Saturday, March 9, 2019

உலக மகளிர் நாள் (மார்ச் 8) சிந்தனை பெரியாரின் புரட்சிப் பெண் முழங்குகிறார்!

கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

இன்று உலக மகளிர் நாள்!



மார்ச் 8 ஆம் தேதி உலகமெங்கும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டும், கட்டுரைகள், கவிதை மலர்களால் மகளிர் மாண்பைப்பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திப்பதை பரப்பும் பரப்புரை நாள் என்றால், மிகையல்ல!

ஒரு கேள்வி - மகளிர் விடுதலைப் போராளிகளில் அறிவு ஆசான் தந்தை பெரியாரைப் போல் சிந்தித்து, செயல்பட்டு, மாற்றத்தைச் செயல் வடிவிலும், சட்ட வடிவிலும் உரிமைப் பாதுகாப்புப் பெட்டகமாக்கிய பெண்ணினத்தை வாழ வைக்கும் தொலைநோக்கும், செயற்போக்கும் தனது வாழ்நாள் பணியாக ஆக்கிக் கொண்ட ஒருவரை விரல் காட்டிக் கூற முடியுமா?

மற்றவர்கள் பெருமைகளைக் குறைக்க அல்ல இக்கேள்வி! தந்தை பெரியார் என்ற ஓர் ஆண், தனது ஆசாபாச - எஜமானத்துவ' எண்ண ஓட்டங்களுக்கு விடை கொடுத்துவிட்டு, பெண்ணினத்தை மானுடத்தின் ஒரு சமப் பகுதி என்ற உணர்வு மேலோங்க, உரிமைப் போரை 1908 முதல் - தனது தங்கையின் மகள் ஒருவர் பால்ய விதவையானவரை, தூக்கி நிறுத்தித் துணிந்து மறுமணம் செய்து வைத்து, தன் குடும்பத்தாரையே ஜாதி விலக்குக்கு ஆளாக்கியதைப்பற்றி அலட்சியம் செய்த நெஞ்சுரத்திற்கு வேறு எவரே சொந்தம் கொண்டாட முடியும் தோழர்களே?

மகளிரை தோழர்களே'' என்று அழைத்து பாலின வேற்றுமைச் சுவரை இடித்து தள்ளிய கடப்பாரை அல்லவா அவர்?

மண்ணுக்கு உரிமை வருமுன்னே, பெண்ணுக்கு உரிமை தாருங்கள்'' என்று முழங்கியதோடு, கல்வி உரிமை, வேலை உரிமை, சுதந்திர மண் உரிமை, சொத்துரிமை முதலிய உரிமைகளுக்கு முதலில் ஏடு தொடங்கி, எழுதி, நாடு முழுவதும் போராடி, ஆட்சிக்குப் போகாமலேயே ஆளுமையோடு அவ்வுரிமைகளை அடையச் செய்த அசகாயப் போராளி அல்லவா அவர்!

புரட்சியில் பூத்த மலர்களலல்லவா அன்னைகள் நாகம்மையாரும், மணியம்மையாரும்!

அய்யாவின் புரட்சிக் கருத்துகளை 21 ஆம் நூற்றாண்டிலும் செரிமானம்'' செய்துகொள்ள பல பெண்களாலேயேகூட முடிவதில்லையே!

இருட்டிலேயே பல காலம் வசித்தவர்கள் - பகலவனின் கதிரொளியைக் கண்டு கண்கள் கூசுவது இயல்புதானே!

கூடிவாழ்தலே சாலச் சிறந்த நட்புரிமை!
தலைசிறந்த ஒழுக்கமும், நாணயமும்
அதில் செழிப்புடன் வளரும்.
ஏமாறுவது, ஏமாற்றுவதும் என்றும்
இருக்காத ஏற்பாடு அல்லவா அது!

கருத்துரிமைகளிலேயே தலையாயது வயது வந்து மனம் பக்குவப்பட்ட நிலையில், அவர்தம் வாழ்வுரிமையில் மற்றவர் தலையிடுவது அதிகப் பிரசங்கித்தனமும், அதிகார ஆணவமும்கூட! 
இன்றும் இதனைப் புரிந்துகொள்ளும் பக்குவம் - பெண்ணுரிமைபற்றிய கிளப்புகளில்' விவாதிக்கும் கண்ணாடி மாளிகைப் பதுமைகளால் கூட ஏற்க முடிவதில்லையே!

திருமணமே கிரிமினல் குற்றமாக்கப்படவேண்டும்'' என்று அடுத்த கட்டத்திற்குச் சென்றவர் அய்யா - இன்று அதிர்ச்சி - நாளையோ அது அன்றாட நிகழ்ச்சி!

அடிமைகளாய் இருப்பதைவிடக் கொடுமை அடிமைத் த(ன)ளத்தில் சுகம் காணும் விசித்திரம்!

எனவே, இளம் பெண்ணே!
இன்றைய தலைமுறையின் எழுச்சியே!
இதோ பெரியாரின் கைத்தடி
உனக்கு இனி சம்மட்டி!
தடுமாற்றம் வந்து கீழே விழும்போதெலாம்
உறுதியாய் அதைப்பற்றி நில்!
உறையிட்ட வாளாய் யிராதே
சுழலும் போர்வாளாக மாறு!
புரட்சியைத் துவக்கு!
ஒப்பனைகளோ, சொப்பனங்களோ
உனக்கு உரிமைகளைத் தராது!
உன்னை இழந்து'' உன்
வர்க்கத்தைக் காப்பாற்று!
உரிமைப் போரில் பின்வாங்காதே!
நீ ஒருபோதும் பாலினப் பண்டம் ஆகாதே!
சமத்துவப் புரட்சியின் போர்க் கருவியாக மாறு!
முன்னே நட!
முனைந்து நட!
அடையவேண்டிய வெற்றி இலக்கு

உன் காலடித் தடத்தில்!

