Monday, August 21, 2017

அரசியல்வாதிகள் நடுக்கம்


தந்தை பெரியார்
மனித சமூகத்தில் பிராமணன் என்று  ஒரு ஜாதி மேலாக இருந்து பாடுபடாமல் வயிறு வளர்க்கவும், சண்டாளன் என்று ஒரு ஜாதி கீழாக இருந்து பாடுபட்டு பாடுபட்டு இராப் பட்டினியாய் இருக்கவுமான காரியங்கள் கூடாது என்றால் சங்கராச்சாரி என்னும் மதத்தலைவன் அது பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அதற்கு ஆதாரம் பிராமணனுடைய ரத்தத்திலும் சண்டாளனுடைய ரத்தத்திலும் இருக்கின்றது என்றும் சொல்வாரானால் மிஸ். மேயோ நூற்றுக்கணக்காய் ஆயிரக்கணக்காய் இந்த நாட்டில் பிறக்காததும் பிறந்த பெருமையை அடைய முடியாமல் போனதும் இந்தியாவுக்குப் பெருத்த நஷ்டமல்லவா என்று கேட்கின்றோம்.
மிஸ். மேயோ அம்மையார் இந்தியாவிற்கு வரப்போகின்றார் என்கின்ற சேதி எட்டியவுடன் இந்திய அரசியல்வாதி, தேசியவாதி, சீர்திருத்தவாதி என்கின்ற கூட்டங்களுக்குப் புலியைக்கண்ட ஆட்டுக்கூட்டங்கள் போல் நடுக்கங்கள் ஏற்பட்டுவிட்டதைப் பத்திரிகைகளில் காணலாம்.
மிஸ். மேயோ யார்? அவர் புலிக்குச் சமமானவரா? அந்தம்மையாரைக் கண்டால் இந்தியர்கள் நடுங்க வேண்டியதுதானா என்பவைகளை முதலில் யோசிப்போம்.
மிஸ். மேயோ ஒரு ஆங்கில மாது. அவர் 4, 5 வருடங்களுக்குமுன்  இந்தியாவுக்கு வந்து இந்துக்களின் நாகரிகம், பழக்க வழக்கம், மதச்சம்பிரதாயம், வாழ்க்கை முறை முதலியவைகளைப் பற்றி நன்றாய் அனுபவ ஆதாரங்களுடனும், தக்க சாட்சியங்களுடனும் ஆராய்ந்து விசாரித்து அறிந்த உண்மைகளை ஒரு சிறிய புத்தக ரூபமாக்கி இந்தியத்தாய் என்னும் பேரால் உலக மக்களுக்கு வெளியிட்டவர்.
அந்தம்மையார் வெளியிட்ட உண்மைகளை இதுவரை எவரும் அடியோடு பொய் என்று  யாரும் மறுத்துக்கூற முன்வரவில்லை. அரசியல் பிழைப்புவாதிகளும் அரசியல் பிழைப்புப் பத்திரிகைகளும் அம்மையைத் தூற்றின. சில கண்டன உரைகள் பகர்ந்தன. ஆனால் அவை பொய் என்று கூறயெவருக்கும் தைரியம் வரவில்லை.
தோழர் காந்தியார் அப்புத்தகம் இந்திய சீர்திருத்தவாதிகளுக்குள் என்றும் நிலைத்திருக்க வேண்டியதொரு ஆதாரம் என்றார்.
தோழர் ரவீந்தரநாத் டாக்கூர் மத சம்பந்தமான காரியங்களுக்கு இந்தியர் மாட்டுச் சாணியைச் சிறிது சாப்பிடுகின்றார்களே ஒழிய வேறில்லை என்றார்.
தோழர் லாலாலஜபதிராய் அவர்கள் அமெரிக்கா மாத்திரம் வாழுகின்றதா என்று சொன்னார். தென்னாட்டு தேசபக்தர்களுக்குத் தலைவராய் வாய்த்த தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் வேதம், சாஸ்திரம் ஆகியவைகள்தான் எல்லோரும் படிக்கக்கூடாது என்கின்ற நிர்பந்தம் இருந்து வருகின்றதே ஒழிய மற்றப்படி ஒன்றுமே படிக்கக்கூடாது என்கின்ற நிர்பந்தம் இல்லை என்று சொன்னார்.
மகாகாருண்ணியமும், நீதியும், நாகரிக ஞானமும், பகுத்தறிவும் கொண்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பிரிட்டிஷ் அரசாங்கமோ குழந்தைகளைக் கல்யாணம் செய்யக் கூடாது என்ற சட்டம் செய்ய ஏற்பாடு செய்தாகி விட்டது என்று உலகத்துக்குத் தெரிவித்து விட்டார்களே ஒழிய அதைச் சரியானபடி நீதி செலுத்தாமலே இருந்து வருகிறார்கள்.
