்கும் சரி, நமது கலைஞருக்கும் சரி - அம்பேத்கருக்கும் இதில் உள்ள ஒற்றுமை - பலவகை பேனாக்களை வாங்கிப் பயன்படுத்துவது (நீளமானது, தடித்தது, பெரிய அளவு), எல்லாவற்றின் மீதும் இந்தத் தலைவர்களுக்கு அப்படி ஒரு தீராத கொள்ளை ஆசையாம்!

இந்த வெளியீட்டகத்தில் அவருக்கு அவரது புத்தக விற்பனையின்மூலம் கிடைக்கும் உரிமத் தொகை - ராயல்டியை ரொக்கமாகவோ, காசோலை மூலமோ எடுத்துச் செல்வதே அரிது; அபூர்வம்; காரணம், அத்தொகை முழுவதற்குமோ அல்லது பெரும் அளவுக்கோ அவர்கள் அக்கம்பெனியில் விற்கப்படும் பல புதிய வெளியீட்டு நூல்களையே விலை கொடுத்து வாங்கிப் போவாராம்! அவரது பொருளாதார நெருக்கடிபற்றி அப்போது அவர் சிந்திப்பதே கிடையாதாம்!

பழைய புத்தகங்கள் விற்பனை நிலையங்களைக் கூட டாக்டர் விட்டு வைப்பதே இல்லை.

அவைபற்றி பல சுவையான தகவல்களை நாளை படிப்போம்!''

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் தாழ்த்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் அடித்துக்கொலை!




மீரட்,அக்.25 உத்தரப்பிரதேச மாநிலம் பலாந்துசாகர் மாவட்டம், கேட்டலாப்பூர் பன்சோலி கிராமத்தைச் சேர்ந்தவர் தாழ்த் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணான சாவித்ரி தேவி (வயது 34). இவர் கடந்த 15.10.2017 அன்று அக்கிராமத்திலுள்ள குப்பைத் தொட்டியைதொட்டுவிட்டதால்தீட் டாகி விட்டதாகக் கூறி, அதே கிராமத் தைச் சேர்ந்த ரோகித் குமார், அவர் தாயார் அஞ்சுதேவி ஆகியோர் சேர்ந்து சாவித்ரிதேவியை சரமாரியாகத் தாக்கி னார்கள். சாவித்ரி தேவி ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில்,அவர் வயிற்றில் சரமாரியாக தாக்கினர். சாவித்ரி தேவியின் ஒன்பது வயது மகள் கண்முன்பாகவே இக்கொடுமை நடைபெற்றது.

மருத்துவமனையிலும் சிகிச்சை மறுப்பு!

சாவித்ரி தேவி கடுமையாகத் தாக்கப் பட்டதால் அதிகமான ரத்தப்போக்குக்கு உள்ளானார். சாவித்ரி தேவியைக் காப் பாற்றிட அவர் கணவர் திலீப் குமார் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அவரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சைக்குஅனுமதிக்காமல்மருத்துவ மனையிலிருந்து வெளியே அனுப்பி விட்டார்கள்.இந்நிலையில்கடந்த சனிக்கிழமையன்று வலி பொறுக்க முடியாத சாவித்ரி தேவியை மீண்டும் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கள் கூறினார்கள்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சொல்லுகிறார்!

இதுகுறித்து சாவித்திரிதேவியின் கணவர் திலீப் குமார் கூறியதாவது:

‘‘என்னுடைய மனைவி தவறுத லாகவே குப்பைத் தொட்டியைத் தொட்டுவிட்டார். ஆனால், ரோகித் மற்றும் அவருடைய தாயார் அஞ்சுதேவி என் மனைவியை கொடூரமாகத் தாக்கி னார்கள். அவர்கள் தாக்கூர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். கோத்வாலி தேகாட் காவல்நிலையத்தில் 15.10.2017 அன்றே புகார் கொடுக்கச் சென்றோம். ஆனால், எங்கள் புகாரை வாங்காத அதிகாரிகள் எங்களைத் துரத்தினர். கடந்த வெள்ளிக் கிழமை அன்றுதான் நாங்கள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்ப் பட்டது’’ என்றார்.
காவல்துறைத் தரப்பில் கூறப்படுவ தாவது:

