Tuesday, November 21, 2017

தமிழக மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது மத்திய அரசு: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

 சென்னை, நவ. 20- தி.மு.க. செயல் தலை வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:


செய்தியாளர்: தமிழக மீனவர்களை இந்திய கடற்படை சுட்டதாகவும், மீன வர்களை இந்தியில் பேசுமாறு கட்டா யப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந் துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அது இந்திய கடற் படை சுட்ட குண்டு இல்லை என்றும், அதுபற்றி விசாரணை நடப்பதாகவும் மாறுபட்ட தகவலை தெரிவித்துள்ளாரே?

மு.க.ஸ்டாலின்: ராமேசுவரம் பகு தியில் தமிழக மீனவர்கள் சுடப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. அதை கண்டித்தும், தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அங்கிருக்கக்கூடிய மீனவர்கள், தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், எங்கிருந்து அந்த குண்டு வந்தது என்று ஒரு கேள்வியை எழுப்பி, இப்படியொரு கருத்தினைச் சொல்லியிருப்பது, பாதிக் கப்பட்ட மீனவர்களின் உணர்வுகளை உள்ளபடியே கொச்சைப்படுத்துவது போல அமைந்திருக்கிறது, என்பதை மிகுந்த வேதனையோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

செய்தியாளர்: ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தில் இரவு முழுவதும் தொடர்ந்து சோதனை நடந்து கொண்டிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?.

மு.க.ஸ்டாலின்: ஏற்கெனவே இது குறித்து நான் பலமுறை சொல்லியிருக் கிறேன். முன்னாள் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா இறந்தபிறகு, இந்த ஆட்சியில் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் அலுவலகத்திலும், வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதன் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. அதன் பிறகு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்து, ரூ.89 கோடி ரூபாய் பணம் கொடுக்கப் பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அதில் முதல்அமைச்சர் உள்பட பல அமைச்சர்களின் பெயர்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன. அவர்கள் மீது இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டது?.

அதுமட்டுமல்ல, டி.ஜி.பி. மற்றும் இதே அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகி யோர் குட்கா விற்பனை செய்ய மாமூல் வாங்கியதை அதே வருமான வரித்துறை சோதனை செய்து, வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு என்ன வானது?. நத்தம் விஸ்வநாதன் வீட்டில் சோதனை நடந்தது, அன்புநாதன் வீட் டில் சோதனை நடந்தது, மணல் மாபியா சேகர்ரெட்டியின் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடந்தது, சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி வீட்டில் சோதனை நடந்தது, இவைகள் எல்லாம் என்ன ஆயின?.

எதற்காக இந்தச் சோதனைகள் நடை பெற்றன? அவற்றில் உண்மையாக என்ன வெல்லாம் கண்டுபிடித்து இருக்கிறார் கள்? என்னென்ன வழக்குப் போட்டு இருக்கிறார்கள்? போன்றவற்றிற்கெல் லாம் விளக்கம் வந்தபிறகுதான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

கார்த்திகை தீபத்தின் கதையளந்த கதை கேளீர்!

"விளக்கிடந் தீர்த்தம் வெண்ணீறுத் திராட்சம்

புத்திரன் பார்ப்பான் புராணங் கீர்த்தனை

அருச்சனை யட்சரம் அறங்கள்பலவே!"

சைவர்கள் திருக்கோயில்களுக்கு விளக்கேற்றி வைத்தல், சேத்திரங்களை வலம் வருதல், ஆறு குளங்களில் போய் - குளித்தல் - பார்ப்பனர்களைக் காத்தல் - புராணங்களைப் பரப்புதல் போன்ற முப்பத்திரண்டு செயல்களைச் செய்தலாம்!

சிவநெறி மாலை 7ஆம் பாட்டில் விஷ்ணு, பிர்மாவிற்கும் எட்டாத சிவன் ஆலயத்தில் விளக்கேற்றினால் - அனைத்துப் பாவங்களும் நீங்குமாம். கைலாயம் சேர்வார்களாம் என்று எழுதியிருக்கிறது. இதற்கு ஆதாரமாய், காசிகாண்டம், குபேரனுக்கு கண்ட அத்தியாயத்திலுள்ள 32, 34, 36, 42, 43, 47ஆம் பாடல்களின் பொருள் என்னவெனில் சாமிக்கு வைத்திருந்த பிரசாதத்தைத் திருடப் புகுந்தவன் மங்கி எரிந்த திரியை வெளிச்சம் தெரியும்படி தூண்டிவிட்டுத் திருடுகையில், அறியாமல் அங்கே படுத்திருந்தவர் காலை மிதிக்கவே - அவன் எழுந்து திருடனை வெட்டிக் கொன்றான். இறந்த இத்திருடன், கலிங்கராசன் மகனாய் திரும்பப் பிறந்து சிவாலயங்களுக்கு விளக்கேற்றியதால் - சிவன் தோழனாயும் - அஷ்ட திக்கு பாலகரில் ஒருவனாயும் - அழகாபுரிக்கு அரசனாக்கி, குபேரனாய் உயர்ந்தானாம். மூஷகம் (எலி) ஒன்று ஆகாரத்துக்காய் கோவில் மூலையைக் கிளற - ஒரு ரத்தினம் தோன்றி ஒளிவீசவே, கோவிலுக்குப் பெருச்சாளி விளக்கேற்றிற்று என்று - சிவன் அதற்கு சாலோக பதவி தந்தார் என்று எழுதப்பட்டுள்ளது.

பாடல் 74

மூஷிகமொன்று கோயில் மூலையினைக்

கிளறும் போது

தேடரு மணியொன் றங்கே

சிதறியோர் விளக்கங்காட்ட

ஆடிய பெருமான் தீபமளித்த

தென்றதற்கு நல்ல

வீடுயர் நெறியுங்காட்டி விரைந்து

சாலோக மீந்தான்!

தன் பசிப்பிணியைத் தீர்க்கும் நோக்கமாய் விளக்கைத் தூண்டி அதன் வெளிச்சத்தில் திருட முனைந்த திருடனுக்கும், உணவைத்தேடி பூமியை கிளறிய பெருச்சாளிக்கும் - தங்கள் எண்ணத்திலும் சிந்தையிலும் என்றும் நினைத்திராத - முக்தி பதவி கிடைத்திருக்கிற வகையை நீங்களே கண்டு கொள்ளுங்கள். இதுவல்லாமல் தாமரை நூல் திரியிட்டு நெல் விளக்கேற்றுவோர்க்கு பிறப்பு, இறப்பில்லா முக்திபதவி கிடைப்பதாய் சொல்லியிருக்கிறது. இது முந்தினதைவிட இலகுவான வழி- முக்திபெற என்பதை ஆழ்ந்து சிந்தியுங்கள். உடலரி விளக்கம், 54ஆம் பாட்டிலும், சிவபுண்ணியத்தெறிவு 91ஆம் 121ஆம் பாடல்களிலும் காணலாம்.

கலிங்க நாட்டில் ஒரு பிராமணன் (பார்ப்பனன்) வேத விதிமுறைக்கு மாறாய் தன் குல ஒழுக்கங்கள் யாவையும் விட்டு, தீயவனாய் திரிகையில், வறுமையும் சிறுமையும் நிறைந்து திரிந்த ஒரு கைக்கோளன் மனைவியை இவன் கவர்ந்துபோய் காட்டில் வசித்தான். நித்திரையில் இவனைப் புலி பாய்ந்து கொன்றது. யமகணங்கள், இவனைக் கொண்டுபோய் யமன் முன் விட சித்திரபுத்திரன் இவன் கணக்கைப் பார்த்து - இவன் மாபெரும் பாதகனெனத் தீர்த்து - வாயில் ரத்தம் வடிய - நரகத்திலே தள்ளி வதைத்தான். இறந்தபின் - இவனது இடக்கால் எலும்பை கழுகு கவ்விக்கொத்திச் சென்று - காசியை சேர அங்கொரு கழுகு இதை எதிர்த்துச் சண்டையிட்டு வாதாட - தன் வாயிலிருந்த காலெலும்பு நழுவி - தவறி கங்கையாற்றில் விழுந்ததால் - சிவன் தனது சிவகணங்களை அனுப்பி அவனை  புஷ்ப விமானத்தில் ஏற்றி நரலோக பதவி முக்தியளித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.

பெரிய புராணத்தில் திருநாளைப் போவான் என்னும் புலை மகனும், துன்மதன், துச்சதன் முதலானோர் - சிதம்பர ரகசியத்தால் முக்தி பெற்றதாயும், அருணகிரி புராணத்தில் வச்சிராங்கத பாண்டியன் முக்தி பெற்றதாயும் கமலாலய புராணத்திலும் தெளிவாகக் காணலாம்.

சமற்கிருத சுலோகம்:

தரிசனா பிரததிசி ஜனனாகலோலயே

காசி யாந்துமரணா முக்திஸ் மரணா

அருணாசலம் அதவாபுத்திர சந்நிதே!

சிதம்பரத்தை தரிசிக்க கமலாலயமாகிய திருவாரூரிலே பிறக்க, காசியினிலிறக்க, அருணாசலத்தை மனத்தில் நினைக்க முக்தி கிடைக்கும் என்பதாம். புத்திரன் மூலமாய் முக்தி பெறலாம் என்பது மற்றொரு நம்பிக்கையாம். இவ்வித நம்பிக்கை கொண்ட பலர் பிரசவ காலத்திற்கு முன்பே பெரும் பிரயாசையுடன் திருவாரூரைச் சேர்ந்து தங்கள் பிரசவ நாளின் நிறைவேற்றுதலுக்காக பொறுமையுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் - புத்திர - புத்திரிகளைப் பெற்றால் மோட்சம் சேரலாம் என்பதே அவர்களின் நம்பிக்கையாம்.

அருணகிரி புராணம், அருணை நகரச் சுருக்கம் 11ஆம் பாட்டில் சிறு சிதம்பரமொன்று விராட புருடனென்னும் தளத்தை தரிசிப்போர்க்கு- விஷ்ணுவும் பிர்மாவும் கண்டிராத முக்தி பதவி கிடைக்குமாம்.

12ஆம் பாட்டில் விருத்தாசலத்தில் இறந்தோர் உடல் அழியாது, வீங்காது - பிறவி ஜெனனமிராது - தலை வெடிக்காது,  நாற்றமிராது, பூச்சி புழுயிராது - சிவன் வலச்செவி வழியாய் பேசி காப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சிவ புண்ணியத் தெறிவு 43ஆம் பாடலில் ஆலத்தருகிலுள்ள ஆற்றுநீரே, கங்கை நதித் தீர்த்தமென நம்பி, குளிப்போர் - ஏழு பிறப்பிலும் செய்த பாவங்கள் யாவும் - தீர்ந்த பொருளை திருவிளையாடற் புராணம் மகா பாதகந்தீர்த்த படலம் 1, 10, 12, 40ஆம் பாடலிலிருந்து காணலாம். ஒருவன் காமவிகாரத்தால் மதிகெட்டு தாயைப் புணர்ந்தான். தந்தை வெட்கத்துக்கஞ்சி மறைத்து வைத்தும், மகன் பகிரங்கமாய் நடப்பது கண்டு புத்தி சொல்லி கேளாது, தன் தந்தையை கொல்ல முனைந்தபோது - தாய் குறுக்கிட்டு வந்ததையும் பாராமல், மண்வெட்டியால் வெட்டி தந்தையை கொன்றான். இத்தீர்த்தம் தாயை புணர்ந்து தந்தையை கொன்ற தீயச்செயலையும் தீர்த்து அவனுக்கு முக்தி கொடுத்தான் என்று கூறுகிறது.

அருணகிரி புராணம், அருணை நகர் சுருக்கம் 9ஆம் பாடலின் பொருள் - காசியென்ற தலம் - கைலாயத்திலும் சிறப்புடையது. அங்குள்ள கங்கை நதியின் அலை பரகதிக்குள் வேரோடியிருக்கிறது. இங்கு போய் பிறந்ததால் மனிதர், மிருகம், மரம் - மற்ற உயிர்களுக்கும் சிவன் எழுந்தருளி, செவியின் வழி உபதேசித்து காப்பார். அதனால் அனைத்து உயிர்களும் இறைவனைப்போல் சொரூபத்தையும், சுயரூபத்தையும் அடைந்து வாழ்ந்து கொண்டிருக்குமென்று சொல்லியிருக்கிறது. மரம், மிருகம் சாரூபம் அடைவது எப்படி?

விருத்தாசல புராணம், தீர்த்த சுருக்கம் 3ஆம் பாடலின்பொருள்: மணிமுத்தா நதியென்னும் - வெள்ளாற்றில் வீசும் காற்றுப்பட்ட மனிதர், பறவை, மிருகம் பூச்சி, புழு மரங்கள், கொடிகள், அனைத்தும் தேவலோகம் ஆளும்; அவ்வாற்றில் பட்டால் அன்பு, துணிவு, தவம் ஞானம் உண்டாகுமெனச் சொல்லுகிறது.

தாமிரவருணி மகத்துவத்தில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கினால் அனைத்து பாவங்களும் நாசமாகிவிடுமாம். இதன்காரணமாகவே இதற்கு பாபநாசம் என்னும் பெயர் உண்டாயிற்றாம்.

திருவையாற்றுப் புராணத்தில் ஒரு செய்தி: ஒருவன் தன் தந்தை மனைவியை தனக்கு மனைவியாய் வைத்திருந்ததை - தந்தை கண்டு புத்தி சொல்லியும் கேளாது. தன் தந்தையைக் கொன்றுவிட்டு, அவளை வைத்துக் கொண்டான். தன் தம்பி இச்செயலைக் கண்டித்தான் என்று அவனையும் கொன்றான். இதனால் - அவன் பைத்தியம் பிடித்தவனாய் அலைந்து திரிந்தான். காவிரி ஆற்றின் படித்துறையில் அவன் மயங்கிக் கிடக்கையில் - பெண் ஒருவள் தீட்டுச் சேலையைத் - துறையில் துவைத்துக் கொண்டு இருக்கும்போது - சில திவலைகள் அவன் மேல் பட்டதால் - பைத்தியம் தெளிந்து - காவிரியாற்றில் போய் முழுகவே - சிவன் எழுந்தருளிவந்து அவனுக்கு கைலாய பதவி அளித்தார் என்று எழுதியிருக்கிறது.

பிரமோத்திர காண்டம் விபூதிமா மகிமை 34-42ஆம் பாடல்கள் வரைக்கும் உள்ளபொருள் பின் வருமாறு:

துன்மார்க்கனான சூது, பொய், களவு, நிறைந்த பிராமணன் (பார்ப்பனன்) ஒருவன் பாண்டிய நாட்டில் இடைவிடாது திருடி காலம் கழித்து வந்தான். தன் திருட்டுப்பொருளை வேசிகளுக்குக் கொடுத்து, காமாந்த கனாய்த் திரிகையில் ஒரு நாள் இரவு ஒரு புலைச்சியுடன் கூடிப் புணர்ந்திருந்ததைக் கண்ட அவள் கணவன் - இப்பிராமணனை வெட்டிக் கொன்று வேலிக்கப்பால் எறிந்தான். பசிவேதனையால் - குப்பைச்சாம்பலின்மேல் படுத்துக்கிடந்த நாய் ஒன்று - பிணத்தைக் கண்டு கடித்து இழுத்துத் தின்றது. நாய் ஒட்டியிருந்த சாம்பல் அப்பிணத்தின் மேல் படவே, சிவகணங்கள் அப்பாதகப் பிராமணணை பிடித்து நரகத்திற்கு கொண்டு போக வந்த யமகணங்களைத் துரத்திவிட்டு - அவனை புஷ்ப விமானத்தில் ஏற்றிக் கொண்டு போய் சிவலோகத்தில் விட்டதாய் சொல்லப்பட்டிருக்கிறது.

உபதேச காண்டம், ருத்திராச்ச மான்மியம் 3ஆம் பாடலின் பொருள்: ருத்திராட்சமணியை பக்தியோடு தரிசித்தாலும், பக்தியின்றி தரித்தாலும் - அதையணிந் தோர்க்கு, சிவன் முத்தியளிப்பார் என்பதாம். இது நிறை வேறினதற்கு காட்டாய் உபதேச காண்டம் - ருத்திராட்ச மான்மியம் 118, 119, 125, 126 பாடல்களில் உள்ளது. இதன்பொருள்:-

சிறுவயது முதல் ஒரு நல்ல செயலைச் செய்யாது - பாதகனாய் திரிந்த ஒருவன் இரவில் அடுத்தவன் மனைவியைக் களவாய்க் கொண்டுசெல்கையில் - நகர காவலர் கண்டுபிடித்து - மழுவாயுதத்தால் வெட்டிக் கொலை செய்தார்கள். இவன் இறந்த நான்காம் நாள் - இராச குமாரத்தி ஒருவள் தான் அணிந்திருந்த ருத்ராட்ச வடத்தைக்கழற்றி வைத்துவிட்டு குளித்தாள். காகம் ஒன்று  ருத்ராட்ச மணியில் - கோர்த்திருந்த வெண்மணிகளை சோறு என்று நினைத்து கொத்திப் பறந்து போகையில் - வாயினின்று நழுவி பிணத்தின்மேல் விழுந்தது. அதனால் அவன் பாதகங்கள் தீர்ந்து கைலாயம் சேர்ந்தான் என்பதாம்.

(தொடரும்)

திராவிடர் கழகம் வழிகாட்டுகிறது

குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பாஜகவிற்கும், காங்கிரசிற்கும், படேல் சமுதாய மக் களின் வாக்குகளை கைப்பற்றுவதில் பெரும் போட்டி நிலவுகிறது,  2015ஆம் ஆண்டுமுதல் குஜராத்தில் படேல் மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு இளம் தலைவர் ஹர்திக் படேல் தலைமையில் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.

குஜராத் மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டதாக கூறி படேல் இனமக்கள் பாஜக மீது கடுமை யான கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, படேல் இன மக்களின் வாக்குகளைக் கைப்பற்ற அவர்களுக்கான புதிய இட ஒதுக்கீட்டு முறை ஒன்றை முன்வைத்துள்ளது.  இது அவர்களுக்கு புதியதாக இருக்கலாம். ஆனால் திராவிடர்கழகத் தலைவரின் ஆலோசனையின்படி தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கைதான் அங்கும் தற்போது காங்கிரஸ் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி என்ற பெயரில் ஒட்டுமொத்த படேல் சமூகமும் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் அவர்கள் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகிவிட்டனர். இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் அவர்களுடன் பேச முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் கபில்சிபல் தலைமையில் குழு ஒன்றை ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

இந்தக்குழுவுடன் "மும்முறை பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஊடகவியலாளர்களுடன் பேசிய கபில் சிபல் கூறியதாவது: அரசமைப்புச் சட்டம் 31, 38(2)இல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இந்தப் பிரிவின் படி மாநில அரசு மாநில இட ஒதுக்கீடு கேட்டு போராடும் மக்களின் நலன் கருதி இட ஒதுக்கீட்டில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும், இதை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடைசெய்ய முடியாது.  நாங்கள் தற்போது மாநில அரசின் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான 49 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் புதிதாக 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சேர்க்க முடியும். இப்படி புதிதாக கொண்டுவரும் சட்டத்தின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட மக்களும், புதிதாக சேர்க்கப்படும் (படேல் இன) இனமக்களும் பயனடைவார்கள்" என்று கூறினார்.

இது குறித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் பரத்சிங் சோலங்கி கூறியதாவது: "கபில்சிபல் அவர்கள் கூறிய புதிய இட ஒதுக்கீட்டு முறையை(பார்முலாவை) பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி ஏற்றுக் கொண் டது.  இது குறித்து அந்த அமைப்பு தங்களுக்குள் ஆலோசனை நடத்த முன்வந்துள்ளது.  கபில்சிபலின் இந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு ஹர்திக் படேலும் ஆதரவு தெரிவித்துள்ளார்" என்று கூறினார்.

குஜராத் அரசின் தற்போதைய இட ஒதுக்கீட்டுக் கொள்கையானது அரசமைப்புச் சட்டம் 15(4) 16(4) பிரிவு களின் கீழ் வருகிறது. இதை மாற்றியமைத்து புதிய இட ஒதுக்கீட்டை கொண்டுவந்து படேல் சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீட்டுப் பயனை வழங்குவதே காங்கிரசின் நோக்கம் ஆகும். இதற்கு இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் படேல் சமூக மக்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

தந்தை பெரியாரின் சமூக நீதி மண் - இப்பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல;  இந்தியாவுக்கே வழி காட்டும் வல்லமை பெற்றதாகத் திகழ்கிறது. மண்டல் குழு தொடர்பான வழக்கில் (இந்திரா சகானி வழக் கில்) 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு விஞ்சக் கூடாது என்ற உச்சநீதிமன்ற ஆணையினால் தமிழ் நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் 31 (சி) பிரிவின் கீழ் மாநில அரசே சட்டம் இயற்றி, அதற்கு நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெற்று  ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டால், எந்த நீதிமன்றமும் அதில் தலையிட முடியாது என்று கூறியதோடு அல்லாமல் அதற்கான மூல சட்ட முன் வரைவையும் தயாரித்துக் கொடுத்தார்.

அதன்படியே தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்வராக செல்வி ஜெயலலிதா இருந்தபோது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, அதன் பின் நாடாளு மன்றத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு, தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

தந்தை பெரியாருக்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைவர், திராவிடர் கழகத்தின் சார்பில் இப்படியொரு சாதனையை சாதிக்க முடிந்தது. இப்பொ ழுது அது இந்தியாவுக்கே சமூக நீதித் தளத்தில் கலங் கரை விளக்கமாக, பாதுகாப்புப் பெட்டகமாக இருக்கிறது என்பது விளங்கிடவில்லையா?

தொண்டமான் பெயரை நீக்கி தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை சிதைப்பதா? இலங்கை அரசுக்கு எதிராக சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை, நவ.20  இலங்கையில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதைக் கண்டித் தும், இலங்கையில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்ட தொண்டமான் பெயரினை மாற்றுவதை நீக்குவதைக் கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (20.11.2017) முற்பகல் 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில்  நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தலைமை செயற்குழு உறுப் பினர் க.பார்வதி, வடசென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன் முன்னிலையில் சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்றார். வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறி யாளர் ச.இன்பக்கனி நன்றி கூறினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை கண்டன உரையாற்றினார்கள். மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தமிழர் உரிமைபறிப்புகள்குறித்த பாடலைப்பாடினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையில் குறிப்பிட்டதாவது:

இலங்கைத் தமிழர்களுக்கு எப்பொழுதெல்லாம் ஆபத்துகள் வருகின்றதோ, எப்பொழுதெல்லாம் அவர் களுடைய உரிமைகள் பறிக்கப்படுகிறதோ, அப்பொழு தெல்லாம் திராவிடர் கழகம் இதுபோன்ற ஆர்ப்பாட் டங்களை, போராட்டங்களை, உரிமைக்குரல்களை ஒலித்து வந்திருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், 1939ஆம் ஆண் டிலேயே நீதிக்கட்சியினுடைய செயற்குழுக்கூட்டத்தில் இலங்கையில் நடைபெறுகின்ற தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள்பற்றி நேரில் சென்று விசாரிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவிலே தந்தை பெரியார், டபிள்யூ.பி.ஏ.சவுந்தரபாண்டியன், என்.ஆர்.சாமியப்ப முதலியார் போன்றவர்களெல்லாம் இடம் பெற்றார்கள். அதனைத் தொடர்ந்து இன்று வரை திராவிடர் கழகம் ஈழத்தமிழர்களுக்கான உரிமைப் போரின் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

இப்பொழுது அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது? இந்த போராட்டத்தின் நோக்கமென்ன என்றால், சவுமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் ஓர் அரை நூற்றாண்டு காலம் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தவர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அங்கு வாழக்கூடிய மலையகத் தமிழர்கள் 13 லட்சம் பேர். சிங்கள அரசு சேன நாயகா தலைமையிலே என்ன முடிவெடுத்தது என்று சொன்னால், இந்த மலைவாழ் மக்களின் குடியுரிமையைப் பறித்து, ஒரு சட்டம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து தொண்டமான் அவர்கள் போராடி,  எட்டரை லட்சம் மலையகத் தமிழர்களின் உரிமைகளை மீட்டுத் தந்தார். மீதித் தமிழர்கள் இந்தியாவுக்கு அழைக் கப்பட்டனர். இன்றைக்கு இலங்கை நாடாளுமன்றத்தில்  ஒரேயொரு தமிழர் சிலை யாருடையது என்றால், அது தொண்டமான் அவர்களின் சிலைதான். அந்த அளவிற்கு அந்த நாட்டு மக்கள் மத்தியிலே, ஈழத்தமிழர்கள் மத்தி யிலே அவர் ஒரு சிறந்த போராளியாக திகழ்ந்திருக்கிறார்.

2009 இனப்படுகொலை

2009 இனப்படுகொலைக்குப்பிறகு, ஒரு மாற்று அரசாங்கம் வந்தால்கூட, அந்த மாற்று அரசால் மாற் றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், எந்த மாற்றமும் இல்லை. ஏமாற்றம்தான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் இதுபோன்ற தொடர் அழிப்பு வேலைகளை, கலாச்சார அழிப்பு வேலைகளை, பண் பாட்டு அழிப்பு வேலைகளை இன்றைக்கு சிங்கள அரசு செய்துகொண்டிருக்கிறது என்கிற நிலையில், அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

சவுமியமூர்த்தி தொண்டமான், அமைதியான இலங்கை மலர மதச்சார்பற்ற கொள்கையை முன்வைத்தார்.

