Thursday, September 20, 2018

தந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி


சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது.

பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஊர்வல மாக சென்று பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம் மையார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள். பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர பெரியார் சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியார் நினைவிடத்தில் கழகத் தோழர்கள் புடைசூழ தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் உறுதிமொழியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்ல, அவரைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் உறுதி மொழி கூறி சூளுரை ஏற்றனர்.

அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப் பட்டது.

கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், சட்டத்துறைத் தலைவர் வழக்கு ரைஞர் த.வீரசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி, பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர்  தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.ரத்தினசாமி, செயலாளர் தே.செ.கோபால், திராவிடர் வரலாற்று  ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், திருமதி ராஜம்மாள், கவிஞர் அரிமா,  வரியியல் வல்லுநர் ச.ராசரத் தினம், ஆடிட்டர் ராமச்சந்திரன், டாக்டர் இராஜ சேகரன், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, திருமதி. மோகனா அம்மாள், பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, மயிலை சேதுராமன், பெரியார் திடல் பொது மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், விடுதலை அச்சகப் பிரிவு மேலாளர் க.சரவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் உள்ளிட்ட கழகப்பொறுப் பாளர்கள் கலந்துகொண்டனர்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளான இன்று (17.9.2018) பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கும், பெரியார் நினைவிடம், அன்னை மணியம் மையார் நினைவிடம் மற்றும் பெரியார் சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடம் ஆகிய இடங்களில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, திராவிட தொழிலாளரணி, பெரியார் மருத்துவமனை, திராவிடன் நலநிதி, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம், புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பு, அகில இந்திய பிற்படுப்பட்டோர் பணியாளர் நலச்சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பெரியார் திடல் அனைத்து துறை பணி தோழர்கள் மற்றும் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த கழகத் தோழர், தோழியர்கள் பெரும் திரளாக பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

மதிமுக சார்பில் நினைவிடத்தில் மரியாதை

பெரியார் திடலுக்கு வருகைதந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வர வேற்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதிமுக பொறுப்பாளர்கள் மல்லை சத்யா, செங்குட்டுவன் மற்றும் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் வருகை தந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பெரியார் நினைவிடத் தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத் தினார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி (ஏஅய்ஓபிசி), வாய்ஸ் ஆப் ஓபிசி ஆசிரியர் ஜெ.பார்த்தசாரதி மற்றும் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கும், நினை விடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இலவச மருத்துவ முகாம்

தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாளை யொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.

அன்னை நாகம்மையார் அரங்கம் திறப்பு

தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் 90 வயதை கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு இன்று(17.9.2018) காலை பெரியார் திடலில் பாராட்டு, வாழ்த்து, விருதளிப்பு விழாவிற்கு வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் விழா தொடங்குவதற்கு முன்பு பெரியார் திடலில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அன்னை நாகம்மையார் அரங்கத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார்.

தொண்டறச் செம்மல்களுக்குப்

பாராட்டு - வாழ்த்து - விருதளிப்பு

இதையடுத்து தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழாவையொட்டி, தொண்ணூறு வயதைக் கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு பாராட்டு - வாழ்த்து - விருதளிப்பு! காலை 10.30 மணியளவில் நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் இனமான பேரா சிரியர் க.அன்பழகன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களின் சார்பில் தோழர் சுகந்தி அவர்களும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு ஆகியோர் சிந்தனைசார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.

ஏன் அவர் பெரியார்? கருத்தரங்கம்

தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்பு கருத்தரங்கம், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி   தலைமையில் நடைபெற்றது. பொறியாளர் இ.ச.இன்பக்கனி வரவேற்றார். வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அறிமுக  உரையாற்றினார். பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்... வழக்குரைஞர் கிருபா முனுசாமி, பயன்பெற்றோர் பார்வையில்... ஊடக வியலாளர் கவிதா சொர்ணவல்லி, பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பற்றி... எழுத்தாளர் ஓவியா ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக தமிழர் தலைவர் நிறைவுரை ஆற்றினார்.

பெரியார் நினைவிடத்தில் தோழர்கள் உறுதிமொழி

கடவுள் இல்லை கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி

ஜாதியை கடவுள் உருவாக்கினார், மதத்தை கடவுள்பரப்பியிருக்கிறார்,  பெண்ணடிமையை கடவுள் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார் என்பதற்காக கடவுள் மறுப்பை, மனித நேயத்தை அனைவருக்கும் அனைத் தும் என்ற சமூக நீதியை காப்பதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் 95ஆண்டு காலம் வாழ்ந்த பெரியார் மறைந்த பிறகும், உடலால் மறைந்த பிறகும், தத்துவமாக, உலகத் தத்துவமாக உயர்ந்து நிற்கிறார்.

வெல்லும் வழி- அவர் சொல்லும் முறை எல்லா வற்றிலும், உலகளாவிய சிந்தனையாளராக நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் திகழ்ந்து ஈரோட்டுப் பெரியாராகி, உலகத் தலைவராக, கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்கும், மேலும் கீழும் அய்யிரண்டு பத்துதிசையிலும் வெல்லக்கூடிய நம் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய 140ஆவது ஆண்டு பிறந்த நாளாகிய இன்று அவர் இட்ட பணிகளை அவர்கள் போட்டுத்தந்த பாதையில், எந்தவித சபலத்திற்கும் ஆளா காமல், செய்து முடிப்போம் என்று அவருக்குப் பிறகு தலைமையேற்ற அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையில் உறுதியேற்ற நாம், இந்நாளில் அதை மேலும் புதுப்பித்துக்கொண்டு, பெரியார் பாதையில் ஆயிரம் எதிர்ப்புகள், பல்லாயிரம் ஏளனங்கள், எத்த னையோ கண்டனங்கள், அடக்குமுறைகள் எதுவந் தாலும் எதிர்நீச்சல் அடித்து அவைகளைத் துச்சமெனக் கருதி  வெற்றி பெறுவோம், பயணத்தைத் தொடர்வோம், சூளுரைப்போம், சுயமரியாதை வாழ்வு வாழ்வோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...