ரோகித் குமார் மற்றும் அவருடைய தாயார் அஞ்சுதேவி ஆகியோர்மீது இந்திய தண்டனைச்சட்டப்பிரிவுகள் 323 (காயமேற்படும்படி தாக்கியது), 504 (இழிவுபடுத்தும் நோக்கில் அமைதியை சீர்குலைப்பது) ஆகிய பிரிவுகளின் கீழும், சனிக்கிழமை சாவித்ரி தேவி உயிரிழந்த நிலையில், திங்கள்கிழமை அன்று இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 304 (கவனக்குறைவால் இறப்பு), 316 (பிறக்கும் முன்பாகவே குழுந்தையைக் கொடூரமாகக் கொலை செய்வது) ஆகிய பிரிவுகளின்கீழும்,தாழ்த்தப்பட்ட,பழங் குடியினத்தவர்கள்மீதானவன்கொடு மைத் தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழும் சாவித்ரி தேவியைத் தாக்கிய இருவர்மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் பிரவீன் ரஞ்சன் கூறியதாவது:

‘‘தாழ்த்தப்பட்ட பெண்ணைத் தாக் கிய புகாரில் ஒரு பெண் மற்றும் அவர் மகன்மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள காவல்துறை அலுவலர் இவ்வழக்கில் விரைவில் விசாரணை செய்வார்’’ என்றார்.

கோத்வாலி காவல்நிலைய அலுவலர் தேபேஷ்வர் சிங் கூறுகையில்,

“உடற்கூறு ஆய்வில் தலையில் ஏற்பட்ட உள்காயத்தால்தான் அவர் இறந்திருப்பதாக அறிக்கை உள்ளது’’ என்றார்.

