Monday, July 3, 2017

அரசியலில் நல்ல இளைஞர்கள் சேர்ந்து நல்ல மாற்றத்தை உருவாக்க முடியாதா?

குன்னூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பயிற்சியாளர்களின் கேள்விகளுக்குத் தமிழர் தலைவர் அளித்த விடைகள்

குன்னூர், ஜூலை 2-  ரத்தம் சம்பந்த உறவைவிட கொள்கை உறவுதான் முக்கியம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜூன் 24, 25 ஆகிய நாள்களில் குன்னூரில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிறைவு நாளான 25.6.2017 அன்று பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற பயிற்சியாளர்களின் கேள்விகளுக்குத்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார்.
அவ்விவரம் வருமாறு:
கேள்வி: நீட் தேர்வு வேண்டாம் என்று மக்களுக்கு எளிமை யாக எப்படி புரிய வைப்பது?
பூங்குழலி, கோவை மாவட்டம்
தமிழர் தலைவர்: தொடர்ந்து பொதுக்கூட்டங்கள், கருத் தரங்கங்கள் - அதோடு பிரச்சார அணியை நாம் நடத்தியிருக் கிறோம். மேலும் சிறிய புத்தகங்கள் வெளியிட்டு, கேள்வி - பதில் போன்று போட்டிருக்கிறோம். அந்த புத்தகங்களை பரப்பினாலே போதும். முதலில் நீங்கள் அதனைப் படிக்கவேண்டும். நீட் தேர்வு ஏன் கூடாது? என்பதற்கான ஆதாரமான செய்திகள் நிறைய இருக்கின்றன.
இன்றைக்கு விடுதலையில்கூட அறிக்கை வெளிவருகிறது. மாலையில் நடைபெறுகிற பொதுக்கூட்டத்திலும் நீட் பற்றித்தான் விளக்கமாக உரையாற்ற இருக்கிறேன்.
ஆகவே, இப்பொழுது எவ்வளவு பரப்ப வேண்டுமோ, அந்த அளவிற்குப் பரப்புகிறோம். உங்களுக்குத் தெரியும், மற்ற அரசியல் செய்திகளை ஊடகங்களில் பெரிதாகப் போடுவார்கள். நம்முடைய செய்திகள் என்றால், இருட்டடிப்பார்கள். அதையும் தாண்டித்தான் நம்முடைய பிரச்சாரத்தை செய்கிறோம்.
நீட் பிரச்சினைக்காக கருத்தரங்கம், மாநாடு, வாகனப் பேரணியை நடத்தியிருக்கிறோம். திரும்பத் திரும்ப நாம் எழுதிக்கொண்டிருக்கிறோம். பேசிக் கொண்டிருக்கிறோம். புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம். தொடர்ச்சியாக போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். நீட் தேர்வு நடைபெற்று விட்டதே என்று மனம் தளரவேண்டாம் - போராடுவதை நிறுத்திவிடலாமா என்று நினைக்கக்கூடாது. வெற்றி அடையும்வரை நம்முடைய போராட்டம் தொடரும்.
தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார். அதனை எதிர்த்துப் போராடிய இயக்கம் திராவிடர் கழகம்தான் - நம்மோடு திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்தது. 21 ஆண்டுகளாகப் போரடியதின் விளைவாக அதில் வெற்றி அடைந்தோம்.
அதனால், மனம் தளரவேண்டிய அவசியமில்லை. இதில் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். மக்களுக்கு சொல்வோம். முதலில் உணராத பெற்றோர், இப்பொழுது உணர்ந்துவிட்டனர்.
முதலில் இதுபோன்ற நோய்கள் எல்லாம் வரும் என்று சொன்னால், சில பேர் அலட்சியமாக இருப்பார்கள். நோய் வந்து, அந்த நோயினால் சங்கடப்படும்பொழுதுதான், அதனைத் தீர்ப்பது எப்படி என்று கேட்பார்கள். அதுபோன்று இப்போது நோய் வந்துவிட்டது; நீட் தேர்வு முடிவு வந்துவிட்டது. 25 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை. தேர்வு விழுக்காடு மிகவும் குறைவு.
பயிற்சி பெற்றவர்களால்கூட வெற்றி பெற முடியவில்லை. இன்னும் சில நாள்களில் திராவிடர் கழகம் ஒத்தக் கருத்துள்ள வர்களை எல்லாம் அழைத்து அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க உள்ளோம்.
ஆகவே, நம்முடைய பணி என்பது மிகத் தெளிவானது. நீங்கள் எல்லோரும் ‘நீட்’டைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், இந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள், உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மற்றவர்களுக்கும் கொடுங்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையில் முன்னேறக் கூடாது என்பதற்காக...
கேள்வி: மத்தியில் ஆளுகின்ற பி.ஜே.பி. அரசானது ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கையில் முன்னேறக் கூடாது என்ற ஒரே குறிக்கோளுடன் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக கல்வித் துறை. நம் மக்களுக்கு இது ஏன் தெரியவில்லை? இதை நம் மக்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது?
அன்புமதி, காரமடை
தமிழர் தலைவர்: அதாவது, நோய் வந்தது அறியாமை. அறியாமையில் இருக்கிறவர்களை அறிந்துகொள் என்று சொல்வது எளிதல்ல. மிகவும் கடினமானது.
படிப்பு சொல்லிக் கொடுப்பவர்களை எல்லாம் அடிக்கிறார் கள். இன்றைக்கு மதம் அதற்குக் குறுக்கே நிற்கிறது. பெண்கள் படிக்கக்கூடாது என்பதற்கு மதம் குறுக்கே நிற்கிறது என்றால், நோபல் பரிசு பெற்ற மலாலா எப்படி உலகம் முழுவதும் தெரியக்கூடிய அளவிற்கு வந்தார்.
தலிபான் என்கிற மதவெறியர்கள் - அவர்களுடைய மதக் கோட்பாட்டின்படி பெண்கள் படிக்கக்கூடாது என்று பெண் களைத் தடுத்தான்.
அதற்கு முன்பாக, அசல் மனுதர்மத்தில் சூத்திரர்கள் படிக்கக்கூடாது; பஞ்சமர்கள் படிக்கக்கூடாது; பெண்கள் படிக்கக் கூடாது என்று இருந்தது. ஆனால், இப்பொழுது அதெல்லாம் மாறிவிட்டது. இடைவிடாத நம்முடைய பிரச்சாரம், போராட்டத் தினால்.
அதனால்தான், திராவிடர் கழகத்தினுடைய முறை - கடி காரத்தினுடைய பெண்டுலம் இங்கும், அங்கும் நகர்ந்துகொண்டே இருப்பது போன்று பிரச்சாரம்- போராட்டம், போராட்டம்- பிரச்சாரம் என்று இப்படியே நடந்துகொண்டிருக்கும்.
நாம் நம்பிக்கை இழக்கவேண்டிய அவசியமில்லை. நன்றாக அதனை செய்யலாம். நீங்கள் எல்லாம் கொஞ்சம் அமைதியாக ஒரு செய்தியை நினைத்துப் பாருங்கள்.
தந்தை பெரியார் என்கிற தனி மனிதர், அய்யோ நம்மால் முடியுமா? என்று நினைத்திருந்தால், இன்றைக்கு இவ்வளவு பெரிய இயக்கம் - உலகளாவிய இயக்கத்தை உருவாக்கி இருக்கமுடியுமா?
நாம் இன்றைக்கு வெற்றியடைந்து கொண்டிருக்கிறோம் - அந்த வெற்றியின் எண்ணிக்கை மிக அதிகம். அதனால், நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். மக்கள் அவதிப்படும்போதுதான் அதனை உணருவார்கள்.
நாம் எல்லோரும் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கு என்ன அடையாளம்? மூக்கின் அருகே கையை வைத்துப் பார்த்தால், சுவாசிக்கிறோம். அப்படி சுவாசிக்கின்றபோது காற்றை உள்ளே இழுக்கிறோம்; வெளியில் விடுகிறோம்.
உள்ளே காற்றை இழுக்க முடியாவிட்டாலும், வெளியில் விட முடியாவிட்டாலும் அந்த மனிதன் செத்துப் போனவன் என்பதாகும்.
ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்பொழுது ஆக்சிஜனை வைத்து அவன் சுவாசிக்க உதவுவார்கள். அதனை எடுத்து விட்டால், சுவாசிக்கமுடியாது. அப்பொழுதுதான் தெரியும், பிராண வாயுவுக்கு, சுவாசக் காற்றுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை அப்பொழுதுதான் அவன் உணருவான். ஏனென்றால், அவன் அவதிப்பட்டிருக்கிறான்.
அதுபோன்று சில நேரங்களில், பொதுவாக இருக்கிறவர் - சராசரி அறிவுக்கு மேல் இருக்கிறவர் - வருவதற்கு முன் காப்பார்கள். சில பேர் வந்த பின்தான் அதனை செய்வார்கள்.
ஆகவே, நம்முடைய பணி என்பது தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும். உணராத மக்களை உணர வைக்கவேண்டும்.
நாம் 2014 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தால் என்ன நடக்கும்? என்பதை அன்றைக்கே நாம்தான் இடையறாமல் சொன்னோம்.
