Tuesday, November 21, 2017

திராவிடர் கழகம் வழிகாட்டுகிறது

குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பாஜகவிற்கும், காங்கிரசிற்கும், படேல் சமுதாய மக் களின் வாக்குகளை கைப்பற்றுவதில் பெரும் போட்டி நிலவுகிறது,  2015ஆம் ஆண்டுமுதல் குஜராத்தில் படேல் மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு இளம் தலைவர் ஹர்திக் படேல் தலைமையில் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.

குஜராத் மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டதாக கூறி படேல் இனமக்கள் பாஜக மீது கடுமை யான கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, படேல் இன மக்களின் வாக்குகளைக் கைப்பற்ற அவர்களுக்கான புதிய இட ஒதுக்கீட்டு முறை ஒன்றை முன்வைத்துள்ளது.  இது அவர்களுக்கு புதியதாக இருக்கலாம். ஆனால் திராவிடர்கழகத் தலைவரின் ஆலோசனையின்படி தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கைதான் அங்கும் தற்போது காங்கிரஸ் கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி என்ற பெயரில் ஒட்டுமொத்த படேல் சமூகமும் ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் அவர்கள் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகிவிட்டனர். இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் அவர்களுடன் பேச முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் கபில்சிபல் தலைமையில் குழு ஒன்றை ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

இந்தக்குழுவுடன் "மும்முறை பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஊடகவியலாளர்களுடன் பேசிய கபில் சிபல் கூறியதாவது: அரசமைப்புச் சட்டம் 31, 38(2)இல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இந்தப் பிரிவின் படி மாநில அரசு மாநில இட ஒதுக்கீடு கேட்டு போராடும் மக்களின் நலன் கருதி இட ஒதுக்கீட்டில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும், இதை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடைசெய்ய முடியாது.  நாங்கள் தற்போது மாநில அரசின் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான 49 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் புதிதாக 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சேர்க்க முடியும். இப்படி புதிதாக கொண்டுவரும் சட்டத்தின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட மக்களும், புதிதாக சேர்க்கப்படும் (படேல் இன) இனமக்களும் பயனடைவார்கள்" என்று கூறினார்.

இது குறித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் பரத்சிங் சோலங்கி கூறியதாவது: "கபில்சிபல் அவர்கள் கூறிய புதிய இட ஒதுக்கீட்டு முறையை(பார்முலாவை) பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி ஏற்றுக் கொண் டது.  இது குறித்து அந்த அமைப்பு தங்களுக்குள் ஆலோசனை நடத்த முன்வந்துள்ளது.  கபில்சிபலின் இந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு ஹர்திக் படேலும் ஆதரவு தெரிவித்துள்ளார்" என்று கூறினார்.

குஜராத் அரசின் தற்போதைய இட ஒதுக்கீட்டுக் கொள்கையானது அரசமைப்புச் சட்டம் 15(4) 16(4) பிரிவு களின் கீழ் வருகிறது. இதை மாற்றியமைத்து புதிய இட ஒதுக்கீட்டை கொண்டுவந்து படேல் சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீட்டுப் பயனை வழங்குவதே காங்கிரசின் நோக்கம் ஆகும். இதற்கு இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் படேல் சமூக மக்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

தந்தை பெரியாரின் சமூக நீதி மண் - இப்பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல;  இந்தியாவுக்கே வழி காட்டும் வல்லமை பெற்றதாகத் திகழ்கிறது. மண்டல் குழு தொடர்பான வழக்கில் (இந்திரா சகானி வழக் கில்) 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு விஞ்சக் கூடாது என்ற உச்சநீதிமன்ற ஆணையினால் தமிழ் நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் 31 (சி) பிரிவின் கீழ் மாநில அரசே சட்டம் இயற்றி, அதற்கு நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெற்று  ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டால், எந்த நீதிமன்றமும் அதில் தலையிட முடியாது என்று கூறியதோடு அல்லாமல் அதற்கான மூல சட்ட முன் வரைவையும் தயாரித்துக் கொடுத்தார்.

அதன்படியே தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்வராக செல்வி ஜெயலலிதா இருந்தபோது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, அதன் பின் நாடாளு மன்றத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு, தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

தந்தை பெரியாருக்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைவர், திராவிடர் கழகத்தின் சார்பில் இப்படியொரு சாதனையை சாதிக்க முடிந்தது. இப்பொ ழுது அது இந்தியாவுக்கே சமூக நீதித் தளத்தில் கலங் கரை விளக்கமாக, பாதுகாப்புப் பெட்டகமாக இருக்கிறது என்பது விளங்கிடவில்லையா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...