Wednesday, March 6, 2019

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது கொலைவெறித் தாக்குதலைத் தூண்டும் 'தினமலர்'மீது

தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்

இல்லையெனில் பின்விளைவுகளுக்குத் தமிழ்நாடு அரசே பொறுப்பு!


கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அறிக்கை


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது கொலை வெறியைத் தூண்டும் வகையில் எழுதியுள்ள தினமலர்' ஏட்டின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

'தினமலர்' வார மலரில் (3.3.2019) பக்கம் 10 இல் "அந்துமணி பதில்கள்'' என்னும் பகுதியில் கீழ்க்கண்ட கேள்வி - பதில் இடம்பெற்றுள்ளது.
கே.வெங்கட்ராமன், தென்காசி
"தன்னைத் தானே, தமிழர்  தலைவர்' எனக் கூறிக் கொள்ளும், தி.க. தலைவர், வீரமணி, இந்து மதத்தில் உள்ள, ஒரு ஜாதியை மட்டும் விடாமல் திட்டியும், மட்டம் தட்டியும் வருகிறாரே... மற்ற ஜாதிக்காரர்களைப்பற்றி, வாய் திறப்ப தில்லையே... இது ஏன்?
இவர் திட்டும் ஜாதியினர், கம்போ, தடியோ கையில் எடுக்க மாட்டார்கள் என்ற தைரியம் தான்!

அதே ஜாதிக்காரரான, வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவன் கோபம் வந்தபோது, இத்தேச விடுதலைக்காக தலைமை நின்றவரை என்ன செய்தான்... அதற்குமுன், மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆஷ் என்ற வெள்ளைக்கார, கலெக்டரை சுட்டுக் கொன்று, தானும் சுட்டு செத்தான், இதே ஜாதிக்காரன்....

இப்போது, தேர்தல்கள் நெருங்குகின்றன... இந்து மதத்தையும், அதில் ஓர் அங்கமான அந்த ஜாதியையும் எதிர்ப்பவர்கள், ஒன்று கூடி, பொதுக்கூட்டம் நடத்த வாய்ப்புள்ளது.

அப்போது, அதே ஜாதியைச் சேர்ந்த, வெறிகொண்ட இளைஞன் ஒருவன், இவர் களை, கவனிக்க' வாய்ப்பு ஏற்பட்டு விட்டால்...
எனவே, இவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.''

இதுதான் தினமலர்' வார மலரில் வெளிவந்த கேள்வி - பதில் பகுதி.
காந்தியாரை சுட்டதுபோல் சுடுவார்களாம்!

பச்சையாக கொலைவெறியைத் தூண்டும் வகை யில் வாசகங்கள் திட்டமிட்டு இடம்பெற்றுள்ளன என்பதில் அய்யமில்லை. காந்தியார் படுகொலை செய்யப்பட்டதுபோல, ஆஷ் துரை படுகொலை செய் யப்பட்டதுபோல, காந்தியாரையும், ஆஷ் துரையையும் கொலை செய்த அதே ஜாதியைச் சேர்ந்த (பார்ப்பன) இளைஞன் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியைச் சுட்டுக் கொல்லுவான் என்ற தூண்டுதல் பொருளோடு பதில் சொல்லப்பட்டுள்ளதோடு, அவ்வாறு கொலை செய்வது நியாயம் என்பதுபோல காரணங்களையும் கற்பித்துள்ளது அந்த இதழ்.

தினமலர் வாரமலர்' எழுதியுள்ள பதிலைப் பார்த் தால், இவர்கள் ஏதோ ஓர் ஏற்பாட்டோடு இருப்பதாகவே தெரிகிறது.