அன்றைக்குப் பல இளைஞர்கள், வாட்ஸ்அப் இளைஞர்கள், பேஸ்புக் இளைஞர்கள் எல்லாம், மோடி வந்தால் வளர்ச்சி வரும். வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்ப்பார்கள் என்று நினைத் தார்கள். 18 வயது முடிந்தவர்கள் எல்லாம் ஏமாந்து வாக்களித்தனர். மோடியும் ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை. வறுமைக் கோடு ஒழியவில்லை.
எனவே, நாம் மக்களை விழிப்படைய செய்யவேண்டும்; மக்கள் பெரிய அளவில் இருக்கலாம்; அதனைக் கண்டு நாம் மலைக்கவேண்டாம்; எவ்வளவு பெரிய பலூனாக இருந்தாலும், நம்முடைய குண்டூசி அதனை காலி செய்யும் என்கிற நம்பிக்கையோடு அந்தப் பணியைத் தொடருவோம்.
பகுத்தறிவினை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களே, ஏன்?
கேள்வி: கடவுள் இல்லை என்று பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தந்தை பெரியார் காலந்தொட்டு நீண்ட காலம்  செய்கிறோம். பொதுமக்கள் இன்னும் அதனை ஏற்றுக்கொள்ள மறுக் கிறார்களே, ஏன்?
பவித்ரா, கோவை
தமிழர் தலைவர்: நம்முடைய நாட்டில் நிறைய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஏராளமான மருத்துவர்கள், புதிய மருந்துகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், இன்னும் நோய் இருக்கிறது; புதிய புதிய நோய்கள் வருகின்றன. மருத் துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மருத்துவமனைகளை மூடிவிடலாம் - மருத்துவக் கல்லூரிகள் தேவையில்லை - மருந்துகள் தேவையில்லை என்று விட்டு விடுவோமா? விடமாட்டோம் அல்லவா!
ஆகவேதான், அது நடந்துகொண்டுதான் இருக்கும். நாம் செய்கின்ற பிரச்சாரத்தினால் பலன் இருக்கிறது. நோபல் பரிசு வாங்குகிறவர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்கள்தான் உலகிலேயே அறிவாளிகள். அது போன்று நோபல் பரிசை பகுத்தறிவுக்கு வாங்குகிற இயக்கம் இந்த இயக்கம்தான். அதனால் அந்தப் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே!
கேள்வி: தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையே, என்ன செய்யலாம்?
பவதாரணி, கோவை
தமிழர் தலைவர்: அதற்கு நாம் போராட வேண்டும்; ஆட்சி யின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும். ஏற்கெனவே நாம் சொல்லி கலைஞர் ஆட்சிக் காலத்தில், சமச்சீர்கல்வி. தனியார் பள்ளிகளில் கட்டாயம் தமிழ் மொழியை சொல்லிக் கொடுக்கவேண்டும் என்கிற ஆணையைப் போட்டிருக்கிறார்கள். பல பள்ளிகள் அந்த ஆணையைக் கடைபிடிப்பதில்லை. ஆகவே, நாம் அதனை அந்தப் பள்ளிகள் செயல்படுத்துவதற்குப் போராடுவோம். தமிழ் மொழி படிக்காமல் தமிழ்நாட்டில் பட்டம் வாங்குகிற நிலையைப் போக்கவேண்டும்.
தாய்மொழி நம்முடைய மொழி. நம்முடைய பண்பாட்டி னுடைய மிகப்பெரிய நுழைவு வாயில். ஆகவே, அதனைக் காப்பாற்றுவதற்கு அந்தப் பருவத்தில் திராவிடர் கழகம் முயற்சி களை எடுப்பதில் சளைக்காது, பின்வாங்காது.
ஜாதி மறுப்புத் திருமணத்தால் மட்டும்
ஜாதி ஒழிந்துவிடுமா?
கேள்வி: ஜாதி மறுப்புத் திருமணத்தால் மட்டும் ஜாதி ஒழிந்துவிடுமா? வேறு என்னென்ன வழிகளில் ஜாதி ஒழியும்?
அறிவுமணி, காரமடை
தமிழர் தலைவர்: அதற்குத்தான் தந்தை பெரியார் சொன்ன கருத்து. ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால் மட்டுமே ஜாதி ஒழியாது. ஆனால், ஜாதியை ஒழிக்க மட்டுமே என்று நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். ஒழியவேண்டும் என்று ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்.
நோய் நாடி, நோய் முதல்நாடுவதற்கு அய்யா என்ன சொன்னார், கீழ்ஜாதிக்காரனை தொடக்கூடாது என்று இருந்த நிலை மாறி, இப்பொழுது தொடக்கூடாது என்று சொன்னால் தண்டனை என்று இருக்கிறது. அதுபோன்ற நிலை வந்தாகி விட்டது. இன்றைக்குப் பெரிய மாறுதல்கள் வந்திருக்கின்றன. என்றாலும், இன்னும் அந்தப் பழைமை மனப்பான்மை இருக்கிறது.
ஆகவேதான், அய்யா என்ன சொன்னார் என்றால், ஜாதிப் பாம்பை அடித்தேன். வைக்கத்தில் ஆரம்பித்து, சேரன்மாதேவி குருகுலத்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக் கூடாது என்று சொன்னார்கள்; அதைப்பற்றியெல்லாம் சொல்லியிருப்பார்கள் உங்களுக்கு. பிறகு அந்த வித்தியாசம் எல்லாம் மாறியது. இப்படி வளர்ந்து எல்லாம் வந்தாலும், அந்த ஜாதிப் பாம்பு மிகவும் பாதுகாப்பான இடத்தில் சென்றிருக்கிறது. அது எந்த இடம் என்றால், கோவில் கருவறை.
தாழ்த்தப்பட்ட ஒருவர் இப்பொழுது குடியரசுத் தலைவர் வேட்பாளராகி இருக்கிறார். அவருக்குப் போட்டியாக இன் னொரு தாழ்த்தப்பட்ட வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இரண்டு தாழ்த்தப்பட்டவர்களைப் போட்டி போடக்கூடிய அளவிற்கு எல்லா கட்சியினரும் அவர்களைத் தேடிப் பிடித்தி ருக்கிறார்கள் பாருங்கள், அதுவே பெரியாருக்குக் கிடைத்த வெற்றி! அதுவே நம்முடைய இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி.
பெரியார் வடபுலங்களில் பயணம் செய்திருக்கிறார். ஆனா லும், தாழ்த்தப்பட்ட ஒருவர் அய்.ஏ.எஸ். அதிகாரியாக முடிகிறது; உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆகமுடிகிறது; குடியரசுத் தலைவராக ஆக முடிகிறது. ஆனால், அர்ச்சகராக முடியவில்லை.
அய்.ஏ.எஸ். பதவியைவிட, குடியரசுத் தலைவர் பதவியை விட அர்ச்சகர் பதவி பெரிய பதவியா?
குடியரசுத் தலைவரே, சட்டையைக் கழற்றிக்கொண்டு அர்ச்சகரின் முன் நிற்கிறார்.
அந்த அளவிற்கு வந்திருக்கிறது என்றால், அதற்கு என்ன காரணம்? கருவறைக்குள் இருக்கிற ஜாதிதான்.
அதற்காகத்தான் தந்தை பெரியார், கடவுளை மற என்றார். கடவுள் கருத்தினால்தான்,  ஜாதியைக் காப்பாற்றுகிறார்கள். கடவுள், மதம், ஜாதி, புராணம், சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற் றையும் மாற்றி, கடைசியில் எங்கே வந்தார் பெரியார் என்றால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்.
எனவேதான், எல்லா முயற்சிகளையும் செய்தால்தான் ஜாதி ஒழியும். சில பேர் கேட்பார்கள், நாம் இவ்வளவு பாடுபட்டு ஜாதி ஒழியவில்லையே என்று.
திடீரென்று தூக்கிப் போடுகிற விஷயமா ஜாதி. அது மனதிற்குள் புகுந்துகொண்டிருக்கிறது. அதனை வெளியேற்ற வேண்டும். அதுவும் எவ்வளவு காலமாக இருக்கிறது. அய்யா யிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது.
எவ்வளவு பெரிய பாதுகாப்போடு ஜாதி இருக்கிறது - சாஸ்திர பாதுகாப்பு, கடவுள் பாதுகாப்பு, மத பாதுகாப்பு, அரசாங்கப் பாதுகாப்பு, சட்டப் பாதுகாப்போடு இருக்கிறது. ஆகவே, இதை யெல்லாம் தாண்டி நாம் அதனை ஒழிக்கவேண்டும் என்று சொன்னால், நம்முடைய இயக்கம் ஆரம்பித்து எவ்வளவு ஆண்டுகளாகின்றன. நூறு ஆண்டுகள். இதில் நமக்கு பல இடைஞ்சல்கள். நமக்கு விளம்பரங்கள் கிடையாது. அப்படியி ருந்தும் நாம் இந்த அளவிற்கு வெற்றி பெற்று இருக்கிறோம் என்றால், நிச்சயமாக எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
ஏன் ராமனைப்பற்றி பேசுகிறோம், ஏன் கிருஷ்ணனைப்பற்றி பேசுகிறோம், ஏன் கடவுள்களைப்பற்றி பேசுகிறோம், ஏன் இந்து மதத்தைப்பற்றி பேசுகிறோம்? சில பேர் சொல்வார்கள், இந்து மதத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறோம் என்று.