பவுத்த, இஸ்லாமிய மதத்தலைவர்களின் பிடியில் இருந்த இலங்கை அரசியலை பொதுவுடமைத் தத்துவம் கொண்ட குடியரசாக மாற்ற முனைப்புடன் பாடுபட்டார். காந்தியின் அகிம்சைப் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட தொண்டமான் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகான அமைதியான அரசியல் வழிப்போராட்டங்கள் நடத்திட, இலங்கை காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். பின்னாட்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற கட்சியாக உருப்பெற்றது.  இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களும் தொண்டமானின் கட்சிக்கு ஆதரவளித்தனர்.

இந்த நிலையில் சுதந்திரத்திற்குப் பிறகு மலையக தமிழர்களின் குடியுரிமை கேள்விக்குறியானது. சுதந்திர  இலங்கையின் முதலாவது  பிரதமரான டி. எஸ். சேன நாயகா இலங்கையில் தமிழர்களின்  குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சவுமியமூர்த்தி தொண்டமான் இதற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் கடுமையாக வாதாடினார். ஏப்ரல் 28, 1952 இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டமான் பேரணி, அறவழிப்போராட்டத்தை நடத்தினார். 29.4.1952 அன்று இலங்கை நாடாளுமன்றம் முன்பாகவும் தமது அற வழிப்போராட்டத்தை நடத்தினார். இப்போராட்டத்தி னால்  8,50,000 மலையகத் தமிழர்கள் குடியுரிமை பெற்றனர்

4.8.1960 அன்று சிறிமாவோ பண்டாரநாயகா, தொழிலாளர் பிரதிநிதியாக சவுமியமூர்த்தி தொண்ட மானை நாடாளுமன்றத்துக்கு நியமித்தார். மார்ச் 22,1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அய்க்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டார்.

1947ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டு காலம் தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  கட்சி தலைவராகவும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

பவுத்த மத நாடான இலங்கையில் மதச்சார்பற்ற மக்களை ஒன்று திரட்டி  அமைதியான இலங்கையை உருவாக்க முனைந்த தொண்டமான் சிலை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இலங்கை அரசின்  தமிழர் விரோதப் போக்கு, அடிப்படை உரிமை மீறல்களாக மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பு, ஈழத் தமிழர் வாழ்வாதாரங்களைச் சிதைத்தல், ஈழத் தமிழர்களுக்கு உதவும் இலங்கையைச் சேர்ந்தவர்களை சிங்கள விரோதிகளாக சித்தரித்தல், உண்மையை வெளிக்கொண்டுவரும் ஊடகங்கள் ஊடகவியலாளர்களைக் கொலை செய்தல், ஈழத்தமிழர்களை அந்நிய நாட்டுகுடிகளாக சித்தரிப்பது, சிங்கள மொழியை வலுக்கட்டாயமாக தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் திணிப்பது, தமிழர் அடையாளங்களை அழிப்பது, அயல் நாட்டில் வாழும் தமிழர்கள்மீது போலியான வழக்குப் பதிவு செய்து அவர்களை அவர்கள் வாழும் நாட்டின் அரசாங்கத்திடம் குற்றவாளிகளாக அடையாளம் காட்டுவது, அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் தமிழர்களை இரண்டாம் தர குடிமகனாக நடத்துவது, இலங்கை தமிழர்களுக்கு கல்வி உரிமை மறுத்தல் என பலவகைகளிலும் தமிழர்களின் உரிமைகளை சிங்கள பேரினவாத அரசு மறுத்து வந்துள்ளது.

தமிழர் உரிமைகள் பறிப்பு

யாழ் நூலகம் எரிப்பு, தமிழர்கள் வழிபாட்டுத்தலங்கள் சிதைப்பு, குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை  ராணுவம் ஆக்கிரமித்தல், வடகிழக்கு மற்றும் மலையக தமிழர்களுக்கு கிடைக்கும் மின்சார வசதி, போக்குவரத்து வசதிகளை தடுத்து இடையூறு செய்தல், தமிழர் ஊடகங்களை அச்சுறுத்தி, அதன் பணியை தடுத்து நிறுத்துவது, தமிழ் ஊடகவியாளர்களைக் கொலைசெய்வது, தமிழக இளைஞர்களை வெள்ளைவேனில் கடத்திச்சென்று கொலைசெய்வது. உள்நாட்டுப்போரில் லட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்தது, அதை தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி உலக நாடுகளை ஏமற்றியது இலங்கை அரசு.

தமிழர்கள் அந்நாட்டின் பூர்வக்குடியினர். ஆனால், ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதுபோல், தமிழர்களை பூண்டோடு அழிக்க சிங்கள இனவாத அரசு திட்டமிட்டு அழிப்பு வேலைகளை செய்துவருகிறது.

2009 தமிழின ஒழிப்பில் ஈடுபட்ட இலங்கை அரசில் தமிழர்கள் வௌ¢ளை வேனில் கடப்பட்டு, காணாமற்போனவர்களாக ஆக்கப்பட்டார்கள்

ஜெனீவாவில் அய்நாவின் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையில் காணாமற்போன தமிழர்கள்குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது. அக்குழுவில் இலங்கை அதிபரும் இடம் பெற்றார். ஆனால், 2009 இன ஒழிப்பின்போது காணாமற்போனவர்கள் குறித்து அல்லாமல், குழு அமைத்த பிறகு காணாமற்போவோர் குறித்தே குழு ஆராயும் என்று மோசடி செய்கின்ற நிலையில்தான் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.

தொண்டமான் ஒரு பொதுவுடைமை சித்தாந்தவாதியாக இருந்திருக்கிறார். சிங்கள அரசாக இல்லாமல், ஒரு மதசார்பற்ற அரசாக விளங்க வேண்டும் என்றுகூட குரல் கொடுத்திருக்கிறார். கட்சிக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட்ட அத்தகைய பெருமகனாரின் பெயரால் இருக்கக்கூடிய நினைவுச்சின்னங்களை இன்றைக்கு இலங்கை அரசு அழித்துக்கொண்டிருக்கிறது. மாற்றிக்கொண்டிருக்கிறது. அவருடைய பெயரால் உள்ள தொழில் மய்யம் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அவர் பெயரால் இருந்த மைதானம் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. அவர் பெயரால் உள்ள கலாச்சார மய்யம் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

இப்படியாக, ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, தோலைக்கடித்து, துருத்தியைக் கடித்ததைப்போல, அடுத்தது சிலையைக்கூட அகற்றக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

தொடரும் இன உரிமை மீட்கும் போராட்டம்

ஆகவே, இலங்கை அரசு என்பது சிங்கள அரசாக தொடர்ந்து இன்றுவரை தமிழர்களுக்கு தொடர்ந்து பெரிய துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதுதான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நிலைப்பாடு என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகத்தான் இன்றைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய கட்டளையின்படி இந்த போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

இந்த உரிமைப்போராட்டம் தொடரும், இந்த உரிமைகளை மீட்டெடுக்கும்வரை இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

--------------------

கண்டன ஆர்ப்பாட்ட ஒலி முழக்கம் 


*        இலங்கை அரசே, சிங்கள அரசே,

அழிக்காதே - அழிக்காதே

தமிழர் பண்பாட்டு அடையாளங்களை

அழிக்காதே - அழிக்காதே!

*           மாற்றாதே மாற்றாதே!

தமிழர் ஊர்ப் பெயர்களை

சிங்களப் பெயர்களாக

மாற்றாதே - மாற்றாதே!

*         மலையகத் தமிழர்களுக்கு

குடியுரிமை பெற்றுத் தந்த

சவுமிய தொண்டமான் பெயரை

மாற்றாதே - மாற்றாதே!

*        சிங்கள அரசே சிங்கள அரசே

தமிழர் பகுதிகளிலிருந்த

சிங்கள இராணுவத்தை

வெளியேற்று - வெளியேற்று!

*      இலங்கை அரசே சிங்கள அரசே

தமிழர் பகுதிகளில் தமிழர் பகுதிகளில்

சிங்களக் குடியேற்றத்தை

அகற்றிடு - அகற்றிடு

நிறுத்திடு - நிறுத்திடு!

*        சிங்கள அரசே, சிங்கள அரசே

யாழ்ப்பாண பகுதி தமிழர் ஆட்சிக்கு

அதிகாரம் வழங்கு - அதிகாரம் வழங்கு!

*       இந்திய அரசே, மத்திய அரசே,

தலையிடு - தலையிடு!

இலங்கைத் தீவில்

தமிழர் பண்பாட்டு அழிப்பை

தடுத்திடு - தடுத்திடு!

*      மலையகத் தமிழர்களின்

மலையகத் தமிழர்களின்

உரிமை நாயகன்,

தொண்டமான் பெயரில் உள்ள

நினைவுச் சின்னங்களின்

பெயர்களை மாற்றாதே!

பெயர்களை மாற்றாதே!

Monday, November 20, 2017

தற்போதுள்ள வருணாசிரம - மனு ஆட்சியை ஒழித்து நமக்கேற்ற நல்லாட்சி நிறுவுவதே நமது பணி

தந்தை பெரியார்



 நம் முதல் தொண்டு சாதி ஒழிப்பு. இரண்டாவது தொண்டு மேல் சாதிக்காரன் ஆட்சியும், வெளிநாட்டுக் காரன் ஆட்சியும் இருக்கக்கூடாது என்பதாகும். நாம் ஓட்டு  வேட்டையாடுபவர்கள் அல்ல. ஓட்டு வேட்டையாடுபவனைக் கேட்டால் இவன் இதை ஜனநாயகம் என்பான். ஒன்று அப்படிச் சொல்பவன் மடையனாக இருக்க வேண்டும் அல்லது அயோக்கி யனாக இருக்க வேண்டும். புரியாமலேயே சொல்லு கிறவன், தெரியாமல் சொல்லுபவன் மடையன். தெரிந்து வைத்துக்கொண்டே இதில் ஏதாவது பங்கு கிடைக்காதா என்று பார்ப்பவன் அயோக்கியன். இதுவா ஜனநாயக ஆட்சி? இது ஒரு சாதிக்காரன் ஆட்சி. அது அரசாட்சி அல்ல. மேல் சாதிக்காரன் ஆளுகிறான். அதுவும் சாஸ்திர சம்பிரதாயப்படி ஆளுகிறான்.

இப்போது நடைபெறுகிற இராஜ்ஜியம் - இந்துமத இராஜ்ஜியம் - இதற்குக் கொள்கை வருணாசிரம தர்மம் தான்.

இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் நான் சொல்லுகிறேன்.

முதலாவது ஆட்டைக் கொல்லலாம்; பன்றியைக் கொல்லலாம்; கோழி மற்ற பறவைகளைக் கொல்லலாம். ஆனால் மாட்டை  மாத்திரம் கொல்லக்கூடாது  என்று இந்த அரசாங்கத்தில் சிற்சில மாகாணங்களில் சட்டம் செய்து வைத்திருக்கிறார்கள்! உலகில் பல நாடுகள் ரஷ்யா, சைனா, போன்ற நாடுகளில் சுமார் 100 கோடி மக்கள் வாழும் நாடுகளில் மாடு நல்ல உணவாகப் பயன்படுகிறது. அதைக் கொல்வது  தவறு கிடையாது. ஆட்டிறைச்சியைவிட  விலைமிகக் குறைவு. மாட்டி றைச்சி ஏழைகள் சுலபமாக  வாங்கிச் சாப்பிடும்படியாகக் கிடைக்கக் கூடியது. அந்த மாட்டை  அறுத்தால் தண்டனை என்றால் இது வருணாசிரம முறைப்படி  நடக்கும் இராஜ்ஜியம் என்றுதானே அர்த்தம்?

அடுத்தப்படி பார்ப்பானைப் பற்றியே பேசுகிறாயே! மற்றவனைப் பற்றிப் பேசுவதில்லையே ஏன்? என்று கேட்கிறார்கள் சிலமடையர்கள். 100 க்கு 97 பேர் நாம் இருக்கிறோம். பார்ப்பான் 3 பேர்தானே இருக்கின்றான்? அந்த 3 பேருக்காவே சட்டம், ஆட்சி என்று வைத்துக் கொண்டானே ஏன் என்று எவனாவது கேட்கிறானா? இதன் பெயர் ஜனநாயகம் என்று சொல்கிறானே? நம் மடப்பசங்ககளும் 50 பேர் இங்கிருந்தால் அதில் 26  பேர் சொல்லுகிறபடி மற்ற 24 பேரும் கேட்பதுதான் ஜனநாயகம். பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் கூட 10 பேர் இருந்தால் 6 உறுப்பினர்கள் ஓட்டு போடுகிற மாதிரிதான் தலைவர்  வருவார். இங்கே நாம் 100க்கு 97 பேர் இருக்கின்றோம். 100க்கு 3 பேராக இருக்கின்றவன் சொல்லுகிறபடி 97 பேர் கேட்டு நடக்க வேண்டும் என்று சொன்னால் இதற்குப் பெயர் ஜனநாயகமா? எவனாவது சொல்ல முடியுமா? இந்து மத நாயகமே வருணாசிரநாயகம் மனு தருமப்படி ஆளுகிற நாயகமே தான். இரண்டு சங்கதி உங்களுக்குத் தெரிந் தால் இது விளங்கிவிடும். அதாவது ஒன்று: பார்ப்பான் கடவுளுக்குச் சமம். சூத்திரன் நாய்க்குச் சமம், பார்ப் பனத்தி கடவுளுக்குச் சமம். சூத்திரச்சி என்றால் வைப் பாட்டி என்று அர்த்தம் என்று எழுதி வைத்திருக்கிறான்.

இரண்டு: பார்ப்பான் ஆட்சித் தலைவனாக இருக்க வேண்டும். சூத்திரன் சிப்பந்தியாக கீழே இருக்க வேண் டும். இதுதான் மனுதர்மப்படியான சாஸ்திரம் எழுதி வைத்துள்ளவைகளாகும்.

பிராமணன் சூத்திரனைச் சோற்றுக்குத் திண்டாடும் படியாக நடத்த வேண்டும் என்பது மனுதர்மப்படியான காரியம் ஆகும். சூத்திரன் என்ன பாடுபட்டாவது பார்ப்பானுக்குக் கேடு செய்யாமல் சுகமாக பார்ப்பான்  வாழ வசதி செய்து கொடுக்க வேண்டும். சூத்திரன் ஏழையாகவே இருக்க வேண்டும். ஏண்டாவரி! என்று கேளுங்களேன்; வரிபோடுவது கூட மனுதர்மத்தை அடிப்படையாக  வைத்துதான். சூத்திரன் கையில் எதுவும் மிச்சமீதி தங்கக்கூடாது; அவன் வசதியாக வாழக் கூடாது என்பதற்காகவே. சூத்திரனைச் சோற்றுக் குத் திண்டாடும்படித்தான் நடத்த வேண்டும் என்பது மனு தரும சாஸ்திரம்! அதை அனுசரித்துத்தான் நமக்கு வரி.

சாதி ஒழியக்கூடாது; சூத்திரன் படிக்கக் கூடாது; சூத்திரன் பெரிய உத்தியோகத்திற்குப் போகக்கூடாது; சூத்திரன்  வயிறாரக் கஞ்சி குடிக்கக்கூடாது என்றே எழுதி வைத்திருக்கிறான். இதுதான்  மனுதரும சாஸ்திரம்! இதுதான் இந்துலாவுக்கும், அரசமைப்புச் சட்டங்களுக்கும் ஆதாரமும், அடிப்படையும் ஆகும். இதனால் தான் இதை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு ஜெயில். 4000 பேருக்குத் தண்டனை.  பத்துப் பேருக்கு மேல் சாவு முதலிய எல்லாமும் சாதாரணமாகப் பார்த்தால் தெரியும். இந்த நேரு, பட்டணத்துக்கு (சென்னைக்கு) வந்திருந்தபோது அவர் மீது செருப்பு வீசப்பட்டதே! என்ன ஆகி விட்டது? திட்டம் போட்ட வீதிகளை விட்டு கார் வேறு வழியாக ஓடியும் தப்பிக்க முடியவில்லையே? 5, 6  பேருந்துகளைக் கொளுத்தினார்கள். 12 பேர் செத்தானுங்களே! என்ன நடந்தது? ஒன்றும் நடக்க வில்லை. அதை வைத்து அதற்காக ஒரு ஆயிரம் பேரைப் பிடித்து ஒவ்வொருவருக்கும் 1 வருடம், 2 வருடம் என்று தண்டிப்பது என்றால் இந்த அரசாங்கத்தால் முடியாத காரியமா? ஏன் செய்யவில்லை? அது அவர்களுக்கு அவ்வளவு முக்கியம் இல்லை. ஒரு சாதாரணக் கடு தாசிகூட இல்லை நாங்கள் கொளுத்தியது! அதற்கு மாத்திரம் ஏன் 2, வருடம், 3 வருடம் தண்டனை? அதில் என்ன இந்த நேருவைக் கொல்லவேணும் என்று எழுதியிருந்ததா?அதில் சாதியைக் காப்பாற்றச் சட்டம் என்று இருக்கிறதே! நேற்றுதான் இந்த இராமனையும் பிள்ளையாரையும் எரித்தோம். வீதிக்கு விதி போட்டு உடைத்தோம்.  யாரும் கேட்கவில்லையே ஏன்? சாதியை ஏன் காப்பாற்றுகிறாய் என்று கேட்டால் உடனே 2 வருடம் என்றால் என்ன அர்த்தம்? இது மனுதர்ம ஆட்சி என்பதற்கு வேறு என்ன காரணம்வேண்டும்? நம்முடைய இழிவை ஒழிக்க நாம் தலையெடுக்க முயற்சித்தால் அதை ஒழிப்பதில்தான் பார்ப்பான் ஆட்சி எல்லாவற்றையும் கையாளுகிறது. நம்மை நம்முடைய இனப் பிரதிநிதிகள் இன்று ஆளுகிறார்களா? நமக்கு ஓட்டுக் கொடுத்திருக்கறார்கள். ஆனால் அதைச் சரியானபடி உபயோகிக்க வசதியிருந்தால், யோக்கியமான முறையில் அதைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களாயின் பிரதம மந்திரியாக எப்படி ஒரு பார்ப்பான் வரமுடியும்? 97 பேருக்கு யோக்கியமான முறையில் ஓட்டுக் கொடுத்திருந்தால் 97 பேரில் ஒருவர் அல்லவா பிரசிரெண்டாக (குடியரசுத் தலைவராக) இருப்பார்? இப்போது 3 பேராக உள்ள வர்களிடத்திலிருந்து தான்  பிரசிடெண்ட் பார்ப்பார பிரசிடெண்டு - என்றால் என்ன அர்த்தம்? இவன் வைத்திருக்கிற சட்ட சபையின் மூலம் சாதியை ஒழிக்க முடியுமா? ஓட்டுப்போடுகிறவர்களில் 100க்கு 95 பேர் முட்டாள். பாக்கி 3 பேர் அயோக்கியன். 2 பேர் பார்ப்பான்! அவன் செலவு செய்கிறான்; பணத்தைத் தண்ணீர் மாதிரி; அதற்காகத்தான் சட்டசபைக்கு வா என்று எல்லோரையும் கூப்பிடுகிறான். எலிக் கூண்டு, புலிக்கூண்டு மாதிரிதான். எப்படி பெரிய பொறிவைத்து எலியைப் பிடிக்கிறார்களோ அதுபோலத்தான் எலெக்ஷன் (தேர்தல்) ஒரு பொறி மாதிரி! அதில் மாட்டிக் கொண்டால் ஒன்றும் பண்ணமுடியாது. கீழ்சாதிக் காரர்கள் ஜெயித்தால் கூட பெருவாரி மக்களின் ஆசைப்படி நடக்க இயலாது; சமுதாய இழிவு ஒழிய ஜனநாயகம் மூலம் செய்யமுடியாது. சட்ட சபைக்குப் போய் உட்காருவதற்கு முன்பே உன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அடங்கி நடப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்து விடவேண்டும் என்கிறான். அதில் போய் நீ என்ன செய்ய முடியும்?

சட்டத்தை இலட்சியம் செய்யாமல், வலுவான கிளர்ச்சி நடத்துவது மூலம்தான் நாம் நம்முடைய இலட்சியத்தைச் சாதிக்க முடியும். ஜனநாயகத்தின் மூலம் இந்த பித்தலாட்டத்தை ஒழிக்க முடியாது. கிளர்ச்சி ஒன்றில்தான் இந்தக் காரியம் முடியும். கிளர்ச்சியால் முடியாவிட்டால் அதற்கடுத்து பலாத்காரம் நிச்சயம். அடுத்த தலைமுறையில் அதுதான் நடக்கும். கிளர்ச்சி தோல்வி அடையுமானால் பலாத்காரத்தைத் தவிர வேறுவழி என்ன? மயிலே மயிலே இறகுபோடு என்றால் முடியுமா? ஆகவே சட்டசபையோ, ஜனநாயகமோ இதைச் சாதிக்க முடியாது.

பலாத்காரம் என்றால் இன்னொருவனை ஒழிப்பது என்று  அர்த்தமல்ல. தன்னையே ஒழித்துக்கொள்ளவும் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தம். தன்னையே இரண்டிலே ஒன்று பார்த்துக்கொள்கிறான் என்று தான் அர்த்தம். நீங்கள் பத்திரிகையிலே பார்க்கலாமே! நாட்டிலே நடக்கிற கொலை களில் 100க்கு 75கூட கொலை செய்கிற வனும் தன்னை மாய்த்துக்கொள்கிறான்! காந்தி சும்மா அதிகமாக வேசம் போட்டார். நிஜமாகவே எண்ணிச் சொன்னேன். பிறகு  மாற்றிக் கொள்ள வேண் டியது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

ஆந்திராவில் முதலில் நேரு வீரம் பேசினார். நாலு இரயிலைக் கவிழ்த்து இரண்டு தண்டவாளத்தைப் பிடுங்கினார்கள். உடனே மரியாதையாக அவரே போய்ப் பிரித்துக் கொடுத்தாரே!

ஜின்னா சாயுபு எப்படி பாகிஸ்தான் - தனிநாடு வாங்கினார்? காந்தியார் சொன்னார் என் பிணம் கடலில் மிதந்தபிறகுதான் முஸ்லிம்களுக்கு நாடு என்று! பிறகு ஜின்னா வீட்டுக்குத் தேடிப்போய் வெள்ளித்தட்டில் வைத்தல்லவா கொடுத்தார்கள். இயற்கையின் தத்துவமே அப்படித்தான் வரிசையாகப் போகும். முடிய வில்லை என்றால் அது திரும்பிவிடும். இப்போது ஜனநாயக நாடுகளில் நடப்பதைப் பார்க்கிறோமே! பர்மாவிலே (மியான்மர்) என்ன நடந்தது? 8 மந்திரிகளை சீவித் தள்ளினார்களே என்ன ஆயிற்று?

இப்போ இங்கே பார்ப்பார நாயகம். சாதிநாயகம். மத நாயகம், அப்புறம் இரண்டு எலெக்ஷனுக்குப் (தேர்தல்) பிறகு அரிவாள் நாயகம்தான்! அதில் சந்தேகமேயில்லை. அப்படிப்பட்ட நிலைமை வருவ தற்கு  முன்னால் நாம் பிரிந்து நம்மைச் சரிப்படுத்தி ஒழுங்கு முறை கைக்கொள்ள வேண்டும்.

சாதி, மதம், இவையெல்லாம் ஒழிந்தால்தான் நாம் மனிதர்களாக வாழ முடியும். சாதிக்கு முதல் முட்டு கடவுள். இரண்டாவது மதம். இந்த இரண்டையும் அசைத்தால் எல்லாம் தீர்ந்தது. மூன்றாவது சாஸ்திரம்; நாலாவது அரசாங்கம். இந்த நான்கையும் பிடுங்கி எறிந்தால்  அதுதானே சாய்ந்து விடும்! பொத்தென்று விழுந்துவிடும்; அது சாய்ந்தால் நாம் உருப்படியாக ஆகிவிடுவோம்.

14-11-1958 அன்று மண்ணச்சநல்லூரில்

பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு

(விடுதலை 27-11-1958)

பழைய, புதிய புரோகிதர்கள் யார் வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது!

நீதிக்கட்சி 101ஆம் ஆண்டு விழாவில்  தமிழர் தலைவர் எச்சரிக்கை
சென்னை, நவ.19 நீதிக்கட்சி, திராவிட இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. பதவிக்காக சலாம், குலாம் போடுபவர்களை வைத்து, தமிழ்நாட்டை குத்தகைக்கு எடுக்கலாம் என்று  எண்ணாதீர்கள், இது பெரியார் மண். எந்த பழைய, புதிய புரோகிதர்கள் யார் வந்தாலும், எந்த சங்கடங்கள் வந்தாலும், திராவிட இயக்கத்தை அழிக்க எவராலும் முடியாது என்று நீதிக் கட்சி 101ஆம் ஆண்டு விழாவில் பேசுகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  எச்சரிக்கை விடுத்தார்.


திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நீதிக்கட்சியின் 101ஆம் ஆண்டு விழா  சிறப்புக்கூட்டம் நேற்று (18.11.2017) மாலை 6 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.
இனமான பேராசிரியருக்கு
தமிழர் தலைவர் பயனாடை அணிவிப்பு
விழாவில் இனமான பேராசிரியர் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பி. தியாகராசன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இயக்க வெளியீடுகளை அளித்து சிறப்பு செய்தார்.
நீதிக்கட்சி 101ஆம் ஆண்டு விழா சிறப்புக்கூட்டம் நீதிக்கட்சித் தலைவர்கள் படத்திறப்பு, நீதிக்கட்சி தொடர்பான  நூல்கள் வெளியீடு மற்றும் தலைவர்களின் எழுச்சிமிக்க உரைகளுடன்  பொலிவுடன் நடைபெற்றது.
தலைவர்கள் தமது உரைகளில் நீதிக்கட்சி, திராவிட இயக்கத்தின் 101 ஆண்டு சாதனைகளை எடுத்துக்காட்டி, தற்போது அதன் கொள்கைகளுக்கு ஏற்பட்டுவருகின்ற அறைகூவல்கள்குறித்த எச்சரிக்கையை விடுத்தனர்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி தலைமை வகித்தார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் வரவேற்புரையாற்றினார். திரா விடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் அறிமுக உரையாற்றினார்.
நீதிக்கட்சித் தலைவர்கள் கொள்கைவழியில் வாழ்ந்து வழிகாட்டியவர்கள், இனமான பேராசிரியர் உரை
நீதிக்கட்சித் தலைவர்கள் படத்தைத் திறந்து வைத்துதிமுக பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் விழாவில் கலந்து கொண்டு, நீதிக்கட்சித் தலைவர்கள் டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார், பிட்டி தியாகராயர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் படங்களைத் திறந்து வைத்து  சுருக்கமாக சிறப்புரையாற்றினார்.
இனமான பேராசிரியர் உரையில் குறிப்பிட்டதாவது:
நான் எதிர்பாராத நிகழ்ச்சி இது. கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீதிக்கட்சித்தலைவர்கள் நமக்கெல்லாம் ஆக்கம் கொடுத்தவர்கள். துணை நின்றவர்கள். நீதிக்கட்சியினர் கொள்கை தந்தவர்கள். அவர்கள் இல்லையென்றால், இந்த இயக்கம் இல்லை. கொள்கைகளின்படி, அவர்கள் வாழ்ந்து, வழிகாட்டிய வர்கள். இந்த விழாவில் கலந்துகொண்டு நீதிக்கட்சித் தலைவர்களின் படங்களைத்திறந்துவைத்து உரையாற்ற வாய்ப்பு கொடுத்தமைக்கு உளமார்ந்த நன்றி. அதிகம் பேச முடியாத இக்கட்டான உடல்நிலை எனக்கு உள் ளது. உளமார்ந்த உள்ளார்ந்த நிலையை உணர்ந்து ஏற் பீர்கள். நன்றி.
இவ்வாறு சுருக்கமாக உரையாற்றினார்.
தமிழர் தலைவர் உரை
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களின் கொள்கைகளுக்கு அறைகூவல் ஏற்பட் டுள்ளதாகக் குறிப்பிட்டு எழுச்சியுரை யாற்றினார்.
ஆசிரியர் உரையில் குறிப்பிட்டதாவது:
நீதிக்கட்சி 101ஆம் ஆண்டு விழா என்பது வெறும் பெருமைகளை மட்டும் பேசுவதற்கு அல்ல. மிகப்பெரிய அறைகூவல்கள் ஏற்பட்டு வருகின்றன. வரலாற்றை திரிப்பது என்பதை திட்டமிட்டு செய்கிறார்கள்.
நீதிக்கட்சித் தலைவர்கள்- முதல் தலைமுறையைச் சேர்ந்த இனமான பேராசிரியர் எப்போதும் எங்களுடன் இருப்பவர். அவரைத் தொடர்ந்து நாங்கள், அடுத்து  நாங்கள் வழிநடத்தக்கூடிய இளைஞர்கள் என நான்கு தலைமுறைகளாக இந்த கொள்கைளை முன்னெடுத்து செல்கிறோம்.
வாரிசு அரசியல் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். கொள்கைகளை சுவாசமாகக் கொண்டிருப்பது பெருமையாகும். நீதிக்கட்சித் தலைவர் பிடிராசன், அவர் மகன் பிடிஆர் பழனிவேல்ராசன்,  தற்போது பிடிஆர்பி.தியாகராசன் வந்துள்ளார்.
suக்ஷீஸ்வீஸ்ணீறீ வீஸீ tலீமீ யீவீttமீst என்கிற வகையில் கொள்கை வழியில் தியாகராசன் இருக்கிறார்.
தலைமைச் செயலகத்திலேயே புரோகிதம் மற்ற எல்லா காலங்களையும் விட இன்றைக்கு நுழைகிறது.
சமூக நீதி, ஜாதி ஒழிப்பு, நீதிக்கட்சி, திராவிட இயக்க கொள்கைகளுக்கு அறைகூவல்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆரியம் விதைக்காது விளையும் கழனி என்றார் அண்ணா.
படித்தவர்களை விட படிக்காதவரான தந்தை பெரியார்தான் துணிச்சலான அடிக்கல் நாட்டியவர். ளிக்ஷீவீரீவீஸீணீறீ ஜிலீவீஸீளீமீக்ஷீ றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ பெரியார் சுய சிந்தனையாளர் ஆவார்.
காங்கிரசில் பெரியார் இருந்தபோது, நீதிக்கட்சி ஆட்சியில் கோயில் பெருச்சாளிகளை ஒழிக்க, 1922ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1924ஆம் ஆண்டில்தான் இந்து அறநிலைய சட்டம் கொண்டு வரப்பட்டது. தந்தை பெரியார் தனக்கு கட்சி இல்லை கொள்கைதான் என்றார்.
அண்ணா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, அற நிலையத்துறைக்கு நாவலரை அமைச்சராக்கினார். சிதம்பரம் சென்ற நாவலரை சிதம்பரம் கோயிலுக்கு அழைத்தார்கள். அங்கு சென்று, அண்ணாமலை பல்கலைக்காகத்தில் பேசியபோது, கணக்கு வழக்கை பார்ப்பதுதான் தம் பணி என்றார். இப்போது இருப்ப வர்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பூஜைகள் குறித்து இல்லாமல், கோயில்களில் கணக்கு  சரிபார்ப்பது தான் அந்த துறையின் பணி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார் கொள்கைகள் இன்றைக்கு செயல்படுத்தப் பட்டு வருகின்றன. கேரளாவில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகின்றனர். கருநாடகாவில் மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பதவியைக் காத்துக்கொள்ள அடிமை யாக இருக்கிறார்கள். பாபாசாகேப் அம்பேத்கர் சொல் வார், அடிமையாக இருப்பதில் சுகம், சுவை காண்கிறான் என்று அம்பேத்கர் சொல்வார். அதுபோல் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
பெரியார் நகைச்சுவை உணர்வுடன் பேசுவார். கடவுள் இல்லை என்கிறீர்களே, யார் அர்ச்சகராக இருந் தால் என்ன? என்று கேள்விக்கு தந்தை பெரியார்  பதி லாகக் கூறும்போது, ஆதிதிராவிடர், நம்மாள்கள் அர்ச்சகரானால், பார்ப்பானே கடவுள் இல்லை என்பான் என்றார்.
இந்து மதம் மக்களை ஜாதியால் பிரித்தது. பிரிக்கப் பட்ட மக்களை ஒன்றாக்கிய இயக்கம் திராவிட இயக்கம்.
இன்றைக்கு இரண்டு வித ஆயுதங்களைக் கொண்டி ருக்கின்றனர். யாரை மிரட்ட முடியும்? என்று பார்க்கின் றனர். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. அழிக்க முடியாது. நீதிக்கட்சி, திராவிட இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. பதவிக்காக சலாம், குலாம் போடுபவர்களை வைத்து, தமிழ்நாட்டை குத் தகைக்கு எடுக்கலாம் என்று  எண்ணாதீர்கள், இது பெரியார் மண். எந்த பழைய, புதிய புரோகிதர்கள் வந்தாலும், எந்த சங்கடங்கள் வந்தாலும், திராவிட இயக்கத்தை அழிக்க எவராலும் முடியாது.
இவ்வாறு நீதிக்கட்சி 101ஆம் ஆண்டு விழாவில் பேசுகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  எச்சரிக்கை விடுத்தார்.
நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும், மேனாள் முதல்வருமாகிய பி.டி.ராசன் பெயரனும், தமிழக சட்டமன்ற மேனாள் அவைத்தலைவர் பி.டி.ஆர். பழனிவேல்ராசன் மகனுமாகிய மதுரை மத்திய தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் பி.டி.ஆர்.பி.தியாகராசன் கருத்துரையாற்றினார்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய துணைத் தலைவர் முனைவர் ஏ.தானப்பன் நன்றி கூறினார்.
நூல்கள் வெளியீடு
நீதிக்கட்சி 101-ஆம் ஆண்டு விழாவில் நீதிக்கடசி தொடர்பான மலிவுப்பதிப்பு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. நீதிக்கட்சி வரலாறு (ரூ.25), நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக? (ரூ.11), ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) அரசின் சாதனைகள் (ரூ.70), திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் -தேவையும் (ரூ.15) ஆகிய நூல்கள் நன்கொடை ரூ.121. சிறப்புக்கூட்டத்தையொட்டி ரூ.21 கழிவு அளிக்கப்பட்டு, ரூ.100க்கு அளிக்கப்பட்டது-.
பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர் கி.சத்தியநாராயணன், விழிகள் பதிப்பகம் வேணுகோபால், கவிஞர் கண்மதியன், புலவர் பா.வீரமணி, வா.மு.சே.திருவள்ளுவர், கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், வடசெடன்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, பகுத்தறிவாளர் கழகம் தங்க.தனலட்சுமி, மாணவரணி தொண்டறம், ஆவடி முத்துகிருஷ்ணன், செந்துறை இராசேந்திரன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், தாம்பரம் இலட்சுமிபதி, தென்.மாறன், பழ.சேரலாதன், விஜய் ஆனந்த், கெடார் மும்மூர்த்தி, அம்பத்தூர் இராமலிங்கம் உள்பட ஏராளமானவர்கள் நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்.
கலந்துகொண்டவர்கள்
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்செல்வன், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  மேனாள் அமைச்சர் கவிஞர் வேழவேந்தன், திராவிட இயக்க ஆய்வாளர் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, மு.பி.பாலசுப்பிரமணியம், கயல் தினகரன், சி.வெற்றிசெல்வி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர்  பா.மணியம்மை, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்  கோவி.கோபால், பொதுக்குழு உறுப்பினர் வெ.மு.மோகன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அரும்பாக்கம், சா. தாமோதரன், பூவை பெரியார் மாணாக்கன், அருணாசலம், மருத்துவர்கள் க.வீரமுத்து, மாலதி, தாம்பரம் மோகன்ராஜ், குணசேகரன் உள்பட ஏராளமானவர்கள் நீதிக்கட்சி 101ஆம் ஆண்டு விழா சிறப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.



Saturday, November 18, 2017

அறந்தாங்கி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பிய வினா

அரசமைப்புச் சட்டத்தில் உண்ணும் உரிமை - எண்ணும் உரிமைக்கு உத்தரவாதம் உண்டு

பி.ஜே.பி. ஆட்சியில் இந்த உரிமைகள் பறிக்கப்படுகின்றன















அறந்தாங்கி, நவ.17 - உண்ணும் உரிமை, எண்ணும் உரிமைக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளித்திருக்கும் பொழுது, அதனை மத்திய பி.ஜே.பி. ஆட்சி தடுப்பது ஏன் என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

9.11.2017 அன்று புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் நடைபெற்ற உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

‘‘எங்களை பஞ்சமன் என்கிறார்களே  நாங்கள் எங்கே பிறந்தோம்?’’


பெரியார் அவர்கள் கூட்டங்களில் உரையாற்றும்பொழுது, சீட் எழுதி கேள்வி கேட்பார்கள். சீட் எழுதிக் கொடுத்துவிட்டு போய்விடுபவர்களும் இருந்தார்கள். அந்தக் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வார். இதற்காக பெரியார் என்ன செய்தார் என்றால், பொறுப்பாக இருந்து கேட்கவேண்டும் என்பதற்காக, கேள்வி ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்று கேட்டார்.

அந்த வகையில் ஒருவர் கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி என்னவென்றால்,

அய்யா நீங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். முகம், தோள், துடை, காலில் பிறந்தாயிற்று. எங்களை பஞ்சமன் என்கிறார்களே நாங்கள் எங்கே பிறந்தோம்? என்று கேட்கிறார்.

உடனே அய்யா அவர்கள் பட்டென்று,

‘‘நீங்கள்தான் உங்கள் அப்பாவிற்கும், அம்மாவிற்கும் பிறக்கவேண்டிய இடத்தில் பிறந்தீர்கள்’’ என்று சொன்னார்.

எதற்காக இதனை எடுத்துச் சொல்கிறேன் என்றால், அப்படிப்பட்ட அந்த ஜாதி, கடவுளாக உருவாக்கப்பட்டது என்று மனுநீதியில் சொல்லப்பட்டது மட்டுமல்ல, இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள் எல்லோரும், பகவத் கீதையைப்பற்றி பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், அதை அவர்கள் பெரும்பாலும் படித்ததே கிடையாது. இன்னுங்கேட்டால், அவர்கள் சொல்வது இருக்கா? இல்லையா? என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கவேண்டுமோ, அது நன்றாகவே நடக்கும்

என்று சொல்வார்கள். இது பகவத் கீதையில் எந்த இடத்தில் இருக்கிறது என்று அவர்களைக் கேட்டால், அவர்களுக்குத் தெரியவே தெரியாது.

‘கீதையின் மறுபக்கம்’’ நூலை  தடை செய்ய நினைத்தார்கள்

இதோ என் கையில் இருப்பது ‘‘கீதையின் மறுபக்கம்’’ நான் எழுதி வெளிட்டோம். இன்றைக்கு 24 பதிப்புகளாக வெளி வந்திருக்கிறது. பல லட்சக்கணக்கில் அது பரவியிருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தடை செய்யவேண்டும் என்று நினைத் தார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. அவர்களுக்கே தெரியும், இதனைத் தடை செய்தால், இன்னும் வேகமாக பரவும், பல ஆயிரக்கணக்கான மக்கள் படிப்பார்கள் என்று.

இன்னுங்கேட்டால், கீதையில், பகவான் கண்ணன் சொன்னான்,

‘‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்’’


பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்கிற சதுர்வணம் - மயாசிருஷ்டம் நான் தான் அந்த நான்கு வர்ணங்களை உண்டாக்கினேன்.

நானே நினைத்தால்கூட, அதற்குரிய கருமங்களை, தர்மத்தை மாற்ற முடியாது.

இந்திய அரசியல் சட்டத்தைக்கூட நூறு முறை மாற்றி விட்டார்கள். ஆனால், கீதையில் என்ன சொல்லியிருக்கிறார்கள், நான் நினைத்தால்கூட மாற்ற முடியாது என்கிற அளவில் இருக்கிறது.

பெண்ணடிமை என்பது இருக்கக்கூடாது என்று கருதித்தான்...

ஆகவே, நண்பர்களே நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்; ஜாதி ஒழிப்பு என்பது இருக்கிறதே, அதுதான் நம்மையெல்லாம் மனிதர்களாக்குகிறது.

ஜாதியை ஒழிப்பதன்மூலமாக, தீண்டப்படாதவர்கள் அல்லது பிறவி பேதம் என்கிற பெயரால் பெண்ணடிமை என்பது இருக்கக்கூடாது என்று கருதித்தான், பெரியார் அவர்கள் அந்தப் பணியை செய்தார். திராவிடர் இயக்கத்தை, சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கினார்.

இன்றைக்குப் பார்க்கிறோம், பெரியார் என்ன செய்தார் என்பதை - இங்கே பாதுகாப்புக்காக காவல்துறையினர் வந்தி ருக்கிறார்கள். அவர்களில் பெண்களும் இருக்கிறார்கள். பெண்கள் அரசு துறையில் அதிகாரிகளாக, இன்னுங்கேட்டால், காவல்துறையில் டி.ஜி.பி. பதவி வரை வந்துவிட்டார்கள்.

பெரியார் என்ன செய்தார் என்று கேட்கிறார்களே, அவர்களுக்காக இதனை சொல்கிறேன்.

முதல் சுயமரியாதை மாகாண  மாநாட்டில் தீர்மானம்


1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் சுயமரியாதை இயக் கத்தை ஆரம்பித்த மூன்றாண்டுகளில், அய்யா அவர்கள் முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டினை நடத்துகிறார். அன்றைய நீதிக்கட்சித் தலைவராக இருந்த டாக்டர் சுப்பராயன் போன்றவர்கள் அம்மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் பேதம் இருக்கக்கூடாது; பெண்களை ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களில் இருந்து பெண் களை நியமிக்கவேண்டும்; அதைவிட முக்கியமாக, காவல் துறையிலும், ராணுவத் துறையிலும் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

அன்றைக்குப் பெரியாரை எல்லோரும் கிண்டல் செய்தார் கள்; ஏனய்யா, காவல்துறையிலும், ராணுவத்திலும் ஆண்கள் பணியாற்றுவதே கடினமாக இருக்கிறது; இதில் போய் பெண்கள் பணியாற்ற முடியுமா? என்று.

இன்றைக்கு ராணுவத் துறையில் பெண்கள், காவல்துறை அதிகாரிகளாக பெண்கள் இருக்கிறார்கள். இவையெல்லாம் எப்படி நடந்தது வெறும் சரசுவதி பூஜை கொண்டாடியதினாலா? இல்லையே! அதைத்தான் வருடாவருடம் கொண்டாடு கிறீர்களே!

சரசுவதி என்று பெயர் கொண்ட பாட்டிக்குக் கையொப்பம் போடத் தெரியாது. ஆனால், பேத்தி சரசுவதி வழக்குரை ஞர்களாக, மருத்துவர்களாக, நீதிபதிகளாக, பொறியாளர்களாக இருக்கிறார்கள். இவை அத்தனையும் எப்படி நடைபெற்றது என்பதை அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள். தந்தை பெரியார் அவர்களுடைய அயராத உழைப்பினால்தான் நண் பர்களே!

கட்சியை யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்!


இன்றைக்குத் தமிழ்நாட்டில் பதவி வரவேண்டும் என்பதற் காக கட்சிகளைத் தொடங்குகிறார்கள். ஒரு கட்சியை ஆரம் பிக்கவேண்டும் என்றால் மிகவும் சுலபமான வேலை. ஆனால், ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கவேண்டும் என்றால், உரிமம் வாங்கவேண்டும். அதற்கேற்ற இடம் வேண்டும். ஒரு பள்ளிக் கூடம் ஆரம்பிக்கவேண்டும் என்றாலும், அதற்குரிய விதி முறைகள் இருந்தால்தான் ஆரம்பிக்கவேண்டும். ஆனால், ஒரு கட்சியை யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்கிற காலகட்டத்தில் இன்றைக்கு இருக்கிறோம். கொள் கையைப்பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. கொடி யைப்பற்றியும் கவலை கிடையாது. இப்படி இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில்,

தான் வகித்த 29 பதவிகளைத் தூக்கி எறிந்தார் தந்தை பெரியார்!

அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள், ஒரே தாளில் தான் வகித்த 29 பதவிகளை - ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு, காங்கிரசில் சேர்ந்து காந்தியார் பின்னால், கதர் மூட்டையைத் தூக்கிச் சுமந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

ஆனால், இப்பொழுது என்ன செய்கிறார்கள், பதவி கிடைக்கவில்லை என்றால், கட்சியைவிட்டு போகிறார்கள். ஆனால், பெரியார் அவர்கள் இருந்த பதவிகளை விட்டுவிட்டு, அன்றைக்கு வெளியேறியவர் இறுதி மூச்சு அடங்குகிற வரையில், பதவி பக்கமே தலைவைத்துப் படுக்காமல், மக்களு டைய சிந்தனையைப் பெருக்கவேண்டும்; மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய பேதத்தை அழிக்கவேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்கிற நிலை இருந்தது. இது என்ன கொடுமை!

அதுமட்டுமல்ல நண்பர்களே, இந்து சட்டத்தில் இன்னமும் சூத்திரன் - உயர்ஜாதிக்காரன் என்கிற பிரிவுக்கும், அதனுடைய சம்பிரதாயத்திற்கும் இடம் இருக்கிறது.

திருமணங்கள் இன்ன முறையில்தான் இருக்கவேண்டும் என்று சொன்னார்கள். சுயமரியாதைத் திருமணமே செல்லாது என்று சொன்னார்கள். ஏழடி எடுத்து வைக்கவில்லை - நெருப்பை சுற்றி வரவில்லை. பெரியார் சாட்சியாக வந்து, ‘‘நான்தான் நடத்தினேன்’’ என்று சொன்னார். நீங்கள் நடத்தி னாலும், அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சொன் னார்கள்.

அண்ணா செய்த மிகப்பெரிய சாதனை!

அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதானே, சுயமரி யாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற மிகப்பெரிய சாதனையை செய்தார்கள்.

எனவே, நண்பர்களே! ஜாதி என்பதன்மூலமாக, மிகப் பெரிய அளவிற்கு தீண்டாமை என்பதை உருவாக்கி எவ்வளவு கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள்.

இன்னமும் கீதையில்,


சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்கள் என்று எழுதி, அதனைத்தான் அரசியல் சட்டத் திற்குப் பதிலாக கீதையை வைக்கவேண்டும் என்கிறார்கள்.

பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தலைமை யில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தைத் தூக்கிப் போட்டு விட்டு, கீதையை அரசியல் சட்டமாக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

அரசியல் தலைவர்களிடையே ஆயிரம் கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும்...

ஒரு சம்பவத்தை உங்களுக்குச் சொல்லவேண்டும் -

கீதையின் மறுபக்கம் நூலில் அந்தப் படத்தைப் போட்டி ருக்கிறார்கள்.

இந்து முன்னணியில் அமைப்பாளராக இருக்கின்ற ராம.கோபால அய்யர். அவர் திடீரென்று ஒரு நாள் கலைஞர் அவர்களுடைய கோபாலபுரம் வீட்டிற்குச் சென்றார் ராம.கோபால அய்யர் அவர்கள். கலைஞர் அவர்கள் அப்பொழுது முதலமைச்சராக இல்லை.
இப்பொழுது மோடி வந்து சந்தித்ததுபோல; நான் அதனை தவறாகச் சொல்லவில்லை. உடல்நலம் விசாரிக்கின்ற  நாகரிகம் நயத்தக்க நாகரிகமாகும். அரசியல் தலைவர்களிடையே ஆயிரம் கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், இதுபோன்ற ஒரு பண்பாடு வளரவேண்டும் என்பதை நாங்கள் வர வேற்கிறோம். தவறான கருத்துக்காக சொல்லவில்லை, உதாரணத்திற்காகச் சொல்கிறேன்.

அன்றைக்கு ராம.கோபால அய்யர் கலைஞரின் வீட்டிற்கு வருகிறார் என்கிற செய்தி வந்தது. அப்பொழுது கலைஞர் வீட்டில் இல்லை. தி.மு.க. தொண்டர்கள் கலைஞரின் இல்லத் தின் அருகே குவிந்தனர்.

கலைஞர் வீட்டிற்கு வந்தார், என்ன இவ்வளவு தோழர்கள் வந்திருக்கிறார்களே? என்று கேட்டார்.

ராம.கோபாலன் வரப் போவதாக சொல்லியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

சரி வரட்டுமே!   யார் வேண்டுமானாலும் வந்து பார்க்க லாமே! தாராளமாக வரட்டும், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி, அவர் மாடிக்குச் சென்று விட்டார்.

ராமகோபால அய்யரும் - கீதையின் மறுபக்கம் நூலும்!

சிறிது நேரம் கழித்து, ராமகோபாலன் அய்யர் வந்தார்; அவரை மேலே அழைத்துச் சென்றார்கள்.

கலைஞரும் அவரை வரவேற்று, நலம் விசாரித்தார். ராமகோபால அய்யரும் நலம் விசாரித்தார்.

கலைஞரிடம் ராமகோபால அய்யர், ‘‘உங்களுக்கு ஒரு புத்தகம் கொண்டு வந்திருக்கிறேன்’’ என்று சொன்னார்.

என்ன புத்தகம்? என்று கலைஞர் அவர்கள் கேட்டார்.

பகவத் கீதை. இதை நீங்கள் படிக்கவேண்டும் என்று கலை ஞரிடம் பகவத் கீதையைக் கொடுத்தார் ராமகோபால அய்யர்.

கலைஞர் அவர்களும், ‘‘மிக்க மகிழ்ச்சி. நான் நிறைய புத்தகம் படித்திருக்கிறேன். நீங்கள் கொடுக்கின்ற புத்தகத் தையும் நான் படிக்கிறேன். நான் ஒரு புத்தகம் கொடுக்கிறேன்; அதையும் நீங்கள் வாங்கிக் கொள்ளவேண்டும்’’ என்று சொல்லி,
டிராயரைத் திறந்து,

‘‘கீதையின் மறுபக்கம்’’ என்று வீரமணி அவர்கள் எழுதியி ருக்கிறார். அதனை நீங்கள் எடுத்துக்கொண்டு போய் படியுங் கள்; அவர் அதில் என்ன தவறு செய்திருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டுங்கள்’’ என்று சொல்லி அந்த புத்தகத்தை ராமகோபால அய்யரிடம் கொடுத்தார்.

இந்த சம்பவம் நடந்தது 2004 ஆம் ஆண்டு. இப்பொழுது 2017 ஆம் ஆண்டு. இதுவரையில் இந்தப் புத்தகத்திற்கு எந்த விதமான மறுப்பும் வரவில்லை. வரவும் முடியாது. ஏனென்றால், உண்மையைத்தான் நாங்கள் எழுதியிருக்கிறோம். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், அரசியல் சட்டத்திற்கு மாற்றாக கீதையைத்தான் கொண்டுவரவேண்டும் என்று நினைக் கிறார்கள்.

பன்மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள், பல தரப்பட்ட மக்கள், பன் மதங்கள் இருக்கின்ற நாட்டில், அவர்களுடைய கலாச்சாரம் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுடைய மொழிதான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் சாப்பிட முடியாது; அவர்கள் சொல்வதைத்தான் சாப்பிடவேண்டும் என்று சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில்தானே  மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்

வடநாட்டைவிட, தமிழ்நாட்டில்தானே மக்கள் பாதுகாப் பாக இருக்கிறார்கள்; இன்றைக்கு நினைப்பதை சாப்பிடும் உரிமை தமிழ்நாட்டில் இருக்கிறது. அதே நேரத்தில், இங்கே காவிகளைப்பற்றி சொன்னார்களே, அந்த நண்பர்கள்மீது எங்களுக்கு என்ன தனிப்பட்ட முறையில் கோபம். ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள் சிந்திக்கட்டும். நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டாமா?

உண்ணுவதற்கும், எண்ணுவதற்கும் அவரவர்களுக்கு உரிமை இருக்கவேண்டாமா? நான் எதை சாப்பிடுவது என்பதை மற்றவர்கள் நிர்ணயிக்கலாமா?

நாமத்திற்காக 150 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றுக் கொண்டு வருகிறது

இந்து மதம் என்பதில், வைஷ்ணவ மதம் இருக்கிறது; சைவ மதம் என்று இரண்டு மதம் இருக்கிறது. இரண்டு மதக்காரர் களுக்குள்ளேயே தகராறு; வடகலை நாமம்; தென்கலை நாமம்; பாதம் வைத்த நாமம்; பாதம் வைக்காத நாமம். யானைக்கு எந்த நாமம் போடுவது என்று இரண்டு பேருக்குமிடையே பிரச்சினை எழுந்து, 150 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, பிறகு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது வழக்கு. நீதிபதி சொன்னார், ஒரு வாரம் இந்த நாமம் போடுங்கள்; மறு வாரம் அந்த நாமம் போடுங்கள் என்று சொன்னார்.

இந்த வழக்கு 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறபொழுது, இந்துக்களே எல்லோரும் ஒன்று சேருங்கள், ஒன்று சேருங்கள் என்று சொல்கிறீர்களே, நீங்கள் முதலில் ஒன்று சேருங்கள்.

69 சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடு

எங்களுடைய சகோதரனை, உழைக்கின்ற தோழனை தொடக்கூடாது என்று சொல்கிறீர்கள். ஜாதியினுடைய விளைவு - பெரியாருடைய சிந்தனை - சமூகநீதி - அவர் சொல்லியதுபோல இட ஒதுக்கீடு - இந்தியாவில் 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலமும் கிடையாது.

தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லாம் மேலே வந்திருக்கிறார்களே, இட ஒதுக்கீடு, சமூகநீதி இல்லை என்றால், அந்த வாய்ப்புகள் வந்திருக்குமா?

அரசியல் சட்டத்தையே திருத்த வைத்தவர் தந்தை பெரியார். முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் தந்தை பெரியார் காலத்தில்.
69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக, 31-சி பிரிவின்கீழ் 69 சதவிகித இட ஒதுக்கீட்டினை கொடுக்கவேண்டும் என்கிற தீர்மானத்தை திராவிடர் கழகம், இந்தியாவிலேயே முதன் முறையாக நிறைவேற்றியது - எங்கே என்றால், புதுக்கோட் டையில் நடைபெற்ற மத்திய திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டத்தில்.

இந்த அளவிற்கு வந்த பிறகும்கூட, இன்னமும் அதற்கு ஆபத்துகள் வந்துகொண்டிருக்கின்றன.

துப்புரவுத் தொழிலாளியின் பணிதானே  அடிப்படையானது

வடநாட்டில் சென்று பார்த்தீர்களேயானால், பசு மாட்டிற்கு இருக்கின்ற பாதுகாப்பு, உழைக்கின்ற என்னுடைய சகோதரன் இருக்கிறானே, அவன் பிறவியினால் தாழ்த்தப்பட்டவனாக ஒதுக்கப்பட்டிருக்கிறான். அவனுடைய உழைப்பு இல்லா விட்டால், நகரம் நாறிப் போயிருக்கும். துப்புரவுத் தொழி லாளியின் பணிதானே  அடிப்படையானது. அவர்கள்தானே அடிப்படையான பணியைச் செய்கிறான். அந்தச் சகோதரன் இன்றைக்குக் கீழ்ஜாதி; கீழ்ஜாதியிலும் கீழ்ஜாதி.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

இங்கே உரையாற்றிய கம்யூனிஸ்ட் தோழர் சொன்னார், இதுவரையில் நாங்கள் செய்த பணிகளைவிட, திராவிடர் கழகத்துக்காரர்கள் இப்பொழுது ஜாதி ஒழிப்பை முன்னிலைப் படுத்துவதுதான் மிக முக்கியம் என்று. அதேபோன்று நேற்று கேரள மாநில முதமைச்சர் பினராயி அவர்கள், மதுரையில் பேசும்போது சொன்னார், நாங்கள் இதுவரையில் வர்க்க பேதம், வர்க்க பேதம் என்றே இருந்தோம்; இனிமேல் வருண பேதத்தை- ஜாதியை ஒழிப்பதுதான் அடிப்படையானது என்பதை உணர்ந்துகொண்டோம் என்று சொன்னார். அது மிகவும் முக்கியமானதுதான்.

தந்தை பெரியார் அவர்கள் மிக எளிமையாக ஒரு உதாரணம் சொன்னார். இன்றைய பணக்காரன்; நாளைய ஏழை. நாளைய பணக்காரன், அதாவது இப்பொழுது பணம் சேர்த்தவர்கள் எல்லாம் எந்த நிலைக்கு இருக்கிறார்கள் என்பதை நீங்களே பார்க்கிறீர்களே - ஏண்டா பணம் சேர்த்தோம் என்று அவதிப்படுகிறார்கள். இது என்னுடைய பணம் இல்லை, என்னுடைய பணம் இல்லை என்று பணத்தை சேர்த்தவர்கள் ஓடுகிறார்கள்.

இன்றைய பார்ப்பான், நாளைக்கும் பார்ப்பான்; என்றைக்கும் பார்ப்பான்!

பணக்காரன் -ஏழை என்கிற பேதம் உலகம் முழுவதும் உண்டு. ஆனால், அந்த வர்க்கத்தில் ஒரு அம்சம் என்ன வென்றால், இன்றைய பணக்காரன் நாளைக்கு ஏழை ஆகலாம்; நாளைய ஏழை - மறுநாள், மறுபடியும் பணக்காரன் ஆகலாம்.
பெரியார்தான் கேட்டார், இன்றைய பார்ப்பான், நாளைக்கும் பார்ப்பான்; நாளை மறுநாளும் பார்ப்பான்; எப்பொழுதும் பார்ப்பான்; சுடுக்காட்டிலும் பார்ப்பான் என்றார்.

சுடுகாட்டில்கூட இன்ன ஜாதிக்கு இன்ன இடம் என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

வெளிநாட்டிலிருந்து வந்தார் பாருங்கள், கிருத்தவர்கள், நமக்குக் கல்வியைக் கொடுத்தார்கள். அவர்களிடையேயும் இவர்களுடைய மதத்தை நுழைத்து, ஜாதியை உண்டாக்கி விட்டார்கள்.

ஆதிதிராவிடர் கிருத்தவர்கள், மீதி திராவிடர் கிருத்து வர்கள் என்று இருக்கிறார்கள். இசுலாமிய சமுதாயத்தில்தான் ஓரளவுக்கு ஜாதி இல்லாமல் ஆக்கினார்கள்.

ஜாதி முறை என்பது உள்ளே நுழைந்து....

நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும் தோழர்களே, இந்த ஜாதிய அமைப்பினுடைய நோக்கத்தில், நாம் இவ்வளவு கீழே போய், மிகப்பெரிய அளவிற்கு சங்கடங்களை அனுபவிக்கும் இந்தக் காலகட்டத்தில், ஜாதி முறை என்பது உள்ளே நுழைந்து நம்மையெல்லாம் தடுத்துக் கொண்டி ருக்கிறபொழுது,

அதைத்தான் அம்பேத்கர் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்,

மற்ற இடங்களில் ஜாதி முறை இருப்பது சமத்துவம் - சமத்துவமின்மை. ஆனால், இங்கே அப்படியல்ல. ஜாதிய அடுக்குமுறை இருக்கிறது. ஒருவன் மேலே, அவனுக்குக் கீழே இன்னொருவன்; இவனுக்குக் கீழே இன்னொருவன்; இவனுக் கும் கீழே இன்னொருவன் - அய்ந்தாவது ஜாதி பஞ்சமன்; அதற்கும் கீழே இருப்பவர்கள் எல்லா ஜாதிகளையும் சேர்ந்த பெண்கள்.

எனவேதான் நண்பர்களே, இந்தக் கருத்தை எடுத்துச் சொல்கின்ற காலகட்டத்தில், ஜாதிக்கு வாய்ப்பு அளிக்கக்கூடாது.

எனவேதான், இன்றைக்கும் மனித குலத்திற்காகப் போராடு கிறோம். ஆனால், இன்றைக்கு எவ்வளவுப் பிரச்சினைகள். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.பற்றியெல்லாம் நீங்கள் பேசவேண்டும் என்று தோழர்கள் சொன்னார்கள். ஆனால், இதைப்பற்றியெல்லாம் பேசுவதற்கு நிறைய பேர் இருக்கி றார்கள். ஆனால், ஜாதி ஒழிப்பையும், தீண்டாமை ஒழிப்பையும் வர்க்கம் என்று சொன்னேன் பாருங்கள், அந்த வர்க்கத்தில், பணக்காரன் ஆகலாம்.

மேல்ஜாதிக்காரன், கீழ்ஜாதிக்காரன், தொடக்கூடிய ஜாதி, தொடக்கூடாத ஜாதி என்பதில் கடைசிவரையில் மாற முடியாதே!

அர்த்தமுள்ள இந்து மதத்தை ஒழிக்கவேண்டாமா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எழுதியிருக்கிறார்கள், ‘‘மதம் மாறலாம்; கட்சி மாறலாம்; ஜாதி மாற முடியுமா? என்றால், ஜாதி மாற முடியாது. ஒருமுறை ஒரு ஜாதியில் நீங்கள் பிறந்துவிட்டீர் களேயானால், கடைசிவரையிலும் அந்த ஜாதியில்தான் இருந்தாகவேண்டும். அதிலிருந்து மாறுபட முடியாது என்று.

இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம். இதனை ஒழிக்க வேண்டாமா?

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடிவிட்டார் என்று சொன்னால் மட்டும் போதுமா? அவர் பாப்பாவிடம் பாடினார்; பாப்பானிடம் பாடினாரா என்பதுதான் மிக முக்கியம்.

கடைசியாக ஜாதி ஒளிந்த இடம்  கோவில் கர்ப்பக்கிரகம்!

ஜாதிப் பாம்பைத் தேடித் தேடி அடித்ததன் விளைவாக, அந்தப் பாம்பு கடைசியாக எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்த்த நேரத்தில், அந்த இடத்தைத்தான் தந்தை பெரியார் கண்டுபிடித்தார். அதுதான் கோவில் கர்ப்பக்கிரகம்.

அய்.ஏ.எஸ். அதிகாரியாக ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆகிவிட்டார்.

அய்க்கோர்ட் ஜட்ஜாக  ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆகிவிட்டார்.

அர்ச்சகர் ஆக முடிந்ததா? முடியவில்லையே! கேட்டால், ஆகமம் என்றார்கள்.

94 வயதில் தந்தை பெரியார் அவர்கள்,  போராட்டக் களத்தில் நிற்பேன் என்றார்.

உடனே நம்மாள்கள் குறுக்குச்சால் ஓட்டினார்கள், ‘‘நீங்கள் தான் கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் ஆயிற்றே, யார் அர்ச்சகராக இருந்தால் உங்களுக்கு என்ன?’’ என்று கேட்டார்கள்.

உடனே பெரியார் அவர்கள், எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லைதான்; என்னுடைய தம்பி போய் கோவிலில் முட்டிக் கொள்கிறானே - அவன் சூத்திரன் என்றால், எங்கள் அம்மா யார்? சூத்திரச்சி இல்லையா!

