தந்தை பெரியாருடைய 80 ஆண்டுகால தொண்டினாலே
மதச்சார்பின்மை - சமூகநீதி - சம வாய்ப்பு - பெண்ணடிமை ஒழிப்பு கொள்கைகளுக்கு வெற்றி!
மதச்சார்பின்மை - சமூகநீதி - சம வாய்ப்பு - பெண்ணடிமை ஒழிப்பு கொள்கைகளுக்கு வெற்றி!
சென்னை, செப்.17 தந்தை பெரியாருடைய 80 ஆண்டுகால தொண்டினாலே, மதச்சார்பின்மை - சமூகநீதி - சம வாய்ப்பு - பெண்ணடிமை ஒழிப்பு கொள்கைகளுக்கு வெற்றி கிட்டியது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (17.9.2018) காலை சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
இணையற்ற அறிவுப் புரட்சி
20 ஆம் நூற்றாண்டில் பிறந்து, 21 ஆம் நூற்றாண்டிலும், இனி வரக்கூடிய நூற்றாண்டிலும் இணையற்ற அறிவுப் புரட்சியை நிகழ்த்தும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய 140 ஆம் ஆண்டு பிறந்த நாளாகும் இன்று. அவர் கண்ட வெற்றிகளையெல்லாம் ஒன்று திரட்டி, இப்பொழுது தோன்றியிருக்கக்கூடிய அறைகூவல்களையெல்லாம் சந்திக்கக்கூடிய சூளுரை நாளாக இந்த நாளை திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம் ஏற்கிறது.
மதச்சார்பின்மை, சமூகநீதி, சமவாய்ப்பு, பெண்ணடிமை ஒழிப்பு இத்தகைய கொள்கைகள் இன்றைக்கு ஆழமாக மக்கள் மத்தியில் பரவியிருக்கின்ற இந்தக் கொள்கைகளுக்கு தந்தை பெரியாருடைய 80 ஆண்டுகால தொண்டினாலே, மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பை உருவாக்கிய அந்த சூழல் இன்றைக்கு மாற்றப்பட்டு விடுமோ என்கிற அச்சம் பல நேரங்களில் இந்தியா முழுவதும் இருக்கிறது. காரணம், மத்தியில் உள்ள காவி ஆட்சி, மதச்சார்பின்மையையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டி ஒரு பாசிசத்தை இன்றைக்கு வளர்த்துக் கொண்டிருக்கலாம். மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என்கிற நிலை இருக்கிறது. ஜனநாயகம் என்பதே, ஆரோக்கியத்திற்கு அடையாளமே மாற்றுக் கருத்துதான்.
தந்தை பெரியார் என்கிற ஓர் ஆயுதம்தான்
எனவே, அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வரம்பு மீறி நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், அதற்கு ஒரே தடுப்பு தந்தை பெரியார் என்கிற ஓர் ஆயுதம்தான்.
எனவேதான், தந்தை பெரியார் அவர்கள் மறைந்து உருவத்தால், உடலால் 45 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், இன்றைக்குப் பெரியார் தத்துவம் ஜீவ நதியாக உலகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றது. பெரியார் என்கிற மாமருந்து, இன்றைக்கும், நாளைக்கும் வருகின்ற நோய்களுக்கெல்லாம், மூடநம்பிக்கை நோய்களுக்கெல்லாம் ஜாதி நோய்க்கெல்லாம், தீண்டாமை நோய்க்கெல்லாம், மதவெறி நோய்க்கெல்லாம், பெண்ணடிமை நோய்க்கெல்லாம் அதுதான் ஒரே மாமருந்து என்று கருதுகின்ற காரணத்தினாலே, அந்தப் பணியை நாம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இன்றைக்கு கிழக்கும் - மேற்கும் ஏந்தி அதை செய்து கொண்டிருக்கின்றது.
பெரியார் உலகத் தலைவராக உயர்ந்து காணப்படுகிறார்
பெரியார் உலகப் பெரியாராக - உலகத் தலைவராக இன் றைக்கு உயர்ந்து காணப்படுகிறார்.
பெரியார் வாழ்க! பெரியார் கொள்கை வெல்க!
பிள்ளையார் ஊர்வலம் என்பதே கலவரத்திற்காகத்தான்!
செய்தியாளர்: நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தியின் ஊர்வலம் போது பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பதே ஆங்காங்கே கூலிப்படைகளை தயாரித்து, ஆங்காங்கே பிள்ளையாரை நட்டு வைத்து, பிறகு கடலில் கரைப்பது என்பது இருக்கிறதே, இதற்கு முன்னால் இருந்ததைவிட இந்த ஆண்டு குறைந்திருக்கிறது என்பது அவர்களே ஒப்புக்கொண்ட ஒரு செய்தி.