அப்படியில்லை. எங்கே ஜாதியிருக்கிறதோ, எங்கே நோய் இருக்கிறதோ, அதற்கு சிகிச்சை அளிக்கிறோம். எங்கே குப்பை கள் இருக்கிறதே, அங்கே பெருக்குகிறோம். எங்கே இழிவு இருக்கிறதோ, அதனை நீக்கவேண்டும் என்று நினைக்கிறோம்.
ஆகவே, நாம் தொடர்ந்து அதற்காகப் போராடிக் கொண்டி ருக்கிறோம். கலப்பு மணம் என்று சொல்லக்கூடிய ஜாதி மறுப்புத் திருமணத்தினால் மட்டும் ஜாதி ஒழியாது என்பது உண்மை. மற்ற முயற்சிகளையும் செய்யவேண்டும். அந்த முயற்சிகளில் திராவிடர் கழகம் மிகவும் குறியாக இருக்கிறது, ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அரசியல் மாற்றத்தை இளைஞர்கள் உருவாக்கலாமே!
கேள்வி: அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுக்காமல், அரசியலில் கொள்கை உள்ள இளைஞர்கள் சேர்ந்து, ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்கலாம் அல்லவா?
பிரபாகரன், கோவை
தமிழர் தலைவர்: அதற்காகத்தான் திராவிடர் கழகம் அடையாளம் காட்டுகிறது - இவர்களை தேர்ந்தெடுங்கள் என்று அடையாளம் காட்டுகிறோம். நாம் ஒன்றும் ஒதுங்கிப் போகவில்லையே. யார் வேண்டுமானாலும் வெற்றி பெறட்டும் என்று நினைப்பதில்லையே! ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள். பொதுக்கூட்டத்தில்கூட அதனை சொல்வோம், அந்தப் பழமொழியை மற்றவர்கள் சொல்வார்கள், திராவிடர் கழகம் அப்படி இருக்காது.
ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று அலட்சியமாக இருக்காது திராவிடர் கழகம். அதற்குப் பதிலாக, ராமன் ஆட்சியாக இருந்தால், அதனை ஒழிப்போம். ராவணன் ஆட்சியாக இருந்தால், அதனைக் காப்பாற்றுவோம் என்போம்.
கோவில்களை அதிகமாகக்
கட்டிக் கொண்டு இருக்கிறார்களே!
கேள்வி: கோவில்களை அதிகமாக கட்டிக்கொண்டே இருக்கிறார்களே, அதற்கு என்ன காரணம்?
பிரகாஷ், மேட்டுப்பாளையம்
தமிழர் தலைவர்: முட்டாள்தனம்தான் அதற்குக் காரணம். சில பேருக்கு பிடித்த ஆசை காரணம்; அறியாமை காரணம். இரண்டாவதாக, தவறு செய்கிறவன் அதிகமாகி இருக்கிறார்கள் என்று அர்த்தம். ரொம்ப பக்தியாக இருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்? அயோக்கியப் பயல் என்று அர்த்தம். அதனை மூடி மறைப்பதற்குத் தயாராக இருக்கிறான் என்று அர்த்தம்.
அதற்கு மதங்களில் மிகவும் வசதியாக வைத்திருக்கிறார்கள். எப்படி என்றால், ஒரு மதத்துக்காரர் சொல்கிறார், நீங்கள் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வந்து பூஜை செய்து, உண்டி யலில் காசு போட்டுவிட்டால், இந்த வாரம் செய்த பாவம் முழுவதும் போய்விடும் என்கிறார்.
இன்னொரு மதத்துக்காரர் சொல்கிறார், வியாழக்கிழமை பாத்தியா ஓதினால், உங்கள் பாவம் போய்விடும் என்கிறார்.
இன்னொருவர் சொல்கிறார், ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் நீங்கள் வந்து பாவ மன்னிப்பு வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வார். திங்கள் கிழமையிலிருந்து செய்கின்ற பாவம் அடுத்த வாரக் கணக்கில் போகும், அதனால் நீங்கள் தாராளமாகப் பாவம் செய்யலாம்.
இன்னொருத்தர் வருகிறார், நம்மாள் - அர்த்தமுள்ள இந்து மதம் பாருங்கள் - இப்படி சில்லறை சில்லறையாகப் பாவத்தை கழிக்கவேண்டாம் - 12 ஆண்டுகள் செய்கின்ற பாவங்களை சேர்த்து வைத்துக்கொண்டு, மகாமகம் என்கிற மூத்திரக் குளத்தில் மூழ்கி எழுந்தீர்கள் என்றால், எல்லா பாவங்களும் போய்விடும் என்கிறார்.
இப்படி ஒழுக்கக்கேட்டிற்கு உரிமம் கொடுத்துவிட்டால், எப்படி அவன் ஒழுங்காக இருப்பார்கள்.
இவ்வளவு பாவிகள் இருக்கிறார்கள், இவ்வளவு திருட்டுப் பயல்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சாமி சிலை திருடுகள் நடைபெறும்.
கோவில்கள் இருந்தால்தான் அங்கிருக்கும் சிலைகளைத் திருடுவதற்கு வசதியாக இருக்கும்.
புரடெக்ஷன் - இவன் கோவிலை உண்டாக்குவது
கன்சக்ஷன் - நுகர்வோர் யார் என்றால், முட்டாள் பயல் போன்று கீழே விழுந்து எழுந்திருக்கிறான்.
டிஸ்ரிபியூசன் - வெளிநாடுகளுக்கு அந்தச் சிலைகளைக் கடத்துகிறார்கள்.
திருடியே ஒரு கோவில் கட்டியிருக்கிறான் ஒருவன் - தண்டனை பெற்று சிறையில் உள்ளான்.
நேற்று வந்த ஒரு செய்தி என்னவென்றால், மரகதலிங்கத்தைத் திருடியிருக்கிறார், அதனுடைய மதிப்பு 2 கோடி ரூபாயாம்.
உலகத்திலேயே லிங்கத்தை கடவுளாக்கியவன் இவன்தான்; கும்பிடுகிறவனும் இவன்தான்; அதனை ஏற்றுமதி செய்கின்ற வனும் இவன்தான்.
அதனால் தொழில் ரீதியாக இருப்பதினால், சில பேருக்கு அந்த முகத்திரை தேவை - சில பேருக்கு மயக்க மருந்து தேவை - சில பேருக்கு ஏமாற்றுவதற்கு பிசினஸ் தேவை - இவை எல்லாவற்றிற்கும் கடவுள் தேவை.
ஆகவேதான், காந்தியார் சொன்னார், கோவில்கள் என் பவை விபச்சார விடுதிகள் என்று.
இயேசு நாதர் சொன்னார், கோவில்கள் என்பது திருடர் களுடைய குகை என்று. இப்படி சொல்லிவிட்டு, அவர் திருடர் களுடைய குகையை அதிகப்படுத்திக் கொண்டு போகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? திருட்டுப் பயல்கள் அதிகமாகி இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
கோவில்கள் விபச்சார விடுதிகள் என்றார்களே - அதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன்: ஏரி காத்த இராமர் கோவில் என்கிற கோவிலில், ஒரு பெண்ணை பாலியல் வன் முறைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். காஞ்சிபுரம் தேவநாதன் அர்ச்சகன் கருவறையில் பெண்களிடம் தவறாக நடந்தது ஊரறிந்த விஷயம்.
லாட்ஜில் விபச்சாரம் நடந்தால் காவல்துறையினர் பிடிப்பார் கள்; காரில் விபச்சாரம் நடந்தால் எட்டிப் பார்த்து கண்டுபிடித்து விடுகிறார்கள். மிகவும் பாதுகாப்பான இடம் எதுவென்றால் விபச்சாரத்திற்கு கடவுள் இருக்கிற கருவறை.
காஞ்சிபுரத்தில்தான், பெரியவாள், பழைய பெரியவாள், புதிய பெரியவாள், சின்னவாள், அவாள், இவாள் எல்லாம் இருக்கிற இடம்; இவ்வளவு அவாளும் இருக்கிற ஊரில், இவ்வளவு அசிங்கம் நடந்திருக்கிறது. அதனால், விபச்சாரத்திற்குப் பாதுகாப்பான இடம் எது கோவில். அதனால்தான், புதிது புதிதாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கவேண்டும் என்றால், அதற்காக உரிமம் பெறவேண்டும். கோவில் கட்டுவதற்கு உரிமம் தேவையில்லை. முட்டுக்கல்லை வைத்தால் போதும்.
செங்கல் வண்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அதிலிருந்து கீழே விழுந்த இரண்டு செங்கலை எடுத்து சாலையில் ஓரத்தில் போடுவதைவிட்டுவிட்டு, அதனை நட்டு வைத்து, அதன்மேல் கொஞ்சம் மஞ்சள், குங்குமத்தைத் தடவி, ஒரு எலுமிச்சை பழத்தை வைத்தால், ஒருவன் சுற்றி வருவான், ஒருவன் பத்து பேராவான், பத்து பேர் நூறு பேராவான், நூறு ஆயிரம் பேர் ஆவான். கொஞ்ச நாள் கழித்து அங்கே ஒரு உண்டியலை வைத்து வசூல் செய்வார்கள்.