ஆகவேதான், செவ்வாய்க்கிரகத்தில்கூட போய் இறங்கு கிறான் மனிதன்; ஆனால், நம்மூரில் கர்ப்பக்கிரகத்திற்குள் போக முடியவில்லை; இதுதான் ஜாதி.

நீங்கள் நன்றாக எண்ணிப் பாருங்கள், அது என்ன அவ்வளவு பெரிய இடமா?

கலைஞர் ஆட்சியில்  கொண்டுவரப்பட்ட சட்டம்

தோழர்களே, இன்றைக்கு நம்முடைய நிலை என்ன? அதற்காகப் போராடி, கலைஞர் ஆட்சியில் சட்டம் கொண்டு வந்தார். அதனை நிறுத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றத் திற்குச் சென்றார்கள். சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள் மனு தாரர்களாக இருந்தார்கள்.

உச்சநீதிமன்றம் என்ன சொல்லியது என்றால், கலைஞர் கொண்டு வந்த சட்டம், திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தெளிவாகத் தீர்ப்பு அளித்தது.

நாத்திகர்கள் கோவிலுக்குள் புகுந்துவிடுவார்கள் என்று சொன்னார்கள்.

அதற்காக இன்னொரு சட்டம் போட்டு, ஆகம விதிகளுக்காக நீதிபதிகளை நியமித்து, திட்டங்களை வகுத்துக் கொடுத்தார்கள்.
இன்றைக்கு ஆகமம் படித்தவர்கள் 206 பேர் இருக்கிறார்கள். ஆகமமே தெரியாதவர்கள் இன்றைக்குக் கோவிலில் மணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆகமம் படித்தவர்கள் வெளியில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஜாதி ஒழிப்பு என்பது  மனித உரிமையைக் காப்பாற்றத்தான்

இவர்களையெல்லாம் உள்ளே அனுப்பவேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற போராட்டம். இது ஏதோ அர்ச்சகர் பதவிக்காக அல்ல நண்பர்களே! ஜாதி தீண்டாமை வேர் அங்கே இருக்கிறது - ஆகவே, அந்த வேரை அடியொடு அழிக்க - மனித உரிமையைக் காப்பாற்றத்தான் நண்பர்களே!

அடுத்தபடியாக உச்சநீதிமன்றத்திலும் இந்த சட்டம் செல்லும் என்று ஆக்கிவிட்டார்கள்.

கேரளாவில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஆதிதிராவிடர்கள் அர்ச்சகர்கள் ஆகிவிட்டார்கள். இதனால் எந்த சாமியும் செத்துப் போய்விடவில்லை.

இவன் மணி அடிக்கிற சாமிதான் காணாமல் போய்விடு கின்றன. காவல்துறையிலேயே சிறப்புப் பிரிவு போன்று சிலை கடத்தல் தடுத்தல் பிரிவு என்கிற ஒரு துறை இருக்கிறது. அந்தத் துறைக்குப் பொன்மாணிக்கவேல் அதிகாரியாக இருக்கிறார். மிகவும் சிறப்பாக செயல்படுகிறார், அவரே அந்தத் துறைக்கு அதிகாரியாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நேற்றுகூட சொல்லியிருக்கிறார்கள், 100 வழக்குகளை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். பாஸ்போர்ட் வாங்காமல், விசா வாங்காமல் நம்மூர் கடவுள்கள் எல்லாம் ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும் பத்திரமாக கண்காட்சியில் இருக்கிறார்கள்.

உள்ளே இருந்தால் கடவுள்; கடத்தப்பட்டால் சிலை

நம்முடைய பத்திரிகையாளர்களைப் பார்த்தீர்களேயானால், இன்னின்ன கடவுள்கள், இன்னின்ன திருவிழா இங்கே, அங்கே நடைபெறுகிறது என்றும், சுந்தரேசுவர் மீனாட்சியம்மனுக்குத் தாலி கட்டினார் என்றெல்லாம் எடுத்துச் சொல்வார்கள். உள்ளே இருக்கின்றவரை கடவுள் என்று செய்தி வெளியிடு வார்கள். ஆனால், இந்தக் கடவுளைக் கடத்தினால், அந்தச் செய்தியை எப்படி வெளியிடுவார்கள் தெரியுமா? சிலை திருட்டு என்று செய்தி வெளியிடுவார்கள். வெளியில் போனால் சிலை; உள்ளே இருந்தால் கடவுள். இதுதானே உன்னுடைய கடவுள் தத்துவம். அந்த இடத்திற்குச் சென்று எங்களுடைய ஆள் பணியாற்றினால் என்ன குறைந்து போய்விடும். முறைப்படி ஆகமம் படித்திருக்கிறார்களே அவர்கள்.

பண மதிப்பிழப்பு திட்டம்  வெற்றியா? தோல்வியா?

இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன்,


பண மதிப்பிழப்பு என்பது வந்து ஓராண்டு காலம் ஆகி யிருக்கிறது. இதுவரையில் அவர்கள் சொன்ன நோக்கம் நிறைவேறியிருக்கிறதா? கருப்புப் பணம் வெளியில் வந்திருக் கிறதா?

ஒரே ஒரு கேள்வி - கருப்புப் பணத்தில் மோடி வெற்றி பெற்று இருக்கிறாரா? என்று மன்மோகன்சிங் கேட்டிருக்கிறார். வரித்துறையில் பயங்கரவாதம் என்று சொன்னார் - பகற் கொள்ளை என்று சொன்னார்.

பேசாத மன்மோன்சிங் என்று அவருக்குப் பெயர் - ஆனால், அவரையே பேச வைத்தது என்று சொன்னால், இந்த அக்கிரமம், சாது மிரண்டால், காடு கொள்ளாது என்று சொல் வதுபோன்று மிகப்பெரிய அளவில் அந்த வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறது.

இது தோல்வியா? வெற்றியா? என்பதற்கு ஒருகேள்வி.

நேற்றுகூட நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய மாநாட்டில் கேட்டேன்.

நண்பர்களே, இன்றைய விடுதலையில் அந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது.

இந்தச் செய்தியை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.

அரசியலைப்பற்றி பேசாமல் இருக்கிறாரே என்று நீங்கள் நினைக்கலாம்; நம் நாட்டில் அரசியல் பேசுவது போன்றா நடைபெறுகிறது. இதற்குமுன் கட்சி மாறிக் கொண்டிருந்தார்கள்; இப்பொழுது அணி மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் வளர்ச்சியே தவிர, வேறொன்றுமில்லை.

நீங்கள் எந்தக் கட்சியில் இருக்கிறீர்கள் என்று அதற்குமுன் கேட்பார்கள்; இப்பொழுது நீங்கள் எந்த அணியில் இருக் கிறீர்கள் என்று கேட்கிறார்கள். பிணிகள்தான் வளர்ந்திருக்கிறது.

89 கோடி ரூபாய் கருப்புப் பணமா?  வெள்ளைப் பணமா?
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மொத்த முள்ள 2,63,696 வாக்காளர்களில் 85 விழுக்காட்டினருக்கு பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டு 2,24,145 பேருக்கு தலா ரூ.4,000 வீதம் மொத்தம் 89.65 கோடி பணம் விநியோகிக் கப்பட்டதற்கான குறிப்புகள் சோதனையில் கைப்பற்றப்பட் டுள்ளன.

இந்தப் பணத்தை முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச் சர்கள் தலைமையிலான 7 குழுக்கள் தான் வினியோகித்துள்ளன.
பழனிச்சாமி தலைமையிலான குழு 33,193 வாக்காளர் களுக்கு ரூ.13.27 கோடியும்,

மூத்த அமைச்சர் செங்கோட்டையன் குழு 32,830 பேருக்கு ரூ.13.13 கோடியும் விநியோகித்துள்ளனர்.

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் ரூ.12.83 கோடி,

தங்கமணி ரூ.12.67 கோடி,

வேலுமணி ரூ.14.91 கோடி,

ஜெயக்குமார் குழு ரூ.11.68 கோடி,

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் குழு ரூ.11.13 கோடி வீதம் வாக்காளர்களுக்கு விநியோகித்ததை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆவணங்களில் பதிவு செய்திருக்கிறார்.

எனவே, வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதை, அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவு செய்த ஆவணம் வருமான வரித்துறையிடம் சிக்கியது என்று பத்திரிகையில் வந்த செய்தியை எடுத்துச் சொல்கிறேன்.

இன்றைக்கு 2 லட்சம் ரூபாய்க்குமேல் பணம் இருந்தால், வருமான வரித் துறைக்குத் தெரியவேண்டும்.

ஆனால், கோடிக்கணக்கான அதிகமான பணம் வைத்திருந்ததால், இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று சி.பி.அய்.க்கும், அமலாக்கப் பிரிவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தார்கள்.

அந்த 89 கோடி ரூபாய் கருப்புப் பணமா? வெள்ளைப் பணமா? நன்றாக நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

இதைவிட இன்னொரு முக்கியமான செய்தி என்ன வென்றால், அதற்கு முன்பாக, 33 கோடி ரூபாயை மாற்றி யிருக்கிறார். அதுவும் புதிய பணம் வந்தபோது மாற்றியிருக் கிறார். இதற்கு என்ன கணக்கு என்று கேட்டால், அந்தக் கணக்கு எங்களிடம் இல்லை என்று சொல்கிறார்கள். இதுதான் பண மதிப்பிழப்பின் வெற்றிக்கு அடையாளமா?

சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் கொடுக்கப்பட்ட 89 கோடி ரூபாய் புதிய நோட்டா? பழைய நோட்டா? என்றால், புதிய நோட்டுதான்.

நீங்களும், நானும் இரண்டு லட்சம் ரூபாய்க்குமேல் இருந் தால் கணக்கு சொல்லவேண்டும். தகவல் சொல்லவேண்டும்.
சரி, கேஸ் லெஸ் எகானமி -பணம் இல்லாத பொருளாதாரம். ஆனால், நம்மிடம் பணம் இல்லாத பொருளாதாரம்தான். ஆனால், அவர்களிடம் 89 கோடி ரூபாய் பிடித்து வருமான வரித்துறையினர் வழக்குப் போட்டார்களே!

எங்களுக்கு ஒன்றும் அமைச்சர்கள்மீதோ, தமிழக அரசின் மீதோ தனிப்பட்ட முறையில்  கோபம் கிடையாது. நாங்கள் என்ன அந்த இடத்தில் போய் அமரப் போகிறோமோ? அந்த இடத்தில் உட்காருகிறவர்களின் நிலை என்ன ஆகிறது என்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

89 கோடி ரூபாய் பிரச்சினை எப்பொழுது நடந்தது? பண மதிப்பிழப்பிற்குப் பிறகுதானே!

என்னுடைய திட்டம் தோல்வி அடைந்தால்....

நம்முடைய பிரதமர் மோடி சொல்கிறார், ‘‘என்னுடைய திட்டம் தோல்வி அடைந்தால், என்னை எரித்துக் கொல் லுங்கள்’’ என்று.
பண மதிப்பிழப்பு வந்த நவம்பர் 8 ஆம் தேதிக்குப் பிறகு,  நான்கு மாதம் கழித்து நடைபெறுகின்ற தேர்தல் பிரச்சாரத் தில்தான் 89 கோடி ரூபாய் பிரச்சினை வந்தது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், 89 கோடி ரூபாய் கள்ளப் பணமா? நல்ல பணமா? கருப்புப் பணமா? நல்ல பணமா? அப்படியென்றால், பணமதிப்பிழப்பு என்கிற திட்டத்தால் பயனுண்டா? இல்லையா? வெற்றியா? தோல்வியா? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்.

ஆனால், மக்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது; திடீரென்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று செய்தி வந்ததும், இந்தச் செய்தியை மறந்துவிடுவார்கள். அதேபோன்று வெவ்வேறு செய்திகளை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அடுத்த தலைமுறைக்கு  ஒரு பெரிய மான வாழ்வு


எனவே, நண்பர்களே! நீங்கள் அரசியலைப்பற்றி கவலைப்படுவதைவிட, சமுதாயத்தில் நமக்கு இருக்கின்ற இழிநிலையைப் போக்குவதற்கு இளைஞர்களே வாருங்கள்! எங்கள் பின்னால் வந்தால், உங்களை நாங்கள் சட்டப்பேர வைக்கு அழைத்துப் போகிறோம், நாடாளுமன்றத்திற்கு அழைத்துப் போகிறோம் என்று சொல்லமாட்டோம்; எங்கள் பின்னால் வந்தால், நம்முடைய இழிவை ஒழிப்பதற்கு சிறைச் சாலைக்கு அழைத்துப் போவோம். அடுத்த தலைமுறைக்கு ஒரு பெரிய மான வாழ்வு - நம்முடைய தலைமுறை இழி தலைமுறையாக இருக்காது என்று சொல்லி, இந்த வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து என்னுடைய உரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...