மேயோ அம்மையார் இந்தியாவுக்கு வந்து இந்திய மக்கள் அவிவிவேகத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையும், மிருகத்தனத்தையும் வெட்டவெளிச்சமாய் ஆதாரங் களோடு விளக்கிக்காட்டி விட்டுப்போய் இன்றைக்கு 4, 5 வருஷங்களாகியும் அவை வெளியான புத்தகங்கள் பல பாஷைகளிலும் பதினாயிரக்கணக்காகச் செலவாகியும் நாளதுவரை அவ்வாபாசமானதும், காட்டுமிராண்டித்தனமானதுமான விஷயங்களில் 100க்கு 10 வீதம்கூட அரசியல்வாதிகளாலோ, தேசியவாதிகளாலோ, சீர்திருத்தவாதி களாலோ, அரசாங்கத்தாராலோ ஒழிக்க முடியவில்லை என்றால் இந்தப் பாழாய்ப்போன இந்திய நாட்டுக்கு ஒரு மேயோ - அதுவும் 5 வருஷத்திற்கு ஒரு தடவை வரும்படியான மேயோ போருமா? என்று கேட்கின்றோம்.
குழந்தை மணம் இன்றும் 4 வயது பெண் குழந்தைக்கு 25 வயது தடி ஆணை மணம் செய்கின்றார்கள். உள்நாட்டில் அந்த சட்டத்தை மீறினால் கேள்வியே இல்லை. வெளிநாட்டுக்குப் போய் அங்கே மணம் செய்து கொண்டு வந்துவிட்டால் பேச்சே இல்லை என்கின்ற முறையில் இன்று நம் நாட்டில் குழந்தை மணம் தடுப்பு இருந்து வருகின்றது. இதைக் கண்டு நம் தேசபக்தர்கள் வெட்கமடைய வேண்டியிருக்க மேலும் மிஸ். மேயோவைக் கண்டு எங்கள் யோக்கியதையைப் பற்றி நீ காகிதத்தில் எழுதினது போராதம்மா தயவு செய்து கல்லில் எழுதிவையம்மா என்று கேட்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.
கல்வி விஷயத்தைப் பற்றி இந்தியாவில் வெள்ளைக்கார நாகரிக அரசாங்கம் வந்து 200 வருஷமாகிய இன்றும் 100-க்கு 8 பெயரே அதுவும் மேல்ஜாதிக்காரர்களுக்குள்ளாகவே கல்வி பெரிதும் நின்றுவிடும் மாதிரியான முறையில் இருக்குமானால் மிஸ். மேயோவை மேளதாளம் வைத்து அழைத்து ஊர்வலம் செய்து வரவேற்பு வாசித்து நமது அரசாங்க ஆட்சியின் யோக்கியதையை உலகெல்லாம் பரப்பும்படி காணிக்கை வைத்துக் கேட்டுக்கொள்ள வேண்டாமா என்று கேட்கின்றோம்.
மனிதத்தன்மை விஷயத்தில் - ஆலயங்களுக்கு மக்கள் செல்லும் விஷயத்தில் இன்ன ஜாதியார் இவ்வளவு இன்ன ஜாதியார் இவ்வளவு தூரம்தான் போகலாம். இன்ன ஜாதியார் போகவே கூடாது என்கின்ற காட்டுமிராண்டி வழக்கத்தை நிறுத்த சட்டம் செய்யவேண்டும் என்று சொன்னால் சர்க்காரார் அது வெகுஜனங்களுக்கு இஷ்டமில்லை. ஆனதால் அதை எதிர்க்கிறோம் என்று சொல்லுவதும், காங்கிரசுக்காரர்கள் வெகுஜனங்களுக்கு விரோதமான காரியத்தைச் செய்யக்கூடாது என்று சொல்வதும், வைதீகர்கள் மதத்தில் அரசாங்கமோ, பொதுஜனங்களோ, காங்கிரசோ, சீர்திருத்தவாதிகளோ பிரவேசிக்கக்கூடாது என்று சொல்லுவதும், கடைசியாக அச்சட்டம் வாபீசு வாங்கிகொள்ள நேர்ந்ததும், அதுவும் காந்தியாரும் ராஜகோபாலாச்சாரியாரும் செய்த துரோகத்தினால் இச்சட்டம் வாபீசு வாங்கிக்கொள்ள நேர்ந்தது என்று சொல்ல நேர்ந்தது என்றால் மிஸ். மேயோ அம்மையாரின் விஜயம் இந்நாட்டுக்குஒரு தடவை அவசியமா, பலப்பல ஆயிரம் தடவை அவசியமா என்று கேட்கின்றோம்.