Wednesday, March 6, 2019

ஏழு பேர் விடுதலைக்கான மனித சங்கிலி அறப்போரில் பங்கேற்பீர்!

சென்னையில் நான் பங்கேற்கிறேன்: தமிழர் தலைவர் அறிக்கை



கடந்த 28 ஆண்டுகளாக ஒரு கொலை வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட எழுவரையும் விடுதலை செய்யக் கோரி மார்ச் 9 ஆம் தேதியன்று மாலை 4 மணிமுதல் 6 மணிவரை மனித சங்கிலி அறப்போராட்டம் - சென்னை - கோவை - மதுரை - திருச்சி - நெல்லை - சேலம் - புதுச்சேரி ஆகிய ஏழு இடங்களில் நடைபெற உள்ளது.

இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு தமிழரும், மனிதநேயர்களும் ஆற்றவேண்டிய அடிப்படையான கடமை இதுவாகும்.
சென்னையில் கலைவாணர் அரங்கம் அருகே நான் கலந்துகொள்கிறேன்.

கழகத் தோழர்கள் குறிப்பிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் திரளாகப் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதற்கு முன் னுரிமை கொடுத்து வெற்றியடையச் செய்வீர்!

- கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை

6.3.2019

"ஒரு சூத்திரன் பிணத்தை நாலு பார்ப்பனர்கள் தூக்கிச் சென்றனரே - எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா!"

தினமலர் வாரமலரில் வெளியான (3.3.2019 பக்கம் 10) காந்தியாரை வடக்கே ஒரு பார்ப்பான் கொன்றது போல, ஆஷ் துரையை இன்னொரு பார்ப்பான் சுட்டுக் கொன்றது போலவே, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியையும் ஒரு பார்ப்பான் கொல்லுவான் என்ற பொருள்பட - கேள்வி பதில் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.
இது தமிழ்நாடு தழுவிய அளவில் கோப அலையை ஏற்படுத்திவிட்டது. பல ஊர்களிலும் அந்த வாரமலரை தீயிட்டுக் கொளுத்தியும் உள்ளனர் - காவல்துறையில் புகாரும் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் "இதனை நான் வரவேற்கிறேன். நோயால், விபத்தால் சாவதைவிட இலட்சியத்திற்காகப் பலியாவது என்பது பெருமைக்குரிய ஒன்றே. இதற்காக ஒரு தடவையல்ல - பல முறை சுடட்டும்" என்று கருத்துத் தெரிவித்தார்.

நேற்று (5.3.2019) மாலை சென்னை - பெரியார் திடல் சிறப்புக் கூட்டத்தில் இதுகுறித்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதையும் தெரிவித்தார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் இது குறித்துக் கூறியதாவது:

தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக எழுச்சி மாநாடும், பேரணியும், திராவிடக் கொள்கை விளக்க அறிக்கையும் (டிரவிடியன் மேனிஃபெஸ்ட்டோ) தான் நமது இன எதிரிகளுக்கு ஆத்திரத்தைத் தூண்டியிருக்கிறது.

அதனுடைய எதிரொலிதான் தமிழர் தலைவர் மீதான வன்முறைத் தூண்டுதல்! தினமலர் வகையறாக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம், ஆயிரம் ஆயிரம் கருஞ்சட்டை இளைஞர்களைக் கொன்று விட்டுத்தான் தமிழர் தலைவரை நீங்கள் நெருங்க முடியும்.
தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் வரிசையில் ஆசிரியரையும் காவிகள் தங்கள் பட்டியலில் வைத்துள்ளார்களா? காவல்துறை தன் கடமையை விரைவாக செய்ய வேண்டும். கருஞ்சட்டையிடம் காவிக் கைவரிசை காட்ட வேண்டாம் - கருஞ்சட்டைமுன் காவி தோற்று ஓடும் என்றார்.

தமிழர் தலைவர் கருத்து

இதுகுறித்து கூறிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறுகையில் புதுச்சேரியில் இதுகுறித்து கருத்துக்கூறியதைத்தான் இப்பொழுதும் கூறுகிறேன்.
வன்முறை என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒன்றும் புதியதல்ல - அது அவர்களுக்குக் கைவந்த கலை - வன்முறை அவர்கள் தர்மம் கூட.

மனுதர்மம் ஏழாம் அத்தியாயம் 107 முதல் 109 வரை உள்ள சுலோகங்கள் என்ன கூறுகின்றன?

107: இந்தப்படியாக சத்துருஜயஞ் செய்கிறவனுக்கு யார் விரோதஞ் செய்வார்களோ அவர்களை சாம தாந பேத தண்ட உபாயங்களினால் தனக்குச் சுவாதீநப்படுத்த வேண்டியது.

108: விரோதிகள் சாமதாந பேதங்களினால் சுவாதீநப்படாவிட்டால் மாத்திரம் தண்டோபாயத்தினால் மெதுவாகச் சுவாதீநப்படுத்த வேண்டியது.

109: இந்த நான்குபாயங்களுக்குள் சாமோபாயத்தில் பிரயாசை செலவு இல்லாததாலும் தண்டோபாயத்தில் காரியசாதகம் ஆகிறதினாலும் அவ்விரண்டையும் அரசர்களுக்கு இராச்சிய முதலிய சுகத்தைத் தருவதாக பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.
காந்தியாரையே சுட்டுக் கொன்றவர்கள் ஆயிற்றே! அந்த நேரத்தில் தந்தை பெரியார் கூறியது என்ன? உண்மையைச் சொல்லப் போனால் தந்தை பெரியாருக்குத் தான் பார்ப்பனர்கள் நன்றி கூறிட வேண்டும்.