கொஞ்ச நாள் கழித்து, இந்த செங்கலீஸ்வரனிடம் சென்றால், கல்லூரியில் இடம் கிடைத்துவிடும்; நீட் தேர்வில் பாசாக வேண் டுமா? செங்கலீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள் என்பார்கள்.
எனவே, இந்த அறிவு பலவீனம் - ஆகவே, கோவில்கள் என்பது மயக்க பிஸ்கெட்டு. பல பேருக்கு அது வருமானம். அத்தனை வசதியும் அங்கேதான் இருக்கிறது. காவல்துறை யினரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். நடு ரோட்டில் குடிசை போட்டால் விடமாட்டார்கள்; ஆனால், நடு ரோட்டில் கோவில் கட்டுங்கள், அவரே ஒரு கும்பிடு போட்டுச் செல்வார். ஆகவே, இத்தனைக் கோளாறுகளுக்கும் அது இடமாக இருக்கிறது.
பெரியாரை உலகமயமாக்க
என்ன செய்யவேண்டும்?
கேள்வி: பெரியாரை உலகமயமாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
ஜூனிதா தேவி, வெள்ளக்கோவில்
தமிழர் தலைவர்: உலக மயமாகிக் கொண்டிருக்கிறார் பெரியார். அதனுடைய அடையாளம்தான் அடுத்த மாதம் ஜூலையில் ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகமும் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் - பெரியார் பன்னாட்டமைப்பு ஆகியவை இணைந்து, பெரியார் சுயமரியாதை மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலிருந்து 50 பேர் செல்கிறோம். உலகின் பகுதியிலிருந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் நாம் கும்மிடிப்பூண்டியை தாண்டியது கிடையாது. ஆனால், உலகளாவிய நிலையில் இருப்பதினால் தான், யுனெஸ்கோ பெரியாருக்கு விருது அளித்தது.
ஆகவேதான், பெரியாரை உலகமயமாக்கும் பணி என்பது இருக்கிறதே, அது மிகவும் சிறப்பானது. யாருடைய தத்துவமும், உதவியும் இல்லாத அளவிற்கு தந்தை பெரியார் உலகமயமாகி வருகிறார். காரணம், பெரியாருடைய தத்துவம் என்பது ஒரு சமூக விஞ்ஞானம். விஞ்ஞானத்தை யாரும் பரப்புவதற்காக முயற்சி எடுப்பதில்லை.
விஞ்ஞான கண்டுபிடிப்பான செல்போனை வாங்குங்கள், வாங்குங்கள் என்றா சொல்கிறார்கள். யாரோ ஒரு இரண்டு பேர் வாங்கினால், பத்து பேர் வாங்குகிறார்கள். இன்றைக்கு செல்போன்களுக்கு டிமாண்ட் இருக்கிறது.
அதுபோன்று பெரியார் என்பது சமூக விஞ்ஞானம் - எதிர்காலத்தில் பெரியார் உலகமயமாவது என்பது விஞ்ஞானம் எப்படி சமூகத்தில் பரவியிருக்கிறதோ, அது போன்றதே!
கடவுளைப் புகுத்தாமல்
இருந்திருந்தால்...
கேள்வி: கடவுள் என்கிற ஒரு பொருளை நம்மிடம் பார்ப்பனர்கள் புகுத்தாமல் இருந்திருந்தால், நம் நாடு எப்படி இருந்திருக்கும்?
தமிழ்அமுதன், கோவை
தமிழர் தலைவர்: உலகத்திலேயே நம்பர் ஒன் நாடாக நம் நாடு இருந்திருக்கும். இந்தக் கேள்வியை கேட்டவரை மிகவும் பாராட்டுகிறேன் நான். எப்படி என்றால், இதே கருத்தினை அய்யா எழுதியிருக்கிறார்.
நாசமா போன பசங்க, இந்தக் கடவுள் என்கிற ஒரு மூட நம்பிக்கையைப் புகுத்தாமல் இருந்திருந்தால், நம்மாள்தான் பெரிய ஆளாக இருந்திருப்பார்கள். குறுக்கே வந்து கடவுள் சேர்ந்ததினால், முழுவதுமாக நமக்கு ஒரு பெரிய இடைஞ்சலாகி, இன்னமும் அந்த மயக்கம் பல ரூபங்களில் வருகிறது.
இந்து என்ற வார்த்தைக்குப்
பொருள் என்ன?
கேள்வி: இந்து என்கிற வார்த்தைக்கு என்னென்ன பொருள்?
பொன்னையன், சேலம்
தமிழர் தலைவர்: திருடன் என்று ஒரு பொருள். மோசமானவன் என்று இன்னொரு பொருள். இந்து என்கிற வார்த்தை இருக்கிறது பாருங்கள், இறையனார் அவர்கள் தொகுத்த ஒரு சிறிய புத்தகம் இருக்கிறது, அதனை வாங்கிப் படியுங்கள். அதில் மிக அழகாக அத்தனையையும் தொகுத்து சொல்லியிருக்கிறார்.
இந்து என்று நாம் பெருமையாக சொல்லிக் கொள்கிற விஷயம் அல்ல. சூத்திரன் என்று சொல்வதை ஒரு காலத்தில் பெருமையாக நினைத்தோம். அதுமாதிரி இது, வெளி நாட்டுக்காரன் வந்தான் பாருங்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள் வெறுப்பான வார்த்தையை சொல்லவேண்டும் என்பதற்காக, இங்கே இருந்த மக்கள் இவர்களுக்குக் கொடுத்த பெயரே தவிர, அதற்கு உண்மையான ஆரம்பப் பெயர் இது கிடையாது.
ஆரம்பப் பெயர் ஆரியர்களுடைய சனாதன மதம், வேத மதம், ஆரிய மதம், பார்ப்பனீய மதமே தவிர இந்து என்கிற பெயர் கிடையாது. இது உயர்நீதிமன்றத் தீர்ப்புகளிலேயே உறுதியாயிற்று.
நம் அமைப்பினுடைய நடைமுறை குறித்து விளக்கம் தேவை?
கேள்வி: நவீன தொழில்நுட்பங்கள் உள்ள இன்றைய சூழலில், நம்முடைய அமைப்பினுடைய நடைமுறை குறித்து விளக்கம் தேவை?
நதீம், கோவை
தமிழர் தலைவர்: அதற்காகத்தான் நம்முடைய அமைப்பு களில் இப்பொழுது இணையம் - பெரியார் வலைக்காட்சி போன்றவைகளை செய்து கொண்டிருக் கிறார்கள். அது விரிவாகிக் கொண்டே இருக்கும். இணையம், தகவல் தொழில்நுட்பத் தொடர்பு என்பதற்காக ஒரு தனி செயலாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் இயக்கத்தில்.
நிறைய இளைஞர்கள், வேலை வாய்ப்பு இல்லை என்று நினைக்கின்ற கணினிப் பொறியாளர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். உங்களில் யார் யாருக்கு விருப்பம் இருக்கிறதோ, அவர்கள் தாராளமாக தலைமைக் கழகத்தினரோடு தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் உண்டு.
இணையத்தின் மூலமாக நாம் நிறைய பணிகளை செய்துகொண்டிருக்கிறோம். அதேபோன்று நீங்களும் வாட்ஸ்அப், டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் நியாயமான வார்த்தைகளைப் பதிவு செய்யுங்கள் - கொள்கைகளைப் பரப்புங்கள் -அதற்காக அவைகளைப் பயன்படுத்துங்கள்.
ஆனால், தவறான பரப்புரையை செய்யாதீர்கள். இரண்டாவதாக, கொள்கைகளுக்கு விளக்கம், சந்தேகத்தை யாராவது கேட்டால், நீங்களே பதில் சொல்லி, சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் சில நேரங்களில். உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தால், விளக்கம் சொல்லுங்கள். அப்படி தெரியவில்லை என்றால், தலைமைக் கழகத்தோடு தொடர்பு கொண்டு கேளுங்கள், அதற்கு விளக்கம் சொல்வார்கள்.
ஆகவே, உங்களுக்கு இருக்கின்ற வாய்ப்புகளை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்துங்கள்.
இனிமேல் எதிர்காலம் இந்தத் துறையில் இருப்பதினால், திராவிடர் கழகம் முன்னுரிமை கொடுத்து, அதற்கான பணியை செய்யும்.
உங்கள் கேள்விகளுக்கு நன்றி!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார்.

சட்டம் ஒரு இருட்டறை

நடு இரவில், நாடு முழுமைக்கும் ஒரே வரி எனும் ஆணையை நிறைவேற்ற மோடி அரசு முடிவு செய்து,  நேற்று இரவு, நாடாளுமன்றத்தில் கோலாகலமாக கொண்டாடி ஆணை பிறப்பித்துள்ளனர். வரியை அதிகரிக்கவும், மாநிலங்களை தங்களிடம் நிதி கேட்கும் பிச்சைக்காரர்களாக ஆக்கவும் ஒரு சட்டம். அதற்கு கோலாகலம். இந்த நாட்டில் தான் நடக்கும். அதில் பேசிய நமது பிரதமர் மோடி, இந்த வரி, ஏழைகளின் துயரைத் துடைக்கும்; கருப்புப்பணத்தையும், ஊழலை யும் ஒழிக்கும் என்றார்.