ஜீவகாருண்ய விஷயத்தில ஆடுமாடுகளை உயிருடன் கட்டிப்போட்டு அதன் வாயையும், மூக்கையும் பிடித்து அமிழ்த்திக் கொண்டு வெதரை நசுக்கி சரீரத்தில் சதை சதையாய் அறுத்து மாமிசத்தை எடுப்பதும், அந்த விதமான கைங்கரியத்துக்கு மதகைங்கரியம் என்ற சொல்லுவதுடன் தான் சித்திரவதைக் கொலையைப் பற்றி வேறுயாருக்கும் பேச உரிமையில்லை என்று சொல்லுவதுமான காரியங்கள் நேற்றும், இன்றும், நாளையும், முக்காலத்தலும் நடந்து வரக்கூடியதாய் இருக்கும்போது மிஸ். மேயோவை இந்தியாவுக்கு வரும்படி இதுவரை அழைக்காமல் இருந்தது இந்நாட்டு மக்கள் அவிவிவேகமல்லவா என்று கேட்கின்றோம்.
மனித சமுகத்தில் பிராமணன் என்று  ஒரு ஜாதி மேலாக இருந்து பாடுபடாமல் வயிறு வளர்க்கவும், சண்டாளன் என்று ஒரு ஜாதி கீழாக இருந்து பாடுபட்டு பாடுபட்டு இராப் பட்டினியாய் இருக்கவுமான காரியங்கள் கூடாது என்றால் சங்கராச்சாரி என்னும் மதத்தலைவன் அது பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அதற்கு ஆதாரம் பிராமணனுடைய ரத்தத்திலும் சண்டாளனுடைய ரத்தத்திலும் இருக்கின்றது என்றும் சொல்வாரானால் மிஸ். மேயோ நூற்றுக்கணக்காய் ஆயிரக்கணக்காய் இந்த நாட்டில் பிறக்காததும் பிறந்த பெருமையை அடைய முடியாமல் போனதும் இந்தியாவுக்குப் பெருத்த நஷ்டமல்லவா என்று கேட்கின்றோம்.
இப்படிப்பட்ட, குறைகள் கொடுமைகள், அவிவிவேகத்தனங்கள், மூர்க்கத்தனங்கள், காட்டுமிராண்டித்தனங்கள் இன்னமும் வண்டிவண்டியாய் இருக்க அவைகளைப்பற்றி சரியாய் பேசாமல் அவைகளை ஒழிக்க யோக்கியமாய் முயற்சிக்காமல் மிஸ்.மேயோ வருகிறாள், மீண்டும் மிஸ்.மேயோ, குப்பைக்காரி மேயோ வருகை என்றெல்லாம் தலைப்புக் கொடுத்து மேயோவை வைவதென்றால் இக்கூட்டத்தாருக்கு மனிதத் தன்மையோ, சுயமரியாதை உணர்ச்சியோ இருக்கின்றதா என்று கேட்கின்றோம்.
மிஸ். மேயோ அம்மையாரின் இந்திய விஜயத்துக்கு அரசாங்கத்தார் உதவி புரிந்ததாகவும் உள்உளவாய் இருந்ததாகவும் இனியும் அப்படிச் செய்வார்களா என்றும், இந்திய சட்டசபையில் கேள்விகள் கேட்கப்பட்டதாகப் பார்த்தோம். இதற்கு அரசாங்கம் வெண்டைக்காய் பதில் சொன்னதையும் பார்த்தோம்.
அரசாங்கத்தார் மேயோ அம்மையாருக்கு உதவி செய்ததற்காகவும், உள்உளவாய் இருந்ததற்காகவும் உண்மையான தேசியவாதிகள் மகிழ்ச்சி அடைய வேண்டுமே யொழிய அதற்காக குற்றம் கூறக்கூடாது என்பதே நமதபிப்பிராயம். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து 200-வருஷமான பிறகும், இந்திய மக்களது உழைப்பின் பயனை-அவர்களது ரத்தத்தைக் காய்ச்சி இறக்கிய சத்தை சமாதானமும் நீதியுமான அரசாட்சி என்னும் பெயரால் மாதம் 1க்கு 1000, 2000, 5000, 10000, 20000, 30000 ரூபாய்கள் என்பதாக லட்சக்கணக்கான பிரிட்டிஷார் அனுபவித்தும் இன்னமும் இந்தியா மிருகப் பிராயத்திலேயே இருந்து வருகின்றது என்றால் உலகோர் முன் இந்தியர்களுக்கு அவமானமா? பிரிட்டிஷ் ஆட்சி முறைக்கு அவமானமா என்பதை நன்றாய் நடு நிலைமையில் இருந்து பொதுநோக்குடன் ஆராய்ந்து பார்க்கும்படி தேசியத் திருக்கூட்டத்தாருக்கு ஞாபகப்படுத்துகிறோம்.
தோழர் காந்தி, ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்களே பெரும்பான்மையான ஜன அபிப்பிராயத்துக்கு விரோதமான காரியங்களைச் செய்யக்கூடாது என்றும் மேல் ஜாதிக்காரர்கள் சம்மதமில்லாமல் மத சம்மந்தமான பழக்க வழக்கங்களைப் பற்றி பேசக் கூடாது-தொடக்கூடாது என்றும் சொல்லி விடுவார்களேயானால் மேயோ போன்ற - அல்லாவிட்டால் லெனின் போன்ற - கமால் பாட்சா போன்ற அமானுல்கான் போன்ற வெளிநாட்டார்களால்தான் மதசம்பந்தமான ஆபாசங்களும் - கொடுமைகளும் குப்பைகளும் சாக்கடைகளும் ஒழிந்து இந்திய நாடு மனிதத் தன்மையை அடைய முடியுமே தவிர வேறில்லை என்றுதான் எண்ண வேண்டியிருக்கின்றது.
ஆகவே, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் இந்த மாதிரியான கூச்சல்களுக்குப் பயப்படாமல் மேயோ அம்மையாரை மறுமுறை அழைத்து வந்து இங்கு சமுகத்தின் பேராலும் மதத்தின் பேராலும் ஆட்சியின் பேராலும் இருந்து வரும் கொடுமைகளையும் குற்றங்களையும் உண்மையாய் அறிய அவகாசம் கொடுத்து அவைகள் சீக்கிரத்தில் ஒழிய உதவி செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.

- 'பகுத்தறிவு', கட்டுரை - 02.09.1934

ஆயிரம் 'விடுதலை' சந்தாக்களை அளித்து உரத்தநாடு சாதனை! "வாழ்விலோர் திருநாள்" என்று தமிழர் தலைவர் மகிழ்ந்து பாராட்டு!



உரத்தநாடு, ஆக. 20- தஞ்சாவூர் மாவட்டம் உரத்த நாடு நகர, ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் 1001 'விடுதலை' சந்தாக்களுக்கான 9 லட்சத்து 900 ரூபாயினை திராவிடர் கழகத் தலைவர், 'விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அளித்து சாதனைப் படைத்தனர். மழை ஒரு பக்கம் மிரட்டிக் கொண்டிருந்ததென்றாலும், இயற்கையின் ஒத்துழைப்புடன் விழா பசுமையான பயிர் போன்ற குளிர்ச்சியுமாய் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந் தளித்தன.
83 ஆண்டுகளாக வீறு நடைபோட்டு வரும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலைக்கு 1999 தொடங்கி தொடர்ந்து 17 ஆண்டுகளாக உரத்த நாடு 'விடுதலை' சந்தாக்களை அளித்து வருவது அடிகோடிட்டுக் குறிப்பிடத்தக்கதாகும். 32ஆம் தவணையாக ஆயிரம் சந்தாக்கள் வழங்கும் விழா, திருவிழாவாக, பெருவிழாவாக நேற்று (19.8.2017) உரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் வெகு எழுச்சியுடன் உற்சாகத்துடன் நடைபெற்றது
வாழ்விலே ஒரு திருநாள் என்று விடுதலையின் 55 ஆண்டுகால ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து, 'வாழ்நாளில் என்றும் பெறாத மகிழ்ச்சியை இன்று பெற்றேன்' என்று உணர்ச்சித் ததும்பிட உரைக்கும் அளவுக்கு அவ்விழா சிறப்புற்றது.
சுவர் எழுத்துகளும், பதாகைகளும், உரத்தநாட்டின் ஒவ்வொரு சாலையின் இரு புறங்களிலும் கழகக் கொடிக்காடுகளும் உரத்தநாடு 'பெரியார் நாடு' என்றே மீண்டும் நிரூபித்து விட்டன.
சுயமரியாதைச் சுடரொளிகள் கண்ணந்தங்குடி சிவ.பாலசுப்பிரமணியன், திருமங்கலக்கோட்டை (தெற்கு) கி.தியாகராசன் நினைவரங்கத்தில் இவ்விழா சரியாக 5.30 மணிக்கு அரங்கேறியது.
பகுத்தறிவு இன்னிசை
கழகச் சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து பகுத்தறிவுப் பாடல்களைப் பாடி எழுச்சியூட்டினர்.
தொடர்ந்து கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு இரா.குணசேகரன், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோரும் மூடநம்பிக்கையின் முதுகெலும்பை முறியடிக்கும் பகுத்தறிவுப் பாடல்களை எழுச்சியுடன் பாடி பலத்த கர ஒலியைப் பெற்றனர்.
இசையிலே முனைவர் பட்டம் பெற்ற கழகப் பாடகர் திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம் அவர்க ளின் இன்னிசை களைகட்டியது. பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தோர் அன்பளிப்புகளை வழங்கினர்.
சரியாக ஏழு மணிக்கு அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் அணிவகுத்தன (நிகழ்ச்சியின் நிரலை தனியே காண்க!)
"பெரியாரால் வாழ்கிறோம்"
பெரியாரால் வாழ்கிறோம் என்ற தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்து.
'ஜாதி மத வெறி மாய்ப்பாளராக' என்னும் பொருளில் வழக்குரைஞர் பூவை.புலிகேசி உரை யாற்றுகையில் குடந்தை கல்லூரி மாணவர் விடுதியில் பார்ப்பனருக்கு ஒரு தண்ணீர்ப் பானை, பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனித் தண்ணீர்ப் பானை என்று பேதப்படுத்திய கொடுமையை எதிர்த்து, அந்தப் பானைகளை உடைத்து - அதன் விளைவாக திராவிடர் மாணவர் கழக பிரசவித்த வரலாற்றினை பாங்குற எடுத்துரைத்தார்.
'மூடநம்பிக்கை ஒழிப்பாளராக' என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கிய கழகச் சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் தந்தை பெரியார் ஆணையிட்டு நடத்திய பிள்ளையார் உடைப்பு, ராமன் பட எரிப்பு - அம்பகரத்தூரில் நடைபெற்ற காளியம்மன் கோவில் கிடாவெட்டு எதிர்ப்பு போராட்டங்களை நிரல் படுத்தினார்.
இந்தப் போராட்டம் ஆசிரியர் தலைமையில் 26.5.1964 அன்று நடைபெற்றது. அடுத்தாண்டு முதல் கிடா வெட்டு நிறுத்தப்பட்டது.
இராமன் பெயரைச் சொல்லி மக்கள் நலத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் முடக்கப்படுவதையும் நினைவூட்டினார் இராம.அன்பழகன்.
'தமிழ் இனமெழி உணர்வாளராக' என்னும் தலைப்பில் கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் தனதுரையில், தமிழன் மீது தொடுக்கப்பட்ட இந்தித் திணிப்பு, சமஸ்கிருத ஊடுருவல், இவற்றை இயக்கம் எதிர்த்து முறியடித்த வரலாற்றையும், புரோகிதர் பார்ப்பனரைப் புறக்கணித்து தமிழன் வீட்டுத் திருமணத்தை ஒரு தமிழன் தலைமை தாங்கி நடத்திட வேண்டும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்திய வரலாற்றையும் நேர்த்தியாக எடுத்துரைத்தார்.
'சமூக நீதி காப்பாளராக' எனும் தலைப்பில் கழகச் சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் உரையாற்றுகையில், இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியில் இடஒதுக்கீடு, தந்தை பெரியார் பெயரில் ஆண்டு தோறும் சமூக நீதி விருதினை அரசு சார்பில் கொடுக்கும் நிலைக்கு வித்திட்டது, தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி பெயரால் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான வீரமணி விருது, அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு - சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது கொண்டு வருவதற்குக் கழகமும், கழகத் தலைவரும் எடுத்த முயற்சிகளைப் பட்டியலிட்டார்.
கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தன் உரையில், தமிழர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்கள் கூட பாதுகாப்பாக தமிழ்நாட்டில் வாழ்வதற்குத் தந்தை பெரியார் தான் காரணம்; காந்தியாரை நாது ராம் கோட்சே என்ற பார்ப்பனன் சுட்டுக் கொன்ற போது - மும்பையில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர், பூணூல்கள் அறுக்கப்பட்டன, வீடுகள் கொளுத்தப்பட்டன, ஆனால் தமிழ்நாட்டிலோ அந்த நிலை ஏற்படாமல் வானொலி மூலம் உரை நிகழ்த்தி சமூக அமைதி காத்த சான்றாண்மை மிக்க மிகப் பெரிய தலைவராக - தந்தையாக பெரியார் விளங்கிய அந்தப் பெற்றியை எடுத்துரைத்து, நியாயமாக பார்ப்பனர்கள் கூட தந்தை பெரியாருக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
இறுதியாக நிறைவுரையை தமிழர் தலைவர் நிகழ்த்தினார்.
அன்பளிப்புகள் குவிந்தன கழகக் குடும்பத்தினரும், அனுதாபிகளும் நகரப் பிரமுகர்களும், பல்வேறு அமைப்பினைச் சார்ந்தவர்களும் தமிழர் தலைவருக்குச் சால்வைகளை அணிவித்தனர். மாலைக்குப் பதில் ரூபாய்களை வழங்கினார்கள். 'விடுதலை' சந்தாக்களையும் அன்புடன் வழங்கினர்.
தஞ்சை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் காது கேளாதோர் மற்றும் வாய்ப் பேசாதோர் சங்கத்தினைச் சேர்ந்தவர்கள் - தமிழர் தலைவரைச் சந்தித்து சால்வை அணிவித்தனர் (பேசா மடந்தையினராகக் கிடந்தவர்களுக்கு உணர்வூட்டிய இயக்கம் அல்லவா).
பெரியார் பிஞ்சுகள் போட்டிப் போட்டுக் கொண்டு நன்கொடைகளை வழங்கினர்.
பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் அத்திவெட்டி வீரையன் தம் இணையர் மாலதியுடன் மேடைக்கு வந்து தங்களின் 27ஆம் ஆண்டு திருமண நாளின் மகிழ்வாக உலக நாத்திகர் மாநாட்டுக்கு நன்கொடையாக ரூபாய் ஆயிரம் தந்தனர். அவர்கள் இருவரையும் இணைத்துப் புத்தாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் கழகத் தலைவர்.
உரத்தநாடு நகரச் செயலாளர் ரெ.இரஞ்சித் சிங் தம் இணையர், குழந்தையுடன் கழகத் தலைவரைச் சந்தித்து நன்கொடையாக ரூ.500 அளித்து மகிழ்ந்தார்.
புதிய வரவுகள்
புதிய இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர் (பெட்டிச் செய்தி காண்க).