தந்தை பெரியாரை அழைத்து வானொலியில் பேசச் சொன்னபொழுது காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் வெறும் துப்பாக்கிதான். அந்தத் துப்பாக்கியை இயக்கிய கைதான் மதவெறி. அதனை வீழ்த்த வேண்டும் என்று சொன்னாரே. அந்த நேரத்தில் காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் நாதுராம் கோட்சே என்ற சித்பவன் பார்ப்பான் என்று கூறி, கொஞ்சம் வன்முறையைத் தூண்டினால் என்ன நடந்திருக்கும்?

அதே நேரத்தில் மொரார்ஜி தேசாய் உள்துறை அமைச்சராகவிருந்த மகாராட்டிரத்தில் என்ன நடந்தது? அக்ரகாரம் எரிக்கப்படவில்லையா? பார்ப்பனர்கள் தாக்கப்படவில்லையா?
தமிழ்நாட்டில் அவ்வாறு நடக்காததற்குக் காரணம் தந்தை பெரியாரே என்பதைப் பார்ப்பனர்கள் மறக்க வேண்டாம்.
என்னைப் பொறுத்தவரை எனக்கு எந்தப் பாதுகாப்பு ஏற்பாடும் கிடையாது. தனியாகத்தான் செல்கிறேன். எனக்குப் பாதுகாப்பாக இருப்பது இந்நாட்டுத் தமிழர்கள் - எம் தமிழர்கள் - நானும் மக்களோடு மக்களாகவே இருக்கிறேன்.

எனக்கு மெய்ப் பேசத் தெரியுமே தவிர மெய்க் காப்பாளர்கள் பற்றி சிந்திப்பதில்லை.

எங்களைப் பொறுத்தவரை வெளியில் வந்தால் செலவு - வீட்டுக்குத் திரும்பி வந்தால் வரவு. எங்கள் பொது வாழ்க்கையில் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட அடிப்படைப் பாடம் இது.

தமிழர் தலைவர் மீது வன்முறை தூண்டுதல் காவல்துறையில் புகார்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மீது கொலை வெறியைத் தூண்டும் வகையில் தினமலர் - வாரமலரில் (3.3.2019) கேள்வி பதில் பகுதியில் எழுதியது கண்டு தமிழ்நாடு முழுவதும் கொந் தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே தின மலரையும் கொளுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தினமலர் ஆசிரியர், வெளியிடு பவர், பதிப்பாளர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரா விடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன் றன் - சென்னைப் பெரு நகரக் காவல்துறை ஆணையரிடம் நேற்று (5.3.2019) புகார் மனு கொடுத்தார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அமைப்புச் செயலாளர் வி.பன் னீர்செல்வம் ஆகியோரும் உடன் சென்றிருந்த னர். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆணையரும் கூறினார்.

ஆனால் ஒன்று 'தினமலர்', 'துக்ளக்', 'விஜயபாரதம்' வட்டாரங்களுக்கும் - அவர்களைச் சாந்தவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறோம். எங்கள் கொள்கை நாட்டுக்கானது - தமிழ் மக்களுக்கானது - எங்களைக் கொல்லுவதால் அது அழிந்து விடாது - மாறாக மேலும் மேலும் வீறு கொண்டு தான் எழும் - எந்தக் கொம்பனாலும் அதனை அசைக்க முடியாது - அசைக்கவே முடியாது - எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பதுதான் விஞ்ஞானம் என்றார்.

பழனியில் பார்ப்பனர்கள் ஊர்வலம் நடத்தி என்னைப் பாடை கட்டி தூக்கிச் சென்றனர். அது குறித்து செய்தியாளர்கள் என்னைக் கேட்டனர்.


பார்ப்பனர்கள் பாடைக் கட்டித் தூக்கிச் சென்றுள்ளார்களே என்று கேட்டபோது "ஒரு சூத்திரன் பிணத்தை நாலு பார்ப்பனர்கள்' தூக்கிச் சென்றார்களே  - இது எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா!" என்று சொன்னேன் என்று குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது கொலைவெறித் தாக்குதலைத் தூண்டும் 'தினமலர்'மீது

தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்

இல்லையெனில் பின்விளைவுகளுக்குத் தமிழ்நாடு அரசே பொறுப்பு!


கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அறிக்கை


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது கொலை வெறியைத் தூண்டும் வகையில் எழுதியுள்ள தினமலர்' ஏட்டின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

'தினமலர்' வார மலரில் (3.3.2019) பக்கம் 10 இல் "அந்துமணி பதில்கள்'' என்னும் பகுதியில் கீழ்க்கண்ட கேள்வி - பதில் இடம்பெற்றுள்ளது.
கே.வெங்கட்ராமன், தென்காசி
"தன்னைத் தானே, தமிழர்  தலைவர்' எனக் கூறிக் கொள்ளும், தி.க. தலைவர், வீரமணி, இந்து மதத்தில் உள்ள, ஒரு ஜாதியை மட்டும் விடாமல் திட்டியும், மட்டம் தட்டியும் வருகிறாரே... மற்ற ஜாதிக்காரர்களைப்பற்றி, வாய் திறப்ப தில்லையே... இது ஏன்?
இவர் திட்டும் ஜாதியினர், கம்போ, தடியோ கையில் எடுக்க மாட்டார்கள் என்ற தைரியம் தான்!