இதே வசனம், சில மாதங்களுக்கு முன்னர், உயர் பண மதிப்பு நீக்கம் செய்து, சாமான்ய மக்களை நடுத்தெருவில் அலையவிட்டபோதும் சொன்னார். அந்த சட்டமும் நள்ளிரவில்தான் அமலானது. ஆனால், நாம் கவலைப்படாமல், உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தலில், மோடிக்கு வாக்களித்த மக்கள் இன்று, உணவைச் சாப்பிட்டாலும் சரி, எடுத்துச் சென்றாலும் சரி, அல்லது, ரயிலில் பயணம் செய்தாலும் சரி, உதைப்பட்டு, சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இப்போது நாடு முழுவதும், வியாபாரிகள், நெச வாளர்கள், பட்டாசு தொழில் செய்வோர், மோடி அரசின், ஏக இந்தியா, ஏக வரியை எதிர்த்து போராடுகின்றனர். கருப்புக்கொடியை ஏற்றுகின்றனர்.
சரியாக, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், இதே போன்று நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் கூடி, 'ஆனந்தம் சுதந்திரம்' அடைந்ததை, பள்ளு பாடினர். இனிமேல் எங்கும் ஆனந்தம் என்று கொண்டாடினர்.
தெற்கே ஒரே ஒரு குரல், இதனை எதிர்த்து முழுக்க மிட்டது. இது நமக்கான சுதந்திரம் இல்லை; ஆங்கிலேய வெள்ளையனிடமிருந்து, பார்ப்பன கொள்ளையனுக்கு எழுதித்தரப்பட்ட மாற்றுப் பத்திரம். இது நமக்கு துக்க நாள் என அறிவித்த அந்த மகத்தான தொலை நோக் காளர் நம் புரட்சியாளர் தந்தை பெரியார். அனைவரும்  கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவியுங்கள். அன்று அவரை ஏளனம் செய்தவர்கள், இப்போது உணர் கிறார்கள்.
சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாகுமா? என்றும் கேள்வி எழுப்பினாரே அந்த சிந்தனைச் சிற்பி. இதுவரை நேர்மையான பதில் உண்டா?
இன்று நாம் அன்றாடம் உணர்கிறோம். பெரியாரின் கருத்து இன்றும் எவ்வளவு உண்மையாக நடக்கிறது என்பதை அன்றாடம் அனுபவிக்கிறோம். அடுத்து மோடி அரசு, ஒரே மொழி, ஒரே தேர்வு என்பதையும் நடை முறைப்படுத்தப் போகிறது. நாம் வேடிக்கைப் பார்க்க போகிறோமா? அல்லது கிளர்ந்தெழுந்து போராடப் போகிறோமா? என்பதை நடு இரவில் படுத்துக் கொண்டு யோசிக்காமல், கண் விழித்திருக்கும் போதே யோசிப்போம்.
 குடந்தை கருணா
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மேடைப் பேச்சு குறித்து பெரியார்

சுற்றுப்பயணத்தின் போது சேலம் செவ்வாய்ப்பேட்டை சுயமரியாதைச் சங்கத்தில் மேடைச் சொற்பொழிவுக் கழகத் துவக்க விழாவில் தலைமை வகித்துப் பேசிய தந்தை பெரியார், மேடைப் பேச்சுக்கு வகுத்துக் கொடுத்த இலக் கணம் இதில் பேச்சு எப்படி இருக்க வேண்டும். பேச் சாளனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் குறித்து ஒரு சுவையான விளக்கம் அளித்தார். சுவை மிக்க தந்தை  பெரியாரின் சொற்பொழிவு இலக்கணப் பேச்சு இது:
இளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமே யாகும். சென்னையிலும் மற்ற நகரங்களிலும் இம்மாதிரி பயிற்சிக் கழகம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. மேல் நாட்டிலும் இம்மாதிரி கழகங்கள் (டிபேடிங் சொசைடி) ஒவ்வொரு சிறு கிராமத்திலும் இருந்து கல்வி துறையில் வேலை செய்து வருகின்றன.
பேசப் பழகுவோர் எதையும் சிந்தித்துப் பேச வேண்டும். கேட்பவருடைய சிந்தனையைக் கிளரும் விதத்தில், தான் எடுத்துச் சொல்லும் கருத்துகள் அவர்கள் மனதில் நன்கு பதியும் விதத்தில் பேச வேண்டும் சிந்தனையற்ற பேச்சு பிறர் சிந்தனையைத் தூண்டாத பேச்சு எவ்வளவு அழகாக அடுக்காக இருந்தாலும் ஒரு போதும் நல்ல பேச்சாகாது. அதனால் ஒரு பயனும் விளையாது.
பேச்சின் மூலம் நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் சாதிப்பதே பேச்சுத் திறமை என்று சிலர் நினைக்கலாம். பேச்சுக்கு அந்த திறமையுண்டு என்றாலும் அந்தப்படியான பேச்சு பேசுவதில் இளைஞர்கள் பழகக் கூடாது. பழக ஆசைப்படவும் கூடாது. திரித்துக் கூறுவதில் சாதுர்யம் காட்டுதல் என்பது விரும்பக் கூடாததாகும். வெறுக்கத்தக்கதாகும் தவறுமாகும். அது கெட்டிக்காரத் தனமாகுமே தவிர யோக்கியமோ, நாணயமோ ஆகாது.
சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக பேச்சை ஒரு தொழிலாக ஜீவன் மார்க்கமாக வைத்திருக்கிறார்கள். உதாரணமாக அப்படிப்பட்டவர்களை தேர்தல் சமயத்தில் பார்க்கலாம். யார் யார் தம்மைக் காசு கொடுத்து அழைக்கிறார்களோ, அவர்களுக்காகப் பரிந்து பேசி, எதிரிகளை குறை கூறி கண்டபடி வைவார்கள். தங்களுக்குக் கூலி கொடுத்தவர் களைப் புகழ்வார்கள். அந்தப் படியான பேச்சாளியாவதற்கு இளைஞர்கள் விரும்பக் கூடாது. நல்ல யோக்கியமான பேச்சாளி தனது பேச்சுக்களை அப்படிப்பட்ட காரியத் துக்குப் பயன்படுத்த மாட்டான்.
பொதுநலத் தொண்டுக்காகப் பேசப் பழகுவதுதான் விரும்பக் கூடியதாகும். போற்றக்கூடியதுமாகும். நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லவே இளைஞர்கள் பழக வேண்டும். மக்களை நல்வழியில் திருப்பக்கூடிய நல்ல கருத்துகளையே எடுத்து சொல்ல வேண்டும். நல்ல கருத் துகளை எடுத்துக் கூறி - உண்மையைக் கூறி - குறைப் பாடுகளைக் கூறி - உண்மை தேவைகளைக் கூறி மக் களைத் தன்வயப்படுத்துவோனே நல்ல பேச்சாளியாவான்.
சிலர் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தாம் பேச எடுத்துக் கொண்ட விஷயத்தை மறந்துவிட்டு பெரு மையை எடுத்துக் கூறுவதில் ஈடுபட்டு விடுவார்கள். பண்டிதர்களில் வெகுவாசி பேர் அப்படித்தான். சிலர் தம்மை மக்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்வதற் கென்றே, தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கென்றே பொதுக் கூட்டங்களில் பேச முன்வருவார்கள். அத்தகை யோருக்கு கொள்கை பற்றிய கவலையே இராது. பேசச் சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என்று துடியாய்த் துடிப்பார்கள். சிலர் எதைப் பேசினால் சிரிப்பு வருமோ, அதையே பேசுவார்கள். தாம் பேச வேண்டும், மக்கள் அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் விஷயம் உண்டோ, இல்லையோ அது பற்றிக் கவலையில்லை. சிலர் எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டுவிட்டு தமக்கு யார் விரோதியோ அவரை வைய அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். சிலர் யாரையாவது புகழ்ந்துக் கூறி பலன் பெறவே பேச்சைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இத்தகைய பேச்சாளிக ளெல்லாம் விரும்பக் கூடாத பேச்சாளிகள் ஆவார்கள்.
எடுத்துக்கொண்ட விஷயத்தை விட்டு விலகாமலும், சம்பந்தமில்லாத சங்கதிகளை அதில் கொண்டு வந்து புகுத்தாமலும் அனாவசியமாக பொருளற்ற சொற்களால் நீட்டாமலும் பேசுவதுதான் நல்ல பேச்சாகும். அப்படிப் பேசுவது சிறிது கஷ்ட மாகத்தான் இருக்கும் என்றாலும் அந்தப் படி பேசப் பழகுவதுதான் நலமாகும். பேசுவதில் ஒரு சொல்லை எடுத்து விட்டாலும் கருத்து கெட்டு விடும்படியாகவும், ஒரு சொல்லை சேர்த்தாலும் மிகுதி யாகும் படியாகவும் நிறுத்தி அளவறிந்து பேச வேண்டும்.