தொகுப்பு: மின்சாரம்

Saturday, August 19, 2017

உ.பி.யில் 'இந்து' ராஜ்ஜியம்


கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் புனிதநீராடுதல் (பிரயாக்) போன்றவற்றை  உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாநில, மத்திய அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள், கிராமசபைகள், நகரநிர்வாக அலுவலகங்கள், தீயணைப்புப்படை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசு உதவி பெறும் தனியார்தொழில் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் சாஸ்திரங்கள் கூறிய விதிகளின் படி (அதாவது பார்ப்பனரை அழைத்து யாகங்கள் செய்து) கொண்டாடவேண்டும் என்றும், காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்வை அரசுக்குக் காணொளியாகவும், ஒளிப்படமாகவும் அனுப்பவேண்டும் என்றும், சிறந்த முறையில் அலங்கரித்து கொண்டாடப்படும் காவல்நிலையம் முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. சுதந்திரதினத்தன்று மாநிலத்தில் பலத்த பாதுகாப்பை வழங்கவேண்டிய காவல்துறையினர் தங்களது அலுவலகங்களை அலங்கரித்து புகைப்படக்கலைஞர்கள் வந்து புகைப்படம் எடுக்கும்வரை அலங்காரம் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
சாமியார் முதல்வரின் இது போன்ற நடவடிக்கைகள் குறித்து "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் தலைநகர் லக்னோவில் பேசிய ஆதித்தியநாத் "காவடி யாத்திரையின் போது நான் விடுத்த உத்தரவுகள் குறித்து அதிகாரிகள் என்னிடம் கேள்வி எழுப்பியதால் யாத்திரையின் போது பாடல்கள் இசைப்பதும், குறிப்பிட்ட மதத்தவர் அதிகம் வாழும் பகுதிகளில் முழக்கங்கள் இடுவதும் தடைசெய்யப்பட்டது; பக்தி யாத்திரையால் சட்டம் - ஒழுங்கு குலைந்துவிடுகிறது" என்று சிலர் கூறினர்.
அவர்களுக்கு நான் கூறிய பதில் "யாத்திரை செல்பவர்கள் அமைதியாகச் செல்ல அவர்கள் என்ன சவ ஊர்வலமா செல்கிறார்கள்? சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏன் வருகிறது? ஆயிரம் பேர் செல்லும் யாத்திரையில் ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது கூறிவிடுவார்கள்; இது வேற்று மதத்தினரைப் புண்படுத்தும் ஒன்றாக மாறாது. ஒரு அரசு என்பது அனைத்துப் பகுதிகளிலும் தனது பார்வையை செலுத்தவேண்டும். மேலும் காவல்நிலையங்களில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம் பற்றி கேட்கிறார்கள். இஸ்லாமியர்கள் சாலைகளை அடைத்துக் கொண்டு தொழுகை நடத்துகிறார்கள். இது எப்படி சரியாகப் படுகிறதோ, அதே போல் காவல்நிலையங்களில் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுவதும் சரியானதே, நான் தொழுகை நடத்துவதை தடைசெய்யமுடியாது. அப்படியே தடை செய்தால் என்னை மத விரோதியாக பார்ப்பார்கள் என்று கூறினேன்" என்று பேசினார்.
"இதற்கு முன்பு இருந்த அரசினர் யதுவம்சத்தவர் (கிருஷ்ண பரம்பரை) என்று தங்களை அழைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் கோகுலாஷ்டமி கொண்டாடுவதை தடைசெய்தார்கள். கோகுலாஷ்டமி வீட்டில் கொண்டாடினாலும், காவல் நிலையங்களில் கொண்டாடினாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. உங்கள் பார்வையில் தான் குறைபாடு" என்றும் முதல் அமைச்சர் சாமியார் கூறினார்.
சாமியார் ஆதித்தியநாத்தின் இந்த உத்தரவுகள் மிகவும் பிற்போக்குத்தனமானவைதான்; இருப்பினும் இவரின் உத்தரவிற்கு யாரும் கருத்து தெரிவிக்காத நிலையில் இவரே முன்வந்து ஒரு பத்திரிகையில் வெளிவந்த சிறிய பத்தியைவைத்துக்கொண்டு தன்னுடைய செயலை சரியென்று கூறியுள்ளார்.
உ.பி. மாநிலம் இந்தியாவிலேயே பெரிய மாநிலம். அதனை இந்துத்துவாவின் ராமராஜ்ஜியமாக நடத்தத் திட்டமிட்டு ஒரு சாமியாரை முதல் அமைச்சராகக் கொண்டு வந்துள்ளது பி.ஜே.பியும் - பிரதமர் நரேந்திர மோடியும்.
உ.பி. முதல் அமைச்சர் சாமியார் ஆதித்தியநாத்தின் செயல்களும், பதில்களும் ஒரு பொறுப்பு வாய்ந்த முதல் அமைச்சருக்குத் தேவையான தகுதியின் அடிப்படையில் அமையாது - அடிமட்ட ஆர்.எஸ்.எஸ். வெறியர் போலவே தான் இருந்து வருகின்றன. எதற்கெடுத்தாலும் சிறுபான்மை மக்களை இழுத்துப் பேசும் இழி நிலைக்குச் சொந்தக்காரராக முஷ்டியைத் தூக்கிக் கொண்டு திரிகிறார்.
நீதிமன்றங்களும், நீதிமன்றங்களாக இல்லை; வீதி மன்றங்களால்தான் இந்த மதவெறிக் கூட்டத்தினரை அடக்கியாக வேண்டும். தமிழ்நாட்டில் நாம் மேற்கொள்ளும் பிரச்சாரமும், செயல்பாடுகளும்தான் பிற மாநிலங்களிலும் உரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.


கருநாடகத்தில் மேகத்தாதுவில் அணைகட்ட ஒப்புதலா? தமிழ்நாடு அரசின் முடிவு மிகப் பெரிய துரோகம்!

கட்சிகளை மறந்து ஒன்று கூடி முடிவெடுப்போம்!