அதே ஜாதிக்காரரான, வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவன் கோபம் வந்தபோது, இத்தேச விடுதலைக்காக தலைமை நின்றவரை என்ன செய்தான்... அதற்குமுன், மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆஷ் என்ற வெள்ளைக்கார, கலெக்டரை சுட்டுக் கொன்று, தானும் சுட்டு செத்தான், இதே ஜாதிக்காரன்....

இப்போது, தேர்தல்கள் நெருங்குகின்றன... இந்து மதத்தையும், அதில் ஓர் அங்கமான அந்த ஜாதியையும் எதிர்ப்பவர்கள், ஒன்று கூடி, பொதுக்கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது.

அப்போது, அதே ஜாதியைச் சேர்ந்த, வெறிகொண்ட இளைஞன் ஒருவன், இவர் களை, கவனிக்க' வாய்ப்பு ஏற்பட்டு விட்டால்...
எனவே, இவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.''

இதுதான் தினமலர்' வார மலரில் வெளிவந்த கேள்வி - பதில் பகுதி.
காந்தியாரை சுட்டதுபோல் சுடுவார்களாம்!

பச்சையாக கொலைவெறியைத் தூண்டும் வகை யில் வாசகங்கள் திட்டமிட்டு இடம்பெற்றுள்ளன என்பதில் அய்யமில்லை. காந்தியார் படுகொலை செய்யப்பட்டதுபோல, ஆஷ் துரை படுகொலை செய் யப்பட்டதுபோல, காந்தியாரையும், ஆஷ் துரையையும் கொலை செய்த அதே ஜாதியைச் சேர்ந்த (பார்ப்பன) இளைஞன் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைச் சுட்டுக் கொல்லுவான் என்ற தூண்டுதல் பொருளோடு பதில் சொல்லப்பட்டுள்ளதோடு, அவ்வாறு கொலை செய்வது நியாயம் என்பதுபோல காரணங்களையும் கற்பித்துள்ளது அந்த இதழ்.

தினமலர் வாரமலர்' எழுதியுள்ள பதிலைப் பார்த் தால், இவர்கள் ஏதோ ஓர் ஏற்பாட்டோடு இருப்பதாகவே தெரிகிறது.

இப்படிப் பச்சையாக, நாடறிந்த ஒரு தலைவரை - 10 வயது முதல் 86 வயதுவரை தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று பாடுபட்டுக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவரை - தமிழர் தலைவர் என்று மக்களால் மதிக்கப்படும் தலைவரை - தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கையையும், மதிப்பையும் பெற்ற தமிழ்நாட்டின் முக்கிய தலைவரான ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்குப் பச்சையாக கொலை வெறித் தூண்டுதலை மேற்கொண்டிருக்கும் தினமலர்' ஏட்டின் உரிமையாளர், ஆசிரியர், பதிப்பாளர்களைக் கைது செய்து, சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும் என்று தமிழ்நாடு அரசை குறிப்பாக காவல்துறையை வலியுறுத்துகிறோம்.

மகாராட்டிரத்தைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கருநாடகத்தைச் சேர்ந்த கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய சமுக சீர்திருத்தவாதிகள் கொல்லப்பட்ட வரிசையில் திராவிடர் கழகத் தலை வரையும் வைத்திருக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது.

இலட்சியத்திற்காக உயிரைக் கொடுக்கத் தயார்!

இதுகுறித்து நேற்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கூறிய கருத்து முக்கியமானது. பிணி வந்து சாவதைவிட, விபத்தினால் சாவதைவிட, இலட்சியத்திற்காக உயிர் என்ற விலை கொடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதைவிட இலட்சிய வாதிக்குப் பெரும்பேறு எதுவாக இருக்க முடியும்?''
"ஜாதி, வருண தர்மம் ஒழிக்கப்படுவதற்கு என் உயிர் தேவைப்படும் என்றால், ஒருமுறையல்ல, பலமுறை சுட்டுக் கொல்லப்படுவதை விரும்புகிறேன். பார்ப்பனர்களே அதனை விரைவாக செய்யுங்கள்'' என்று புதுவையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் கம்பீரமாகவே கூறினார்.

இதற்கு முன்பும்கூட நான்கு முறை அவர் உயிருக்குக் குறி வைக்கப்பட்டதுண்டு.

கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாத ஜாதி, மதவெறியர்கள்,  வன்முறையால் சாதிக்க இருக்கிறார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. மதம் யானைக்குப் பிடித்தாலும், மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்துதானே!

அவதாரங்களை எடுத்து பூதேவர்களான பார்ப்ப னர்கள் தங்கள் எதிரிகளான அசுரர்களைக் கொன்றது தானே அவர்களின் புராண தர்மம்! அதைத்தான் இப்பொழுது கையில் எடுத்துள்ளார்கள்.

வேறு கண்ணோட்டத்தோடு தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையை அலட்சியமாகக் கருதிவிடக் கூடாது. உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் கொந்தளிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பொதுத் தொண்டில் ஈடுபடுகின்ற தலைவர்களுக்கே உயிருக்கு இப்படி அச்சுறுத்தல் ஏற்பட்டால்,  நமக்குப் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்ற அச்ச உணர்வுப் பொதுமக்களுக்கும் ஏற்படும் நிலை ஏற்பட்டுவிடும்.

தமிழ்நாடு அரசே பொறுப்பு!

அரசியல் கண்ணோட்டத்தோடோ - தினமலர்' மத்திய பி.ஜே.பி. அரசை ஆதரிக்கும் ஏடு என்பதை மனதிற்கொண்டோ, சட்ட ரீதியான நடவடிக்கையை தினமலர்'மீது எடுக்கத் தவறினால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்குத் தமிழ்நாடு அரசே பொறுப்பு ஏற்கவேண்டியிருக்கும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களும் இதுகுறித்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள், (தனியே காண்க!) அவர்களுக்கு நன்றி!