பந்தை அடிக்க முடியாதவர்கள் காலை அடிக்கிறார்கள்

மெர்சல்’ என்ற ஒரு திரைப்படத்தில் கூறப்பட்ட அப்படத்தின் கதாநாயகரால் சொல்லப்பட்ட வசனங்களை எதிர்கொள்ள முடியாமல், பி.ஜே.பி.யினர் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள்.
இவ்வளவுக்கும் அந்த வசனம் என்பது குற்றமுடை யதுமல்ல - சட்ட விரோதமானதுமல்ல; இன்னும் சொல்லப் போனால், பி.ஜே.பி.யால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை அதிகம் கொண்ட தணிக்கைத் துறையால் அனுமதிக்கப் பட்டவையே அந்த வசனங்கள்.
குறிப்பாக நடுத்தர மக்களையும், அதற்குட்பட்டவர் களையும் சிறுதொழில் செய்பவர்களையும் மிகக் கடுமை யாகப் பாதித்திருப்பது நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரியாகும்.
ஏதோ ஒரு திரைப்படத்தில் அதுபற்றி விமர்சிப்பதாக ஆத்திரப்படுபவர்கள் - பி.ஜே.பி.யில் உள்ள முன்னணித் தலைவர்கள் ஜி.எஸ்.டிபற்றியும், பண மதிப்பிழப்புப்பற்றியும் மிகக் கடுமையாகக் குறைகூறியிருக்கிறார்களே - அதற்கு என்ன பதில்? நாணயமான முறையில், நாகரிகமான முறை யில் பதில் சொல்ல வக்கில்லாமல் ஜி.எஸ்.டி.பற்றி விமர்சனம் செய்த மேனாள் மத்திய நிதியமைச்சர் (பி.ஜே.பி.) யஷ்வந்த் சின்காமீது இன்றைய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பயன்படுத்திய சொற்கள் வெட்கப்படத்தக்கவை. அவரது வயதை முன்னிறுத்தி வேலை வாய்ப்புக்கு இடமில்லை என்று சொல்லுவதெல்லாம் ஏற்புடையதுதானா? என்ன குறை சொல்கிறார்கள்? அது சரியா? தவறா? என்றுகூட சிந்திக்கப் பக்குவம் இல்லாத ஒருவர்தான் இந்தியாவின் மிக முக்கிய நிதித்துறையின் அமைச்சராக இருக்கிறார் என்பது வருத்தத்திற்குரிய ஒன்றே!
திரைப்படத்தில் விஜய் என்ற கதாநாயகர் ஜி.எஸ்.டி.பற்றி சொன்ன கருத்தைக்கூட விமர்சிக்கலாம்; அதில் ஒன்றும் குற்றம் கிடையாது. ஆனால், அந்த நடிகரைப்பற்றிக் கேவலமான வார்த்தைகளால் ஏசுவதும், அச்சுறுத்துவதும், அந்த வசனங்களைத் திரைப்படத்திலிருந்து நீக்கவேண்டும் என்று துள்ளிக் குதிப்பதும் ஆரோக்கியமானதுதானா? ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை, கருத்துரிமைக்கு இடம் கிடையாதா?
பி.ஜே.பி. முன்னணியினரின் தரமற்ற பேச்சுகளைக் கண் டித்து, தலைவர்கள் அறிக்கையினைக் கொடுத்துள்ளார்கள். அதே வரிசையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் அவர்களும் தன் கருத்தினை வெளியிட்டுள்ளார். அப்படி வெளியிடுவது அவருக்கு உள்ள உரிமை - ஏன் கடமை யும்கூட!
முடிந்தால், அவர்களுக்குப் பதில் சொல்ல முன்வர வேண்டும்; இல்லை என்றால், கண்டுகொள்ளாமல் வெளி யேறவேண்டும்.
ஆனால், நடந்தது என்ன?
தமிழக பி.ஜே.பி.யின் தலைவராக இருக்கக்கூடிய படித்த வரான டாக்டர் தமிழிசை அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்மீதும் கட்சியின்மீதும் அவதூறுச் சேற்றை வாரி இறைக்கலாமா?
கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறார், நிலங்களை அவர் கட்சியினர் அபகரிக்கிறார்கள் என்பது போன்ற வார்த்தை களை வாரி இறைப்பது அவரது இயலாமையையும், கண் ணியமற்ற தன்மையையும் தான் வெளிப்படுத்துகிறது.
உண்மை என்னவென்றால், பஞ்சமி நிலங்களைப் பறிகொடுத்தவர்கள் அவர்கள்.
கொச்சைப்படுத்திப் பேசியதற்காக தமிழக பி.ஜே.பி. தலைவர்மீது மான நட்ட வழக்குக் கூடத் தொடுக்க முடியும் - தொடுக்கவும்வேண்டும்.
நடைபாதைகளில்  கோவில் கட்டுவது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து கோவில்களைக் கட்டுவதெல்லாம் இந்துத்து வாவாதிகளுக்கு சர்வசாதாரணம்! அத்தகு அத்துமீறல்களை, ஆக்கிரமிப்புகளைப்பற்றி பா.ஜ.க. தலைவர்கள் பேசு வார்களா? அதிகாரம்தான் கையில் இருக்கிறதே - அவற்றை அகற்றுவதற்கு முன்வருவார்களா?
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, சமூகநீதிக்காக, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இலட்சியங்களை முன்னெடுத்து உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போர்க் குரல் கொடுப்பவர்களை களத்தில் நின்று போராடுபவர்களை, கட்சி நடத்துபவர்களை கொச்சைப்படுத்துவது என்பது பி.ஜே.பி.யின் இந்துத்துவாவின் கொள்கைகளுக்கும், நோக்கத்துக்கும் உகந்த ஒன்றே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில்தான் தமிழக பி.ஜே.பி. தலைவராக இருக்கக்கூடியவரின் பேச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். இதற்குப் பதிலடி என்பது ஏட்டிக்குப் போட்டியாக கொச்சை வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபடாமல் இந்துத்துவா சக்தி களின் ஆணிவேரை மண்ணும், மண்ணடி வேருமாக வீழ்த் துவதுதான் சரியான பாடம் போதிப்பாக இருக்க முடியும்.
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரைக் கேவலமாகப் பேசுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களை, கரூரில் பி.ஜே.பி.யினர் தாக்கி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பி.ஜே.பி.க்கு எப்படி இந்தத் தைரியம் வந்தது? மாநிலத்தில் உள்ள அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் தொங்கு சதையாக இருந்து வருவதால் ஏற்பட்ட அசட்டுத் தைரியம்தான் இது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று எச்சரிக்கிறோம். கடைசியாக ஒன்று - பந்தை அடிக்க முடியாவிட்டால், காலை அடிப்பது குற்றமாகும் (Foul Game).  ஆடும்வரை ஆடுங்கள் - மக்கள் மத்தியில் பி.ஜே.பி.யின் முகத்திரை கிழிந்து வருகிறது. அதன் ஆட்சியின் நாள்கள் எண்ணப் படுகின்றன என்பது மட்டும் உண்மை!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...