நடு இரவில், நாடு முழுமைக்கும் ஒரே வரி எனும் ஆணையை நிறைவேற்ற மோடி அரசு முடிவு செய்து, நேற்று இரவு, நாடாளுமன்றத்தில் கோலாகலமாக கொண்டாடி ஆணை பிறப்பித்துள்ளனர். வரியை அதிகரிக்கவும், மாநிலங்களை தங்களிடம் நிதி கேட்கும் பிச்சைக்காரர்களாக ஆக்கவும் ஒரு சட்டம். அதற்கு கோலாகலம். இந்த நாட்டில் தான் நடக்கும். அதில் பேசிய நமது பிரதமர் மோடி, இந்த வரி, ஏழைகளின் துயரைத் துடைக்கும்; கருப்புப்பணத்தையும், ஊழலை யும் ஒழிக்கும் என்றார்.
இதே வசனம், சில மாதங்களுக்கு முன்னர், உயர் பண மதிப்பு நீக்கம் செய்து, சாமான்ய மக்களை நடுத்தெருவில் அலையவிட்டபோதும் சொன்னார். அந்த சட்டமும் நள்ளிரவில்தான் அமலானது. ஆனால், நாம் கவலைப்படாமல், உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தலில், மோடிக்கு வாக்களித்த மக்கள் இன்று, உணவைச் சாப்பிட்டாலும் சரி, எடுத்துச் சென்றாலும் சரி, அல்லது, ரயிலில் பயணம் செய்தாலும் சரி, உதைப்பட்டு, சாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இப்போது நாடு முழுவதும், வியாபாரிகள், நெச வாளர்கள், பட்டாசு தொழில் செய்வோர், மோடி அரசின், ஏக இந்தியா, ஏக வரியை எதிர்த்து போராடுகின்றனர். கருப்புக்கொடியை ஏற்றுகின்றனர்.
சரியாக, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், இதே போன்று நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் கூடி, 'ஆனந்தம் சுதந்திரம்' அடைந்ததை, பள்ளு பாடினர். இனிமேல் எங்கும் ஆனந்தம் என்று கொண்டாடினர்.
தெற்கே ஒரே ஒரு குரல், இதனை எதிர்த்து முழுக்க மிட்டது. இது நமக்கான சுதந்திரம் இல்லை; ஆங்கிலேய வெள்ளையனிடமிருந்து, பார்ப்பன கொள்ளையனுக்கு எழுதித்தரப்பட்ட மாற்றுப் பத்திரம். இது நமக்கு துக்க நாள் என அறிவித்த அந்த மகத்தான தொலை நோக் காளர் நம் புரட்சியாளர் தந்தை பெரியார். அனைவரும் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவியுங்கள். அன்று அவரை ஏளனம் செய்தவர்கள், இப்போது உணர் கிறார்கள்.
சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாகுமா? என்றும் கேள்வி எழுப்பினாரே அந்த சிந்தனைச் சிற்பி. இதுவரை நேர்மையான பதில் உண்டா?
இன்று நாம் அன்றாடம் உணர்கிறோம். பெரியாரின் கருத்து இன்றும் எவ்வளவு உண்மையாக நடக்கிறது என்பதை அன்றாடம் அனுபவிக்கிறோம். அடுத்து மோடி அரசு, ஒரே மொழி, ஒரே தேர்வு என்பதையும் நடை முறைப்படுத்தப் போகிறது. நாம் வேடிக்கைப் பார்க்க போகிறோமா? அல்லது கிளர்ந்தெழுந்து போராடப் போகிறோமா? என்பதை நடு இரவில் படுத்துக் கொண்டு யோசிக்காமல், கண் விழித்திருக்கும் போதே யோசிப்போம்.
குடந்தை கருணா
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- பெரியாரியல் பயிற்சி முகாம் - குற்றாலம்
- தந்தை பெரியார் 138ஆவது பிறந்த நாள் விழா - பொதுக்கூட்டம்
- பெரியாரியல் பயிற்சி முகாம் - குற்றாலம்
- நடக்க இருப்பவை
- உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாற்றம்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மேடைப் பேச்சு குறித்து பெரியார்
- மக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது - மம்தா பானர்ஜி
- சிறீராம் சேனா தலைவர் கோவாவுக்குள் நுழைய தடை நீட்டிப்பு
- கடவுள் சக்தி அவ்வளவுதான் கோவில் வளாகத்தில் தூக்கில் பீகார் இளைஞர்
- மாட்டிறைச்சி பிரச்சினை மதத்தின் பெயரால் மக்களை மத்திய அரசு திசை திருப்புகிறது: நல்லக்கண்ணு பேட்டி
No comments:
Post a Comment