Friday, October 27, 2017

அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (2)




‘தாக்கர் அன்ட் கோ’வின் முக்கிய பொறுப்பாசிரி யரான யு..ஆர்.இராவ் அவர்கள் அம்பேத்கர் புத்தக வெளியீட்டகத்திற்கு வரும்போது, அவருடைய நூல்களை வெளியிடுமுன் சில மாற்றங்கள் செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற தனது கருத்தை டாக்டரிடம் கூறி, அவரைக் கேட்க விரும்புவதாக அதன் தலைமை நிர்வாகியிடம் சொன்னார்.
அவர் இதைக் கேட்டு அதிர்ந்து போய், ‘யோவ், அவரிடம் போய் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் மாற்றம் செய்யுங்கள் என்று கேட்கப் போகிறீர்களா? டாக்டர் அதை எப்படி எடுத்துக்கொள்வாரோ தெரியவில்லை; ஏன் உங்களுக்கு இந்த வீண்வம்பு? அவர் எழுதிக் கொடுத்ததை அப்படியே வெளியிட்டு விடக்கூடாதா?’ என்று தயக்கத்துடன் கேட்டார்.

யு.ஆர்.ராவ், ‘இல்லை இந்த மாற்றம் செய்தால் வாசிப்பதற்கு மேலும் சுவையைக்கூட்டி விறுவிறுப்பு டன் அமையும் என்றுதான் கூறலாம்‘ என்று, டாக்டர் அம்பேத்கரிடம் சொன்னபோது, அவர் இசைவு தந்தார், எந்த மறுமொழியும் சொல்லாமல் என்பது இவருக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது! புத்தகம் சிறப்பாக அமைந்தது!

டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, டாக்டர் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே, (1950 இல் இந் நிகழ்வு) டி.ஏ.தலாங் (D.A.Talang) என்ற பிரபல கல்வி யாளர் சேர்த்து வைத்திருந்த ஏராளமான புத்தகங் களைக் கொண்ட தனியார் நூலகம் பம்பாய் மட்டுங்கா பகுதியில் இருந்தது; அவர் இறந்தவுடன், அவரது சொந்தக்காரர்கள் அந்த நூல்களை விற்றுவிடுவதாக உள்ளார்கள் என்று, அவரது பக்கத்து வீட்டுக்கார நண்பர் ஆர்.கே. என்பவர் கூறுகிறார் என்று கூறி, அப்புத்தகங்களின் நீண்ட பட்டியலைக் கொடுத்தார். தனித்தனியே இவைகளை விற்பதாக உள்ளார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால், அதனை அப்படியே பெற்றுக்கொள்ளலாம் என்றவுடன், தலாங்கின் வீட்டு நூலகமாக ஆக்கினால், நிச்சயம் அது சிறப்பானதாக இருக்கும். எனவே, பெரும் புத்தகப் பிரியரான அந்த மனிதரின் நூல்களை வாங்கலாம்; விலை எவ்வளவு சொல்கிறார்கள் என்று விசாரியுங்கள் என்றார் அம்பேத்கர்.

நான் புத்தகம் ஒன்றுக்கு ஆறு ரூபாய் விலை போட்டு எடுத்துக் கொள்ளச் சொல்லுகிறார்கள் என்று, விசாரித்துவிட்டுச் சொன்னேன்.

உடனே டாக்டரிடமிருந்து ஒரு ‘புயல்’ அடித்தது!

‘என்ன நான் என்ன கோடீசுவரனா? அவ்வளவுப் பணம் என்னால் கொடுக்க முடியுமா? இந்தப் பணம் எங்கேயிருந்து கொடுக்கப்படுகிறது தெரியுமா? People’s Educational Society  யிலிருந்து. அதனிடம் உள்ள நிதியே குறிப்பிட்ட அளவுதான்.

அந்த  தலாங் உறவினர்களிடம் சொல்லுங்கள். அவர்களுடைய அத்துணை நூல்களையும் அது பெரியதோ, சிறியதோ, பவுண்ட் அட்டையோ, மெல்லிய சிறு வெளியீடோ சகட்டுமேனிக்கு புத்தகம் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் என்று போட்டுத் தரலாம்; அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டால், கேட்டுச் சொல்லுங்கள், வாங்கலாம்‘ என்று கூறி, பேரம் செய்தார்! அவர்களும் ஒப்புக்கொண்டு வாங்கினார். ஒரு லாரி லோடு அளவுக்கு வாங்கி அவரது கல்லூரி நூலகத்திற்கு அனுப்பினார்.

இவருடைய தனிப்பட்ட வீட்டு நூலகப் புத்தகங் களையெல்லாம் - அரிய நூல்கள் சேகரிப்பு ஆகும்; அவற்றை அவர் துவக்கிய சித்தார்த்தா கல்லூரியே அவரது நூலகத்தைப் பாதுகாத்து வந்தது. அவர் மறைந்த பிறகு இதுபற்றியும் யாருடைய பொறுப்பில் அவரது வீட்டு நூலகம் பராமரிப்புக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்பதற்கும் வழக்குகள் நடந்தன.

டில்லி உயர்கல்வி நூலகத்திற்கு இதை அளித்தால் பயனுள்ளதாக இருக்கும். அது முடியுமா? என்று நாங்கள் ஆராய்ந்தோம். அப்புத்தகங்கள் பண்டல் பண்டல்களாக - பார்சல் மூட்டைகளாக்கப்பட்டதால், அவர்கள் எடுத்துக்கொள்ள முன்வரவில்லை என்பது தான் துயரமானது!

- கி.வீரமணி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...