இப்படிப் பச்சையாக, நாடறிந்த ஒரு தலைவரை - 10 வயது முதல் 86 வயதுவரை தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று பாடுபட்டுக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவரை - தமிழர் தலைவர் என்று மக்களால் மதிக்கப்படும் தலைவரை - தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கையையும், மதிப்பையும் பெற்ற தமிழ்நாட்டின் முக்கிய தலைவரான ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்குப் பச்சையாக கொலை வெறித் தூண்டுதலை மேற்கொண்டிருக்கும் தினமலர்' ஏட்டின் உரிமையாளர், ஆசிரியர், பதிப்பாளர்களைக் கைது செய்து, சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும் என்று தமிழ்நாடு அரசை குறிப்பாக காவல்துறையை வலியுறுத்துகிறோம்.

மகாராட்டிரத்தைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கருநாடகத்தைச் சேர்ந்த கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய சமுக சீர்திருத்தவாதிகள் கொல்லப்பட்ட வரிசையில் திராவிடர் கழகத் தலை வரையும் வைத்திருக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது.

இலட்சியத்திற்காக உயிரைக் கொடுக்கத் தயார்!

இதுகுறித்து நேற்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கூறிய கருத்து முக்கியமானது. பிணி வந்து சாவதைவிட, விபத்தினால் சாவதைவிட, இலட்சியத்திற்காக உயிர் என்ற விலை கொடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதைவிட இலட்சிய வாதிக்குப் பெரும்பேறு எதுவாக இருக்க முடியும்?''
"ஜாதி, வருண தர்மம் ஒழிக்கப்படுவதற்கு என் உயிர் தேவைப்படும் என்றால், ஒருமுறையல்ல, பலமுறை சுட்டுக் கொல்லப்படுவதை விரும்புகிறேன். பார்ப்பனர்களே அதனை விரைவாக செய்யுங்கள்'' என்று புதுவையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் கம்பீரமாகவே கூறினார்.

இதற்கு முன்பும்கூட நான்கு முறை அவர் உயிருக்குக் குறி வைக்கப்பட்டதுண்டு.

கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாத ஜாதி, மதவெறியர்கள்,  வன்முறையால் சாதிக்க இருக்கிறார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. மதம் யானைக்குப் பிடித்தாலும், மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்துதானே!

அவதாரங்களை எடுத்து பூதேவர்களான பார்ப்ப னர்கள் தங்கள் எதிரிகளான அசுரர்களைக் கொன்றது தானே அவர்களின் புராண தர்மம்! அதைத்தான் இப்பொழுது கையில் எடுத்துள்ளார்கள்.

வேறு கண்ணோட்டத்தோடு தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சினையை அலட்சியமாகக் கருதிவிடக் கூடாது. உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் கொந்தளிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பொதுத் தொண்டில் ஈடுபடுகின்ற தலைவர்களுக்கே உயிருக்கு இப்படி அச்சுறுத்தல் ஏற்பட்டால்,  நமக்குப் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்ற அச்ச உணர்வுப் பொதுமக்களுக்கும் ஏற்படும் நிலை ஏற்பட்டுவிடும்.

தமிழ்நாடு அரசே பொறுப்பு!

அரசியல் கண்ணோட்டத்தோடோ - தினமலர்' மத்திய பி.ஜே.பி. அரசை ஆதரிக்கும் ஏடு என்பதை மனதிற்கொண்டோ, சட்ட ரீதியான நடவடிக்கையை தினமலர்'மீது எடுக்கத் தவறினால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்குத் தமிழ்நாடு அரசே பொறுப்பு ஏற்கவேண்டியிருக்கும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களும் இதுகுறித்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள், (தனியே காண்க!) அவர்களுக்கு நன்றி!

தமிழ்நாடு அரசு - காவல்துறை என்ன செய்யப் போகிறது? நாடே எதிர்பார்க்கிறது! - கழகத் தோழர்களும், பொதுமக்களும் அமைதி காப்பார்களாக! அதைத்தான் நமது தலைவர் விரும்புவார்; விரும்புகிறார்.

கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்  திராவிடர் கழகம்.
சென்னை
4.3.2019

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...