Monday, October 30, 2017

"பெரியாரை (சு)வாசிப்போம்!" தமிழர் தலைவர் உரை மீதான ஓர் உரையாடல் (2)






தமிழர் தலைவர் உரையைச் செவி மடுத்தவர்கள் தந்தை பெரியார் மீதான தத்துவப் புரிதலுக்கு நமது தலைவர் அவர்கள் இது போன்ற சிறப்புச் சொற்பொழிவுகளை அடிக்கடி நடத்திட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
குவைத்திலிருந்து கழகத் தோழர் செல்ல பெருமாள் தொலைப்பேசியில் பேசுகிறார்: நாங்கள் எங்கள் படிப்பகத்திற்கு "தத்துவ ஞானி பெரியார்" என்று தான் பெயர் சூட்டியுள்ளோம்.
ஆசிரியர் உரையைக் குறுந்தகடாக வெளியிடுங்கள் என்ற கோரிக்கைகள் வெளி வருகின்றன.
நவம்பர் 2,3 ஆகிய இரு நாள்களில் பெரியார் திடலில் மறுபடியும் இரு பொருள்களில் தமிழர் தலைவர், உரை நிகழ்த்தவிருக்கிறார் என்ற மகிழ்ச்சியான தகவலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தந்தை பெரியார் யார்? அவரின் கோபம் எந்த அடிப்படையிலானது? அவர் யாருக்காகப் பேசுகிறார் என்பதை முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய பட்டமளிப்பு விழாப் பேருரையிலிருந்து ஒரு மாணிக்கக் கல்லையெடுத்து ஒளியூட்டினார்.
தந்தை பெரியார், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது, தான் ஓர் அழிவு வேலைக்காரன் என்று சொன்னதை எடுத்துக் காட்டினார் ஆசிரியர்.
உண்மையிலேயே இப்படி ஒருவர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்துவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அதுதான் தந்தை பெரியாரிடத்தில் அளவுக்கு மேல் குவிந்து கிடக்கிறதே!
நீதிபதி ஆசனத்தில் பார்ப்பன நீதிபதி அமர்ந்து இருக்கையில், பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு என்று சொன்ன துணிச்சல் அய்யாவுக்கன்றி வேறு யாருக்குத்தான் வரும்?
"சமுதாயச் சீர்த்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் இடிந்துபோன - துவண்டு போன - ஆடிப்போன பாகங்களைச் சுரண்டி கூறுகுத்தி, மண்ணைக் குழைத்து சந்து பொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அநேகர் கருதி இருக்கின்றார்கள். ஆனால் நம்மைப் பொருத்த வரை நாம் அம்மாதிரி துறையில் உழைக்கும் ஒரு சமுதாய சீர்திருத்தக்காரனல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். மற்ற படி நாம் யார்? என்றால், என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் (மக்கள் சமுதாயம் என்றால் உலக மக்கள் சமுதாயம்) ஏன் சீர் திருத்தப்பட வேண்டிய நிலைமைக்கு வந்தது? என்பதை உணர்ந்து உணர்ந்தபடி மறுபடியும் அந் நிலை ஏற்படாமல் இருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில் அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கின்றபடியால் சமுதாயச் சீர்திருத்தம் என்பதைப்பற்றி மற்ற மக்கள் அநேகர் நினைத்திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கையையும் உடையவராய்க் காணப்பட வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.
இதனாலேயே தான் பலவற்றில் உலக மக்கள் உண்டு என்பதை இல்லை என்றும், சரி என்பதை தப்பு என்றும், தேவை என்பதை தேவை இல்லை என்றும், கெட்டது என்பதை நல்லதென்றும், நல்லது என்பதை கெட்டது என்றும், காப்பாற்றப்பட வேண்டும் என்பதை, ஒழிக்க வேண்டும் என்றும், மற்றும் பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயத்தை கூறுவோராக - செய்வோராகக் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஆனால் நம்போன்ற இப்படிப்பட்டவர்கள் உலகில் நல்ல பெயர் சம்பாதிப்பதும் மதிக்கப்படுவதும் பழிக்கப்படாமல் - குற்றம் சொல்லப்படாமல் இருப்பதும் அருமை என்பது மாத்திரம் நமக்கு நன்றாய்த் தெரியும்."
(குடிஅரசு - 3.5.1931)
என்கிறார் தந்தை பெரியார் உலகத் தலைவர் பெரியாரின் தொண்டு எத்தகையது என்பதை இதன் மூலம் நாம் அறிய முடிகிறது.
தந்தை பெரியார் மேலுக்கு மருந்து தடவும் மருத் துவர் அல்லர். அவர் ஓர் அறுவை சிகிச்சை மருத்துவர் என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டார் ஆசிரியர்.
ஆசிரியராகவே இதனைக் கற்பித்துக் கூறவில்லை. தந்தை பெரியாரே தன்னைப் பற்றி அப்படித் தான் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
"எங்கள் தொண்டு கஷ்டமான வேலை, மக்களுக்குப் பிடிக்காது. எங்கள் வேலை அறுவை சிகிச்சை மாதிரி புண்ணுக்கு மருந்துப் பூசி சவுகரியப்படுத்தலாம் என்பது அல்ல - கொடிய புண் ஆனதினால் கத்தி கொண்டு அறுத்து சிகிச்சை  செய்வது போன்றது ("விடுதலை" 30.10.1960).
"நோயாளியின் புண்ணைக் கிழித்து மருந்திடும் வேலையை டாக்டர் மேற்கொண்டால் அது நோயாளி யின் மீது பழி வாங்கும் எண்ணமில்லை. அது போலவே நமது குறைகள் நீங்க பழிகள் நீங்க பல வேலைகளைச் செய்கிறோம் (விடுதலை 29.1.1954) என்று தந்தை பெரியார் சொன்னது குறித்து ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டபோது "பெரியார் கையிலிருந்த கத்தி தாக்குவதற்கு அல்ல நோயாளியின் உயிரைக் காப்பதற்கு" என்றார்.
தந்தை பெரியாருக்கு இருந்தது மானுடப் பற்று ஒன்றே - வளர்ச்சிப் பற்று ஒன்றே! அதன் காரணமாகத் தான் வேறு எதிலும் அவர் பற்று கொள்ளவில்லை என்பதை நிறுவினார் தமிழர் தலைவர்.
நமது சமுதாயத்தைப் பொறுத்தவரை பிறவியிலேயே வருணத்தைப் புகுத்தியிருப்பதுதான் - பிறவியிலேயே பேதத்தை விதித்து இருப்பது தான் மிகப் பெரிய கேடு.
இது மனிதன் செய்த ஏற்பாடு என்று சொல்லி யிருந்தால் என்றைக்கோ அது ஒழிந்து போயிருக்கும், கடவுள் செய்த ஏற்பாடு என்று நம்ப வைக்கப்பட்டதால், காலம் காலமாக அது  நிலைத்து நிற்கிறது என்று தந்தை பெரியார் கருத்தினைப் பதிவு செய்தார்.
அந்தக் கடவுளைக் காட்டித்தான் நம்மை நம்ப வைத்தனர். அதில் மாற்றம் செய்வது பாவ காரியம் என்று பயப்பட வைத்தனர். எனவே தந்தை பெரியார் அந்தக் கடவுளின்மீதும் கை வைத்தார்.
கடவுளின்மீது அடுக்கடுக்கான வினாக்கணைகளைத் தொடுத்தார் அதன் அஸ்திவாரத்தினை ஆட்டங் காண வைத்தார்.
இதோ பெரியார் பேசுகிறார்.
பகுத்தறிவு கொண்ட மனிதன் சாந்தி, அன்பு, திருப்தி இல்லாமல் கவலையில், அதிருப்தியில் குறையோடு சாவதற்குக் காரணம் கடவுள் அல்லாமல் வேறு என்னவாய் இருக்கக்கூடும்?
அவனவன் முட்டாள்தனம்தான் காரணம் என்றால் பகுத்தறிவு இருப்பது எதற்காக? முட்டாள் தனத்தை உண்டாக்கவா? பகுத்தறிவு இல்லாத ஜீவன்களுக்கு இல்லாத கெட்ட குணங்கள், கவலைகள், குறைபாடுகள் இனவெறுப்புகள், துரோகங்கள் பகுத்தறிவுள்ள ஜீவனான மனிதனுக்கு ஏற்படுவானேன்? பகுத்தறிவற்ற துஷ்ட ஜந்துக்களிடமும் இல்லாத கெட்ட குணங்கள் பகுத்தறிவு உடைய மனிதனிடத்தில் இருப்பானேன்? கடவுளைக் கண்டதாலா? கடவுளைக் கற்பித்துக் கொண்டதாலா? கடவுள் தன்மையை, கடவுள் சக்தியைத் தவறாகக் கொண்டதாலா? எதனால் என்பது பகுத்தறிவுக்குக்கூட எப்படிப் பரிகாரம் செய்து கொள்வது என்பது முடியவில்லையானால், பகுத்தறிவின் பயன்தான் என்ன? கடவுளின் தன்மை தான் என்ன?
கடவுள் எதற்காக? அது மனிதனுக்கு தானாகத் தோன்றியதா? அல்லது வேறு மக்களால் தோற்றுவிக்கப்பட்டதா? தானாகத் தோன்றி இருக்குமானால், ஏன் எல்லோருக்கும் தோன்றவில்லை? தோன்றியவர்களுக்கு ஏன் பலவிதமாய்த் தோன்றப்படுவானேன்?
தோற்றுவிக்கப்பட்டதானால், எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது? எந்தக்காரணத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்டதோ, அந்தக்காரணம் நிறைவேறிற்றா? தோற்றுவித்தவர்கள் வெற்றி கண்டார்களா? கடவுள் காணப்பட்டும், அல்லது கற்பிக்கப்பட்டும் மனிதன் ஏன் கடவுள் தன்மைக்கு, கடவுள் விரும்புகிற தன்மைக்கு மாறாக நடக்கிறான்?
கடவுளால் சர்வமும் நடைபெறுகின்றன. கடவுள் சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளவர் என்பதாக இருந்தும் கடவுளால் என்ன காரியம் நடக்கிறது? எதையும் கடவுள் பெயரைச் சொல்லி மனிதன்தான் செய்கிறான்; கடவுளை அலட்சியப்படுத்திவிட்டு, கடவுளுக்கு இஷ்டமில்லாத காரியம் என்பதைக்கூட மனிதன் செய்கிறான். மனிதனுக்கு வேண்டாததும், மனிதனுக்கு கேடான காரியமும் நடந்தவண்ணமாய் இருக்கின்றன. ஒரு காரியமாவது கடவுள் உணர்ச்சி உள்ள உலகில் பூரணத்துவம்  அதாவது, திருப்தி உள்ளதும் குறைஇல்லாததுமான காரியம் என்பதாகக் காணக் கூடியதாகவே இல்லை. மனித எத்தனப் பாதுகாப்பு இல்லாவிட்டால், வாழ்க்கையில் ஒரு காரியமும் பத்திரப்படாது என்பதோடு  கடவுளுக்குக்கூடப்  பத்திரமில்லை என்றே சொல்லலாம்.
தந்தை பெரியார் தத்துவ விளக்க நூலிலிருந்து இந்தப் பகுதியைத் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டினார்.
பெரியார் தொடுத்த இந்த வினாக்களுக்கு எந்த வேத விற்பன்னர் பதில் சொன்னார்? எந்த சங்கர மடம் பதில் தந்தது சொல்லுங்கள் பார்க்கலாம்.
தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகும் தந்தை பெரியார் சிலைகள் நாட்டில் ஏராளம் திறக்கப்பட்டன. அவற்றின் பீடங்களில் எல்லாம் கடவுள் மறுப்பு வாசகங்கள் செம்மாந்து காணப்படுகின்றன.
இந்தப் புரட்சி, உலக அரங்கில் வேறு எங்கு நடந்திருக்கிறது?
தந்தை பெரியார் கடவுள் மறுப்புப் புரட்சி, உலக நன்மைக்கானது - வளர்ச்சிக்கானது - சுரண்டலின் சூள் அறுக்கக் கூடிய மனித சமத்துவத்துக்கான சகல கூறுகளும் உடையது.
இன்றைக்கு  டெங்குக் காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது ஏராள உயிர்ப் பலிகள் அன்றாடம், அரசாங்கம் என்ன செய்கிறது? டெங்குக்குக் காரணமான கொசுக்களை ஒழிப்பதற்கு மருந்து அடிக்கிறது, எங்கும் தண்ணீர்த் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதமும்கூட விதிக்கிறது!
இதையேதான் தந்தை பெரியாரும் செய்தார் என்று தமிழர் தலைவர் நிகழ்கால நடவடிக்கையோடு ஒப்பிட்டுச் சொன்னது மக்களைச் சிந்திக்க செய்யுமே!
"இந்த நாட்டில் ஜாதி இழிவைப் போக்கப் பாடுபட்டவர்கள் எல்லாம் மலேரியாவுக்கு மருந்து கொடுப்பவர்கள் போன்றவர்கள், மற்றவர்களுக்கு வராமல் தடுக்கக் கூடியவர்கள் இவர்கள் அல்ல. நானோ மலேரியாவுக்குக் காரணமான கொசு வசிக்கிற தண்ணீர்த் தேக்கத்தைக் கண்டு கொசுவை அழித்துத் தடுக்கும் வைத்தியன் போன்றவன்"
- தந்தை பெரியார்
("விடுதலை" 4.11.1961)
தந்தை பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி - சமுதாய மருத்துவர் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

-----------
நமது படம் மூடர் வீட்டில் பூசையில் இருக்க வேண்டுமா?
“மக்கள் நலத்தில் கவலை கொண்டு, பொதுக் காரியத்தில் முனைந்திருப்பவர்கள், சிறிதாவது ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து சாதிக்க வேண்டும் என்று கருதுவார்களேயானால், அவர்களுக்கு முக்கியமான ஒரு யோக்கியதை இருக்கவேண்டும். அதென்னவென்றால், இப்படிப்பட்ட போலிக் கூப்பாடுகளுக்கும் கூலி மாரடிப்புகளுக்கும் மனம் கலங்காமல் இருக்கவேண்டியதேயாகும். மற்றும், ‘நமது கொள்கையைப்பற்றி ஊரார் என்ன நினைப்பார்கள் ? நம்மைப் பற்றி ஊரார் என்ன பேசுவார்கள்?’ என்கின்ற விஷயத்தைப்பற்றி எவ்வளவுக்கெவ்வளவு கவனியாமல், யாவர் அலட்சியமாய் இருக்கின்றார்களோ அவர்களேதாம் அவ்வளவுக்கவ்வளவு புதிய எண்ணங்களையும், புதிய உணர்ச்சிகளையும்,  புதிய  கொள்கைகளையும் மக்களுக்குள் புகுத்தவும், அதைக் காரிய அனுபவத்தில் கொண்டு செலுத்தச் செய்யவும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
உதாரணமாக, நிர்வாணக் கொள்கையை ஒரு நாட்டில் வெற்றிபெற நடத்த வேண்டும் என்று ஒருவன் கருதுவானேயானால் அவன் அக்கொள்கையின் அவசியத்தையும் சரியா, தப்பா என்பதையும் கவனிக்க வேண்டுமேயொழிய, மற்றபடி இக் கொள்கையை எடுத்துச் சொன்னால் மக்கள் என்ன சொல்லுவார்கள் என்று நினைப்பானே யாகில், அக் கொள்கைக்காரன் அந்த வேலைக்குத் தகுதி அற்றவனே ஆவான். நிர்வாணக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தால் பஞ்சாலைத் துணியாலை வியாபாரிகள் எல்லோரும் எதிர்ப் பிரச்சாரத்துக்கு வந்துவிடுவார்கள்; ஜவுளி வியாபாரிகள், ஆலைக் காரர்கள் எல்லோரும் விஷமப் பிரச்சாரத்துக்கு வருவார்கள். இவர்கள் வார்த்தைகளைக் கேட்ட சாதாரண பாமர மக்கள் எல்லோரும் நிர்வாணப் பிரச்சாரகர்கள் மீது கல்லெடுத்துப் போடவும் வருவார்கள். இவற்றைச் சமாளிக்கவோ அல்லது அதன் பயனை அடையவோ தயாராக இருப்பவர்கள்தாம் இந்தப் பிரச்சாரத்தில் புகவேண்டும்; இவர்கள்தாம் வெற்றி பெறக்கூடும். அப்படிக்கில்லாமல், ‘நமது உருவப்படம் மூடர் வீட்டில் பூசையில் இருக்க வேண்டும்’ என்று கருதுகின்றவர்கள் இவ் வேலைகளைச் செய்யச் சிறிதும் தகுதியற்றவர்களேயாவார்கள். ஆதலால், தனக்குள் உறுதியும் அதனால் ஏற்படும் பலனை அனுபவிக்கத் துணிவும் உள்ளவர்களால்தாம் பயன்படத்தக்க மாறுதல்களை உண்டாக்க முடியும் என்றும் அப்படிப்பட்டவர்களால்தாம் உலகில் தலைகீழான மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் எடுத்துக்காட்டுவதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.
- தந்தை பெரியார்,  (‘குடிஅரசு’, 25.12.1932)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...