இந்தப் பிள்ளையார் ஊர்வலம் என்பதே கலவரத்திற் காகத்தான் அதற்கு முன்பெல்லாம் பிள்ளையாரை கும்பிடுகிற மக்கள், வீட்டிற்குள் பிள்ளையாரை வைத்துக் கும்பிட்டுவிட்டு, கிணற்றிலோ, குளத்திலோ போட்டு விடுவார்கள்.
பிள்ளையார் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று, ஆட்டம் பாட்டம் என்று நடத்தி, காவல்துறையினரை தாக்குவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, உயர்நீதிமன்றத்தைப்பற்றி தாறுமாறாக கொச்சையாகப் பேசுவது இப்படிப்பட்டவற்றை நடத்தி, கலவர பூமியாக தமிழ்நாட்டை ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இது பெரியார் மண்- திராவிட மண்!
ஒருபோதும் அவர்கள் வெற்றி பெற முடியாது. காரணம், இது பெரியார் மண்; திராவிட மண். இங்கே மனிதநேயம்தான் தழைக்குமே தவிர, மதவெறி ஒரு போதும் தழைக்காது.
இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டார்.
எச்.இராஜா விஷயத்தில் சட்டம் என்ன செய்யப் போகிறது?
பெரியார் சிலை மீது செருப்பு வீசியவர்கள்
அடுத்து எதைத் தூக்கப் போகிறார்கள்?
பெரியார் சிலை மீது செருப்பு வீசியவர்கள்
அடுத்து எதைத் தூக்கப் போகிறார்கள்?
சென்னை, செப்.17 எச்.இராஜா விஷயத்தில் சட்டம் என்ன செய்யப் போகிறது? என்றும், பெரியார் சிலைமீது செருப்பு வீசியவர்கள் அடுத்து எதைத் தூக்கப் போகிறார்கள்? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (17.9.2018) காலை சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
மக்கள் மன்றம் தண்டனை வழங்கும்!
செய்தியாளர்: எச்.இராஜா அவர்கள் நீதிமன்றம் குறித்து தரக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: அவர் தரக்குறைவான வார்த்தை களைப் பேசுவது இது முதன்முறையல்ல. எல்லோரையும் தரக்குறைவாகப் பேசுவதற்குப் பெயர்தான் எச்.இராஜா என்பது. இதுவரையில் பலமுறை அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையும், அரசும் சும்மா இருந்த தினுடைய விளைவு, அவர் நீதிமன்றத்தைத் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால், நீதிமன்றத்தையே மிகவும் தரக்குறைவாகப் பேசுவது, காவல்துறையை இன்னும் அசிங்கமாகப் பேசியிருக்கிறார் என்று அவர்மீது வழக்குப் பதிவு செய்துவிட்டோம் என்பது பயனளிக்காது.
ஏற்கெனவே ஒரு மாணவி, ‘‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக!'' என்று உணர்ச்சிவயப்பட்டு எங்கோ ஓரிடத்தில் சொன்னதை, உலகம் முழுவதும் அதைப் பிரபலப்படுத்தி கைது செய்தார்கள்.
எச்.இராஜா விஷயத்தில் சட்டம் என்ன செய்யப் போகிறது?
ஏற்கெனவே பெண் பத்திரிகை செய்தியாளர்களைக் கொச்சைப்படுத்திய எஸ்.வி.சேகர் போன்றவர்கள் இன்னமும் வெளியில்தான் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவேதான், சட்டம்- ஒழுங்கு தூங்கிக் கொண்டிருக் கின்றபொழுது, குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றபொழுது, இவர்களுக்கெல்லாம் அந்தத் துணிச்சல் ஏற்படுகிறது.
எப்படியென்றாலும், அதனுடைய விளைவுகளிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.
நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் மன்றம் அதற்கான தண்டனையை வழங்குவார்கள்.
பெரியார் பிறந்த நாள் சூளுரை
செய்தியாளர்: சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கும், திருப்பூரில் உள்ள பெரியார் சிலைக்கும் செருப்பு மாலை போட்டிருக்கிறார்களே?
தமிழர் தலைவர்: பெரியாரைப் பொருத்தவரையில், ஒரு செருப்பு போட்டால், இன்னொரு செருப்பு எங்கே என்று கேட்டு பழக்கப்பட்ட ஒரு தலைவர். எனவே, இந்த சலசலப்புகளால் அவரை அவமானப்படுத்தி விட முடியாது.
அதேநேரத்தில், செருப்பைத் தூக்கியவர்கள், அடுத்து எதைத் தூக்கப் போகிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.
இதையெல்லாம் ஏன் இந்த அரசு அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இதை அரசு அனுமதித்தால், மக்கள் பதில் கூற ஆரம்பித்தால், நாட்டில் கலவரங்கள் வெடிக்கும். கலவரங்கள் வெடிக்காமல், கொள்கை ரீதியான விடை இதற்குக் கிடைக்கவேண்டுமானால், இத்தகைய ஆட்சிகளுக்கு விடை கொடுப்பதுதான் ஒரே ஒரு வழி. அதுதான் பெரியார் பிறந்த நாள் சூளுரையாகும்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment