Friday, October 27, 2017

கந்து வட்டி ஒழிவது எப்போது?

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தீக்குளித்தனர். இதில் நால்வரும் உயிரிழந்து விட்டனர். கந்து வட்டி கும்பலிடம் சிக்கி மீளமுடியாமல் தமிழகத்தில் பல குடும்பங்கள் ஊரை காலி செய்து விட்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். பலரோ தற்கொலை செய்து கொள்கின்றனர். கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின்படி, அதிக வட்டி வசூல் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் வகையில் கந்துவட்டி தடுப்புச் சட்டம் 2003இல் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த சட்டம் அப்பாவி மக்களை காப்பதாக தெரியவில்லை. கடன்பட்டு விட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரண காரியமல்ல. ஏனெனில் ஒருமுறை கடன் பட்டவர்கள் அதிலிருந்து மீள முடியாத அளவிற்குச் சுழலில் சிக்கிக் கொள்கின்றனர்.

கந்து வட்டி, பல்வேறு பெயர்களில் மருவி விட்டது;  நகரங்களை சாலையோர வியாபாரிகளில் மணி வட்டி என்று கூறி கொடுப்பார்கள். அதாவது 10 மணிக்கு ஒரு தொகை கொடுத்தால் அதற்கான வட்டியை 12 மணிக்கு கொடுத்து விடவேண்டும் தாமதமானால் தரத்தவறிய வட்டிக்கு வட்டி போட்டு விடுவார்கள். 500 ரூ கொடுத்துவிட்டு ஒரே நாளில் 5000 வரை கூட வசூல் செய்யும் கொடுமை இன்றும் இருக் கிறது.

இப்படி பல்வேறு வகையில் வட்டித் தொழில் தமிழகம் முழுவதும் உள்ளது. வட்டிக்குப் பணம் வாங்கும் பல அப்பாவிகள்  பலியாகி வருகின்றனர். தமிழகத்தின் மத்திய மாவட்டப்பகுதிகளில் சிறிய தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருள் வாங்க வட்டி வாங்குவார்கள். இவர்கள் தயாரித்த பொருட்களை வாங்க வருபவர்களால் வட்டிக்கு வாங்க மிரட்டப்படுகிறார்கள். இதில் தொழிற்சாலை, வீடு, தோட்டம் என அதற்கான ஆவணங்களை அடமானம் வைத்துவிடு வார்கள். தற்போது ஆதார் அட்டை, ரேசன் கார்டு, ஏடிஎம் கார்டுபோன்றவற்றை வட்டிக்கு கொடுப்பவர்கள் பிடுங்கி வைத்துக்கொள்கிறார்கள்.

வட்டிகொடுக்கமுடியாமல் போகும் நேரத்தில் வீடு தோட்டம் என அனைத்தையும் இழந்து பரதேசிகளாக வேறு ஒரு ஊருக்கு சென்று கூலித்தொழில் செய்து பிழைக்கும் கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல!

மீட்டர் வட்டி என்ற ஒன்று உண்டு. ஒரு லட்சம் ரூபாய்க்கு 85 ஆயிரம் மட்டுமே கொடுப்பார்கள். வாரம் 10 ஆயிரம் வீதம் 10 வாரங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கட்ட வேண்டும். ஒருவாரம் தாமதித்தாலும் வட்டி இருமடங்காகும்.

சென்னை போன்ற நகரங்களில் சிறுவணிகர்கள் முதல் ஏழைகள் வரை வாங்கும் வட்டியில் ஒரு வாரத்திற்கு 10 ஆயிரம் கடன் வாங்கினால் அதில் 2 ஆயிரம் எடுத்துக் கொண்டு 8 ஆயிரம் கொடுப்பார்கள். ஒரு வாரத்தில் திருப்பி செலுத்தும் போது 10 ஆயிரம் செலுத்த வேண்டும். 

தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியா குமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் கடந்த 15 ஆண்டுகளாக ஏராளமான நிலமோசடி, கந்து வட்டி மூலம் வீடுகள், நிலங்களை அபகரிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் டிஜிபி அலுவலகத்தில் குவிந்தன. சட்டம் சொல்வது என்ன? கடன் பெற்றவர்களிடம் கந்து வட்டி, மணி நேர வட்டி, தண்டல் என வட்டிப் பணம் வசூலிப்பவர்களை ஒடுக்கும் விதமாக வும், வட்டிக் கொடுமையால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பாற்றவும் கடந்த 2003ஆம் ஆண்டு, கந்து வட்டி தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டம் தொடர்பான ஆணை, கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர், 14ஆம் தேதிஅரசிதழில் வெளியிடப் பட்டது.

அதில் கந்து வட்டி, ரன் வட்டி என்ற பெயரில் கடன் பெற்றவர்களிடம் அதிக பணம் வசூலிப்பது நிரூபிக்கப்aபட் டால், மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் என்ன செய்கிறார்கள்? வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு ஆண்டு முழுவதும் தவிக்கும் அப்பாவி மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். அப்பாவிகளைக் காக்க கந்து வட்டி தடுப்பு சட்டம் மூலம் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் சோகம்.   
நெல்லையில் நடந்த அவலம் மிகவும் கொடூரமானது, வட்டிக்கொடுமையால் கடுமையாக மிரட்டப்பட்டதன் விளைவாக 6 முறை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத் தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இசக்கிமுத்துவின் குடும்பம் இந்த கொடூர முடிவிற்கு வந்துவிட்டது.   

6 முறை மனு கொடுத்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அதன்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அப்படியே அவர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு இந்த புகார் குறித்துவிசாரிக்க அனுப்பியிருந்தார் என்றால் அந்த மனு எந்த நிலையில் உள்ளது என்று விசாரித்தாரா? மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் மனுக்களைப் பெறுவது அதை துறைவாரியாக பிரிப்பது என்று பல அலுவலர்கள் இருக்கின்றனரே!

 தற்போதைய அரசு மனித உயிர்களை பலிவாங்கி ஆட் சியாளும் ஆட்சியாகவே அமைந்துவிட்டது, நிர்வாகச் சீர்கேட்டின் உச்சம் தான் இந்த தற்கொலைகள். சட்டம் நிறைவேற்றுவது முக்கியமல்ல. அது எப்படி செயல்பாட்டுக்கு வருகிறது என்பதுதான் முக்கியம். வேலியே பயிரை மேய்வதுபோல, காவல்துறையே கந்துவட்டிக்காரர்களுக்குப் பெருந்துணை என்றால், கந்து வட்டி ஒழிவது எப்போது?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...