தமிழ்நாடு அரசு - காவல்துறை என்ன செய்யப் போகிறது? நாடே எதிர்பார்க்கிறது! - கழகத் தோழர்களும், பொதுமக்களும் அமைதி காப்பார்களாக! அதைத்தான் நமது தலைவர் விரும்புவார்; விரும்புகிறார்.

கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்  திராவிடர் கழகம்.
சென்னை
4.3.2019

Thursday, September 20, 2018

தந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா? எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார்

 தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு
வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை!



தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை என்று திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தந்தை பெரியார் அவர்களது 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை அகிலமே கொண்டாடி, அவர்தம் சிலைகளுக்கு மட்டுமல்ல, அவர் தந்த சுயமரியாதை - பகுத்தறிவு என்ற சீலத்திற்கும் - கொள்கை லட்சியங் களுக்கும் மாலை போட்டு வரவேற்று, பெரியார் ஓர் மாமருந்து என்பதை உணர்ந்து கொண்டாடுகிறார்கள்!

தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன! அவர் வாழும்போது சந்தித்த காட்டுமிராண்டிகளின் எதிர்ப்பு- இன்னமும் தொடர்கிறது என்பதற்குச் சரியான அடையாளமாக அவரது சிலை மீது செருப்பு வீசுவதுபோன்ற கீழ்த்தர நடவடிக்கைகளில் ஈடுபடுவது, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. காவிகள் இந்த கயமைச் செயல்களில் ஈடுபட்டு ஓடி ஒளிகின்றன.

செருப்புத் தோரண வரவேற்புகள்

தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே செருப்புத் தோரணங்களின் ‘‘வரவேற்பை''ச் சந்தித்து வந்தார்! (சிவகங்கையில்).

கடலூரில் இன்று கம்பீரமாக நிற்கும் சிலை எழுப்பப் பட்ட இடம்- அவர்மீது 1944 இல் செருப்பு வீசப்பட்ட அதே இடம்!

எந்த எதிர்ப்பையும், எதிரிகளின், அநாகரிக காட்டு மிராண்டித்தன எதிர்ப்புகளை நேருக்கு நேர் சந்தித்த அவர், நமது கொள்கை வயலில் பயிர் வளர போடப்படும் ‘உரங்கள்' என்று சொல்லி எதிர் கொண்டவர்!

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இராமனைக் கும்பிடுவோர், அவர்களின் இராமாயணத்தில் 14 ஆண்டுகள் சிம்மா சனத்தில் இருந்து ஆண்ட இராமனின் ஒரு ஜோடி (இரண்டு) செருப்புகளுக்கு ‘‘செருப்புக் காதலர்களாகி'' - ‘‘திராவிட'' நெருப்புடன் விளையாடத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத் தலைவர்கள் கண்டனம்

செருப்பு வீசியவர்களை தமிழக அரசு உடனடியாகக் கைது செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்புள்ள கட்சித் தலைவர்கள், தி.மு.க. தலைவர் தளபதி சகோதரர் மு.க.ஸ்டாலின், காங் கிரசு கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர், மேனாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் சகோதரர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன், தமிழ் மாநில காங்கிரசு கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தோழர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் போன்ற பல தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, காவல் துறை - இத்தகைய கயவர்கள்மீது கடுந் தண்டனை தரும் சட்டங்கள் பாய்ந்து, தமிழ்நாடு கலவர பூமியாகிவிடாமல் தடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

‘‘எய்தவனிருக்க அம்பை நோவது சரிதானா?'' என்ற பழமொழிக்கொப்ப இந்த முயற்சிகளை தொடங்கி வைத்தவர், ஒரு காலிப் பயல்கூடப் பயன்படுத்த அஞ்சும் பண்பற்ற கொச்சை சொற்களை தந்தை பெரியார் மீதும் (அன்று), நேற்று உயர்நீதிமன்றத்தின்மீதும், காவல்துறை மீதும் (இன்று) வீசியுள்ள நபர் இன்னமும் போலீஸ் பாதுகாப்புடன் மேடைகளில் ஏறி, புஸ்வாணம் விட்டுள்ளார்.

இது வடநாடு அல்ல- பெரியார் மண்!

தூத்துக்குடி மாணவியின்மீது உடனடியாகப் பாய்ந்த தமிழக காவல்துறையின் நடவடிக்கை, இத்தகைய காவி, காலி இராஜாக்கள்மீதும், நடவடிக்கை எடுத்து பாயத் தயாராகவில்லையே, ஏன்? இந்த இரட்டை அளவுகோல் ஏன்? மனு ஆட்சியா? ஜனநாயகமா? என்ன இங்கே நடைபெறுகிறது?

விஷமக்கார வீணர்களே, கலவரங்களைத் தூண்டி  இந்துத்துவா வாக்கு வங்கியை ஒருமுனைப்படுத்திடும் தேர்தல் செப்படி வித்தைகளுக்கு இது ஒன்றும் வடநாடு அல்ல!

பெரியார் மண்! திராவிட பூமி! இங்கு மக்களின் எதிர்வினைகள் அரசியல் ரீதியாக, ஜனநாயக வழிமுறைகளையொட்டியே வருமே தவிர, கலவரங்கள்மூலம் ஏற்படும் என்று கனவு கண்டு தூண்டிலைத் தூக்க நினையாதீர்!

காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்யும் புத்தி கெட்ட புல்லர்கள் நீங்கள் என்பதை விரைவில் உணர்வீர்கள்!