அடுக்கு அடுக்காகப் பேச வேண்டுமென்றும், அலங் காரமாய்ப் பேச வேண்டுமென்றும், மோனை எதுகையாய் பேச வேண்டுமென்றும், சிலர் இன்னும் ஆசைப்படு கிறார்கள். இதற்கு ஆக பல கருத்துகளையும் பல பயனற்ற சொற்களையும் கொண்டு வந்து குவித்தும், எடுத்துக் கொண்ட பொருளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்து பாழாக்குகின்றனர்.
இந்த நோய் இன்று மாணவருக்கு அதிகம் உண்டு என்றாலும் இது பேச்சுக்கு வந்த பெருநோய் என்றே நான் சொல்லுவேன். அலங்காரமாகவும், அடுக்கடுக்காகவும் பேச விரும்புவோன் அடுத்து வரும் வார்த்தை எதுவாயிருந்தால் அலங்காரமாய் இருக்கும் என்று யோசிக்கும்போதே கருத்து வேறு பக்கம் ஓடிவிடும். அது பேச்சின் பலனையே கெடுத்துவிடும்.
சிலர் பேச ஆரம்பித்து விட்டால் மக்கள் தமது பேச்சை விரும்புகிறார்களோ, இல்லையோ பேசிக்கொண்டே இருப் பார்கள். தலைவர் நிறுத்தும்படி ஜாடை காட்டினால்கூட நிறுத்த மாட்டார்கள். கையைப் பிடித்து இழுத்து உட்கார வைக்கும் வரையில் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
பேச்சுக்கு ஒரு நோய் வருவதுபோல் பேச்சாளர்களுக்கும் ஒரு நோய் வருவதுண்டு. அந்த நோயில் 100க்கு 95 பேச்சாளிகளுக்கு மேல் சிக்கிக் கொண்டு விடுவார்கள். அந்த நோய் வந்தால் அதிலிருந்து அவர்கள் தப்பவே மாட்டார்கள். நாலு வார்த்தைகள் காதுக்கினி மையாய் பேசத் தெரிந்து விட்டால் போதும். ஒரு நாலு கூட்டங்களில் பேசிவிட்டால் போதும். நாலைந்து தடவை கூட்டத்தில் உள்ள மக்களின் கை தட்டல்கள் கிடைத்து விட்டால் போதும். உடனே தன்னை பேச்சில் வல்லவன் என்று நினைத்துக் கொண்டு, தனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, இனி அடுத்தபடியாக நான் ஒரு தலைவன் ஆகவேண்டும் என்று தோன்றும். இந்த நோய் வந்தவர்கள் 100க்கு 90 பேர் உருப்படுவதில்லை. அநேகர் அந்த எண்ணம் கொண்டதன் பயனாய் அடைந்த தோல்வி யால் பொது வாழ்க்கை விட்டே விலக வேண்டி ஏற்பட்டு விடும். அந்த ஆசையும் அப்படிப்பட்ட நினைப்பும் பேச்சாளன் ஒருவனுக்கு வரவே கூடாது.
தன் பேச்சை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிற நினைப்பால் தலைவனாக ஆகிவிட வேண்டும் என்று நினைப்பவன் உண்மையில் பைத்தியக்காரனே ஆவான். தன்னைத் தற் கொலை செய்து கொள்பவனேயாவன். பேச் சுக்கும் தலைமைப் பதவிக்கும் சம்பந்தம் கிடையாது; சம்பந்தம் வைக்கவும் கூடாது.
தலைமைத் துறை வேறு; பேச்சுத் துறை வேறு; தலைமைத் துறை காரணமாக சிலர் பேச்சாளிகளாக ஆகலாம். பேச்சுத் துறை காரணமாக யாரும் தலைவராக முடியாது. அனேகர் இந்தக் கருத்தை உணராது மோசம் போய் இருக்கிறார்கள். பேச்சாளி என்று ஒருவனை மதித்தால் அவனைத் தலைவ னென்று அவர்களே அதாவது மதித்தவர்கள் ஏற்க மாட்டார்கள். உதாரணமாக சத்திய மூர்த்தி அய்யர் தலைவராகவே முடியவில்லை. பொதுவாகவே இதுவரை எந்தப் பேச்சாளியும் தலைவராக வில்லை. தலைவர்கள் பேச்சாளி களாகி விடுகிறார்கள்.
ஆபாசப் பேச்சுக்கள் உபயோகிக்கக் கூடாது; பாமர மக்கள் கை தட்டுதலைப் பார்த்து, அது நல்ல பேச்சென்று பேச்சாளிகள் கருதிக் கொள்ளக் கூடாது. ஆயிரம் பாமர மக்கள் ஆதரிப்பதைவிட நூறு அறிஞர்கள் வெறுப்பது மிக மோசமான பேச்சென்றுதான் ஆகும். சங்கீத வித்வான் நன்றாகப் பாடினால் சபையில் கொஞ்சம் பேர்தான் ரசிப் பார்கள். சில்லரைப் பாட்டு, தில்லாலே பாட்டு, துக்கடா பாடினால் வெகு பேர் ரசிப்பார்கள். ஆனால், வித்துவானுக்கு மதிப்பு சங்கீதப்பாட்டினால் தான் உண்டாகும். அதுபோல் பாமர மக்கள் திருப்தியாலும் பாமர மக்கள் ஏமாறும்படி பேசுவதாலும் பேச்சுக்காரன் மதிக்கப்பட்டு விடமாட்டான்.
சிலர் மக்களிடையே சிறிது செல்வாக்கு ஏற்படுத்திக் கொண்டதும், தாம் எந்த மேடை முகமாக அறிமுகப்படுத் தப்பட்டோம், எந்த கொள்கை பேசி செல்வாக்கு பெற்றோம் என்பதையே மறந்து விடுவார்கள். அதற்கு எதிர் கொள் கைக்கோ அல்லது அக்கொள்கையை அழிக்கவோ அந்த செல்வாக்கைப் பயன்படுத்துவார்கள். தனது சொந்த அறிவு இப்படிக் கூறுகிறது. தன்னுடைய சொந்தக் கருத்து இது என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள். சொந்த அறிவு, சொந்தக் கருத்து இவற்றின் பேரால் தாம் அது வரைக்கும் எடுத்துக் கூறி வந்ததையே மறுக்க ஆரம்பித்து விடுவார்கள். மறுக்கும்போது மக்கள் கை தட்டல்தான் செய்வார்கள். எதிர்ப்பை வரவேற்கத்தான் செய்வார்கள். ஆனால், அவர்கள் எப்போதும் ஏமாந்து போய் விட மாட்டார்கள்.
அவர்களின் ஆதரவை நம்பிச் சொந்தக் கருத்து பேசிய பேச்சாளத் தோழருக்குத்தான் பிறகு மேடை கிடைக்காமற் போகும். பெருத்த ஏமாற்றம் அடைவார். பொது வாழ்க் கைக்கும் தமக்கும் வெகு தூரம் என்று கருதிக் கொண்டு வேறு வேலைக்குப் போய் விடுவார். இது எனது அனுபவம்.
பத்திரிகை ஆபீசில் புரூப் ரீடர் வேலைக் கமர்ந்து ஒருவன் வேலை அங்கு நடந்து வரும் விதத்தையும் பத்திரிகைச் சொந்தக்காரர் பெற்று வரும் லாபத்தையும் பார்த்து தானும் ஒரு பத்திரிகை நடத்தலாம் என்று நினைத்து வெளியேறி ஒரு பேப்பரையும் துவக்கி கையில் உள்ள காசையும் எப்படி தொலைப்பானோ. அதுபோல் பைத்தியக் காரத்தனமான செய்கை தான் பேச்சாளிகள் சிலர் சேர்ந்து கொண்டு தங்கள் பேச்சு சாமர்த்தியத்தை நம்பி புதுக் கழகம் அமைப்பதும் ஆகும்.