சென்னை, ஆக. 18- மேகத்தாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் தந்து துரோகத்தை இழைத்துவிட்டது. இதிலிருந்து மீள கட்சிகளைக் கடந்து ஒன்று கூடி முடிவெடுப்போம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. 1973 முதலே இந்த வஞ்சனை தொடர்கதையாகிவிட்டது.
சட்டத்துக்கும், தீர்ப்புக்கும் கட்டுப்பட்டதுண்டா கருநாடகம்?
காவிரி நடுவர் நீதிமன்றம் சொன்னாலும் சரியே. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் சரியே. அவற்றை எல்லாம் பந்தயம் கட்டி உதாசீனப்படுத்தி வருகிறது கருநாடகம்.
போதும் போதாதற்கு மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பிஜேபி அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவையே கேள்விக்குறியாக்கி, 'உச்ச நீதிமன்றத்திற்கு இப்படி உத்தரவிட அதிகாரம் இல்லை' என்று உரத்தக் குரலில் முழங்கியதுண்டு.
கருநாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலின்மீது மோப்பம் கொண்டு உச்சநீதிமன்றத்தையே முரட்டுத் தனமாக எதிர்க்கிறது.
அதிர்ச்சி தரக்கூடியது!
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் காவிரி நதி நீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு நடந்து கொண்டுள்ள விதம் அதிர்ச்சித் தரக்கூடியதாக இருக்கிறது.
தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரை கருநாடகம் வழங்குமேயானால் காவிரியின் கருநாடக எல்லையில் மேகத்தாதுவில் அணைகட்டிக் கொள்ள எங்களுக்கு ஆட்சேபணையில்லை என்று தமிழ்நாடு அரசின் வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த அரிய சந்தர்ப்பத்தை கருநாடக அரசு நழுவ விடுமா? கண்டிப்பாக தருவோம். தமிழ்நாட்டிற்கு தண்ணீரை சேமித்து வைப்பதற்காகத்தானே இந்த அணையைக் கட்டுகிறோம் என்று தேன் தடவிய சொற்களை வக்கணையாக உதிர்த்துள்ளனர் கருநாடக அரசு சார்பில் வாதிட்ட வழக்குரைஞர்கள்.
எந்த சட்டத்திற்கும், நீதிக்கும், நியாயத்திற்கும் எந்தக் கால கட்டத்திலாவது மதிப்பு கொடுத்திருக்கிறதா கருநாடக அரசு? கருநாடகத்தில் ஆளும் கட்சிகள் மாறலாம், ஆனால் காவிரிப் பிரச்சினையில் அடாவடித் தனமாக நடந்து கொள்வதில் தான் அவர்களுக்குள் போட்டியே தவிர - தமிழ்நாட்டுக்குரிய உரிமையை எந்த வகையிலும் அவர்கள் கணக்கில் கொண்டதேயில்லை, இல்லவே இல்லை.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தருவதில் தடையில்லை என்றால் மேகத்தாதுவில் கருநாடகா அணை கட்டிக் கொள்ளலாம் என்று தமிழக அரசின் வழக்குரைஞர் கருத்துக் கூறியிருப்பது ஆபத்தானது - அதிர்ச்சிக்குரியது. கருநாடகத்தின் கடந்த கால நிலைப்பாடுகளைத் தெரிந்திருந்தும் கண்ணிருந்தும் குழியில் விழலாமா? கூட்டுச் சதிக்கு தமிழ்நாடு பலியாகலாமா? இந்த முடிவுக்காக தமிழ்நாடு அரசு கடும் விலை கொடுத்தாக வேண்டும்; ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்த்து நிற்கப் போகிறது.
தாகங்களைத் தீர்த்துக் கொண்டு விட்டனர்
கருநாடக அரசு தன் தாக வெறியைத் தீர்த்து கொள்கிறது - மத்திய பிஜேபி அரசு தன் அரசியல் ஆதாயத் தாகத்தையும் தீர்த்துக் கொள்கிறது.
மத்திய அரசின் கண் ஜாடையில் தமிழ்நாடு அரசோ தன் பதவிச் சுகத்துக்காக சரண் அடைகிறது.
இந்த வஞ்சனைகளின் கூட்டுச் சதியால் தமிழ்நாடு பாலைவனமாக மாறுவதற்கான சாவோலை எழுதப்பட்டு விட்டது.
தமிழ்நாட்டு வீதிகளில் போராட்டம் நடத்தினால் என்ன? டில்லி சென்று மாதக் கணக்கில் போராட்டங்களை நடத்தினால் என்ன?
தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் கூட்டுச் சதி செய்வோர் வெற்றி பெற்று வருகின்றனர்.
என்னதான் பரிகாரம்?
இதற்கு என்னதான் பரிகாரம்? வீதிப் போராட்டத்தில் புது முறைகள் தேவைப்படுமா? கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்று கூடி விரைவில் முடிவெடுப்போம்! தயவு செய்து இதில் அரசியல் வேண்டாம் - வேண்டவே வேண்டாம்!
திருச்சி                                                                                     தலைவர்
18.8.2017                                                                 திராவிடர் கழகம்


Friday, August 18, 2017

சாமியார்கள் ஆட்சி செய்தால்...!

பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் நிர்வாகத் திறன் குறைவு, அலட்சியம் காரணமாக பச்சிளங்குழந்தைகள் பலர் மரணம் அடைந்தனர்.உபி கோர நிகழ்வை உலகமே வருத்தத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும் போது, இதில் எதிர்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது என்று இதோபதேசம் செய்கிறார்  உபி முதல்வர் சாமியார் ஆதித்தியநாத்.

மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்தனர். ஆனால், அவர்கள் இறந்தது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அல்ல, நோயினால்தான் என்று அப்பட்டமாகப் பொய் சொல்லி அரசியல் செய்கிறார். இது போன்று சாவுகள் நிகழ்வது சாதாரணமான ஒன்றுதான் என்று கூறி அதற்கு முந்தைய ஆண்டின் புள்ளிவிவரங்களைக் காட்டுகிறார். முந்தைய ஆட்சிக்காலத்திலும் சாவுகள் நிகழ்ந்துள்ளன என்று கூறி அந்த சாவுகளின் எண்ணிக்கையை அதிகம் காட்டி அரசியல் செய்கிறார். சாவிலும் உண்மையில் அரசியல் செய்வது இந்த சாமியார்தான்.
மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது என்று ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி காலை வரை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் கடிதங்கள் அனுப்பியிருக்கிறது. ஆனாலும் மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்ஸிஜன் வழங்கும் நிறுவனம், தனது நிலுவைத்தொகை 63 லட்சம் ரூபாய் தராதவரையில் விநியோகிக்க முடியாது என்று கூறிவிட்டது.  பொதுவாக, பத்து லட்சம் ரூபாய் வரை நிலுவையில் இருக்கலாம் என்பது விதி. எனவே, பணம் கொடுத்தால்தான் விநியோகம் செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறது. ஆனால் பணம் தரப்படவில்லை.
அந்நிறுவனம் கடைசியாக, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி விளக்கமாக ஒரு கடிதத்தை மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறது. பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டும், கடிதம் அனுப்பியும் 63 லட்சம் ரூபாய் நிலுவை தீர்க்கப்படவில்லை. ஆக்ஸிஜன் வழங்கும் அய்நாக்ஸ் கம்பெனி, இனியும் கடனுக்கு விநியோகிக்க முடியாது என்று தெளிவாகவே சொல்லிவிட்டது. அந்தக் கடிதம் மருத்துவமனைக்கு மட்டுமல்ல, மாவட்ட நிர்வாகத்துக்கும், லக்னோவில் உள்ள சுகாதார அமைச்சகத்துக்கும் கூட நகல் அனுப்பப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் அதை அலட்சியப்படுத்திவிட்டது அரசு.
நீண்ட காலமாக மோத்தி ரசாயணம் என்ற கம்பெனிதான் ஆக்ஸிஜன் வழங்கி வந்திருக்கிறது. அதன் டெண்டர் ஒப்பந்தக்காலம்கூட முடியாமல்தான் இருந்தது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு அனுமதி அகிலேஷ் யாதவிற்கு முன்பு முதல்வராக இருந்த மாயாவதி அவர்களால் தரப்பட்டது என்ற ஒரே காரணத்தால் மோத்தி ரசாயண நிறுவனம் அனுப்பிய சிலிண்டர்களை ஏற்காமல் திருப்பி அனுப்பி விட்டது மருத்துவமனை. பதிலாக, எந்தவித டெண்டரும் இல்லாமல் வேறு கம்பெனியிடமிருந்து வாங்க ஆரம்பித்தது. மோத்தி ரசாயண நிறுவனத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிலுவையைத் தராமல், புதிய கம்பெனிக்கு அனுமதி தரப்பட்டது. அந்த கம்பெனிக்கும் 63 லட்சம் ரூபாய் பாக்கி வைக்கப்பட்டது.
மார்ச்சில் ஆட்சி மாறியதும் புதிதாக ஒரு கம்பெனிக்கு மாறியதில் அரசியல் இல்லையா? அந்த கம்பெனிக்கும் பணம் தராமல் நிறுத்தியது ஏன்? அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பழைய அரசுகள் கொடுத்த ஒப்பந்தங்களை எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்துவிட்டு அனுபவமில்லாத நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் எதுவும் வழங்காமலேயே அவர்களிடம் ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்க முடிவுசெய்தது சரிதானா? 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த சாமியார், எதிர்கட்சிகளைப் பார்த்து குழந்தைகள் மரணவிவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என்று கூறிவருகிறார்.  குழந்தைகள் மரண விவகாரம் மட்டுமல்ல, கடந்த மாதம் ஏற்பட்ட ஜாதிக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தலித்துகள் மீது வன்மம் காட்டுவது, தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் தாக்குதல்கள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றிற்கும் யோகி அரசுதான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.
இவர் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்துத் துறைகளிலும் ஜாதிவாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆட்சிக்கு வந்த நான்கு மாதத்தில் 47 முறை ஒட்டுமொத்த நிர்வாகத்திலும் அதிகாரிகள் மாற்றம் நடந்திருக்கிறது, மாற்றப்பட்ட அதிகாரிகள் அனைவருமே மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த மன உளைச்சல் காரணமாக இரண்டு அதிகாரிகள் மரணமடைந்துள்ளனர். முக்கியமாக சுகாதாரத்துறை, நிதித்துறை, உள்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை போன்ற முக்கிய துறைகளில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் அரசால் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாக்கப்பட்டு பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் மீண்டும் மிகவும் முக்கியமான துறைகளில் அமரவைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன.
முதல்வர் இல்ல நிர்வாகத்தையே தன்னுடைய மடத்தில் இருந்த ஆஸ்தான பண்டிதர் கோராகேஸ்வர்நாத்திடம் ஒப்படைத்துள்ளார். இதனால் முதல்வர் இல்லம் மட்டுமல்லாமல் முதல்வர் அலுவலகம் தொடர்பான அனைத்துப் பணிகளிலும் அவரின் தலையீடு உள்ளது.
பண்டிதர்களும், சாமியார்களும் ஆட்சி அதிகாரத்திற்குச் சென்றால் விபரீதங்கள்தான், தலைக்கொழுத்துத் திரியும் என்பதற்கு உ.பி. அரசே கண்கண்ட சாட்சி!


தனது பிறந்த நாளில் பெரியார் திடலில் "எழுச்சித் தமிழர்" தொல்.திருமாவளவன்



விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமது 55ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரியார் திடலுக்கு வருகை தந்தபோது தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை போர்த்தி 'உலகத் தலைவர் பெரியார்' (6ஆம் தொகுதி), 'ஜாதி ஒழிப்புப் புரட்சி' ஆகிய நூல்களையும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். கழகத் தலைவருக்கு எழுச்சித் தமிழர், சால்வை அணிவித்தார். முன்னதாக தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து வீரவணக்க முழக்கமிட்டார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக வெளியுறவுத் துறை செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர் (சென்னை பெரியார் திடல், 17.8.2017).