‘‘மத்தியில் எங்கள் ஆட்சி, மாநிலத்தில் எங்களுக்கு - தோப்புக்கரணம் போடும் ஒரு முதுகெலும்பற்றவர்கள் ஆட்சி'' என்பதால்தானே, இந்த வாய்க் கொழுப்பு, வக்கணை, வன்செயல், தரங்கெட்ட தறுதலைத்தனம்! எவ்வளவு காலம் இந்தக் கோலம் - பார்ப்போம்!

தூண்டியவர்களை விட்டுவிட்டு அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை!

அந்த ஆணவத்திற்கு வரும் தேர்தல்கள் மூலமும், மற்ற ஜனநாயக வழியில், அறப்போர்களின்மூலமும் விரைவில் இதன் தாக்கத்தை உணர்வீர்கள். இறுதியில் சிரிப்பவர்களே வெற்றி பெற்றவர்கள்!

அணையப் போகும் விளக்கு சற்று வெளிச்சம் காட்டுவது வழமைதானே!

தூண்டியவர்களை விட்டு, அம்புகளுக்குத் தண்டனை கொடுத்துப் பயனில்லை!








தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

சென்னையில் தமிழர் தலைவர் பேட்டி

தந்தை பெரியாருடைய 80 ஆண்டுகால தொண்டினாலே

மதச்சார்பின்மை - சமூகநீதி - சம வாய்ப்பு - பெண்ணடிமை ஒழிப்பு கொள்கைகளுக்கு வெற்றி!


சென்னை, செப்.17   தந்தை பெரியாருடைய 80 ஆண்டுகால தொண்டினாலே, மதச்சார்பின்மை - சமூகநீதி - சம வாய்ப்பு - பெண்ணடிமை ஒழிப்பு கொள்கைகளுக்கு வெற்றி கிட்டியது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (17.9.2018) காலை சென்னை பெரியார் திடலில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

இணையற்ற அறிவுப் புரட்சி

20 ஆம் நூற்றாண்டில் பிறந்து, 21 ஆம் நூற்றாண்டிலும், இனி வரக்கூடிய நூற்றாண்டிலும் இணையற்ற அறிவுப் புரட்சியை நிகழ்த்தும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய 140 ஆம் ஆண்டு பிறந்த நாளாகும் இன்று. அவர் கண்ட வெற்றிகளையெல்லாம் ஒன்று திரட்டி, இப்பொழுது தோன்றியிருக்கக்கூடிய அறைகூவல்களையெல்லாம் சந்திக்கக்கூடிய சூளுரை நாளாக இந்த நாளை திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம் ஏற்கிறது.

மதச்சார்பின்மை, சமூகநீதி, சமவாய்ப்பு, பெண்ணடிமை ஒழிப்பு இத்தகைய கொள்கைகள் இன்றைக்கு ஆழமாக மக்கள் மத்தியில் பரவியிருக்கின்ற இந்தக் கொள்கைகளுக்கு தந்தை பெரியாருடைய 80 ஆண்டுகால தொண்டினாலே, மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பை உருவாக்கிய அந்த சூழல் இன்றைக்கு மாற்றப்பட்டு விடுமோ என்கிற அச்சம் பல நேரங்களில் இந்தியா முழுவதும் இருக்கிறது. காரணம், மத்தியில் உள்ள காவி ஆட்சி, மதச்சார்பின்மையையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டி ஒரு பாசிசத்தை இன்றைக்கு வளர்த்துக் கொண்டிருக்கலாம். மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என்கிற நிலை இருக்கிறது. ஜனநாயகம் என்பதே, ஆரோக்கியத்திற்கு அடையாளமே மாற்றுக் கருத்துதான்.

தந்தை பெரியார் என்கிற ஓர் ஆயுதம்தான்

எனவே, அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வரம்பு மீறி நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், அதற்கு ஒரே தடுப்பு தந்தை பெரியார் என்கிற ஓர் ஆயுதம்தான்.

எனவேதான், தந்தை பெரியார் அவர்கள் மறைந்து உருவத்தால், உடலால் 45 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், இன்றைக்குப் பெரியார் தத்துவம் ஜீவ நதியாக உலகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றது. பெரியார் என்கிற மாமருந்து, இன்றைக்கும், நாளைக்கும் வருகின்ற நோய்களுக்கெல்லாம், மூடநம்பிக்கை நோய்களுக்கெல்லாம் ஜாதி நோய்க்கெல்லாம், தீண்டாமை நோய்க்கெல்லாம், மதவெறி நோய்க்கெல்லாம், பெண்ணடிமை நோய்க்கெல்லாம் அதுதான் ஒரே மாமருந்து என்று கருதுகின்ற காரணத்தினாலே, அந்தப் பணியை நாம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இன்றைக்கு கிழக்கும் - மேற்கும் ஏந்தி அதை செய்து கொண்டிருக்கின்றது.

பெரியார் உலகத் தலைவராக உயர்ந்து காணப்படுகிறார்

பெரியார் உலகப் பெரியாராக - உலகத் தலைவராக இன் றைக்கு உயர்ந்து காணப்படுகிறார்.

பெரியார் வாழ்க! பெரியார் கொள்கை வெல்க!

பிள்ளையார் ஊர்வலம் என்பதே கலவரத்திற்காகத்தான்!

செய்தியாளர்: நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தியின் ஊர்வலம் போது பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பதே  ஆங்காங்கே கூலிப்படைகளை தயாரித்து, ஆங்காங்கே பிள்ளையாரை நட்டு வைத்து, பிறகு கடலில் கரைப்பது என்பது இருக்கிறதே, இதற்கு முன்னால் இருந்ததைவிட இந்த ஆண்டு குறைந்திருக்கிறது என்பது அவர்களே ஒப்புக்கொண்ட ஒரு செய்தி.