மேடையில் பேச வருவோர் மிகவும் பயத்தோடும் கவலையோடும் பேச வேண்டும். வார்த்தைகள் நிறுத்திப் பேச வேண்டும். உண்மையே பேச வேண்டும். தெளிவு டனும் பேச வேண்டும். தனது தகுதியை கவனத்தில் இருத் தியும் பேச வேண்டும். தனக்குத் தகுதி இருப்பதாக நினைத் துக் கொண்டு எவனும் என் கருத்து இது. நான் சொல்கிறேன் இப்படி என்று பேச்சாளி பேசக் கூடாது. நல்ல பேச்சாளி யாவதற்கு இலக்கணமோ, இலக்கியமோ படித்திருக்க வேண்டும் என்பதில்லை. தெளிவுடன் பேசத் தெரிந்தால் போதும். கொஞ்சம் அறிவு நுட்பம் இருந்தால் போதும். தன் கருத்தைப் புரியும்படி கொள்ளும்படி பேசினால் போதும். பிறரை வைகிற பேச்சு பேச்சாளிகளுக்கு கூடவே கூடாது. தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் கூட மிகவும் கணக்காகவே மிக்க மறைமுகமாகவே கெட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்த வேண்டும். எனக்கு 70 வயது ஆகிவிட்டது. நான் சற்று தவறான வார்த்தை - சற்று அசிங்கமானது என்று கருதும்படியான வார்த்தை உபயோகப் படுத்தினாலும் யாரும் கோபித்துக் கொள்ள வும் மாட்டார்கள். தவறான எண்ணம் கற்பிக் கவும் மாட்டார்கள். ஆனால், அதே சங் கதியை ஒரு இளைஞன், மாணவன், வயிற்றுப் பிழைப்புக்கு ஆக பேசுபவன் பேசுவானாகில் இந்தக் கூட்டத்திற்கு வந்ததே தப்பென்று ஆண்கள், பெண்கள் எல்லோரும் கருது வார்கள். எழுந்து போய்விடுவார்கள். ஆகவே, தனது தகுதி, நிலை, வயது, அனுபவம் இவற்றைப் பொறுத்துதான் தனது பேச்சும் சில மணியாகும் என்பதை ஒவ்வொரு பேச்சாளனும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். தனது பேச்சுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால் பேச்சாளி அடங்கி ஒடுங்கிப் பேச வேண்டும். தனது தாழ்மையான கருத்து இது. தனது பணிவான அபிப்பிராயம் இது. தனது பணிவான அபிப்பிராயம் இது என்கிற தன்மையில் தனது அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். எதிர்ப் பாளிகளும் அக்கருத்தை விரும்பாதவர்களும் கூட ஐயோ பாவம் உண்மையிலேயே அவருடைய கருத்து அது வாக்கும் என்று பரிதாபப்படும் அளவுக்கு பணிந்து பேச வேண்டும். வீட்டிலிருந்து கொண்டே எழுதிக் கொண்டி ருப்பவன் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் பேச்சாளி அப்படிப்பட்டவனல்ல, அடிக்கடி மக்கள் முகத்தில் விழிக்கக் கூடியவன் அவன். எனவே தவறாகப் பேசி கெட்ட பேர் எடுத்துவிட்டால் மக்கள் மதிக்க மாட் டார்களே என்கிற அச்சத்தோடு தான் பேசவேண்டும்.
ஒரு இயக்கத்தின் சார்பில் மேடைக்குப் பேச வரு பவர்கள் சிரிப்புக்காகவும், வெறும் விளையாட் டிற்காகவும், தனக்குக் கெட்டிக் காரப் பட்டம் வரவேண்டும் என்பதற்காக வும் தம் பேச்சைப் பயன்படுத்தக் கூடாது.
அப்படிப் பயன்படுத்தினால் அவருடைய பேர் கெட்டுப் போவதோடு இயக்கத்தின் பேரும் கெட்டுப் போய்விடும். இயக்கத்தின் மரியாதையும் யோக்கியதையும் வெகுவாகக் குறைந்துவிடும்.
பேச்சு ஒரு அருமையான கலை பண்டைக் காலத்தில் வசன நடைப் பேச்சே கிடையாது. எல்லாம் பாட்டு மயம். இன்று நிலைமை மாறிவிட்டது. பாட்டுக்காரனுக்கு இருந்து வந்த மதிப்பு தற்போது போய் விட்டது. இனி பாட்டுக்காரனை விட நாடகக்காரனை விட பேச்சுக்காரனுக்குத் தான் அதிக மதிப்பு ஏற்படப் போகிறது. நாடு இன்றுள்ள நிலையில் பேச்சு மிக மிகத் தேவை யாகவும் இருக்கிறது. நாடகம், சினிமா காலட்சேபங்களில்கூட இன்று பேச்சாளிக்கு இருக் கும் மதிப்பு, பாட்டுப் பாடுபவர்களுக்கு பண்டிதர்களுக்கு கிடையாது. எவரும் பேச்சு பயன்படுகிற மாதிரி பாட்டு நடிப்பு பயன்படுவது இல்லை. நல்ல தொண்டுக்கு நல்ல பேச்சுத்தான் தேவை. பேச்சாளி ஒரு ஆசிரியராவான். ஒரு வழி காட்டியாவான்.
அப்படிப்பட்ட பேச்சுக்காரர்களாக இருக்க வேண்டி யவர்கள். பேச்சு படித்ததும் தாங்கள் விளம்பரமாக வேண் டும் என்பதற்காக கூட்டத்தை கண்ட மாத்திரத்தில் சிலர் பேச வேண்டும் என்கின்ற ஆத்திரம் கொண்டு சீட்டு அனுப்புவது சிலர் தனக் காக சிலரைக் கொண்டு சீட்டு அனுப்புவது, தலைவர்கள் பேசுவதற்கென்று ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் தங்களுக்குப் பேச இடம் தர வேண்டும் என்பதாகப் பல்லைக் கெஞ்சிப் புகுந்து கொண்டு, பின்னால் பேசுகிறவர்களுக்கு சங்கடம் வரும்படி பேசுவது, இவைகளையெல்லாம் நல்ல பேச்சாளிகள் கவனித்து ஒதுக்க வேண்டும்.
விளம்பரத்துக்கு ஆகப் பேசும் குணத்தை விட்டுவிட வேண்டும். ஈரோட்டில் ஒரு காங்கிரஸ் ஜில்லா மாநாடு நடந்தது. அதில் ஒரு விஷயம் பற்றி ஒரு தீர்மானத்தில் தகராறு ஏற்பட்டு 5, 6 பேர்கள் பேசி விட்டார்கள். ஓட்டுக்கு விடும் சமயத்தில் ஒரு வக்கீல் எழுந்து தான் சிறிது பேச வேண்டும் என்றார். தலைவர் தடுத்து நேரமாகி விட்டது. முடிக்க வேண்டும் என்றார். பேச எழுந்தவர் ஒரே ஒரு பாயிண்டு அதை சொல்லி விடுகிறேன் என்றார். தலைவர் அவரை நோக்கி, நீங்கள் பேசுவது தீர்மானத்துக்கு சாதக மாகவா? எதிர்த்தா? என்று கேட்டார். அதற்கு பேசுபவர் ஆதரித்துப் பேசப் போகிறேன் என்றார். அதற்கு தலைவர் ஆதரித்து 4 பேர் பேசி விட்டார்கள். ஆதலால் இனி ஆதரித்துப் பேச வேண்டியதில்லை. உட்காருங்கள் என்றார். அதைக் கேட்டவுடன் பேச எழுந்தவர் அப்படி யானால் நான் எதிர்த்து இரண்டு வார்த்தை சொல்லுகிறேன் என் றார். உடனே தலைவர் சிரித்துக் கொண்டே தயவு செய்து உட்காருங்கள் என்று சொல்லி, கையையும் அமரும் படி அவர் உட்காரும்வரை ஜாடை காட்டிக் கொண்டே இருந்தார்; பேச எழுந்தவர் சிறிதுகூட வெட்கப்படாமல் வெகு சங்கடத்துடன் மெதுவாய் உட்கார்ந்தார்.
தலைமை வகித்த தலைவர் டாக்டர் நாயர், பேச எழுந்தவர் ஒரு பி.ஏ.,பி.எல்., வக்கீல் அய்யர்.
சிலர் பேசி பெற்ற செல்வாக்கால், கிடைத்த மக்கள் அறி முகத்தால் உடனே பத்திரிகை ஆரம்பித்துக் கொள்ளுவது. அது கண்ணியமாய் நடத்தக் கட்டாவிட் டால் நன்கொடை வசூலிக்க அதைப் பயன்படுத்துவது, கொடுத்தவர்களைப் புகழவும் கொடுக்காதவர்களை வையவுமாக எழுதுவதற்கும் தம் பேச்சு பழக்கத்தை உபயோகிப்பது பணம் கிடைக்கா விட்டால் கொள்கையை மாற்றிக் கொள்வது. இப்படி யெல்லாம் பல காரியங்கள் பேச்சுப் படிப்பதால் ஏற்படுவது உண்டு.
ஆகவே, தகுதி அற்றவன், பொறுப்பும் நாணயமும் அற்றவன் பேச்சாளியாக ஆகிவிட்டால் அது ஒரு பெருந் தொல்லை யாகவும் முடிவதுண்டு. இப்படிப்பட்டவர் களை பேச்சாளியாக்கி விட்டோமே என்று துக்கப்பட வேண்டி ஏற்பட்டாலும் ஏற்படும். ஆதலால் தக்கவர்களையே சேர்த்து வையுங்கள். தக்க பொறுப்புடன் பழகுங்கள். உங்கள் பேச்சு உங்களுக்கு, உங்களைவிட மக்களுக்குப் பயன்படும்படி இருக்கட்டும் என்பதாகப் பேசினார்.
- விடுதலை, 6.11.1949

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

இடஒதுக்கீடு முறையை ஒழிக்கவே ‘நீட்’ தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது : தா.பாண்டியன் Read more: http://viduthalai.in/e-paper/145931.html#ixzz4lk9Zea7v


மதுரை, ஜூலை 2   பாஜக அரசு இதுவரை அறிவித்த திட் டங்கள் எதுவும் அதன் நோக் கத்தை நிறைவேற்றுவதாக இல்லை என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா. பாண் டியன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர் களிடம்   அவர் கூறியது: பிரதமர் நரேந்திர மோடி தான் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்த திட்டங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. போகிற போக்கில் சொல்லி விட்டுப் போவதைப் போல அறிவிப்புகள் இருக்கின்றன.
உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தபோது, கறுப்புப்a பணம் மீட்கப்படும், பயங்கர வாதச் செயல்களுக்கு பணம் செல்வது தடுக்கப்படும் என் றனர். ஆனால், அவர்கள் கூறிய இரண்டுமே நிறைவேற வில்லை. பாஜக அரசின் திட் டங்கள் அனைத்துமே பெரு நிறுவனங்கள் சார்ந்ததாக இருக்கின்றன.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி  அமலுக்கு வந்துள்ளது . முதல் நாளிலேயே பொருள் களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஜிஎஸ்டி என்பது மக்கள் மீதான சுமை யாகவே இருக்கும்.
இடஒதுக்கீடு முறையை மறைமுகமாக ஒழிக்க வேண் டும் என்பதற்காகவே நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தமிழகத் தில் அறிவிக்கப்படாத குடிய ரசுத் தலைவர் ஆட்சியைத் திணிக்க மத்திய அரசு முயன்று வரு கிறது. வகுப்புவாதத்தை தமிழ கத்திலும் கொண்டுவர முயற் சிக்கிறது. இதேநிலை தொடர்ந் தால் அதனால் ஏற் படக்கூடிய பின்விளைவு களுக்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
மத்திய அரசின் மக்கள் விரோதப்போக்கு, தமிழக அரசின் செயலற்ற நிலையை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தின் 6 நகரங்களில் இருந்து விழிப்புணர்வு பய ணம் தொடங்கியிருக்கிறது. ஜூலை 5 ஆம் தேதி திருச்சியில் இப் பயணம் நிறைவு பெறு கிறது. மத்திய, மாநில அரசு களுக்கு எதிராக எந்தவித போராட்டத்தை நடத்தலாம் என்பது குறித்து முடிவு எடுக் கப்படும் என்றார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது - மம்தா பானர்ஜி

ஜி.எஸ்.டி.க்கு நாடு முழுவதும் எதிர்ப்பு:
மக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது - மம்தா பானர்ஜி
நள்ளிரவுக் கொண்டாட்டம் தேவையா? - கேரள முதல்வர்
குஜராத்தில் இறுதிச் சடங்குகள்!
அகமதாபாத்  ஜூலை 2 ஜி.எஸ்.டி. எனப்படும் நாடு முழுவதும் ஒரே வரிக்கொள்கையினைக் கண்டித்து இந்தியாவின்  அனைத்து தொழில் நகரங்களிலும் வணிகர்கள் போராடி வருகின்றனர்.  பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் வணிகர்கள் மோடி மற்றும் அருண்ஜெட்லிக்கு இறுதிச்சடங்கு செய்யும் போராட்டம் நடத்தினர்.
ஜி.எஸ்.டி எனப்படும் ஒரே வரிக் கொள்கை நாடு முழுவதும் ஜூலை முதல் நாள் அதிகாலை  12 மணிக்கு நிறைவேறியது, இதற்காக சுதந்திரத் திற்கு பிறகு மீண்டும் நள்ளிரவில் நாடாளுமன்ற மய்ய அவை கூடியது, இந்த வரிக்கொள்கை நடை முறைப் படுத்தும் நிகழ்ச்சியில் மோடி, பிரணாப்முகர்ஜி உள்பட மத்திய அரசின் அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பாக துவங்கிய இந்த ஜி.எஸ்.டி.யை, ஆளும் கட்சியினர் விழா வாக கொண்டாடிய அதேவேளையில் வணிகர்கள் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
குஜராத்தில் போராட்டம்
நாடு முழுவதும் உள்ள சிறு வணிகர்கள் ஜி.எஸ்.டி.யை கடுமையாக எதிர்த்துவருகின்றனர். மோடியின் மாநிலமான குஜராத்தில் பல விதமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. சூரத் நகரில் ஆயத்த ஆடை, தங்க வைர நகை உற்பத்தி, பேக்கிங் செய்யப் பயன்படும் அட்டைப் பெட்டி பிளாஸ் டிக்குகள் போன்றவற்றை தயாரித்து மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள் அதிகம் உள்ளனர். குஜராத் மாநிலத்தின் மொத்த வருவாயில் சூரத் நகரம் 22 விழுக்காடு தருகிறது. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரியினால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள், இதனால் எங் களின் வணிகம் பாதிக்கப்படும் என்று கூறி மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்த்தை மத்திய அரசு செவிகொடுத்துக் கேட்க வில்லை.
மோடி - ஜெட்லி படங்கள் எரிப்பு
இந்த நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி நள்ளிரவில் ஜி.எஸ்.டி. அறி முகமானது. தங்களின் தொடர் எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாமல் ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைக்கு கொண்டுவந்த மோடி, அருண் ஜெட் லியைக் கண்டித்து நள்ளிரவில் சூரத் வணிகர்கள் மோடி மற்றும் அருண் ஜெட்லி இருவரின் உருவப் பொம்மை களுக்கும் இறுதிச்சடங்கு செய்து போராட்டம் நடத்தினர். முன்னதாக சூரத் நகரின் கபடா பஜார் என்ற பகுதியில் துவங்கி மோடி அருண் ஜெட்லி முகமூடியை ஒரு உருவப் பொம்மையின் மீது பொருத்தி அதை இறுதி ஊர்வலமாக சுமந்துகொண்டு சென்றனர். காணொலியில் போராட்ட ஊர்வலத்தில் பலர் ஆடிப்பாடிக் கொண்டு, "இதோ இந்தியாவின் இறுதி அத்தியாயம் எழுதியவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது" என்று கூறிக்கொண்டு சென்றனர்.  இறுதியில் சரியாக 12 மணி அளவில் அதற்கு இறுதிச்சடங்கு செய்தனர். இந்திய வரலாற்றில்  ஒரு நாட்டின் பிரதமரை அவரது சொந்த மாநில மக்களே இறுதிச்சடங்கு செய்யும் போராட்டத்தை  முதல்முறையாக நடத்தியுள்ளது.  இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
அரியானா - ராஜஸ்தானில் போராட்டம்
இவ்விவகாரம் தொடர்பாக சூரத் நகர காவல்துறையினரிடம் கேட்ட போது "இப்போராட்டம்  எந்தப் பகுதியில் நடைபெற்றது என்ற உறுதி யானத் தகவல்கள் எங்களுக்கு தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பாக நாங்கள் விசாரணை செய்துவருகிறோம்" என்று கூறினர்.  அதே போல் கொல்கத்தா நகரில் ஜி.எஸ்.டி. உருவப் பொம்மையை வணிகர்கள் ஊர்வலமாக கொண்டுவந்து சாலையில் தீயிட்டு எரித்தனர். பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசம்,    அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநி லங்களிலும் கடுமையான போராட் டங்கள் வணிகர்களால் மேற்கொள்ளப் பட்டன.
இப்போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த வெங்கையா நாயுடு, "ஜி.எஸ்.டி. பற்றிய புரிதல் இல்லாத கார ணத்தால் இப்போராட்டங்களை சிலர் மேற்கொள்கின்றனர். நான் ஏற்கெனவே கூறியது போல் இவ்வரியினால் பல்வேறு சிக்கல்கள் உருவாகும்; அதே நேரத்தில் விரைவில் மக்கள் இந்த வரிக்கு தங்களை மாற்றிக்கொள்வார்கள் இதனால் நாட்டின் வருவாய் பெருகும்" என்று தெரிவித்தார்.
மக்களாட்சி கொலை
செய்யப்பட்டு விட்டது - மம்தா பாய்ச்சல்
ஜி.எஸ்.டி. தொடர்பாக நடந்துவரும் போராட்டம் ஒரு புறமிருக்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடு மையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவர் மோடியின் இந்த நடைமுறையால் மக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது என்று காட்டமாகத் தெரிவித்தார்.  மேலும்,  ஜி.எஸ்.டி.,யின் மூலம், மத்திய அரசு  நாடு முழுவதி லுமுள்ள சிறு வர்த்தகர்களை துன் புறுத்துகிறது  என்றும், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது, அதே நேரத்தில் நமது மக்களின் சுதந்திரமும், ஜனநாயக மும் 2017, ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவில் சவக்குழிக்கு அனுப்பப்பட்டுள்ளது, மக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது என்றும் மத்தியில் கேலிக் கூத்தான ஆட்சி நடக்கிறது என்றும் விமர்சித்த  மம்தா பானர்ஜி, ஜி.எஸ்.டி. சட்டத்தில் வர்த்தகர்களுக்கு எதிராக மோசமான கட்டுப்பாடுகள் உள்ளதால் வியாபாரிகள் கடும் அச்சத்தில் உள்ள தாகவும் கூறினார்.
நள்ளிரவு நிகழ்ச்சிகள் தேவையற்றவை - பினராயி
"முதலில் ஜி.எஸ்.டி. நடைமுறை தொடர்பாக மக்களுக்கும், வர்த்தகர் களுக்கும் உள்ள சந்தேகங்களுக்குத் தீர்வு காண வேண்டும். ஜி.எஸ்.டி. குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை களை நாள் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கையில் நள்ளிரவில் கொண்டாட்டங்களை நடத்துவது சரியான நடவடிக்கை இல்லை" என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...