இந்தியாவில் முசுலீம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள்

வாஷிங்டன் போஸ்ட் ஏடு படப்பிடிப்பு


வாஷிங்டன், ஆக. 17-
பசுப்பாதுகாப்புக் குழுவினரால் பெரும்பாலான வன் முறைகள் இந்தியாவில் உள்ள முசுலீம் களை குறிவைத்தே நடந்துள்ளன. பன்னாட்டு மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அய்க்கிய நாடு அறிக்கையை 15.8.2017 அன்று வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளியிடப் பட்டுள்ள பன்னாட்டு மத சுதந்திரத்துக் கான அறிக்கையில் பசுப்பாதுகாவலர் கள்மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன் றத்தில் நிறுத்துவதில் தோல்வி கண்டுள் ளன என்று அரசின்மீது குற்றச்சாற்றை பதிவு செய்துள்ளது
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப் பேற்ற பிறகு அமெரிக்காவிலிருந்து வெளியான அறிக்கையிலேயே இவ் வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் வெளியிட்ட அறிக்கையில், சிவில் சங் கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூறியுள் ளதன்படி, இந்து தேசியவாதக் குழுக் களைச் சேர்ந்தவர்கள், இந்து அல்லாத தனி நபர்கள் மற்றும் அவர்களின் வழி பாட்டிடங்கள்மீதான வன்முறைகளை நடத்தி வருகிறார்கள். அதனால், பாஜக தலைமையிலான அரசில் சிறுபான்மை மக்கள் மிகவும் வேதனைகளை அனு பவித்து வருகிறார்கள் என்று குறிப் பிட்டுள்ளார்கள்.
மதரீதியில் குறிவைத்து கொலைகள், தாக்குதல்கள், கலவரங்கள், பாகுபாடு, சூறையாடல் ஆகியவற்றின்மூலமாக தனி நபர்களின் மத நம்பிக்கை மற்றும் மதம் மாறுகின்ற உரிமைகளைக் கட் டுப்படுத்தி வருவதாக அறிக்கையின் தகவல்கள் கூறுகின்றன.
2016ஆம் ஆண்டில் பன்னாட்டளவில் பல்வேறு நாடுகளிலும் மத சுதந்திரத்தின் நிலைகுறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டு அமெரிக்க அரசு சார்பில் ஆண் டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பசுப் பாதுகாப்பு குழுக் களால் நிகழ்த்தப்படுகின்ற கொலை கள், கும்பல் வன்முறைகள், தாக்குதல் கள் மற்றும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து வன்முறை நிகழ்வுகளிலும் பெரும்பாலும் முசுலீம்களுக்கு எதிரா கவே நடத்தப்பட்டுள்ளன.
பன்னாட்டு மத சுதந்திரம் குறித்த 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், இந்துக்கள் என்று கூறிக்கொண்டு, முசுலீம்களையும், கிறித்தவர்களையும் அச்சுறுத்தி, அவர்கள்மீது தாக்குதல்களை நடத்துவதுடன், அவர்களின் சொத்துக ளையும் அழிக்கிறார்கள் என்று குறிப் பிடப்பட்டுள்ளது.
மோடியின் சுதந்திர நாள் பேச்சு வேறு,செயல்வேறாக உள்ளது
பசுக்களைக் கொல்கிறார்கள் அல் லது சட்ட விரோதமாக கடத்துகிறார்கள் அல்லது விற்கிறார்கள் அல்லது மாட் டிறைச்சியை சாப்பிடுகிறார்கள் என்பது போன்ற குற்றங்களை சுமத்தி சந்தேகங் களின் அடிப்படையிலேயே சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பசுப்பாதுகாப்புக் குழு வினரை சட்டத்தின்முன் நிறுத்தாமல் உள்ளனர் பொறுப்பான அரசுத்துறையினர்.
செங்கோட்டையில் சுதந்திர நாள் உரையில் பிரதமர் மோடி தம்மைக் காத் துக்கொள்ளும் வகையில் அவர் பேசும் போது, மத நம்பிக்கைகளின்பெயரால் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், ஜாதியமும், வகுப்புவாதமும் நாட்டிற்கு விஷம் போன்றவை என்றும் குறிப் பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கருத்துகளால் பசுப் பாதுகாவலர்கள் என்போரால் தாக்கப்படுகின்ற நிகழ்வுகள் சிறிதளவு குறையலாம் என்பது கற்பனையே.
இந்திய எவாங்கெலிகல் ஃபெலோ ஷிப் அமைப்பு கூறியுள்ள கருத்தைச் சுட்டிக்காட்டி அறிக்கையில் குறிப்பிடு கையில், நாடுமுழுவதும் கிறித்தவர் களை மோசமாக நடத்திய நிகழ்வுகளின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் 177 ஆக இருந்த நிலையில், 2016ஆம் ஆண் டில் மட்டும் 300 நிகழ்வுகளாக அதிகரித் துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இசுலாமிய மதத்தில் பின்பற்றப்படு கின்ற நடைமுறைகளில் ஒன்றாக மண விலக்கு கோரும்போது கூறப்படுகின்ற முத்தலாக் முறைக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றத்தில் அரசமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மஹோபா பகுதியில் அக்டோபர் 24இல்  மோடி பேசியபோது, "மத நம்பிக்கைகளின் பெயரால் பெண்களை பாகுபடுத்துவ தற்கு இடம் அளிக்க முடியாது. முசுலீம் பெண்களுக்கு அரசமைப்பின்படி உள்ள உரிமைகளை காத்திட அரசு பொறுப் பேற்கும்" என்றார்.
மதத் தலைவர்கள் தங்கள் மதங்க ளில் அரசு தலையிடுவதை எதிர்த்து வருகிறார்கள். மத ரீதியிலான முடிவு களை மதத்தைச் சேர்ந்தவர்களே எடுக்க வேண்டும் என்கிறார்கள்.
மத சிறுபான்மை மக்கள் கூறும் போது, மத்தியில் உள்ள அரசு எப்போ தாவது வன்முறைகளுக்கு எதிராக பேசு கிறது. அதையே உள்ளூர் தலைவர்கள் பேசுவதில்லை. பாதிக்கப்பட்டவர்களை கண்டு கொள்ளாமல், மத சிறுபான்மை மக்களை ஆபத்தில் தள்ளிவருகிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...