இந்தப் பிள்ளையார் ஊர்வலம் என்பதே கலவரத்திற் காகத்தான் அதற்கு முன்பெல்லாம் பிள்ளையாரை கும்பிடுகிற மக்கள், வீட்டிற்குள் பிள்ளையாரை வைத்துக் கும்பிட்டுவிட்டு, கிணற்றிலோ, குளத்திலோ போட்டு விடுவார்கள்.

பிள்ளையார் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று, ஆட்டம் பாட்டம் என்று நடத்தி, காவல்துறையினரை தாக்குவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, உயர்நீதிமன்றத்தைப்பற்றி தாறுமாறாக கொச்சையாகப் பேசுவது இப்படிப்பட்டவற்றை நடத்தி, கலவர பூமியாக தமிழ்நாட்டை ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இது பெரியார் மண்- திராவிட மண்!

ஒருபோதும் அவர்கள் வெற்றி பெற முடியாது. காரணம், இது பெரியார் மண்; திராவிட மண். இங்கே மனிதநேயம்தான் தழைக்குமே தவிர, மதவெறி ஒரு போதும் தழைக்காது.

இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டார்.
எச்.இராஜா விஷயத்தில் சட்டம் என்ன செய்யப் போகிறது?

பெரியார் சிலை மீது செருப்பு வீசியவர்கள்

அடுத்து எதைத் தூக்கப் போகிறார்கள்?



சென்னை, செப்.17   எச்.இராஜா விஷயத்தில் சட்டம் என்ன செய்யப் போகிறது? என்றும், பெரியார் சிலைமீது செருப்பு வீசியவர்கள் அடுத்து எதைத் தூக்கப் போகிறார்கள்?  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (17.9.2018) காலை சென்னை பெரியார் திடலில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

மக்கள் மன்றம் தண்டனை வழங்கும்!

செய்தியாளர்: எச்.இராஜா அவர்கள் நீதிமன்றம் குறித்து தரக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: அவர் தரக்குறைவான வார்த்தை களைப் பேசுவது இது முதன்முறையல்ல. எல்லோரையும் தரக்குறைவாகப் பேசுவதற்குப் பெயர்தான் எச்.இராஜா என்பது. இதுவரையில் பலமுறை அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையும், அரசும் சும்மா இருந்த தினுடைய விளைவு, அவர் நீதிமன்றத்தைத் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால், நீதிமன்றத்தையே மிகவும் தரக்குறைவாகப் பேசுவது, காவல்துறையை இன்னும் அசிங்கமாகப் பேசியிருக்கிறார் என்று அவர்மீது வழக்குப் பதிவு செய்துவிட்டோம் என்பது பயனளிக்காது.

ஏற்கெனவே ஒரு மாணவி, ‘‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக!'' என்று உணர்ச்சிவயப்பட்டு எங்கோ ஓரிடத்தில் சொன்னதை, உலகம் முழுவதும் அதைப் பிரபலப்படுத்தி கைது செய்தார்கள்.

எச்.இராஜா விஷயத்தில் சட்டம் என்ன செய்யப் போகிறது?

ஏற்கெனவே பெண் பத்திரிகை செய்தியாளர்களைக் கொச்சைப்படுத்திய எஸ்.வி.சேகர் போன்றவர்கள் இன்னமும் வெளியில்தான் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான், சட்டம்- ஒழுங்கு தூங்கிக் கொண்டிருக் கின்றபொழுது, குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றபொழுது, இவர்களுக்கெல்லாம் அந்தத் துணிச்சல் ஏற்படுகிறது.

எப்படியென்றாலும், அதனுடைய விளைவுகளிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.

நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் மன்றம் அதற்கான தண்டனையை வழங்குவார்கள்.

பெரியார் பிறந்த நாள் சூளுரை

செய்தியாளர்: சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கும், திருப்பூரில் உள்ள பெரியார் சிலைக்கும் செருப்பு மாலை போட்டிருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: பெரியாரைப் பொருத்தவரையில், ஒரு செருப்பு போட்டால், இன்னொரு செருப்பு எங்கே என்று கேட்டு பழக்கப்பட்ட ஒரு தலைவர். எனவே, இந்த சலசலப்புகளால் அவரை அவமானப்படுத்தி விட முடியாது.

அதேநேரத்தில், செருப்பைத் தூக்கியவர்கள், அடுத்து எதைத் தூக்கப் போகிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.

இதையெல்லாம் ஏன் இந்த அரசு அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இதை அரசு அனுமதித்தால், மக்கள் பதில் கூற ஆரம்பித்தால், நாட்டில் கலவரங்கள் வெடிக்கும். கலவரங்கள் வெடிக்காமல், கொள்கை ரீதியான விடை இதற்குக் கிடைக்கவேண்டுமானால், இத்தகைய ஆட்சிகளுக்கு விடை கொடுப்பதுதான் ஒரே ஒரு வழி. அதுதான் பெரியார் பிறந்த நாள் சூளுரையாகும்.

இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டார்.

தந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி


சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது.

பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஊர்வல மாக சென்று பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம் மையார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள். பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர பெரியார் சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியார் நினைவிடத்தில் கழகத் தோழர்கள் புடைசூழ தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் உறுதிமொழியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்ல, அவரைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் உறுதி மொழி கூறி சூளுரை ஏற்றனர்.

அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப் பட்டது.

கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், சட்டத்துறைத் தலைவர் வழக்கு ரைஞர் த.வீரசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி, பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர்  தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.ரத்தினசாமி, செயலாளர் தே.செ.கோபால், திராவிடர் வரலாற்று  ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், திருமதி ராஜம்மாள், கவிஞர் அரிமா,  வரியியல் வல்லுநர் ச.ராசரத் தினம், ஆடிட்டர் ராமச்சந்திரன், டாக்டர் இராஜ சேகரன், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, திருமதி. மோகனா அம்மாள், பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, மயிலை சேதுராமன், பெரியார் திடல் பொது மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், விடுதலை அச்சகப் பிரிவு மேலாளர் க.சரவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் உள்ளிட்ட கழகப்பொறுப் பாளர்கள் கலந்துகொண்டனர்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளான இன்று (17.9.2018) பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கும், பெரியார் நினைவிடம், அன்னை மணியம் மையார் நினைவிடம் மற்றும் பெரியார் சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடம் ஆகிய இடங்களில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, திராவிட தொழிலாளரணி, பெரியார் மருத்துவமனை, திராவிடன் நலநிதி, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம், புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பு, அகில இந்திய பிற்படுப்பட்டோர் பணியாளர் நலச்சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பெரியார் திடல் அனைத்து துறை பணி தோழர்கள் மற்றும் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த கழகத் தோழர், தோழியர்கள் பெரும் திரளாக பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

மதிமுக சார்பில் நினைவிடத்தில் மரியாதை

பெரியார் திடலுக்கு வருகைதந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வர வேற்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதிமுக பொறுப்பாளர்கள் மல்லை சத்யா, செங்குட்டுவன் மற்றும் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் வருகை தந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பெரியார் நினைவிடத் தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத் தினார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி (ஏஅய்ஓபிசி), வாய்ஸ் ஆப் ஓபிசி ஆசிரியர் ஜெ.பார்த்தசாரதி மற்றும் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கும், நினை விடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இலவச மருத்துவ முகாம்

தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாளை யொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.

அன்னை நாகம்மையார் அரங்கம் திறப்பு

தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் 90 வயதை கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு இன்று(17.9.2018) காலை பெரியார் திடலில் பாராட்டு, வாழ்த்து, விருதளிப்பு விழாவிற்கு வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் விழா தொடங்குவதற்கு முன்பு பெரியார் திடலில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அன்னை நாகம்மையார் அரங்கத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார்.

தொண்டறச் செம்மல்களுக்குப்

பாராட்டு - வாழ்த்து - விருதளிப்பு

இதையடுத்து தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழாவையொட்டி, தொண்ணூறு வயதைக் கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு பாராட்டு - வாழ்த்து - விருதளிப்பு! காலை 10.30 மணியளவில் நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் இனமான பேரா சிரியர் க.அன்பழகன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களின் சார்பில் தோழர் சுகந்தி அவர்களும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு ஆகியோர் சிந்தனைசார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.

ஏன் அவர் பெரியார்? கருத்தரங்கம்

தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்பு கருத்தரங்கம், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி   தலைமையில் நடைபெற்றது. பொறியாளர் இ.ச.இன்பக்கனி வரவேற்றார். வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அறிமுக  உரையாற்றினார். பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்... வழக்குரைஞர் கிருபா முனுசாமி, பயன்பெற்றோர் பார்வையில்... ஊடக வியலாளர் கவிதா சொர்ணவல்லி, பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பற்றி... எழுத்தாளர் ஓவியா ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக தமிழர் தலைவர் நிறைவுரை ஆற்றினார்.

பெரியார் நினைவிடத்தில் தோழர்கள் உறுதிமொழி

கடவுள் இல்லை கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி

ஜாதியை கடவுள் உருவாக்கினார், மதத்தை கடவுள்பரப்பியிருக்கிறார்,  பெண்ணடிமையை கடவுள் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார் என்பதற்காக கடவுள் மறுப்பை, மனித நேயத்தை அனைவருக்கும் அனைத் தும் என்ற சமூக நீதியை காப்பதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் 95ஆண்டு காலம் வாழ்ந்த பெரியார் மறைந்த பிறகும், உடலால் மறைந்த பிறகும், தத்துவமாக, உலகத் தத்துவமாக உயர்ந்து நிற்கிறார்.

வெல்லும் வழி- அவர் சொல்லும் முறை எல்லா வற்றிலும், உலகளாவிய சிந்தனையாளராக நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் திகழ்ந்து ஈரோட்டுப் பெரியாராகி, உலகத் தலைவராக, கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்கும், மேலும் கீழும் அய்யிரண்டு பத்துதிசையிலும் வெல்லக்கூடிய நம் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய 140ஆவது ஆண்டு பிறந்த நாளாகிய இன்று அவர் இட்ட பணிகளை அவர்கள் போட்டுத்தந்த பாதையில், எந்தவித சபலத்திற்கும் ஆளா காமல், செய்து முடிப்போம் என்று அவருக்குப் பிறகு தலைமையேற்ற அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையில் உறுதியேற்ற நாம், இந்நாளில் அதை மேலும் புதுப்பித்துக்கொண்டு, பெரியார் பாதையில் ஆயிரம் எதிர்ப்புகள், பல்லாயிரம் ஏளனங்கள், எத்த னையோ கண்டனங்கள், அடக்குமுறைகள் எதுவந் தாலும் எதிர்நீச்சல் அடித்து அவைகளைத் துச்சமெனக் கருதி  வெற்றி பெறுவோம், பயணத்தைத் தொடர்வோம், சூளுரைப்போம், சுயமரியாதை வாழ்வு வாழ்வோம்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...