Saturday, August 19, 2017

உ.பி.யில் 'இந்து' ராஜ்ஜியம்


கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் புனிதநீராடுதல் (பிரயாக்) போன்றவற்றை  உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாநில, மத்திய அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள், கிராமசபைகள், நகரநிர்வாக அலுவலகங்கள், தீயணைப்புப்படை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசு உதவி பெறும் தனியார்தொழில் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் சாஸ்திரங்கள் கூறிய விதிகளின் படி (அதாவது பார்ப்பனரை அழைத்து யாகங்கள் செய்து) கொண்டாடவேண்டும் என்றும், காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்வை அரசுக்குக் காணொளியாகவும், ஒளிப்படமாகவும் அனுப்பவேண்டும் என்றும், சிறந்த முறையில் அலங்கரித்து கொண்டாடப்படும் காவல்நிலையம் முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. சுதந்திரதினத்தன்று மாநிலத்தில் பலத்த பாதுகாப்பை வழங்கவேண்டிய காவல்துறையினர் தங்களது அலுவலகங்களை அலங்கரித்து புகைப்படக்கலைஞர்கள் வந்து புகைப்படம் எடுக்கும்வரை அலங்காரம் கெட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
சாமியார் முதல்வரின் இது போன்ற நடவடிக்கைகள் குறித்து "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் தலைநகர் லக்னோவில் பேசிய ஆதித்தியநாத் "காவடி யாத்திரையின் போது நான் விடுத்த உத்தரவுகள் குறித்து அதிகாரிகள் என்னிடம் கேள்வி எழுப்பியதால் யாத்திரையின் போது பாடல்கள் இசைப்பதும், குறிப்பிட்ட மதத்தவர் அதிகம் வாழும் பகுதிகளில் முழக்கங்கள் இடுவதும் தடைசெய்யப்பட்டது; பக்தி யாத்திரையால் சட்டம் - ஒழுங்கு குலைந்துவிடுகிறது" என்று சிலர் கூறினர்.
அவர்களுக்கு நான் கூறிய பதில் "யாத்திரை செல்பவர்கள் அமைதியாகச் செல்ல அவர்கள் என்ன சவ ஊர்வலமா செல்கிறார்கள்? சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏன் வருகிறது? ஆயிரம் பேர் செல்லும் யாத்திரையில் ஒரு சிலர் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது கூறிவிடுவார்கள்; இது வேற்று மதத்தினரைப் புண்படுத்தும் ஒன்றாக மாறாது. ஒரு அரசு என்பது அனைத்துப் பகுதிகளிலும் தனது பார்வையை செலுத்தவேண்டும். மேலும் காவல்நிலையங்களில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம் பற்றி கேட்கிறார்கள். இஸ்லாமியர்கள் சாலைகளை அடைத்துக் கொண்டு தொழுகை நடத்துகிறார்கள். இது எப்படி சரியாகப் படுகிறதோ, அதே போல் காவல்நிலையங்களில் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுவதும் சரியானதே, நான் தொழுகை நடத்துவதை தடைசெய்யமுடியாது. அப்படியே தடை செய்தால் என்னை மத விரோதியாக பார்ப்பார்கள் என்று கூறினேன்" என்று பேசினார்.
"இதற்கு முன்பு இருந்த அரசினர் யதுவம்சத்தவர் (கிருஷ்ண பரம்பரை) என்று தங்களை அழைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் கோகுலாஷ்டமி கொண்டாடுவதை தடைசெய்தார்கள். கோகுலாஷ்டமி வீட்டில் கொண்டாடினாலும், காவல் நிலையங்களில் கொண்டாடினாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. உங்கள் பார்வையில் தான் குறைபாடு" என்றும் முதல் அமைச்சர் சாமியார் கூறினார்.
சாமியார் ஆதித்தியநாத்தின் இந்த உத்தரவுகள் மிகவும் பிற்போக்குத்தனமானவைதான்; இருப்பினும் இவரின் உத்தரவிற்கு யாரும் கருத்து தெரிவிக்காத நிலையில் இவரே முன்வந்து ஒரு பத்திரிகையில் வெளிவந்த சிறிய பத்தியைவைத்துக்கொண்டு தன்னுடைய செயலை சரியென்று கூறியுள்ளார்.
உ.பி. மாநிலம் இந்தியாவிலேயே பெரிய மாநிலம். அதனை இந்துத்துவாவின் ராமராஜ்ஜியமாக நடத்தத் திட்டமிட்டு ஒரு சாமியாரை முதல் அமைச்சராகக் கொண்டு வந்துள்ளது பி.ஜே.பியும் - பிரதமர் நரேந்திர மோடியும்.
உ.பி. முதல் அமைச்சர் சாமியார் ஆதித்தியநாத்தின் செயல்களும், பதில்களும் ஒரு பொறுப்பு வாய்ந்த முதல் அமைச்சருக்குத் தேவையான தகுதியின் அடிப்படையில் அமையாது - அடிமட்ட ஆர்.எஸ்.எஸ். வெறியர் போலவே தான் இருந்து வருகின்றன. எதற்கெடுத்தாலும் சிறுபான்மை மக்களை இழுத்துப் பேசும் இழி நிலைக்குச் சொந்தக்காரராக முஷ்டியைத் தூக்கிக் கொண்டு திரிகிறார்.
நீதிமன்றங்களும், நீதிமன்றங்களாக இல்லை; வீதி மன்றங்களால்தான் இந்த மதவெறிக் கூட்டத்தினரை அடக்கியாக வேண்டும். தமிழ்நாட்டில் நாம் மேற்கொள்ளும் பிரச்சாரமும், செயல்பாடுகளும்தான் பிற மாநிலங்களிலும் உரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...