Friday, August 18, 2017

சாமியார்கள் ஆட்சி செய்தால்...!

பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் நிர்வாகத் திறன் குறைவு, அலட்சியம் காரணமாக பச்சிளங்குழந்தைகள் பலர் மரணம் அடைந்தனர்.உபி கோர நிகழ்வை உலகமே வருத்தத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும் போது, இதில் எதிர்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது என்று இதோபதேசம் செய்கிறார்  உபி முதல்வர் சாமியார் ஆதித்தியநாத்.

மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்தனர். ஆனால், அவர்கள் இறந்தது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அல்ல, நோயினால்தான் என்று அப்பட்டமாகப் பொய் சொல்லி அரசியல் செய்கிறார். இது போன்று சாவுகள் நிகழ்வது சாதாரணமான ஒன்றுதான் என்று கூறி அதற்கு முந்தைய ஆண்டின் புள்ளிவிவரங்களைக் காட்டுகிறார். முந்தைய ஆட்சிக்காலத்திலும் சாவுகள் நிகழ்ந்துள்ளன என்று கூறி அந்த சாவுகளின் எண்ணிக்கையை அதிகம் காட்டி அரசியல் செய்கிறார். சாவிலும் உண்மையில் அரசியல் செய்வது இந்த சாமியார்தான்.
மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது என்று ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி காலை வரை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் கடிதங்கள் அனுப்பியிருக்கிறது. ஆனாலும் மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்ஸிஜன் வழங்கும் நிறுவனம், தனது நிலுவைத்தொகை 63 லட்சம் ரூபாய் தராதவரையில் விநியோகிக்க முடியாது என்று கூறிவிட்டது.  பொதுவாக, பத்து லட்சம் ரூபாய் வரை நிலுவையில் இருக்கலாம் என்பது விதி. எனவே, பணம் கொடுத்தால்தான் விநியோகம் செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறது. ஆனால் பணம் தரப்படவில்லை.
அந்நிறுவனம் கடைசியாக, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி விளக்கமாக ஒரு கடிதத்தை மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறது. பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டும், கடிதம் அனுப்பியும் 63 லட்சம் ரூபாய் நிலுவை தீர்க்கப்படவில்லை. ஆக்ஸிஜன் வழங்கும் அய்நாக்ஸ் கம்பெனி, இனியும் கடனுக்கு விநியோகிக்க முடியாது என்று தெளிவாகவே சொல்லிவிட்டது. அந்தக் கடிதம் மருத்துவமனைக்கு மட்டுமல்ல, மாவட்ட நிர்வாகத்துக்கும், லக்னோவில் உள்ள சுகாதார அமைச்சகத்துக்கும் கூட நகல் அனுப்பப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் அதை அலட்சியப்படுத்திவிட்டது அரசு.
நீண்ட காலமாக மோத்தி ரசாயணம் என்ற கம்பெனிதான் ஆக்ஸிஜன் வழங்கி வந்திருக்கிறது. அதன் டெண்டர் ஒப்பந்தக்காலம்கூட முடியாமல்தான் இருந்தது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு அனுமதி அகிலேஷ் யாதவிற்கு முன்பு முதல்வராக இருந்த மாயாவதி அவர்களால் தரப்பட்டது என்ற ஒரே காரணத்தால் மோத்தி ரசாயண நிறுவனம் அனுப்பிய சிலிண்டர்களை ஏற்காமல் திருப்பி அனுப்பி விட்டது மருத்துவமனை. பதிலாக, எந்தவித டெண்டரும் இல்லாமல் வேறு கம்பெனியிடமிருந்து வாங்க ஆரம்பித்தது. மோத்தி ரசாயண நிறுவனத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிலுவையைத் தராமல், புதிய கம்பெனிக்கு அனுமதி தரப்பட்டது. அந்த கம்பெனிக்கும் 63 லட்சம் ரூபாய் பாக்கி வைக்கப்பட்டது.
மார்ச்சில் ஆட்சி மாறியதும் புதிதாக ஒரு கம்பெனிக்கு மாறியதில் அரசியல் இல்லையா? அந்த கம்பெனிக்கும் பணம் தராமல் நிறுத்தியது ஏன்? அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பழைய அரசுகள் கொடுத்த ஒப்பந்தங்களை எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்துவிட்டு அனுபவமில்லாத நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் எதுவும் வழங்காமலேயே அவர்களிடம் ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்க முடிவுசெய்தது சரிதானா? 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த சாமியார், எதிர்கட்சிகளைப் பார்த்து குழந்தைகள் மரணவிவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என்று கூறிவருகிறார்.  குழந்தைகள் மரண விவகாரம் மட்டுமல்ல, கடந்த மாதம் ஏற்பட்ட ஜாதிக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தலித்துகள் மீது வன்மம் காட்டுவது, தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் தாக்குதல்கள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றிற்கும் யோகி அரசுதான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.
இவர் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்துத் துறைகளிலும் ஜாதிவாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆட்சிக்கு வந்த நான்கு மாதத்தில் 47 முறை ஒட்டுமொத்த நிர்வாகத்திலும் அதிகாரிகள் மாற்றம் நடந்திருக்கிறது, மாற்றப்பட்ட அதிகாரிகள் அனைவருமே மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த மன உளைச்சல் காரணமாக இரண்டு அதிகாரிகள் மரணமடைந்துள்ளனர். முக்கியமாக சுகாதாரத்துறை, நிதித்துறை, உள்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை போன்ற முக்கிய துறைகளில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் அரசால் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாக்கப்பட்டு பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் மீண்டும் மிகவும் முக்கியமான துறைகளில் அமரவைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன.
முதல்வர் இல்ல நிர்வாகத்தையே தன்னுடைய மடத்தில் இருந்த ஆஸ்தான பண்டிதர் கோராகேஸ்வர்நாத்திடம் ஒப்படைத்துள்ளார். இதனால் முதல்வர் இல்லம் மட்டுமல்லாமல் முதல்வர் அலுவலகம் தொடர்பான அனைத்துப் பணிகளிலும் அவரின் தலையீடு உள்ளது.
பண்டிதர்களும், சாமியார்களும் ஆட்சி அதிகாரத்திற்குச் சென்றால் விபரீதங்கள்தான், தலைக்கொழுத்துத் திரியும் என்பதற்கு உ.பி. அரசே கண்கண்ட சாட்சி!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...